பிரேதாவின் பிரதிகள்

ஆண் மொழியினூடாக ஆண் மையம் சிதைக்கும் எழுத்து

யவனிகா ஸ்ரீராம்  

பாண்டிச்சேரியில் எளிய குடும்பத்தில் பிறந்து இலக்கியத்தின்பால் வாசிப்பு, படைப்பு எனத் தீவிரமான ஈடுபாடுகளை வளர்த்து 1987 – இல் பிரேதா என அறியப்பட நேர்ந்த பிரேம் சமூக வாழ்வுப் பின்னணியின் பொது யதார்த்தங்களிலிருந்து விலகி வந்தவர் அல்லது தூக்கி எறியப்பட்டவர் எனச் சொல்வது பொருத்தமானது. தனது இளம் வயதிலேயே பல்வேறு மனித சமூக இருப்புகள், அதன் விளைவுகள், வேட்கைகள், தாபங்கள் யாவற்றையும் நுண்ணுணர்வுத் தளத்தில் வைத்து ஆராய்ந்து அதற்கான விடைகளைப் பொதுவெளிகளில் அயராது தேடிச் சலித்துப் போனவர் என்ற அளவில், நிறுவனமயப்படாத ஏற்கனவே சொல்லப்பட்ட வாழ்வின் கற்பிதங்களிலிருந்து ஒரு தனியான மொழியைத் துவக்கியவர் என்றும் சொல்ல முடியும். பொது வாழ்வின் சம்பிரதாயக் கூறுகள் யாவற்றையும் அடையாளமாக ஏற்க மறுத்து வித்தியாசமான இருப்பையும் விடுதலைக்கான மாற்றையும் பண்பாடாகவும் இறைமையாகவும் வகுத்துக் கொண்டவர் என்பதை அவருடைய தொடர்ந்த படைப்புகளின் வழியாகவும்  பிரேம்-ரமேஷ் என இரட்டைப் பெயரில் எழுதப்பட்டவை வழியாகவும்  நம்மால் ஊகித்து உணர முடிகிறது.

 பின்பற்றவே இயலாத வாழ்வதிர்வுகளை இயல்பாக மேற்கொண்டு உறைந்தும் மொண்ணைத் தனமாகவும் ஆகிப்போனப் பொதுவாழ்வைத் தன் மொழியால் ஊடுருவியவர் என்று சொல்வதும்கூட அவரின் இருப்பு மற்றும் சொல்லாடல்களின் வழியாகத்தான். இப்படியாகத் தமிழ் நிலத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றோடு உலகளவிலான மாற்றங்கள், ஆதிக்க கருத்தியல் பெருக்கம், தத்துவாதிகள், மனித உளவியல் ஆய்வாளர்கள், உற்பத்தி உறவின்வழி ஆதிச் சமூகத்திலிருந்து இன்றைய ஏகாதிபத்தியம் வரைக் கட்டமைக்கப்பட்ட யதார்த்த வரலாறு, இந்திய நவீனத்துவப் போக்குகள் என அனைத்து மாற்றங்களையும் இலக்கியம் வழியேயான ஆய்வாக மாற்றிப் படைப்புகளாகவும் தந்துகொண்டிருக்கும் பிரேம் (பிரேதா) எழுத்துகளை தமிழின் தீவிரமான இலக்கியப் பக்கங்களில் அடிக்கடிச் சந்திப்பவர்கள் அவரை நண்பராகவும்  வழிகாட்டியாகவும் உரையாடிக் கொள்பவராகவும் ஆய்வாளராகவும் படைப்பாளிகளாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி  கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் பாலியல் இச்சையையும் உளவியல் தன்மைகளையும் அத்துடன் இணைந்த சமூக விசித்திரங்களையும் மனத்தடையற்று எப்படி இவரால் பதிவுசெய்ய முடிந்தது என ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வகையில் தடை செய்யப்பட்டு மறைமுகமாக உலவும் பிரதிகளின் வலையில் சிக்கிக் கொண்டேனோ என்றுகூட அச்சம் ஏற்பட்டது.

