மீண்டும் ஒரு முறை

தமிழ்ச் சிந்தனைப் போக்கின் கடந்த கால் நூற்றாண்டு (எழுதப்பட்ட ஆண்டு 2000) மாற்றங்களை முன்னெடுத்துச் சென்ற குறிப்பிடத்தகுந்த ஆய்வாளர்களில் ஒருவரான தமிழவன், இலக்கியத்தை முதன்மைப்படுத்தித் தனது கோட்பாடுகளைத் தொடா்ந்து முன்வைத்து வருகிறார். கலாச்சாரம், அரசியல், தத்துவம் என வெவ்வேறு தளங்களில் தனது அணுகுமுறைகளைப் பதிவு செய்த போதும் இலக்கிய வாசிப்பு, கவிதையியல் இவற்றையே தனது பேச்சுக்களமாக அமைத்துக் கொள்வதன் மூலம் படைப்பிலக்கியத்தின்சாத்தியப்பாடுகளை விரிவுபடுத்துவதையே இவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் முன்திட்டமாகக் கொண்டிருக்கின்றன. தமிழ் அடையாளம், திராவிட அடையாளம் என்பதில் தொடங்கிய இவரது ஆய்வுகள் மார்க்ஸிசம் வழியாக பின் நவீனத்துவப் போக்குகளை அடையாளம் காட்டின. ஸ்ட்ரசுரலிசம் நூலைத் தமிழில் எழுதிய பின் இவரது விமா்சன மற்றும் இலக்கிய அணுகல்முறை தனித்த அடையாளத்துடன் பதிவுபெறத் தொடங்கியது. படிகள் பத்திரிகையைக் களமாகக் கொண்டு தனது நண்பா்களுடன் இணைந்து பல்துறை சார்ந்த அணுகுமுறைகளைத் தமிழிலக்கியப் பேச்சுப் போக்கில் முக்கியப்படுத்தியதன் மூலம் தற்போதைய தமிழ்ச் சிந்தனை வகைமைகளை வளர்த்ததில் இவருக்கு முக்கியப் பங்குள்ளது. அதுவும், இலக்கியத்தில் பிற அறிவுத் துறைகள், கலை வடிவங்கள் சார்ந்த ஒரு பிரக்ஞையை முக்கியப்படுத்தியன் மூலம் அதன் பரப்பை விரிவாக்கி தற்போது உள்ள தமிழிலக்கியச் சொல்லாடல் போக்கை பன்முகத் தன்மை உடையதாக மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. குறியியல், அமைப்பியல், பின் அமைப்பியல் வழியாக பின்நவீனத்துவ அணுகுமுறை வரை உரையாடல்களை விரிவுபடுத்தியது என்பது காலம் சார்ந்த முக்கியத்துவம் உடையது. தனது நிலைப்பாடுகளை, அணுகுமுறைகளை ஒவ்வொரு முறையும் சரிபார்த்து மாற்றி யஅமைத்துக்கொள்வதில் இவா் தயக்கம் காட்டியதில்லை என்பதே இவரைத் தொடரந்து இயக்கத்தில் வைத்திருக்கிறது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் என படைப்பாக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் தன்னை கோட்பாட்டு இறுக்கங்களில் இருந்து அவ்வப்பொழுது தளத்திக்கொள்ளும் தமிழவன் தனது மூன்று நாவல்கள் மூலம் வேறொரு அடையாளம் பெறுகிறார். ஜி.கே. எழுதிய மா்ம நாவல் வெளிவந்து அதை வாசித்த உணா்வுடன் தமிழவனுடனான உரையாடல் நிகழ்த்தப்பட்டது. அவரது மூன்று நாவல்கள் பற்றிய பரிமாற்றமாகத் தொடங்கிய பேச்சு இதுவரையிலான அவரது தத்துவார்த்த செயல்பாடுகள் பற்றியும் நிலை மாற்றங்கள் பற்றியும் என விரிவடைந்தது.
கேள்வி:: சமீபத்தில் உயிர் நிழலில் வெளிவந்த தமிழவனோடு ஓா் உரையாடல் படித்தபோது நாங்கள் கவனம் செலுத்திவரும் சில கேள்விகளுக்கு உங்கள் வழியாக பதில்களைக் காண முடிந்தது. குறிப்பாக பின் நவீனத்துவ அணுகுமுறையை இந்தியத் தமிழ்த் தளத்தில் புரிந்து கொள்வது மற்றும் இந்தியத் தமிழ் மரபுகளைப் புதிதாகப் புரிந்து கொள்வது தொடா்பாகவும், மாற்று மரபுகளை இங்கிருந்து அடையாளம் கண்டு புதுப்பிப்பது தொடா்பாகவும் சில குறிப்புகள் கூடுதல் விவாதத்திற்கு உரியவையாகத் தோன்றியன. மூன்றாவது நாவலான ஜி.கே. எழுதிய மா்ம நாவல் வாசித்தபின் இவை தொடா்பான கூடுதல் பேச்சு அவசியம் எனத் தோன்றியது. தற்போது நீங்கள் குறிப்பிடும் இந்தியத்துவம், தமிழ்ச் சிந்தனைப் பற்றி சற்று விளக்கினால் உங்களுடைய நாவல்களைப் பற்றிப் பேச முன்னுரையாக அமையும் என நினைக்கிறோம்.
தமிழவன் : நான் மேற்கத்திய சிந்தனை மரபுகளின் மூலம் நமது சிந்தனைகளையும், தத்துவங்களையும் புரிந்து கொள்வது என்பதில்தான் தொடங்கினேன். ஆனால் கூடுதலாகச் செல்லச் செல்ல பின் நவீனத்துவப் புரிதல்கள் என்னை இந்திய மரபுகள், சிந்தனைகளைப் புரிந்து கொள்ளத் தூண்டின. மேற்கிலிருந்து நாம் அப்படியே கருத்துக்களை, கோட்பாடுகளை எடுத்துக் கொள்வதைவிட அவற்றிற்கு இந்திய மரபில், தமிழ் மரபில் என்ன பதில்களை, பங்களிப்புகளைத் தர முடியும் என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். நீங்கள் முதலில் இந்தியச் சிந்தனைகளை விமா்சித்து பின் பௌத்தம் மற்றும் சிறு கலாச்சாரங்களின் முக்கியத்துவம் பற்றி பேச எந்தத் தேடுதல் தூண்டுதலாக அமைந்ததோ அதே போன்ற ஒரு வழிமுறையில்தான் நான் கூறும் தம்ழ்த் தன்மை, தமிழ்ச் சிந்தனை என்பவை முன்வைக்கப்படுகின்றன. இந்த மரபுகள் தம்மளவில் தனித்தன்மையுடன் இருந்தாலும் ஓா் உலகளாவிய தன்மையும் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. வெளியில் இருந்து இது பெற்றது போலவே உலகுக்குத் தரவும் இதில் நிறைய உள்ளது. ஆனால் இப்பொழுது உள்ள ஒற்றை அடையாளம் இந்தப் பரிமாற்றத்தைத் தடைசெய்வதுடன், ஆக்கப்பூர்வமான பகுதிகளை மறைக்கவும் செய்கிறது. தமிழ்ப் பெருமை என்ற அளவில் இது நின்று விடுகிறது. இதற்கு மாற்றகா Heterogenous ஆன இதன் தன்மைகளை அடையாளம் காட்ட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இதைத் தான் இந்தியத் தன்மை, தமிழ்த் தன்மை என்று நான் குறிப்பிடுகிறேன்.
கேள்வி:: தமிழ் மரபு சார்ந்து சில அமைப்பியல், குறியியல் கோட்பாடுகளை நீங்கள் விளக்க முயற்சித்திருக்கிறீா்கள். உங்களுடைய இலக்கியம் சாரந்த வாசிப்புகள் பலவும் தமிழிலக்கியத்தை மேற்கத்திய சிந்தனை முறையில் விளக்குவதாகவும் உள்ளது. ஆனால் உங்கள் நாவல்களை வாசிக்க தமிழிலக்கியப் பின்னணி பலருக்குத் தடையாக உள்ளதாகவே குற்பிபடப்படுகிறது. உங்கள் முதல் நாவலான ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் பற்றி மூன்று வகையான எதிர் வினைகள் நிகழ்த்ப்பட்டன. முதல் வகை : இது அனுபவத்திலிருந்து உருவாகாத வாழ்வு சாராத எழுத்து. தமிழ்க் கலாச்சாரத்துடன் உறவற்ற எழுத்து, தமிழின் இலக்கிய மரபுக்கு அப்பால் அந்நியத் தன்மையுடன் உள்ளது. புரிந்துகொள்ள முடியாதது என்பவை போன்றும், இரண்டாம் வகை : தமிழுக்கு இது மிகப் புதிது. புதிய எழுத்தை ஆரம்பித்து வைக்கும் கற்பனைப் பரப்பை உடையது. எனவே இதுவே தமிழின் நவீன எழுத்து என்பது போன்றது. மூன்றாவது வகை : இது சுயத்துவம் அற்ற எழுத்து லத்தீன், அமெரிக்க எழுத்தின் நகலாக வந்திருப்பது, கா்சியா மார்க்வெஸின் நாவலைப் போலி செய்த எழுத்து என்பது போன்றது இதில் எந்த விமா்சனத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளித்தீர்கள். எதற்கு விரிவாக பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழவன் : நீங்கள் குறிப்பிட்டது போல மூன்று வகையான கருத்துக்களைத்தான் நான் எதிர்கொள்ள நேர்ந்தது. விமா்சனங்கள், புத்தக மதிப்புரைகள், பேச்சுக்கள் போன்றவற்றில் இதில் எதாவது ஒருவகை கருத்து தொனிக்கவே செய்தது. நான் முக்கியமாக எடுத்துக் கொள்ள நினைப்பது போலி, நகல் என்ற விமா்சனத்தைத்தான். இது ஒரு தாக்குதலாக, மனதை பாதிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதற்காக மட்டும் அல்ல. இதில் உள்ள இலக்கியம் பற்றிய அறிதல் முறை. இது முன் வைக்கும் Originality என்ற கருத்தாக்கம். இலக்கியத்தில் Originality என்பது என்ன, அதற்கு இலக்கியத்தில் என்ன இடம் என்பதை நாம் விளக்கியாக வேண்டும். இது எங்கிருந்து வந்த Concept. நான் சமீபகாலமாக இந்தியத் தன்மை, கிழக்கிந்திய தன்மை என்பதற்கு முக்கியத்துவம் தருவதாகவும், இங்கிருந்து கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று வலியுறுத்தி வருவதாகவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள் இது உண்மை. இந்திய இலக்கிய மரபில் Originalityக்கு என்ன இடம்? எனது புரிதலில் Originality என்பதை நான் மறுக்கிறேன். நாம் Originality என்ற கோட்பாட்டை மேற்கிலிருந்து பெற்றோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியத்தின் வழியாக வந்து சேர்ந்த இலக்கியத்தையே நாம் இலக்கியமாக நம்பி அது உருவாக்கிய காலனியதிக்க கோட்பாட்டையே முதன்மைப்படுத்தி வருகிறோம். ஆனால் நமது மரபு முற்றிலும் வேறானது என்று எனக்குத் தோன்றுகிறது. இலக்கியம் ஒரு கலாச்சார வெளிப்பாடா, aesthetic வெளிப்பாடா என்ற கேள்விக்கு நான் கலாச்சார வெளிப்பாடு என்ற பதிலைத்தான் தரமுடிகிறது. இங்கு Originality என்பதை மறுக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தொல்காப்பியத்ிலும் சரி, சமஸ்கிருதத்திலும் சரி Originality சுயத்துவம் என்பதெற்கெல்லாம் இடமில்லை. கண்டுபிடித்தல் என்கிற வேலைக்கு இங்க இடமில்லை. இவை எழுத்தை Intertextual ஆகத்தான் விளக்குகின்றன. Julia Kristeva போன்றவா்கள் விளக்கும் அளவுக்குக்கூட நாம் சொல்லத் தேவை இல்லை. ஒரு textக்கும் இன்னொரு textக்கும் உள்ள உறவு. தொல்காப்பியத்திலோ உரையாசிரியர்கள் எழுத்திலோ புதுமை என்பது மறுக்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவல் மீது நகல் என்று தாக்குதல் தொடுத்தவா்கள் அனைவரும் சுயத்துவம், Originality என்பதை மையமாக வைத்திருக்கிறார்கள், இது கேள்விக்குரியது.
