தோழர் பொதியவெற்பனின் இலக்கிய வழக்குரைப்பு முறைமை: சில குறிப்புகள்

சண்முக. விமல் குமார்

 • தோழர் பொதியவெற்பன் எழுத்துகள் குறித்த அறிமுகமானது எனக்கு, தமிழவனை அவர் ஆழமாக வாசித்து, கொண்டாடி, விமரிசித்து வருவது குறித்து அறிந்து கொள்ளத் தொடங்கிய போது ஏற்பட்டது.
 • எனினும், நேரடியாக அவருடைய நூல்களை அப்போது வாசிக்கத் தொடங்கி இருக்கவில்லை. மாறாக, கிருஷ்ணகிரி NCBH சென்றிருந்தபோது அங்கு கண்களுக்கு அகப்பட்ட  பேரா. வீ. அரசு எழுதிய “தோழர் பொதியவெற்பனின் அரைநூற்றாண்டுப் பயணம்” என்ற குறும்பனுவலைத்தான் நான் முதன் முதலில் வாசித்தேன்.  
 • அதன்பிறகு, வீ. அரசுவால், ஒரு ஆளுமையின் பல்வேறு பரிணாமங்களை அதன் பின்னணியுடன் விரித்து தன் புலமை வீச்சினால் எழுதப்பட்ட அந்நூலை அடிக்கடி நண்பர்களுக்குப் பரிந்துரைப்பதையும் பரிசளிப்பதையும் வழக்கமாகக் கொள்ளத் தொடங்கினேன்.  
 • பிறகொரு சந்தர்ப்பத்தில் ’கனலி’ நான் பரிந்துரைக்க விரும்பும் நூல்களைக் குறித்துக் கேட்டபோது, பட்டியல் நீண்டதென்பதால், அதனை ஒரு கட்டுரையாகவே வரித்துத் தர நேர்ந்தது; அப்பட்டியலிலும், இக்குறு நூல் இடம்பெற்றது. அக்கட்டுரையில், இந்நூலினைக் குறித்து, ‘பொதி என்கிற ஆளுமை குறித்து அறிமுகம் வேண்டுவோர் நிச்சயம் படிக்க வேண்டிய எளிய (23 பக்கங்களே கொண்ட) அதேசமயம் பிரம்மாண்டமான குறும் பனுவல் அது.’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
 • அதையடுத்து, மணல்வீடு மூலம் வெளிவந்த ’பறை’ இதழை வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்தவற்றுள் மிகவும் பிரத்தியேகமான இதழ் அது. எப்படி பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை ஒரே இதழில் எழுதச் செய்தார் என்று யோசித்திருக்கிறேன்.  
 • அவ் இதழின் பின்னட்டை முழுக்கவும், நான் விரும்பிக் கேட்ட, கேட்கும் ’கத்தாரின்’ கர்ஜனை தொனிக்கும் கம்பீரமான படம் இடம்பெற்றிருந்தது; தெலுங்கானா, ஆந்திர பிரிவினை போற்றாட்டகாலத்தில் அம்மாநில நண்பர்களுடன் பழக நேர்ந்தவன் என்கிற பின்னணியில், கத்தார் அப்போதே எனக்கு அறிமுகமாகி இருந்தார். 
 • கத்தாரின், ”பொடுஸ்துன்ன பொத்து மீத நடுஸ்துன்ன காலமா.. போரு தெலுங்கானமா.. போரு தெலுங்கானமா.. கோட்லாதி பிராணமா..” என்ற பாடலை இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணமும் ஒருமுறைக் கேட்ட போது, கணினி முன் வளைந்திருந்த என் முதுகு, ஒரு ஐந்து நிமிடங்களுக்குத் திமிறிய என் நெஞ்சுக்குத் துணையாக நிமிர்ந்தடங்கியது. கண்களில் மதியத்தின் அனல்.
 • கத்தாரின் படம் போட்ட அந்த இதழை நினைத்துப் பார்க்கும் போது, கத்தாரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால், பலே பலே பலே ஹு ஹா ஹு ஹா என்று குதூகலமாய்ச் சொல்ல வேண்டுமென்று படுகிறது; கத்தாரின் குதூகலம் என்பது தெம்புமிக்கது; வாதையை முறித்து, சாதிக்கத் தூண்டுவது. பொதியின் எழுத்துகளிலும் அதன் வாசம் இல்லாமல் இல்லை.
 • அடுத்து, ’வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்கிற நூலினை தோழர் பொதியவெற்பன் நேரில் தன் கையொப்பம் இட்டுத் தந்ததை நினைத்துக் கொள்கிறேன்.
