இரு வடிவான இருப்பு பல வகையான எழுத்து

பிரேம், பிரேதா என இரு எழுத்துருவம் கொண்ட தமிழின் பின்நவீனத்துவ படைப்பாளியுடன்
ஒரு கலைந்துரையாடல்
(கலைந்த உரையாடல்)

பதிவும் எழுத்தும்
இலக்கிய ஆய்வாளர் க. ஜவகர்
கவிஞர். அருள் வளவன்,

கேள்வி: எப்போது எந்தச் சமூக, அரசியல் பின்னணியில் எழுத வந்தீர்கள்?

பதில்: சாதி வெறியும், சமயப் பித்தும் கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்ப்புப் பேரனாக நான் இருந்தேன். பத்து வயது வரை எனது அம்மை, அப்பனுடன் நான் வாழவில்லை. அப்பா மனநிலை பாதிக்கப்பட்டு தினம் தினம் ஒரு அவமானத்தை வரவாகப் பெற்றவர். கண் பார்வையில் குறைபாடு கொண்டிருந்த தையல்காரர், பின்னாளில் முழுமையாகப் பார்வையிழந்து 20 ஆண்டுகள் புற இருளில் வாழ்ந்தவர். மனத்தடுமாற்றம், பார்வையின்மை இரண்டுடனும் அவர் இந்தியாவின் சில நகரங்களில் தையல் வேலை செய்வார். அம்மாவோ வீட்டு வேலை, இட்டலிக் கடை என வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டார். அகமதாபாத், பெங்களூரு என அப்பா ஒரு அலைகுடியாக என் அம்மாவையும் அலைக்கழித்தார். நான்கு பிள்ளைகள் பிறந்த பின் அவர் அலைவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் காடாறு மாதம் வீடாறு மாதம் என வாழ்ந்து எங்கள் நெற்றியில் அவமதிப்பின் கோடுகளைக் கீறிவிட்டார். என் தாய் வழித் தாத்தா ஒரு மந்திரவாதி, மருத்துவர், லிங்காயத வீரசைவர். அவருடைய முதல் பேரன் என்கிற வகையில் என் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டிப் என்னைப் பாழடித்தார். அவர் பற்றி தெரிந்து கொள்ள எனது “மகாமுனி” கதையை நீங்கள் படிக்க வேண்டும். மரமேறி, மதுக்கடை நடத்தி, மக்கள் தலைவர் சுப்பையா, எதுவார் குபேர் போன்ற புதுவைத் தலைவர்களுடன் பழக்கம் கொண்டவராக இருந்தார். பின்பு கள்ளுக்கடையை விட்டு மருந்துக் கடையும், மளிகைக் கடையும் வைத்து லிங்காய கிராமணியார் என சுத்துப் மக்களிடம் பெருமை பெற்றவர். நாடி பிடித்து உனக்கு இது இப்படி இருக்கிறது என்பதைச் சொல்லி மருந்து கொடுத்து விடுவார் அல்லது செய்முறையைச் சொல்லி அனுப்பி வைப்பார். தினம் 10, 20 பேர் வீட்டு வாசலில் நிற்பதை நான் பார்த்திரு்கிறேன். காலையில் அவருடன் பூசை செய்ய குட்டி பூசாரியாக நான் 2 வயதிலிருந்து 13 வயது வரை இருந்தேன்.
இரண்டரை வயதில் எழுதப் படிக்க கற்றுக் கொடுத்த என் தாய் மாமன் பிரஞ்சுக் கல்வி பெற்றவர், ஆசிரியர் வேலைக்குச் செல்ல ஏக்கம் கொண்டிருந்த அவருக்கு தீங்காக வந்து அமைந்தவர் அவருடைய அண்ணன். ஒரு பிரஞ்சு மத்மசோலை காதலித்து தாய்மை அடையச் செய்ததால் பெரும் கலவரம் ஏற்பட்டு தன் பிரஞ்சுக்கார காதலியுடன் இறப்பில் ஒன்று சேர்ந்தார். அது முதல் தாய் மாமனுக்கு ஆசிரியர் வேலை பறிபோனது. ஆனால் இரவுப் பாடசாலை நடத்தி தன் ஆசிரியத் தாகத்தைத் தணித்துக் கொண்டார். அவர் எனக்கு தமிழும் பிரஞ்சும் படிக்கக் கற்றுக் கொடுத்த போது இரண்டரை மூன்று வயது. அவரை பாடசாலையில் மாமா என்று நான் கூப்பிடக்கூடாது, முசே என்றுதான் கூப்பிட வேண்டும். மதாம், முசே, எக்கோல், கிரயோங், ஒப்பித்தால் எனப் பேசிய கடைசி தலைமுறை எனது. தமிழைப் படிக்கக் கற்றுக் கொண்ட நான் பிரஞ்சைக் கற்றுக் கொள்ளவில்லை. பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற உறவினர்களைக் கொண்ட குடும்பம் என்பதால் பிரான்ஸ் செல்வது ஒரு மரபுரிமையாக இருந்தது. ஆனால் எனக்கு பிரான்ஸ் செல்வது பிடிக்க வில்லை. நான் வெறிகொண்ட முருக பக்தனாக, காளி உபாசகனாக இருந்தேன். பார்த்துப் பார்த்து பத்திகளை எழுதிவிட்டு பிரஞ்சை கற்காமல் இருந்தேன்.

இரண்டு தெருக்களைக் கொண்ட எங்கள் ஊரில் தினத்தந்தி படிக்க நான் தேவைப் பட்டேன். பாக்கிஸ்தானுடன் இந்தியா போர் செய்த காலத்தில் நான் செய்தி வாசிப்பாளனாக மாறியிருந்தேன். அச்சில் இருப்பவற்றுடன் இல்லாதவற்றையும் சேர்த்துப் படிக்கும் பழக்கம் வந்த போது நான் கதை விடும் காளிதாசனாக புனைவு கட்டும் புஷ்பராஜனாக மாறியிருந்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது புதுவையைத் தமிழ்நாட்டுடன் இணைக்க ஏற்பாடு நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அதனை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியது. எனது தாத்தாவும், மாமாவும் ஆண்டி கம்யூனிஸ்டுகள், சாதி வெறியர்கள். அதனால் நான் மெல்ல கம்யூனிஸ்டாக, சாதி அமைப்பை வெறுப்பவனாக மாறினேன்.
கிராமணி, படையாட்சி எனக் கலந்து கிடந்த உறவினர்கள் பஞ்சம சாதிகள் மீது வெறுப்பைக் கொண்டிருந்தனர். ஆனால் தாத்தா வழி எனக்கு அருந்ததிய பாட்டி ஒருவர் இருந்தார். தோப்பு ஒன்றில் அவர் தனித்து வாழ்ந்து வந்தார். அவர் என்னை கம்யூனிஸ்டாக ஆக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பெரியாரில் தொடங்கி மார்க்சிய லெனினியத்தில் வந்து முட்டி நின்ற போது கவிதை போல ஒன்று பெருக்கெடுத்து ஓடியது. பிரேமி என பிரியமாக அழைத்த ஒரு தோழிக்காக நான் “ஏசுவே ஏழை எங்களைக் காக்கவா, பாசமே கொண்டு பாவிகள் எங்களை மீட்கவா” எனப் பாடல்கள் எழுதத் தொடங்கி பின் புரட்சிகர நாடகத்திற்காக “வேர்வை சிந்தி உழைத்தாலும் வேளா வேளைக்குச் சோரில்லை, பார்வை தொடும் தூரம் மட்டும் இருளைத் தவிர வேறில்லை” என்ற பாடல்களை எழுதி பாரதி, பாரதிதாசனைக் கடந்து காமராசன் கவிதைகள் வழி வேறு ஒரு இடம் அடைந்தேன். என் மேல் பாசம் கொண்ட இருவர் பிரஞ்சுக் கவிதைகளை அறிமுகம் செய்து அது போல எழுதிப் பார் என்ற போது “வெள்ளையம்மா வந்ததடி உன் களைக்கு ஆபத்து” எனக் கிரணம் வரை வந்து சேர்ந்தேன். மற்றவை தமிழிலக்கிய வரலாறு, அது பற்றி நான் கூறத் தேவையில்லை. கி.மு (கிரணத்திற்கு முன்) கி.பி (கிரணத்திற்குப் பின்) என அந்த வரலாற்றை எழுத இயலும், ஆனால் அது ஒரு நாவலாக வரக்ககூடும்.

கேள்வி: ரமேஷ் உடன் எப்போது சேர்ந்து எழுதினீர்கள்? அதன் பின்புலத்தைக் கூறுங்கள்?


பதில்: ரமேஷ் என்ற பெயரை இப்போது சொல்லும் போது இரக்கம், துயரம், அவமானம் என சில உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. நாங்கள் தொடக்கத்தில் சேர்ந்து எழுதவில்லை. அவர் தனியாக, நான் தனியாக எழுதிக் கொண்டிருந்தோம். 1978-80 கால கட்டத்தில் புதுவையின் வ.உ.சி பள்ளியில் படித்த போது கடைசி பெஞ்ச் மாணவராக அவர் அறிமுகம். பின் 1981-82 இல் புதுவைக் கல்வே காலேஜ் படிப்பின் போது இரண்டாம் பிரிவு வகுப்பில் அவர் இருந்தார். அது வெறும் தலையசைப்பு பழக்கம் மட்டுமே. பிறகு படிப்பை விட்டு ஒரு ஆண்டு பதுங்கிக் கிடந்த காலம் எனக்கு வந்தது. (முழு விவரம் நாவலில் காண்க). அப்போது புதுவை ரொமெய்ன் ரோலான்ந் நூலகத்தில் இருவரும் கவிஞர்களாகச் சந்தித்துக் கொண்டோம். நான் காமராசன் கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்த போது ரமேஷ் ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே என்ற மெட்டுக்கு தன் போக்கில் புதிய பாடல் எழுதிக் கொண்டிருந்தார், அது 1982-83 காலப்பகுதி.
சாரு நிவேதிதா (அறிவழகன்), அமரந்தா அறிமுகம் கிடைத்து கிரணம் இதழ் எனது (பிரேதா) காப்பியங்களுக்காகவே நடத்தப் பட்ட போது ரமேஷ் முகம் சுண்டிப் போய் இருந்ததைப் பார்த்து “அதீத சுய இன்பக்காரனின் நிழலுருவங்கள்” என்ற நெடுங்கவிதை ஒன்றை சல்வோதர் தலியின் பாதிப்புடன் மாறி மாறி எழுதி கிரணத்தில் சேர்த்தோம். அதுதான் கதை , மற்றவை…

கேள்வி: ரமேஷிடமிருந்து விலகி எப்போது தனியாக எழுதத் தொடங்கினீர்கள்? அது குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: 2005-7 கால கட்டம் அது. மாலதி கவிஞர் மாலதி மைத்ரியாக தன் எழுத்தின் வழியாக அறியப்பட்ட பின், பரவலான கவனிப்பைப் பெற்ற பின் ரமேஷ் தனது வன்முறையை, சாதி வெறியை வெளிக் காட்டத் தொடங்கினார். 2002-க்குப் பிறகு நான் புலம் பெயர்ந்து போசனம் தேடும் கவிஞனாக அலைக்கழிக்கப் பட்டபோது அது நடந்தது. என் மகளுக்காக நான் ஊதியம் பெறும் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. முதல் கட்டத்தில் மாலதி மைத்ரி எங்களை பட்டினியிலிருந்து காப்பாற்றினார். 1996-க்குப் பிறகு நான்தான் பொருளாதார மையமாக செயல்பட வேண்டியிருந்தது. எங்களது கூட்டு வாழ்வு பற்றி எங்களை விட அதிகமாக தமிழிலக்கிய வட்டம் அறிந்து வைத்திருந்தது. தின வாழ்வின் வன்முறை எங்கள் குடி தேவியாம் மகளைப் பாதித்த போது தாள முடியாத வாதையாக மாறியது. பிறகு….என்ன…. அதுவும் இலக்கியமறிந்தவர்கள் அனைவரும் அறிந்ததே. எனது அம்பேத்கரிய அரசியலை அவர் இழிவாகப் பேசியது மீண்டும் சந்திக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. படிப்பதைக் கற்பதை அறவே வெறுத்த ரமேஷ் என்னிடம் பேசுவதை வைத்தே தன்னை ஒரு உலக மகா இலக்கியவாதியாக உருப் பெருக்கிக் கொண்டார். இன்று வரை கூட அவர் அப்படித்தான் இருக்கிறார். தான் ஒரு மகா கவி என்றும் அதனால் எந்தப் பணியும் இன்றி உண்டாட்டு ஊண்துவை அடிசில் என வாழ்வது தனது உரிமை என்றும் புலம்பித் திரிவது ஒரு நோயாக மாறியிருந்தது. மாலதி மைத்ரி, எங்கள் மகள் இருவரும் அவரது ஆண்திமிர் வன்முறைக்கு ஆளான போது நான் நோய் வாய்ப்பட்டு நொந்து தில்லியில் தனிமையில் அழுது கொண்டிருந்தேன். 2007 நல்ல ஒரு ஆண்டாக அமைந்தது, வன்முறையில் இருந்து விடுதலை கிடைத்தது.

கேள்வி: கிரணம் இதழ் தமிழ்ச் சிற்றிதழில் வெளியில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கிரணத்திற்கு முன்பு, பின்பு தமிழ் எழுத்தின் போக்கு என்பது மாறியது முதன்மையானது. அந்தவகையில் கிரணம் குறித்துச் சொல்லுங்கள்?


பதில்: பிரேதா என்ற பெயரே பலரை அதிர்ச்சியடைய வைத்து வெறுப்பை உருவாக்கியது. அதில் வெளிவந்த பின்நவீன காப்பியங்கள் தமிழில் அது வரை இல்லாத பித்தின் பெருக்கு, சிதைவின் அரசியல், நுண் வன்முறைகள், உடலரசியல் பற்றிய சிக்கல்களை மொழியாக்கின. பிரேதாவின் பிரதிகள் என்ற தொகுப்பில் அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். ஆம், பிரேதாவின் பிரதிகள் தமிழிலக்கியத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது.

கேள்வி: மாற்று அரசியல், மாற்று வாழ்க்கை நிலைப்பாட்டில் நீங்கள் முன்னெடுத்தது தமிழ்ச்சூழலில் முக்கியமான புரட்சியென்றே சொல்லலாம். கம்யூனைப் போன்றதே அது? இதனால் தமிழ்ச் சூழலில் பெரிய எதிர்ப்பு வந்தது? அதைப்பற்றிச் சொல்லுங்கள்?

பதில்: மாற்று என்றாலே பொது மரபில் துயரம்தான், மார்க்ஸ்-எஞ்செல்ஸ்- ஜென்னி எனத் தொடங்கி பல மாற்று வாழ்வு முறைகள் துயரமாக முடிந்துள்ளன. எனக்கும் துயரம் நிகழ்ந்தது. ஆனால் மாற்று வாழ்தல் முறை தோல்வி அடையவில்லை. நாங்கள் சரியில்லை… அவ்வளவுதான்…அது மட்டுமல்ல மரபான வாழ்தலும் கூட வன்முறையும் கொடுமைகளும் கொண்டது தானே…

கேள்வி: இந்த மாற்று வாழ்தல் புதிய சிந்தனையுடைய அடுத்த தலைமுறையினர் பலருக்கும் ஆதர்சமாக இருந்தது. ஆனால் இதை ஏன் தொடரமுடியாமல் போனது உங்களால்? இதைப்போன்ற கம்யூன் அடிப்படையிலான மாற்று வாழ்தலை இங்கு தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயம் தொடர முடியும். மாற்று வாழ்தல் என்றாலே பாலின பால்நிலை பற்றிய கற்பிதங்களை உருவாக்கிக் கொள்ளும் அறிவுக் குறைபாட்டால் சிக்கல் எழுகிறது. தாய்மை, தந்தைமை , மகள், மகன், அண்ணன், தம்பி, தோழமை என பல வகை உறவுகள் கொண்ட கூட்டு வாழ்தல் வழியாக இனி வரும் தலைமுறையினர் இன்பியல் குடில்களை உருவாக்க முடியும். பாலியலை ஒழுக்கம், அறம் என்பதின் அடிப்படையாக, மையமாக வைத்தால் நிச்சயம் வன்முறையே உருவாகும்.

கேள்வி: அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் நூலில், “ மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் மனித சமத்துவம், மனிதார்த்த அறநிலையில் மற்றவர்கள் போலன்றி வேறுவகை அறிவுமுறை கொண்டவர்கள் என்பதால், கலை, இலக்கியம், அழகியல் வகையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாக வேண்டும். தனிமனித, பாலிணை உறவுகளிலும் ஆதிக்கச் சமூகத்தின் வரையறைகளை ஏற்காமல் மாற்று வாழ்வியலைத் தேர்ந்து கொண்டவர்களாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படியெனில் சமூகப் பண்பாட்டு அதிகார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட பால்நிலைகளைக் கடந்த பால் பன்மை கொண்ட வாழ்வும் கலை இலக்கியச் செயல்பாடுகளும் விடுதலை அரசியலின் பகுதிதான் என்று கூற முடியுமா?


பதில்: நிலவுடைமை, பாசிசச் சமூகத்தில் பாலுணர்வு, பாலின்பம் என்பதையே உடலை அவமதிப்பதிகாவும் தண்டிப்பாதாகவுமே உள்ளது. மாற்றம் கொண்ட சமூகத்தில் தனிமனிதர்கள் தமக்குள் உடலையும் மனதையும் கொண்டாடிக் கொள்வதற்கான ஒன்றாக பால்நிலை மாறும். பால்பன்மையும் மனித உடலையும் மனத்தையும் கொண்டாடுவதாகவும் மதிப்பதாகவும் மாறும். அவ்வகையில் தற்போதுள்ள பாலின்பம் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தும் தகர்ந்து வேறு வடிவம் பெறும்.

கேள்வி: பால்பன்மையை தமிழில் முதன்முதலாக அழகியல் மற்றும் கவிதையிலில் எழுதியது நீங்கள். மற்ற எழுத்துக்கள் பிறழ்வாக, குற்றவுணர்வாக, நோய்க்கூறாகமுன்வைத்தன. ஆனால் இன்று குயர் எழுத்து விடுதலையின் அரசியலாகத் தீவிரமடைந்து வருகிறது. இச்சூழலில் உங்களின் எழுத்து முன்னோடியாக இருக்கிறது. இதுபற்றிக் கூறுங்கள்?

பதில்: பாலினப் பன்மைத்தன்மை என்பது இருபால் தன்மைபோலவே இயல்பானது. அதற்கென அரசியலும் அழகியலும் உள்ளன என்பதைத்தான் இந்த எழுத்துக்கள்முன்வைக்கின்றன. எனது கிரணம் காப்பியங்களில் விரிவான தளத்தில் இவை பதிவாகியுள்ளன. தற்போது பலர் அதை எழுதுகிறபோது அது இயக்கமாகவும் தனித்த இலக்கிய வகைமையாகவும் மாறும். அதிலிருந்து பெரும் படைப்புகளும் தோன்றும். ஆனால் ஒற்றைப் பண்பாட்டுச் சமூகத்தில் இவை அனைத்துமே விளிம்பில்தான் வைக்கப்படும். அப்போது பெரும் அழகியல் உத்திகளோடு பால்பன்மை வெகுமக்கள் கலை இலக்கியத்தில் ஊடுருவும். அதிலிருந்து பெரும் கலைஞர்களும் உருவாக முடியும்.

கேள்வி:
தமிழ்ப் படைப்பு, ஆய்வுவெளியில் உங்கள் எழுத்தும் ஆய்வும் உள்ளார்ந்த பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உங்கள் எழுத்துகளைப் புறக்கணிக்கும் போக்கு இருக்கிறது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அது பற்றி நீங்கள்தான் கூற வேண்டும். ‘புகலிட’ வாழ்வின் காரணமாக இடைவெளி அதிகமானது ஒரு காரணம். மற்றபடி நான் அதிகமாக எழுதிக் கொண்டே இருக்கிறேன். காலச்சுவடு, எதிர் வெளியீடுகளில் வெளி வந்த எனது நூல்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. எழுதுகிறவர்கள் எனது எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் அடைகின்றனர். அவர்களின் நுண்ணுர்வு வேறு, எனது எழுத்துகள் வேறு. ஜமாலன் போன்ற எழுத்துப் புலன் கொண்டவர்கள்தான் எனது எழுத்துகள் பற்றி எழுத முடியும். மற்றவர்கள் வாசிக்க மட்டுமே முடியும்.

கேள்வி: இந்தியச் சூழலில் விடுதலை அரசியல் என்பது அம்பேத்கரிய நெறியில் இருந்து, தலித் விடுதலை அரசியலை, தலித் தலைமையை மையமாகக் கொண்டே செயல்பட முடியும் என்று சொல்லி வருகிறீர்கள். இது மிகமுக்கியமான, அடிப்படையான ஒன்று. ஆனால் விடுதலையை முன்வைக்கும் பிற இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இதனை ஒரு நெருடலாகக் கருதுவதுபோல் இருக்கிறது. சாதியத்தின் கூறுகள்தான் இதற்குக் காரணமா?

பதில்: இந்தியச் சமூக மனம் சாதியால் நொதித்துக் கிடக்கிறது. தமிழின் பொது உளவியல் சாதியை மையமாக வைத்துச் செயல்படுகிறது. அரசியல் களம் உள்ளார்ந்த தலித் வெறுப்பால் குமைந்து கொண்டிருக்கிறது. சாதி வெறியின்றி ஒருவர் “அம்பேத்கரும் அவர் தம்மமும்” போன்ற அறிவிலிவாத நூலை 1000 பக்கத்தில் எழுத முடியுமா.

கேள்வி: சமீபத்தில் கோணங்கியின் செயல்பாடுகள் குறித்து தமிழ் எழுத்துவெளியில் சலசலப்பு ஏற்பட்டது. எழுத்தாளர்கள் கட்டற்ற பலியல் சுரண்டல்வாதிகள் என்ற கருத்தும், தன்பால் ஈர்ப்பாளர்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. எதிர்ப்பாலியல் சுரண்டலும் எழுத்தாளர்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது. இங்கு விவாதம் என்னவெனில், பாலியல், பண்பாட்டுக் கருத்தாக்கம், மீறல், எதிர்ப்பாலியல், குயர், ஒழுக்கவிதிகள் இப்படிப் பல முரண்கள் இணைந்திருக்கின்றன? இதை எவ்வாறு பார்ப்பது?

பதில்: பாலியல் சுரண்டல் என்பது அனைவரும் செய்கிற ஒன்று. ஒரு சமூகம் எப்படியுள்ளதோ அதே வகை இலக்கியவாதிகள்தான் அவர்களுக்கு அமைவார்கள். கோணங்கி மீதான குற்றச் சாட்டு விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கப்பட்டதாக மாறியுள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை பெருமிதமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கும்பல்கள் இங்கு உள்ளன. கோணங்கி சிக்கல் இரண்டு வகையில் உருவாகிறது. அது ஆண்பாலிச்சை மற்றும் உரிமை மீறல் என்ற கொக்கிகளைக் கொண்டது. பால் பன்மையை வெறுக்கும் ஒரு சமூகத்தில் அது ஒரு ஆயுதமாக மாறி மாற்றுச் சிந்தனை, எழுத்து மீதான தாக்குதலுக்கு உதவுகிறது. இது பற்றி விரிவாகக் கட்டுரைதான் எழுத வேண்டும்.

கேள்வி: தமிழ் நவீனத்துவ, விடுதலை அரசியலின் முகமாக அயோத்திதாசரை முன்னெடுக்கும்போது பெரியார் அயோத்திதாசரை எதிரிடையாகப் பார்க்க இயலுமா? அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் இணைப்புடள் மார்க்சியத்தையும் எவ்வாறு இணைத்துக் காணமுடியும்?

பதில்: அயோத்திதாசர் ஒரு அற்புதம், பின்நவீன முறையியலை அப்போதே அவர் கையாண்டு விடுதலைக் கருத்தியலை உருவாக்கி இருக்கிறார். பெரியார் பின்னர் அவரிடமிருந்து சில கூறுகளை எடுத்துக் கொண்டு இடைநிலைச் சாதிகளின் அரசியலை கட்டுகிறார். அவருடையது இடைநிலைச் சாதி அரசியல்தான். அம்பேத்கரிய அரசியலை ஏற்றால் பெரியார் அதில் உள்ளடங்கி விடுவார். மார்க்சியம் அம்பேத்கரியத்தை புரிந்து கொண்டு செயல்படுமென்றால் இந்திய விடுதலை அரசியலை முன்னெடுக்க முடியும். இன்றைய அரசியல் மட்டுமல்ல உளவியலும் மார்க்சிய- அயோத்திதாசர்-பெரியார்-அம்பேத்கரிய-பெண்ணிய இணைப்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.

கேள்வி: காலனிய நீக்கம் என்பதன் பேரில் காலனிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புதல், பழைய பண்பாட்டை மீட்டெடுத்தல் எனும் நிலைகளில் சாதிய, மதவாதப் போக்குகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது. இதை எவ்வாறு அணுகுவது? ஆக்கபூர்வமான வழிகள் உண்டா?

பதில்: பழமையை மீட்டல் எனச் சொல்லி பௌத்தம் மீட்கப்படும் எனில் மத அரசியல் அதனை ஏற்குமா? பழைய சமத்துவ இனக்குழு வாழ்வை மீட்டெடுக்க இயலுமா. அனைத்தும் தற்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். எந்தப் புராணிகமும் அழிவையே கொண்டு வரும்.

கேள்வி:
தனியுடைமையும், பாலின ஏற்றத்தாழ்வும் வர்க்க முரண்பாட்டிற்கு அடிப்படை என்கிறார் எங்கெல்ஸ். நாம் விரும்பினாலும் குடும்ப நிறுவனத்தில் பரஸ்பர சமத்துவத்தை, நேசத்தைக் கொண்டுவரமுடியாது. ஏனெனில் அது சமூக அதிகாரக் கட்டமைப்பு என்கிறார் அவர். குடும்பம் கருத்துருவ அரசு இயந்திரத்தின் பகுதியாக இயங்குகிறது என்கிறார் அல்தூசர். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிக வலிமையாக இருக்கிறது. அதனால்தான் பெரியார், அம்பேத்கர் இருவரும் ஆணாதிக்கத்தின் வீழ்ச்சியை முதன்மைப் படுத்தினர். பெரியார் தீவிரவாதப் பெண்ணியத்தை முன்வைத்து குடும்ப நிறுவனத்திற்குள் பெண்கள் செல்லக்கூடாது தேவையில்லை என அழுத்தமாகவே வலியுறுத்தினார். மாற்றுவாழ்க்கை, மாற்று அரசியலை முன்வைத்து நீங்கள் இயங்கியுள்ளீர்கள். இந்தியாவில், ஆணாதிக்கப் பண்பாட்டு உளவியல் வன்முறை இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது , இந்தப் பின்னணியில் குடும்ப நிறுவனத்தை ஆணாதிக்கமும் அதிகாரமுமற்றதாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அல்லது குடும்ப நிறுவனத்தைக் கலைக்க முடியுமா? அல்லது இதற்கு மறுதலையாகக் கம்யூன் வாழ்வியலை மாற்று வாழ்முறையை முன்வைக்க முடியுமா? இதற்கான சாத்தியங்கள் என்ன?

பதில்: இனப்பெருக்கம் இருக்கும் வரை ஏதோ ஒரு வடிவில் குடும்பம் இருக்கலாம். ஆனால் கம்யூன் மற்றும் குழு வாழ்வு என்பதை முயற்சி செய்வதில் என்ன தவறு இருக்கிறது. சிக்கல் ஏற்பட்டால் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: மார்க்சியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், தலித்தியம் எனப்பல கோட்பாட்டுக் கருத்தியல் நிலைகளில் இயங்கிய நீங்கள் பௌத்த நெறியை முன்வைத்தீர். ஆனால் தற்போதோ இசுலாத்திற்கு மாறுவதாகச் சொல்கிறீர்கள். இதன் கருத்தியல், கோட்பாட்டியல் காரணிகளைக் கூறமுடியுமா?

பதில்: பௌத்த முறையியல் எப்போதும் என்னுள் இருக்கும். இஸ்லாத்தை ஏற்பது ஒரு முன்னெடுப்பு, பிறகு அது பற்றி விரிவாக எழுத இருக்கிறேன்..

கேள்வி: இன்றைய தமிழ்ச் சூழலில் மார்க்சியவாதிகள் பின்னவீனத்துவத்தை எதிரிடையாக பார்க்கிறார்கள் ஆனால் உண்மையில் ஃபூக்கோ, தெரிதா போன்றவர்கள் தங்களை பின் மார்க்சியவாதிகள் என்று கருதிக் கொண்டார்கள்  ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இதுதான் மார்க்சியம் எதிர்கொள்ளும் சவால் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

பதில்:
1988-89-ல் நிறப்பிரிகையில் பின்நவீனத்துவப் பார்வையை முன்வைத்து மார்க்சியத்தை வாசிப்பது என்ற நிலையில்தான் நான் முதலில் தொடங்கினேன்.  இதுவே முதல் கட்ட முரண்பாடுடனான உரையாடல். பின்னவீனத்துவம் குறித்த உரையாடல் தமிழில் குறைவாகவே இருந்தது. அவ்வாறு வந்ததும் கூட இலக்கியப் பின்நவீனத்துவம் என்ற தளத்திலான செயல்பாடு குறைவாகவே இருந்தது. இலக்கியத்தில் வடிவமற்ற தன்மை, பரிசோதனை முயற்சிகள் என்ற நிலையில் நான் எழுதினேன். இலக்கியம் சார்ந்த தளத்தில் இது தொடக்க நிலையில் இருந்தாலும் இதனுடைய அரசியல் தளத்தில், தெளிவாகவும் வலிமையாகவும் உறுதியாகவும் இந்தப் பின்னவீனத்துவ மாதிரியை நான் முன்வைத்தேன்.  பின் நவீனத்துவம் என்பதே பின் மார்க்சியம்தான். இந்த நிலையில் தான் மார்க்சியம் சார்ந்த, மார்க்சியம் கடந்த ஒரு தன்மையை நான் முன் வைத்தேன்.
மார்க்சியம் கடந்த மார்க்சியம் சார்ந்த நிலைப்பாட்டில் இருந்து உலகத்தை அணுகுதல் என்று நான் பேசினேன்.  புரட்சியை நோக்கிய உளவியல் பிரச்சனைகள் என்ற கட்டுரையும் அதனை அடிப்படையாகக் கொண்டதுதான். இம்மாதிரியான உரையாடல் அப்போது எடுக்கப்படவில்லை. மனிதார்த்த பொருண்மை நோக்கு  என்று நான் சொல்ல வந்தது materialism is again a kind of Human centre.  
எல்லாம் மொழியால் கட்டப்பட்டது. மனித அறிவு என்பது மொழியின் மூலமாகவே கட்டப்பட்டது. நாம் புரிந்து கொள்ளக் கூடிய உலகம் மனிதர்களுக்கானதுதானே தவிர எல்லாவிதமான உண்மைகளைப் பற்றியதும் எல்லாவிதமான பொருண்மைகளைப் பற்றியது அல்ல. இது சிக்கலான ஒன்று.
இது பின்பு லெக்கானின் பொருண்மையில் இருக்குன்னு தெரிந்துகொண்டேன். அரசியல் பின்நவீனத்துவம் என்பதுதான் நான் தொடர்ந்து வலியுறுத்துவது. அதனால்தான் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த எழுத்து பின் நவீனத்துவ எழுத்து என்ற முறையில் எனது இயக்கம் இருக்கிறது. இதில்தான் அடையாள அரசியல், பின்காலனியம், பெண்ணியம் தலித் அரசியல் என்று ஒரே சமயத்தில் பன்மைத்துவமான போக்குகளை முன்வைக்க முடியும். ஒரே சமயத்தில் இவ்வாறான பல்வேறு விதமான அழுத்தங்களை உள்ளடக்கிய கூட்டுத்தொகுதிதான் இன்றைய அரசியல். 
ஏதாவது ஒரு அரசியல் மட்டுமே மையமாக இருக்க முடியாது. 
பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு, பண்பாட்டு நடைமுறைகள், மதம், பாலினம், சாதி, இனம், வர்க்கம், நிறம் இவை இல்லாமல் பண்பாட்டு அடையாளங்கள்,  இவற்றோடு தனிமனித,  தனி மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், அத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய குடும்பம், குடி, இனம் முதலிய கூறுகள், இவற்றுடன்  அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், உலகளாவிய  தொடர்புகள் இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு  செயலை தீர்மானிக்கிறது. அத்தோடு அந்தச் செயலை ஆக்கபூர்வமானதாகவோ அழிவானதாகவோ மாற்றுகிறது. இவற்றுள் எந்த ஒன்றில் பிரச்சனை வருகிறதோ அதை நாம் அணுகியாக வேண்டும்.

இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவே இருக்கின்றன. உலகமயமாதல் இந்தியாவில் வரும் போது அது பொருளாதாரம் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. வாழ்வியல் சார்ந்தது, சூழலியல் சார்ந்தது இனக்குழு வாழ்வியல் இனக்குழு உரிமை சார்ந்தது. வெளியே இருக்கிறவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்றால் இந்த உலகமயமாதல் தனக்கு இன்பமயமான கொண்டாட்டமான ஒன்றாக பார்க்கிறார்கள். இவர்களுடைய நுகர்வு சார்ந்த பார்வையும் இதனால் பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. இந்தியாவைப் பொறுத்த வரையில் சாதி, இனம் இரண்டும் முக்கியமானவையாக இருக்கின்றன. இனவெறுப்பும் சாதி வெறுப்பும் இங்கே இருக்கின்றன. பொருளாதார சிக்கலைப் பேசும் போது பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசுவதும் மிகவும் முக்கியமான ஒன்று.

பாலினத்தின் இடம் என்ன என்பது பற்றி பேசவில்லை என்றால் அந்த அரசியல் வன்முறைதான். அப்படி இல்லையெனில் ஒரு அரசியல் மற்றதின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக மாறிவிடும். தேசியம் பேசுபவர்கள் ஜாதி ஒழிப்புக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவை பொறுத்தவரையில் இங்கு இன்னும் அது politics ஆக இருக்கிறது, மேற்கைப் பொருத்தவரையில் அது ஒரு அப்ரோச்சாக மாறிவிட்டது.இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பகுத்தறிவு என்பது மிக முக்கியமான ஒன்று Cultural Domainஆக இருக்கிறது. பகுத்தறிவு அரசியலாகவே இருக்கிறது. இங்கே Gender, பாலினம் பற்றிய பேச்சை பகுத்தறிவுவாதிகள் விட்டு விடுகிறார்கள். அதைப்போல சாதிய விடுதலைப் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பேசுவதில்லை. அப்புறம் தன்னாட்சி, தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை என்று வரும்போது முடியாட்சி, நகர அரசு, தந்தைமைய Patriarchy  பார்வை நிலையில் இருந்து தனிமனிதர்களை அணுகுகிறார்கள். இந்தப் பார்வையில் இருந்தே Gender, Sexuality  இவைகளை அணுகுகிறார்கள். Sexuality என்பது அடையாளம் சார்ந்த ஒன்று. இவ்வாறு அவர்கள் அணுகும் போது ஏதாவது ஒரு பழைய முறையில் இருந்து அதைப் பார்க்கிறார்கள். இதெல்லாம் மிகவும் சிக்கலானது. மார்க்சியம் இங்கு வருகின்ற பொழுது பழங்குடியின அரசியல் வரவில்லை.  கட்சியாக மாறும்போது. அது ஒரு நகர மையம் சார்ந்த ஒன்றாகவே வருகிறது. அம்பேத்கரிய, தலித்திய அரசியலை அதன் முழு இயக்கத்தோடு அணுகுவதில்லை . பிறகு இயற்கை சார்ந்த வாழ்க்கை. இயற்கை சார்ந்த வாழ்க்கையை நாம் எவ்வாறு பார்க்கிறோம். மனித மையவாத நோக்கில் இருந்து பார்க்கிறோம்.  மனிதர் இயற்கையின் ஒரு பகுதியே. மார்க்சியத்தைப் பொறுத்தவரையில் அதன் அடிப்படையான அம்சமே இயற்கையும் மனித உறவுமே. இதைப் புரிந்து கொள்ளாத மாக்சியவாதிகள், நவீனத்துவம், இயந்திரமயமாக்கல், தொழில்மயமாக்கல் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இவை மார்க்சியத்தில் எதற்காக, எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை விவாதிக்க வேண்டும். இதை விவாதிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் அரசு மையவாதிகளாக இருக்கிறார்கள்.  இயந்திரமும் அரசும் மையமாக இருக்கின்றன. இரண்டு மையமாக இருக்கின்ற போது பெரிய மூலதனமாக ஆகிறது. இங்கு மூலதனம் என்பது சமூக மூலதனமாக ஆகிறது. சமூகத்தினுடைய அல்லது ஸ்டேட் கேப்பிட்டலாகப் பார்க்கிறார்கள்.  வளமை என்பதை மையப்படுத்தி பார்க்கின்ற போது முதலாளித்துவத்தின் அடிப்படையோ அல்லது ஆதிக்க அரசியலின் அடிப்படையோ எதுவோ அதுவே அரசின் அடிப்படையாகிறது. 
அரசைப் பற்றித்தான் மார்க்சியம் பேசுகிறது. மனித உடல் , இயற்கை வளம் அல்லது உயிர் வாழும் மண்டலம் இவற்றை  மார்க்சியம் பார்க்கும் முறை எவ்வாறு என்றால் இயற்கையை தனக்கான ஒன்றாக பார்ப்பது, சுரண்டுவது என்பதை மார்க்சியம் மறுக்கிறது. வளமை என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டுவதை மாக்சியம் எதிர்க்கிறது. முதலாளித்துவம் முதலில் இயற்கையைச் சுரண்டுகிறது பிறகு மனித உடல்ளை நசுக்குகிறது, அல்லது தனது அதிகாரத்தை மனித உடல்கள்மீது  செலுத்துகிறது இன்று மார்க்சிய அடிப்படை கூறுகிறது. இதை கட்சி மார்க்கியவாதிகள் முதலாளித்துவத்திற்கு உரியதாக, முதல் உருவாக்கமாக மாற்றுகிறார்கள்.  அப்பொழுது என்னவாகிறது என்றால் காலனியத்தினுடைய பண்பைப்போல பேரரசுக்கும் பேரதிகாரமாக மாறும் செயல்திட்டமாக அது மாறுகிறது. கட்சி மார்க்சியம் ஒரு தேசத்தை கட்டமைக்கிறது. அந்த தேசத்தின்மூலமாக பிரதேசங்களில் சுரண்டுவதாக, ஏன் போரையே உருவாக்குகிறது. அப்போது சோவியத்தினுடைய பெரிய திட்டம் என்னவென்றால், மார்க்சியத்தினுடைய உடல் அரசியலையும் இயற்கையின் அரசியலையும் விட்டுவிட்டு இவற்றை முழுமையாகப் புறந்தள்ளிய இயந்திரத்தனமான உயர்தொழில்நுட்ப சமூகமாக மாறுகிறது. சோசலிசம் வீழ்ச்சியடையவில்லை. ஏனெனில் சோசலிசம் என்பது அமையவே இல்லை. 

சோசியலிச உருவாக்கத்திலேயே சிக்கலாகிவிட்டது.  பல தேசங்களுடையதாக பல நாடுகள் உடையதாக அது ஆகி விடுகிறது.  மீந்திருப்பது போர், ராணுவம் மட்டுமே. இதை மார்க்சியத்தின் சிக்கலாகப் பார்க்க முடியாது. மார்க்சியம் அங்கே என்ன தோல்வி அடைந்தது அல்லது என்ன மாறியது என்றால் மனித வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கக்கூடிய சமநிலை உறவு குலையும் போது State Capitalஆக மாறும் இடத்தில் நகர்கிற நிகழக்கூடிய ஒரு உடைப்பு. சோவியத்தினுடைய சிதைவு அல்லது உடைப்பு என்று சொன்னால் அது செர்னோபில்லினுடைய அடுத்த கட்டம்தான். செர்னோபில்மூலமாக பல ஆயிரம் கிலோமீட்டர் பகுதிகள் வாழ முடியாத பகுதியாக மாறும்போது, அதனுடைய தாக்கமும் பின்னால் வந்த அரசியல் உடைப்பும் ஏறக்குறைய அதனுடைய பின் விளைவாகவே மாறுகின்றன.  இதுதான் முதல்கட்ட சமூக அடையாளத்தின் உடைவாக மாறுகிறது. இந்தப் பேரழிவு முன்னேறிய சமூகம் என்ற கற்பித்தத்தை, கற்பனையை அல்லது அப்படி உருவாக்கப்பட்ட கருத்தை தகர்க்கிறது. 

பெரிய வளர்ச்சி என்பது பெரிய அழிவாக மாறும்போது முன்னேறிய சமூகம் என்ற அடையாளம் தகரும் போதுதான் அது தகர்கிறது. உண்மையான தகர்வு என்பது முன்னேறிய சமூகம் என்பதின் தகர்வுதான். அந்த அளவில் சோவியத் என்பதை மார்க்சியத்தின் முழுமையான மையமாகப் பார்க்க முடியாது. ஒரு கட்சி இருக்கிறது. கட்சியின் அரசியல் மாறுகிறது. மொழி, தேசிய இனங்களின் அடிப்படையில் பல்வேறு பல்வேறு நாடுகளாகப் பிரிகிறது. இவற்றை மட்டுமே மையமாகக் கொண்டு சோவியத்தையும் மார்க்சியத்தையும் ஒரே சிக்கலாக நாம் பார்க்க வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு சார்பில் பார்க்கக் கூடியது சமூகத்தின் ஓரிடத்தில் நிகழக்கூடிய பிரச்சனையை உலகத்தின் முழுப் பிரச்சினையாக மாற்றக் கூடியதாக மாற்றும் முயற்சியாக அது மாறும். 

இந்தியாவிற்குள் அல்லது மற்ற நாடுகளில் உள்ள சிக்கல்களை மார்க்சியத்தின் இயங்கியல் பார்வை மூலமாக, அல்லது மார்க்சியத்தின் மூலம் உருவாகி இருக்கக்கூடிய அறிவியல் மற்றும் பொருண்மைப் பார்வையின் மூலமாக நாம் ஆராய்கிறோம்.  இந்த அறிவியல் மற்றும் இயங்கியல் பொருண்மை பார்வையைத்தான் நாம் மார்க்சியம் என்கிறோம். இன்று உலகச் சமூகங்களின்  சிக்கல், ஏக்கம், தேவைகள், எதிர்பார்ப்பு இவைகளுக்கான ஆக்கபூர்வமான தீர்வை நோக்கிய கனவுதான் விடுதலை அரசியல் சாந்த கனவு. இதே வகையில் அழிவுக்கான கனவுகளும் உள்ளன.  மார்க்சியத்தின்  மதம் குறித்த விமர்சனப் பார்வை என்பது மதம் இல்லாத ஒரு உலகைப்பற்றிய கனவை உருவாக்கி மக்களை அழித்தன என்பது.

இப்போது பேரரசுகள், பெரிய மூலதனம், உலகமயமாதல், முன்னேற்றம் எனும் பெரிய கனவுகள் உலகின் பெரும்பான்மை சமூகங்களை, மக்களை அழிக்கின்றன. இயற்கையும் உயிர் மண்டலமும் அழிக்கப்படுகின்றன. விளிம்பு நிலை அதிகமாவதும் வாழ்க்கைச் சூழல் துயரம் நிரம்பியதாக மாறுவதும் இயற்கை அழிக்கப்படுவதும் நடக்கிறது. இயற்கை அந்த  வளத்தை ஒருசமூகம் தனக்குப் பயன்படுத்துவதல்ல சிக்கல். அதுகூட முதல்கட்டம்தான். நாட்டு மக்களே பயன்படுத்த முடியாத சூழல்.  இயற்கை வளம் என்று சொல்வதே தவறானது. இயற்கை, சமநிலையில் நாம் ஒருவராக இருக்கிறோம். ஒரு சமூகம் எந்த இயற்கைச் சூழலில் இருக்கிறதோ அந்த இயற்கையோடு உறவுபடுத்தி ஓரளவு சார்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்றைய சூழலில்  ஒரு சமூகத்திற்காக அதாவது ஐரோப்பிய  அல்லது வெள்ளைச் சமூகங்களுக்காக ஒட்டுமொத்த உலகச் சமூகங்களும் ஒட்டுமொத்த உலக இயற்கையும் நசுக்கப்படுகிறது, பிழிந்தெடுக்கப்படுகிறது. அவர்கள் சொல்லுகின்ற வளர்ச்சி அல்லது வளம் என்ற கருத்தாத்தால் மொத்த சமூகங்களும் சுரண்டப்படுகின்றன உயிராற்றல் அற்றதாக மாற்றப்படுகின்றன. இது மிகப்பெரிய சுரண்டல். இதில் மார்க்சியம் மட்டுமே முக்கியம் இல்லை. இது ஒரு பொதுவான சுரண்டல்.

மார்க்சியம் இல்லையென்றாலும் கூட இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியல் புரட்சிகர அரசியலாகவோ மற்றும் சார்ந்த அரசியலாகவோ  இருக்கும். இதைத்தான் நாம் மக்கள் அரசியல் என்கிறோம். மக்கள் அரசியல் என்பதற்கு அறிவியல் வேண்டும் உலக வரலாறு வேண்டும் தற்கால பொருளியல் வேண்டும். இதுவெல்லாம் சேர்ந்து வருகிறபோது மார்க்சியம் என்கிற ஒரு அறிவுச் சூழல் உருவாகிறது. மார்க்சியம் என்பது இரண்டு நூற்றாண்டுகளுக்கான மாற்றுச் சிந்தனைகளின் மொத்த அடையாளம். ஒரு இடத்தில் தொடங்கியது இல்லை. அது ஒரு மொழியியல் இல்லை. அதாவது ஒரு கூறை மட்டும் எடுத்து விளக்கிவிட்டுப் போவது அல்ல. அது ஒரு discipline இல்லை Multidiscipline. வரலாறு, மானிடவியல் , சமூகவியல், பொருளாதார உறவுகள், காலனியம் பற்றியது, அடிமைச் சமூகங்களைப் பற்றியது. பல்வேறு தரவுகளின் அடிப்படையிலானது,   பகுத்தறிவுத்தன்மையிலானது.