கேள்வி:: ரொமாண்டிசிசத்தின் பின் விளைவாக வந்த ஒரு கருத்தாக்கம் தானே சுயத்துவம், தனித்தன்மை என்பது
தமிழவன் : ஆமாம் அங்கிருந்து இறக்குமதி செய்யப்ட்டதுதான் இது. நான் இது குறித்து பலருடைய கருத்துக்களை வாசிக்கும் போதுகூட இக்கோட்பாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. Frederic Jamsen தனது Third World Literature பற்றிய கருத்தில் இதைத் தெரிவிக்கிறார். In Theory National தொகுப்பில் IAS Ahamed இப்பிரச்சனையை எழுப்பி இருக்கிறார். நவீன இலக்கியம் ஐரோப்பாவில் உருவாகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு எதிர்வினை உருவாகிறது. இது ஒன்று சுயம், மற்றது நகல் என்று கூற முடியுமா என்பதுதான் கேள்வி. இரண்டுமே இலக்கியம்தான். நானும் இந்நிலைப் பாட்டில்தான் இருக்கிறேன். நானும் ஒரு வகையில் react செய்கிறேன் சில சமயம் Non Fiction ஆகவும் சில சமயம் Fiction ஆகவும் விமா்சனம், கோட்பாடு ஏதோ ஓரோர் வகையில் எதிர்வினை நடைபெறுகிறது. அந்தப் புரிதலுடன் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலை ஒரு வாசகனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாசித்த பிறகும் பிடித்திருக்கிறது. ஆனால் எனது இரண்டாவது நாவலை இன்னும் விலகி நின்று வாசித்துப் பார்க்க இயலவில்லை.
கேள்வி:: ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலின் சொல்லுதல் முறையில் தமிழ் நாவல்களுக்கு அப்பாற்பட்ட தன்மை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது. தமிழின் பொதுப் புரிதலில் இல்லாத உருவகங்கள், குறியீடுகள் அதில் உள்ளன. தமிழில் எழுத்து சார்ந்த நிலவியல் தன்மை, அரசியல் தன்மை போன்றவை இல்லாததான ஒரு தோற்றம் அதன் மூலம் உருவானது. புனைவாக்கக் கூறு, அதீத நிகழ்வு சார்ந்த கதையாக்கம், தொன்மைக் கூறுகளில் ஒரு திருகல் முறை என்பவை மூலம் சற்றே அந்நியமாக அது உணரப்பட்டது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் காணப்படும் ஒரு பின்புலம், நிலவியல் அதில் அமைவதற்கு பொதுத் தமிழ் அடையாளத்திற்கு வெளியே உள்ள இயற்கைச் சூழல், கலாச்சாரம், அரசியல் சூழல் உடைய குமரி மாவட்டமும் அதனுடன் நெருக்கமுடைய கேரள வரலாறும் உங்களுக்குத் தூண்டுதலாக அமைந்திருக்க வாய்ப்பு உண்டு எதார்த்தம், மிகைப் புனைவு இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை விளக்க மற்றொன்று என மாறியும் அமையும் நாட்டார் கதைக்கூறு அந்நாவலில் இருந்தபோதும் இடம் சார்ந்த நினைவுகளில் இது சற்றே வெளியே இருப்பதாகத் தோன்றுவதற்கு உங்கள் வட்டாரத்தன்மை காரணமாக அமைந்திருக்க முடியும்.
தமிழவன் : நீங்கள் குறிப்பிடுவது எனக்கு மகிழச்சி அளிக்கக்கூடிய சப்ஜெக்ட் இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது தமிழ் நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவன் என்பதும், வித்தியாசமான குமரி மாவட்டச் சூழலில் வளர்ந்தவன் என்பதும் அந்நாவலுக்கான எனது பின்புலத்திற்குக் காரணமாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. நான் பிறந்தது திருவிதாங்கூா் பகுதி அது முன்பு தமிழ்நாட்டுடன் இல்லை. எனது சிகராமம் கிறித்துவா்களும், மற்றவா்களும் கலந்து வாழும் பிரதேசம். கல்குளம் பகுதி. அரசியல் கட்சிகளும் மாறுபட்டவை. இது லத்தீன் அமெரிக்க எழுத்துக்களுடன் என்னை அடையாளம் காணக் காரணமாக அமைந்திருந்தது. எங்கள் ஊா் சூழலும் எனது குடும்பச் சூழலும் பொதுவான இந்துத் தன்மை உடைய தமிழ்ச் சூழலுக்கு வேறுபட்டே தோன்றுகிறது. அங்கு சா்ச், அதிலிருந்து ஒலிக்கும் மணியோசை, மக்களுடைய பிரச்சனைகள் போன்றவை வெளியே இருந்து பார்க்க வித்தியாசமாகவே உள்ளது. வட்டாரத் தன்மை உடைய பன்முகக் கலாச்சாரத்தை மறுக்கும் தமிழின் பொது அடையாளம் சார்ந்து நான் வெளியே உள்ளவனாக – எனது ஊரும் மக்களும் வெளியே உள்ளவா்களாகத் தோன்றலாம். உள்ளபடி உள்ள எனது பிராந்திய மனம் அந்நாவலில் பதிந்திருந்ததை இப்பொழுது அடையாளம் காண முடிகிறது.
கேள்வி:: பொதுவான தமிழடையாளம் என்பது, குறிப்பான கலாச்சார அடிப்படை அடையாளங்களை மறுக்கக்கூடியதாகவும், கீழானதாக மதிப்பிடுவதாகவும் உள்ளது. மொழி என்று வரும் போது அது இன்னும் வன்மையாக வெளியிடுகிறது. தரப்படுத்தப்பட்ட தமிழ், தமிழின் பன்மை வடிவங்களை மறுக்குிறது. இலக்கியத்திலும் இந்தப் பொதுவடிவம் என்ற நிலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை வட்டார மொழி மற்றும் பேச்சு மரபு சார்ந்த எழுத்துக்கள் கடந்துவிடுகின்றன. பொதுமொழியின் வன்முறையை எதிர்க்கின்றன. உங்கள் நாவலில் பிராந்திய நிலவியல், அமைப்பியல் இடம் பெற்றிருந்தாலும் பிராந்திய மொழி மற்றும் மொழிதல் இடம் பெறவில்லை. பொதுத்தமிழ்; இதைக் கூட்டுத்தமிழ் என்றும் கூறலாம்; இந்த மொழியமைப்பிலேயே உங்களுடைய கதை சொல்லுதல் நிகழ்கிறது. இதில் உள்ள இடைவெளியை நீங்கள் விளக்க முடியுமா?
தமிழவன் ; இன்றைக்கும் தமிழ் என்ற கருத்தாக்கம் அதிகமும் சைவ அல்லது இந்து மையத் தன்மையுடன் உள்ளது. இது கிறித்துவ, இஸ்லாமிகத் தமிழைப் புறக்கணிக்கவே செய்யும். நாம் இதை வன்முறை என்று கூறுகிறோம். எல்லாவிதமான வட்டாரத் தன்மையையும் தமிழில் கூறுகளாகப் பார்க்கவும் ஏற்கவும் சூழல் வராதவரை இந்த முரண்பாடு தொடரும். நான் கல்லூரிக்குப் படிக்கச் சென்ற போது தேசிய எங்கள் பகுதி தமிழினை எல்லோரும் கேலி செய்தார்கள். தமிழே தெரியாதவனாக என்னை பார்த்தார்கள் இத்தனைக்கும் நான் தமிழ் கற்கவே சென்றேன். நான் பேசவே தயங்க வேண்டியிருந்தது. பிறகு நான் இரட்டைத் தன்மையுடன் பேச கற்றேன். வெளியே ஒரு தமிழ் ஊரிலும், வீட்டிலும் ஒரு தமிழ் பின்னனில் தமிழவன் என்று பெயா் வைத்துக்கொள்ள வெளியேற்றப்படுவோனா என்று பயம் கூட காரணமாக இருந்திருக்குமா என்று தோன்றுகிறது. நான் ஒரு தமிழ் பேராசிரியராகவும் ஆனபின் இன்னும் கூடுதலாக இந்த முரண்பாடு எனக்கு புரிந்தது. என்றபோதும் எழுதுதல் என்று வரும்போது பொதுத்தமிழன் கூரை தரப்படுத்தப்பட்ட தமிழின் சொல்லுதல் முறையை நான் கையாண்டு, உள்ளமைப்பில் வேறுபட முயற்சி செய்த போது அந்நாவல் மாறுபட்டு அமைந்தது. அதே சமயம் இந்து மையம் இந்நாவலைப் புறக்கணிப்பதும் நிகழ்ந்தது.
