சிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி

செயல்வழி நிகழும் கோட்பாடு

பிரேம்

இந்தியச் சமூகங்களில் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் இந்தியச் சமூகங்களால் விரும்பப்படாத,  உள்வாங்கப்படாத  புறக்காரணிகளின் வழியாக நிகழ்ந்துள்ளன என்பதை அறிய நேரும்போது முதலில் நமக்கு அதிர்ச்சியும் சுயவெறுப்பும் தோன்றக்கூடும்.

இந்தியா என்ற தேசத்தை, அதன் கருத்தியலான தேசியத்தை காலனிய அரசும், காலனியப் பொருளாதார அமைப்பும் கட்டித்தந்தது போலவே இந்தியாவின் நவீன குடிமைச் சமூகத்தையும் காலனிய அமைப்பே கட்டித் தந்தது.

நவீன அரசு, நவீன இயந்திர உற்பத்தி முறை, நவீன அறிவு என்பவை இந்தியச் சமூகத்தின் கூட்டு நினைவில் புறக்காரணிகளாகவும் மற்றொரு வகையில் அடக்குமுறை கட்டமைப்புகளாகவுமே பதிவாகியிருந்தன. தம் காலத்திய வாழ்வின் கூறுகள் யாவும் புறத்திலிருந்து தம் மீது திணிக்கப்பட்டவை என்ற உணர்வு இந்தியச் சமூகத்தின் பொது அடையாளத்தை உருவாக்கப் பயன்பட்டுள்ளது. இந்த முரண் அடையாளத்தின் பகுதிகளான இந்தியத் தேசியம், தேசபக்தி, இந்தியப் புராதன அடையாளம், இந்திய வரலாறு என ஒவ்வொன்றும் சனநாயக மாற்றத்திற்கு எதிரான சமூக உளவியலின் உருவாக்கங்களாகவே அமைந்தன.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றிணைப்பு, விடுதலை அரசியல், புதிய சமூகக் கட்டமைப்புக்கான இயக்கங்கள் என்ற வடிவில் உருவாகி இருக்கவேண்டிய இந்திய நவீன அரசியல் இதற்கு முற்றிலும் எதிராக சாதியமைப்பையும், பெண்ணொடுக்குமுறையையும் நியாயப்படுத்ததும் இந்துமையத் தன்மையுடையதாக, மதவாதத் தேசியமாக வடிவம் கொண்டது.

காலனிய கால உருமாற்றங்களைப் பயன்படுத்தி  புதிய சமூகத்திற்கான அரசியலைக் கட்டுவதற்குப் பதிலாக புராதன, சாதியாதிக்க அமைப்பை மீட்டெடுக்கும் சதித் திட்ட அரசியலாக  தேசிய அரசியல் மாறியது.  இந்து என்ற மத அடையாளமும் இந்து தேசியம் என்ற அரசியல் அடையாளமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தன, பின் தம்மளவில் இரு குழுக்களாகப் பிரிந்து இயங்கத் தொடங்கின.

1831-ல் பெண்ணெரிக்கும் வழக்கமான ‘சதி’ தடைசெய்யப்பட்டபோது பிரிடிஷ் அரசுக்கு எதிரான  சனாதன சபா, சனாதன தர்ம சபா என்ற  பெயர்களில் அமைப்புகள் செயல்படத் தொடங்கின. இந்த அமைப்புகளே பின்னாட்களில் சுதந்திரப் போராட்ட அமைப்புகளாக தம்மை உருமாற்றிக்கொண்டன.  இந்திய ஆண்மைய, ஆணாதிக்க சமய அதிகாரம் இந்திய அரசியலின் மற்றொரு வடிவமான காலனிய எதிர்ப்பையும் தனதாக்கிக் கொண்டதன் தொடக்கம் இது. சாதி அமைப்பை, பெண்ணொடுக்குமுறையைக் கேள்விக்குட்படுத்தும்  நவீன நிறுவனங்களைத் தன்வயப்படுத்தி மீண்டும் பழைய மரபான (சனாதன) ஆதிக்கத்தை நிறுவுவதே இந்த அமைப்புகளின் அடிப்படைத் திட்டம்.

அதாவது நவீன அரசியல் இயந்திரம்,  ஆயுத அரசியல், இயந்திர உற்பத்தி முறை, நகர அமைப்புகள் கொண்ட இந்தியத் தேசம் ஒரு பருண்மை, ஆனால் சாதி அதிகாரம் கொண்ட, பெண்ணடிமைத்தனம் நிலை பெற்ற இந்தியச் சமூகம் நடப்பு. இந்த அரசியல் உளவியல் ஆணாதிக்க,  ஆண்மையச் சமூக உளவியலுடன் உள்ளீடான இணைப்பு கொண்டதுடன், சாதி அதிகாரத்தை இயல்பான சமூக ஒழுங்கு என்று போற்றக்கூடியது.  மொத்தத்தில் விடுதலை, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, அடிப்படை மனித உரிமைகள் என்ற நவீன விடுதலைக் கருத்தியல்கள் எதுவுமற்ற ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதே இதன் செயல் திட்டம். இந்தச் செயல்திட்டம் இந்திய மரபாக, சமூகப் புனித விதியாகப் படிந்து கிடப்பது, இது நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. 

