எழுதிச் செல்லும் விதியின் கை- பிரேம்

ஓர் அறிக்கை:

கிரணம்-1 , அக்டோபர் 1987

பிரபஞ்ச விகாசத்தின் சாயலாய் ஒளிர வேண்டிய மனித மனங்கள்-சூன்யத்தின் உறைவுகளாய்(ச்) சமைந்து சவப்பேழைகளாய்(ப்) புதைந்து நிற்கும் அவலம் நம் கணங்கள். சகல திசைகளையும் உட்குடைந்து வியாபிக்கும் அகக் கதிர்வீச்சு இன்று அந்தக நார்க் குவியல்களாய் சிக்கலுற்று எஞ்சியது என்பது அவலம் கனலும் நிஜம். உறைந்துபோன படிமங்களால் தன்னைச் சுற்றி சுவர் சமைத்துக்கொண்ட இந்த நூற்றாண்டு மனிதனின் உயிர்த்தல் பற்றிய கேள்விகள் கூட புதுப்பிக்கப்படாமல் பின்னமுற்றுக் கிடக்கின்றன. இந்த மயான வெளியில்தான் இன்றைய ஒவ்வொரு கலைஞனும் அனாதை பிம்பமாய் உறைந்து நிற்க வேண்டியிருக்கிறது. நிர்ணயங்களின் குமிழ்களுக்குள் அடங்காமல் பிரவகித்து மறையும் நிஜங்களின் பிரமாண்டம் கண்டு அதிசயிக்கும் அதே கணத்தில் மட்கிப்போன மாமிசத் திரளின் புழுக்களாய் சலனித்துக் கிடக்கும் மனிதக் கூட்டத்தின் விரூபம் கண்டு உயிரழுகிச் சொட்ட வாதையுறுதலும் நேர்கிறது. சவத்தன்மைக்கு எதிரான கலகம் மட்டுமே இன்றைய கலைகள் என்பது நிஜ கலைஞன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்தே இருக்கிறது. நிர்மாணங்கள் அனைத்தையும் சிதைப்பதைத் தவிர கலைகளின் இக்கண இயக்கம் வேறேதும் இல்லை என்பதை நாம் என்றோ உணர்வுற்றுத் தெளிந்துவிட்டோம். ஆனால் தமிழ்ச் சூழலில்- இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் தெளிவுறாத நிலையில் பிரேதங்களின் குறிகளைச் சுவைத்து(த்) தணியும் தத்துவ விசாரங்களே இன்னும் அறிவார்த்த(த்) தளங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சவத்தனவே வாழ்க்கையான ஒரு அமைப்பில் உயிர்ப்புள்ள தத்துவங்கள் சலனம் கொள்ள முடியாது என்பது சரித்திர உண்மை என்றாலும் உலகின் பிறபாகங்களில் அவற்றிற்கான குவிமையங்கள் இருந்தே வந்திருக்கின்றன. வீர்யமான கலைப்படைப்புகளும் உக்ரமான மனோவயக் கலகங்களும் முற்றிலுமே இல்லாத சூழல் என்று நாம் தமிழ்ச் சூழலைக் கூற வேண்டும். இங்கிருந்து உலகளவில் கூறக்கூடிய ஒரு நவீனத்தையோ ஒரு கவிதையையோ நிச்சயம் நவீன சிந்தனையுள்ள யாரும் முன் மொழிய முடியாது. இதற்கான காரணங்கள் இரண்டொரு தொடர்களில் விளக்கக் கூடியவை இல்லை. அனைத்தையும் சிதைத்துச் சிதைத்து பிரபஞ்ச நிஜத்தை நோக்கி இயங்கக் கூடிய அதீத கலா இயக்கம் இந்திய மனோ நிலையில் என்றுமே கிடையாது. உலக அளவிலேயே கடைசி இரண்டு நூற்றாண்டு அளவிலான தத்துவ நோக்குகளே மனித மையம் கொண்ட சிந்தனைகளை முன் வைத்தன. மகோன்னதங்களை நோக்கிய விகசிப்பே நிஜமான மனிதத் தேடுகைகள் என்பதை அகம் புறம் அனைத்துமாகக் கொண்டு இயங்கும்- இயங்க எத்தனிக்கும் ஒரு கலை இலக்கிய ஆய்வுக் கூடமே ‘கிரணம்’ உலக கலகக்காரர்கள் அனைவரையும் சக ஜீவன்களாகக் கொண்டும்-கலைஞர்களைத் தவிர வேறு யாரையும் மனிதர்களாகவே கணிக்காத வெறியோடு இயங்கும் அன்னியர்களின் நிலவறையே ‘கிரணம்’. அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பால் பிரபஞ்ச நுண்ணுணர்வு என்ற உச்சத்தை நோக்கிய முயக்கமே இதன் ஒவ்வொரு சலனமாகிறது. உலக அளவிலான கலைப் படைப்புகளும் படைப்புகளிலிருந்து பிளவுபடாத வாழ்க்கையுமே இதன் ஆதர்சன கனலாக ஒளிரும். இதற்கொன்று தனியான நோக்கங்களோ சாதனைகளோ அவலங்களோ இல்லை. உலக எதிர்க் கலைஞர்கள் நிகழ்த்திய-நிகழ்த்திக் கொண்டிருக்கும்-நிகழ்த்தப் போகும் கலகங்களின் சிறு அதிர்வே இதன் உயிர்ப்பு. தமிழ்ச் சூழலில் நிகழ்வதென்பது சரித்திர விபத்து. ‘கிரணம்’ எதிர் மதிப்பீடுகளின் ஆய்வுக் கூடமாகவும் கலக சிருஷ்டிகளின் சித்ரகூடமாகவும் இருக்கும் என்பது இந்த நேரத்தில் கூறப்பட வேண்டியது. பிற-இதன் இயக்கத்தின் போக்கில் உணர்த்தப்படும்… –பிரேம்