கேள்வி:; தமிழ் நிலப்பரப்பில் பலவித தமிழ்கள் உள்ளன. சாதிக் குழுக்களுக்கான தமிழ், இரண்டு சாதிகள் கலக்கும்போது உள்ள ஊா் சார்ந்த தமிழ், வட்டாரம் சார்ந்த தமிழ், நீங்கள் குறிப்பிட்டது போல் பலவித மதக் கலாச்சாரங்களுக்கான தமிழ் இவை அனைத்தும் தமிழ் அடையாளம் என்று வரும்பொழுது மறைக்கப்படுகின்றன. இந்த மறைப்பும் மறதியும் இலக்கியத்திலும், சமூகக் கருத்தாக்கங்களிலும் பின்பு அறிதல் முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலாதிக்கத் தன்மை உடைய ஒரு பேரடையாளம் உருவாக்கப்படுகிறது. அதே சமயம் எழுத்து மற்றும் பொதுத்தமிழ் என்பது எந்தச் சாதிக்கும் தனி உரிமையாக இருப்பதும் இல்லை. அதாவது Familial Language ஆக இருப்பது இல்லை. இந்நிலையில் சாதிக்கும், குழுவுக்கும் வெளியே ஆன அடையாளத்தை எழுத்து மரபு மற்றும் பொதுத் தமிழ் மரபில் பெற முடியலாம் என கருதுகோளை முன்வைத்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?
தமிழவன் ; நாம் தமிழ்த்தன்மையை ஒற்றைத் தன்மை உடையதாக எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் குறிப்பிட்ட மூன்று அடுக்கு நிலைகள் தமிழ் மொழியிலேயே உள்ளன. சாதிய, வட்டார – பொதுத் தன்மைகளின் கலப்பு கலாச்சார கொலையாக அமையக்கூடிய Standardisation நாம் எதிர்க்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் இந்த கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரு பரிமாற்றம் உரையாடல் நிகழ வேண்டி இருக்கிறது. இந்த அளவில்தான் பொதுத் தமிழ் என்ற கருத்தையும், பன்முகத் தன்மை உடைய தமிழ்த் தன்மையையும் நானம் அணுக முடியும்.
கேள்வி:: இலக்கிய ஆக்கம் எனப்படும் பொழுது இங்கு சாதிய, வட்டார, கலாச்சார மொழி நினைவு. அடையாளம் போன்றவையும் கட்டமைக்கப்பட்ட சமூக, அரசியல், வரலாற்று நினைவு மற்றும் அடையாளம் என்பவையும் பிளவுபட்டும், மோதியும் விளையும் பன்முகப் பிரிவு நிலை பதிவு செய்யப்பட வேண்டி இருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தை இந்த மோதல்களின் களமாக ஒரு வகையில் Heterotextual களமாக விளக்க வேண்டி இருக்கிறது. இதன் பின்னணியில் உங்கள் மூன்று நாவல்களில் ஏற்கெனவே சொல்லபட்ட மனிதர்களில் கலாச்சார இடையீடுகள், cultural intertextuality அமைந்திருப்பது போல, சரித்திரத்தில் படிந்த நிழல்களிலும், ஜி.கே. எழுதிய மா்ம நாவலிலும் Literary intertextuality என்பது அமைகிறது. Milorad Pavic, Umberto Eco இருவரின் எழுத்துக்களும் நேரடியாக பதிவாக்ககப்படுகின்றன. மார்க் வெஸ்ஸீடன் நீஙகள் கலாச்சார அடையாளத்தைப் பரிமாறிக் கொள்ளும்போது பாவிக்குடன் ஈக்கோவுடன் பிரதியாக்க அடையாளத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள். Italo Calvinoவின் வடிவாக்க முறையும் நினைவுப்படுத்தப்படுகிறது.
தமிழவன் : நீங்கள் குறிப்பிட்டபின், நான் எழுதுவதற்கு முன்னுள்ள மனநிலையை திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். நமக்குத் தனித்த அடையாளம் என்பது இருப்பது போலவே ஒரு Universal தன்மையும் narrativisation என்பதன் மூலம் ஏற்படுகிறது. புதிய படிமங்கள், புதிய வகை narration என்பதை நான் மேற்கிலிருந்து மார்க்வஸ், கால்வினோ மூலம் அறிந்து கொண்டு அதை தமிழ்ச் சூழலில் வைத்து கற்பனை செய்கிறேன். முதலில் appreciation என்ற அளவில் இருந்து, பின் என்னை அடையாளப்படுத்தும் முறையாகக் கதையாடலில் இவற்றை இணைத்துக் கொள்கிறேன். இதன் மூலம் கடையாடல் சார்ந்த ஓா் இணைப்பை நான் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அவா்களிடமிருந்து வடிவம், narration என்பவற்றை எடுத்துக் கொண்டு நான் தமிழ்ச் சூழலுக்குள் ஒரு மாறுபட்ட கதையாக்கத்தை உருவாக்க முயற்சிக்கிறேன். இதன் மூலம் ஒரு யுனிவா்சல் தன்மையுடைய தமிழ் மனம் என்பதை நான் அடையாளப்படுத்த முடிகிறது. நான் ஒரு வகையில் கலாச்சாரம் சார்ந்த அந்நியனாக பல சமயங்களில் உணர நோ்கிறது. அதே சமயம் கதையாடல் மூலம் தமிழுடன் இணைத்துக் கொள்ள முடிகிறது. இதையே மேற்கிலிருந்தும் அய்ரோப்பிய இலக்கியத்திலிருந்தும்கூட செய்ய முடிகிறது. தனித்தன்மை என்பதை விட interaction உடைய ஒரு கலப்புத்தன்மை இதன் மூலம் உருவாகிறது. இந்த வகை எதிர்பார்ப்புடன்தான் நான் நாவல்களை எழுதுகிறேன். புிதாக படைப்பது என்பதைவிட புதிய contextஇல் ஒன்றை விளக்குவது என்ற வகையில்தான் என் எழுத்துக்கள் அமைகின்றன என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் புதிது என்பது ஏற்கனவே இருப்பதுதான். மேலும் தமிழில் நாவல் உருவாகவில்லை என்ற ஒரு கூற்று ஏற்பட்டுள்ளது. அதாவது நாவலுக்கான narrativisationக்கான மனப்பின்னணி ஏற்படவில்லை. மரபு இறுக்கத்தைத் தமிழ் லேசில் விடாது. எனவே பலவித narrationகளைக் கொண்டு வந்துகொண்டிருக்கிற எழுபதுக்குப் பிந்திய தமிழ் நாவல் வரலாறு, மொத்த நாவல் வரலாற்றில் தனியாகக் குறிப்பிடவேண்டிய விஷயம், இந்தப் பின்னணியில் பல புது narrationகளுக்கான மனப் பின்னணியாய் என் மூன்று நாவல்களின் அய்ரோப்பிய உந்துதல்களைக் காண வேண்டும். நாவல் தோற்றத்தைத் தூய படைப்பாக்கம் என்று பார்க்கக்கூடாது.
கேள்வி:: தூய படைப்பாக்கம் என்ற கருத்தாக்கத்தை நீங்கள் மறுத்து விடுவதன் மூலமும், எழுத்து என்பதே மீண்டும் மீண்டும் எழுதப்படுதல் என்பதை வலியுறுத்துவதன் மூலமும் நீங்கள் உங்கள் நாவல்களில் கையாளும் பிறமொழி இலக்கிய உத்திகள் தேவை கருதியே கையாளப்பட்டிருப்பதாக விளக்குகிறீர்கள். ஈக்கோவின் Name of the Roseன் கதைக்களம், அமைப்பை ஒத்த கதையை எடுத்துக்கொண்டு ஜி.கே எழுதிய மா்மநாவல் எழுதப்பட்டிருப்பதையும்கூட தேவைக்காகவே செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறீர்கள். இங்கு தெளிவுக்கா ஒரு கேள்வி பாவிக் மற்றும் ஈக்கோவின் எழுத்து வடிவம் என்பதில் மட்டும் நீங்கள் எங்கெடுத்துக் கொள்கிறீர்களா அல்லது அவா்களின் எழுத்துக்கான philosophy அவா்களின் கோட்பாட்டு பிரச்சனை போன்றவற்றிலும் உங்களை, உங்கள் எழுத்தை பங்குகொள்ள வைக்கிறீர்களா?
தமிழவன் : அவா்களுடைய கலாச்கார அரசியல் பின்னணியில் சிலவற்றை புரிந்துகொள்ள முடிகிறது. அதை இந்தியச் சூழலில் புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுதுதான் பங்கெடுப்பு அமைகிறது. தத்துவமும், வாழ்வும், இலக்கியமும் இணைவதுதான் கதையாடல். அதாவது narrativisation. இது கலாச்சாரத் தனிமையைக் கேள்விக் குள்ளாக்கும் ஒரு விஷயம். எனக்குள் இந்தியத் தன்மை இருப்பது போலவே வெஸ்ட்டும் பதிவாகி இருப்பதால் எனக்கு இந்த interaction இயல்பாகவே தோன்றுகிறது.
கேள்வி:: நாம், மொழி என்ற அளவிலும் கலாச்சார அளவிலும் பிராந்தியம், குழு என்ற நிலையிலும் பொதுத்தமிழ் அடையாளம் நோக்கிச் செலுத்தப்படும்பொழுது ஒருவித அடையாள இழப்பும், அதிகார அமைப்புக்கு உட்பட்டும் நிலையும் ஏற்படுகின்றன. அதே சமயம் இந்த முரண்பாடு, எதிர்வினை, ஊடாட்டம் தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன. நாம் தமிழ் என்ற ஒரு நினைவுத் தொகுப்பை ஏற்க வேண்டியும் இருக்கிறது. இங்கு மூன்றாவதாக மேற்கின் அறிவும், கருத்தாக்கங்களும் நம்மை அடைகிறபோது இருமை முரண்பாடு; முக்கோண முரண்பாடாக மாறுகிறது. இந்தியச் சமூகத்திற்கு ஜனநாயகத் தன்மை என்பதை ஒரு நடைமுறைக் கோட்பாடாக மேற்கு அறிமுகப்படுத்தியது போல் பல்வேறு அறிவுத் துறைகளிலும் கலாச்சாரக் களங்களிலும்கூட வெளியிலிருந்து பல மாற்றங்கள் உள் நுழைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் இன்றைய நவீனத் தமிழ் மற்றும் இந்தியக் கலாச்சாரம் என்பவை மேற்கால் மாற்றியமைக்கப்பட்ட புதுவடிவம் தரப்பட்ட அடையாளங்களின் தொகுப்பு என்றும் கூடக் கூறலாம். இந்தப் பின்னணியில் மேற்கின் தாக்கம் என்றும், அந்நிய கருத்தாக்கங்கள் என்றும் புதிய இலக்கியப் போக்குகளில் சிலவற்றை அடையாளப்படுத்தி இவற்றில் தமிழ் அடையாளம் இல்லை என்று சொல்லுவதின் காரணம் பற்றி நீங்கள் கூறுவது.
