ஜெயமோகன் முன் தொடரும் பொய்களின் நிழல் -பிரேம்

(அறிவுக்கும் அறத்திற்கும் எதிரான எழுத்தியக்கம்)

நவீன எழுத்தும் நனவிலிகளின் ஆட்டமும்

நவீன சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான,  அனைத்துப் பிரிவினைரையும் உள்ளடக்கும் இலக்கியம், கலை, கருத்தியல், ஊடகம் என எதுவும் இருக்க முடியாது, ஏன் அரசு கூட இருக்கமுடியாது.

அனைவரும் அணுகக்கூடிய, விருப்பினால் இணையக்கூடிய ஒரு பொதுவெளி, பொது அடையாளம் மட்டுமே இருக்கும், அது அனைவரும் இருக்கவும், இயங்கவும் இடமளிக்கும் அரசியல் அமைப்பு போல இருக்கும், இருக்க முடியும், இந்திய அரசமைப்பு அவ்வாறுதான் இருக்கவும் செய்கிறது.

மக்கள் அரசு, மக்கள் அமைப்பு என்பது பொதுவெளி, பொதுக்களம்  என்ற தளத்தில்தான் ஒன்றுபடுகிறது, அந்தப் பொதுக்களம் பொது அறத்தை பொதுவான பகுத்தறிவு முறையைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் பின்னப்பட்டதாகவும் இயங்கும். அங்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும், ஏற்றுக்கொள்ளும்  குழுக்கள் சேர்ந்து வேறுபட்ட அடையாளங்களுடன் உரையாடவும் திட்டமிடவும் உகந்த சூழ்நிலை உருவாக்கப்படும்.

 இது நவீனத்துவத்திற்கு முன்பும் நவீன அமைப்புக்கு முன்பும் இருந்ததில்லை, மன்னராட்சி முறையோ பேரரசுச் சமூகங்களோ இதனை ஏற்பதில்லை. அத்தனை வேறுபாடுகளையும் மறுத்து ஒற்றை அரசு, ஒரே அதிகாரம் என்ற மையத்தை நோக்கி, ஒரே விதியின் கீழ் அடங்கிய படிநிலை அமைப்பாக அது இருக்கும்.

இந்தியச் சமூகத்தில் வர்ண-சாதி அமைப்பில் அடைப்பட்ட அரசு , போர் அமைப்பின் கீழ் ஒடுங்கிய சனாதன தர்ம சாஸ்திர அமைப்பு இருந்தது. நீங்கள் சூத்திரர்கள், அடிமைகள், ஏவல் செய்து தொண்டு செய்து வாழ்ந்து மடிய வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் வெளியே செல்லவோ, விலகிச் செல்லவோ கூடாது. நீங்கள் மிலேச்சர்கள், சண்டாளர்கள் நீங்கள் மனிதர்கள் கூட இல்லை, சூத்திரர்களை விடக் கடுமையாக உழைத்து அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியவர்கள் ஆனால் நீங்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடவோ பிரிந்து சென்று வாழவோ முடியாது. அதற்காகன முயற்சி செய்வது கூட கொலை செய்யப்படும் அளவுக்கான குற்றம், அப்படிச் சிந்திப்பதோ, அது பற்றிப் பேசுவதோ, அதற்காக ஆசைப்படுவதோ கூட குற்றம், பாபம் கொடுந்தீமை. அதனால் அப்படியான கருத்துகளை, எண்ணங்களைக்கூட உருவாக்கக் கூடாது என்ற தண்டனை விதிகளால் கட்டப்பட்டதுதான் இந்திய அரசாதிக்கச் சமூகம்.

அந்தச் சமூகம் மிகுந்த அமைதியும், அடிபணிதலும் கொண்டதாக, வேறுபட்ட கருத்துகள், எண்ணங்கள் அற்றதாக ஒரே தர்மத்தின் கீழ் ஒரே விதியின் கீழ் அடங்கி இருப்பதான தோற்றம் தரும். ஆனால் அடிமை விதியை மீறக்கூடிய ஒரே ஒரு செயல் நடந்தாலும், ஒரே ஒரு வாக்கியம் பேசப்பட்டாலும் அவை அழிக்கப்படும், கொலை செய்யப்படும், அதனால் விதி மீறல், விடுதலைக்கான ஆசை மொழியில்கூட இருக்க முடியாது, இருக்காது.

இந்த ஒடுக்குதலை, மனித மறுப்பை இல்லாமலாக்கி அனைத்து விடுதலைக் கருத்துகளுக்கும், ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் இடமளிக்கும் அமைப்புதான் நவீன அரசு, குடிமை மற்றும் குடி மையச் சமூகம், இது மனித உரிமைகள், மனித மாண்புகள் என்னும் விழுமியங்களை மையமாக மட்டுமின்றி  விளிம்பாகவும் கொண்டியங்குவது.

ஒரு சமூகம் சமத்துவத்தை, சமூகநீதியை முழுமையாக நடைமுறையில் கொண்டு இயங்காத நிலை இருக்கலாம், ஆனால் அவற்றைத் தன் இலக்காக. அறமாகக் கொண்டு அவற்றை அடைவதற்கான கனவைத் தன் வழிகாட்டு நெறியாகக் கொண்டு தொடர்ந்து இயங்கும்.  

இப்படியான நவீன சமூக அமைப்பில் உள்ள ஆட்சி, அமைச்சகம், செயலதிகாரம், நிருவாகம், திட்டமிடல் என்பவற்றை அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆனால் பெரும்பான்மை பங்கு கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ  தன் பொறுப்பில் ஏற்று நடத்துகிறது, அதே சமயம் ஆட்சியில் இல்லாத ஒவ்வொரு கட்சியும் (எதிர்க்கட்சிகள்) அரசுச் செயல்பாட்டைக் கண்காணித்து விமர்சனம் செய்து, தவறு நடக்கும் போது எதிர்த்து, நீதி மறக்கப்படும் போதும் புறந்தள்ளப்படும் பொழுதும் அதனை எதிர்த்து நின்று தீமைகளைத் தடுத்தும் ஜனநாயகத்தை, அரசியல் அறங்களை, அரசமைப்பின் விழுமியங்களை, அனைவருக்குமான உரிமைகளைக் காத்தும் செயல்பட வேண்டியுள்ளது.

ஆட்சியில உள்ள கட்சிக்கு இணையாக அரசமைப்பை ஜனாநாயகத்தைக் காக்கும் பொறுப்பும் உரிமையும் கொண்ட அமைப்பைத்தான்  நவீன ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்று நாம் கூறுகிறோம். அதனை உருவாக்கிய, அதனை நோக்கிய அறிவைத்தான் நவீன அறிவு என்று கூறுகிறோம்.

பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளதாலேயே ஒரு கட்சியும், அதன் தலைமையும் இந்திய அரசின் (அரசியலின்) முழு அதிகாரமுடைய சக்தியாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு அரசும், ஆட்சியும் அரசியலமைப்பைப் பின்பற்றி, செயல்படுத்தி, பாதுகாத்து மக்களின் பெயரால் மக்களின் பணியாளர்களாக இருந்து செயலாற்றித் தன் பொறுப்புக் காலம் முடிந்ததும் ஓய்வு பெற வேண்டிய ஒரு அமைப்பே.

 நவீன அரசு வேறுபாடுகளின் உரிமைகளை, வேறுபடும் உரிமைகளைப் பாதுகாத்து பன்மைகளின் இடத்தையும் பன்மைகளின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தித் தருவது. இது முன்நவீன ஒற்றைத்தன்மை கொண்ட அரச அதிகார, சர்வாதிகார அரசியல் அல்ல.

தனிமனிதர்களுக்கு ஜனநாயகத்தில் உரிமைகள் உள்ளன, கடமைகள் அதைவிட அதிகம் உள்ளன, ஆனால் அதிகாரம், ஆதிக்கம், மேலாண்மை, உயர் அதிகாரம் என எதுவும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின்  முதன்மை அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் கூட அளிக்கப்பட்டுள்ளவை பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான கூடுதல் வசதிகள், துணை செய்யும் மக்கள் பணியாளர் குழுக்கள் மட்டுமே.

 அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, வணக்கம், சிறப்பு அணிவகுப்புகள் அனைத்தும் நம் அரசியலமைப்புக்கும் மக்கள் ஆட்சி முறைக்கும் அளிக்கப்படும் மதிப்புகளே தவிர தனிமனிதர்களுக்கு அல்ல. அதனால்தான் முறை தவறும் போது, பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படும் போது, நீதி அவமதிக்கப்படும் பொழுது எந்தப் பதவியில் உள்ளவர்களையும் விசாரரணைக்குட்படுத்தித் தண்டிக்கும் உரிமையும் பொறுப்பும் அரசியல் அமைப்புக்கும், நீதித்துறைக்கும், மற்ற அதன் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பத்து வாக்குகள் அதிகமாகப் பெற்றாலும் ஒரு மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டவராக அங்கீகரிக்கப்பட்டு சட்ட மன்றம், நாடாளுமன்றம் செல்லும் பொறுப்பு வழங்கப் படுகிறார். ஒரே ஒரு உறுப்பினரை அதிகமாகப் பெற்றிருந்தாலும் ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பை (ஆட்சி அதிகாரம் அல்ல)  ஏற்கும் தகுதி பெறுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் இந்திய அரசியல் தனிமனிதர்களால்,  தனிக்குழுக்களால் ஆளப்படுவதற்கோ, அதிகாரம் செலுத்துவதற்கோ அனுமதி அளிக்கவில்லை.

