உரையாடல் -பிரேம்

 எழுதுபவரின் அரசியல்  

 எழுத்துக்களின் அரசியல்

எழுதப்பட வேண்டிய அரசியல்

 

எழுத்தாளர்  பிரேம் அவர்களுடன் ஒரு தொடர் உரையாடல்

WRITER PREM

 

[கேள்விகள்:  ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

அறிமுகம்                                             

ராஜகாந்தன்

 

தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை மட்டும் நாம்  கணக்கில்  கொண்டாலும் மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். இது உலகிலுள்ள நூற்று எண்பது நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். ஃபிரான்ஸில் வசிக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களை விடவும், இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலேயர்களை விடவும், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளின் குடிமக்களை விடவும் தமிழர்களின் எண்ணிக்கையானது அதிகம்.

இப்பெருந்திரளான மக்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் இன்ன பிற தளங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், அவற்றை விளக்கவும், அது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்தவும் அவற்றில் நிகழ வேண்டிய மாற்றங்கள் குறித்துச் சிந்திக்கவும் அவற்றை அறிவுத்தளத்தில் முன்னெடுக்கவும் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  சீரிய, சார்பற்ற கடப்பாடுடைய அறிவுச் செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக இருக்கவேண்டும். ஆனால் நடப்புச் சூழலில் இப்படியான அறிவுத் தளத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை தமிழில் ஆகக்  குறைந்த அளவே உள்ளதை நாம் அறிவோம். இது அளவு ரீதியான குறைபாடு, அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பை மிக அதிகமாகப் பாதிக்கும் குறைபாடு.

காலனிய காலத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தபோது  தேசிய  உணர்வு, தேச விடுதலை தொடர்பான கருத்தாக்கங்கள் முன்னிலை வகித்தன. சமூகக்கேடுகள் மற்றும் அவற்றிற்கெதிரான சீர்திருத்தங்கள் குறித்த தீவிர செயல்பாடுகள் அக்காலத்திய சிந்தனையாளர்களின் எண்ணங்களைக் கட்டமைத்தது, அதுவே அவர்களின் செயல்களுக்கான உந்து சக்தியாகவும் இருந்து வந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான பத்திருபது ஆண்டுகளில் விடுதலை தொடர்பான இலட்சியவாதக் கனவுகள் பொய்த்தப் பின், பொதுவுடைமைக் கருத்தாக்கமும், மொழி, இனம் சார்ந்த தன்னுணர்வுகளும் அக்காலத்தியச் சிந்தனாவாதிகளை ஆக்கிரமித்ததாகக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த களப்போராட்டங்கள் கடுமையான ஒடுக்குதல்களுக்கு உள்ளான பிறகு அச்சிந்தனைகளைத் தொடர்ந்து  முன்னெடுப்பதில் ஒரு சோர்வு ஏற்பட்டிருந்தாலும் முழுமையாக அணைக்க முடியாத நெருப்பு போல சமூகச் செயல்பாடுகளின்  உந்து சக்தியாக, சமூக உணர்வுகளின் சல்லி வேர்களாக இருந்து வருகிறதெனலாம்.

தொண்ணூறுகளில் பொதுவுடமை நாடுகளில் அரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் பொதுவுடைமைச் சிந்தனைகள் வலுவிழந்து, உலக வர்த்தக மயமாக்கம் நிகழத் தொடங்கியது. அதற்குப்பின் உருவான கடுமையான ஏற்றத் தாழ்வுடன் கூடிய பொருளாதார வளர்ச்சியால் நுகர்வுக் கலாச்சாரமும், பொருள்குவிப்பு மனோபாவம் மக்களிடையே பெருகியது. அதன் தொடர்ச்சியாக சமூக மதிப்பீடுகளின் பெரும் வீழ்ச்சியும் ஏற்பட்டது. அப்போதிலிருந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் தத்தமது குழு சார்ந்த, சாதி சார்ந்த இருப்பை உறுதி செய்துகொள்ள முனைந்தன. அறிவார்ந்த செயல்பாடுகள் மதிப்பிழந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது போன்றதான ஒரு தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அறிவுச்செயல்பாட்டிற்கான சமூக இடம்மற்றும் அறிவுச் செயல்பாட்டின் இருப்பு சார்ந்த  சிக்கலாகவும் தோன்றுகிறது.

பெரும் பொருளாதார, அரசியல், ஊடகச் சக்திகள் தம் நுட்பமான கருத்தாடல்கள் மூலம் வெகுமக்கள் சிந்தனையை மழுங்கடித்து சுரண்டலுக்குத் துணை போகும் சமூக மனவியலை உருவாக்குவதைக் கண்டுணர்ந்து புலப்படுத்தி, மக்களின் சார்பாக நின்று அதிகார செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டிய சிந்தனையாளர்கள் தற்போது ஏதாவதொரு அதிகாரம் சார்ந்த நிறுவனங்களோடு தொடர்புடையவர்களாக மாறியுள்ளதால் இத்தகையச் செயல்பாட்டில் ஒரு உள்ளார்ந்த  முரணியக்கம் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகுஜன ஊடகங்களைக் கடுமையாகச் சாடிவந்த தமிழ்ப் படைப்பாளிகள், அறிவுசார் செயல்பாட்டாளர்கள்  தற்போது அவற்றில் தமக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் தங்களுடைய நிலைப்- பாடுகளையும் பெருமளவுக்குச் சமரசத்துக்கு           உட்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வெகு  மக்களை மூளைச்சலவை செய்யும் பெரு  நிறுவனங்களின் செயல்பாடுகளில்  பங்காளர்களாகவும் மாறியுள்ளனர்.   இது அறிவுசார் செயல்பாட்டாளர்களின் அரசியல் நிலைப்பாடு, நம்பகத்தன்மை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாபெரும் வீழ்ச்சியாக உள்ளது.

இப்பெரும் தமிழ்ச் சமூகத்தில் அறிவுக் கூர்மையுடையவர்கள்அறிவுத் தரகர்கள், அறிவுவியாபாரிகள், தொழில் நுட்பவாதிகள், பெரும் கலை யிலக்கிய படைப்பாளிகள், கேளிக்கை யாளர்கள் அனைவரும் ஆளும்வர்க்க நலன் சார்ந்தவர் களாகவே இருப்பார்களெனினும் இதற்கு மாறாக சமரசமற்றவர்  களாக, மக்கள்  சார்புள்ள அறிவுத்திறன் கொண்ட செயல்பாட்டாளர் களாக இயங்கும் சிலருக்கான இடம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது. இது தமிழ்ச் சமூகம் தன் இன்றைய வீழ்ச்சிகளிலிருந்து மீள்வதற்கும், உயிர்ப்புடன் கூடிய அறிவார்ந்த உரையாடல்களை உருவாக்கித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும்  முக்கிய  தேவையாக உள்ளது.

இன்று உருவாகியுள்ள கருத்தியல் சிக்கல்கள், ஊடக வன்முறைகள் பற்றி அரசியல் பின்புலத்தில் விளக்கம் பெற நாம் மாற்று அரசியல் இயக்கச் செயல்பாட்டாளர்கள் சிலரை அணுகலாம். அவர்கள் களச்செயல்பாடு சார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சில விளக்கங்களைத் தருவார்கள். ஆனால் இன்று தமிழ்ச் சமூகத்தை அதிகம் பாதிக்கும் திரைப்படம், இலக்கியம், கலைகள், ஊடகவியல் சார்ந்தும்  கோட்பாடுகள் சார்ந்தும் விளக்க இயலாதவர்களாக உள்ளனர், இது வருத்தத்திற்குரிய நிலைஆனால் கோட்பாடுகளின் தேவை பற்றி, தமக்கு ஏற்பட்டுள்ள கருத்தியல் சிக்கல்கள் பற்றி இவர்கள் வெளிப்படையாக விவாதிக்காத வரை இன்றைய தேக்க நிலையை நாம் கடக்க இயலாது.

இலக்கியம், கலைகள், திரைப்படங்கள் பற்றி  எழுதித் தம்மை ஆளுமைகள் என நிருவிக்கொண்ட பலர் மக்கள் அரசியல், மக்கள் வரலாறு பற்றித் திட்டமிட்ட திரிபுகளைப் பரப்பி வருகின்றனர். இவர்களிடமிருந்து நாம் தமிழ்ச் சமூகத்தின் இன்றைக்கான அரசியல், கருத்தியல் சிக்கல்கள் பற்றித் தெரிந்து கொள்ள  முயற்சிப்பது பயனற்றது.   

