நந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம்

நந்தன் நடந்த நான்காம் பாதை

பிரேம்

 

கதை
1.
“தமிழ் என்ற சொல் சமஸ்கிருதத்தில் தமிள, தமிள்ள எனத் திரிந்து பிறகு அது திராவிட என்று பழகியது. திராவிட என்ற பெயர் குறிப்பிட்ட மக்கள் பேசிய மொழியின் பெயர்தானே தவிர இனத்தின் பெயரல்ல. தமிழ் அல்லது திராவிடம் தென் இந்தியப் பகுதியில் மட்டுமே பேசப்பட்ட மொழியல்ல, ஆரியர்கள் குடியேற்றத்திற்கு முன்பு  இந்தியா முழுதும், காஷ்மீர் முதல் குமரிமுனை வரை பேசப்பட்ட மொழி. இந்திய நிலத்தில் வாழ்ந்த நாகர் இன மக்களுடைய மொழி. நாகர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த தொடர்பும் அதனால் அவர்களின் மொழியடைந்த மாற்றமும் கவனத்திற்குரியது. வட இந்திய நாகர் இன மக்களிடம் அது ஏற்படுத்திய தாக்கமும் தென்னிந்திய நாகர்களிடம் அது ஏற்படுத்திய பாதிப்பும் முற்றிலும் வேறாக அமைந்ததைக் காணும்போது புதிராகத் தோன்றக்கூடும்.   வட இந்திய நாகர்கள் தம் தாய்மொழியான தமிழை விடுத்து சமஸ்கிருதத்தைப் பழகிக்கொண்டனர். தென்னியந்திய  நாகர்கள் ஆரியர்களின் சமஸ்கிருதத்தை ஏற்காமல்  தமிழையே தம் தாம்மொழியாகத் தொடர்ந்தனர். இதனை நினைவில் கொண்டால் தென்னியந்திய மக்களை மட்டும் திராவிடர் என்ற பெயரில் குறிப்பிடுவதற்கான காரணத்தை விளக்குவது எளிதாக இருக்கும்.”
“வடஇந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பேசாமல் விட்டதனால் அவர்களைத் திராவிடர் என்ற பெயரில் அழைப்பதற்கான தேவை இல்லாமல் போனது. தென்னிந்திய நாக மக்கள் திராவிட மொழியைத் தொடர்ந்து பாதுகாத்து வந்ததால் மட்டும் அவர்களைத் திராவிடர் என்று குறிப்பிட வேண்டிய தேவை ஏற்படவில்லை, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியை இழந்த பின்பு மீதமிருந்த திராவிடர்கள் தென்னிந்திய மக்களே என்பதாலும் அவர்களை அப்பெயரில் அழைக்கவேண்டியது அவசியமாக இருந்தது.  தென்னிந்திய மக்களைத் திராவிடர் என்ற பெயரால் குறிப்பிடுவதால் நாகர்கள் மற்றும் திராவிடர்கள் இருவரும் ஒரே இனமக்கள் என்ற உண்மையை மறைத்து விடக்கூடாது. இவை ஒரே மக்கள் சமூகத்தின் இரு பெயர்கள். நாகர் என்பது இனம் அல்லது பண்பாட்டைக் குறிக்கும் பெயர்,  திராவிடர் என்பது மொழிவழிப் பெயர். தாசர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் நாகர்களே, நாகர்கள்தான் திராவிடர்கள்.”
 இப்படியாகச் செல்லும் அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்து அம்மாவுக்கு மெயிலில் அனுப்பியபோது இளையனுக்கு மனம் லேசாகியிருந்தது.
அம்மா நிச்சயம் பதில் எழுதுவார், அதை எழுதும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சியின் குமிழ்கள் பூக்கக்கூடும்.
ஆனால் அம்பேத்கரின் அத்தனைத் தொகுதிகளையும் அவன்  படித்து முடித்ததை அறிந்தால் அவர் மனம் சற்றே சோர்வடையக்கூடும்.
எதையும் ஒரு மூச்சில், வெறியுடன் செய்யத் தொடங்குவதை அவர் விரும்புவதில்லை. அம்மாவுடைய நூலகத்தில் இருந்த புத்தகங்களை வெளிப்படையாகவே தவிர்த்து வந்தான், அது அம்மாவுக்கும் தெரியும்.
இப்போது அவனுக்குள் ஏற்பட்டிருப்பது தெளிவு அல்ல குழப்பம் என்பதை அம்மா உடனே கண்டுபிடித்துவிடுவார்.
அம்மா எழுதும் பதிலில் அது தெரியக்கூடும், ஆனால் உடனே பதில் வராது என்பதும் அவனுக்குத் தெரியும்.
2.
சில நாட்களாக அவன் அம்மாவுடன் பேசவில்லை. மொபைலை ஆஃப் செய்துவிட்டு தேவைப்படும்போது மட்டும் ஆன் செய்துகொண்டான். அம்மாவிடம் பேசுவதற்கான மனநிலை அவனுக்கு இல்லை.
அம்மா அவனை வாரம் ஒருமுறை அழைப்பதுதான் வழக்கம், சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் மட்டும்தான் பேச்சு. அவனுடைய தேவைகள் பற்றி, உடனே ஏதாவது வேண்டுமா என்பது பற்றிச் சுருக்கமான முணகல்கள். பேச நிறைய இருப்பதுதற்கான மௌனம்.
அப்புறம் ராஜா, என்ன படிச்சிகிட்டிருக்க இப்போ. அவன் புத்தகங்களின் பெயரைச் சொல்வான், அல்லது இப்போ ஏதும் படிக்கலம்மா படம்தான் பார்த்துக்கிட்டிருக்கேன். பேச்சைத் தொடர அவன் தயங்குவது அம்மாவுக்குத் தெரியும். சரி ராஜா, நேரம் இருக்கும் பொழுது கூப்பிடு. அம்மா எதாவது கூட்டத்தில் இருந்தாலும் பிறகு நானே பேசுவேன்.
இரண்டு மூன்று நிமிடங்கள் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும். அவன் நிறுத்துவான் என அம்மா விட்டுவிட அவனும் நிறுத்தாமல் சில நிமிடங்கள் தொடர்வதுண்டு.
அதற்குப் பிறகு அன்று முழுக்க அவனால் வேறு எதுவும் நினைக்கவோ செய்யவோ முடியாமல் போகும். கேமராவை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிடுவான்.
3.
கட்டிட வேலை நடக்கும் அந்த இடம் சிறிய நகரம் போல இருந்தது. பெரிய பெரிய இயந்திரங்கள். அன்னாந்து பார்க்க வைக்கும் இரும்புத் தண்டவாளக் கோபுரங்கள். கம்பி வடங்களில் தொங்கும் சிமென்ட் பாளங்கள். வேலை நடப்பது வெளியே தெரியாமலேயே அங்கு பெரும் கட்டுமானம் நடந்துகொண்டிருந்தது. புதர்கள், முள் மரங்கள் நிறைந்த ஓரப்பகுதியில் இருநூறு குடும்பங்கள் தங்கியிருந்தன. செங்கல்லை ஒரு ஆள் உயரத்திற்கு அடுக்கி மேல் பக்கம் இரும்புத் தகடுகள் வைத்து மூடிய பெட்டிகள்.  முன்பக்கத் திறப்பில் பாலித்தீன் படுதாக்கள் கதவுகளாகத் தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே அடுப்பும் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் தண்ணீரும். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் எல்லோரும் பகல் முழுக்க வேலை செய்துகொண்டிருந்தனர். நூறுக்கு மேல் குழந்தைகள், ஒரு மரத்தடியில் கூட்டமாக இருப்பார்கள். சில நாட்களில்  இளம் பெண் ஒருவர் அவர்களுக்கு எழுத்தும் எண்ணும் சொல்லிக்கொடுப்பார். வேறு சில நாட்களில் இளைஞர் ஒருவர்.   தினம் அதே எழுத்துகள், அதே எண்கள்.  இறுக்கமான சட்டையும் ஜீன்சும் அணிந்த அந்த இளைஞர் குழந்தைகளிடம் இருந்து சில அடிகள் தள்ளியே நின்றிருப்பார். பான் உதட்டுக்குள் பதுங்கியபடி இருக்கும்.
மாலையில் அந்த இடம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடும். இத்தனை பேரா இங்கே இருக்கிறார்கள். நான்கு புறமும் செங்கல் அடுக்குகள் கொண்ட ஒரு ஊரே அங்கு உள்ளது. நடுவில் பெரிய தண்ணீர் தொட்டி. அங்கேதான் அத்தனைபேரும் குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது. சலசலக்கும் பேச்சுகள், இளைஞர்கள் குளித்துவிட்டு செல்போனுடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அங்குமிங்குமாய் பாட்டுச் சத்தங்கள். முதியவர்கள் இல்லாத ஒரு கிராமம். இரண்டு ஆண்டுகள் அவர்களுக்கான இடம் அது. டெல்லியில் இது அவர்களின் நான்காவது வசிப்பிடம் என்றார்கள்.  அவன் அங்கே போய்வரத் தொடங்கிய மூன்றாம் நாள் சபாரி அணிந்த இரண்டு பேர் அவனைத் தனியே அழைத்துப் போய் இனிமேல் இங்கு வரக்கூடாது என்று மிரட்டும் குரலில் சொன்னார்கள். தன் ஆய்வுக்காக இவர்களின் ஊரைப்பற்றி சில தகவல்கள் கேட்கவேண்டும் என்று சொன்னபோது, கெட்ட வார்த்தையில் திட்டி வெளியே இழுத்துச் சென்றார்கள். அவன் அன்று இரவு தூங்கமின்றி தவித்துக் கிடந்தான். அம்மாவிடம் காலையில் பேசினான். ரொம்பநாள் ஆயிடுச்சி இளையா, பேசனும்ணு இருந்தேன். அதிகம் பேசுவான் என்ற எதிர்பார்ப்பில் அம்மா தொடங்கிவைத்தார்.  அவன் கட்டிட வேலை நடக்கும் இடம் பற்றிச் சொல்லி முன்தினம் நடந்ததையும் சொன்னான். அம்மாவிடம் இருந்து அந்தப் பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. ஏன் இளையா அங்க நீ போன? அது உனக்கான இடமில்லை. மா ஏன்மா? அவங்க பிகார், ஒடிஷா பக்கமிருந்து வந்த நம்ம சனங்களா இருப்பாங்க, அவங்ககிட்ட நீ என்ன தெரிஞ்சிக்க போற? அவங்க பதுங்கி வாழ வந்திருக்காங்க. அவங்களோட இந்த அடிமை முகாம பார்த்து என்ன செய்யபோற? பத்து வயசில இருந்து கல் சுமக்கிற பிள்ளங்க. வாரம் ஒருமுறை மட்டும் இருட்டுல குளிக்கிற பெண்கள். இரண்டு வேளை மட்டும் சாப்பிட்டு பத்து மணிநேரம் வேலை செய்யிற சனங்கள். அவங்களப் பாத்து என்ன செய்யப்போற? அம்மாவின் குரல் வேறு ஏதோ சொன்னது. இல்லம்மா அவங்கள நான் தெரிஞ்சிக்கணும். உனக்கு நேர்ந்த அவமானத்துக்கு எதிர்ப்பு இது. அதுக்கு நீ முறையா அங்க போக ஏற்பாடு செய்யணும். அம்மா சொன்னதை அவன் நினைவில் குறித்துக்கொண்டான்.
அவன் சந்தித்த பீகார் எம்பி அம்மாவின் பெயரைக் கேட்டதும் காட்டிய மரியாதை வழக்கம் போல அவனுக்குள் தனிமை உணர்வைக் கூட்டியது. சங்கமித்ராஜி எ ரேர் ரெவலூஷனரி, பட் நாட் யாப்பி ஆன் மி! இட்டிஸ் த ரியலிடி. அவனும் தனக்குள் சொல்லிக் கொண்டான்,  ஷியிஸ் நாட் ஹாப்பி ஆன்மி இன்டீட். என்ன செய்வது? எம்பி அவனிடம் விடைபெறும் போது சொன்னார், யுவர் இங்கிலிஷ் ஈஸ் குட், பட் மைன் நாட். அடுத்த வாரம் அங்கே பாடம் சொல்லித்தரும் வாலண்டியர் வேலையை முறையாக வாங்கிக்கொண்டான்.
அவனை விடுதியிலிருந்து இரவில் அழைத்துச் சென்றவர்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை. வெளியே வா கொஞ்சம் பேசணும் என்று காம்பவுண்டுக்கு அப்பால் தள்ளிச் செல்வது போல தோளில் கைவைத்து அழைத்துச் சென்றார்கள். இரண்டு கார்களில் ஆட்கள், ஏற்கனவே சில மாணவர்கள், இளைஞர்கள். யாரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அதில் ஒருவன் மட்டும் அவனுக்குத் தெரிந்தவன், பல்கலைக்கழகத்தில் பெயரைப் பதிவு செய்துவிட்டு விடுதியில் தங்கியிருப்பவன். கார்கள் இரண்டு மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு வயல்கள் சூழ்ந்த ஒரு பண்ணை வீட்டின் முன் நின்றன. மூன்று மூன்று பேர்களாக நான்கு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர், அல்லது அடைக்கப்பட்டனர். மூன்று பேரில் ஒருவன் அவர்கள் ஆள். தூக்கம் அற்ற முழு இரவு. எதுவும் சிந்திக்க முடியாத மூளை வெறும் காட்சிகளைக் கொண்டு வந்து கொட்டியது.
வீட்டின் முன் வந்து நிற்கிறது ஒரு ஜீப், ஒரு கார். ஜீப்பில் காக்கி உடையில் காவலர்கள், காரில் வேறு உடை அணிந்த காவலர்கள். ஒரு ஆள் மட்டும் இறங்கி வந்து இந்த வீட்டு பையனா நீ என்கிறான். அம்மாவைக் கூப்பிடு என்று அவனை உள்ளே அனுப்பி வைத்து விட்டு கதவை ஒட்டி நிற்கிறான். வெளியே அம்மாவுடன் வந்தபோது ஸ்டேஷன் வரைக்கும் வரணும் என்கிறான். அம்மா சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு பெண் போலீஸ் பெர்சனல்கள் இல்லாமல் தான் வரமுடியாது என்று சொல்லி விட்டு உள்ளே செல்கிறார்.
அறை மணி நேரத்தில் காக்கி பேண்டும் வெள்ளைச் சட்டையும் அணிந்த பெண் போலீஸ் ஒருவர் காரில் வந்து இறங்குகிறார். உள்ளே வந்து அம்மாவுடன் பேசுகிறார். அம்மா மாமாவுக்கு போனில் பேசியிருப்பதாகவும்  இருபது நிமிடங்களில்  வருவதாகவும் சொல்கிறார்.  பாப்பா தூங்கி எழுந்து கதவிற்குள் ஒட்டியபடி வெளியே பார்க்கிறது. பெண் பொலீஸ் இங்கே வா என்று கைகாட்டி அழைக்கிறார். அம்மாவைப் பார்க்கிறது பாப்பா. அம்மா தலையசைக்க அவர் பக்கம் செல்கிறது. தலையை தடவிக் கொடுத்தபடி பேரென்ன என்றார் போலீஸ்காரம்மா. அம்மாவைப் பார்க்கிறது பாப்பா. சொல்லும்மா என்கிறார் அம்மா. இளையராணி… என்னது அப்ப உங்க அண்ணம்பேரு இளையராஜாவா? ஆமாம் என்கிறது தங்கச்சி. போலீஸ்காரம்மா அம்மாவைப் பார்க்கிறார். அம்மா ஆமாம் என்று தலையாசைக்க போலீஸ்காரம்மா அவனைத் தன் பக்கம் கூப்பிடுகிறார். என்ன படிக்கிற? சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட்… பாடுவியா? அவன் அம்மாவைப் பார்க்கிறான். சொல்லு… பியானோ வாசிப்பேன். அம்மா டீ எடுத்து வந்து தர குடிக்கும்போது மாமா வந்து சேர்கிறார். அம்மா மாமாவிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து எல்லாம் இதுல எழுதியிருக்கேன் என்கிறார். போலீஸ்காரம்மா அம்மாவைப் பார்க்க இருவரும் வெளியே செல்கிறார்கள். அம்மா அவர்கள் இருவரையும் அணைத்து மாமா சொல்றத கேட்டு நடக்கனும் அம்மா வர சில நாளாகும் வெளியூருக்குப் போறேன் என்கிறார். பாப்பா அவன் கையைப் பிடித்துக்கொள்ள சில நிமிடங்களில் தூசுகளைக் கிளப்பியபடி வண்டிகள் போய் மறைகின்றன. தெரு முழுக்க ஆட்கள். மாமா அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார். யாரோ உலுக்கியெழுப்ப அவன் உதறிக்கொண்டு எழுந்து உட்காருகிறான்.
5.
பத்து பேருக்கு மேல் அவர்கள். யாருடைய கையிலும் ஆயுதங்கள் இல்லை. ஆனால் எதுவும் செய்ய அவர்களால் முடியும் என்பது தெரிகிறது. மன்னிக்க வேண்டும் உங்களை இப்படி அழைத்து வந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.  இந்தியில் அந்த ஆள் பேசத் தொடங்குகிறான். தேசத்தைக் காப்பாற்றும் பெரும் கடமையில் நாம் இருக்கிறோம். அதற்காகப் பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. சிலருக்குத் தொல்லை தரவேண்டிய நிலையும் உருவாகிவிடுகிறது. அவன் பேசிக்கொண்டே செல்கிறான். இரண்டு மூன்று நாட்கள் அங்கு அவர்கள் தங்க வேண்டியிருக்கும். அதுவரை மொபைல் எல்லாம் பத்திரமாக ஒரு பெட்டியில் இருக்கும் என்கிறான். யாரிடமாவது பேச வேண்டும் என்றால் தங்களுடைய போனில் அழைக்கலாம் என்கிறான். நண்பர்களுடன் வெளியூரில் இருப்பதாக மட்டும் சொல்லிவிட்டு மற்றபடி என்னவேண்டுமானாலும் பேசலாம் என்கிறான்.
காலை உணவு, குளியல், மாற்று உடைகள். எல்லோரும் அன்போடு பேசத் தொடங்கிவிடுகிறார்கள். முஸ்லிம்கள் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒரு மணிநேரம் காட்டப்படுகிறது. பிறகு பல வீடியோ துணுக்குகள். முஸ்லிம் பெண்களின் உருவங்கள் பல வடிவங்களில் பல தோற்றங்களில் காட்டப்படுகிறது. முஸாபர்நகர் பக்கம் பெரிய ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது. இன்னும் இதுபோல பல இடங்கள். நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். உங்களுக்குத் துணையாக பெரிய கூட்டம் வரும். அங்கு வந்தவர்கள் தங்கள் அனுபவத்தைச் சுவையாக விவரிக்கிறார்கள்.
வீடுகளுக்குள் நுழையும்போது பத்து இருபது பெண்கள் கைகூப்பிக் கெஞ்சுகிறார்கள். உயிர் போகாமல் இருந்தால் போதும். அது ஒரு கொண்டாட்டம். வாளைக் கொண்டு ஒருவனை வெட்டும் போது ஏற்படும் கிளர்ச்சி அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடியதில்லை. இயல்பான காலங்களில் இவையெல்லாம் கற்பனையிலும் நடக்காது. போலீஸ், ராணுவம், துணை ராணுவம், ஆயுதப் படை, சிறப்புக் காவல்படை எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது. இரண்டொரு நாட்கள்தான். பிறகு வழக்கம்போல மாணவர்கள், கடைக்காரர்கள், எலக்ட்ரிகல் எஞ்சினியர்கள், டிரைவர்கள், அன்பான அப்பா, அண்ணன், தம்பி, பாசமான மகன் என மாறிவிடலாம், யாருக்கும் எதுவும் தெரியாது. குற்றம், விசாரணை, தண்டனை எதுவும் கிடையாது. இந்தியா முழுக்க இது போன்ற படைகளை நாம் உருவாக்க வேண்டும், இது ஒருவகை ராணுவம், தேசபக்தியின் இன்னொரு வடிவம். நம் தலைவர்கள் இருக்கிறார்கள் வேண்டியதைச் செய்ய. பேச்சு பெருங்கிளர்ச்சியாக விரிகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு விடுதிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். இனி எந்த நேரமும் அழைப்பு வரும், வாகனங்கள் வரும், டிரக், கண்டெய்னர், வேன் எதுவாகவும் இருக்கலாம். இரண்டொரு நாள் புனிதக் கடமையைச் செய்துவிட்டு மீண்டும் மாணவனாக மாறிவிடலாம். எதிர்காலம் தீபங்களின் ஒளியால் நிரம்பும். அவன் இரண்டு நாட்கள் வெளியே எங்கும் போகவில்லை. அவன் அதற்குப் பிறகு யாருடனும் பேசவில்லை. இந்த விடுதியில் இத்தனை பேர் இருக்கும்போது ஏன் என்னை அழைத்துச் சென்றார்கள். மற்றவர்கள் யார்? அதுவரை அவன் அனுபவிக்காத அவமானம், அதுவரை அவன் உணராத வலி. அவன் தப்பித்துச் செல்ல வேண்டும். யாருடைய கண்ணிலும் படாத இடத்திற்கு.
6.
 காம்ரேட் ஆரண்யஜா அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். காஜியாபாத் பக்கம் தன் அறையை மாற்றியது பற்றிய தகவல். அன்று மாலை அவன் அங்கு போனான். சிறிய வீடு, இரண்டு அறைகள், எப்போதும் போல அன்பு. கொஞ்ச நாட்கள் இங்கே தங்கிக்கொள்ளலாமா? சில உதவிகள் செய்ய வேண்டியிருக்கும் முடியுமா? அங்கு அவன் பதுங்கியிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு அது நடந்தது. முஸாபர்நகரை விட்டு ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் வெளியேறினார்கள். இந்துப் பெண்களின் மானம் காக்கும் போர் என்று தலைவர்கள் பேசிய காணொலிகள் வந்தன. அவன் குன்றிப்போயிருந்தான். அவன் பார்த்த வீடியோ காட்சிகள் ஓயாமல் தலைக்குள் ஓடியபடி, சுழன்றபடி, பொங்கியபடி இருந்தன. தரையில் மண்டியிட்டு உயிர்ப் பிச்சை கேட்டு அழும் பெண்கள். துணியில் மறைத்த முகத்துடன் வாளும், கோடாரியும் கையில் வைத்திருக்கும் இளைஞர்கள். அவர்களே எடுத்த வீடியோ துண்டுகள். காம்ரேட் ஆரண்யஜா பங்கேற்ற உண்மையறியும் குழுவின் அறிக்கையை அவன்தான் கீயின் செய்தான். படங்கள், வீடியோ கிளிப்பிங்ஸ், இன்டர்வியு, காவல்துறை தகவல், பத்திரிகைச் செய்திகள். அவன் ஒரு வீடியோவை இரண்டு மூன்றுமுறை பார்த்தான். அவனுடன் பயிற்சிக்காக அடைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டு பேர், இஸ்லாமிய இளைஞர்களாக மாறியிருந்தனர், நாங்கள் பழி வாங்குவோம், ஜிகாத் எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது, ஆத்திரம் பொங்கும் அறிவிப்பு. இதெல்லாம் எங்கே கிடைத்தது என அவன் காம்ரேட் ஆரண்யஜாவிடம்  கேட்டான். இப்பொழுதெல்லாம் எதுவும் எங்கிருந்தும் கிடைக்கும் என்றார் அவர். தான் செய்த கொலையை தானே படம் பிடித்து தன் தலைவர்களுக்கு அனுப்பும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.
