ஆண் வன்முறையின் அரசியல் மற்றும் பெண்மீதான வன்கொடுமை -மாலதி மைத்ரி

ஆண் வன்முறையின் அரசியல் மற்றும்

பெண்மீதான  வன்கொடுமை

(ஷோபா சக்திக்கு வாய்த்துவிட்ட இரண்டு வாய்ப்புகள்)

                                                                                                        மாலதி மைத்ரி

வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன்.

அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது.

“அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள்.  இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன.  முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றால் இவர்களின் அரசியல் பிழைப்புவாத அரசியலாகத்தான் இருக்க முடியும். தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது. யோ. கர்ணன் பிரபாகரனை விமர்ச்சிக்கிறேன் என்று அவரது மகள் மனைவியை அவமானப்படுத்தி எழுதியதை மன்னிக்க முடியாது. இவர்கள் பன்முகப் பார்வையற்று ஈழ விடுதலைப் போராட்டத்தைத் திரும்பத் திரும்ப புலிகளின் தவறுகளால் மட்டுமே நிகழ்ந்த வன்முறையாக எழுதி வருகிறார்கள்.”

இதற்கு எதிர்வினையாக ஷோபா சக்தி, “மாலதி மைத்ரியின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமையாக மறுக்கின்றேன். அவரது வார்த்தைகள் எவ்வித உண்மைகளும் அரசியல் அடிப்படையுமற்றவை மட்டுமல்லமால் அவர் தன்னெஞ்சறிய உரைக்கும் கள்ளச் சொற்களவை.” எனத் தொடங்கி நீண்ட ஒரு பதிலை பதிவு செய்திருந்தார்.

1.ஆண் வன்முறையின் அரசியல்

அவரது பதிலை முதலில் ஒரு தன்னிலை விளக்கமாகத்தான் வாசித்தேன். அவர் சொல்பவற்றில் உண்மையும் நேர்மையும் இருக்கும் என்றால் அதனை ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவிக்க எனக்கு தயக்கம் இல்லை. ஏனெனில் நான் தெரிவித்திருந்த கருத்துகள் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தவை அல்ல, இனவிடுதலை அரசியல், பெண்ணுரிமை அரசியல் என்ற இருதளங்களில் அமைந்த மிகமுக்கியமான கேள்விகளுடன் தொடர்புடையவை.

 இவை இரண்டிலும் ஒருவர் கொண்டுள்ள நிலைப்பாடும் அவை தொடர்பான சிக்கலின்போது அவர் மேற்கொள்ளும் செயல்பாடும், சொல்லாடல் முறையும் அவரின் தன்மை மற்றும் அரசியல் வடிவத்தை உறுதி செய்பவை. அந்த வகையில் தன் செயல்பாடுகள் மூலம் மட்டுமின்றி தன் வன்மையான பேச்சுமுறையாலும் ஷோபாசக்தி  மீண்டும் நான் சொன்னவற்றை உறுதி செய்திருக்கிறார்.

