லீனா மணிமேகலை ஆண்டையின் ஆதிக்கசாதித் திமிரும் அடிமைப்பட்டவர்கள் பற்றிய நக்கலும்- மாலதி மைத்ரி

லீனா மணிமேகலை ஆண்டையின்

ஆதிக்கசாதி திமிரும் அடிமைப்பட்டவர்கள் பற்றிய நக்கலும்

 

மாலதி மைத்ரி

 

வல்லினம்.காமில் வெளிவந்த என்னுடைய கேள்வி-பதில் தொடரில் நான் தெரிவித்திருந்த ஒரு கருத்துக்கு  லீனா மணிமேலையின் எதிர்வினை அடுத்து வந்த இதழில் வெளியிடப்பட்டது. அதற்கான மறுப்பை நான் எழுத இருந்த நேரத்தில் வல்லினம்.காம் வெளிவராத நிலை ஏற்பட்டது. அதனால் எனது எதிர்வினை  இங்கு பதிவு செய்யப்படுகிறது.

வல்லினம் இதழில் வெளிவந்த கேள்வியும் பதிலும்.

கேள்வி

சக படைப்பாளியான லீனா மணிமேகலை கவிதைகள் தனித்து இருக்கின்றன என்பது என் வாசிப்பின் முடிவு. நீங்கள் ஒரு பெண் கவிஞராக என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்

லீனா மணிமேகலையின் பெருபான்மையான கவிதைகள் பெண்ணுடலைக் கொண்டாடும் கவிதைகளாக இயங்குகின்றன. புனித பிம்பங்களைக் கட்டவிழ்ப்பு செய்கிறேன் என முற்போக்கு மார்க்ஸிய புனிதர்களைக் கட்டவிழிப்பு செய்தது போல் முதலாளித்துவ புனித மூலவர்களையும் கட்டவிழ்ப்பு செய்திருக்க வேண்டும். டாடா போன்ற பரமாத்மாக்களையும் கோடம்பாக்கத்து கடவுள்களையும் கட்டவிழிப்பு செய்யாமல் இருப்பது இவரின் படைப்பு அறம்.

இதற்கு எதிர்வினையாக லீனா மணிமேகலை பதிவு செய்திருந்த பகுதி

மாலதி மைத்ரி எனது கவிதைகளைக் குறித்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி லீனா மணிமேகலை கையெழுத்திட்டால் கூடங்குளம் பிரச்சினை குறித்தான படைப்பாளர்களின் அறிக்கையில் கையெழுத்திட மாட்டேன், லீனா மணிமேகலையின் கவிதைகளைச் சேர்த்தால் எனது கவிதைகளை மலையாளத் தொகுப்பிற்கு தரமாட்டேன், லீனா மணிமேகலை பங்கு கொண்டால் ஆவணப்படத்திற்கு பேட்டி தரமாட்டேன், லீனா மணிமேகலை கவிதை வாசித்தால் நான் கவியரங்கத்திற்கு வர மாட்டேன் என்பது போன்ற அடாவடி அல்லது குழாயடி அரசியலில் இருந்து கொஞ்சம் நெகிழ்ந்து கருத்து சொல்லியிருப்பதில் ஆச்சர்யமே ! ஆனால் எனது கவிதைகள் எவை குறித்து பேசவில்லை என மாலதி கண்டுபிடிக்கிறாரோ அவைகளின் மீது அக்கறை கொண்ட கவிதைச் செயலை மாலதி மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பெரும்பகுதியை கட்டவிழ்க்கும்போது மாலதி போன்றவர்கள் கட்டவிழ்க்க எதையாவது விட்டுவைக்க வேண்டும்தானே என்றும் கூட பரிந்துரைக்க மாட்டேன், ஏனெனில் அல்லி அரசாணைகளில் எனக்கு சுவாரஸ்யம் இருப்பதில்லை.