படைப்பிலக்கியம் செய்யும் இலக்கியவாதிகளில் பலர் இலக்கியப் புனிதம் பேசுவதன் மூலம் எழுத்து அதிகாரத்தை நிறுவி பண்பாட்டு பெருமுதலாளித்துவத்தை பலப்படுத்துபவர்களாக  செயல்படுகின்றனர். விளிம்பு நிலையில் உள்ள அரசியல் இயக்கச்  செயல்பாடுகளில் தம்மை உறவுபடுத்திக் கொண்டவர்கள் கலை– இலக்கியம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லையென மறுப்பதன் மூலம் சமூக அறிவியலின் அடிப்படைகளை  மறைத்து  விடுகின்றர்.

இந்நிலையில் மக்களுக்கான சிந்தனைகளை, மாற்றுக் கருத்தியல்களைத் தமிழில் பேசும் குழுக்கள் தமக்குள் உரையாடல் இல்லாமல் தனித்தனியாகத் தம் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மார்க்சியம், தலித்தியம், அம்பேத்கரியம், பெரியாரியம், பெண்ணியம் பற்றி பேசுகிற பலர் ஒன்றை மற்றதிலிருந்து முரண்பட்டதாக விளக்கி வருவதால், அல்லது ஏதாவதொரு கருத்தியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதால் புதிதாக அறிவுத் தளத்தில் இயங்க முன்வரும் தலைமுறையினர் தவறான குழப்பங்களுக்கு உள்ளாவதுடன் விரைவில் அரசியல் அற்ற எழுத்தாளார்களின், ஊடகம் வழிபடும்  பக்தர்களாக மாறிவிடுகின்றனர்.

இதிலிருந்து மாறுபட்டு நவீனத்துவம், பின்நவீனத்துவம் பற்றிய மிகவிரிவான உரையாடல்களை முன் வைப்பதுடன் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல், அடையாள  அரசியல் சார்ந்த கருத்தியல்களின் தேவைகளை வலியுறுத்தி  மார்க்சியம்,  அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் அனைத்திலும் உள்ள மக்கள் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளை அடையாளம் கண்டு இனியான மாற்றுக் கருத்தியல்களை நாம் உருவாக்க வேண்டும் என விளக்கி வரும் எழுத்தாளராக, சிந்தனையாளராக இயங்கி வரும் பிரேம் கடந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியுள்ள உரையாடல்கள், பிரச்சினைப்பாடுகள்   முக்கியத்துவம் பெறுகின்றன.

படைப்பாளியின் இடம் தனித்த இடம் இல்லை அது அரசியலின் ஒரு பகுதி, படைப்பாளி என்ற அடையாளத்தின் வழி அதிக சமூகத் தன்மை அடைகிறேன் என்றும் எழுத்தை நான் உருவாக்குகிறேன் என்பதை விட எழுத்து என்னை உருவாக்கித் தருகிறது என்றும் அறிவித்து இயங்கிவரும் பிரேம் அறிவார்ந்த, அரசியல் செறிந்த தளங்களில் தீவிரமாக செயல்பட்டுவரும் படைப்பாளி. அரசியல் இயக்கம், புனைவெழுத்து இரண்டிலும்  பன்மைத் தன்மை, மாறும் கட்டமைப்பு பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இலக்கியம், அரசியல், கருத்தியல் என எந்த ஒரு தளத்திலும் மையவாதமும் பிம்ப உருவாக்கமும் வன்முறையென்று தொடர்ந்து விளக்கிவிளிம்புநிலைகளின் அரசியலை உரையாடலாக முன் வைத்துவரும் அவருடன் ஒரு உரையாடலை முன்வைக்கிறோம்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் கடந்து தமிழில் பன்மை நவீனத்துவம் உருவாக வேண்டும் என்று எழுதி வரும் அவர் முன்வைக்கும் சமூக-தனிமனித அரசியல், அழகியல், அறவியல் பற்றிய பதில்கள் உங்கள் பங்களிப்புடனும் இடையீடுகளுடனும் உரையாடலாக, விவாதமாக விரிவடைய உள்ளது.  

(உரையாடலில் கருத்து பதிவு செய்யவும், கேள்விகளை அனுப்பவும் மின்னஞ்சல்: panmeyithazh@gmail.com)   

பன்மை நவீனத்துவம் நோக்கி: தமிழின் கோட்பாடுகளும் எழுத்துக்களும் – பிரேம்

தமிழில் கோட்பாடுகள் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள், ஒப்பீட்டு ஆய்வுகள் என்பவை நெடிய வரலாற்றைக் கொண்டவை. மெய்யியல் மரபுகளும், அறிவுருவாக்க மரபுகளும் இலக்கிய மரபுகளோடு இணைத்தே அறியப்படும் நிலையும் இலக்கிய ஆய்வுகள் என்பவை பலவகையான தத்துவ மரபுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மறு உறுதிசெய்வது என்ற நிலையும் தொடர்ந்து இருந்து வருகிறது.

அழகியல், கவிதையியல், அணியியல், காப்பியமரபுகள், இலக்கிய உருவாக்க மரபுகள் என்பவை  நேரடியாக ஒரு தத்துவ மரபைச் சுட்டித் தம்மை நிலைப்படுத்திக் கொள்வதும், ஒரு தத்துவ மரபு தனக்கான தர்க்கங்களையும் தரவுகளையும்  இலக்கியப் பாடங்களில் இருந்து பெற்றுக் கொள்வதும் இணையாக நிகழும் செயல்பாடுகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்கதைமரபுகள் பண்பாடு, அரசியல், சமயச் சடங்குகள், நிகழ்கலைகள் என்பவற்றுக்குள் ஊடுருவி அமைந்திருப்பது போலவே இந்தியத் தத்துவ, மெய்காண்முறைகளின் களங்களாகவும் தொடர்ந்து இருந்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய தத்துவ மரபுகளும் காவிய-காப்பிய மரபுகளும் பிரிதறிய முடியாத அளவுக்குப் பின்னிப் பிணைந்து செயல்படுவதும் அமைகிறது.

தமிழின் காப்பிய மரபுகளும், பக்தி இலக்கிய மரபுகளும் தனித்தனியே தமக்கான கோட்பாட்டு, அறிவுருவாக்க செயல்பாடுகளைக் கொண்டுள்ளவை.  ‘இலக்கியம், தத்துவம், கோட்பாட்டு உருவாக்கம் என்பவை ஒரே தளத்தில் நிகழும் உள்ளிணைப்பு கொண்ட செயல்பாடுகளாக அமைவன’ என்பது ஒரு அடிப்படைப் புரிதல். தொன்மங்கள், சடங்குமுறைகள், இலக்கியச் சொல்லாடல்கள் அனைத்தும் வெவ்வேறு விகிதத்தில் இணைந்து சமூக நடத்தையியலை, சமூக உளவியலை, வாழ்வியல் விதிகளை உருவாக்கித் தருகின்றன. இந்திய மரபுகளில் வேதமையத் தன்மை கொண்ட மரபுகள், வேதமறுப்புத் தன்மை கொண்ட மரபுகள், தொல்குடி மரபுகள் இவற்றிற்கிடையில்  நிகழ்ந்த நெடிய போராட்டங்களை நாம் இலக்கியப் பிரதிகள் ஊடாகவும், தொன்ம உருவாக்கங்கள் ஊடாகவும் சான்றுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது.

அறிவுருவாக்க மரபுகளுக்கிடையிலான நெடிய போராட்ட வரலாற்றின் தடயங்களாக இலக்கியப் படிகளை, பனுவல்களை வாசிக்க வேண்டிய தேவையை உணர்ந்து  கொள்ளும்  அதே   நிலையில்  புதிய கோட்பாடு ஒன்று உருவாகும்போது அதுவரையிலான இலக்கிய தொன்மச் சொல்லாடல்களை பொருள்படுத்துவதற்கான புதிய முறையியலும் அதனுடன் சேர்ந்து உருவாக வேண்டிய தேவை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம். அறிவுருவாக்க மரபின் (Epsitemologoy) மிக அடிப்படையான செயல்பாடாக அமைவது அறிவை பொருள்படுத்தும் முறையியல் அல்லது அறிவறிதல் நெறியியல் (Hermenutics), இந்த இரு செயல்பாடுகளின்  இணைப்பைக் கொண்டுள்ள இலக்கியச் செயல்பாடு அவ்வகையில் எப்போதும் கோட்பாட்டு உரையாடல்கள், ஊடாட்டங்கள், மற்றும் போராட்டங்களின் களமாக இருந்துவருகிறது.