நான் அப்போது தமிழில் இன்னதென வகைப்படுத்த முடியாத பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளை ஒழுங்கு முறையற்று வாசித்துக் கொண்டிருப்பவனாக இருந்தேன். பல ஆதர்ச எழுத்தாளர்கள், தர்க்கவியலோடு கதைச் சொல்பவர்கள், வானம்பாடிகளின் கவிதைகள், ‘கணையாழி’ என வாசித்துக் கொண்டிருந்த சூழலில் கிரணம் எழுத்துக்களின் கவித்துவ மொழி அதிக நுட்பங்களைக் கோரி என்னை வேறொரு பக்கம் நகர்த்தியது. இதற்கிடையே பிரமிள், பசுவய்யா, கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், பிரம்மராஜன், தேவதேவன் என்று, எனது கவிதை வாசிப்பு கூடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது பல்வேறு கவிதை மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க வாசிக்க பலவித தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் கிரணம் எழுத்துக்களின் அச்சமற்ற வெளிப்பாடுகள், மனித நொய்மைகளின் இருப்பு, முறைதகாப்பால் இயல்புகளின் ஒப்புதல், அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா, இருள் நகரம் என்ற பெயரடைகள் என்னை வினோத உணர்நிலை களுக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் இழுத்துப் போயின.

அவற்றின் உத்திகளும் வடிவங்களும் பேசு பொருளும் என்னை இதுவரை வாசித்து வந்தப் படைப்புகளிலிருந்து வெளியேற்றியது என்றுகூடச் சொல்லலாம். நான் நம்பிவந்த மத்தியதர வர்க்க மதிப்பீடுகள், காதல், தந்தைமை, வீரம், குலப்பெருமை, தாய்மை, லட்சியம், தேசியம் போன்றவற்றின் கதையாடல்கள்; தத்துவம், வாய்மை, மெய்மை, அறம், தெய்வீகம், ஆன்மீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், ஞானம், ஆன்மா, மேதமை என்பவைப் பற்றிய அறிதல்களும் வாழ்முறையுடனான அவற்றிற்கான உறவும் எனக்கு சிறுவயதிலிருந்தே சிக்கலுக்குரியதாக இருந்தபடியால் கிரணம் காவியங்களில் வெளிப்பட்ட பட்டவர்த்தனமான இருப்பின் அலறல் மிக நெருக்கமானதாய் தோன்றியிருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை கிரணம் காவியங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியபோது மொழிவழியான தர்க்க ஒழுங்கின் சிதைவுகளைக் காண நேர்ந்தது. பெருகிப் போதிக்கும் மேதமைச் சொல்லாடல்களைக் கேலிச் செய்து பேசப்படாத பிரதிகளை அதிர்வுடன் முன்வைக்கும் கலகமாக தமிழின் மொழிப் பிராந்தியத்திற்குள் ஊடுருவி நிற்கும் கிரணம் எழுத்துக்களை நான் வலியோடு கண்டடைந்தேன்.

தீர்க்க முடியாத மனித சலனங்களின் அதிகாரம் எப்படி சாதி, மத, சமயம் மற்றும் அரசாளுமைக் கருத்தியலாக இலக்கிய வடிவம் கொண்டது என்பதை, இன்று வரை வாசித்து வரும் எனக்கு கிரணம் காவியங்களின் இளம்பருவ பாலியல் பதற்றம் அதே சமயம் மூர்க்கத்தனமான அனுமதி பெறாத குற்ற வெளிப்பாடுகள் சமூகவெளிக்குள் மொழியாகப் புழங்கியது குறித்த ஆச்சிரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தொகுப்பினை வரலாற்றுப் பின்னணியோடு அதன் சமூக உறவுகளையும் ஆராய்ந்து  இவை வெளிப்பட்ட  காலம் படைப்பாளியின் பின்புலம், இவற்றின் தர்க்கம், அரசியல் எனப் பிரித்து இவற்றின் இடத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒருவர் அக்காலத்தின் மற்றையப் பிரதியோடு வைத்து ஒரு ஒப்பாய்வும் செய்வாரேயானால் ஆளுமைப் பிரதிகளுக்கும் அடிமை மற்றும் விளிம்பு நிலைச் சொல்லாடல்களுக்கும் இடையே நீடித்திருக்கும் பெரும் பிளவை உணர்ந்து கொள்வார்.

