செயல்வழி நிகழும் கோட்பாடு- பிரேம்

செயல்வழி நிகழும் கோட்பாடு

 ப. சிவகாமியின் இடதுகால் நுழைவு கட்டுரை நூலுக்கான அறிமுகம் 

(அணங்கு,2016)

இந்தியச் சமூகங்களில் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் இந்தியச் சமூகங்களால் விரும்பப்படாத, உள்வாங்கப்படாத  புறக்காரணிகளின் வழியாக நிகழ்ந்துள்ளன என்பதை அறிய நேரும்போது முதலில் நமக்கு அதிர்ச்சியும் சுயவெறுப்பும் தோன்றக்கூடும். இந்தியா என்ற தேசத்தை, அதன் கருத்தியலான தேசியத்தை காலனிய அரசும், காலனியப் பொருளாதார அமைப்பும் கட்டித்தந்தது போலவே இந்தியாவின் நவீன குடிமைச் சமூகத்தையும் காலனிய அமைப்பே கட்டித் தந்தது.

நவீன அரசு, நவீன இயந்திர உற்பத்தி முறை, நவீன அறிவு என்பவை இந்தியச் சமூகத்தின் கூட்டுநினைவில் புறக்காரணிகளாகவும் மற்றொரு வகையில் அடக்குமுறை கட்டமைப்புகளாகவுமே பதிவாகியிருந்தன. தம் காலத்திய வாழ்வின் கூறுகள் யாவும் புறத்திலிருந்து தம் மீது திணிக்கப்பட்டவை என்ற உணர்வு இந்தியச் சமூகத்தின் பொது அடையாளத்தை உருவாக்கப் பயன்பட்டுள்ளது. இந்த முரண் அடையாளத்தின் பகுதிகளான இந்தியத் தேசியம், தேசபக்தி, இந்தியப் புராதன அடையாளம், இந்திய வரலாறு என ஒவ்வொன்றும் மாற்றத்திற்கு எதிரான சமூக உளவியலின் உருவாக்கங்களாகவே அமைந்தன.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றிணைப்பு, விடுதலை அரசியல், புதிய சமூகக் கட்டமைப்புக்கான இயக்கங்கள் என்ற வடிவில் உருவாகி இருக்கவேண்டிய இந்திய நவீன அரசியல் இதற்கு முற்றிலும் எதிராக சாதியமைப்பையும், பெண்ணொடுக்குமுறையையும் நியாயப்படுத்ததும் இந்து மையத் தன்மையுடையதாக, மதவாதத் தேசியமாக வடிவம் கொண்டது.  காலனிய கால உருமாற்றங்களைப் பயன்படுத்தி  புதிய சமூகத்திற்கான அரசியலைக் கட்டுவதற்குப் பதிலாக புராதன, சாதியாதிக்க அமைப்பை மீட்டெடுக்கும் சதித் திட்ட அரசியலாக  தேசிய அரசியல் மாறியது.  இந்து என்ற மத அடையாளமும் இந்து தேசியம் என்ற அரசியல் அடையாளமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தன, பின் தம்மளவில் இரு குழுக்களாகப் பிரிந்து இயங்கத் தொடங்கின.

1831-ல்பெண்ணெரிக்கும் வழக்கமான ‘சதி’ தடை செய்யப்பட்ட போது பிரிடிஷ் அரசுக்கு எதிரான  சனாதன சபா, சனாதன தர்ம சபா என்ற  பெயர்களில் அமைப்புகள் செயல்படத் தொடங்கின. இந்த அமைப்புகளே பின்னாட்களில் சுதந்திரப் போராட்ட அமைப்புகளாக தம்மை உருமாற்றிக்கொண்டன. இந்திய ஆண்மைய, ஆணாதிக்க சமய அதிகாரம் இந்திய அரசியலின் மற்றொரு வடிவமான காலனிய எதிர்ப்பையும் தனதாக்கிக் கொண்டதன் தொடக்கம் இது. சாதி அமைப்பை, பெண்ணொடுக்குமுறையைக் கேள்விக்குட்படுத்தும்  நவீன நிறுவனங்களைத் தன்வயப்படுத்தி மீண்டும் மரபான ஆதிக்கத்தை நிறுவுவதே இந்த அமைப்புகளின் அடிப்படைத் திட்டம்.

அதாவது நவீன அரசியல் இயந்திரம்,  ஆயுத அரசியல், இயந்திர உற்பத்தி முறை, நகர அமைப்புகள் கொண்ட இந்திய தேசம், ஆனால் சாதி அதிகாரம் கொண்ட, பெண்ணடிமைத்தனம் நிலை பெற்ற இந்தியச் சமூகம். இந்த அரசியல் உளவியல் ஆணாதிக்க, ஆண்மையச் சமூக உளவியலுடன் உள்ளீடான இணைப்பு கொண்டதுடன், சாதி அதிகாரத்தை இயல்பான சமூக ஒழுங்கு என்று போற்றக்கூடியது.  மொத்தத்தில் விடுதலை, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, அடிப்படை மனித உரிமைகள் என்ற நவீன விடுதலைக் கருத்தியல்கள் எதுவுமற்ற ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதே இதன் செயல் திட்டம். இந்தச் செயல்திட்டம் இந்திய மரபாக, சமூகப் புனித விதியாகப் படிந்து கிடப்பது, இது நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. 

இதனையே அண்ணல் அம்பேத்கர் “நாம் உருவாக்கும் அரசியல் ஜனநாயகம்  சமூக ஜனநாயகமாக மாறாமல் இந்தியா சுதந்திர நாடாக மாறமுடியாது” என்று குறிப்பிட்டார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளைத்  தம் பண்பாடாகக் கொண்டிராத ஒரு நாடு தன்னை தேசமாக உருவாக்கிக்கொள்ள முடியாது என அழுத்தமாக அறிவித்தார். “பல சாதிகளாகப் பிரிந்துகிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? சாதி அமைப்பு தேச விரோதத் தன்மை கொண்டது.” என்ற அவரது  அறிவிப்பு  இந்தியா நவீன அமைப்பாக மாறுவதற்கான அடிப்படை நிபந்தனையை முன் வைக்கிறது. 

இதனை  முழுமையான பொருளில் முன் வைக்கும் அரசியல்தான் தலித் அரசியல் என்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல். விடுதலைக்கு எதிரான சாதிய மனம் விடுதலை அரசியலை முன்னெடுக்காது.  இது மாற்றங்களுக்கு எதிரான இந்திய உளவியலாகச் செயல்படுவதுடன்,  அனைத்து விதமான வன்முறைகளையும் ஒடுக்குதல்களையும்  இயல்பான சமூக விளைவுகளாகக் காணும் தன்மை கொண்டது.

சாதி உளவியல் நவீனத்தன்மை, விடுதலை இயக்கவிதிகள் இரண்டுக்கும் எதிரானது. இந்தியச் சமூகத்தின் சரிபாதியான பெண்கள்,  மூன்றில் ஒரு பங்கான ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற இரு சமூக இருப்புகளையும் புறத்தே நிறுத்தி, எதிர்நிலைப்படுத்தி தன் அடையாளத்தைக் கட்டிக்கொள்வது. இந்த அடையாளம் தனித்த அரசியல் அதிகாரமாக, ஒன்றுதிரண்ட பாசிசமாக மாறுவதற்குத்  தொடர்ந்து முயற்சி செய்தபடியிருக்கும். ஆனால் உலகவயமான, நவீன அரசியல்  அமைப்பின் அடிப்படைகளைக் கொண்ட தலித் அரசியலும், பெண்ணிய அரசியலும்தான் இதனை உள்ளிருந்தபடி எதிர்த்து உடைத்தபடியிருப்பவை.  தலித் அரசியலும் பெண்ணிய அரசியலும் தம் முழுமையான விடுதலையை அடைவதைவிட வன்கொடுமை கொண்ட முற்றதிகாரத்திற்கெதிரான இந்தப் போராட்டத்திலேயே தமது பெரும்பகுதி ஆற்றலைச் செலவிட்டு வருகின்றன. இவை தம்மளவிலேயே எதிர்ப்பின் வடிவங்கள் என்பதாலேயே பெண்-தலித் என்ற உடல்-உயிர் இருப்புகள் மீதான  தாக்குதல்களும், சிதைவுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து  நிகழ்த்தப்படுகின்றன.  இருப்பும் எதிர்ப்பும் இணைந்த, துயரும் கலகமும்  கலந்த இந்த  அரசியலின் இயக்க முறையைப் புரிந்துகொண்டு அத்துடன் தம்மை இணைத்துக்கொள்ளாத  இந்திய அரசியல் இயக்கங்கள் அனைத்தும் அதனால்தான் விடுதலை நோக்கிய எந்த நகர்வையும் செய்யாததுடன், மாற்றம் பற்றிய செயல்திட்டமற்ற துணை ஆதிக்கச் சக்திகளாகத் திரண்டு நிற்கின்றன.

 விடுதலைக்கான அனைத்து அரசியல்,  சமூக முன்னெடுப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இருந்தே தொடங்க முடியும் என்பதை இன்று வரை ஒப்புக்கொள்ளாத மாற்று அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய தீய விளைவுகள்தான்  இன்றுள்ள உடல் நீக்கம் பெற்ற அரசியலும், மனித நீக்கம் செய்யப்பட்ட பொருளாதர அமைப்பும். இதன் வன்கொடுமைகளை முழுவடிவில் புலப்படுத்தி, மாற்றத்திற்கான உண்மையான தொடக்கத்தை முன் வைக்கும் செயல்திட்டமாக உருவாகியிருப்பது  தலித் பெண்ணியம். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தலித் பெண்ணியத்தை  நுண் அளவில் தொடங்கி, பெருந்திட்டங்கள் வரை விவரித்துச் செல்கின்றன.