அறிக்கையால் அலைந்த காலம்

இந்த ஒரு பக்க அறிக்கை அல்லது இதழுக்கான அறிவிப்பு எழுதப்பட்ட ஆண்டு 1987. இதனைத் தன் அழகிய கையெழுத்தால் படியெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பொதினி வளவன். இதனை நான் எழுதிய போது எனது வயது 22.  எனது பெரும் ஆக்கங்கள் பல பிரேதா என்ற பெயரில் எழுதப்பட்ட போது எனது வயது 17-20 என இருந்தது. ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் இதுபோன்ற எழுத்துகளை வெளியிட முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பார் சாரு நிவேதிதா என இன்று உலகப் புகழ் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர். அவர் அப்போது புதுச்சேரியில் இல்லம் கொண்டிருந்தார். தில்லியில் பல ஆண்டுகள் வேலையில் இருந்து 1000-1500 நூல்களுடன் புதுவையின் பொறியியல் கல்லூரிக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்திருந்தார். அமரந்தா என்ற பெயரில் இன்று பல மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் எழுத்தாளர் அப்போது சம்யுக்தா என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வந்தார்.   முனியாண்டி, அறிவழகன், சாரு நிவேதிதா என ஒரே நாளில் மூன்று பெயர்களில் புழங்கி வந்த சாரு நிவேதிதா நண்பர் ஆபிதீன் கடிதங்களில் ரவி என்ற பெயரில் உலவி வந்தார். கிரணம் இதழ், அதனை இதழ் எனச் சொல்வது பொருந்தாது என்றாலும் இதழ் என்ற வடிவில்தான் அது வெளிவந்தது. அது வெளி வந்த போது சாரு மீண்டும் தில்லிக்குத் திருப்ப வேண்டியிருந்தது. அதற்கு முன் 1984-86 காலகட்டமாக இருக்கலாம் இனி தில்லிக்குத் திரும்பவேண்டியதில்லை என்ற ஆறுதலோடும், திட்டங்களோடும்தான் அவர் குடும்பத்துடன் புதுவையில் குடியேறியிருந்தார். ஆனால் அவருடைய திட்டங்கள், சம்யுக்தாவின் முடிவுகள் அனைத்தும் தகர்ந்து வேலையை விட்டு அச்சகம் வைத்து புதுவையிலேயே வாழலாம் என்ற முடிவை எடுத்து அதற்காகப் பல மாதங்கள் உழைத்து உடைபட்டு மீண்டும் இருவரும் தில்லி திரும்பியிருந்தனர். இருவருமே அலுவலக தட்டச்சு உதவியாளர்களாக இருந்தார்கள் (அப்படியே அவர்களை நான் பார்த்திருக்கிறேன்). அந்தக் காலகட்டம் பற்றித் தனியே எழுதுவேன். இப்போது நான் சொல்ல வருவது, பெரும் இடிபாடுகளுடன் அலைச்சலும் அல்லலும் கொண்ட ஒரு காலகட்டத்தில் “கிரணம்” என்ற பெயரில் நான் பத்திரிகை நடத்தப் போகிறேன் என