அத்தோடு இன்று பின்நவீனத்துவப் பிரதியியல் ஆய்வாளராக  அறியப்படும் கிரணம் படைப்பாளியின் இளம்வயது தொடக்கத்தோடு இன்றளவு வரையிலான அவரின் நீட்சியையும் அவர் ஒப்பிட்டுப் புரிந்துக்கொள்ள முடியும்.

கிரணம் எழுத்துக்களை ஒருவித மார்க்சியப் புரிதலோடு வைத்துப் பார்க்கும்போது அவை உளவியல் தளத்துக்குள் நுழைவதையும் உளவியல் மற்றும் புனைவுத் தளத்துக்குள் வைத்துப் பார்க்கும்போது மார்க்சிய அழகியலுக்கப்பால் நகர்ந்து விடுவதையும் ஒருவேளை மார்க்சிய கண்ணோட்ட்த்தில் கை எடுக்கப்படாமல் விடுபட்ட குறிப்புகளாகவும், அதன் அறவியலுக்குள் ஒளிந்து திரியும் மறைக்கப்பட்ட கடைநிலை இருப்புகளாகவும் தென்படுவதை ஒரு யூகமாக முன் வைக்கலாம்.

 பொருள்களுக்கப்பால் மனித இருப்பின் கீழ்மைகளை, அவமானத்திற்கு உட்படுத்தா வண்னம் மெய்மைகளாக்கி தர்க்கத்துக்கு வசப்படுத்தும் இப்பிரதிகள் உலகை வேறொரு ஆரம்பத்திலிருந்து புரிந்துகொள்ள வாசகரைப் பாவனைப்படுத்துகின்றன.

வளர்ந்தும் சிதைந்தும் பயணப்படும் மனித உடலை அதன் இருப்பிலிருந்து விலக்கித்  தன்னிச்சையான அதன் விடுபடல்களை ஒடுக்கி, கோட்பாட்டின் பொருண்மை உருவிலிகளாகவும் அதற்கும் அடங்காத நிலையில் அதைச் சமூக மையத் தளத்தில் வைத்துக் கொன்றழிப்பதாகவும் இருக்கும். தத்துவ கருத்தியல் மேல் எப்போதும் ஒரு விசாரணையாக தமது மொழிதல்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரேம் அதனைத் தனது கிரணம் படைப்புகளிலேயே தொடங்கியிருக்கிறார் என்பது இப்படைப்புகளை மீண்டும் நூல் வடிவில் கொண்டு வருவதற்கான முக்கியத்துவத்தை உண்டாக்குகிறது.இன்றைய சொல்லாடல்களில் காணப்படும் தன்னிலை இருப்பிற்கான அடையாளங்கள், வேண்டுதல்களின் பாவனைகள், நிராகரிப்பின் குதூகலம், பீதியூட்டும் அபிப்பிராயங்கள், மறந்துபோவதன் அலட்சியம், அனுபவ மறுப்பு, நிலைத்தவற்றின் மீதான சோம்பல், கிளர்ச்சியூட்டும் கனவுகள், அதன் புலன்கள், வேட்கை, தாபங்கள் ஆகியவற்றோடு சமூக தன்னிலைக்கான தான்-ஐ உரசிப் பார்த்து சுயத்தன்னிலைக்கான தான்- ஐ வெளிக்குள் சோதனையாக உலவவிடுதல் அல்லது சமூகம் தான்-இல், தர்க்கம் ஏற்படுத்தி தனது இருமையின் இடத்தை உறுதி செய்தல் போன்றவை வரலாற்று ரீதியான பல தாக்கங்களின் மேலேயே நவீனத்துவ உச்சங்களாகவும் சிதைவுகளாகவும் வெளிப்படுகின்றன.