7.
உண்மையில் என்னதான் நடக்கிறது மாஜீ? நடப்பது எதுவும் நல்லதாக நடக்கவில்லை, இனி நடக்கப்போவதும் நல்லதாக இல்லை. உண்மையை அறிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம். எனக்கு அரசியல் தேவையில்லை மாஜீ, என்னால் முடியாது. தெரியும் ஏலியா. நீ உனக்குப் பிடித்ததைச் செய். நீ எது செய்தாலும் அரசியல்தான். நீ மனம் விட்டுச் சிரித்தால் அதுதான் எனக்குப் பெரிய அரசியல். ஆனால் நீ சிரிப்பதே இல்லை, புன்னகை மட்டும்தான். காம்ரேட் சங்கமித்ரா எப்படி சிரிப்பார்கள் தெரியுமா? அம்மா என்பதால் உன்னிடம் அப்படிப் பேசமாட்டார்கள், ஆனால் அப்படி ஒரு குறும்பு. தடையோ, தயக்கமோ இன்றி அவர்கள் சொல்லும் துணுக்குகள் பெண்களுக்கு மட்டுமே புரியும். நீயும் அப்படிச் சிரிக்கவேண்டும். காம்ரேட் ஆரண்யஜா அம்மாவின் நெடுநாள் தோழி. மகாராஷ்டிராவை விட்டு டெல்லி வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனதாகச் சொல்லுவார். உன்னுடைய அம்மா எங்களுடைய இயக்கத்திற்கு  வரவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் வந்திருந்தால் அவரால் அப்படிச் சிரிக்க முடியாமல் போயிருக்கும்.
அம்மா டெல்லி வந்திருந்தபோது அறிமுகப்படுத்தியவர்தான் காம்ரேட் ஆரயண்ஜா. தலித்துகள் என்றால் கறுப்பர்களாகத்தான் இருக்கவேண்டுமா இளையா, இதோ பார் ஒரு ஆரஞ்சுநிற பஞ்சமப் படை வீராங்கனையை. தோளைத் தொட்டு பக்கத்தில் இருத்திக்கொண்ட ஆரண்யாஜி உன் அம்மாவைத்தான் எங்கள் படையில் சேர்க்க முடியவில்லை உன்னையாவது சேர்க்கப் பார்க்கிறேன் என்றார். அம்மா தலையைச் சாய்த்து விரலைக் காட்டி வீட்டுக்கு ஒருவர் போதும் ஆரண்யா என்றார். எங்கள் வீடு நான்கு தலைமுறையாகப் படையில் இருக்கிறது, ஆயுதம் இன்றி ஓயாமல் போர் செய்து கொண்டிருக்கிறது. சற்றே தளர்ந்து உங்களுக்கு படை என ஏதாவது இருப்பது உண்மையானால் இவரைச் சேர்த்துக் கொள்வதில் எனக்குத் தடையில்லை என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார் அம்மா.
 அறுபது வருடமாக ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிற உங்களில் யாரையாவது கைது செய்துவிட்டால் நாங்கள்தான் நீதிமன்றத்திற்கு நடக்கவேண்டியிருக்கிறது. ஆரண்யாஜி முகம் சுணங்கியது. உங்கள் சிறுத்தைகள் மட்டும் என்னவாம் அடங்கமறு – அத்துமீறு, திமிறியெழு-திருப்பியடி என்றுதானே வளர்ந்தார்கள், பேகம்ஜி போல தேர்தல் அரசியலா பேசினார்கள். அது வேறு அர்த்தம், இதில் ஆயுதத்திற்கும் படைக்கும் என்ன வேலை. அத்து மீறுவதும், திமிறியெழுவதும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடப்பது. நாம் சில இடங்களில் தெருவில் நடப்பதே அடங்க மறுப்பதுதானே. அது இருக்கட்டும், இப்போது அமைப்பாய்த் திரள்வோம் அதிகாரம் வெல்வோம் அங்கீகாரம் பெறுவோம் சாதியழிப்போம் சமத்துவம் காண்போம் என்று பேசுகிறார்களாம். என்ன இளையா? அம்மாவுக்கு அதில் ஒரு கிண்டலும் கேலியும் உண்டு.  ஆரண்யாஜி கையை உயர்த்தி சரி, சரி போதும் இன்று நாம் அடங்க மறுப்போம் அளவாக மது அருந்துவோம் என்றார்.
அம்மா என்னைப் பார்த்து இங்கே இருப்பதாக இருந்தால் இருங்கப்பா, இல்லைன்னா. அவனுக்கு ஏனோ ஆரண்யாஜி பேசுவதைக் கேட்கவேண்டும் போலத் தோன்றியது. அன்றும் மறுநாளும் அங்கேயே இருந்தான். மது அருந்தியபடி அவர்கள் பேசிக்கொண்டிருக்க அவன் மாட்டிறைச்சியும் மீனும் சமைத்தான். ஆரண்யாஜி சுவைத்துச் சாப்பிட்டார். அம்மா சொன்னார், இதெல்லாம் அத்தையிடம் கற்றுக்கொண்டது. அதில் ஒரு வருத்தம் தொனித்தது. ராணி இப்போ சமைக்கக் கத்துக்கிட்டாராம் இளையா.
8.
அரசியல் வேண்டாம் என்னும் இளையான் அந்தப் பேச்சை ஆடியோவில் கேட்பதைப் பார்த்துப் புன்னகைத்துக் கொள்வார் அம்மா. கேட்காதது போல இருந்துவிட்டு இன்னொரு முறை பிளே பன்னுப்பா என்பார். அந்தத் தம்பிக்கு நான்தான் சொன்னேன் புரட்சி, யுத்தம் என்பது சேரி அரசியலுக்கு ஆகாது. பார்க்கும் போதெல்லாம் சொல்லியிருக்கிறேன். தேர்தல் அரசியலுக்கு போவதென்றால் நீங்கள் வருவீர்களா என்பார். அவர் மாறியிருக்கிறார், நான்தான் மாறவில்லை. நீ என்ன சிறுத்தையா இளையா? ஒரு முறை அம்மா கேட்டபோது இளையான் இல்லை என உடனே மறுத்தான். பிறகு தவறாமல் கூட்டத்திற்குச் செல்கிறாய். அவ்வளவு பேரை வேறு எங்கு பார்ப்பதாம்? உங்கள் கூட்டம் என்றால் ஐம்பது அறுபது, அங்கே ஆயிரம் இரண்டாயிரம். அப்போ உனக்கு அரசியல் தேவையில்லை, கூட்டம்தான் வேண்டும் அப்படியா? அம்மா பதில் எதிர்பாராமல் முடித்துக் கொள்வார்.
காம்ரேட் ஆரண்யஜா அவனைத் தனியே சந்திக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தான். ஆனால் அடிக்கடி அதற்கான சந்தர்ப்பங்கள் வந்தன. கருத்தரங்கம், திரைப்பட விழா, பல்கலைக்கழக நிகழ்வுகள் என அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.  அம்மாவிடம் பேச முடியாதவைகளை அவரிடம் பேசினான். அவரிடம் பேசுவது அம்மாவுக்குத் தெரியவரும் என்பது தெரிந்தே பேசினான். அவருடைய நினைவாற்றல் அதிசயிக்க வைப்பதாக இருந்தது. அவனுடைய ஆய்வுகளைப் பற்றியும் அவன் படிப்பவை பற்றியுமே அதிகம் பேசினார். வாரம் ஒருமுறையாவது வீட்டிற்குச் செல்வது அவனுக்கு வழக்கமாகிப் போனது. அம்மா, ஆரண்யாஜி  இருவருரையும் கடந்து தன்னால் சிந்திக்க முடியவில்லை என்பது அவனுக்குப் புரியத் தொடங்கியது. அவர்களுடன் பேசுவது, அவர்களுக்கு மறுப்பாகப் பேசுவது இதுதான் தன் அறிவின் அளவா? அவன் தனிமையை உணர்ந்தான், பல சமயங்களில் குற்றவுணர்வில் குறுகிப்போனான்.  தங்கையைப் போல மருத்துவம் படித்திருக்க வேண்டும். மாமாவும் அத்தையும் சொல்லியதைக் கேட்காமல் போனது வருத்தமாக இருந்தது. அம்மாவிடமிருந்து விலகி விலகிப் போவதாக நினைத்து இப்போது இரண்டு அம்மாக்களிடம் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தான்.
9.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கவில்லை, ஆனால் அச்சத்தை அளித்தது. மீண்டும் தன்னை இரவில் வந்து கடத்திச் செல்வார்களோ எனப் பயந்தவன் விடுதியை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு அறையில் தங்கினான்.  பண்ணை வீட்டில் நடந்த பயிற்சியின்போது இனி இந்தியா நமதே என்று ஒருவன் சொன்னது அடிக்கடி அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவனது துறையில் இருந்த சிலர் புதிய எழுச்சியுடன் பாரத நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.  அவன் துறைக்குச் செல்வதையும் தவிர்த்தான். தன் உருவத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தொடங்கினான்.
காம்ரேட் ஆரண்யஜாவிடமிருந்து தகவல் எதுவும் இல்லை. அம்மா  டெல்லியில் போராட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது இரண்டு நாட்கள் கூடுதலாகத் தங்கியிருந்தார். அவன் போய்ப் பார்ப்பதைத் தவிர்த்தான். கடைசி நாளுக்கு முதல்நாள் அம்மா அழைத்தார். அவர் தங்கியிருந்த விடுதிக்குப் போனபோது ஆரண்யாஜி கையில் கட்டுடன் உட்கார்ந்திருந்தார். புன்னகையுடன் தலையசைத்தார். அவனுடைய குற்றவுணர்ச்சி இரண்டு மடங்கானது. ஆரண்யாஜி என்ன ஆனது? ஏன் எனக்குத் தகவல் சொல்லவில்லை?  கம்மிய குரலில் கேட்டான். அம்மா அவனுக்கு ஒரு பொட்டலத்தைத் தந்து சாப்பிடச் சொன்னார்.
நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சரே, எம்.எம். கல்புர்கி மூவரின் கொலையிலும் சன்ஸ்தான என்ற அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரியுமா இளையா? என்றார் அம்மா. அவன் தெரியாது எனத் தலையாட்டினான். அவர்கள் இதுபோல இன்னும் பல எழுத்தாளர்களையும் சமூகச் செயல்பாட்டாளர்களையும் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அது பற்றிய தகவல்களைத் திரட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட இருந்தார் ஆரண்யாஜி. அதற்கு முதல்நாள் இரண்டு பேர் அறையில் புகுந்து தாக்கியிருக்கிறார்கள். கொலை செய்வதுதான் அவர்கள் திட்டம்.  மேசையைக் கொண்டு தடுத்துப் போராடியதால் கைகளில் மட்டும் வெட்டுகள், அறைக்குள் புகுந்து பின்வழி இறங்கி தப்பியிருக்கிறார் ஆரண்யாஜி. போலீசில் புகார்தரச் சென்றவரைக் கைது செய்து அடைத்துவைத்து மருத்துவமும் செய்திருக்கிறார்கள்.  மாணவர்கள் சிலரை இவர்கள் கட்சியினர் கும்பலாகத் தக்கச் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் கையில் காயம் பட்டதாக எப்ஃபையார் பதிவு செய்திருக்கிறார்கள். ஆரண்யாஜி மற்றும் அவர் தோழர்கள் மூன்று பேர் மீது வழக்கு. இப்போது பெயிலில் இருக்கிறார்.
அம்மா சொல்லச் சொல்ல அவனுக்குப் பின்மண்டை மரத்துப்போனது. செய்திகளைப் பார்க்கவில்லை அம்மா. போலீஸ், உளவுத்துறை தராத எதுவும் செய்தித்தாள்களில் இனி வராது. ஆரண்யாஜி தலையை அசைத்துத் தன் பக்கத்தில் உட்காரச்சொன்னார். இரண்டு கைகளிலும் கொடுவாகத்தி பட்டிருந்தது. வலது கையில் ஆழமான வெட்டுகள், இடது கையில் காயங்கள். கட்டு இல்லா கை பக்கம் உட்காரச் சொல்லி தலையை வருடினார். நீ என்னைத் தேடி வந்துவிடப் போகிறாயோ என்றுதான் பயந்தேன். உன்னைச் சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும், என்ன செய்வது, இப்போது அழுகையை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். அம்மா பின்னால் வந்து ஆரண்யாஜியின் தலையை வருடியபடி நின்றார்.
அம்மா கீழே வைத்த ஃபைலை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தான். வழக்கு சம்பந்தமான தாள்கள். தாக்கியவர்களின் போட்டோ ஒரு கவரில் இருந்தது. எடுத்துப் பார்த்தவனுக்குக் கண்கள் மங்கிப்போனது. விடுதிக்கு வரும் அவர்களில் இருவர். பண்ணை வீட்டில் பயிற்சி நடந்த போதும் அவர்கள் இருந்தார்கள்.
அம்மா நாளை ஜந்தர் மந்தருக்கு வரச்சொன்னார். அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் போக இருப்பதாகச் சொன்னார், அவருடன் இன்னும் பலர் போக இருக்கிறார்கள்.  அவன் மறுநாள் போனபோது ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்தார், பிறந்த நாள் அன்று திறந்து பார் இளையா என்றார். ஆரண்யாஜி காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்தார். ஏலியா இனி நீ வரவேண்டாம், வேண்டுமென்றால் நானே வந்து பார்க்கிறேன். சீக்கிரம் தீசிசை முடித்து வேலைக்குப் போ என்றார். நான் செய்ய இதுமட்டும்தான் இருக்கிறதா காம்ரேட் ஆரண்யாஜி? கைகளைப் பற்றிக் கொண்டான். வலியில் முகம் சுருங்க புன்னகைத்தபடி நெற்றியில் முத்தமிட்டவர் செய்ய நிறைய இருக்கிறது, செய்ய முடியும் நீயே அதை கண்டுபிடிப்பாய் ஏலியா என்றார்.
10.
அன்று அவன் பிறந்த நாள். காலை ஆறுமணி மாமா பேசினார், அத்தையும் பேசினார். தங்கை அழைத்து எப்படி ராஜா இருக்க, பிறந்தநாள் அன்னிக்கு ஒன்னா இருந்து எட்டு வருஷம் ஆயிடுச்சியில்ல, ரொம்ப தூரம் வெலகிப் போயிட்டோம் என்றாள். அடுத்த வருஷம் நாம் பிறந்த நாள் அன்னிக்கு அம்மாகூட இருக்கணும் அதுக்கேற்ப திட்டம் போடு என்றாள். அம்மா பாவம்ணா, நாம அவங்கள ரொம்ப வெலக்கி வைச்சிட்டோம்,  மாமாவும் அத்தையும் நம்மள தப்பா வளர்த்துட்டாங்க. இங்க கேரளாவுல அம்மாவுக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா? சமூக விடுதலைப் போராளி சங்கமித்திரை அப்படின்னு கருத்தரங்குள ரெண்டுபேர் கட்டுரை வாசிச்சாங்க, கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு அண்ணா.
 இளையராணி பேசிக்கொண்டே சென்றாள். இளையான் கண்களில் கண்ணீர் இல்லை, கண்களைச் சிலநாட்களாக மறைத்திருந்த மங்கலான திரை கரைந்து தெளிவு வந்தது. இள்ளி நாம உன் பிறந்த நாளின் போது அம்மாவுடன் இருப்போம் என்றான். அப்பிடியா, அப்பிடியா சொல்லற… அவன் அறையில் புதிய ஒரு வாசனை, வழக்கமாக வரும் புறாக்கள் சன்னல் ஓரம் உட்கார்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. நினைவு வந்தவனாகக் கட்டிலுக்குக் கீழே வைத்திருந்த இளநீலப் பொதியை எடுத்துப் பிரித்தான். அம்மாவைப் போல அவசரமில்லாமல்  முழு தாளும் அவிழும்படி.
அட்டைப் பெட்டிக்குள் அது இருந்தது.  டெல்லி வருவதற்கு முன்  வேலை செய்து  அவன் வாங்க நினைத்த ஹெச்டி வீடியோகாம். அப்போது அவன் சினிமா, சினிமோடோகிராபி என்று சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா அப்போது புதிய இயக்கம் ஒன்றைக் கட்டுவதற்காகத் தமிழகம் முழுக்க பயணத்தில் இருந்தார். அவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் டெல்லி வந்து போஸ்ட்கிராஜிவேஷனைத் தொடர்ந்தான். அது அவனுக்குக் கனவு அல்ல, ஆனால் மறக்கக்கூடியதாகவும் இல்லை. அம்மா எப்படிக் கண்டுபிடித்தார்? கேமராவைக் கழட்டி பூட்டி சார்ஜ் செய்யப் போட்டுவிட்டு, அம்மாவை அழைத்தான், மா.
இளையா கூப்பிடலாம்னு இருந்தேன், மத்தவங்க பேசிமுடிக்கட்டும்னு இருந்தேன். நன்றிம்மா! பிறந்த நாளன்னைக்கி உன்னோட இருந்து பல வருஷமாயிடுச்சி இல்ல. அம்மா அந்த கேமரா எங்க வாங்கினது? அதுவா அது டெல்லியில வாங்கினதுதான். உள்ளே எல்லா பேப்பரும் இருக்கு. அது நல்ல மாடல்தானே. ரொம்ப அட்வான்ஸ்மா. அம்மா படிச்சிப் பாத்துதான் வாங்கியிருக்கேன், சரி நண்பர்களோட கொண்டாடு.  அவன் கேமராவிற்குள் முழுகிப்போனான். மாலை காம்ரேட் ஆரண்யஜா அழைத்தார் தான் அவன் இருக்கும் தெரு முனையில் நிற்பதாகச் சொன்னார், அவன் கிளம்பி வந்தால் ஒரு ரெஸ்ட்ராரெண்டுக்குப் போகலாம் என்றார். அவன் குழந்தையைப் போல உணர்ந்தான். பத்து நிமிடத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு கேமராவின் பேக்பேக்கை மாட்டிக்கொண்டு துள்ளிக் கொண்டு ஓடினான்.
கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்த ஆரண்யாஜி அவனைப் பின்னால் உட்காரச் சொன்னார். கதவைத் திறந்து உள்ளே உடலை நகர்த்தியபோது ஒரு பெண் வீலில்  உட்கார்ந்திருப்பதைப் பார்த்துத் தயங்கினான். அவர் ஐயம் ஜெம்சி நீலம், டாக்குமென்டரி ஃபில்ம் மேக்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார், தயங்கி நின்றான்.  ஆரண்யாஜி ஏலியா உட்கார் நாம மூணுபேரும் உன் பிறந்தநாளை கொண்டாடப் போரோம் என்றார். கார் நகரை விட்டு வெளியே சென்றது.
அம்மாவை அழைத்து ஆரண்யாஜி பேசிக்கொண்டு வந்தார். புதிய இடம், புதிய சூழல், பழங்கால வீடு ஒரு விருந்தினர் இல்லமாக மாறியிருந்தது. உள்ளே சாரங்கி கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தார்கள். ஆரண்யாஜி ஒரு போர்வையால் முழுக்கப் போர்த்தியிருந்தார். இவருடைய அடுத்த டாக்குமெண்டரிக்கு நீதான் சினிமோடோகிராபராம் அது பற்றிப் பேசத்தான் இங்கு வந்திருக்கிறோம் சிரித்தபடி சொன்னார் ஆரண்யாஜா. அத்துடன் உன்னுடைய பிறந்தநாளும்கூட. கூச்சம் தெளிந்த இளையா பேச்சில் கலந்துகொண்டான். நீலம் அவனிடம் தன் அடுத்த படம் பற்றிய விவரித்தார்.  கண்களைப் பார்த்துப் பேசு ஏலியா நாம் காதல் வசப்பட்டாலும் தப்பில்லை என்றார். தன்னை விட ஐந்தாறு வயது மூத்த பெண் அப்படிச் சொன்னது அவனை மேலும் கூச்சப்படவைத்து.
பேச்சு இசையைப் பற்றி, படங்களைப் பற்றி என விரிந்து சென்றது. முதல் முறையாக மது அருந்தினான், அவன் குரல் கரகரப்பாக மாறியிருந்தது. இரவு திரும்பி வந்த போது பின் சீட்டில் ஆரண்யாஜி உட்காரந்து கொள்ள முன் சீட்டில் தூங்கி வழிந்தவனை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டபடி வண்டியை ஓட்டினார் நீலம். பெண்ணியவாதிகளின் பிள்ளைகள் பெண்களாகவும் வளர்வதில்லை ஆண்களாவும் வளர்வதில்லை, வேறு ஏதோ போல வளர்கிறார்கள் என்றார். ஆரண்யஜா சிரித்தபடி எ சன் ஆப் டு மதர்ஸ் அன்டு, பிரதர் ஆப் டபுல் பெமினிஸ்ட், பூர் ஃபெல்லோ என்றார். சாரி நீலம்ஜி என்று முணகியபடி எழுந்திருக்க முயன்றான். நோ பாதரிங் இட் ஃபீல்ஸ் நைஸ்,  யூவார் ஆன் ஏ சேஃப் லான்ட் என்றார் நீலம்.  அவன் தன் கேமராவை அணைத்தபடி தூங்கிப்போகிறான்.