தமிழின் நவீன இலக்கியச் சொல்லாடல்களும், செயல்பாடுகளும் மிகச் செறிவான கோட்பாட்டு முரண்களின் தொகுதியாக அமைந்ததுள்ளன. அதே சமயத்தில் தம் கோட்பாட்டு உருவாக்கத்தை மறைக்கும் உத்தியையும் கொண்டுள்ளன. அழகியல், கலைநுட்பம் என்ற இலக்கியக் குறியியல் செயல்பாடுகளையும் கதையாடல், கதைநிகழ்வு என்ற இலக்கியக் கட்டமைப்புச் செயல்பாடுகளையும் முன்களமாக மாற்றி கோட்பாட்டு-அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு  இலக்கிய அறிதல் முறை, இலக்கியப் பொருள்கோள் முறை நவீன இலக்கியத்  தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் ஒரு உள்ளீடற்ற தோற்ற  மாயையே தவிர நிகழ்வு மெய்மை அல்ல. நவீன இலக்கியம் முன்னெப்போதும்  இல்லாத அளவுக்கு அரசியல் அழுத்தமும் கோட்பாட்டாக்க முனைப்பும் கொண்டது. முரண்கள், மோதல்கள், போராட்டங்கள், மாறுபாடுகள், வேறுபாடுகள் என்பவற்றின் தெளிவான வெளிப்பாடுகளாக அமைந்தது நவீன இலக்கியம் என்ற தொகுப்பு.

உலகமயமான நவீனத்துவம் என்பதை முன் களமாக வைத்து இந்திய மொழிகள் தமக்கான நவீனத்துவத்தை உருவாக்கிக் கொண்டபோது அந்தந்த மொழியிலும் சில மேற்பரப்புகள் உருவாகி நவீனத்துவம், நவீன நிலை என்பதை பிரதிநிதித்துவம் செய்தன. அவை பின் அந்த மொழிகளின் நவீன வடிவங்களாக, நவீனத்துவத்தின் மையங்களாக மாறி பொதுநவீனத்தன்மைக்கான அடையாளங்களாகக் கட்டமைக்கப்பட்டன. தமிழில் இந்த நிகழ்வு  இந்துமையத் தேசியம், பிராமண மைய அடையாளம், பிராமண எதிர்ப்பு அடையாளம், முற்போக்கு தேசியம், முதலாளியத் தேசியம் போன்ற சில வடிவங்களில் நிகழ்ந்தன. இவை அறிவுருவாக்க, அரசியல் தளத்தில் அடிப்படையான முரண்பாடுகளை, வேறுபாடுகளைக் கொண்டவை. ஆனால் நவீனத் தேசியம் என்ற பொதுக்களத்தில் தமக்கான இடத்தை அவை உருவாக்கிக்  கொள்கின்றன. நவீன தமிழிலக்கிய- கோட்பாட்டுத் துறை  இவற்றிற்கிடையிலான மோதல்களையும் முரண்களையும் பொதுப் போக்குகளாக அனுமதித்து  தன்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழின் நவீனத்துவம் முரண்களாலும் மோதல்களாலும் அமைந்தது, கருத்தியல் தளத்தில், கோட்பாட்டுத் தளத்தில் இவை மறைக்கப்படுவதன் மூலம் உருவாக்கப்பட்டதுதான் நம் காலத்திய பொது அடையாளங்கள் என்பதை உடைத்துக் காட்டிய நிகழ்வுதான் தமிழின் பின்நவீன அறிதல் முறையின் தொடக்கமாக அமைந்தது. தமிழின் பொதுநவீன உரையாடல் இதனை எதிர் கொண்ட விதம் மிகுந்த கவனத்திற்குரியது. தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்ற இரு இயக்கப் போக்குகளை தமிழின் நவீனத்துவம்  தனித்து அடையாளப் படுத்தியதற்குக் காரணம் இவை இரண்டும் கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமின்றி அறிதல்முறை, மொழிபுமுறை, அறிவுருவாக்க முறை, வரலாறு மொழிதல் எனப் பல களங்களில் அடிப்படை மாற்றங்களை முன் வைப்பவை. சாதி, பாலரசியல் என்ற இரு தொன்மையான இந்தியச் சிக்கலை நவீனக் களத்தில் வைத்து ஆய்வு செய்வதன் வழியாக நம் காலத்தின் இந்த இருபெரும் மாற்று மரபுகளும் தமக்கேயான இருவகை அறிவுருவாக்க, அறிவறிதல் முறையியலை உருவாக்கித் தந்துள்ளன.

 பெண்ணியம், தலித்தியம் (ஒடுக்கப்பட்டோர் விடுதலையியல்) என்ற இரு மாற்றுச் சிந்தனைமுறைகளும் உலகியல், வாழ்வியல், உளவியல் தொடங்கி அரசியல் வரையிலான அனைத்து அறிவு மற்றும் செயல்களங்களிலும் தமக்கான மாறுபட்ட அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. தமிழில் இவ்விரு சிந்தனைப் பள்ளிகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதும் மிகமிகக் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. இவை பின்நவீனச் சூழலில் அமைந்த வெறும் கோட்பாட்டு உரையாடல்களாக மட்டும் இன்றி அடிப்படையான மாற்றத்தை முன்வைக்கும் அரசியல் இயக்கச் செயல்திட்டங்களாகவும் உள்ளதால் ஆண்மையத் தன்மை கொண்ட இலக்கிய, அறிவுத்துறையும் தீண்டாமைப் படிநிலையை மறுக்காத அழகியல் பார்வைகளும் இவை பற்றிய அமைதியை, உருமறைப்பை இயற்கையான ஒரு விளைவுபோல தம்போக்கில் கடந்து சென்று விடுகின்றன.

இந்த வகையான மறதி, மறைப்பு என்ற உருவழிக்கும் உத்திகளை  நாம் எவ்வாறு எதிர் கொள்வது. அம்பேத்கர் உருவாக்கித் தந்துள்ள சமூக-வரலாற்று-அரசியல் பார்வைகளை விரிவுபடுத்தித் தற்கால அரசியல்-பொருளாதார நிலைகளை ஆய்வுக்கு உள்ளாக்குவதுடன் நேரடியான அரசியல் செயல்பாடுகள் வழியாகத் தலித் அரசியல், தலித் விடுதலை கோட்பாடுகளை  செயல்பாடு கொண்ட அறிவுக்களமாக உருவாக்க இயலும்.  தலித் அரசியலை ஏற்பது என்பது  தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை  விடுதலைக் கருத்தியல் கொண்டவர்களாக உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு அது ஒரு கருத்தியல் நோய்நீக்கம் என்பதும் புரியவரும். அதாவது தலித் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தை விடுதலை செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சமத்துவத்தைப் பெறுவதற்கான அரசியல் மட்டுமல்ல இந்தியச் சமூகத்தை மனிதநிலை கொண்ட அறிவு-அறம் சார்ந்த சமூகமாக மாற்றியமைப்பதற்கான பலகட்ட செயல்திட்டம் என்பது பற்றிய புரிதல் இது.

இதே போன்ற நிலைமாற்றத் தன்மை கொண்ட ஒரு அரசியல் பெண்ணிய அரசியல். பெண்ணிய அறிவுருவாக்க மரபு உலக அளவில் மனிதநிலை பற்றிய சொல்லாடலையும் கருத்தமைவுகளையும் முழுமையாக மாற்றியமைத்துள்ளது.  ஆனால் தமிழில் பெண்ணிய உரையாடலும், பெண்ணியச் சொல்லாடல்களும் பெற்றுள்ள இடம் மிகமிகக் குறைவானது.  ஆண்மைய அறிவுருவாக்கம், ஆண்மைய பொருளுரைப்பு முறைகளின் அடிப்படைகளைத் தகர்ப்பதற்கான கருத்தியல் கருவிகள் தமிழில் தேவையான அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது இதற்கான காரணங்களில் ஒன்று. இதன் தொடர்ச்சியாக பன்மை அடையாள அரசியல், பசுமை அரசியல் போன்ற மாற்று அரசியல் கருத்தியல்களும் தமிழில் விளிம்பு நிலையில் குறுக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய உரையாடலை விரிவுபடுத்த இலக்கியம்-கோட்பாடு என்ற இரண்டு தளத்திலும் செறிவான, செயல்பாடு கொண்ட ஆய்வுகள் தேவை.

