பழமை துதிக்கும் பாடல்களும் பாவலர் படுத்தும் பாடுகளும் -பிரேம்

பாட்டுப் புலவன் பாரதி  தானும் சிக்கித் தமிழர்களையும் சிக்க வைத்த  ஒரு இடம் உண்டு.

பாட்டுக்கு ஓர் புலவனா அல்லது பலரில் அவனும் ஒரு புலவனா? என்கிற குற்றாலச் சண்டையை அப்புறமாக வைத்துக்கொள்ளலாம்.

மகாகவி என்றும் தேசிய கவி என்றும் தெய்வக் கவிதை என்றும் ‘எந்நாளும்‌ அழியாத மாகவிதை’ என்றும் நவீன அழகியலுக்கோ, நவீன இலக்கிய நிகழ்நிலைக்கோ, நவீனத் தன்னிலை உருவாக்கத்திற்கோ  ஒவ்வாத உதவாத (இது பின்நவீன விளக்கம் அல்ல) அடையாளங்களைத் தமிழ்க் கவிகளும் (நெடிலும் அதற்குள் அடக்கம்) எழுத்துக் கலைஞர்களும் (எழுத்து   ஒரு கலை, அது ஒரு பயிற்சித் திறன்)  பாவித்திரிகிற, காவித்திரிகிற, அணிந்து உழல்கிற  ஒரு துயர் நிலையின் தொடக்கம் சுப்ரமணிய பாரதி எனச் சொன்னால்  போச்சுது போச்சுது பாரத நாடு!     போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! “ என்று பொங்கி எழுந்து  “இது பொறுப்பதில்லை  தம்பி  எரிதழல் கொண்டுவா இவன் கையை எரித்திடுவோம்” என ஓங்காரமிடும்  கவிப்பித்தர்கள், காவியநாயகர்கள், மக்காகவிகள் சற்றே ஒதுங்கி நின்று கேட்டறிக!

உங்கள் உலகத்தரம் கொண்ட ஒப்பாரிகளையும், ஒப்பிலா லகரிகளையும் செவி செயல்படத் தொடங்கிய நாள் முதல் கேட்டும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றோர் துயர்நிலையை எண்ணத்தில் கொண்டு “”ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்”  என்று  பொறுமையுடன்  இதனைக் கேட்டருள்க.

புராதனத்தை புதுமைக்குள் புகுத்தியும் புராதனமே புதுமைதான் என்றும் புதுமைகளை உருவாக்கும்  பட்டறைக்குள் புகுந்து புதியன உருவாகாமல் பார்த்துக் கொண்ட சிலரில் பாரதி ஒருவர் என்பதைப் பற்றி காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள் பன்னிரு தொகுதிகளையும் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பையும் படித்தும் குடித்தும்,   பலவாறானும் ஆய்தும், தோய்ந்தும் நான் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டு  “நல்லதோர் வீணை செய்தே” எனும் தன்மையத் தவிப்பு எங்கே கொண்டு செல்லும் எனக் கண்டறிந்து நானும் துயரே உற்றேன்.

 “தசையினைத் தீசுடினும்  சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்“ என்ற தெய்விக நிலையில் நான் சிக்கி இருந்த காலத்தில் உவப்பாக இருந்த பாரதியின் “நானும் ஒரு சித்தனே” என்ற நிலை நாள்பட நாள்பட ஒரு நோயென்று தெளிந்தேன். இதுவும் ஒரு பித்தமே என்று நுண்ணறிவால் கண்டு சொல்லும் பின்நவீனத் தெய்வீகர்களிடம் நான் கேட்பது, சுவைபுதிது நயம்புதிது’ வளம்புதிது சொற்புதிது  எனத் தேடி அலையும் போது பித்தமும் புதிதாக இருக்க வேண்டும் எனப்  புதிய பெயரில் புதிய உருவில் நானும் ஒரு பித்தனே என்று சொல்வதில் என்ன தவறு?