ஒரு கூட்டம் அவனைத் துரத்திக்கொண்டு வருகிறது, கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து ஓடுகிறான், ஒரு திருப்பத்தில் வழி முடிந்து போகிறது. உறைந்துபோய் நின்ற அவனை வந்தவர்களில் இருவர் அழுத்தமாகப் பிடித்துக் கொள்கிறார்கள். ஒருவன்  அவன் கையில் கனமான துப்பாக்கி ஒன்றை திணிக்கிறான். ஒருவன் புகையும்  இரும்பு வில்லை ஒன்றை அவன் முன் காட்டுகிறான், திரிசூல முத்திரை, அது தாமரைபோலவும் தோன்றுகிறது. அதனை அவன் நெற்றியில் அழுத்துகிறான்.
11.
நகர நெடுஞ்சாலையின் நடுப்பகுதி பாட்டை, சோடியம் விளக்கு வெளிச்சத்தில் கோடுபோல கிடைமட்டத்தில் அடுக்கப்பட்ட உடல்கள். ஒருவர் தலைப்பக்கம் இன்னொருவர் கால் இருக்கப் படுத்துக் கிடக்கிறார்கள். வண்டியில் இருந்தபடி கேமரா  அவர்களைப் படம் பிடிக்கிறது. மைல் கணக்கில் உடல்கள். இரண்டு பக்கமும் கார்களும், டிரக்குகளும், லாரிகளும், வேன்களும் சீறிப்பாய்கின்றன. நகர நெடுஞ்சாலையின் நடுப்பகுதி பாட்டை முடிவே இல்லாதது போல உடல்களாய் நீள்கிறது. அன்று இரவு முழுக்க காரில் இருந்தபடி கேமரா அதனைப் பதிவு செய்கிறது. மறுநாள் மாலை கேமராவுடன் அவன் நடந்தே அவர்களைப் படம் பிடித்தான். அதற்கும் மறுநாள் சிலரிடம் பேசிப் பதிவு செய்துகொண்டான்.
அது ஒரு சாக்கடை வாய்க்கால், நகரத்தின் பல வாய்க்கால்களில் ஒன்று, இரண்டு புறமும் மதில்கள், கம்பி வேலிகள். உள்ளே புதர்கள், முள் மரங்கள் கொண்ட கரைப்பகுதிகள். ஐந்து முதல் பதினைந்து வயதிலான சிறுவர்கள், சிறுமிகள். ஒரே இடத்தில் நூற்று இருபது பேரை அவன் பார்த்தான். காலையில் பத்து பேர் இருந்தார்கள். ஆறு பையன்கள், நாலு சிறுமிகள். நேரம் செல்லச் செல்ல வந்து கொண்டே இருந்தார்கள். கையில் பிளாஸ்டிக் பைகள். மதியத்திற்குப் பிறகு நூறு பேருக்கு மேல் அந்த இடத்தில் இருந்தார்கள். கும்பல்கும்பலாக உட்கார்ந்து பீடியும் சிகரெட்டும் புகைத்தார்கள். கிழிந்த துணிகளின் வழியே அழுக்கு படிந்த உடம்புகள் வெளித் தெரிவதைப் பற்றிய கவலை இன்றி பேசிச்சிரித்தபடி நடந்த பெண்பிள்ளைகள் பையன்களிடம் சில சமயம் சண்டைபோட்டார்கள். மாலை அவர்களில் சிலர் குடிக்கவும் செய்தார்கள். அவன் ஒரு வாரம் அவர்களிடம் பேசினான். பிறகு அவர்களைப் படம் பிடிக்க அனுமதி வாங்கினான். சிலர் கேமரா முன் பேசவும் ஒப்பக்கொண்டனர்.
நகரம் முழுக்க அது போல் குப்பை மேடுகள் இருந்தன, அதற்குள் பத்து ஐம்பது நூறு என சிறுமிகளும் சிறுவர்களும் அலைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு சாலையிலும் இருந்த குப்பைத் தொட்டிகளுக்குள் இரண்டு மூன்று பேர் எதையாவது தேடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு முறை யமுனாவை ஒட்டிய குப்பைக் காட்டில் முன்னூறு பேருக்கு மேல் இருந்தார்கள். அவனுடன் இரண்டு மூன்று சிறுவர்கள் நெருங்கிப்பழகினார்கள். அவர்கள் இங்கிலிஷ் பேசினார்கள். பெண் பிள்ளைகள் சிலர் சிகரெட் வாங்கித் தந்தால் கேமாராமுன் பேசுவதாகச் சொன்னார்கள். இந்தப் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போவர்கள் என்று ஒரு பையன் சொன்னான். காணாமல் போவார்களா? காணாமல்தான் போவார்கள், என் அக்கா நாலு வருஷத்திற்கு முன் காணாமல் போச்சி, அவனுடைய தங்கை மூனு வருஷத்திற்கு முன்பு. போலீஸில சொல்லவில்லையா? போலீஸ்காரர்கள்தான் வண்டியில் அழைத்துச் சென்றார்கள். கேமராவில் அவன் பதிந்த முகங்கள்  அவனைப் பார்த்துச் சிரித்தன. விதவிதமான பற்களுடன், சில பற்களுக்கிடையில் பீடியைக் கடித்தபடி. சில முகங்கள் மட்டும் உற்றுப் பார்த்தன.
கட்டிட வேலை நடக்கும் இடத்தைத் தேடிப் போனான்.  இடம் மதில்களில் மறைந்த அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறியிருந்தது. அவர்கள் போய் இரண்டு வருஷத்திற்கு மேல் ஆகிறது என்றார் சீறுடை அணிந்த காவலர். தேடமுடியுமா எனத்தெரியாமல் அவன் எலக்ட்ரீஷியன் ஒருவரிடம் கேட்டான், அவர் சொன்ன இடத்தில் அவர்கள் இருந்தார். இப்பொழுது முன்னூறு செங்கல் அடுக்குகள், இருநூறுக்கு மேல் குழந்தைகள். அவனுடைய நண்பர்கள் வளர்ந்திருந்தார்கள். இந்த முறை அவன் மாலை நேரங்களில் மட்டும் அங்கு சென்றான். கேமரா முன் சிலர் பேச ஒப்புக்கொண்டார்கள். செங்கல் அடுக்கின் உள்பகுதி, வெளிப்பகுதி, காலைகள், மாலைகள், இரவுகள். அவன் கேமரா  பலவற்றைப் பதிவு செய்துகொண்டது.
சாலையோரங்களில், பாலங்களின் அடியில், மேம்பாலங்களின் கீழ், சாக்கடையின் ஓரப்பகுதிகளில், பெரிய கட்டிடங்களின் பின் பக்கங்களில், இரண்டு மதில்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் எங்கும் மனிதர்கள். பகல் முழுக்க ரிக்ஷாவுடன் உட்கார்ந்து, ரிக்ஷா ஓட்டி, இரவில் ரிக்ஷாவில் உறங்கி வருஷத்தில்  ஒருமாதம்  ஊருக்குப் போய் வரும் மனிதர்கள்.
குடிசைப் பகுதிகளின் இடைப்பட்ட சந்துகளில் அவன் கேமராவுடன் நடந்தான். ஒவ்வொரு வீட்டிலும் ஆறு ஏழுபேர் இருந்தார்கள். உள்பகுதி என்ற ஒன்றே அற்ற வீடுகள். அடுக்குமாடியுடன் கூடிய கல் கூடுகள். டிவி, ரேடியோ சப்தங்களுடன் கழியும் பகலும் இரவும். காலை முதல் இரவு வரை அவர்கள் நகரத்தின் ஏதோ ஒரு பகுதியில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவன் போன இடங்களில் எல்லாம் குழந்தைகள். டிராபிக் சிக்னலில் வெயிலில் குட்டிக்கரணம் அடிக்கும் குழந்தைகள், வளையத்தில் புகுந்து வெளிவரும் குழந்தைகள், மேளம் அடிக்கும் குழந்தைகள், மேலே துள்ளி  தலைகீழாக வளைந்து நேராக வந்து நிற்கும் குழந்தைகள், காரின் கண்ணாடியில் பூங்கொத்து காட்டும் குழந்தைகள். காணாமல் போன  குழந்தைகள், இனி காணாமல் போகப்போகும் குழந்தைகள்.
12.
அவனிடம் ஐம்பது மணிநேரத்திற்கு மேலான விடியோ ஃபுட்டேஜ் இருந்தது. ஜெம்சி நீலம்  அதை எதிர்பார்க்கவில்லை. பத்து நாட்கள் ஆனது. ஸ்கிரிப் எழுதி எடிட் செய்து ஒரு மணி நேரமாக அதை வடித்தெடுத்தபோது “எ சிட்டி வித்தவுட் ஹோம்” என்று படமாக மாறியிருந்தது. இளையன் “எ பீப்பில் வித்அவுட் லேண்ட்” என்று தனியாக ஒரு படத்தைக் காட்டினான், அரை மணிநேர படம், ரப் கட். நீலம் அமைதியாக இருந்தார். நான் திட்டமிட்டது வீடற்ற மக்களின் நகரம் பற்றியது, ஒரு நகரம் முழுக்க  உள்ள வீடற்ற மக்கள் பற்றியது ஏலியா. தன்னுடைய படத்தை வெளியிடப்போவதில்லை ஒரு எடிடிங் பயிற்சிக்காகச் செய்து பார்த்தேன் என்றான் இளையன்.  அதற்காகச் சொல்லவில்லை என்றார் நீலம்.
பாதாள சாக்கடை ஒன்றின் திறப்பு, கறுத்த வளையம். உள்ளேயிருந்து ஒரு மனிதன் வெளியே நழுவி மேலே வந்து உட்காருகிறான்.  தன் உடலைக் கைகளால் வழித்துவிட்டபடி நான் ஒரு சம்மார், உள்ளே இருப்பவன் ஒரு கோலி என்று சொல்லிவிட்டு கீழே குனிந்து பார்க்கிறான். காட்சி ஐந்து நொடிகள் இருண்டு மீண்டும் ஒளி வர ஒரு கிராமத்தின் கோட்டுருவம் தோன்றுகிறது. நீலம் அவன் படத்தின் தொடக்கத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கிறார். அவர் முகத்தில் குழப்பம், ஒரு சிகரெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு பால்கனி நோக்கிச் சென்றார். அவன் இது வெறும் பயிற்சிக்காகத்தான் நீலம்ஜி என்றபடி பின்னால் சென்றான். பயிற்சிதான் ஆனால் முழுமையாக இருக்கிறதே. என்ன செய்யலாம்? இதை ஏன் முன்பே என்னிடம் பேசவில்லை? இது பின்னால்தான் தெரிந்தது. வீடற்ற மனிதர்களில் எண்பது சதவீதம்பேர் தலித்துகள் நீலம்ஜீ, இது எனக்கு முன்பு தெரியாது.  ஒரு முடிவுக்கு வந்தவராக, இரண்டையும் ஒரே சமயத்தில் திரையிடலாம். உனது படம் எனது தயாரிப்பு என இருக்கட்டும், இது ஒரு தொழில்நுட்பத் தேவைக்காக. அவன் படத்தை முழு வடிவில் திருத்தியமைத்தான். இறுதி வடிவில்  அவன் படம் “ஐ ஹேவ் நோ ஹோம் லேண்ட்” என்ற வாசகத்துடன் முடிந்தது. “எ சிட்டி வித்தவுட் ஹோம்” “எ பீப்பில் வித்அவுட் லேண்ட்” இரண்டும் ஒரே நாளில் திரையிடப்பட்டன. ஹோம் அண்ட் லேண்ட ஸ்க்ரீனிங் ஆப் டு ஷார்ட் ஃபில்ம்ஸ் என்று சில இடங்களில் திரையிட்டார்கள். பத்தாவது திரையிடல் கல்லூரி ஒன்றில் நடந்தபோதுதான் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.
நூறு பேருக்கு மேல் இருந்த பார்வையாளர்களை மீறி இருபது பேர் கொண்ட கும்பல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் இரு பில்ம்மேக்கர்களையும் குறிவைத்துத் தாக்கியது. நீலம் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இளையனுடைய முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கியிருந்தது. தூக்க மருந்தையும் கடந்து உள்ளே உறைக்கும் வலியுடன் ஒரு வாரம். அனுமதியின்றி திரைப்பட நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது, ஆட்சேபித்த மாணவர்களைத்  தாக்கியது, தேசத்துரோகமான பேச்சை கல்லூரிக்குள் வந்து பேசியது, கொலை முயற்சி என்று பல பிரிவுகளில் அடிபட்ட ஆறுபேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  மருத்துவமனையில் ஓய்வெடுத்த எட்டு தேசபக்தர்கள் பாதிக்கப்பட்டவர்களாகப் பதிவுசெய்யப்பட்டார்கள்.
13.
பல்கலைக்கழகம் அவனை சஸ்பெண்ட செய்தபோது  அவனுடைய கைட் தன்னால் எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். நல்ல மதிப்பெண்ணும், பெலோஷிப்பும் இருக்கும் திமிரில் சாதியைப் பொது என்று குறிப்பிட்டதே முதல் தவறு என்று அழுத்தமாகச் சொன்னார். அரசியலில் ஆர்வமற்றவனாக இருந்ததால்தான் அவனைத் தனக்குக் கீழ் ஆய்வுமாணவனாக சேர்ந்துக்கொண்டதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். வெளிநாட்டு நிதி உதவியுடன்  இந்தியாவில் சாதி அரசியல் பரப்பப்படுவதைப் பற்றித் தான் பத்திரிகையில் எழுதியவற்றைக் குறிப்பிட்டு கடைசியில் தன்னிடம் படிக்கும் மாணவனே அந்தச் சதித்திட்டத்தின் ஏஜெண்டாக இருப்பது தனது இண்டலெக்சுவல் டிக்னிட்டிக்கு இழுக்கு என்று தன் சக ஆசிரியர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். இட் இஸ் எண்ட் ஆப் யுவர் அக்கடமிக் லைப் மிஸ்டர் இளையராஜா! மிக்க நன்றி டாக்டர், இட் இஸ் பிகினிங் ஆப் மை ரியல் லைப், எ நியு லைப்.
அவன் காண்டினில் உட்கார்ந்திருந்தபோது அந்த அழைப்பு வந்தது. ஹைதராபாத் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு தோழி. ராஜா உங்கள் ஷார்ட் பிலிம் ஸ்க்ரீனிங் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம் இல்லையா, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இருந்த ரோகித் வெமுலா என்ற தோழர் இறந்து போயிட்டார். என்ன ஆனாது? அறையில் தூக்கிட்ட நிலையில் அவர் உடல் காணப்பட்டது. இறுதிக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
  அவன் அறைக்கு வந்தபோது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அம்மா தான் உடனே டெல்லி வரப்போவதாகச் சொன்னார். அம்மா, நீங்க வரவேணாம். அப்போ நீ இங்கக் கிளம்பி வா.  நானும் இப்போ உங்கள பார்க்க வரல, சாரி என்றான்.  ராஜா, மனசு ரொம்ப குழம்பிக்கிடக்கு, என்னவோ ஒரு பயம். அம்மா நீங்க ஏன் பயப்படரீங்கன்னு தெரியும். நானே ஒரு நாள் உங்கள வந்து பாப்பேன். அதுவரைக்கும் மன்னிச்சிடுங்க. அம்மாவிடமிருந்து நீண்ட மௌனம். சரி, இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது பேசு. பேசலன்னாலும் கோவிச்சிக்காதிங்கம்மா.
 அவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் தழும்புகள், வலைப்பின்னலான கோடுகள். தழும்புகளை மாற்றிவிடலாம், ஒரு வருடமாவது ஆகும், அது ஒரு தொடர் சிகிச்சை ஏலியா, நீலம் சொல்லியிருந்தார். முகத்தின் பல இடங்களில் சூலக்குறிகள் தென்பட்டன. இல்லை அவை தழும்புகள்தான், ஆனால் திரிசூல முத்திரைகளாகத் தென்பட்டன. அந்த நாள் அவனுக்கு நினைவிருக்கிறது,  மோதிரங்கள் கொண்ட  மடக்கிய கைகள் அவன் முகத்தையே குறிவைத்துத் தாக்கின, ஒன்றைத் தடுக்கும் போது இன்னொன்று. நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது  அங்கிருந்த அட்வோகேட் இருவரின் கைகளில் அதே மோதிரங்களைப் பார்த்தான். விரலால் தழும்புகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.  ஐ ஹேவ் மை மதர் லேண்ட், ஐ வில் மேக் மை மதர் லேண்ட்,  திஸிஸ் மை லேண்ட், மை மதர் லேண்ட் ஃபார் எவர்.
14.
ஆரண்யஜா வேறு ஒரு மாநிலத்தில் அமைப்பு வேலைகளுக்குச் செல்வதாகச் சொன்னார். எந்தப் பகுதி என்பதைச் சொல்லவில்லை.  நீலம் தலையில் காயம் பட்டு ஆறிய பின் அதிகம் வெளியே வருவதில்லை. தலைமுடியை நீக்கியபின் அவர் உருவம் மாறியிருந்தது. அடர்த்தியாய் வளர்ந்திருந்த குறுமுடிக்குள் இரண்டு தழும்புகள் மறைந்திருந்தன. எ சிட்டி வித்தவுட் ஹோம் மட்டும் இருந்திருந்தால் இது எதுவும் நடந்திருக்காது நீலம்ஜீ என்னால்தான் இத்தனை வலிகள். வித்தவுட் லேண்ட்தான் அவர்களை அதிகம் கோபப்படுத்தியது. அப்படியென்றால் அதுதானே உண்மையானது எலியா? அவன் நீலத்தை உற்றுப் பார்த்தான். பக்கத்தில் உட்கார வைத்து முகத்தின் தழும்புகளைத் தடவிப்பார்த்தார். அடுத்த டிரீட்மெண்ட் இருபத்து நாளாம் தேதி போகணும். இன்னும் சில மாசங்களில் உன் முகத்தைப் பழையபடி பாக்கணும் ஏலியா. அவன் கண்களை மூடிக்கொண்டான்.  இனிமே உனக்குக் குறும்படமெல்லாம் கிடையாது, முழு படம்தான், பியுட்ச்சர் ஃபில்ம். அவன் கண்களைத் திறந்தான். நீ படம் செய்யவேண்டும் ஏலியா. எழுது, ஏதாவது செய்யலாம். நீலம் எதையும் பேச்சுக்குச் சொல்கிறவர் இல்லை. அவருடைய நண்பர்கள் வட்டம் பெரியது.
15.
அந்தத் தொகுதிகளை முழுமையாகப் படிக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. படிக்கப் படிக்க அவனுடைய மொழி மாறிக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது. அவருடைய  பழைய பதிப்புகளையும் தேடிப் படிக்கத் தொடங்கினான்.  அம்மாவிடம் சொல்ல வேண்டும். அவன் சில கட்டுரைகளைத் தமிழில் எழுதி வைக்கத் தொடங்கினான். நூலின் பழைய பதிப்பில் அந்தப் பக்கத்தைப் பார்த்தான். “தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தில் பிறந்து தெய்வபக்தி, அறப்பண்பு இவற்றால் யாரைவிடவும் உயர்நிலையை எய்திய   நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா இவர்களின் நினைவுக்கு.”  பெய்டி, விர்ட்சு இந்தச் சொற்களைத் தமிழில் சொல்லும்போது அவனுக்கு உறுத்தலாக இருந்தது. பாபாசகேப் ஏன் இவர்களை உயர்நிலை அடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்? எனக்கென ஒரு தாய்நாடு இல்லை என்று வருந்திய அவர் சொல்லும் பக்தி, அறம் என்ற சொற்களுக்கு என்ன அர்த்தம்?
நந்தனார் கதை அவனுக்குத் தெரியும். நந்தனை எரித்தவர்கள் என்று அம்மா சில கூட்டங்களில் பேசிக் கேட்டிருக்கிறான். ரவிதாஸ், சொக்கமேளா இருவரும் இசைமரபை உருவாக்கிப்  பெருமை அடைந்தவர்கள்.  ஆனால் நந்தனார் எரிக்கப்பட்டவர், எதற்காக எரிக்கப்பட்டார்? எரிக்கப்பட்ட ஒருவர் எப்படி உயர்நிலை அடையமுடியும்?  உன்னுடைய முகம் பங்கியைப் போலவோ,  சம்மாரைப் போலவோ, மகாரைப் போலவோ இல்லையே, எப்படியடா உன்னைத்     தலித் என்கிறாய்?  முகத்தில் தாக்கியபோது அவர்கள்  கேட்டது காதில் ஒலித்தது. அவன் விரல்கள் தானாகத் தழும்புகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. இது எனது தாய்நாடு, அதை நான் அடைந்தே தீருவேன். வரிகள் மீண்டும், மீண்டும் உள்ளே ஓடின. கட்டுரையின் மொழிபெயர்ப்பை அம்மாவுக்கு மெயிலில் அனுப்பியபோது அவனுடைய மனம் லேசாகியிருந்தது.
திரைக்கு முன்பாக ஒரு கதை                                   
சாம்பலாய் மீந்தவர்களின் சரித்திரமா அல்லது சாம்பலாகாமல் மீந்து நிற்பவர்களின் சரித்திரமா? இப்படி நினைத்துப் பார்ப்பதே துயரமாக இல்லையா? துயரமும் வலியும் மட்டுமாக  வாழ்க்கையை நான் நினைவில் கொண்டால் நான் அதிலிருந்து எப்படி வெளியேற முடியும், அதற்கெதிராக நான் எப்படிப் போராட முடியும். துயரம் கொண்ட மனம் பலமற்றது, அது வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தில் சிக்கிக்கொள்கிறது.  துயரம் பற்றிய நினைவை ஓயாமல் சுமப்பது எனக்கு இரட்டைத் தண்டனையில்லையா? அதிலிருந்து விடுபடுவதுதான் எனது வாழ்க்கை என்றால் சாகும் வரை எங்கள் ஒவ்வொருவரின் வாழ்வும் போராட்டம் மட்டும்தானா? போராட்டம் மட்டும் இல்லை, அது போராட்டத்தினூடான இன்பம், போராடுவதின் இன்பம் என்று சொல்லலாமா? போராடத் தெரிந்ததால் என் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பத்திற்கானதாக மாறிவிடுகிறது என்பதா? போராட்டத்திற்கான என் ஆற்றல்தான் எனது அடையாளமாக மாறிவிடுகிறதா? போராடத் தெரிந்த என்னை யாரும் அடிமைப்படுத்திவிடமுடியாது என்று அறிவிப்பதுதான் என் வாழ்வா? போராட மறுத்தால் நான் இல்லாமல் போகிறேனா? போராட்டத்தை எனக்கு அளித்துவிட்டு தம் வாழ்வை அவர்கள் கொண்டாட்டமாவே வைத்துக்கொண்டிருப்பதை நான் விலகிநின்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதானா?