“எவ்வளவு எளிதாக அடிப்படையில் நான் ஈழவிடுதலைக்கு எதிரானவன் என அவர் தீர்ப்பிட்டுவிட்டார்!” என்று கேள்வி கேட்டு “தான் ஈழவிடுதலையை நேசிக்கும் ஒருவன்” என்று சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தால் “புலிகள் அமைப்பு  ஒழிந்தாலும் அவர்கள் புதைக்காமல் விதைத்து விட்டுப்போன பிற்போக்குக் கருத்தியலும் அவர்களது பாஸிசச் சிந்தனைகளும் எம்மிடையேயிருந்து வேரோடு அழியும்வரை நாங்கள் புலிகளின் பாஸிச அரசியலையும், அந்த அரசியலின் நீட்சியாக அவர்கள் எமது மக்களை வதைத்ததையும் ஓயாமல் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டவர்களாகயிருக்கின்றோம்.   ஈழத் தமிழ்ச் சமூகத்தில் மறுபடியும் புலிகளைப் போன்றதொரு பாஸிச சக்தி தலையெடுக்கவே கூடாது. இது எங்களுக்கு   உணர்வு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, எங்களது உயிர் சார்ந்த பிரச்சினை.” என்று வன்முறையை மறுக்கும் ஒருவர் சொல்ல முயல்வது போன்ற     வடிவத்தில் தமிழ் இன அடையாளம், தமிழீழ அரசியல் இரண்டையும் “பிற்போக்குக்   கருத்தியல், பாஸிசச் சிந்தனை” என்று   தீர்மானமாகச் சொல்லி அவை “வேரோடு அழியும்வரை” நாங்கள்  செயல்படுவோம் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். வேரோடு அழித்தல் என்ற “சமாதான அமைதி அரசியலை” சிங்கள, மகிந்த இனவெறி அரசு செய்து முடித்து பெருமை கொண்டாடிக் கொண்டுள்ள நிலையில் பாசிசத்துக்கு எதிரானவர், ஜனநாயக-மனித உரிமைகளை மதிப்பவர் எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவர் வைத்திருக்கும் திட்ட வரைவு இப்படி உள்ளது, “எமது மக்களிடையே சனநாயகக் கலாசாரம் மீண்டும் மலர்வதற்கு இந்தச் சிந்தனைகளை அழித்தொழிப்பது அடிப்படை நிபந்தனையாகிவிடுகிறது.”

 அழித்தொழிப்பது, வேரோடு அழித்தல், புலிகள் அமைப்பு ஒழிந்தது, மீண்டும் தலையெடுக்கவே கூடாது என்பவை அச்சுறுத்தும் அரசியல் வன்சொற்கள். குடிமைச் சமூகத்தின் தனிமனிதர்கள் இவற்றைப் பயன்படுத்துவதற்கும் களப்போராளி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகம் மீண்டும் மலர்வதற்கு சிந்தனைகளில் மாற்றம் தேவை என்று சொல்ல இயலாத ஒருவர், அழித்தொழிப்பது என்பதை முன்மொழிவார் எனில் அதன் பொருள் அந்தச் சிந்தனை உள்ள மக்களை அழித்தொழிப்பது என்பதுதான். “அவர்கள் புதைக்காமல் விதைத்துவிட்டுப்போன” என்று தெளிவாகச் சொல்லும் ஒருவர் மக்களிடம் அந்தக் கருத்து உள்ளது என்பதை பதிவு செய்துவிட்டு அதனை வேரோடு அழித்தல் என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது தெரிய வரும்பொழுது மிகுந்த அச்சமே ஏற்படுகிறது. “புலிகளின் கருத்தியல் என்பது எங்களுக்கு வெறுமனே கருத்தியல் மட்டுமல்ல. அந்தக் கருத்தியல் செயலாக மாறி எங்களது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று போட்டிருக்கின்றது. எங்களது மக்கள் மத்தியிலிருந்து சனநாயகக் கலாசாரத்தை முப்பது வருடங்கள் நீக்கி வைத்திருந்தது.” என்ற வாக்கியத்தில் உள்ள செயலாக மாறிய கருத்தியல் என்ற இடத்தை “வேரோடுஅழித்தல்” என்ற கருத்தியல் எடுத்துக் கொள்கிறது.

 “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” எனக் கண்ணை மூடிக்கொண்டு வாயை மட்டும் அகலத் திறந்து கோஷம் போடுவதற்கு நானொன்றும் புலிகளின் புகழ் வெளிச்சத்தில் என்னை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட எழுத்தாளன் கிடையாது.” என்று பதிவு செய்துள்ள இவர் கூறும் “விதைத்துவிட்டுப் போன கருத்தியல்” எது? மக்கள் மத்தியில் “புலிகளின் புகழ் வெளிச்சம்” எப்படி நிலவ முடிகிறது? கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு சொல்லப்படும் திட்டமிடப்பட்ட  பொய்கள் தமிழ் இன அரசியலை மட்டுமல்ல தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளையே அழித்தொழிப்பதற்கான சதித்திட்டங்களாக மாறியுள்ளன.