பகுத்தறிவு என்பது அறிவின் அடிப்படையில் ஒன்றை விளக்குவது. அது புதியதென்பதைவிட தொடர்ந்து புரட்சிகர சிந்தனையாகப் பயன்படுத்தப்படுகிறது.  அடிப்படைகளை நோக்கிய கேள்வியாக அது இருக்கிறது.  மனிதநேயம், பொருள்முதல்வாதம் போன்றவை வரலாற்றின் தொடக்க கட்டத்தில் இருந்து இருக்கலாம். இந்தியாவில் பௌத்தம் இருந்தது. கிரேக்கத்தில் டெமாக்ரடிக்ஸ், எபிக்கோரியன், ஸ்டாயிக், இதில் பொருள்முதல்வாதிகள் இருந்தார்கள். அணுக்கொள்கைவாதிகள் இருந்தார்கள். பொருள் முதல் வாதம் என்பது மிகவும் பழையது. ஸ்டாயிக் சிந்தனையில் மனிதர்களை மையமாக வைத்து கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கும் மீவியற்கைக்கு எதிரான கருத்துக்கள் இந்தப் பொருள் முதல்வாதத்தில் இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்த பொருள் முதல்வாத கருத்துக்கள் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் ஒன்றாக திரள்கின்றன. இதன் விளைவைத்தான் இன்று நாம் உலகமயமாதல் என்கிறோம். அதுமட்டுமல்ல உலக அறிவு என்றும் சொல்கிறோம். இதை நாம் மறுக்க முடியாது. இந்த உலகளாவிய அறிவு(Global Knowledge) என்பது எல்லாச் சமூகங்களிலும் ஊடுருவி இருக்கிறது. எல்லாச் சமூகங்களும் இந்த உலக மையத்திற்குள்தான் உறவு கொண்டிருக்கின்றன. எதுவும் தனிமைப்பட்டுப் போகவில்லை தனித்தும் இயங்கவில்லை. ஒரு வகையில் அது சுரண்டப்படுகிறது அல்லது பாதிக்கப்படுகிறது அல்லது அந்த இடத்தை அது ஊடுருவி இருக்கிறது. ஊடுருவும் போது அடிமைத்தன்மை என்று சொல்வது, உழைப்பை கற்றுக் கொள்வதன் மூலமாக அங்கே அறிவு இருக்கிறது. தொழில்மயமாக்குதல் என்பது உழைப்பவர்களை தொழில்மயமாக்குதல் என்பதுதான். 

இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக உருவான இயந்திர மயமான ஒரு சமூகம் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் அறிவின் மூலம் பாட்டாளி சமூகம் அறிவுடையதாக மாறுகிறது. உழைப்பும் அறிவுமாக மாறுகிறது. மார்க்சியமும் அதன் பின்பகுதியாகிய இருபதாம் நூற்றாண்டின் விடுதலை சார்ந்த  கட்டுடைப்பு (Deconstruction), உடல் அரசியல் (Body Politics) உயிர் அரசியல் (Biopolitics), பாலின அரசியல் (Gender Politics) இவை எல்லாவற்றையும் சரியாக நடைமுறையில் சொல்ல வேண்டுமென்றால் கம்யூனிசம் சார்ந்ததே. நாம் எல்லோரும் கம்யூனிஸ்ட். நாம் அனைவரும் கம்யூனிஸ்ட்டாக உரிமை இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியமே நூலகம். ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சியம் போதாமை உடையதாக இருக்கலாம். தரவுகள் புதியதாக மாறலாம். கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்டாகவும் இருக்கிறார். ஆனால் கம்யூனிசம் உருவாவதற்கான மொழி மார்க்சியமே. கம்யூனிசம் ஒரு அறிவுத் தோற்றவியல் (Epistemology). ஒரு பார்வை.

இந்தப் பார்வைக்கு மார்க்சியம் அடிப்படையாகிறது. கம்யூனிசம் மார்க்சியத்திலிருந்து தொடங்குகிறது.  ஒரு கம்யூனிஸ்டுக்கு, மார்க்சியத்தில் முரண்பாடு வருகின்றபோது புதிய இயங்கியல் மூலமாக அதை விளக்குகிறோம் ஒரு அறிவியலாக.இது பின்நவீனத்துவ அறிவு. இது பின்நவீனத்துவ நடைமுறை. பின் நவீனத்துவம் என்பது இலக்கியப் பின்நவீனத்துவம் என்பது 1950,1960 களில் இலக்கியத்தின் பரிசோதனை முயற்சியாக வந்தது. Postmodern condition. பின்நவீன நிலை எனும்போது லியோதார் வரும்போது பின்நவீனத்துவ அறிவின் இடம் என்ன என்பதெல்லாம் வருகிறது. இன்று காரணங்கள், காரணங்களுக்கு அப்பாலான பின்நவீனத்துவச் சமூகம் என்ற லியோதார் உருவாக்கிய கருத்தாக்கம் 1970-71இல் வருகிறது. சமூகம் நவீனத்துவம் கடந்த நிலைக்கு வருகிறது என்ற பார்வை அதில் உள்ளது. பகுத்தறிவு வெளியேற்றம் நிகழ்கிறது. பெருங்கதையாடல் என்பது ஒரு அறிவு தன்னைத் தானே விளக்கிக் கொள்கிறது, அறிவு என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறது என்ற நிலையிலிருந்து பின்நவீனத்துவ விமர்சனம் தொடங்குகிறது. இதனுடைய இன்னொரு பகுதி கட்டுடைத்தல். இவை எல்லாவற்றையும் சேர்த்து பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ அரசியல் என்கிறோம். பின்நவீனத்துவ அரசியலில் ஒரு கம்யூனிஸ்ட், பெண்ணியவாதியாக, காலனிய எதிர்ப்பு வாதியாக, பின்காலனித்துவவா வாதியாக, எல்லாவற்றையுமே இணைத்துப் பார்க்க கூடிய இயங்கியல்வாதியாக, தூய்மையிலிருந்து வெளியேறக்கூடிய, தூய்மை இல்லாத ஒரு சிந்தனையாளராக மாற வேண்டும். 

தமிழ் அடையாளம் என்பதும், தமிழ் சமூகம் அந்த அடையாளத்தோடு போராடுவதை புரிந்து கொள்கிறோம் என்றால், அந்தச் சமூகம் உலக சமூகத்தோடு உறவு கொள்ள வேண்டும். எதுவுமே பியூரிட்டி அல்லது தனித்தன்மை என்று இல்லை. தனித்தன்மை என்பதை விட ஒரு சமூகம் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறது, கலப்பு நிகழவே கூடாது என்பது எல்லாம் விலக்கக்கூடிய பண்பே.  பாசிசத்தின் வடிவமே. உலகம் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமாக, coexistence சகவாழ்வின்மூலமாக  எதிர்காலத்தில் அடையாளங்கள் கலப்பதுதான். புதிய அடையாளம் என்பது hybridity கலப்பின் வழியாகவே என்பதுதான்.  கலப்புதான் இங்கு அனுமதிக்கப்பட வேண்டும். அடையாளங்கள் அழிக்கப்படுவது இல்லாமல் அடையாளங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். கலப்பதன் மூலமாகவே அடையாளங்கள் கரைகின்றன.  இயக்கமாகவே ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அடையாளமாக மாறும். பாசிசம் அடையாளங்களை அழிக்கிறது. 

கேள்வி:
இந்த இடத்தில் பண்பாட்டு அடையாளம் என்பதை எவ்வாறு பார்ப்பது?

பதில்:
ஏகாதிபத்தியத்தின் ஒரேஒரு தன்மையுடையதாக்கல் என்ற அடக்குமுறை  பின்நவீனத்துவத்தின் முக்கிய விவாதம். ஒற்றைத் தன்மை என்பது தன்னைத்தானே நிறுவிக்கொண்ட ஒரு அதிகார அமைப்பு. அதில் பேரரசு,  ஏகாதிபத்திய வன்முறை முதலிய அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த வன்முறை உலகத்தில் உள்ள எல்லா அடையாளங்களையும்  மற்றமையாகவும் ஏகாதிபத்தியமாகவும் ஆக்குகிறது. அப்போது அடையாளங்களின் தனித்தன்மை என்பதை முதலில் அங்கீகரித்தல்தான். அடையாளங்கள் இருக்கின்றன என்பதை அங்கீகரிப்பதுதான் அடையாள அரசியல். காலனியாதிக்கத்திற்கு எதிராக ஒரு சமூகம் தன்னுடைய அடையாள அரசியலை முன்வைக்கிறது. இது எதிர்ப்பின் ஒரு பகுதி. அடையாளம் தூய்மையானதாக மாறுமா என்றால் மாற முடியாது ஏனென்றால் அது ஏற்கனவே அடக்குமுறைக்கு உட்பட்டதாக மாறுகிறது. அந்த அடக்கு முறையின் அறிவை அது எடுத்துக் கொள்ளும். அதுதான்  பின்காலனித்துவம். காலனிய அதிகார அறிவின் மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகமும் தன்னை வளர்த்துக் கொள்கிறது. அரசியல் ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்கிறது அல்லது அரசியல் கருவியாக அது மாறுகிறது. அடையாளத்தை நிறுவும் எதிர் அரசியலாக அது மாறுகிறது. அப்போது அந்த இடத்திலேயே அது வேறு ஒரு அடையாளத்தை நோக்கிப் போகிறது. 

கேள்வி:
அப்போது அடையாள அரசியல் வன்முறையாக மாறாதா? 
பதில்:
இல்லை. காலனியமயமாக்கல் என்று வருகின்றபோது, ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மூலமாகவே எதிர்கொள்ளப்படும். இங்கே அடையாளம் என்பது முன்னே நிற்கும்.  முன்னே நிற்கும் அடையாளம் தன்னை எக்கியூப் செய்துகொள்வதன்மூலமாக வேறொரு இடத்தில் இருக்கக்கூடிய அடையாளத்தை அது அங்கீகரிக்கிறது. உலக அளவில் எல்லா அடையாளங்களையும் அங்கீகரிக்கிறது. இது coexistence ஆக மாறுகிறது. இவ்வாறு இல்லாமல் ஒரு அடையாளம் இன்னொரு அடையாளத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்ற பொழுது அது காலனிய அதிகார அடையாளமாகிறது. இன்றைக்கு உள்ள அடையாள அரசியல் என்பது காலனியமயமாக்குகின்ற ஒற்றை அடையாளம் என்கிற அதிகாரத்துக்கு எதிரான அரசியல். எனவே இன்று அடையாள அரசியல் என்பது ஒரு மாற்றத்தை நோக்கியது. முதலில் அடையாளத்தை முன்வைத்தல், வேறுபடுத்திக் காட்டல் என்பது முக்கியமானது. நான் வேறுபட்டு இருக்கிறேன், வெளிப்படுத்துகிறேன் என்கிறபோது அது அதிகாரத்துக்கு எதிரான அரசியல் ஆகிறது. இந்த அடையாள அரசியல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்றால் பிற அடையாளங்களுடன் கட்டாயம் உறவாட வேண்டும். அப்படி இல்லாமல் அது தனிமைப்படுகிறது என்றால் அது மீண்டும் சர்வாதிகாரமாக மாறும். அப்போது உலக அளவில் இருக்கக்கூடிய அடையாளங்கள் அனைத்தும் உலக அரசியலோடு உறவு கொள்ள வேண்டும். உலகத்தன்மை அதே நேரத்தில் சுதந்திரமான என்கிற நிலை அது.

கேள்வி:
அப்படி மற்றதுடன் கலக்கும்போது இதன் அடையாளம் போய்விடாதா?
பதில்: 
ஆம் போய்விடும். கலத்தல் நடக்கும். அடையாளம் என்பது மாறிக்கொண்டே இருப்பது.  அடையாளம் நிரந்தரமானதல்ல. புதிய அடையாளம் அறிதல்முறை, மொழி,  புதிய பண்பாட்டுக்  கட்டமைப்பு இதெல்லாம் வரும்போது புதிய அடையாளம் உருவாகும்.   உலகத்தில் எந்த ஒரு அடையாளத்தையும் தொடக்கத்திலிருந்து வந்ததாகவும் எல்லாவற்றுக்கும் புனித ஆதாரமாகவும் சொல்ல முடியாது. அப்படிப் புனித ஆதாரம் என்று எதுவும் இல்லை. அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இவ்வாறான நவீனத்துவத்துக்கு முந்தைய அடையாளம் என்ற பார்வை இன்று இல்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தால் அது காலனிய மயமாக்கப்பட்டதைப்போலத்தான் இருக்கும். காலனியமயமான சமூகம் தன்னை அரசியல்ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளும்போது கலப்பாக அது தன்னை உருவாக்கிக்கொள்ளும்.  ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாடும் கலப்பாகவே இருக்கிறது. 

கேள்வி:
பழங்குடிகளும் இந்தக் கலப்பின மாற்றத்திற்கு வந்தாகவேண்டுமா?

பதில்:
பழங்குடி என்று சொல்ல முடியாது. இனக்குழு மற்றும் நவீனம் இரண்டும் கலந்தது. அது உலகமயமான இனக்குழுத்தன்மையுடன் இருக்கும்.  மற்றதோடும் இணைந்தே இருக்கும். ஒரே அடையாளத்தை உலகமயமாதல் என்பது பிற அடையாளங்களை  மற்றமையாக ஆக்கி எல்லாவற்றையும் அழிப்பதாகவும் ஒழிப்பதாகவும் இருக்கும்.
மற்ற அடையாளங்களுக்கு அர்த்தமில்லை என்று சொல்வது பாசிசம். இதுதான் அதிகாரத்தை நிர்ணயிக்கிறது. தன்னுடைய அடையாள அரசியலை வன்முறையாக்குகிறது. அடையாள அரசியல் வன்முறையாக மாறும் இடம் இதுவே. அடையாளத்திற்கான கட்டுமானம் என்ன என்பதை ஒரு சமூகம் விளக்குகிறது.  மொழித் தூய்மை, சமயத்தூய்மை, பண்பாட்டு நடைமுறைகள்சார் தூய்மை, சடங்குசார் தூய்மை இவற்றின் மூலமாக எந்தத் தூய்மை வருமோ அது உள்மொழியாக ஆக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது இயக்கமற்றதாக, அறிவற்றதாக, அறிவு மறுப்புச் சமூகமாக அந்தச் சமூகம் மாறும். அப்போது இதன் அரசியல் பொருளாதாரத்தை உலகச் சமூகம் சுரண்டும். இந்தியாவில் மதத்தின் அடிப்படையிலான அடையாளத்தை உருவாக்கல் என்பதும் இவ்வாறானதாக இருக்கிறது. 

ஒரு சமூகம் தன்னை அரசியல், பொருளியல், அறிவியல் இவற்றோடு உறவாடாமல் பண்பாட்டுத்தளத்தில் மட்டுமே வைக்கின்றபோது பண்பாட்டுத் தேசியமாக மதத்தேசியமாக அது இருக்கும். அப்போது அது உலகளவிலான அத்துமீறலுக்கு உள்ளாகும். பண்பாட்டு மையம் , பண்பாட்டு வெறி அல்லது மத மையம், மதவெறி எதுவாக இருப்பினும் இவ்வாறுதான் இருக்கும். 

பண்பாட்டின் இயங்கியல் வரையறை என ஒன்று இருக்கிறது. பண்பாடு என்பது அந்தச் சமூகத்தில் இருக்கக்கூடிய பொருள்கள்,  உற்பத்தி உறவுகள், அறிவியல், அறிவுத்துறை அனைத்தையுமே பரவலாக்குதல்தான் பண்பாடு. அதற்கு எதிராக பழமையை நோக்குதல் என்பது குறியியல்ரீதியான பின்னோக்கிச் செல்லுதல்தான். அப்போது என்ன நடக்கிறது என்றால், ஏற்றத்தாழ்வு வருகிறது. அடுக்குமுறை, அடக்குமுறை, மேலாதிக்கம் உருவாகிறது.
சாதி, பாலினம், இனம், மதம் என எல்லாவித அதிகாரப் படிநிலைகளும் உருவாகின்றன. இதைவிடக் கொடுமையான சமூகப் பாசிசம் உருவாகிறது. அது வருகிறபோது வன்முறை சார்ந்த அழித்தொழிப்பு, உயிர்மறுப்பு சார்ந்ததாக மாறுகிறது. எனவே இங்கு அடையாள அரசியல் என்பது அடையாளத் தூய்மையாக்குதல் அல்ல. தூய அடையாளத்தை மீட்டெடுப்பதோ, தூய அடையாளம் என்ன என்பதைப் பார்ப்பதோ அல்ல. இயக்கமுள்ள அடையாளத்தை பெறுவதற்கான உரிமை.  எனக்கு ஒரு இனம் இருக்கிறது. ஆனால், நான் நவீன அறிவைக் கற்றுக் கொள்வேன். உலகத்தோடு என்னால் உறவு கொள்ள முடியும். இன்று உலக அளவிலான உறவு என்பது சமூகங்களுக்கு இல்லை.  பொருளாதாரத்திற்குத்தான் இருக்கிறது.  அரசுகளும் பொருளாதார நிறுவனங்களும்தான் உலகமயமாகின்றனவே தவிர, அறிவு, பண்பாட்டு உலகமயமாதல் என்பது இல்லை. ஏனெனில் உலகமயமாதல் என்பது மையம் இல்லாதது. அறிவியல் சார்ந்த மனித நடத்தை என்பது உலகம் சார்ந்தது, உலகத்தன்மை சார்ந்தது. அது நமக்கு வரவில்லை.
நமக்கு மட்டுமல்ல பல சமூகங்களுக்கும் அது வரவில்லை. மனித உரிமை,  தனிமனித உரிமை, பல்வேறு பாலினம் சார்ந்த உரிமை, Gender sensitivity , மாற்று உளவியல்,  ஆதிக்கத் தன்மையற்ற – பல்வேறு தன்மைகளை எல்லாவகையிலும் கொண்டாடுகிற- தனிமனித இருப்பை உன்னதப்படுத்தக்கூடிய- பெருமதிப்புடையதாக இருக்கக்கூடிய  இவையெல்லாம்தான் உலகமயமானது. இதற்கெல்லாம் எந்தச் சமூகமும் தனியாக உருவாகவில்லை. உலக அளவில் பல தத்துவங்கள் ஒன்றாகித்தான் வருகிறது.  இதைத்தான்  அடிப்படையில் உலகத் தேசியம் என்கிறோம். உலகத்தேசியம் மற்றும் கம்யூனிசம் என்கிறோம். பண்பாட்டுக் கம்யூனிசம் என்பது இது. உண்மையான உலகமயமாதல் என்பது அறிவு, அறிவாற்றல் முதலிய எல்லாம் எல்லாச் சமூகங்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான். அனைவருக்குமான பங்கைப் பெறுவதற்கான ஒரு உரிமை இதெல்லாம்தான் உலகமயமாதல். 

இவ்வாறு இல்லாததனால்தான் பொருளாதார உலகமயமாதல் என்ற  ஒரு தன்மை இன்றைக்கு இருக்கிறது. மூலதனம் உள்ள சமூகம் இன்று தொழில்நுட்பரீதியாக மேம்பட்டு இருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப முழுமை அடிமை அரசியலை நோக்கியதாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடிமைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் காலனியத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனால் சமநிலையற்ற போக்கு நிலவுகிறது. எனவே உலக அளவில் ஒரே மாதிரியான அரசியல், பொருளாதாரம் இல்லை. இந்த நிலையில் வாழ்தலுக்கான வளர்ச்சித் திட்டம் என்பது அவர்களுக்கான வளர்ச்சிதானேயொழிய எல்லோருக்குமானது அல்ல. 

வளர்ச்சி அடைந்த சமூகம் வளர்ச்சியைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது. வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி, எதை வளர்த்த வேண்டும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வளர்ச்சி என்பது என்ன? என்பவை முக்கியமானவை.  

கடந்த ஒரு நூற்றாண்டில் பெரிய அழிவுகள் நடந்திருக்கின்றன. இன்றைக்கு உயிர் வாழ்தல் சார்ந்த, மனித மதிப்பு, மனித கண்ணியம் சார்ந்த, வாழும் உரிமை இவையெல்லாம் முக்கியம். மனிதர்கள் வாழும் இடம் முக்கியம். வாழ்வு மகிழ்வானதாக இருக்க ஒவ்வொருவரும் அனுபவிக்கும் கொடுமைகள் இல்லாமல் இருக்க வேண்டும். நோய்த்தன்மை இல்லாத சூழல், வாழ்வு தேவை. இவையெல்லாம்தான் இன்றைய அரசியல். ஒரு சமூகத்தினுடைய வளர்ச்சிக்கு இன்னொரு சமூகத்தை, வாழ்வைச் சுரண்டுவது என்பது இருக்கிறது. இது இருக்கும்வரை அவர்களின் அரசியல் நிற்காது. முரண்பாடு, போராட்டம் இருக்கும். இனிமேல் என்ன நிகழவேண்டும் என்பதல்ல சிக்கல். எனவே சமூகத்தின் உள் சிக்கல்களைத்தான் பேச வேண்டும். மார்க்சியம் இதைத் தெளிவாக சொல்கிறது. வர்க்கப் போராட்டம், அடையாளம் என்பது அந்தந்த தேசத்திற்கு அந்தந்த சமூகத்திற்கு உரியதாக அவற்றுக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்கிறது. அது மார்க்சியச் செயல் திட்டத்திலேயே இருக்கிறது. ஒரு நாட்டினுடைய உற்பத்தி உறவுகள், அவற்றுக்கு இடையில் உள்ள முரண்பாடுகள், அந்த முரண்பாடுகளைக் கையாளும் முறை இவையெல்லாம் அந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கேற்ப அமையும்.

முதலில் நாம் கருத்தியல் ரீதியாக, பார்வை ரீதியாக வேறுபடுகிறோம். ஏனெனில் அறிவு என்பதே முதலில் வேறுபடுத்திப் பார்ப்பதுதான். நாம் அறிவியலை நோக்கிப் போகிறோம். அந்த அறிவியலில் இருந்து புதிய அறிதல் முறையை உருவாக்குகிறோம். இந்த அறிதல் முறை அறவியல் மற்றும் மனிதப் பார்வையைக் கொடுக்கிறது. இந்த இடத்தில் கம்யூனிசம் மனித நலம் சார்ந்த செயல் திட்டங்களைப் பார்க்கிறோம். இது ஒரு தேசியக் கட்டுமானமாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகத்தை உருவாக்குதல், தேசத்தை உருவாக்கல் என்பவை எல்லாம் கம்யூனிசத் திட்டம் இல்லாமல் செய்ய முடியாது. நவீன தேசம் என்பதற்கான  உந்து சக்தி அல்லது வழிகாட்டு நெறிமுறையே கம்யூனிசம்தான். கம்யூனிச திட்டம் இல்லாமல் ஒரு தேசம் உருவாக முடியாது. அது இல்லையென்றால் பாசிசமாகவே அது இருக்கும். 

கம்யூனிசம் ஏதோ வெளியில் இருக்கக்கூடிய அழிவு சக்தி இல்லை. அது போர் அல்லது ஆயுதமாக வருகிறது என்பதல்ல. போர் இயந்திரமோ, இராணுவமோ, படையோ அல்ல. 

கம்யூனிசம் என்பது சட்டத்துறையில் இருப்பது. நீதித்துறையில், நிர்வாகத் துறையில், அரசு இயந்திரத்துறையில், தேசக்கட்டமைப்பில் இருப்பது. கம்யூனிசம் சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் இருப்பது. நவீன சமூகத்தின் உந்து சக்தியே கம்யூனிசம் தான். கம்யூனிசத்தில் இருந்து குறைவதை வைத்தே நாம் சோசலிசம், ஜனநாயகம், Liberal democracy சுதந்திர ஜனநாயகம் என்றெல்லாம் சொல்கிறோம். பிரான்சிஸ் ஃபுகுயாமா  (Francis Fukuyama, The End of History and the Last Man) போன்றோர் கம்யூனிசம் இனி உருவாக முடியாது. சுதந்திர ஜனநாயகம்தான் வளர்ச்சியடைந்த அல்லது மேம்பட்ட ஒன்று என்கிறார்கள். ஏனென்றால் அதில் சுதந்திரத்தன்மை, சமத்துவம் முதலின இருக்கின்றன,  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் அவர்.

இந்த சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் எல்லாம் எங்கிருந்து வருகின்றன. இவையெல்லாம் கம்யூனிசத்தின் செயல் திட்டமே. கம்யூனிசத்தின் குறைதல் அல்லது கம்யூனிசத் திட்டத்தின் விகிதாச்சாரம் நவீனத்துவம். அமெரிக்காவின் கோட்பாடு வேறு. ஆனால் அரசியல் சட்டம் என்ன சொல்கிறது. சமத்துவம், நீதி, மகிழ்வான மனித வாழ்வு, சுதந்திரம் இதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இது கம்யூனிசத்தின் செயல்திட்டமே. இது ஏற்கெனவே இருந்த கிரேக்க சமூகத்தின் அடிமை நகரமல்ல. இது சுதந்திரமுடையவர்களின் தேசம். இது சுதந்திரமான தேசம். இது அடிமையற்றவர்களின் தேசம். கோட்பாட்டில் கம்யூனிசச் செயல் திட்டம் இருக்கு. ஆனால் அந்தச் சமூகம் அடிமைகளை வைத்திருக்கிறது. 1776 இல் இருந்து உருவான தேசம் இது. இதுதான் ஜனநாயக அடிப்படையில் உருவான சுதந்திரக் குடியரசு. இந்தக் குடியரசென்பது வெள்ளை மையமாக இருக்கிறது. ஆப்பிரிக்கக் கருப்பின மக்களை மனிதர்களாக எடுத்துக்கொள்ளாததால் human dignityயை கண்ணியத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.  மனித மகிழ்வு, சுதந்திரம், நீதி என்பவையெல்லாம் அவர்களுக்குத் தேவையில்லை என்பதெல்லாம் வெள்ளைமையவாதம்தான். சுதந்திரமடைந்தவர்களின் சமூகத்தில் அடிமைத்தனம் ஏன் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

புவியியல் ரீதியாகக் குறிப்பிட்ட இடத்தில் இருந்த அடிமைத்தனம் 18,19 நூற்றாண்டில் உலகம் முழுமைக்கும் ஆயிற்று. ஐரோப்பாவில், பிரிட்டனில் அடிமைத்தனத்தை ஒழிக்கத் தொடங்கினார்கள். 1820களில் ஏறக்குறைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைக்கு முன்பு அடிமைத்தன்மையை ஒழிக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா 1865 வரைக்கும் அதற்கான  போர் செய்ய வேண்டியிருந்தது ஒருநூற்றாண்டுக்கும் மேல். இன ஒதுக்குதலுக்கு 1965, 1968,1970 களில்தான் அமெரிக்கச் சமூகம் அரசியல் ரீதியாக இனச் சமத்துவ உரிமைக்கு வருகிறார்கள். முரண்பாடற்ற சமூகம் என்று இல்லை அது.  ஆனால் எதை நோக்கி அந்தச் சமூகம் அமைக்கப்படுகிறது என்றால், சுதந்திரம், சமத்துவம், நீதி முதலியவற்றை நோக்கியது. எல்லாமே சுதந்திரம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கம்யூனிச சர்வாதிகாரம் அல்லது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தில் (proletarian dictatorship) சுதந்திரம் இல்லையென்றால், சுதந்திரம் இல்லை என்று சொல்கிறோம், ஆனால் அதுதான் சுதந்திரம் என்று சொல்வதில்லை. இங்கே சுதந்திரம் என்பதைப்பற்றிய தொடர்ந்து கேள்விகள்தான் இருக்கின்றன. இது கம்யூனிச மனநிலை, கம்யூனிசம் ஆகிறநிலைதான் இருக்கிறது. காந்தியைக் கடந்த காந்தியம் என்பதும் அம்பேத்கரியம் என்பதும் கம்யூனிசத்தை நோக்கியது. எல்லாவற்றையும் இதனோடுதான் உரையாடுகிறோம். 
எங்கெல்லாம் நீதியற்ற சமத்துவமற்ற போக்கு இருக்கிறதோ அதை எல்லாம் கம்யூனிசம் நோக்கிய பார்வையில் இருந்துதான் நாம் அணுகுகிறோம். கம்யூனிசமே அளவுகோலாக இருக்கிறது. நீதி, அறம் என்பவை மனித சமூகத்தின் முக்கியமான கட்டமைப்புகள். அப்படி இல்லையென்றால் எல்லா வன்முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதுதான் வன்முறைகளின் வரலாறு. இதனால்தான் நாம் தேசமாக குடியாட்சிச் சமுகமாக இருக்கவேண்டுமென்பது முக்கியமானதாகிறது. இல்லையென்றால் நாம் தேசம், குடியாட்சி என்று பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மனிதர்களையும் நிராயுதபாணியாக்கி, போராட முடியாதவர்களாக, போர் செய்ய முடியாதவர்களாக மாற்றி அவர்கள் மேல் ஒரு அரசாக, எந்திரமாகச் செயல்பட்டு கொலை, வாழ்வழிப்பின் வழியாக நிறுவப்படும் அமைப்பாக இது மாறுகிறதெனில் அது வன்முறைகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு அரசும்  தனிமனித உயிர், உடலைக் கொலைசெய்யும் அதிகாரத்தை நிறுவியிருக்கு.

19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புரட்சி அரசின் அழித்தொழிப்புகளுக்கு எதிரானதாக அமைந்தது. புரட்சியென்பது அரசோ,  மன்னராட்சியோ, இராணுவமோ எதுவாயினும் நம்மை அழித்தொழிப்பதற்கான உரிமையில்லை என்று அதன் வன்முறைக்கு எதிரான அரசியல். அதிகாரத்தின் ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான புரட்சியும் சேர்கிறபோது அது இறப்பின் சுழற்சியாக மாறுகிறது. அதிகாரம் அழித்தொழிப்புக்கான உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அதற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அழிவு, இறப்பு நிகழும். இது தவிர்க்க முடியாத சிக்கல்தான். அப்போது இன்றைக்குப் புதிய மனித அடையாளம். அதாவது புதிய கருத்தியலைச் சொல்கிறோம். இன்றைக்கான கருத்தியலாக்கத்தை புதிய மொழி, புதிய குறியீடுகளால் உருவாக்குகிறோம். இந்தக் கருத்தியல்களின் வழியாக பாசிசத்துக்கு எதிரான, மேம்பட்ட வாழ்வுக்கான நிலையை அடையதல் முதன்மையானது. இந்த இடம் முக்கியமானது. கம்யூனிசம், பின்நவீனத்துவ பார்வை, பின்நவீனத்துவ அறம், பின்நவீனத்துவ மற்றமை, பன்மைத்துவம், அனைத்தையும் உள்ளடக்கித்தன்மை இவையெல்லாமே பின்நவீனத்துவ அரசியல் கலைச்சொற்களே. இந்த இடத்தில் மார்க்சியம், கம்யூனிசம், பின்  கோட்பாடுகள் (Post theories ) எல்லாம் வருகின்றன. முதலாளித்துவம் என்பது பின்நவீனத்துவ உத்தியைக் கொண்டது. அதற்கு நிறைய முறைகள் இருக்கின்றன. பின்நவீனத்துவம், பின்நவீனத்துவ கம்யூனிசம், பின்நவீனத்துவ உரிமை எல்லாம் ஒரே இடத்தில் இல்லை. ஆனால் ஒரு தொடர்புறவு இருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம் ஏதாவது ஒரு பெயரால் அழைக்க வேண்டுமெனில் கம்யூனிசம் என்று சொல்லலாம். ஏன் நான் கம்யூனிஸ்டாக இருக்கக் கூடாது. இந்த இடத்தில்தான் நான் அடிக்கடி சொல்வது கம்யூனிஸ்ட் என்பது  A process of Becoming. நான் என்னவாக மாறுகிறேனோ அது உருவாதல் நிலை. நான் என்பது தனியாக இல்லை. நான் எதுவாக மாறவேண்டும். எதை நோக்கிச் செல்கிறோமோ அதுவாக மாறவேண்டும். அந்த இடத்தில் கம்யூனிசப் பார்வை, கம்யூனிச உளவியல் வருகிறது. கம்யூனிஸ்ட் அல்லாதவர், கம்யூனிசத்துக்கு எதிரானவர் என்றால் அவர் வன்முறையை ஏற்கக் கூடியவராகவும் வன்முறையைச் செலுத்தக்கூடியவராகவும் மாறுகிறார். ஆனால் கம்யூனிசப் பார்வையுடன் வருகிறவர்கள் தங்கள்மேல் வரும் வன்முறையை எதிர்ப்பதோடு தங்கள்மூலமாக வன்முறை உருவாக்காமலும் இருப்பார்கள். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும்போது ஒரு பிளவு இருக்கும். இதுதான் கம்யூனிச உளவியல். அதனால் நடைமுறைப் படுத்தமுடியாத, நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி கோட்பாடாக வைப்பது என்றால், வாழ்வு என்பது பல்வேறு குறியீடுகள், கற்பனைகளாலானது. அறிவியல் என்பது எல்லாவற்றையும் மாற்றமுடியும் என்பது. ஒவ்வொன்றையும் உருவாக்க முடியும் என்பது. பாசிசத்தை, அறிவியலை, உலகமயத்தை உருவாக்க முடியும் என்றால் கம்யூனிசத்தையும் உருவாக முடியும். எல்லாமே ஒருவித மாற்றத்துக்கான திட்டம்தான். ஒவ்வொரு தனிநபரையும் உருவாக்குவதற்கான திட்டம்தான். 

கேள்வி:
இதுபோன்ற உலகத்தன்மையிலான பார்வையை நாம் முன்வைக்க முடியுமென்பது முக்கியமானது. ஆனால் இந்தியாவில், தமிழகத்தில் இவ்வாறான பார்வைகளை முன்னெடுக்க இயலாமல் இருப்பதற்கான தடைகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதன் இன்னொரு பகுதியாக மார்க்சியக் கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள் இந்த நிலையை இங்கு எப்படி எதிர்கொள்கிறார்கள்? காந்தி, அம்பேத்கர், பெரியார் முதலிய சிந்தனைகளுடன் உலகளாவிய பார்வையை இணைத்து நோக்க வேண்டும் என்கிறீர்கள். இதையெல்லாம் எவ்வாறு பார்ப்பது?

பதில்:
மாறுபடும் கேள்விகளுடன் மார்க்சியம் என்ற என்னுடைய நூலே இதைப்பற்றியதுதான். மார்க்சியம் என்பது எல்லாவிதக் கேள்விகளுடன் உரையாடுகிறது. தெரிதாவின் கட்டுடைப்பு என்பது மொழிசார்ந்த கட்டமைப்பை விளக்கிச் சொல்வது. இந்தப் பாரவையுடன் மார்க்சியத்தை இணைத்து உரையாடல் செய்யலாம். மார்க்சிய உளவியலை லெக்கானுடன் இணைத்து நோக்கலாம். மொழி, அறிவு என்பதில் எந்தெந்த இடத்தில் metaphysics, எந்தெந்த இடத்தில் logocentric  இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். ஒரு மொழி ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. ஒரு அமைப்பு ஏற்றத்தாழ்விலிருந்து ஆரம்பிக்கிறது என்பது தெரிதியன் புரிதல்முறை. ஒரு திட்டமாக வந்துவிட்டபிறகு அந்த ஆய்வுமுறையை ஏற்க வேண்டும். ஃபூக்கோவின் உடல் (body), விளிம்பு (Marginality)மற்றும் அதிகாரம்(Power), நுண்ணரசியல் (Micropolitics) முதலிய கருத்தாக்கங்கள் வருகின்றன. கம்யூனிசச் சமூகத்தின் மதிப்பீடுகள் கம்யூனிச சமூகத்திற்கும் பாசிசச் சமூகத்துக்கும் ஒரேமாதிரி இருக்கும்போது அதை மாற்ற வேண்டும். அதாவது உடல்மீதுள்ள ஒரேமாதிரியான விதிகள், அதிகாரம், உழைப்பைப் பிழிந்தெடுப்பது என்று இருப்பதை மாற்ற வேண்டும். அடக்குமுறைச் சமூகத்தின் அதே கூறுகளைக்கொண்டு புதிய சமூகத்தைக் கட்டமுடியாது. எனவே ஃபூக்கோவின் நுண்ணரசியலைப் பேசியாக வேண்டும். இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தின் மூலமாகவே செயல்படுத்த முடியும். இந்தியாவில் சாதி, மதம், இனம் இவைகளே மொத்தச் சிக்கலுக்கும் அடிப்படைகள் என்று மார்க்ஸ் சமூக அறிஞராக மூன்று பத்திகளில் சொல்லியிருக்கிறார். இதை மறந்துவிட்டு மார்க்சியத்தைப் பேசமுடியாது. அம்பேத்கரின் ஆய்வுகள் இந்தச் சிக்கல்களையே அடிப்படையாகக் கொண்டவை. எனவேதான் இந்தியாவுக்கு வரும்போது அம்பேத்கரியத்தை முன்னெடுக்கிறோம்.
பிறகு இன்னொன்று காந்தியம். இது சிக்கலான ஒன்று. நிறைய உருவகங்கள், குறியீடுகள், சடங்குகள் இருக்கும். இருந்தாலும் இந்தியச் சமூகத்தில் அரசியல் மயமாதல், போரற்ற மாற்றம், முதலாதிக்கம் -பொருளுற்பத்தி – இயந்திரமயமாக்கல் இவைசார்ந்த அந்நியப்பட்ட வாழ்முறைக்கு எதிராக உழைப்பு சார்ந்த இயற்கை சார்ந்த செயல் திட்டங்கள் இருக்கின்றன. அதில் கம்யூன் அமைப்பு இருக்கு. 19, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய கம்யூனிசச் சமூகத்தின் கூறுகள் இங்கே என்ன இருக்கின்றன என்று பார்க்க வேண்டும். 
அவ்வாறு பார்க்கும்போதுதான் இடைநிலையில் இருப்பவர்களை அரசியல் மயப்படுத்தல் வருகிறது. உடல்ரீதியாக யாரும் நல்லவர், தீயவர் என்று இல்லை. கருத்தியல் நிலைப்பாட்டிற்கு, கருத்தியல் புரிதலுக்கு ஒருவர் வரமுடியுமென்றால் அதற்கு இடைப்பட்ட சமூகவியல்பார்வை
காந்தியத்தில் இருக்கிறது. 

கேள்வி:
உங்கள் கிரணம் கவிதைகள் பிரமிள் பாதிப்புடன் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர் கொண்டீர்கள்?
பதில்:
தமிழில் அதுவரை எழுதப்பட்ட அனைத்து வகைக் கவிதைகளையும் வாசித்து பிடித்தவைகளை மனதில் வைத்து அப்படி இருக்கக்கூடாது என எழுதப்பட்டவைதான் கிரணம் காப்பியங்கள். பிரமிள் உலகமும் பிரேதாவின் உலகமும் நேரெதிரானவை. அவருடையவை அப்பாலை, உன்னத மனித நிலை, புனித கற்பிதங்கள் போன்றவற்றைத் தம் உள்ளடக்கமாகக் கொண்டவை. எனது எழுத்துகள் சாராம்சம், புனிதம், மனித மையவாதம் போன்றவற்றை மறுதளித்த மொழி வழி மனித நிகழ்நிலையை அடிப்படையாகக் கொண்டவை. அனார்க்கிச நிகழ்த்துநிலை கவிதைகள் எனது. அதனால்தான் பிரமிள் என் கவிதைகளை வசையால் எதிர் கொண்டார். ஆபாசம் என்றார், பாலியல் பிறழ்ச்சி என்றார். தேவதேவன் கிரணம் காப்பியங்கள் பற்றி வியந்து எழுதியபோது அவரைக் கடிந்து வசை மொழிந்தார்.
கேள்வி:
எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றும் பல வகைமைகளில் எழுதுகிறவர் என்றும் அடையாளம் உங்களுக்கு இருந்தும் உங்களைப் பற்றி குறிப்பிடுவது தவிர்க்கப்படுவது ஏன், நீங்கள் களத்தில், தலித் அரசியலில் நேரடியாக வெளிப்படையாக ஈடுபடுவது காரணமாக இருக்குமா?

பதில்: என் எழுத்துகள் பற்றி எழுதும் அளவுக்குத் தமிழில் கோட்பாட்டு நுட்பம் கொண்டவர்கள் குறைவு, எனது எழுத்துகளை வாசித்து அதன் கருத்தியல் தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதுகிறவர்கள் கூட எனது அரசியலில் இருந்து விலகி இருப்பவர்கள். நீங்கள் தலித் அரசியலில் நேரடியாக ஈடுபடுகிறீர்கள் அதனால் உங்கள் கவிதைகளை இனி குறிப்பிட்டு யாரும் எழுதமாட்டார்கள் என கவலையுடன் சில நண்பர்கள் குறிப்பிடுவது ஒரு பகுதி உண்மையே. ஆனால் எனது நூல்கள் தொடர்ந்து வெளிவருகிறன்றன, வாசிக்கப்படுகின்றன. ஜமாலன் போன்ற பின்நவீன நுட்பம் அறிந்தவர்கள்தான் எனது எழுத்துகள் புனைவுகள் பற்றி எழுத முடியும், மற்றவர்களால் இயலாது, அதனால் ஒன்றும் குறைந்து விடப் போவதும் இல்லை.

கேள்வி: இனி வெளிவரப்போகும் உங்கள் எழுத்துகள் பற்றிக் கூறுங்கள். சொல் எரிந்தவனம், புறாத்தோட்டம் தொகுதிகளில் உள்ள கவிதை வகைமைகளை தொடர்ந்து எழுதுவீர்களா?
பதில்: 2019 முதல் எனது கவிதைகள் எனது புனைவெழுத்துகள், கதையெழுத்துகள் தொடர்ந்து வெளிவருகின்றன. நிகழ்த்து நிலை கவிதைகள் எனக்குப் பிடித்தமானது. வேறொருவராக இருந்து எழுதப்படும் கவிதைகள். அவை இனி ஆண்டுக்கு ஒரு தொகுதி வெளிவரும். இந்த ஆண்டு இது வரை முற்றுப் பெறாமல் இருந்த நெடுங்கதைகளும் எழுத்தாக்க எழுத்துகளும் (நாவல்கள்) வெளி வர உள்ளன. அம்பேத்கர் பற்றிய விரிவான ஒரு நூல் உருவாகி வருகிறது. திரைக்கான எழுத்து எனது எழுத்தில் புதிய ஒரு இணைப்பு, அது புதிய களங்களை நோக்கி என்னைச் செலுத்தும் என நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ் ஈழம் என மொழித் தேசம் உருவாவதை பின்நவீனத்துவ நிலையில் இருந்து ஆதரித்து எழுதிய நீங்கள், போர் முறை அரசியலை மறுத்து எழுதுகிறீர்கள். இது முரண்பாடாக உள்ளது.
பதில்: மொழி, இன, மண் சார் அடையாளங்களின் அடிப்படையில் ஒரு நாடு, தேசம் தனித்துச் செல்லவும் வாழவும் விரும்பினால் அதனை மறுப்பது பெரும் வன்முறை. அதே சமயம் மொழி, இனம், மண் சார் உணர்வுகளின் அடிப்படையில் மக்களை ஆயுதமுடையவர்களாக்கி போரில் ஈடுபடுத்திக் கொன்றொழிப்பதும் பெரும் வன்கொடுமை. விடுதலைப் புலிகள் இயக்கம், படை இதனைச் செய்தது. நான் போர் முறை அரசியலை எதன் பெயராளும் ஆதரிப்பதும் ஒப்புவதும் இல்லை. ஆனால் போரும், மோதலும் அரசுகளால் உருவாக்கப்பட்டு, மக்கள் மீது திணிக்கப்படுகின்றவை என்பதை நான் பல கட்டுரைகளில் விளக்கியும் இருக்கிறேன். விடுதலைப் புலிகள் மட்டுமல்ல எல்லா போராளிக் குழுக்களுமே பெரும் பிழை செய்திருக்கிறார்கள். இனி அந்தப் பிழை நடக்கக்கூடாது. தமிழ் ஈழம் பிறகு எப்படி உருவாகும்? தேவையெனில் மக்கள் அதனைப் போரின்றி உருவாக்கிக் கொள்ளும் சூழல் உலக அரசியலில் உருவாகலாம்
கேள்வி: இவ்வளவு காலம் அம்பேத்கரிய பௌத்தராக உங்களை அறிவித்திருந்தீர்கள். தற்போது இஸ்லாத்தைத் தழுவி உங்கள் புதிய பெயரை அறிவித்திருக்கிறீர்கள். இது எதிர்பாராத ஒன்றாக உள்ளது. இதற்கான காரணம்?
பதில்: ஆம், நான் இஸ்லாத்தை எனது மார்க்கமாக ஏற்று அல் ஷாபாஸ் ஆஷிக் என்ற பெயரை அறிவித்திருக்கிறேன். இந்தியச் சமூகமும் அரசியலும் அச்சுறுத்தும் வடிவத்திற்கு மாறியுள்ளது, இன்னும் கடுமையாக மாறலாம். சாதிவெறியும் தற்போது நவீன தொழில் நுட்ப உதவியுடன் கொடு வடிவம் பெற்றுள்ளது. இனியும் ஹிந்து அடையாளத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை, அது எனது உளஅமைப்பை மிகுந்த உளைச்சலுக்கும் வலிக்கும் உள்ளாக்குகிறது. நான் அடிப்படையில் எனது அடையாளத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்குப் பௌத்தம் பொருந்தாது. பத்து அவதாரங்களில் ஒன்றாகப் புத்தனைத் தன்வயப்படுத்தியுள்ள சானாதன-ஹிந்து பெரு மரபு பௌத்தத்தைச் செயல்பாடற்றதாக, ஒரு அமைதி அமைப்பாக மாற்றி விட்டது. ஆனாலும் நான் என்றும் பௌத்த அறம் மற்றும் மெய்விளக்க முறைக்கு மாணவனாகவே இருப்பேன். இஸ்லாம் எனக்கு கம்யூனிஸ்டாகவும், தலித் அரசியலில் இயங்குபவனாகவும் இருக்க அனுமதிக்கிறது. எனக்கான வேறு உளவியல் காரணங்களும் உள்ளன. அது பற்றி விரிவாக தனி நூல் ஒன்றை எழுத இருக்கிறேன். நான் உலக சமயங்கள் அனைத்தைப் பற்றியும் விரிவாகவே வாசித்து அறிந்திருக்கிறேன். அதில் மால்கம் எக்ஸ் கண்ட இஸ்லாத் எனக்கு அணுக்கமாக உள்ளது. பிலாலின் அல்லாஹ் அக்பர் குரல் என்னை அறியாமல் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இனி நான் யார் முன்னும் தலை வணங்கத் தேவையில்லை, எனக்குக்கீழாகவோ, எனக்கு மேலாகவோ யாரும் இல்லை… அரசும், அதிகார அமைப்புகளும் எனக்கு வெறும் சொற்களே. எனது “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்” கதையில் ஒலிக்கும் அல்லாஹ் என்ற அடைக்கள ஒலி… நான் மனத் தடுமாற்றமும் வலியும் கொண்டவனாக எழுதாத நேரங்களில் இருந்து அலைக்கழிகிறேன்… எனது வாழ் நாளில் சாதியற்ற இந்தியச் சமூகத்தைப் பார்க்கப்போவதில்லை, சமநீதி மனித அமைப்பில் ஒரு நாள் இருந்து மடியப் போவதில்லை… பெண்ணிய நிகழ்நிலையில் நான் பங்கு பெற்று கரையப் போவதில்லை ஆனால் அவற்றிற்காவே எனது உள்ளமும் உடலும் ஏங்கிக் கிடக்கிறது… எழுதி வாழ என்னை உந்தும் தலித் அரசியலும் என்னை ஊக்கப்படுத்தும் தோழர் தொல். திருமாவளவனும் எனக்குப் பித்துப் பிடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தனிமையில் நான் அல்லாஹ் என்றே அடைக்களமாக முடிகிறது. அதற்கு நான் ஓவியர் ரஃபிக் அகமதுக்கு நன்றி சொல்ல வேண்டும். பிஸ்மில்லா கானின் ஷெனாய் என்னைச் சில மணிநேரங்கள் உறங்க வைக்கிறது…அவரை 2005 இல் அவர் முன் தரையில் அமர்ந்து கேட்டதும் அவர் கைப்பற்றி அன்பைத் தெரிவித்ததும் துயருற்ற காலங்களில் நினைவில் வந்து என்னைக் குழந்தையாக்குகிறது….நுஸ்ரத் ஃபத்தே அலிகானின் குரல் என்னை ஒவ்வொரு நாளும் விழிக்க வைக்கிறது…

பிரேதாவின் பிரதிகள்

ஆண் மொழியினூடாக ஆண் மையம் சிதைக்கும் எழுத்து

யவனிகா ஸ்ரீராம்  

பாண்டிச்சேரியில் எளிய குடும்பத்தில் பிறந்து இலக்கியத்தின்பால் வாசிப்பு, படைப்பு எனத் தீவிரமான ஈடுபாடுகளை வளர்த்து 1987 – இல் பிரேதா என அறியப்பட நேர்ந்த பிரேம் சமூக வாழ்வுப் பின்னணியின் பொது யதார்த்தங்களிலிருந்து விலகி வந்தவர் அல்லது தூக்கி எறியப்பட்டவர் எனச் சொல்வது பொருத்தமானது. தனது இளம் வயதிலேயே பல்வேறு மனித சமூக இருப்புகள், அதன் விளைவுகள், வேட்கைகள், தாபங்கள் யாவற்றையும் நுண்ணுணர்வுத் தளத்தில் வைத்து ஆராய்ந்து அதற்கான விடைகளைப் பொதுவெளிகளில் அயராது தேடிச் சலித்துப் போனவர் என்ற அளவில், நிறுவனமயப்படாத ஏற்கனவே சொல்லப்பட்ட வாழ்வின் கற்பிதங்களிலிருந்து ஒரு தனியான மொழியைத் துவக்கியவர் என்றும் சொல்ல முடியும். பொது வாழ்வின் சம்பிரதாயக் கூறுகள் யாவற்றையும் அடையாளமாக ஏற்க மறுத்து வித்தியாசமான இருப்பையும் விடுதலைக்கான மாற்றையும் பண்பாடாகவும் இறைமையாகவும் வகுத்துக் கொண்டவர் என்பதை அவருடைய தொடர்ந்த படைப்புகளின் வழியாகவும்  பிரேம்-ரமேஷ் என இரட்டைப் பெயரில் எழுதப்பட்டவை வழியாகவும்  நம்மால் ஊகித்து உணர முடிகிறது.

