மண்ணை மறுத்த இலக்கியங்கள் உளவாளிகள் உருவாக்கிய கலகங்கள்-பிரேம்

மண்ணை மறுத்த இலக்கியங்கள்
உளவாளிகள் உருவாக்கிய கலகங்கள்

தமிழின் நவீன இலக்கியத்தின் தொடக்கமே சிக்கலாக அமைந்துவிட்டது.
விடுதலைக்கான அறிவு, அடக்குமுறைக்கு எதிரான மொழி, தன்மதிப்பு கொண்ட சமூக மதிப்பீடுகள் இவைதான் நவீன கலை இலக்கியத்தின் அடிப்படைகள்.  பொதுமை அரசியலோ, முதலாதிக்க அரசியலோ (Socialist or Capitalist polity)  ஜனநாயகம், மக்கள் உரிமை என்பதை ஏற்காமல் நவீன சமூக-அரசியல் இல்லை.
அதனால் கலை இலக்கியம் என்பவை தீராத கலகமும் தெளிவான எதிர்ப்புமாக அமைந்து மக்கள்சார் உளவியலால் இயக்கப்படுகின்றன. மேற்குலகின் நவீனத்துவம் முடியரசின் வல்லாதிக்கம்-தேவாலயக் கொடுங்கோன்மை இரண்டையும் அடித்துத் தகர்க்கும் பணியைத் தம் முதல் கடமையாக எடுத்துக் கொண்டது.
இந்திய நவீனத்துவம் இன்னும் சிலவற்றை அடித்து நொறுக்கும் பணியை அழகியலோடு செய்யத் தொடங்கியது. அதாவது சாதி-வர்ண அநீதி, ஆணாதிக்க வன்கொடுமை, வைதிக அறிவுக்கேடு என்பவற்றை எதிர்த்துப் பல மாற்றுகளை முன்வைத்து தன் மொழிதலைத் தொடங்கியது.
ஆனால் தமிழில் இது வெட்கக் கேடான பிராமண-வெள்ளாளத் திமிரின் மாறுவேடமாக அமைந்துவிட்டது.
பாரதியை மகாகவி என்றும் புதுமைப்பித்தனை புரட்சி இலக்கியவாதி என்றும் நிறுவி சாதித் திமிர் மற்றும் வர்ணத் திமிர் கொண்ட ஆண்மைய ஆன்மிகத் திமிரை மனிதாபிமான மாவில் பொதிந்து கொழுக்கட்டை செய்யும் அபார உத்தியைக் கண்டு பிடித்தனர் தமிழின் நவீனர்கள்.
சின்னசாமி சுப்ரமணிய ஐயர் என்ற பெயரிலும் சொ.விருத்தசலம் பிள்ளை என்ற பெயரிலும் இவர்கள் எழுதாதற்கு அவர்களின் அடையாள துறப்பைவிட அடையாள மறைப்புதான் காரணமாக அமைந்தது. இதற்குக் காரணம் நவீனநிலையும் புரட்சிகர காரணிகளும்தான். இவர்களாவது (பாரதி,பு.பி) எழுத்தாளர்கள், நவீன- நவீனத்துவ இலக்கிய மாணவர்கள் வாசிக்க-கற்க இவர்கள் எழுதியவை பயன்படும்.
இதற்கு அப்பால் ஒரு அய்யோக்கியத்தனமான ஒரு தந்திரம் உருவாகி அறிவு மரபைத் தகர்க்கும் முயற்சியாக அது விரிவடைந்தது.
இரண்டு தத்துவார்த்தத் தரகர்கள், உத்தம உளவாளி ‘தீவிர இலக்கியம் தீராத வக்கிரம்’ என்று களமாடினார்கள்.
பகுத்தறிவு மரபை இழிவு படுத்துதல், திராவிடத்-தமிழ் அறத்தை கீழறக்கம் செய்தல், மார்க்ஸிய விடுதலைக் கருத்தியல்களை வசைபாடுதல், அனைத்து விதமான சமத்துவ அறங்களையும் உள்ளொளி-உயர்தகுதி-ஞானம் என்ற அளவீட்டால் இழிநிலைப் படுத்தல் என்பவைதான் இவர்களின் மையத் திட்டம்.