புலப்படாதவைகளாக வைக்கப்பட்ட வரலாற்று உடல்களை இன்றைய அரசியலின் மையத்தில் கொண்டு வைத்துக் கேள்விகளை எழுப்புவதன் வழியாக அனைத்து விதமான அரசியல், சமூக, மரபு வடிவங்களின் அறத்தோற்றங்களையும் உடைத்து தலித் பெண்ணியத்தின் இடத்தை நிறுவுகின்றன இக்கட்டுரைகள்.

விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள் பற்றிய மௌனம், மறதி பற்றிய தொடர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் அமைப்பின் அடிப்படைச் சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித் பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள். அதன் அடுத்த கட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன் வைக்கின்றன. உலக அளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில் கொண்டாலும் இந்தியப் பெண் உடல்- பெண் மனம் என்பதில் மையம் கொண்டு தன் கருத்தாக்க முறையை அமைத்துக் கொள்வதால்  இக்கட்டுரைகள் ஒரே சமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்று விடுகின்றன.

அரசியல் செயல்பாட்டாளர், பெண்ணிய எழுத்தாளர் என்ற இருவகை அடையாளத்துடன் இயங்கும் தோழர் ப.சிவகாமி உருவாக்கிவரும்  எழுத்துகள் நீண்ட ஒரு போரட்டத்தின் தொடர் மொழிச் செயல்பாடுகளாக இருந்து வருகின்றன. ‘பழையன கழிதலும்’ நாவல் தலித் அரசியல் கவனம் கொள்ளவேண்டிய உள் முரணை பெண்ணிய அரசியலாக முன் வைக்கிறது.  ‘ஆனந்தாயி’ நாவல் ஆண் அடையாளத்தின் வன்முறைகளை உடல், மொழி, மனம் என்ற அனைத்துத் தளங்களிலும் விவரித்து குடும்பம் என்ற அமைப்பை கட்டுடைப்புச் செய்கிறது, அதிகாரத்தின் நுண்கொடுமைகளையும் வரைபடமாக்கித் தருகிறது.  ‘குறுக்கு வெட்டு’ நாவல் மனம், உடல், பாலியல் மதிப்பீடுகள் பற்றிய கட்டமைப்பை இழைபிரித்துக் கேள்விக்குள்ளாக்குகிறது.  ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ நாவல் மாற்று அரசியல் என்றால் என்ன, மாற்று அரசியலில் தனிமனிதர்களின் இடம் என்ன, கருத்தியலுக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான உறவு என்ன என்ற ஈவிரக்கமற்ற ஆய்வினைச் செய்கிறது.  இலக்கியச் சொல்லாடல்களாக உள்ள போது கருத்தியல் அமைதி குலைக்கும் தன்மை கொண்ட சிவகாமியின் எழுத்துகள் அரசியல் சொல்லாடலாக மாறும்போது செயல்படும் தன்னிலைகளை உருவாக்க முயல்கின்றன.

“மேம்பட்ட சமூகத்தை உருவாக்க, பெண்கள் ஒவ்வொரு நிலையிலும் கடுமையாகப் போராடினர். இன்றைய பல சமூகச் சட்டங்களுக்கு அவர்களின் போராட்டங்களே அடிப்படை. புதிய பொரளாதாரச் சூழல் தோற்றுவித்த கருத்தியல்களை, பெண்கள் படிப்படியாக வளர்த்தெடுத்து சமூக மேன்மைக்கான மாற்றங்களைக் கொணர்ந்தனர்.” என்ற பின்புலத்துடன்தான் அவரது கருத்தியல் திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன.

“இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடெங்கும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தோன்றி செயல்படத் துவங்கிய பிறகும் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்னமும் பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு அரசியலையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவது ஏன்?” என்ற   கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் “புழக்கத்திலுள்ள பெண் விடுதலைக் கோட்பாடுகள் யாவும் சாதிமத அடிப்படைகளைத் தகர்க்காது வர்க்க முரண்களை அடிப்படையாகக் கொண்டு சீர்த்திருத்தங்களை விழைபவை.”  இதனைக் கடந்த ஒரு அரசியலை “தலித் பெண்ணியம் என்பது சாதி-மத-வர்க்க அடிப்படையிலான ஆணாதிக்கத்தை வேரறுப்பது. பால்பேதமற்றது, எல்லா உயிர்களும் சம சமூக மதிப்பு உடையன என்பதை ஏற்றுக் கொள்வது.” என அடையாளப்படுத்துகிறார் அரசியல், எழுத்து என்ற இரு தளங்களில் இயங்கும் பெண்ணிய ஆளுமையான சிவகாமி.

பெண்ணிய அரசியலில் ஒவ்வொரு சொல்லும் செயலாகவும், ஒவ்வொரு செயலும் அரசியலாகவும் மாறும் தன்மை கொண்டது. “இதை இயல் அல்லது தத்துவம் என்று வரையறுப்பதைக் காட்டிலும், மிக நுண்ணியக் கூறுகளாகப் பகுத்து, அவைகளுக்கு செயல்வடிவம் தந்து, உடனடியான களப்பணியில் இறங்குவதேசிறந்தது…” என செயலுக்குள் இழுத்துச் செல்லும் எழுத்துகளாக இயங்குகின்றன  இவை.

BOOK SIVAKAMI

ஆஷ் படுகொலை: கோமாமிசத்தை முன்வைத்து – ச. சீனிவாசன்

 ஆஷ் படுகொலை: கோமாமிசத்தை  முன்வைத்து

முனைவர். ச. சீனிவாசன்

மனித வாழ்க்கையின்  அடிப்படைத் தேவைகள் மூன்று. அவை உணவு, உடை, உறைவிடம் ஆகியனவாகும். இவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதும்   உணவாகும். “உணவு என்பது இயற்கையான நிலவியல் பரப்பில் கிடைக்கிற உயிர்வேதியியல் (Biochemical) பொருள் ஆகும். உலகத்து உயிர்கள் அனைத்தையும் காலவெளியில் தொடர்ந்து உயிர்த்திருக்கவும் இயங்கவும் செய்கின்ற ஒன்று. இந்த உணவு என்பதே கூட ஓர் உயிரியாக/உயிரின் விளை பொருளாக இருக்கின்றது. உயிர்களின் அடிப்படையான இயக்கங்கள் அனைத்தும் ‘உணவினை’ நோக்கியதாகவே இருக்கின்றன.” (ச. பிலவேந்திரன், 2001:23) 

உணவு என்பது மனிதனின் உயிர்வாழ்வுக்குப் பயன்படுவது மட்டுமின்றி அது அவனது சமூக, பண்பாட்டினைச்  சுட்டுவதாகவும் அமைகிறது. “உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது” என்பார் மா. இராசமாணிக்கனார். (1970:497). சைவம், அசைவம், இயற்கை உணவு என அவரவர் விருப்பப்படி உண்ணும் முறை மனித சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. மனிதனின் உணவும், உணவு முறையும் காலம் மற்றும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப   மறுபடுகிறது.

ஆதி மனிதனின் உணவு இலை, தளைகள், பழங்கள் முதலான இயற்கை சார்ந்தே அமைந்திருந்தது. வேட்டைச் சமூகம் உருவானபோது மனிதன் மான், ஆடு, மாடு முதலான விலங்குகளின் இறைச்சியைப் பதப்படுத்தாமலேயே உண்டு வந்தான். தீயை உண்டாக்கத் தெரிந்தவுடன் உணவைத் தீயில் சுட்டும், பக்குவப்படுத்தியும் உண்ணத் தொடங்கினான். நாகரீக காலத்தில் மனிதன் தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொண்டான். மனிதனின் வாழ்விடத்திற்குத் தக்கவாறு உணவுமுறையும் அமைந்தது. அந்தவகையில் தமிழர்கள் தங்கள்  பாரம்பரிய சமையல் மற்றும்  உணவு முறை  மூலம்  தங்கள் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

உணவுப் பொருட்களைச் சமைக்கப்பட்டவை (cooked) சமைக்கப்படாத பச்சையானவை (raw) என்ற இரு எதிர்வுகளாகப் பிரிக்கிறார் லெவிஸ்ட்ராஸ். (ச. பிலவேந்திரன், 2001 : 23). உணவு உலகத்து உயிர்களனைத்தும் தொடர்ந்து உயிர்வாழத் தேவையான பொருளாகவும் அமைகிறது. உணவினைத் தேடியோ அல்லது நோக்கியோ உயிர்களின் இயக்கங்கள் இருக்கின்றன. ‘உணவு பிரபஞ்சத்தின் சுழற்சி’ என்கிறது மைத்ரேய உபநிடதம்.