இனப்படுகொலை மூலம் தமிழ் மக்களைக் கொன்றழித்த மகிந்த ராணுவம் “புலிகளும் மக்களும் ஒன்று” என்று கூறி அப்பெருங்கொடுமையைச் செய்து முடித்தது. மீந்துள்ள மக்களையும் அது அவ்வாறே அடையாளப்படுத்தி வருகிறது. இந்த அச்சுருத்தும் சூழலில் மக்கள் தங்கள் தமிழ் இன அரசியல் கோரிக்கையையும் விடுதலைப் புலிகள் முன்மொழிந்து சென்ற தமிழீழ அரசியலையும் கைவிட்டு விட்டதாகவும் சிங்கள இனத் தேசியத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு வெளித் தோற்றத்தை தற்காலிகமாக ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் நடந்தது வேறு விதமாக உள்ளது. மாகாண சபை தேர்தலில் (2013) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 38-க்கு 30 இடங்கள் பெறுவதற்கேற்ப  மக்கள் வாக்களித்துள்ளனர்.

 விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ள இக்கூட்டணியை மக்கள் புறக்கணித்து மகிந்த கூலிப்படைக்கு வாக்களித்திருப்பார்களேயானால் மக்கள் புலிகள் இயக்க வரலாற்றை வெறுத்தொதுக்கிவிட்டதாக பொருள்பட்டிருக்கும். இந்த நிலையில் தமிழீழம் பற்றிய மக்கள் கருத்துக் கணிப்பு, பொதுவாக்கெடுப்பு நடந்தால் அதன் தீர்ப்பும் தமிழீழ ஆதரவாகவே அமையக்கூடும். புலிகள் பற்றி மக்கள் கொண்டுள்ள உணர்வு இருவகைப்பட்டுள்ளது. புலிகள் தோல்வியடைந்தது பற்றிய கோபம், தங்களைக் காக்க இயலாத நிலையை அடைந்ததுடன் நிராதரவாக விட்டுச் சென்றதன் ஏமாற்றம், வலி இரண்டும் இணைந்த அவலம் நிறைந்த நினைவு. இவை வரலாற்று நினைவாக மீந்திருக்கும், வேரோடு அழிக்கவோ, விதைகூட இல்லாமல் அழிக்கப்படவோ இயலாத ஒன்று. இந்த நிலையை “புலிகளின் புகழ் வெளிச்சத்தில் தங்களை நிறுத்திக்கொள்ள முயலும் சொரணை கெட்ட மக்கள்” என்று விளக்கம் தரக்கூடியவர்கள் “மக்கள் மத்தியிலிருந்து சனநாயகக் கலாசாரத்தை” இன்னும் முப்பது வருடங்கள் நீக்கி வைத்திருக்கவே வழிசெய்கிறார்கள்.

ஷோபா சக்தி தன்னை ஜனநாயக கலாச்சாரவாதி, பாசிசத்திற்கு எதிரானவர், வன்முறையை ஏற்காத ஒரு எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டுதான்  இவற்றை நான் தொடக்க நிலையில் குறிப்பிட்டிருக்கிறேன். இனி அவருடைய உண்மையான அடையாளம் என்ன என்பதை பார்க்கலாம்.

“இந்த எதிர்வினையை, எனது வழமைக்கு மாறாக மிகவும் மென்மையான தொனியிலேயே எழுதியிருக்கின்றேன்.” என்பது அவருடைய எச்சரிக்கை.  அவரது வழமை என்ன? வழமைக்கு மாறான  மிகவும் மென்மையான தொனி எது? என்பவை அழுத்தமாகப் பதியவைக்கப்பட்டுள்ளன.  இதில் தெளிவாக வெளிப்படும் ஆண் வன்முறையின் அரசியல் மிரட்டக்கூடிய ஒன்று.