தமிழவன் : இது ஒரு Natural choice. தமிழுக்குள் நேரும் அடையாளச் சிக்கல்களை வெவ்வேறு narrative வகைகளை ஒரு தளத்தில் கொண்டு வருவதன் மூலம் நாம் எதிர்கொள்கிறோம். ஒன்றை ஒன்று ஒடுக்க நினைக்கும் வெவ்வேறு மொழி, கலச்சாரங்களைச் சமநிலையில் எதிர்கொள்ள வைக்கிறோம். இதன் மூலம் அறிவுத் துறையிலும், இலக்கியத்திலும் நாம் பல புதிய ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும் என்று உருவாகி இருக்கும். அதிகாரத்திற்கு ஆதரவான ஓா் இயந்திரத் தன்மை உடைய தமிழ் மொழியை, எழுத்து முறையை, நாம் மாற்ற இந்தப் பன்முகத் தன்மை தேவைப்படுகிறது. அதேபோல் வெளியிலிருந்து புதிய narration மற்றும் knowledge என்பனவற்றை உண்டாக்குவதன் மூலம் நமது உள் முரண்பாட்டை விளங்கிக் கொள்ள முடிகிறது. இது அரசியலிலும், இலக்கியத்திலும் ஒன்றுபோலவே நேரலாம். வெளித்தாக்கம் என்பதுதான் நமது இன்றைய சிந்தனை முறையை வடிவமைத்திருக்கிறது. இந்தத் தாக்கத்துடன் நமது அறிவு மரபு என்ன, இதற்குள் என்னென்ன இருக்கிறது என்று தேடும் போதுதான் நம்மால் பல கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்.
கேள்வி:: உங்கள் முதல் நாவல், ஒரு குறிப்பிட்ட பிராந்திய வாழ்வின் நிகழ்வுகளை முன்வைத்து தமிழ்நாட்டின் வரலாற்றை, அதில் உள்ள மனித மாதிரிகளைப் பற்றிய கதையாடலாக விரிகிறது. இரண்டாவது நாவல், இருபதாம் நூற்றாண்டின் மறுபாதியில் நடந்த அரசியல் மாற்றங்களைக் கிண்டல் செய்வதாக, அரசியல் தலைவா்களின் பிம்பங்கள், தமிழ்ச் சூழலில் நடந்த அரசியல் சமூக நிகழ்வுகள் போன்றவற்றைப் பகடி செய்வதாக அமைகிறது. மூன்றாவது நாவல், தமிழக வரலாற்றில் அதிகம் மறக்கப்பட்ட ஒரு காலகட்ட பன்னணியில் புனைவு மூலமான ஒரு சரித்திரப் போலியை உருவாக்க முயற்சிக்கிறது.
தமிழவன் : நீங்கள் குறிப்பிடும் தொடர்புப் போக்கில் எனக்கு நினைவுக்கு வருவது நான் கையாள நினைத்த nation என்ற கருத்தாக்கம் இந்த reconceptualization பற்றிய பிரச்சனையை மூன்று நாவல்களிலும் கையாண்டு இருக்கிறேன். Nationக்கு aesthetic expressionக்கும் உள்ள உறவை மறுபரிசீலனை செய்ய நான் முயற்சித்திருக்கிறேன். திராவிட இயக்கக் கருத்தியல் ஒரு வகையான nation என்பதைக் கட்டமைக்க முயற்சித்தது நானும் எனது தொடக்கக் காலத்தில்இந்த இயக்கத்துடன் இணைந்து வளர்ந்தவன் என்ற முறையில், கலாச்சாரத்தில் இதில் ஏற்பட்ட போலித்தனத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. திராவிட எழுத்து ஒருவித போலி தேசிய அடையாளத்தைக் கட்டி எழுப்பியது வரலாறு என்பதை எடுத்துக் கொண்டு, சரித்திர நாவல்கள் என்பவை மூலம் தேசம் பற்றிய கருத்தாக்கத்தை மறு ஆக்கம் செய்ய முயற்சித்தார்கள். என் எழுத்தில் சரித்திரம் எதார்த்தம் என்பவை Parody என்ற தளத்தில் விரிகின்றன. பிராந்தியம் என்ற தளத்திலிருந்து nation என்ற தளத்திற்கு தொடர்ச்சி மாறாமல் நான் வருகிறேன். எனது முதல் நாவலில் ஒரு தேசியம். பிராந்தியத்திற்குள் ஊடுருவுவதைப் பிரச்சனைப்படுத்தி இருக்கிறேன். இரு மத அடையாளங்கள் கிருஸ்துவம் – இந்து என்பவை வரலாற்றில் மோதிக் கொண்ட இடங்கள். இதுவும் கூடப்படிமமாக ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் அமைகிறது Narration என்பது எதையும் ஊடுருவிப் போகும் ஒருவித மொழி ஆற்றல் அதைப் பயன்படுத்தி கிறிஸ்துவத்தையும் இந்து மதத்தையும் இணைக்க முயல்கிறேன். தோப்பில் முகம்மது மீரான் சொற்கள் மூலம் முஸ்லீம் மதத்தைத் தமிழுடன் இணைக்க வருகிறார். வீரமாமுனிவா் செய்தது ஒன்று. நான் செய்வது இன்னொன்று மீரான் செய்வது ஒன்று. உமறுப்புலவர் செய்தது இன்னொன்று இந்தியாவை ஒரு Hindu Nation என்று பார்ப்பதை கதையாடல் மூலம் மறுதலிக்கும் முயற்சிகள் இவை. எனக்கு இங்கு முக்கியமாகப்பட்டது redifining the nation in terms of language இதை narration என்ற தளத்தில் பரிசீலனை செய்யும் விதத்தில் literary discourse என்பதை நான் வைக்கிறேன். Language, narration என்பவை பின்னிப் பிணைந்து ஓா் எள்ளல் தொனி உருவாகிறது மூன்று நாவல்களிலும் முக்கிய அா்த்தம் இந்த எள்ளல்.
கேள்வி:: உங்கள் மூன்றாவது நாவல் தேசியம், மொழி, மண் என்பதை வேறொரு தளத்தில் சித்தரிக்கிறது. Dictionary of the Khazars இல் வருவது போல் இருந்த ஓா் இனம் இப்பொழுது இல்லை. இல்லாத இனம் பற்றி எழுதப்பட்ட மூல நூல் எது; அதை எழுதியது யார் என்ற கேள்வியின் பின்னணியில் பிரச்சனை தீவிரமடைகிறது ஜி.கே.எழுதிய மா்ம நாவலை எழுதியது யார் என்ற கேள்விக்குப் பதில் தேசம், மண் இல்லாத ஒருவன், அதாவது நாடிழந்த ஈழத்தமிழன் என்ற குறிப்பு தரப்படுகிறது. இவ்வகையில் பிரச்சனையின் அடுத்த கட்டத்திற்கு அதாவது – தேசமாதல் என்பது பிராந்தியத்தை அழிப்பது – ஒரு பிரச்சனை என்றால்; தேசத்தையும், மண்ணையும் இழுப்பது இன்னும் ஒரு பிரச்சனை என்ற அளவில் தீவிரமான நிலைக்குத் தள்ளப்படுகிறது.
தமிழவன் : அந்நாவலை narrate செய்பவன் 83 கலவரத்தில் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டு நாடிழந்து லண்டனுக்குச் செல்பவன். வேறொரு நாட்டின் நூலகத்தில் தனது தேசம் பற்றிய கதையைக் கண்டெடுக்க நினைப்பவன். இங்கும்கூட language என்ற உருவம் narration என்பதால் ஒன்றிணைக்கப்படுகிறது. Narration always encompass concepts and languages.
கேள்வி:: Name of the rose, Dictionary of the Khazars போன்றவற்றை நினைவுபடுத்தும் கூறுகளுடன் உங்கள் ஜி.கே.எழுதிய மா்ம நாவல் அமைகிறது. இதில் நீங்கள் கையாள நினைத்த கோட்பாட்டுக் கூறுகள் மூலம் வேறு வடிவத்தையும் ஏற்படுத்துகிறீர்கள். அவை பற்றி…
தமிழவன் : எனது மூன்று நாவல்களிலும் இதை சொல்பவன் குரல், கேட்பவா் யார் என்பவை அமைகின்றன. முதல் நாவலில் வாசகா்களே என்று அழைத்து கதை சொல்லப்படுகிறது. இரண்டாவது நாவலில் சொல்வோன் கேட்போன் என வருகிறது. இது தொல்காப்பியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழிலேயே சுயநினைவு என்ற கதை சொல்லுதல் கூறு உள்ளது Metatextual அம்சம்.
கேள்வி:: நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய உதாரணம் மகாபாரதம். கதை சொல்பவர் ஒரு பாத்திரமாக அமைவதும், உள்ளே இருந்து கதை விளக்கப்படுவதும், இது எதற்காகக் கூறப்பட்டது என்பதும், வியாசன் கூறியதைக் கேட்டு அதைத் திரும்பச் சொல்லும் கதைசொல்லிகள் வருவதும் என உரையாசிரியா் மரபிலும் இந்தத் தொனியைக் காண முடியும். அதே சமயம் புதிய எழுத்துக்களில் இவை இன்னும் Textual Metaphor ஆக மாறுகின்றன என்பதே முக்கியமாகப்படுகிறது.