 • அந்நூலினை எனக்கு சிறப்பு நிலையில் தந்ததற்கு ஒரு நோக்கமும் அவரிடம் உண்டு. அந்நூலில், தமிழவனின், ’நடனக்காரியான முப்பத்து ஐந்து வயது எழுத்தாளர்’ என்கிற நூல் குறித்த அவருடைய வாச்சியம் இடம்பெற்றிருந்தது; அத்தோடு, அக்கட்டுரையில், தமிழவன் குறித்த என்னுடைய ஒரு வாச்சியம் குறித்த மேற்கோளும், எனக்குக் கட்டியங்கூறலும் இடம்பெற்றிருந்தது.
 • அவர் கூற்று: ‘ஒவ்வொன்றும் அதனதன் இயற்கையில் இருந்தால்தான் மனித மூளை குழம்பாமல் செயல்படும் (என்பது) நாச்சரல் ஹிஸ்ட்ரியின் மூலத்துவம்’ இதுதான் கதைசொல்லி கூற்றாக வெளிப்படும் அவதாரம் கதைமையின் ஆதாரசுருதியாகும். இம்மூர்ச்சனை இழையறாமல் இதன் கதையாடல் எவ்வெவ்வாறெல்லாம் குறுக்குமறுக்குமாகப் பின்னப்பட்டுள்ளது எனும்பாங்கை தொல்காப்பிய திணையவியல், அகம் – புற நோக்கு, இயல்புவாத (சாங்கியம்) அடிப்படைகளில் அற்புதமாக அகழ்ந்தெடுக்கும் பொருள்கோடல் விமர்சனத்தால் நம்மை மலைக்கவைக்கிறார் சிற்றேட்டின் கண்டுபிடிப்பான வித்தியாசமான விமர்சகர் சண்முக. விமல் குமார் (புதுப்புனல் மே 2016) ‘எழுகபுலவ என’ பாரதி பாணியில் அவருக்குக் கட்டியங் கூறுவோமாக. (2018: 249)
 • வழக்கமாக, தான் எடுத்துக் கொள்ளும் பொருண்மை தொடர்பான முந்தைய வேலைகளை ஒட்டியும், உறழ்ந்துமே எழுதத் தொடங்கும் வே. மு. பொதியவெற்பன் என்னை தன் கட்டுரையின் தொடர்பின் மேற்கோள் காட்டியது ஆச்சரியத்திற்குரியது அல்ல.
 • அதேபோல, ஒருவரை இனங்கண்டு அவரைப் பாராட்டுவதில், குண்டு சட்டி முன்னத்திகளைப் போல, ஆள், அவர்தம் பூர்வீகம் போன்றவற்றையெல்லாம் பார்ப்பவரல்ல பொதி. எனவே, அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் அறிமுகமாகாத நிலையிலுங்கூட, என் கட்டுரையை விதந்து என்னை மனப்பூர்வமாகப் பாராட்டி, ஆசிய வழங்கியதும் ஆச்சரியத்திற்குரியதல்ல.  
 • ஆனால், உடன் ஒரு வேட்டு அந்நூலில் எனக்காகக் காத்திருந்தது. ’தமிழில் தத்துவம் இருக்கவில்லை எனப்பேசுமுகமாக தமிழவன் பார்வைகள் தம்முள்ளே முரண்பட்டுக் காணக்கிடைக்கின்றன.’ (2018: 249) என்று முன் சுட்டிய கட்டுரையில் சுட்டி சென்றவர், திடீரென்று, ‘இங்கே முன்வைக்கப்பட்டுள்ள விவாதத்திற்கான புள்ளிகளை எல்லாம் எதிர்கொண்டு சண்முக. விமல்குமாரை இதன்மீதான விவாதத்தை முன்னெடுக்குமாறு வேண்டுகிறேன்.’ (2018: 250) என்றும் அழைக்கலானார்.
 • தமிழவனின் கருத்துகளை முழுமையாக வாசித்தப் பின்பே என்னால் இதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்க முடியும். ஆனால், தமிழவனின் கருத்து தொடர்பாகப் பதிலுரைக்க என்னை ஏன் அழைக்க வேண்டும்? என்று பலருக்குங் கேள்வி எழலாம். இங்குதான் பொதியைப் புரிந்துகொள்ள சில கூடுதலான சங்கேதங்கள் தேவைப்படுகின்றன.
 • அதனையே, இந்த கட்டுரை உள்ளடக்க ரீதியிலும் சரி, ஒருவகையில், வடிவ ரீதியிலும் அலசிப் பார்க்க முயல்கிறது.
 • எனினும், இக்கட்டுரையில், அவருடைய ஏனைய நூல்கள் பற்றிய முழுமையான ஒரு சித்திரமாக இல்லாமல், ’சட்டிச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம்’ என்பது போலவும், அவர் கேட்டுக் கொண்டதற்கு விருப்புற்று இணங்கியும் அவருடைய சமீபத்திய நூலான ‘கண்டறியாதன கண்டேன்’ஐ மட்டுமே பேச விருக்கிறேன்.  