“புவியனைத்தும்‌ போற்றிடவான்‌ புகழ்படைத்துத்‌ தமிழ்மொழியைப்‌ புகழி லேற்றுங்‌ கவியரசர்‌ தமிழ்நாட்டுக்‌ கில்லையெனும் வசையென்னாற்‌ கழிந்த தன்றே?

எனத் தருக்கியும் முறுக்கியும் திரிந்த  பழம் பித்தம் கலைந்து”

பழங்கவியைப் புதியதென்று சொல்லிச் சொல்லி பலதொகுப்பை நிதம்  எழுதிக் குவிப்பதற்கு  பாழும்மனம் இடம்கொடுக்க மறுக்குதப்பா  பத்துவரி புதிதாகப் படைத்துவிட்டு

பக்கத்து ஊரிலுள்ள  கவிகள் தாமும் படைக்கின்ற  வரிபுதிதாய்க் கேட்டுக்கொண்டு பார் முழுதும் எழுதுகிற பலரில் ஒன்றாய்

பதம் பெற்று வாழ்வதற்கு அருள்வாய் நெஞ்சே!

-என்ற புதுப்பித்தம்  பிடிப்பதில் ஒரு குற்றம்தான் உண்டோ?

வசன கவிதை

“வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.” என்று பாரதி போல நம்பும் பாக்கியம் எனக்கில்லாத போது  நான் என்ன செய்வது?

வேதியர் தெய்வம், வேதமும் தெய்வம், பூமித் தெய்வம், புத்தி தெய்வம், ஞானம் தெய்வம், ஞானியர் தெய்வம்,  நாடும் தெய்வம், எழுத்து தெய்வம், எழுது கோல் தெய்வம், நானும் தெய்வம்… அப்பா சாமி இப்படியே போனால் நீயும் தெய்வம் என்று சொல்லி முடித்துவிடலாம் எனத் தோன்றும், ஆனால் முடியாது, ஏன்?  பிறகு வெள்ளைத் தாமரை பூவில் இருப்பவள் மட்டும் அல்ல வெள்ளைக் கார சீமாட்டியும் தெய்வம், வெள்ளைக்காரர் நாடும் தெய்வம், வெள்ளையர் ஆட்சியும் தெய்வம், வெள்ளையர் பாஷையும் தெய்வம் என அது நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுமே (பாரதி பாஷையில்) அதனால் தெய்வம் நீ என்றுணர்  அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு அறிவு தெய்வம், அழகு தெய்வம், அபினி தெய்வம், பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம், நாளும் தெய்வம், நானே தெய்வம் என ஒரு நோய்வலையில் ஆனந்தமாகச் சிக்கி “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா?” எனப்பாடித் திரியலாம் “பார்” போற்ற வாழலாம் என்ற பழப்பித்தத்தில் இருந்து நான் 2007 தப்பி புதிய ஒரு பித்தத் தடத்தில்  பயணிக்கப்  புறப்பட்டேன்,

பாரதியை மகாகவியென்றும் பாரதி பாடல்களை பால்வீதி மண்டலமென்றும் நம்பிய காலங்களில்

“ஒற்றைச் சொல்லில் ஒரு காவியம் அது

உனக்குத் தெரிந்த திருவாக்கியம்

என்னை அழைக்க நீ ஒலிக்கும் சொல்லில்

இருக்கிறது பெண்ணே புது பாவியம்”  

என சும்மா சுழற்றியடித்து சுகவனத்தில் திரிந்த நாட்களை நான் இழந்து விட்டேன்.

எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அது! தேச பக்தி 20 சதம், தெய்வ பக்தி 20 சதம்,  ஆரிய தேசம்  20 சதம், அன்னைத் தமிழ் ஒரு 10 சதம், ஆதியில் இருந்த தேசம் 20 சதம்,  அன்னை மகாளி  10 சதம் என ஒரு வண்ணமயமான ஒரு கலவை அது.  ஹிந்து  தர்மத்தால் நிலை பெற்ற தேசம், ஆரிய ராணியின் அருள் பெற்ற தெய்வீகம், இருந்தாலும் சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சுவை புதிது… எல்லாம் புதிது என்ற கவித் திமிர்  கொண்ட  ஜீவனாய்  நவீன அரசியல் மண்டலத்தில் உலவவிட்டு சற்று இடைவெளிக்குப் பின்  தெய்வீக நிலம்,  தெய்வீகப் பாடல்,  தேசியத் தொன்மம், தெய்வமாக்கவிதை,  தெய்வீகராகம், திகட்டாத பாடல் எனத் தாந்திரிகமாக பின்நவீன  உருவெடுத்து  உய்கிற நிலை எனக்கு வாய்க்காமல் போனதே என்ற வருத்தத்தில் ஏதேதோ எழுதுகிற நிலை எனக்கு நேர்ந்தே விட்டதோ?

சரி அதனைப் பற்றி ஒரு ரொபர்தோ பொலன்யோ நாவலையோ சூலியோ கொர்த்தசார்  நாவலையோ பிறகு எழுதுகிறேன்.

அதற்கு முன் நான் பொதியாகச் சுமந்த அலைகிற குறிப்புகளில் இருந்து ஒரு சிறு பகுதி.

[முன் குறிப்பு : “தூய நன்மை, துல்லியமான உண்மை, மீளமுடியாத வன்முறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வைத்திருந்த  குறிப்புகளைத்  தற்செயலாகக் காண நேர்ந்தது. அதன் விளக்க முறை, புரிதல் முறை எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் ஒரு பகுதி இது.]

ஃபாசிசம் இருபதாம் நூற்றாண்டின் கொடிய அரசியல் வடிவம். இதற்கு முன் இருந்த வன்கொடுமைகள் ஆதிக்க, அதிகார, அடக்கு முறைகளின் மேலிருந்து கீழான அழுத்தமாக அமைந்தவை. 

அவை நேரடி அரச, ஆயுதக் கொடுகோன்மை வடிவங்கள்.

ஃபாசிசம் கீழிருந்து மேல் என்னும் தர்க்கத்தில் இயங்குவது அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் நலனுக்காக என்ற விதிமுறை இதன் அடிப்படையாக அமைகிறது.

நாடு, சமூகம், தேசம், இனம், மதம் என ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டி அதன் முழு வலிமையையும் தலைமையின் கீழ், தலைமை என்ற அமைப்பின் கீழ் குவித்து விடுவது. அதற்குப் பின் அனைத்து வன்முறைகளும் கொடூரங்களும் அடக்குமுறைகளும் நியாயப்படுத்தப்படும்.

ஃபாசிசம் எதையும் உடன்பாட்டு முறையில் விளக்காமல் எதிரிடைகளால் விளக்கும் . எதிரிகள்தான் நமது வாழ்வை, பெருமையைக் குலைத்து வருகிறார்கள் , எதிரிகளை ஒழித்து இனிய வாழ்வை அடையலாம் என அது ஓயாமல் சொல்லும்.

கடந்த காலப் பெருமைகள் பற்றி ஒயாமல் பேசி அதனை இடைக்கால எதிர் சக்திகள் அழித்துவிட்டன, மீண்டும் நாம் எழ வேண்டும் என்று பழமைப் பக்தியில் உருகும். இந்தப் பக்தியின் உச்சத்தில் பெரும் தலைமை, தெய்வீக மீட்பர், மகாபுருஷர் என்ற உருவங்களைப் பொருத்திவைக்கும்.

உலகைத் தூய்மையாக்கி, துல்லியமான உண்மைகளை நிலை நிறுத்தி, அனைத்தையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் தனக்கே உள்ளது என்று நிறுவி, அதற்குள் ஒவ்வொருவரையும் அடக்கி நீதான் இதன் மூலாதரம், அடிப்படை, மையம் என்ற கற்பித நிலையை உறுதியாக மனத்திற்குள் செலுத்திவிடும்.