எங்களிடமிருந்து எதனைப் பறித்துக்கொள்ள நினைக்கிறீர்கள் பகைவர்களே? எங்கள் மண்ணை, எங்கள் ஊரை, எங்கள் வீட்டை, எங்கள் உணவை, எங்கள் சுவையை, எங்கள் சிரிப்பை, எங்கள் ஆட்டத்தை, எங்கள் பாடலை, எங்கள் இசையை, கொண்டாட்டத்தை, எங்கள் ஆசைகளையெல்லாம்தானே?   எதையெல்லாம் எங்களுக்குத் தடைசெய்கிறீர்கள்? எங்கள் இன்பங்களையும் எங்களுக்குச் சொந்தமான துன்பங்களையும்தானே?  நாங்கள் வெளியே போய்விடவும் கூடாது, உள்ளே நுழைந்துவிடவும் கூடாது.  நீங்கள் ஒதுக்கிய இடத்தில் நாங்கள் உயிர் வாழ்ந்து கிடக்கவேண்டும்.
நாங்கள் என்றால் உங்களுக்கு யாராகத் தெரிகிறோம்? நீங்கள் என்று எதைச் சொல்லிக்கொள்கிறீர்கள்?  நான் எதுவோ, அதுவாக நீங்கள் இல்லை என்பதுதான் உங்கள் அடையாளம் இல்லையா? நான் எதுவாக இருக்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் எதுவாக ஆக நினைக்கிறேனோ அதுவாக ஆவதை தடுப்பதுதான் உங்கள் அடையாளம் இல்லையா? எதுவாக நான் இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதுவாக நான் இல்லாமல் போவதுதான் உங்களை நான் எதிர்ப்பதற்கான முதல் அடி. உள்ளே நுழைய வேண்டும், நீங்கள் மூடிவைத்திருக்கும் கதவுகளையெல்லாம் திறந்துகொண்டு உள்ளே நுழையவேண்டும். விசைப்பலகையில் விரல்கள் அமிழ, தமிழில் எழுத்தாக்கிக்கொண்டே சென்றான். அவன் தமிழில் இதுவரை இத்தனை வாக்கியங்களை எழுதியதில்லை. அம்மாவுக்குச் சில வரிகள் அனுப்புவதோடு சரி. இப்பொழுது அவனால் எழுத முடிகிறது.
அவன் தன் திரைக்கதையை உருவாக்க உட்காரும்போதெல்லாம் இப்படித் திரையில் எதையாவது எழுதிக்கொண்டே செல்கிறான். இனியும் இப்படியே போக முடியாது. நந்தன் கதையைத்தான் படமாக்க வேண்டும் என்று ஏன் அவனுக்குத் தோன்றியது. ஏன் அவன் மனம் அதையே சுற்றிவருகிறது. இதனைச் செய்து முடித்த பின்தான் மற்ற எதையும் செய்யமுடியும் என்று தலைக்குள் முணகிக்கொண்டிருக்கும் குரல் யாருடையது.
திரைக்கதை
நந்தனார் மட்டும் இன்றி தில்லை வெட்டியான், பெற்றான் சாம்பான் என்ற பெயர்களும் ஏன் மக்கள் வழக்கில் இணைந்துள்ளனர்.  இவர்கள் மூவருமே தில்லைவனம் என்கிற சிதம்பரம் கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன. மூவருமே தில்லையம்பதியில் முக்தியடைந்தவர்கள் என்கிறார்கள். மூவரும்  வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் மூவருமே தில்லையின் நடனநாயகனை கண்களால் காணப் பேராவல் கொண்டவர்கள். சபைக்குள் நுழைந்தே தீருவோம் என்று சங்கல்பம் கொண்டவர்கள். புலையனாய்ப் பிறந்தாய் புறத்தே இரு என்று நிறுத்திய சனாதன, சத்திரிய கொலைவாளுக்கும் அஞ்சாமல்  ஆடல்வல்லான் அம்பலவாணன்தன் அன்பர் யாம் என்று அறிவித்த பக்தர்கள்.
 அகிலமெல்லாம் படைத்த அம்மையப்பனின் ஆக்கல், காத்தல், அருளல், அழித்தல் விளையாட்டில் புலையரை மட்டும் புறத்தே விடுத்தானோ என உள்ளம் பதைக்கக் கேட்டவர்கள். இவர்கள் தனியர்களாக இருந்திருந்தால் எரித்துச் சாம்பலாக்கி சுடலைப்பொடியாக கரைத்துவிட்டிருப்பார்கள். இவர்கள்பின் பெரும் மக்கள் கூட்டம். அன்பே சிவமென்று அறிந்தவர் நாங்கள், அன்பைச் சிவமென்று அணைந்தவர் நாங்கள் அன்பும் சிவமும்  ஆலயத்தில் அடங்குமென்றால் அன்பைச் சிவமாக்கி அணைந்திருப்போமே எனக் குரலெழுப்பித் திரண்டவர்கள்.
எத்தனை நூற்றாண்டுப் போராட்டம் அது?  தஞ்சை மண்ணில், பொன்னிவள நாட்டில்தான் இது நடந்திருக்கிறது. தில்லை வெறும் கோயிலில்லையோ அது மண்ணைப் பொன்னாக்கிய மக்களின் பெருஞ்சபைபோ! அடக்க அடக்க அமிழாமல் எழுந்து உரிமைக்குரலை எழுப்பிய மக்கள் அங்குதான் இருந்திருக்க வேண்டும். சிதம்பரத்தின் ரகசியங்களில் இதுதான் முதலாவதோ! எரித்தும், புதைத்தும் அடங்காத மக்களுக்கு ஏதோ ஒரு காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிதான் நாளைப்போகலாம் என்ற நயவஞ்சகச் சொல்லாக மாறியதோ! நாளைப்போவர் என்ற பெயருடன் தம் வாழ்நாளைக் கழித்த மக்களின் உருவம்தான் நந்தனாக மாறியதோ! திருநாளைப்போவாரைத் தீயழித்த கதையை வேறு எங்கு போய் கேட்பது.
இல்லை, நந்தன் என்ற பெயர் அதற்கும் முன்னே பெரிய ஒரு வரலாற்றின் மிச்சமாக இருந்திருக்கவேண்டும். களப்பிரர்காலம் எனக் கதைகளில் சொல்லப்படும் ஒரு காலத்தில் வைதிகம் அடக்கி, வர்ணாச்சாரம் விலக்கி ஒற்றுமெய் அறம் செய்த ஒரு அரசன்தான் நந்தன் என்று சொல்லலாம் இல்லையா? அயோத்திதாசர் நந்தனை விம்பசாரன், உதையணன், காளகூடன், அசோகன், சந்திரகுப்தன் போல் நீதி வழுவா நெறிமுறையில் நின்ற அரசன் என்று சொல்லுவது எத்துனை பெரிய உள்மெயின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது!  புனல் நாட்டின் கிழக்கே வாதவூர் என்ற நாட்டின் அரசனாம் நந்தனை போராலும் படையாலும் வெல்ல முடியாத வைதிகக் கூட்டம் தில்லைக் காட்டின் நடுவில் சிதம்பச்சூத்திரம் நாட்டி வஞ்சனையாகக் கொன்றதுடன் அங்கே தமது நகரையும் நிருவி அதனை அடுத்து வாழ்ந்த மக்களையெல்லாம் வேளாண் அடிமைகளாக்கிக்கொண்ட நீண்ட வரலாறு அதன் ரகசியங்களில் ஒன்றா?  புத்த தன்மத்தை அழிக்கவும் பொய்நெறியாம் வைதீகம் தழைக்கவும் நடத்தப்பட்ட போர்களில் ஒன்றைத்தான் நந்தன் என்ற பெயர் குறிப்பிட்டுச் செல்கிறதா!
இதிலிருந்து அவன் தன் கதையை உருவாக்க நான்கு நாட்களைச் செலவிட்டான். ஒரு இரவில் அது முடியாது என்பதை உணர்ந்தான். இது ஒரு மெகாபட்ஜெட் படமாகத்தான் அமையமுடியும். நாடகக் கதையாக இதை எழுதலாம். ஆனால் திரையில்  டிஜிட்டல் அனிமேஷன் இல்லாமல் இதை உருவாக்க முடியாது. அதற்கான முதலீட்டை இப்போது நினைத்துப்பார்க்கவும் முடியாது. அவன் தன் திரைக்கதையை மாற்றி எழுதத் தொடங்கினான்.
புலையனாய்ப் பிறந்தும் பொய்யற்ற பக்தியில்
கலைமதி சூடியோன் காதலால் கனிந்தான்
திலைநகர் மன்றத் தேவனின் கருணை
தலைப்பட தணலின் பொய்கையில் மூழ்கி
நிலைப்படு நேயனாய் மெய்யுரு புனைந்தான்
அலைப்படும் உடலம் அழித்து சோதியாய்
ஆலவாய் அமுதன் அடிசேர்ந்தானே!
 கதையைப் பற்றிய ஒரு காட்சியை அவன் அந்த ஏட்டில் கண்டான். புலையனாய்ப் பிறந்தாலும் பக்தி செய்வது அதிசயமா. பக்தி புலையர்களுக்கு வாய்க்காது என்றுதானே திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. பறையனாய்ப் பிறந்தவன் பக்தி செயலாகுமோ மறைகளின் நாதனை மனம்கொளல் வாய்க்குமோ. எரிந்த பின் எப்படி அவர் திருநாளைப் போவாராய்  மறைமுனிவர் ஆகினார்.
தழல் புகுந்து உடல் அழித்து தன் நாதனைச் சேர நந்தனுக்கு மட்டும்தான் ஆகும். புலைப்பாடியில் பிறந்த நந்தன் மாசுடம்பு விடத் தீயில் மஞ்சனஞ்செய்து அருளிய கதையை அப்படியே சொல்லிப்பார்த்தால் என்ன? ஆடல் வல்லான் அம்பலவாணன்தன் அருள்வேண்டி ஏங்கும் சிறுவனாய் நந்தன் திருப்பங்கூர் செல்லுவதும் பிறகு சிதம்பரம் செல்லுவதும் காட்சியில் அமையாதா என்ன?
பொன்னம்பலனைத் தன் ஊண் உடம்புடன் அணுகமுடியாது என்பதால் தொலைவில் நின்றே தொழுது அழும் நந்தனைத் திரையில் காட்சியாக்க முடியாதா என்ன? நடராசனை ஒரு முறையேனும் காணாமல் ஆதனூர் திரும்பேன் எனத் தில்லை நகரின் புறத்தே அவன் பித்தம் கொண்டு பாடித்திரிவதை திரையில் காட்டினால்தான் என்ன? அவனால் அதற்கு மேல் சிந்திக்கமுடியவில்லை.
 நந்தனார் என்ற ஒரு படம் முதலில் எடுக்கப்பட்டதும் பிறகு சுந்தராம்பாள் அம்மையார் பாடிநடித்த பக்த நந்தனார்  எடுக்கப்பட்டதும்,  தண்டபாணி தேசிகர் நந்தனாக நடித்த ஒரு படம் இருப்பதும் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்தின. பத்து ஆண்டுக்குள் மூன்று நந்தன் படங்கள். அதற்கும் முன்பு கோபாலகிருஷ்ண பாரதி பாடிப்பரப்பிய திருநாளைப்போவாரென்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழர்களுக்கு எதற்கு பறையனாம் நந்தனின் சரித்திரமும் கீர்த்தனையும். பறையனாய்ப் பிறந்தாலும் பரகதிதேடலாம்  உறுதி மாத்திரம் வேண்டும். என்ன உறுதி அது? பறையனாய்ப் பிறந்தாலும், பறையனாய்ப் பிறந்தாலும்!  அவன் உறக்கத்தில் ஓயாமல் அது ஒலித்துக்கொண்டே இருந்தது. ஹி இஸ் எ எஸ்சி ஸ்டுடண்ட் பட் நாட் லைக் அதர்ஸ்!  ஐ காண்ட் பிளிவ் திஸ், யு குட் ரைட் திஸ் ஆர்டிகிள்! நந்தன் சரிதம் உரைக்கவும் இனிமை நாதன் புகழை இசைக்கவும் பெருமை. இத்தனை நாளுமிங்கே இல்லாத வார்த்தையைக் கற்று வந்து மென்ன கார்யமோ! அவன் அந்த ஃபைலை ஒரே சொடுக்கில் டெலிட் செய்துவிட்டு இரண்டு மணி நேரம் ஊர் முழுக்க அலைந்தான்.
பிற்பகலில் ஒரு அழைப்பு,  நீண்ட நாட்களாகப் பார்க்காத ஒரு நண்பனிடமிருந்து. இளையராஜா இரண்டு டிக்கெட் இருக்கு வரியா? கபாலி படம் போகிறேன்.  அவன் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். தியேட்டரில் படம் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. டெல்லியில் வணிக வளாக அரங்கம் எதற்கும் அவன் அதுவரைப் போனதில்லை.  இலவச அனுமதி கொண்ட  திரைப்பட விழாக்களும், சிறப்புக் காட்சிகளும் என முடங்கிப்போயிருந்தன அவனது சினிமா உலகம். வெளி உலகத்தைப் பார்க்கத்தான் வேண்டும். அவன் அடுத்த ஒரு மணிநேரத்தில் அங்கே இருந்தான். முதல் நாளில் இரண்டாம் காட்சி. தெரிந்த நடிகர், தெரிந்த கதை, தெரிந்த துப்பாக்கிகள், தெரியாத ஒரு பரவசம்.
நண்பனுடன் அறைக்குச் சென்று ஹெனிக்கென் குடித்தான். முகத்தில் கட்டுடன் முடங்கிக்கிடந்த நாட்களில் அவன் மீண்டும் மீண்டும் ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். நீலம்ஜி துப்பாக்கியைக் காட்டும் படம் என்றாலே உடனே மூடிவைத்து விடுவார். ஒருமுறை அவன் ஹெட்போனுடன் சரிந்து படுத்தபடி அந்தப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எதிரே உட்கார்ந்து அவனுடைய கண்களையே  பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த முறை நானும் பார்க்கிறேன் என்றார். ஜாங்கோ அன்செய்னட் நல்ல படமில்லை என்பது அவனது எண்ணம், ஆனால்  வெளியோ போகமுடியாமல் அடைந்து கிடந்த நாட்களில் தினம் ஒருமுறை அந்தப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கபாலியைப் பார்த்தபோது அந்தப் படம்தான் நினைவுக்கு வந்தது. ஆனால் அதுவல்ல இது. இது வேறு ஒன்று. அவனை மீறி அந்தப்படம் பற்றிய விவாதங்களைக் கவனிக்கத்தொடங்கினான். அவனுக்கு தன்னுடைய படம் நினைவுக்கு வந்தது. மீண்டும் எழுத உட்கார்ந்தான்.
கொள்ளிடம் பகுதியில் அமைந்த ஆதனூர் என்ற சாம்பவர் கிராமத்தில் பிறந்த நந்தன் தன்னுடைய சனங்கள் அனைவரையும் போல பாடலும், ஆடலும் அறிந்தவன். காலை முதல் மாலை வரை எடுத்ததெற்கெல்லாம் பாட்டு, இருக்கும் இடத்திலேயே ஆட்டம் என்று கும்மாளமிட்டபடி காடுகரைகளில் உழைத்து வந்தான். மாலையானால் சிலம்பமும், கொம்பும் களைகட்டும். தன் சோட்டுப் பிள்ளைகளுடன் நள்ளிரவு வரை அடிமுறை வரிசையும் ஆள் தாண்டும் வித்தையுமாக நாள்கள் கழிந்தன. உழைத்த நேரம் போக கள்ளும், கறியுமாக கதைபேசிச் சிரிக்கும் ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் தெருவில் இருக்க சேரியின் குழந்தைகள் வாய்க்கால் வரப்புகளில் சுற்றி வருவார்கள்.
நந்தனும் அவன் கூட்டாளிகளும் சிலம்பமும் வித்தையும் கற்பதை அறிந்த சாதிக்கூட்டம் இனி ஓய்வு என்பதே இருக்கக்கூடாது என்று ஒரு திட்டம் போட்டார்கள். அக்கம் பக்கத்துச் சிவாலயங்களில் குளம் வெட்டும் வேலையைத் தொடங்கி வைத்தனர். வயலில் உழைத்த நேரம் போக சிவனருள் பெற திருப்பணி செய்யவேண்டும் என்று சட்டம் போட்டனர். ஓயாத உழைப்பில் சிக்கிக்கொண்டனர் சேரியின் மக்கள். திருப்புங்கூர் சிவாலயத்தின் குளம் வெட்டச் சென்ற நந்தனும் அவன் கூட்டாளிகளும் அத்தனை பெரிய குளத்தை வெட்டி நீரையும் நிரப்பினர். இரவும் பகலும் உழைத்து கோயிலைச் சுற்றிய இடங்களை நந்தவனமாக்கினர். கோயில் திறப்பும் பூசையும் தொடங்க நாளைக் குறித்தபின் ஆதனூர்க்காரர்களை அனுப்பி வைக்க வந்தனர் சாதிக்கூட்டத்தினர். நந்தன் முன் நின்றான். நாளை இருந்து நாங்களும் லோகநாதனை கண்ணாரக்கண்டே செல்வோம் என்றான். அந்தணரும், அந்த ஊர்ச் சாதிகளும் ஆத்திரத்திரத்தில் எழுந்துநிற்க அனுபவப்பட்ட பெரியவர்கள் அவர்களை அடக்கினார்கள்.  குளத்திற்கு அப்புறம் நின்று கும்பிட்டுவிட்டுப் போங்கள் என்றார்கள். நந்தனும் நண்பர்களும் சிவனைத் தரிசித்து சீவிதம் ஈடேறும் என்றால் நாமும் காணலாம் நற்கதியடையலாம் எனக் காத்திருந்தார்கள். பூசைகள் தொடங்கிய அன்று தூரத்தில் நின்று கைகூப்பிய ஆதனூர்க்காரர்கள் ஒரு பெருங்கல்லால் வாயிலை அடைத்திருப்பது கண்டார்கள். கையிலாய நாதனை கல் வைத்து அடைத்து காணாமல் செய்தார்களே எனக் கலங்கிய நண்பர்களை கையமர்த்திய நந்தன் இரவு வரட்டும் ஈசனைக் காணலாம் என்று ஆறுதல் கூறினான். ஊர் அடங்கிய பொழுதில் உள்ளே நுழைந்த நந்தனும் சிலரும் கற்சிலையைப் பெயர்த்து நகர்த்தி வைத்து வந்தார்கள். மறுநாள் கலை வாசல் திறந்தததும் ஆதனூர்காரர்கள் சிவசிவ எனக் கைகூப்பித் தொழுதார்கள். யார் செய்த வேலை என்று ஆங்காரம் செய்த சாதிக்கூட்டம் ஆதனூர் சாதிகளுக்கு ஆள்மூலம் சேதிசொல்லி அனுப்பினார்கள். சேரிகள் ஒருபுறம், சாதிகள் ஒருபுறம் என நின்ற கூட்டத்தில் இனி ஆலய வேலை கிடையாது என முடிவு செய்யப்பட்டது. நந்தன் சொன்னான் எல்லா கோயிலிலும் எங்களுக்குப் பங்கு உண்டு. அகிலமனைத்தையும் படைத்த ஈசன் எங்கள் அத்தனை பேரையும் படைக்காமல் விட்டானா. நாதன் உள்ளிருந்து நம்மை இயக்குகிறான் நாலு வர்ணம், அஞ்சு வர்ணம் பேதங்கள் சொன்னது யார். ஈசன் அருளில் பங்கில்லை என்றால் பாசனமும் கிடையாது பாத்தி கட்டும் கிடையாது. சேரிகள் எங்கும் இதே பேச்சு. ஊருக்கு ஊர் கொலை வெறிக்கூச்சல். தில்லைவனத்து பெருங்கோயிலில் நுழைந்துவிட்டால் இல்லை எமக்கு ஒரு குறையும் என நந்தனும் தோழர்களும் தெருவெங்கும் சொல்லிச் சென்றார்கள். ஆலயத்தில் பங்கு, ஆற்றுநீரில் பங்கு, கோயிலில் பங்கு குளத்தில் பங்கு, மகேசனுக்குப் படையலிட மாவடையில் சரிபங்கு. நந்தனின் அழைப்பு நாலுதிக்கும் பரவியது. பொன்னம்பலத்திற்கு போகாமல் இனி புஞ்சை வேலை நடக்காது, சிதம்பரத்தில் வணங்காமல் செடிகொடியும் பூக்காது. தில்லையில் நுழைவதற்கு நாள் குறித்து எல்லையில் குவிந்தது பெருங்கூட்டம். இத்தனை காலம் இருந்தது போல இருந்துவிடமுடியாது. எங்களுக்கும் உண்டு எம்பிரான் அருள்.  நந்தனுடன் ஒரு கூட்டம், அதனை அழித்துவிட்டால் கேட்க நாதியில்லை, கேள்வி கேட்க ஆளில்லை என்று சாதிச் சபைகள் பேசிக்கொண்டன. வாக்கினால் அழிக்கலாம் என்று வகைசெய்த கூட்டம் முதல் கட்டமாக நந்தனும் அவனுடைய கூட்டாளிகளும் தெற்கு வாசல் வெளியே நின்று வணங்கலாம் பிறகு நாளைக்கு ஒரு கூட்டம், மறுநாளைக்கு ஒரு கூட்டம் இப்படியே திருக்கூட்டம் ஆகட்டும் என்று அறிவிப்பு செய்தார்கள்.
நந்தனும் அவன் கூட்டாளிகளும் தெற்குவாசல் வந்து நின்று தில்லைநாதனைப் பாடிநின்றார்கள். நகரத்தின் கிளைத்தெருக்கள் வழியாக மெல்ல மெல்ல சேர்ந்த பெருங்கூட்டம் சோதிநாதனைச் சுடரொளி பாதனை தொழுவோம் என்று சொல்லி நாலுதிக்கிலும் பெருந்தீயை மூட்டியது. பாடல் ஒலி நின்று பதறும் குரல் எழுந்து அடங்கியது. எல்லையில் காத்திருந்த சேரிப் பெருமக்கள் என்ன ஆனது என்று தெரியாமல் நின்றார்கள். சோதியில் கலந்தார்கள் உங்கள் சுற்றத்தார், மீதியுள்ள பேர்கள் நாளை வரலாம்காண் என்ற அறிவிப்பில் குலைபதறி நின்றது குடியானவப் பெருங்கூட்டம்.
நந்தன் முனிவனான்,  நந்திபோல் ஈசனுக்குத் துணைவனான். நந்தனுடன் வந்தோரும் நாதனுக்கு படையலானார். அழுவோரும் அலறுவோரும் அய்யோ என் பிள்ளை என்று அழற்றுவோரும் அம்மா எங்கே அண்ணன் என்று புலம்புவோரும் ஆறாத துயரத்தில் நடுங்குவோரும் அங்கேயே நின்று கதறுவோரும் என கீழைநாடு முழுக்கக் கேட்டது அவல ஓசை. ஈசன் அடிசேர்ந்தார்கள் இதற்கு ஏன் ஒப்பாரி என்றார்கள் மன்னன் அனுப்பிய ஆட்கள்.  நந்தனைப் போல ஒரு பக்தன் நாம் கண்டதில்லை என பாடல் புனைந்தார்கள் பாவலர்கள். காலம் நடந்தபாதை கண்ணீரை மறைத்தது. தில்லை வெட்டியானும் பெற்றான் சாம்பானும் நந்தனைப் போலத்தான் மறைந்தார்கள் என்று சேரியின் கதைகள் சொல்லிச் சென்றன.
எழுதியதைக் காட்சிகளாகப் பிரித்து எழுதினான். இரண்டு பகல் இரண்டு இரவு. மீண்டும் ஒரு முறை படித்தான். காட்சிகள் கலங்கின. இல்லை, இது இப்படியில்லை. நந்தன் கதையை மறந்துவிட்டு வேறு ஒன்று செய்தால் என்ன? உபாலி, அதுதான், அதைத்தான் எழுதவேண்டும்.