தற்போது பாராளுமன்ற பொறுப்பேற்றுள்ள தேசியக் கட்சி 37.23 சதமான வாக்குகளைப் பெற்று 303 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளது. மீதமுள்ள 62.77 வாக்குகள் இந்தக் கட்சியைத் தேர்வு செய்யவில்லை என்பதுதான் பொருள், அதனால் அரசியல் பொறுப்பை இக்கட்சி ஏற்பதை யாரும் தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாது.

இந்த அரசு அனைவருக்குமானது, தன்னை மறுத்த பெரும்பான்மை மக்களுக்கும் சேர்த்தே  அக்கட்சி பணி செய்ய வேண்டும். இதுதான் ஜனநாயகம், இதன் அடிப்படை நெறிகளை அரசியல் மேதை அண்ணல் அம்பேத்கர் முதன் முதலாக மிகத் தெளிவாக நாடானுமன்ற அவையில்  விளக்கியிருக்கிறார். “நாம் மக்களாட்சி முறையை வெறும் புறவடிவத்தில் மட்டுமின்றி செயல்படுக்கூடிய உண்மையான  அமைப்பாகப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியவை என்ன? ” என்ற கேள்வியை எழுப்பி மூன்று அடிப்படை வழிமுறைகளை, நெறிமுறைகளை அளிக்கிறார்.

அவற்றில் இரண்டு நெறிமுறைகள் :

1. நாம் சமூக, பொருளாதாரக் கோரிக்கைகளையும்  தேவைகளையும் பெற அரசமைப்புச் சட்ட முறையையே பின்பற்ற வேண்டும். வன்முறை கொண்ட புரட்சி முறையைக் கைவிட வேண்டும். சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற முறைகளையும் கைவிட வேண்டும். அரசமைப்புச் சட்டம் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறும்போது இந்த முறைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அரசமைப்பு முறைகள் நமக்கு முன்  இருக்கும் போது  இந்தச் சட்டமறுப்பு முறைகள் தேவையில்லை.

 3. நாம் வெறும் அரசியல் ஜனநாயகத்தை நிறுவியதுடன் நிறைவடைய முடியாது. அதனைச் சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகத்தை அடித்தளமாகக் கொள்ளாத அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்காது. சமூக ஜனநாயகம் என்பது என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கொள்வது. இவை தனித்தனியே இருந்தாலும் அவற்றின் நோக்கம் நிறைவேறாது, மூன்றும் பின்னிப்பிணைந்தவைகளாக இருக்க வேண்டும். அத்துடன் பொருளியல் சமத்துவமும் இணைய வேண்டும். சமத்துவமற்ற இந்தியச் சமூகத்தில் இவற்றை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் நமக்கு ஒரு அதிகாரி (கான்ஸ்டபிள்) வேண்டும். அதுதான் அரசியல் ஜனநாயகம், அதுதான் இந்திய அரசமைப்பு.

இவற்றிற்கு நடுவாக அண்ணல் குறிப்பிட்டுள்ள  ஒரு நெறி மிக முக்கியமானது:.  “எத்தனைச்  சிறப்புகள் கொண்டவராக இருந்தாலும், எந்த ஒரு தனிமனிதரின் காலடியிலும்  மக்கள் தம் சுதந்திரத்தை ஒப்புக் கொடுக்கக்கூடாது.  அவர்களுக்கு அரசமைப்பு நிறுவனத்தை மீறும் அதிகாரத்தை வழங்கிவிடவே கூடாது. நாட்டுக்காகத் தம் வாழ்வைத் தரும் ஒரு தனிமனிதருக்கு மதிப்பு தருவதில் ஒன்றும் தவறில்லை. நன்றியுடன் இருப்பதற்கு ஒரு எல்லை உண்டு. தன் சுயமரியதையை விட்டுக் கொடுத்து நன்றியுடன் இருக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை…. இந்தியா பக்தி என்ற பெயரில் தனிமனித வழிபாட்டில் மூழ்கிக் கிடக்கும் சமூகம். பக்தியும், மகான் வழிபாடும்  சமயத்துடன் நின்று விட்டால் பரவாயில்லை, அவை அரசியலில் நுழைந்தால் ஜனநாயக அமைப்பு தகர்ந்து, சர்வாதிகாரம்தான் உருவாகும். (  1949 நவம்பர் 25-இல் அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர்  வழங்கிய இந்த உரை மக்களால் தெய்மாக மாற்றப்பட்ட காந்தி பற்றியும்  வழிபடப்பட்ட  நேரு மற்றும் சில  தலைவர்கள் பற்றியுமான குறிப்பைக் கொண்டது.)

இவ்வாறான ஒரு கூட்டமைப்பில் கலை, இலக்கியம்,  ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்,  அவற்றின் கடமையும் பொறுப்பும் தகுதியும் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்தால் இலக்கியச்  செயல்பாட்டுக்கும், இலக்கியவாதிகளின் செயல்பாட்டுக்கும் நாம் ஏன் முக்கியத்துவம் தருகிறோம் என்பது புரியவரும். நவீன சமூகத்தில் படைப்பாளிகளின் இடம், அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பெருமைகள் அனைத்தும், இந்தப் பொது அறத்திற்கும், அறிவுக்கும், அரசியலுக்கும் அவர்கள் அளிக்கும் பங்கை அடிப்படையாகக் கொண்டவை. சமத்துவம், நீதி, சுதந்திரத்திற்கு எதிரான, மாறான எந்த ஒரு சொல்லும் படைப்பும் நவீன அமைப்பில் தன் தகுதியை இழக்கிறது,  அது மாபெரும் கனவுகளுக்கு எதிரான வன்முறையைச் செய்கிறது.

 அப்படியான எழுத்துகளும் பேச்சுகளும் இருப்பதற்கான உரிமையைப் பொதுக்கள  அரசியல், மக்கள் அரசியல் மறுத்துவிட முடியாதுதான். ஆனால் அவை அறம் பேசும் தகுதி அற்றவை என்பதைச் சுட்டிக்காட்டவும், அவை உள்ள இடத்தில் நவீன அறிவுக்கும் அறத்திற்கும் எதிரான கருத்துகள் இங்கு உள்ளன, கவனமாக இருக்கவும் என்ற அறிவிப்புப் பலகையை வைக்கவும் நவீன அறிவுக்கும் அரசியலுக்கும் உரிமை உண்டு, அதைவிடப் பொறுப்பு உண்டு. அதனால்தான் ஒரு திரைப்படம் மட்டுமல்ல ஒரு கருத்துப்படம் கூட, ஒரு விளம்பர வாசகம் கூட பொதுக்களத்தில் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. சமூக வெளியில் பேசப்படும், பரப்பப்படும் ஒவ்வொரு சொல்லும், வாசகமும்,  சைகையும் கூட , ஒரு புகைப்படம் கூட பகுத்து ஆய்வு செய்யப்படுவதன் பின்னணி இதுதான்.  

அர்த்தமுள்ள இந்துமதம் அர்த்தங்கெட்ட மார்க்சியம்

நவீன அரசும் நவீன தொழில் நுட்பங்களும், நவீன இயந்திரவியலும், கருவிகளும்,  இந்தியச் சமூகங்களை முழுமையாக ஊடுறுவி, அடிப்படைக் கட்டமைப்புகளை மாற்றியமைத்த பின்னும் மரபு, பழமை, தொன்மை என்ற பெயர்களில் நவீனம் மறுக்கும் உள அமைப்பையும், நவீன அறிவை, அறத்தை, மதிப்பீடுகளை உடைக்கும் சமூக நடத்தைகளையும் இந்தியச் சமூகம் கொண்டாடி வருவதுடன் அதில் பெருமிதமும் கொள்கிறது. இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, எப்படிக் கையாள்வது?

நவீனக் கருவிகளை, இயந்திரங்களை, இயந்திர வாழ்வியலை, நகரமைப்பை ஏற்றுக் கொள்ளும் இந்தியச் சமூகம் நவீன அறிவு, அறம்,  மதிப்பீடுகள், அழகியல் என்னும் உள்ளமைப்புகளில் மாற்றத்தை ஏற்பதில்லை என்பதுடன் அதன் மீது வெறுப்பும் கொண்டுள்ளது. நவீன சமூகம் தந்த, நவீன அறிவால் உருவாக்கப்பட்ட  புறவயப் பொறியமைப்புகளை, இயந்திரக் கட்டமைப்புகளை தனதாக்கிக் கொண்டு அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும் வாழ்வியல் போலப் புதிய இலக்கிய வடிவங்களைத் தனதாக்கிக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும், மீட்டு உயர்வுபடுத்தும் இலக்கியங்களும், கலைகளும் பெருமிதமும்  பெருவலிமையும் கொண்டு இயங்கி வருவது தமிழ்ச் சமூக நடப்பியல்புகளில் ஒன்று. இதனை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது, எதிர்கொள்வது, கையாள்வது?