 பாசிசத்தை எதிர்ப்பதுதான் தன் வாழ்க்கைப் பணி என்று சொல்லவரும் ஒருவருடைய வழமை இப்படிப் பதிவாகிறது, “நான் நான்கு வருடங்களிற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் பெற்றெடுத்த ‘கண்ணீர்’ போராளியல்ல, ‘சோசலிஸ தமிழீழம்’ என்ற புலிகளின் அழைப்பைக் கேட்டு முப்பது வருடங்களிற்கு முன்பாக அவர்களோடு இணைந்த களப்போராளி.”

 கண்ணீரும் துயரமும் அரசியலுக்கு உதவாதவை, போராளியாக அதுவும் களப்போராளியாக இருப்பவர்கள் (இருந்தவர்கள்) மட்டும்தான் அரசியல்பேச உரிமை உடையவர்கள் என்று மிகவும் மென்மையான தொனியில் இவர் சொல்லித் தருகிறார். சில ஆண்டுகள் களத்தில் இருந்த இவருக்கு உள்ள இந்த உரிமை வாழ்நாள் முழுதும் களத்தில் இருந்து மடிந்தவர்களுக்கு இல்லாமல் போவது எப்படி? இவர் தன்னை வெளியேற்றிக் கொண்டு தனது புதிய அரசியலைத் தொடங்க எந்த வகை பொதுமன்னிப்பு அடிப்படையாக இருக்கிறதோ, அதே அறத்தின் அடிப்படையில்தான் புலிகளுக்கும் அவர்களின் தளமாக இருந்த மக்களுக்கும் கால அவகாசம் தரப்பட்டிருக்க வேண்டும். இதனைத் தர மறுத்த கொடிய அரசபயங்கரவாதம்தான் புலிகளின் பாசிசம் பற்றி மாய்ந்து மாய்ந்து வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. தங்களை முன்னாள் களப்போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தன்னார்வத்துடன் இதற்குச் சாட்சிகளாக வந்து சொல்பவை எல்லாம் யாராலும் கேள்வி கேட்க முடியாத உண்மைகளாகி விடுக்கூடும். கண்ணீர்ப் போராளிகளுக்கும் மக்களுக்கும் வரலாற்றில் இடமில்லை என்பதை யார்தான் மறுக்க முடியும்?

புலிகள் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகம் இன்றி உறுதிபடக் கூறும் ஷோபா சக்தி போன்றவர்கள் அவற்றை விசாரிக்வோ, அவர்கள் தரப்பை விசாரித்து அறியவோ கால அவகாசம் தராமல் தீர்ப்பை வழங்கி இயக்கத்தினரையும் மக்களையும் இல்லாமலாக்கியதை எந்த வகை நீதியில் சேர்க்கிறார்கள்?  அதுவும் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்கமே விசாரணை நடத்தி, தீர்ப்பை எழுதி, மேல்முறையீட்டுக்கான காலஅவகாசம் தராமல் கொலை தண்டனையையும் நிறைவேற்றி விட்டு, “தலைமையின் முட்டாள்தனமான நம்பிக்கைகளிற்காக புலிகள் ஈழமக்களைப் பலியிட ஒருபோதும் தயங்கியதில்லை” அதனால் “இனிப் பலியிட யாரும் இல்லாத அளவிற்கு அனைவரையும் வேரோடு அழித்து விட்டோம்” என்று சொல்லும்போது கொண்டாடி மகிழ எந்த அறம் இடமளிக்கிறது?

இல்லாமல் போனவர்கள் வன்முறையாளர் என்று ஓயாமல் பேசுவதன் மூலம் வெற்றியடைந்த படுகொலையாளர்கள் சாதனையாளர்களாக, வரலாற்று நாயகர்களாக மாற்றப்படுகிறார்கள். இதனையே “முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசுவதில் உள்ள அரசியல்” என்கிறேன். பாசிசத்தை அழித்து மக்களுக்கு விடுதலை அளித்த மகிந்த ராணுவத்தை தமிழர்கள் கைதொழ வேண்டும் என்பதும் அதில் அடங்கியுள்ளது.

