கவிதை படித்தும் பேசியும்

பிரேம், வணக்கம்,

உரையாடல் வாசிக்கப்பட்டது.

உங்களுடைய எழுத்துலக/ இலக்கியத்தள உருவாக்கம் பற்றிய விவரிப்புகளை மிக மிகச் சுருக்கமாகச் (கேள்விக்கு விடையாக) சொல்லியிருக்கிறீர்கள்.  மிக நீண்ட ஆட்டோபயோகிராபிக்கான துவக்கக் குறிப்புகளாக இவை இருக்கட்டும். 20 வயதுக்குள்ளாக சந்தித்த முதன்மை  நிகழ்வுகள்,   பார்த்த  காட்சிகள்    (இடங்கள், திரைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள்) கேட்ட உரைகள், இசைகள், வாசிப்பில் ஆளுமையை உருவாக்கிய நூல்கள், நூலகங்கள், மனிதர்கள் (நண்பர்கள், ஆசிரியர்கள், தோழர்கள், இலக்கியவாதிகள்,  விமரிசகர்கள், தலைவர்கள்)  நட்பு பாராட்டிய மற்றவுயிர்கள்  பற்றி,  உறக்கம் மறந்து இரவு நனைந்த ஆயி மண்டபப்  பூங்காவின் பல  மரத்தடிகளில்;  கடலரிப்புக்கு முன்  இருந்த, இப்போது அவலமாகக்  காணாமல் போயிருக்கிற  நமது கடற்கரை மணலில்;  நீண்ட   பனைவரிசைகளின் முன்னிலையில் ஒயிண்டேரியின் மதகுச்  சுவர்களில்;  ஒற்றைரயில் வரம் மட்டுமே கொண்ட அரவமற்ற  ரயில் நிலையச் சுதை நாற்காலிகளில்;  வாணரப்பேட்டையின்  அடர்ந்த தென்னந் தோப்புகளின் தலையை சீரான நொடிக் கணக்கில்  சீவிச்செல்லும் சன்னியாசித் தோப்பின் கலங்கரை விளக்கின் பளீர்  ஒளிமழையில்… நாம் பேசியவை  பல காவியங்கள் இயற்றக் கூடிய கனமுள்ளவை.

மூன்றாம் பிறை, மூடுபனி, உதிரிப்பூக்களில் இளையராஜாவின் இசை தொடங்கி, புயலாக வளர்ந்த மைக்கேல்  ஜாக்சன் உள்ளிட்டோரின் இசைகளை இலவசமாக தேர்ந்தெடுத்துக்  கேட்க உதவிய நண்பன் அபு தாஹீரின் லக்கி கேசட் பதிவுக் கடை,    மாலை ஆறு மணிக்கு மேல் பகுதி நேரமாக நமக்கு சம்பளம் கொடுத்த நண்பர் சிவராமன் நிருவகித்த விஜய் வீடியோ விஷன்  (பலநூறு  திரைப்படங்களினூடே இங்கேதானே சே குவேரா பற்றிய  படத்தை முதல் முறையாகப் பார்த்தோம்)  வெர்னர் ஹெர்சாக்கின், ராத் ஆப் காட், க்ளாஸ் ஆப் ஹார்ட்,  ரே- யின் பதேர் பாஞ்சாலி முதலிய படங்கள் பார்க்க நீங்கள் என்னையும் அழைத்துச் சென்ற ழாந்தார்க் மன்றம், 25 பைசாவில் மூன்று பாகங்களோடு படம் பார்த்த கண்ணம்மை தியேட்டர் உள்ளிட்ட கனவுகளை விதைத்த பல சினிமா கொட்டகைகள்,   அக்ரகாரத்து பையன்களின் வாலிபாணி கவிதைகள் பேசும் நிலவுக் கவியரங்கங்களில் அவர்களைக் கலைத்துப் போட்ட நமது கவிதைகள் உறைந்து கிடக்கும் ஷாம்பர் த காமர்ஸ் சிற்றரங்கம்,  பகலை இரவாக்கி நிழல் குகைகளாய் பகல்  பட்டினியை மறக்க வைத்த குளுமையான செங்கிலியன்  தோட்டம்.  போதையான முந்திரிப் பூக்கள் வீசிய மணம் நிறைந்த செம்மண்  வெள்ளவாரி ஓடைகள், ஒவ்வொரு தெரு முனையிலும் எந்த நேரத்திலும் சுவையான குடி நீர் கொட்டிய பிரெஞ்சுக்காரர்கள்  அமைத்துச் சென்ற தண்ணீர் கான்கள், கால் நடைகள் குடிப்பதற்காகவும் மாட்டு வண்டி மற்றும் ரிக்-ஷா தொழிலாளர்கள்  குளிப்பதற்காகவும் அமைந்திருந்த என்னேரமும் வழிந்து  கொண்டிருந்த  தண்ணீர் தொட்டிகள், அதை அடுத்திருந்த கூடை  சாப்பாட்டு ஏழை உணவகங்கள்,  அரவாணி அன்னையர்களின் மய்யக்கிழங்கு கூடை அமுத சுரபிகள்,   விடியற்காலை 3.30 மணிக்கு நாம் புட்டும், மீன் குழம்பு இட்டிலியும்  சாப்பிட்ட சவானா, ரோடியர் மில் வாசல்களின் அள்ளங்காடி சிற்றுண்டிக் கடைகள், இரவு 9 மணிக்கு மேல் அன்று  சாலைகளில் நமக்குக் கிடைத்த  பெரு அமைதி இன்று அனைத்தும் நம் நினைவுகளில்  மட்டுமே.   இவைகளினூடாக இருக்கின்ற எவ்வளவோ இன்பமான; துன்பமான, ரசனையான; அவலமான இளவயது வாழ்க்கை அனுபவங்கள்  இன்னும் எழுதப்படாமல் இருக்கின்றனதான்.

பொதினிவளவன்