உபாலி கதை தெரியுமா அம்மா. உபாலி மலேசியாவில் குடியேறிய ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தஞ்சைப்பகுதியில் இருந்து இரண்டு தலைமுறைக்கு முன் குடியேறி தோட்டத்தொழிலாளர்கள் ஆன மக்களில் ஒரு குடும்பம் அது. அப்பாவுக்கு கிடைக்காத கல்வி உபாலிக்குக் கிடைத்தது. உலக அறிவும் அரசியல் அறிவும் சேர உபாலி தோட்டத்தொழிலாளர்களின் தலைவராக மாறுகிறார். சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமின்றி உழைப்பால் சுரண்டப்படும் மக்களுக்காகவும் குரலெழுப்பும் தலைவராக மாறுகிறார். முதலாளிகளும், அவர்களின் அடியாட்களும் நேரடியாக மோத, ஆயுதங்களைப் பழகவேண்டிய நிலை ஏற்படுகிறது. பொன்னி என்ற தோழருடன் ஏற்பட்ட நட்பு அவர்களை அரசியலிலும் வாழ்க்கையிலும் இணைக்கிறது. தினம் ஒரு தாக்குதலும் தப்பித்தலுமாக வாழ்க்கை முழுக்க அரசியலும் மக்கள் இயக்கமுமாக மாறுகிறது. அவரைத் தீர்த்துக் கட்ட திட்டம் போடுகிறது முதலாளிகள் கும்பல், சாதிகெட்ட ஒருவன் தலைவனாம் அவன் தலையை எடுக்கவேண்டும் என்று பேசிக்கொள்கிறது அடியாட்களின் கும்பல்.
அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற தொழிலாளர் குடியிருப்புகளில் பள்ளிக்கூடம் கட்டுவது பற்றி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள் எதிரிக் கூட்டத்தார். உபாலியும் அவர் தோழியும் தன் தோழர்களுடன் அங்கு செல்ல கொலைகாரர்கள் பாய்கிறார்கள். மோதல், தாக்குதல் எதிர்த்தாக்குதல் எனச் சிலர் இறக்கிறார்கள். உபாலிதான் அந்தக் கொலைகளைச் செய்தார் என்று அவரைச் சிறையில் அடைக்கிறார்கள். அவருடைய மனைவி கொல்லப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. இருபத்தைந்து வருடம் கழித்து அவர் சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவர் சிறையில் இருந்து வெளிவரும் காட்சியில்தான் அம்மா படம் தொடங்கவேண்டும். அவர் வெளிவந்து புதிய இளைஞர்களுடன் தற்கால அரசியல் பற்றிப் பேசும்போதுதான் அவருடைய கதை ஃபிளாஷ்பேக்கில் வருகிறது. அந்த இடத்திலிருந்து கதை தற்காலத்திற்கு வருகிறது.
உபாலிக்கு தன் உயிர்த்துணையான தோழி இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அவரைத் தன் தோழர்களுடன் சேர்ந்து தேடுகிறார். அந்தத் தேடுதல்தான் பிற்பகுதி. ஒரு கட்டத்தில் அவரை விரோதிகள் தமிழ் நாட்டிற்குக் கடத்திச் சென்றது தெரியவருகிறது. அவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாட்டில் அவர் தன் பழைய தோழர்களைச் சந்திக்கிறார். அவர்கள் வழியாகத் தன் தோழியைத் தேடுகிறார். அவர் மனைவி மனம் குலைந்த நிலையில் ஒரு பண்ணையார் வீட்டில் வேலைசெய்துகொண்டிருப்பது தெரியவருகிறது. அவரை மீட்கும் முயற்சிக்கிடையே தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் தன் சொந்தக்காரர்களில் ஒருவரின் மறைவுச் செய்தி கேட்டு அங்கே செல்கிறார். இறுதி ஊர்வலத்தைத் தெருவழி எடுத்துச் செல்லக்கூடாது என்று சுற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்து அதனைத் தடுத்து ஊர்த்தெருவழி எடுத்துச் செல்கிறார். அதில் வன்முறை நடக்க தான் முன்னின்று அவர்களை விரட்டியடித்துவிட்டு ஊர்க்காரர்கள் இடுகாட்டிலேயே அடக்கம் செய்கிறார். அது பெரிய வன்முறையாக வெடிக்கிறது. தலித் தலைவர்கள் அவரை வந்து சந்திக்க அவருடைய அரசியல் வாழ்க்கை பற்றித் தெரியவருகிறது. அவர்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கிறார்.
அவர் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்பதைக் காரணம் காட்டி எதிரிகள் அவரைச் சிறைப்பிடித்து அனுப்ப திட்டம் போடுகின்றனர். தன் மனைவியிருக்கும் இடத்தை அறிந்து அவரை மீட்டுவர அவர் மாறுவேடத்தில் செல்கிறார். அவர் அங்கு வருவதை அறிந்து அவரையும் அவர் தோழர்களையும் அழித்துவிட திட்டமிடுகின்றனர் ஆண்டசாதி அடியாட்கள்.  அவர் மனைவியை ஒரு அறையில் அடைத்துவிட்டு அவர் வரட்டும் என வேறு ஒரு இடத்தில் காத்திருக்கின்றனர் நாற்பத்து நான்கு பண்ணையார்களும் சாதிவெறி அடியாட்களும். அதில் மலேசியாவிலிருந்து வந்த சிலரும் இருக்கின்றனர். அவர்கள் திட்டம் அந்தக் கட்டிடத்தை டைம்பாம் வெடிவைத்துத் தகர்ப்பது.
உபாலி தன் திறமையால் வெடிகுண்டின் நேரத்தை ஹைடெக் உதவியுடன் மாற்றிவிட்டு பின்வழியாக தன் தோழியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு தப்பிவிடுகிறார். உள்ளே ஒரு புரஜெக்டர் வழியாக அவருடைய தோழியின் உருவமும் உபாலியின் உருவமும் அணைத்தபடி உட்கார்ந்திருப்பதுபோல  ஏற்பாடு செய்துவிட்டு தூரத்தில் அவரும் அவர் தோழர்களும் வண்டியில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்துவிட்டதைப் பார்த்த எதிரிகள் வெடிகுண்டு நிபுணரை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள்.   வெடிகுண்டு செயலிழந்து இருப்பதையும் உள் அறையில் உபாலியும் மனைவியும் அணைத்தபடி உட்கார்ந்திருப்பதையும் அவன் மொபைலில் சொல்கிறான்.  அவர்கள் அனைவரும் கோபமாக உள்ளே நுழைந்து ஆளுக்கொரு கத்தியால் உபாலியையும் அவர் மனைவியையும் வெட்டுவதற்குப் பாய்கின்றனர். அப்போது  வெடிகுண்டு சப்தம், தூரத்திலிருந்து உபாலியும் அவர் நண்பர்களும் அந்தத் தீப்பிழம்பைப் பார்க்கின்றனர். வண்டிகள் நகர்கின்றன. உபாலியின் மனைவி முதல் முறையாகப் இருபத்து ஏழு வருஷத்திற்குப் பிறகு பேசுகிறார். உபி இன்னைக்கு என்ன தேதி? டிசம்பர் இருபத்தைந்து இரண்டாயிரத்து பதினெட்டு, உபாலி சொல்கிறார். திரும்பிப் பார்க்கும் போது அந்தப் பண்ணைவீடு இன்னும் எரிந்துகொணடிருக்கிறது. படம் முடிகிறது. அம்மா, மலேசியாவிலிருக்கும் ஒருவரை வைத்துதான் இந்தக் கதையை என்னால் சொல்லமுடியும். கதையில் வரும் சம்பவங்கள் கற்பனையே சாதிகளைத் தவிர என்று ஒரு கார்ட் போடலாம் என இருக்கிறேன். அம்மா அது நாற்பத்து நாலுதானே?
அம்மா அவன் மின்னஞ்சலைப் பார்த்து மனம் கலங்கிப்போகிறார். இதுவரை எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது அவனுக்குள் நடந்துகொண்டிருக்கிறது. அவனை மீட்க வேண்டும். நீலம்ஜீயிடம் அம்மா பேசியபோது சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லுகிறார். சிறிய சிகிச்சைதான் முகம் பழையபடி ஆகிவிடும் சங்கம்ஜி, பிறகு அவர் உங்களைச் சந்திப்பார், வேறு ஒருவராக இருப்பார். அம்மாவின் தொண்டை கமறுகிறது. நீலம்ஜி சொல்கிறார், பயப்படாதீர்கள் நானும் சில ஆண்டுகள் அப்படி இருந்திருக்கிறேன். இப்போது வேறுமாதிரி. ராஜாவிடம் பேசுங்கள் வேறு ஒரு கதை எழுதச் சொல்லுங்கள்.
அம்மா பேசினார், ராஜா உன் மொழிபெயர்ப்புகள் அருமை. அம்மா ஃபில்ம் லைன் எப்படி!  படிச்சிங்களா? படிச்சேன் ராஜா, இப்போ வந்த ஒரு படத்தை அப்படியே மாத்தி எழுதறது சரியா செல்லம்? அம்மா அப்படி ஒரு முறை இருக்கு, இன்டர்டெக்ஸ்ட். அப்படியே திருப்பிச் சொல்லலாம் அதைக் குறிப்பிட்டே பேசலாம். அதுக்காகத்தான் ஒரு இடத்தில வசனம் வச்சிருக்கேன். “உபாலி எதுக்கும் கபாலியை ஒரு முறை பார்த்துப் பேசலாம், அவர்கிட்ட உதவி கிடைக்கும்.” “கபாலியை நானும் சிறையில இருக்கும்போது சந்திச்சிருக்கேன். திண்டிவனம் பக்கமிருந்து வந்த குடும்பம். நம்ம மக்களோட துயரம் புரிஞ்சவரு. ஆனா அவர் வழி வேறு நம்மவழி வேற, அவருக்கும் இதே போல துயரம் இருக்கு. முடிஞ்சா நாம அவருக்கு உதவி செய்யலாம்.” அம்மாவின் மனம் மீண்டும் கலங்கியது. பதினாறு வருடம் தன் உடனில்லாமல் வளர்ந்த பிள்ளை. இப்பொழுது ஒரு குழந்தை போலப் பேசுவதாகப்பட்டது. அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
 ராஜா, இந்தக் கதை இருக்கட்டும் நந்தன் கதை என்ன ஆனது? அது பிறகுதான்மா. இல்லை ராஜா எனக்கு நந்தன் கதைதான் உன் முதல்படமாக இருக்கவேணும்னு தோணுது. ஏம்மா? அதுலதான் இசை இருக்கு. இசையா? உன் முதல் படம் முழுக்க இசையா இருக்கனும். ரவிதாசர், சொக்கமேளர், நந்தனார் மூன்று பேரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? பக்தியா? இல்லை ராஜா இசை. மூவருமே இசைமேதைகள், கம்போசர்கள், சாகித்ய, வாகேயக்காரர்கள், டெக்னிகலாகச்  சொன்னால் கிராண்ட் மேஸ்டரோ. ரவிதாஸ், சொக்கமேளா சரி, இசைவாணர்கள். ஆனால் நந்தனார்? நந்தனாரும்தான், அதை மறைத்து அவருடைய இசையையும் பாடலையும் இல்லாமலாக்கியதுதான் அந்த நெருப்பு. எப்படியம்மா சொல்கிறாய்?
“விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட்டொலி பரக்கும்.” என்கிறது பெரியபுராணம்.
“புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறையும் கலிக்கும்.” என இசை பற்றிய குறிப்பு தொடர்கிறது.
“பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும் போர்வைத்தோல் விசிவார் என்றினையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட் கார்வத்தினுடன் கோரோசனையும் இவை அளித்துள்ளார்.”
இதனைவிட இப்பகுதியைக் கவனி
 “இவ்வகையால் தந்தொழிலின்
 இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார்”
இதைவிட உறுதியான ஒரு டிரேஸ் கிடைக்காது இளையராஜா. அதனால்தான் அவர் நாயன்மார்களில் இடம்பெற முடிந்தது. ஆனால் அவருடைய இசை நீக்கப்பட்டது, கோவில்களில் அது பாடப்படாமல் தடுக்கப்பட்டது. சொக்கமேளர் கதையும் நந்தனர் கதையும் ஒன்றுபோல இருப்பதைப்பார், இருவருமே பெரும் இசைமேதைகள், ஆனால் வெளியே இருந்துதான் பாடமுடிகிறது. இருவரும் தம் நாதனைக் காணத் தவிக்கின்றனர், ஆனால் உள்ளே நுழையமுடியவில்லை. சொக்கமேளர் தந்திரமாகக் கொல்லப்படுகிறார், சுவர் இடிந்து விழுவதாகக் கதை.
நந்தனார் தீயில் மறைதல் எனக்குக் பல அர்த்தங்களைத் தருகிறது. அவருடைய பாடல்கள் திருமுறைகளில் இல்லாமல் போனது. அவருடைய இசை மரபு தமிழில் மறைக்கப்பட்டது. தீயில் மறைந்த ஒருவரை ஏன் தெய்வநிலை கொண்டவராக பிறரும் நம் மக்களும் கொண்டாட வேண்டும். நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் நந்தன் பல பாடல்கள் கீர்த்தனைகள் பாடும்படி அமைக்கப்பட்டுள்ளதைக் கவனி. மா, எனக்குக் குழப்பமா இருக்கு, ஆனா நீ சொல்வது அதிக அர்த்தம் உடையது, பாபாசாகேப் நந்தனாரை குறிப்பிடும் போது ரவிதாஸ், சொக்கமேளா போல உயர்நிலை அடைந்தவர் என்று சொல்கிறார். குழப்பமா இருக்கு அம்மா! அப்படி படம் செய்ய முடியுமா? முழுக்க இசையா இருக்குமே!  குழப்பம் இல்லை ராஜா, பாலகந்தர்வா பாக்கச் சொன்னியே அதை நானே மூணுமுறை பார்த்தேன். இசைதான் ஆனா, குறிப்பிடத் தகுந்த படம். யோசி ராஜா. அம்மா பிறகு பேசுவதாகச் சொன்னார்.
சில நாட்கள் அதிலேயே உழன்று கிடந்தான் வரலாறு இல்லை, வாய்மொழியும் இல்லை.  இது எனது கதை. நந்தன் ஒரு பேரிசைக் கலைஞன். தன் இடுப்பில் கட்டிய இரும்பு மணி ஓசையையும் கையில் இருந்த இரும்பு வளையத்தைக் கழற்றி எழுப்பும் ஓசையையும் கொண்டு சிறு வயது முதல் இசையை உருவாக்குகிறான். கோயில் தோறும் குளம் வெட்டுதல், தோட்டம் அமைத்தல் என வேலைக்குச் செல்லும் போதெல்லாம் அவன் கேட்ட இசை மனதில் அப்படியே பதிகிறது. அவனால் அதை அப்படியே பாடமுடிகிறது. தாளக்கருவிகளைச் செய்து செய்து புதிய முறை தாளங்களை உருவாக்குகிறான். புதிய பாடல்களை உருவாக்குகிறான். புதிய இசையையும் உருவாக்குகிறான். தன் நண்பர்களுக்கும் வாத்தியங்கள் இசைக்கக் கற்பித்து தினம் இரவுகளில் பெரிய இசைக் கோர்வைகளை உருவாக்குகிறான்.
அவன் இசையில் சேரிமட்டும் இன்றி ஊரும் மயங்கிக் கிடக்கிறது. சாதிக்கூட்டம் என்றாலும் இசையை மறுக்க மனம் இன்றி ஊரில் சிலர் அவன் இசையைக் கேட்டு தேவநாதம் என்கிறார்கள். அவன் கோயில் உள்ள ஊர்களில் எல்லாம் சென்று புறஞ்சேரியில் இருந்தபடி இசையைப் பொழிகிறான். அவன் தில்லையில் இருக்கும் ஆடல்வல்லானுக்காக ஒரு பெரும் இசையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். அதனை நடராசனின் முன்தான் முழுமையாக அளிப்பேன் அதுவே தனது இசையின் பயன் என்று சொல்லி பலநாட்களாகத் தன் குழுவுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறான். அதை அறிந்த அந்தணரும், வருணசாதி அவையோரும் மனக்கடுப்பு அடைகின்றனர். அவன் இசையின் ஒத்திகை தினம் கீதநாதனின் செவியில் அமுதமாய்ப் பாய்கிறது. அந்த முழு இசையையும் முன்னிருந்து கேட்கவும் அதற்கேற்ப நர்த்தனமிடவும் ஏங்கிக்கிடக்கிறான் ஈசன்.
இசை நிகழ்ச்சிக்கான நாள் குறிக்கப்படுகிறது. நந்தனும் இசைக்குழாமும் தில்லையின் எல்லையை அடைகிறார்கள். உள்ளே செல்ல அனுமதியில்லை என ஊர்ச்சாதிப் படை அவர்களைத் தடுக்கிறது. எல்லையிலிருந்து இசையை வழங்கமாட்டேன், எப்படியாயினும் சுடலைநாதன் திருமுன் இருந்துதான் அது புறப்படும் என்று அமர்ந்து விடுகிறான் நந்தன். பகல், இரவு கடந்து நாட்கள் நகர்கின்றன. தாளத்தின் சிறு ஒலியும், யாழ், வீணைகளின் சிறு சிறு ஒத்திகையும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஈசனின் உள்ளம் இருப்புக்கொள்ளாமல் தவிக்கிறது.
உடலும் உள்ளமும் இசையாலும், ஆடலின் அதிர்வாலும் அலையாடிக்கிடக்கிறது. ஒரு இரவு ஈசன் புலைச்சேரி சிறுவன் உருவில் நந்தன் இருக்குமிடம் அடைகின்றான். நந்தனுக்குத் தெரிகிறது வந்திருப்பது லோகநாயகன் என்பது. யாரப்பா நீ என்கிறான். பாலநந்தன் என் பெயர் என்கிறான். ஊர் எது, ஒரு மலைப்பக்கம் என்கிறான். என்ன வேண்டும் என்கிறான்.  தாளமும், கீதமும் என்கிறான். இது இரவு வேளை நாளை கேட்கலாம் என்கிறான் நந்தன். இல்லை இப்போதே என காலை உதறியபடி மத்தளத்தை உதைக்கிறான் பாலநந்தன். அத்தனை மத்தளங்களும் அதிர்கின்றன. யாழை தன் கையால் தள்ளுகிறான் அத்தனை யாழும் நாதம் எழுப்புகின்றன. நந்தன் பாடத் தொடங்குகிறான், இசைக் குழாம் எழுந்து அவரவர் வாத்தியத்தை இசைக்கத் தொடங்க திக்குகள் எல்லாம் இசையால் நிறைகிறது.
பாலநந்தன் ஆடல் பார்வைக்கும் அடங்காமல் எழுகிறது. நகரத்து மாந்தர்களுக்கு ஆலயத்திலிருந்து இசை ஒலிப்பதாகத் தோன்றுகிறது. எல்லோரும் பதைபதைத்து உள்ளே ஓடுகின்றனர். கருவறையில் நாதன் இல்லை, வெறும் இடம், தீபம் மட்டும் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருக்கிறது. நந்தன் செய்த சதி என்று நகரம் முழுக்கப் பேச்சு. ஆளுக்கொரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு எல்லைக்கு ஓடுகின்றனர். இசைக் குழாம் தன் போக்கில் இசைத்துக்கொண்டிருக்கிறது.
நந்தன் யாரையோ பார்த்தபடி பாடிக்கொண்டிருக்கிறான். அவன் முன்னால் யார்? நகரத்துக் கூட்டத்திற்கு ஒன்றும் தோன்றவில்லை, ஏதோ ஒரு சுழல், எதோ ஒரு சுடர், எதோ ஒரு அசைவு. அவர்கள் நந்தனின் இசைக்குழுவை நோக்கி ஆத்திரத்துடன் நகர்கின்றனர். நந்தன் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. அந்தக் கூட்டம் முன் நகர எதிரே பெரும் நெருப்பு நந்தனின் திசையை மறித்து.  யாரும் உள் நுழைய முடியாத பெரும் தீச்சுவர். இசை தொடர தீயின் சுடர்கள் அதற்கேற்ப அசைந்து ஆடுகின்றன.
அஞ்சிய கூட்டம் பின்னகர்ந்து கலைகிறது. ஒவ்வொரு உடலிலும் தீயின் எரிச்சல் படர்கிறது. அவர்கள் சிவசிவா என்றபடி  அங்கிருந்து ஓடுகின்றனர். இசையைக் கேட்க நின்றவர்கள் சிலரின் உடலில் எரிச்சல் மறைகிறது. பொழுது புலர கோயிலில் கூடிய கூட்டம் ஈசன் அற்ற இடத்தைக் கண்டு திகைக்கிறது.
நந்தன் தன் இசைக்குழுவோடு ஆதனூர் செல்கிறான், பாலநந்தன் அவனைத் தொடர்கிறான். இசைக்குழுவினர் கேட்கிறார்கள் என்ன நந்தா யாருடன் பேசிக்கொண்டு வருகிறாய்? அகிலமெலாம் நிறைந்த அன்பன் ஆருயிர்க்குள் புதைந்த  இன்பன்!  போச்சுடா நந்தன் அடுத்த இசைப்பாடலுக்கு அடிபோட்டு விட்டான். அறுவடை முடியட்டும் நந்தா அடுத்த ஒத்திகையைத் தொடங்கலாம் என்கின்றனர் இசைக்குழுவினர்.
விதைக்குள் இருப்பவன், விளைகின்ற  பசைக்குள் இருப்பவன்
கதைக்குள் பொருளாகி காலத்தின் இழையாகிச் சுருள்பவன்
 புதைக்கும் பொழுதிலும் என் உள்ளத்து இசையாகி புவனம் நிறைப்பவன்!
பாலநந்தன் அவன் தோள்மீது இரண்டு காலையும் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொள்கிறான். நந்தன் நடக்கும் போது அவன் தலையைப் பிடித்துக்கொண்டு இப்போதான் தெரியுது எல்லா திசையும் என்கிறான். அம்மாவுக்கு அனுப்பிய கதையின் சுருக்கம் அவனுக்கு மீண்டும் குழப்பத்தையே உருவாக்குகிறது.
அம்மா அழைக்கிறார். ராஜா இதையே செய், திரைக்கதையாக  எழுது. அம்மா எனக்கும் எழுத ஆசைதான், நந்தன் நடந்த பாதை! ஆனால் எனக்கு இரண்டு சிக்கல் உள்ளது? என்ன ராஜா?
 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தர் பெரும் இசைமேதையாக மாறுவது சற்றே இடறுகிது, சரி அதைத் தொன்மமாக உணர்ந்துகொள்ளலாம், இந்தப் படத்திற்கு யார்  இசையமைப்பது? அம்மா சிரிப்பது காதில் கேட்கிறது. இரண்டுக்கும் ஒரே பதில்தான் இளையராஜா. அம்மா மீண்டும் சிரிக்கிறார்.
திரை அணைவதற்கு முன்     
அவன் தனது திரைக்கதையை எழுதி அம்மாவுக்கு அனுப்பியிருந்தான். ஆனால் கதைப் படம் எடுக்கும் ஆசையைத் தள்ளிவைத்து விட்டு அவன் மீண்டும் ஒரு குறும்படம்தான் எடுத்துக்கொண்டிருக்கிறான். இளையராணியின் பிறந்த நாளில் அவர்கள் ஒன்றாக இருந்தார்கள். அம்மா அவனது தழும்பற்ற முகத்தைப் பார்த்த பின் சொன்னார் நான் எழுதிய திரைக்கதையில் இந்த முகமும் இவளுடைய முகம்தான் மாறிமாறிவருகிறது. இசை மட்டும் மாறவில்லை! முதல்முறையாக தயக்கமின்றி அவன் அம்மாவை அணைத்துக் கொண்டான்.

