பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம் -பிரேம்

உரையாடல் : 7  பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம்
கேள்வி:
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
தலித்துக்கள் குறித்த பிரச்சினைகள், ஓட்டரசியல் தளத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் கவன ஈர்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சீரிய இலக்கியத்தளங்களிலும், அறிவார்ந்த தளங்களிலும், தமிழில் எவ்வித உரையாடலும் இல்லாமல் போய்விட்டது ஏன்,  இது பொதுச் சமூகப் பிரச்சினை என்பதிலிருந்து தலித்துக்களின் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது. இதன் பின்னணி குறித்து?
பதில்:
பிரேம்
தலித் அரசியலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களும் சிறுகச் சிறுக உருவாகி தனித்த அரசியல் அடையாளமாக, அரசியல் சக்தியாக மாறிய பின் பாராளுமன்ற ஜனநாயகமும், உலகமயமான ஊடகங்களும் அதனை வேறு வழியின்றி, நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக் கொண்டன. இந்த வகை ஏற்பு, கவனம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக உள்ள ஒரு நாட்டில் போதுமானது என நினைக்கிறீர்களா? 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது? ஊடகங்களில் தலித் அரசியலுக்கென தினம் ஒருமணிநேரம் ஒதுக்கப்படுவதாக நாம் கணக்குக் காட்ட முடியுமா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், பொருளாதாரம், சமூகப்பண்பாட்டுச் சிக்கல்கள், தலித் அரசியல் குரல்கள் எந்த அளவுக்கு ஊடக மதிப்பைப் பெற்றுள்ளன என்பதை பற்றிச் சிந்திக்கும் போது பெருங்கோபம்தான் வரும். தமிழகத்தில் தலைவர். தொல்.திருமாவளவன் வழியாக ஒரு கருத்தியல் பரவல் நடந்து கொண்டுள்ளது. ஆனால் தலித் அரசியலை ஏற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தவிர வேறு யாரும் அவரைத் தமிழினத் தலைமை என ஏற்பதில்லை. ஊடகங்களில் உள்ள பரந்த மனப்பான்மை கொண்ட நண்பர்கள் சிலர் சொல்வதுண்டு “சார் உங்க ஆளுபேச்சு ஒரு பத்தி அளவுக்கு சேர்த்தாச்சு, உங்க தலைவர் இதப்பத்தி சொன்ன கருத்த முழுசா சேக்க முடியல”.  இது போலத்தான் நிலை உள்ளது. 1993-97 காலகட்டத்தில் அம்பேத்கர் உருவப் படத்துடன் ஒரு சுவர் எழுத்து எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையுடன் செல்ல வேண்டியிருந்தது. அண்ணா என்று பாசமாக என்னை அழைக்கும் இரண்டு இளைஞர்கள் புதுவைப் பகுதியில் சுவர் எழுத்து எழுதும் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. இன்று சில சுவர்களும், சில ஊடகங்களும்  கைவசப்பட்டுள்ள நிலையில் தலித் அரசியலின் உருவமும் குரலும் மறைக்க முடியாத அளவுக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கியத் தளங்கள், அறிவார்ந்த தளங்கள் என அறிவித்துக் கொள்ளும் பகுதிகளில் தலித் அரசியல், தலித் கருத்தியல், அம்பேத்கர், அயோத்திதாசர் சிந்தனைகள் எந்த இடத்தைப் பெற்றுள்ளன? “அவங்க எல்லா எடத்துலயும், வந்துட்டாங்கையா” என்றும் “நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றாலே தலித்தியம், பெண்ணியம் மட்டும்தான் என்பது போல மாத்திட்டாங்கையா” என்றும் இலக்கியப் பேரறிஞர்கள், சிற்றறிஞர்கள் எல்லாம் நெஞ்சுநோகக் கூறித் துயர்ப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இடைநிலைச் சாதிகளின் அரசியல் தற்போது தீண்டாமை மீட்புப் போராட்டமாக மாறியுள்ளது.