மறைமுக விடுதலையானது இரகசியத்தின் அறமாகவும் பொது வெளியின் தர்க்கங்களைச் சிதைத்தல் பகிரங்கத்தின் அறமாகவும் தமிழிலக்கியச் சொல்லாடல்கள் மாற்றம் பெற்று இன்றைய மொழி பற்றிய பல்வேறு நுட்பமான ஆய்வுகளைத் தாண்டியும் பிரேமின்  படைப்பு ஆக்கம் பெறுகிறது.

ஆனாலும் அவற்றிலிருந்து உருவாகும் வெளி பற்றிய மௌனம் தமிழ் நிலத்தின் ஆதார பண்பாட்டில் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறதா, இல்லை மொழியின் உலக அலைச்சலின் கீழ் சர்வதேசிய தன்மை அடையச் சாதகம் கொள்கிறதா என்பதெல்லாம் சூழலில் பல சாதகமான படைப்புகள் வரும்போதுதான் இதை ஒட்டிய பேசு பொருளாக்க ஆய்வாளரால் முடியும்.

தமிழில் மொழியியல் பிரதிகளை அனுபவத்தின் சூட்சுமமாக மாற்றி தர்க்கத்தைக் குலைக்காமல் மேலதிக நுட்பங்களை எட்டியவர்கள் என்ற முறையில் பிரமிள், மௌனி போன்றவர்களை நாம் கூறும்போது படிமங்களின் வீச்சும் வாசகக் கூருணர்வும் இணைந்த ஒரு புள்ளியாகத்தான் நாம் அதை எடுத்துக் கொள்ள முடியும்.

நாளடைவில் பிரமிளோ, மௌனியோ தங்களது படைப்பில் இறந்து விடுகிறார்களா அல்லது ஒரு தலைமுறை வாசகர் முற்றிலுமாய் அற்றுப் போய்விடுகிறார்களா என்பதுதான் புதிராய் இருக்கிறது. இதுவே பிரதியில் அனுபவத்தைச் சூட்சுமமாக்கி தர்க்கப்படுத்தும் முயற்சிக்குக் கிடைக்கும் தோல்வியாக இருக்கிறது.

கிரணம் கவிதைகளின் படைப்பாளி தமது அனுபவத்தைச் சூட்சுமம் ஆக்காமல் பகிரங்கமாக்கித் தர்க்கத்தைக் குலைப்பது அல்லது யூகத்தில் விடுவதை அன்றைய மௌனி முதற்கொண்டான கவித்துவ மொழி ஆளுமைகளுக்கு ஒரு எதிரான செயல்பாடாய் கருதியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

முற்றிலும் பிரேமிளோ மௌனியோ இன்னும் சில இலக்கிய நுண்ணறிவு கொண்டவர்களோ சஞ்சரிக்க முடியாத நிலப்பகுதிகளின் இருளை நோக்கிப்  படிமவியல் மற்றும் மிகை யதார்த்த வழி குவிந்திருக்கும் கிரணம் காவியங்கள் வழி அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா என்கிற தத்துவத்திற்கு அகப்படாத மொழிச் சட்டகங்களை அல்லது ஒரு இயந்திரவியலை கொலை மற்றும் தற்கொலைகளின் நிலவெளியாக சிருஷ்டிப்பதன் மூலம் அறிவின் பயங்கரத்திலிருந்து விளிம்பின் மொழியை பிரேதாவின் பிரதிகள்  படைப்பாளி தன் பிரக்ஞைக்குட்பட்டே மீட்டெடுக்க முனைந்திருக்கிறார் என்பது அக்காலத்தில் நிகழ்த்திய ஒரு இலக்கிய வெளியேற்றம் என நாம் சுவீகரிக்க முடியும்.

கனவுகளின் மொழி ஒருவித பித்து நிலையை அடையும்போது எல்லா எதிர்மறைக் கூறுகளும் பொது வெளியைத் தகர்த்தபடி தனக்கான ஞாபகத்தை அதன் சிதைவிலிருந்தே புதியதாக வடிவமைத்து விடுகிறது என்பதுதான் பிரேதவின் படைப்பில்  நமது கண்டு பிடிப்பாகிறது. கிரணம் காவியங்களின் இடையே காணப்படும் உரைநடை இழைகளில் தோன்றும் படிமங்களும் உலகங்களும் இன்றைய பல இளம் கவிஞர்களின் படைப்பில் அறிந்தோ, அறியாமலோ எளிய கண்டு பிடிப்புகளாக தொடர்ந்து வெளிப்படுகின்றன.