  புலிகள் மட்டுமல்ல ஈழ விடுதலை இயக்கம் என்று செயல்பட்ட அனைத்து இயக்கங்களும் வன்முறை சார்ந்த போர் வழியிலேயே செயல்பட்டுள்ளனர். அரச பங்கரவாதம் இவற்றைப் பெருக்க பல சதிகளைத் தீட்டி செயல்படுத்தியுள்ளது. உலகின் எந்தப் போராளி இயக்கத்தின் நடவடிக்கைகளும் வெளிப்படையாகவோ முழுமையாகவோ பதிவானது இல்லை. விடுதலைப் புலிகள்மீது மட்டுமின்றி ஈழவிடுதலை பற்றிப் பேசிய அனைத்து இயக்கங்கள் பற்றியும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களும் பார்வையாளர்களும் நிகழ்வுகளைப் பற்றி பலவாறு பதிவு செய்துள்ளனர்.

“இந்தியப் படையினரைவிடவும் சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். இனர் அதிக அட்டகாசங்களை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியிருந்தார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று இவர்கள் எந்த விதத்திலும் இந்தியப் படையினருக்கு சளைக்காமல் கோரதாண்டவம் ஆடியிருந்தார்கள்.”

“ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாணிப்பாய் பகுதிக்கு இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் நிசாம். அவரின் சொந்தப் பெயர் பிரபா. இணுவிலைச் சேர்ந்தவர்.  சித்திரவதைக்கும் கொலைகளுக்கும் பேர்போனவர். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களையும் கொலைசெய்வதில் இவர் மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்துடன் நோக்கப்படும் ஒரு மனிதராகவே இருந்தார். அதுவும் கலை நயத்துடன் விதம் விதமாக மிகவும் கொடூரமாகக் கொலைகள் செய்வதில் மிகவும் வல்லவராக இவர் நோக்கப்பட்டு வந்தார். இந்தியப் படையினரின் காலத்தில் மட்டும் இவர் 87 விடுதலைப் புலி ஆதரவாளர்களைக் கொலை செய்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்வார். மண்வெட்டியால் தலையை வெட்டிக் கொலை செய்வதில் இவர் மிகவும் பிரபல்யமானவர். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதையும் பார்த்து ரசிப்பாராம். வெட்டப்பட்ட தலை தனியாகக் கிடந்து துடிப்பதை இவரது கோஷ்டியில் இருப்பவர்கள் மற்றய ஈ.பி.ஆர்.எல்.எப். இனரிடம் விபரிப்பதில் அலாதி குஷி அடைவார்களாம். இவரது கொலைகள் பற்றிக் குறிப்பிடும் ஊடகச் செய்திகள், இவரால் கொலை செய்யப்பட்ட 87 நபர்களுள் சுன்னாகத்தைச் சேர்ந்த கஜன் என்பவர் மாத்திரமே விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், மற்றய 86 பேரும் அப்பாவிகள் என்றே குறிப்பிடுகின்றன. தனது சகோதரியின் கணவனையும் புலிகள் இயக்க ஆதரவாளர் என்று குற்றம் சுமத்தி இவர் சுட்டுக்கொன்றது பற்றி இவரது தோழர்கள் பெருமைப் பட்டுக்கொள்வார்கள்.” (ஈழத் தமிழருக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்கள்: அவலங்களின் அத்தியாயங்கள்- 32, தமிழ்வின்) –நிராஜ் டேவிட்

“எண்பதுகளின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தது. இந்தியாவில் நம்பிக்கைக்குரிய சில ஆட்களை வைத்துவிட்டு இலங்கையில் இருந்து முகுந்தன் (உமா மகேஷ்வரன்)  இயங்கி வந்தார். 1985-க்குப் பிறகு அவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியோடு நெருக்கமாக இருந்து இந்தியாவுக்கு எதிரான சில வேலைகளைச் செய்து வந்தார். முகுந்தன் ஜே.வி.பி-யோடும் சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்காவோடும் நெருக்கமாக இருந்தார். விஜய குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஜேவிபியின் ஆட்கள் விஜய குமாரதுங்காவின் ஆட்கள் சிலரைத் தாக்கியபோது அந்த தாக்குதல்களில் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களும்கூட பங்கு கொண்டிருந்தனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முகுந்தன் இது தன்னுட்டைய அரசியல் தந்திரோபாயம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.”