 பின்பற்றவே இயலாத வாழ்வதிர்வுகளை இயல்பாக மேற்கொண்டு உறைந்தும் மொண்ணைத் தனமாகவும் ஆகிப்போனப் பொதுவாழ்வைத் தன் மொழியால் ஊடுருவியவர் என்று சொல்வதும்கூட அவரின் இருப்பு மற்றும் சொல்லாடல்களின் வழியாகத்தான். இப்படியாகத் தமிழ் நிலத்தின் இலக்கியம் மற்றும் அரசியல் வரலாற்றோடு உலகளவிலான மாற்றங்கள், ஆதிக்க கருத்தியல் பெருக்கம், தத்துவாதிகள், மனித உளவியல் ஆய்வாளர்கள், உற்பத்தி உறவின்வழி ஆதிச் சமூகத்திலிருந்து இன்றைய ஏகாதிபத்தியம் வரைக் கட்டமைக்கப்பட்ட யதார்த்த வரலாறு, இந்திய நவீனத்துவப் போக்குகள் என அனைத்து மாற்றங்களையும் இலக்கியம் வழியேயான ஆய்வாக மாற்றிப் படைப்புகளாகவும் தந்துகொண்டிருக்கும் பிரேம் (பிரேதா) எழுத்துகளை தமிழின் தீவிரமான இலக்கியப் பக்கங்களில் அடிக்கடிச் சந்திப்பவர்கள் அவரை நண்பராகவும்  வழிகாட்டியாகவும் உரையாடிக் கொள்பவராகவும் ஆய்வாளராகவும் படைப்பாளிகளாகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி  கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் பாலியல் இச்சையையும் உளவியல் தன்மைகளையும் அத்துடன் இணைந்த சமூக விசித்திரங்களையும் மனத்தடையற்று எப்படி இவரால் பதிவுசெய்ய முடிந்தது என ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வகையில் தடை செய்யப்பட்டு மறைமுகமாக உலவும் பிரதிகளின் வலையில் சிக்கிக் கொண்டேனோ என்றுகூட அச்சம் ஏற்பட்டது.

நான் அப்போது தமிழில் இன்னதென வகைப்படுத்த முடியாத பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளை ஒழுங்கு முறையற்று வாசித்துக் கொண்டிருப்பவனாக இருந்தேன். பல ஆதர்ச எழுத்தாளர்கள், தர்க்கவியலோடு கதைச் சொல்பவர்கள், வானம்பாடிகளின் கவிதைகள், ‘கணையாழி’ என வாசித்துக் கொண்டிருந்த சூழலில் கிரணம் எழுத்துக்களின் கவித்துவ மொழி அதிக நுட்பங்களைக் கோரி என்னை வேறொரு பக்கம் நகர்த்தியது. இதற்கிடையே பிரமிள், பசுவய்யா, கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், பிரம்மராஜன், தேவதேவன் என்று, எனது கவிதை வாசிப்பு கூடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது பல்வேறு கவிதை மொழிபெயர்ப்புகளையும் வாசிக்க வாசிக்க பலவித தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் கிரணம் எழுத்துக்களின் அச்சமற்ற வெளிப்பாடுகள், மனித நொய்மைகளின் இருப்பு, முறைதகாப்பால் இயல்புகளின் ஒப்புதல், அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா, இருள் நகரம் என்ற பெயரடைகள் என்னை வினோத உணர்நிலை களுக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் இழுத்துப் போயின.

அவற்றின் உத்திகளும் வடிவங்களும் பேசு பொருளும் என்னை இதுவரை வாசித்து வந்தப் படைப்புகளிலிருந்து வெளியேற்றியது என்றுகூடச் சொல்லலாம். நான் நம்பிவந்த மத்தியதர வர்க்க மதிப்பீடுகள், காதல், தந்தைமை, வீரம், குலப்பெருமை, தாய்மை, லட்சியம், தேசியம் போன்றவற்றின் கதையாடல்கள்; தத்துவம், வாய்மை, மெய்மை, அறம், தெய்வீகம், ஆன்மீகம், விஞ்ஞானம், பொருளாதாரம், ஞானம், ஆன்மா, மேதமை என்பவைப் பற்றிய அறிதல்களும் வாழ்முறையுடனான அவற்றிற்கான உறவும் எனக்கு சிறுவயதிலிருந்தே சிக்கலுக்குரியதாக இருந்தபடியால் கிரணம் காவியங்களில் வெளிப்பட்ட பட்டவர்த்தனமான இருப்பின் அலறல் மிக நெருக்கமானதாய் தோன்றியிருக்க வேண்டும்.

மீண்டும் ஒருமுறை கிரணம் காவியங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியபோது மொழிவழியான தர்க்க ஒழுங்கின் சிதைவுகளைக் காண நேர்ந்தது. பெருகிப் போதிக்கும் மேதமைச் சொல்லாடல்களைக் கேலிச் செய்து பேசப்படாத பிரதிகளை அதிர்வுடன் முன்வைக்கும் கலகமாக தமிழின் மொழிப் பிராந்தியத்திற்குள் ஊடுருவி நிற்கும் கிரணம் எழுத்துக்களை நான் வலியோடு கண்டடைந்தேன்.

தீர்க்க முடியாத மனித சலனங்களின் அதிகாரம் எப்படி சாதி, மத, சமயம் மற்றும் அரசாளுமைக் கருத்தியலாக இலக்கிய வடிவம் கொண்டது என்பதை, இன்று வரை வாசித்து வரும் எனக்கு கிரணம் காவியங்களின் இளம்பருவ பாலியல் பதற்றம் அதே சமயம் மூர்க்கத்தனமான அனுமதி பெறாத குற்ற வெளிப்பாடுகள் சமூகவெளிக்குள் மொழியாகப் புழங்கியது குறித்த ஆச்சிரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தொகுப்பினை வரலாற்றுப் பின்னணியோடு அதன் சமூக உறவுகளையும் ஆராய்ந்து  இவை வெளிப்பட்ட  காலம் படைப்பாளியின் பின்புலம், இவற்றின் தர்க்கம், அரசியல் எனப் பிரித்து இவற்றின் இடத்தைக் கேள்விக்குட்படுத்தும் ஒருவர் அக்காலத்தின் மற்றையப் பிரதியோடு வைத்து ஒரு ஒப்பாய்வும் செய்வாரேயானால் ஆளுமைப் பிரதிகளுக்கும் அடிமை மற்றும் விளிம்பு நிலைச் சொல்லாடல்களுக்கும் இடையே நீடித்திருக்கும் பெரும் பிளவை உணர்ந்து கொள்வார்.

அத்தோடு இன்று பின்நவீனத்துவப் பிரதியியல் ஆய்வாளராக  அறியப்படும் கிரணம் படைப்பாளியின் இளம்வயது தொடக்கத்தோடு இன்றளவு வரையிலான அவரின் நீட்சியையும் அவர் ஒப்பிட்டுப் புரிந்துக்கொள்ள முடியும்.

கிரணம் எழுத்துக்களை ஒருவித மார்க்சியப் புரிதலோடு வைத்துப் பார்க்கும்போது அவை உளவியல் தளத்துக்குள் நுழைவதையும் உளவியல் மற்றும் புனைவுத் தளத்துக்குள் வைத்துப் பார்க்கும்போது மார்க்சிய அழகியலுக்கப்பால் நகர்ந்து விடுவதையும் ஒருவேளை மார்க்சிய கண்ணோட்ட்த்தில் கை எடுக்கப்படாமல் விடுபட்ட குறிப்புகளாகவும், அதன் அறவியலுக்குள் ஒளிந்து திரியும் மறைக்கப்பட்ட கடைநிலை இருப்புகளாகவும் தென்படுவதை ஒரு யூகமாக முன் வைக்கலாம்.

 பொருள்களுக்கப்பால் மனித இருப்பின் கீழ்மைகளை, அவமானத்திற்கு உட்படுத்தா வண்னம் மெய்மைகளாக்கி தர்க்கத்துக்கு வசப்படுத்தும் இப்பிரதிகள் உலகை வேறொரு ஆரம்பத்திலிருந்து புரிந்துகொள்ள வாசகரைப் பாவனைப்படுத்துகின்றன.

வளர்ந்தும் சிதைந்தும் பயணப்படும் மனித உடலை அதன் இருப்பிலிருந்து விலக்கித்  தன்னிச்சையான அதன் விடுபடல்களை ஒடுக்கி, கோட்பாட்டின் பொருண்மை உருவிலிகளாகவும் அதற்கும் அடங்காத நிலையில் அதைச் சமூக மையத் தளத்தில் வைத்துக் கொன்றழிப்பதாகவும் இருக்கும். தத்துவ கருத்தியல் மேல் எப்போதும் ஒரு விசாரணையாக தமது மொழிதல்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரேம் அதனைத் தனது கிரணம் படைப்புகளிலேயே தொடங்கியிருக்கிறார் என்பது இப்படைப்புகளை மீண்டும் நூல் வடிவில் கொண்டு வருவதற்கான முக்கியத்துவத்தை உண்டாக்குகிறது.இன்றைய சொல்லாடல்களில் காணப்படும் தன்னிலை இருப்பிற்கான அடையாளங்கள், வேண்டுதல்களின் பாவனைகள், நிராகரிப்பின் குதூகலம், பீதியூட்டும் அபிப்பிராயங்கள், மறந்துபோவதன் அலட்சியம், அனுபவ மறுப்பு, நிலைத்தவற்றின் மீதான சோம்பல், கிளர்ச்சியூட்டும் கனவுகள், அதன் புலன்கள், வேட்கை, தாபங்கள் ஆகியவற்றோடு சமூக தன்னிலைக்கான தான்-ஐ உரசிப் பார்த்து சுயத்தன்னிலைக்கான தான்- ஐ வெளிக்குள் சோதனையாக உலவவிடுதல் அல்லது சமூகம் தான்-இல், தர்க்கம் ஏற்படுத்தி தனது இருமையின் இடத்தை உறுதி செய்தல் போன்றவை வரலாற்று ரீதியான பல தாக்கங்களின் மேலேயே நவீனத்துவ உச்சங்களாகவும் சிதைவுகளாகவும் வெளிப்படுகின்றன.

மறைமுக விடுதலையானது இரகசியத்தின் அறமாகவும் பொது வெளியின் தர்க்கங்களைச் சிதைத்தல் பகிரங்கத்தின் அறமாகவும் தமிழிலக்கியச் சொல்லாடல்கள் மாற்றம் பெற்று இன்றைய மொழி பற்றிய பல்வேறு நுட்பமான ஆய்வுகளைத் தாண்டியும் பிரேமின்  படைப்பு ஆக்கம் பெறுகிறது.

ஆனாலும் அவற்றிலிருந்து உருவாகும் வெளி பற்றிய மௌனம் தமிழ் நிலத்தின் ஆதார பண்பாட்டில் தன்னை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறதா, இல்லை மொழியின் உலக அலைச்சலின் கீழ் சர்வதேசிய தன்மை அடையச் சாதகம் கொள்கிறதா என்பதெல்லாம் சூழலில் பல சாதகமான படைப்புகள் வரும்போதுதான் இதை ஒட்டிய பேசு பொருளாக்க ஆய்வாளரால் முடியும்.

தமிழில் மொழியியல் பிரதிகளை அனுபவத்தின் சூட்சுமமாக மாற்றி தர்க்கத்தைக் குலைக்காமல் மேலதிக நுட்பங்களை எட்டியவர்கள் என்ற முறையில் பிரமிள், மௌனி போன்றவர்களை நாம் கூறும்போது படிமங்களின் வீச்சும் வாசகக் கூருணர்வும் இணைந்த ஒரு புள்ளியாகத்தான் நாம் அதை எடுத்துக் கொள்ள முடியும்.

நாளடைவில் பிரமிளோ, மௌனியோ தங்களது படைப்பில் இறந்து விடுகிறார்களா அல்லது ஒரு தலைமுறை வாசகர் முற்றிலுமாய் அற்றுப் போய்விடுகிறார்களா என்பதுதான் புதிராய் இருக்கிறது. இதுவே பிரதியில் அனுபவத்தைச் சூட்சுமமாக்கி தர்க்கப்படுத்தும் முயற்சிக்குக் கிடைக்கும் தோல்வியாக இருக்கிறது.

கிரணம் கவிதைகளின் படைப்பாளி தமது அனுபவத்தைச் சூட்சுமம் ஆக்காமல் பகிரங்கமாக்கித் தர்க்கத்தைக் குலைப்பது அல்லது யூகத்தில் விடுவதை அன்றைய மௌனி முதற்கொண்டான கவித்துவ மொழி ஆளுமைகளுக்கு ஒரு எதிரான செயல்பாடாய் கருதியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

முற்றிலும் பிரேமிளோ மௌனியோ இன்னும் சில இலக்கிய நுண்ணறிவு கொண்டவர்களோ சஞ்சரிக்க முடியாத நிலப்பகுதிகளின் இருளை நோக்கிப்  படிமவியல் மற்றும் மிகை யதார்த்த வழி குவிந்திருக்கும் கிரணம் காவியங்கள் வழி அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூபசைத்ரீகன், பிரபஞ்சனா என்கிற தத்துவத்திற்கு அகப்படாத மொழிச் சட்டகங்களை அல்லது ஒரு இயந்திரவியலை கொலை மற்றும் தற்கொலைகளின் நிலவெளியாக சிருஷ்டிப்பதன் மூலம் அறிவின் பயங்கரத்திலிருந்து விளிம்பின் மொழியை பிரேதாவின் பிரதிகள்  படைப்பாளி தன் பிரக்ஞைக்குட்பட்டே மீட்டெடுக்க முனைந்திருக்கிறார் என்பது அக்காலத்தில் நிகழ்த்திய ஒரு இலக்கிய வெளியேற்றம் என நாம் சுவீகரிக்க முடியும்.

கனவுகளின் மொழி ஒருவித பித்து நிலையை அடையும்போது எல்லா எதிர்மறைக் கூறுகளும் பொது வெளியைத் தகர்த்தபடி தனக்கான ஞாபகத்தை அதன் சிதைவிலிருந்தே புதியதாக வடிவமைத்து விடுகிறது என்பதுதான் பிரேதவின் படைப்பில்  நமது கண்டு பிடிப்பாகிறது. கிரணம் காவியங்களின் இடையே காணப்படும் உரைநடை இழைகளில் தோன்றும் படிமங்களும் உலகங்களும் இன்றைய பல இளம் கவிஞர்களின் படைப்பில் அறிந்தோ, அறியாமலோ எளிய கண்டு பிடிப்புகளாக தொடர்ந்து வெளிப்படுகின்றன.

மனித சமூகத்தின் அனைத்து இயங்கு தளங்களையும் மொழி ஒரு நீதிபதியைப் போல தீர்மானித்துக் கட்டமைத்திருக்கிறது. மொழியின் மேலதிகமான கையிருப்பினை உடையவர் தனக்கு கீழ் மொழியின் தகவலறிவற்றவர்களை வசக்கி, தான் ஒரு அதிகாரமாக செயல்படவே வரலாறு, பண்பாடு, நிர்வாகம், நன்னடத்தை, சமூக நலம் என்று ஒரு சட்டகத்தை மொழிக்குள் இறுக்கிக் கட்டுகிறார். இச்சட்டத்தை அரசியல் ரீதியாகக் கைப்பற்றும் ஒரு அமைப்பு அதன் நலன்களையும் கைப்பற்றிக் கொண்டு தன்னை முன்னிறுத்தியே ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்ற விதியை முன்மொழிகிறது. ஆக மொழியின் மேலான பண்பு நடத்தைகளைக் கைக்கொள்ள முடியாத வாய்ப்பற்ற அடையாளமற்ற மனிதக் கீழ்மைகள் போன்றவை ஆதிக்கத்தையும் அதன் நலன்களையும் மொழியின் கைக்கூலியான அரசியலைப் பயன்படுத்திப் பெறமுடியாமல் இன்னும் கற்றுத் தேறவேண்டிய சமூக வளர்ச்சியற்ற பண்பற்றத் தொகுதிகளாக தன்னளவில் இருத்தி வைக்கப்படுகின்றன என்பதுதான் உயர்ந்தோர் காட்டும் உலக அறவியல், சமூக விளிம்புகளின் சலனங்களைக் கண்காணித்து உடல் ரீதியாக கொன்றழிக்கும் சுட்சுமங்கள் இன்று அறிவிற்கு அப்பாற்பட்டு மூன்றாம் உலகங்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.

ஏறக்குறைய ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்கவியம் என்பது பல்வேறு இந்திய இன, சாதிய, பன்மைத்துவத்துக்கு கீழ் அதிகார உளவியலாகவும் கோரிக்கையின் ஏக்கமாகவும் வடிவம் கொள்ள துவங்கியிருக்கும் வேளையில் பிரேமின் பல கட்டுரைகள் நமக்குச் சமகாலத்தை இழுத்துப்பிடித்து கண்முன் நிறுத்துகின்றன. 1987 வாக்கில்  உறைந்துபோன, ஏராளமான கட்டமைப்புகளைச் சிதைத்து மாற்று வழியில் ஒரு புனைவு நாடகத்தைத் தனது கிரணம் காவியத்தின் வழி அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்.  அதன் நான்கு இதழ்களில் வெளிப்பட்ட தலைப்புகள் ‘உருவிலிகளின் மயானத்தில்’, ‘எலும்புக் கூடுகளைப் பற்றிய சில ஆராய்ச்சியுரைகள்’ ‘கபாலங்களைப் பற்றிச் சில வதந்திகளும் திறக்கப்படாத அறைகளும்’, ‘நிழல் நெரிசல்’, ‘கண்ணாடியின் முகங்கள்’,  என்பதாக வகைமைப் பட்டிருக்கின்றன.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதை முதன்முதலாக என் நண்பர்களோடு, குறிப்பாக செல்மா பிரியதர்ஷன், இனியன் போன்றவர்களுடன் வாசிக்க நேர்ந்தபோது அதன் உரையாடலின் கீழ் எங்களை வெளிப்படுத்த முடியாத பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். அவற்றை இலக்கியப் பிரதிகளாக இனம் கண்டு கொண்டபோது ஒருவித துணிச்சலும் குற்ற உணர்வின் வடிகாலும் ஏற்பட்டது. மற்றபடி அதன் தலைப்புகளை இதுவரையிலும் வேறு எந்தப் பதிவிலும் நாங்கள் காண முடியவில்லை.

ஒரு வகையில் சொல்வதனால் இவற்றை நவீனத்துவத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிரதிகள் என்று சொல்லலாம். அல்லது பின்நவீனத்தைத் தர்க்கத்துக்கு வசப்படுத்திய பிரதி என்றும் நாம் கூடுதலாக முன்வைக்கும்போது அதன் கவிதைகளில் தென்படும் சர்ரியலிசத் தன்மைகள் கடந்த 37 ஆண்டுகளில் மாற்றம் பெற்று நடைமுறை யதார்த்தங்களாய் இன்று நம்முன் நிமிர்ந்து கொண்டிருப்பதைக் காண நேர்கிறது.

பாலியல் கனவுகளின் இளம் பிராய நடத்தைகள் மனத்தடையற்று பதிவாகி இருக்கும் கிரணம் எழுத்துகள் அதீதன், ஆத்மார்த்தி, அரூப சைத்ரீகன், பிரேதா, பிரேதன் போன்ற சொல்லப்படாத உருவிலிகளுக்குள் நடந்த உரையாடலாய் இருப்பது நவீனத்துவ கவிதையியலைத் தாண்டிய புதிய உத்தியாய் இருப்பதை மறுவாசிப்பில் உணர முடிந்தது.

சமஸ்கிருதச் சொற்களை அதன் உள்ளார்ந்த பொருளிலேயே பயன்படுத்தத் தெரிந்திருக்கும் படைப்பாளி கவித்துவத்தின் மொழிச் சிக்கனம் மற்றும் ஆழ்மன அடுக்குகளில் படிந்து கிடக்கும் பரவசங்களின் மீதான ஆர்வங்களை ஒரு வீச்சாக எழுப்ப வேண்டும் என்கிற அளவில் அவற்றைப் பயன்படுத்தி இருக்கக்கூடும். ஆனால் அவற்றைத் தமிழ்ப்படுத்தி இணைக்க முயன்றாலும்கூட வீர்யம் குறைவுபடாது. என்பதே எப்போதும் புதியதாகத் தோற்றமளிக்கும் கிரணம் கவிதைகளின் படைப்பாக்க வெற்றி.

சிதைவுண்ட, பிளவுண்ட, பிறழ்வு மற்றும் வாதைகள், வலிகள் என ஆண், பெண் உடல்களின் கதறல் ஒலிக்கும் கிரணம் இதழில் வந்த இக்காவியங்கள் முழுமையாக நூல் வடிவம் பெறும் போது அதன் மொழியானது, வாசிப்பில் என்ன சிக்கலைக் கொண்டு வந்தாலும் அது தரும் அதிர்வுகள் உடலின் பிரக்ஞைக்காக மனம் அலையும் வெளியின் மர்மங்கள், பசி, காமம், என்ற இயல்பூக்கத்தின் மீதான வேட்கை, விழைவு, தாபங்களை இறுகப் பற்றிக்கொண்டு கலாச்சார, பொருளாதார, அரசியல் கண்காணிப்பிலிருந்து வெளியேறும் உடலின் அறக் கோரிக்கைகள் வழியாக இயங்கி ஒரு இளம் படைப்பாளி முதல் நெருக்கடி கொண்ட மனதின் விடுதலைக்காக ஏங்கும் எவரொருவரையும் அது பகிரங்கமாக பிரதிநிதிப் படுத்துவதைப் புதிய அறமாக நாம் பார்க்க முடியும்.

அந்த வகையில் தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிரணம் காப்பியங்கள்  அளித்துள்ள மாற்றுப் பார்வை மிக முக்கியமானது. அது இப்போது பிரேதாவின் பிரதிகள்  என்ற பெயரில் எதிர் வெளியீடாக வெளிவருவது தற்கால நவீன தமிழ்க் கவிதையின் பாய்ச்சலுக்கு மேலுமான ஒரு உந்துதலாக இருக்கும் என்பது என் போன்றவரின் நம்பிக்கை.

எழுதிச் செல்லும் விதியின் கை- பிரேம்

ஓர் அறிக்கை:

கிரணம்-1 , அக்டோபர் 1987

பிரபஞ்ச விகாசத்தின் சாயலாய் ஒளிர வேண்டிய மனித மனங்கள்-சூன்யத்தின் உறைவுகளாய்(ச்) சமைந்து சவப்பேழைகளாய்(ப்) புதைந்து நிற்கும் அவலம் நம் கணங்கள். சகல திசைகளையும் உட்குடைந்து வியாபிக்கும் அகக் கதிர்வீச்சு இன்று அந்தக நார்க் குவியல்களாய் சிக்கலுற்று எஞ்சியது என்பது அவலம் கனலும் நிஜம். உறைந்துபோன படிமங்களால் தன்னைச் சுற்றி சுவர் சமைத்துக்கொண்ட இந்த நூற்றாண்டு மனிதனின் உயிர்த்தல் பற்றிய கேள்விகள் கூட புதுப்பிக்கப்படாமல் பின்னமுற்றுக் கிடக்கின்றன. இந்த மயான வெளியில்தான் இன்றைய ஒவ்வொரு கலைஞனும் அனாதை பிம்பமாய் உறைந்து நிற்க வேண்டியிருக்கிறது. நிர்ணயங்களின் குமிழ்களுக்குள் அடங்காமல் பிரவகித்து மறையும் நிஜங்களின் பிரமாண்டம் கண்டு அதிசயிக்கும் அதே கணத்தில் மட்கிப்போன மாமிசத் திரளின் புழுக்களாய் சலனித்துக் கிடக்கும் மனிதக் கூட்டத்தின் விரூபம் கண்டு உயிரழுகிச் சொட்ட வாதையுறுதலும் நேர்கிறது. சவத்தன்மைக்கு எதிரான கலகம் மட்டுமே இன்றைய கலைகள் என்பது நிஜ கலைஞன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்தே இருக்கிறது. நிர்மாணங்கள் அனைத்தையும் சிதைப்பதைத் தவிர கலைகளின் இக்கண இயக்கம் வேறேதும் இல்லை என்பதை நாம் என்றோ உணர்வுற்றுத் தெளிந்துவிட்டோம். ஆனால் தமிழ்ச் சூழலில்- இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் பரவலாய் இந்தியச் சூழலில் உக்ரம் என்பதும் முற்றான கலகம் என்பதும் இல்லாத ஒன்றாக எஞ்சி நிற்கிறது. மூர்க்கமான ஆய்வுகளே கலைகளின் திசையியக்கம் என்பது இன்னும் தெளிவுறாத நிலையில் பிரேதங்களின் குறிகளைச் சுவைத்து(த்) தணியும் தத்துவ விசாரங்களே இன்னும் அறிவார்த்த(த்) தளங்களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சவத்தனவே வாழ்க்கையான ஒரு அமைப்பில் உயிர்ப்புள்ள தத்துவங்கள் சலனம் கொள்ள முடியாது என்பது சரித்திர உண்மை என்றாலும் உலகின் பிறபாகங்களில் அவற்றிற்கான குவிமையங்கள் இருந்தே வந்திருக்கின்றன. வீர்யமான கலைப்படைப்புகளும் உக்ரமான மனோவயக் கலகங்களும் முற்றிலுமே இல்லாத சூழல் என்று நாம் தமிழ்ச் சூழலைக் கூற வேண்டும். இங்கிருந்து உலகளவில் கூறக்கூடிய ஒரு நவீனத்தையோ ஒரு கவிதையையோ நிச்சயம் நவீன சிந்தனையுள்ள யாரும் முன் மொழிய முடியாது. இதற்கான காரணங்கள் இரண்டொரு தொடர்களில் விளக்கக் கூடியவை இல்லை. அனைத்தையும் சிதைத்துச் சிதைத்து பிரபஞ்ச நிஜத்தை நோக்கி இயங்கக் கூடிய அதீத கலா இயக்கம் இந்திய மனோ நிலையில் என்றுமே கிடையாது. உலக அளவிலேயே கடைசி இரண்டு நூற்றாண்டு அளவிலான தத்துவ நோக்குகளே மனித மையம் கொண்ட சிந்தனைகளை முன் வைத்தன. மகோன்னதங்களை நோக்கிய விகசிப்பே நிஜமான மனிதத் தேடுகைகள் என்பதை அகம் புறம் அனைத்துமாகக் கொண்டு இயங்கும்- இயங்க எத்தனிக்கும் ஒரு கலை இலக்கிய ஆய்வுக் கூடமே ‘கிரணம்’ உலக கலகக்காரர்கள் அனைவரையும் சக ஜீவன்களாகக் கொண்டும்-கலைஞர்களைத் தவிர வேறு யாரையும் மனிதர்களாகவே கணிக்காத வெறியோடு இயங்கும் அன்னியர்களின் நிலவறையே ‘கிரணம்’. அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பால் பிரபஞ்ச நுண்ணுணர்வு என்ற உச்சத்தை நோக்கிய முயக்கமே இதன் ஒவ்வொரு சலனமாகிறது. உலக அளவிலான கலைப் படைப்புகளும் படைப்புகளிலிருந்து பிளவுபடாத வாழ்க்கையுமே இதன் ஆதர்சன கனலாக ஒளிரும். இதற்கொன்று தனியான நோக்கங்களோ சாதனைகளோ அவலங்களோ இல்லை. உலக எதிர்க் கலைஞர்கள் நிகழ்த்திய-நிகழ்த்திக் கொண்டிருக்கும்-நிகழ்த்தப் போகும் கலகங்களின் சிறு அதிர்வே இதன் உயிர்ப்பு. தமிழ்ச் சூழலில் நிகழ்வதென்பது சரித்திர விபத்து. ‘கிரணம்’ எதிர் மதிப்பீடுகளின் ஆய்வுக் கூடமாகவும் கலக சிருஷ்டிகளின் சித்ரகூடமாகவும் இருக்கும் என்பது இந்த நேரத்தில் கூறப்பட வேண்டியது. பிற-இதன் இயக்கத்தின் போக்கில் உணர்த்தப்படும்… –பிரேம்

அறிக்கையால் அலைந்த காலம்

இந்த ஒரு பக்க அறிக்கை அல்லது இதழுக்கான அறிவிப்பு எழுதப்பட்ட ஆண்டு 1987. இதனைத் தன் அழகிய கையெழுத்தால் படியெடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பொதினி வளவன். இதனை நான் எழுதிய போது எனது வயது 22.  எனது பெரும் ஆக்கங்கள் பல பிரேதா என்ற பெயரில் எழுதப்பட்ட போது எனது வயது 17-20 என இருந்தது. ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் இதுபோன்ற எழுத்துகளை வெளியிட முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பார் சாரு நிவேதிதா என இன்று உலகப் புகழ் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர். அவர் அப்போது புதுச்சேரியில் இல்லம் கொண்டிருந்தார். தில்லியில் பல ஆண்டுகள் வேலையில் இருந்து 1000-1500 நூல்களுடன் புதுவையின் பொறியியல் கல்லூரிக்கு பணிமாற்றம் செய்து கொண்டு வந்திருந்தார். அமரந்தா என்ற பெயரில் இன்று பல மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் எழுத்தாளர் அப்போது சம்யுக்தா என்ற பெயரில் மொழிபெயர்ப்புகள் செய்து வந்தார்.   முனியாண்டி, அறிவழகன், சாரு நிவேதிதா என ஒரே நாளில் மூன்று பெயர்களில் புழங்கி வந்த சாரு நிவேதிதா நண்பர் ஆபிதீன் கடிதங்களில் ரவி என்ற பெயரில் உலவி வந்தார். கிரணம் இதழ், அதனை இதழ் எனச் சொல்வது பொருந்தாது என்றாலும் இதழ் என்ற வடிவில்தான் அது வெளிவந்தது. அது வெளி வந்த போது சாரு மீண்டும் தில்லிக்குத் திருப்ப வேண்டியிருந்தது. அதற்கு முன் 1984-86 காலகட்டமாக இருக்கலாம் இனி தில்லிக்குத் திரும்பவேண்டியதில்லை என்ற ஆறுதலோடும், திட்டங்களோடும்தான் அவர் குடும்பத்துடன் புதுவையில் குடியேறியிருந்தார். ஆனால் அவருடைய திட்டங்கள், சம்யுக்தாவின் முடிவுகள் அனைத்தும் தகர்ந்து வேலையை விட்டு அச்சகம் வைத்து புதுவையிலேயே வாழலாம் என்ற முடிவை எடுத்து அதற்காகப் பல மாதங்கள் உழைத்து உடைபட்டு மீண்டும் இருவரும் தில்லி திரும்பியிருந்தனர். இருவருமே அலுவலக தட்டச்சு உதவியாளர்களாக இருந்தார்கள் (அப்படியே அவர்களை நான் பார்த்திருக்கிறேன்). அந்தக் காலகட்டம் பற்றித் தனியே எழுதுவேன். இப்போது நான் சொல்ல வருவது, பெரும் இடிபாடுகளுடன் அலைச்சலும் அல்லலும் கொண்ட ஒரு காலகட்டத்தில் “கிரணம்” என்ற பெயரில் நான் பத்திரிகை நடத்தப் போகிறேன் என சாரு நிவேதிதா அறிவித்த போது எனக்குப் படபடப்பு அதிகமானது. எனது சில படைப்புகளை தன் கையெழுத்தில் படியெடுத்து பத்திரிகைகளுக்கு புகழுரைகளுடன் அனுப்பி வைத்து அவர்கள் இந்த நெடுங்கவிதைகளை தனி நூலாத்தான் வெளியிட வேண்டும் பத்திரிகையில் வெளியிட இயலாது எனத் தெரிவிப்பார்கள், தெரிவிக்காமல் மறந்து போவார்கள். “லயம்” என்றொரு பத்திரிகைக்கு அனுப்பி விட்டு என்னிடம் தெரிவித்தார், ஏன் சாரு அந்தப் பத்திரிகைக்கு என வருந்திவிட்டு மறந்தும் போனேன். யாரும் நெடுங்கவிதைகளை வெளியிடவில்லை எனக் கடும் கோபத்தில் இருந்தார் சாரு நிவேதிதா. அந்த சமயத்தில் “எக்சிஸ்டென்ஷியலிமும் பேன்சி பனியன்களும்“ நாவலின் முதல் கட்ட எழுத்து அவர் கையில் இருந்தது. நான் அவரை முதன் முதலாகச் அவரது அலுவலகத்தில் சந்தித்த அன்று என் கையில் அந்த ஃபூல்ஸ்கேப் பக்க நோட்டைக் கொடுத்து பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு தட்டச்சு, சுருக்கெழுத்து வேலையில் இருந்தார். இடையில் ஒரு டீ, மீண்டும் அவர் தட்டச்சு நான் படிப்பு. மதிய உணவை அவரும் சம்யுக்தாவும் பிரித்த போது நான் புறப்படுகிறேன் என்று எழுந்தேன். கிளம்பரிங்களா, அதெல்லாம் இல்லை உங்களுக்கும் சாப்பாடு இருக்கிறது என்ற பொழுது நெகிழ்ந்துதான் போனேன். அவர்கள் இருவரும் பல காலம் என்னை நெகிழ வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அவரை நான் அன்று நெகிழ வைத்தேன். சாப்பிடும் பொழுதும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் படித்தபோது சாப்பிடுங்க பிறகு படிக்கலாம் என்றார். இல்ல இன்னும் கொஞ்சம் பக்கம்தான் இருக்கு போறதுக்கு முன்ன முடிக்கனும் இல்லையா? என்றேன். என்னது படிச்சி முடிச்சிட்டிங்களா? அவர் முகத்தில் அன்று கண்ட ஒளியும் ஒலியும் பல ஆண்டுகள் தொடர்ந்தது. அன்று மாலை வரை அவருடன் இருக்கவேண்டி வந்தது. அதற்குப் பிறகு அது பல ஆண்டுகள் தொடர்ந்தது. இந்தப் பகுதியை விரிவாக எழுதினால் நல்லது, அந்த பாத்திரம் என்ன ஆனது எனப்பேசியும் சிலவற்றைச் சொல்லி எழுதியும், எழுதிச் செல்லும் விதியின் கையாக நாவல் வளர்ந்தது. இறுதியாகத் தொகுத்து வகுத்து முன்னுரை எழுதிக் கொடுத்த போது  எக்சிஸ்டென்சலிசமும் பேன்சி பனியனும் வெளிவந்து பிளாக் பஸ்டராகி, தினமலர் விருது கிடைத்து….  அது ஒரு தனிக்கதை,

இப்போது நான் சொல்ல வந்தது தன் நாவலும் எழுத்தும் வெளிவர வாய்ப்பற்ற காலத்தில் எனது எழுத்துகளைச் சுமந்து கொண்டு தில்லி வந்து 10 இதழ்களில் இவற்றையெல்லாம் வெளியிட்ட பின் நிறுத்திவிடலாம் என்று ஒரு கடிதம் எழுதினார் சாரு நிவேதிதா. பிரேதாவின் எழுத்திலிருந்த ஒரு கற்பனை இதழ் “கிரணம்”, அதுவே அச்சு இதழுக்குப் பெயரானது. மிதிலா அச்சகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டது “இதழ் அச்சு வேலை செய்து தரலாம், ஆனால் அச்சகத்தின் பெயர் அதிலிருக்காது” ஏன் அப்படி? பெயர் கிரணத்தில் இருந்தால் அச்சகம் இருக்காது! அப்படித்தான் அன்று நிலை, கடைசி இதழ்வரை அச்சக்தின் பெயர் இதழில் பதிவாகவே இல்லை என்று நினைவு.  அது பற்றி “கச்சேரி நினைவுகள்” என்ற தலைப்பில் தனிக்கதை எழுதலாம்.

முதல் இதழுக்குத் தலையங்கம், அறிமுகம் என ஒன்றை ஆசிரியர்தானே எழுத வேண்டும், எழுதுங்கள் சாரு என்ற போது, இல்ல நீங்கதான் எழுதனும் என்றார். அப்போது ஒரு வீடியோ கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பகலில் எழுதி முடித்துவிட்டு விற்க வைத்திருந்த மிர்ச் மசாலா (கேதன் மேத்தா) படத்தைக் கள்ளத்தனமாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாலை வந்த தோழர் பொதினி வளவனிடம் எழுதியதைக் கொடுத்தேன். இரவுக்குள் அது அச்சு போன்ற கையெழுத்தில் இரு பக்கங்களானது. எனது கிறுக்கல் கையெழுத்தை என்னிடம் வைத்துக் கொண்டு, நற்படியை அடுத்த நாள் அஞ்சலில் சேர்த்தேன் தில்லி முகவரிக்கு.

இதழ் வெளிவந்த போது தலையங்கம் அனைவரையும் ஆத்திரமூட்டியது, அப்படியே சிலரை ஆனந்தப் படுத்தியது. டாடாயசம், சர்ரியலிசம் உருவானபோது பாரிஸ் நகரில் யாரோ ஒரு ஆள் இப்படித்தான் எழுதி இருப்பார் என்ற மிதப்பில்தான் நான் அன்று அதனை எழுதினேன். அது தமிழிலக்கியத்தை மாற்றத் தொடங்கியது, உடன்பாட்டிலும் பெரும் வெறுப்பிலும் இலக்கிய தொழிற்சாலை தனது புதிய உற்பத்தியைத் தொடங்கியது. புதுச்சேரி வட்டம் என்ற பெயருடன் தமிழக இலக்கியப் பேச்சு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியது, ஒற்றைக் கிரணத்தை “நிறப்பிரிகை“ செய்து பலவண்ணங்களில் செய்து வெளியிட தோழர்கள் வந்தார்கள்..  அது இன்று புதிய  போக்குகளாய்ப் பரவிக் கிடக்கிறது.

இன்று அந்த அறிக்கையைப் படித்துப் பார்க்கிறேன். எனக்குப் பிடிக்கவில்லை. அதில் சொல்லப் பட்டவைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த அறிக்கை பிடிக்கவில்லை. சொற்குற்றமா, பொருட் குற்றமா, உங்குத்தமா, எங்குத்தமா? யார நான் குத்தஞ்சொல்ல? என அது என் முன் கிடக்கிறது. அதனைப் பதிப்பித்த சாரு நிவேதிதாவுக்கு அது பிடிக்காமல் போனது. அவர் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையும் பின்னாளில் பிடிக்காமல் போனது… அது ஒரு பெரிய கதை.

நான்தான் பொடியன் அவர் என்னை விட பன்னண்டு பதிமூணு வயசு பெரியவர் இல்லையா சொல்லித் திருத்தியிருக்கலாம். இது போல எழுதினால் வேலையெல்லாம் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே எனது ஐந்து நெடும் புனைவுக் கவிதைகளை அச்சாக்கி விட்டார். கிரணம் இதழ்களில் வெளிவந்ததை விட இரண்டு மூன்று மடங்கு தடிமனான படைப்புகள் நாலு ஐந்து கையெழுத்துப் படியாக இருந்தது. ஐந்தாவது இதழில் பெரும் படைப்பு ஒன்று வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது, ஆனால் வெளியாக வில்லை. புதைக்கப்பட்ட பிரிதிகளாகவும், எரிக்கப்பட்ட ஏடுகளாகவும் அவை மறைந்து போயின. மாலதி மைத்ரி வந்து அதில் ஒன்றை மட்டும் மீட்டு அச்சாக்கினார், தனக்கு வீட்டுமனை வாங்க வைத்திருந்த பணத்தில். எழுதத் தெம்புள்ளவன் கவிஞன் எரிக்கத் தெம்புள்ளவன் மகாகவிஞன் என்ற ஆணவத்தில், அகங்காரத்தில்,  மமதையில் அலைந்த காலம் அது. இல்லையென்றால் உடன் எழுத வந்த ஒருவரே இதனையெல்லாம் எரித்துவிடலாம் என்று சொன்னபோது, எரிந்து போகட்டும் என விட்டிருப்பேனா?

இன்று மமதை அழிந்து அலைச்சல் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. அதீதன், ஆத்மார்த்தி, பிரேதா, பிரேதன், அரூப சைத்ரீகன், அரூப தர்சினி என்ற சொல்லுயிரிகள் என்னுடன் உரையாட வரும் போது சற்றுக் கோபமாகச் சொல்கிறார்கள். எங்களையும் எரித்திருந்தால் இப்படி அலைந்திருக்க மாட்டாயே என. அவர்களுக்கும் கூட அந்த அறிக்கை பிடிக்கவில்லையாம் அப்போது. ஏன் சொல்லவில்லை என்று கேட்டால் யார் சொல்லி நீ கேட்பாய், சொன்ன பேச்சைக் கேட்கும் ஆளாக இருந்தால் இப்படியா எழுதிக் கொண்டிருப்பாய்? எனப் பதில் வருகிறது.

மீண்டும் அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள். சமஸ்கிருத மயமான வாக்கியங்கள். தமிழுக்குத் தேவைற்ற இறுமாப்பு எல்லாம் இருந்தாலும், இந்த மருந்தும் வேலைசெய்திருக்கிறதே! சொல் அதுவே சிறந்த செயல், அஞ்சாமல் சொல் அதுவே சிறந்த வாழ்க்கை. என்ன நான் சொல்வது சரிதானே?

[ஒரு கமுக்கக் குறிப்பு: எழுத்து வழியாக மட்டுமே அறிந்திருந்த சிலர் சாரு நிவேதிதா, பிரேதா என்ற பெயர்களைப் பெண்கள் என நினைத்திருந்ததாகப் பிறகு சொல்லிச் சிரிப்பார்கள். ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய சிறு வெளியீட்டைக் கொடுத்துப் படிக்கக் கொடுத்த ஒர் அரபிந்தோ ஆசிர நண்பர் மறுநாள் இது ஆண் எழுத்தாளரா பெண் எழுத்தாளரா என்று என்னிடம் கேட்டார். இது ஆண்தான் ஆண்மட்டுமே இப்படி பிடிக்காத ஒரு நூலுக்கு தனி ஒரு நூலை எழுதி வெளியிடவும் முடியும் என்றேன். அவர்தான் ஒரு நாள் சாரு நிவேதிதாவை ரோமன் ரோலான் நூலகத்தின் முன் வைத்து அதோ நிற்கிறாரே அவர்தான் என அறிமுகப்படுத்தினார் (1983-1984). இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் யார் என்றுன், மீசை முறுக்கிவிட்டபடி பேசிக்கிட்டு இருக்காரே அவர்தான் என்றார். அவர் அன்று நீலக் கோடு போட்ட பேன்ஸி பனியன் அணிந்திருந்தார். அவருடன் நின்றவர் ஒரு ML தோழராம், அவர் மழித்த முகத்துடன் இருந்தார். நான் அரபிந்தோ நண்பரிடம் சொன்னேன். ஒருவர் சாரு, மற்றவர் நிவேதிதா. நண்பர் அன்று என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வில்லை. பிறகு சில நாட்கள் சென்ற பின்தான் அவரிடம் நானே சென்ற பேசினேன். அன்று பையில் ஜே.ஜே சில குறிப்புகள் அட்டையுடன் இருந்தது. அதனை வாங்கி ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். ஏனெனில் எங்கள் நூலகத்தில் புத்தகம் வாங்கியதும் நூல் அட்டையைக் கிழித்து விட்டு கெட்டி அட்டையில் பைண்ட் செய்துதான் அடுக்கில் வைப்பார்கள். அன்று அவருடைய சிறு வெளியீட்டை நான் படித்தது பற்றிப் பேசினேன், அவருடைய முகத்தில் ஒளிஒலியும். ஒரு நாவலைப் படிப்பதே பெரிய விஷயம், அது பற்றி எழுதி தனி வெளியீடாக இலவசமாகத் தருவது என்றால்? ஆம், தமிழ் அன்று அவருக்குச் சோறு போடவில்லை, அவர்தான் தமிழுக்குச் சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருந்தார். வளர்ந்த பின் திருப்பிச் செய்ய வேண்டியது நன்றிக் கடன் இல்லையா?]  