****

 • ’கண்டறியதான கண்டேன்’ கவிதைத் தொடர்பான வாச்சியங்களைப் பெரும்பான்மையும், இசை, ஆளுமைகள் தொடர்பாக ஓரிரு கட்டுரைகளையும், சிற்றிதழ் மரபு பற்றிய ஒரு கட்டுரையுமாக வெளிவந்துள்ளது.
 • (பொதியைப் போன்று கூறவேண்டுமானால்,) ’இத்தொடர்பில் நூல் பின்னிணைப்பு கைவந்த புறனடையாக’ ஒன்றைக் கூற வேண்டும்.
 • மணல்வீடு கலை இலக்கிய விழாவில் மு. ஹரிகிருஷ்ணன் என்னை இந்நூல் குறித்த அறிமுகத்தை வழங்குமாறு பணித்தார். அப்போது, நல்வாய்ப்பென நானும் இசைந்தேன்; எனினும், காலக்கெடு குறுகியதாக  இருந்தமையால், இந்நூலின் முதல் மற்றும் இறுதி கட்டுரைகளை மட்டுமே வாசித்து ஒரு உரையினை, பொதியைச் சற்று போலி செய்வதுபோன்ற நடையில் எழுதி, வாசித்தேன்.
 • இந்தக் குறிப்பு இங்கு முக்கியமில்லை என்றாலும், அந்நிகழ்வில் நான் நிகழ்த்திய உரையினைச் சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், அதில் நான் விமரிசனமென்றுச் சுட்டியதையும், தொனிக்கச் செய்ததையும் உட்செலுத்தி’யே’ அதற்குரிய ஒரு பதிலையும் வேகமாய் எழுதி அதனை இந்நூலின் பின்னிணைப்பாகவே தந்துவிட்டார் பொதிகைச் சித்தர்!  
 • இந்த வேகம், விவாதத்தின் மீதான தொடர் நாட்டம் என்பவற்றை எல்லாம் பார்க்கும் போது, தான் உட்பட, எவர் மீதும் எந்தச் சார்புமின்றியும் எப்போதும் இலக்கிய விழுமியத்திற்காகத் துலாக்கோல் தூக்குபவரே பொதியவெற்பன் என்று எனக்குத் தோன்றுகிறது. அதேசமயம் துலாக்கோல் தூக்குபவர் என்பதால் அவர் நீதிபதியைப் போல அதிகாரத்துடன் நடந்து கொள்கிறார் என்கிற முடிவுக்கும் வர வேண்டியதில்லை. காரணம், பொதி, ஒரு கருத்து சார்ந்த முடிவுகளை நெருங்கும் நிலையிலும், வழக்குரைப்பாகவே கூறி, எஞ்சியவற்றை வாசகர்களிடம் விட்டுவிடுபவராக உள்ளார்.  
 • அதுபோன்றதொரு வழக்குரைப்பில்தான் என்னையும் (முற்சொன்ன கட்டுரையில்) அவர் வாதத்திற்கு அழைக்க நேர்ந்தது.  
 • இப்படி என்னை மட்டுமில்லாமல் தன் விவாதப் பொருண்மைக்குள் நேரடியாகவோ, இமி நிலையிலோ வரும் யாரையுமே அவர் விட்டுவைத்தாரில்லை. இலக்கியத்தின் பொருட்டான எல்லோருமே தன்னோடு விவாதிக்கத் தக்கவர்களே, விவாதிக்க வேண்டியவர்களே என்பது பொதியின் எண்ணமாக வெளிப்படுகிறது.
 • ஆனால், இலக்கியத்தின் பொருட்டான இந்த வரிப்பு எல்லோரிடமும் இருப்பதில்லை; என்னிடம் உட்பட என்பதே வாஸ்தவம்.   
 • இவ்வளவு மூப்பிலும் சரி, மற்றவர்களின் தொடர் மௌனத்திற்குப் பிறகும் சரி எப்படி இப்படி இவரால் தொடர்ந்து உற்சாகம் இழக்காமல், அதைவிட முக்கியமாய் சலிப்படையாமல், அதைவிடவும் முதன்மையாய், இலக்கியவாதி,வியாதிகளிடமும், எந்தவித வெறுப்பையும் சாற்றாமல் இவரால் இயங்க முடிகிறது என்பதே எனக்கு வியப்பளிக்கக் கூடிய விசயம்.
 • இது முன்பு அவர் வரித்துக் கொண்ட ‘தானொரு இலக்கிய வழக்குரைஞர்’ என்ற பாத்திரத்திற்கு ஏற்றார் போல் அவர் ஆடும் கூத்தே. (அவருமே, தன்னை ஓரிடத்தில், கூத்துமரபினனாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். அன்றி, கட்டுரை நெடுகிலும் வாக்கிய முற்றாய் வரும் ஏகாரம் அவர் விசேச நடையின் பாதிப்பே; வாசிப்பு இன்பம் வேண்டி றாமானந்த சித்தராகிய எனது ஆட்டமே. ‘என் மொழிநடை மீதான றாமானந்த சித்தப் பகடியாட்டத்தை ரசித்தேன், அதில் லயித்தேன்.’ (2022: 193) என்று அவரே கூறியுள்ளதால் இந்த சுதந்திரம் எனக்குக் கிட்டியுள்ளது; அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.)

**

 • இக்கட்டுரையின் பொருண்மைகள் ஏற்கனவே சுட்டியதைப் போல, கவிதையைப் பெரும்பான்மையாகவும், இசை, ஆல்பர்ட் பற்றிய நூல் குறித்ததுமாகவும், இதழியல் குறித்ததுமாகவும் மூன்று பகுப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதழியல் தொடர்பான கடைசி பகுதியினை இதழியல், வரலாறெழுதியல்  என்று குறிப்பிட்டிருந்தாலும், அவர்தம் முறைமையில், வரலாறெழுதியல் எல்லா கட்டுரைகளின் அணுகுமுறைக்குள் வருவதே. (வருவதே ஆகும்.)
 • ஒரு கட்டுரையின் மையப் பொருண்மை, அதன் வரலாறு, சமூகவியல், இலக்கியவியல் பின்னணிகள் ஆகியவற்றை ஒட்டிய தகவல்களை, அதாவது, அப்பொருண்மை தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், முன்னத்தி வேலைகளையும், புறநடைகளையும், ஒருசேர ’அள்ளித் தருபவர்’ பொதியவெற்பன். இது அவர் முறையியலில் முக்கியக் கூறு.
 • உதாரணமாக, இந்நூலில் வரும் கவிதைகள் பற்றி கட்டுரைகளை எடுத்துக் கொள்ளலாம். கவிதை என்றால் ஒரேவகைப்பட்டதுதான் என நாம் மயங்கக் கூடும். ஆனால், அப்படியில்லை. எழுத்து மரபிற்கும், வானம்பாடி மரபிற்கும் பார தூரமான வித்தியாசம் இருக்கிறது. எழுத்து மரபினை பின்பற்றும் அக்காலத்திய (இக்காலத்தில் அது பெரிதும் முயங்கிவிட்டபடியினால்) ஒருவர் மற்றொன்றை ஏற்பாரில்லை.
 • ஆனால், பொதி, எழுத்து மரபினர் பற்றியும் சரி, வானம்பாடி மரபினரையும் சரி அதனதன் முக்கியத்துவத்தில் வைத்து புரிந்துகொள்ளக் கூடியவராகவே உள்ளார்.
 • அதேசமயம் கண்மூடித்தனமாக ஒன்றை ஆதரிப்பதும், மற்றுமொன்றை புறக்கணிப்பதும் இல்லை; ஆதரிக்கும் தறுவாயில், அதனை சன்மாகவேனும் விமரிசிப்பவரே பொதி.
 • மேலும், பொதி, ஒன்றை விமரிசிக்க மட்டுமே செய்யக் கூடியவர்.