“முகுந்தன் மாலத்தீவில் பிளாட் ஆட்கள் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த தாக்குதலுக்குப் பிறகு பிளாட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு சந்தேகம் வந்தது. இயக்கமே பின்னர் முகுந்தனைக் கொலை செய்வதாக முடிவெடுத்த்து. 1989 ஜூலை 16ந் தேதி வெள்ளவத்தை என்ற இடத்தில் உமா மகேஸ்வரன் தன்னுடைய பாதுகாவலர் ராபின் என்பவரால் கொல்லப்பட்டார்.” வெற்றிச்செல்வன்,  பிளாட் அமைப்பின் முன்னாள் டெல்லி பிரதிநிதி.   (பிப்ரவரி 18, 2012. சன்டே இந்தியன் பேட்டியில்)

“என்னை மீட்டவர்கள் ‘பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் ‘பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி  சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக்  கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல்  போனார்.  அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது.  ஆனால், ஊகிக்க முடிந்தது!”

“தாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்!”-  டேவிட் (Tamil Eelam Freedom Struggle உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.) ஆனந்த விகடன் 4 செப்டம்பர், 2013.

ஈழ விடுதலைக்காக போராடுவதாக சொன்ன ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட், டொலோ, ஈ.என்.டி.பி. தற்போதைய கருணாவின் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களும் ஆயுத்ததால்தான் பேசிக் கொண்டார்கள். இதில் புலிகள் மட்டும் ஹிட்லராகவும் பிற போராளிக் குழுக்கள் மகாத்மாக்களாகவும் எப்போது எந்த கொள்கை அடிப்படையில் மாறினார்கள். புலிகளின் கொலைப்பட்டியலை மட்டுமே எப்போதும் கைவசத்தில் வைத்திருப்பவர்கள், பிற இயக்கங்களின் கொலை பட்டியலுக்கு எப்படி  பாவமன்னிப்பு வழங்கினார்கள்?

புஷ்பராஜாவும் புஷ்பராணியும் புலிகளின் கொலைகளை அதிகமாகப் பேசித் தங்கள் இயக்கம் மற்றும் பிற இயக்கங்களின் கொலைகளை அதற்குக் கீழே அடுக்கி பிற இயக்கங்களின் கொலைகளை பிரச்சனையாகப் பேசாமல் தவிர்க்க முடிந்தது. ஆனால் இன்னமும் புலிகளின் யுத்தக் குற்றங்களைப் பட்டியலிட்டு அடுக்கி ராஜபக்சேவின் இனப்படுகொலையை சிறியதாக்கி காட்டும் முனைப்பில் உள்ளவர்களின் அரசியல் என்ன?

 இந்திய அமைதிப்படை ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த பிறகும் புஸ்பராஜா இந்திய அரசின் விருந்தினராக இந்திய ராணுவ விமானத்தில் ராவுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பறந்து பேச்சுவார்த்தை நடத்தியதையோ,  ஈ.பி.ஆர்.எல்.எப் தேர்தல் அலுவலகத்துக்கு பின்புறம் இயங்கிய வதைமுகாம்களின் வன்முறைகள் பற்றியோ இவர்கள் கேள்வி கேட்டதில்லை.  புஷ்பராஜா நூலில் ஈ.பி.எல்.ஆர்.எபின் வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பதால் நாம் கைக்குலுக்கிக் கொள்ளலாம்.  ஆனால் முஸ்லிம்களின் மீதான வன்முறைகளுக்கு பலமுறை மன்னிப்பு கேட்ட பிறகும்  புலிகளை பயங்கரவாதிகள் என ஒதுக்கி வைத்து அழித்தொழிக்க வேண்டும்.