அயோத்திதாசரை மறைத்து பாரதி, புதுமைப்பித்தன் என்ற இருவரை நவீனத் தமிழின் ‘துன்பியல் நாயகர்களாக’ வைத்து உருவாக்கப்பட்டுள்ள நவீன இலக்கிய உரையாடல் கோட்பாட்டு மறைப்பின் உத்தியைக் கொண்டது. இதனைத் திட்டமிட்டு யார் செய்தது என்ற கேள்விக்கு இடமில்லை. இது ஒரு வரலாற்று நிகழ்வு, மையப்படுத்தப்பட்ட அறிவுருவாக்கத்தின் தொடர்ச்சி, சாதிவழிக் கருத்துருவத்தின் நவீன வடிவம். திராவிட-பிற்பட்டோர் அடையாள அரசியலும், அழகியலும் இதற்கு இணையாக அமைந்த மாற்றம் மறுக்கும் தீண்டாமையைத் திணிக்கும் வன்கொடுமைகளாக இறுக்கமடைந்துள்ள நிலையில் தமிழ் அடையாளம் என்பதன் கோட்பாட்டுச் சிக்கல்கள்  மேற்பரப்பிற்கு வந்துள்ளன. இந்த வரலாற்று மோதல்களைக் கோட்பாட்டாக்கம் செய்வதன் வழியாகத் தன்னை விளக்கிக் கொள்ள முனையும் தமிழின் நவீனத்துவ உரையாடல் இனி  பின்நவீனத்துவ, பன்மை நவீனத்துவ அறிவுருவாக்கத்தின் பகுதியாக மாறிவிடும்.   இந்தத் தளத்தில் கோட்பாட்டு உரையாடலைத் தவிர்க்க முனையும் இலக்கியச் செயல்பாடு அரசியல் நீக்கத்திற்கான உத்தி என்பதையும், இலக்கியச் செயல்பாட்டை  அரசியல் பங்காற்றாத ஒன்றாக ஒதுக்க முனையும்  கோட்பாட்டுச் செயல்பாடு  மாற்று அரசியலை ஏற்காத அதிகார அரசியலின் வன்முறை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இலக்கியம், கோட்பாடு இரண்டுமே அறிவுருவாக்க அரசியலின் இருபெரும் களங்கள் என்ற புரிதலுடன் அமைந்த ஒரு உரையாடலுக்கான தொடக்கமாக வைக்கப்படுகிறது இந்த கட்டுரை.

 1.

இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்று, அறிவுத்துறைகள் அனைத்துடனும் தொடர்ந்து ஊடாட்டம் நிகழ்த்தும் ஒன்று. அறிவுருவாக்கச் செயல்பாட்டிற்கு முன்கட்டச் செயல்பாடான அழகியலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இலக்கியம் ஒரு சமூகத்தின் நடத்தையியலுடன் நெருங்கிய தொடர்புடையது. அழகியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு சமூகத்தின் அறவியல் வடிவமைக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் அறவியல் நெறிகள் அனைத்தும் இணைந்து அச்சமூகத்தின் அரசியல் கோட்பாட்டினை வடிவமைக்கின்றன. அழகியல், அறவியல், அரசியல் என்னும் தொடர் இணைப்பில் நிகழும் இயைபுகள்-முரண்கள், இடைவெளிகள்-சிக்கல்கள் என்பவையே சமூகவாழ்வின் மொத்தமான இருப்பையும் இயக்கத்தையும் வடிவமைத்துத் தருபவை. தனிமனிதர் என்னும் நிலையைச் சமூகமனிதராக வடிவமைப்பதில் மொழிக்கு உள்ள பங்கு விரிவான தளத்தில் இலக்கியத்திற்கும் உண்டு. அவ்வகையில் சமயத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவு நெருக்கமானது, இரண்டும் மனித இருப்பைப் பொருள்படுத்தும் மிக நுட்பமான செயலைக் கையாள்பவை. இவை இரண்டும் அவ்வகையில் கோட்பாட்டு உருவாக்கத்தின் இணை அமைப்புகளாகச் செயல்படுகின்றவை, இன்பம்-துன்பம் என்னும் உளவியல் இருமைகளைப் பிற புலன் உணர்வுகளுடன் உறவுபடுத்தி வாழ்தல் என்னும் செயல்பாட்டில் நன்மை-தீமை, ஏற்கக்கூடியன-ஏற்கக்கூடாதன எனும் மதிப்பீட்டு அறிதலை இவை உருவாக்கித் தருகின்றன. மனித வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பவற்றை வரையறுத்தல், விளக்குதல் என்னும் இருவகைச் செயல்பாட்டிலும் கலை இலக்கியம், சமயம் என்னும் இணைப்பு கூடுதல் நெருக்கம் உடையது. அழகுணர்வு மற்றும் இன்புறுதல் என்னும் கூறுகளைக் கையாள்வதன் மூலம் மனித உளவியலை இயக்கும் ஆற்றல் இவற்றிற்கு அமைந்துவிடுகிறது. இந்த உளவியல் தளத்தில் இலக்கியம் நிகழ்த்தும் செயல்களில் முதன்மையானது கோட்பாட்டு உருவாக்கம். கோட்பாட்டு உருவாக்கம் இல்லாத இலக்கியப் படைப்பு என்பது இருக்க இயலும் என்றால் அது கோட்பாடுகளை மறுக்கும் இலக்கியமாகி மேலதிக கோட்பாட்டுச் சொல்லாடலாகவே அமையும். கோட்பாடுகளின் முன் அறிதலுடன் தொடங்கி அவற்றில் நிகழும் சிக்கல்கள், சிடுக்குகள் குறித்து விவாதித்து பின் ஒரு கோட்பாட்டாக்கத்துடன் முடியும் இலக்கிய ஆக்கம் எப்போதும் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது.

வரிமொழி மரபுகளில் மற்றுமின்றி வாய்மொழி மரபிலும் இந்த நிகழ்வு எப்போதும் உள்ள ஒன்று. வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் வாய்மொழி மரபு கற்பித்துக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு சூழலிலும் அது தன் கதையைக் கூறிக்கொண்டே இருக்கிறது. அது தொடர்ந்து தனிமனிதரை சமூக மனிதராக, மரபு இயைந்த மனிதராக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெருங்கதைகளான மகாபாரதம், ராமாயணம் என்னும் இரு மரபுகளும் ஒரே சமயத்தில் வாய்மொழி மரபுகளிலும் காவிய மரபுகளிலும் தொடர்ந்து வருவதற்கு அவற்றின் கோட்பாட்டுக் கட்டமைப்புகளே அடிப்படையாக அமைந்துள்ளன. இக்கதைப்பரப்பிற்கு வெளியே உள்ள சமூகங்களும் கூட இக்கதைகளைத் கூறித் தொடர்வதற்கு அவை தமக்குள் கொண்டுள்ள கோட்பாட்டு உறவுகளே அடிப்படையாக அமைந்துள்ளன. தனது சமூக-அரசியல் கோட்பாட்டுத் தொகுதிக்குள் பொருந்தாத எந்த கதைக்கூறலையும் ஒரு சமூகம் தனது மரபுக்குள் அனுமதிப்பதில்லை, மற்றொரு வகையில் அப்படியொன்று உருவாகும் சாத்தியம் ஒற்றைத் தன்மையான சமூக அமைப்பில் ஏற்படுவதும் இல்லை. ‘மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை, மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்’ என்பது தொல்காப்பிய கோட்பாடு. ஆனால் பன்மையான, கூட்டிணைப்பான சமூக அமைப்புகளில் கதைகளும் எதிர்க்கதைகளும் உருவாகியபடி இருக்கும். அக்கதைகளுக்கிடையிலான முரண்களும் மோதல்களும் கோட்பாட்டாக்கம் பெறும்பொழுது பல்வேறு இணைமரபுகள் தோன்றி வளர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதியும் உரையாடியும் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடும். தமிழின் இலக்கியவரலாறும் அதன் பன்மைப்பொருளில் இவ்வகையான கோட்பாட்டுப் போராட்டங்கள், மோதல்களின் வரலாறாக அமைந்து ஒரு கட்டத்தில் தமிழ் என்னும் ஒற்றை அடையாளத்தின் வழியே பொதுமரபாக மறுவடிவம் பெற்றுள்ளது. இப்பொதுமரபு இதற்கு முன்பு தனித்தும், விலகியும், முரண்பட்டும், மறுத்தும் இயங்கிவந்த பல்வேறு மரபுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு கோட்பாட்டு இணக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒன்று.