உணவு, உண்ணும் முறை, உணவும் சமூகமும் குறித்து ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளோடு பல வாய்மொழி வரலாறுகளும்  தமிழக  மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றை மறுகட்டமைப்புச் செய்யும் சக்தி கொண்டவையாக வாய்மொழி வரலாறுகள் திகழ்கின்றன. அந்த வகையில், அடித்தள மக்களின்  உணவு எனக்கற்பிக்கப்பட்டிருக்கும் மாட்டுக்கறிக்கும்;  பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் நெல்லை மாவட்டக் கலெக்டரான ஆஷ் கொலைக்கும் உள்ள தொடர்பை வாய்மொழி வரலாறு வழிக் கட்டமைப்பதாக  இக்கட்டுரை அமைகிறது.

மக்கள் பயன்பாட்டில்  மாட்டுக்கறி எனும் புலால் உணவு:

வேத காலச் சமூகச் சடங்குகளில் மாடுகள் பலியிடப்பட்டதற்கும், உணவாகப் பயன்படுத்தப்பட்டதற்குமான வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகள் ஏராளம் காணக் கிடைக்கின்றன. ரிஷிகள், முனிவர்களின் விருந்துகளில் புலால் உணவு பெரும்பங்கை வகித்ததாக ராகுல சாங்கிருத்தியாயன் எழுதியுள்ளார்.

“விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு ஆர்வத்திற்குரிய சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. விருந்தினர்களைக் கவுரவிக்க பசுக்களைக் கொல்லும் நடைமுறை பண்டைக் காலத்திலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. ‘விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலிதரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினார்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுவையோ பலிதந்தார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” (III.4. மேற்கோள்: டி.என்.ஜா. 2003: 31)  

வேத காலத்தில் மக்கள் மாட்டிறைச்சியை  முக்கிய உணவாகவும், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி  உண்டு வந்ததையும்; மாட்டிறைச்சி இந்தியர்களின் உணவுப் பழக்கங்களில் ஒரு பகுதியாக இருந்தது என்பதையும் ‘புனிதப்பசு  எனும் கட்டுக்கதை ’ என்ற நூல் பதிவு செய்துள்ளது.  இசுலாம் இந்தியாவுக்கு வருவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நமது முன்னோர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தார்கள் என்பதை மேற்குறித்த நூலின்  ஆசிரியர் டி.ஏன். ஜா நிறுவியிருக்கிறார்.

புத்தர் காலத்திலும் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் மக்களிடம் வழக்கத்தில்  இருந்து வந்ததைப் பவுத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. வேதத்தில் ஆரியர்கள் விலங்குகளை வெட்டிப் பலியிடப் போய்த்தான் மகாவீரரும் புத்தரும் கொல்லாமையைப் பற்றிப் பேசினர். உயிர்ப்பலி மறுப்பு, வேளாண்மைத் தொழில், கால்நடைப் பொருளாதாரம்  ஆகிய அடிப்படைகளை முன்னிறுத்திக் ‘கொல்லாமை’ எனும் நல்லறம் கூறி மக்களிடையே சமண, பவுத்த மதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன.  சமண, பௌத்தக்  கொள்கைகள் மீது ஈர்ப்புக்  கொண்ட ஆதி சங்கரர் அவற்றைத் தமதாக்கிக்கொள்ள முயன்றார். ‘புத்த சமயம் மேலோங்கிய காலத்தில் அதை வென்று ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசி கண்டு சுவைத்துத் தம்முடைய வேதாந்தத்துக்கு ஆதாரமாகக் கொண்டார். ஷண்முக ஸ்தாபகாசாரியராய், சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்துமதம் என்ற அற்புத விருக்ஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமான ஞானத்திறமையாலும் கல்வி வலிமையினாலும் மீள உயிர்ப்பித்து அதற்கு அழியாத சக்தி ஏற்படுத்தி வைத்துவிட்டுப் போனார்’ என்று பாரதி தமது உள்ளக்கிடக்கையை கீதைக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.  ( தமிழண்ணல்  2009: 16-17)

விலங்குகளில், குறிப்பாகப் பசுவைப் பலியிடுவதை எதிர்த்த  பௌத்த மதத்திடம்  ஆரியர்கள் தாங்கள் இழந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும் மீட்டெடுக்க முயன்றனர். அதன் விளைவுதான் ஆரியர்கள்  மாமிசத்தை விடுத்து சைவத்திற்கு மாறியதன் மர்ம முடிச்சாகும். ‘பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உள்ளிட்ட பிற விலங்குகளின் இறைச்சியை உண்பதைக் கைவிட்டு, சைவ உணவுக்கு மாறிய போதிலும், தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பு மக்கள், பார்ப்பனரால்லாதவர்களில் உழைக்கும் சாதியினர் மற்றும் இசுலாமியர், கிறிஸ்தவர் மாட்டிறைச்சியை உண்டு வந்தனர்’. (க. முகிலன். 2016:16). மனிதகுலம் தோன்றிய காலம் முதலாய் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் பெருமளவில் இருந்து வருகிறது என்பதை இந்திய அரசின் ஆய்வு (Sample Registration System Baseline Survey) தெரிவிக்கின்றது.

மாட்டிறைச்சி: உணவு, மருந்து, பண்பாடு

பழங்காலத் தமிழர் உணவு முறைகளில் காய்கறி, பழங்களோடு புலால் உணவும்  ஓர் அங்கமாகப்  இருந்து வந்தது. வேட்டைச் சமூகத்தின் நீட்சியாக புலால் உண்ணும் பழக்கம் இன்றுவரை எல்லா இனக்குழு மக்களிடத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. புரதமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த மாட்டுக்கறி உணவை  மிகுதியும் வேலைப்பளு, உடலுழைப்பு கொண்ட  மக்களே விரும்பி உண்கின்றனர். மாட்டுக்கறி உடலுக்கேற்ற  ஆரோக்கியமான உணவு, குறைந்த செலவில் கிடைக்கும் இறைச்சி என்பதாலும் இவர்கள் இதை நாடுகின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், இஸ்லாமியர்கள், தலித்துகள் முதலியோர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். பெரும்பான்மையான இந்திய ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச் சத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மாட்டிறைச்சி பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், மாட்டுக்கறி என்னும் அசைவம் உண்ணும் பழக்கத்தில் பல நிலைகள் நம் சமூகத்தில் கற்பிக்கப்படுகின்றன. அதாவது, ஆடு, மீன், கோழி ஆகிய உணவுகளை உண்பவர்கள் சற்று உயர்தரம் என்றும்; மாட்டுக் கறியை உண்பவர்கள் புலையர்கள், கீழானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்றும்; பன்றிக்கறி தின்பவர்கள் அவரினும் கீழானவர்கள் என்றும்; பூனைக்கறி, நாய்க்கறி தின்பவர்கள் எல்லோரிலும் இழிவானவர்கள் என்றும் எழுதாத சட்டமாக இன்றும் உள்ளது.

இதில், அழுக்குகளைத் தின்னும் மீனையும்; தானியங்களுடன் எச்சில் மற்றும்  நரகலைத் தின்னும் கோழியையும்   உண்பது உயர்வானதாகவும், சுத்தமானதாகவும் கருதப்படுகின்றது. சுத்தமான பச்சைப்புல், வைக்கோல், பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழும் மாடும் மாட்டுக்கறி உணவும் கீழானதாகவும், அசுத்தமானதாகவும் கருதப்படுகிறது,  அதை உண்ணும் மனிதன் கீழானவனாக, இழிவானவனாகக் கருதப்படுகிறான். ‘மாட்டுக்கறி சாப்பிட்டால் மூளை வளராது’ என உழைக்கும் மக்களை ஒதுக்கித்தள்ளும் நிலையும் இந்த அடிப்படையில் உருவானதுதான். அவ்வளவு ஏன், ‘மாட்டுக்கறி தின்றால் பூகம்பம் வரும்’ என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

‘ஜமைக்காவைச் சேர்ந்த ஒட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது பயிற்சியாளர் தினமும் இரண்டு வேளை மாட்டிறைச்சி உண்ணுமாறு அறிவுறுத்தியதால்’ தான் ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்தது. (தினகரன், தில்லி பதிப்பு, 30.08.2016). நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பான்மையோரும், தகவல் தொழில் நுட்பத்தில் உலகை உலுக்கிய ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஆப்பிள்’ நிறுவன  முதலாளிகளும் மாட்டிறைச்சி உண்ணும் அசைவப் பிரியர்கள்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, நியூட்டன், மார்க்ஸ், அம்பேத்கர், ஸ்டாலின், லெனின், சேகுவேரா, மைக்கேல் ஜாக்சன் முதலான மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்கள்தான். “மாட்டிறைச்சி மனித ஆற்றலின் அறிவின் ரகசியமாகக் கருதப்படுகிறது”. (ஹோராட்டா, அக்டோபர், 2014). மாட்டிறைச்சி மேலைநாட்டு மக்களின் ஆரோக்கியமும், மருந்தும் ஆகும்.  மாட்டின் தோல்பொருட்கள் பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் பொருளாகவும் இருக்கிறது.   