மேலும் எனக்கு கட்டவிழ்ப்புகளைப் பற்றிய அறிவுரைகளைக் கூறுவதற்குமுன், எனது படைப்பு அறத்தை பதம் பார்ப்பதற்கு முன் மாலதி மைத்ரி தனது கண்ணாடி கூண்டை சுற்றிப் பார்த்துக் கொள்வது நல்லது. மாலதி மைத்ரி பணி புரிந்த என்.ஜி ஓக்களின் விவரப்பட்டியல் தெரிந்தது தான். என்.ஜி. ஓக்கள் தரும் பணத்திலும் காந்தி தான் சிரிக்கிறார், டாட்டாவின் என்.ஜி.ஓ தரும் பணத்திலும் காந்திதான் சிரிக்கிறார். அவர் காந்தி மட்டும் எப்படி புனிதமாகிறார் என்று விளக்கினால் நல்லது.

“காலச்சுவடு எனது கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகிறது. நான் காலச்சுவடு மூலமாகவே அறிய வருகிறேன். இத்தொகுப்பை இந்த இலக்கிய நிறுவனமே வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என்பதாக சங்கராபரணியின் முன்னுரையில் மாலதி மைத்ரி குறிப்பிடுகிறார். மாலதி பேசும் பெண்ணுரிமை, தலித் அரசியல், ஈழத்தமிழர் பிரச்சினை, முஸ்லிம் பிரச்சினை எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கும் தினமலர், ஸ்ரீராம் சிட்ஸ் ஸ்பான்ஸர் கண்ணனின் மூலம் அறிய வருபவர் மாலதி மைத்ரி என்றாலும் நான் அவரை நிராகரிக்கப் போவதில்லை. ஏனெனில் எனக்குத் தீண்டாமையில் உடன்பாடில்லை.

கோடம்பாக்கத்தில் நான் வேலைசெய்யாமல் விட்டு பல வருடங்களாகின்றன. ஆனால் நமது சக தோழிகள் குட்டி ரேவதி, பிரேமா ரேவதி, பிரியா தம்பி, சந்திரா போன்றவர்கள் இப்போதும் கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார்கள். அதற்காக அதை வைத்தா அவர்களை மதிப்பிடுவது. நான் கோடம்பாக்கத்து கடவுள்களை நிந்திப்பதால்தான் இதுவரை பன்னிரெண்டு சிறியதும் பெரியதுமாக மாற்றுத் திரைப்படங்களை செய்திருக்கிறேன். டாட்டா மட்டுமல்ல சன் டிவி, ஜீ டிவி என்று எல்லா முதலாளிகளிடமும் வேலை பார்த்திருக்கிறேன். அது யாரிடமும் பிச்சை கேட்காமல், திருடாமல் பொருளாதார ரீதியாக என் சொந்தக்காலில் நிற்பதற்கான என் பாடுகள். அதைக் கேள்வி கேட்க மூலதனம் எழுதிய கார்ல் மார்க்சுக்கே உரிமையில்லை, ஏனெனில் நான் பெறுவது கூலி, உபரியல்ல.

 

இதற்கான எனது பதிவு

மாலதி மைத்ரி

 

“உங்களையெல்லாம் நாங்கள் பேசவே விட்டதில்லை, நீயெல்லாம் பேச வந்துட்டியா” என்று கோபப்படும் ஆண்டையம்மா என்னைப்பற்றி பேச உனக்கென்ன தகுதி தராதரமிருக்கு என்கிறார். தீண்டாமைக்குட்பட்டவர்களை  தீமூட்டி எரித்த ஆண்டைகள் இப்போது தீண்டாமையைப் பற்றி பேசுகிறார்கள். தீண்டாமை கொடுமைகள் காலங்காலமாக நாங்கள் அனுபவித்து வருபவை. இன்னும் என் ஊரில் செம்படத்தி பவுணு பேத்திதான் நான். முதலில் தீண்டாமை வெறியை உங்கள் சாதி சனத்திடமிருந்து ஒழித்து விட்டு வாங்க, பிறகு தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார் என்பது பற்றிப் பேசலாம்.

பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகளை அவர்களின் வாழிடத்திலிருந்து துரத்தி வீதிகளில் பிச்சையெடுக்க வைத்த டாட்டாவை, பலநூறு ஆதிவாசி மக்களைக் கொன்று காடுகளை, மலைகளை அழித்த டாட்டாவை ஆதிவாசிகளுக்கு வாழ்வளிக்கும் தெய்வமாக ஒரு ஆதிவாசிப் பெண்ணின் வாயாலே புகழவைக்கும் துணிச்சல் பணவெறி பிடித்த ஆதிக்கச்சாதி திமிருக்கு மட்டுமே கைவந்தக் கலை.