நாம் இப்போது அறிந்து பயின்று வரும் தமிழ்மொழி, தமிழ் மரபு, தமிழ் வரலாறு என்னும் அனைத்தும் மொழித்தேசம் மற்றும் மொழியினம் என்ற கோட்பாடுகளினால் கட்டப்பட்டவை. தமிழ் என்பதே அவ்வகையில் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் அதன் தொடர்ச்சியாக ஒரு கோட்பாடாகவும் இருந்து நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. இதனைத் தமிழின் நவீன வடிவம் என்று நாம் புரிந்துகொள்ளும் போதுதான் தமிழ் எழுத்து மற்றும் தமிழ் இலக்கியம் என்பதன் கோட்பாட்டு அரசியலையும் நாம் புரிந்துகொள்ள இயலும். இல்லையெனில் நமது இன்றைய எழுத்து மற்றும் இலக்கியச் செயல்பாடுகளை மாறுதல் அடையாத ஒரு நெடிய மரபின் மீட்டுருவாக்கம் என்று பொருள்படுத்திக்கொண்டு எந்தவித புத்துருவாக்கத்தையும் மறுத்தும் எதிர்த்தும் செயல்படுகிறவர்களாகி கோட்பாட்டு வெறுமை கொண்டவர்களாகத் தேங்கி நலிந்துபோக நேரும். நாம் நம்மைப் புதிதாக வரையறுத்தும் பொருள்படுத்தியுமே ஒரு நவீன வடிவத்தை அடைந்திருக்கிறோம். இது ஒரு புத்துருவாக்கம், இது உலகின் எல்லாச் சமூகங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. நம் சமூகம் இதுவரை இதுபோன்ற ஒரு அரசியல்-பொருளாதார-சமூகக் கருத்துருவங்களுடன் வாழ்ந்திருக்கவில்லை என்பதே நமது நினைவில் இன்னும் ஒரு கோட்பாடாகப் பதிவாகவில்லை என்பதால்தான் நெடிய மாற்றம் அடையாத, நிலைத்த அடையாளம் ஒன்றை மையமாக வைத்து நமது அணுகுமுறைகளை, சமூக உளவியலைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். நமது சமூக இயங்கு தளம் அதன் பொருள் கட்டுமானம், அரசியல் அனைத்தும் வேறு ஒரு வடிவம் பெற்றுவிட்டது என்பது இன்னும் நமது பொது உளவியல்பில் பதிவாகவில்லை என்பதால்தான் மக்கள்மைய அரசியல் அறம் (Democratic Ethics) ஒரு பண்பாட்டு அடிப்படையாக நம்மிடையே உருவாவதில் சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது.

 2.

இந்தியச் சமூகவரலாற்றில் மறுசீரமைப்பு, புத்துருவாக்கம் என்பவை வலிமையான கோட்பாட்டு இடையீடுகளால் நிகழ்த்தப்பட்டவை. பௌத்த-சமண சீரமைப்பு மரபுகள் இந்தியச் சமூக-அரசியலின் அடிப்படைகளை மாற்றி அமைக்க முயற்சித்துப் பின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதன் விளைவுகளை நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறுவிதமாக சந்தித்து வந்திருக்கிறோம். சமூகச் சமத்துவமின்மை, சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை வன்கொடுமை என்பவற்றின் நெடிய வரலாற்றில் மாற்று வழிமுறைகள் அழிக்கப்பட்டதன் அடையாளங்களாக இந்த விளிம்புநிலை மரபுகள் மீந்து நின்றன. மாற்றங்களை மறுக்கும் இந்தியச் சமூக அமைப்பில் காலனிய-நவீனத்துவம் ஏற்படுத்திய அடிப்படை உடைப்புகள் நம்மை மாற்றுகளையும் மறுசீரமைப்புகளையும் புத்துருவாக்கங்களையும் நோக்கித் தள்ளியபோதுதான் நாம் மீண்டும் கோட்பாட்டு கட்டமைப்புகளின் தேவையைப் புரிந்துகொள்ள நேர்ந்தது. காலனிய-நவீனத்துவம் இந்தியப் பெருமரபுகளின் வன்முறைகளை, இந்தியச் சமய மரபுகளின் மக்கள் மறுப்பு விதிமுறைகளை, இந்திய ஆட்சியதிகாரத்தின் ஒடுக்குமுறை வடிவங்களை கேள்விக்கு உட்படுத்திய பின்பே நாம் நம்மை மறுபரிசீலனைக்கு உட்படுத்திக்கொண்டோம். இன்றுள்ள வடிவத்தில் இந்தியச் சமயங்களும் கூடத் தமது புறக்கட்டமைப்புகளை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. காலனிய அரசியல் நம்மை தேசிய மயப்படுத்தியது, தேசம் என்பதை அடையாளம் காட்டியது, அதன் தொடர்ச்சியாகவே இந்திய மொழித்தேசியங்களும் உருவாக முடிந்தது. நவீன இயந்திரத்தொழில் நுட்பம் இந்திய வாழ்முறையின் அடிப்படைகளை மாற்றி அமைத்தது போல மேற்கின் எடுத்துரைப்பு முறையும் தகவல் பரப்பு முறையும் இந்தியக் கதையாடல் முறைகளை மாற்றியமைத்தன. தமிழின் நவீன உரைநடை என்பது வெறும் வாக்கிய அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் அல்ல, அது ஒரு கருத்தியல் மாற்றம், அடிப்படையில் ஒரு கோட்பாட்டு மாற்றம். உரையாடல் என்பது சமூகச் செயலின் ஒரு வடிவம் ஆனால் அது ஒரு இலக்கிய மொழியாக, இலக்கிய எடுத்துரைப்பு வடிவமாக மாற நமக்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. இந்த எடுத்துரைப்பு முறை, கதைகூறுமுறை ஒரேசமயத்தில் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வது, கோட்பாடுகளைத் தன்வயப்படுத்துவது, கோட்பாடுகளை உருவாக்குவது, கோட்பாடுகளைத் தேர்ந்தெடுப்பது, சில கோட்பாடுகளை மறைப்பது என்பவற்றை உள்ளடக்கும் ஒன்று.

3.

தமிழின் தொடக்ககால உரைநடைகள் கிறித்துவ இறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது தமிழ்ச்சிந்தனையின் நவீன வடிவத்திற்குள் ஏற்பட்ட ஒரு உள்ளீடான முரண்பாட்டைத் தொடங்கி வைத்தது. அதாவது நவீன சொல்லாடல் மற்றும் எடுத்துரைப்பு முறை என்பது வெளியிலிருந்து பேசும் குரலாக தொடக்கம் பெற்றது. மற்றொருவராக இருந்து, மற்றொரு கோட்பாட்டின் வழியே தமிழ்ச்சமூகத்தைப் பார்த்தல், அதே சமயம் தமிழ்ச் சமூகத்தை மற்றொன்றாக மாற்றுவதற்காகப் பேசுதல், மற்றொரு அணுகுமுறையின் வழியே தமிழ்ச் சமூகத்தின் மீது விமர்சனம் வைத்தல் என மற்றொரு அறிவு மரபுக்கும் தமிழ் மரபுக்கும் இடையிலான ஊடாட்டக் களமாக தமிழின் முன் நவீன எழுத்துருவாக்கம் அமைந்திருந்தது. பௌத்த-சமண மரபுகளின் கோட்பாட்டுச் சொல்லாடல்கள் தொல்தமிழகத்தில் ஏற்படுத்திய அதேவகை அழுத்தத்தை இந்த முன்நவீன எடுத்துரைப்புகள் ஏற்படுத்தின. ஐரோப்பிய அறிவொளி மரபும், புரட்சிகளின் புதிய கோட்பாடுகளும் தமிழின் அறிதல் முறையில் அடிப்படைக் கேள்விகளை உருவாக்க முடிந்தது. கிறித்துவத்தின் நிறுவனம் சார்ந்த நடைமுறைகள் தமிழ் மரபின் சமூகச் சொல்லாடலின் போதாமைகளை புலப்படுத்திக் காட்டின. இந்த உலகமயமான பின்புலத்தில்தான் தமிழின் மறுவரையறுப்பு முயற்சிகள் தொடக்கம் கொள்கின்றன. தமிழின் பொது நினைவின் கூட்டுருவாக்கம் என்பது ‘உலகமயமான’ கோட்பாடுகளின் பின்புலத்தில் இவ்வகையாகப் புத்துருவாக்கம் பெறுகிறது.