தமிழ் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகள் பழமை மீட்பு, மரபுப் பெருமிதம் என்ற இயக்கமறுப்பில் திளைத்துப்  புகழும் நிதியும் பெற்று அதிகாரப் பேருருவங்களாக நிலைக்கின்றன. இவர்களே கலாச்சார, பண்பாட்டு நாயகர்களாகவும், அடையாளங்களாகவும் இருப்பவர்கள். சாதிய உளவியலும் ஆணாதிக்க நடத்தையும் பெருகிய  திரைப்படங்களும், கலைகளும், கதைகளும் பெருமளவில் கொண்டாடப்படுவதும் அதிகாரம் பெறுவதும் இதன் விரிவடைந்த நிகழ்வு. இவர்களுக்கு மாறான நவீன இலக்கியம், முற்போக்குச் சிந்தனை, புதிய கருத்தியல்கள் என்ற வடிவத்தில் எழுதி இயங்கும் எழுத்தாளர்கள்  அரசியல் வகைப்பட்டவர்களாக, வெகுமக்களின் மனமகிழ்வுக்குப் பொருந்தாத எழுத்துக்களை எழுதுபவர்களாக இருப்பதும் ஒரு வரலாற்று மெய்நிலை. முற்போக்கு எழுத்துகள், புரட்சிகரச் சிந்தனைகள், உலகவயப் பட்ட பார்வைகள், மரபுகளைக் கேள்வுக்குட்படுத்தி புதுமைகளைக் கொண்டாடும் அழகியல் கொண்டவை என  இந்த வகை  எழுத்துகளும் இலக்கியங்களும்  தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

 இந்த எதிரெதிரான வெளிப்படையான அடையளங்களை மறைத்து தம்மையும் புதிய இலக்கியம், நவீன இலக்கியம், நவீன சிந்தனை என்று  அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொண்டு அதற்கான தகுதி உள்ளதாகக் கூறிக் கொண்ட உள்ளார்ந்த நிலையில் பழமை போற்றுகிற, இயக்கவியல் மறுக்கிற எழுத்துகளும் எழுத்தாளர்களும் இருமடங்கு அதிகாரத்துடன் பெருமைகளுடன் இயங்கும் ஒரு தளம் தமிழில் உண்டு.

இவர்களுக்குப் பின்புலமாக, ஆதாரமாக இருப்பவை பிற்போக்கு, சனாதன, பழமைமீட்பு சக்திகளும் நிறுவனங்களுமே. இவர்கள் வெறும் எழுத்துடன் நின்றுவிடும் பொழுது கருத்தை உருவாக்கும் பல சக்திகளில் ஒன்றாகக் கலந்து போவார்கள். இவர்களே கலச்சார நாயகர்களாக, அடையாளச் சின்னங்களாக மாறும் பொழுது ஒரு இயக்கமாக உருப்பெற்று பல இளைஞர்களையும், சமூகச் சக்திகளையும் நிலைகுலைத்து,  அறிவுத் தேக்கத்தை உருவாக்கி. அறிவுருவாக்கத் தளங்களை அழிக்கும் பேரழிவு நிறுவனங்களாக மாறுவார்கள்.

இவர்கள் வழியாக பழமைவாதமும், தொன்மைப் பெருமையும் வலிமையடையும், அதற்கான கருத்தியல் கருவிகளை இவர்கள் உருவாக்கி அறிவு மறுப்பையே அறிவுச் செருக்காக உரு மாற்றிவிடுவார்கள். இவர்கள் உருவாக்கும் கருத்தியல், மதிப்பீட்டுக் கருவிகள் இலக்கியப் பெருமிதம் கொண்டதாக, பேரறிவு கொண்ட போதனைகளாக, பெரும் ஆய்வில் விளைந்த சாதனைகளாக  உயர்வுபடுத்தப்படும். இவர்களின் செயல்பாடு புதுமைகள் அனைத்தையும் உள்ளடக்கியது போலவும், புரட்சிகரச் சிந்தனைகளால் நிறைந்தவை போலவும் தோற்றம் தரும். அவற்றை விட மனித நேயம், மாந்தர் அறம், மரபின் தரிசனங்கள், ஆன்மீக உயர்வு என்ற  சொற்கள் இவர்களிடம் தெய்வீகச் சொற்களாக ஓயாமல் ஒலிக்கும். 

இவர்கள் முற்போக்கு, புரட்சி, கலகம் என்ற அடையாளத்துடன் தொடங்குவார்கள், பெரும் அறிவாளிகள், பெரும் படிப்பாளிகள், அசலான ஆழமான சிந்தனையாளர்கள் என அடைமொழிகள் இவர்கள் மேல் அடுக்கடுக்காய் போர்த்தப்படும். இவர்களில் சிலர் ஏராளமாக எழுதிக் குவி்ப்பார்கள்.  திறமை, படைப்பாற்றல், கற்பனைப் பெருக்கு, காவிய முறுக்கு, கலகச் செருக்கு என்று தொடர் பஜனைகள் இவர்களைப் பற்றி எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிடும்.

தொடர்கதைகள், தொடர் கட்டுரைகள், தொடர் சொற்பொழிவுகள், தொடர் பாராட்டுகள், தொடர் விருதுகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இவர்களின் சாதனைகள். முதல் கதையிலேயே இவர்களுக்கு விருதுகள் காத்திருக்கும், முதல் நாவலே பெரும் படைப்பு எனப் பதாகையுடன் வெளிவரும். ஊடகங்களில் இவர்களின் பெயர்களே ஓயாமல் ஒலிக்கும். ஒரு நாள் இவர்கள் தம் உருவத்தை வெளிப்படுத்துவார்கள் நானும் நாத்திகனாக இருந்தேன், புரட்சியில் கலந்தேன், பகுத்தறிவில் புரண்டேன்  இப்போது அதெல்லாம் மனித வாழ்வுக்கு உதவாது என்று என் ஞானத்தால் தெளிந்தேன் எனக்  கதாகாலட்சேபத்தைத் தொடங்குவார்கள்.  இவர்களின் பொது அங்க அடையாளம் இதுதான் : கம்யூனிசச் சிந்தனைகள், மக்கள் போராட்டங்கள். பெண்ணியச் சிந்தனைகளை எல்லாம் கேலி கிண்டல் செய்வது, இவை காலாவதியாகிவிட்டது என்று ஞானப்பிரகாசகம் பொழிவது, இந்திய ஞானம், பாரதப் பண்பாடு, தியாக வரலாறு, மகான்களின் மகிமை என மணிகளை ஆட்டுவது. எந்த ஒரு புதிய சிந்தனையோ, சிந்தனையாளரோ அறிமுகப்படுத்தப்பட்டால் அதனை அத்வைதத்தில் அடங்கியது, உபநிஷதத்தின் உள்ளே முடங்கியது, பதஞ்சலியால் பதம் பார்க்கப்பட்டது என்று சும்மா சுற்றிவிடுவது. தமிழின் ஞானப்பிரகாச மரபுக்கு உள்ள சௌந்தர்ய லகரியே பெரியாரியச் சிந்தனைகளை வசைபாடுவதுதான். அம்பேத்ரியச் சிந்தனையை செயலியக்கத்தை வெறுத்தபடி அதற்கு புத்தி சொல்வது, காந்தியின் வழியில் அம்பேத்கர் நடந்திருந்தால் சேரிகளில் சேதாரம் எதுவும் நடந்திருக்காது, அம்பேத்கருக்கு ஆய்வு போதாது ஆனால் நான் அம்பேத்கரை இந்தியாவின் பெருமைகளில் ஒன்று எனச் சொல்வேன் என புருடா விடுவது. மாற்றுச் சிந்தனைகள் எதுவும் வந்தால் முதலில் மண்டையில் அடித்து ஓரமாக கிடத்திவிட வேண்டும் என்று இரும்புக் தண்டோடு கதவுவுக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் கூலிப்படையை வாசகர்கள் என்ற பெயரில் உருவாக்கி விடுவது. காலத்தால் மறைக்கப்பட்ட அயோத்திதாசர் போன்ற சிந்தனைச் செயல் தலைவர்கள் கண்டெடுக்கப்பட்டால் முதலில் சென்று அவர் கருத்துகளை முடிந்த அளவு திரித்து குறைத்து வெட்டி ஒட்டி தன் நித்திய சத்திய குருவுக்குப் பொருந்தும் அங்கியாக மாற்றித் தைத்து மாட்டி விடுவது. தலித் அரசியலும் ஒரு சாதி அரசியல்தான், அதிலும் அதிகாரம் உண்டு, படிகாரம் உண்டு அதனால் அதனிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை அறிவிப்புச் செய்வது. இப்படி இப்படியாக வளைந்து நெளிந்து ரப்பராக நீளும். இவற்றுடன் பின்நவீன-பின்நவீனத்துவ பெருங்கொண்டாட்ட கைலாசாக்கள் இணையும் போது ஸீரே டிகிரியில் உலகம் சுழல ஆரம்பிக்கும். எதுவுமே உலகத்தரம்தான் இவர்களுக்கு தமிழில் உலகத்தரத்தில் இலக்கியம் இல்லை என்ற வாசகத்துடன் தினமலராக மலர்வார்கள் இவர்கள், உலகப்படங்கள், உலக இசை என இவர்கள் அலப்பறைக்கு அளவே இருக்காது, இவர்கள் பியர் குடிப்பது கூட உலகக் கோப்பையில்தான் என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களின் எழுத்து முதலீடே தமிழர்களின் வாசித்து அறியாத வாழைப்பழ சோம்பேறித்தனம்தான். ஃபூக்கோ. ஈக்கோ, லக்கான், சுக்கான் எல்லாம் வாங்க நித்தியானத்த சாய் சமேத வயகர வாக்கிய ஆசானிடம் ஆசி பெற்று முக்தியடையுங்கள் என்று அவர்கள் புகழ்பாடும் துணைநடிகர்கள்தான் மிகவும் சுவாரஸ்யமாக சுகானுபவமான பார்ட்டிகள். சார்ள்ஸ் ஃபுகோவிஸ்கி கவிதை மேடையில் குடித்து விட்டு வாந்தியெடுத்தபடி கவிதைகளைப் படிப்பான் அதுதான் உண்மையான கலகம் என்று உபதேசத்தைக் கேட்டுவிட்டு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்களாம் சில கலகக் காவாளிகள் (காவல் ஆளும் இகள்). நிகழ்ச்சிக்கு   கவிதை கேட்பவர்களும் குடித்து வாந்தியெடுப்பதைக் கண்ட ஆசான் அடக்கமுடியாத ஆத்திரத்துடன்  “தமிழ் நாடு நாசமாகத்தான் போகும், கவிதை வாசிப்பவர்கள்தான் வாந்தியெடுக்க வேண்டும் என்று தெரியாமல் இப்படி இலக்கியவாதிகளை அவமதித்தால் நான் அர்கெந்தினாவுக்கே போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன், பக்கத்தில் இருக்கிற கேரளாவில் கூட பாத்து பக்குவமாதான் வாந்தியெடுக்கிறாங்க” என்று தன் வலைபக்கத்தில் ரத்த வாந்தி யெடுத்திருந்தார்.

