உரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம்

உரையாடல் : 5-3  இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது

கேள்வி:

உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு  இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.

முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.

மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து  இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.

இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய  சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான்.

இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து   அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன?  எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன? ஏன் மக்கள் போராட வேண்டும்? மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா? மக்கள் என்பது ஒற்றை அடையாளமா?

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே  உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா? 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா?

மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.

பெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.