தலித் அரசியல் பெரிய அளவில் உருவாகி இந்திய அரசியலைக் குழப்பி வருவதாகச் சில பேச்சுகளை நாம் கேட்க முடிகிறது. இத்தனைக்கும் அடையாளத்தை உருவாக்கும் அரசியலாக, குறியீட்டு அரசியலாகத்தான் தலித் அரசியல் தற்போதும் இருந்து வருகிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தலித் அரசியலுக்குக் கடுமையான சிக்கல் தொடக் கத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் அடிப்படையில் ஒன்றிணையாமல் தம்மை ஒடுக்கும், ஒதுக்கும் சாதிகளின் தலைமையிலான கட்சிகளின் அச்சுறுத்துதலுக்குப் பயந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் ஆதிக்கச் சாதியத் தலைமைகளை தம் தலைமைகளாக ஏற்று அடிமை நிலையைத் தொடர்வதும் அம்பேத்கர் காலத்திலிருந்து இருந்து வரும் ஒரு அவலம். வாழ்வாதாரம் அற்ற கிராம தலித் மக்கள் நில உடைமையாளர்களின் கட்டளைகளை மீற முடியாத நிலையில் தம் துயரங்களை வெளியே சொல்லவும் முடியாமல் வாழும் நிலையும், நகரங்களில் வாழநேர்ந்த தலித் மக்கள் தம் அடையாளத்தைக் காட்டிக் கொண்டால் நேரும் அவமானங்களுக்குப் பயந்துப் பதுங்கி வாழும் அவலமும்,  பெரும் மக்கள் தொகை இருந்தும் வாழிட அமைப்பால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கை முறையும், இந்திய அளவில் ஒருங்கி ணைந்த ஒரு அரசியல் சக்தியாக, ஒரு கூட்டி ணைப்பை உருவாக்க இயலாத உதிரித் தன்மையும் தலித் அரசியலை விளிம்பு நிலை அரசியலாகவே வைத்தி ருக்கின்றன. இந்து மத அடையாளத்தை மறுக்க இயலாத தலித் அடையாளம் தலித் விடுதலை அரசியலை சக்தி அற்றதாக மாற்றி விடுகிறது. இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து கொள்ளத் தயங்காத தலித் தலைமைகள்  தலித் அரசியலின் மூளையை செயலிழக்கச் செய்கிறார்கள்.
பெருந்தேசிய சக்திகள், பன்னாட்டு முதலாளிகள், உலகச் சந்தைகள் தந்துள்ள  அதிகாரத்தின் துணையுடன் தீண்டா மையும், சாதி ஒதுக்குதலும் தற்போது இந்திய அளவில் மறுஉருவாக்கம் பெற்று வருகின்றன. இதற்குப்   பன்னாட்டு அரசியல் தொடங்கி உள்நாட்டு பொருளாதாரம் வரை பல காரணிகள் உள்ளன. தலித் அரசியல் ஒரு துணை அரசியலாக இருப்பது வரை அனுமதிக்கலாம் என்ற திட்டம் கொண்ட அரசியல் கட்சிகள்.  இவர்கள் எல்லாம் நம் முன் உட்கார்ந்து கூட்டணி பேசி நிற்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதே என உள்ளே கொந்தளித்து உதட்டில் முறுவளிக்கும்  தலைவர்கள். நம் வீட்டுப் பெண்களை மயக்கிக் கடத்திச் செல்ல அந்தப் பக்கத்தில் ஒரு இளைஞர் படையே உருவாகிக் கொண்டிருக்கிறது படையுடன் எழுவீர் பாட்டாளி வீரர்காள் என  அழைப்பு விடும் இனமானத் தலைவர்கள். “பிராமண சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைநீட்டி அடித்ததுண்டா, கழுத்தை அறுத்ததுண்டா, கலப்பு மணம் செய்து கலந்து வாழ்ந்த சமூகம்தானே. அந்த இடைநிலைச் சாதிகள்தானே தீண்டாமையை உருவாக்கி நம் இருவரையும் பிரித்தது. சாதித் தமிழர்களை மட்டும் நொருக்கிவிட்டால்  சங்கர மடத்திலும், ஜீயர் மடத்திலும்  நாம் சமபந்தி விருந்துண்டு சந்தோஷமா வாழலாம்” எனப் பன்னாட்டு பஜனை செய்யும் நூலோர்கள். ஈழத்தமிழர்கள் அழிந்தால்தான் இந்தியத் தலித்துகளுக்கு விடுதலை என்பதைச் சொல்லிப் புரியவைக்க தம் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கும் முற்போக்கு மேலோர்கள்.  