புரட்சியைப் பேசிப் பேசி புரட்சி வராமல் பார்த்துக் கொள்வது.  புதுமைகளைக் கேலி செய்து புறமுதுகிட்டு ஓட வைப்பது உலகத் தரமான உத்தி  என்பதைக் கவனத்தில் கொண்டால், தமிழக ஆளுமைகளில் சிலருக்கு நாம் சிலை வைக்க வேண்டும். கண்ணதாசன் என்ற பெரும்பெயர் கொண்ட திரைக்கவியின் மொழி விளையாட்டு அர்த்தமுள்ள இந்துமதாகவும், அர்த்தங்கெட்ட பகுத்தறிவாகவும் அவதாரம் எடுத்த வரலாற்று நிகழ்வை  இதன் ஒரு வகை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

நானே புரட்சி, நான் சொல்வதெல்லாம் வறட்சி எனத் தொடங்கி கம்யூனிசச் சிங்கம், கருத்துக்களின் தங்கம் என்று புகழ்பரப்பி மெல்ல விவேகானந்தர், ஆன்மிக இந்தியா என நழுவி, ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர என ஜெயகோஷம் எழுப்பி பிரம்ம வாக்கியப் பிதாமகராக உருவெடுத்த ஜெயகாந்தன்  இதன் மற்றொரு உதாரணம்.

ஜெயகாந்தன் போலத் தொடக்கத்தில் புரட்சி பெயர் கிடைத்த பின் சுழற்சி என்றெல்லாம் குழப்பாமல் தொடக்கத்திலிருந்தே சொக்கத் தங்கமாக, சொல்லின்  தங்கமாக, கருத்தில் வங்கமாக (கடல்) திகழ்ந்து வருபவர்தான் வெண்முரசு நாயகர், விக்கி ஸ்தாபகர், இந்திய தரிசனத்தை மீட்கவந்த தூயவர், அறச்சீற்றதின் பாயவர் ( பாய்- அவர்) ஆன்மீக அரசியலின் மாயவர்  ஜெயமோகன் என்ற திருப்பெயர் கொண்ட இலக்கியப் பேயவர். (பேய் இங்கு பெருமைச் சொல்).

தமிழிலக்கியத்தில் இதுவரை யாருக்கும் இல்லாத அளவுக்கு  வாசகர் வழிபாட்டு மன்றங்கள் கொண்ட, படிக்காத மேதைகளைப் பக்த கோடிகளாகப்  பெற்ற, ஓங்கியடித்தால் ஒன்றரை டன் கனம் கொண்டு தாக்கும் பாரதக் கதையை பத்து வருடமாக (உயர்வு நவிர்ச்சியணி) எழுதி உலகச் சாதனை செய்துள்ள, ஒரு கிளை நூலகத்தின் அத்தனை அலமாரிகளையும் தன் பொத்தகங்களைக் கொண்டே நிரப்பி விடும் அளவுக்கு எழுத்தே வாழ்வாய் இயங்கும்  எழுத்துப்புயல் அவர். தமிழில் இவருக்கு இணையாக அல்லது போட்டியாக சாரு நிவேதிதா என்ற ஆட்டோ பிக்குஷன் எழுத்தாளரைத்தான் சொல்ல முடியும் என்று அல்பேனிய பத்திரிகையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள். (செவிவழிச் செய்தி) நயாகராத் தமிழால் நயமான கதையெழுதும் முன்னவரிடம் தஞ்சமடைந்த தமிழர்களை தன் வயகராத் தமிழால் வசப்படுத்தும் போட்டியில் பின்னவர் இறங்கியதைக்   கதையிரவுகளில் வியப்புடன் பேசுகிறார்கள்.  இந்த இரு எழுத்தாளர்களும் மேடைகளில் ஒருவருக்கொருவர்  இதனையே தம் புகழாரமாகச் சூட்டி மகிழ்கிற காணொலிகளைக் காண்பது சாகித்திய சந்தோஷம் தரும்.

ஜெயமோகன் ஒரு அறிவுக்கடல், அவர் எழுத்துகள் எல்லாம் ஆய்வு மடல், அவர் உலக அறிவுகள் ஓடி விளையாடும் திடல் என்று நம்பும் திருக்கூட்டம் நகரங்கள் தோறும் “ஊருக்கு நூறு பேர்” என்ற வகையில் இயங்கிவருவதை இணையத் தளங்கள் வழி அறியமுடிகிறது. அவர்கள் வேறு எதையும் வாசித்து அறிய வேண்டியத் தேவையே இல்லை எனவும் தினம் “வீண் முரசு” அத்தியாயம் ஒன்றை உறக்கத்துக்கு முன், உறக்கத்துக்குப் பின் என்ற முறையில் பத்து ஆண்டுகள் வாசித்து பரமபதம் அடையலாம் என்றும் வாட்ஸ்அப் தகவல்கள் வலம் வருகின்றன.

அதையும் மீறி நித்திய தர்மங்கள் தொடங்கி நிலையான மர்மங்கள் வரை ஏதும் ஐயம் எழுந்தால் வியாசரை வென்ற வித்யாபதி ஜெயமோகன் அவர்களின் இணையப்பக்கத்திற்கு கேள்வியாக எழுதி அனுப்பினால்  உலக அறிஞர்கள் உரைத்தவற்றுடன் உரைக்காதவற்றையும் விளக்கி, அத்துடன் தன் உற்றறிவால் உணர்ந்தவற்றையும் உள்ளொலியால் கண்டவற்றையும் இனி காண உள்ளவற்றையும் அருளித் தன் வாசகர்களை கடைத்தேற்றும் அவரை “ஆன்மாவால் காந்தியைத் தேட முயலும் ஒர் எழுத்தாளன்” என்று அவரே விளக்கிக் கூறுவதை இங்கு நினைவுபடுத்திக கொண்டு, அவரது ஆய்வின் ஆழத்தையும் அறிவின் அகலத்தையும் அசைக்க முடியாத வாதங்களின் உயரத்தையும் தக்க சான்றுகளுடன் நிறுவிக் காட்டும் ஒரு சிறு முயற்சியில் நுழையலாம்.

அவரது “இன்றைய காந்தி” (2009) என்ற ஞான நூல் “காந்தி மீதுள்ள அத்தனை ஐயங்களையும்” நீக்கி இத்தனை அறிவையும், ஆய்வுத்திறனையும் எங்கிருந்து பெற்றார்  இந்த அறிஞர் என்ற ஒரே ஒரு ஐயத்தை மட்டும் நம்மிடம் விட்டுச் செல்லும் ஒரு பெருநூல். இந்த நூல் 512 பக்கங்களைக் கொண்டது, அருண் ஷௌவ்ரி என்ற சத்தியசீலர் எழுதியுள்ள “ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்” (1997) என்ற ஆங்கில நூல் 663+ பக்கங்களில் இந்திய மக்களுக்கு உண்மையான கடவுள் யார் அவர்களை எப்படி ஒர்ஷிப் செய்வது என்று உணர்த்தும் உன்னத நூலாக வெளிவந்ததை நாம் அறிவோம். ஆங்கிலத்தில் அதனை வாசிக்க இயலாத அறிவுத்தாகம் உடையவர்களுக்கு ஞானப்பழத்தைப்  பிழிந்து  நயமாக ஊட்டும் பெரும் பணியை “இன்றைய காந்தி“ என்ற  இந்த நூல் செய்கிறது.

அந்த நூலுக்குள் செல்லும் முன்பாக மறைக்கப்பட்ட  மனதின்  மென்மைகளையும் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் தன் ஓயாத “அகழ்வு ஆராய்ச்சி”  வழியாக  அள்ளி எடுத்து வந்து  தமிழர்களுக்குக் கடந்த 45  ஆண்டுகளாக ஊட்டி வரும் ஒரு படைப்புலக மேதையின் சாதனைகளை நான் அறிந்த வரை, வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் வழி இங்கே எடுத்துரைக்கிறேன்.

நான் அறிந்த  ஜெயமோகன்  

இப்பொழுது மணிவிழா காணும் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு சிறப்பு உண்டு, மற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு.

உங்களால் யூகிக்க முடியுமா எனத்தெரியவில்லை, நானே சொல்லி விடுகிறேன். வேறு எந்த எழுத்தாளாருக்காவது நள்ளிரவுக்கு மேல் பத்மநாபபுரம் அரண்மனையையும், வீதிகளையும் சுற்றிச் சுற்றி நடந்தபடி மந்திரவாதிகளின் தந்திரங்கள் என்ன என்பது பற்றி  ஒரு பின்நவீன, பின்நவீனத்துவ எழுத்தாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்குமா? நிச்சயம் இருக்காது. ஜெயமோகனுக்கு கிடைத்தது, அதனை நானே ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.

அது பல ஆண்டுகளுக்கு முன் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை)  மகன் நடக்கும் சிறுவனாகவும், மகள்  தூக்கச் சொல்லி அழும் குழந்தையாகவும் இருந்த காலம்.