இந்தியாவில் மாநில வாரியாக இறைச்சி உண்ணும் சதவிகிதத்தினரை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ (12.06.2016) நாளேடு பதிவு செய்துள்ளது.  இப்புள்ளி விபரம்  இந்தியாவில் 75-80 சதவீதம்  மக்கள் மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.(க. முகிலன்.2016:12-13). மேட்டுக்குடி மக்கள் பலர் இந்தியாவுக்கு வெளியே மாட்டுக்கறியை உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு என மாடுகளோடு நேரடித்தொடர்பு கொண்டிருக்கும்  மக்கள் அம்மாடுகள் இறந்தவுடன் அவற்றோடு உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்வதுடன்  அந்நியமாகிப் போகின்றனர். 1980 வரை மாட்டுக்கறி உண்ணாத , மாட்டுக்கறி உணவைக் கண்டாலே மூக்கைப் பொத்திக்கொண்டு காத தூரம் ஓடியவர்கள், மாட்டுக்கறி உண்பவர்களைத் தொட்டால் தீட்டு என்று ஒதுங்கியவர்கள், இப்போது மழை பொய்த்து  விவசாயம் நலிந்து பிழைப்புத் தேடி அண்டை மாநிலமான கேரளாவில் தஞ்சமடைந்துள்ளனர். சென்ற இடத்தில் அங்கு இயல்பாகக் கிடைக்கும் மாட்டுக்கறி உணவுக்கு  அடிமையாகியுள்ளது கண்கூடு. மாட்டுக்கறியைத் தீண்டாத இவர்கள் இப்போது அதன் வாடிக்கையாளர்களாகியுள்ளனர். 

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எப்போதுமே அசைவப் பிரியர்கள் தான். ஆனால் இப்போது சுமார் 90 சதவீத இந்துக்களும் அசைவத்திற்குக் குறிப்பாகக் கோழிக்கறிக்கு அடிமையாகியுள்ளனர். “ஹைதராபாத் நகரில் தினமும் 2500 மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதாக அந்நகர நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்”. (ஆர்.எஸ். நாராயணன், தினமணி, தில்லிப் பதிப்பு. 17.09.2015). ஆண்டுதோறும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன என்று அரசின் புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது. மாட்டுக்கறி வியாபாரிகளில்  95 சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர்  என்று தில்லி உயர்நீதி  மன்ற முன்னாள் தலமை நீதிபதி திரு, ராஜேந்தர் சச்சர் குறிப்பிட்டுள்ளார். (Times of India, Delhi Edition: 21.11.2015). மாட்டிறைச்சி ஏற்றுமதியில்  இந்தியா உலகிலேயே முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 13,14,158 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குளிர்ப் பிரதேசத்தில் வாழும் மக்கள் கடுங்குளிரைச் சமாளிக்க புரதச்சத்துள்ள மாட்டிறைச்சியை உண்கின்றனர். உறைபனிப் பிரதேசங்களில் கடமையாற்றும் ராணுவ வீரர்களுக்குக் கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது. கேரளாவில் 72 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்கின்றனர். மலிவான விலையில் கிடைக்கிற புரதச்சத்து நிறைந்த  உணவு என்பது இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

மதச் சார்பற்ற மருத்துவ நூல்கள் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசுகின்றன. “பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம்”.(வினவு, 21.01. 2014). மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  இந்திய மருத்துவ நூல்களான சரக சம்கிதமும் சுஸ்ருதா சம்கிதமும் பரிந்துரைக்கின்றன.

அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்திலிருந்து  மாட்டுக்கறி உணவை  உண்ண மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.  காசநோய் குணமாக  மாட்டு ஈரலை வாரத்திற்கு இரண்டுமுறை உணவாகத் தரச்சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ‘கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது தலித்துகள் தங்கள் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்த நுட்பமாகும்’. (கோ. ரகுபதி, புதுவிசை, ஏப்-ஜூன், 2008: 12).  குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் கால்சிய மாத்திரைகள் மாட்டு எலும்பிலிருந்து செய்யப்படுகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அதிகமான இரும்பு மற்றும் துத்தநாக (Iron & Zinc) சக்தியும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் ‘வைட்டமின் 12’  சக்தியும்  மாட்டிறைச்சியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘‘இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்தது’’ என்கிறார் எங்கெல்ஸ். (வினவு, 25. 06. 2015).

மாட்டிறைச்சியின் மகத்துவம் பற்றிப் பெரியார் இவ்வாறு எடுத்துரைக்கிறார். “மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசம் தான். அதை விட்டுவிட்டுப் பழக்கவழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகிறார்கள். இதனால் மக்கள் பலவீனார்களாகத்தான் ஆகிறார்கள். மக்கள் விவசாயப்பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவதுபோல, மாட்டுப்பண்ணைகள் வைத்து, நல்லவண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக்கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மாடு தின்பது பாவமல்ல. அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம்தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துத்தானே வருகிறார்கள். மேல்நாட்டவர் மன உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவுமுறைதான் காரணமாகும். நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மன உறுதி அற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லாத உணவுமுறை தான் ஆகும்”. (பெரியார், விடுதலை : 13.02. 1964). மேலும், “மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தனமாகும்” என்கிறார். “வடநாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு, அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவுமுறையால்தான்”.  (பெரியார், விடுதலை : 03.07.1964). “மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகிவிட்டது. ஒரு சிறு கூட்டத்தினாரே மாமிசம் உண்பதில்லை”. (பெரியார், விடுதலை.: 30.05.1968). மொத்தத்தில் மாமிசம் சாப்பிடுவதே அதிக ஜீவகாருண்யம் என்கிறார் பெரியார்.      

மருத்துவக் குணம் நிறைந்த, ஊட்டச்சத்துமிக்க மாட்டிறைச்சியை உண்டதால், உண்ணுவதால் எந்தவித உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவோ, தீராத நோய்க்கு ஆட்பட்டுச் செத்து மடிந்ததாகவோ இதுவரை எந்தவித ஆய்வுகளும் தெரிவிக்காத நிலையில் அது அடித்தள மக்கள் உணவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  நூறு டிகிரி வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவு (சைவம், அசைவம்) எதுவானாலும் அது அறிவியல் முறைப்படி பாதுகாப்பானதே, விருப்பமுடைய அனைவரும் நம்பி உண்ணத் தகுதியானதே.

ஆக, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, மருந்து, கலாச்சாரம் எனப் பல்வேறு அடிப்படைகளில் மாட்டிறைச்சி உலகம் முழுவதும் முக்கிய உணவாக இருந்து வருகிறது. 

அடித்தள மக்கள் உணவு: சில அடிப்படைகள் 

மனிதன் உயிர்வாழ நன்மை பயக்கும்  மாட்டுக்கறியை  உண்ணும் ஒடுக்கப்பட்ட உழைக்கும், அடித்தள மக்களை இழிவானவர்களாகக் கருதும் போக்கு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது. மாடு  கொல்லப்படுவதும் மாட்டிறைச்சி உண்பதும் தீண்டத்தகாத சாதிகளுடன் அடையாளம் காட்டப்படுகின்றன. “மாட்டுக்கறியை மிகக் கேவலமான உணவாகவும் அதனை உண்போரைத் தீண்டத்தகாதவர்களாகவும், இழிவானவர்களாகவும் கருதும் ஆதிக்க மனோபாவம் இந்தியாவில் நீடிக்கிறது.  தலித்துகளின் மாட்டுக்கறி உண்ணும் வழக்கமே அவர்கள் மீதான தீண்டாமைக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாக” கோ. ரகுபதி கூறுகிறார். (புதுவிசை, ஏப்-ஜூன், 2008: 12). “ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவு படுத்துகிறது தேவாரம். ‘புலையன் ஆவுரித்துத் தின்றான்’, ‘பாணன் கன்றை உரித்துத் தின்றான்’ என நற்றிணையும் (3-9) நவில்கிறது. “பசு, எருது முதலான பிராணிகளின் மாமிசத்தைப் புசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பதால்தான் புலையர் என்றும் பறையர் என்றும் தீண்டத்தகாதார் என்றும் வழங்கப்படுவதாக மறைமலையடிகள் போன்றோர் எழுதி வைத்துள்ளனர்”. (புலவர். ஜே. ஆனந்தராசன். 2002:31). வேதகாலம் முதல் சமகாலம் வரை பலரும் பசுவுரித்துத் தின்றிருக்கப் புலையர்  மீது மட்டும்  பழிசுமத்துவது என்ன நியாயம்?. அடித்தள மக்களைச் சனாதனிகளோடு இலக்கியங்களும் சேர்ந்து இழிவு படுத்துகின்றன. மொத்தத்தில் மாடெனும் விலங்கு புனிதப்படுத்தப்படுகிறது. அதைத் தின்பவன் தீட்டுக்குட்படுகிறான்.

‘அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்கள், பொய்யர்கள், திருடர்கள், நேர்மையற்றவர்கள், ஏமாற்றுக்காரர்கள், சண்டை போடுபவர்கள், வன்முறையாளர்கள், பாலியல் குற்றம் புரிபவர்கள்’ (தினகரன், தலையங்கம், 17.11.2012) என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தப்பட்டுள்ளது. மத்தியக் கல்வித்திட்டப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி’ என்ற தலைப்பில் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது. “புலால் உண்ணாதவர்களெல்லாம் மேல் சாதி, புலால் உண்ணுகிறவர்களெல்லாம் கீழ் சாதி என்று சமூகம் மக்களை இரண்டாகப் பகுத்து வைத்திருக்கிறது”. (தொ.பரமசிவன். 2014:119) என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி புத்திசாலியாத்தாண்டா இருக்கான்’ என்று வில்லன் பேசுவதாக ஒரு வசனம் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் இடம் பெறுகிறது. இந்த வசனத்தின் மூலம் ‘மாட்டிறைச்சி சாப்பிடும் தமிழர்களுக்குப் புத்தி கிடையாது’ என்ற கருத்தை முன்வைக்க முயல்கிறார் வசனகர்த்தா.

மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைக் காட்டிலும் மதிப்புமிக்கது என்று உச்ச நீதி மன்றத்தில் குஜராத் அரசு வாதாடியது. தென்மாவட்ட மாவட்ட ஆதிக்க சாதியினர், மாட்டுக்கறி தின்னும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைத் தொட்டுவிட்டாலோ, தொட்டுவிட நேர்ந்தாலோ தீட்டுப்பட்டுவிட்டது எனக்கருதி மாட்டுச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத்  தங்கள் தலையில் தெளித்துக் கொண்டார்கள். அதை அவர்கள் ‘சாணிப்பால்’ என்றும் புனிதப்படுத்தினார்கள். தண்ணீரும் மாட்டுச்சாணமும் கலந்த கரைசல் எப்படி ‘சாணிப்பாலாக’ முடியும்?. பசு மூத்திரம்  (கோமியம்) இந்துக்களின்  சடங்கு முறைகளிலும், பூஜைகளிலும் படைக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்படுகின்றன. புதுமனைப் புகுவிழா  சடங்குகளில் ஒன்றாகப்  பசுமாட்டைக்  கட்டாயப்படுத்தி நடுவீட்டிற்குள் நுழையச் செய்து பூஜை செய்து புனிதப்படுத்தப்படுகிறது. பசுமாடு புது வீட்டிற்குள் சாணியும், மூத்திரமும் கழித்த பின்பே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாட்டின் சாணம் ஊட்டம் நிறைந்த உரமாகிறது. கிராமத்து வீடுகளில் மண்தரை மாட்டுச் சாணி கொண்டு மெழுகப்படுகிறது.  நாட்டு மாடுகளின் சாணத்தைப் பக்குவப்படுத்தித்  தயாரிக்கப்படும்  திருநீறு உடலிலுள்ள கெட்ட பித்தத்தை எடுத்துவிடும் சக்தி கொண்டதாகக் கருதப்படுகிறது. பசுவின் மூத்திரம் கிருமி நாசினியாக வினையாற்றுவதாக நம்பப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும்  காலணிகள், கைப்பைகள், இடைவார் (Belt), பணப்பைகள் (Money Purse) மாட்டுத்தோலிலிருந்து செய்யப்படுகின்றன. தினமும் நாம் உணவில் பயன்படுத்தும் சீனி எனும் சர்க்கரை மாட்டு எலும்பு கலந்து தயாரிக்கப்படுகிறது. சாதிமத பேதமின்றி எல்லோரும் அணியும் சட்டைகளில் உள்ள தரமான பித்தான்கள் மாட்டுக் கொம்பிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. மாட்டுக் கொழுப்பிலிருந்து உருக்கப்படும் ஊன் எனும் திரவம் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தருவதுடன் உயிர்ச்சத்து நிறைந்ததாகவும் விளங்குகிறது. மாட்டின் உயிர்ச்சத்தை உரிஞ்சுவதிலிருந்து கிடைக்கும் பாலின்றிப் பலருக்குப் பொழுது விடிவதில்லை.

பசுமாடு என்னும் கால்நடை விலங்கும்  அதன்  எச்சங்களான சிறுநீரும், சாணமும், புனிதமாகப் போற்றப்படும்போது, பசுப்பொருட்கள் வணிக நோக்கில் பன்முக வருவாயை ஈட்டித்தரும்போது பசுமாட்டின் என்புதோல் போர்த்த உடம்பிலிருந்து கிடைக்கும் இறைச்சி மட்டும் ஏன் இகழப்படுகிறது?. பசு எனும் விலங்கு புனிதமென்றால் பசுவின் எலும்பையும் தோலையும் இணைக்கும் தசை எனும்  இறைச்சியும் புனிதம் தானே!; அதை உண்ணும் மனிதன் அதவிடப் புனிதமானவனாகத்தானே இருக்க வேண்டும். சிலருக்குப் பசு புனிதமென்றால் பலருக்கு அது உயிர்வாழத் தேவையான உணவுப் பொருள்.

       “அது சிறந்தது, அழகானது, எங்களுக்குப் பிடித்தது

        அது நம்ம ஊரு உணவு, சுவையானது

        நெருக்கமானது, நியாயமானது

        விலைமதிப்பற்றது”

என்று மாட்டிறைச்சியின் நன்மைகளைப் பட்டியலிடுகிறது சரத் நளன்கட்டியின் மாட்டிறைச்சிப் பாடல். (இருண்ட காலத்தின் பாடல்கள், ஹோராட்டா, அக்டோபர், 2014.). அடித்தள மக்களின் உணவுப்பண்பாடு அவர்களின் உடலை மட்டும் பேணிக்காப்பதற்காகப் பயன்பட்டிருக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த சமூகத்தினரையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றும் மருந்தாக இருந்து வருகிறது. பண்பாட்டைப் பறைசாற்றுவதாக அமைகிறது. மொத்தத்தில் மாட்டுக்கறி மனிதனின் அடிப்படை உணவாக, உயிர்காக்கும் மருந்தாக, உயர் பண்பாடாக, ஆரோக்கியத்தின் அடிப்படையாக அமைகிறது என்பது திண்ணம்.

ஆஷ் கொலையும் வாய்மொழி வரலாறும் 

இந்திய மண்ணில் 95 விழுக்காடாக இருக்கின்ற மக்களின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.  ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறு (Popular History) வரலாறு நடுவுநிலைமையுடன் எழுதப்படவில்லை, மாறாக மேட்டிமைப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது என அடித்தள  மக்களின் வாய்மொழி வரலாறு கூறுகிறது. இன்றைய சூழலில் வரலாறானது அடித்தளத்திலிருந்து (History From Below) எழுதப்பட வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அடித்தள மக்கள் வரலாறு, விளிம்புநிலை சனங்களின் வரலாறு என இவை அழைக்கப்படுகின்றன. “எழுதப்பட்ட வரலாறுதான் சரியானது, நம்பகமானது என்ற மதிப்பீட்டை வாய்மொழி வரலாறு உடைக்கிறது. அடித்தள மக்கள் நம்பும் வாய்மொழி வரலாறு எழுதப்பட்ட வரலாற்றைவிட நம்பகமானது” (மாற்கு,  2001: 33).

வரலாறு எழுதுவதற்குக் கல்வெட்டு, தொல்லியல் ஆதாரங்கள், அயலார் பயணக் குறிப்பு மற்றும் ஆவணங்கள் முதலியன அடிப்படை ஆதாரங்களாக அமைகின்றன. வாய்மொழி வரலாறு என்னும் நாட்டார் வழக்காற்றியல் செய்திகள் மூலம் அவை வழங்கும் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற மானிடவியல் கோட்பாட்டை முன் வைத்தவர் நா. வானமாமலை. வாய்மொழி வழக்காறுகள் அந்தந்தக் காலத்துச் சமுதாய மக்களை, அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளாக விளங்குகின்றன.

மாடெனும் விலங்கிலிருந்து கிடைக்கும் இறைச்சியை, தமது நாட்டின் தேசிய உணவான இறைச்சியை  உணவாக உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் பிரிட்டிஷ் இந்திய அரசின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் (Robert William D’Escourt Ashe-ICS 1872-1911). ரயில் பயணத்திலிருந்த ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான் வாஞ்சிநாதன் என்னும் பார்ப்பன இளைஞன்.  திருநெல்வேலி வரலாற்றில் ஆஷ் கொலை- வாஞ்சிநாதன் தற்கொலை, லண்டனில் ஐந்தாம் ஜார்ஜ்  முடிகூட்டு விழா ஆகிய நிகழ்வுகளைச் சற்றுக் கவனமாகத் தொடர்புபடுத்திப் பார்த்தால் சில அடிப்படை உண்மைகள் புலப்படும்.