சாரு நிவேதிதா அறிவித்த போது எனக்குப் படபடப்பு அதிகமானது. எனது சில படைப்புகளை தன் கையெழுத்தில் படியெடுத்து பத்திரிகைகளுக்கு புகழுரைகளுடன் அனுப்பி வைத்து அவர்கள் இந்த நெடுங்கவிதைகளை தனி நூலாத்தான் வெளியிட வேண்டும் பத்திரிகையில் வெளியிட இயலாது எனத் தெரிவிப்பார்கள், தெரிவிக்காமல் மறந்து போவார்கள். “லயம்” என்றொரு பத்திரிகைக்கு அனுப்பி விட்டு என்னிடம் தெரிவித்தார், ஏன் சாரு அந்தப் பத்திரிகைக்கு என வருந்திவிட்டு மறந்தும் போனேன். யாரும் நெடுங்கவிதைகளை வெளியிடவில்லை எனக் கடும் கோபத்தில் இருந்தார் சாரு நிவேதிதா. அந்த சமயத்தில் “எக்சிஸ்டென்ஷியலிமும் பேன்சி பனியன்களும்“ நாவலின் முதல் கட்ட எழுத்து அவர் கையில் இருந்தது. நான் அவரை முதன் முதலாகச் அவரது அலுவலகத்தில் சந்தித்த அன்று என் கையில் அந்த ஃபூல்ஸ்கேப் பக்க நோட்டைக் கொடுத்து பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு தட்டச்சு, சுருக்கெழுத்து வேலையில் இருந்தார். இடையில் ஒரு டீ, மீண்டும் அவர் தட்டச்சு நான் படிப்பு. மதிய உணவை அவரும் சம்யுக்தாவும் பிரித்த போது நான் புறப்படுகிறேன் என்று எழுந்தேன். கிளம்பரிங்களா, அதெல்லாம் இல்லை உங்களுக்கும் சாப்பாடு இருக்கிறது என்ற பொழுது நெகிழ்ந்துதான் போனேன். அவர்கள் இருவரும் பல காலம் என்னை நெகிழ வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரை நான் அன்று நெகிழ வைத்தேன். சாப்பிடும் பொழுதும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் படித்தபோது சாப்பிடுங்க பிறகு படிக்கலாம் என்றார். இல்ல இன்னும் கொஞ்சம் பக்கம்தான் இருக்கு போறதுக்கு முன்ன முடிக்கனும் இல்லையா? என்றேன். என்னது படிச்சி முடிச்சிட்டிங்களா? அவர் முகத்தில் அன்று கண்ட ஒளியும் ஒலியும் பல ஆண்டுகள் தொடர்ந்தது. அன்று மாலை வரை அவருடன் இருக்கவேண்டி வந்தது. அதற்குப் பிறகு அது பல ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தப் பகுதியை விரிவாக எழுதினால் நல்லது, அந்த பாத்திரம் என்ன ஆனது எனப்பேசியும் சிலவற்றைச் சொல்லி எழுதியும், எழுதிச் செல்லும் விதியின் கையாக நாவல் வளர்ந்தது. இறுதியாகத் தொகுத்து வகுத்து முன்னுரை எழுதிக் கொடுத்த போது  எக்சிஸ்டென்சலிசமும் பேன்சி பனியனும் வெளிவந்து பிளாக் பஸ்டராகி, தினமலர் விருது கிடைத்து….  அது ஒரு தனிக்கதை,

