உரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்
கேள்வி:
பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய, சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.
இந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல், தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்:
பிரேம்
பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.
பாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும், அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா? அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது? மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன? இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள் ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.
உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை. மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல் கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது. இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும். இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு. புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள் அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது, அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது. 1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், இன்புற்று வாழ்தல் என்பதற்கான மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.
அதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம், பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.
இன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்) கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள், பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது. அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத் தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும்? ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது. அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான் தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.
இந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை. இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில் மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.
உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.
இந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன. உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.
தீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது? சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
சமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக் கொள்ளவும் முடியாது.
[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை ‘போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள்’ என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]