1911 ஜூன் 17 அன்று மணியாச்சி இரயில் நிலையத்தில் நெல்லை மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்ற இளைஞன் நாட்டுப்பற்றினால் சுட்டுக் கொன்றான் என எழுதப்பட்ட வரலாறு கூறுகிறது. தற்சார்புடன் எழுதப்பட்ட இந்த வரலாற்றை வாய்மொழி வரலாறு மறுக்கிறது. திருநெல்வேலி ஆசியராக இருந்த ஆஷ் தீண்டாமைக்குட்பட்ட மக்களிடம் இரக்கம் கொண்டவர் என்றும்; தீண்டாமைக்குட்பட்ட பெண் ஒருவர் நிறைமாதக் கர்ப்பத்தில் துயருற்ற போது தன்வண்டியில் ஏற்றிப் பார்ப்பனச்சேரி வழியாக மருத்துவமனைக்குக் கொண்டு கொண்டு சென்ற நிகழ்ச்சியால் கடுங்கோபங்கொண்டு அக்கிரகாரத்தைத் திட்டுப்படுத்திய ஆஷைக் கொன்றவன் வாஞ்சி அய்யர் என்ற பார்ப்பன இளைஞன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுப் பதிவுகள் உள்ளன. (பிரேம், 2015 : 5).  விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டைப் பகுதியிலுள்ள  அடித்தள மக்களில் ஒருவரின்  வாய்மொழி வரலாறு இதனைப் பின்வருமாறு பதிவு செய்கிறது: ‘‘ஆஷ் துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் சாதிப்பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தினார்.  தனது அலுவலகத்தில் நிலவிய சாதிப்பாகுபாட்டை நீக்கி, அனைவரையும் ஒரே இடத்தில் மதிய உணவு எடுக்க வேண்டும், ஒரே குடத்திலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றாலத்திலுள்ள அருவிகளில் தெய்வங்கள்தான் குளிக்கும், அந்த நீரில் அடித்தட்டு மக்கள் குளிக்கக் கூடாது, பிராமணர்கள் தெய்வச் சிலைகளைச் சுத்தம் செய்து  பூஜை செய்வதால் அவர்கள் மட்டுமே குளிக்கலாம் என்று இருந்த நிலையை மாற்றி அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்ட ஆஷ் துரை அதற்கு முன்னுதாரணமாகத் தானே அதில் குளித்தார். அதேபோலத் தென்காசி அருகே உள்ள கடையம் அக்ரஹாரத்தில் ஆஷ் துரை குதிரையில் செல்லும்போது, ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்  திடீரென்று ஏற்பட்ட பேறுகால வேதனையால் யாரும் உதவிக்கு வராத சூழ்நிலையில் பொது வழியில், தனியாகத் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண்கிறார்.  உடனே அப்பெண்ணைத் தன் மனைவியின் துணையோடு  மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆஷ் முயல்கிறார்.  தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ரஹாரம் வழியே அழைத்துச் செல்லக்கூடாது என்ற  பிராமணர்களின் எதிர்ப்பையும் மீறி அவ்வழியே சென்று மருத்துவமனையில் சேர்த்து உதவினார் ஆஷ். இதைப்போன்று சாதி வித்தியாசம் பாராமல் அடித்தட்டு மக்களையும், உயர்சாதியினர் போல் சமமாக நடத்தியதால், தங்களது சாதிய அந்தஸ்துக் குறைவதாக எண்ணிக் கோபம் கொண்ட பிராமணர்களும் வெள்ளாளர்களும் திட்டமிட்டு ஆஷ்  துரையைக் கொன்றனர், (மாற்கு,  2001:57-58 ). ‘இவ்வஞ்சநெஞ்ச மிகுந்தப் படுபாவி செய்த பெருங் கொலையை ஆலோசிக்குங்கால் இந்த பிரிட்டிஷ் அரசாட்சியோரை சொற்ப பயமுறுத்தியதால் பெரிய உத்தியோகங்களை நமக்குக் கொடுத்துக்கொண்டு வருகின்றார்கள். இன்னும் பயமுறுத்தினால் ராஜாங்கத்தையே நம்மவர்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுவார்களென்னும் ஓர் ஆவாக்கொண்டே இக்கொலையை நிறைவேற்றி இருப்பானென்றும் விளங்குகிறது. மற்றப்படி இக்கொலைக்கு வேறு காரணங்கூறுதற்கு வழியொன்றுங் காணோம். முன்பு நடந்துள்ள திருநெல்வேலி கலகத்தை யாதாரமாகக் கொள்ளினும் அதிற் பலசாதியோர்களையும் சமரசமாக தெண்டித்திருக்க இப்பிராமணரென்று சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேசமென்ன. அந்தக் கலெக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுந்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும், நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவரென்றும் கொண்டாடுகிறார்கள். ஆதலின் அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை’ (அயோத்திதாசர் சிந்தனைகள்-I,  1999: 363-364, அரசியல்: 5-3; சூன் 28, 1911) என்ற அயோத்திதாசரின் கண்டனமும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும்.    

தற்கொலை செய்துகொண்ட வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் இருந்ததாகச் சொல்லப்படும் கடிதத்தையும் இக்கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆஷ் கொலைக்கு அடித்தள மக்கள் மீதான அவரது  மனிதாபிமான உதவியும்; வாஞ்சிநாதனின் சனாதன வெறியும்; அடித்தள மக்களின் மாட்டுக்கறி உணவும்   ஒரு காரணமாக அமைந்தது புலப்படும்.

“ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில்  தேச சத்ருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட  முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்துவந்த தேசத்தில் கேவலம் கோமாமசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”

இப்படிக்கு

  1. வாஞ்சி ஐயர். (மாற்கு. 2001: 58-59)

(Tamil Nadu Archives, Tinnevelly Riots Conspiracy and Ashe Murder)

ஆஷ் படுகொலை : கோமாமிசத்தை  முன்வைத்து 

இந்தக் கடிதத்தை எழுதிய வாஞ்சிநாதன் உயர்குலத்தில் பிறந்த ஓர் பார்ப்பன இளைஞன். தன்னைவிட வயதிலும், கல்வியிலும், ஆட்சி அதிகாரத்திலும் மேல்நிலையில் இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை  ‘மிலேச்சன்’, ‘பஞ்சமன்’, கேவலம் கோமாமசம் தின்பவன் என்று தரக்குறைவாகவும், வேறுபடுத்தியும்  ஏக வசனத்திலும் விளிக்கிறான் அந்த இளைஞன். இதில் மிலேச்சன் என்ற சொல் இழிவானவர்களைக் குறிப்பதாகும். “ஆங்கிலேயர்களையும் இந்துக்கள் மிலேச்சர்களாக, நீசர்களாகக் கொண்டு தீண்டப்படாதவர்களாகக் கருதினர். தீட்டாகிவிடுவோம் என்பதற்காகச் சில இந்துக்கள் பல மேலைநாட்டுக்காரரைக் கைகொடுத்து வரவேற்கவும் மறுத்துவிட்டனர்” (ப.சீனிவாசன். 2004: 61)  என்னும் கருத்துகள்  இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

‘ஜார்ஜ் பஞ்சமன்’ என்ற வாஞ்சியின் கடித வார்த்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னனைக் குறித்தாலும் ‘பஞ்சமர்’ என்பது தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் இழிவான சொல்லாகும். ஜார்ஜ் மன்னன் இழிவானவன் எனக் குறிக்கவே திட்டமிட்டு வாஞ்சிநாதன் அந்த வார்த்தையைப் பிரயோகித்துள்ளான்.   ‘மாட்டுக்கறி தின்னும் தலித் மக்களை மட்டுமே அன்று குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘பஞ்சமன்’ என்ற வார்த்தையைத் தலித் மக்களைப்போலவே மாட்டுக்கறி தின்னும் பிரிட்டிஷாரைக் (ஜார்ஜ்) குறிக்க வாஞ்சி அய்யர் பயன்படுத்தியிருக்கிறார்’ (செ. கார்க்கி. கீற்று, 23 ஜூன் 2016) என்ற கருத்து வாஞ்சிநாதனின் உள்ளக்கிடக்கையை உணர்த்துகிறது.

மிக முக்கியமான ஆட்சேபணை, கோமாமசம் தின்பவன் எனும் விளிப்பு அடித்தள மக்களை அவமானப்படுத்துவதாக;அவர்களது மாட்டுக்கறி உணவை இழிவுபடுத்துவதாக அமைகிறது. மட்டுமன்றி, மாட்டுக்கறி தின்னும் மக்கள் மீதான வெறுப்பும் வாஞ்சிநாதனின் கடித வார்த்தைககளில் தெறிக்கிறது.  “இந்து மதத்தைப் பொறுத்தவரை தீண்டத்தக்க சாதிகளையும் தீண்டத்தகாத சாதிகளையும் பிரிக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு அளவுகோலாக மாட்டுக்கறி திகழ்கிறது”. (சூரியன், புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2016), ‘மேல்சாதி இந்துக்கள் பரங்கியர்களை இந்தியத் தீண்டத்தகாதவர்களுக்குச் சமமானவர்களாகக் கருதினர்’ (Carlos.  2006: 4), ‘கோமாமசம் தின்னக்கூடிய’ எனும் சொல்லாடல் இந்தியச் சமூக அமைப்பில் நேரடியாகத் தலித்துகளோடு தொடர்புடையது’ (அன்புசெல்வம், 2016: 46) ஆகிய கருத்துகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

வயதில் மூத்த , உயர்கல்வி கற்ற, ஆட்சி அதிகாரமிக்க ஓர் ஆங்கில அதிகாரி, தன் ஆளுகைக்குட்பட்ட ஒரு பிரஜையின்  வார்த்தைப் பிரயோகங்களால் அவமானப்பட்டதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.

  1. தமிழக அடித்தள மக்களில் ஒருவரான தாழ்ந்த இனத்துக் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவ உதவி செய்யும் பொருட்டு அக்ரஹாரம் வழியாக ஆஷ் துரை அழைத்துச்  சென்றது.
  2. அடித்தள மக்களைப் போலவே மாட்டுக்கறியை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தது.
  3. தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டது.

மணியாச்சி ரயில் நிலயத்திற்கு வாஞ்சிநாதன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று போராட்டம் நடந்த காலத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகத் திராவிடர் கழகத்தினர் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர். அதில், ‘தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருத்தியை அக்ரஹாரம் வழியே கொண்டு சென்ற அடாத செயலுக்காகப் பழிவாங்கவே ஆஷ் துரையை வாஞ்சி சுட்டுக் கொன்றார்’ என அச்சிடப்பட்டிருந்தது. “வெள்ளையர்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல் ராணுவம், சமையல் (மாட்டுக்கறியும் சமைப்பது) போன்ற தங்கள் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதால், அதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்தான், வாஞ்சிநாதன் போன்ற சனாதனவாதிகளின் காழ்ப்புணர்ச்சிக்கும், கோபத்திற்கும் காரணம்” என்கிறார் சுந்தரவடிவேலன். 