இதனையே அண்ணல் அம்பேத்கர் “நாம் உருவாக்கும் அரசியல் ஜனநாயகம்  சமூக ஜனநாயகமாக மாறாமல் இந்தியா சுதந்திர நாடாக மாறமுடியாது” என்று குறிப்பிட்டார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளைத்  தம் பண்பாடாகக் கொண்டிராத ஒரு நாடு தன்னை தேசமாக உருவாக்கிக்கொள்ள முடியாது என அழுத்தமாக அறிவித்தார். “பல சாதிகளாகப் பிரிந்துகிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? சாதி அமைப்பு தேச விரோதத் தன்மை கொண்டது.” என்ற அவரது  அறிவிப்பு  இந்தியா நவீன அமைப்பாக மாறுவதற்கான அடிப்படை நிபந்தனையை முன் வைக்கிறது. 

இதனை  முழுமையான பொருளில் முன்வைக்கும் அரசியல்தான் தலித் அரசியல் என்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல். விடுதலைக்கு எதிரான சாதிய மனம் விடுதலை அரசியலை முன்னெடுக்காது.  இது மாற்றங்களுக்கு எதிரான இந்திய உளவியலாகச் செயல்படுவதுடன்,  அனைத்து விதமான வன்முறைகளையும் ஒடுக்குதல்களையும்  இயல்பான சமூக விளைவுகளாகக் காணும் தன்மை கொண்டது.

சாதி உளவியல் நவீனத்தன்மை, விடுதலை இயக்கவிதிகள் இரண்டுக்கும் எதிரானது. இந்தியச் சமூகத்தின் சரிபாதியான பெண்கள்,  மூன்றில் ஒரு பங்கான ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற இரு சமூக இருப்புகளையும் புறத்தே நிறுத்தி, எதிர்நிலைப்படுத்தித் தன் அடையாளத்தைக் கட்டிக்கொள்வது.

இந்த அடையாளம் தனித்த அரசியல் அதிகாரமாக, ஒன்றுதிரண்ட பாசிசமாக மாறுவதற்குத்  தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கும். ஆனால் உலகவயமான, நவீன அரசியல்  அமைப்பின் அடிப்படைகளைக் கொண்ட தலித் அரசியலும், பெண்ணிய அரசியலும்தான் இதனை உள்ளிருந்தபடி எதிர்த்து உடைத்தபடியிருப்பவை.  

தலித் அரசியலும் பெண்ணிய அரசியலும் தம் முழுமையான விடுதலையை அடைவதைவிட வன்கொடுமை கொண்ட முற்றதிகாரத்திற்கெதிரான இந்தப் போராட்டத்திலேயே தமது பெரும்பகுதி ஆற்றலைச் செலவிட்டு வருகின்றன. இவை தம்மளவிலேயே எதிர்ப்பின் வடிவங்கள் என்பதாலேயே பெண்-தலித் என்ற உடல்-உயிர் இருப்புகள் மீதான  தாக்குதல்களும், சிதைவுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து  நிகழ்த்தப்படுகின்றன.

 இருப்பும் எதிர்ப்பும் இணைந்த, துயரும் கலகமும்  கலந்த இந்த  அரசியலின் இயக்க முறையைப் புரிந்துகொண்டு அத்துடன் தம்மை இணைத்துக்கொள்ளாத  இந்திய மாற்று அரசியல் இயக்கங்கள் அனைத்தும் அதனால்தான் விடுதலை நோக்கிய எந்த நகர்வையும் செய்யாததுடன், மாற்றம் பற்றிய செயல்திட்டமற்ற துணை ஆதிக்கச் சக்திகளாகத் திரண்டு நிற்கின்றன.

விடுதலைக்கான அனைத்து அரசியல்,  சமூக முன்னெடுப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இருந்தே தொடங்க முடியும் என்பதை இன்று வரை ஒப்புக்கொள்ளாத மாற்று அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய தீய விளைவுகள்தான்  இன்றுள்ள உடல் நீக்கம் பெற்ற அரசியலும், மனித நீக்கம் செய்யப்பட்ட பொருளாதர அமைப்பும்.

இதன் வன்கொடுமைகளை முழுவடிவில் புலப்படுத்தி, மாற்றத்திற்கான உண்மையான தொடக்கத்தை முன் வைக்கும் செயல்திட்டமாக உருவாகியிருப்பது  தலித் பெண்ணியம். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தலித் பெண்ணியத்தை  நுண் அளவில் தொடங்கி, பெருந்திட்டங்கள் வரை விவரித்துச் செல்கின்றன.

புலப்படாதவைகளாக வைக்கப்பட்ட வரலாற்று உடல்களை இன்றைய அரசியலின் மையத்தில் கொண்டு வைத்துக் கேள்விகளை எழுப்புவதன் வழியாக அனைத்து விதமான அரசியல், சமூக, மரபு வடிவங்களின் அறத்தோற்றங்களையும் உடைத்து தலித் பெண்ணியத்தின் இடத்தை நிறுவுகின்றன இக்கட்டுரைகள்.

 விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள் பற்றிய மௌனம், மறதி பற்றிய தொடர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் சமூக அமைப்பின் அடிப்படைச் சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித் பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள்.

அதன் அடுத்த கட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன் வைக்கின்றன. உலக அளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில் கொண்டாலும் இந்தியப் பெண் உடல்- பெண் மனம் என்பதில் மையம் கொண்டு தன் கருத்தாக்க முறையை அமைத்துக் கொள்வதால்  இக்கட்டுரைகள் ஒரே சமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்றுவிடுகின்றன.

அரசியல் செயல்பாட்டாளர், பெண்ணிய எழுத்தாளர் என்ற இருவகை அடையாளத்துடன் இயங்கும் தோழர் ப.சிவகாமி உருவாக்கிவரும்  எழுத்துகள் நீண்ட ஒரு போரட்டத்தின் தொடர் மொழிச் செயல்பாடுகளாக இருந்து வருகின்றன.

‘பழைய கழிதலும்’ நாவல் தலித் அரசியல் கவனம் கொள்ளவேண்டிய உள் முரணை பெண்ணிய அரசியலாக முன் வைக்கிறது.  ‘ஆனந்தாயி’ நாவல் ஆண் அடையாளத்தின் வன்முறைகளை உடல், மொழி, மனம் என்ற அனைத்துத் தளங்களிலும் விவரித்து குடும்பம் என்ற அமைப்பை கட்டுடைப்புச் செய்கிறது, அதிகாரத்தின் நுண்கொடுமைகளையும் வரைபடமாக்கித் தருகிறது.  ‘குறுக்கு வெட்டு’ நாவல் மனம், உடல், பாலியல் மதிப்பீடுகள் பற்றிய கட்டமைப்பை இழைபிரித்துக் கேள்விக்குள்ளாக்குகிறது.  ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ நாவல் மாற்று அரசியல் என்றால் என்ன, மாற்று அரசியலில் தனிமனிதர்களின் இடம் என்ன, கருத்தியலுக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான உறவு என்ன என்ற ஈவிரக்கமற்ற ஆய்வினைச் செய்கிறது.  இலக்கியச் சொல்லாடல்களாக உள்ள போது கருத்தியல் அமைதி குலைக்கும் தன்மை கொண்ட சிவகாமியின் எழுத்துகள் அரசியல் சொல்லாடலாக மாறும்போது செயல்படும் தன்னிலைகளை உருவாக்க முயல்கின்றன.

“மேம்பட்ட சமூகத்தை உருவாக்க, பெண்கள் ஒவ்வொரு நிலையிலும் கடுமையாகப் போராடினர். இன்றைய பல சமூகச் சட்டங்களுக்கு அவர்களின் போராட்டங்களே அடிப்படை. புதிய பொருளாதாரச் சூழல் தோற்றுவித்த கருத்தியல்களை, பெண்கள் படிப்படியாக வளர்த்தெடுத்து சமூக மேன்மைக்கான மாற்றங்களைக் கொணர்ந்தனர்.” என்ற பின்புலத்துடன்தான் அவரது கருத்தியல் திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன.

“இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடெங்கும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தோன்றிச் செயல்படத் துவங்கிய பிறகும் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்னமும் பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு அரசியலையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவது ஏன்?” என்ற   கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் “புழக்கத்திலுள்ள பெண் விடுதலைக் கோட்பாடுகள் யாவும் சாதிமத அடிப்படைகளைத் தகர்க்காது வர்க்க முரண்களை அடிப்படையாகக் கொண்டு சீர்த்திருத்தங்களை விழைபவை.” 

இதனைக் கடந்த ஒரு அரசியலைத் “தலித் பெண்ணியம் என்பது சாதி-மத-வர்க்க அடிப்படையிலான ஆணாதிக்கத்தை வேரறுப்பது. பால்பேதமற்றது, எல்லா உயிர்களும் சம சமூக மதிப்பு உடையன என்பதை ஏற்றுக் கொள்வது.” என அடையாளப்படுத்துகிறார் அரசியல், எழுத்து என்ற இரு தளங்களில் இயங்கும் பெண்ணிய ஆளுமையான சிவகாமி.

பெண்ணிய அரசியலில் ஒவ்வொரு சொல்லும் செயலாகவும், ஒவ்வொரு செயலும் அரசியலாகவும் மாறும் தன்மை கொண்டது. “இதை இயல் அல்லது தத்துவம் என்று வரையறுப்பதைக் காட்டிலும், மிக நுண்ணியக் கூறுகளாகப் பகுத்து, அவைகளுக்கு செயல்வடிவம் தந்து, உடனடியான களப்பணியில் இறங்குவதே சிறந்தது…” எனச் செயலுக்குள் இழுத்துச் செல்லும் எழுத்துகளாக இயங்குகின்றன  இவை.