மனித சமூகத்தின் அனைத்து இயங்கு தளங்களையும் மொழி ஒரு நீதிபதியைப் போல தீர்மானித்துக் கட்டமைத்திருக்கிறது. மொழியின் மேலதிகமான கையிருப்பினை உடையவர் தனக்கு கீழ் மொழியின் தகவலறிவற்றவர்களை வசக்கி, தான் ஒரு அதிகாரமாக செயல்படவே வரலாறு, பண்பாடு, நிர்வாகம், நன்னடத்தை, சமூக நலம் என்று ஒரு சட்டகத்தை மொழிக்குள் இறுக்கிக் கட்டுகிறார். இச்சட்டத்தை அரசியல் ரீதியாகக் கைப்பற்றும் ஒரு அமைப்பு அதன் நலன்களையும் கைப்பற்றிக் கொண்டு தன்னை முன்னிறுத்தியே ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்ற விதியை முன்மொழிகிறது. ஆக மொழியின் மேலான பண்பு நடத்தைகளைக் கைக்கொள்ள முடியாத வாய்ப்பற்ற அடையாளமற்ற மனிதக் கீழ்மைகள் போன்றவை ஆதிக்கத்தையும் அதன் நலன்களையும் மொழியின் கைக்கூலியான அரசியலைப் பயன்படுத்திப் பெறமுடியாமல் இன்னும் கற்றுத் தேறவேண்டிய சமூக வளர்ச்சியற்ற பண்பற்றத் தொகுதிகளாக தன்னளவில் இருத்தி வைக்கப்படுகின்றன என்பதுதான் உயர்ந்தோர் காட்டும் உலக அறவியல், சமூக விளிம்புகளின் சலனங்களைக் கண்காணித்து உடல் ரீதியாக கொன்றழிக்கும் சுட்சுமங்கள் இன்று அறிவிற்கு அப்பாற்பட்டு மூன்றாம் உலகங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்கவியம் என்பது பல்வேறு இந்திய இன, சாதிய, பன்மைத்துவத்துக்கு கீழ் அதிகார உளவியலாகவும் கோரிக்கையின் ஏக்கமாகவும் வடிவம் கொள்ள துவங்கியிருக்கும் வேளையில் பிரேமின் பல கட்டுரைகள் நமக்குச் சமகாலத்தை இழுத்துப்பிடித்து கண்முன் நிறுத்துகின்றன. 1987 வாக்கில்  உறைந்துபோன, ஏராளமான கட்டமைப்புகளைச் சிதைத்து மாற்று வழியில் ஒரு புனைவு நாடகத்தைத் தனது கிரணம் காவியத்தின் வழி அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.  அதன் நான்கு இதழ்களில் வெளிப்பட்ட தலைப்புகள் ‘உருவிலிகளின் மயானத்தில்’, ‘எலும்புக் கூடுகளைப் பற்றிய சில ஆராய்ச்சியுரைகள்’ ‘கபாலங்களைப் பற்றிச் சில வதந்திகளும் திறக்கப்படாத அறைகளும்’, ‘நிழல் நெரிசல்’, ‘கண்ணாடியின் முகங்கள்’,  என்பதாக வகைமைப் பட்டிருக்கின்றன.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதை முதன்முதலாக என் நண்பர்களோடு, குறிப்பாக செல்மா பிரியதர்ஷன், இனியன் போன்றவர்களுடன் வாசிக்க நேர்ந்தபோது அதன் உரையாடலின் கீழ் எங்களை வெளிப்படுத்த முடியாத பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். அவற்றை இலக்கியப் பிரதிகளாக இனம் கண்டு கொண்டபோது ஒருவித துணிச்சலும் குற்ற உணர்வின் வடிகாலும் ஏற்பட்டது. மற்றபடி அதன் தலைப்புகளை இதுவரையிலும் வேறு எந்தப் பதிவிலும் நாங்கள் காண முடியவில்லை.