(உயிர் எழுத்து, ஆகஸ்ட் 2017)

தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம்

தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை

பிரேம்

இந்த நிலம் முழுக்க அப்போ காடாக இருந்தது
காடுங்களெல்லாம் எங்க வீடாக இருந்தது
இந்தக் கண்டம் முழுக்கக் கானகம் இருந்தது
கானகம் எங்கும் எங்கள் காலடித் தடங்கள்
இந்தப் பூமி முழுக்க வனமாக இருந்தது
வனங்களெல்லாம் அன்னை மடியாக இருந்தது
இந்த மண்டலம் முழுக்க வனாந்திரம் இருந்தது
வனாந்திரம் எங்கும் எமக்கு வாழ்க்கையிருந்தது
அத்தனைத் திக்கிலும் ஆரண்யம் இருந்தது
ஆரண்யம் அழிந்தபின் யார் எம்மைக் காப்பது.’
ஒரு ஆதிவாசிப்பாடல்

கிளைமுறை கிளத்து படலம்

பலமுறை இந்தப் பத்தியைப் படித்துவிட்டேன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கத் தொடங்கிவிட்டது போல ஒரு உணர்வு. தண்டியா வேறு ஒருத்தியாக மாறிக்கொண்டிருக்கிறாளா? இது இவளாகவே எழுதிய பாடலா, இல்லை நிஜமாகவே அவர்கள் பாடிக்கொண்டு சென்ற பாடலா? அன்று அவள் வந்தவுடன் அது பற்றித்தான் கேட்டேன்.

எந்த மொழியில் அவர்கள் பாடினார்கள் தண்டியா? ‘கோண்டி, முண்டாரி, சந்தாளி, ஹால்பி, தெலுங்கு.’ அத்தனை மொழியிலும் இதே பாடலைப் பாடினார்களா? ‘ஆமாம் இதே போன்ற பாடலைப் பாடினார்கள்.’ அத்தனை மொழியும் உனக்கு எப்படிப் புரிந்தது? ‘கொஞ்சம் புரிந்தது மற்றதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.’ ஒரு ஐநூறு பேர் இருப்பார்களா? காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்த தண்டியா வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை அப்படி ஒரு பார்வையை அவளிடம் கண்டதில்லை. நிதானித்துக் கொண்டவள் ‘ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்’ என்றாள் அழுத்தமாக.

என்னது! டெல்லியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆதிவாசிகளா, எப்படி? ஜந்தர் மந்தர் முழுக்க மக்கள் கூடினாலும் பத்தாயிரம் பேர்தான் இருக்க முடியும். ‘அவர்கள் அங்கு கூடவில்லை, ஊர்வலமாகச் சென்றார்கள், ராம் லீலா மைதானத்தில் கூடினார்கள், பிறகு கலைந்து சென்றார்கள்.’ மீடியாவில் ஒரு தகவலும் இல்லையே?

டெலிவிஷன்காரர்கள் வந்தார்கள், ஒருநாள் முழுக்க படம் பிடித்தார்கள். பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள் அவர்களும் படம் பிடித்தார்கள். ஆனால் செய்தி மட்டும் எதிலும் வரவில்லை, புரபசர் சாப்.’

சில செய்தித்தாள்களில் சிறிய புகைப்படம். ஆதிவாசிகள் நிலம் கேட்டு ஊர்வலம். காட்டுவாசிகளைப் பற்றி நாட்டில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது ஜனாப்?’

தண்டியாவிடம் இருந்து இந்தக் குரலை நான் இப்போதுதான் கேட்கிறேன். சொந்த ரத்தம் உள்ளே பொங்குகிறது போல. அவள் எதுவும் பேசாமல் லாப்டாபை என் பக்கம் திருப்பினாள். ஆய்வுத் திட்டத்தில் உதவியாளர் என்ற வகையில் அவளிடம் நான் தந்திருந்த கனமான ஒரு காட்ஜெட். திரையில் சனக்கூட்டம். ஈட்டி, அம்பு, வில், வாள், கூர் மூங்கில்கள், விதவிதமான தோற்கருவிகள், பல வண்ணங்களில் உடைகள், மணிகள், இறகுகள் கொண்ட தலைப்பாகைள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கைகளில் இந்தி எழுத்து கொண்ட அட்டைகளுடன் நடந்து கொண்டிருந்தார்கள். எங்கள் மண் எங்கள் உரிமை, மலைகளை உடைக்காதே மரங்களை அழிக்காதே, அணைகள் எங்கள் நிலங்களின் சமாதிகள், காடு போனால் வாழ்வு போகும், கனிமம் இல்லை அது கர்ப்பம், நிலம் வழங்கு நீர் தருவோம், வாழவிடு வளம் தருவோம் … சற்றே வால்யூமைக் கூட்ட டோல் முழக்கங்கள், பலவிதமான கோஷங்கள், கும்பலான ஆட்டங்கள். தலைநகரில் இத்தனைப் பெரிய கூட்டம், ஆனால் செய்திகள் இல்லை, அது பற்றிய பேச்சுகள் எதுவும் இல்லை. நான் அன்று ஊரில்தான் இருந்தேன், ஒரு தொலைக்காட்சியிலும் அதுபற்றி ஒரு பட்டிச்செய்திகூட இல்லை.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பிகார், தண்டேவாடா, வங்காளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள் என்று தண்டியாதான் சொன்னாள். ‘இந்திய ஆழ்மனமும் ராமாயணமும்’ என்ற எனது ஆய்வுக்கான தகவல்களை ஆதிவாசிகளிடம் இருந்து திரட்டும் உதவியாளர் என்ற வகையிலும் ‘இந்திய மொழிகளில் ராமாயணம்’ என்ற தலைப்பில் என் வழிகாட்டுதலில் ஆய்வு செய்கிற மாணவி என்ற வகையிலும் அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

பல்வேறு ஆதிவாசி மக்களை ஒரே இடத்தில் சந்தித்துவிடலாம். அடிப்படைத் தகவல்கள் கிடைத்துவிடும், ஒலிப்பதிவு செய்தால் ஏராளமான பதிவுகள் கைக்குள் வந்துவிடும். பிறகு ஒவ்வொரு பகுதியாகக் களப்பணிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். ‘நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்கொள்’ என்றேன். அதற்குப் பிறகு அவளைப் பல நாட்கள் காணவில்லை. தாமோதர் வந்து தகவல்கள் சொன்ன பிறகுதான் அவளுக்கு மெயில் அனுப்பினேன். இரண்டொரு நாட்களில் வந்து முழு ரிப்போர்ட் தருவதாக ஒரு வரி பதில் மட்டும்.

குருஜி, தண்டேவாடா பகுதி ஸ்பெஷல் போலீஸ் போர்ஸ் காம்பில் மாவோயிஸ்டுகள் தாக்குதல், 20 பேர் படுகொலை, 140 பேருக்கு மேல் படுகாயம். எராபோர், காங்கலூர், பசகுடா எங்கும் தொடர்ந்து தாக்குதல். காட்டில் கொரில்லா யுத்தம், தலை நகரில் கோரிக்கை முழக்கம். தண்டகாரண்யத்தை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இந்தியா இனி ஒரு இஞ்ச்கூட முன்னேற முடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் நமக்குக் கொடுத்த கெடு முடிந்துவிடும்.’

செய்தியில் பார்த்தேன் தாமோதர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக மாநில முதலமைச்சர்கள் சொல்கிறார்கள். எத்தனை ஆண்டு கால யுத்தம் இது! இன்றா நேற்றா? மூவாயிரம் ஆண்டுகளாக நடக்கிறது. நாகரிகம் அடைந்த மக்களுக்கும் காட்டுவாசி சனங்களுக்கும் இடையிலான யுத்தம், ரகுவம்ச படைகளுக்கும் ராட்சச குலங்களுக்கும் இடையிலான யுத்தம், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தம், இதனைத் தேவாசுர யுத்தம் என்றுகூட குறிப்பிட்ட காலம் உண்டு.’