தமிழின் தொடக்க கட்ட இலக்கிய, கோட்பாட்டுச் சொல்லாடல்கள் அனைத்தும் இருவகையான குரல்களின் இணைப்பு: ஒன்று தமிழாக இருந்து தமிழுடன் பேசும் குரல், மற்றது தமிழாக இருந்து உலக அறிவுடன் பேசும் குரல். உலக அறிவு என்பது காலனிய அறிவு தன்னைப் பொருத்திக்கொண்ட விரிந்த தளம், இங்கு உலகம் என்பது ஐரோப்பிய மையத்தன்மை உடைய ஒரு கருதுகோள். இதன் முன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ள நாம் அதன் மொழியில் பேசவேண்டும் இல்லையெனில் நாம் மொழியும் அடையாளமும் அற்றவர்கள் என ஒப்புக்கொண்டு உருவற்றவர்களாக மாறவேண்டும். அவ்வகையாக உருவழிந்து போவதிலிருந்து நம்மைத் தடுத்துக்கொள்ளும் முயற்சிகள் எல்லா தளங்களிலும் நிகழ்ந்துள்ளன.

தமிழின் மொழிக்குடும்பத்தை அடையாளம் காணுதல், தமிழகத்தின் நிலவியல்-வடிவியல்களைப் பதிவுசெய்தல், தமிழக அரசுகளின் வரலாற்றை நேர்கோட்டுக் கால வரிசையில் எழுதுதல், தமிழகத்தின் சாதி-குல வரலாறுகளையும் வழக்காறுகளையும் தொகுத்தல், அதுவரை பொதுச்சமூகத்திற்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், பழந்தமிழ் மொழியைத் தற்காலத் தமிழுக்குள் பதிவுசெய்தல் என அறிவுருவாக்க, ஆவண உருவாக்க செயல்பாடுகளாக  இவை விரிவடைந்துள்ளன. அத்துடன் தமிழின் வேறுபட்ட மரபுகளையும், பன்மையான வழக்காறுகளையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளத்தை உருவாக்கி அதற்குள் ஒரு செவ்வியல் மரபை மையப்படுத்துல் எனும் பண்பாட்டு அரசியல், அடையாள அரசியல் உருவாக்கம் என்னும் மிகுந்த முக்கியத்துவமுடைய செயல்பாடும் நிகழ்கிறது. இவை அனைத்திலும் ஒரு பிரதிமையத்தன்மை, பனுவல் மையத்தன்மை உள்ளுடி இருக்கிறது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1835-க்குப் பிறகு இந்தியர்கள் அச்சுப்படிகளை, நூல்களை உருவாக்கும் உரிமை பெற்ற பிறகான நிகழ்வுகள் இவை, ஆனால் இவை அனைத்தையும் தொடங்கிவைத்தவர்கள் ஐரோப்பிய சமயப்பணியாளர்களும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிபுணர்களும். அவர்களின் ஆவணங்களும் ஆய்வுகளும் தமிழக-இந்திய அறிவைத் தன்வயப்படுத்தி மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உத்தி. அதே ஆவணங்களும் ஆய்வுத் தரவுகளும் தமிழ் சார்ந்த அறிவுருவாக்கத்தின் அடிப்படைகளாக அமைகின்றன. இந்தத் தளமாற்றம் தமிழ் அறிவு என்பது ஒட்டுருவத் தன்மையை, கலப்புத்தன்மையை ஏற்று தனக்கான கோட்பாட்டுருவாக்கத்தை நிகழ்த்தியதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. இதற்குப் பின்னான தமிழ்ச்சொல்லாடல்களின் அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியாக கோட்பாட்டாக்கம் என்பது மையமான இடத்தைப் பெறுகிறது.

வாய்மொழி வடிவங்கள், நிகழ்த்துக் கலைகள், எழுத்து உருவாக்கங்கள் அனைத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடு சார்ந்த உரையாடல்கள் உள்ளடக்கப்பட்டன. கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திர கீர்த்தனை கிருத்தவம் ஏற்படுத்திய தீண்டாமை குறித்த கேள்வியைக் கையாள்வதன் மூலம் இந்து மதத்திற்குள் ஒரு கோட்பாட்டு இடையீட்டைச் செய்ய முயல்கிறது. இராமலிங்க அடிகள் உலகமயமான பின்னணியில் ‘சமரச சன்மார்க்கம’; என்பதை கோட்பாடாக்கம் செய்வதுடன் நிறுவனம் சார்ந்த முறையியல்களையும் உருவாக்குகிறார், அவருக்குப் பாடல், உரைநடை, பேச்சு அனைத்தும் தனது கருத்துருவாக்கச் செயல்பாட்டின் பகுதிகளாக அமைகின்றன. பாரதிக்கு நவீனத்துவம் என்பது சீர்திருத்தம் பெற்ற இந்து மதம், விடுதலை பெற்ற தாய்நாடு என்பவற்றுடன் இணைகிறது, அவரது பாடல்களும் எழுத்துக்களும் நவீனத்துவத்தைத் தன்வயப்படுத்தும் முயற்சிகளாகின்றன. அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் ஈ.வெ.ரா இருவரும் தமிழ் அரசியல், தமிழ் அறிவு, தமிழ் அடையாளம் என்பவற்றின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்தியதன் மூலம் புதிய கோட்பாட்டு, கருத்துருவ அமைப்பை உருவாக்குகின்றனர்.

தேசியம், தேச உருவாக்கம் என்பவை மறுசீரமைக்கப்பட்ட இந்து அடையாளத்துடன் தமிழின் ஒரு முக்கியச் சொல்லாடலாகிறது, திராவிட அரசியல் சொல்லாடல் என்பது பகுத்தறிவின் அடிப்படையிலான சமூகநீதியின் உருவகமாகிறது. இடதுசாரி சிந்தனைகள் உலக அளவிலான விடுதலையின் குறியீடாகத் தமிழ் வெகுசன உளவியலில் பதிவாகிவிட்டதுடன் இலக்கிய, கோட்பாட்டுச் சொல்லாடலின் புலப்படாத உள்ளடக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழின் வெகுமக்கள் அரசியல் பேச்சுச்செயலின் பிரிக்கமுடியாத பகுதியாக ஒரு தொன்மத்தின் தன்மையுடன் இடதுசாரி கருத்தியலின் தொடர்கள் பதிந்துபோய் உள்ளன. இவற்றைக் கடந்து புரட்சித்தலைவர்களின் தொன்மங்களும், துயர்த்தீர்க்கும் அன்னை படிமங்களும், தமிழினத் தலைவர்களின் பொற்காலக் கனவுகளும் எனத்தொடரும் நீண்ட அரசியல் மொழிப்பெருக்கத்தில் நவீன தமிழ் எழுத்து எந்த கோட்பாடுகளின் அடிப்படையில் தன்னைத் தொடர்கிறது, எந்தக் கோட்பாடுகளை எழுத்தாக்குகிறது, தன்னைத்தான் எவ்வகையில் கோட்பாட்டாக்கம் செய்கிறது என்பது வெறும் எழுத்து குறித்தான கேள்வி மட்டுமல்ல. இன்று நிகழ்ந்துள்ள இரண்டாம் கட்ட உலகமயமாதலுக்குப்பின், சர்வதேச மூலதன ஏகாதிபத்திய உருவாக்கத்தின் பின், உயர்தொழில்நுட்ப சர்வாதிகாரத்திற்குப் பின் இந்தக்கேள்விகள் இனி நாம் வாழ்வதற்கான கனவுகள் குறித்தானவை, நம்மை அரசியல் உயிரிகளாக வைத்துக்கொள்வதற்கான நம்பிக்கைகள் தொடர்பானவை.

 4.