அவர் தொலைத் தொடர்புத் துறையில் பணி ஓய்வு பெறாமல் ஓய்வையே பணியாகச் செய்துகொண்டிருந்த காலம். என்னைவிட வயதில் மூன்று வயது மூத்தவர்  ஆனால் அறிவில் ஞானத்தில் தரிசனத்தில் மூவாயிரம் ஆண்டு மூத்தவர். (இரட்டுற மொழிதலை என்னிடம் மட்டும் அவர் ரசிக்கக்கூடும், அந்த அனுமதி வாசகர்களுக்கு இல்லை).

புதிதாக எழுத வரும் யாரையும் தேடித் தேடி படித்துவிடும் பழக்கமுள்ள எனக்கு அவருடைய எழுத்துக்களெல்லாம் தொடக்கத்திலிருந்தே நன்கு பழகியவைதான்.  ஆனால் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கிரணம் இதழின் பதிப்பாளர், ஆசிரியர் சாரு நிவேதிதா அவர்கள்.

அவர்தான் ஜெயமோகனை தருமபுரியில் (அப்படித்தான் ஞாபகம்) சந்தித்துவிட்டு வந்து என்னிடம் “களங்கத்துப் பரணி” பாடினார். ஜெயமோகன் சிறுகதைகள் பொருள்பொதிந்த வாசிப்புக்கு உரியவை என்பது போல நான் சொல்லியிருந்ததில்  சாரு மிகுந்த அறச்சீற்றமும் அழகியல் ஆவேசமும் அடைந்திருந்த காலம் அது. நேரிலேயே சந்தித்துத் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் கள ஆய்வு மனப்பான்மையுடன் அவர் தர்மபுரி சென்றிருக்க வேண்டும்.

 திரும்பி வந்து அவர் சொன்ன வாசகங்களை “பழுப்பு நிறப் பக்கங்களில்” எழுத முடியுமா எனத் தெரியாது. அப்போதெல்லாம் சாரு யாரைப்பற்றியும் நல்லபடி எனக்கு அறிமுகப்படுத்துவதே இல்லை, நல்லபடி பேசுகிற பழக்கம் இல்லை. ஏன் தன்னைப் பற்றிக்கூட!  இது பற்றிப் பிறகு எழுதுகிறேன் (சாருவும் நானும் பின்னே புவனஸ் அயரஸ் நகரமும்  என்ற தலைப்பில்)  தற்போது ஜெ.மோ. பற்றி மட்டும்.

சாரு சொன்னதன் சாராம்சம் இதுதான் “நீங்க எப்படியும் அவரைச் …. சந்திக்கவே கூடாது…”  எனக்குத் தெரியும் யாரையும் நான் சந்திப்பதை சாரு விரும்புவதில்லை, சந்தித்தாலும் நட்போடு இருந்துவிடக்கூடாது, அதற்கான முன்னேற்பாடுகளையும் முஸ்தீபுகளையும் செய்துவிட்டுத்தான் அவர்களிடம் என்னைக் கொண்டு செல்வார். “வாய்யா, எங்கிட்ட கேட்டில்ல, இப்ப கேளு, என்ன கேக்ககணுமோ கேளு, எந்தலைவன் வந்துட்டான்னயா இப்ப கேளு கேட்டுப் பாரு” என அன்போடு அறிமுகப்படுத்துவார். நாங்கள் முட்டிமோதி தெருவோரம் புரளுவோம் என்று காத்திருப்பார்,  மெதுவாக நாங்கள் விவாதிப்பதைப் பார்க்க நேர்ந்தால்  வெறுப்புடன்  அங்கிருந்து நகர்ந்து விடுவார்.    பிறகு பகைவர்கள்  என்று என்னிடம் காட்டிவர்களுடன் நெருக்கத் தோழராக  அவர் மாறிவிடுவதும் உண்டு. கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் போல  ஆறுமணிநேரப் படம் அது. இப்ப சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். சாருவுக்கு இருந்த கடைசி ஆயுதம் ஒன்றுதான் “உங்க கவிதை, எழுத்து எல்லாம் பைத்தியக்காரப் பிதற்றல், படிக்கவே முடியல” அப்படின்னு சொன்ன ஆளு அவர்   (மரியாதை விகுதி எனது) அவருடன் நீங்க பழகுறிங்க, அவர் எழுதிய எழுத்தை வாசிக்கிறிங்க.” என்று சொல்லி என்னை சீரோ டிகிரியில் நிறுத்தி விட்டு அவர் நேனோ தொழில்நுட்பத்தின் வழி அவர்கள் நட்பைத் தொடர்வார்.

அப்படித்தான் ஜெமோ-வையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அவற்றை நாவல்களில் எங்காவது  எழுதி வைக்கிறேன், பிறகு “தமிழிளகியவாதிகள்” வாசித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஜெ.மோ.வை நான் சந்தித்த நாள் பற்றிய காணொலியை காணுங்கள்.

“மூன்றாவது (கவிதை) பட்டறை 1989 அக்டோபர் 2,3,4 தேதிகளில் நடைபெற்றது. இதற்கு ஜெய மோகன் போன்ற புதியவர்கள் வந்திருந்தார்கள்.”  என்று சொன்ன கவி.கலாப்ரியா தொடர்ந்து கூறுகிறார் “வழக்கம் போல் அரங்கிற்கு வெளியே நிறைய விஷயங்கள் பகிரவும் அலசவும் பட்டன.” என்ற சொல்லிவிட்டு “அந்த வகையில் பங்கேற்பாளர்கள் எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. அவர்கள் வாசிப்பிற்கான பாதை மேலும் திறந்து விடப்பட்டிருப்பதாகவே பலரும் எழுதினார்கள். குறிப்பாக ஜெய மோகன்.”  என்று சிறு இடைவெளிவிட்டு தொடர்கிறார். “அடுத்த நான்காண்டுகளுக்கு குற்றாலம் கவிதைப் பட்டறை நடத்த இயலவில்லை. ஆனால் ஒகேனக்கல்லில் 1991 இல் பிரம்மராஜன் நடத்தினார். 1993இல் பதிவுகள் கவிதைப் பட்டறை, கவிதைக்கு மட்டும் சிறப்பளிக்கிறீர்களே சிறுகதை, நாவல் பற்றி யோசிக்கவில்லையா என்று பலரும் கேட்டுக் கொண்டதன் பேரில் இலக்கியக் கருத்தரங்கமாக மாற்றப்பட்டது. 1993 அக்டோபர் 1,2,3  தேதிகளில் திவான் பங்களாவில் வைத்து நடைபெற்றது. இம்முறை முதல் நாள் கவிதை இரண்டாம் நாள் சிறுகதை, மூன்றாம் நாள் நாவல் பற்றிய கருத்தரங்கு. விரிவான ஏற்பாடுகளை விக்ரமாதித்யன் ஆரம்பத்திலிருந்தே உடனிருந்து செய்து மிக உதவிகரமாக இருந்தார். கோமல் சுவாமினாதன், இளையபாரதி, பொன்னீலன், இந்தியா டுடே அரவிந்தன், நஞ்சுண்டன் என்று புதிய, அதிகமான பார்வையாளர்கள். மூன்று துறையிலும் நிகழ்வுகள் போக்குகள் இரண்டும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்த அரங்கில் பிரேம் ரமேஷ் இருவரின் பங்களிப்பும் காத்திரமானது. நாவல்களில் பின் நவீனத்துவப் பங்களிப்பு. மற்றும் பாதிப்புகள் குறித்துப் புதிய திறப்புகளை வழங்கினார்கள். கோணங்கி, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் விவாதங்களை சரியான திசையில் கொண்டு சென்றார்கள். இந்தியா டுடே, தினமணி, சுப மங்களா பத்திரிகைகளில் விரிவான  கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.”