மதம் மாறிய கீழ்ச்சாதியினர் ஒருவரது பிணத்தை மேல்சாதிக்காரர் தெரு வழியாகக் கொண்டு செல்ல ஒரு வெள்ளை நடுவர் இசைவு தந்ததையொட்டி, அதற்கு எதிராகக் கிளர்ந்த ஆதிக்க வெறியே 1858-இல் திருநெல்வேலியில் நடந்த சாதிக் கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது. (இராஜேந்திரசோழன். 1997: 154, 163) என்ற கருத்து வெள்ளையருக்கும், மேல்சாதிக்காரர்களுக்கும் இடையே இருந்த மோதலைப் புலப்படுத்துகிறது.

மாட்டிறைச்சி உணவு ஆங்கிலேயர்களின் தேசிய உணவு. விரும்பி உரிமையோடு உண்ணும் உணவு. தேசப்பற்றுக்கு மாறான சாதி வெறி கொண்ட வாஞ்சி எனும் இளைஞனின் ஈனப்புத்தியினால், மாட்டிறைச்சியை உணவுப் பழக்கமாகக் கொண்டிருந்த ஒரு இங்கிலீஷ்காரனின் உயிரோடு உணவுரிமையும்  பறிக்கப்பட்டது. ‘இந்தியப் புரட்சி அல்லது சுதேசி இயக்கத்தினரின் விடுதலைப் போராட்டம் என்கிற பெயரில் அன்றைக்கு ஒரே ஒரு ஆஷ் மட்டும் ஏன் படுகொலை செய்யப்பட வேண்டும்? (அன்புசெல்வம், 2016: 44) என்ற கேள்வியும் எழுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தென்னிந்தியாவில் படுகொலைக்கு ஆளான முதல் மற்றும் ஒரே காலனிய அதிகாரி ஆஷ் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அதுவும், தனக்குப் பிடித்த கோ (பசு) மாமசம் தின்னும் பழக்கத்தைக் கொண்டிருந்த காரணத்திற்காகப்  படுகொலைக்கு ஆளானார்.

தீவிர இந்துமதப் பற்றாளரான  வாஞ்சிநாதனின் இச்செயலைத் தேசப்பற்று என்பதா?, மாட்டுக்கறி உணவு  மீதும் அதனை உண்ணும் அடித்தள மக்கள் மீதான சாதி வெறி என்பதா?. ‘கேவலம் கோ (பசு) மாமசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு’ என்ற வாஞ்சிநாதனின் கூற்று அவனை   ஒரு தேசப் பற்றாளனாக, விடுதலைப்போராட்ட வீரனாகக் காட்டவில்லை, மாறாக சாதி வெறியனாகவே காட்டுகிறது.  ‘எருது மாமிசம் தின்னக்கூடிய’ என்கிற சொல்லாடல் பொத்தாம் பொதுவில் வரும் மிதமான இம்சை. பசுமாட்டுக்கறி தின்னவனே’ அதாவது கோமாமசம் தின்னக்கூடிய’ என்னும் சொல்லாடல் வீரியமான இம்சை’ யாகக்  கருதப்படுகிறது. (அன்புசெல்வம், 2016: 46). வாஞ்சி அய்யருக்குச் சாதி வெறி இல்லையென்றால், ‘கோமாமசம் தின்னக்கூடிய’ என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கமாட்டார். வாஞ்சிநாதனிடம் மலிவான சனாதனப் போக்கே மேலோங்கியிருந்தது இதன்மூலம் தெரியவருகிறது.   

ஒருவேளை, உண்மையிலேயே தேசப்பற்றினால்தான் வஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றான் என வைத்துக்கொண்டாலும், ஆஷ் மட்டும்தான் மக்களைக் கொடுமைப்படுத்தினானா?, மற்ற ஆங்கிலேயர்கள் அனைவரும் நல்லவர்களா?, இந்திய விடுதலை இயக்கப் போராட்டக்  காலத்தில்  ஆஷ் துரையை சுட்டுக் கொல்லத் தூண்டியும், அதற்கான திட்டம் வகுத்தும்,   துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்து உதவிய பார்ப்பனர்களுக்கும் , வெள்ளாளர்களுக்கும் மட்டும்தான் தேசப்பற்று இருந்ததா?, தமிழகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடித்தள மக்களுக்குத் தேசப்பற்று  இல்லாமல் போயிற்றா? என்ற வினாக்கள் அடுக்கடுக்காக எழுகின்றன.

ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி, கிருஷ்ணாபுரம் சங்கர கிருஷ்ண அய்யர், தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, முத்துக்குமாரசாமி பிள்ளை, தூத்தூக்குடி சுப்பையா பிள்ளை, செங்கோட்டை ஜெகநாத அய்யர், ஆலப்புழை ஹரிஹர அய்யர், புனலூர் பாப்பு பிள்ளை, புனலூர் வி. தேசிகாச்சாரியார், செங்கோட்டை வேம்பு அய்யர் என்ற மகாதேவ அய்யர், செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை, செங்கோட்டை கஸ்பா அழகப்ப பிள்ளை, எட்டையபுரம் வந்தே மாதரம் சுப்பிரமணி அய்யர், செங்கோட்டை பிச்சுமணி என்ற வெங்கடாசலமய்யர்;  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திருநெல்வேலியில்  உருவான ‘பாரத மாதா சங்கம்’ என்னும் தீவிரவாத அமைப்பின்   முக்கிய  உறுப்பினர்களான நீலகண்ட பிரமச்சாரி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை, செங்கோட்டை வாஞ்சிநாத அய்யர், பாப்பு பிள்ளை, வேம்பு அய்யர், அழகப்ப பிள்ளை, முத்துக்குமாரசாமி பிள்ளை, ஜெகநாத அய்யர்,  வந்தே மாதரம் சுப்பிரமணி அய்யர், சோமசுந்தரம் பிள்ளை, சுப்பையா பிள்ளை, வீரராகவ அய்யங்கார், ஹரிஹர அய்யர், சாவடி அருணாசலம் பிள்ளை, தர்மராஜா அய்யர், தேசிகாச்சாரி அனைவரும் (எழில். இளங்கோவன்.1993: 7, 29-30, சிவலை இளமதி.1996:150-151) பிராமண மற்றும் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தது இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அதுவும் தூத்துக்குடி, எட்டையபுரம், செங்கோட்டை, தென்காசி, புனலூர்த் தமிழர்களுக்கு மட்டும்தான்  இந்திய விடுதலை வேட்கை இருந்தது, தமிழ்நாட்டின் மற்றப் பகுதித் தமிழர்களுக்கு விடுதலை உணர்வு இல்லை என்பது பொருளாகிறது.

ஆஷை சுட்டுக் கொல்வதற்கு முன்புவரை வாஞ்சிநாதன் எந்தவித சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதில்லை, வ.உ.சி-யும், சுப்பிரமணிய சிவாவும்  வெள்ளையருக்கு எதிராக மூட்டிய இந்திய விடுதலைப் போராட்டத் தீயில்  ஒரு சுள்ளியைக் கூட எடுத்துப்போட்டதில்லை என்ற குற்றச்சாட்டும் வாஞ்சிநாதன் மீது உள்ளது. ‘சஞ்சல புத்தியுடையவன்’, ‘கோமாளி’, ‘மனநிலை பிறழ்ந்தவன்’ என்ற மறுபக்கமும் வாஞ்சிநாதனுக்கு உண்டு.  வாஞ்சிநாதனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்த அவரது தந்தை ரகுபதி  அய்யர் , ‘அவன்மீது எனக்குப் பாசமில்லை’ என்று அதற்கான காரணத்தையும்  கூறியது இங்கு நினைவில் கொள்ள வேண்டிய செய்தி.

ஆக, ஆஷ் துரை மீது வாஞ்சிநாதன் காட்டிய கோபம் சுதந்திர தாகத்தால் ஏற்பட்டது என்பதைவிட, வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ‘இந்து சனாதன தர்மத்திற்கு எதிரானவர்’ ஆஷ் துரை என வாஞ்சிநாதன் தவறாக விளங்கிக் கொண்டதன் விளைவுதான் இக் கொலையும் தற்கொலையும் என்று கூறலாம். சுதந்திரப்போராட்டம் என்ற போர்வையில் சனாதன தர்மத்தைக் காப்பாற்றவே வாஞ்சி இச்செயலைச் செய்தார் என்றும் கருத இடமுள்ளது.    