தமிழில் கோட்பாடுசார்ந்த எழுத்துக்கள், எழுத்து சார்ந்த கோட்பாடுகள் என்ற இரண்டு தளங்களிலும் நாம் கடுமையான சிக்கலை அடைந்திருக்கிறோம். ஏனெனில் இதுவரை நாம் வைத்திருந்த நம்பிக்கைகள், நமக்குக் கிடைத்து வந்த தரவுகள் அனைத்தும் அடிப்படையில் நம்மைக் கைவிட்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் இதுவரை கையாண்டு வந்த அறிதல்கருவிகள் போதுமானதாக இல்லாததுடன் நமக்கு மிகக்கேடான புரிதல்களையும் அவை அளித்து வந்திருக்கின்றன. தமிழ் என்னும் ஒற்றை அடையாளத்திற்குள் ஒரு பண்பாட்டு மையம் இருப்பதாக நாம் நம்பி வந்ததை சாதியின் இன்றைய இறுக்கம் குறித்த புரிதல் உடைத்துப் போடுகிறது. தமிழில் ஒரு நவீனத்துவ- பகுத்தறிவு மரபு உருவாகி வந்ததாக நாம் நம்பிவந்ததை இந்துமைய சடங்குப் பெருக்கம் பொய்யாக்கிவிடுகிறது. தமிழ்ச் சமூகத்திற்கு இயற்கை சார்ந்த வாழ்வியல் பழகிய ஒன்று என்ற நம்பிக்கையை இயற்கை நாசத்தைச் சிறிதும் பொறுப்பற்று பெருமையுடன் செய்து கொண்டிருப்பதுடன் அணுவுலைகளை மனிதகுலத்தைக் காக்க வந்த மாமருந்து என்று நாம் கொண்டாடிக்கொண்டிருப்பது மொத்தமாக அழித்துவிடுகிறது. தமிழில் தொடர்ச்சியான ஒரு அரசியல் சொல்லாடல் இருந்து வருவதாகச் சொல்லப்பட்டு வந்தது வெறும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி மற்றும் துணைக் கட்சிகளின் படைபல அணிவகுப்பு என்பதன் மூலம் பொய்யாக்கப்பட்டுவிட்டது. தமிழின் இன-மொழி-பண்பாட்டு அடையாள அரசியல் பற்றிய கட்டுக் கதைகளை இலங்கை மண்ணில் தமிழினப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழ்கூறும் நல்லுலகெங்கும் தடையின்றி நடந்துகொண்டிருந்த தேர்தல் கள நாடகப் பேச்சுகள் எரித்து இல்லாமலாக்கிவிட்டன. இன-மொழி-அடையாளம் சார்ந்த விடுதலை மற்றும் தன்னுரிமைப் போராட்டங்கள் என்பது பின் நவினத்தவத்துவத் தளத்தில் பொருளற்றவை என்பது போன்ற பேச்சுகள் ஒருபுறம் பரப்பப்படுகின்றன.

அப்படியெனில் தமிழில் அரசியலாக்கம் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதைப்பற்றிய கேள்விகள் மீண்டும் வேறொரு தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழின் அறிவுத்துறையும், எழுத்தும் பெருங்கதையாடல்களின் வழிபாட்டு மன்றங்களாகிவிட்டதால் இவை அரசியல் நீக்கத்தை உறுத்தலின்றிச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற பன்மை மரபும் பழமை மரபும் இறுக்கம் பெற்ற நாட்டில் அரசியல் நீக்கப்பட்ட தனிமனிதர்களும், சமூகக்குழுக்களும் மக்கள்மைய அரசியலின் அடிப்படை அறங்களை அழிக்கும் புராதன வன்முறையின் கருவிகளாகிவிடுவதைத் தவிர வேறுவழி இல்லை. இந்திய அரசியல் அமைப்பும் நவீன மனிதஉரிமை கோட்பாடுகளும் இந்தியாவின் பண்பாட்டில் படியாமல் விலகி இருப்பதற்கான காரணம் இங்கு கவிந்திருக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சமூக உளவியல். இந்த உளவியல் விடுதலைக் கோட்பாடுகளால் வழிநடத்கப்படும் நவீன ஜனநாயக அரசியல் உருவாக்கத்தை அழித்து அடிப்படைவாத வன்முறை ஆட்சி அதிகாரத்தையே உருவாக்கும். அப்படியெனில் அரசியலாக்கத்தை தொடர்ந்து செய்யும் கலை-இலக்கியங்கள் நமது இன்றைய தேவை.

இதுவரை இருந்த அரசியலாக்கம் மற்றும் கோட்பாட்டாக்க முறையில் என்ன கெடுதி நேர்ந்தது என்ற கேள்வி எழும். அவற்றின் பன்மை மறுக்கும் அறிதல் முறைகளே அவற்றின் அடிப்படைக் கெடுதிகள். உலக அளவிலான விடுதலைக் கருத்தியல்களில் ஒன்றை அறிவியல் பூர்வமாக முன்வைத்த பேரறிஞர் அம்பேத்கரின் சிந்தனைகள் தமிழின் பொதுச் சிந்தனைக் களத்தில் இன்றுவரை விளிம்புநிலையிலேயே வைக்கப்பட்டிருப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தலித் அரசியல், தலித் கருத்தியல் குறித்த தமிழ் எழுத்தாளர்கள், அறிவுத்துறையினரின் இழிவான புறம்தள்ளும் பார்வை இவர்கள் எந்த நாளும் விடுதலை அரசியலுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பதற்கான அடையாளம். தலித் இலக்கியம் ஏதோ தலித்துகள் எழுதி தலித்துகள் படித்துக்கொள்ளவேண்டியது என்பது போலவும் அவை தமிழ் இலக்கியத்திலோ, சிந்தனைத் தளத்திலோ சேரமுடியாதவை என்பது போலவுமான ஒரு போக்கை தமிழ்ப் பொதுக்களம் பழகி வைத்திருப்பது இதன் அறிவு மறுப்புக்கு மற்றொரு உதாரணம்.

தமிழில் பெண்ணியச் சொல்லாடலும், பெண்ணிய கோட்பாடுகளும் எதிர்கொள்ளப்படும் முறையை வைத்தே தமிழ்ச்சிந்தனை நவீன தன்மையை அடையவில்லை, அது மனித உரிமைகளை மறுக்கும், அறிவியல் பார்வையற்ற நிலையில்தான் இன்னும் இருக்கிறது, அதிலேயே அது பெருமை கொள்கிறது என்பது புலப்பட்டுவிடும். பெரியார் தமிழில் இடஒதுக்கீட்டு அரசியல் தவிர மற்றவற்றில் வெளியேற்றப்பட்ட ஒரு சிந்தனையாளர் என்பது புரியவரும். ஒரு மரபுச் சமூகம் பொதுப்புத்தியில் பெண்ணிய மறுப்பு, பெண் சமத்துவ எதிர்ப்பைக் கொண்டிருந்தால் அதற்கான போராட்ட முறை வேறு. இங்கு நவீன சிந்தனை, நவீன இலக்கியம் என்ற தளத்தில் அவை நியாயப்படுத்தப்படுவதன் ஒரே பின்னணி இதுவரை இந்தத் தளங்கள் நவீனப்படவில்லை, விடுதலைக் கருத்தியல்களை ஏற்கவில்லை இவற்றின் அறிவார்த்தம் என்பது வெறும் நடிப்பு என்பதுதான். பெண்ணியம் மற்றும் பெண் சமத்துவம் என்பதை ஒவ்வொரு இழையிலும் அவமானப்படுத்தும் தமிழின் காட்சி ஊடகங்கள் மற்றும் திரைத்துறை என்னும் அறிவுமறுப்பு, விடுதலை மறுப்பு நிறுவனங்களுக்கு இவர்கள் அளித்துவரும் திறன் சார்ந்த பங்களிப்புகள் குறித்து இவர்களுக்கு எந்த அவமான உணர்வும் ஏற்படுவதில்லை, மாறாக அதுவே இவர்களின் வீடுபேறாக இருக்கிறது. ஆனால் இவர்களே சமூக அறம், நுண்ணுணர்வுகள் என்று பேசித்திரியும்போது தமிழின் மாற்றுச் சிந்தனைகளுக்கான இடத்தையும் அழித்துவிடுகிறார்கள்.