“துணுக்காய் வதைமுகாம், கந்தன் கருணைப் படுகொலை, யாழ்ப்பாணக் கட்டாய இடப்பெயர்வு, முஸ்லீம் மக்களைத் துரத்தியது, குழந்தைகளைத் துப்பாக்கி முனையில் இயக்கத்தில் இணைத்தது, முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள் என்பவை எல்லாம் ஒன்றும் கதையல்ல, புலிகள் வேறு மக்கள் வேறு என்பதற்கான துயரமான ஆனால் வலுவான வரலாற்றுச் சான்றுகள் இவை.” என ஷோபா சக்தி குறிப்பிட்டிருக்கும் இந்தத் துயரச் சான்றுகளில் மற்றொரு பகுதியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். புலிகளின் அனைத்து வெற்றிக்கும் நானும் எனது படையும்தான் காரணம் என்று பெருமையுடன் பதிவு செய்திருக்கும் கருணா அம்மான் இந்த தாக்குதல்கள், வெளியேற்றங்களில் முதன்மைப் பங்காற்றியதாகத் தகவல்கள் உள்ளன. அத்துடன் “முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சம் மனிதக் கேடயங்கள்” இருந்தபோது ராணுவத்திற்கு வரைபடங்களை உருவாக்கித் தந்ததில் இன்றைய அமைச்சருக்கு முக்கிய பங்கிருந்தது என்பதும் பதிவான செய்திகள். இவர்கள் மன்னிக்கப்பட உரியவர்கள் எனில் சிலர் மட்டும் வேரோடு அழிக்கப்பட உகந்தவர்கள் எனத் தீர்ப்பு வழங்க ஷோபா சக்திக்கு எந்த மனிதவுரிமை அரசியல் சொல்லிக் கொடுத்தது?

எனக்கும் புலிகள் மற்றும் பிற போராட்டக் குழுக்கள் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. புலிகள் அமைப்பில் உள்ள குழந்தை போராளிகள் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள விடுதலை போராட்டக் குழுக்களிலிருந்தும் குழந்தைகள் மீட்கப்பட்டு சுந்திரமான இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென்பது எனது கோரிக்கை. சென்ற ஆண்டில் வடகிழக்கு மாநில போரட்டக்குழு உறுப்பினர்களுடன் பேசும்போதும் அவர்களிடம் முதலில் குழந்தை போராளி குழுவைக் கலையுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். “குழந்தைப் போராளிகள் விரும்பியே படிக்கப் போகாமல் போராளிகளாக சேர வருகிறார்கள்” என்று நியாமற்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனாலும் “இவர்கள் பாஸிட்டுகள், தனிநாடு கேட்க உரிமையில்லாதவர்கள். அந்த மாநில மக்கள் இந்தியாவின் காலடியில்தான் கிடக்க வேண்டும்”  என்று சொல்ல நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கமும் ஹமாசும் தீவிர வலதுசாரித்தனம் இல்லாத, குழந்தைப் போராளிகளைக் கொண்டிருக்காத சோஷலிச போராட்டக் குழுக்களா? உலகெங்கிலும் தற்போது உள்ள 90 சதவீத விடுதலைப் போராட்டக் குழுக்களும் வலதுசாரி கருத்தியலுடைய, இனக்குழு மற்றும் மத அடையாளம் கொண்ட குழுக்களாகவே உள்ளன. அதனால் அவர்கள் வல்லரசுகளின் கீழும் இனவெறி அரசுகளின் கீழும் அடிமையாகவே கிடக்கவேண்டும் என்றும் அவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்று கூறுவதுதான் ஜனநாயக அறமா?