புறக்கணிப்பு என்பது பொதியிடம் இல்லை.

 • இதற்கான உதாரணங்கள்:
 1. மணிக்கொடி, மற்றும் எழுத்து இதழ்களின் பல்வேறு பங்களிப்புகளைப் பாராட்டும் முகமாக  எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், பொதி, மணிக்கொடி பின்னாட்களில் ராஜாஜி சார்பு கொண்டு தேய்ந்ததையும் ஆனால், எழுத்து தன் கடைசிக்காலம் வரை – அதாவது செல்லப்பா – அவ்வாறு நடந்துகொள்ளாமைப் பற்றியும் ஒருசேரச் சுட்டிச் செல்கிறார்.
 • மற்றுமொரு கட்டுரையில், வானம்பாடிகள் குறித்த மிக முக்கிய விமரிசனமாக உள்ள ’அதிகச் சத்தம்’ என்ற குறைபாட்டினை ஒட்டி, ஒரு மேற்கோளைக் காட்டும் பொதி, ”இதன் மறுபக்கமாய் ‘கவிதைகள்’ கோஷங்கள் ஆகின்றதெனக் குற்றஞ்சாட்டுகின்றார்கள் அவர்கள். ஆனால், கவிதைகள் முழக்கமாகவில்லையே என்று நான் கவலைப்படுகின்றேன் என்பான் வங்கக் கவிஞன் சரோஜ்தத்.” (2022: 41) என்கிறார்.
 • ஆனால், இந்த மேற்கோளைக் கொண்டு அவர் வானம்பாடி மரபின் முழுமையையும் ஏற்றுக்கொண்டார் என்கிற முடிவுக்கு நாம் வந்துவிடவே முடியாது. அங்குதான் பொதி, தனித்து நிற்கிறார்.

[பல்வேறு மேற்கோள்களை அடுக்கிச் செல்பவர் பொதி என்றாலும், அவை வழமையான கட்டுரைகளில் தனக்குச் சாதகமான கருத்துக்கு ஏற்ப அடுக்கப்படும் ‘சான்றாதாரங்களைப் போல’ அல்லாமல், முற்சொன்ன பின்னணி கூறும் ஒன்றாக, மாற்றுக் கருத்துகளின் வரலாற்று எழுத்தியலாக, உள்ளதை ‘எடுத்து’க் காட்டுபவையாகவே காணப்படுகின்றன.

இதுவே ஜெயமோகன் போன்றவர்களிடமிருந்து பொதியவெற்பனை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஜெயமோகனிடம் மாற்றுக் கருத்துகளை எடுத்துக் காட்டும் பண்பு இல்லை என்று முழுமையும் கூற முடியாவிட்டாலும், தான் சொல்ல வந்த கருத்திற்கு வாசகரை இணங்கச் செய்யும் தன்மை அவர் எழுத்தில் துலங்கி நிற்பதாக உள்ளது. தன் கருத்தை தானே மறுத்து பின்னாளில் அவரே எழுதும் போது முந்தைய கட்டுரைகளில் கூறியவற்றிற்கு மாறான சான்றாதாரங்களை அடுக்கிக் காட்டுபவராக அவரைக் காணலாம்.  

ஆனால், பொதியவெற்பனோ, தன் கருத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதனையும் வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. ஏனெனில், அவர் தன்னை தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்து வரக்கூடியவர். தன் கருத்துகளுக்கு மறுப்பினை, விமரிசனத்தைத் தொடர்ந்து கேட்டும், உரியதையும் ஏற்றும் வருபவர். அப்படிச் சொல்பவர்களின் மீது வசைமாரி பொழிந்து; வெறுப்பினைக் கக்குபவர் அல்ல.

உதா. நூல் வெளியீட்டு விழாவில் நான் சுட்டிய சில விமரிசனங்கள் தொடர்பாகக் கூட, வேகவேகமாய் ஒரு பதிலை எழுதியதோடு, கட்டுரைகளுக்குத் தேவையான சில திருத்தங்களையும் அவர் மேற்கொண்டமை எம்மைப் போன்றோர் அம்முன்னத்தியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய தொழிற்பாடாகும். அன்றி, இந்த பண்பையுமே அவருடைய முறையியலின் ஓர் அங்கமாகவே கொள்ள வேண்டி உள்ளது.]

 • வானம்பாடிகளுக்குள்ளேயும் கூட சில முரண்கள் இருப்பதையும், அதில் தக்கது எது என்றும் அவர் தன் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.
 • ‘உலகையே புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை நம்மில் யார் எழுதப்போகிறோம்’ என்று, மேத்தா வானம்பாடிகளை நோக்கி எழுப்பும் வாக்கியத்தைக் கட்டுரையொன்றின் தொடக்கத்தில் சுட்டிக் காட்டும் பொதி, இதற்குப் பதில், ”வானம்பாடிகள் மத்தியிலிருந்து சிற்பியிடமே கிடைக்குறது” (2022: 40) என்கிறார்.