இப்படித்தான் தமிழக அரசியல் உளவியல் பன்முனை போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்தச் சாதி உளவியலுடன்தான் எழுதுகிற பலரும் இயங்கிக் கொண்டுள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையில் இருநாள் கருத்தரங்கின் இடைவேளையின் போது அரசு பதிவு பெற்ற ஒரு தலித் எழுத்தாளரைப் பேசச் சொல்லி அனுப்பிவிட்டு “இலக்கியம் தன் கடமையைச் செய்யும்” என்று இருந்து விடுவதே அறிவுலகத்தினருக்கு பெரும்பாடாக உள்ள போது எங்கே தலித் இலக்கியம், கருத்தியல் பற்றிப் பேசுவது… அதற்குத்தான் தனியாக தலித் கலைவிழா இருக்கு, தலித் சிறப்பிதழ் இருக்கு, தனிக்குவளையில் அள்ளி தலித் கவிதை பருகித் தமிழ் வளர்க்க வேண்டியதுதான். சாதி அடிப்படையில் இலக்கியமா, இலக்கியத்தில் சாதிக்கு என்ன வேலை என்று புதிய சமூகவியலை தமிழருக்குப் புரியவைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டுள்ளன. தலித் இலக்கியம் தனி இலக்கியம் அது தலித்துகள் படித்து மண்ணாகப் போகட்டும்,  தமிழ் இலக்கியம் தனித்தன்மை கொண்ட இலக்கியம் அதுதான் பொது இலக்கியம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.  எழுத்துச் சந்தைக்கு இந்தக் பொது இலக்கிய வேடம் பொருத்தமானது. வெள்ளை யானைக்கு இணையாக ஒரு தலித் இலக்கியத்தை தலித்துகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவராவது  படைக்கவில்லையே என்ன காரணம்?  என்பது போன்ற ஒரு சிம்மக் குரலை நான் மதுரையில் கேட்டு நடுங்கி விட்டேன்… இந்த நடுக்கம் இன்னும் சிலகாலம் தொடரக்கூடும்…
தலித் அரசியல் இந்தியச் சமூக- பண்பாட்டு உளவியலின் அடிப்படைகளை மாற்றி யமைக்கும் அரசியல்,  மாறுவேடமணிந்த மனிதக் கொடுமைகளை சமயம், சாத்திரம் என்ற பெயரில் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கும் இந்தியப் பொது நினைவை முற்றிலும் உருமாற்றம் செய்யக்கூடியது. இந்திய அறம், அழகியல், மனித நேயம் என்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது. இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்கப் பொதுச் சமூகம் என்ற சாதியச் சமூகம் இதுவரை தயாராக இல்லை. பொதுச் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்திஜீவிகளும்   தலித் அரசியல் தலித்துக்களின் பிரச்சினை, அது வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  23 சத இடஒதுக்கீடு என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற அளவில்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவீனத்தையே நவீனத்தன்மை என்று கொண்டாடும் படைப்பாளிகள்  வடக்கையும் வதைக்கிறார்கள், தெற்கையும் தேய்க் கிறார்கள்.
தலித் அரசியல் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அரசியல் என்பதையோ, இந்தியாவின் நவீனத் தேசியத்தின் முதன்மைக் கருத்தியலாளர் அம்பேத்கர் என்பதையோ, தலித் விடுதலை இன்றி இந்தியச் சமூகம் தன்னை மனித அறம் கொண்ட சமூகமாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையோ இலக்கியம் படைக்கும் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பரந்து கெடுக இந்த படைப்பாளிகள் கூட்டம் என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.