எல்லாமே உங்களுக்கு ராமாயணம்தானா டாக்டர் சாப்? எனது நண்பனுடைய பொறுப்பில் இருந்த போலீஸ் ஸ்டேஷனைத் தகர்த்து ஐந்து டெரரிஸ்டுகளை மீட்டிருக்கிறார்கள் நக்ஸல் தீவிரவாதிகள். அவன் ஒரு செயற்கைக் காலுடன் சல்வா ஜூடும் படைக்கு பயிற்சியாளனாக இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்று போனது. உங்களுக்கு இதெல்லாம் ராமாயணம், மகாபாரதம்தானா?’

தாமேதர் ஜீ! இந்திய வாழ்க்கை, அரசியல், சமூகம், மனம் எல்லாம் ராமாயணமகாபாரதத்தில் அடங்கிவிடக்கூடியவை. இவை ஒவ்வொருவருடைய மனதிலும் பதிவு செய்யப்பட்ட திரைக்கதை போல, ஒவ்வொருவரும் அதில் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கிறோம். இந்திய நாடு, பாரத தேசம் என ஒன்று இன்றும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ராமாயணமும் மகாபாரதமும்தான். நம் தேசம் கதையால் இணைக்கப்பட்டது, கதையின் வழியாக இயங்கிக்கொண்டிருப்பது. இந்தக் கதை எவருடைய உள்ளத்தில் படியவில்லையோ அவர்கள் தேசபக்தர்களாக இருப்பதில்லை, தேசச் சத்துருக்களாக மாறிவிடுகின்றனர். ராகவனின் ஜன்மபூமியை மீட்டெடுப்பது எதோ கோயில் மீட்பு என்று நினைத்துக் கொண்டீர்களா பிராமணோத்துமரே, அதுதான் நமது புராதன தேசம்.’ ‘அப்படியென்றால் தண்டேவாடாவில் நடக்கும் யுத்தம் ராம ராஜ்ஜியத்தில் அடங்காதவர்கள் நடத்தும் யுத்தமா?’

தண்டேவாடா என்பது தாண்டக வனம், அதுதான் தண்டகாரண்யம், அதற்கும் அப்பால் ராவணர்கள் பூமி. மூவுலகும் ஆண்ட தசரதச் சக்ரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்த பின்னும் தெற்கு தேசங்களும் மற்ற ஆதிவாசி மண்டலங்களும் அயோத்திக்கு அடங்கியதாக இல்லை, அதனையெல்லாம் தன் ராமராஜ்ஜியத்தின் பகுதியாக அடக்கவே ராம, லக்ஷ்மண யாத்திரை தொடங்கியது. அது முடிய பதினான்கு ஆண்டுகள் ஆனதில்லையா? பிறகுதானே மூவுலகும் ரகுவம்ச ராஜ்ஜியமானது.’

பரதகண்டம் முழுக்க ஒரு மண்டலமாக மாறியதுதானே ராமராஜ்ஜியம். பிறகு எப்படி அதற்குள் அடங்காத ஆதிவாசிகளும் அசுர குலங்களும். ராம பக்தியில் பிறப்பதுதான் ராஜவிசுவாசம் என்று நீங்கள்தானே எனக்கு விளக்கினீர்கள்.’

அதில்தான் ஏதோ சிக்கல், எங்கோ தவறு நடந்திருக்கிறது. ராமாயணத்திற்கு எதிர்க்கதை ஒன்று, ஏதோ ஒரு வடிவில் அது உலவிக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்டுபிடிப்பதற்குத்தான் எனது இத்தனை ஆராய்ச்சியும்.’ ‘ராமன் கதைக்கு மாறான ராவணன் கதை, அதைத்தானே சொல்கிறீர்கள்?’

ராமன்ராவணன் இரண்டு புராணிகமும் பிரம்மாவிஷ்ணுசிவா என்ற திரிமூர்த்தி ஐதீகத்தால் இணைந்துவிடும். இதற்குள் பரத கண்ட புராணிகம் ஒன்றாகக் கலந்துவிடும். தபஸ், யஞ்சம் என்ற வேத மரபுகளும் இக்கதைகளுக்குள் புகுந்துவிடும். ஆனால் இதற்குள் அடங்காத வேறு ஏதோ கதை இருப்பது போலத் தோன்றுகிறது. அதனைக் கண்டறிய வேண்டும் அல்லது அது பரவாமல் தடுக்கவேண்டும்.’ ‘முதல் வேலையை நீங்கள், நீங்கள் செய்யுங்கள், இரண்டாவது வேலையை நாங்கள் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.’ ‘எது என்று தெரிந்தால்தானே பரவாமல் தடுக்க முடியும்?’ ‘அது வரை காத்திருக்கிறோம்.’

சில நாட்களுக்கு முன் நடந்த கட்டுவாசிகள் பேரணியில் சிலபேர் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு தண்டகாரண்யம் எமது என்று கூவிக்கொண்டு போனதைப் பார்த்தேன், அவர்கள் யாருடைய வம்சத்தில் வந்தவர்கள், அவர்கள் ஏந்தியிருப்பது யாருடைய வில்?’ ‘தண்டகாரண்யத்திலிருந்து வில்லும் அம்பும்! ஆமாம் நீங்கள் அங்கே போயிருந்தீர்களா?’

மூன்றுநாள் அந்தப் பக்கம்தான் மீடியாவில் வராமல் பார்த்துக்கொள்வதுதான் எங்கள் டீம் வேலை.’ ‘தண்டியாவிடம் டாக்குமெண்டேஷன் செய்யச் சொல்லியிருந்தேன், மறந்தே போனது, அவளும் வந்து எதுவும் சொல்லவில்லை.’

யார், அந்த எஸ்டி ஸ்டூடண்டா? என்ன ஆராச்சியோ என்ன டாக்குமெண்டேஷனோ, ரிசர்வேஷன்தான் இந்தியாவின் ஊழல்களுக்குக் காரணம், ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் உள்ள மிலிடன்ஸிதான் இந்திய அமைதிக்குப் பெரும் கேடு என்றெல்லாம் சொல்லி வந்த காங்கிரிட் இண்டலக்சுவல் நீங்கள். இப்போ உங்களிடமே ஒரு எஸ்டி ரிசர்ச் ஸ்காலர், என்னதான் நடக்கிறது குருஜி?’

நாம் நினைத்ததையெல்லாம் செய்ய காலம் இன்னும் வரவில்லை. 2004இல் கையில் இருந்ததை நழுவவிட்டீர்கள், இப்போது நம் நிலைமை என்ன? முழு அதிகாரமும் நம் கைக்கு வந்தால் சட்டங்களை மாற்றலாம், இப்போது பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு கண்காணிக்கப்படுகிறது. அத்தோடு தண்டியா போன்ற ஆதிவாசி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் என் ஆராய்ச்சிக்கு மிகவும் தேவை, காலம் வரும்போது சொல்கிறேன்.’

தாமோதர் போன்ற நண்பர்கள் இல்லையென்றால் எனது நிலை என்னவாகியிருக்கும். இந்தியிலிருந்து தமிழுக்குச் சில நூல்களை மொழிபெயர்த்து விட்டு பெயர் தெரியாத ஆளாக உலவிக்கொண்டிருப்பேன். இன்று உள்ளது போலக் காவிய அறிஞராக, இந்திய ஞானமரபு பற்றிய நூல்கள் எழுதிப் பாராட்டுகள் பெறுகிறவனாக மாறியிருக்கமாட்டேன். எதையெழுதினாலும் அச்சில்தர பத்திரிகைகள், கல்வியாளர்நூலாசிரியர் என்ற பெயருடன் தொலைக்காட்சிகள் என் கருத்தை அப்படியே ஒளிபரப்புகின்றன.

1999-இல் கார்கில் யுத்த தியாகிகளுக்கான கவிசம்மேளனத்தில் சந்தித்த தாமோதர் பாண்டே என்னை அப்படித் தழுவிக்கொண்டான், முன்னால் மாணவன், ஆனால் இன்று பெரிய மனிதன்.

உறக்கம் மறந்த கண்கள்தானே எமக்குக்
கனவை அனுப்பி வைக்கிறது,
உயிரைத் துறப்போம் என்பதறிந்தும் எம்
உடலைக் காக்க வைப்பதெது?
பனியில் உறைந்த உடலின் மீது
கனப்பாய் எனது சொல் படியும்
நெருப்பாய் நீங்கள் சீறும்போதும் அதன்
நிறத்தை மட்டும் என் கைதழுவும்.’

நிறத்தை மட்டும் என் கை தழுவும், நிறத்தை மட்டும், என்ன நிறம் குருஜி? என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவன்தான் அதன் முடிச்சை அவிழ்த்தான். அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டு விடவே இல்லை. என்னை அதற்குப் பிறகு வாரம் ஒருமுறையாவது சந்திக்காமல் இருக்கமாட்டான்.

பல்கலைக் கழகங்கள்தான் தேசவிரோத சக்திகளின் நாற்றங்கால் என்பதை எனக்குத் தெளிவாக உணர்த்தியவன் அவன்தான். நச்சு விதைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைக் கற்பித்தவனும் அவன்தான். வெறும் பேச்சுகள் எவை, அச்சுறுத்தும் சக்திகளாக மாறுபவை எவை என அடையாளம் காண்பதில் அவன் ஒரு மேதை. பேரணிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் அனைத்திலும் அவன் தென்படுவான். அவன் உயரமும் மிடுக்கும் யாரையும் நமஸ்தே சொல்லவைக்கும்.

வகை வகையான உடைகளில் கருத்தரங்குகள், கூட்டங்களில் அவன் உட்கார்ந்திருப்பான். அவனிடம் கேட்டிருக்கிறேன், அப்படி என்ன விரோதிகளைக் கண்டுபிடிக்கிறாய்? குருஜி, இது பகைவர்களைக் கண்டுபிடிக்கும் வேட்டையல்ல, நண்பர்களைக் கண்டுபிடிக்க விரிக்கப்படும் கண்ணி. கவி சம்மேளனத்திற்கு நான் வரவில்லையென்றால் உங்களை நான் எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? அவன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதும் அவன் சொல்பவற்றைக் கேள்வியின்றி கேட்டுக்கொள்வதும்தான் எங்களுக்கிடையிலான ஒப்பந்தம்.

நகர்நீங்கு படலம்

தண்டியா கொண்டு வந்த குறிப்புகளில் ராமாயணம் பற்றிய ஒரு தகவலும் இல்லை. ஒலிப்பதிவில் அவள் கேள்விகள் எதுவும் ராமாயணம் பற்றிதாகவும் இல்லை. தண்டியா என்ன இது, ‘இந்தியாவின் ஆதிவாசிகள் போராட்டம்’ பற்றிய ஆவணப்படமா செய்கிறாய்? ஒரு கேள்விகூட ராமாயணம் பற்றியோ ராமன் வழிபாடு பற்றியோ இல்லையே. ‘ராமாயணம் அப்படி என்ன இந்தியச் சமூகங்கள் அனைத்திலும் பரவியிருப்பதா ஜனாப்?’

தண்டியாவின் கேள்வி புதிதாக இருந்தது. ராமாயணம் நாட்டுப்புறக் கதைகள் முதல் ஆதிவாசிக் கதைகள் வரை உள்நிறைந்து இருப்பது. வாய்மொழி மரபிலும், நாடக மரபிலும், இசை, கீர்த்தனை மரபிலும் அது படிந்து போயிருக்கிறது. அது ஆசியா முழுக்க பரவியிருப்பது. ஆண்மையின் தொல் படிமம் ரகுராமன், புருஷோத்தமன் என்றால் மனிதர்களில் ஆகச்சிறந்தவன் என்று அர்த்தம்.

சீதை பற்றிய கதைகள்தான் அதிகம் என்று எனக்குத் தோன்றுகிறது, ஜனாப். ஆந்திரத்தின் கதைப்பாடல்களில் இருப்பது சீத்தம்மா, அதாவது குளுமையானவள் என்று அர்த்தம். உழுத மண்ணில் இருந்து பிறந்தவள் என்ற அர்த்தத்திலும் சீதை வழிபாடு அதிகம். பெருந்தெய்வ வழிபாட்டில் ராமனும் சிறுதெய்வகிராம வழிபாட்டில் சீதையும் அதிகம் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.’

எப்படியென்றாலும் இரண்டும் ராமாயண மரபுதான், அதுதான் நமக்கு முக்கியம். இந்து மரபின் பெரும் கிளைகள் யாராலும் அளவிட முடியாதது.’ ‘ராமாயண மரபு என்றால் ராமன் போரில் வென்று ராஜ்ஜியம் ஆள்வதா? அல்லது ராஜ்ஜியம் துறந்து சீதை காட்டில் வாழ்ந்து, கடைசிவரை ராமனுடன் இணையாமல் மறைந்து போவதா? இரண்டும் ஒன்று என்று சொல்வதில் எதோ குழுப்பம் இருக்கிறது.’ ‘இது யூகங்களின் அடிப்படையில் செய்யப்படும் விதண்டாவாதம். எதற்கும் டெக்ஸ்டில் இருந்து சான்று காட்ட வேண்டும். ராமனுக்கும் சீதைக்கும் கருத்தில், மதிப்பீட்டில் வேறுபாடு, முரண் இருந்ததாக எந்த ராமாயணமும் குறிப்பிடவில்லை.’

சாரி புரபசர், வால்மிகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் சீதை சொல்கிறாள், ‘ராமா நாம் இப்போது துறவு பூண்டு சன்யாச வாழ்க்கை வாழ வந்திருக்கிறோம், அதுதான் உங்கள் தந்தை, தாய் இட்ட கட்டளை. பதினான்கு ஆண்டுகள் நீ சத்திரியன் இல்லை, சக்ரவர்த்தி இல்லை. ஆனால் நீயோ துறவற ஆடையும், சடாமுடியும் தரித்துக் கொண்டு கையில் வில்லும் அம்புமாய் எதிரே வரும் அனைவரையும் கொல்கிறாய். உன்னிடம் அடிபணிந்து அடைக்கலம் புகும் சிலரைத் தவிர அனைவரையும் சம்காரம் செய்கிறாய். உத்தமனே உன்னிடம் தெண்டனிட்டுக் கேட்டுக்கொள்கிறேன், தவ வாழ்க்கை வாழும் இந்தக் காலத்தில் உன் கையில் ஆயுதம் இருப்பது தர்மம் அல்ல, அதனால் உன்னை கொல்வதற்கு வராத யாரையும் கொல்லாதே! துறவு பூண்ட இந்தக் காலத்தில் தவம் மட்டும் செய், அயோத்யாவுக்குத் திரும்பிய பின் மீண்டும் நீ ஆயுதம் ஏந்திய ஷத்திரியனாகலாம்.’

அதற்கு ராமன் சொல்கிறான், ‘நான் இங்கு வந்ததே போர் செய்யத்தான், தாண்டக வனத்தில் உள்ள பிராமணர்களைக் காத்து ராட்சசர்களைக் கொள்வது எனது கடமை. உன் உயிரைவிட, லக்ஷ்மணன் உயிரைவிட, என் உயிரைவிட எனக்குப் போரே முக்கியம்.’

இது டெக்சுவல் ரீடிங்தான். இரண்டும் வேறு வேறு மதிப்பீடுகள், கானக சீதைக்கும் சாம்ராஜ்ஜிய ராமனுக்கும் உள்ள முரண் வாய்மொழி மரபுகளில் வேறு அர்த்தம் பெறுகிறது.’ ‘தண்டியா, இது ஃபெமினிஸ்டுகள் பேசுவது, எப்போது நீ ஃபெமினிஸ்டாக மாறினாய்?’

இண்டர்வியூவின் பொழுது கேட்ட கேள்விகளுக்கு ஒரு வரி பதில் சொல்லிவிட்டு பயந்து உட்கார்ந்திருந்த பெண்ணா இவள், அந்த பயம்தான் இவளுக்கு பி.ஹெச்டியில் இடம் வாங்கித்தந்தது, புராஜெக்ட் உதவித்தொகையும் வாங்கித் தந்தது. இந்த எஸ்சிஎஸ்டிகளுக்குத்தான் எத்தனைச் சலுகைகள், எத்தனை உதவித்தொகைகள்! எனது அமைதியை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் நல்லதல்ல.

சரி, தண்டியா வால்மிகி ராமாயணத்தை இங்கிலிஷில் படிப்பதால் வரும் குளறுபடிகளில் ஒன்றுதான் நீ சொல்வது. நான் உன்னை அனுப்பி வைத்தது ஆதிவாசிகளின் பேச்சில், பாட்டில், கதைகளில் ராமாயணம் பற்றிய குறிப்புகள், தகவல்கள் உள்ளனவா என்று பதிவு செய்து வரத்தான், அது பற்றி ஒரு வரிகூட இல்லையே!’

அவர்கள் பல மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி நடந்தே வந்தார்கள், வரும் வழியெங்கும் பாட்டும் கோரிக்கைக் குரல்களும். பத்துபேர், இருபது பேர் என்று புறப்பட்டவர்கள் வழிநெடுக நூறு, ஆயிரம் எனத்திரண்டு டெல்லியில் கூடியபோது லட்சத்திற்கு மேல் இருந்தார்கள். அவர்களுடன் நான் மூன்று நாள் இருந்தேன். அவர்கள் ஒயாமல் பாடிய பாட்டில்தான் ராமாயணம் இருக்கிறது. படித்துப்பாருங்கள் ஜனாப்.’

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன், கவனமாக இருக்கவேண்டும். எஸ்டி மாணவி, பெண் சொல்லவே வேண்டாம். அன்டச்சபிலிட்டி, அட்ராசிட்டி, ஹராஸ்மெண்ட், விசாரணைக் கமிட்டி, இந்தக் கொடுமையெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம், ஆத்திரம் வந்தாலும் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். ‘எந்தப் பாட்டில் ராமாயணம் பற்றிய குறிப்பு உள்ளது?’

இந்த நிலம் முழுக்க அப்போ காடாக இருந்தது, அந்தக் காடுங்களெல்லாம் எங்க வீடாக இருந்தது.’ அவள் அதைப் படிக்கிறாளா? இல்லை அவளே அதைச் சொல்கிறாளா? என் மனைவியும் பிள்ளைகளும் என்னிடம் பேசும்போது முணகலாகத்தான் இருக்கும். என் கார் உள்ளே நுழையும் போது உள்ளிருந்து கேட்கும் பாட்டு சிரிப்பு எல்லாம் பவர்கட் ஆனது போல பட்டென்று நிற்கும். என் பாட்டியும், அம்மாவும் இப்படியொரு அழுத்தமான குரலில் பேசி நான் கேட்டதில்லை. ‘தண்டியா உனக்கு என்ன ஆனது? இதில் ராமன், சீதை, ராமாயணம் என்னதான் உள்ளது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்.’

காடு, வீடு, கானகம், ஆரண்யம் எல்லாமே ராமாயணம் பற்றித்தான் சொல்கின்றன. ராமன் சேனைகளின் படையெடுப்பபைச் சொல்கின்றன, பூமி பிளந்து விழுங்கிய சீதை பற்றிச் சொல்கின்றன. சுரங்கங்கள் தோண்டும் இயந்திரங்களைப் பற்றி, பாளம் பாளமாய் பிளந்து கிடக்கும் பூமி பற்றி. பதுங்கிய சீதையைக் கவர்ந்து செல்ல மண்ணைப் பிளக்கும் ராமர்கள் பற்றி…’

தண்டியாவின் கண்களில் ஒரு வஞ்சம் இருப்பது தெரிந்தது, அவள் முகத்தின் நெளிவுகள், சுருக்கங்கள். என்ன ஆனது, ஏதோ சரியில்லை. ‘தண்டியா டிரக்ஸ் எதுவும் எடுத்தியா?’ அவள் நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘இனிமேதான் எடுக்கணும்’ என்றாள். நான் அந்த டிரக்ஸ்ச கேட்கல. ‘அதற்கு எனக்கு நேரமில்லை புரபசர்.’ சம்திங் ராங்… புத்திக் குழப்பம், மனத்தடுமாற்றம்… எதுவானாலும் இப்போது போய் தொலையட்டும்.

வி கேன் ஹேவ் அவர் டிஸ்கஷன் ஆஃப்டர்வேர்ட்ஸ். லெட் மி கண்டினியு மை அசைன்மண்ட்.’ நான் எழுந்துகொண்டேன். அவள் லேப்டாப்பை மடக்கியபோது ‘இருக்கட்டும் தண்டியா. புராஜக்ட் வெரிபிகேஷன் இருக்கு, முடிஞ்ச பிறகு எடுத்துக்கலாம்.’ அவள் தயங்கி நின்றதைக் கவனித்தேன். ‘ஷல் ஐ காப்பி சம் ஃபைல்ஸ் ஆன் மை பென்டிரைவ்.’ ‘நாட் நௌ, இட் ல்பி சேஃப், அண்ட் ஃபர்தர் இட் இஸ் மை புராஜெக்கட், நா?’