அந்த பதிலின் ஒரு பகுதி: “கவிதை என்ன செய்யும்? தலைகீழாய் உலகத்தைப் புரட்டிப் போடுவது கவிதையின் வேலை அல்ல. அது சாத்தியமும் அல்ல.” (2022: 44) என்பதாகும். இதனை வெறும் பதில் என்று மட்டும் அவர் சுட்டுவதில்லை மாறாக, “சரியான விடை” (மேலது) என்று கூறுவதன் வழி தன் தரப்பினை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.  

அதுபோல், மற்றுமொரு இடத்தில், ”ஒட்டுமொத்த வானம்பாடிகளின் சொல்லணித் தோரணைகளுக்கு மத்தியிலிருந்து, வித்தியாசமாய் எப்படி இப்படி, ‘தாகம் தொலைக்கும் சிறுநதியாய் என் கவிதை நடக்கட்டும்’ என அடக்கிவாசிக்கும் ஒற்றைத்தனிக்குரலாய் இது சிற்பிக்கு மட்டும் சாத்தியமாயிற்று’ (2022: 45) என்று வியக்கிறார்.

இந்த வியப்பு வெறும் வியப்பல்ல, மாறாக, விமரிசனமும் ஆகும். இம்மேற்கோள் வாக்கியத்தில் இடம்பெறும்,

சொல்லணித் தோரணைகளுக்கு மத்தியிலிருந்து, ‘எப்படி இப்படி என்று வியக்கத்தக்க, ‘வித்தியாசமாய் தொனிக்கும், அதன்பொருட்டு, ’ஒற்றைத்தனிக்குரல்என்று சுட்டத்தக்க அந்த குறிப்பிட்ட ஒருவருக்கு ‘மட்டும்’ எப்படி ’சாத்தியமாயிற்று என்று ஆச்சரியப்படத்தக்கவராய் சுட்டிச் செல்லுதல் வழி அவருடைய விமரிசனத்தின் தொனியையும் அவர் வெளிப்படுத்திவிடவே செய்கிறார்.

அன்றி, இத்தோடு அவர் நிப்பாட்டி விடுவதில்லை. மாறாக, சிற்பி அவ்வாறு தனித்திருப்பதற்கானக் காரணங்களையும் அலசுகிறார்.

அத்தோடு, சிற்பி தொடர்பான ஞானியின் கூற்றொன்றையும் மறுக்க முற்படுகிறார்.

 • ”தமிழ்க் கவிதை மரபுக்குள் பக்தி இயக்கம் ஆழ்ந்த சுவடுகளைப் பதிந்திருக்கிறது. பக்தியியக்கத்தின் பதிவு சிற்பிக்குள் இல்லை”  (2022 : 49) என்பது பொதியவெற்பன் மேற்கோள் காட்டும் ஞானியின் கருத்தாகும்.
 • இதற்குப் பதிலளிப்பதையே, அதாவது ஞானியை மறுத்து, தன் கட்டுரையின் நோக்கமாக வரித்திருக்கிறார் என்பது இவண் குறிப்பிடத்தக்கது.
 • சிற்பியின் பவள விழா மலருக்காக எழுதப்பட்ட அக்கட்டுரையின் வாச்சிய எல்லையை (Study limit) கூறும்போது, பொதி, இவ்வாறு கூறுகிறார்: “…. இவற்றில் சில அம்சங்களை இனம் காண்பதாகவும் குறிப்பாகச் சிற்பி கவிதைமொழியின் பாங்கினை விதந்தோதி அடையாளங்காணுமுகமாகவே இப்பதிவு அமைந்தியல்கிறது.” (2022: 46) 
 • வாஸ்தவத்தில் அவர் ஞானிக்கு ’மறுப்பு / எதிர்வினை’ என்று தலைப்பிட்டு எழுதி இருக்க வேண்டும். ஆனால், அதனைக் கட்டுரையின் நோக்கமாக அதனை அவர் ஆரம்பத்தில் வெளிப்படுத்தவில்லை. மாறாக, வானம்பாடிகளுள் தனித்துவமானவர் என்று தான் பாவிக்கும் சிற்பி குறித்த ஆவண நூலில், (பவள விழா மலரில்), சிற்பியின் பரிணாமம் என்று கருதத்தக்க ஒரு சிறப்பியல்பினை எடுத்துக் காட்டி, அக்கூற்றினை முதுபெரும் அறிஞரான ஞானிகூட பார்க்கத் தவறிவிட்டார் என்பதாகவே தொனிக்கச் செய்கிறார். இப்படி பலரும் தங்களின் கருத்துரைப்புகளில், வாச்சியங்களில் பார்க்கத் தவறிய பக்கங்களை, விடுபடல்களை, கருத்துப் பிழைகளை, அது ஒரேயொருவரி என்றாலும்கூட சுட்டிக்காட்டப் பொதியவெற்பன் தவறுவதில்லை. ஒருவகையில், மற்றவர்களின் கருத்துப் பிழைகளுக்குத் தானுமே பொறுப்பாளி என்பது போலவே பொதியின் செயல்பாடுகள் இருக்கின்றன; அவர்கள் கருத்துகள் சில இவர் கருத்துகள் வழி முழுமையைப் பெறுகின்றன.

இதற்குரிய உதாரணங்கள் அவருடைய நூல்கள் அனைத்திலும் பராபரமாய் விரவிக் கிடக்கின்றன; இதனை அவர் நூல்களை வாசித்த யாரும் அறிவர்!

