எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது
“ஈழப்போரை தடுத்து நிறுத்தக்கோரி டெல்லியில் பிப்ரவரி 2009-இல் ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற அடையாளத்துடன் நடத்தப்பட்ட போராட்டம் எந்த அரசியல் கட்சிப் பின்புலமும் இல்லாமல் உணர்வெழுச்சியின் அடிப்டையில் இணைந்த படைப்பாளிகள், மாணவர்கள், திருநங்கைகள்இ மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள் ஒருங்கிணைந்து நடத்தியது.”
அதனால்தான் “உணர்வெழுச்சியில் கொதித்திருந்த போராளிக் குழுவினர் சென்னையில் ரயில் ஏறியதிலிருந்து டில்லியிலிருந்து திரும்பும் வரை தங்கள் போராட்ட உடைகளையோ, முழக்கங்களையோ, தட்டிகளையோ எதோ ஒரு பெரும் சக்தியால் உந்தப்பட்டது போல, அகற்றாமலே இருந்தனர்.” அதே ஈழத் தமிழர் தோழமை அமைப்பினர்தான் “டில்லியிலிருந்து திரும்பியும் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வெவ்வேறு போராட்ட வடிவங்களில் பங்கு கொண்டும், கைதாகியும், சிறை சென்றும் தங்கள் உணர்வுகளையும், எதிர்ப்பையும் காட்டியபடி இருந்தார்கள்.”
நாங்கள் எல்லோரும் உணர்வெழுச்சியும் மனத்துயரும் கொண்டு இதில் ஈடுபட்டிருந்த போது இவை அனைத்தையும் முன்திட்டத்துடன் லீனா மணிமேகலை என்ற ஒருவர் தன் படத்தின் 30 நொடிக் காட்சியாகவும் அப்படத்தை உருவாக்க தனக்கு உரிமையும் தகுதியும் உள்ளது என்று நிறுவுவதற்கான முன்னோட்டமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் உள்ளது வன்முறை, அவமதிப்பு என்பதைச் சுட்டிக் காட்டினால் “ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான் யூ-ட்யூபில் இருந்து டவுன்லோட் செய்தவையே! ஓபன் சோர்ஸ் காலத்தில், இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய” தேவை இல்லை எனத் திமிர்த்தனத்துடன் பதில் அளிக்கிறார்.
எங்களையெல்லாம் வெறும் செம்மறியாட்டு மந்தைகள் என நினைத்துக்கொண்டு இவர் செயல்பட்டதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன். அதற்கு அவர் “தான் அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகள் போல” எங்களை நாங்களே சித்திரிப்பதாகச் சொல்கிறார். இதுபற்றி தன்னைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை, அப்படிக் கேள்வி கேட்பது “படைப்பாளிகளின் வன்மம்” என்கிறார். அதில் எங்கள் அறியாமை வெளிப்படுவதாகவும் அது வெட்கக்கேடானது என்றும் சொல்கிறார். தமிழின் அரசியல் சார்ந்த படைப்பாளிகளை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படியும் பயன்படுத்தலாம் “திரைப்படத்துறையில் உள்ள எங்களை உங்களால் என்ன செய்ய முடியும்?” என்ற மதம் பிடித்த குரல்தான் இது. இதனை முன் நின்று கேட்கும் படைப்பாளியான ஒரு மக்கள் களப்போராளியை “மனநோய் மருத்துவரிடம் அழைத்து” செல்ல வேண்டும் என்கிறார். இதுதான் இவரது உண்மையான குணம், இதில் உள்ளது ஆதிக்கச் சாதித்திமிர், வர்க்கத்திமிர் மட்டுமல்ல, விளிம்புநிலை அரசியல் சார்ந்தவர்களை பழிதீர்க்கும் அதிகாரத்திமிரும் கூட.
இது போன்ற ஆதிக்கக் கைக்கூலிகள் தங்களையும் கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு செய்து கொண்டிருக்கும் சதி வேலைகளை அனைவரும் புரிந்து கொள்ள சாட்சியாக உள்ளதுதான் டாடா நிறுவனம் பழங்குடியினரையும் பெண்களையும் ஒளிமயமான வாழ்வை நோக்கிக் கொண்டு செல்வதாகச் சொல்லி பிரச்சாரம் செய்யும் “தேஜஸ்வினி” 3 நிமிட விளம்பரம். இதில் டாடா என்ற முதலாளிக் குழுமம் தான் சொல்ல விரும்பியதைச் சொல்வது அல்ல பிரச்சினை. பெண்களின் குரலை ஒலிக்கிறேன் என்று கூறிக் கொண்டு ஒருவர் இதனைச் செய்து தருவதுதான் பச்சை ஏமாற்றுத் தனம். தனக்கான இந்த பிம்பத்தை பெண்கள் பற்றிய படம் எடுப்பதன் மூலம் உருவாக்கிக் கொண்டு அதனை விற்பதுதான் திட்டமிட்ட சதிவேலை.