இப்போது நான் சொல்ல வந்தது தன் நாவலும் எழுத்தும் வெளிவர வாய்ப்பற்ற காலத்தில் எனது எழுத்துகளைச் சுமந்து கொண்டு தில்லி வந்து 10 இதழ்களில் இவற்றையெல்லாம் வெளியிட்ட பின் நிறுத்திவிடலாம் என்று ஒரு கடிதம் எழுதினார் சாரு நிவேதிதா. பிரேதாவின் எழுத்திலிருந்த ஒரு கற்பனை இதழ் “கிரணம்”, அதுவே அச்சு இதழுக்குப் பெயரானது. மிதிலா அச்சகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது “இதழ் அச்சு வேலை செய்து தரலாம், ஆனால் அச்சகத்தின் பெயர் அதிலிருக்காது” ஏன் அப்படி? பெயர் கிரணத்தில் இருந்தால் அச்சகம் இருக்காது! அப்படித்தான் அன்று நிலை, கடைசி இதழ்வரை அச்சக்தின் பெயர் இதழில் பதிவாகவே இல்லை என்று நினைவு.  அது பற்றி “கச்சேரி நினைவுகள்” என்ற தலைப்பில் தனிக்கதை எழுதலாம்.

முதல் இதழுக்குத் தலையங்கம், அறிமுகம் என ஒன்றை ஆசிரியர்தானே எழுத வேண்டும், எழுதுங்கள் சாரு என்ற போது, இல்ல நீங்கதான் எழுதனும் என்றார். அப்போது ஒரு வீடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பகலில் எழுதி முடித்துவிட்டு விற்க வைத்திருந்த மிர்ச் மசாலா (கேதன் மேத்தா) படத்தைக் கள்ளத்தனமாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை வந்த தோழர் பொதினி வளவனிடம் எழுதியதைக் கொடுத்தேன். இரவுக்குள் அது அச்சு போன்ற கையெழுத்தில் இரு பக்கங்களானது. எனது கிறுக்கல் கையெழுத்தை என்னிடம் வைத்துக் கொண்டு, நற்படியை அடுத்த நாள் அஞ்சலில் சேர்த்தேன் தில்லி முகவரிக்கு.

இதழ் வெளிவந்த போது தலையங்கம் அனைவரையும் ஆத்திரமூட்டியது, அப்படியே சிலரை ஆனந்தப் படுத்தியது. டாடாயசம், சர்ரியலிசம் உருவானபோது பாரிஸ் நகரில் யாரோ ஒரு ஆள் இப்படித்தான் எழுதி இருப்பார் என்ற மிதப்பில்தான் நான் அன்று அதனை எழுதினேன். அது தமிழிலக்கியத்தை மாற்றத் தொடங்கியது, உடன்பாட்டிலும் பெரும் வெறுப்பிலும் இலக்கிய தொழிற்சாலை தனது புதிய உற்பத்தியைத் தொடங்கியது. புதுச்சேரி வட்டம் என்ற பெயருடன் தமிழக இலக்கியப் பேச்சு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது, ஒற்றைக் கிரணத்தை “நிறப்பிரிகை“ செய்து பலவண்ணங்களில் செய்து வெளியிட தோழர்கள் வந்தார்கள்..  அது இன்று புதிய  போக்குகளாய்ப் பரவிக் கிடக்கிறது.