தயாமணி பர்லா இந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் தன்னைப் பற்றிய படம் எடுக்க அனுமதித்திருக்க மாட்டார். துணிவிருந்தால் நீங்கள் எடுத்த டாட்டா விளம்பரத்தை தயாமணி பர்லாவுக்கு போட்டுக் காட்டுங்கள் லீனா மணிமேகலை. டாட்டாவிடம் ஆதிவாசிப் பெண் செய்வது கூலிவேலை. டாட்டாவின் கைகூலியாகி நீங்கள் செய்தது அடியாள் வேலை. உழைப்புக் கூலிக்கும் கைகூலிக்குமான அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள யாருக்கும் சிரமமிருக்காது. மார்க்ஸை பாலியல் குற்றவாளியாக்கி உங்கள் கவிதை வரிகளில் தூக்கிலிட்டப்பின் அவருக்கு உங்களிடம் கேட்க என்ன மிச்சமிருக்கிறது. கார்ல் மார்க்ஸோடு தினமும் களத்தில் இறங்கி போராடிய தோழமையின் அடிப்படையிலா நீங்கள் அவரை விமர்சித்தது. திரைப்பட முதலாளிகளின் முகவராக இருந்தபடி இதனைச் செய்ததின் மூலம் அவர்கள் மத்தியில் நீங்கள் பெரும் கலகக்காரராக அறியப்படலாம், அரிய விருதுகளும் உங்களுக்கு வழங்கப்படலாம். கோடம்பாக்கத்தில் தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க மறத்து பிரச்சினைக்கு உள்ளான நீங்களும் எப்படி ஒன்றாக முடியும் என்று இன்னொரு ஆவணப்படம் எடுத்து எங்களுக்கு விளக்குங்கள்.

நான் களப்பணி செய்ததும் அரசியல் செயல்பாட்டில் இணைந்ததும் பன்னாட்டு நிதிஉதவி நிறுவனங்களில் தொடங்கியதல்ல. அது எனது வாழ்க்கை முறை. எனது செயல்பாடுகளின் ஒரு நிலையில் எனது மக்களுக்கான பணிக்கென நிதி பெறும் நிறுவனங்கள் எனக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டனர். மற்ற சிலரைப்போல எனது எழுத்தையும் பெயரையும் அடகு வைப்பதாக இருந்தால் நானே தனியாக நிதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதனைத் தவிர்த்து என் மக்களின் பெயரால் பெறப்பட்ட பணம் அவர்களுக்குச் முறையாகச் சென்று சேர வேண்டும் என்பதால் நான் அதில் ஒரு பணியாளராக இருந்திருக்கிறேன். இதைப் போல பல்லாயிரக் கணக்கான பெண்கள் தமிழகம் முழுக்க பணிசெய்து தம் வாழ்வை நடத்துகின்றனர். இவர்களை உங்களைப் போன்ற முகவர்கள் என்றோ துணைமுதலாளிகள் என்றோ நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் பெறும் பணத்தில் உள்ள காந்தி வேறு, டாடா தரும் பணத்தில் உள்ள காந்தி வேறு என்பது உழைப்பவர்களுக்குத் தெரியும்.