செங்கடல் படத்திற்காக மீனவச் சமூகத்தைப் பயன்படுத்திக் கொண்டதுடன் அதில் அவர்களின் வாழ்வை இழிவாகப் பதிவு செய்து, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சியை இணைத்து அது யுடியூபில் கிடைத்தது என்பது எல்லாம் இந்த டாட்டாவின் “தேஜஸ்வினி” கலிங்காநகர் விளம்பரப் படத்தின் மூலம் திட்டமிட்ட சுரண்டலாக, ஏமாற்று வேலைகளாக மாறுகின்றன. தான் செய்வது விளம்பரம் செய்து ஊதியம் பெறுவதுதான் என்பது போன்ற சித்தரிப்பை இவர் உருவாக்க நினைக்கிறார். தற்பொழுது இந்திய கடல்சார் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் அழிக்கப்படும் சூழலில் இது ஒரு எரியும் பிரச்சினை. இதனை எதிர்த்து உயிர்களைப் பணயம் வைத்து மக்கள் போராடி வருகின்றனர். வங்காளத்தின் சிங்கூர், நந்திகிராம் மக்கள் டாடா தொழிற்சாலை தங்கள் மண்ணைப் பறித்துக் கொண்டதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர். இந்தச் சூழலில்தான் இவர் செய்தது பச்சைத் துரோகம் என்றும் பழங்குடிப் பெண்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வைப்பது கேடுகெட்ட தந்திரம் என்றும் சொல்கிறோம். அதே கோபத்துடன்தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் ஆட்டு மந்தைகள் என நினைத்துக் கொண்டு தன் படத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதையும் கண்டிக்கிறோம். அதனால்தான் “உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? அந்த மக்களுக்கு காண்பித்தாயா? என்ற கேள்விகள்” இவர் திரித்துக் காட்டுவதுபோல சிறுபிள்ளைத் தனமானவை அல்ல. “நானும் கலைஞர்தான், கவிஞர்தான்” என்று சொல்லிக் கொண்டு எங்கள் மக்களையும் அவர்களின் போராட்டங்களையும் இழிவு படுத்துவதை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான கண்டனக்குரல். கானக உயிர்களைப் படம் பிடிப்பது போல செங்கடல் “ஆவண மற்றும் திரைப்படத்துக்கு” மீனவ மக்களைப் பயன்படுத்திவிட்டு நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கெல்லாம் காட்ட வேண்டுமா எனக் கேட்கும் திமிர்தனத்தை இனி அனுமதிக்க முடியாது என்பதற்கான எதிப்புக் குரல்.
இதுபோல் ஈழத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களை வைத்து எடுக்கப்பட்ட “வெள்ளைவேன் கதைகள்” ஆவணப்படத்தில் பேட்டியளித்தவர்களின் முகங்களை மறைக்காமல் திரையிட்டதற்கும் அவர்களின் அனுமதி பெறாமலேயே இலங்கைக்கு வெளியே திரையிட்டதற்கும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். கனடாவில் புலம்பெயர்ந்த பெண் படைப்பாளிகள் வெள்ளைவேன் திரையிடலுக்கான ஸ்பான்ஸரையும் டிவிஐ தொலைக்காட்சியில் லீனாவின் நேர்க்காணல் ஒளிப்பரப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்குப் பழித்தீர்க்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 3,4-இல் நடைப்பெற்ற பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த, ஈழப்படைப்பாளிகள், செயல்பாட்டாளர்கள் மீது நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் லீனா திட்டமிட்ட வன்முறைகளை நிகழ்த்தினார். இந்த மரண வியாபாரி எங்களைப் பார்த்து நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு என்கிறார். இன்று நீதி கேட்க குரலற்ற ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் தன்மீது வழக்குத் தொடுக்க இயலாத நிலையில் உள்ளனர் என்ற ஏளனம் இந்த விளம்பரப்பட முதலாளியிடம் பொங்கி வழிகிறது.