தமிழவன் : துப்பறிதல், நூலகம், labyrinth போன்றவற்றை குறிப்பிட்டு சிமிலாரிட்டியை அடையாளம் காட்டுகிறீர்கள். என்னைப் பொருத்தவரை நமது கீழைத் தேச கலாச்சாரம், அரசியல், கல்வி, அறிவு என்பவை கடந்த இரு நூற்றாண்டுகளில் reaction to the west என்றுதான் அமைகிறது. நாம் நம் தேசத்தையே மேற்கின் தேசத்தின் மாதிரியில்தான் அமைத்து இருக்கிறோம். நம் பாராளுமன்றம், அரசியல் சட்டம், சிறைகள், கல்வி, பல்கலைக்கழகம், நீதிமன்றம், தேர்தல் முறை எல்லாம். இது இலக்கியத்திலும் ரேநடியாக அமைகிறது. அதே சமயம் நமது தளத்தில் புதிய அா்த்தமும் பெறுகிறது. நாவலில் கொலை நடப்பது, துப்பறிதல் போன்றவை பழகிய துப்பறியும் நாவல் வகையில் வேறு ஒரு தளத்தை அடைதல் எனக்கு முக்கியமாகப்படுகிறது. மிகப் பழகிய வடிவம் அதே சமயம் வேறு புதிய அா்த்தத்தளம் இப்படி ஒரு antinationalist ethics இந்தப் பிரதியில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது.
கேள்வி:: தமிழ் வாசிப்புச் சூழலில் இந்த வகை எழுத்து இயல்பாக இலக்கிய முறையாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பல்வேறு கதையாக்க முறைகள், புனைவாக்க முறைகள் இங்கு தேவையற்றவை என்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.
தமிழவன் : இதை மாற்ற முதலில் இலக்கிய விமா்சகர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். இங்கு ஓா் ஒற்றைத் தன்மை தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பல இலக்கிய முயற்சிகள் மறுக்கப்படுகின்றன. கன்னடத்திலும், மலையாளத்திலும் புதிய வடிவங்கள், வேறு மரபிலிருந்து பெறப்படும் புதிய உந்துதல்கள், பரிசோதனைகள் கூா்ந்து கவனிக்கப்படுகின்றன. அவை இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பன்முகத் தன்மை காப்பாற்றப்படுகிறது. தமிழில் இது மறுக்கப்படுவதும், இல்லாமல் இருப்பதும் தமிழுக்கு இழப்பு. தமிழ் என்ற இன்னொரு வகை அடையாளத்தின் மீது பற்றுகொண்ட, கலாச்சாரத்தின் அவசியம் உணா்ந்த நாம் தொடர்ந்து, புதிய இலக்கிய உணா்வை உருவாக்க உழைக்க வேண்டி இருக்கிறது.
கேள்வி:: மேற்கின் எழுத்தின் தொடா்ச்சிகளும் அவற்றிற்கிடையேயான நுட்பமான வேறுபாடுகளும் அடையாளம் காணப்படுவது இயல்பாகப் பழகி இருக்கிறது. ஈக்கோ தனக்கு முன்னே கால்வினோவை அடையாளம் காட்டுவதும் கால்வினோ போர்ஹேஸை அடையாளம் காட்டுவதும் பாவிக் இவா்களில் பலரைச் சுட்டுவதும், ழோர்ழ் பெரேக் போர்ஹேஸ், கால்வினோ போன்றவா்களுடன் இன்னும் பலரைக் கையாள்வதும் இயல்பாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு இலக்கியப் பிரதியும் ஏதோ ஒரு வகையில் புதிதாகவும் உள்ளது. எழுத்துக்கள் பிரதிகள் சமமாக மதிக்கப்படுகின்றன.
தமிழவன் : இதை மேற்கிற்கு போவதற்கு முன்னே தமிழில் அடையாளம் காட்டி இருக்க வேண்டும். ஒன்றைத் திரும்ப அப்படியே எழுதுவதோ, சொல்வதோ இங்கு ஒதுக்கப்பட்டதல்ல. மீண்டும் சொல்வதன் மூலம் சங்க இலக்கியம் புதிய ஒரு அம்சத்தைப் பெறுகிறது. Repetition என்பது நமது இலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ஏ.கே. ராமானுஜம் சங்கப் பாடல்கள் பற்றிச் சொல்லும்போது அந்தப் பாடல்கள் இரண்டாயிரம் மூவாயிரமும் ஒன்று போலவே உள்ளன. அதே சமயம் வித்ியாசமாகவும் உள்ளன என்று கூறுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படுகிறது. ஒன்றையே திரும்பச் சொல்லும் பொழுதும் சிறு மாற்றத்தின் மூலம் அது புது வடிவம் பெறுகிறது. ஆதலால் இந்தியத் தன்மைக்கு இது புதிதல்ல.
கேள்வி:: மீண்டும் எழுதினாலும் எதார்த்த வகை எழுத்துக்களின் மீது இது ஏற்கனவே உள்ளது என்ற தாக்குதல் எழுவதில்லை. மாறாக புதிய முயற்சிகளுக்கு மட்டுமே இது பிரயோகிக்கப்படுகிறது. வேறு மொழியில் இது எழுதப்பட்டிருக்கிறது. அதுவே தமிழில் எதற்கு என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இவா்கள் எழுதும் மிக மிகப் பழகிய வடிவம் வேறு மொழிகளில் எத்தனை ஆயிரம் முறை எழுதப்பட்டிருக்கிறது என்று இவா்கள் கணக்குப் பார்ப்பதில்லை. தமிழுக்கு இது அந்நியமானது. இது தேவையா எனக் கேள்விகளைக் கேட்பவா்கள் தாங்கள் எந்தக் கோட்பாட்டுத் தளத்தில் நிற்கிறோமோ அதுவே தமிழுக்கு வெளியே இருந்து பெறப்பட்டது என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். குறியியல், அமைப்பியல், பெண்ணியக் கோட்பாடுகள், பின்நவீனத்துவப் போக்குகளைப் பற்றி இன்னும் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. புதிய எழுத்துக்கள் மீது அடிப்படையான அவமதிப்பு கவனமாக கட்டிக் காக்கப்படுகிறது. தேசிய வாதம், லட்சியவாதம், மார்க்ஸிசம், கலாச்சாரவாதம், மனிதநேய வாதம் என்ற பல பெயா்களில் இங்கு Antiliberalism பலமாக வளா்க்கப்பட்டிருக்கிறது. இவை அறிவுப் பன்மைவாதத்திற்கும், படைப்பாக்கத் தன்மைக்கும் எதிரான அடிப்படை வாதங்களாகவும், அறிவு மறுப்பு உடைய பழமைவாதங்களாகவும் தமக்குள் ஒன்றுபடவும் செய்கின்றன. அந்த வகையில்தான் ஒரு மார்க்ஸிய விமா்சனமும் ஒரு சனாதன விமா்சனமும் ஒரு பிராமண மேலாண்மை உடைய விமா்சனமும் மறைமுகமாக ஒன்றுபடுகின்றன. பின்நவீனத்துவம் எல்லாம் இங்கு எதற்கு, புதிய வகை எழுத்து எதற்கு? இவை வாழ்க்கைக்கு என்ன செய்யும் என்று குரல்மாற்றிக் கொண்டு ஒரே சப்தத்தை எழுப்புகின்றன.
தமிழவன் : இவற்றை நாம் இந்திய மரபு சார்ந்தே தகர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியத் தன்மை, தமிழ்த் தன்மை என்பது இவா்கள் விளக்குவது போல் ஒற்றைத்தன்மை உடையது அல்ல. பல தர்க்கங்கள், பல தத்துவங்கள், பலவித அறிதல் முறைகள் இங்கு உள்ளன. நம்மைப் பொருத்தவரை மேற்கிலிருந்தும், அமைப்பியல்வாதத்திலிருந்தும், பின்நவீனத்துவத்திலிருந்தும் இவற்றை தாம் புரிந்து கொண்டோம். எடுத்துக் கொண்டோம். இவை இந்திய வரலாற்றிலேயே, மரபுகளிலேயே எந்த அளவுக்கு உள்ளது என்று விளக்குவதுதான் தற்போதைய தேவை என்று நினைக்கிறேன். நம்மை இந்திய, தமிழ் மரபுகளுக்கு வெளியே உள்ளவா்கள், எதிரானவா்கள் என்று இவா்கள் நசுக்க முயற்சிக்கும்பொழுது – நம்முடைய பழைய மாற்று மரபுகள் மூலம் நீங்களும்கூட இந்தியச் சூழலில் உங்கள் பின்நவீனத்துவத்தை விளக்கத் தொடங்கி இருப்பதைக்கூட நான் இவ்வகையில்தான் முக்கியத்துவம் உடையதாகப் பார்க்கிறேன். நான் இந்தியத் தன்மை, தமிழ் அறிவு என மறு கண்டுபிடிப்பு செய்ய முயற்சிப்பதும் இவ்வகையில் தேவையுடையதாகிறது. இங்குள்ள கலாச்சார தலைமை பீடங்கள், கோட்பாட்டுத் தலைவா்கள் இவற்றுடன் ஒரு debateஐ தொடங்க வேண்டும். தமிழ் வாசிப்புத் தளத்தில் தொடர்ந்து இவை அறிமுகப்படுத்த வேண்டும். விவாதம் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இதற்கான discourse தொடர வேண்டும்.