 2005-இல் எனது நேரடிக் களப்பணியின் தொடர்ச்சியாக நண்பர்களுடன் “விளிம்புநிலை மக்கள் குரல்” அமைப்பைத் தொடங்கி கடற்கரை கிராமங்களில் சுனாமி நிவாரண கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டளிக்கவும் அவர்களுக்கான நிவாரணம் முறையாக சென்று சேரவும் என்.ஜி.ஓ நிறுவனங்களுடன் ஐந்து ஆண்டுகள் நேரம் காலம் பாராமல், என் உடல்நிலையும் கருதாமல் உழைத்தேன். சுனாமியில் காணாமல் போனவர்களை இறந்தவர்களாகக் கணக்கிட்டு இழப்பீடு பெற்றுத் தரும் வேலையில் ஈடுபட்டோம். மீனவர்களைக் கடற்கரையிலிருந்து வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்தினோம். புதுச்சேரி கடற்கரையில் பன்னாட்டு துறைமுகம் வராமல் தடுத்தோம். அரசின் நிவாரணப் பட்டியலில் விடுபட்ட பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுத் தந்தோம். மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான மீனவர் நலவாரியம் எங்கள் தொடர் முயற்சியின் விளைவாக தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதன் பலன் குறைவேயானாலும் மீனவர்களுக்கு சில நலஉதவிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. மீனவர் மற்றும் தலித் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை ஓரளவு குறைக்க முடிந்தது. இதற்காக நான் பெற்றது அன்றன்றைக்கான செலவுக்கான கூலி. என்.ஜி. ஓ-விடம் நான் பார்த்தது கூலிவேலை. கார்ப்ரேட்களின்  அடியாளாகவோ, குட்டி முதலாளியாகவோ மாறிவிடக்கூடாது என்ற கொள்கையில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். அதனால் தான் நான் எடுத்துக் கொண்ட பணி முடிந்ததும் அதனை விட்டு வெளியேறினேன். சுனாமி நிவாரணப்பணியின் போது பல பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் பல லட்சங்கள் கொடுக்க முன்வந்தும் நான் தொண்டு நிறுவனம் என எதனையும் தொடங்க உறுதியாக மறுத்துவிட்டேன். குழந்தை உரிமைகளும் நீங்களும் அமைப்பும் உதவி செய்வதாகக் கூறி தொண்டு நிறுவனம் தொடங்க கேட்டுக் கொண்டபோதும், அணங்கு இதழை நடத்துவதற்கான நிதியை மற்றொரு தொண்டு நிறுவனம் அளிக்க முன்வந்தபோதும் நான் சுதந்திரமான அரசியல் வேலை செய்பவள்,   என் கொள்கைகளுக்கு மாறானவற்றை வழி மொழியாத எழுத்துக்காரி என்று சொல்லி  மறுத்திருக்கிறேன். நான் சிரமப்பட்ட நேரத்தில் இரு இதழ்களுக்கு நண்பர்கள் சிறுதொகை அளித்து உதவினார்கள். இவை அனைத்துக்கும் என் வங்கிக் கணக்கு இன்றும் ஆதாராமாக உள்ளது.

சிற்பி பாலசுப்பிரமணியன் அறக்கட்டளை வழங்கும் சிறந்த கவிஞருக்கான விருதை (2011) எனக்கு வழங்குவதாக அறிவித்த கவிஞர் இரா. மீனாட்சி, சிற்பி பிறந்தநாள் விழாவில் வந்து பெற்றுக்கொள்ளும்படியும் முறையான அழைப்பு வரும் என்றும் தெரிவித்தார். மூன்று லட்சம் தமிழர்களை ஈழத்தில் பலிகொடுத்த துயரம் கரையும்முன் ஒரு படைப்பாளி தனக்குத்தானே பிறந்தநாள் விழா எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழினப் பேரழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தமிழன் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா? என்று வினவி அவ்விருதை நிராகரித்தேன். பிறகு அவ்விருது லீனா மணிமேகலைக்கு அளிக்கப்பட்டதாக அறிந்தேன். பத்தாயிரம் விருது தொகை என்பது எனக்குப் பெரிய தொகைதான் என் ஒருமாத கூலி. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட செலவுக்கு அந்த தொகை உதவியாக இருந்திருக்கும். 1989-இலிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வருகிறேன். பெரும்பாலும் என் வருமானத்திலும் கடன் வாங்கியும்தான் போராட்டச் செலவுகளைச் செய்து வருகிறேன். மிக நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் என் புகைப்படங்களை போட்டு எப்போதும் என்னை நான் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. போராட்டச் செய்திகளையும் புகைப்படங்களையும் சேகரித்துவைக்கும் வழக்கம்கூடக் கிடையாது. வேறு யாராவது அவற்றை அனுப்பும்போது நான் புதிதாக பார்க்க நேர்ந்திருக்கிறது. மனித உரிமைகளுக்காகப் போராடும் ஆயிரமாயிரம் பெண்களுடன் சேர்ந்து ஒலிக்கும் ஒரு குரல் என்னுடையது அவ்வளவே.