பூகோள, அரசியல், பொருளாதார, இன, மொழி அடிப்படையில் அனாதையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்படும் ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களை வைத்து ஆவணப்படம் எடுத்து விற்ற ரத்தப் பணத்தில் கொழிக்கும் லீனா மணிமேகலை அந்த மக்களைப் பொருட்படுத்தி படத்தைப் போட்டு காண்பித்து அனுமதி பெற வேண்டிய தேவை தனக்கு இல்லை என ஆணவத்துடன் கூவுகிறார். எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் ஆவணப்படுத்தலின் போது பங்களிப்பவர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அடிப்படை அறம் மற்றும் நியதி. அவை திரிக்கப்பட்டு பயன்படுத்துவது அதைவிட கடுமையான மனித உரிமை மீறல். உலக கார்ப்பரேட் முதலாளிகளின் கைகூலிகளும் உளவு நிறுவனங்களும் மட்டும்தான் இந்த விதியை மீறிச் செயல்பட்டு வருகின்றன.
இனி இது போன்ற அரசியல் அதிகாரச் சதித்திட்டம் கொண்ட கைக்கூலிகள் கேமராவுடன் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியுள்ளது.
– மாலதி மைத்ரி
கண்டனத்தில் உங்கள் குரலையும் பதிவு செய்யுங்கள்
லீனா மணிமேகலை ஈழத்தமிழர் தோழமைக் குரல், ஈழத்தமிழர், மீனவச் சமூகம், மற்றும் பழங்குடியினரின் போராட்டங்களை அவமதிப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதனை வெளிப்படுத்தி அவரது உண்மை உருவத்தையும் ஆதிக்க அரசியல் குணத்தையும் புலப்படுத்தியதற்காக பெண்ணுரிமைப் போராட்டத்தை தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு படைப்பாளியை மனநோய் மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன் எனத் திமிர்த்தனத்துடன் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சுகிர்தராணி
பொன். சந்திரன், PUCL
தனலஷ்மி, PUCL
இன்பா சுப்ரமணியன்
ஒவியர் காந்திராஜன்
லஷ்மி சரவணக்குமார்
பிரேம்
மகேஷ், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
கு. பாரதி , புரட்சிக் கயல்
மாறன்
பாஸ்கர்
வழக்கறிஞர் லிங்கன்
விமலா, புதுச்சேரி மீனவப் பெண்கள் இயக்கம்
பெரியாண்டி
பொம்மி
மஞ்சுளா
காஞ்சனா
அன்பு தவமணி
சுரேஷ்
ராமசாமி
செல்வக்குமார பாண்டி
பா. ஜெயபிரகாசம்
இன்குலாப்
கோவை. ஞானி
பேரா. சரஸ்வதி
தாமரை
தமிழ்நதி
பாமா
பிரபஞ்சன்
ஜமாலன்
தமிழவன்
பரமேஸ்வரி
பஞ்சாங்கம்
வறீதையா கான்ஸ்தந்தீன்
வழக்கறிஞர் ரஜினி
அ. யேசுராசா
தீபச்செல்வன்
அ.இரவி
பரணி கிருஷ்ணரஜனி
ஜெரோம்
கல்பனா
சக்கேஷ் சந்தியா
லேனா குமார் , யாதுமாகி பதிப்பகம்
திருப்பூர் குணா , பொன்னுலகம் பதிப்பகம்
எழுத்தாளர் வளர்மதி
கீற்று நந்தன், கீற்று இணையதளம்
இரா. முருகவேள் , எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர்
ம. புஷ்பராயன், அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம்
கண. குறிஞ்சி , மக்கள் நலவாழ்வு இயக்கம்.
பொதினி வளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, விடுதலை சிறுத்தைகள் கட்சி
பின்னிணைப்பு
(தோழர் பொன். சந்திரன், தனலஷ்மியின் கண்டன கருத்துரை)
லீனா மணிமேகலை அவர்கள் ஒரு தோழர் எழுப்பும் கேள்விகளையும் விளக்கங்களையும் ஒரு மன நோயாளியின் கூற்று என்னும் வகையில் மாலதியின் விமர்சனங்களை எதிர்கொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
2009 ஆண்டு மார்ச் மாதம் ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்னும் பதாகையின் கீழ் படைப்பாளிகளும் மாணவர்களும் மீனவ நண்பர்களும் திரு நங்கைகளும் மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றிணைந்து தில்லியில் நடத்திய போராட்டங்களையும் பரப்புரைகளையும் எண்ணி மகிழ்ந்து பெருமையடைகிறேன். அந்தப் பயணம் எங்களைப் பொறுத்த வரையில் பல புதிய அரிய அனுபவங்களை தந்தது என்றால் மிகையில்லை. இதைப்பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பகிர்ந்து கொள்கின்றேன்.