இதற்குப் பிறகு மீளமுடியாத வன்முறையும், கேள்வி கேட்க முடியாத வன்கொடுமைகளும் பெரும் அழகியலாக மாறிவிடும். எல்லாம் உன் நன்மைக்கே (தனிமனித நிலையில்) எல்லாம் உங்களுக்காக (சமூக நிலையில்) எல்லாம் நமது தலைமுறைகளுக்காக (அமைப்பு இனம் என்ற நிலையில்) என்ற நித்திய நன்மை, நீடித்த இன்பம் பற்றிய பேச்சுகளின் ஊடாகத் தொடரும் வன்முறை இது.

ஆண்மைய- தந்தை மையச் சமூகத்தின் நுண் அலகும் இதில் உள்ளது. பேரன்பு பற்றிய அனைத்துச் சொல்லாடலுக்குள்ளும் உள்ள வன்முறை இது.

தியாகம், அர்ப்பணிப்பு, தன்னலமின்மை என்ற பெயர்களில் இந்த அடிமைநேய -வன்முறை உளவியல் உள்ளது. தாய்மை, தெய்வீகம், புனிதம், முழுமையான விடுதலை, முழுமையான புரட்சி என அனைத்துவகையான முற்று-முழுமைகளினூடாகவும் இந்த வன்முறை தன்மைச் செயல்படுத்தும், நியாயப்படுத்தும்.

தனிமனித உறவுகளில் இது வன்முறை நியதியாக, சிறுகச் சிறுக செயல்படும். ஆனால் அரசியல், சமூகம், தேசம் எனற அளவில் பெருங்கொடுமைகளைப் பெருமையுடன் செய்து முடிக்கும்.

இது உயிர் வாழும் போராட்டம் , இனநீட்சி என்ற இயற்கை விதியின் அடிப்படையில் இயங்கும் வன்முறையல்ல. பிறர் உயிர்வாழ்தல் தனக்குக் கெடுதல், தனது பூமிக்கு இழுக்கு. பிற உயிர்களின் இன்பம் தூய்மையற்ற இழிவு என்ற இயற்கை கடந்த எதிர்நிலை உளவியலின் விரிவு.

இந்தியச் சமூகத்தில் மனு-வழி அரசியலில் இதன் அலகுகளைப் பார்க்கலாம். இன்றுள்ள பாரதப் பெருந்தேசிய- மகாசாம்ராஜிய – இந்துராஷ்டிர கனவுகள் மக்களுக்காக எதையும் செய்யாது; ஆனால், அது தேசத்தின் மீது பக்தி கொண்ட, பேச்சு மறந்த அடிமைகளை புனித கூட்டமாக உருவகிக்கும்.

அறிவுக்கு எதிரானது ஃபாசிசம்- அதே சமயம் அதிக அறிவும் ஃபாசிசமாகும். அன்புக்கு எதிரானது ஃபாசிசம் -ஆனால் தன்னைத் தவிர யாருக்கும் அன்பு செய்யத் தெரியவில்லை என்று பேரன்பின் வடிவமாகத் தன்னைக் காட்டும். எளிமைக்கு எதிரானது ,பாசிசம் ஆனால் எளிய மக்களை, அவர்தம் எளிய கனவுகளைத் தனது ஆயுதமாக்கும்.

ஒரு சில வாக்கியங்களை நினைவு படுத்திக் கொண்டு ஃபாசிசம் பற்றிய பேச்சைப் பிறகு தொடரலாம்.