இந்தியாவின் மாபெரும் பெண்ணியப் போராளியான உங்களை டாட்டா கண்டுபிடித்து அழைத்து “டாட்டா எங்களை எங்கள் சொந்தக் காலில் நிக்க வைத்தது” என்று ஆதிவாசி பெண்களைச் சொல்ல வைத்தது போல, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியாக வேஷங்கட்டும் உங்களை இந்திய அணுசக்தி துறை கண்டுபிடித்து “மத்திய மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் பெற்று நாங்கள் ஆட்டோ ஓட்டுறோம் புல்டோசர் ஓட்டுறோம், அணுவுலை நல்லது, அணுவுலையால்தான் நாங்க மூணுவேளை சாப்பிடறோம், அணுவுலையால்தான் என் குழந்தைகள் பள்ளிக்கூடம் போறாங்க, அணுவுலை எங்கள் வாழ்வின் விடிவெள்ளின்னு” நாளை மீனவப்பெண்களை பேச வைப்பீங்க. இந்திய அணுசக்தித் துறைக்கு ஏன் கைகூலி வேலைப்பாத்தீங்கன்னு கேள்வி கேட்டால், எல்லா நோட்டுலயும் காந்திதான் சிரிக்கிறார், நான் திருடல, பொய் சொல்லல்ல, எனது பணம் உபரியில்ல, கூலிதான்னு நக்கலாக உங்களிடம் இருந்து பதில் வரும். அதனைக் கேட்டுக் கொண்டு சும்மா இல்லாமல் மறுப்பு சொன்னால் “அல்லி அரசாணைகளில் எனக்குச் சுவாரஸ்யம் இருப்பதில்லை” எனப் பெண்ணியம் பெருகிய பதில் வரும்.

டெல்லியில் பிப்ரவரி 2009-இல்  ஈழத்தில் தமிழினப் படுகொலைகளை நிறுத்தக்கோரி படைப்பாளிகள் இணைந்து நடத்திய போராட்டத்தை உங்கள் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு லாபமடைந்தீர்கள். டெல்லியில் வந்திருந்த அனைவரும் போராட்ட முனைப்பிலும் திட்டமிடலிலும் இருக்க நீங்கள் பெரும்பாலான நேரங்களில் நெட்டும் கையுமா இருந்தீர்கள். தோழர் பொன். சந்திரனை இரவோடிரவாக ஆங்கிலத்தில் அறிக்கை தயாரிக்கச் சொல்லி வறுத்தெடுத்தீர்கள்.  இந்த அறிக்கையெல்லாம் யாருக்கு எங்கே அனுப்பி வைக்கப்பட்டது என்று வந்திருந்த யாருக்கும் தெரியாது. ஜெரால்டும் நரனும் போராட்டத்தைப் புகைப்படம் எடுத்துத் தந்தார்கள். ஊடகங்களுக்குத் தர இந்தப் புகைப்படங்கள் போதுமானது. உங்கள் வியாபாரத்துக்கு வீடியோ படங்கள் தேவைப்பட்டது. வலைப்பக்கத்துக்கு போராட்ட வீடியோ காட்சிகள் தேவை என்று நச்சரிக்க, டெல்லி தொலைக்காட்சி நிருபர்கள் உதவியால் ஒரு வீடியோ எடுப்பவரை நியமித்து வீடியோ காட்சிகளை வாங்கி அனுப்பினேன். செங்கடல் பார்த்த பிறகுதான் தெரிந்தது, படைப்பாளிகளை உங்கள் வியாபாரத்திற்கு தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஷோபாசக்தி ஒருமுறை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் நீங்கள் வாங்கிய பணத்தைத் திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாகச் சொன்னார், புதுவை இளவேனிலும் இதே செய்தியைச் சொன்னார். இது தொடர்பாக இணையத்திலும் செய்திகள் வந்தன. இதுபற்றி நான் உங்களிடம் கேட்கவில்லை. உங்கள் வியாபாரத்திற்காக நீங்கள் வாங்கிய கடன் பிரச்சினையாக இருக்குமென்று விட்டுவிட்டேன். ஈழத்தமிழர் தோழமை குரல் நடத்திய போராட்டத்திற்கான செலவுக்கு மேல் அதிக நிதி திரட்டியதாக உங்கள் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. என்னிடம் இது பற்றி நீங்கள் வருத்தமுடன் தொலைபேசியில் சொன்னபொழுது நான் உங்களிடம் ஈழத்தமிழர் தோழமைக்குரல் வலைப்பக்கத்தில் போராட்டத்தின் வரவு செலவு கணக்கை சுகிர்தராணியிடமிருந்து வாங்கி வெளியிடுங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். நீங்கள் இதுவரை வெளியிடவில்லை, நான் இப்போது வெளியிடுகிறேன். சுகிர்தராணியிடமிருக்கும் கணக்கின் ஆதாரங்களை தேவைப்படுபவர்கள் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