கேள்வி:: ஜி.கே. எழுதிய மா்ம நாவலில் தமிழக வரலாறு, தென்னிந்திய வரலாறு, பௌத்த மத வலாறு, இந்து மத வரலாறு என்பன கலைத்துப் போடப்பட்டிருக்கின்றன. சரித்திரத்தின் மீதான கேலியும், வரலாற்றாக்கத்தில் உள்ள வன்முறையும் முக்கியப்டுத்தப்படுகிறது. அதே சமயம் இதில் கொலைகளைச் செய்கிறவனாக ஒரு பொளத்தன காட்டப்படுகிறான். பௌத்தர்களான எங்களுக்கு இலக்கிய இலகுத் தன்மை காரணமாக இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிந்தாலும், பௌத்தம் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட இந்திய மண்ணில்; பௌத்தத்தின் தடம் கலைக்கப்பட்ட தமிழ் நிலத்தில் பௌத்தம் பற்றிய பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றில் அறம் சார்ந்த சமூக ஆக்கத்திற்கு, பௌத்தம் ஆற்றிய புரட்சிகரமான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மறைக்கப்பட்டிருக்கிறது. பௌத்த எதிர்ப்பு என்பது இன்றுள்ள சாதிய, ஆதிக்க, சதாதன இந்தியத் தத்துவங்கள், சமய நம்பிக்கைகள் அனைத்திற்கும் மறைமுக அடிப்படையாக உள்ளது. இப்பின்னணியில் ஜி.கே. எழுதிய மா்ம நாவல் பௌத்தத்ின் நிறுவனமாதல் முயற்சியில் தோன்றும் ஒரு வன்முறையை முன்னிலைப்படுத்துவது இன்றைய contextஇல் வேறு வகையில் அர்த்தப்படுவதாக அமையலாம். இந்நாவலில் 11வது அத்தியாயத்தில் இந்த நூலை எழுதியவா் ஒரு ஈழத்தமிழா் எனக் குறிப்பு வருவதன் மூலம் ஈழத்துச் சூழலில் நியாயமாகத் தோன்றக்கூடிய பௌத்த எதிர்ப்பு நினைவுபடுத்தப்படுகிறது. இவற்றை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
தமிழவன் : இந்தக் கேள்வி எனக்கு மிக முக்கியமாகத் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்ட இந்த அம்சம் narrativisation என்பதன் மூலம் ஒரு text ஆக நிறுவப்படுகிறது. Text என்று சொன்ன உடனேயே கட்டப்பட்டது என்ற ஓா்மை வரவேண்டும். பௌத்தம் பற்றிய ஒருமுகப்படுத்தப்பட்ட சித்தாந்தம் இந்த நாவலின் நோக்கம் அல்ல. அது எதார்த்த வகை எழுத்துக்கு மட்டும் பொருந்தும். Text ஆக உருவாகும் படைப்பில் எதுவும் ஒரு புள்ளியாய் மையம் பெறாது. எனவே பௌத்தத்தின் மீது என் நாவல் எதிர்மறை பார்வை கொள்ள முடியாது. நாவலில் ஒவ்வொன்றும் இன்னொன்றைச் சுட்டிவிட்டு மறைந்து போய்க் கொண்டே இருக்கும் process ஆக அமைகின்றன. பௌத்தத்தின் மையக் குறியாகவில்லை. அதுபோல் இன்னும் ஒரு விஷயம் உள்ளது. எல்லா narativisationக்கு உள்ளும் ஒரு Fascist கூறு இருக்கவே செய்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். இதை இலக்கியத்தைக் கரைப்பதன் மூலம்தான் நாம் தவிர்க்க முடியும். தற்போது உள்ள நிலையில் நமக்கு இது சாத்தியமில்லை. ஏனெனில் நாவல் என்ற genre அடையாளத்தை அழிக்கிற நிலையில் தமிழ் இல்லை. தவிர்க்க முடியாமல் இது நிகழ்கிறது. பௌத்தன் என்பது ஒரு விபத்தாக இருந்தாலும் புத்திக் கூா்மை, தந்திரம் போன்றவை பொருந்திவர அப்பாத்திரம் அமைய எனக்குத் தேவைப்பட்டது. அத்துடன் எந்த ஒரு விடுதலைக் கோட்பாடும், ரட்சிப்புத் தத்துவமும் ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையை உள்ளடக்கியதாக வன்முறையை வளர்ப்பதாக இருந்தே வந்திருக்கிறது. அவ்வகையில் எனக்கு பௌத்தம் பற்றிய பன்னணி பயன்பட்டது.
கேள்வி:: பௌத்தம் மட்டுமல்ல எந்தவொரு கோட்பாடு, ஒழுக்கம், நெறி என்பவை நிறுவனமயமாகும் பொழுது, திடப்படும் பொழுது பாசிசத் தன்மையை அடையவே செய்யும். உலகின் பல பௌத்த நிறுவனங்கள் கொடுங்கோன்மையும், வன்முறையும் நிரம்பியதாக மாறியுள்ளன. இந்தப் புரிதலில்தான் எங்களால் இதைப் பிரதியளவில் விளக்க
முடிகிறது. தமிழ் வரலாற்றுப்
பின்னணியில் வேறு வகை வன்முறைகளும் கொடுங்கோன்மைகளும் இடையீடாக அமைந்திருந்தால் இன்னும்
சில உடைப்புகள் இப்பிரதியில் ஏற்பட்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
பகுதி – II
தமிழவன் : எனது கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் தேவைப்படும் பொழுதெல்லாம் மாற்றிக் கொள்ள நான் தயங்குவதில்லை. பல்வேறு அணுகுமுறை மாற்றங்களுக்கு ஊடாக சில அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து ஒரேவிதமான பார்வையும் எனக்குள் இருந்து வருவதை நான் கவனித்து வருகிறேன். அறிவியல் புா்வமான அணுகுமுறை பற்றிய எனது முந்தைய புரிதல் தற்போது மாறி இருக்கிறது. அதே போல் இந்தியத் தத்துவம் பற்றிய எனது முடிவுகள் மாறி இருக்கின்றன.
கேள்வி:: உங்களுடைய அணுகுமுறையில் அல்லது ஆய்வு முறையில் பல இடங்களில் உடன்படும் நாங்கள், நீங்கள் வந்தடையும் முடிவுகள் அல்லது கருதுகோளுடன் பலமுறை முரண்பட நேர்ந்திருக்கிறது. அமைப்பியல் சார்ந்தும், பக்தினின் சில கோட்பாடுகள் சார்ந்தும் நீங்கள் எழுதிய கட்டுரைகளின் சில மாறுபட்ட கருத்துக்களை முன் வைத்து நாங்கள் சில கட்டுரைகளைக் கூட எழுதி இருக்கிறோம். உதாரணமாக மேலும் இதழில் நீங்கள் எழுதிய திருப்பாவை பற்றிய கட்டுரைக்கு மேலும் இதழிலேயே மாற்றுக் கருத்துக்களை முன் வைத்தோம். நீங்கள் எழுதிய மௌனி பற்றிய கட்டுரைக்கு கதை சொல்லியில் விரிவான ஒரு மாற்று அணுகுமுறை கட்டுரையை எழுதி இருக்கிறோம். நீங்கள் மௌனியைப் பின் நவீனத்துவ அணுகுமுறையில் பொருத்தி பெண்ணிய விளக்கம் தந்திருந்தீர்கள். மாயத் தன்மை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நாங்கள் மௌனி எழுத்துக்கள் ஆண் மையம் உடையதுதான் என்பதை மையமாக வைத்து பிற என்பதை இன்மை மற்றும் மறதி நிலைக்குக் கொண்டு செல்வது, காதல் அல்லது வேட்கை என்பதற்கு எதிர்நிலை உடையது, புனைவுக்கு எதிரானது என்ற வகையில் விவாதித்திருந்தோம். இதே போன்று பெரியார் பற்றிய ஒரு உரையாடலில் பெரியாரியம் படைப்புணர்வுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிரானது என்ற பொருள்படும்படி விவாதித்திருக்கிறீர்கள். இவற்றை தற்போது நீங்கள் ஏதோ ஒரு வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?
தமிழவன் : சில சமயங்களில் ஏதாவது ஒரு கோட்பாடு பற்றி எல்லோரும் கூறுவதை கவனித்து அவற்றின் மறுபக்கமாக, விடுபட்டுப் போனவைகளாக சில மாற்றுக் கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அவ்வகையிலேயே பெரியார் சிந்தனைகளின் காலம் சார்ந்த தேவையை அங்கீகரித்த போதும் கலை, இலக்கியம், கலாச்சாரம் பற்றிய பெரியாரியப் புரிதல்களின் போதா மைய விளக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியத அதையே நான் செய்தது.
மௌனி எழுத்தைப் பொருந்தவரை எனக்கு நானே சில விளக்கங்களைச் சொல்லிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. கண்ணதாசன் இதழில் நானே கட்சி மார்க்சியப் பார்வையில் மௌனியை வாழ்வுக்கெதிரான எழுத்து என்றம் அத்வைத வறட்டுவாதம் சார்ந்த எழுத்து என்றும் எழுதி இருக்கிறேன். பிறகு திரும்பத் திரும்ப மௌனி கதைகளை வாசித்தபொழுது அவரின் முக்கியத்துவம் எனக்குத் தெரிந்தது. அவரைச் சந்தித்தபோதுகூட அவருடைய கதைகளுக்கு எதிரான கருத்தையே நான் கொண்டிருந்தேன். இப்போது எனக்கு மர்மம் பற்றிய கூடுதல் கவனிப்பு தோன்றியிருக்கிறது. மொழிக்கு அப்பால் உள்ள மொழி போன்ற ஒரு பகுதி. இதை மௌனி மூலம் நான் கண்டு அந்தப் படைப்புகளை முக்கியமானவை என்று விளக்கி இருக்கிறேன். ஃபுக்கோவின் order of things இன் முதல் பகுதியில் ஒரு ஓவியத்தை விளக்க அவா் பயன்படுத்திய methodஐயே நான் பின்பற்றி இவற்றை விளக்க முயன்றிருக்கிறேன். அதே சமயம் எனது ஒவ்வொரு கட்டுரையிலும் ஒருவித methodஐ வளா்க்க முயன்று வருகிறேன். Scientific method மூலம் கடந்த அல்லது அதனால் விளக்க முடியாத பகுதிகளை முக்கியப்படுத்துவது. அந்த வகையில்தான் text என்பதைக்கூட படைப்பு என்றே இப்பொழுதெல்லாம் குறிப்பிட்டு வருகிறேன். படைப்பு என்பதில் உள்ள ஒரு religiosityயை நான் தற்போது தேவை என்றே கருதுகிறேன். நீங்கள் இலக்கியத்தை Scientific approachஇல் விளக்கிவிட முடியும் என்ற பொருளில் text என்பதை பயன்படுத்தி வருவதாக எனக்குத் தோன்றுகிறது.
கேள்வி:: நாங்கள் பிரதி என்று தொடங்கி ஆக்கம், புனைவுப் பரப்பு, பினைவுக் களம், பினைவு வெளி என்ற பலவகை உருவாக்க நிலைகளில் எழுத்தை விளக்க முயற்சிக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் religiousity of writing என்பதை நாங்கள் மறுக்கவில்லை. மா்மம், மொழிகடந்த நிலை என்பதை எழுத்தின் தவிர்க்க முடியாத அழகுகளாக நாங்கள் வலியுறுத்தியும் வருகிறொம். Scientific Method என்பதற்குள்ளும் உள்ள புனைவுத் தன்மை பற்றியும் நாங்கள் குறிப்பிட்டு வருகிறோம்.