அந்தக் காணொலியில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில்தான் ஜெயமோகனைச் சந்தித்தேன். பதிவுகள் சந்திப்பில் வழக்கம் போல சாரு நிவேதிதா சண்டையைத் தொடக்கி வைத்தார். தன் “நான் லீனியர்” கதைகளை ஜெயமோகன் ஒன்றுமற்ற வெற்று என்று சொல்வதாக முறையிட்டு என்ன பிரேம் அமைதியா உட்காந்திருக்கீங்க என்று அரசியல்படுத்தி எழுச்சியயூட்டினார். நான் “பொறுங்க சாரு அவர் உங்களை மட்டுமில்லை போர்ஹெஸ் கதையெழுத தெரியாமல் எதையோ எழுதிவிட்டு கேட்டால் மெட்டாபிக்ஷன் என்று சொல்லிவிட்டார், போர்ஹெவின் பெயரை காலம் இலக்கியத்திலிருந்து துடைத்தெறியும்” என்று சொல்லியிருக்கிறார். “மேஜிகல் ரியலிசம் எல்லாம் பம்மாத்து,இந்திய மரபில் இல்லாத மேஜிக்கா, ரியலிசமா என்று பிரம்மவாக்கியம் அருளியிருக்கிறார்.” எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் பதில் சொல்ல வேண்டும். காத்திருங்கள் மற்றவர்கள் பேசட்டும் என்று கூறி அமைதிப்படுத்த முயற்சித்தேன்.  சேகுவேரா இப்படி அமைதியாக இருந்திருந்தால் பொலிவியன் டைரி கிடைத்த்திருக்குமா? பூக்கோ இப்படி அமைதியாக இருந்திருந்தால் “ஹிஸ்ட்ரி ஆப் செக்சுவாலிட்டி” கிடைத்திருக்குமா என்பதுபோலப் பேசி இறுதியில் “காண்டீபம் எழுக உன் கை வண்ணம் எழுக, இக்களமெலாம் சிவக்க” எனக் கட்டளையிட திவான் பங்களா திமிலோகப்பட்டது. என் பேச்சின் இறுதி முடிவு இதுதான் “நீங்கள் போர்ஹெஸ் படிக்கல, பிரம்மராஜன், தருமு ஜீவராம் மொழிபெயர்த்த இரு கதைகளைப் படித்தது தவிர, (மலையாளத்தில் எதுவும் வந்ததா தெரியவில்லை) மேஜிகல் ரியலசமும் மேஜிக்கும் ஒன்றல்ல, அது பற்றி நான் தனியே விளக்க முடியும், மார்க்வெஸ் எழுத்தும் படிக்காமல் பேசுகிறீர்கள், அவர் மற்ற நாவல்கள் மேஜிக்கும் இல்லை ரியலியசமும் இல்லை வேறு வடிவங்கள், நான்லீனியரிட்டி என்பது எழுத்தின், சிந்தனையின் இயல்பான வடிவம், கவிதையின் இயல்பே இந்த கிளைக்கோட்டுத் (நேர்கோடுX கிளைக்கோடு) தன்மைதான். நகுலன் கதைகளை நீங்கள் மறுப்பதில்லை, மௌனி கதைகளைக் கொண்டாடுகிறீர்கள், ஏன் புதுமைப்பித்தனின்  பொருள்படுத்தும் கதைகள் பல இப்படித்தான் உள்ளன. சாரு எழுதும் எழுத்துகள் நகர் வாழ்வில் அடைபட்ட சிதைந்த மனதின் சொல்முறை, அது நான்லீனியர் வடிவில் ஒரு லீனியர் பொருளை, உணர்வைச் சொல்கிறது, திரைப்படங்களின் மொழியே நான் லீனியர் தன்மையுடன் மொண்டேஜ் வடிவில் அமைவது… இப்படி இப்படி” (நினைவில் எஞ்சியவை) நான் குரலை உயர்த்தாமல் சொல்லியிருந்தாலும்  சில வாசகங்கள் யாரையும் காயப்படுத்தியிருக்கும். அவர் போர்ஹெஸின் எந்த புத்தகத்தைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்தார்? என்ற கேள்வி அவருடைய நண்பர்களை கோபப்படுத்தியது. இப்படியெல்லாம் பேசினால் நான் இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார் கோமல் சுவாமினாதன். நான் “வழி அந்தப் பக்கம் இருக்கிறது” என்று கையைக் காட்டினேன். கடுங்கோபத்துடன் அவர் எழுந்து செல்ல முயற்சிக்க (அனைவரும் தரையில் உட்கார்ந்திருந்தோம்) இளையபாரதி அவரை அமைதிப்படுத்தினார். பெரும் அமளியுடன் கூட்டம்…. முடியவில்லை தொடர்ந்தது. ஜெயமோகன் தன் மாய ரூபத்தைக் கலைத்து இப்படிச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழத்தியதாக ஞாபகம். “இப்படி நிதானமாகத் தன் தரப்பை எடுத்துச் சொல்லும் ஒருவரைத்தான் நான் கலைஞன், சிந்தனையாளன் என்று சொல்வேன். மற்றவவை வெறும் கூச்சல், நான் வேண்டுமென்றேதான் சீண்டினேன், (தூண்டினேன்) நான் பிரேம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை, எப்போதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன், ஆனால் அவருடன் தொடர்ந்து உரையாடுவேன். ” அவரது திருவிளையாடல் வழி வகுத்த யுத்த தந்திரம் நன்கு வேலை செய்தது. என்றாலும் முழுதாகத் தகர்க்கப்பட்ட ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்று கோவில்பட்டி குழுவிரும் சாரு சமேத சபையினரும் தீர்க்கமாக நம்பினார்கள்.

அன்று இரவு அருவியில் அனைவரும் நனைந்து கொண்டிருக்க நானும் ஜெயமோகனும் நிதானமாக பேசிக்கொண்டு பெரும் நகைச்சுவைகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தோம். “நீங்கள் சிரிக்கவே மாட்டீர்கள் எனச் சாரு சொன்னார்  அவர் சொன்னால் நிச்சயம் அது பொய்யாதான் இருக்கும் என்று அப்பவே தெரியும்” என ஜெயமோகன் சொல்ல, “நீங்கள் எதிரே இருப்பவரைப் பேசவே விடமாட்டீர்கள் பேசினாலும் கவனிக்க மாட்டீர்கள் என்று சாரு சொன்னார். அது பாதி பொய் என்பதை நீங்களும் நிரூபித்திருக்கிறிர்கள்.” என நானும் சொல்ல,  இந்தியப் புராணிக மரபு தொடங்கி, அம்பேத்கர் பௌத்தம் வரை பல பக்கங்கள் நீண்டது அன்றைய இரவுப் பேச்சு. எல்லோரும் குளிக்கும் போது நீங்க ரெண்டு பேரும் இப்படி ஓரமா நின்னு பேசிக்கிட்டிருக்கீங்களே என்று அப்பாஸ் முறையிட “எல்லாரும் குளிச்சா துணிகளை யார் பார்த்துக்கறது” என்றும் “சிறுபடைப்பாளிகளுக்குத்தான் அருவி குளியல் எல்லாம், பெரும் படைப்பாளிகளுக்கு அதெல்லாம் முக்கியமில்ல” என்றும் கடுப்பேத்தும் பதில்களுமாக கடந்தது நேரம். சாரு கடுங்கோபத்தில் இருந்தார், “குடிச்சவங்களோட ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் அப்படின்னு ஜெமோ சொன்னா(ர்), சாமியார் பசங்ககிட்ட சவகாசமே கிடையாதுன்னு பிரேம் சொல்லுவார் இப்ப என்ன நடக்குது?” என நண்பர்களிடம் முறையிட்டார். அப்போதெல்லாம் சாரு “நித்ய சைதன்ய யதி” என்ற பெயரைத் தன் கலகமொழிப்படி எப்படி உச்சரிப்பார் என்பதை அவருடைய ரசிகர்களின் நுண்மான் நுழைபுலத்திற்கே விட்டுவிடுகிறேன்.

மறுநாள் என்னிடமும் கேட்டார், நான் “கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன் சாரு அதான்” என்று பிஞ்சு முகத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் அவரிடம் பலிக்கவில்லை. [சாரு மன்னிக்க வேண்டும், சற்று அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறேன். தடையற்ற பேச்சின் தலைமகன் நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று தெரியும். அப்படியே சீற்றமடைந்து ஏதாவது வசைகளை, வதந்திகளை எழுதினாலும் பரவாயில்லை, புதுசா என்னத்தை உடைக்கப் போறீங்க. அதே கடிகாரம், அதே டேமேஜ்தான், அதே வௌக்கெண்ணதான் ஓக்கேயா?]

இப்படித்தான் தொடங்கியது இருவரின் நட்பும் (???) வேறு எழுத்தாளர்கள் யாரிடமும் இவ்வளவு நேரங்கள் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததில்லை. ஒருவரை மற்றவர் ஒரு முறைகூட ஏற்றுக் கொண்டதில்லை, உடன்பாடு என்று ஒன்றிலிலும் கிடையாது. உடல்நிலை, நண்பர்களுக்கு உதவி, பிள்ளைகள் படிப்பு என்பன சில முரண்பாடு அற்ற பேச்சுகளாக இருக்கும். பல அரங்கங்களை ஏற்பாடு செய்து என்னைப் பேச அழைத்திருக்கிறார். பல ரகசிய கூட்டங்களுக்கும் நான் போயிருக்கிறேன் (அழைப்பு உள்ளவர்கள் மட்டும் என்பதால்) எல்லா இடத்திலும் எனது பேச்சின் எதிர்த்திசையில் அவர் பேச்சு, அவரது கருத்தியல் அடிப்படைகளைத் தகர்க்கும் எனது வாதம்.  இப்படித்தான் தொடர்ந்தது அது.  கடைசியாக மதுரையில் ஆசான் அயோத்திதாசர் கருத்தரங்கில் சந்தித்ததாக ஞாபகம், (அல்லது கன்னியா குமரியில் காலச்சவடு அரங்கிலா)   அப்பொழுதும் வெளியே கேலியும் கிண்டலுமாக எங்கள் பேச்சுகள்.  அவருடன் வந்த பக்தர் குழாம் பதைபதைப்புடன் சுற்றிலும் நின்று கவனித்துக் கொண்டிருந்தது. “பிரேம்கிட்ட இப்ப முழுசா பேராசியர் தோரணை வந்துடுச்சி” என ஜெமோ சொல்ல சிலருக்கு “அது பொருந்தும் சிலருக்கு காமெடியாயிடும், நல்ல வேளை எனக்கு எப்பவும் பிரச்சினையில்லை” என்று சொல்லிவிட்டு “ நான் பேராசிரியரா ஆயிட்டேன் அது எதிர்ப்பார்த்த ஒன்றுதான், நீங்க அகழ்வாராய்ச்சியாளரா ஆவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல”  பக்கத்திலிருந்த நண்பர்களில் சிலர் பதறிப்போனார்கள், அது எனக்குப் பிடித்திருந்தது (சிலருக்குதான்  இது புரியக்கூடும்).

ஆனால் காலையில் நான் 80 நிமிட அளவு பேசியதை மறுத்து அவர் 60 நிமிட அளவு பேசி அயோத்திதாசரின் ஆன்மிகத்தை மீட்க வேண்டும் அரசியலை அல்ல என்று முடித்துவிட்டு திரைப்பட நண்பர்கள் தன்னை அழைத்துச் செல்லக் காத்திருக்கிறார்கள் முடியும் வரை இருக்க இயலாது மன்னிக்க வேண்டும் என்ற புறப்பட்டார். நான்கைந்து கார்களில் வந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள் போன்ற  தோற்றத்திலிருந்த  இளைஞர்கள் அவரை  அழைத்துச் சென்றார்கள். அரசியலற்ற அயோத்திதாசர் மருந்து இல்லாத கேப்ஸ்சுல் எனத் தொடங்கி மீண்டும் சில நிமிடங்கள் நான் பேசியிருக்கிறேன்.