 • மற்றுமொரு கட்டுரையில், டி. எம். கிருஷ்ணா தொடர்பான நா. விச்வநாதனின் கருத்துக்கு மறுப்பு எழுதிச் செல்லும் பொதியவெற்பன், ஓரிடத்தில், ”…….. என்றெல்லாமும் ஓஷோவை இனங்கண்டு அடையாளப்படுத்திய என் நேசத்திற்கினிய கலைஞன் விச்சுவிடமிருந்து இப்படியொரு தொனியில் ஒலிக்கும் குரலை நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்று வருத்தமுறுகிறார். (2022: 129-130)
 • கட்டுரையின் தொடக்கத்தில், விச்வநாதன் என்று கூறிவந்தவர், இவ்விடத்தில், தான் நேசிக்கும் கலைஞன் என்றும், விச்சு என்று செல்லமாக எழுதிச் செல்வதும் அவர் குணத்தை காட்டுகிறது.
 • அதேபோல, இன்னொரு கட்டுரையில், தான் கண்ட மனிதர்களைப் பற்றிய பவா செல்லதுரையின் நூலினைக் குறித்து பெரிதும் பாராட்டிப் பேசிச் செல்லும் பொதியவெற்பன், பவா ஆளுமையில் சில சிக்கல்கள் இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கருத்து கூறுவதற்கு, பொதிக்கு, அத் தனிநபர் மீது கொண்டிருக்கும் எந்த அபிப்ராயமும் தடையாக இருக்கவில்லை என்பதே இவண் விசேசித்துச் சுட்டிக் காட்டத்தக்க அவருடைய பொற் குணமாகும்.
 • ஜெயமோகன் தொடர்பான பவாவின் சாய்வுகளை விமரிசிக்கும் அவ்விடங்களில், பொதி, அதற்கான காரணங்கள் பவாவின் ஆளுமையில் உள்ளதாக அடையாளம் காட்டுகிறார்.  
 • ”அரசியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றின் இன்றியமையாமை குறித்து அறிந்தும் பொருட்படுத்தாமல் எப்போதும் உணர்வின் மீதே கவிந்திருக்கும் பவாவின் மனச்சாய்வே அவரின் பலமும் பலவீனமும் ஆகும். அவருடைய ஒப்புதல் வாக்குமூலங்களே இதனை உணர்த்திடப் போதுமானவையாகும்” (2022: 162) என்று கூறி அவ் ஒப்புதல் வாக்குமூலங்களையும் அடுக்கிச் செல்கிறார்.
 • விச்வநாதனை மறுத்து எழுதும் போது, அவரின் எதிர்ப்பக்கத்தை (அதாவது கட்டுரையில் திரண்டு வரும் அர்த்தத்திற்கான அவருடைய எதிர்முகத்தை) அவருடைய முந்தைய வேலைகளிலிருந்தே சுட்டிக் காட்டும் பொதி, பவா பற்றிய தனது பாராட்டுங்கட்டுரையில், பவாவின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதற்குத் தேவையான சான்றுகளையும் உரியவரிடமிருந்தே பெறுகிறார்.
 • ஒருவர் பற்றிய தனது கருத்திற்கும், அதன் மாற்றுக் கருத்திற்கும் என எல்லாவற்றிற்கும் அதே ஆளுமையின் வேலைகளிலிருந்தே சான்று காட்டிச் செல்லும் போது பொதியவெற்பனார் எப்படி ஒருவரை ‘முழூஉ’ நிலையில் மதிப்பிடுகிறார் என்பது வியப்பளிப்பதாக உள்ளது.   
 • புதிய மாதவி பற்றி விதந்தோதும் கட்டுரையிலும், சித்தர் பாடல்கள் பற்றிய புதியமாதவின் கருத்திலிருந்து வேறுபடவே செய்கிறார். அவர் கூற்று:

”அதேவேளையில் சித்தர் மரபென்பது மதநம்பிக்கைகளின் எச்சமாகவே பெண்ணுடலை விலக்கியே வைத்ததென்பது பிறழ் திரிபெனப் புரிதலே. சித்தர் மரபென்னும் சிந்தனைப்பள்ளி ஒரே நீர்மைத்தானதன்று. பன்மியமானதே. பட்டினத்தார், அழுகுணியார் போல்வன ஆணாதிக்கக் குரல்களே. மாறாகச் சிவவாக்கியர், கொங்கணர் போல்வோரின் குரல்கள் பெண்மையைப் போற்ற வல்லனவே.” (2022: 81)

[எத்தகைய முக்கியமான கண்டுபிடிப்பு இது. என்னைப் போன்ற தமிழாய்வுத் துறையினருக்குக் கூட இந்தப் பரிமாணம் தெரியாது; அவசரத்திற்குதவியாய் எப்போதும் சில தயாரிப்பு நிலை விடயங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. அது சல்லிசாகக் கிடைக்கும்பட்சத்தில், நாமும் கம்பு சுற்றக் கிளம்பிவிடுகின்றோம் இல்லையா? நம்மை போன்றவர்கள் மிகுந்த சூழலிலேயே பொதியவெற்பன்களின் தேவையும் சரிக்குச் சமமாகத் தேவைப்படுவதாகிறது.]