ACCOUNT

காலச்சுவடு கண்ணனுக்கும் உங்களுக்கும் இடையேயான போட்டி இரு பதிப்பக முதலாளிகளுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சனை. நாளை நீங்களும் கண்ணனும் இணைந்து செயல்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆதிக்கச்சாதி பின்னணி, கட்சி, அதிகார மட்ட பலத்துடன் பதிப்பகம், திரைப்பட நிறுவனம் நடத்திய முதலாளியம்மா நீங்கள்.  ஆண்ட ஆதிக்கச்சாதி பரம்பரையான உங்களுக்கு உலகில் ஆயிரம் தளங்கள் திறந்து கிடக்கிறது. ஆயிரமாயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சார்ந்த என் போன்றவர்கள் பதிப்பகங்களை பத்திரிக்கைகளைப் பயன்படுத்திதான் ஆக வேண்டும். என் பெரும்பாலான கவிதைகளை வெளியிட்டது காலச்சுவடுதான் என்று நன்றி சொல்வதில் எந்த கொள்கை முரண்பாடுமில்லை. உங்களைப் போன்று அரசியல் கட்சிக்காரர்களுக்கும் குழு கோஷ்டி பங்காளிகளுக்கும் நன்றி சொல்லி கவிதைத் தொகுப்பு வெளியிடவில்லை. நன்றி பட்டியலில் உளவுத்துறை, காவல்துறை கண்காணிப்பாளர் பெயர்மட்டும் தான் குறைகிறது. கவிதை தொகுப்பில் கூட உங்களுக்கு இருக்கும் அரசியல் அதிகார பலத்தை பறைச்சாற்றிக் கொள்வதில் எவ்வளவு பெருமிதம். உங்களைப் போன்றவர்களால் அழிக்கப்பட்ட எங்கள் வரலாற்றை எழுத இப்போதுதான் துணிந்திருக்கிறோம். அதில் வாய்ப்புக் கொடுக்கும் ஊடகங்களில் சில பக்கங்களைப் பயன்படுத்தி நாங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். மனிதவுரிமை போராளி வேடம்கட்டி வரும் வியாபாரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. காலச்சுவடு ஒரு பதிப்பகம் என்ற அளவில் எனது எழுத்துக்களை வெளியிட்டது. காலச்சுவடுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து நான் எழுதவில்லை. காலச்சுவடு கண்ணன் தன்னை போராளி என்று சொல்லிக்கொள்வதில்லை, தன்னை ஒரு பதிப்பாளர், நல்ல வியாபாரி என்றுதான் சொல்லிக்கொள்கிறார். வெளிப்படையான வியாபாரிகளைவிட போராளி வேடம் போடும் வியாபாரிகள் ஆபத்தானவர்கள் என்ற தெளிவோடுதான் எங்களைப் போன்றவர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் நடக்கும் மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேச உலகில் ஒரு சந்தை உருவாகியுள்ளது. இத்தளத்தில் உண்மையிலேயே ஆனந்த் பட்வர்தன் போன்ற சில ஆவணப்பட இயக்குநர்கள் நேர்மையாக செயல்படுகிறார்கள். இத்தளத்தை வியாபாரச் சந்தையாக பார்த்து படமெடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் படமெடுத்து சம்பாதிக்கும் வியாபார முதலாளி நீங்கள். படமெடுப்பது என் தொழில் நான் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்பீர்கள். நீங்கள் படமெடுத்து சம்பாதித்ததில் படத்தில் வாழ்ந்த மக்களுக்கு இதுவரை ஏதாவது மதிப்பு ஊதியம் கொடுத்ததுண்டா? நீங்கள் இழவு வீட்டிலும் காசு பார்க்கும் கைதேர்ந்த முதலாளி. அதனால் தான் எங்கள் துயரத்தைக் கொச்சைப்படுத்தி படம் எடுத்து காசு பார்க்கிறீர்கள். நானும் சிலகாலம் நீங்கள் மனிதவுரிமைகளில் அக்கறை உள்ளவர் என்று நம்பினேன். உங்கள் சுயரூபம் தெரிந்தபிறகு உங்களுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டேன்.