குருஜி கோல்வால்கர் சொல்கிறார்:

“நமது தேசம் பழம்பெருமை கொண்டது, நித்தியமானது நிலைத்தது அது மகாபுருஷர்களை ஈன்று அளித்திருக்கிறது, உலகின் சிகரமான தத்துவங்களை உருவாக்கித் தந்திருக்கிறது, தர்மமே உருவான சமூக அமைப்பை அது கொண்டிருந்து. அதன் சிறப்பை நாம் இன்றும் காணலாம், நம்மை ராமர், கிருஷ்ணர், சங்கராச்சாரியரின் வழிவந்தவர்கள் என்று சொல்லும் போது, இந்த மண்ணின் மைந்தர்கள் இந்த மகோன்னத பிதாக்களின் ரத்தத்தைத் தமக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் உலகின் ஞானங்கள் அனைத்தையும் அடைந்தவர்கள், செயலில் உன்னதங்களை நிகழ்த்தியவர்கள். இந்து சமூகத்தில் பிறந்து விட்டோம் என்ற ஒன்றே நமக்கு இந்த உன்னதப் பெருமையைத் தருகிறது.”

இதன் தொடர்ச்சியான தர்க்கம் என்ன? பார்க்கலாம்.

”இத்தனை வளம் கொண்ட நம் நாட்டை மிலேச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தாய் மண்ணைக் காக்க நாம் வலிமையுடன் வீரத்துடன் ஒன்று திரளவில்லை, அதன் காரணமாகத்தான் இன்றுள்ள துயரமான நிலையும் கொடிய வறுமையும், துன்பங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன, நமது உன்னதங்களையெல்லாம் அந்தக் கொள்ளைக்காரர்கள் முன் இழந்து விட்டு நிற்கிறோம்.”

சற்று ஏமாந்தால் இவை அத்தனையும் வரலாற்று உண்மைகள் போல நமக்கும்கூடத் தோன்றக்கூடும். அதுதான் பாசிசத்தின் நுண்வலிமை!

பெயர் தெரியாத பாடல்

பெரும் கட்டமைப்புகள், பெரும் படைப்புகள், பெரும்பாடல்கள், பெருந்தொடர்கள்,  பெருங்கவிகள் , ஆகப்பெரும் எழுத்தாளர்கள், ஒப்புயர்வற்ற தலைவர், ஒற்றைத் தேசியம் என பாசிச அழகியல் பலவாறு  உருவெடுக்கும்.

சற்று ஏமாந்தால் உன்னத எழுத்து, உன்னத கலை எல்லாம் மனிதப் படைப்பின் சாதனைதானே எனத் தோன்றக் கூடும்.

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயம் என்றால் இனனொரு சுவரை உருவாக்குவது போலத்தான் பெருமித எழுத்துகள்.  பாசிசம் மறுக்கும்அழகியல் என்ன செய்யும்?

சீனப் பெருஞ்சுவர் கலைத்து சிறுசிறு வீடுகள் கட்டும்

கோயில்கள் தோறும் குவிந்துள்ள தங்கத்தை குன்றிமணியாக்கி

குழந்தைகளுக்கு விளையாடத் தரும். (1)

நுண்மையின்  அழகை அறிந்தால் நுண்பாசிசங்களின் வடிவம் புலப்படும். அது மனதின் குரலாகவோ, மகாபாரதமாகவோ, மகான்களின் அருளாகவோ, மருத்துவ அறிவிப்பாகவோ இருக்கலாம்…

தெய்வம் நீ என்று உணர்வதையெல்லாம் விட்டு மனிதன் வெறும் மனிதன் என்று  மனதால் தெளிந்தால் “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்‌  சிட்டுக்‌ குருவியைப்‌ போல. ” மனமே எனச் சொல்லி  இப்போது உறங்கச் செல்கிறேன்.

(யாருக்குச் சொல்கிறாய் என்று  நண்பர்கள் கேட்கமாட்டார்கள், என்றாலும் புதியவர்களுக்கு புரியச் சொல்கிறேன் : எனக்குச் சொன்னேன்)

(1) மூலபாடம்: சீனப்பெருஞ்சவரை இடித்து பல சின்னஞ்சிறு குழந்தை வீடுகள் செய்வோம் கோயில் கருவறைகள் கொள்ளையடித்து குண்டுவிளையாட நற்கோலிகள் செய்வோம் (பாடினோர்: பெயர்க் கிடைத்திலது, பாடலும் 25 % கிடைத்துளது, 1981 )

இசைபட வாழ்தல்