 • அன்றி, மேலது கட்டுரையில், தன் கருத்தொன்றிற்குச் சாதகமாக ஓவியாவின் மேற்கோளை எடுத்தாளும் பொதியவெற்பன் அத்தொடர்பில் இருக்கும் விடுபடலையும் இட்டு நிரப்பத் தவறுவதில்லை.  “பெரியார், அம்பேத்கர் என்றிருவர் மட்டுமே எனல் பொருந்தாது. இத்தொடர்பில் ஓவியா காணத்தவறியதோர் ஜோதி ராவ் பூலே, சாவித்திரி பாய் பூலே இணையராவர்.” (2022: 80)

[உண்மையில், இவ்விணையரின் மதிப்பினை தமிழ்ச் சமூகமும் சரி, தமிழகத்துக் கல்விப் புலங்களும் சரி; தலித் இயக்கங்களும் சரியாகப் பேசவில்லை என்பதை, இவ்விணையர் குறித்து எமது திராவிடப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றபோது உணர்ந்தேன். இன்றும் இங்கு நடைபெறும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் கூடுகைகளில் அவருடைய ஆசானான பூலேவின் படமும் சேர்ந்தே இடம்பெறும். இவ்விணையரின் முற்போக்குப் பார்வையும், விடுதலை நோக்கும் எத்தகையது என்று சில வரிகளிலேயே இக்கட்டுரையில் சில வரிகளிலேயே சொல்லிவிடுகிறார் பொதியவெற்பன்.]  

 • இப்படி அவரவர் சார்பாகவும், அவர்களே பொருட்படுத்தினார்களா என்று தெரியாத நிலையிலும் தான் ஒருவனே எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்று வழக்குரைப்பவராக இயங்குகிறார் பொதியவெற்பன்.

அன்றி, சில இடங்களில் தன்னிலை விளக்கமும் சொல்ல நேர்கிறது; ஆல்பர்ட் அவர்களைப் பற்றிய தொகுப்பு பற்றிய வாச்சியம் அது. அதில்,

அந்நூலுருவாக்கத்திற்கு ‘மானுடம்’ இதழைத் தந்து பெரிதும் உதவியவர் பொதியவெற்பன். ஆனால், அதற்குரிய நன்றியையோ, அந்த நூலின் படியையோ பொதியவெற்பனுக்கு அவர்கள் உரிய முறையில், தெரிவிக்கவோ, தரவோ இல்லை. இதனை மறுத்துப் பேசும் பொதியின் வாக்கியங்கள்கூட, ’தளம்’ இதழில் தணிக்கைச் செய்யப்பட்டே வெளியிடப்படுகிறது. இந்நூல் கூட இளங்கோ கிருஷ்ணன் தந்ததுதான் என்றும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இப்படியான சில வருத்தங்கள், கண்டனங்கள் இருப்பினும், அவரோ, அந்நூல் குறித்துப் பாராட்டிப் பேசுவதைப் புறக்கணிக்கவில்லை; அதுதொடர்பான வருத்தத்தைக் கூட கட்டுரையின் முடிவுக்கு அடுத்தே வெளிப்படுத்துகிறார். (2022: 149 & 195 – 196)

அதேசமயம் அவருடைய மற்றுமொரு கூற்று: “இம்மூவரில் பதிப்பாசிரியரின் பதிப்புப் பணியையும்; இதழாசிரியர்களின் இதழ்ப்பணியையும் ‘மலைகள்’ சிபிச்செல்வனின் இந்நூற் பதிப்பையும் பாராட்டி; மூவர் மீதான கண்டத்தையும் ஒருசேரவே பதிகின்றேன். (2022: 196)

இப்படி ஒருசேர உரியவற்றிற்குப் பாராட்டும்; அல்லனவற்றிற்குக் கண்டனமும் தெரிவிக்கக்கூடிய அபூர்வமானவர் பொதி என்பது இதன்வழி எல்லாம் வெளிப்படுகிறது.

 • இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை: தவசிக் கருப்பசாமியின் ‘அழிபசி’யை முன்வைத்து… எழுதப்பட்ட ‘கூத்துக் கவிதையியலின் ரசவாதமான அற்புதத் தற்கலப்புப் பரிமாணங்கள்’ என்கிற கட்டுரை ஆகும். இந்தக் கட்டுரையுமேகூட ஓர் அற்புதத் தற்கலப்பே.
 • சி. மணி கட்டுரை குறித்த வாச்சியத்தில், புதுக்கவிதை, மரபுக்கவிதை வரலாற்றுப் பின்னணி, சிற்பி பற்றிய வாச்சியத்தில் வானம்பாடி மரபு குறித்த இலக்கியவியல் பின்னணி, ஞானசூரி, தில்லை, புதியமாதவி பற்றிய பேச்சுகளுக்குப் பெண், ஏதிலி வாழ்வு பற்றிய பின்னணிகள் என வரிக்கும் பொதியவெற்பன், இக்கட்டுரைக்குப் பின்னணியாக, கூத்து மரபினைக் கைக்கொள்கிறார்.
 • வழக்கு, நாட்டார் மயப்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரரும்,  ’வினையன்’ போன்ற இளம் கவிஞர்களைப் பாதித்தவருமான தவசிகருப்பசாமியின் கவிதைகளைப் புரிந்துகொள்ள ஓர் அருமையான பின்னணியை இக்கட்டுரையில் தருகிறார் பொதி.
 • இக்கட்டுரையானது, எவ்வளவு காலம் அழுத்தித் துவைத்தாலும் போகாத அடர் நிறத்தைப் போல (எலித் தோலைக் கொண்டு வந்து வருடமெல்லாம் துவைத்தாலும் கறுப்பு கறுப்பே அல்லாமல் வெளுப்பாகா! – என்பது வேமனா பாடல் – மொ.பெ.: சண்முக. விமல் குமார்) நவீனக் கவிதையின் கூறுகளாக நிலைபெற்றுவிட்ட, தமிழ்க் கவிதையின் அழகியலில் கையுயர்த்தி நிற்கும் பார்ப்பனிய அழகியலை நெகிழ்த்தும் வாச்சியம் ஆகும்.
 • மேலும், எழுத்துக் கலைஞர்களிடம் இருக்கும் ஆணவம், கூத்துக் கலைஞர்களிடம் இல்லை என்பதனையும் இக்கட்டுரையில் தொனிக்கச் செய்கிறார் பொதி.
 • தவசியின் கவிதைகளில் தெறிக்கும் வார்த்தைகளையும், சொலவடைகளையும் அவர் திரட்டித் தந்து உச்சி முகரும் வேளையில், மற்றுமொரு கட்டுரையிலோ புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தங்களை ஏன் கீழே தரக்கூடாதா? என்று கேட்கிறார்.