(வதந்திகளின் வாசனை:  சிறுபத்திரிகைகளைப் பழி தீர்க்க பிரேதா என்ற பெயரில் எழுதி அனுப்பியது சாரு நிவேதிதாதான். பழமலை என்ற பாட்டாளிக் கவிஞர் என்னை முதன் முதலாகச் சந்தித்த போது சும்மா சொல்லுங்க “உங்க வயசுக்கு இத நீங்க எழுத முடியாது, சாரு நிவேதிதா எழுதி உங்க பேருள போடுறாரு சரிதானே?” என்று பாசத்துடன் கேட்டார். “ஆமாம் இதில் உள்ள ஒவ்வொரு வரியும் அவர் கையால் எழுதப் பட்டதுதான்” என்றேன். பாத்திங்களா ? அவர் முகத்தில் அக்கினிக் குண்டத்தின் அடர்த்தியான வெளிச்சம். “எனது புரியாத கையெழுத்தை புரியும் படி ஒவ்வொரு வரியாய் எழுதி அச்சகத்துக்குத் தருவது அவர்தான்.” பழமலை பல்லைக் கடித்துக் கொண்டு நிலக்கிழார் சிரிப்பைச் சிரித்தார். நல்லா பேசிறிங்க.)

பாரிஸ் நகரில் நடப்பதாய் பாவனை
பாரி முனையின் வெயில் கால வேதனை
தலைநகரில் இருந்து வந்த இருள்நகர் எழுத்து
எரிக்கப்பட்ட ஏடுகள் பல எஞ்சி நின்றவை சில

பழமை துதிக்கும் பாடல்களும் பாவலர் படுத்தும் பாடுகளும் -பிரேம்

பாட்டுப் புலவன் பாரதி  தானும் சிக்கித் தமிழர்களையும் சிக்க வைத்த  ஒரு இடம் உண்டு.

பாட்டுக்கு ஓர் புலவனா அல்லது பலரில் அவனும் ஒரு புலவனா? என்கிற குற்றாலச் சண்டையை அப்புறமாக வைத்துக்கொள்ளலாம்.

மகாகவி என்றும் தேசிய கவி என்றும் தெய்வக் கவிதை என்றும் ‘எந்நாளும்‌ அழியாத மாகவிதை’ என்றும் நவீன அழகியலுக்கோ, நவீன இலக்கிய நிகழ்நிலைக்கோ, நவீனத் தன்னிலை உருவாக்கத்திற்கோ  ஒவ்வாத உதவாத (இது பின்நவீன விளக்கம் அல்ல) அடையாளங்களைத் தமிழ்க் கவிகளும் (நெடிலும் அதற்குள் அடக்கம்) எழுத்துக் கலைஞர்களும் (எழுத்து   ஒரு கலை, அது ஒரு பயிற்சித் திறன்)  பாவித்திரிகிற, காவித்திரிகிற, அணிந்து உழல்கிற  ஒரு துயர் நிலையின் தொடக்கம் சுப்ரமணிய பாரதி எனச் சொன்னால்  போச்சுது போச்சுது பாரத நாடு!     போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! “ என்று பொங்கி எழுந்து  “இது பொறுப்பதில்லை  தம்பி  எரிதழல் கொண்டுவா இவன் கையை எரித்திடுவோம்” என ஓங்காரமிடும்  கவிப்பித்தர்கள், காவியநாயகர்கள், மக்காகவிகள் சற்றே ஒதுங்கி நின்று கேட்டறிக!

உங்கள் உலகத்தரம் கொண்ட ஒப்பாரிகளையும், ஒப்பிலா லகரிகளையும் செவி செயல்படத் தொடங்கிய நாள் முதல் கேட்டும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றோர் துயர்நிலையை எண்ணத்தில் கொண்டு “”ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்”  என்று  பொறுமையுடன்  இதனைக் கேட்டருள்க.

புராதனத்தை புதுமைக்குள் புகுத்தியும் புராதனமே புதுமைதான் என்றும் புதுமைகளை உருவாக்கும்  பட்டறைக்குள் புகுந்து புதியன உருவாகாமல் பார்த்துக் கொண்ட சிலரில் பாரதி ஒருவர் என்பதைப் பற்றி காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள் பன்னிரு தொகுதிகளையும் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பையும் படித்தும் குடித்தும்,   பலவாறானும் ஆய்தும், தோய்ந்தும் நான் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டு  “நல்லதோர் வீணை செய்தே” எனும் தன்மையத் தவிப்பு எங்கே கொண்டு செல்லும் எனக் கண்டறிந்து நானும் துயரே உற்றேன்.

 “தசையினைத் தீசுடினும்  சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்“ என்ற தெய்விக நிலையில் நான் சிக்கி இருந்த காலத்தில் உவப்பாக இருந்த பாரதியின் “நானும் ஒரு சித்தனே” என்ற நிலை நாள்பட நாள்பட ஒரு நோயென்று தெளிந்தேன். இதுவும் ஒரு பித்தமே என்று நுண்ணறிவால் கண்டு சொல்லும் பின்நவீனத் தெய்வீகர்களிடம் நான் கேட்பது, சுவைபுதிது நயம்புதிது’ வளம்புதிது சொற்புதிது  எனத் தேடி அலையும் போது பித்தமும் புதிதாக இருக்க வேண்டும் எனப்  புதிய பெயரில் புதிய உருவில் நானும் ஒரு பித்தனே என்று சொல்வதில் என்ன தவறு?

“புவியனைத்தும்‌ போற்றிடவான்‌ புகழ்படைத்துத்‌ தமிழ்மொழியைப்‌ புகழி லேற்றுங்‌ கவியரசர்‌ தமிழ்நாட்டுக்‌ கில்லையெனும் வசையென்னாற்‌ கழிந்த தன்றே?

எனத் தருக்கியும் முறுக்கியும் திரிந்த  பழம் பித்தம் கலைந்து”

பழங்கவியைப் புதியதென்று சொல்லிச் சொல்லி பலதொகுப்பை நிதம்  எழுதிக் குவிப்பதற்கு  பாழும்மனம் இடம்கொடுக்க மறுக்குதப்பா  பத்துவரி புதிதாகப் படைத்துவிட்டு

பக்கத்து ஊரிலுள்ள  கவிகள் தாமும் படைக்கின்ற  வரிபுதிதாய்க் கேட்டுக்கொண்டு பார் முழுதும் எழுதுகிற பலரில் ஒன்றாய்

பதம் பெற்று வாழ்வதற்கு அருள்வாய் நெஞ்சே!

-என்ற புதுப்பித்தம்  பிடிப்பதில் ஒரு குற்றம்தான் உண்டோ?

வசன கவிதை

“வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.” என்று பாரதி போல நம்பும் பாக்கியம் எனக்கில்லாத போது  நான் என்ன செய்வது?

வேதியர் தெய்வம், வேதமும் தெய்வம், பூமித் தெய்வம், புத்தி தெய்வம், ஞானம் தெய்வம், ஞானியர் தெய்வம்,  நாடும் தெய்வம், எழுத்து தெய்வம், எழுது கோல் தெய்வம், நானும் தெய்வம்… அப்பா சாமி இப்படியே போனால் நீயும் தெய்வம் என்று சொல்லி முடித்துவிடலாம் எனத் தோன்றும், ஆனால் முடியாது, ஏன்?  பிறகு வெள்ளைத் தாமரை பூவில் இருப்பவள் மட்டும் அல்ல வெள்ளைக் கார சீமாட்டியும் தெய்வம், வெள்ளைக்காரர் நாடும் தெய்வம், வெள்ளையர் ஆட்சியும் தெய்வம், வெள்ளையர் பாஷையும் தெய்வம் என அது நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுமே (பாரதி பாஷையில்) அதனால் தெய்வம் நீ என்றுணர்  அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு அறிவு தெய்வம், அழகு தெய்வம், அபினி தெய்வம், பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம், நாளும் தெய்வம், நானே தெய்வம் என ஒரு நோய்வலையில் ஆனந்தமாகச் சிக்கி “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா?” எனப்பாடித் திரியலாம் “பார்” போற்ற வாழலாம் என்ற பழப்பித்தத்தில் இருந்து நான் 2007 தப்பி புதிய ஒரு பித்தத் தடத்தில்  பயணிக்கப்  புறப்பட்டேன்,

பாரதியை மகாகவியென்றும் பாரதி பாடல்களை பால்வீதி மண்டலமென்றும் நம்பிய காலங்களில்

“ஒற்றைச் சொல்லில் ஒரு காவியம் அது

உனக்குத் தெரிந்த திருவாக்கியம்

என்னை அழைக்க நீ ஒலிக்கும் சொல்லில்

இருக்கிறது பெண்ணே புது பாவியம்”  

என சும்மா சுழற்றியடித்து சுகவனத்தில் திரிந்த நாட்களை நான் இழந்து விட்டேன்.

எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அது! தேச பக்தி 20 சதம், தெய்வ பக்தி 20 சதம்,  ஆரிய தேசம்  20 சதம், அன்னைத் தமிழ் ஒரு 10 சதம், ஆதியில் இருந்த தேசம் 20 சதம்,  அன்னை மகாளி  10 சதம் என ஒரு வண்ணமயமான ஒரு கலவை அது.  ஹிந்து  தர்மத்தால் நிலை பெற்ற தேசம், ஆரிய ராணியின் அருள் பெற்ற தெய்வீகம், இருந்தாலும் சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சுவை புதிது… எல்லாம் புதிது என்ற கவித் திமிர்  கொண்ட  ஜீவனாய்  நவீன அரசியல் மண்டலத்தில் உலவவிட்டு சற்று இடைவெளிக்குப் பின்  தெய்வீக நிலம்,  தெய்வீகப் பாடல்,  தேசியத் தொன்மம், தெய்வமாக்கவிதை,  தெய்வீகராகம், திகட்டாத பாடல் எனத் தாந்திரிகமாக பின்நவீன  உருவெடுத்து  உய்கிற நிலை எனக்கு வாய்க்காமல் போனதே என்ற வருத்தத்தில் ஏதேதோ எழுதுகிற நிலை எனக்கு நேர்ந்தே விட்டதோ?

சரி அதனைப் பற்றி ஒரு ரொபர்தோ பொலன்யோ நாவலையோ சூலியோ கொர்த்தசார்  நாவலையோ பிறகு எழுதுகிறேன்.

அதற்கு முன் நான் பொதியாகச் சுமந்த அலைகிற குறிப்புகளில் இருந்து ஒரு சிறு பகுதி.

[முன் குறிப்பு : “தூய நன்மை, துல்லியமான உண்மை, மீளமுடியாத வன்முறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வைத்திருந்த  குறிப்புகளைத்  தற்செயலாகக் காண நேர்ந்தது. அதன் விளக்க முறை, புரிதல் முறை எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் ஒரு பகுதி இது.]

ஃபாசிசம் இருபதாம் நூற்றாண்டின் கொடிய அரசியல் வடிவம். இதற்கு முன் இருந்த வன்கொடுமைகள் ஆதிக்க, அதிகார, அடக்கு முறைகளின் மேலிருந்து கீழான அழுத்தமாக அமைந்தவை. 

அவை நேரடி அரச, ஆயுதக் கொடுகோன்மை வடிவங்கள்.

ஃபாசிசம் கீழிருந்து மேல் என்னும் தர்க்கத்தில் இயங்குவது அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் நலனுக்காக என்ற விதிமுறை இதன் அடிப்படையாக அமைகிறது.

நாடு, சமூகம், தேசம், இனம், மதம் என ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டி அதன் முழு வலிமையையும் தலைமையின் கீழ், தலைமை என்ற அமைப்பின் கீழ் குவித்து விடுவது. அதற்குப் பின் அனைத்து வன்முறைகளும் கொடூரங்களும் அடக்குமுறைகளும் நியாயப்படுத்தப்படும்.

ஃபாசிசம் எதையும் உடன்பாட்டு முறையில் விளக்காமல் எதிரிடைகளால் விளக்கும் . எதிரிகள்தான் நமது வாழ்வை, பெருமையைக் குலைத்து வருகிறார்கள் , எதிரிகளை ஒழித்து இனிய வாழ்வை அடையலாம் என அது ஓயாமல் சொல்லும்.

கடந்த காலப் பெருமைகள் பற்றி ஒயாமல் பேசி அதனை இடைக்கால எதிர் சக்திகள் அழித்துவிட்டன, மீண்டும் நாம் எழ வேண்டும் என்று பழமைப் பக்தியில் உருகும். இந்தப் பக்தியின் உச்சத்தில் பெரும் தலைமை, தெய்வீக மீட்பர், மகாபுருஷர் என்ற உருவங்களைப் பொருத்திவைக்கும்.

உலகைத் தூய்மையாக்கி, துல்லியமான உண்மைகளை நிலை நிறுத்தி, அனைத்தையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் தனக்கே உள்ளது என்று நிறுவி, அதற்குள் ஒவ்வொருவரையும் அடக்கி நீதான் இதன் மூலாதரம், அடிப்படை, மையம் என்ற கற்பித நிலையை உறுதியாக மனத்திற்குள் செலுத்திவிடும்.

இதற்குப் பிறகு மீளமுடியாத வன்முறையும், கேள்வி கேட்க முடியாத வன்கொடுமைகளும் பெரும் அழகியலாக மாறிவிடும். எல்லாம் உன் நன்மைக்கே (தனிமனித நிலையில்) எல்லாம் உங்களுக்காக (சமூக நிலையில்) எல்லாம் நமது தலைமுறைகளுக்காக (அமைப்பு இனம் என்ற நிலையில்) என்ற நித்திய நன்மை, நீடித்த இன்பம் பற்றிய பேச்சுகளின் ஊடாகத் தொடரும் வன்முறை இது.

ஆண்மைய- தந்தை மையச் சமூகத்தின் நுண் அலகும் இதில் உள்ளது. பேரன்பு பற்றிய அனைத்துச் சொல்லாடலுக்குள்ளும் உள்ள வன்முறை இது.

தியாகம், அர்ப்பணிப்பு, தன்னலமின்மை என்ற பெயர்களில் இந்த அடிமைநேய -வன்முறை உளவியல் உள்ளது. தாய்மை, தெய்வீகம், புனிதம், முழுமையான விடுதலை, முழுமையான புரட்சி என அனைத்துவகையான முற்று-முழுமைகளினூடாகவும் இந்த வன்முறை தன்மைச் செயல்படுத்தும், நியாயப்படுத்தும்.

தனிமனித உறவுகளில் இது வன்முறை நியதியாக, சிறுகச் சிறுக செயல்படும். ஆனால் அரசியல், சமூகம், தேசம் எனற அளவில் பெருங்கொடுமைகளைப் பெருமையுடன் செய்து முடிக்கும்.

இது உயிர் வாழும் போராட்டம் , இனநீட்சி என்ற இயற்கை விதியின் அடிப்படையில் இயங்கும் வன்முறையல்ல. பிறர் உயிர்வாழ்தல் தனக்குக் கெடுதல், தனது பூமிக்கு இழுக்கு. பிற உயிர்களின் இன்பம் தூய்மையற்ற இழிவு என்ற இயற்கை கடந்த எதிர்நிலை உளவியலின் விரிவு.

இந்தியச் சமூகத்தில் மனு-வழி அரசியலில் இதன் அலகுகளைப் பார்க்கலாம். இன்றுள்ள பாரதப் பெருந்தேசிய- மகாசாம்ராஜிய – இந்துராஷ்டிர கனவுகள் மக்களுக்காக எதையும் செய்யாது; ஆனால், அது தேசத்தின் மீது பக்தி கொண்ட, பேச்சு மறந்த அடிமைகளை புனித கூட்டமாக உருவகிக்கும்.

அறிவுக்கு எதிரானது ஃபாசிசம்- அதே சமயம் அதிக அறிவும் ஃபாசிசமாகும். அன்புக்கு எதிரானது ஃபாசிசம் -ஆனால் தன்னைத் தவிர யாருக்கும் அன்பு செய்யத் தெரியவில்லை என்று பேரன்பின் வடிவமாகத் தன்னைக் காட்டும். எளிமைக்கு எதிரானது ,பாசிசம் ஆனால் எளிய மக்களை, அவர்தம் எளிய கனவுகளைத் தனது ஆயுதமாக்கும்.

ஒரு சில வாக்கியங்களை நினைவு படுத்திக் கொண்டு ஃபாசிசம் பற்றிய பேச்சைப் பிறகு தொடரலாம்.

குருஜி கோல்வால்கர் சொல்கிறார்:

“நமது தேசம் பழம்பெருமை கொண்டது, நித்தியமானது நிலைத்தது அது மகாபுருஷர்களை ஈன்று அளித்திருக்கிறது, உலகின் சிகரமான தத்துவங்களை உருவாக்கித் தந்திருக்கிறது, தர்மமே உருவான சமூக அமைப்பை அது கொண்டிருந்து. அதன் சிறப்பை நாம் இன்றும் காணலாம், நம்மை ராமர், கிருஷ்ணர், சங்கராச்சாரியரின் வழிவந்தவர்கள் என்று சொல்லும் போது, இந்த மண்ணின் மைந்தர்கள் இந்த மகோன்னத பிதாக்களின் ரத்தத்தைத் தமக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் உலகின் ஞானங்கள் அனைத்தையும் அடைந்தவர்கள், செயலில் உன்னதங்களை நிகழ்த்தியவர்கள். இந்து சமூகத்தில் பிறந்து விட்டோம் என்ற ஒன்றே நமக்கு இந்த உன்னதப் பெருமையைத் தருகிறது.”

இதன் தொடர்ச்சியான தர்க்கம் என்ன? பார்க்கலாம்.

”இத்தனை வளம் கொண்ட நம் நாட்டை மிலேச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தாய் மண்ணைக் காக்க நாம் வலிமையுடன் வீரத்துடன் ஒன்று திரளவில்லை, அதன் காரணமாகத்தான் இன்றுள்ள துயரமான நிலையும் கொடிய வறுமையும், துன்பங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன, நமது உன்னதங்களையெல்லாம் அந்தக் கொள்ளைக்காரர்கள் முன் இழந்து விட்டு நிற்கிறோம்.”

சற்று ஏமாந்தால் இவை அத்தனையும் வரலாற்று உண்மைகள் போல நமக்கும்கூடத் தோன்றக்கூடும். அதுதான் பாசிசத்தின் நுண்வலிமை!

பெயர் தெரியாத பாடல்

பெரும் கட்டமைப்புகள், பெரும் படைப்புகள், பெரும்பாடல்கள், பெருந்தொடர்கள்,  பெருங்கவிகள் , ஆகப்பெரும் எழுத்தாளர்கள், ஒப்புயர்வற்ற தலைவர், ஒற்றைத் தேசியம் என பாசிச அழகியல் பலவாறு  உருவெடுக்கும்.

சற்று ஏமாந்தால் உன்னத எழுத்து, உன்னத கலை எல்லாம் மனிதப் படைப்பின் சாதனைதானே எனத் தோன்றக் கூடும்.

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயம் என்றால் இனனொரு சுவரை உருவாக்குவது போலத்தான் பெருமித எழுத்துகள்.  பாசிசம் மறுக்கும்அழகியல் என்ன செய்யும்?

சீனப் பெருஞ்சுவர் கலைத்து சிறுசிறு வீடுகள் கட்டும்

கோயில்கள் தோறும் குவிந்துள்ள தங்கத்தை குன்றிமணியாக்கி

குழந்தைகளுக்கு விளையாடத் தரும். (1)

நுண்மையின்  அழகை அறிந்தால் நுண்பாசிசங்களின் வடிவம் புலப்படும். அது மனதின் குரலாகவோ, மகாபாரதமாகவோ, மகான்களின் அருளாகவோ, மருத்துவ அறிவிப்பாகவோ இருக்கலாம்…

தெய்வம் நீ என்று உணர்வதையெல்லாம் விட்டு மனிதன் வெறும் மனிதன் என்று  மனதால் தெளிந்தால் “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்‌  சிட்டுக்‌ குருவியைப்‌ போல. ” மனமே எனச் சொல்லி  இப்போது உறங்கச் செல்கிறேன்.

(யாருக்குச் சொல்கிறாய் என்று  நண்பர்கள் கேட்கமாட்டார்கள், என்றாலும் புதியவர்களுக்கு புரியச் சொல்கிறேன் : எனக்குச் சொன்னேன்)

(1) மூலபாடம்: சீனப்பெருஞ்சவரை இடித்து பல சின்னஞ்சிறு குழந்தை வீடுகள் செய்வோம் கோயில் கருவறைகள் கொள்ளையடித்து குண்டுவிளையாட நற்கோலிகள் செய்வோம் (பாடினோர்: பெயர்க் கிடைத்திலது, பாடலும் 25 % கிடைத்துளது, 1981 )

இசைபட வாழ்தல்

ஜெயமோகன் முன் தொடரும் பொய்களின் நிழல் -பிரேம்

(அறிவுக்கும் அறத்திற்கும் எதிரான எழுத்தியக்கம்)

நவீன எழுத்தும் நனவிலிகளின் ஆட்டமும்

நவீன சமூகத்தில் அனைவருக்கும் பொதுவான,  அனைத்துப் பிரிவினரையும் ஒன்றாக உள்ளடக்கும் இலக்கியம், கலை, கருத்தியல், ஊடகம் என எதுவும் இருக்க முடியாது, ஏன் அரசு கூட இருக்கமுடியாது. அனைவரும் அணுகக்கூடிய, விருப்பினால் இணையக்கூடிய ஒரு பொதுவெளி, பொது அடையாளம் மட்டுமே இருக்கும், அது அனைவரும் இருக்கவும், இயங்கவும் இடமளிக்கும் அரசியல் அமைப்பு போல இருக்கும், இருக்க முடியும், இந்திய அரசமைப்பு அவ்வாறுதான் இருக்கவும் செய்கிறது.

மக்கள் அரசு, மக்கள் அமைப்பு என்பது பொதுவெளி, பொதுக்களம்  என்ற தளத்தில்தான் ஒன்றுபடுகிறது, அந்தப் பொதுக்களம் பொது அறத்தை பொதுவான பகுத்தறிவு முறையைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் பின்னப்பட்டதாகவும் இயங்கும். அங்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும், ஏற்றுக்கொள்ளும்  குழுக்கள் சேர்ந்து வேறுபட்ட அடையாளங்களுடன் உரையாடவும் திட்டமிடவும் உகந்த சூழலை உருவாக்கப்படும்.

இது நவீனத்துவத்திற்கு முன்பும் நவீன அமைப்புக்கு முன்பும் இருந்ததில்லை, மன்னராட்சி முறையோ பேரரசுச் சமூகங்களோ இதனை ஏற்பதில்லை. அத்தனை வேறுபாடுகளையும் மறுத்து ஒற்றை அரசு, ஒரே அதிகாரம் என்ற மையத்தை நோக்கி, ஒரே விதியின் கீழ் அடங்கிய படிநிலை அமைப்பாக அது இருக்கும். இந்தியச் சமூகத்தில் வர்ண-சாதி அமைப்பில் அடைப்பட்ட அரசு , போர் அமைப்பின் கீழ் ஒடுங்கிய சனாதன தர்ம சாஸ்திர அமைப்பு இருந்தது. நீங்கள் சூத்திரர்கள் அடிமைகள் ஏவல் செய்து தொண்டு செய்து வாழ்ந்து மடிய வேண்டியவர்கள் ஆனால் நீங்கள் வெளியே செல்லவோ, விலகிச் செல்லவோ கூடாது. நீங்கள் மிலேச்சர்கள், சண்டாளர்கள் நீங்கள் மனிதர்கள் கூட இல்லை, சூத்திரர்களை விடக் கடுமையாக உழைத்து அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியவர்கள் ஆனால் நீங்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடவோ பிரிந்து சென்று வாழவோ முடியாது. அதற்கான முயற்சியைச் செய்வது கூட கொலை செய்யபடும் அளவுக்கான குற்றம், அப்படிச் சிந்திப்பதோ, அது பற்றிப் பேசுவதோ, அதற்காக ஆசைப்படுவதோ கூட குற்றம், பாபம் கொடுந்தீமை. அதனால் அப்படியான கருத்துகளை, எண்ணங்களைக்கூட உருவாக்கக் கூடாது என்ற தண்டனை விதிகளால் கட்டப்பட்டதுதான் இந்திய அரசாதிக்கச் சமூகம். அந்தச் சமூகம் மிகுந்த அமைதியும், அடிபணிதலும் கொண்டதாக, வேறுபட்ட கருத்துகள், எண்ணங்கள் அற்றதாக ஒரே தர்மத்தின் கீழ் ஒரே விதியின் கீழ் அடங்கி இருப்பதான தோற்றம் தரும். ஆனால் அடிமை விதியை மீறக்கூடிய ஒரே ஒரு செயல் நடந்தாலும், ஒரே ஒரு வாக்கியம் பேசப்பட்டாலும் அவை அழிக்கப்படும், கொலை செய்யப்படும், அதனால் விதி மீறல், விடுதலைக்கான ஆசை மொழியில்கூட இருக்க முடியாது, இருக்காது.

இந்த ஒடுக்குதலை, மனித மறுப்பை இல்லாமலாக்கி அனைத்து விடுதலைக் கருத்துகளுக்கும், ஆசைகளுக்கும், எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் இடமளிக்கும் அமைப்புதான் நவீன அரசு, குடிமை மற்றும் குடிமையச் சமூகம், இது மனித உரிமைகள், மனித மாண்புகள் என்னும் விழுமியங்களை மையமாக மட்டுமின்றி  விளிம்பாகவும் கொண்டியங்குவது. ஒரு சமூகம் சமத்துவத்தை, சமூகநீதியை முழுமையாக நடைமுறையில் கொண்டு இயங்காத நிலை இருக்கலாம், ஆனால் அவற்றைத் தன் இலக்காக. அறமாகக் கொண்டு அவற்றை அடைவதற்கான கனவைத் தன் வழிகாட்டு நெறியாகக் கொண்டு தொடர்ந்து இயங்கும்.   

இப்படியான நவீன சமூக அமைப்பில் உள்ள ஆட்சி, அமைச்சகம், செயலதிகாரம், நிருவாகம், திட்டமிடல் என்பவற்றை அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படாத ஆனால் பெரும்பான்மை பங்கு கொண்ட ஒரு கட்சியோ கூட்டணியோ  தன் பொறுப்பில் ஏற்று நடத்துகிறது, அதே சமயம் ஆட்சியில் இல்லாத ஒவ்வொரு கட்சியும் (எதிர்க்கட்சிகள்) அரசுச் செயல்பாட்டைக் கண்காணி்த்து, விமர்சனம் செய்து, தவறு நடக்கும் போது எதிர்த்து, நீதி மறுக்கப்படும் போதும் புறந்தள்ளப்படும் பொழுதும் அதனை எதிர்த்து நின்று தீமைகளைத் தடுத்தும் ஜனநாயகத்தை, அரசியல் அறங்களை, அரசமைப்பின் விழுமியங்களை, அனைவருக்குமான உரிமைகளை காத்தும் செயல்பட வேண்டியுள்ளது.

ஆட்சியில் உள்ள கட்சிக்கு இணையாக அரசமைப்பை ஜனாநாயகத்தைக் காக்கும் பொறுப்பும் உரிமையும் கொண்ட அமைப்பைத்தான்  நவீன ஜனநாயகம், மக்கள் ஆட்சி என்று நாம் கூறுகிறோம்.

அதனை உருவாக்கிய, அதனை நோக்கிய அறிவைத்தான் நவீன அறிவு என்று கூறுகிறோம்.

பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளதாலேயே ஒரு கட்சியும், அதன் தலைமையும் இந்திய அரசின் (அரசியலின்) முழு அதிகாரமுடைய சக்தியாக ஆகிவிடுவதில்லை. எந்த ஒரு அரசும், ஆட்சியும் அரசியலமைப்பைப் பின்பற்றி, செயல்படுத்தி, பாதுகாத்து மக்களின் பெயரால் மக்களின் பணியாளர்களாக இருந்து செயலாற்றித் தன் பொறுப்புக் காலம் முடிந்ததும் ஓய்வு பெற வேண்டிய ஒரு அமைப்பே.

 நவீன அரசு வேறுபாடுகளின் உரிமைகளை, வேறுபடும் உரிமைகளைப் பாதுகாத்து பன்மைகளின் இடத்தையும் பன்மைகளின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தித் தருவது. இது முன்நவீன ஒற்றைத்தன்மை கொண்ட அரச அதிகார, சர்வாதிகார அரசியல் அல்ல.

தனிமனிதர்களுக்கு ஜனநாயகத்தில் உரிமைகள் உள்ளன, கடமைகள் அதைவிட அதிகம் உள்ளன, ஆனால் அதிகாரம், ஆதிக்கம், மேலாண்மை, உயர் அதிகாரம் என எதுவும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின்  முதன்மை அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் கூட அளிக்கப்பட்டுள்ளவை பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான கூடுதல் வசதிகள், துணை செய்யும் மக்கள் பணியாளர் குழுக்கள் மட்டுமே.

 அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, வணக்கம், சிறப்பு அணிவகுப்புகள் அனைத்தும் நம் அரசியலமைப்புக்கும் மக்கள் ஆட்சி முறைக்கும் அளிக்கப்படும் மதிப்புகளே தவிர தனிமனிதர்களுக்கு அல்ல. அதனால்தான் முறை தவறும் போது, பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படும் போது, நீதி அவமதிக்கப்படும் பொழுது எந்தப் பதவியில் உள்ளவர்களையும் விசாரரணைக்குட்படுத்தித் தண்டிக்கும் உரிமையும் பொறுப்பும் அரசியல் அமைப்புக்கும், நீதித்துறைக்கும், மற்ற அதன் நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பத்து வாக்குகள் அதிகமாகப் பெற்றாலும் ஒரு மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டவராக அங்கீகரிக்கப்பட்டு சட்ட மன்றம், நாடாளுமன்றம் செல்லும் பொறுப்பு வழங்கப் படுகிறார். ஒரே ஒரு உறுப்பினரை அதிகமாகப் பெற்றிருந்தாலும் ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பை (ஆட்சி அதிகாரம் அல்ல)  ஏற்கும் தகுதி பெறுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால் இந்திய அரசியல் தனிமனிதர்களால்,  தனிக்குழுக்களால் ஆளப்படுவதற்கோ, அதிகாரம் செலுத்துவதற்கோ அனுமதி அளிக்கவில்லை.

தற்போது பாராளுமன்ற பொறுப்பேற்றுள்ள தேசியக் கட்சி 37.23 சதமான வாக்குகளைப் பெற்று 303 உறுப்பினர்களைப் பெற்று ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளது. மீதமுள்ள 62.77 வாக்குகள் இந்தக் கட்சியைத் தேர்வு செய்யவில்லை என்பதுதான் பொருள், அதனால் அரசியல் பொறுப்பை இக்கட்சி ஏற்பதை யாரும் தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாது.

இந்த அரசு அனைவருக்குமானது, தன்னை மறுத்த பெரும்பான்மை மக்களுக்கும் சேர்த்தே  அக்கட்சி பணி செய்ய வேண்டும். இதுதான் ஜனநாயகம், இதன் அடிப்படை நெறிகளை அரசியல் மேதை அண்ணல் அம்பேத்கர் முதன் முதலாக மிகத் தெளிவாக நாடாளுமன்ற அவையில்  விளக்கியிருக்கிறார். “நாம் மக்களாட்சி முறையை வெறும் புறவடிவத்தில் மட்டுமின்றி செயல்படக்கூடிய உண்மையான  அமைப்பாகப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியவை என்ன? ” என்ற கேள்வியை எழுப்பி மூன்று அடிப்படை வழிமுறைகளை, நெறிமுறைகளை அளிக்கிறார்.

அவற்றில் இரண்டு நெறிமுறைகள் இவை :

1. நாம் சமூக, பொருளாதாரக் கோரிக்கைகளையும்  தேவைகளையும் பெற அரசமைப்புச் சட்ட முறையையே பின்பற்ற வேண்டும். வன்முறை கொண்ட புரட்சி முறையைக் கைவிட வேண்டும். சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற முறைகளையும் கைவிட வேண்டும். அரசமைப்புச் சட்டம் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறும்போது இந்த முறைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அரசமைப்பு முறைகள் நமக்கு முன்  இருக்கும் போது  இந்தச் சட்டமறுப்பு முறைகள் தேவையில்லை.

 3. நாம் வெறும் அரசியல் ஜனநாயகத்தை நிறுவியதுடன் நிறைவடைய முடியாது. அதனைச் சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகத்தை அடித்தளமாகக் கொள்ளாத அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்காது. சமூக ஜனநாயகம் என்பது என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கொள்வது. இவை தனித்தனியே இருந்தாலும் அவற்றின் நோக்கம் நிறைவேறாது, மூன்றும் பின்னிப்பிணைந்தவைகளாக இருக்க வேண்டும். அத்துடன் பொருளியல் சமத்துவமும் இணைய வேண்டும். சமத்துவமற்ற இந்தியச் சமூகத்தில் இவற்றை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் நமக்கு ஒரு அதிகாரி (கான்ஸ்டபிள்) வேண்டும். அதுதான் அரசியல் ஜனநாயகம், அதுதான் இந்திய அரசமைப்பு.

இவற்றிற்கு நடுவாக அண்ணல் குறிப்பிட்டுள்ள  ஒரு நெறி மிக முக்கியமானது:.  “எத்தனைச்  சிறப்புகள் கொண்டவராக இருந்தாலும், எந்த ஒரு தனிமனிதரின் காலடியிலும்  மக்கள் தம் சுதந்திரத்தை ஒப்புக் கொடுக்கக்கூடாது.  அவர்களுக்கு அரசமைப்பு நிறுவனத்தை மீறும் அதிகாரத்தை வழங்கிவிடவே கூடாது. நாட்டுக்காகத் தம் வாழ்வைத் தரும் ஒரு தனிமனிதருக்கு மதிப்பு தருவதில் ஒன்றும் தவறில்லை. நன்றியுடன் இருப்பதற்கு ஒரு எல்லை உண்டு. தன் சுயமரியதையை விட்டுக் கொடுத்து நன்றியுடன் இருக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை…. இந்தியா பக்தி என்ற பெயரில் தனிமனித வழிபாட்டில் மூழ்கிக் கிடக்கும் சமூகம். பக்தியும், மகான் வழிபாடும்  சமயத்துடன் நின்று விட்டால் பரவாயில்லை, அவை அரசியலில் நுழைந்தால் ஜனநாயக அமைப்பு தகர்ந்து, சர்வாதிகாரம்தான் உருவாகும். (  1949 நவம்பர் 25-இல் அரசியல் சட்ட அவையில் அம்பேத்கர்  வழங்கிய இந்த உரை மக்களால் தெய்வமாக மாற்றப்பட்ட காந்தி பற்றியும்  வழிபடப்பட்ட  நேரு மற்றும் சில  தலைவர்கள் பற்றியுமான குறிப்பைக் கொண்டது.)

இவ்வாறான ஒரு கூட்டமைப்பில் கலை, இலக்கியம்,  ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்,  அவற்றின் கடமையும் பொறுப்பும் தகுதியும் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்தால் இலக்கியச்  செயல்பாட்டுக்கும், இலக்கியவாதிகளின் செயல்பாட்டுக்கும் நாம் ஏன் முக்கியத்துவம் தருகிறோம் என்பது புரியவரும். நவீன சமூகத்தில் படைப்பாளிகளின் இடம், அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு, பெருமைகள் அனைத்தும், இந்தப் பொது அறத்திற்கும், அறிவுக்கும், அரசியலுக்கும் அவர்கள் அளிக்கும் பங்கை அடிப்படையாகக் கொண்டவை. சமத்துவம், நீதி, சுதந்திரத்திற்கு எதிரான, மாறான எந்த ஒரு சொல்லும் படைப்பும் நவீன அமைப்பில் தன் தகுதியை இழக்கிறது,  அது மாபெரும் கனவுகளுக்கு எதிரான வன்முறையைச் செய்கிறது.

அப்படியான எழுத்துகளும் பேச்சுகளும் இருப்பதற்கான உரிமையைப் பொதுக்கள  அரசியல், மக்கள் அரசியல் மறுத்துவிட முடியாதுதான். ஆனால் அவை அறம் பேசும் தகுதி அற்றவை என்பதைச் சுட்டிக்காட்டி, அவற்றில் நவீன அறிவுக்கும் அறத்திற்கும் எதிரான கருத்துகள் உள்ளன, கவனமாக இருக்கவும் என்ற அறிவிப்புப் பலகையை வைக்கவும் நவீன அறிவுக்கும் அரசியலுக்கும் உரிமை உண்டு, அதைவிடப் பொறுப்பு உண்டு.

அதனால்தான் ஒரு திரைப்படம் மட்டுமல்ல ஒரு கருத்துப்படம் கூட, ஒரு விளம்பர வாசகம் கூட பொதுக்களத்தில் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. சமூக வெளியில் பேசப்படும், பரப்பப்படும் ஒவ்வொரு சொல்லும், வாசகமும்,  சைகையும் கூட , ஒரு புகைப்படம் கூட பகுத்து ஆய்வு செய்யப்படுவதன் பின்னணி இதுதான்.

அர்த்தமுள்ள இந்துமதம் அர்த்தங்கெட்ட மார்க்சியம்

நவீன அரசும் நவீன தொழில் நுட்பங்களும், நவீன இயந்திரவியலும், கருவிகளும்,  இந்தியச் சமூகங்களை முழுமையாக ஊடுருவி, அடிப்படைக் கட்டமைப்புகளை மாற்றியமைத்த பின்னும் மரபு, பழமை, தொன்மை என்ற பெயர்களில் நவீனம் மறுக்கும் உள அமைப்பையும், நவீன அறிவை, அறத்தை, மதிப்பீடுகளை உடைக்கும் சமூக நடத்தைகளையும் இந்தியச் சமூகம் கொண்டாடி வருவதுடன் அதில் பெருமிதமும் கொள்கிறது. இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, எப்படிக் கையாள்வது?

நவீனக் கருவிகளை, இயந்திரங்களை, இயந்திர வாழ்வியலை, நகரமைப்பை ஏற்றுக் கொள்ளும் இந்தியச் சமூகம் நவீன அறிவு, அறம்,  மதிப்பீடுகள், அழகியல் என்னும் உள்ளமைப்புகளில் மாற்றத்தை ஏற்பதில்லை என்பதுடன் அதன் மீது வெறுப்பும் கொண்டுள்ளது. நவீன சமூகம் தந்த, நவீன அறிவால் உருவாக்கப்பட்ட  புறவயப் பொறியமைப்புகளை, இயந்திரக் கட்டமைப்புகளை தனதாக்கிக் கொண்டு அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும் வாழ்வியல் போலப் புதிய இலக்கிய வடிவங்களைத் தனதாக்கிக் கொண்டு பழமைகளைக் கொண்டாடும், மீட்டு உயர்வுபடுத்தும் இலக்கியங்களும், கலைகளும் பெருமிதமும்  பெருவலிமையும் கொண்டு இயங்கி வருவது தமிழ்ச் சமூக நடப்பியல்புகளில் ஒன்று. இதனை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது, எதிர்கொள்வது, கையாள்வது?

தமிழ் எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகள் பழமை மீட்பு, மரபுப் பெருமிதம் என்ற இயக்கமறுப்பில் திளைத்துப்  புகழும் நிதியும் பெற்று அதிகாரப் பேருருவங்களாக நிலைக்கின்றன. இவர்களே கலாச்சார, பண்பாட்டு நாயகர்களாகவும், அடையாளங்களாகவும் இருப்பவர்கள். சாதிய உளவியலும் ஆணாதிக்க நடத்தையும் பெருகிய  திரைப்படங்களும், கலைகளும், கதைகளும் பெருமளவில் கொண்டாடப்படுவதும் அதிகாரம் பெறுவதும் இதன் விரிவடைந்த நிகழ்வு. இவர்களுக்கு மாறான நவீன இலக்கியம், முற்போக்குச் சிந்தனை, புதிய கருத்தியல்கள் என்ற வடிவத்தில் எழுதி இயங்கும் எழுத்தாளர்கள்  அரசியல் வகைப்பட்டவர்களாக, வெகுமக்களின் மனமகிழ்வுக்குப் பொருந்தாத எழுத்துக்களை எழுதுபவர்களாக இருப்பதும் ஒரு வரலாற்று மெய்நிலை. முற்போக்கு எழுத்துகள், புரட்சிகரச் சிந்தனைகள், உலகவயப் பட்ட பார்வைகள், மரபுகளைக் கேள்விக்குட்படுத்தி புதுமைகளைக் கொண்டாடும் அழகியல் கொண்டவை என  இந்த வகை  எழுத்துகளும் இலக்கியங்களும்  தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.

இந்த எதிரெதிரான வெளிப்படையான அடையளங்களை மறைத்து தம்மையும் புதிய இலக்கியம், நவீன இலக்கியம், நவீன சிந்தனை என்று  அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கான உரிமைகளைப் பெற்றுக் கொண்டு அதற்கான தகுதி உள்ளதாகக் கூறிக் கொண்டு உள்ளார்ந்த நிலையில் பழமை போற்றுகிற, இயக்கவியல் மறுக்கிற எழுத்துகளும் எழுத்தாளர்களும் இருமடங்கு அதிகாரத்துடன் பெருமைகளுடன் இயங்கும் ஒரு தளம் தமிழில் உண்டு.

இவர்களுக்குப் பின்புலமாக, ஆதாரமாக இருப்பவை பிற்போக்கு, சனாதன, பழமைமீட்பு சக்திகளும் நிறுவனங்களுமே. இவர்கள் வெறும் எழுத்துடன் நின்றுவிடும் பொழுது கருத்தை உருவாக்கும் பல சக்திகளில் ஒன்றாகக் கலந்து போவார்கள். இவர்களே கலச்சார நாயகர்களாக, அடையாளச் சின்னங்களாக மாறும் பொழுது ஒரு இயக்கமாக உருப்பெற்று பல இளைஞர்களையும், சமூகச் சக்திகளையும் நிலைகுலைத்து,  அறிவுத் தேக்கத்தை உருவாக்கி. அறிவுருவாக்கத் தளங்களை அழிக்கும் பேரழிவு நிறுவனங்களாக மாறுவார்கள்.

இவர்கள் வழியாக பழமைவாதமும், தொன்மைப் பெருமையும் வலிமையடையும், அதற்கான கருத்தியல் கருவிகளை இவர்கள் உருவாக்கி அறிவு மறுப்பையே அறிவுச் செருக்காக உரு மாற்றிவிடுவார்கள். இவர்கள் உருவாக்கும் கருத்தியல், மதிப்பீட்டுக் கருவிகள் இலக்கியப் பெருமிதம் கொண்டதாக, பேரறிவு கொண்ட போதனைகளாக, பெரும் ஆய்வில் விளைந்த சாதனைகளாக  உயர்வுபடுத்தப்படும். இவர்களின் செயல்பாடு புதுமைகள் அனைத்தையும் உள்ளடக்கியது போலவும், புரட்சிகரச் சிந்தனைகளால் நிறைந்தவை போலவும் தோற்றம் தரும். அவற்றை விட மனித நேயம், மாந்தர் அறம், மரபின் தரிசனங்கள், ஆன்மீக உயர்வு என்ற  சொற்கள் இவர்களிடம் தெய்வீகச் சொற்களாக ஓயாமல் ஒலிக்கும். 

இவர்கள் முற்போக்கு, புரட்சி, கலகம் என்ற அடையாளத்துடன் தொடங்குவார்கள், பெரும் அறிவாளிகள், பெரும் படிப்பாளிகள், அசலான ஆழமான சிந்தனையாளர்கள் என அடைமொழிகள் இவர்கள் மேல் அடுக்கடுக்காய் போர்த்தப்படும். இவர்களில் சிலர் ஏராளமாக எழுதிக் குவி்ப்பார்கள்.  திறமை, படைப்பாற்றல், கற்பனைப் பெருக்கு, காவிய முறுக்கு, கலகச் செருக்கு என்று தொடர் பஜனைகள் இவர்களைப் பற்றி எங்கும் ஒலிக்கத் தொடங்கிவிடும்.

தொடர்கதைகள், தொடர் கட்டுரைகள், தொடர் சொற்பொழிவுகள், தொடர் பாராட்டுகள், தொடர் விருதுகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இவர்களின் சாதனைகள். முதல் கதையிலேயே இவர்களுக்கு விருதுகள் காத்திருக்கும், முதல் நாவலே பெரும் படைப்பு எனப் பதாகையுடன் வெளிவரும். ஊடகங்களில் இவர்களின் பெயர்களே ஓயாமல் ஒலிக்கும். ஒரு நாள் இவர்கள் தம் உருவத்தை வெளிப்படுத்துவார்கள் நானும் நாத்திகனாக இருந்தேன், புரட்சியில் கலந்தேன், பகுத்தறிவில் புரண்டேன்  இப்போது அதெல்லாம் மனித வாழ்வுக்கு உதவாது என்று என் ஞானத்தால் தெளிந்தேன் எனக்  கதாகாலட்சேபத்தைத் தொடங்குவார்கள்.  இவர்களின் பொது அங்க அடையாளம் இதுதான் : கம்யூனிசச் சிந்தனைகள், மக்கள் போராட்டங்கள். பெண்ணியச் சிந்தனைகளை எல்லாம் கேலி கிண்டல் செய்வது, இவை காலாவதியாகிவிட்டது என்று ஞானப்பிரகாசகம் பொழிவது, இந்திய ஞானம், பாரதப் பண்பாடு, தியாக வரலாறு, மகான்களின் மகிமை என மணிகளை ஆட்டுவது. எந்த ஒரு புதிய சிந்தனையோ, சிந்தனையாளரோ அறிமுகப்படுத்தப்பட்டால் அதனை அத்வைதத்தில் அடங்கியது, உபநிஷதத்தின் உள்ளே முடங்கியது, பதஞ்சலியால் பதம் பார்க்கப்பட்டது என்று சும்மா சுற்றிவிடுவது. தமிழின் ஞானப்பிரகாச மரபுக்கு உள்ள சௌந்தர்ய லகரியே பெரியாரியச் சிந்தனைகளை வசைபாடுவதுதான். அம்பேத்ரியச் சிந்தனையை செயலியக்கத்தை வெறுத்தபடி அதற்கு புத்தி சொல்வது, காந்தியின் வழியில் அம்பேத்கர் நடந்திருந்தால் சேரிகளில் சேதாரம் எதுவும் நடந்திருக்காது, அம்பேத்கருக்கு ஆய்வு போதாது ஆனால் நான் அம்பேத்கரை இந்தியாவின் பெருமைகளில் ஒன்று எனச் சொல்வேன் என புருடா விடுவது. மாற்றுச் சிந்தனைகள் எதுவும் வந்தால் முதலில் மண்டையில் அடித்து ஓரமாக கிடத்திவிட வேண்டும் என்று இரும்புத் தண்டோடு கதவுக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் கூலிப்படையை வாசகர்கள் என்ற பெயரில் உருவாக்கி விடுவது. காலத்தால் மறைக்கப்பட்ட அயோத்திதாசர் போன்ற சிந்தனைச் செயல் தலைவர்கள் கண்டெடுக்கப்பட்டால் முதலில் சென்று அவர் கருத்துகளை முடிந்த அளவு திரித்துக் குறைத்து வெட்டி ஒட்டி தன் நித்திய சத்திய குருவுக்குப் பொருந்தும் அங்கியாக மாற்றித் தைத்து மாட்டி விடுவது.