வ.உ.சி. குறித்து 19 நூல்கள் எழுதிய செ. திவான் வாஞ்சிநாதனின் கொலைச் செயலை தீவிரவாதச் செயல் என்று போற்றியும், நியாயப்படுத்தியும் தமது கருத்தைப் பின்வருமாறு பதிவு செய்கிறார். “தர்ப்பைப் புல்லை ஏந்தி இறைவனைத் துதித்திடும் பிராமண சமுதாயத்து இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தி சாகசம் செய்திட்ட சரித்திரச் சம்பவங்கள் நடப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் காரியமாகும். புலால் உணவு உண்ணாத, இரத்தத்தையே பார்க்க விரும்பாத பிராமண குலத்து இளைஞர்கள் தேசிய வெறி கொண்டு போராடி இரத்தம் சிந்தியதற்குக் காரணம், தங்களால் போற்றிப் பாதுகாக்கப்படும் இந்து சனாதன தர்மங்களை, ஆளும் ஆங்கிலேய வர்க்கத்தினர் மதிக்காத நிலை மாத்திரமின்றி, அதனைக் காலில் போட்டு மிதிக்கும் நிலையை உருவாக்கியதைக் கண்டு கொதித்தெழுந்தனர். ஆஷ் போன்ற கொடியவர்களை வாஞ்சி சுட்டுக் கொன்றதன் மூலமாக இந்திய சுதந்திரப் போரில் தீவிரவாதிகளின் செயல் போற்றப்பட வேண்டும்”. (2015:192 & 215). திவான் பிராமண இளைஞர்களைத்  தீவிரவாதிகளாகவே வர்ணிக்கிறார். வாஞ்சிநாதன் எனும் பிராமண  இளைஞனின் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதச் செயலில் தேசப் பாதுகாப்பைக்  காட்டிலும் தீண்டாமையை வலியுறுத்தும் சனாதனப் பாதுகாப்பே தூக்கலாகத் தெரிகிறது. ஆட்சியதிகாரத்திலிருந்த ஆங்கிலேயனை தனது மேட்டுக்குடி மொழியில் நேருக்கு நேராகத் திட்டக்கூடத் துப்பில்லாத பார்ப்பன இளைஞனான வாஞ்சிநாத அய்யருக்கு துப்பாக்கி தூக்கிச் சுடுமளவிற்கான கொலைவெறி வந்தது ஏன்?.   எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய, சஞ்சல புத்தியுடைய வாஞ்சிநாதனுக்கு இந்திய விடுதலை வேட்கை மீது மேம்போக்கான ஈடுபாடே இருந்திருக்கிறது. ஆஷைக் கொல்லத் திருவுளச் சீட்டு மூலம் வாஞ்சியைத்  தேர்வு செய்து  திட்டம் தீட்டிய சூத்திரதாரி வ.வே.சு. அய்யர், மைத்துனர் சங்கர கிருஷ்ண அய்யர் போன்றோரின் தூண்டுதல் மற்றும் கட்டாயப்படுத்தல் உந்துசக்தியாக இருந்திருக்கிறது.

ஆஷ் கொலை புரட்சிப் படையினரால் முன்னரே திட்டமிடப்பட்டது என்பதற்குப் பல நிகழ்வுகள் சான்றுகளாகக் கிடைக்கின்றன. இதில், வாஞ்சி ஒரு பலிகடாவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். வெறும் விடுதலை என்பதையும் தாண்டி சுதந்திரப்போராட்டம் என்ற போர்வையில் சனாதன தர்மத்தைக் காப்பாற்றவே வாஞ்சிநாதன் ஆஷைக் கொலையும், ஒருவேளை பிடிபட்டுவிட்டால், பாரத மாதா சங்கத்தின் சதி வேலைகள் வெளியே தெரியாமலிருக்க, சங்க உறுப்பினர்களைக் காட்டிக்கொடுக்காமல் பாதுகாக்கத் தற்கொலையும் செய்திருக்கிறார் என்பது வாஞ்சிநாதன் வரலாறு நெடுக நமக்குக் காணக் கிடைக்கிறது.   

ஆஷ் கொல்லப்பட்டதற்குக் பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. வாஞ்சிநாதனின் சட்டைப்பைலிருந்த கடிதத்திற்குள்ளேயே கொலைக்கான முகாந்திரங்கள் அடங்கியிருக்கின்றன. ஆயினும், ஆஷ் கொல்லப்பட்டதற்கு, அவர் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு  மனிதாபிமானத்தோடு உதவி செய்தது, தமிழக அடித்தள மக்கள்  உணவான மாட்டிறைச்சியை உண்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தது, தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டது ஆகியன காரணிகளாக அமைந்தது வாய்மொழி வரலாறு வழிக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றளவும், அடித்தள மற்றும் தலித் இன மக்கள் ஆஷ் துரையின் நினைவு நாளில்  பாளையங்கோட்டை புனித ஜான்ஸ் கல்லூரி எதிரிலுள்ள தேவாலயத்தில் மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் (The Hindu, Tirunelveli, 18.06.2015) இவ்விடத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. 

காலனிய இந்திய ஆட்சிக்காலத்தில் வேறுபட்ட இரண்டு மதங்களுக்கு இடையே நடந்த மோதல் என்பதைவிட, சனாதன தர்மத்தை வெள்ளையர்கள் மீறுகிறார்கள் என்ற பார்ப்பன வெறிக்கும்  அடித்தள மக்களின் மாட்டுக்கறி  உணவுக்குமான பண்பாட்டு மோதலாக ஆஷ்  கொலை அமைகிறது.

பயன்பட்ட நூல்கள்

  1. அகமுடை நம்பி. 2009. பாரதிப் பாவலன்: குணம் நாடிக் குற்றமும் நாடி, மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.
  2. அரசு.வீ., பார்த்திபராஜா. கி. 2001. வாய்மொழி வரலாறு, பெங்களூர்: தன்னனானே பதிப்பகம்.
  3. அலாய்சியஸ். ஞான. 1999. அயோதிதாசர் சிந்தனைகள் (அரசியல், சமூகம்),- I பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி.
  4. அன்புசெல்வம். 2016. ஆஷ் படுகொலை : மீளும் தலித் விசாரணை, சென்னை: புலம் வெளியீடு
  5. ஆனந்தராசன்.ஜே , 2002. பவுத்தமும் பழந்தமிழ்க் குடிமக்களும், சென்னை : அன்றில் பதிப்பகம்.
  6. இராசமாணிக்கனார். மா. 1970. பத்துப்பாட்டு ஆராய்ச்சி, பதிப்புத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
  7. இராஜேந்திரசோழன். 1997. தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
  8. எழில் இளங்கோவன். 1993. திருநெல்வேலி சதிவழக்கு, சென்னை: விந்தன் பதிப்பகம்.
  9. சரவணன்.ப. 2014. வாஞ்சிநாதன்: மணியாச்சியில் சுதந்திர ஒலி, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நூலிலுள்ள கட்டுரை, பக்: 102-116, சென்னை: கிழக்குப் பதிப்பகம்.
  10. சாமி. ஆர்.பி. மனிதன் சுமந்த வருணக் கொடுமைகள், லக்ஷ்மி வில்லா: பெங்களூர்.
  11. சிவலை இளமதி.1996. சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்,சென்னை: அலைகள் வெளியீட்டகம்.
  12. சிவசுப்பிரமணியன். ஆ. 2006. பஞ்சமனா பஞ்சயனா (சமூக வரலாற்றுக் கட்டுரைகள்) , சென்னை : பரிசல்.
  13. சிவசுப்பிரமணியன். ஆ. 2014. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், நாகர்கோவில்: காலச்சுவடு.
  14. சீனிவாசன், ப. தீண்டாமைக்குத் தீயிடு, சிதம்பரம்: மங்கை பதிப்பகம்.
  15. திவான். செ. 2015. வீர வ. உ. சி. யும் ஆஷ் கொலையும், பாளையங்கோட்டை: சுஹைனா பதிப்பகம்
  16. பரமசிவன். தொ. 2014. உரைகல், சென்னை: கலப்பை.
  17. பாவெல் இன்பன். 2015. ‘ ஆஷ் கொலையை முன்வைத்து’, கீற்று- 23 ஜூன், 2015
  18. பிரேம்.2015. அயோத்திதாசரின் அறப்புரட்சி-2, நமது தமிழ்மண், ஜூன்,
  19. பிலவேந்திரன், ச. 2001. தமிழ்ச் சிந்தனை மரபு: நாட்டுப்புறவியல் ஆய்வுகள், பெங்களூர்: தன்னனானே பதிப்பகம்.
  20. மாற்கு. அருந்ததியர் வாழும் வரலாறு, பாளையங்கோட்டை: நாட்டார் வழக்கற்றியல் ஆய்வு மையம்.
  21. முகிலன்.க. 2016. ‘பசுப்பாதுகாப்பும், இந்துத்துவப் பாசிசமும், மக்களின் அடிப்படை உரிமைகளும்’, சிந்தனையாளன்- மாதஇதழ், ஜூலை-2016, பக். 12-18
  22. ரகுபதி. கோ. 2008. ‘தீண்டப்படாதவர்களின் தீண்டப்பட்ட அறிவியல் தொழில் நுட்பம்’, புதுவிசை – காலாண்டிதழ், ஏப்பிரல்-ஜூன், 2008, பக். 8-13, ஓசூர்.
  23. ஜா.டி.என். (தமிழில் வெ. கோவிந்தசாமி), பசுவின் புனிதம் : மறுக்கும் ஆதாரங்கள், கோயமுத்தூர்: புத்தா வெளியீட்டகம்.
  24. Carlos, S. 2006. Strategies of understanding caste Hegemony in Tamil, Paper presented in Endowment Lecture, conducted by Department of Modern Indian Languages & Literary Studies, University of Delhi, Delhi.
  25. (http://mathimaran.files.wordpress.com/2012)
  26. keetru. com
  27. panmey. com
  28. vinavu. com

 

முனைவர். ச. சீனிவாசன்தமிழ் இணைப்பேராசிரியர்,
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி,  ( தில்லிப் பல்கலைக்கழகம்)
 புது தில்லி-110 021