உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்

உரையாடல் : 10  இந்துத்துவம்,  இந்து தேசியம் என்பவை  இந்துக்களுக்கும் எதிரானவை

கேள்வி:

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது  ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

தேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு,  பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன்  ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக்  கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ்  பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய  அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.

[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய  இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.

IMAGE-1

IMAGE-2

கண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]

எண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி.  இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு,  கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை  மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.

இந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.

பகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.

மதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே  இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.

மையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று,  மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள்  இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.

இந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல்  தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும்  இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள்  நடக்கும்.

இதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும்  இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது.  பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்  தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.

பிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது,  உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது,  ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி  எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின்  ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள்.  இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.

இதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று  இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள  ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.

பெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.  இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன.  அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின்   இந்துத்துவ சார்பு நிலை  இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.

தமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.

பின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ  பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது? அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…

இது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.

பாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள்,  மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.

குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”

இந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.

“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு  சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள்  நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர்.  டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.

சற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன்.  உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா?” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான்  ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ!’    “ஆமாம்  பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி!”

அதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.