தலித் அரசியலும் ஒரு சாதி அரசியல்தான், அதிலும் அதிகாரம் உண்டு, படிகாரம் உண்டு அதனால் அதனிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை அறிவிப்புச் செய்வது. இப்படி இப்படியாக வளைந்து நெளிந்து ரப்பராக நீளும். இவற்றுடன் பின்நவீன-பின்நவீனத்துவ பெருங்கொண்டாட்ட கைலாசாக்கள் இணையும் போது ஸீரே டிகிரியில் உலகம் சுழல ஆரம்பிக்கும். எதுவுமே உலகத்தரம்தான் இவர்களுக்கு. தமிழில் உலகத்தரத்தில் இலக்கியம் இல்லை என்ற வாசகத்துடன் தினமலராக மலர்வார்கள் இவர்கள், உலகப்படங்கள், உலக இசை என இவர்களின் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது, இவர்கள் பியர் குடிப்பது கூட உலகக் கோப்பையில்தான் என்றால் மற்றவை எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

இவர்களின் எழுத்து முதலீடே தமிழர்களின் வாசித்து அறியாத வாழைப்பழ சோம்பேறித்தனம்தான். ஃபூக்கோ. ஈக்கோ, லக்கான், சுக்கான் எல்லாம் வாங்க நித்தியானத்த சாய் சமேத வயகர வாக்கிய ஆசானிடம் ஆசி பெற்று முக்தியடையுங்கள் என்று அவர்கள் புகழ்பாடும் துணைநடிகர்கள்தான் மிகவும் சுவாரஸ்யமாக சுகானுபவமான பார்ட்டிகள். சார்ள்ஸ் ஃபுகோவிஸ்கி கவிதை மேடையில் குடித்து விட்டு வாந்தியெடுத்தபடி கவிதைகளைப் படிப்பான் அதுதான் உண்மையான கலகம் என்று உபதேசத்தைக் கேட்டுவிட்டு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்களாம் சில கலகக் காவாளிகள் (காவல் ஆளும் இகள்). நிகழ்ச்சிக்கு   கவிதை கேட்பவர்களும் குடித்து வாந்தியெடுப்பதைக் கண்ட ஆசான் அடக்கமுடியாத ஆத்திரத்துடன்  “தமிழ் நாடு நாசமாகத்தான் போகும், கவிதை வாசிப்பவர்கள்தான் வாந்தியெடுக்க வேண்டும் என்று தெரியாமல் இப்படி இலக்கியவாதிகளை அவமதித்தால் நான் அர்கெந்தினாவுக்கே போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன், பக்கத்தில் இருக்கிற கேரளாவில் கூட பாத்து பக்குவமாதான் வாந்தியெடுக்கிறாங்க” என்று தன் வலைபக்கத்தில் ரத்த வாந்தி யெடுத்திருந்தார்.

புரட்சியைப் பேசிப் பேசி புரட்சி வராமல் பார்த்துக் கொள்வது.  புதுமைகளைக் கேலி செய்து புறமுதுகிட்டு ஓட வைப்பது உலகத் தரமான உத்தி  என்பதைக் கவனத்தில் கொண்டால், தமிழக ஆளுமைகளில் சிலருக்கு நாம் சிலை வைக்க வேண்டும். கண்ணதாசன் என்ற பெரும்பெயர் கொண்ட திரைக்கவியின் மொழி விளையாட்டு அர்த்தமுள்ள இந்துமதமாகவும், அர்த்தங்கெட்ட பகுத்தறிவாகவும் அவதாரம் எடுத்த வரலாற்று நிகழ்வை  இதன் ஒரு வகை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

நானே புரட்சி, நான் சொல்வதெல்லாம் வறட்சி எனத் தொடங்கி கம்யூனிசச் சிங்கம், கருத்துக்களின் தங்கம் என்று புகழ்பரப்பி மெல்ல விவேகானந்தர், ஆன்மிக இந்தியா என நழுவி, ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர என ஜெயகோஷம் எழுப்பி பிரம்ம வாக்கியப் பிதாமகராக உருவெடுத்த ஜெயகாந்தன்  இதன் மற்றொரு உதாரணம்.

ஜெயகாந்தன் போலத் தொடக்கத்தில் புரட்சி பெயர் கிடைத்த பின் சுழற்சி என்றெல்லாம் குழப்பாமல் தொடக்கத்திலிருந்தே சொக்கத் தங்கமாக, சொல்லின்  தங்கமாக, கருத்தில் வங்கமாக (கடல்) திகழ்ந்து வருபவர்தான் வெண்முரசு நாயகர், விக்கி ஸ்தாபகர், இந்திய தரிசனத்தை மீட்கவந்த தூயவர், அறச்சீற்றதின் பாயவர் ( பாய்- அவர்) ஆன்மீக அரசியலின் மாயவர்  ஜெயமோகன் என்ற திருப்பெயர் கொண்ட இலக்கியப் பேயவர். (பேய் இங்கு பெருமைச் சொல்).

தமிழிலக்கியத்தில் இதுவரை யாருக்கும் இல்லாத அளவுக்கு  வாசகர் வழிபாட்டு மன்றங்கள் கொண்ட, படிக்காத மேதைகளைப் பக்த கோடிகளாகப்  பெற்ற, ஓங்கியடித்தால் ஒன்றரை டன் கனம் கொண்டு தாக்கும் பாரதக் கதையை பத்து வருடமாக (உயர்வு நவிர்ச்சியணி) எழுதி உலகச் சாதனை செய்துள்ள, ஒரு கிளை நூலகத்தின் அத்தனை அலமாரிகளையும் தன் பொத்தகங்களைக் கொண்டே நிரப்பி விடும் அளவுக்கு எழுத்தே வாழ்வாய் இயங்கும்  எழுத்துப்புயல் அவர். தமிழில் இவருக்கு இணையாக அல்லது போட்டியாக சாரு நிவேதிதா என்ற ஆட்டோ பிக்குஷன் எழுத்தாளரைத்தான் சொல்ல முடியும் என்று அல்பேனிய பத்திரிகையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்கள். (செவிவழிச் செய்தி) நயாகராத் தமிழால் நயமான கதையெழுதும் முன்னவரிடம் தஞ்சமடைந்த தமிழர்களை தன் வயகராத் தமிழால் வசப்படுத்தும் போட்டியில் பின்னவர் இறங்கியதைக்   கதையிரவுகளில் வியப்புடன் பேசுகிறார்கள்.  இந்த இரு எழுத்தாளர்களும் மேடைகளில் ஒருவருக்கொருவர்  இதனையே தம் புகழாரமாகச் சூட்டி மகிழ்கிற காணொலிகளைக் காண்பது சாகித்திய சந்தோஷம் தரும்.

ஜெயமோகன் ஒரு அறிவுக்கடல், அவர் எழுத்துகள் எல்லாம் ஆய்வு மடல், அவர் உலக அறிவுகள் ஓடி விளையாடும் திடல் என்று நம்பும் திருக்கூட்டம் நகரங்கள் தோறும் “ஊருக்கு நூறு பேர்” என்ற வகையில் இயங்கிவருவதை இணையத் தளங்கள் வழி அறியமுடிகிறது. அவர்கள் வேறு எதையும் வாசித்து அறிய வேண்டியத் தேவையே இல்லை எனவும் தினம் “வீண் முரசு” அத்தியாயம் ஒன்றை உறக்கத்துக்கு முன், உறக்கத்துக்குப் பின் என்ற முறையில் பத்து ஆண்டுகள் வாசித்து பரமபதம் அடையலாம் என்றும் வாட்ஸ்அப் தகவல்கள் வலம் வருகின்றன.

அதையும் மீறி நித்திய தர்மங்கள் தொடங்கி நிலையான மர்மங்கள் வரை ஏதும் ஐயம் எழுந்தால் வியாசரை வென்ற வித்யாபதி ஜெயமோகன் அவர்களின் இணையப்பக்கத்திற்கு கேள்வியாக எழுதி அனுப்பினால்  உலக அறிஞர்கள் உரைத்தவற்றுடன் உரைக்காதவற்றையும் விளக்கி, அத்துடன் தன் உற்றறிவால் உணர்ந்தவற்றையும் உள்ளொளியால் கண்டவற்றையும் இனி காண உள்ளவற்றையும் அருளித் தன் வாசகர்களை கடைத்தேற்றும் அவரை “ஆன்மாவால் காந்தியைத் தேட முயலும் ஒர் எழுத்தாளன்” என்று அவரே விளக்கிக் கூறுவதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டு, அவரது ஆய்வின் ஆழத்தையும் அறிவின் அகலத்தையும் அசைக்க முடியாத வாதங்களின் உயரத்தையும் தக்கச் சான்றுகளுடன் நிறுவிக் காட்டும் ஒரு சிறு முயற்சியில் நுழையலாம்.

அவரது “இன்றைய காந்தி” (2009) என்ற ஞான நூல் “காந்தி மீதுள்ள அத்தனை ஐயங்களையும்” நீக்கி இத்தனை அறிவையும், ஆய்வுத்திறனையும் எங்கிருந்து பெற்றார்  இந்த அறிஞர் என்ற ஒரே ஒரு ஐயத்தை மட்டும் நம்மிடம் விட்டுச் செல்லும் ஒரு பெருநூல். இந்த நூல் 512 பக்கங்களைக் கொண்டது, அருண் ஷௌவ்ரி என்ற சத்தியசீலர் எழுதியுள்ள “ஒர்ஷிப்பிங் ஃபால்ஸ் காட்” (1997) என்ற ஆங்கில நூல் 663+ பக்கங்களில் இந்திய மக்களுக்கு உண்மையான கடவுள் யார் அவர்களை எப்படி ஒர்ஷிப் செய்வது என்று உணர்த்தும் உன்னத நூலாக வெளிவந்ததை நாம் அறிவோம். ஆங்கிலத்தில் அதனை வாசிக்க இயலாத அறிவுத்தாகம் உடையவர்களுக்கு ஞானப்பழத்தைப்  பிழிந்து  நயமாக ஊட்டும் பெரும் பணியை “இன்றைய காந்தி“ என்ற  இந்த நூல் செய்கிறது.

அந்த நூலுக்குள் செல்லும் முன்பாக மறைக்கப்பட்ட  மனதின்  மென்மைகளையும் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் தன் ஓயாத “அகழ்வு ஆராய்ச்சி”  வழியாக  அள்ளி எடுத்து வந்து  தமிழர்களுக்குக் கடந்த 45  ஆண்டுகளாக ஊட்டி வரும் ஒரு படைப்புலக மேதையின் சாதனைகளை நான் அறிந்த வரை, வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் வழி இங்கே எடுத்துரைக்கிறேன்.

நான் அறிந்த  ஜெயமோகன்  

இப்பொழுது மணிவிழா காணும் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு சிறப்பு உண்டு, மற்ற தமிழ் எழுத்தாளர்கள் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு.

உங்களால் யூகிக்க முடியுமா எனத்தெரியவில்லை. நானே சொல்லி விடுகிறேன். வேறு எந்த எழுத்தாளருக்காவது நள்ளிரவுக்கு மேல் பத்மநாபபுரம் அரண்மனையையும், வீதிகளையும் சுற்றிச் சுற்றி நடந்தபடி மந்திரவாதிகளின் தந்திரங்கள் என்ன என்பது பற்றி  ஒரு பின்நவீன, பின்நவீனத்துவ எழுத்தாளருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்திருக்குமா? நிச்சயம் இருக்காது. ஜெயமோகனுக்கு கிடைத்தது, அதனை நானே ஏற்படுத்தித் தந்திருக்கிறேன்.

அது பல ஆண்டுகளுக்கு முன் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை)  மகன் நடக்கும் சிறுவனாகவும், மகள்  தூக்கச் சொல்லி அழும் குழந்தையாகவும் இருந்த காலம்.

அவர் தொலைத் தொடர்புத் துறையில் பணி ஓய்வு பெறாமல் ஓய்வையே பணியாகச் செய்துகொண்டிருந்த காலம். என்னைவிட வயதில் மூன்று வயது மூத்தவர்,  ஆனால் அறிவில் ஞானத்தில் தரிசனத்தில் மூவாயிரம் ஆண்டு மூத்தவர். (இரட்டுற மொழிதலை என்னிடம் மட்டும் அவர் ரசிக்கக்கூடும், அந்த அனுமதி வாசகர்களுக்கு இல்லை).

புதிதாக எழுத வரும் யாரையும் தேடித் தேடி படித்துவிடும் பழக்கமுள்ள எனக்கு அவருடைய எழுத்துக்களெல்லாம் தொடக்கத்திலிருந்தே நன்கு பழகியவைதான்.  ஆனால் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கிரணம் இதழின் பதிப்பாளர், ஆசிரியர் சாரு நிவேதிதா அவர்கள்.

அவர்தான் ஜெயமோகனை தருமபுரியில் (அப்படித்தான் ஞாபகம்) சந்தித்துவிட்டு வந்து என்னிடம் “களங்கத்துப் பரணி” பாடினார். ஜெயமோகன் சிறுகதைகள் பொருள்பொதிந்த வாசிப்புக்கு உரியவை என்பது போல நான் சொல்லியிருந்ததில்  சாரு மிகுந்த அறச்சீற்றமும் அழகியல் ஆவேசமும் அடைந்திருந்த காலம் அது. நேரிலேயே சந்தித்துத் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் கள ஆய்வு மனப்பான்மையுடன் அவர் தர்மபுரி சென்றிருக்க வேண்டும்.

திரும்பி வந்து அவர் சொன்ன வாசகங்களை “பழுப்பு நிறப் பக்கங்களில்” எழுத முடியுமா எனத் தெரியாது. அப்போதெல்லாம் சாரு யாரைப்பற்றியும் நல்லபடி எனக்கு அறிமுகப்படுத்துவதே இல்லை, நல்லபடி பேசுகிற பழக்கம் இல்லை. ஏன் தன்னைப் பற்றிக்கூட!  இது பற்றிப் பிறகு எழுதுகிறேன் (சாருவும் நானும் பின்னே புவனஸ் அயரேஸ் நகரமும்  என்ற தலைப்பில்)  தற்போது ஜெ.மோ. பற்றி மட்டும்.

சாரு சொன்னதன் சாராம்சம் இதுதான் “நீங்க எப்படியும் அவரைச் …. சந்திக்கவே கூடாது…”  எனக்குத் தெரியும் யாரையும் நான் சந்திப்பதை சாரு விரும்புவதில்லை, சந்தித்தாலும் நட்போடு இருந்துவிடக்கூடாது, அதற்கான முன்னேற்பாடுகளையும் முஸ்தீபுகளையும் செய்துவிட்டுத்தான் அவர்களிடம் என்னைக் கொண்டு செல்வார். “வாய்யா, எங்கிட்ட கேட்டில்ல, இப்ப கேளு, என்ன கேக்கணுமோ கேளு, எந்தலைவன் வந்துட்டான்னயா இப்ப கேளு கேட்டுப் பாரு” என அன்போடு அறிமுகப்படுத்துவார். நாங்கள் முட்டிமோதி தெருவோரம் புரளுவோம் என்று காத்திருப்பார்,  மெதுவாக நாங்கள் விவாதிப்பதைப் பார்க்க நேர்ந்தால்  வெறுப்புடன்  அங்கிருந்து நகர்ந்து விடுவார்.   

பிறகு பகைவர்கள்  என்று என்னிடம் காட்டிவர்களுடன் நெருக்கத் தோழராக  அவர் மாறிவிடுவதும் உண்டு. கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் போல  ஆறுமணிநேரப் படம் அது. இப்ப சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். சாருவுக்கு இருந்த கடைசி ஆயுதம் ஒன்றுதான் “உங்க கவிதை, எழுத்து எல்லாம் பைத்தியக்காரப் பிதற்றல், படிக்கவே முடியல” அப்படின்னு சொன்ன ஆளு அவர்   (மரியாதை விகுதி எனது) அவருடன் நீங்க பழகுறிங்க, அவர் எழுதிய எழுத்தை வாசிக்கிறிங்க.” என்று சொல்லி என்னை சீரோ டிகிரியில் நிறுத்தி விட்டு அவர் நேனோ தொழில்நுட்பத்தின் வழி அவர்கள் நட்பைத் தொடர்வார்.

அப்படித்தான் ஜெமோ-வையும் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். அவற்றை நாவல்களில் எங்காவது  எழுதி வைக்கிறேன், பிறகு “தமிழிளகியவாதிகள்” வாசித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஜெ.மோ.வை நான் சந்தித்த நாள் பற்றிய காணொலியை காணுங்கள்.

“மூன்றாவது (கவிதை) பட்டறை 1989 அக்டோபர் 2,3,4 தேதிகளில் நடைபெற்றது. இதற்கு ஜெய மோகன் போன்ற புதியவர்கள் வந்திருந்தார்கள்.”  என்று சொன்ன கவி.கலாப்ரியா தொடர்ந்து கூறுகிறார் “வழக்கம் போல் அரங்கிற்கு வெளியே நிறைய விஷயங்கள் பகிரவும் அலசவும் பட்டன.” என்ற சொல்லிவிட்டு “அந்த வகையில் பங்கேற்பாளர்கள் எவ்வித ஏமாற்றமும் அடையவில்லை. அவர்கள் வாசிப்பிற்கான பாதை மேலும் திறந்து விடப்பட்டிருப்பதாகவே பலரும் எழுதினார்கள். குறிப்பாக ஜெய மோகன்.”  என்று சிறு இடைவெளிவிட்டு தொடர்கிறார். “அடுத்த நான்காண்டுகளுக்கு குற்றாலம் கவிதைப் பட்டறை நடத்த இயலவில்லை. ஆனால் ஒகேனக்கல்லில் 1991 இல் பிரம்மராஜன் நடத்தினார். 1993இல் பதிவுகள் கவிதைப் பட்டறை, கவிதைக்கு மட்டும் சிறப்பளிக்கிறீர்களே சிறுகதை, நாவல் பற்றி யோசிக்கவில்லையா என்று பலரும் கேட்டுக் கொண்டதன் பேரில் இலக்கியக் கருத்தரங்கமாக மாற்றப்பட்டது. 1993 அக்டோபர் 1,2,3  தேதிகளில் திவான் பங்களாவில் வைத்து நடைபெற்றது. இம்முறை முதல் நாள் கவிதை இரண்டாம் நாள் சிறுகதை, மூன்றாம் நாள் நாவல் பற்றிய கருத்தரங்கு. விரிவான ஏற்பாடுகளை விக்ரமாதித்யன் ஆரம்பத்திலிருந்தே உடனிருந்து செய்து மிக உதவிகரமாக இருந்தார். கோமல் சுவாமினாதன், இளையபாரதி, பொன்னீலன், இந்தியா டுடே அரவிந்தன், நஞ்சுண்டன் என்று புதிய, அதிகமான பார்வையாளர்கள். மூன்று துறையிலும் நிகழ்வுகள் போக்குகள் இரண்டும் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்த அரங்கில் பிரேம் ரமேஷ் இருவரின் பங்களிப்பும் காத்திரமானது. நாவல்களில் பின் நவீனத்துவப் பங்களிப்பு. மற்றும் பாதிப்புகள் குறித்துப் புதிய திறப்புகளை வழங்கினார்கள். கோணங்கி, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் விவாதங்களை சரியான திசையில் கொண்டு சென்றார்கள். இந்தியா டுடே, தினமணி, சுப மங்களா பத்திரிகைகளில் விரிவான  கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.”

அந்தக் காணொலியில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில்தான் ஜெயமோகனைச் சந்தித்தேன். பதிவுகள் சந்திப்பில் வழக்கம் போல சாரு நிவேதிதா சண்டையைத் தொடக்கி வைத்தார். தன் “நான் லீனியர்” கதைகளை ஜெயமோகன் ஒன்றுமற்ற வெற்று என்று சொல்வதாக முறையிட்டு என்ன பிரேம் அமைதியா உட்காந்திருக்கீங்க என்று அரசியல்படுத்தி எழுச்சியூட்டினார். நான் “பொறுங்க சாரு அவர் உங்களை மட்டுமில்லை போர்ஹெஸ் கதையெழுத தெரியாமல் எதையோ எழுதிவிட்டு கேட்டால் மெட்டாபிக்ஷன் என்று சொல்லிவிட்டார், போர்ஹெவின் பெயரைக் காலம் இலக்கியத்திலிருந்து துடைத்தெறியும்” (காலம் அழிக்கப் போகும் முதல் பெயராம்) என்று சொல்லியிருக்கிறார். “மேஜிகல் ரியலிசம் எல்லாம் பம்மாத்து,இந்திய மரபில் இல்லாத மேஜிக்கா, ரியலிசமா என்று பிரம்மவாக்கியம் அருளியிருக்கிறார்.” எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருங்கள் மற்றவர்கள் பேசட்டும் என்று கூறி அமைதிப்படுத்த முயற்சித்தேன். 

சேகுவேரா இப்படி அமைதியாக இருந்திருந்தால் பொலிவியன் டைரி கிடைத்திருக்குமா? பூக்கோ இப்படி அமைதியாக இருந்திருந்தால் “ஹிஸ்ட்ரி ஆப் செக்சுவாலிட்டி” கிடைத்திருக்குமா என்பதுபோலப் பேசி இறுதியில் “காண்டீபம் எழுக உன் கை வண்ணம் எழுக, இக்களமெலாம் சிவக்க” எனக் கட்டளையிட திவான் பங்களா திமிலோகப்பட்டது.

என் பேச்சின் இறுதி முடிவு இதுதான் “நீங்கள் போர்ஹெஸ் படிக்கல, பிரம்மராஜன், தருமு ஜீவராம் மொழிபெயர்த்த இரு கதைகளைப் படித்தது தவிர, (மலையாளத்தில் எதுவும் வந்ததா தெரியவில்லை) மேஜிகல் ரியலசமும் மேஜிக்கும் ஒன்றல்ல, அது பற்றி நான் தனியே விளக்க முடியும், மார்க்வெஸ் எழுத்தும் படிக்காமல் பேசுகிறீர்கள், அவர் மற்ற நாவல்கள் மேஜிக்கும் இல்லை ரியலியசமும் இல்லை வேறு வடிவங்கள், நான்லீனியரிட்டி என்பது எழுத்தின், சிந்தனையின் இயல்பான வடிவம், கவிதையின் இயல்பே இந்த கிளைக்கோட்டுத் (நேர்கோடுX கிளைக்கோடு) தன்மைதான். நகுலன் கதைகளை நீங்கள் மறுப்பதில்லை, மௌனி கதைகளைக் கொண்டாடுகிறீர்கள், ஏன் புதுமைப்பித்தனின்  பொருள்படுத்தும் கதைகள் பல இப்படித்தான் உள்ளன. சாரு எழுதும் எழுத்துகள் நகர் வாழ்வில் அடைபட்ட சிதைந்த மனதின் சொல்முறை, அது நான்லீனியர் வடிவில் ஒரு லீனியர் பொருளை, உணர்வைச் சொல்கிறது, திரைப்படங்களின் மொழியே நான் லீனியர் தன்மையுடன் மொண்டேஜ் வடிவில் அமைவது… இப்படி இப்படி” (நினைவில் எஞ்சியவை) நான் குரலை உயர்த்தாமல் சொல்லியிருந்தாலும்  சில வாசகங்கள் யாரையும் காயப்படுத்தியிருக்கும். அவர் போர்ஹெஸின் எந்த புத்தகத்தைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்தார்? என்ற கேள்வி அவருடைய நண்பர்களை கோபப்படுத்தியது. இப்படியெல்லாம் பேசினால் நான் இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார் கோமல் சுவாமினாதன். நான் “வழி அந்தப் பக்கம் இருக்கிறது” என்று கையைக் காட்டினேன். கடுங்கோபத்துடன் அவர் எழுந்து செல்ல முயற்சிக்க (அனைவரும் தரையில் உட்கார்ந்திருந்தோம்) இளையபாரதி அவரை அமைதிப்படுத்தினார். பெரும் அமளியுடன் கூட்டம்…. முடியவில்லை தொடர்ந்தது. ஜெயமோகன் தன் மாய ரூபத்தைக் கலைத்து இப்படிச் சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழத்தியதாக ஞாபகம். “இப்படி நிதானமாகத் தன் தரப்பை எடுத்துச் சொல்லும் ஒருவரைத்தான் நான் கலைஞன், சிந்தனையாளன் என்று சொல்வேன். மற்றவவை வெறும் கூச்சல், நான் வேண்டுமென்றேதான் சீண்டினேன், (தூண்டினேன்) நான் பிரேம் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை, எப்போதும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன், ஆனால் அவருடன் தொடர்ந்து உரையாடுவேன். ” அவரது திருவிளையாடல் வழி வகுத்த யுத்த தந்திரம் நன்கு வேலை செய்தது. என்றாலும் முழுதாகத் தகர்க்கப்பட்ட ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள வாய்ப்பில்லை என்று கோவில்பட்டி குழுவினரும் சாரு சமேத சபையினரும் தீர்க்கமாக நம்பினார்கள்.

அன்று இரவு அருவியில் அனைவரும் நனைந்து கொண்டிருக்க நானும் ஜெயமோகனும் நிதானமாக பேசிக்கொண்டு பெரும் நகைச்சுவைகளுடன் தொடர்ந்து கொண்டிருந்தோம். “நீங்கள் சிரிக்கவே மாட்டீர்கள் எனச் சாரு சொன்னார்  அவர் சொன்னால் நிச்சயம் அது பொய்யாதான் இருக்கும் என்று எனக்கு அப்பவே தெரியும்” என ஜெயமோகன் சொல்ல, “நீங்கள் எதிரே இருப்பவரைப் பேசவே விடமாட்டீர்கள் பேசினாலும் கவனிக்க மாட்டீர்கள் என்று சாரு சொன்னார். அது பாதி பொய் என்பதை நீங்களும் நிரூபித்திருக்கிறீர்கள்.” என நானும் சொல்ல,  இந்தியப் புராணிக மரபு தொடங்கி, அம்பேத்கர் பௌத்தம் வரைப் பல பக்கங்கள் நீண்டது அன்றைய இரவுப் பேச்சு.

எல்லோரும் குளிக்கும் போது நீங்க ரெண்டு பேரும் இப்படி ஓரமா நின்னு பேசிக்கிட்டிருக்கீங்களே என்று அப்பாஸ் முறையிட “எல்லாரும் குளிச்சா துணிகளை யார் பார்த்துக்கிறது” என்றும் “சிறுபடைப்பாளிகளுக்குத்தான் அருவி குளியல் எல்லாம், பெரும் படைப்பாளிகளுக்கு அதெல்லாம் முக்கியமில்ல” என்றும் கடுப்பேத்தும் பதில்களுமாக கடந்தது நேரம்.

சாரு கடுங்கோபத்தில் இருந்தார், “குடிச்சவங்களோட ஒரு வார்த்தையும் பேசமாட்டேன் அப்படின்னு ஜெமோ சொன்னா(ர்), சாமியார் பசங்ககிட்ட சவகாசமே கிடையாதுன்னு பிரேம் சொல்லுவார் இப்ப என்ன நடக்குது?” என நண்பர்களிடம் முறையிட்டார்.

அப்போதெல்லாம் சாரு “நித்ய சைதன்ய யதி” என்ற பெயரைத் தன் கலகமொழிப்படி எப்படி உச்சரிப்பார் என்பதை அவருடைய ரசிகர்களின் நுண்மான் நுழைபுலத்திற்கே விட்டுவிடுகிறேன்.

மறுநாள் சாரு என்னிடமும் அதனைக் கேட்டார், நான் “கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன் சாரு அதான்” என்று பிஞ்சு முகத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லித் தப்பிக்கப் பார்த்தேன். ஆனால் ஒன்றும் அவரிடம் பலிக்கவில்லை. [சாரு மன்னிக்க வேண்டும், சற்று அதிகம் உரிமை எடுத்துக் கொள்கிறேன். தடையற்ற பேச்சின் தலைமகன் நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று தெரியும். அப்படியே சீற்றமடைந்து ஏதாவது வசைகளை, வதந்திகளை எழுதினாலும் பரவாயில்லை, புதுசா என்னத்தை உடைக்கப் போறீங்க. அதே கடிகாரம், அதே டேமேஜ்தான், அதே வௌக்கெண்ணைதான் ஓக்கேயா?]

இப்படித்தான் தொடங்கியது இருவரின் நட்பும் (???) வேறு எழுத்தாளர்கள் யாரிடமும் இவ்வளவு நேரங்கள் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததில்லை. ஒருவரை மற்றவர் ஒரு முறைகூட ஏற்றுக் கொண்டதில்லை, உடன்பாடு என்று ஒன்றிலிலும் கிடையாது. உடல்நிலை, நண்பர்களுக்கு உதவி, பிள்ளைகள் படிப்பு என்பன சில முரண்பாடு அற்ற பேச்சுகளாக இருக்கும். பல அரங்கங்களை ஏற்பாடு செய்து என்னைப் பேச அழைத்திருக்கிறார். பல ரகசிய கூட்டங்களுக்கும் நான் போயிருக்கிறேன் (அழைப்பு உள்ளவர்கள் மட்டும் என்பதால்) எல்லா இடத்திலும் எனது பேச்சின் எதிர்த்திசையில் அவர் பேச்சு, அவரது கருத்தியல் அடிப்படைகளைத் தகர்க்கும் எனது வாதம்.  இப்படித்தான் தொடர்ந்தது அது.  கடைசியாக மதுரையில் ஆசான் அயோத்திதாசர் கருத்தரங்கில் சந்தித்ததாக ஞாபகம், (அல்லது கன்னியா குமரியில் காலச்சவடு அரங்கிலா)   அப்பொழுதும் வெளியே கேலியும் கிண்டலுமாக எங்கள் பேச்சுகள்.  அவருடன் வந்த பக்தர் குழாம் பதைபதைப்புடன் சுற்றிலும் நின்று கவனித்துக் கொண்டிருந்தது. “பிரேம்கிட்ட இப்ப முழுசா பேராசியர் தோரணை வந்துடுச்சி” என ஜெமோ சொல்ல சிலருக்கு “அது பொருந்தும் சிலருக்கு காமெடியாயிடும், நல்ல வேளை எனக்கு எப்பவும் பிரச்சினையில்லை” என்று சொல்லிவிட்டு “ நான் பேராசிரியரா ஆயிட்டேன் அது எதிர்ப்பார்த்த ஒன்றுதான், நீங்க அகழ்வாராய்ச்சியாளரா ஆவீங்கன்னு நான் எதிர்ப்பார்க்கல”  பக்கத்திலிருந்த நண்பர்களில் சிலர் பதறிப்போனார்கள், அது எனக்குப் பிடித்திருந்தது (சிலருக்குதான்  இது புரியக்கூடும்).

ஆனால் காலையில் நான் 70- 80 நிமிடங்கள் பேசியதை மறுத்து அவர் 60 நிமிட அளவுக்குப் பேசி அயோத்திதாசரின் ஆன்மீகத்தை மீட்க வேண்டும், அரசியலை அல்ல என்று முடித்துவிட்டு திரைப்பட நண்பர்கள் காத்திருக்கிறார்கள் முடியும் வரை இருக்க இயலாது மன்னிக்க வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டார். இரண்டு மூன்று கார்களில் வந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள் போன்ற  தோற்றத்திலிருந்த  இளைஞர்கள் அவரை  அழைத்துச் சென்றார்கள்.

அரசியல் போராட்டம் அற்ற அயோத்திதாசர் மருந்து உள்ளே இல்லாத கேப்ஸ்சுல் போல எனத் தொடங்கி மீண்டும் சில நிமிடங்கள் நான் பேசியிருக்கிறேன். சற்று எரிச்சலுடன் கூடிய பேச்சு அது.

காலம் எத்தனைக் கடியது? நண்பர் அனுப்பிய சாரு பேசிய காணொலி  கேட்டேன் “தமிழில் எனக்கு இணையாக எழுதுவது ஜெயமோகன் மட்டும்தான், இரண்டு பேர்தான் இன்றைய எழுத்தாளர்கள், எங்களுக்குள்தான் போட்டி” இப்படித் தொடர்ந்தது. அவர்கள் இருவரும் பலமேடைகளில்  எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். எனக்கு இருவரையும் தெரியும், அவர்களுக்கு டப்மாஷ் செய்து ரசிக்கிறேன்.

ஜெயமோகன் கதைகள் தமிழில் வரும் பல கதைகளைப் போல எளிமையானது, ஒற்றைவகைக் கதைசொல்லலை  ஒரு பாடு நீட்டி முழக்குவது, ஞான ஒளி வீசும் வாசகங்களைப் பாயவிட்டு அறியாத பருவ வாசகர்களை அரச வைப்பது,  வளவள எழுத்துக்கு வகையான உதாரணம் அவை. 200 பக்கங்களில் எழுதி முடிக்க வேண்டியதை 890 பக்கம் எழுதித் தன்னைப்  பெரும்படைப்பாளியாக வைத்துக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் அவருக்கு நேர்ந்துவிட்டது வருத்தத்துக்குரியது.  எதையும் முழுதாக முறையாக வாசிக்காத தமிழ் வாசக அடியவர் கூட்டத்தை ஆட் கொள்ள வந்த ஆபத்பாந்தவர் அவர்.

தன் வாசக கோடிகள் வேறு எந்த எழுத்தையும்  வாசித்து விடவே கூடாது என்ற பெரும் திட்டத்துடன் தட்டித்தட்டி அவர் செய்திருக்கும் காவி-யச் சாதனை எழுத்து வேதனை, அறிவுக்கு வந்த சோதனைதான் அந்த “வீண் முரசு” இப்படிச் சொல்வதில் நான் வருந்தவில்லை. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் பற்றி  பல அரங்குகளில் பேசி இருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று நாட்களில் வாசித்துப் பல தளங்களில் கட்டுடைக்க. வேண்டிய வாசிப்புக்கு உரியது என்று சொன்னதற்காக சாரு தொடங்கி பெரும் கலகக்காரர்களின் ஜென்ம விரோதியாக மாறியவன் நான். என்றாலும் கதையழிக்கும் கதைகளை எழுதிக் காவியம் எனச் சொல்லும் இந்த எதிர்நவீன எழுத்தை இலக்கியம் என்ற சொல்ல மாட்டேன். இந்திய அரசியலில் 2014-இல் தொடங்கிய இரண்டாம் கட்ட அச்சுறுத்தும்  சொல்லாடல்களின் ஒரு பகுதியாகவே அது உள்ளது.  

ஜெயமோகனிடம் ஒரு ஏளனப் புன்னகை யாருடன் பேசும் பொழுது இருக்கும். அது இன்று தமிழ் வாசகர்களை நோக்கிய நிரந்தரக் குறியீடாக மாறிப்போனது. அவருடைய அரசியல் கருத்துகள் அபத்தமானவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட . சான்றுகள் ஆதாரங்கள் அற்று அவர் வாரியிறைக்கும் வார்த்தைகள் தமிழின் தொடக்க நிலையில் உள்ள வாசகர்களையெல்லாம் மனவளர்ச்சி குன்றிய மக்கிலக்கிய கூட்டமாக்கி, வார வழிபாட்டு மன்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

ஜெயகாந்தன் தன் முற்போக்கு இலக்கியப் புகழை 1975-க்கு பிறகு  சனாதனச் சக்திகளுக்கு தத்தம் செய்து ஜெயஜெய சங்கர, ஹரஹர சங்கர என்று உளற ஆரம்பித்தார், ஆனால் ஜெயமோகன் தனது திட்டங்களுக்கு உண்மையானவர், தொடக்கத்தில் இருந்து அப்படித்தான் இருக்கிறார், முன்பு அவரது கருத்தாக இருந்தது இன்று அது இயக்கமாக மாறியிருக்கிறது. ஊருக்கு நூறு ஜெயமோகன் என்ற நிலை உருவாக இன்றைய அதிகாரச் சூழல் உதவிசெய்கிறது.

ஞான ஒளி, நற்செய்திப் பிரசங்கம் என நீளும் அவருடைய எழுத்துகள் வெறுப்பின் பத்திகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. நெடிய ஆய்வின் வழி கண்டறிந்து கூறுவது போன்ற பாவனையில் அவர் எழுதுபவை பல அடிப்படைத்  தவறுகளால் பொங்கி வழிகின்றன.

நான் அறியாத காந்தி

எனக்குள் பெரும் எரிச்சலை ஏற்படுத்திய ஒரு பொத்தகம் “இன்றைய காந்தி” (2009) அதில் உள்ள  பரதவாக்கியம் இது “இந்த நூல் எந்தவிதத் திட்டமும் இல்லாமல் உருவானது. இதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. ஆராய்ச்சி செய்து எழுதும் நூல்களின் வகையைச் சேர்ந்த நூலும் அல்ல இது.” அப்பறம் என்ன…?  என்று கேட்கத் தோன்றுகிறது, நடுவண் அரசால் நசுங்கிச் சாக முடியாது நம்மால். நான் சொல்வது இதுதான் “எந்த ஆராய்ச்சியும் இல்லை என நீங்கள் சொல்வது உண்மை, ஆனால் திட்டமில்லை என்று சொல்லாதீர்கள். ஜெமோ.  “இனி ஒரு பயபுள்ள தமிழ்நாட்டில உண்மைய பேசிடக்கூடாது, பேச விடமாட்டோம் ஆமாம்”. என்பதுதான்  உங்கள் திட்டம்.

 தமிழக பாஜக தலைவர் அறிஞர் அண்ணாமலை பெரியாரியம், அம்பேத்கரியம் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வருவதை நாம் அறிவோம். அவர் வாழும் காலத்தில் வாழ்வது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் இலக்கியம் எழுத வில்லை, ஜெயமோகன் இலக்கியம் எழுதுகிறார் அதனைக் கண்டு அறிவுத் தஞ்சமடையும் இளைஞர்களிடம் அரசியல் பேசுகிறார். அத்தோடு நோய்வாய்ப்படும் இலக்கியவாதிகளுக்கு உற்ற உதவிகளைப் புரிகிறார். “ஆன்மாவால் காந்தியைத் தேட முயலும் ஓர் எழுத்தாளனின் சொற்களே அந்தப் பணியை ஆற்ற முடியும்.” என்பதும் புரிகிறது.  “காந்தியை அவரது எதிரிகள் வழியாக அறிந்தவன்தான் நானும்” என்றும் “காந்தியை புத்தம் புதிதாக அறிமுகம் செய்து கொண்டேன்” எனவும் சொல்லித் திகைக்க வைக்கிறார்.

 பெருமையுடன் அவர் சொல்கிறார் “நான் இப்படிச் சொல்வேன். இந்நூல் குறுகிய பிளவுவாத நோக்கில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் புரிந்து கொள்ளும் முறைக்கு மாற்றாக விரிவான ஒரு வரலாற்றுப் பிரக்ஞையுடன் காந்தியத்தையும் காந்தியையும் புரிந்து கொள்ள முயல்கிறது”

நல்லது, அதற்காக எந்த ஆராய்ச்சியைச் செய்தீர்கள் என்றால் ”இந்த நூலுக்காக எந்த ஆய்வையும் செய்யவில்லை.” என்கிறார். ஆராய்ச்சி செய்யாமல் வரலாற்று பிரக்ஞையுடன்  எப்படிங்க ஜெமோ” என்றால்.   “என்ன ஆராய்ச்சி செய்ஞ்சியா…? ” என்று திரும்பக் கேட்கிறார்.

வாசகர்களுக்கு அவர் தரும் தரினங்களில் சில. “இது எழுத்தாளனின் மொழி. ஆகவே உணர்ச்சிபூர்வமானது.” சரி அதற்காக “வெள்ளையருடன் எந்நிலையிலும் பேச காந்தி தயாராக இருந்தார். பகத்சிங் செய்த கொலைகளை நியாயப்படுத்திய பின் அவர் எப்படி உலக மனசாட்சியுடன் பேச முடியும்?  எப்படி வெள்ளையனின் அறவுணர்வை நோக்கிப் பேச முடியும்? அதன் பின் சத்யாக்ரகத்துக்கு என்ன மதிப்பு? ” (இன்றைய காந்தி, 2009:189)  “பகத் சிங் செய்த கொலைகள்” என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொல்ல உங்களைத் தூண்டிய ஆவணம் எது. எங்கு, எப்படி  அந்த  உண்மையைக் கண்டு பிடித்தீர்கள்? 

ஈரோடு வெங்கடப்பா ராமசாமி என்ற பெயர் கொண்ட பெரியார் பற்றி அபத்தங்களை கடைபரப்பும் இந்த நூல் “அதாவது காந்திய யுகத்தின் இன்னொரு பெருந்தலைவர் அல்ல ஈ.வே.ரா அவர்கள். காந்தியும் ஈ.வே.ராவும் என்ற ஒப்புமைக்கே இடமில்லை.” (ப.344) என்பதை நிறுவுகிறதாம். சரி அதற்காக பெரியாரின் நூலைக் கண்ணில் கூடக்  காணாமல் சங்கத்தில் யாரோ பேசக் கேட்டு எழுதுவது எந்த வகை ஆன்மிக தர்மம்?

நீங்க ஈ.வே.ராவை யார்கூட ஒப்பிடறிங்களோ இல்லையோ அது உங்கப்பாடு ஜெமோ. நாங்க ஈ.வெ.ராமசாமி என்கிற அந்த  காலத்திற்கான அறிவாளியை எல்லாருடனும் ஒப்பிட்டு அவர்கள் தகுதியை அறிந்து கொள்வோம். எழுதுவதற்கு முன் வாசிக்கனும் தெரீய்தா, இப்படி வாய்மொழியாகக் கேட்டு வளர்ந்தால் ஈ.வே.ராவாதான் வரும், கடைசி வரி வரை (பக்.342-368).  ஒரு எழுத்தாளன் இப்படியா எழுத முடியும் “இந்தப் போராட்டத்தின் …உண்மையான வைக்கம் வீரர் டி.கே. மாதவன் மட்டுமே. அவரது இருபதாண்டுக் கால பொது வாழ்க்கையின் சாதனை அது. அதைச் சிலநாள் அப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈ.வே.ரா அவர்கள் மேல் ஏற்றிக்கூறுவது ஈவேராவிற்கே பெருமை சேர்க்காது.” (ப.368)

இப்படித்தான் தொடர்கிறது, அவரது அரசியல், வரலாற்று பிரக்ஞையும். உலக எழுத்தை எழுதும் ஒரு மகா கலைஞனுக்கு உள்ளூர் எழுத்தில் கவனம் செலுத்தும் கடப்பாடு இல்லை என்று அவருடைய தொண்டர் அணி ஊர் முழுக்க பிளக்ஸ் கட்அவுட் வைக்கலாம். அது வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கவும் படலாம். ஈவேராவாம்…ஈவேரா…

மகாதரிசனங்களின் பெருக்கில்  ஒரு பகுதி  மண்டையில் அடித்த ஒரு பகுதி “அன்று அம்பேத்கர் மக்கள் தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துகளின் ஒட்டுமொத்த தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்கரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது இது இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதுவே நடந்தது.” (இ.கா, ப. 256) இதற்கான ஆதாரத்தை எங்கிருந்து  ஜெயமோகன் பெற்றார்? அம்பேத்கரை பிரிட்டிஷ் கைக்கூலி என 639 பக்கங்கள் எழுதி வெளியிட்ட  அருண் ஷோவ்ரி என்கிற சேவக அறிவுஜீவியிடம் இருந்து. அதே நூலின் பக்கம் 22- இல்
ஷோவ்ரியின் நூலில் இருந்து எடுத்த இந்தப்  பத்தியைக் குறிப்பிட்டு விரிவான தகவல் ஆதாரம் கொண்டது என எழுதுகிறார். பிறகு அந்தப் பத்தியில் இருக்கும் மகாராஷ்டிராவுக்கு வெளியே செல்லவில்லை என்பதுடன்  அம்பேத்கர் மகர் சாதிக்கு வெளியே கூடச் செல்லவில்லை என்பதை இணைத்து , இதுதான் வரலாற்று உண்மை என்கிறார். அயோத்திதாசரை ஆன்மிக வழிப்படுத்தியவர் என தமிழக வரலாற்று அறிஞர்களால் கொண்டாடப்படும் ஜெயமோகனின் தரிசன தர்மம்.

பிரிட்டிஷ் அரசு அளித்த போர்ப் பணியின் நிமித்தம் தென்னாப்பிரிக்கா விட்டு இந்தியா திரும்பிய காந்தியைப் போல 50 வயதில் அரசியலுக்கு வந்தவர் அல்ல பாபாசாகேப்.  பேசத் தொடங்கிய காலத்திலிருந்துஅரசியல் பேசி, எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அரசியல் எழுதி, தன் பிள்ளைகளைப் பலியிட்டு விடுதலை  அரசியல் செய்தவர் அவர் என்பதைக் கூட அறியாத ஒருவர் தன்னை வரலாற்று பிரக்ஞை கொண்டஎழுத்தாளர் என்கிறார். 

இந்தியாவின் அனைத்து மகாணங்களிலும் இயங்கி வந்த எழுபதுக்கும்  மேற்பட்ட  விடுதலை  அமைப்புகள் சேர்ந்து உருவாக்கிய “ஆல் இன்டியா  டிப்ரஸ்ட் கிளாஸ் காங்கிரசின்”  (1930) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர் என்பதையும் மறைத்து தலித் அரசியல் வரலாற்றையே இழித்துரைக்கும்  ஒருவர்தான் தனது  எழுத்துக்குள் ஆன்மீகம் பொங்கி வழிகிறது என்று புளகாங்கிதம் அடைகிறார். எதையும் வாசிக்காமல் எளிய வாசகர்களுக்கு வாழ்வளிக்கும் பேரறிஞராக அவர் செயல்படுவது எப்படி எனப் புரிகிறது.