**

 • எல்லா நல்ல இலக்கிய வாச்சியக் கட்டுரைகளிலும் இடம்பெறுபவற்றைப் போலவே, இவருடைய நூலிலும் ’சாதாரண எழுத்துக்கு, அப்பனுவலை விஞ்சும் மிகை வாசிப்பு இருப்பதாகவே சில நேரங்களில் தோன்றச் செய்கிறது; ஆனால், எதற்கும் இந்தக் கருத்தினை மீண்டும் நூலினை வாசித்துவிட்டு உறுதி செய்கிறேன்.
 • பொதியின் நூல்களில், மேற்கோள்கள் சில நேரங்களில் அளவுக்கு மிஞ்சியவையாக இடம்பெறுகின்றன.  
 • சில கலைச்சொற்களுக்கு நிகரன்களாகத் தமிழ்ச் சொற்களைத் தருவது பாராட்டிற்குரியதாகவே உள்ளது.
 • நடை என்பது ஒருசேர பலமும் பலவீனமாகவும் உள்ளது. இதனால், என்னைப் போன்றவர்கள் தங்கள் மண்டைகளுக்குச் சற்று வேலை தர வேண்டிய நிலை ஏற்படுகிறது; இதை ஒரு சோம்பேறியாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேசமயம், நான் படித்த உரையாசிரியர்களின் மொழி இதற்கு உதவி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
 • அடுத்த முக்கியமான பிரச்சனை, துணை நூல்கள் தரப்படவில்லை. அடிக்குறிப்புகளுக்கு என்று ஓர் ஒழுங்கு இல்லை. இது முழுக்க முழுக்கப் பரிசீலிக்க வேண்டியதாகும்.  
 • கட்டுரை நூல்களுக்கு, துணையன்களைப் போலவே, சொல்லடைவும் அவசியமாகும். அதனையும் கருத்தில் கொள்க.
 • இக் கட்டுரை நூல் குறித்துப் பேச இன்னும் இல்லாமல் இல்லை. இங்கு, என் நோக்கமெல்லாம் அவரைப் புரிந்துகொள்ள; அவர் நூலில் நுழைய ஒருவருக்கு வழி காட்டுவதே. அதை இக்கட்டுரை ஓரளவு நிறைவேற்றி இருக்குமானால் மகிழ்வேன்.
 • கட்டுரைகளின் பழைய வடிவங்களின் போதாமையைத் தொடர்ந்து உணர்ந்துவந்தவன் என்கிற முறையில், கட்டுரைகளின் மரபான வடிவத்தினை அவ்வப்போது மறுத்தே வந்திருக்கிறேன். பொதியும் எடுத்துரைப்பில் சிதறல் உள்ளவரே. ’புறநடைகள்’, ’இதுதொடர்பாக’ போன்ற பகுதிகள் அவர் வாச்சியத்துள் அதிகம். ஆனால், அவற்றை தேவை இல்லாதவை என்று புறக்கணிக்க இயலாதவையாக உள்ளன. உதா. தன் கட்டுரை ஒன்றில், குட்டி ரேவதியின் ”ஆண்குறி மையப் புனைவைச் சிதைத்த பிரதிகள்” நூலினைச் சுட்டும் பொதி, அந்நூலானது முதலில் வம்சி பதிப்பகத்தில் வரவிருந்த நிலையில், அதன் தலைப்பினை அவர்கள் மாற்றச் சொல்லி, அதனை நூலாசிரியர் மறுத்ததால், பின்னர் வேறொரு பதிப்பகத்தில் அந்நூல் வெளிவந்ததாகக் கூறுகிறார். இத்தகவலை அவர் புறநடையாகச் சுட்டினாலும், அதற்கு நோக்கமில்லாமல் இல்லை. பதிப்பகத்தார் பரிந்துரைத்தத் தலைப்பு எப்படி பொருத்தமில்லாது என்பதற்கும் அவர் விளக்கந் தருகிறார். எனவே, இதன்பொருட்டெல்லாமும்தான் இக்கட்டுரை இவ்வடிவில் எழுதப்பட்டுள்ளது என்பதை இங்குக் கூறிக்கொள்கிறேன்.
 • மேலும், நிறைவாக, பவள விழா காணும் தருணத்தில் இலக்கியப் பெரியவர் தோழர் பொதியவெற்பன் மலருக்காக நானுமே என்னளவில் ஒரு சிறு பங்காற்றியமையை எண்ணி நான் பெரிதும் மகிழ்கிறேன் என்பதையும் இங்கு வெளிப்படுத்திக் கொள்கிறேன். அவரை இத்தருணத்தில் நெஞ்சார வாழ்த்தி வணங்குகிறேன்.

துணையன்கள்:

 1. வே. மு. பொதியவெற்பன். (2022). கண்டறியதான கண்டேன். சேலம்: மணல்வீடு.
 2. ________________________________. (2018). வானத்தின் மீது மயிலாடக் கண்டேன். தஞ்சாவூர்: அன்னம்.