ஜோதிட மூடத்தனம், ஆன்மிகமென்னும் அறிவுமறுப்பு, சாமியார்களின் சாணத்தை மகாபிரசாதம் என உண்ணவைக்கும் அபாசம் இவற்றை வெட்கமின்றி தீவிரத் தகிப்பு கொண்ட இலக்கிய மனதின் இலக்கணங்கள் என இவர்கள் நிறுவ முயன்றார்கள்.
சில ஆங்கில நூல்கள், அய்ரோப்பிய திரைப்படங்கள், ஓவியம் நாடகம் பற்றிய வெற்று அறிமுகத் தகவல்கள் என்பன இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “ஒரே கருத்து ஓராயிரம் பக்கங்கள்“ என்ற அக்கப்போர்களை இவர்கள் மகாஞானம் மாறாத புரட்சி என்று கொண்டாடிய விதம் அருவருக்கத்தக்கதாவே இருந்தது.
மண்ணை நேசிக்காத தன்மை, மக்களுடன் கலக்காத தன்மையம், எந்த விடுதலைக்கான அடையாளத்திலும் தம்மை இணைத்துக்கொள்ளாத உயர்த்தகுதி பாசிச அழகியல், பிராமண-வெள்ளாள ஆண்மையத் திமிரை ஆன்மிகம் என்று கொண்டாடும் நோய்க்கூச்சல் இவைதான் இவர்களின் உளவியல்-நடத்தையியல் கட்டமைப்பு.
இவர்களின் விடுதலை அழிக்கும், கலகத்தை இழிக்கும் உளவாளி இயக்கத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் தகர்ப்புதான் 1987-1989 காலகட்டத்தில் வெளிவந்த கிரணம் எழுத்துகள் மற்றும் 1990-இல் உருவான நிறப்பிரிகை கருத்தயியல் களங்கள்.
(கிரணம் எழுத்துகளை பகுப்பு செய்தல்-ஒளிப்பகுப்பு செய்தல்- நிறப்பிரிகை என்ற பொருளில் நான் வைத்த பெயருடன் உருவான இதழும் களமும் அது)
இன்றுள்ள மாற்று கலக எழுத்துகள் சொல்லாடல்கள் அனைத்திற்கும் இந்த இரு எழுத்துக்-களங்களே அடப்படைகள். நான் இதனை மிகத்திட்டமிட்டே நிகழ்த்தினேன்.
எனது பாலரசியல் எழுத்துகளைப் பகடி செய்த முற்போக்கு அறிவியக்க பகுதிக்கு வில்ஹெம் ரெய்ச், மிஷல் பூக்கோ என அறிமுகம் செய்து பாலரசியல், நுண்ணரசியல், பெண்ணிய அரசியல், கலக அடையாளம் என்பவை பற்றிய கவர்ச்சியை உருவாக்கினேன்.
‘புரட்சியை நோக்கிய உளவியல் பிரச்சினைகள்’ போன்ற என் கட்டுரைகள் எனது எதிர்ப்பழகியல் எழுத்துக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகள்.
நான் யாருக்காக, யாரின் வலிகளை, எவருடைய வாதைகளை, மனச்சிதைவுகளை எழுதினேனோ அவர்களே அவற்றைப் புரிந்து கொள்ளாததின் துயரத்தில் நான் செய்த திட்டமிட்ட ஊடுருவல் உத்திதான் நிறப்பிரிகை-எழுத்து-உரையாடல் களம்.
பிறகு தலித்திய அரசியலும் பெண்ணிய பெருந்தகர்ப்பு இயக்கமும் உருவான பின் நான் எந்தத் தயக்கமும் இன்றி அதற்குள் கரைந்து என் அடையாளத்தையும் அழகியலையும் உணர்ந்தேன்.
இனி எனக்கு மறைவாய் திரைவாய் செய்ய- எழுத ஏதும் இல்லை.