இந்தப் பின்னணியில்தான் ஷோபாசக்தி ஈழவிடுதலைக்கு எதிரானவர் என்ற எனது கருத்து  உறுதியாகிறது.  புலிகள் அழிந்த பின்னும் புலிகளின் பாசிசம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதன் மூலம் மாபெரும் இனப்படுகொலையாளர்களின் குற்றங்கள், கொடூரங்கள் பொதுவெளியில் பேசப்படாமல் மறைக்கும் அரசியல் தந்திரம் முன்னெடுக்கப்படுகிறது.  இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டுமென்றும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்புக் குழுவின்முன் நடத்தப்பட வேண்டுமென்றும் இதுவரை ஷோபா சக்தி போன்றவர்கள் பேசியதில்லை.

2. பெண் மீதான  வன்கொடுமை

 “தமிழச்சி பிரச்சினையில் ஷோபாசக்தியின் புரட்சியாளர் வேடம் கலைந்துவிட்டது” என்று நான் குறிப்பிட்டது தமிழச்சி பற்றி வலைதளங்களில் ஷோபா சக்தி பரவவிட்ட வன்கொடுமை கொண்ட வார்த்தைகளையும் பேச்சுக்களையும் முன் வைத்தது. தற்போது தமிழச்சியின் பதிவுகளைப் (வதந்திகளை) பிரித்து எடுத்து தீவிரமாக்கி எனக்கெதிராக மறுபதிவு செய்து என்மீதும் தமிழச்சி மீதும் மீண்டும் ஒரு வன்கொடுமையை செய்திருப்பதன் மூலம் தனது ஆண் திமிரை, தடித்தனத்தை தயக்கமின்றி இவர் காட்டிக் கொண்டிருக்கிறார்.  இவை நான் சொன்னவை அல்ல ஒரு பெண்ணே சொன்னவை. அவர் உங்களையும் உங்கள் நண்பர்களைப் பற்றியுமே இப்படி, அப்படிப் பேசியவர் அதனால் அவர் மீது நான் நடத்திய சொல் வன்முறைகள் நியாயமானவை என இவர் சொல்ல வருவதும், உங்களைப் பற்றிக்கூட என்னால் இதுபோல வதந்திகளைப் பரப்பமுடியாதா என்று எச்சரிக்க முயல்வதும் இதன் உள்ளான பகுதிகள். பெண்கள் மீதான பலவித வன்கொடுமைகளை எதிர்த்த செயல்பாட்டில் இணைந்து தொடர்ந்து இயங்கிவரும் எனக்கு திமிர்கொண்ட சில போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடந்து கொள்வதையும் பேசுவதையும் இது நினைவுபடுத்துகிறது.

 ஒரு பெண் இப்படி உங்களைப் பற்றி சொன்னார் எனச் சில வார்த்தைகளை ஒரு ஆண் சொல்லிக் காட்டுவது இழிந்த திமிர் கொண்ட ஆண் வன்முறை. ஒரு பெண்ணைப் பற்றி அவருடைய அனுமதியின்றி  தகவல்களை வெளியிடுவதை  தண்டனைக்குரிய குற்றமாக இன்று இந்தியப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம்கூட வரையறுத்துள்ளது. ஆண் திமிர் கொண்ட வன்முறையை பெருமையாகப் பதிவு செய்துள்ள இவர் இதனையும் தனது வழமைக்கு மாறாக மென்மையாகவே செய்திருக்கிறேன் என்று விளக்கம் தரக்கூடும். ஆண் பெருமைகொண்ட ஒருவரைப்  பொறுத்தவரை களப்போராளியாக இருப்பது, பெண்கள் மீதான வன்கொடுமைகள், வார்த்தைக் கொடுமைகள் இழைப்பது எல்லாமே சாகசக் கதைகளாக மாறிவிடும்போது, பெண்கள் மட்டும் கண்ணீர் போராளிகளாக இருந்துவிட நேர்வது வரலாற்றுக் கொடுமைதான்.