அமைப்பு அற்ற தலைவர் அம்பேத்கர்

வாசித்தால் தெரியவரும் சில வரலாற்று மெய்கள் இவை:

இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1931 மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடப்பதாக திட்டமிடப்பட்டது. மாநாடு நடக்கும் போது பகத்சிங் உயிருடன் இருந்தால் காங்கிரஸின் முதல் தீர்மானமாக பகத்சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும் கோரிக்கையே பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறும் நிலை உருவாகும். இதற்கு முன் இது போன்ற “யாரையும் கொல்லாத வெடிகுண்டுகளை” வீசிய வழக்குகளில் இப்படி தீர்ப்புகள் உள்ளன. இதனை மார்ச் 5, 1931 இல் வைஸராய் இர்வினுடனான சந்திப்பின் போது பேசிய ஒருவர் எடுத்துச் சொல்கிறார்.   அதற்கு முன் பகத்சிங் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு  23 மார்ச், 1931 இல் மன்னிப்புக் கேட்க மறுத்த பகத்கிங், சுக்தேவ், ராஜகுரு மூவரும் தூக்கிலிடப்படுகின்றனர். இர்வின் சந்திப்பில் காங்கிரஸின் நிலையை முழுமையாக விளக்கிப் பேசிய மகாத்மா காந்திதான் பகத்சிங் ஒரு தேசபக்தர் ஆனால் அவரது பாதை சத்தியத்துக்கும் அகிம்சைக்கும் எதிரானது என்கிறார்.

காந்தி பற்றி அவரது குறிப்பில் இருந்து பெறப்படும் சில  ஆன்மீக நிகழ்வுகள் இவை.

ஆப்ரிக்க காபிர்களுடன் இந்தியர்கள் ஒன்றாகச் சிறையில்அடைக்கப்படுவது இழிவானது என வாதிட்டவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

பிரிடிஷ் படைக்கு ஆள் சேர்க்க தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்து பாதை யாத்திரை செய்த  காந்திக்கு முதலில் ‘சார்ஜண்ட் மேஜர்’ பதக்கமும் பிறகு ‘கெய்ஸர் ஹிந்து’ பட்டமும் வழங்கப்படுகிறது. 1919-இல் காந்தி அதனைத் திருப்பித் தந்துவிடுகிறார். (அல்லது அவற்றைத் துறந்துவிடுகிறார்)

பகத்சிங் போன்றவர்களைத் தூக்கிலிட பிரிடிஷ் அரசுக்கு உரிமையுள்ளது, காங்கிரஸ் உணர்ச்சி வசப்பட்டு இதில் தலையிட முடியாது என்று சொன்ன காந்தி நீண்ட அனுபவம் கொண்ட வழக்கறிஞர், பாரிஸ்டர்.

பெண்களுடன் தன் பிரம்மச்சர்ய பரிசோனையை நேரு முதலான தலைவர் விமர்சித்த போதும், அது தன் ஆன்ம பரிசோதனை அது தன் அந்தராத்மா சம்பந்தப் பட்டது, நாட்டுக்காக அதனை மாற்றிக்கொள்ள முடியாது என்று பல காலம் சொல்லி வந்த ஆன்மிகத் தலைவர் மகாத்மா காந்தி.

தனித்தொகுதி உரிமை என்ற இடைக்கால அரசியல் உரிமை கிடைத்தால் “தீண்டாத்தகாதோரைக் கொல்வோம்” என்ற சாதி இந்துக்களும், சனாதனிகளும் சொன்னதைக் கேட்டும், இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஒயாத அரசியல் செயல்பாட்டாளர் அம்பேத்கரைக் கொலை செய்வோம் என்ற சுவரொட்டிகளைப் பத்திரிகைகளில் பார்த்தும் அவை பற்றி நேரடியாக எதுவும் பேசாமல் (சாதி) இந்துக்களின் பாவம் (சாதி) இந்துக்களால்தான் கழுவப்படவேண்டும் என்று பூடகம்  பேசி உண்ணாநோன்பிருந்தவர் தேசபிதா காந்தி அடிகள்.

ஜெயமோகனை இனி எதையும் வாசிக்க வைக்க முடியாது (வரிகளை வாசித்தல் அல்ல). தமிழ் வாசகர்களுக்குச் சொல்கிறேன். வாசியுங்கள் பிறகு யோசியுங்கள், அப்புறமா  இந்தியத்  தரிசனம் பத்தி எழுதுங்க… நானும் விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்… வாசித்தவைகளைப் பற்றி மட்டும்… மகாத்மா காந்தி நூல் தொகுப்பு நூறு உள்ளது, பன்னாட்டு நிறுவனங்களும் பாரதப் பெரும் பணக்காரர்களும்   தந்த கொடையில் காந்தியக் குடும்ப நிறுவனம்   சேகரித்துத் தொகுக்க,   இந்திய அரசு நிறுவனம் வெளியிட்ட தொகுப்பு அது, வாசியுங்கள் …

பின்தொடரும் சிறு குரல்:

இப்போது சந்தித்தாலும் இருவரும் பேசிக் கொள்ளக்கூடும்,  எனது அரசியல் கேலிகளை அவர் சகித்துக் கொள்ளுவார் எனில் ஒரு நாள் முழுக்கத் தொடரவும் கூடும். வெண்டி டோனிகர் படித்தீர்களா என்றால் வசைபாடாமல் பேச அவரால் முடியும் என்றால். அம்பேத்கரை முழுதாக வாசித்துப்  பின் காந்தி பற்றிப் பேசுங்கள் என்றால் நான் ஞான தரிசனத்தால் நாற்பது தொகுதிகளையும் வாசித்து விட்டேன் என்று கூறாமல் இருந்தால், அவருடன் விருந்தும் உண்ண முடியும். அத்துடன் இப்பொழுதெல்லாம் நான் அவர்  வெறுக்கும் மதுவை அருந்துவதில்லை, காந்திய வழியில் இல்லை மருத்துவ வழியில் அதனால் ஏராளம் பேச முடியும்

.

சிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி

செயல்வழி நிகழும் கோட்பாடு

பிரேம்

இந்தியச் சமூகங்களில் கடந்த இரு நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் இந்தியச் சமூகங்களால் விரும்பப்படாத,  உள்வாங்கப்படாத  புறக்காரணிகளின் வழியாக நிகழ்ந்துள்ளன என்பதை அறிய நேரும்போது முதலில் நமக்கு அதிர்ச்சியும் சுயவெறுப்பும் தோன்றக்கூடும்.

இந்தியா என்ற தேசத்தை, அதன் கருத்தியலான தேசியத்தை காலனிய அரசும், காலனியப் பொருளாதார அமைப்பும் கட்டித்தந்தது போலவே இந்தியாவின் நவீன குடிமைச் சமூகத்தையும் காலனிய அமைப்பே கட்டித் தந்தது.

நவீன அரசு, நவீன இயந்திர உற்பத்தி முறை, நவீன அறிவு என்பவை இந்தியச் சமூகத்தின் கூட்டு நினைவில் புறக்காரணிகளாகவும் மற்றொரு வகையில் அடக்குமுறை கட்டமைப்புகளாகவுமே பதிவாகியிருந்தன. தம் காலத்திய வாழ்வின் கூறுகள் யாவும் புறத்திலிருந்து தம் மீது திணிக்கப்பட்டவை என்ற உணர்வு இந்தியச் சமூகத்தின் பொது அடையாளத்தை உருவாக்கப் பயன்பட்டுள்ளது. இந்த முரண் அடையாளத்தின் பகுதிகளான இந்தியத் தேசியம், தேசபக்தி, இந்தியப் புராதன அடையாளம், இந்திய வரலாறு என ஒவ்வொன்றும் சனநாயக மாற்றத்திற்கு எதிரான சமூக உளவியலின் உருவாக்கங்களாகவே அமைந்தன.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றிணைப்பு, விடுதலை அரசியல், புதிய சமூகக் கட்டமைப்புக்கான இயக்கங்கள் என்ற வடிவில் உருவாகி இருக்கவேண்டிய இந்திய நவீன அரசியல் இதற்கு முற்றிலும் எதிராக சாதியமைப்பையும், பெண்ணொடுக்குமுறையையும் நியாயப்படுத்ததும் இந்துமையத் தன்மையுடையதாக, மதவாதத் தேசியமாக வடிவம் கொண்டது.

காலனிய கால உருமாற்றங்களைப் பயன்படுத்தி  புதிய சமூகத்திற்கான அரசியலைக் கட்டுவதற்குப் பதிலாக புராதன, சாதியாதிக்க அமைப்பை மீட்டெடுக்கும் சதித் திட்ட அரசியலாக  தேசிய அரசியல் மாறியது.  இந்து என்ற மத அடையாளமும் இந்து தேசியம் என்ற அரசியல் அடையாளமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தன, பின் தம்மளவில் இரு குழுக்களாகப் பிரிந்து இயங்கத் தொடங்கின.

1831-ல் பெண்ணெரிக்கும் வழக்கமான ‘சதி’ தடைசெய்யப்பட்டபோது பிரிடிஷ் அரசுக்கு எதிரான  சனாதன சபா, சனாதன தர்ம சபா என்ற  பெயர்களில் அமைப்புகள் செயல்படத் தொடங்கின. இந்த அமைப்புகளே பின்னாட்களில் சுதந்திரப் போராட்ட அமைப்புகளாக தம்மை உருமாற்றிக்கொண்டன.  இந்திய ஆண்மைய, ஆணாதிக்க சமய அதிகாரம் இந்திய அரசியலின் மற்றொரு வடிவமான காலனிய எதிர்ப்பையும் தனதாக்கிக் கொண்டதன் தொடக்கம் இது. சாதி அமைப்பை, பெண்ணொடுக்குமுறையைக் கேள்விக்குட்படுத்தும்  நவீன நிறுவனங்களைத் தன்வயப்படுத்தி மீண்டும் பழைய மரபான (சனாதன) ஆதிக்கத்தை நிறுவுவதே இந்த அமைப்புகளின் அடிப்படைத் திட்டம்.

அதாவது நவீன அரசியல் இயந்திரம்,  ஆயுத அரசியல், இயந்திர உற்பத்தி முறை, நகர அமைப்புகள் கொண்ட இந்தியத் தேசம் ஒரு பருண்மை, ஆனால் சாதி அதிகாரம் கொண்ட, பெண்ணடிமைத்தனம் நிலை பெற்ற இந்தியச் சமூகம் நடப்பு. இந்த அரசியல் உளவியல் ஆணாதிக்க,  ஆண்மையச் சமூக உளவியலுடன் உள்ளீடான இணைப்பு கொண்டதுடன், சாதி அதிகாரத்தை இயல்பான சமூக ஒழுங்கு என்று போற்றக்கூடியது.  மொத்தத்தில் விடுதலை, சமத்துவம், சமஉரிமை, சமநீதி, அடிப்படை மனித உரிமைகள் என்ற நவீன விடுதலைக் கருத்தியல்கள் எதுவுமற்ற ஒரு அமைப்பைக் கட்டியெழுப்புவதே இதன் செயல் திட்டம். இந்தச் செயல்திட்டம் இந்திய மரபாக, சமூகப் புனித விதியாகப் படிந்து கிடப்பது, இது நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. 

இதனையே அண்ணல் அம்பேத்கர் “நாம் உருவாக்கும் அரசியல் ஜனநாயகம்  சமூக ஜனநாயகமாக மாறாமல் இந்தியா சுதந்திர நாடாக மாறமுடியாது” என்று குறிப்பிட்டார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளைத்  தம் பண்பாடாகக் கொண்டிராத ஒரு நாடு தன்னை தேசமாக உருவாக்கிக்கொள்ள முடியாது என அழுத்தமாக அறிவித்தார். “பல சாதிகளாகப் பிரிந்துகிடக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? சாதி அமைப்பு தேச விரோதத் தன்மை கொண்டது.” என்ற அவரது  அறிவிப்பு  இந்தியா நவீன அமைப்பாக மாறுவதற்கான அடிப்படை நிபந்தனையை முன் வைக்கிறது. 

இதனை  முழுமையான பொருளில் முன்வைக்கும் அரசியல்தான் தலித் அரசியல் என்ற ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல். விடுதலைக்கு எதிரான சாதிய மனம் விடுதலை அரசியலை முன்னெடுக்காது.  இது மாற்றங்களுக்கு எதிரான இந்திய உளவியலாகச் செயல்படுவதுடன்,  அனைத்து விதமான வன்முறைகளையும் ஒடுக்குதல்களையும்  இயல்பான சமூக விளைவுகளாகக் காணும் தன்மை கொண்டது.

சாதி உளவியல் நவீனத்தன்மை, விடுதலை இயக்கவிதிகள் இரண்டுக்கும் எதிரானது. இந்தியச் சமூகத்தின் சரிபாதியான பெண்கள்,  மூன்றில் ஒரு பங்கான ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற இரு சமூக இருப்புகளையும் புறத்தே நிறுத்தி, எதிர்நிலைப்படுத்தித் தன் அடையாளத்தைக் கட்டிக்கொள்வது.

இந்த அடையாளம் தனித்த அரசியல் அதிகாரமாக, ஒன்றுதிரண்ட பாசிசமாக மாறுவதற்குத்  தொடர்ந்து முயற்சி செய்தபடி இருக்கும். ஆனால் உலகவயமான, நவீன அரசியல்  அமைப்பின் அடிப்படைகளைக் கொண்ட தலித் அரசியலும், பெண்ணிய அரசியலும்தான் இதனை உள்ளிருந்தபடி எதிர்த்து உடைத்தபடியிருப்பவை.  

தலித் அரசியலும் பெண்ணிய அரசியலும் தம் முழுமையான விடுதலையை அடைவதைவிட வன்கொடுமை கொண்ட முற்றதிகாரத்திற்கெதிரான இந்தப் போராட்டத்திலேயே தமது பெரும்பகுதி ஆற்றலைச் செலவிட்டு வருகின்றன. இவை தம்மளவிலேயே எதிர்ப்பின் வடிவங்கள் என்பதாலேயே பெண்-தலித் என்ற உடல்-உயிர் இருப்புகள் மீதான  தாக்குதல்களும், சிதைவுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து  நிகழ்த்தப்படுகின்றன.

 இருப்பும் எதிர்ப்பும் இணைந்த, துயரும் கலகமும்  கலந்த இந்த  அரசியலின் இயக்க முறையைப் புரிந்துகொண்டு அத்துடன் தம்மை இணைத்துக்கொள்ளாத  இந்திய மாற்று அரசியல் இயக்கங்கள் அனைத்தும் அதனால்தான் விடுதலை நோக்கிய எந்த நகர்வையும் செய்யாததுடன், மாற்றம் பற்றிய செயல்திட்டமற்ற துணை ஆதிக்கச் சக்திகளாகத் திரண்டு நிற்கின்றன.

விடுதலைக்கான அனைத்து அரசியல்,  சமூக முன்னெடுப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் இருந்தே தொடங்க முடியும் என்பதை இன்று வரை ஒப்புக்கொள்ளாத மாற்று அரசியல் அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய தீய விளைவுகள்தான்  இன்றுள்ள உடல் நீக்கம் பெற்ற அரசியலும், மனித நீக்கம் செய்யப்பட்ட பொருளாதர அமைப்பும்.

இதன் வன்கொடுமைகளை முழுவடிவில் புலப்படுத்தி, மாற்றத்திற்கான உண்மையான தொடக்கத்தை முன் வைக்கும் செயல்திட்டமாக உருவாகியிருப்பது  தலித் பெண்ணியம். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் தலித் பெண்ணியத்தை  நுண் அளவில் தொடங்கி, பெருந்திட்டங்கள் வரை விவரித்துச் செல்கின்றன.

புலப்படாதவைகளாக வைக்கப்பட்ட வரலாற்று உடல்களை இன்றைய அரசியலின் மையத்தில் கொண்டு வைத்துக் கேள்விகளை எழுப்புவதன் வழியாக அனைத்து விதமான அரசியல், சமூக, மரபு வடிவங்களின் அறத்தோற்றங்களையும் உடைத்து தலித் பெண்ணியத்தின் இடத்தை நிறுவுகின்றன இக்கட்டுரைகள்.

 விடுதலைக்கான கருத்தியல்கள் எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக்குள்ளும் உள்ள சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட உடல்கள் பற்றிய மௌனம், மறதி பற்றிய தொடர் கேள்விகளை எழுப்புவதன் மூலம் சமூக அமைப்பின் அடிப்படைச் சிக்கல்களை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன தலித் பெண்ணியத்தை விளக்கும் இக்கட்டுரைகள்.

அதன் அடுத்த கட்டமாக மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விரிவான புள்ளிவிவரங்களுடன் முன் வைக்கின்றன. உலக அளவிலான பெண்ணிய உரையாடல்களையும், விவாதங்களையும் கணக்கில் கொண்டாலும் இந்தியப் பெண் உடல்- பெண் மனம் என்பதில் மையம் கொண்டு தன் கருத்தாக்க முறையை அமைத்துக் கொள்வதால்  இக்கட்டுரைகள் ஒரே சமயத்தில் அரசியல் சொல்லாடலாகவும் அரசியல் செயல்பாடாகவும் வடிவம் பெற்றுவிடுகின்றன.

அரசியல் செயல்பாட்டாளர், பெண்ணிய எழுத்தாளர் என்ற இருவகை அடையாளத்துடன் இயங்கும் தோழர் ப.சிவகாமி உருவாக்கிவரும்  எழுத்துகள் நீண்ட ஒரு போரட்டத்தின் தொடர் மொழிச் செயல்பாடுகளாக இருந்து வருகின்றன.

‘பழைய கழிதலும்’ நாவல் தலித் அரசியல் கவனம் கொள்ளவேண்டிய உள் முரணை பெண்ணிய அரசியலாக முன் வைக்கிறது.  ‘ஆனந்தாயி’ நாவல் ஆண் அடையாளத்தின் வன்முறைகளை உடல், மொழி, மனம் என்ற அனைத்துத் தளங்களிலும் விவரித்து குடும்பம் என்ற அமைப்பை கட்டுடைப்புச் செய்கிறது, அதிகாரத்தின் நுண்கொடுமைகளையும் வரைபடமாக்கித் தருகிறது.  ‘குறுக்கு வெட்டு’ நாவல் மனம், உடல், பாலியல் மதிப்பீடுகள் பற்றிய கட்டமைப்பை இழைபிரித்துக் கேள்விக்குள்ளாக்குகிறது.  ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ நாவல் மாற்று அரசியல் என்றால் என்ன, மாற்று அரசியலில் தனிமனிதர்களின் இடம் என்ன, கருத்தியலுக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான உறவு என்ன என்ற ஈவிரக்கமற்ற ஆய்வினைச் செய்கிறது.  இலக்கியச் சொல்லாடல்களாக உள்ள போது கருத்தியல் அமைதி குலைக்கும் தன்மை கொண்ட சிவகாமியின் எழுத்துகள் அரசியல் சொல்லாடலாக மாறும்போது செயல்படும் தன்னிலைகளை உருவாக்க முயல்கின்றன.

“மேம்பட்ட சமூகத்தை உருவாக்க, பெண்கள் ஒவ்வொரு நிலையிலும் கடுமையாகப் போராடினர். இன்றைய பல சமூகச் சட்டங்களுக்கு அவர்களின் போராட்டங்களே அடிப்படை. புதிய பொருளாதாரச் சூழல் தோற்றுவித்த கருத்தியல்களை, பெண்கள் படிப்படியாக வளர்த்தெடுத்து சமூக மேன்மைக்கான மாற்றங்களைக் கொணர்ந்தனர்.” என்ற பின்புலத்துடன்தான் அவரது கருத்தியல் திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன.

“இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடெங்கும் பல்வேறு பெண்கள் அமைப்புகள் தோன்றிச் செயல்படத் துவங்கிய பிறகும் அவர்கள் நடவடிக்கைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இன்னமும் பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு அரசியலையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவது ஏன்?” என்ற   கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் “புழக்கத்திலுள்ள பெண் விடுதலைக் கோட்பாடுகள் யாவும் சாதிமத அடிப்படைகளைத் தகர்க்காது வர்க்க முரண்களை அடிப்படையாகக் கொண்டு சீர்த்திருத்தங்களை விழைபவை.” 

இதனைக் கடந்த ஒரு அரசியலைத் “தலித் பெண்ணியம் என்பது சாதி-மத-வர்க்க அடிப்படையிலான ஆணாதிக்கத்தை வேரறுப்பது. பால்பேதமற்றது, எல்லா உயிர்களும் சம சமூக மதிப்பு உடையன என்பதை ஏற்றுக் கொள்வது.” என அடையாளப்படுத்துகிறார் அரசியல், எழுத்து என்ற இரு தளங்களில் இயங்கும் பெண்ணிய ஆளுமையான சிவகாமி.

பெண்ணிய அரசியலில் ஒவ்வொரு சொல்லும் செயலாகவும், ஒவ்வொரு செயலும் அரசியலாகவும் மாறும் தன்மை கொண்டது. “இதை இயல் அல்லது தத்துவம் என்று வரையறுப்பதைக் காட்டிலும், மிக நுண்ணியக் கூறுகளாகப் பகுத்து, அவைகளுக்கு செயல்வடிவம் தந்து, உடனடியான களப்பணியில் இறங்குவதே சிறந்தது…” எனச் செயலுக்குள் இழுத்துச் செல்லும் எழுத்துகளாக இயங்குகின்றன  இவை.

தமிழவனின் புதிய புனைகதை -ஜமாலன்

‘ஷம்பாலா’   அரசியல் குறியீட்டு நாவல்

 ஜமாலன்

“கலைகள் எப்போதும் பூரணமான விளக்கத்தை நிராகரிக்கின்றன.  எந்த எதிர்கால அரசும் கூட கலையைக் கைது செய்யமுடியாது” (ஷம்பாலா, ப. 210)

“உலகம் முழுவதும் எதேச்சதிகாரப் போக்குள்ளவர்கள் தேர்தல்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.  ஜனநாயகப் பண்புகளைத் தோண்டி புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் வெற்றி பெற்று வருகிறார்கள்.  தங்களுக்கு கஷ்டம் கொடுத்தாலும் மக்கள் அந்த எதேச்சதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதை விளக்கிக் கூறுவதற்கு இன்றைய அறிவுத்துறை வளரவில்லை போலுள்ளது.”  (ஷம்பாலா, ப. 127)

“கலைகள் எப்போதும் பூரணமான விளக்கத்தை நிராகரிக்கின்றன.  எந்த எதிர்கால அரசும் கூட கலையைக் கைது செய்யமுடியாது” (ஷம்பாலா, ப. 210)

தமிழவனின் புதிய நாவல் ஷம்பாலா (2019)  ஓர் அரசியல் நாவல் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ளது. அரசியலைப் பல குறியீடுகள் வழிப் பேசும் ஒரு அரசியல் குறியீட்டு நாவல்.  அரசியல் குறியீடுகள் மற்ற குறியீடுகளைவிடச் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஜார்ஜ் ஆர்வெல்லின் “விலங்குப்பண்ணை” என்ற நாவல் உலக அளவில் மிக முக்கியமான அரசியல் நாவலாகப் பேசப்பட்ட ஒன்று.  முழுக்க எதேச்சதிகார அமைப்பு குறித்த பல குறியீடுகளைக் கொண்ட நாவல். ஒரு விலங்குப் பண்ணையாக எதேச்சதிகார சமூகத்தையும், அந்த சமூகத்தின் அதிகாரத்தில் உள்ள கட்சியையும் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.  அந்நாவலின் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் குறித்துப் பல சந்தேகங்கள் உள்ளன. அவர் அமெரிக்க உளவுத்துறையோடு இணைந்து செயலாற்றியவர் என்றும் ரஷ்ய சோஷலிச சமூகத்திற்கு எதிராக எழுத வைக்கப்பட்டவர் என்பது போன்றன. அந்நாவல்கூடச் சமத்துவச் சமூகத்தை (சோஷலிஸ்ட் சொசைட்டி) ஒரு விலங்குப் பண்ணையாக உருவகித்து எழுதப்பட்டது என்பதும், அது உலக அளவில் முதலாளியச் சக்திகளால் கொண்டாடப்பட்டதும் வரலாறாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு குறியீட்டு நாவல் என்பதைவிட ஒரு அங்கத கதை என்று சொல்லலாம்.  தமிழவனின் ஷம்பாலா நாவலோ பல அரசியல் குறியீடுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  உலக அளவில் நிகழ்ந்த பல அரசியல் நிகழ்வுகள் நாவலில் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டுள்ளது.

தொடர்ந்து உலக, இந்திய, தமிழக அரசியலைக் கவனித்துவரும் ஒரு படைப்பாளியின் தற்கால அரசியல் குறித்த ஒரு புனைவாக  அமைந்துள்ளது இந்நாவல்.  உலக அளவிலும் குறிப்பாக இந்தியாவிலும் பெருகிவரும் வலதுசாரி பாசிச அரசியல் குறித்துக் கவனம் குவியச் செய்கிறது இந்நாவல். அதனை அங்கதமாக்காமல், நாவலுக்குள் நிகழும் நிகழ்வுகளில் உள்ளிருத்தியும், நாவல் நடப்பியல்-யதார்த்தம் மற்றும் புனைவு-யதார்த்தம் இரண்டு முறைகளிலும் எழுதப்பட்டுள்ளது. யதார்த்தச் சித்தரிப்புகளும், யதார்த்த மீறிய நிகழ்வுகளுமாக.

உலகெங்கிலும் வலதுசாரிவாதம் கோலோச்சும் இன்றைய சூழலில், அதற்கான உளவியல், சமூகவியல் சார்ந்த அரசியலை ஆராய முற்படுகிறது இந்நாவல்.  வலதுசாரிவாதம் ஜனநாயக அரசமைப்பிற்குள் நுழைந்து ஒரு சட்டவாத-பாசிச அரசாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அதன் உள்ளார்ந்துள்ள உலக ஆதிக்கம் பற்றிய கனவைப் பேசுகிறது.  அக்கனவிற்கான ஒரு ஆன்மீக மையமாக அமைந்த இடமே “ஷம்பாலா”.

நாவலின் பெயர் “ஷம்பாலா”.  ஷம்பாலா என்பது ஒரு தொன்மம்.  உலக அரசாட்சியின் மையமான அதிகாரம் நிறைந்த இடம்.  இது குறித்து நாவலின் இறுதி அத்தியாயத்தில் தண்டி பத்லா என்கிற சாமியரால் விளக்கப்படுகிறது.  நாவலில் ஷம்பாலா என்பது ஒருவகை ஆன்மீக அரசியலின் குறியீடு.  அது புத்த லாமாக்களால் கொண்டாடப்படும் திபேத்தில் உள்ள ஒரு மலைச்சிகரம்.  புத்த கருணையின் வடிவமாக உள்ள ஷம்பாலா, உலக அதிகாரத்தை கருணைக்கு எதிரான கொலைவெறி மூர்க்கத்தின் வழி பெற்றுவிடலாம் என்று நம்பவைக்கப்படுவதே இந்ந நாவலின் நகைமுரண். நாவலில் ஷம்பாலா குறித்துப் பேசப்படுவது மிகக்குறைவுதான்.  மதமும், ஆன்மீகமும், அரசியலும் கலந்து நவீன சாமியார்கள் எப்படி அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அரசை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு.

இதுபோன்ற குறியீடுகள்தான் ஆன்மீகத்தை அரசியலாக மாற்றும் ஒரு மர்மமான பகுதியாக, திரைமறைவில் இயங்குவதாக உள்ளது.  ஆக, ஷம்பாலா என்பதே நாவலின் மையப்படிமம்.  உலக அதிகாரம் பெற அதீத மனித உருவாக்கம் நிகழ வேண்டும்.  அந்த அதிமனிதன் உருவாக்கமே நாவலின் புனைவு-யதார்த்தமாக, நாவலுக்குள் உள்ள பாத்திரமான எழுத்தாளன் அமர்நாத்தால் எழுதப்படும் நாவலாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது.

நாவல் ஒரே நேரத்தில் ஒரு புராணிகத் தன்மைக் கொண்ட உலக அதிகாரத்திற்கான வேட்கை செறிந்துள்ள ஆன்மீக ஆற்றல் மையத்தையும், பரவிவரும் உலக அரசாட்சிக்கான மதம் சார்ந்த வேட்கையையும் புனைவாக்கிக் காட்டுகிறது.  நாவலின் நாயகராக உள்ள அமர்நாத் தொடர்ந்து அரசால் கண்காணிக்கப்படுவதும், அவரை கண்காணிக்கும் உத்திகளும் மிக நுட்பமாக நாவலில் பகடி செய்யப்படுகிறது.  

அமர்நாத் ஒரு எழுத்தாளர்.  தன்னை ஒரு இடது தாராளவாதியாகக் கருதிக்கொண்டு எழுதுபவர்.  அவரை “சிந்தனை போலிஸ்” என்ற ஒரு வகை போலிஸ் மோப்பம் பிடிக்கிறார்கள்.  எப்படி என்றால் அவர் சிறுநீர் கழித்தபின் அவரது கழிப்பறையில் உள்ள கழிப்பிடத்தை முகர்ந்து, அந்த மோப்பம் வழி அவரது சிந்தனையை அறிய முற்படுகிறார்கள்.

இப்படி உளவுத்துறை முழுக்க எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை கண்காணிப்பதும், அப்படி கண்காணிப்பதன் வழியாக சில உத்திகளைப் பயன்படுத்தி அவர்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதுமே நாவலின் நடப்பியல் யதார்த்த பகுதி.  

நாவலில் இரண்டு யதார்த்தங்கள் உள்ளன.   மேலே சுட்டியுள்ளதைப் போல ஒன்று நடப்பியல்-யதார்த்தம்.  வழக்கமாக நாம் வாசிக்கும் நாவல்களில் நிகழும் நடப்பியல் சார்ந்த கதையாடல்.  மற்றொன்று, இந்நாவலில் வரும் புனைவு-யதார்த்தம்.  அந்தச் சிந்தனை போலிஸ் அமர்நாத்தைக் கட்டுப்படுத்த துவங்கியவுடன் அவருக்குள் உருவாகும் ஒரு புனைவு யதார்த்தமே நாவலின் மற்றொரு கதை.  இவ்விரண்டு கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை.  அதாவது நடப்பியலில் எழுத்தாளர்கள் அரசால் அச்சுறுத்தப்படுவதற்கான நடவடிக்கையாக உளவுப்பார்த்தல், அவர்களைக் கைது செய்தல், வழுக்காடுதல் என்பது ஒரு புறம். 

இதெல்லாம் நடப்பதற்கான அரசு உருவாக்கம் நிகழ்வது மறுபுறம். இந்நிகழ்வுகளே மற்றொரு புனைகதையாக நாவலில் எழுதப்படுகிறது.  அந்தப் புனைவு-யதார்த்தம் இன்றைய அரசியலின் நடப்பியல் யதார்த்தமாக உள்ளது. சங்கத்தமிழ் அல்லது தொல்காப்பிய முறையியலில் சொன்னால் ஒன்று அகத்தில் உருவாகும் கதை, மற்றது புறத்தில் நிகழும் கதை.  இந்த அக புற விளையாட்டு இரண்டு அக-புற யதார்த்தங்களாக இந்நாவலில் எழுதப்பட்டுள்ளது.

யதார்த்தமும், புனைவும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிகழ்த்துவதாக நாவல் வாசிப்பில் சுவராஸ்யத்தையும், சிரத்தையையும் கூட்டுகிறது. சொல்லப்பட்ட அரசியல் சார்ந்த செய்திகள், குறிப்புகள் கவனத்துடன் உருவாக்கப்பட்ட பதிவுகளாக உள்ளன. ஒரு சிறுவன் கிணற்றில் பிணமாக மிதக்கிறான்.  அவனது உடல் முஸ்லிம், இந்து என்கிற மதம் சார்ந்த கதையாடலுக்குள் நுழைந்து வதந்தியாகப் பரவுகிறது.  இப்படி எல்லாவற்றையும் மதக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்குக் காரணமாக அமைவது ஷம்பாலா போன்ற தொன்மங்கள் உருவாக்கும் அரசியல் அதிகாரம் இதில் விவரிக்கப்படுகிறது.

ஊடகங்கள் எப்படி அரசுக்கு விலைபோயின என்பதையும் நாவல் விட்டு வைக்கவில்லை.  அமர்நாத்தின் நண்பரான சுரேஷ் என்ற எழுத்தாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுவரப்படுகிறார்.  அதை ஒரு செய்தியாகக்கூட காட்ட ஊடகங்கள்  முன்வராத நிலை  உள்ளதை நாவல் காட்டுகிறது.

நாவலுக்குள் வரும் புனைவு-யதார்த்தம் ஒரு கிராமத்தில் பிறந்த முரட்டுச் சிறுவன், தனது தாய் இறந்துவிட்டாள் என்று கூசாமல் பொய் சொல்லி ஆசிரியரிடம் தப்ப நினைக்கும் சிறுவன், குஸ்தி பயில்கிறான், ஓவியக்கலை படிக்கிறான், அவன் விரும்பிய பெண்ணால் “ஹெல்பர் பல்பர்” என்றும் “ஹிட்லர் பட்லர்” என்றும் அழைக்கப்படுகிறான்.  எப்பொழுதும் அவனுள் ஒரு கோரப் புலி ஒன்று உறங்கிக்கொண்டு உள்ளது. அது அவனைச் சில வேளைகளில் அவனே அறியாத பல அசாத்தியங்களைச் செய்ய வைக்கிறது.  உள்ளுறங்கும் புலிதான் அவனது ஆன்மீக மையமாக உள்ளது.  அதைச் சாமியார்கள் உசுப்பேற்றி அவனது திறமையாகக் கூறி அவனை அதி-மனிதனாக (சூப்பர்-மேன்) மாற்ற முயல்கிறார்கள்.  பிற்காலத்தில் அரசியிலில் நுழைந்து குறுகிய காலத்தில் இணை அமைச்சராகி, சாமியாரின் ஆசியுடன் எதிர்காலத்தில் தலைமைக்கு வரக்கூடியவனாகக் காட்டப்படுகிறான்.  

இயல்பில் வெற்றி என்கிற அதிகார வெறிகொண்ட, கருணையற்ற, தனது போட்டியாளர்கள் மேல் வன்மம் கொண்டு பலிவாங்கும் அவன், ரத்த உறவு, பாசம், காதல் உள்ளிட்ட எந்த ஒரு உணர்வுகளையும் தனது முன்னேற்றத்திற்கான ஒன்றாக பாவிக்கும் குணம் கொண்டவனாக இருக்கிறான்.  ஹார்வேர்டில் படித்த முதல்வர் தனது அறிவாற்றலை முழுக்கத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் சக்திகளுக்குப் பயன்படுத்த, அவருக்கு நம்பிக்கைக்கு உரிய உள்வட்ட ஆளாக மாறுகிறான்.

அவன் அமைச்சர் பொறுப்பைப்பெற முதலமைச்சரின் அடியாளாக, ஏவலாளாக அனைத்து வேலைகளையும் செய்கிறான்.  அவனது பெயர் ஹிட்லர்.  அதாவது வரலாற்றில் உருவான முதல் ஹிட்லர் யாரென்றே அறியாத இரண்டாவது ஹிட்லர் அவன்.  

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மார்க்சியம் முன் அனுமானித்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகில் வரும்போதெல்லாம், இப்படியான ஒரு ஹிட்லரை அந்த முதலாளிய உற்பத்தி முறையே உருவாக்கி விடுகிறது.  தற்போது உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தம் உருவாக்கியுள்ள எண்ணற்ற ஹிட்லர்களின் ஒரு குறியீடே இந்நாவலில் வரும் 32 இட்லி தின்ற மேஸ்திரியின் மகனான ஹிட்லர்.  பொருளாதாரப் பெருமந்தம் முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத விதி.  காரணம் சரக்குகளின் மிகை உற்பத்தி உருவாக்கும் தேக்கநிலை, சந்தை நிறைவு ஆனபின் புதுச்சந்தை தேடுதல் என்பதற்காக அது ஜனநாயக அரசை ஒரு எதேச்சதிகார அரசாக மாற்றி அந்நிய நாடுகளை நோக்கிப் படை எடுத்து புதிய சந்தை உருவாக்கத்தை நிகழ்த்தும்.

 அப்படியான ஒரு அரசியல் நிகழ்வே நெப்போலியன், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் தோற்றத்தை உருவாக்கியது.  இன்று அந்தப் பெருமந்தம் உலக முதலாளியச் சந்தைகளாக மூன்றாம் உலக நாடுகளை சூறையாடத் துவங்கியுள்ளது.  இந்நிலையில் பேச்சில் சுதேசி, செயலில் விதேசியாக ஒரு எதேச்சதிகார அரசு உருவாக்கம் உலக அளவில் நிகழ்கிறது. இதன் ஒரு கருத்தியல் விளைவே வலதுசாரி எழுச்சி.  இந்த எழுச்சிக்கான அரசியல்-உளவியலைப் புனைவாக்க முயன்றதே இந்நாவலின் வெற்றி.  தமிழவனின் கோட்பாட்டு வாசிப்பு அதற்கான பின்புலத்தைத் தருகிறது.  நாவல் பல நுட்பமான நிகழ்வுகள் குறித்தும் அதன்பின் உள்ள சமூக உளவியலை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நாவலைக் கோட்பாட்டு அடிப்படையில் வாசித்தால், நுண் (மைக்ரோ) அரசியல் மற்றும் பாரிய (மேக்ரோ) அரசியல் தளத்தில் இரண்டு வடிவங்களாக எழுதப்பட்டுள்ளது எனலாம்.  பொதுவாக நாவல் தரும் வாசிப்பு இடதுசாரிகள் மேக்ரோ அரசியலைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், வலதுசாரிகள் மைக்ரோ அரசியலை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்ற விரிவான குறிப்பு நாவலில் உள்ளது   (ப. 190).

 ராபர்ட் என்கிற வினாயக் எப்படி வலதுசாரி அரசியலுக்குள் போய், தீவிர மதவாதியாக மாறி, ஒரு சாமியாரிடம் பயிற்சிபெற்று, பிறகு அந்த சாமியாரின் தம்பி செய்த கொலையை ஏற்று சிறை சென்று, அங்கு ஒரு சமண அதிகாரியால் மனம்மாறி புத்தக வாசிப்பாளனாகி, மதவாதத்தை எதிர்ப்பவனாக மாறுகிறான்.  புத்தக வாசிப்பு மனதை எப்படி பண்படுத்தும் என்பதைச் சொல்லும் இப்பகுதிகள் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளது. வலதுசாரிவாதம் எப்படி ஒரு நுண் அரசியலாக கண்ணுக்குத் தெரியாமல் உள்ளார்ந்து இயங்கி ஒரு பெரும் படையைக் கட்டமைத்துள்ளது என்பதை நாவல் விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியமானவை.  

வலதுசாரி இந்துத்துவ மதவாத பாசிசம் இந்தியாவில் எப்படி வெற்றிவாகை சூடுகிறது என்பது நமக்குப் புரியாத பகுதி.  அதற்கு காரணமாக அமைந்த அவர்களது இந்துத்துவ உடல் உருவாக்கம் எப்படி, உடற்பயிற்சி என்பதில் துவங்கி வலுவான உடலை உருவாக்குதல், அறிவும், மனமும் ஆரோக்கியமான உறுதியான உடலுக்கு எதிரானது என்று அறிவு எதிர்ப்பு சிந்தனையையை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் பொதுச் சிந்தனையாக, பொதுபுத்தியாக கட்டமைத்தது என்பதை நாவல் விவரிக்கிறது.  இது அரசியலில் முட்டாள் தனம் உடலுறுதி என்கிற பாசிச உறுதிப்பாடாகக் கேலோச்சத் துவங்கியதை விவரிக்கிறது.

 உலக ஆன்மீக மையம் என்ற நவீனத் தொன்மமாகக் கட்டப்பட்ட புண்ணிய பூமி என்கிற இந்தியாவில், ஹிட்லர் என்ற ஜெர்மானிய பாசிசவாதி, சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தால் அதாவது உடலுறுதி என்ற 60 இஞ்ச் மார்பு உள்ளது, யோகம் செய்தல், உடலை வலுப்படுத்துதல் ஆகிய ஊடகத் தொன்மங்கள் வழி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் புனைவாக்கிக் காட்டுகிறது நாவல்.  அரசியல் திரைமறைவு வேலைகள் எப்படி இயல்பானதாக நிகழ்த்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

நாவலின் மையப்படிமம் சிந்தனை போலிஸ்.  இந்த சிந்தனைப் போலிஸ் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு.  இவர்கள் புறத்தில் சிந்தனையை கண்காணிப்பவர்களாக இருந்தாலும், அகத்தில் இவர்கள் சிந்தனை தணிக்கை செய்யும் தன்னிலையாக வடிவமைகிறார்கள்.  அதாவது ஒவ்வொருவரது உடலிற்குள்ளும் சிந்தனை போலிஸ் என்கிற தணிக்கை செய்யவும், சிந்தனையை, உணர்வை கட்டுப்படுத்தவும், தனக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் ஆன ஒரு நனவிலியே இந்தச் சிந்தனை போலிஸ். 

இந்நனவிலி் எப்படி ஒவ்வொரு உடலுக்குள்ளும் உருவாக்கப்படுகிறது என்பதை உள்ளுறையாகக் கொண்டு எழுதப்பட்ட பிரதியே நடப்பியல்-யதார்த்த பிரதி.  இதன் மறுதலையாக உருவாகுவதே மேக்ரோ லெவலில் ஆன அரசியல்.  ஆக பாசிசத்தின் இரண்டு தளங்களுமே இந்நாவலின் மையப்பிரதியின் அமைப்பாக பொருந்தியுள்ளது.  

சிந்தனை போலிஸ் எப்படி நமது தன்னிலைக்குள் ஊடுறுவி நம்மை முழுக்க அதிகாரத்திற்கு ஏற்புடைய தன்னிலைகளாக கட்டமைக்கிறார்கள் அல்லது நமது எதிர்ப்பை எப்படி நீர்த்துப் போகச் செய்கிறார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாகக் காட்சிப்படுத்துகிறது.  அமர்நாத்தின் மகள் அவர்களது கண்முன்னால் உள்ளபோதே காணவில்லை என புகார் அளித்ததாகக்கூறி, தொடர்ந்து அவரது மனதை புதிருக்குள் நுழைத்து, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். தினமும் தொலைபேசியில் அவருக்கு உங்கள் மகளை காணவில்லை என நீங்கள் புகார் அளித்துள்ளீர்கள் என தகவல் அனுப்புவது மட்டுமே அவர்கள் பணி.  ஆனால், மகள் காணாமல் போகலாம் என்கிற ஊகத்தை அளித்து அவளை பாதுகாப்பதற்கான அவரது முழுமையான செயல், அறிவு, உணர்வை அதைநோக்கி திருப்பிவிடுவார்கள்.   ஒரு பொய்த் தகவலை உண்மையென நம்பவைப்பது,  நிகழ்வதில் உண்மை எது பொய் எது என்று பிரித்தறியும் பகுத்தறிவை இல்லாததாக்குவது பாசிசம் செய்யும் உளவியல் ஒடுக்குமுறையாகும். அதை நுட்பமாக இந்நாவல் வெளிப்படுத்துகிறது. அவரது தினவாழ்வே சிந்திக்க முடியாத அந்த நகரச் சூழுலில் சிக்கிவிடுகிறது.   அவர் முன் இல்லாமலேயே  அவர்கள் இவருடன் தன்னிலையில் அமர்ந்துகொண்டு கண்காணிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.  இந்தக் கண்காணிப்பு  விளையாட்டை ஒருவரது கற்பனை மனத்தளத்தில் உருவாக்கி தமது தனிப்பட்ட வாழ்வை  அனைவரும் காணும்படி பொதுப்பார்வையில் நிகழ்த்துவதான தன்னிலையாக மாற்றிவிடுகிறார்கள்.  இது சிந்திப்பவர்களுக்கான கண்காணிப்பு உத்தி, சிந்திக்காத பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாகக் கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, தன்னிலை வடிவமைப்பு  செய்யப்படுகிறது.   

பிரஞ்சு மார்க்சிய திரைப்பட இயக்குநரான லூயி புனுவல் முதலாளியத்தின் இத்தகைய கண்காணிப்புப் பேயுருக்கள் (surveillance phanthom) குறித்து விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் ஒன்றை எடுத்தார்.  அப்படத்தில் குழுந்தை வீட்டில் உள்ளபோதே காணாமல் போய்விட்டது என்று புகார் கொடுத்து காவல்துறை தேடிக் கண்டுபிடித்து விளளையாடுவார்கள். முதலாளியத்தின் பேயுருக்களே இந்தச் சிந்தனை போலிஸ்.  இவை எல்லோரையும் அதனதன் அளவில் பிடித்தாட்டும் ஒன்றாக மாறியுள்ளது.  இன்றைய வாழ்வு பாசிசம் கையளித்துள்ள அதன் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுக்குள் நிலவும் ஒன்றாக மாறியுள்ளது.

அனைவரும் இந்தச் சிந்தனைப்போலிஸ் என்கிற நனவிலி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளோம். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று: இலக்கியம், எழுத்து என அனைத்து அறிவுசார் துறைகளும் படைப்பு, உள்ளொளி என்பதை முதன்மைப்படுத்தி, அதன் வழியாக கோட்பாடற்ற அறிவு எதிர்ப்பு மரபைக் கட்டியமைத்துள்ளது.  இந்த இலக்கியக் குழுக்களின் நுண் அரசியலுக்கும் இத்தகைய பாசிச உருவாக்கப் பாரிய அரசியலுக்கும் உள்ள உறவை இந்நாவல் தனது உள்ளார்ந்த குறியீட்டு கதை வழி நுட்மாக விவரிக்கிறது.    எழுத்தாளர்களும், பதிப்பகங்களும், வாசகர்களும் ஒரு வலைப்பின்னலாக இப்பாசிச விஷத்திற்கு  இரையாக்கப்படுகிறார்கள்.  ஒரு பிரிவினர்  விளைபொருளாக அனைத்தையும்  மாற்றி விஷத்தை பரப்புகின்றனர். இவற்றை இந்நாவல் தன் கதைவழியாக நுட்மாக புலப்படுத்துகிறது, ஒரு வகையில் விளக்குகிறது.

 உலகத் தன்மை கொண்ட இந்த நாவல் பொதுவான வலதுசாரி பாசிசத்தின் தோற்ற மூலத்தைத் தேடுகிறது.  அதற்குள் உள்ள தமிழ் நாவல் அக-புற ஊடாட்டத்தில் அதன் அரசியல், கருத்தியல் ஆகியவற்றை அகழ்ந்து முன்வைக்கிறது.  பிரஞ்சு சிந்தனையாளரான ஜீ்ல் தெல்யுஸ் மறைவுக்குப் பின் வெளிவந்த அவரது மிக முக்கியமான அறிக்கை ஒன்று எதிர்காலச் சமூகம் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் ஆன சமூகமாக மாறப்போகிறது என்பதை விவரிக்கிறது.  அக்கட்டுரை இறையாண்மை என்பதன் வரலாறு எப்படி ஒரு மனித உடலை, சமூகத்தை கண்காணிப்பதிலிருந்து, கட்டுப்படுத்தலை நோக்கிச் செலுத்துகிறது என்பதை விவரிக்கிறது.  இன்றைய அரசுகளின்  இறையாண்மையே கட்டுப்படுத்துவதையும், கண்காணிப்பதையும் கொண்டே வலிமை பெறுகிறது, நிலைபெறுகிறது என்பதை இந்நாவல் நிகழ்வுகளின் வழி விளக்கிக் காட்டுகிறது.  