பயணம் தொடுங்குவதற்கு முன்பே இந்த முயற்சி மீது பல விமர்சனங்கள், குறிப்பாக லீனா மணிமேகலை மீது கூறப்பட்டன. இருப்பினும் படைப்பாளிகளுடன் கரம் இணைத்துக் கொண்டு மனித உரிமை ஆர்வலர்கள் இதில் அவசியம் பங்கு கொள்ள வேண்டுமென நண்பர் சுந்தர் காளி போன்றவர்கள் வற்புறுத்திய காரணத்தாலும் ஈழத் தமிழர் மீது தொடுக்கப்பட்டிருந்த போர் நிறுத்தப்படுவதற்கு நம்மால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் குறிப்பாக தில்லியில் இதற்கான அழுத்தத்தை தருவதற்கான நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்திலும் தில்லி பரப்புரையில் பங்கு கொண்டோம். அவரவர்கள் இயன்றவரை இதற்கான செலவிற்கான பங்களிப்பையும் செய்தோம். பங்கு பெற்ற மாணவர்களின் செலவை ஈடுசெய்ய சிலரிடமிருந்து நன்கொடை பெறப்பட்டதை அறிவித்தார்கள். பயணத்தின் இறுதியில் வரவு செலவு கணக்கையும் தீர்த்துக் கொண்டோம் என்றுதான் நினைக்கிறேன்.
பரப்புரைப் பயணத்திற்குப் பிறகு பங்குபெற்றவர்கள் சிலர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததை அவ்வப்போது நாங்கள் உணர்ந்தபோதும் விமர்சனங்களின் ஆழத்திற்கு சென்று அலசும் அவகாசமும் மன உவப்பும் இல்லாததிருந்ததால் அவற்றை நாங்கள் பொறுட்படுத்தவில்லை.
லீனா மணிமேகலையின் திரைப்பட முயற்சிகளில் ஈழச்சிக்கல் பற்றிய அவருடைய அணுகுமுறை விமர்சிக்கப்படுகிறது ஆனால் அவருடைய படைப்புகளைப் பார்க்காமல் விமர்சிப்பது தவறு என்பதால் அதைப்பற்றி இங்கே எதுவும் குறிப்பிடவில்லை.
தில்லி பரப்புரையின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அவருடைய திரைப்படத்தில் லீனா பயன்படுத்தியிருப்பது உண்மையானால் அந்தச் செய்தியை அத்திரைப்படத்தில் வெளிப்படையாக பதிவு செய்து நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அந்தக் காட்சியை படமாக்கத்தான் தில்லி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது என்றால் என்னால் நம்ப முடியவில்லை.
மற்றபடி திரைத்துறையில் அவருடைய வணிக நோக்கத்தைப் பற்றியும் எனக்கு பரிச்சயமில்லாத செய்திகளைப் பற்றியும் கருத்துக்கூற முடியவில்லை. ஆனால் இலக்கியத் துறையில் பயணிக்கும் சக தோழியர்களைப் பற்றி விமர்சனம் என்னும் பெயரில் தரமின்றி வெளியிடும் அவதூறுகள் தம்மையும் தாம் சார்ந்த உயரிய கொள்கைகளையும் சிறுமைப் படுத்தும் என்பது மட்டும் உறுதி.
ஒருவர் மீது ஒருவர் வைக்கக் கூடிய விமர்சனங்களை ஆக்கவகையில் எதிர்கொள்ளாமல் அவதூறுகளை அள்ளி வீசுவது வரவேற்கத்தக்கதல்ல. லீனாவின் செயல் ஆதிக்க சாதி உணர்வோடு கார்பரேட் நிறுவனங்களுக்கு ஊழியம் செய்யும் நடவடிக்கை என்னும் மாலதியின் குற்றச்சாட்டு லீனாவை நிலைக் குலைய வைக்கலாம். ஆனால் அவற்றை ஆக்க வகையில் மறுப்பதற்குப் பதிலாக மாலதியை மனநோயாளி என்று வர்ணிப்பதை விமர்சன உலகம் ஏற்றுக் கொள்ள இயலாது. லீனாவின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
லீனாவும் மாலதியும் ஊடகங்கள் மூலமாக அல்லாமல் நேரடியாகப் பேசிக்கொண்டால் மேலும் ஆரோக்கியமாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். “ஆளைப் பேசாதே அரசியல் பேசு” என்று ஒரு முதிய பெண் தொழிலாளித் தோழர் ஒருவர் மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராசனிடம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய அறிவுரையை நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த உரையாடலில் மாலதி நாங்கள் உங்களோடு உறுதியாக நிற்கிறோம்.
அன்பு
பொன். சந்திரன் – தனலட்சுமி.