காலம் எத்தனைக் கடியது? நண்பர் அனுப்பிய சாரு பேசிய காணொலி  கேட்டேன் “தமிழில் எனக்கு இணையாக எழுதுவது ஜெயமோகன் மட்டும்தான், இரண்டு பேர்தான் இன்றைய எழுத்தாளர்கள், எங்களுக்குள்தான் போட்டி” இப்படித் தொடர்ந்தது. அவர்கள் இருவரும் பலமேடைகளில்  எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். எனக்கு இருவரையும் தெரியும், அவர்களுக்கு டப்மாஷ் செய்து ரசிக்கிறேன்.

ஜெயமோகன் கதைகள் தமிழில் வரும் பல கதைகளைப் போல எளிமையானது, ஒற்றைவகைக் கதைசொல்லலை  ஒரு பாடு நீட்டி முழக்குவது, ஞான ஒளி வீசும் வாசகங்களைப் பாயவிட்டு அறியாத பருவ வாசகர்களை அரச வைப்பது,  வளவள எழுத்துக்கு வகையான உதாரணம் அவை. 200 பக்கங்களில் எழுதி முடிக்க வேண்டியதை 890 பக்கம் எழுதித் தன்னைப்  பெரும்படைப்பாளியாக வைத்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு நேர்ந்துவிட்டது வருத்தத்துக்குரியது.  எதையும் முழுதாக முறையாக வாசிக்காத தமிழ் வாசக அடியவர் கூட்டத்தை ஆட் கொள்ள வந்த ஆபத்பாந்தவர் அவர்.

தன் வாசக கோடிகள் வேறு எந்த எழுத்தையும்  வாசித்து விடவே கூடாது என்ற பெரும் திட்டத்துடன் தட்டித்தட்டி அவர் செய்திருக்கும் காவி-யச் சாதனை எழுத்து வேதனை, அறிவுக்கு வந்த சோதனைதான் அந்த “வீண் முரசு” இப்படிச் சொல்வதில் நான் வருந்தவில்லை. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் பற்றி  பல அரங்குகளில் பேசி இருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று நாட்களில் வாசித்துப் பல தளங்களில் கட்டுடைக்க. வேண்டிய வாசிப்புக்கு உரியது என்று சொன்னதற்காக சாரு தொடங்கி பெரும் கலகக்காரர்களின் ஜென்ம விரோதியாக மாறியவன் நான். என்றாலும் கதையழிக்கும் கதைகளை எழுதிக் காவியம் எனச் சொல்லும் இந்த எதிர்நவீன எழுத்தை இலக்கியம் என்ற சொல்ல மாட்டேன். இந்திய அரசியலில் 2014-இல் தொடங்கிய இரண்டாம் கட்ட அச்சுறுத்தும்  சொல்லாடல்களின் ஒரு பகுதியாகவே அது உள்ளது.  

ஜெயமோகனிடம் ஒரு ஏளனப் புன்னகை யாருடன் பேசும் பொழுதும் இருக்கும். அது இன்று தமிழ் வாசகர்களை நோக்கிய நிரந்தரக் குறியீடாக மாறிப்போனது.

அவருடைய அரசியல் கருத்துகள் அபத்தமானவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட . சான்றுகள் ஆதாரங்கள் அற்று அவர் வாரியிறைக்கும் வார்த்தைகள் தமிழின் தொடக்க நிலை வாசகர்களையெல்லாம் மனவளர்ச்சி குன்றிய மாற்றிலக்கிய கூட்டமாக்கி, வாரவழிபாட்டு மன்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  ஜெயகாந்தன் தன் முற்போக்கு இலக்கியப் புகழை 1975-க்கு பிறகு  சனாதனச் சக்திகளுக்கு தத்தம் செய்து ஜெயஜெய சங்கர, ஹரஹர சங்கர என்று உளற ஆரம்பித்தார், ஆனால் ஜெயமோகன் தனது திட்டங்களுக்கு உண்மையானவர், தொடக்கத்தில் இருந்து அப்படித்தான் இருக்கிறார், முன்பு அவரது கருத்தாக இருந்தது இன்று அது இயக்கமாக மாறியிருக்கிறது. ஊருக்கு நூறு ஜெயமோகன் என்ற நிலை உருவாக இன்றைய அதிகாரச் சூழல் உதவிசெய்கிறது.

ஞான ஒளி, நற்செய்திப் பிரசங்கம் என நீளும் அவருடைய எழுத்துகள் வெறுப்பின் பத்திகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நெடிய ஆய்வின் வழி கண்டறிந்து கூறுவது போன்ற பாவனையில் அவர் எழுதுபவை பல அடிப்படைத்  தவறுகளால் பொங்கி வழிகின்றன.

நான் அறியாத காந்தி

எனக்குள் பெரும் எரிச்சலை ஏற்படுத்திய ஒரு பொத்தகம் “இன்றைய காந்தி” (2009) அதில் உள்ள  பரதவாக்கியம் இது “இந்த நூல் எந்தவிதத் திட்டமும் இல்லாமல் உருவானது. இதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. ஆராய்ச்சி செய்து எழுதும் நூல்களின் வகையைச் சேர்ந்த நூலும் அல்ல இது.” அப்பறம் என்ன…?  என்று கேட்கத் தோன்றுகிறது, நடுவண் அரசால் நசுங்கிச் சாக முடியாது நம்மால். நான் சொல்வது இதுதான் “எந்த ஆராய்ச்சியும் இல்லை என நீங்கள் சொல்வது உண்மை, ஆனால் திட்டமில்லை என்று சொல்லாதீர்கள். ஜெமோ.  “இனி ஒரு பயபுள்ள தமிழ்நாட்டில உண்மைய பேசிடக்கூடாது, பேச விடமாட்டோம் ஆமாம்”. என்பதுதான்  உங்கள் திட்டம்.

 தமிழக பாஜக தலைவர் அறிஞர் அண்ணாமலை பெரியாரியம், அம்பேத்கரியம் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வருவதை நாம் அறிவோம். அவர் வாழும் காலத்தில் வாழ்வது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் இலக்கியம் எழுத வில்லை, ஜெயமோகன் இலக்கியம் எழுதுகிறார் அதனைக் கண்டு அறிவுத் தஞ்சமடையும் இளைஞர்களிடம் அரசியல் பேசுகிறார். அத்தோடு நோய்வாய்ப்படும் இலக்கியவாதிகளுக்கு உற்ற உதவிகளைப் புரிகிறார். “ஆன்மாவால் காந்தியைத் தேட முயலும் ஓர் எழுத்தாளனின் சொற்களே அந்தப் பணியை ஆற்ற முடியும்.” என்பதும் புரிகிறது.  “காந்தியை அவரது எதிரிகள் வழியாக அறிந்தவன்தான் நானும்” என்றும் “காந்தியை புத்தம் புதிதாக அறிமுகம் செய்து கொண்டேன்” எனவும் சொல்லித் திகைக்க வைக்கிறார்.

 பெருமையுடன் அவர் சொல்கிறார் “நான் இப்படிச் சொல்வேன். இந்நூல் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்ளும் முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியத்தையும் காந்தியையும் புரிந்து கொள்ள முயல்கிறது”

நல்லது, அதற்காக எந்த ஆராய்ச்சியைச் செய்தீர்கள் என்றால் ”இந்த நூலுக்காக எந்த ஆய்வையும் செய்யவில்லை.” என்கிறார். ஆராய்ச்சி செய்யாமல் வரலாற்று பிரக்ஞையுடன்  எப்படிங்க ஜெமோ” என்றால்.   “என்ன ஆராய்ச்சி செய்ஞ்சியா…? ” என்று திரும்பக் கேட்கிறார்.

வாசகர்களுக்கு அவர் தரும் தரினங்களில் சில. “இது எழுத்தாளனின் மொழி. ஆகவே உணர்ச்சிபூர்வமானது.” சரி அதற்காக “வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கொலைகளை நியாயப்படுத்திய பின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்?  எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கிப் பேச முடியும்? அதன் பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு? ” (இன்றைய காந்தி, 2009:189)  “பகத் சிங் செய்த கொலைகள்” என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல உங்களைத் தூண்டிய ஆவணம் எது. எங்கு, எப்படி  அந்த  உண்மையைக் கண்டு பிடித்தீர்கள்? 

ஈரோடு வெங்கடப்பா ராமசாமி என்ற பெயர் கொண்ட பெரியார் பற்றி அபத்தங்களை கடைபரப்பும் இந்த நூல் “அதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை.” (ப.344) என்பதை நிறுவுகிறதாம். சரி அதற்காக பெரியாரின் நூலைக் கண்ணில் கூடக்  காணாமல் சங்கத்தில் யாரோ பேசக் கேட்டு எழுதுவது எந்த வகை ஆன்மிக மார்க்கம்.