தமிழவன் : அப்படியென்றால் நாம் ஒரே கருத்தாக்கப் பின்னணியுடன் அணுகுமுறைகளில் மாற்றத்துடன் சிலவற்றை விளக்க முயற்சிக்கிறோம் என்று தோன்றுகிறது. தமிழில் படைப்புத் தளத்தில் உள்ள தேக்கத்தை உடைக்க மௌனி எழுத்துக்களின் சாதகமான அம்சங்களைப் பேச வேண்டும் என்றே எனக்கு தற்போதும் தோன்றுகிறது. உங்கள் கட்டுரையை வாசித்த போது இதுபற்றி நாம் ஒரு திறந்த விவாதத்தை நட்புடன் தொடர வேண்டும் என்றே தோன்றியது இதன் மூலம் நாம் பல புதிய கேள்விகளை அணுக முடியும் இது ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு வழி வகுக்கும்.
கேள்வி:: பிரதியின் முடிவுறாத் தன்மை பற்றி நாம் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறொம். முழுமையாக விளக்கப்பட முடியாத, எல்லா விளக்கங்களுக்குப் பின்னும் எஞ்சி நிற்கும் சில மர்மங்களை உடைய மண்டலமாக எழுத்தாக்கத்தை நாம் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. பத்து வகை விளக்கத்திற்குப் பின்னும் பதினொன்றாவதாக ஒரு மா்மத்தை உடையதாக இருப்பதாலேயே இலக்கியப் பிரதி தொடர்ச்சி உடையதாக இருக்கிறது. அதே சமயம் ஒவ்வொரு இலக்கியப் பிரதியும் தன்னை விளக்கும் சில முறையியல்களையும் யுதித்தளிக்க முயற்சிக்கிறது என்பதையும் நாம் அடையாளம் காணவேண்டி இருக்கிறது. Poeticity, Poetics என்பது ஒரு விரிந்த மண்டலம் என்றால் Poetry என்பதுதான் அள்ள நினைத்த கைப்பற்ற நினைத்த வெளியை நழுவவிட்டதன் தடயமாகத்தான் இருக்கும். வாழ்தல் என்பது எத்தனை விளக்கத்திற்குப் பின்னும் மா்மங்களை உடையதாகத் தொடர வேண்டி இருக்கிறது என்பது போல இதில் Postulationஐக் கூட ஏற்கவே வேண்டி இருக்கிறது. அம்பேத்கா் religiousity, spirituality என்று இரண்டு கூறுகளை விளக்கி spiritualityயை உயா்வாகக் கூறுவார். அவா் குறிப்பிடும் spirituality தத்துவம். அரசியல், சமூகம் என்று எல்லா தளத்திலும் ஏற்க வேண்டிய தேவை உள்ளது. இலக்கியத்தில் இது கூடுதலாக அமையும். அந்த வகையில் நாம் ஆதிக்கம், படைப்பு, கலை, இலக்கியம் பற்றிய ஒத்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறொம். சில கூறுகளை வேறுபட்டு விளக்குகிறோம் என்று தோன்றுகிறது. உதாரணமாக ரீலிஜியன் என்பது மர்மங்களை மறுக்கக் கூடியதாக, முடிவுறுதி உடையதாக உள்ளது என்று நாங்கள் விளக்குகிறோம். ஒரு தொல் சமயத்தில் உள்ள ஆக்கப்பூர்வமான கூறுகள் நிறுவன மதங்களில் இருப்பதில்லை. இதில் creative mystryக்கு இடமில்லை. இவை குறித்து நாங்கள் வேறுவகை விளக்கங்களைத் தர வேண்டி இருக்கிறது. நாங்கள் விளக்கும் பொழுது மௌனி எழுத்து மனதின் பன்முகச் சிக்கலை ஏற்கவில்லை என்பதாக நிறுவப்படுகிறது. பிரம்மாண்டம், மர்மம், விளக்க முடியாத தன்மைக்கு மாறான நினைவாக்கம் என்ற தளத்தில் கூழல் மாற்றப்படுகிறது என்பதை மனக்கோட்டை என்ற கதையை முன் வைத்து நாங்கள் விளக்கி இருக்கிறோம். அவரது மொழியில் ஒரு நிழலியக்கத் தன்மை, சாயல் குழப்பத் தன்மை உள்ளது. அது முக்கியமானது. அதே போல் Uncertain என்பதை மொழியில் வருவித்தலும் முக்கியமானது. ஆனால் இவை அவரது மொத்த புனைவுத் தளத்தில் எதிரான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஜி.கே. எழுதிய மர்ம நாவலில் நீங்கள் uncertainity in syntex என்ற வகையில் உண்மை உருவாக முடியாத தகவலைக் குழப்பும் மொழியைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். இது fiction தளத்தில் வேறு கூடுதல் விளைவுகளை ஏற்படுத்துகிறது. மௌனியை எவ்வளவு தளர்ந்த நிலையில் வாசித்தாலும் எங்களுக்கு அவை Poetical அல்லது Fictional experience ஆக மாறாமல் ஒரு Plastic தன்மை உடையதாகத் தோன்றுகிறது. சில காட்சிக் களங்கள் மட்டும் உண்மையில் முக்கியத்துவம் உடையவைதான் என்றபோதும், இரண்டொரு கதைகளைத் தவிர மற்றவை ஒற்றைத் தள அர்த்தமுடையவையாகவே தோன்றுகின்றன. கோயில்களின் உட்பகுதி, விளக்கு வெளிச்சத்தில் தோன்றும் சிலைகள், மனிதத் தோற்றங்கள், தனது இச்சைக்குரிய பெண்ணின் சாயல் கோயில் மற்றும் சூழலில் ஒளித்தன்மையாகக் கருதுவது போன்றவை divine and substituted sensuosness என்று அர்த்தப்படக் கூடியவையே. ஆனால் ஏற்கனவே Eroticism and sacred architecture என்ற அளவில் சிற்பம், கோயில் சூழல், வழிபாட்டு முறைகள், அலங்காரங்கள் உடைய ஒரு சூழலில் இவை இன்னும் தீவிரமாக மொழியாகி இருக்க வேண்டும். Madness in language என்பது மிகவும் அதிர்வுடைய ஒன்று. இதுவும் மௌனியில் இல்லை, முன் உறுதி உடைய narraative movement அதையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது. அவருடைய தளம் புரிகிறது. அதன் கோடுகள், நிழல்கள், நிறக் கலவைகளின் தேவையை நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவை பிரதித் தளத்தில் அமையவில்லை என்றுதான் தோன்றுகிறது.
தமிழவன் : கோட்பாட்டுத் தளத்தில் ஒரே தன்மை கொண்டிருந்தாலும் அவற்றை
செயல்படுத்தும் பொழுது, ஒரு படைப்பை அணுகும் பொழுது, விளக்கும் பொழுது நாம் நோ் எதிரான முரண்பட்ட முடிவுகளுக்கு வருகிறொம்
என்பதைத்தான் இது காட்டுகிறது. கோட்பாட்டு அளவில் ஒற்றுமையை அடையாளம் காண்பது எனக்கு உவப்பளிப்பதாக
உள்ளது. முரண்பட்ட முடிவுகளை
அடைவதை தொடர்ந்து விவாதிப்பதன் மூலம் நாம் விடுபட்டுப் போன புதிய கேள்விகளை எழுப்ப
முடியும் என்று தோன்றுகிறது.
பகுதி – III
கேள்வி:: இந்தக் கட்டத்தில் பேச வேண்டும் என்று தோன்றுவது – உங்களுடைய மூன்றாவது கட்ட எழுத்துமுறை பற்றியது. முதலில் திராவிட உணா்வு சார்ந்த அணுகுமுறை, பிறகு மார்க்சிய அணுகுமுறை, அடுத்தது அமைப்பியல் குறியியல் அணுகுமுறை, இவற்றில் ஏற்கனவே உள்ள கோட்பாடுகளை அப்படியே பொருத்தி உங்கள் ஆய்வுகளைச் செய்தீர்கள். நான்காவது கட்டமாக 88 அல்லது 89 தொடங்கி நீங்கள் சில உருவகங்களை உருவாக்கி அதன் அடிப்படையில் உங்கள் ஆய்வுகளை விளக்க முயற்சிக்கிறீர்கள். பக்தின், யாக்கப்சன் போன்றவா்களின் அடிப்படைகளை எடுத்துக்கொண்ட போதும் நீங்கள் தமிழ்ச் சூழலில் இவற்றை புதிதாக விளக்க முயற்சிக்கிறீர்கள். உதாரணமாக Binary opposition, இரண்டாம் எதார்த்தம் போன்றவை. இவற்றை நீங்கள் உருவாக்கியதன் நோக்கம் என்ன? இவற்றை நீங்களே தொடர்ந்து கையாண்டு விளக்கமளிக்க முயற்சிப்பதன் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள்? வேறுவகை மாதிரிகள் ஏதும் உருவாக்கி இருக்கிறீர்களா?