என் மண்ணையும் மக்களையும் மொழியையும் அழிந்துவரும் காடுகளையும் நேசித்தபடி கலகம் செய்யும் என் எழுத்துகளை உருவாக்க இந்த இருபெரும் இயக்கங்கள் எனக்கு உடன்பாட்டுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளன.
களமாடிய படி என் கவிதைகளை எழுத அந்த இரு அரசியலும் உயிரச்சத்து தருகின்றன.
தலித் அரசியலுக்கும் பெண்ணிய அரசியலுக்குமான தமது எதிர்ப்பை வெறுப்பை நேரடியாகக் காட்ட இயலாத, அறிவால் வாதத்தால் எதிர் கொள்ள முடியாத ஒரு சாமியார் கூட்டமும் அறிவு மறுப்பு அக்கப்போர் கும்பலும் தற்போது உள்ள இந்துத்துவ-ஆண்மைய அரசியல் தந்த தெம்பில் தம் ஜோதிஷ மகாத்மியத்தை மறு பதிப்பு செய்து உருவாகி வரும் தலைமுறையை நாசப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டுள்ளனர்.
மிகப்பெரிய அளவில் பஜ்ரங்கதள-சுயம் சேவக-சிவசேனைகள் செய்து வரும் அறிவழிப்பு கருத்தியல் வன்முறைகளை சிறிய அளவில் வாசிப்பு, எழுத்து என்பதில் ஈடுபாடு கொண்டவர்களிடையில் செய்வதுதான் இவர்களின் செயல் திட்டம்.
இவர்களின் இரு பிதாமகர்கள்தான் வெங்கட சாமிநாதன்- தருமு சிவராம் என்ற வெளியேறிய பண்பாட்டு உளவாளிகள். மாற்றங்களை இழித்துரைக்கும் அறிவுமறுப்புஜீவிகள்.
ஆம் இவர்களை வைத்துத்தான் இப்போது இயக்கம் கட்டப்படுகிறது. ஒன்றரை பக்கம் எழுத முடியாத ஒப்புக்கு எழுதிகள் இவர்களுக்கு ஆசிரமம் கட்டி ஆன்மிக வைபோகம் செய்ய கிளம்பிட்டாங்க.
இவர்களின் மேடையில் பெண்கவிகள் அணி வகுப்பு நடக்கலாம், அடையாளம் மறுத்த சில தலித் அறிவுஜீவிகளும்கூட மாட்டிக் கொண்டு திணரலாம்.
இவற்றுடன் ழாக் லக்கானின் கண்ணாடியை உடைத்து இவர்களின் ஆசிரமச் சுவர்களை அலங்கரிக்கலாம். பூக்கோவின் பாலியல் நிலையின் வரலாறு தொகுதிகளை அன்றே தர்மோ ஜீவராம் தன் பரிதி புணர்ந்து படரும் விந்தின் வழி தமிழகத்தில் பாயவிட்டுவிட்டார் என்று பஜனைகள்கூட பரவலாம்.
என்ன செய்வது இப்போது பெயர் ராசி-எழுத்து எண்ணிக்கைப் பார்த்து மார்க்ஸியத்தை மார்க்கியஜீயம் என்றும் தலித்தியத்தை தர்மோலித்யம் என்றும் பெண்ணியத்தை ஸ்திரிஜலாத்வம் என்றும் பெயர் மாற்றி வைத்து நம்மைக் காத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கவேண்டும். திருவண்ணாமலையில் வேறு ஏதாவது ஏர்கண்டிஷன் சாமியார் வந்திருக்கிறாரா எனப் பார்த்து தீட்சை வாங்கி ஜீவனோத்தமராக மாறலாம் என்றெல்லாம் எண்ணம் தோன்றினால் தவிர்க.
பெண்ணிய தலித்திய அறிவாக்கத் தளத்தினர் குழப்பமடைய வேண்டாம் , வானம் நோக்கிய மேல் நோக்கிய பயணங்கள் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நமது கீழ் நோக்கிய பயணங்களின் போது காலில் ஒட்டும் மண்ணைக்கூட தொட முடியாது.