ஒரு வகையில் சொல்வதனால் இவற்றை நவீனத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிரதிகள் என்று சொல்லலாம். அல்லது பின்நவீனத்தைத் தர்க்கத்துக்கு வசப்படுத்திய பிரதி என்றும் நாம் கூடுதலாக முன்வைக்கும்போது அதன் கவிதைகளில் தென்படும் சர்ரியலிசத் தன்மைகள் கடந்த 37 ஆண்டுகளில் மாற்றம் பெற்று நடைமுறை யதார்த்தங்களாய் இன்று நம்முன் நிமிர்ந்து கொண்டிருப்பதைக் காண நேர்கிறது.

பாலியல் கனவுகளின் இளம் பிராய நடத்தைகள் மனத்தடையற்று பதிவாகி இருக்கும் கிரணம் எழுத்துகள் அதீதன், ஆத்மார்த்தி, அரூப சைத்ரீகன், பிரேதா, பிரேதன் போன்ற சொல்லப்படாத உருவிலிகளுக்குள் நடந்த உரையாடலாய் இருப்பது நவீனத்துவ கவிதையியலைத் தாண்டிய புதிய உத்தியாய் இருப்பதை மறுவாசிப்பில் உணர முடிந்தது.

சமஸ்கிருதச் சொற்களை அதன் உள்ளார்ந்த பொருளிலேயே பயன்படுத்தத் தெரிந்திருக்கும் படைப்பாளி கவித்துவத்தின் மொழிச் சிக்கனம் மற்றும் ஆழ்மன அடுக்குகளில் படிந்து கிடக்கும் பரவசங்களின் மீதான ஆர்வங்களை ஒரு வீச்சாக எழுப்ப வேண்டும் என்கிற அளவில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கக்கூடும். ஆனால் அவற்றைத் தமிழ்ப்படுத்தி இணைக்க முயன்றாலும்கூட வீர்யம் குறைவுபடாது. என்பதே எப்போதும் புதியதாகத் தோற்றமளிக்கும் கிரணம் கவிதைகளின் படைப்பாக்க வெற்றி.

சிதைவுண்ட, பிளவுண்ட, பிறழ்வு மற்றும் வாதைகள், வலிகள் என ஆண், பெண் உடல்களின் கதறல் ஒலிக்கும் கிரணம் இதழில் வந்த இக்காவியங்கள் முழுமையாக நூல் வடிவம் பெறும் போது அதன் மொழியானது, வாசிப்பில் என்ன சிக்கலைக் கொண்டு வந்தாலும் அது தரும் அதிர்வுகள் உடலின் பிரக்ஞைக்காக மனம் அலையும் வெளியின் மர்மங்கள், பசி, காமம், என்ற இயல்பூக்கத்தின் மீதான வேட்கை, விழைவு, தாபங்களை இறுகப் பற்றிக்கொண்டு கலாச்சார, பொருளாதார, அரசியல் கண்காணிப்பிலிருந்து வெளியேறும் உடலின் அறக் கோரிக்கைகள் வழியாக இயங்கி ஒரு இளம் படைப்பாளி முதல் நெருக்கடி கொண்ட மனதின் விடுதலைக்காக ஏங்கும் எவரொருவரையும் அது பகிரங்கமாக பிரதிநிதிப் படுத்துவதைப் புதிய அறமாக நாம் பார்க்க முடியும்.

அந்த வகையில் தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிரணம் காப்பியங்கள்  அளித்துள்ள மாற்றுப் பார்வை மிக முக்கியமானது. அது இப்போது பிரேதாவின் பிரதிகள்  என்ற பெயரில் எதிர் வெளியீடாக வெளிவருவது தற்கால நவீன தமிழ்க் கவிதையின் பாய்ச்சலுக்கு மேலுமான ஒரு உந்துதலாக இருக்கும் என்பது என் போன்றவரின் நம்பிக்கை.