தமிழவன் : இதுவும் எனக்குப் பிடித்த முக்கியமான கேள்வி. இதைப் பற்றி யாரும் கவனப்படுத்தியதோ, விவாதித்ததோ இல்லை. வெளியே இருந்து தத்துவங்களை, கோட்பாடுகளை, தியரிகளை நிறைய புரிந்து கொண்டபோது தமிழுக்குள்ளான தத்துவ, கோட்பாட்டு மரபுகள், முறைகள் என்ன என்ற கேள்வி எழுந்தது. தமிழ் அறிவு என்பது ஒருவகையில் வாய்ப்பாடாக, பழக்கத்தின் அடிப்படையில் பேசப்பட்டு மங்கிப் போயிருக்கிறது. மேற்கிற்கு ஈடாக நமக்குள் இருக்கும் பல மாதிரிகளை வெளிப்படுத்த வேண்டும்; சரியான விளக்கத்துடன், அந்த வகையில் நான் மொழியியலிருந்து பல மாதிரிகளை எடுத்துக் கொண்டு தத்துவத்தையும் இலக்கியத்தையும் விளக்க முயற்சித்தேன். தொல்காப்பியத்தின் கூற்று என்பது கதையை, இலக்கியத்தை விளக்க அதிகம் பயன்படக் கூடியது. வோலஷினோவின் Dialogic imagination னிலிருந்து ஒரு பகுதியையும் தொல்காப்பியத்திலிருந்து ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய மாதிரியை உருவாக்கினேன். இந்த theorisation என்பது இலக்கியத்தை அணுக ஒரு democratic முறையை உருவாக்கும் என்று நம்புகிறேன். இதில் அடிப்படை தியரி, செயல்படுத்தும் முறை, முடிவு (Theory, application, conceptulization) என்பவை உண்டு. இங்கு ஒருவருடைய எழுத்தில் எந்த இடத்தில் பிரச்சனை என்பதை objective ஆக விளக்க முடியும். அனுபவம், தர்சனம் என்ற தன்னிலை சார்ந்த அபிப்பிராயங்களை விமா்சனம் என்ற பெயரில் செய்து வந்ததன் மூலம் சாதிய மேலாதிக்கம் இன்னொரு பெயரில் இலக்கியத்தில் செயல்பட்டது என்பதுதான் உண்மை. பிராமணீயத்தின் மாற்று வடிவங்களாக அவை இருந்தன. மொழியின் பயன்பாடு என்ற அளவில் இவை கோட்பாடு போலவும் விமா்சனம் போலவும் தோற்றம் தந்த. இதற்குள்ளிலிருந்து சாதிய ஒதுக்கல் மறைக்கப்பட்டது. இதையே ஒரு theory அடிப்படையில் பேசினால் எந்த வகையில், எந்த வடிவில், எந்த இடத்தில் ஒன்று சரியில்லை என்பதை விளக்கியாக வேண்டும். எதன் அடிப்படையில் ஒருவருடையது இலக்கியமாகவும், இன்னொருவருடையது இலக்கியத்தரம் இல்லாததாகவும் மாறுகிறது என்று நிறுவியாக வேண்டும். இதை நாம் எண்பதுகளில்தான் உருவாக்க முடிந்தது. பிராமணீயச் சார்புடைய பழைய அனுபவவாதம் இதன் மூலம் உடைந்துபோனது. நான் உருவாக்கிய இரண்டாவது எதார்த்தம் புதிதாகவே என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் theorising மூலம் இலக்கியச் சொல்லாடலை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான். இதற்கு நிறைய வாசிப்பும், உழைப்பும் தேவை. வாசிப்பும், உழைப்பும் உடைய யாரும் புதிய மாதிரிகளை, உருவகங்களை உருவாக்கி அறிவுத் துறையிலும், இலக்கிய விமா்சனத்திலும் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்.
சமீபத்தில் நான் ஆங்கிலத்தில் எழுதிவரும் கட்டுரைகளில் தமிழினக் கோட்பாடுகள் சிலவற்றை மொழியியல், நாட்டார் வழக்காற்றியல், naratology போன்றவற்றிற்குப் பயன்படுத்தி புதிய விளக்கங்களைப் பெற முயற்சித்திருக்கிறேன்.
தமிழ் இலக்கியச் சூழலில் கோட்பாடு சார்ந்த எனது சில மாதிரிகளை யாரும் விவாதிக்காமல் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்வது என்பதையே விமர்சனம், இலக்கிய விவாதம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: நீஙகள் கூறும் உருவக உருவாக்கம் என்பது கோட்பாடு, தத்துவம் போன்ற ஆய்வுகளில் மிகவும் முக்கியமானது. நாங்களும் புனைவு எழுத்துக்களில்கூட சில மாதிரி உருவகங்களை, கட்டமைப்பு மாதிரிகளை வைத்து படைப்பாக்கத்தை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். தத்துவ உரையாடலில் புனைவு உருவகங்களை அறிமுகப்படுத்துகிறோம். Clandestine Senses போன்ற உருவகங்கள். நீங்கள் பல கட்டுரைகளில் இந்த தியரைசிங் மாதிரிகளை உருவாக்கியதற்கான காரணத்தை விளக்கினீா்கள் சரி பார்க்க முடியும் தன்மை பற்றி நீங்கள் குறிப்பிட்டீா்கள். இந்திய மரபில் பௌத்த சமண முறையிலும் மேற்கில் நீட்ஷே, ழீல் தெலஸ், ஃபெலிக்ஸ் குவத்தாரி மூலியா கிறிஸ்தேவா என்ற புள்ளிகளும் சிறு மரபுகள் சார்ந்த புனைவுப் பரப்பும் கலந்த ஒரு இயந்திரவியல் உள்ளுடி, இருந்து கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து தயக்கமில்லாமல் நாங்கள் கூறுகளைக் கையாண்டு புதிய சேர்க்கைகளை உருவாக்கிக் கொள்கிறோம். Afirmative subversion, materal philosophy, முற்றுபெறா பேச்சு, கவிதை இயந்திரம் போன்ற பல. உங்களுடைய உருவாக்க முறைகளில் இதுபோல் யாருடைய தாக்கல் அல்லது யாருடைய முறையியல் கலந்து வருகிறது என்று கூறமுடியுமா?
தமிழவன் : இந்த வகையான Formative process பற்றிய பேச்சு தமிழுக்கு அவசியம். முடிவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதிப்பது அதிகமான நமது சூழலில் கருத்து உருவாக்கும் முறை பற்றிய பேச்சு இல்லை. அதையும் உள்ளடக்கி எழுத ஆரம்பித்தால் பல புதிய சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்படும். நான் பக்தின், ழூலியா கிறிஸ்தேவா என யாரைப் படிக்கும்பொழுதும் சிலவற்றை எடுத்துக் கொள்கிறேன். சிலவற்றை விட்டுவிடுகிறேன். தமிழிலும்கூட சிலவற்றை பாதியளவு எடுத்துக் கொள்கிறேன். சிலவற்றை மாற்றியமைத்துக் கொள்கிறேன். இவற்றை literary criticism என்ற தளத்தில் மாற்றியமைக்க முயற்சிக்கிறேன். சமீபத்தில் James Clifford இன் நூலை வாசித்தேன். Anthropology ஒரு இலக்கிய விமா்சன முறையில் எழுதப்பட்டிருக்கிறது. Foucoult தனது ஆய்வுகளை Social Science தளத்திலிருந்து கலை, இலக்கிய ஆய்வுகளுக்கும் கலை, இலக்கியப் பேச்சுகளை வரலாற்று ஆய்வுகளுக்கும் நகர்த்திச் செல்கிறார். தெரிசா போன்றவா்களும் தத்துவம், இலக்கியம் என்பதை கலந்து பேச்சுக்களை மாற்றி அமைக்கிறார்கள். நான் நினைப்பது மேற்கிலிருந்தோ, இந்திய மரபிலிருந்தோ ஒன்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்கிறோம், எவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம், எதை மாற்றி அமைக்கிறோம் என்றெல்லாம் இனி self reflexive ஆக எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது.
கேள்வி:: நாம் மேற்கிலிருந்து எடுத்துக் கொண்டவை போலவே பலவற்றை விமா்சித்தும் கேள்வி கேட்டும் வருகிறோம். ஆனால், அவை அதிகமாக எழுதப்படுவதில்லை. பக்தின், ஃபுக்கோ, தெரிதா, லியோதார் என பலரிடமும் நாம் பலவற்றை எடுத்துக் கொள்ளும் அதே சமயம் இந்தியச் சூழலில் இருந்து விமா்சிக்கவும் செய்கிறோம். இவற்றைப் பற்றி விரிவாக எழுத வேண்டியது அவசியமில்லையா?
தமிழவன் : இது அவசியமானதுதான். ஆனால் பல limitations உண்டு. இவற்றை தொடர்ந்து வாசிக்க குறைவான போ்களே இருக்கும் பொழுது எழுத்து அந்நியமாகிப் போகும். இவற்றை ஆய்வுத்தளத்தில் தொடங்கி வளா்த்தெடுத்தால் மேற்கோடு நாமும் இணையாக உரையாட முடியும். உலக அளவிலான விவாதங்களுடன் நாம் உறவு கொள்ளவம் முடியும். இவற்றை வாசிக்கும் சில பேர் தமக்குள் முதலில் விவாதத்தைத் தொடங்கி எழுத்தை நோக்கி வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. மேற்கில் கல்வித்துறை சார்ந்தே இவ்வகை விவாதங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு வாசிப்பு என்பதே முறைப்படுத்தப்படவில்லை. ஒருவித அறிவு மறுப்பு மனோபாவம் வளர்ந்திருக்கிறது. இந்த அறிவு மறுப்பு எதற்கும் காரணம் கூற வேண்டியதில்லை என்கிற ஒரு அதிகாரச் சூழலுக்கு ஆதரவாக உள்ளது. இவற்றை மாற்ற நாம் மிகக் குறிப்பான அறிவுசார் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். அது இலக்கியத்திலிருந்து தொடங்கலாம். தத்துவத்திலிருந்து தொடங்கலாம். மொழியிலிருந்து தொடங்கலாம். ஏதோ ஒரு தளத்திலிருந்து எதையும் சரிபார்க்கக்கூடிய காரணமுறையிலான ஒரு சிந்தனைத் தளத்தைக் கட்டமைக்க வேண்டும். இது இங்குள்ள undemocratic தன்மைக்கு எதிராக அமையும். இதை நான் குறிப்பிட்ட தளத்தில் தொடர்ந்து மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். இதற்காக பிற சிந்தனைப் போக்குகளை வாசித்து சரி பார்ப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறேன். இதற்கு உதவியாக உள்ள பல்வேறு தரவுகளையும் நான் கூடுதலாகவோ, குறைவாகவோ எடுத்துக் கொள்கிறேன்.
குறிப்பு : இந்த உரையாடல் பல பொருள்களைத் தொட்ட போதும் இலக்கிய மொழி, இலக்கிய அமைப்பாக்கம், கோட்பாட்டாக்கம் என்பவை பற்றித் திரும்பத் திரும்ப சுழன்று வந்ததைக் கவனிக்க முடிந்தது. தமிழ்ச் சூழலில் இவற்றைப் பொருத்தி அறிவதும் இரு வேறுவிதமான கருத்துக்களங்களை இடையீடு செய்வதாக அமையும். இத்துடன் தொடர்புடைய இதில் விளக்கப்படாமல் விடுபட்ட கேள்விகளையோ மாற்றுப் பார்வை உடைய கேள்விகளையோ எழுப்பி இந்த உரையாடலைத் தொடர முடியும். கேள்விகளை எழுதி, தொடர வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சந்திப்பு : 29.01.2000, புதுவை
பன்முகம் : செப் – நவம்பா் 2001