இன்று அந்த அறிக்கையைப் படித்துப் பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதில் சொல்லப் பட்டவைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த அறிக்கை பிடிக்கவில்லை. சொற்குற்றமா, பொருட் குற்றமா, உங்குத்தமா, எங்குத்தமா? யார நான் குத்தஞ்சொல்ல? என அது என் முன் கிடக்கிறது. அதனைப் பதிப்பித்த சாரு நிவேதிதாவுக்கு அது பிடிக்காமல் போனது. அவர் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையும் பின்னாளில் பிடிக்காமல் போனது… அது ஒரு பெரிய கதை.

நான்தான் பொடியன் அவர் என்னை விட பன்னண்டு பதிமூணு வயசு பெரியவர் இல்லையா சொல்லித் திருத்தியிருக்கலாம். இது போல எழுதினால் வேலையெல்லாம் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே எனது ஐந்து நெடும் புனைவுக் கவிதைகளை அச்சாக்கி விட்டார். கிரணம் இதழ்களில் வெளிவந்ததை விட இரண்டு மூன்று மடங்கு தடிமனான படைப்புகள் நாலு ஐந்து கையெழுத்துப் படியாக இருந்தது. ஐந்தாவது இதழில் பெரும் படைப்பு ஒன்று வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது, ஆனால் வெளியாக வில்லை. புதைக்கப்பட்ட பிரிதிகளாகவும், எரிக்கப்பட்ட ஏடுகளாகவும் அவை மறைந்து போயின. மாலதி மைத்ரி வந்து அதில் ஒன்றை மட்டும் மீட்டு அச்சாக்கினார், தனக்கு வீட்டுமனை வாங்க வைத்திருந்த பணத்தில். எழுதத் தெம்புள்ளவன் கவிஞன் எரிக்கத் தெம்புள்ளவன் மகாகவிஞன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்,  மமதையில் அலைந்த காலம் அது. இல்லையென்றால் உடன் எழுத வந்த ஒருவரே இதனையெல்லாம் எரித்துவிடலாம் என்று சொன்னபோது, எரிந்து போகட்டும் என விட்டிருப்பேனா?

இன்று மமதை அழிந்து அலைச்சல் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூப சைத்ரீகன், அரூப தர்சினி என்ற சொல்லுயிரிகள் என்னுடன் உரையாட வரும் போது சற்றுக் கோபமாகச் சொல்கிறார்கள். எங்களையும் எரித்திருந்தால் இப்படி அலைந்திருக்க மாட்டாயே என. அவர்களுக்கும் கூட அந்த அறிக்கை பிடிக்கவில்லையாம் அப்போது. ஏன் சொல்லவில்லை என்று கேட்டால் யார் சொல்லி நீ கேட்பாய், சொன்ன பேச்சைக் கேட்கும் ஆளாக இருந்தால் இப்படியா எழுதிக் கொண்டிருப்பாய்? எனப் பதில் வருகிறது.

மீண்டும் அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள். சமஸ்கிருத மயமான வாக்கியங்கள். தமிழுக்குத் தேவைற்ற இறுமாப்பு எல்லாம் இருந்தாலும், இந்த மருந்தும் வேலைசெய்திருக்கிறதே! சொல் அதுவே சிறந்த செயல், அஞ்சாமல் சொல் அதுவே சிறந்த வாழ்க்கை. என்ன நான் சொல்வது சரிதானே?