புதுச்சேரி கிருஷ்ணவேணி அம்மாவை வைத்து படமெடுத்து எவ்வளவு சம்பாதித்தீர்கள்? எத்தனை விருது வெகுமதி வாங்கினீர்கள்? கிருஷ்ணவேணிக்கு ஏதாவது சிறு உதவித் தொகை கொடுத்ததுண்டா? ஒரு சி.டி கூட தரவில்லை என்று என்னிடமும் பேட்டி எடுக்க வந்த சத்தியம் தொலைக்காட்சி நிருபர் அமுதாவிடமும் அந்த அம்மா குறைப்பட்டுக்கொண்டார். தென்னிந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் மகேஷ் உதவியில் ராமேஸ்வரம் போய் தங்கி, படமெடுத்து மீனவர்களின் ரத்தத்தைக் காட்டி உலகம் முழுவதும் காசு பார்த்தீர்கள். ராமேஸ்வர மீனவர்களுக்கு செங்கடலை இன்றுவரை ஏன் போட்டுக் காட்டவில்லை? குறைந்தபட்சம் மகேஷையாவது சென்னை திரையிடலுக்கு அழைத்தீர்களா? டி.எஸ்.எஸ். மணி மூலம் செய்தியறிந்து திரையிடலுக்கு வந்திருந்தார். “கலெக்டர் ஆபிசுக்கு பாடியை கொண்டு போறமாதிரி திரும்பி வரும்போது செக்கோடு வரணும்” என்று மீனவனை பலிக்கொடுத்த மனைவி சொல்வதாகக் காட்சிவைத்து மீனவப் பெண்களை அவமானப்படுத்தியது லீனா மணிமேகலையின் ஆதிக்கச்சாதித் திமிர். இழப்பீட்டுத் தொகை கோட்டையிலிருந்து வர எவ்வளவு காலமாகுமென தனுஷ்கோடி மணலில் விளையாடும் கைக்குழந்தைக்கு கூடத் தெரியும். சிங்களவன் இனவெறி மீனவனை நேரடியாக கொல்கிறது. லீனாவின் ஆதிக்கச்சாதி நான் லீனியர் கேமிரா மீனவரின் வாழ்வியல் அறத்தை அவமானப்படுத்தி செங்கடலில் மீண்டும் ஒருமுறை கொல்கிறது.

இப்படியான இன்னும் பல காரணங்கள் உள்ளபோது உங்களுடன் இணைந்து நான் பணியாற்ற மறுப்பதற்கு நீங்கள் வைத்துள்ள பெயர் “அடாவடி அல்லது குழாயடி அரசியல்”. வாழ்நாள் முழுக்க அரசியல் செயல்பாடும் எழுத்துமாக இருக்க எந்தவித வலியையும் வறுமையையும் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்துக்கொண்ட என்னைப் பற்றி உங்களுக்கு என் சாதியும் எங்கள் தெருவும் மட்டும்தான் நினைவிருக்கிறது. குழாயடியும், அடாவடியும் இல்லாமல் வெளிநாட்டுக்காரர்களுக்கு படம் காட்டிக் கொண்டிருப்பது மட்டும்தான் உங்களுடைய புரட்சிகர செயல்பாடு என்பது புரிந்திருப்பதால்தான் நான் மட்டுமல்ல உங்களால் அவமானத்துக்குள்ளான படைப்பாளிகளும் கூட திருவாய்மலர்ந்து உண்மைகளை அருளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.