தமிழில் விளிப்புநிலைச் சமூகங்கள், விளிம்புநிலை அரசியல் குறித்த கனத்த அமைதி பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழில் பதிவாகும் சிறுமரபுகள் குறித்த கதையாடல்கள் புதிய ஒரு தளத்தை அடைந்துள்ளன. இவை இதுவரையிலான கோட்பாட்டாக்கங்களின் போதமையை உணர்த்துகின்றன. இனக்குழு வாழ்க்கைக் கதைகள், இனவரைவியல் கதைகள் அடிப்படையில் மாற்று அரசியலின் கோட்பாடு மற்றும் செயல்பாடுகளின் தொடக்கமாக அமைகின்றவை. தமிழில் இவ்வகை எழுத்துக்கள் ஒரே தளத்தில் படைப்பிலக்கிலக்கியங்களாகவும் கோட்பாட்டு உருவாக்கமாகவும் பதிவாகத் தொடங்கியுள்ளன. சூழலியல் அரசியல் தமிழின் அதிக விளிம்பு நிலைப்படுத்தபட்ட ஒன்று. இது இலக்கியச் சொல்லாடலிலும், கோட்பாட்டுச் சொல்லாடலிலும் மறதிக்குட்பட்டதாகத் தொடர்கிறது. அழகை நேசித்தல் என்னும் ஒரு உணர்வுத் தளத்தில் தமிழில் அதிகம் பேசப்படும் இயற்கை அடிப்படை உலக அரசியலில் ஒன்றாகும்போது மறதிக்குட்பட்டதாக மாறிவிடுகிறது. தமிழில் எண்பதுகளில் தொடங்கப்பட்ட மார்க்சியத்திற்கான நெருக்கடிகள் குறித்த விவாதங்கள் தொடங்கி, பெரியாரியச் சிந்தனைகளை தற்காலப்படுத்துவது, அம்பேத்கரியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வது, பெண்ணியக் கேள்விகளின் வழி அனைத்து அறிவுத்தளங்களையும் மறுஆக்கம் செய்வது, தலித் அரசியலை ஜனநாயக அரசியலின் முன் நிபந்தனையாக ஏற்பது, இவற்றுடன் நுண்ணரசியல், உடலரசியல், அடையாள அரசியல் என்பவற்றையும் உள்ளடக்கிய பொதுக்களம் உருவாக்கப்படும் போதுதான் விடுதலைக் கருத்தியல்கள் சார்ந்த, ஆதிக்கத்தை மறுக்கும் பன்மை அரசியல் சொல்லாடல்கள் தமிழில் உருவாக முடியும்.

இவை அனைத்தையும் ஒன்றாகத் தரும் எந்த ஒரு தனித்த கோட்பாட்டுத் தொகுதியும் தற்போது இல்லை என்பதால் இவை கலப்புத் தன்மை-இணைப்புத் தன்மை கொண்டதாகவே இருக்கும். இந்த கலப்பு நிலையை, இணைப்பு நிலையை, ஒற்றைத் தன்மை அற்ற நிலையைத் தொடர்ந்து நினைவில் பதிவு செய்யவும் பெருங்கதையாடல்களால் மறைக்கப்படுகிறவைகளைத் தொடர்ந்து புலப்படுத்தவுமான தமிழின் எழுத்துக்கள் கோட்பாட்டு அடிப்படைகளுடன்தான் அமையும், இந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்ளவும் கோட்பாடுகள் வேண்டும்.

 5.

 கோட்பாட்டாக்கம் என்பது ஒரு அரசியல் செயல் என்பதால் கோட்பாட்டு நீக்கம் என்பது அரசியல் மறுப்புச் செயலாகிறது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக்கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலையை அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளைகளில் ஒன்றாக மாறிவிடும். இந்தச் சடங்கு நிலைக்கு மாற்றாக கோட்பாடுகளைப் புதுப்பித்தலையும் அவற்றை இயங்கும் நிலையில் வைப்பதையும் நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கவேண்டும். கோட்பாட்டுச் செயல் என்றவுடன் ஏதாவது ஒரு கருத்தாக்கத்தை மையப்படுத்தி அதுவே அனைத்தையும் உள்ளடக்கிவிட்டதாக நிறுவுவது கோட்பாட்டுக் கொடுங்கோன்மையின் அடிப்படை. இந்த வகை மையப்பட்ட கோட்பாடுகள் தமது கோட்பாட்டு நிலையை இழந்து ஆதிக்கக் கருத்தியல்களாகவும் அதிகாரப் பெருங்கதையாடல்களாகவும் மாறிவிடும். தமிழ்-திராவிட அடையாள அரசியல் என்றால் அதுவே அனைத்தையும் உள்ளடக்கிவிட்டதாகவும் அதற்குள் தலித் அடையாளம், பெண்ணிய அடையாளம், விளிம்புநிலை மக்கள் மற்றும் இனக்குழு அடையாளங்கள், பாலரசியல் அடையாளங்கள் என எதுவும் தனித்தனியே இருக்கமுடியாது என்பது உண்மையில் தன்னடையாளங்களின் அரசியல் இருப்பை அழிப்பதாகவே இருக்கும். இடதுசாரி சிந்தனைத் தளத்திலும் இதேபோல் பாலரசியல், சூழலியல் அரசியல், பண்பாட்டு-அடையாள அரசியல், மண்ணுரிமை அரசியல், தன்னாட்சி அரசியல், இனவிடுதலை அரசியல் என எல்லாம் அடங்கிவிட்டதாக உரிமை கோருவது அவற்றை மௌனத்தில் புதைத்து உருவழிக்கும் அழித்தொழிப்பு உத்தியாகவே இருக்கும். அப்படியெனில் வேறுபட்ட அடையாளங்களை மொழிப்படுத்துவதும் அந்த அடையாளங்கள் தம்மை கோட்பாட்டாக்கம் செய்யும்பொழுது அவற்றை பதிவுசெய்வதும் இன்றைய எழுத்துக்களின் முதல்கட்டச் செயல்பாடாக அமைகிறது.

உலக மேலாதிக்க அரசியலின் வெளிப்படையான நடவடிக்கைகள் ஒருபுறம், சர்வதேச மூலதன ஆதிக்கத்தின் சதிவலைப்பின்னல்கள் ஒருபுறம் என மக்கள் அழிப்புச் செயல்கள் விரிவடைந்துகொண்டிருக்கும் நம் காலகட்டத்தின் எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு உருவாக்க பங்களிப்பைக் கொண்டே தம்மை நியாயப்படுத்திக்கொள்கின்றன. தமிழின் இதுவரையான தனித்தனியான கோட்பாடு சார்ந்த எழுத்துக்கள் தமது இட-செயல் எல்லைகளைப் புரிந்து ஏற்று தனித்து மாறுபடும் கோட்பாட்டுச் சொல்லாடல்களுடன் தம்மை இணை-இருப்பாக்கிக்கொள்ளும் பொழுதே நம்காலத்திற்கான உலகமயச்சூழலில் பொருந்திய தமிழ் வாழ்வுக்கான கோட்பாட்டுத் தளங்கள் உருவாகமுடியும்.

 ——————————————–

குறிப்பு:

1. இக்கட்டுரையில் கோட்பாடு என்ற சொல் concept, ideology, doctrine, theory என்னும் சொற்களுக்கு நெருக்கமாக ஒரு வசதி கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது அதற்கான அரசியல் பொருளில். Conceptualizing- Deconceptualizing, Politicization-Depoliticization என்ற கருதுகோள்கள் கோட்பாட்டாக்கம்-கோட்பாட்டுநீக்கம், அரசியலாக்கம்-அரசியல் நீக்கம் எனக் கையாளப்பட்டுள்ளன.

 2. அரசியலாக்கம், அரசியல்நீக்கம் என்னும் கருத்தாக்கங்களை விளக்க பின்வரும் மேற்கோள் பயன்படலாம்:

Politics proper thus always involves a kind of short circuit between the universal and the particular; it involves the paradox of a singular that appears as a stand-in for the universal, destabilizing the “natural” functional order of relations in the social body.

The political struggle proper is therefore never simply a rational debate between multiple interests but, simultaneously, the struggle for one’s voice to be heard and recognized as that of a legitimate partner.

In this precise sense, politics and democracy are synonymous: the basic aim of antidemocratic politics always and by definition is and was de-politicization, that is, the unconditional demand that things should return to normal, with each individual doing his or her particular job.

[Slavoj Žižek , A Leftist Plea for “Eurocentrism”. Critical Inquiry, Vol. 24, No. 4 (Summer, 1998)  The University of Chicago Press]