அவள் சிஸ்டத்தை தொடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எடுத்துத் திறந்தபோது பாஸ்வேர்ட் கேட்டது. கடுங்கோபத்தில் பாஸ்வேர்ட் வைக்க இது என்ன உன் அப்பன் வீட்டுக் கம்ப்யூட்டரா? சொல்லு, என்ன? தயங்கியவள் ‘எம்எஎஎஸ்ஈ’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள். மாசே? என்ன அது? சற்று நேரம் தேடியபின் அது கோண்டி மொழியில் கறுப்பாயி அல்லது கறுப்பழகி என்று பொருள் காட்டியது. நான் தாமோதர் எண்ணை அழுத்தினேன். ‘உடனே வரணும் பாண்டே ஜீ!’

மந்திரம் உரைத்த படலம்

காட்டில்தானே நாங்கள் பிறந்தோம், காட்டில்தானே நாங்கள் வளர்ந்தோம், காட்டில்தானே நாங்கள் வாழ முடியும். காடு எங்களின் வீடு, உங்கள் நாடுதான் எங்களுக்குச் சுடுகாடு. எங்க வீட்ட நாங்க அழிக்கிறதா சொல்லி அதற்குக் காவல் போட்டீங்க. எங்க பிள்ளைகளை நாங்க கொல்லறதா சொல்லி அவங்கள சிறையில வச்சீங்க. எங்க மண்ண நாங்க நசுக்கிறதா சொல்லி அதை வெளிநாட்டுக்காரங்களுக்கு வித்தீங்க. எங்க நதிய நாங்க தடுக்கிறதா சொல்லி அத அணையில அடைச்சீங்க, நாங்க இருந்தா எல்லாம் தொலைஞ்சிடுமின்னு எங்கள ஊர்விட்டு விரட்டினீங்க, நாங்க வாழ்ந்தா இதையெல்லாம் உலகத்துக்குச் சொல்லுவோம்ணு எங்கள நெருப்பில சுட்டீங்க.

படபடவென்று பேசிய அந்த மூத்த முண்டாவை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். இது வரைக்கும் அவருடைய குடிசையை ஆறுமுறை எரித்திருக்கிறார்கள். அவருடைய பெண் பிள்ளைகள் இரண்டு பேர், ஆண்பிள்ளைகள் மூன்று பேர் சிறப்புக் காவல் படையால் சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரே ஒரு மகள் மட்டும் இப்போது காடு காக்கும் படையில் சேர்ந்திருக்கிறாள். காம்பில் இருந்த வீரர்கள் முதல் முறை அவளைத் துக்கிச் சென்றபோது அவளுக்கு வயது பதினொன்றுதானாம். அவள் வீட்டைவிட்டு போனபோது பதினாலு வயதுதானாம். காட்டில் நடந்த மண்டல் விழாவின் போது முண்டா ஒரே ஒரு முறை அவளைப் பார்த்திருக்கிறார். துப்பாக்கியுடன் வந்து கையைப் பிடித்துக்கொண்டவள் ‘இப்போ யாரும் என் கிட்ட நெருங்கவும் முடியாது.’ என்று சொல்லி சிரித்திருக்கிறாள். இதைச் சொன்னது இன்னொரு பெண்.

நான் கேட்டேன், காடு அரசுக்குத்தான் சொந்தம், அவங்க சொல்லும்போது அதவிட்டு வந்துட வேண்டியதுதானே. ‘அரசாங்கம், சாம்ராஜ்ஜியம் எல்லாம் வரும் போகும், காடு எப்பவும் இருக்கும். எத்தனை தேவ கணங்கள் வந்து அழிக்க நினைத்த காடு, அது என்ன அழிஞ்சா போயிடுச்சி! எத்தனை ராம சேனைகள் வந்து அடக்க நினைச்ச வனாந்திரம், அது என்ன மறைஞ்சா போச்சி! எல்லாம் மறைஞ்சி போகும், காடு மட்டும் மிச்சம் இருக்கும். மூத்த முண்டாதான் மீண்டும் பேசினார். ராம சேனைகள், தேவ கணங்கள், யார் அவர்கள்? அவர்கள்தான் இந்தக் காடுகளை அழித்தவர்கள், மலைகளை உடைத்தவர்கள், இந்த மக்களைக் கொன்று குவித்தவர்கள். நானும் அவர்களுடன் நடந்தேன், எட்டு நாட்கள் அவர்களுடன் நடந்தேன். மிச்சமிருக்கும் காட்டைப் பார்க்க வேண்டும், அதில் எஞ்சியிருக்கும் கதையைக் கேட்க வேண்டும்.

பித்தர்கள் உரைத்த படலம்

அந்த நகரத்திலிருந்துதான் அது தொடங்கும் என எப்படியோ அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிரவி நதியின் பக்கம் இருந்த மக்களையெல்லாம் விரட்டிவிட்டு கட்டிய கோட்டையும் அரண்மனையும் கொத்தளங்களும் அவர்கள் இடமானது. முன்பு இந்திரன் நகரத்திலிருந்து வந்த சேனைகள் அழித்த காடுகளில் இருந்து தப்பியவர்கள் தெற்கிலும் மேற்கிலும் பதுங்கி வாழ்ந்தனர்.

பிராமணர்கள், ரிஷிகள், முனிகள் என்ற பெயர் கொண்ட சனக்கூட்டம் காடுகளில் வந்து நெருப்பை மூட்டினர். மண்ணை உருக்கி உலோகங்களாக்கி நகரங்களுக்குக் கொண்டு சென்றனர். காடுகளின் மிருகங்களை ஓயாமல் வேட்டையாடுவதும் வேள்வியில் பொசுக்குவதும் அவர்களுக்கு விளையாட்டு. வேள்விகளில் கரியும் காட்டைக் காக்க தாடகை முதலான தாய்களின் படைகள் அவ்வப்பொழுது தாக்குதல் நடத்தும். தாருகா, தரகா இவர்கள் எல்லாம் தரையைக் காப்பவர்கள் கண்டவர்கள் புலன் மயங்கும் பெரெழில் கொண்டவர்கள். நீரியா, சீத்தியா, சீத்தள்ளா இவர்கள் நீர்வழிக் காப்பவர்கள் இசையும், நடனமும் இவர்களின் வம்ச வித்தை. வனங்களைக் காப்பது இவர்களின் வம்சம்தான்.

நகரத்திற்குள் அடங்கியிருப்பதும் அவ்வப்போது வந்து கொள்ளையிடுவதும் நகர கணங்களின் வழக்கமானது. நதிக்கரை நகரின் சக்ரவர்த்திக்கு அடங்காத ஆசை, இந்திரன் நகரத்தைப் போல அத்தனை திசைகளின் வனங்களையும் தனதாக்க வேண்டும், தென்திசை மண்ணுக்குள் உள்ள லோகங்களையும் மணிகளையும் தன் நகர் சேர்க்க வேண்டும். அதற்கென அவன் தவம் செய்து பெற்ற பிள்ளைகள் நால்வர்.

மூத்தவன் தொடங்கி அனைவருக்கும் ஆயுதப்பயிற்சியும் அனைத்துவகை தந்திரங்களில் பயிற்சியும் அளித்தவர்கள் இந்திர நகரத்து ஆச்சாரியர்கள். இளையவர் இருவர் நகரைப் பார்த்துக் கொள்ள, மூத்தவர் இருவரும் முனிவர் படையுடன் புறப்பட்டனர். பதினைந்து வயதில் பதுங்கித் தாக்கும் படையினராக தாடகைத் தாயின் வனதேசம் அடைந்தனர்.

அந்தணர்கள் அழிவும் ரிஷிகளின் கொடுமையும் குறைந்த காலம் அது. பயம் தெளிந்த மக்கள் ஆட்டம் பாட்டம் எனக் களித்திருந்த காலம் அது. ராஜமுனியின் ரகசியத் திட்டம். இளையவர் இருவர் யாசகம் கேட்டுவந்ததாக தாடகையின்முன் சொல்லி நின்றனர் வனசேவகர்கள். தேனும், புல் விழுதும் கலந்து களித்திருந்த காவல் தலைவி இளையோர்தானே என எதிர் நின்று கேட்டாள், என்ன வேண்டும் பிள்ளைகளே? முனிவனின் சங்கொலி முழங்க, மறைத்து வைத்திருந்த ஆயுதம் கொண்டு பிளந்தனர் நெஞ்சை. அங்கங்கள் ஒவ்வொன்றாய் அறுத்து வீச அலறிக் கலைந்தனர் மக்கள்.

முனிகளின் படையும், அந்தணர் சேனையும் வனத்தின் மக்களை நெருப்பில் பொசுக்கினர். வடதிசைக் கானகம் தம் வசமானதென பெருங்கொண்டாட்டம். புதிதாகப் படைகள், பயந்து பதுங்கிய சேனைகள் மீண்டும் பயிற்சி பெற்று திரண்டு பரவின, வழியெல்லாம் பலிகள்.

சீதள மாதா வம்சத்தில் வந்தவள், கானகங்களின் நீர் வழி கண்டவள், பூமிக்குள் புதைந்த பொன்னும் மணியும் தன் காலடித் தடத்தால் தடம் காட்டக் கற்றவள், அவள்தான் முனிபடைகளின் இலக்கு. மைதல பாஷை பேசும் மக்கள் அவளை வணங்கி தாயாக ஏற்றுத் தம் நகரில் காத்தனர்.

நூறு வண்டிகளில் மாறுவேடத்தில் சென்ற முனி படை அந்தச் சிறு நகரில் நுழைந்தது. வில்லும் அம்பும் வாங்க வந்ததாகச் சொல்லிப் படைக்கொட்டில் அடைந்த இளையவன் வெளிக்காவல் இருக்க, மூத்தவன் உள்ளிருந்த படைக்கலம் எல்லாம் எரித்து முடித்தான். முனிகள் படை வெளிக்கிளம்பி சீதள மாதாவை சிறைப்பிடித்தது. மூத்தவன் அவளைத் தம் தாரமாக்கி சிரவி நதிக்கரை நகருக்குக் கொண்டு போனான்.

செல்வங்கள் எல்லாம் இனித் தம் நகருக்குச் சொந்தம் என்று மன்னனும் மக்களும் பெருங்கொண்டாட்டம். சீதள நங்கை பேச்சை மறந்தாள், தன் வனக்கோட்டம் இருக்கும் திசை பார்த்து ஏங்கியிருந்தாள். தென்திசையெங்கும் தன் வசம் கொள்ளும் காலம் வந்தது என்று மூத்தோனும் இளையோனும் சேனையுடன் புறப்பட்டுவிட்டனர்.

பின்னிளைவர்கள் நகரைக் காக்க, முன்னிருவர் காடுகள் கொள்ளப் புறப்பட்டுவிட்டனர். சீதள நங்கைக்கு நதிகளின் வழி தெரியும், தென்திசை கானகங்கள் இருக்கும் இடம் தெரியும். அதைவிட அவள்தான் மூத்தோன் படைக்கு முன்னே நடப்பவள். மறைந்திருந்து கனையெரியும் கானகத்துப் படைகளின் கைகளுக்குப் பூட்டு அவள்.

இளையோனுக்கும் மூத்தோனுக்கும் கேடயமாய் அவள் நடந்தாள். கங்கை தொடங்கி நர்மதையும் கோதாவரியும் என ஆறுகள் அணைந்த ஊர்களில் எல்லாம் அந்தணர், முனிவோர் ஆட்சியை நிலைப்படுத்தி கானக சனங்களின் தலைமைகள் அழித்தனர். தென்திசையில் மீந்திருக்கும் வனங்களையும் கனிமக் குவைகளையும் தம் நகர்வசமாக்க நாள் பார்த்திருந்தனர்.

சூரப்பெண்ணகையின் வனமண்டலத்தின் ஓர் பகுதியில் தண்டம் இறக்கித் தங்கியிருந்தனர். சூரப்பெண்ணகை அந்த வழிவந்த ஒருநாள் சீதள நங்கையின் காலடித் தடங்களைக் கண்டு குடில் வரை வந்துவிட்டாள். இருவரும் ஒரு நொடி எதிர் எதிர் கண்டனர். தங்கை போன்றவள், தம் தாயும் போன்றவள். மங்கையை இழந்த மக்களின் பெருந்துயரை கண்ணின் நீர்த்துளியால் காட்டி நின்றனள். அச்சம் அறியாத பெண்ணகை அவளை மீட்டுச் செல்வதாய் சொல்லிச் சென்றனள்.

சூரப்பெண்ணகையின் சூட்சும மொழியை அறிந்து கொண்ட இளையவன் பின்தொடர்ந்து சென்று அவள் அங்கங்கள் அறுத்தான். தப்பிய பெண்ணகை தன் தமையனிடம் சென்று சீதள மங்கையின் இருப்பிடம் சொன்னாள். இருவரின் காவலில் அவள் இருப்பதைச் சொன்னாள்.

கானக மக்களின் கண்ணீர் அறிந்தவன், வனக்குடிகளின் வாழ்வைக் காப்பவன், தன் நகரைக் கூட அடவியாய் வைத்தவன், இரவானான் என்னும் பெயரைக் கொண்டவன். பத்துத் திக்கிலும் படைகளை நிறுத்தி கானுயிர் அனைத்தையும் காவல் காப்பவன், தந்தையைப் போலத் தன்னை மீட்க வருவான் எனச் சீதள மங்கையிடம் கிளிகள் வந்து சேதிகள் சொல்லின.

பொன் குவியல் இருக்கும் இடம் தன் நினைவில் வருகிறதென வடக்குப் பக்கமாய் கையைக் காட்டிய அன்று இளையோனும் மூத்தோனும் எழுந்து ஓடினர். மான்கள் பூட்டிய வண்டியில் வந்த இரவானான் வருக மகளே என்றான். நகரத்து அணிகளும், நகைகளும் நீக்கி எறிந்தவள் மான் ரதம் ஏறி மறுநகர் ஏகினாள். இருவரும் வந்து இழந்ததைக் கண்டனர், முனிவரின் படையுடன் சீதள நங்கையைத் தேடியலைந்தனர்.

கானகத்தின் குடிகள் சீதள நங்கையை இனி யாரும் கவர்ந்து செல்ல முடியாது எனக் கனவில் மகிழ்ந்தனர். இரவானான் பெருங்காடு யாரும் நுழைய முடியாத பெரும்பரப்பு, என்றாலும் சீதள நங்கைக்குக் காவலாய்ப் பெண் படைகள்.

கண்ணில் கண்ட குடிகளையெல்லாம் அடிமைப்படையாக்கி இருவர் சேனை கடலாய்த்திரண்டது. மறைந்திருந்து தாக்கும் மாயப்படை உத்தி மீண்டும் அரங்கேற பெருங்காட்டுப் படையுடன் இரவானான் உயிர் மாய்ந்தான். சீதள நங்கையின் கால்பட்ட இடமெல்லாம் தன் நாடு ஆனதை அறிந்த மூத்தவன் அவள் கைப்பற்றி சிரவி நதிக் கரைவந்தான். கானகமெல்லாம் தன் வசம் ஆனதின் பெருவிழா அறிவித்தான்.

சீதள நங்கையின் மனதுக்குள் இருந்த துயர்க் கதையறியாதான். விழா வரும் நாளுக்கு ஒரு மண்டலம் முன்னிருந்து தான் தனித்த தவம் காக்க இருப்பதாய் அறிவித்த சீதள நங்கை மண்டபம் ஒன்றின் நடுவில் அமர்ந்திட்டாள். தானே தவம் கலைந்து வரும்வரை யாரும் உள்நுழையக்கூடாது என்று சொல் உறுதி அளித்து தனிமைச் சிறையானாள். மண்டபத்தின் பளிங்குப் படலங்கள் வழியே தினம் வந்து பார்த்த இளையோனும் மூத்தோனும் சீதள நங்கையின் பொன்னொளி மட்டும் கண்டு திரும்பினர்.

காலம் சென்றது, கானகத்தின் மக்கள் தம் சீதளத் தாயை மீண்டும் கண்டனர். கானகத்தில் மானுடர் காலடித்தடங்கள் படாத ஒரு இடத்தில் அவள் தன் குடிலை அமைத்தாள். சிரவி நதிக் கரை மண்டபத்தில் தான் வனைந்த பொன்வடிவை இருத்திவிட்டு வந்தவள் யாரும் அறியாத பசுமைக்குள் பதுங்கிவிட்டாள்.

மூத்தோனும் இளையோனும் நெடுகாலம் காத்திருந்து மண்டபத்தின் கதையை அறிந்தனர். சீதள மங்கையைத் தேடிவர திசையெல்லாம் அசுவப்படைகளை அனுப்பி வைத்தனர். யார் தேடி என்ன பயன்!

பச்சைக்குள் மறைந்தாளா? பாறைக்குள் மறைந்தாளா? மண்ணுக்குள் பதுங்கி மழை நீரில் இழைந்தாளா? கானகத்தின் பெருங்கதையை கண்டுரைக்க ஏற்றவர் யார்? கண்டவர்கள் உரைத்தாலும் கற்றறியத் தக்கவர் யார்? கற்றறிந்து சொன்னாலும் கருத்தறிய தக்கவர் யார்?

பிறவி அழித்த படலம்

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. காடுகளுக்கு வெளியே வேறு யாரும் இதுவரை அறியாத இந்தக் கதையை அறிந்து வைத்திருந்த வம்சத்தில் இன்று மீந்திருப்பது அந்த ஒரு குடி மட்டும்தான். அந்தக் கதையை கேட்டாலும் புரிந்து கொள்ள பித்தநாடி வேண்டும், அதனைப் புரிந்துகொண்டாலும் நம்ப ஒரு மனப்பிரமை வேண்டும், நம்பினாலும் பிறருக்குச் சொல்ல இரட்டை ஆவி கொண்ட உடல் வேண்டும். இது எல்லாம் எப்படி தண்டியாவுக்கு முடிந்தது?

தாமோதரிடம் இவை எதையும் சொல்லவில்லை. அந்த ஊரில் இருந்த முண்டாவின் படத்தை மட்டும் அவனிடம் தந்தேன். ‘என் முதல் வேலை முடிந்துவிட்டது, இரண்டாவது வேலை உங்களுடையது.’ சில நாட்கள் கழித்துச் செய்தி வந்தது. அந்தக் கிராமத்தில் நடந்த என்கௌண்டரில் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த மாணவியும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆதிவாசியும் கொல்லப்பட்டனர். சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 10 பேர் காயம்.

தாமோதர் என்னைச் சந்தித்த அன்று எனக்கு இரண்டு செய்திகளைச் சொன்னான். ராமன், சீதை, லக்ஷ்மணன் நடந்து சென்ற கங்கை, கோதாவரி, பஞ்சவடி, சித்ரகூடம், தண்டகாரண்யம் பாதைகளை ஆய்வு செய்து நான் தயாரித்த ஆவணப்படத்திற்கு விருதும் நிதியும் கிடைக்க உள்ளது. ‘எல்லாம் உன்னால்தான் தாமோதர்’ என்றேன்.

தன் கையில் இருந்த சில படங்களைக் காட்டி இதில் உள்ள இளைஞர்களை ஒவ்வொருவராகக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டியுள்ளது, இதுதான் இந்த ஆண்டுக்கான எனது அசைன்மண்ட். எங்கு கிடைத்த படங்கள்? தண்டியாவின் பையில் இருந்தன. பார்க்கலாமா? கத்தையாகக் கொடுத்தான். ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.

தண்டியாவுடன் நிற்கும் சிலருடைய படங்கள், ஒருவர், இருவர், மூவர் என. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் கை நடுங்கத்தொடங்கியது. ஒரு படத்தில் தண்டியாவை என் மகனும் மகளும் இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு விரல் மடக்கி முட்டி உயர்த்திக் காட்டுகின்றனர். இன்னொரு படத்தில் என் மகளை தண்டியா கன்னத்தில் முத்தமிடுகிறாள். மற்றொரு படத்தில் தண்டியா, என் மகள், மகன் மூவரும் தலையில் துணிகட்டி வட்டமேளத்தை அடித்தபடி நிற்கின்றனர்.

தாமோதருக்கு என் குடும்பம் தெரியாது, அவன் குடும்பம் எனக்குத் தெரியாது. தண்டியா என் மகனும் மகளும் ஒரே சமயத்தில் டெங்கு காய்ச்சலில் படுத்தபோது இருபது நாட்கள் கூடவே இருந்தவள், அவளுடைய நண்பர்கள்தான் மாறி மாறி ரத்தம் கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட நட்பா, உறவா, பழக்கமா? தெய்வமே! தெய்வமே!

(இடைவெளி: இதழ் 2, ஜூலை 2017)