[ஒரு கமுக்கக் குறிப்பு: எழுத்து வழியாக மட்டுமே அறிந்திருந்த சிலர் சாரு நிவேதிதா, பிரேதா என்ற பெயர்களைப் பெண்கள் என நினைத்திருந்ததாகப் பிறகு சொல்லிச் சிரிப்பார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய சிறு வெளியீட்டைக் கொடுத்துப் படிக்கக் கொடுத்த ஒர் அரபிந்தோ ஆசிர நண்பர் மறுநாள் இது ஆண் எழுத்தாளரா பெண் எழுத்தாளரா என்று என்னிடம் கேட்டார். இது ஆண்தான் ஆண்மட்டுமே இப்படி பிடிக்காத ஒரு நூலுக்கு தனி ஒரு நூலை எழுதி வெளியிடவும் முடியும் என்றேன். அவர்தான் ஒரு நாள் சாரு நிவேதிதாவை ரோமன் ரோலான் நூலகத்தின் முன் வைத்து அதோ நிற்கிறாரே அவர்தான் என அறிமுகப்படுத்தினார் (1983-1984). இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் யார் என்றுன், மீசை முறுக்கிவிட்டபடி பேசிக்கிட்டு இருக்காரே அவர்தான் என்றார். அவர் அன்று நீலக் கோடு போட்ட பேன்ஸி பனியன் அணிந்திருந்தார். அவருடன் நின்றவர் ஒரு ML தோழராம், அவர் மழித்த முகத்துடன் இருந்தார். நான் அரபிந்தோ நண்பரிடம் சொன்னேன். ஒருவர் சாரு, மற்றவர் நிவேதிதா. நண்பர் அன்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வில்லை. பிறகு சில நாட்கள் சென்ற பின்தான் அவரிடம் நானே சென்ற பேசினேன். அன்று பையில் ஜே.ஜே சில குறிப்புகள் அட்டையுடன் இருந்தது. அதனை வாங்கி ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். ஏனெனில் எங்கள் நூலகத்தில் புத்தகம் வாங்கியதும் நூல் அட்டையைக் கிழித்து விட்டு கெட்டி அட்டையில் பைண்ட் செய்துதான் அடுக்கில் வைப்பார்கள். அன்று அவருடைய சிறு வெளியீட்டை நான் படித்தது பற்றிப் பேசினேன், அவருடைய முகத்தில் ஒளிஒலியும். ஒரு நாவலைப் படிப்பதே பெரிய விஷயம், அது பற்றி எழுதி தனி வெளியீடாக இலவசமாகத் தருவது என்றால்? ஆம், தமிழ் அன்று அவருக்குச் சோறு போடவில்லை, அவர்தான் தமிழுக்குச் சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். வளர்ந்த பின் திருப்பிச் செய்ய வேண்டியது நன்றிக் கடன் இல்லையா?]  

(வதந்திகளின் வாசனை:  சிறுபத்திரிகைகளைப் பழி தீர்க்க பிரேதா என்ற பெயரில் எழுதி அனுப்பியது சாரு நிவேதிதாதான். பழமலை என்ற பாட்டாளிக் கவிஞர் என்னை முதன் முதலாகச் சந்தித்த போது சும்மா சொல்லுங்க “உங்க வயசுக்கு இத நீங்க எழுத முடியாது, சாரு நிவேதிதா எழுதி உங்க பேருள போடுறாரு சரிதானே?” என்று பாசத்துடன் கேட்டார். “ஆமாம் இதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவர் கையால் எழுதப் பட்டதுதான்” என்றேன். பாத்திங்களா ? அவர் முகத்தில் அக்கினிக் குண்டத்தின் அடர்த்தியான வெளிச்சம். “எனது புரியாத கையெழுத்தை புரியும் படி ஒவ்வொரு வரியாய் எழுதி அச்சகத்துக்குத் தருவது அவர்தான்.” பழமலை பல்லைக் கடித்துக் கொண்டு நிலக்கிழார் சிரிப்பைச் சிரித்தார். நல்லா பேசிறிங்க.)

பாரிஸ் நகரில் நடப்பதாய் பாவனை
பாரி முனையின் வெயில் கால வேதனை
தலைநகரில் இருந்து வந்த இருள்நகர் எழுத்து
எரிக்கப்பட்ட ஏடுகள் பல எஞ்சி நின்றவை சில