நீங்க ஈ.வே.ராவை யார்கூட ஒப்பிடறிங்களோ இல்லையோ அது உங்கப்பாடு ஜெமோ. நாங்க ஈ.வெ.ராமசாமி என்கிற அந்த  காலத்திற்கான அறிவாளியை எல்லாருடனும் ஒப்பிட்டு அவர்கள் தகுதியை அறிந்து கொள்வோம். எழுதுவதற்கு முன் வாசிக்கனும் தெரீய்தா, இப்படி வாய்மொழியாகக் கேட்டு வளர்ந்தால் ஈ.வே.ராவாதான் வரும், கடைசி வரி வரை (பக்.342-368).  ஒரு எழுத்தாளன் இப்படியா எழுத முடியும் “இந்தப் போராட்டத்தின் …உண்மையான வைக்கம் வீரர் டி.கே. மாதவன் மட்டுமே. அவரது இருபதாண்டுக் கால பொது வாழ்க்கையின் சாதனை அது. அதைச் சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈ.வே.ரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமை சேர்க்காது.” (ப.368)

இப்படித்தான் தொடர்கிறது, அவரது அரசியல், வரலாற்று பிரக்ஞையும். உலக எழுத்தை எழுதும் ஒரு மகா கலைஞனுக்கு உள்ளூர் எழுத்தில் கவனம் செலுத்தும் கடப்பாடு இல்லை என்று அவருடைய தொண்டர் அணி ஊர் முழுக்க பிளக்ஸ் கட்அவுட் வைக்கலாம். அது வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கவும் படலாம். ஈவேராவாம்…ஈவேரா…

மகாதரிசனங்களின் பெருக்கில்  ஒரு பகுதி  மண்டையில் அடித்த ஒரு பகுதி “அன்று அம்பேத்கர் மக்கள் தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துகளின் ஒட்டுமொத்த தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்கரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதுவே நடந்தது.” (இ.கா, ப. 256) இதனை எங்கிருந்து  ஜெயமோகன் பெற்றார். அம்பேத்கரை பிரிட்டிஷ் கைக்கூலி என எழுதிய 639 பக்கம் எழுதி வெளியிட்ட  அருண் ஷொவ்ரி என்கிற சேவக் அறிவுஜீவியிடம் இருந்து. அதே நூலின் பக்கம் 22- இல் ஷொவ்ரி நூலில் இருந்து எடுத்த இதே  பத்தியைக் குறிப்பிட்டு விரிவான தகவல் ஆதாரம் கொண்டது என எழுதுகிறார். பிறகு அந்தப் பத்தியில் இருக்கும் மகாராஷ்டிராவுக்கு வெளியே செல்லவில்லை என்பதுடன்  மகர் சாதிக்கு வெளியே கூட செல்லவில்லை என்று கூறி, அதுதான் வரலாற்று உண்மை என்கிறார். இதுதான் அயோத்திதாசரை ஆன்மிக வழிப்படுத்தியவர் என வரலாற்று அறிஞர்களால் கொண்டாடப்படும் ஜெயமோகனின் தரிசன தர்மம்.

பிரிட்டிஷ் அரசு அளித்த போர்ப் பணியின் நிமித்தம் தென்னாப்பிரிக்கா விட்டு இந்தியா திரும்பிய காந்தியைப் போல 50 வயதில் அரசியலுக்கு வந்தவர் அல்ல பாபாசாகேப்.  பேசத் தொடங்கிய காலத்திலிருந்துஅரசியல் பேசி, எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அரசியல் எழுதித் தன் பிள்ளைகளைப் பலியிட்டு விடுதலை  அரசியல் செய்தவர் அவர் என்பதைக் கூட அறியாத ஒருவர் தன்னை வரலாற்று பிரக்ஞை கொண்டஎழுத்தாளர் என்கிறார்.  இந்தியாவின் அனைத்து மகாணங்களிலும் இயங்கிய எழுபதுக்கு  மேற்பட்ட  விடுதலை  அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய “ஆல் இன்டியா  டிப்ரஸ்ட் கிளாஸ் காங்கிரசின்”  (1930) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் என்பதையும் மறைத்து தலித் அரசியல் வரலாற்றையே இழித்துரைக்கும்  ஒருவர்தான் தனது  எழுத்துக்குள் ஆன்மீகம் பொங்கி வழிகிறது என்று புளகாங்கிதம் அடைகிறார். வாசிக்கமால் வாசகர்களுக்கு வாழ்வளிக்கும் பேரறிஞராக அவர் செயல்படுவது புரிகிறது.

வாசித்தால் மட்டுமே தெரியும் சில வரலாற்று மெய்கள் :

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1931 மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடப்பதாக திட்டமிடப்பட்டது. மாநாடு நடக்கும் போது பகத்சிங் உயிருடன் இருந்தால் காங்கிரஸின் முதல் தீர்மானமாக பகத்சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் கோரிக்கையே பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறும் நிலை உருவாகும். இதற்கு முன் இது போன்ற “யாரையும் கொல்லாத வெடிகுண்டுகளை” வீசிய வழக்குகளில் இப்படி தீர்ப்புகள் உள்ளன. இதனை மார்ச் 5, 1931 இல் வைஸராய் இர்வினுடனான சந்திப்பின் போது பேசிய ஒருவர் எடுத்துச் சொல்கிறார்.  அதற்கு முன் பகத்சிங் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு  23 மார்ச், 1931 இல் மன்னிப்பு கேட்க மறுத்த பகத்கிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் தூக்கிலிடப்படுகிறன்றனர். இர்வின் சந்திப்பில் காங்கிரஸின் நிலையை முழுதாக விளக்கிப் பேசிய மகாத்மா காந்திதான் பகத்சிங் ஒரு தேசபக்தர் ஆனால் அவரது பாதை சத்தியத்துக்கும் அகிம்சைக்கும் எதிரானது என்கிறார்.

காந்தி பற்றி அவரது குறிப்பில் இருந்து பெறப்படும் சில  ஆன்மீக நிகழ்வுகள் இவை.

ஆப்ரிக்க காபிர்களுடன் இந்தியர்கள் ஒன்றாகச் சிறையில்அடைப்படுவது இழிவு என வாதிட்டவர் மோகன்தான் கரம்சந்த் காந்தி.

பிரிடிஷ் படைக்கு ஆள் சேர்க்க தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து பாதை யாத்திரை செய்த  காந்திக்கு முன்பு சார்ஜண்ட் மேஜர் விருதும் பிறகு கெய்ஸர் ஹிந்து என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. 1919-இல் அதனைத் திருப்பித் தந்துவிடுகிறார்.

பகத்சிங் போன்றவர்களைத் தூக்கிலிட பிரிடிஷ் அரசுக்கு உரிமையுள்ளது, காங்கிரஸ் உணர்ச்சி வசப்பட்டு இதில் தலையிட முடியாது என்று சொன்ன காந்தி நீண்ட அனுபவம் கொண்ட வழக்கறிஞர், பாரிஸ்டர்.

பெண்களுடன் தன் பிரம்மச்சர்ய பரிசோனையை நேரு முதலான தலைவர் விமர்சித்த போதும், அது தன் ஆன்ம பரிசோதனை அது தன் அந்தராத்மா சம்பந்தப் பட்டது, நாட்டுக்காக அதனை மாற்றிக்கொள்ள முடியாது என்று பல காலம் சொல்லி வந்த ஆன்மிகத் தலைவர் மகாத்மா காந்தி.

தனித்தொகுதி உரிமை என்ற இடைக்கால அரசியல் உரிமை தரப்பட்டால் “தீண்டா மக்களைக் கொல்வோம்” என்ற சாதி இந்துக்களும், சனாதனிகளும் நேரில் சொன்னதைக் கேட்டும், இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற் தலைவர் ஓயாத அரசியல் செயல்பாட்டாளர் அம்பேத்கரைக் கொலை செய்வோம் என்ற சுவரொட்டிகளைப் பத்திரிகைகளில் பார்த்தும் அதனைப் பற்றி நேரடியாக எதுவும் சொல்லாமல் இந்துக்களின் பாவம் இந்துக்களால் கழுவப்படவேண்டும் என்று பூடகம்  பேசி உண்ணாநோன்பிருந்தவர் தேசபிதா காந்தி அடிகள்.

ஜெயமோகனை இனி எதையும் வாசிக்க வைக்க முடியாது. தமிழ் வாசகர்களுக்குச் சொல்கிறேன். வாசியுங்கள் பிறகு யோசியுங்கள், அப்புறமா  இந்தியத்  தரிசனம் பத்தி எழுதுங்க… நானும் விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்… வாசித்தவைகளைப் பற்றி மட்டும்… மகாத்மா காந்தி நூல் தொகுப்பு நூறு உள்ளது, பன்னாட்டு நிறுவனங்களும் பாரதப் பெரும் பணக்காரர்களும்   தந்த கொடையில் காந்தியக் குடும்ப நிறுவனம்   சேகரித்துத் தொகுக்க,   இந்திய அரசு நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு அது, வாசியுங்கள் …

பின்தொடரும் சிறு குரல்:

இப்போது சந்தித்தாலும் இருவரும் பேசிக் கொள்ளக்கூடும்,  எனது அரசியல் கேலிகளை அவர் சகித்துக் கொள்ளுவார் எனில் ஒரு நாள் முழுக்கத் தொடரவும் கூடும். வெண்டி டோனிகர் படித்தீர்களா என்றால் வசைபாடாமல் பேச அவரால் முடியும் என்றால். அம்பேத்கரை முழுதாக வாசித்துப்  பின் காந்தி பற்றிப் பேசுங்கள் என்றால் நான் ஞான தரிசனத்தால் நாற்பது தொகுதிகளையும் வாசித்து விட்டேன் என்று கூறாமல் இருந்தால், அவருடன் விருந்தும் உண்ண முடியும். அத்துடன் இப்பொழுதெல்லாம் நான் அவர்  வெறுக்கும் மதுவை அருந்துவதில்லை, காந்திய வழியில் இல்லை மருத்துவ வழியில் அதனால் ஏராளம் பேச முடியும்.