இன்றைய அரசு, பாசிசத்தையே சட்டபூர்வமாக  மாற்றுவதற்கான பல அரசியல் சித்துவேலைகளைச் செய்கிறது என்பதை  ஆச்சயர்ப்படும் விதத்தில் இந்நாவல் வெளிப்படுத்துகிறது. மதுசூதன் என்ற போலிஸ் அதிகாரியின் கதை இதனை விளக்கும் பகுதியாக அமைகிறது.  யார், என்ன செய்கிறார்கள் என்பதை  அறியாமலேயே  பாசிச அரசியலுக்குள் ஒவ்வொருவரும் உள்ளிழுக்கப்படுவதைக் குறிநிலைப்படுத்தும் நிகழ்வு அது. 

இந்நாவலில் கவனத்திற்குரிய பகுதிகள் இவை: மதமும் சாமியார்களும், ஆன்மீகமும் வலதுசாரிவாதத்தின் மைய வடிவமாக இருக்கிறார்கள்.  இரண்டு கதைகளில் எது உண்மை எது புனைவு என்ற சிக்கலை உருவாகிறது.  பாத்திர அறிமுகங்கள் குறித்த விபரங்கள் துண்டு துண்டாக அமைகிறது.  பாத்திரங்களை  வழக்கமான நாவல் பாணியில் ஒரு அறிமுகம் செய்யாமல், அந்த பாத்திரம் யாரால் நோக்கப்படுகிறதோ, அவரது உணர்விற்கு ஏற்ப அறிமுகப்படுத்துகிறது. அதாவது நாவலுக்குள் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது குறித்து, ஒரு நோக்குநிலை வர்ணனையை வெளிப்படுத்துதல். இவை வாசிப்பில் புதியதொரு உணர்வைத் தருகின்றன.   

வேதகால ராக்கெட் குறித்த பகடி,  1930-களில் சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஹிட்லருடன் இருந்த உறவு, மொழி அடையாளமாக வெளிப்படும் உளவியலை சிந்தனைப் போலிஸ் அமைப்பு  ஒரு உளவியல் நோய்க் குறியாகக்கொண்டு (symptoms) ஆய்வது, அதற்கென அவர்கள் வைத்துள்ள சொல் தொகுப்பு ஆய்வுமுறை, எழுத்தாளர்களைக் கண்காணித்தல் சிறிது சிறிதாக நனவிலி இயக்கமாக மாறி மனப்பிறழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுதல் என தற்கால நிகழ்வுகளால் நாவல் நிறைந்துள்ளது.   

நாவலின் மிக முக்கியமான பகுதி சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் குறித்த உளவியல் கட்டமைப்பு.  இந்தியாவின் மிகப்பெரும் ஆபத்து இது.  சிறுபான்மை மதம் சார்ந்த ராபர்ட் வினாயக்காக மாறுதல் இந்தப் பிரச்சினையை விளக்கும் நிகழ்வு. ராபர்ட் ஒரு கிறித்துவ கிராமத்தில் பிறந்து வளர்கிறவன், இந்த கிராமத்தில் கிறித்துவர்கள் பெரும்பான்மையினர்,  அந்தச் சூழலில் அவன் இந்து நண்பன் ஒடுக்கப்படுகிறான். அவனது வீடு இடிக்கப்படுகிறது, அதனால் பாதிக்கப்பட்டு ராபர்ட் வினாயக்காக மாறுகிறான். இன்று பெரும்பான்மை அரசியல் எப்படி சிறுபான்மையினரைச் சோதனை எலிகளாக மாற்றி வினாயக வழிபட்டை நிகழ்த்தி, ஒரு பேரச்சத்தைக் கட்டமைக்கிறார்கள் என்பதை விளக்கும் பகுதி இது.  சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் மன அமைப்பில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்த இப்பகுதி முக்கியமானது. 

வலதுசாரிகள் சுனாமி போன்ற துயர நிகழ்வுகளின் பொழுது  உதவுதல் என்ற பெயரில் வேர்க்கால் மட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.   அவர்கள் இலவச அடியாள் படைகளாக பயன்படுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தில் இருந்து சில  இளைஞர்களை மூளைச்சலவை செய்து மதவாத அமைப்புகள் அதிகாரத்திற்கான பகடைக் காய்களாகப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்களிடம் காணப்படும் இயல்பான சேவை மனப்பான்மை, கருணை, இரக்கம் ஆகியவற்றை உடல்-உயிர் முதலீடுகாளாக்கி அவர்களையே தங்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது வலதுசாரி அரசியல். வலதுசாரி ஊடகங்கள்-கதைகள்-வாசிப்பின் இடத்தில் காட்சியை முன்வைக்கின்றன.  பல பொய் மதவாதக் கதைகளைக் கட்டிப் பரப்புகின்றன. இந்த ஊடகப் பொய்கள்தான்  உலகை ஒரு மீ-யதார்த்த, மெய்நிகர் நிலைக்குக் கொண்டு செல்கின்றன, அது அறியாமை நிறைந்த மக்களின் உண்மை உலகாக மாறுகிறது. உண்மைகளைக் கட்டும் பொய்மைகளை பற்றிய, பொய்மைகள் நிகழ்வுகளாக மாறும் அரசியல் பற்றிய புனைவெழுத்தாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அரசியல் புனைவுகளை அறிவதற்கான வாசிப்பாக இது அமைகிறது. தமிழில் இவ்வகை எழுத்துகள் வாசிக்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் மிகவும் தேவையான ஒன்று.

[ஷம்பாலா : ஓர் அரசியல் நாவல்  (2019)  தமிழவன்,  சிற்றேடு  (விலை: 250, பக்.: 216)]

(புத்தகம் பேசுது, மே 2020)

பிரம்ம வித்யா (அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன)


பிரம்ம வித்யா
(அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன)

பிரேம்

தத்துவங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் அரசியல் சார்ந்தது, அரசியல் பற்றிய பேச்சு அறங்களின் தேர்ந்தெடுப்பு சார்ந்தது. அறங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் சிக்கலானது. ஏனெனில் அது மீண்டும் தத்துவங்களையும் அரசியலையும் தனது துணையாகக் கொள்கிறது. இந்தச் சுழல்களுக்கு நடுவே நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம். இதில் எந்தத் திசையை நோக்கி நகர்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் வேறு வழியின்றி வரலாற்றில் வந்து சிக்கிக் கொள்கிறோம். விடுதலையடைகிறோமா என்ற கேள்விக்கு முழுமையான பதிலை நம்மால் தரமுடியாவிட்டாலும் வரலாற்றுடன் எப்போதும் நாம் வினை புரிந்து கொண்டே இருக்கிறோம்.

வரலாற்றிடம் நம்மை ஒப்படைத்து விடும் போது கேள்விகள் பொருளற்றுப் போகின்றன. நம்மிடம் இருப்பவை அனைத்தும் பதில்கள் மட்டுமே. முன்பே தயார் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பதில்கள். எப்போதும் நம்மைச் செயலை நோக்கித் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. இந்தச் செயல்படு தன்மை நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் ஒருவரைக் கொண்டு செலுத்தி விடுகிறது.

உண்மையில் இந்த இடம்தான், மேற்குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் தொடக்கம் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் செயல்படுதன்மை, செயல் என்பவை முற்றிலும் அனுமதிக்கப்பட்டவை அல்ல. செயல்கள் அனைத்தும் தணிக்கைக்கும், விதிகளுக்கும், சட்டங்களுக்கும், தண்டனை அல்லது நன்கொடைகளுக்கும் தீர்ப்புக்கும் உரியவை. அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனுமதிக்கப்படாத செயல்கள் ஏற்கப்படுபவை ஏற்கப்படாதவை என்ற எதிரிடைகளின் வலிமை இங்குதான் தெரிய வருகிறது.

எதை ஏற்பது எதை மறுப்பது என்ற கேள்வி எழுந்தவுடன் மீண்டும் நாம் தத்துவம், அரசியல், அறம், வரலாறு என்ற சொல்லாடல்களுக்குள் நம்மையறியாமல் உழலத் தொடங்கி விடுகிறோம். இந்த உழற்சியிலிருந்து தப்பியவர் யாரும் இல்லை என்று சொன்னால், வேறு சில எதிர்வினைகள் உருவாகும். அப்பாவித்தனம் அதீத ஒப்படைப்பு கூட்டு மனோநிலை என்பவற்றைச் சிலர் உதாரணமாகக் கூறி தத்துவ உழற்சியும் ஊசலாட்டமும் அற்ற நிலையை விளக்க முற்படலாம். ஆனால் இவை அனைத்திலும் தத்துவம், அரசியல், அறம், வரலாறு என்பவை திணிந்து நிரம்பி கெட்டிப்பட்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை.

 ஒரே தத்துவம், ஒரே அரசியல், ஒரே அறம், வரலாறு என ஏகத்துவத்தின் இறுகிய வடிவம் இவை. இவற்றில் கேள்விகள் இல்லாதது போலவும் முழுமையான பதில்கள் மட்டுமே இருப்பது போலவும் தோற்றம் கிடைக்கலாம். ஒவ்வொரு பதிலுக்குக் கீழே கொலை செய்யப்பட்ட, புதைக்கப்பட்ட, சிறையிடப்பட்ட, நசுக்கப்பட்ட, பல நூறு கேள்விகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை இன்று யாரும் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கலாம்.

ஆனால் இப்படி நம்புவது கூடப் பேராசையின் வடிவமே. ஏனெனில் பிரம்மனையும், பிரம்மத்தையும் அறிவதற்கு குறைந்தது ‘மூவாயிரம்‘ ஆண்டுகளைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் பூமி நம்முடையது. இப்படிச் சொன்னவுடன் இதுதான் இந்த பூமியின் வலிமையும் என்று கூற கிழக்கிலும், மேற்கிலுமாக எத்தனை குரல்கள் எழும் என்று தெரியாது.

வித்யா என்பது பிரம்மத்தையே தனது இறுதி இலக்காகக் கொள்கிறது, இதுவே வேதாந்தத்தின் முடிவு. வேதாந்தம் என்றவுடன் புல்லரித்துப் போகாத சிந்தனையாளர்கள் எத்தனை பேர், சில புத்திகெட்ட சட்டோபாத்யாயாக்களைத் தவிர? ஆனால் நம்முடைய நிலை அப்படியல்ல. நாம் குழப்பத்தில் இருக்கிறோம். ஏனெனில் தற்போது நாம் வேதாந்திகள் அல்ல. பல்வேறு குழப்பங்களால், அவித்யாக்களால், மாயைகளால் நிரம்பிக் கிடக்கிறோம்.

இந்தியா என்றவுடன் ஞானத்தின் பூமி என்றும் பெரும் தத்துவங்களின் பிறப்பிடம் என்றும் ‘உலகம்‘ ஒரு வழியாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதை அய்ரோப்பிய, ஆசிய சிந்தனையாளர்கள் முன்மொழிய இந்தியச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு அதை நிரூபிக்கவே தமது கல்வி, கேள்வி, ஆய்வு அனைத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக ஞானங்களிலெல்லாம் உயர்ந்தது இந்திய ஞானம் என்று கொண்டாடும் கல்வியாளர்கள் மேற்கிலும் கிழக்கிலும் ஏராளமானோர். விவேகானந்தரின் வாழ்க்கைப் பணியாக இருந்தது, இந்து மதமே உலகில் சிறந்த ஞானத்தின் இருப்பிடம் என்று நிரூபிப்பது. இந்து மதம் என்றால் என்ன, அது வேதாந்தமே என்பதை ‘அனைவரும்‘ ஒப்புக் கொண்டுள்ளனர், வேதாந்தமே இப்போது இந்துக்களின் சமயம் என்பார் விவேகானந்தர்.

ஏன் இப்படிக் கூற வேண்டும் என்பது பழைய கேள்விதான். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், வைஷேசிகம், வைதீகம், சைவம், வைணவம் எனப் பலப்பல பிரிவுகளாகப் பிரிந்து போனதால் ‘இந்து மதம்‘ வலிமை இழந்தது, சீரழிந்து அடிமைப்பட்டுப் போனது. இவை அனைத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைக் களைந்து அதன் மூலம் வடிவத்தைக் கண்டறிந்து விட்டால் மாபெரும் ஞானமான ‘இந்து ஞானம்‘ முழுமையான வடிவில்  கையில் கிடைத்து விடும்.

பிறகு மிக மிகப் புராதனமானதும், மிக மிக ஆற்றல் வாய்ந்ததுமான ஒரு இந்திய சமய நிறுவனம் மறுஉயிர்ப்புப் பெற்றுவிடும். இந்தத் திட்டத்தை 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி எல்லா இந்து மதச் சீர்திருத்த சிந்தனைச் செம்மல்களும் செயல்படுத்தத் தொடங்கினர். வீரத் துறவியான மாபெரும் சிந்தனையாளர் விவேகானந்தரும் இதனையே தனது பேச்சிலும் மூச்சிலும் வெளிப்படுத்தி தனது முப்பத்தொன்பதாவது வயதில் மறைந்து போனார். இவர் மற்றவர் போலின்றி மேற்கின் வரலாறும் சிந்தனை மரபும் தெரிந்தவர்.

இவர் கூறுகிறார், மேற்கு வெளி நோக்கிய தேடுதலை உடையது, கிழக்கு  அதாவது ஆரியத் தத்துவம் உள்நோக்கிய தேடுதலையுடையது. மேற்கு திட்டமிடப்பட்ட செயல்களை உடையது. ஆரிய தர்மமோ உள் உலகின் மர்மங்களை ஆய்வது. இந்த இரண்டு ஞானங்களையும் மீட்டால் நாம் அடையப் போகும் வெற்றி அளவிற்கரியது.

இதற்கு அவர் வைக்கும் வாதங்கள் கவர்ச்சிகரமானவை. அது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியா வேதாந்த – இந்து ஞானத்தின் மூன்று அடிப்படை உண்மைகள் என்று அவர் கூறுவனவே இன்று முக்கியமானவை. இந்திய சமயப் பிரிவுகள் எதில் முரண்பட்டாலும் ஈஸ்வர, ஆத்மன், ஜகத் என்ற மூன்று அடிப்படைகளைத் தமது ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களே பிரிவுகளை உருவாக்கி விட்டன.

அந்தப் பிரிவுகளுக்குப் புராணங்களே அடிப்படையை உருவாக்கிவிட்டன. மீண்டும் நாம் நமது புராதன மூல முழுத் தத்துவத்தை அடைய வேண்டும், அறிய வேண்டும், மீட்டெடுக்க வேண்டும். அவர் கூறுவது ஒரு வகையில் உண்மையே. பிரஜாபதி, ஆத்மன், பிரபஞ்சம் என்ற கோட்பாடுகள்தான் இந்து சமயப் பிரிவுகள் அனைத்தையும் இணைப்பது. ஆனால் இன்று ‘உலகம்’ வியந்து பாராட்டும் இந்தியத் தத்துவக் கூறுகள் என்பவை இவைதானா என்பதுதான் நமது கேள்வி.

எல்லோரையும் வியக்க வைக்கக் கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புகள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்து விட்டன: வேதங்கள் என்ற அந்தத் தொகுதிகளே அதற்கு அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில் என்னதான் இருக்கிறது. இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து விட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எல்லாவற்றுக்கும் இவற்றில் பதில் இருக்கிறது. நாமும் மிரண்டு போய் நிற்க வேண்டியதுதான்.

சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம், கீதையையும் ஒரு முறைக்கு நான்கு முறை படிப்போம்.

வேதங்கள் என்பவை என்ன? ஒரு இனக்குழுக் கூட்டம் தாம் வணங்கிய சிறு தெய்வங்களைப் புகழ்ந்து வேள்வி செய்து சோம பானம் கொடுத்து மகிழ்வித்து தனக்கானத் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்கினி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும், பலியும் தந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்கினி இந்திரன், வருணன் தொடங்கிய பல நூறு தேவர்களுக்கான புகழ் பாடல். யசூர் வேள்வி செய்வதற்கான, பலி தருதலுக்கான  விதி முறைகளின் தொகுப்பு. அதர்வம் மருந்து சிகிச்சை மந்திர தந்திரம், வசியம், வாலை என நடைமுறைத் தொழில்நுட்பங்களின் தொகுப்பு.

இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு. ஒரு வகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும், கிடைத்திருக்கும்.

ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிராக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு, மாபெரும் ஞானத்தின் களஞ்சியம், பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதைக் கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவிற்கு பேரின்பம் பெறலாம்.

அடுத்தது உபநிஷதங்களும் கீதையும்: இவற்றில் மிக மிக அழகான விவாதங்கள் உள்ளன. கவித்துவமான சூத்திரங்கள் உள்ளன. பலவிதக் கேள்விகள், மனம், உடல், உண்மை, தருமம், நான், நீ, அவன், அது என்பவை பற்றி சுற்றிச் சுழலும் சூறாவளிகள் கவர்ச்சிகரமானவை.

ஆனால் இவை அனைத்துமே பௌத்தத்திற்குப் பிறகானவை. அதாவது பௌத்தம் ஒரு தத்துவமாக, சமயமாக, நிறுவனமாக, விஞ்ஞானமாக, அழகியலாக, தர்க்கவியலாக, சில இடங்களில் அரசியலாக விரிவடைந்த பின் உருவானவை. ஒரு வகையில் இன்றுள்ள ‘இந்து மதம்‘ என்பதே பௌத்தத்தின் ‘எதிர் விளைவு‘ என்றுதான் கூற வேண்டும்.

பௌத்தம் முன் வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் முகமாகவே பிறகு உருவான அனைத்து சமய முறைகளும் தமது தர்க்கங்களைக் கட்டின. கீதை முழுக்க முழுக்க ‘சுயமின்மை’, ‘தானழிதல்‘ என்பவற்றை  எடுத்துக்கொண்டு ஒரு புதிய செயல்படு தன்மையை உருவாக்குகிறது.

மகாபாரதம், இராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் சிறு சிறு கதைகளில் இருந்தும் புராணங்களில் இருந்தும் பிறகே முறையாகத் தொகுத்து எடுக்கப்பட்டவை. சமஸ்கிருதத்திற்கு இலக்கணமே பௌத்தப் பள்ளியில் படித்த அறிஞர்களால்தான் எழுதப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சொல்வதற்கு என்ன காரணம் என்று தோன்றலாம். வேறொன்றுமில்லை, இந்திய ஞானம், இந்திய அறம், இந்தியத் தத்துவம் ஏதாகிலும் இருந்தால் அது பௌத்தத்தின் மாபெரும் கேள்விகளுக்குப் பிறகு எழுந்த விவாதங்களின் மூலமும் விசாரணைகளின் மூலமும் உருவானவையே என்று சொல்லிப் பார்க்கும் முயற்சிதான்.

இதில் ஆரிய,  திராவிடப் பிரிவுகள் எதுவும் இல்லை. வைதீக, வேதாந்த அடிப்படைகளை ஏற்ற திராவிட சமூகங்களும் லோகாயதத்தைக் கூறிய ஆரியக் குழுக்களும் இருந்திருக்கின்றன. இன்னொன்று மிகவும் முக்கியமானது: இன்றுள்ள இந்து வழிபாட்டு முறையில் உள்ள எந்தக் கடவுளும் வேதத்தில் இல்லை. சிவ, விஷ்ணு, சக்தி என்று எந்த உருவங்களும் வேத சமயத்தில் கிடையாது. ருத்ரன் இரண்டு இடங்களிலும், விஷ்ணு இரண்டு மூன்று இடங்களிலும் குறிப்பிடப்படும் புற தெய்வங்களே.

சிவமும் விஷ்ணுவும், பௌத்தரிடமும் சமணரிடமும் அன்பு, கருணை, சேவை, அடைக்கலம் என்பவற்றை கற்றுக் கொண்டு, மக்களைக் கவர்ந்த சிறு குழு மற்றும் நாட்டார் மரபுத் தெய்வங்களே. சக்தியோ இந்தியப் பூர்வகுடிகள் அனைவரிடமும் இருந்த ‘கொற்றவை‘ போன்ற தாய்த்தெய்வ மூலப் படிமம். இவர்களை எடுத்து வெளியே வைத்து விட்டால் இன்றுள்ள இந்துமதம் சோமபானத்தைக் குடித்துக் கிறங்கி, காளை மாமிசத்தை உண்டு தேரில் ஏறி, அசுரர்கள், தாசர்கள், தஸ்யுக்கள், ராக்ஷஸர்கள், பிசாசர்கள், மிலேச்சர்கள் எனப் பலவகைப்பட்ட வேள்வி அறியாத கடவுள் நம்பிக்கையற்ற பூர்வகுடி மக்கள் மீது அன்புமாரிப் பொழியும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட அக்னி, வருண, வாயு, மாருதத் தெய்வங்களின் பெரும் படையன்றி வேறு எதுவாக மிஞ்சும்.

இராமானுஜரும் சங்கரரும் வேதாந்தத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். பிரம்மமே அனைத்திற்கும் மூலம், அதுவே ஒற்றை உண்மை. குறையற்ற, மகாகுணம் உடைய அனைத்திற்கும் அதிபதியான பிரம்மம். அதை அறிவதே மனித வித்தையின் நோக்கம். அதுவே மோட்சம், இதை அறிவிப்பதே வேதாந்தம். வேதாந்தம் பன்மையை மறுக்கிறது, பலவாகத் தோன்றுவதை மாயை என்கிறது.

அதைக் கடந்து ‘தான்’ மற்றும் பிரம்மம் என்பவற்றின் ஒருமைத்துவத்தை காட்டுவது என்றெல்லாம் அழகிய தர்க்க முறைகள், மறுப்புகள், நிரூபணங்கள். பிரம்மத்தை அறிய, வேதாந்தம் துணை செய்யும், வேதாந்தம் என்பது வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் என்ன, பிரம்மனை அறிதல் பெரும் ஞானம்தானே என்று சரணடைய நாம் தயாராகவும் செய்யலாம்.

சங்கரர் சொல்கிறார்: சூத்திரன் எவனொருவனும் பிரம்ம ஞானத்தையோ, பிரம்ம வித்தையையோ அடைய முடியாது. ஏனெனில் சூத்திரர்களுக்கு யக்ஞம் பற்றிய அறிவோ, வேதப் பயிற்சியோ உரியதல்ல. அவர்களுக்கு அது வழங்கப்படவும் கூடாது. ஞானத்திற்கும் அறிவிற்கும் சூத்திரர்கள் எந்தக் காலத்திலும் உரியவர்களாக, தகுதியானவர்களாக இருக்க முடியாது. பிரம்ம வித்யா சிலருக்கு மட்டுமே உதவியது.

சங்கரன் கூறும் இவற்றிற்கு வேதத்தில் முழு ஆதாரம் உள்ளதா என்றால் இல்லை, நான்கு வருணங்கள் பற்றிய குறிப்புதான் உள்ளது. இவர் சொல்வது மனுவை ஆதாரமாகக் கொண்டது. அப்படியெனில் அது வேதாந்தத்திற்கு புறம்பானது அல்லவா என்ற கேள்வி எழலாம். எழக் கூடாது, ஏனெனில் மனு பிரஜாபதியையும், பிரம்மத்தையும் ஏற்றுக் கொண்டவர். அத்வைத ஞானிக்கு சூத்திரர்களுக்கான ஆத்மனும், பிரம்மமும் எதுவாக இருக்கும் என்று தெரிந்திருக்கும். ஏனெனில் பௌத்த தர்க்கவியலையும், நிறுவன விதிகளையும் கற்றவர்தானே. ஆனால் சொல்லி வைக்க அவகாசம் இல்லை. இந்திய ஞானத்தின் இருப்பும் போக்கும் இப்படித்தான் இருக்கும்.

ஆனாலும் உலகம் வியக்கும் மாபெரும் தத்துவங்களும் அறங்களும் அழகியலும் இந்திய மண்ணில் தோன்றியே உள்ளன. பிரம்மம் எது? இந்த உலகத்தின் மூலம் எது? ஆத்மா என்பது எங்கிருந்து வந்தது? எங்கு போகிறது? என்று எந்தக் கேள்வியும் உன்னை உண்மையை நொக்கி செலுத்தாது. அவற்றை சற்று தள்ளிவை என்று சாந்தமாக உரைத்த பௌத்தமும், உன் சுடுமூச்சில் கூட சில செல் உயிர்கள் உயிரிழக்கக் கூடும் என்று கூறிய சமணமும், உண்பவை நாழி, உடுப்பவை இரண்டே என்று கூறிய தமிழின் நாடோடிக் கவி மரபும் இந்த மண்ணுக்குரியவை.

இவற்றில் எதைக் கொண்டு இந்திய ஞானங்களை அடையாளம் காண்பது? இவற்றில் எவற்றை இணைத்து இந்திய மனம், இந்திய மரபு, இந்தியத் தன்மை என்பவற்றை மீட்டெடுப்பது.

பின்குறிப்பு:

மேற்குலகத்தினர் இந்தியாவை மனித உரிமை மீறல்கள் நிறைந்த, பெண்களைக் கொலை செய்யக் கூடிய, தீண்டாமையைக் கடைபிடித்து, வன்முறை புரியக் கூடிய, ‘சமூக உணர்வு’ குறைந்த மக்கள் கூட்டம் நிறைந்த சமூகங்களின் கூட்டமைப்பு என்றும்கூட கூறுவதுண்டு.

இந்தியா ஒரு ஞான பூமியென்று கூறப்படுவதற்கும் இதற்கும் என்ன உறவு என்று அறிய வேண்டியது அவசியம். இந்த இரண்டு கருத்துமே மேற்கில் நிலவுகிறது என்றாலும், இந்தியாவைப் பற்றி இந்தியாவிற்குள் நிலவும் கருத்துக்கள் எத்தனை வகையானவை என்பதை அறிவது அவ்வளவு இலகுவான வேலையல்ல. பிரம்மனை அறிவதில் இது பெருஞ்சிக்கலானது.

விரிவடையும் வித்யா

(மேலும் விரிவாக விவாதிக்கப்படுவதற்கான தொடக்கம்)

எனது பிரம்ம வித்யா கடடுரையின் மீதான ‘எதிர்வினை‘ மேலும் சில கருத்துக்களை விளக்கக் கோருகிறது. எதிர்வினையாளர் தம்மை ‘மெத்தப் படித்த மேதாவி அல்ல, சிறிதே படித்தவன்‘ என்று கூறிக் கொண்டபின் சொன்னவற்றைத் தெரிந்து கொண்டு வேறு வேலைகளைப் பார்த்திருக்கலாம்தான். ஆனால் சிறிதே படித்தாலும் படித்தது வேதமல்லவா, எப்படி அதற்கெதிரான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு வாளாவிருப்பது, நன்று எதிர்வினை.

கட்டுரையின் அடிப்படையை ஒருவாறு உய்த்துணர்ந்த நுண்ணறிவுதான் எதிர்வினையாளரை இப்படி எழுத வைத்திருக்கிறது. அவர் ஒரு ‘எட்டு கருத்துக்களைப்‘ பட்டியலிட்டு ‘இவை அனைத்தும் மகா வாக்கியங்கள், இவற்றிற்கு ஆதாரங்களோ மேற்கோள்களோ காட்டுவதற்கு அவசியம் இருக்கிறது என்று ஆசிரியர் நினைக்கவில்லை‘ என்று கூறுகிறார். சில ஆயிரம் நல்வாக்கியங்களை எழுதிவிட்ட எனக்கு சில மகா வாக்கியங்களை எழுதும் தகுதியும் உரிமையும் இருக்கிறது என்று நினைக்கக் காரணம் உண்டென்றாலும், இப்படி ஒரு சிறு கட்டுரையில் ஆதாரங்களையும் மேற்கோள்களையும் இணைத்து ஒரு நூல் அளவுக்கு எழுதிவிட முடியும் என்று நினைக்கவில்லை. நான் எழுதும் ஒவ்வொரு வாக்கியங்களுக்குப் பின்னும் பல நூறு ஆதார, மேற்கோள் வாக்கியங்கள் குறிப்புகளாக எஞ்சியுள்ளன. தேவைப்படும்போது அனைத்தையும் வெளியிடுவேன். தற்போது மிகச் சுருக்கமான சில விளக்கங்களை மட்டும், அதுவும் எனது எழுத்துக்களைத் தொடர்ந்து பழகி வரும் வாசகர்களுக்காக.

 ‘பிரம்ம வித்யாவில்‘ சொல்லியிருப்பது இந்து மையவாதத்திற்கு ஆதாரமாகவுள்ள வைதீக, பிராமண, சனாதன, வேதாந்த மரபு என்பது வெறும் போலித்தோற்றம். அதில் அற உள்ளீடோ, தத்துவ மெய்யியல் உள்ளீடோ இல்லை. இது இந்திய மரபுகளின் பல வடிவங்களில் ஒன்றே தவிர மேல் நின்று இயங்கும் உயர்தகுதி கொண்டதல்ல என்பதுதான்.

அது மட்டுமல்ல வைதீக, சனாதன, இந்து மரபு  மனிதப் பண்புக்கு கடும் கேட்டை விளைத்த  வன்முறை மரபும் கூட, இதனைப் பல கோணங்களில் இருந்து விளக்கலாம். ஆனாலும் வேதம் பற்றிய பலநூறு ‘ஓலங்கள்‘ எழுந்தபடியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற ஐயப்பாடு சிலருக்கு ஏற்படுவதுண்டு.

அதனைக் கலைப்பதற்கே எனது கட்டுரை ஒரு முன்னுரையாக அமைந்தது. இக்கட்டுரை ‘எதிர்வினையாளர்‘ போன்றோருக்குக் கடும் சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகத் தெரிந்ததே. ஆனாலும் இன்றுள்ள நிலையில் இவர்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முன்புபோல அனைத்தையும் மறைத்து ‘அத்தியாத்ம வித்யானாம் வாத ப்ரவததா மஹம்‘ (வித்தைகளுக்குள் அத்தியாத்ம வித்தையும் வாதஞ் செய்பவரிடம் வாதமும் நானே) என்று முடித்துக் கொள்ள முடியாது அல்லவா. இனி  விளக்கங்கள்.

புல்லரித்துப் போதல் பற்றி:

வேதாந்தம் என்றவுடன் புல்லரித்துப் போகாக சிந்தனையாளர்கள் எத்தனை பேர், சில புத்திகெட்ட சட்டோபாத்யாயாக்களைத் தவிர? என்பது கேள்வி.

கேள்வி மட்டுமல்ல கேலி. இந்தக் கேள்விக்குப் பின் சிலர் வேதாந்தத்தை ஏற்காமல் இருக்கிறார்கள் என்ற கருத்தும் படிந்துள்ளது. இதுவன்றி இந்து மதத்திற்கு வேதாந்தமே அடிப்படை என்பது எவ்வாறு என்பதும், இந்து மதத்தைக் கண்டு புல்லரித்தல் என்பது எவ்வாறு என்பதும், இந்து மதத்தைக் கண்டு ‘புல்லரித்தல்‘ என்பது ‘தனிமனிதனைச்‘ சார்ந்தது அல்ல என்பதும் தான் நாம் விவாதிக்க வேண்டியவை.

வேதத்தையும், வேதாந்தத்தையும் கண்டு நெக்குருக இந்திய வரலாறும், இந்தியச் சமூக நிலையும் தெரியாத ஒருவரால்தான் முடியும். தேவாலயத்தையும் வினய பீடகத்தையும் கண்டு புல்லரித்தல் போன்றதல்ல இது. உலகில் தம் வர்ணத்தையும் ஜாதி தர்மத்தையும் தவிர உச்சநிலையும் உயர் தகுதியும் பெற முழு உரிமையும் கொண்ட வேறு யாரும் இல்லை என்று நிறுவ ஒரு பிரிவினர் செய்த வன்முறையின் அடையாளங்கள் இவை. இவற்றைக் கண்டு புல்லரித்தலுக்கு ஒரு விஷேச ஃபாசிச மனோநிலை தேவைப்படுகிறது. இது பற்றியதுதான் பிரம்ம வித்யா கட்டுரை.

உலகில் எல்லா இனக்குழுக்கள், குடிமரபுகள் போன்றவற்றின் சிந்தனைத் தொகுதிகளைப் போன்றவைதாம் வேதங்கள் என்று சொல்லி விட்ட பிறகு விவாதிக்க என்ன இருக்கிறது. எல்லா மதங்களின் பூர்வ நூல்களும் அப்படியே. இவை மானுடவியல் ஆய்வுகள் தொன்ம ஆய்வுகள் போன்றவற்றிற்கு மிக நல்ல ஆதாரங்கள். மிக ஆர்வமூட்டும் உருவக, குறியீட்டுப் பதிவுகள்.

ஆனால் வேதங்களை அப்படிச் சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. ஏனெனில் அது குறையற்றத, மாறாதது. எல்லா வேத நூல்களும் தம்மை இப்படியே கூறிக் கொள்கின்றன. என்றாலும் எமக்கு அவை நூல்களே, வெறும் நூல்களே.

‘வேதங்கள்  மனித குலத்தின் அதிசயங்களில் ஒன்று‘ என்று கூற எதுவுமில்லை. மனிதர்கள் படைத்த அனைத்தும் அதிசயங்களே என்கிற வகையில், ஒரு கற்கருவி போன்றே வேதங்களும் மனித குல அதிசயங்களில் ஒன்று என்று வேண்டுமானால் கூறலாம்.

வேதங்கள் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன என்பதாலேயே உயர்ந்தவையோ உன்னதமானவையோ ஆகிவிட முடியாது. அவற்றின் அறம், மனிதநேயம் போன்றவையும் இந்தியச் சமூகங்களுக்கு அவை ஆற்றிய நன்மைகளுமே அவற்றை மதிப்பிட அளவுகோள்கள். இந்தியச் சமூகத்தில் பல நூறு நூல்கள் வாசிக்கப்படக் கூடாதவை என்றும் பாதுகாக்கப்படக் கூடாதவை என்றும் அழிக்கப்பட்டுள்ளன. இவை போல் அன்றி, பாதுகாக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக மனித குல அதிசயம் என்று வேதத்தைக் கூற வேதத்தாலும் வேத மரபுகளாலும் மறுக்கப்பட்ட நமக்கு என்ன காரணம் இருக்கிறது.

வேதங்கள் பற்றிக் கூறும் போது ‘எல்லோரையும் வியக்க வைக்கக் கூடியதும் மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புகள்‘ என்று நான் குறித்திருக்கிறேன்.  அவற்றின்  உருவகம், கவித்துவம் குறித்தே இவற்றை நான் கூறியிருக்கிறேன். வெறும் இலக்கியத் தொகுதியாக இவை இருந்திருந்தால் இவற்றை நாம் அணுகும் முறைவேறு. இவை சனாதன வன்முறையின் அடிப்படையான அதிகாரப் பனுவல்.  இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறை மரபு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டிருந்தது. இந்திய மண்ணின் மக்களை இழித்தும், ஒடுக்கியும் வைக்க இவை மூல ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.  

வேதங்களை மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று இவர்கள் கூறி ஏற்க வைக்கப் பல காரணங்கள் உள்ளன. அப்படியெனில் தமிழின் முதல் சங்கம் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் திருமூலன் 3000 ஆண்டு வாழ்ந்து எழுதினான் என்பது மட்டும் புனைவாக தொன்மமாக இருக்க வேண்டிய தேவையென்ன?

வேதங்கள் என்பவை ஒரே காலகட்டத்தில் எழுதி ஒரே காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்டவை அல்ல. அவற்றில் பல காலங்களைச் சேர்ந்த பாடல்கள் உள்ளன. முதல் கட்டமாக திரி வேதங்களும் பிறகே சதுர்வேதங்களும் ஏற்கப்பட்டன. அதர்வண வேதம் இந்தியச் சிறுமரபுச் சடங்குகளின் போலி வடிவங்கள், சில மாற்று வடிவங்கள், அத்துடன் இவை தொகுக்கப்பட்டது. ‘பௌத்த காலத்திற்குப் பிறகு‘ (புத்தர் காலம் இல்லை நான் சொல்வது). அதே போல உபநிஷதங்கள் பௌத்த மரபுக்கு முன்பு என்றாலும் வேத ‘வேதாந்த‘ வேள்வி மரபுகளுக்கு மாற்றான எதிர் மரபுகளின் தாக்கம் உடையவை.

ரிக்வேதம் சூதாட்டத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுவது ‘இடைக்கால நகர்புற’ சமூகத்தின் சித்தரிப்பு. அதே போல் காதா உபநிஷத் “அறிவின் ஐம்புலன்களும் ஒன்றாகி மனதுடன் ஒத்து ஒடுங்கி நிற்கும் போது, புத்தி நடக்கமின்றி நிலைக்கும் போது உருவாகும் நிலையே அதிஉச்ச மனிதநிலை” (When the five instruments of knowledge stand still together with the mind, and when intellect does not move, that is called the highest state) என்று குறிப்பிடுவது பௌத்த மரபுக்குப் பின்னானது.

கட்டுரையில் கூறியுள்ள பௌத்தத் தாக்கம், பௌத்தப் பள்ளி என்பது நேரடித் தாக்கமோ, நேரடிப் பயிற்சியோ அல்ல, பௌத்த சிந்தனை மற்றும் தர்க்க முறையின் மூலம் தாக்கம் பெற்ற பிற சமய மரபுகள் பற்றியவை. சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் எழுதிய யாஸ்கர் வேதத்திற்கு அர்த்தம் இல்லை என்பவர்களுக்குப் பதில் கூறும் முகமாகவே தனது நிகண்டினை எழுதினார். வேதத்தை முறையாக வாசிக்க வழி செய்யும்  பொருட்டே பாணிணி தனது அஷ்டத்தியாயினை எழுதினார். இவர் காலத்தை கி.மு. 700 என்று கூறுபவர்கள் உண்டு. இவர் பௌத்தத்திற்குப் பிறகானவர் என்பதற்குப் பல ஆதாரங்கள் அஷ்டத்தியாயியில் உள்ளன. பௌத்த குரு மகா புத்தர் காலத்திய ‘மக்காலி கோசலா‘ பற்றிய குறிப்பு பாணினியில் உள்ளது. அவர் குறிப்பிடும் 233 அறிஞர்களும் நாஸ்திகர்கள். அத்துடன் திருமணம் புரியா பெண் சிரமணர்களைப் பற்றிய குறிப்பு பாணினியிடம் காணப்படுகிறது. இவர்கள் பௌத்த மரபு சார்ந்தவர்கள். பாணினி இந்திய அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். மொழியியலில் தொல்காப்பியருக்கு நிகரானவர் என்றாலும் கி.மு.4-க்குப் பிறகு அல்லது கி.மு.4-இல் இருந்தவர். அவரது அரசு பற்றிய சித்தரிப்புகள் இதற்குக் கூடுதல் ஆதாரங்கள். ஒரு சிந்தனை மரபு தோன்றி வளர்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் அதன் தாக்கம் இல்லாமல் யார் இருக்க முடியும்? இருபதாம் நூற்றாண்டின் எல்லா சிந்தனைகளுக்குள்ளும் மார்க்ஸிய நேர் மற்றும் முரண் தாக்கம் இருப்பது போல.

எதிர்வினையாளருக்கு ‘புத்தர் மூலமே இல்லாமல் முளைத்தெழுந்த முதல் கிழங்கு’ அல்ல என்று கூறித் தனது வேதாந்த வித்யா பலத்தைக் காட்டிக் கொள்ளும் பதைபதைப்பு அதிகம் உள்ளது என்பது தெரிகிறது.

இதற்கு அவர் அதிகம் கடினப்பட வேண்டாம். பௌத்தத்தின் ஒரு பிரிவான நம்பிக்கையிலேயே 80,000 போதிசத்துவர்கள், பலப்பல ஆதி புத்தர்கள் இடம்பெறுகிறார்கள். தகாதகர் ஒரு சமூகத்தின் பெருங்கனவு. மனித அறமும் பேரன்பும் கூடி மனிதக் கூட்டுக் கனவாய் உருப்பெற்ற தோற்றமே தகாதகர். அவருக்குக் காலம் கிடையாது. கௌதம புத்தர் என்பது ஒரு புள்ளியே. ஒரு நிமித்தமே (இறந்தகாலத் தெண்ணில் புத்தர்களும் சிறந்தருள் கூர்ந்து, திருவாய் மொழிந்தது- மணிமேகலை).

‘புத்த மதத்தைப் பற்றி மாயைகள் பல நிலவி வருகின்றன’ என்று மாயை விளக்கம் தரும் எதிர்வினையாளருக்குச் சிலவற்றைக் கூறி விட வேண்டும். பௌத்தம் என்பது இக்காலம் வரை கிளைத்தும், பிரிந்தும், முரண்பட்டும் பரவி வரும் 240க்கும் மேற்பட்ட பிரிவுகளை உடையது. இப்பிரிவுகள் தமது காலம், இடம், அரசியலுக்கேற்ப பலவித வடிவங்களை எடுத்துள்ளன. ஆனால் சில பிரிவுகள் மட்டுமே ஒடுக்கப்பட்ட துயரப்பட்ட மக்களுக்கான  புதிய வாழ்வைத் தமது இலக்காகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு சமூகங்களில் பரவியிருந்துள்ளன. தமிழகத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்றும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்‘ என்றும் கூறிய ஒரு மரபுக்கு பௌத்தம் அடிப்படையாகவும் சமணம் வழிகாட்டியாவும் இருந்துள்ளது.

இப்படிப்பட்ட சமூக நெறியாக இருந்த பௌத்தத்திற்குள் ‘பிராமணர்கள்’ நுழைந்து வருணம், ஜாதி என்ற கட்டுக்கதைகளை மெல்லப் புகுத்தி உள்ளிருந்து அதனை அழித்துள்ளனர். நாகார்ச்சுனர் தொடங்கி திக்ஞாகர் வரை பௌத்தத்தை உள்ளிருந்து திசைத்திருப்பிய ‘திருக்கூட்டம்’ அதிகம். சங்கர, இராமானுஜ அறிவும் கூட பௌத்த சமண தர்க்கங்களைக் கற்று அவற்றை அழிக்க வழிவகுத்தவையே.

பௌத்தத்தால் சனாதன, வைதீக ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட இடற்பாட்டை, உள்ளிருந்து அழித்த பிராமண உத்தி பற்றி தனியே ஒரு நூல் எழுதலாம். இவற்றின் விரிவுதான் லலித விஸ்தாரம், சதர்ம புண்டரிகம் போன்றவை, இவை பற்றி வேறிடத்தில் விரிவாகப் பேச வேண்டும்.

பௌத்தம் ‘அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ என வரையறை செய்தது.   பௌத்தம் கூறும் பிராமணர் (அந்தணர்) யார்,

“I do not call one a Brahman

For being born of a mother (by birth)

Or sprung from a womb (of Brahman)

He’s called a ‘bho-sayer’

If he has anything at all

But someone with nothing, who clings

To nothing: he’s what I call a brahman’ (Dhammapada)

“ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால் அன்று, தன் கோத்திரத்தால் அன்று, பிறப்பினாலும் அன்று. எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான், அவனே பிராமணன்.

“தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால் அவன் அகங்காரி என்று அழைக்கப்படுவான், ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும் இல்லாதவனாயிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.”

(தம்மபதம், பிராம்மண வக்கம்: 11, 14)

இதுதான் இந்திய வரலாற்றைத் திருப்பிப்போட்டது, தலைகீழாக்கியது. இதனால்தான் இந்திய மண்ணில் பௌத்தம் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு மரபுதான் மக்கள் நேசித்த பௌத்தம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான பௌத்தம்.

பிறகு சிவ, விஷ்ணு தெய்வங்கள் பற்றி: இவர்கள் இருவரும் மிகப் பழமையான தேவர்களாகவே இருக்கட்டும். கட்டுரை கூறியது: ‘சிவமும் விஷ்ணுவும் பௌத்தரிடமும் சமணரிடமும் அன்பு, கருணை, சேவை, அடைக்கலம் என்பவற்றைக் கற்றுக்கொண்டு மக்கஎளைக் கவர்ந்த சிறு குழு மற்றும் நாட்டார் மரபுத் தெய்வங்களே‘. இதற்கு ‘எதிர்வினையாளர்’ மிகப் புத்திசாலித்தனமான கேள்வியால் நம்மைத் திணற வைத்திருக்கிறார். ‘தெய்வங்களே இல்லை என்பவரிடமிருந்து தெய்வங்களுக்குக் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’ சிவனும் விஷ்ணவும் ததாகரையும் மகாவீர தீர்த்தங்கரையும் கண்டு வணங்கி எங்களுக்குப் பாடம் நடத்துங்கள் என்று கேட்டுக் கற்றுக்கொண்டது போன்ற ஏ.பி.நாகராஜன் படக்காட்சி ஒன்று ‘எதிர்வினையாளர்’ மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இப்படியிருக்க சிவன், திருமால் என்ற இருவரும் ஆரிய, பிராமண மரபுக்கு எதிரானவர்கள். இவர்கள் தமிழில் சேயோன், மாயோன் எனப் பன்னெடுங்காலமாக வணங்கப்பட்டவர்கள். சிவம் ‘அன்பின்‘ வடிவமாகவும் ‘திருமால்‘ காதலின் வடிவமாகவும் மாறி மக்களுக்கு நெருக்கமாக மாறிய வரலாற்றைத் தனியே எழுத வேண்டும்.

அழகியல், இச்சை போன்றவற்றை வேறு வகையாகக் கையாண்டு வளர்ந்தவையே இடைக்கால சைவ, வைணவ மரபுகள். சிவனை எதிர்த்து சிறுமைப்படுத்திய தக்ஷனும், கிருஷ்ணனுக்கு எதிராக எழுந்து பின் அடங்கிய இந்திரனும் ஆரிய மரபில் இவர்கள் பெற்றிருந்த இடத்திற்குச் சிறு தடயச் சான்றுகள்.

“அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண்ணாதே

ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை

ஈரம் உடயவர் காண்பார் இணையடி’

என்றெல்லாம் சிவத்தை அன்பு மயமாக்கி அன்பை சிவமாக்கிய திருமூலன்தான் இவ்வாறும் கூறுகிறான்.

‘பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி நெரிந்துரைத்தானே’

ஆரிய பிராமண, சனாதன, மரபை பக்தி மரபுக்கு வெளியே நிறுத்த மக்களின் கூட்டு உணர்வு ஒன்று செயல்பட்டதற்கு இது தடயம். திருக்களிற்றுப் படியார் இப்படிச் சொல்கிறது.

அன்பே யென் னென்பேயேன் றன்பாலகழுதரற்றி

அன்பேயன்பாக அறிவழியும் – அன்பன்றித்

தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை

சாற்றும் பழமன்றே காண்.

இதற்குள் உள்ளதுதான் பௌத்த சமண தாக்கம் என்பது.

இதை விடுத்து புத்த மத நூற்களின்படி புத்தருக்கு முந்திய போதி சத்துவ நிலையை அடைவதற்கே ஒரு பிராமணராகவோ, ஷத்திரியராகவோ பிறந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் என்றும், ‘பிராமணர்களுக்கும் புத்த பிக்குகளுக்கும் உள்ள உறவு புத்தர் காலத்திலும் அசோகர் காலத்திலும் சுமூகமாக இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தர் தன்னுடைய சங்கத்தில் எல்லோருக்கும் இடமளித்தார். ஆனால் அவரது சீடர்களில் அநேகமாக எல்லோரும் உயர் வருணங்களைச் சேர்ந்தவர்கள்தான். சங்கத்திலும் பிராமண வருணத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய இருந்தார்கள் என்று கூறுவது எதை நிறுவுவதற்காக. இந்தப் பிராமண பிக்குகள்தான் பிறகு ஒரு பிரிவு பௌத்தத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியதுடன், ததாகதரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக மாற்றித் மக்கள் மயமான பௌத்தத்தை அழிக்கவும் செய்தார்கள். சங்கத்தில் சேர்ந்து சங்கத்தை அழித்தவர்கள்தான் சங்க ஹரர்கள் (சங்கரர்கள் எனப் பின்னாளில் மாறினர்).

பௌத்தத்தின் பெயரால் ஒருவர் செய்யும் அநீதியை பௌத்தத்திற்குள் இருந்தும் பௌத்த அற தர்க்க முறைக்குள் இருந்தும் எதிர்க்க முடியும். ஆனால் வைதீக, வேதாந்த பிராமண விதிகளின் பெயரால் செய்யப்படும் மனித அநீதிகளுக்கு அதற்குள்ளிருந்து அறங்களைக் காண முடியுமா என்பதே நமக்கு முன்புள்ள முதன்மையான கேள்வி. ஒருவர் பௌத்தராகவோ சமணராகவோ மாற முடியும். பிராமணன் பௌத்தனாக மாறலாம், ஆனால் ஒரு பௌத்தன் பிராமணனாக மாற முடியுமா? தன்னை வைதீகராக பிராமணராக அறிவிக்க முடியுமா? இதற்கான வழிமுறை, விதிமுறை உள்ளதா?

 இவற்றையெல்லாம் விவாதித்த பிறகே ‘புத்த மதத்தைப் பற்றிய மாயைகள்‘ பற்றி விரிவாக நாம் விவாதிக்க முடியும். இவற்றை விவாதிப்பதற்கு முன் எதிர்வினையாளர் ‘புத்தரின் கொள்கைகளில் முக்கியமானவைகள் மூன்று லட்சணங்கள்‘ என்றெல்லாம் பாடம் நடத்தத் தேவையில்லை. அவற்றை பௌத்தத்தின் மீதும், மனித சமத்துவம், மனித உரிமைகள் போன்றவை மீதும் பற்றுடையவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இறுதியாகச் சில.

பௌத்தமும் இந்து மதமும் ஒன்றை ஒன்று எதிர்த்தும் சார்ந்திருந்தும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்கிறார் எதிர்வினையாளர்.

பௌத்தத்தை எதிர்த்தும், அதன் ஆக்கப்பூர்வமான சிலவற்றைச் சார்ந்தும் இந்து மதம்(?) தற்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது கண்கூடு. இந்தியாவில் பௌத்தம் எங்கேயய்யா வளர்ச்சி அடைந்திருக்கிறது. அது இந்து மதத்தால் அழிக்கப்பட்டது, சில இடங்களில் திரிக்கப்பட்டது.

இந்து மதம் என்பதும் வைதீக, வேதாந்த மரபும் ஒன்றா என்பதுதான் ‘பிரம்ம வித்யா‘ கட்டுரையின் மிக முக்கியமான இழை. இதை முழுக்க மறுத்துவிட்டு ‘இந்து‘ மதத்தில் தூக்கி வெளியே எறியப்பட வேண்டிய குப்பைகள் பல இருக்கின்றன என்கிறார் எதிர்வினையாளர். சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரவம் இவற்றில் இந்து மதம் எது? வேதத்தையும், ஸ்மிருதிகளையும், வர்ணாசிரம, பிராமண விதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு ‘ஆதித்தமிழரை‘ ஜகத் குருவாகக் கொண்டு ஒரு இந்து மதம் உருவாகும் சாத்தியம் உள்ளதா? (உண்மையாகவே இதற்கு விளக்கம் தர விரும்புபவர்கள் எழுதவும்)

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என சமஸ்கிருதத்தில் உள்ள நூல்கள் ‘பிரதிகள்’ என்ற அளவில் மீண்டும் மீண்டும் வாசிக்கவும், ஆய்வு செய்யவும் உகந்தவை. அவை போதையும் லயிப்பும் கொண்ட மொழிபுகள், இதில் கருத்து வேறுபாடு இல்லை. இவை தத்துவ, அற, உண்மை சார் கேள்விகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், இவை ஒரு சமூகத்தின் ‘அதிகார முற்றொருமை’ யின் அடையாளமாக, மாறா உண்மைகளின் தொகுதிகளாக மாறும் என்றால் அவை வெறும் பிரதிகள் மட்டுமல்ல, அரசியல் சதிகள்.

(“பிரம்ம வித்யா” கட்டுரை உயிர்மை இதழில் 2004-2005 நான் எழுதி வந்த தொடரில் வெளிவந்தது,  அதற்கு பி.ஏ.கிருஷ்ணன் என்பவர் எழுதியிருந்த எதிர்வினைக்கு மறுப்பு அல்லது விளக்கம் “விரிவடையும் வித்யா” என்ற தலைப்பில் வெளிவந்தது. ஆனால் இதனைத் தொடர ஆசிரியர் மறுத்து விட்டதால் எழுதப்பட்ட குறிப்புகள் விரிவாக்கப்படாமல் நின்றுவிட்டன. தற்போது நான் எழுதி வரும் “பூர்வ பௌத்தரும் புரட்சி பௌத்தரும்” என்ற அயோத்திதாசர் பற்றிய  நூலில் இவை இடம்பெற உள்ளன.)

தலித் பகுஜன்கள் அரசியல்- ஜமாலன்

இந்தியச்  சமூகத்தின்  இரத்த ஓட்டமாக  உள்ள தலித்பகுஜன்கள்
(காஞ்சா அய்லய்யாவின் “நான் ஏன் இந்து அல்ல” என்ற நூல்)
– ஜமாலன்

“நவீன மதச் சார்பற்ற இந்தியா உருவாக வேண்டுமானால் ஆகக் கீழ்நிலையிலிருக்கிற தலித் மக்களுடைய  அரசியலதிகாரத்தினால்தான் முடியும்.” (ப. 54)

“உணர்வுப் பூர்வமான தலித்-பகுஜன் அமைப்புகள்தாம் மெல்ல வளர்ந்து படிப்படியாகச் சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்கி இறுதியாக மனிதத்தன்மையுடைய சோசலிஸ இந்தியாவை உருவாக்க முடியும்.” (ப. 62)

காஞ்சா அய்லய்யாவை முதலில் சந்தித்து Ania Loomba வின் Colonialism/ Postcolonialism என்ற நூலில்.  அதில்தான் காஞ்ச அய்லய்யாவின் ஒரு மேற்கோளை வாசித்தேன்.  தொடர்ந்து அவரை வாசிக்கும் ஆர்வத்தைத் தந்த மேற்கோள் அது.  காலக்குறி இதழுக்காக மௌனி குறித்த ஒரு கட்டுரை எழுதும்போது, அந்த மேற்கோள் எனது பார்வையைக் கூர்மைப்படுத்தியது.  அம்மேற்கோள் இதுதான். “மில்டனின் ‘பேரடைஸ் லாஸ்ட்’ அல்லது ‘பாரடைஸ் ரீகெய்ன்’, அல்லது ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ’ அல்லது ‘மேக்பத்’ அல்லது இங்கிலாந்தின் இயற்கையைப் பாடும் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் பற்றி பேசும் ஆங்கிலப் பாடநூல்கள் அல்லது காளிதாசனின் மேகசந்தேஷம், பொம்மரா புட்டண்ணாவின் பாகவதம், அல்லது நன்னயா மற்றும் திக்கன்னாவின் மஹாபாரதம் பற்றி பேசும் தெலுங்கு பாடநூல்கள் இவை என்ன வித்தியாசத்தை எங்களிடம் உருவாக்கப் போகிறது? ஒன்று 26 அட்சரங்களில் எழுதப்பட்டது மற்றது 56 அட்சரங்களில் எழுதப்பட்டது என்பதைத்தவிர? எங்கள் உள்ளடக்கங்களைப் பகிரவோ, எங்கள் வாழ்வின் பிரிதிபலிப்பையோ இக்கதையாடல்களில் காணமுடியாது. அவற்றில் எங்கள் குடும்ப அமைப்புகளைக் கண்டடைய முடியாது. இந்த எந்த நூல்களிலும் எங்களுக்குப் பரிச்சயமான வார்த்த்தைகளையும் காணமுடியாது, அகராதிகளின் துணையின்றி. அவை எங்களுக்குக் கிரேக்கம் மற்றும் லத்தின் ரோம அச்சரங்களால் எழுதப்பட்டுள்ளது அல்லது சமஸ்கிருதம் தெலுங்கு அட்சரங்களால் எழுதப்பட்டுள்ளது?” காஞ்சா அய்லய்யா, நான் ஏன் இந்து அல்ல (1996:பக்.200).  (Colonialism/Post colonialism,  Ania Loomba, 1998:P.200.)

பொதுவாக தான் சார்ந்த நம்பிக்கைகளான மதம், தத்துவம் ஆகியவற்றைக் குறித்து சுயவிமர்சனமாக எழுதப்பட்ட பலநூல்கள் உண்டு.  நமக்கு தெரிந்து இங்கிலாந்து தத்துவ சிந்தனையாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் “நான் ஏன் கிறித்துவன் அல்ல” என்ற நூல் 1927 லண்டனில் தேசிய மதச்சார்பற்றோர் கழகத்தில் ஆற்றிய உரை.  பின்னர் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இந்திய சுதந்திரப் போரின் இணையற்ற தேசபக்தரும், புரட்சிகர இளைஞர்களுக்கான முன்னோடியுமான மாவீரன் பகத்சிங் “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்று ஒரு நூல் எழுதியுள்ளார். தற்கால இந்திய அரசியல்வாதியும் ராஜதந்திரியும் பாராளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் “நான் ஏன் ஒரு இந்துவாக இருக்கிறேன்” என்று ஒரு நூல் எழுதியுள்ளார்.  இந்த வரிசை நூல்களில் புனைப்பெயரில் இபுன் வாரக் என்பவர் “நான் ஏன் முஸ்லிம் அல்ல” என்று ஒரு நூல் எழுதியுள்ளார்.  ஆனால், காஞ்சா அய்லய்யாவின் “நான் என் இந்து அல்ல” என்ற நூல் இன்றைய இந்திய அரசியல் சூழலில் முக்கியமானதொரு நூல்.  இன்று அனைவரும் வாசிக்க வேண்டிய, வாசித்தவர்கள் மீள்வாசிப்பு செய்ய வேண்டிய ஒரு நூல்.

இவ்வரிசையில் அமைந்த நூல்கள் தனது நம்பிக்கையை, தான் சார்ந்த மதத்தை விமர்சிப்பதோ அல்லது ஏற்பதோ என்ற ரீதியில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் அய்லய்யாவின் இந்நூல் ஒரு புரட்சிகரமான சமூகமாற்றத்திற்கான அடிப்படையைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.  ரஸ்ஸல் போல கிறித்தவராக பிறந்து அதை மறுக்கும் நாத்திகர் என்ற பார்வையில் எழுதப்பட்ட நூல் அல்ல.  இது இந்துவாக நான் பிறக்கவேயில்லை, ஆனால், என்மீது உயர்சாதியினர் மற்றும் பார்ப்பன-பனியாக்கள் சுரண்டுவதற்காக சுமத்தப்பட்ட ஒரு மத அடையாளம் என்பதை அய்லய்யா அம்பலப்படுத்துகிறார்.  தான் பிறக்காத ஒரு மத அடையாளம் தன்மீது சுமத்தப்பட்டிருப்பதையும், அதிலிருந்து வெளியேறி, அதை மறுத்து தன்னை மீளாக்கம் செய்வதற்கான மாற்று அடையாளத்தை, மாற்று மரபை, மாற்று பண்பாட்டை முன்வைக்கிறார்.  அந்தவகையில் இந்தநூல் மிக முக்கியமான நூல்.

தன்மீது சுமத்தப்பட்ட ‘இந்து’ என்கிற அடையாளம் தனக்கு அந்நியமானது என்பதோடு, தனது வாழ்வை, வளத்தை, சுயமரியாதையை, தனது மனித இருப்பை, தனது தான் என்ற சுயத்தை மறுத்துத் தன்னை ஒரு அடிமையாக மாற்றிச் சுரண்டுவதற்கான ஏற்பாடு என்பதை தெளிவாக விளக்கிச் செல்கிறது.  எவ்வகையிலும் தனது பிறப்போடு, இறப்போடு, வாழ்வோடு, தனது மனிதன் என்கிற இருத்தலோடு தொடர்பற்ற ஒரு அடையாளமே இந்து என்கிற அடையாளம் என்பதை மிக மிக நுட்பமாக விவரித்துச் செல்கிறது இந்நூல்.

1996-ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் 2001-ஆம் ஆண்டு தமிழில் பேரா. மு. தங்கவேலு, பேரா. அரச முருகுபாண்டியன் (ராஜ. முருகுபாண்டியன்) ஆகியவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிக சரளமான மொழிநடையில், விருப்பத்துடன் உள்வாங்கி செய்யப்பட்டுள்ளது.  19-ஆண்டுகள் கழித்து இந்த அறிமுகம் அந்நூல் குறித்த தற்கால அரசியல் சூழலின் பொருத்தப்பாடு கருதி மீள்வாசிப்புச் செய்யப்படுகிறது.

பிரஞ்சு சிந்தனையாளர்களான டெல்யுஸ்-கத்தாரி ‘ஒரு நூல் என்பது அகப்போருளோ (subject), புறப்பொருளோ (object) அல்ல,  அது ஒரு Assemblage’ என்கிறார்கள்.  தமிழில் அதைத் திரளுதல் என்று கூறலாம்.  ஒரு நூல் வாசிப்பின் வழியாக, வாசிப்பவரின் சூழலில் திரளும் ஒன்றே தவிர, அச்சிட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொருள் அல்ல. அடையாளங்கள்கூட இந்தத் திரளுதலாக அமையும்போது, அது வன்முறையற்றதாக அமையும். எப்பொழுதும் சிறுவாரியான ஒரு அடையாளத்தில் நம்மை திரட்டிக்கொள்ள வேண்டும்.  அப்படியான திரளுதலுக்கு எதிரானது பிறப்பின்  அடிப்படையில் அமையும் சாராம்சம் சார்ந்த அடையாளங்கள்.  இந்நூல் தலித்தாதல் (becoming dalit) என்ற அடிப்படையைப் பேசும் ஒன்றாக அமைந்துள்ளது. இதுவே இந்நூலின் சிறப்பு. அவ்வகையில் இந்நூல் இன்றைய சூழலில் வாசிப்பதின் வழியாக உருவான அறிமுகமே இது.

“நான் ஏன் இந்து அல்ல – இந்துத்துவா பற்றிய ஒரு சூத்திர விமர்சனம்: தத்துவம் பண்பாடு மற்றும் அரசியல் பொருளாதாரம்” என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்துள்ள இந்நூல், சாதியம், வர்க்கம் ஆகியவற்றின் இணைவிற்கான ஒரு மார்க்சிய கண்ணொட்டத்தை தரக்கூடியதாக உள்ளது.  ஒரு சூத்திரன் எனப்படும் பிற்படுத்தப்பட்டோர் பார்வையில் இந்நூல், எப்படி பெருவாரியான பிற்படுத்தப்பட்ட இந்திய மக்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு சுரண்டப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது.

“இந்துமதம் ஒரு மாற்று வரலாறு” என்ற நூலை எழுதிய வெண்டி டோனிகர் பிராமண வேத மதம் (இன்று இந்து மதமாக கூறப்படுவது) வேதகாலத்தில் 3 வர்ணங்களைத்தான் கொண்டிருந்தது என்பதையும், சூத்திர வர்ணம் பின்னால் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார். (2016:151) பிராமண வேத மதம் இருபிறப்பாளர்கள் என்று முதல் மூன்று வர்ணங்களையே குறிக்கிறது.  இம்மூன்று வருணங்களும் முப்புரி நூல் எனப்படும் பூணூல் என்பதை மூன்றுவிதக் கயிறுகளால் அணியவேண்டும் என்கிறது மனுதர்மம்.  இந்நூல்கள் வழியாக வருண அடையாளம் என்பது ஒரு அடையாள அட்டையான ஆதார் போன்று செயல்படக்கூடியது என்பதை அறியமுடிகிறது. இந்த இருபிறப்பாளர்கள் ஆளும் வர்க்கமாகவும், பின்னால் இதில் இணைக்கப்பட்ட மக்கள் சூத்திரர்களாக நான்காம் வருணமாக இணைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வழிகள் உள்ளது. காரணம் மனு நான்காம் வருணத்தை இருபிறப்பாளர்களாகக் கருதவில்லை.

சூத்திரர்கள் என்கிற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பஞ்சமர்கள் என்கிற ஐந்தாம் வர்ணத்தினர் ஆகியோரின் உருவாக்கம் மனு ஸ்மிருதியல்  விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.  சாதி உருவாக்கம் குறித்து மனு மூன்று வித நடைமுறைகளை விதிகளாக உருவாக்குகிறார்.  1. அனுலோமா: இருபிறப்பாள ஆண்கள், நான்காம் வருணமான சூத்திர பெண்களுடன் கலந்து உருவான சாதிகள்  2. பிரதிலோமா: நான்காம் வருணமான சூத்திர ஆண்கள் முதல் மூன்று வருண பெண்களுடன் கலந்து உருவான சாதிகள் 3. பாகிய சாதிகள் எனப்படும் தீண்டப்படாதவர்கள்: அனுலோமா மற்றம் பிரதிலோமா சாதிகளின் கலப்பில் உருவானவர்கள். (விரிவாக வாசிக்க மனு தர்ம சாஸ்திரம் அத்தியாயம் 10).  இந்த அடிப்படையில் நிகழ்ந்த வருணக் கலப்பை மனுதருமம் சமூகவிதியாக மாற்றுகிறது. வருணம் என்பதை பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றியதால், அதிலிருந்து உருவான சாதிகளும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாறுகிறது. இது 3000 ஆண்டுகளாக சாதிய அமைப்பை மாறாமல் கட்டி காக்கும் சமூகவிதியாகச் செயல்படுகிறது. சூத்திரர்கள் என்ற நான்காம் வருணம் பிராமண வேத மதத்தின் முதல் மூன்று வருணங்கள் இந்திய மூலக் குடிகளான திராவிடர்களையே (வேதகாலத்தில் தாசர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) சூத்திரர்களாக இணைத்துக் கொண்டு, தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பை மறுதலித்துவிட முடியாது.

இந்நூலின் அறிமுக உரையில் அய்லய்யா சூத்திரர்கள், ஆதி-சூத்திரர்கள் என்கிற ஜோதிபா பூலேவின் பெயர் சூட்டலில் இருந்து துவங்கி அரிஜன் என்கிற காந்திய பெயரிடல் வரை ஆராய்ந்து, சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, தீண்டாமைக்குட்பட்டவர்களாக்கப்பட்ட சாதியினரை தலித்-பகுஜன் என்ற புதியதொரு அரசியல் சொல்லாடலால் குறிப்பதற்கான தர்க்கங்களை முன்வைக்கிறார். தலித் என்ற சொல் அவர்களைப் பொது நீரோட்டத்தில் தனிமைப்படுத்தலாம் என்பதால், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலையின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரை குறிக்கும் பகுஜன் (பெரும்பான்மை) என்ற சொல்லை நொறுக்கப்பட்டவர் என்பதைக் குறிக்கும்  தலித் என்ற மராத்தி சொல்லுடன் இணைத்து தலித்-பகுஜன் என்று குறிப்பிடுகிறார்.  இந்த வரையறையுடன் துவங்கும் இந்த நூல் தலித்-பகுஜன்கள் என்கிற இந்தியாவின் பெருவாரியான ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வியலை, உளவியலை, பண்பாட்டை, அரசியலை விரிவாகப் பேசுகிறது. ஏழு தலைப்புகளில் ஒரு சுயவரலாற்றுக் கதையாடல்போல, இலக்கிய சாட்சிய வகைமையில் நூல் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய சாட்சியம் என்பது மூன்றாம் உலக நாடுகளில் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அனுவங்களையும், பிறரது அனுபவங்களையும் சாட்சியமாக வைத்து விவரிக்கும் ஒரு இலக்கிய வகைமை.  குறிப்பாக லத்தீன் அமேரிக்க நாடுகளில் நிகழ்ந்த போர்களில், பாசிச எதிர்ப்புப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வனுபவங்களை ஒரு கதையாடல்போல எடுத்துரைக்கும் இலக்கிய வகைமை.  இலக்கியங்கள் அனைத்துமே சமூக சாட்சியங்கள்தான் என்றாலும், அவை ஒரு படைப்பாளியின் கற்பனையால் புனையப்பட்டிருக்கலாம்.  ஆனால் சாட்சிய இலக்கியம் என்பது வாழ்வனுபவத்தை அப்படியே புனைவாக்காமல், கற்பனை கலக்காமல் வெளிப்படுத்துவது. ஈழப்போர் குறித்தோ, இந்தியக் கம்யுனிஸ்டுகளின் புரட்சிகர வாழ்வனுபவங்களோ பெரிய அளவில் இலக்கிய சாட்சியமாக வரவில்லை.  ஆனால், 90-களில் உருவான தலித் குறித்த ஓர்மை, அர்ஜுன் டாங்களேவின் மராத்திய தலித் இலக்கியங்களின் தொகுப்பு அதை ஒட்டி உருவான தலித் இலக்கியம் என்கிற வகைமை ஆகியவை தலித் இலக்கிய சாட்சியங்கள் உருவாக ஒரு அடிப்படையாக அமைந்தது.  தமிழில் அத்தகைய இலக்கிய வகைமை குறைவுதான்.

இந்நூல் ஒருவகை சாட்சிய இலக்கியமாக தலித்-பகுஜன் வாழ்வியலை நுட்பமாக வெளிப்படுத்துகிறது.  முதல் பகுதியான இளமைப் பருவ உருவாக்கங்கள், அய்லய்யா பிறந்த குருமா சாதியின் குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளைப் பேசுகிறது.  மதம் என்கிற அறிதலே இந்தியாவின் ஒரு கிராமத்தில் பிறந்தவர்களுக்கு தெரியாது என்றும் ஒரு குழந்தை சாதியில்தான் பிறக்கிறது, மதத்தில் அல்ல என்பதையும், இந்து மதம் அவர்களுக்கு ஒரு அந்நிய மதமாகவே உள்ளது என்பதையும் விவரிக்கிறது.

உயர்சாதிப் பிள்ளைகளின் வளர்ப்பும், வாழ்க்கைச் சூழலும் அவர்களது வாழ்வுடன் எத்தனை வேறுபாடு கொண்டதாக உள்ளது என்பதை வாசிக்கும்போது குழந்தைமையின் அமைவில் உருவாகும் சாதிய அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது.  குழந்தைமையில் கட்டமைக்கப்படும் தலித்-பகுஜன் தன்னிலையாக்கம் குறித்த நுட்பங்களைக் கொண்ட பகுதி இது.  உயர்சாதியினரிடம் பணிவாக நடப்பது போன்று நடிப்பதற்கு குழந்தை பருவத்திலேயே சொல்லித் தரப்படுகிறது என்கிறார் அய்லய்யா.

இந்து என்பது ஒரு மதமல்ல ஒரு வாழ்க்கைமுறை, உலகிற்கே வழிகாட்டும் ஆன்மீக பண்பாடு என்று கூறும் இந்துத்துவா எத்தனை பெரிய பொய்யை யதார்த்திற்கு மாறாகக் கட்டமைக்கிறது என்பதை இந்நூல் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்து பண்பாடு என்ற உயர்சாதிப் பண்பாடு எப்படி முற்றிலும் தலித்-பகுஜன் வாழ்க்கை முறைக்கு மாறுபட்டதாக உள்ளது, என்பதை விளையாட்டு, பாலியல், கடவுள், வழிபாடு, பண்டிகைகள், திருவிழா என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் உருவாகும் வேறுபாட்டை விவரிக்கிறது.  இது உழைக்கும் மக்கள் பண்பாடு.  அது உண்டு கொழிப்பவர் பண்பாடு என்பதை தெளிவாக விளக்கிச் செல்கிறது.  சமூகத்திற்கான உணவு உறபத்தியில் ஈடுபடும் மக்களின் பண்பாடு எப்படி உண்டு கொழிப்பவர்களின் பண்பாட்டோடு தொடர்பற்றதாக உள்ளது என்பதை சொல்கிறது.

“சேறு கலந்த இடமே உணவின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உழைக்கும் மக்களுக்கான கருத்து பிறக்கும்.” (ப. 16) என்று கூறும் அய்லய்யா நூல் முழுவதும் உழைக்கும் மக்களின் பண்பாடு என்பது தலித்-பகுஜன் பண்பாடாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். வர்க்கம் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றே சாதிப்படிநிலையிலும் அமைந்துள்ளதை புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.  அம்பேத்கர் கூறியதைப்போல மார்க்சிய உழைப்புப் பிரிவினை, இந்தியாவில் உழைப்பாளர்கள் பிரிவினையாக அமைந்திருப்பதை புரிந்துகொள்ள வழிசெய்கிறது.  இந்தியப் பொதுவுடமை இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்கமாக அணி திரட்டிய போதும்கூட அதன் அணிகளாக ஒருங்கிணைந்தவர்கள் தலித்-பகுஜன்களே என்பதை மறந்துவிடமுடியாது.  பழகிய மார்க்சிய கோட்பாட்டில் சொன்னால், ஒரே நேரத்தில் அடித்தளம் மேற்கட்டுமானம் இரண்டினாலும் ஒடுக்கப்படுபவர்கள் அவர்களே.

இந்நூல் அடிப்படையில் முன்வைக்கும் முரண் பார்ப்பன-பனியா ஆளும் வர்க்கமாகவும், தலித்-பகுஜன் என்கிற உழைக்கும் மக்கள் ஆளப்படும் வர்க்கமாகவும் உள்ளனர் என்பதையே.  பார்ப்பன-பனியாக்கள் நமது கலாச்சாரத்தைக் கொன்று அந்தப் பிணத்தின்மீது நடந்து சென்றார்கள் என்று குறிப்பிடும் அய்லய்யா, பள்ளிக்  கல்வி தொடங்கி கடவுள் வழிபாடு வரை அவர்கள் எப்படித் திட்டமிட்டு உழைக்கும் வர்க்கமான தலித்-பகுஜன்களை வேறுபடுத்தி கீழ்மைப்படுத்தி, அதை அவர்களே நம்பும்படி செய்துள்ளார்கள் என்பதை விவரிக்கிறார். அவர்களது உழைப்பு சாராத வாழ்வும், சடங்கு சார்ந்த உண்டு கொழிப்பதற்கான வாழ்வும் எப்படி அடிப்படையில் வேறுபாடானது என்பதையும், சமூக மனிதனாகவும், ஒப்பீட்டளவில் பெண்கள் சுதந்திரமாகவும், அறிவில், தொழில் நுட்பத்தில் பார்ப்பன-பனியாக்களைவிட மேன்மையாக இருப்பதையும் ஒரு மாற்று வாழ்வியலை முன் வைத்தும் விவரிக்கிறது இந்நூல். இந்து வாழ்வியல் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும், மாற்று வாழ்வியலாக உழைக்கும் மக்கள் வாழ்வியலை காட்டிச் செல்கிறது. சுருக்கமாக தலித்-பகுஜன் உருவாக்கம் குறித்து விவரிக்கிறது.

“திருமணம், சந்தை, சமூக உறவுகள்” என்கிற இரண்டாம் இயலில் திருமணம் என்பதன் பின்னுள்ள உழைப்பிற்கான, உற்பத்திக்கான உறவை, இந்து சமூகம் எப்படி வெறும் சடங்கு சார்ந்த உறவாக வைத்துள்ளது என்பது பேசப்படுகிறது.  இந்து சந்தை உறவுகள் குறித்த இந்த ஆய்வு முக்கியமானது.  பொய் என்பது இந்து சந்தையில் எப்படி ஒரு உபரி மதிப்பிற்கான ஆயுதமாக மாறுகிறது என்பதைச் சொல்கிறார்.  ஒரு பனியா தீவிர இந்துத்துவவாதியாக இருக்கிறான் என்பதையும் அதனால் அவனது சடங்குகள், சந்தைகளில் ஒரு பண்பாட்டு உயர் மதிப்பை உருவாக்கக் கூடியதாக உள்ளது.

மூன்றுவிதமான சந்தைகள் நிலவுவதை சுட்டுகிறார். 1. இந்து சந்தை அதில் பனியா-பார்ப்பன ஆதிக்கம் உள்ளது 2. மேற்கத்திய சந்தை – தாராளவாத முதலாளிய சந்தை 3. மதச்சார்பற்ற சந்தை – முஸ்லிம், கிறித்துவர்களைக் கொண்டது.  இது மேலெடுத்துச் சென்று ஆராய வேண்டிய ஆய்வு.  தற்போதைய இந்துத்துவ அரசானது முழுக்க பனியா-பார்ப்பனர்கள் சந்தைய உருவாக்கவே, மதவெறுப்பை ஊன்றி மக்களைப் பிளவுபடுத்தி, மதச் சார்பற்றவர்களின் சந்தையை ஒழிக்க முற்படுகிறது.  அதன் ஒரு வடிவமே மதக்கலவரங்கள் வழியாக முஸ்லிம், கிறித்தவர்கள், தலித்-பகுஜன்கள் பொருளியல் அமைப்புகளைக் குலைத்து அவர்களை மறுபடியும் உழைக்கும் கூலிகளாக மாற்றும் முயற்சி.  தொடர்ந்து இந்து சந்தை உருவாக்கம் என்பதில் எப்படி தலித்-பகுஜன்கள் புறக்கணிக்கப்படுகிறர்கள் என்பதை விவரிக்கிறார். சாதிகளுக்கும் சந்தைக்கும் உள்ள இந்த உறவு மார்க்சியர்கள் கவனிக்க வேண்டிய ஒரு புள்ளியாகும்.

“தலித்-பகுஜன் உள் அமைப்புகள் உருவாக்கி வைத்துள்ள சனநாயகத்தை அழிப்பதே இந்துத்துவத்தின் நோக்கம்”  (ப. 46) என்று கூறும் “புதிய சத்திரியர்களின் எழுச்சி” என்ற இயல் சாதி இந்துக்கள் என்று தங்களை அழைத்து கொள்வதில் பெருமை கொள்ளும் இடைநிலைச் சாதிகளின் எழுச்சியைப் பற்றி பேசுகிறது.  கிராமப் பொருளாதார அமைப்பில் நிலவும் வர்க்கச் சுரண்டல் எப்படி சாதி-இந்துக்களின் அதாவது புதிய சத்திரியர்களின் சுரண்டலாக அமைகிறது என்பதை விவரிப்பதாக உள்ளது. இன்று பல இடைநிலைச் சாதிகள் ஆண்ட பரம்பரை என்பதை நிரூபிக்க தாங்களே சத்திரியர்கள் என்று தங்கள் சாதிய ஒருங்கிணைப்பிற்கு வருணம் பூசுவதை அறியலாம்.  இந்த புதிய சத்திரியர்கள் பார்ப்பனமயாகிவிட்ட சாதி-இந்துக்களே.  இவர்கள் “தங்களை இந்து ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள், இந்துத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவருகிறார்கள்” (ப.45). “பார்ப்பன-பனியா-புதிய சத்திரியர்களின் உறவு இந்தியச் சமூகத்தின் நவீனத்துமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது” (ப. 51) என்கிறார்.

தலித்-பகுஜன்கள் எப்படி சாதிய ரீதியாக சந்தைகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதையும், அவர்கள் உடல் உழைப்பு தவிர பிற சந்தை சார்ந்த வணிகப் பொருளாதாரத்தில் எப்படி புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதையும் சொல்கிறார்.  இங்கு வர்க்க அரசியலை முதன்மைப்படுத்தும் மார்க்சியர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியப் புள்ளி உள்ளது.  சுரண்டல் முறை வர்க்கத்தை மறைக்கும் ஒரு சாதிய சுரண்டலாக உள்ளது.  இங்கு சாதி ஒரு பண்பாட்டு மூலதனமாக (Cultural Capital) செயல்படுகிறது.

இதனைப் புரிந்துகொள்ள பிரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய “முட்டாய் தாத்தா” சிறுகதையை வாசித்தறியலாம்.  தனது ஊரில் தான் தயாரித்த மிட்டாய்களை சாதிய ரீதியாக வாங்க மாட்டார்கள் என்று, வெளியூர்களில் விற்கும் முட்டாய் தாத்தா, தான் தலித் சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அந்த ஊர்க்காரனால் அடித்து விரட்டப்படுகிறார். தலித் அடையாளம், தீண்டாமை சந்தையைப் பாதிப்பதாக உள்ளது. சந்தை என்பது மேற்கத்திய சமூகங்கள் போல் சமத்துவ, ஜனநாயகத் தன்மையில் அல்லாமல் சாதியமயமாகி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இயல் -4 “சமகால இந்துமதம்” என்ற தலைப்பில் இந்து பண்பாட்டிற்கும் தலித் பகுஜன் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறது. இந்துப் பண்பாடு  உயர்சாதி பார்ப்பனிய வேதமதப் பண்பாடாக உள்ளது.  இந்தியாவின் ஆதிக்குடிகளும்,  மண்ணிற்கேற்ற உழைக்கும் வர்க்கமும் உருவாக்கிய பண்பாடே இன்றுவரை தலித்-பகுஜன் பண்பாடாக நிலவி வருகிறது.  அதுவே மாற்றுப் பண்பாடு என்பதை விவரிக்கிறது இப்பகுதி.  இந்துப் பண்பாடு பற்றிய விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல் தலித்-பகுஜன் பண்பாடு உழைக்கும் மக்களின் பண்பாடாக நிலவுவதால் அது சமத்துவம், சனநாயகம், சுரண்டலற்ற, மக்களின் கூட்டுணர்வை உருவாக்கும் மாற்றுப் பண்பாடாக உள்ளது என்பதை விளக்குவதே  இந்த நூலின் சிறப்புத் தன்மையாகிறது.

ஆண், பெண்  பாலினக் கட்டமைவை சுரண்டலுக்கான கட்டமைப்பாக உருவாக்கியுள்ள இந்துப் பண்பாட்டை அம்பலப்படுத்துவதும், தலித்-பகுஜன் பாலினத் தன்னமைவு உருவாக்கத்தையும் சுட்டிக்காட்டும் இடங்கள் முக்கியமானவை.  காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சிகள், விடுதலைப் போர் என ஒவ்வொன்றிலும் தலித்-பகுஜன்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டு, அவர்களை நன்றியுள்ள அனுமன்களாக உருவாக்குவதையே அவை செய்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறார் அய்லய்யா.  இந்துப் பண்பாட்டிற்கு எதிரான மாற்றுப் பண்பாட்டு உருவாக்கத்தில் அம்பேத்கரின் புத்த மதத்தை ஏற்றல், பெரியாரின் திராவிடப் பண்பாடு ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறார். “இந்துக் கடவுள்களும் நாமும்” என்ற இயல்-5 ல் இந்த மாற்றுப் பண்பாட்டின் உன்னதமான விஷயங்களை விவாதிக்கிறார்.  இந்துக் கடவுள்களாக அறியப்படும் பெருங்கடவுள்களான மும்மூர்த்திகள் அவர்களது மனைவிகளான முப்பெருந்தேவிகள் துவங்கி பெருந்தெய்வ வழிபாடு எப்படி இந்துப் பண்பாட்டை கட்டமைப்பதில் பங்கு வகிக்கிறது என்பதைச் சொல்கிறார்.  அதோடு அவை எப்படி சிறுதெய்வ வழிபாட்டை ஒடுக்கியது என்பதையும், தலித்-பகுஜன்களின் சிறுதெய்வங்களாக உள்ள தான் வாழ்ந்த பகுதி தெய்வங்கள் பற்றி விவரித்து உள்ளார்.  ஒரு புறம் இந்த பெருந்தெய்வ வழிபாடு பெரும்பான்மை மக்களின் இணக்கத் தன்னிலைகளை உருவாக்கவும், முடியாத இடங்களில் வன்செயல்வழி அவை நிலைநிறுத்தப்படுவதையும் விவரிக்கிறது இவ்வியல்.

பெருந்தெய்வம், சிறுதெய்வம் என்பதே ஒரு மேல், கீழ் அதிகாரப் படிநிலையாக உள்ளது. பெரிய, சிறிய என்ற குறிப்புகள் பெரிய என்ற அளவையும், பெருமையுடைய என்ற பண்பையும், சிறிய என்ற அளவையும், சிறுமை என்ற பண்பையும் குறிக்கின்றன. இவற்றை பெருவாரி தெய்வங்கள், சிறுவாரி தெய்வங்கள் எனக் குறிப்பிடலாம். இந்தச்   சொற்களின் அரசியல் இதில் விடுபட்டுள்ளது.

“இந்துத்துவத்தின் ஒரே பெருமை, அது ஒடுக்கப்பட்டவர்களின் மனத்தையும், உடலையும் இணைத்தே அடிமைப்படுத்துகிறது என்பதுதான்” (ப.83) எனக்கூறும் அய்லய்யா தொடக்கத்திலிருந்தே இந்துமதம் ஒரு பாசிச மதமாக இருந்து வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி விவரித்து செல்கிறார். இந்து புராணங்கள், அதன் நம்பிக்கைகள், தொன்மக் கதைகள் ஆகியவற்றைக் கட்டுடைத்து செல்லும் இப்பகுதி இந்துமதம் என்கிற ஒரு கட்டமைப்பு எப்படி பார்ப்பன உயர்சாதி ஆதிக்கத்திற்கான அடிப்படையாக அமைகிறது என்பதை விவரிக்கிறது. இறுதிப் பகுதியில் சிறுவாரி தெய்வங்களின் உழைப்பு சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த செயல்கள் அவர்களைக் கடவுளாக மாற்றிய தொன்மங்களையும் இணைத்துக்  காட்டுகிறார்.

இறப்பில் உள்ள வேறுபாடுகளை விவரிக்கிறது இயல்-6.  இந்துக்களின் இறப்பும் சடங்குகளும் தலித்-பகுஜன் சமூகங்களின் இறப்பும் சடங்குகளும் எப்படி வேறுபட்டதாக அமைந்துள்ளது என்பதைப் பேசுகிறது.  ஒரு பார்ப்பனருக்கு வாழ்வு என்பது சாவதற்கானதே.  அதாவது முக்தி இறப்பில் கிடைக்கிறது என்பதால் சதா சாவு பற்றிய நினைவே அவர் வாழ்வை இயக்குகிறது என்கிறார் அய்லய்யா.  ஒருவகையில் இதனை பிராய்டின் சாவு-விருப்பு என்கிற உயிர்சிதை உணர்வைக்  (death instinct) கொண்ட சாவு-விருப்ப அரசியலுடன் (Thanatos politics) உறவு கொண்டதாக விரித்துச் செல்லலாம்.  கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் பிராமண வேத மதமாக உள்ள இந்து மதம் சமூகத்தை எதிர்மறையாக இயக்குவதாகக் கொள்ளலாம். புத்தம் அதன் எதிர்-ஆற்றலை வெளிப்படுத்தி, நேர்மறையான ஆற்றலாகவே தனது துக்க நிவாரணத்தை முன்வைத்தது.

மரணம் ஒரு நிரந்தர துக்கமாக இருப்பதை மாற்றி, அதற்கான நிவாரணம், அதை கடந்து நிகழ்கால வாழ்வில் உயிர்ப்புடன் இருப்பதே என்றது.  இதனை இந்துமதம் என்கிற பிராமண வேதமதம் இறத்தலுக்கான வேட்கை கொண்டது என்றால், புத்தம் உயிர்த்தலுக்கான வேட்கை கொண்டது எனலாம்.  அதனால்தான் இந்து மதம் அடிப்படையில் உற்பத்தி மறுப்பு (unproductive force) கொண்டதாகவும், புத்தம் உற்பத்திக்கான மதமாகவும் (productive force) உள்ளது. அம்பேத்கர் உழைக்கும் மக்களின் அதாவது உற்பத்தி சக்திகளின் மதமாக புத்தத்தை அறிந்ததால்தான் அதை ஒரு மாற்றுப் பண்பாடாக முன்வைத்து அந்த மதத்தை ஏற்றார்.

இவ்வியலில் தலித்துகளை எரிப்பது என்ற சடங்கு பார்ப்பனியர்கள் தலித் வரலாற்றை மறைக்கும் சதியாக நடந்திருக்கலாம் என்கிற கருத்து ஒரு ஊகமாக வைக்கப்படுகிறது.  இது ஒரு மிகை ஊகமாகவே உள்ளது.  அடிப்படையில் எரித்தல், புதைத்தல் என்பது இருவேறு வாழ்நிலை சார்ந்த மக்களின் வழக்குகளாகும்.  அலை குடிகளான நாடோடிகள் மட்டுமே எரிப்பார்கள்.  நிலைகுடிகளான நாடுள்ள மக்கள் புதைப்பார்கள். தமிழ், திராவிட பண்பாடும்  எகிப்திய பண்பாடுகூட நிலையான நாடுகளைக் கொண்டதால் புதைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதைத் தொல்லியல் ஆய்வுகள் சொல்கின்றன.  முதுமக்கள் தாழி போன்றவை தமிழின் நிலைகுடித் தன்மைக்கு சான்று.  ஆனால் ஆரியர்கள் இயல்பில் அலைகுடிகள், நாடற்றவர்கள் அவர்கள் இறந்த உடலைப் புதைக்க இடமற்றதால், சுமந்து திரியவும் முடியாத நிலையில் எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதையே அக்னி, கடவுள் என்று புனிதச் சடங்காக மாற்றி, பெருவாரியான இந்து மக்களை பின்பற்ற செய்துள்ளார்கள்.

இயல்-7 “நமது குறிக்கோள் – தலித் மயமாதல் இந்து மயமாதல் அல்ல” என்ற தலைப்பில் அவரது இந்து அல்ல என்பதற்கான தர்க்கரீதியான முடிவுகளையும், எதிர்கால இந்திய அரசியல் குறித்த அவரது ஆய்வு முடிவுகளையும் முன்வைக்கிறார்.  பார்ப்பனர்கள்-பனியாக்கள்-புதிய சத்திரியர்கள் என்கிற முக்கூட்டணி இந்திய சுதந்திரத்திற்கு பிந்தைய அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கமாக மாறியுள்ளனர் என்பதை பேசுகிறார்.  தலித் மயமாதல் என்பது இந்துமயமாதல் அல்ல. “இந்துமயமாக்கும் கொள்கையை நாம் இரண்டு வழிகளில் முழுமையாக எதிர்க்கிறோம். ஒன்று: இந்துத்துவா ஒருநாளும் மனித தன்மையான தத்துவமாக இருந்ததில்லை. மதங்களின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான நிறுவனமாக இந்து மதம் இருந்து வந்துள்ளது.  இந்தியாவில் உள்ள தலித்-பகுஜன்களின் வேதனை மிக்க வாழ்வே இந்த கொடூரத்தன்மைக்கு சான்றாக அமைகிறது. இரண்டு: எதிர்காலத்திலாவது இந்துமதம் மனிதத் தன்மை உடையதாக மாறப்போகிறதாக அறிவித்தாலும் அதற்கான சாத்தியமே இல்லை.  ஏனென்றால் மதங்களின் வரலாறே இன்று முடிவிற்கு வந்து கொண்டுள்ளது.  எனவே நாம் மொத்த சமூகத்தையும் தலிதமயமாக்க வேண்டியுள்ளது.  அது ஒன்றே சமத்துவத்தை அடைவதற்கான வழி.” (பக்.131-132)   என்று தனது முடிவுரையைக் கூறி அதன்பின் தலித்மயமாதல் என்றால் என்ன என்பதை விவரிக்கிறார்.

தலித் குடியிருப்புகள், சேரிகளில் நிலவும் அவர்களது வாழ்வின் சமத்துவ பண்புகளை, கூட்டு வாழ்க்கை, கூட்டு உணர்வு, தனிமனிதர் என்பவர் பொதுமைக்கு உட்பட்டவராக இருத்தல், அதே நேரம் தனது தனித் தன்மையை இழக்காமல் இருத்தல், உழைப்புச் சக்திகளாக ஒருவரை ஒருவர் மனிதத் தன்மையோடு உறவு கொள்ளுதல், தனிச் சொத்துடமை அற்றநிலை, இன்பம், துன்பம் அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் நிலை, சமூதாயத்தை தாங்கும் உற்பத்தித் தூண்களாக இருத்தல் என தலித் சமூத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட பண்புகளை உதாரணங்களுடன் விளக்கிச்  செல்கிறார். தலித்துகள் சமூகத்தின் இரத்த ஓட்டமாக உள்ளனர்.  இதற்கு மாறாக உயர்சாதியினர் சோம்பேறிகளாக, சமூகத்தைச் சுரண்டி உண்டு கொழிப்பவர்களாக உள்ளனர்.  அதற்கேற்ற ஒரு பண்பாட்டு அமைப்பை, மதம், சாதி, சடங்கு, கடவுள் என உருவாக்கிக் காத்து வருகின்றனர்.  அவர்களிடம் மனிதப் பண்புகள் சுத்தமாக அருகி விட்டது.  தனிச்சொத்துடமை, அவற்றை சேர்ப்பதற்கான குறிக்கோளில் ஒட்டு மொத்தச் சமூகத்தையும் சுரண்டுபவர்களாக, தனக்கானதாக ஆக்கி கொண்டுள்ளனர்.

உயர்சாதி பார்ப்பன இலக்கியங்களை கட்டவிழ்த்துக் காட்டும் திறனாய்வாளர்கள், இலக்கியவாதிகள் தலித் சமூகத்தில் நிறைய உருவாக்கப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் அய்லய்யா, தலித் வாழ்வும், பண்பாடும், உழைப்பினால் அவர்கள் பெற்றுள்ள குணங்களும் இந்து வாழ்விற்கு மாற்றான ஒரு வாழ்வைத் தரக்கூடியவை என்பதை அழுத்தமாக முன்வைக்கிறார். உழைக்கும் மக்களின் பண்பாட்டை முன்வைத்து பேசும் இந்நூல், யதார்த்தமான இன்றைய தலித்-பகுஜன் வாழ்நிலையிலிருந்து வெளிப்பட்டுள்ள ஒரு குரலாக அமைந்துள்ளது.

இந்துப் பண்பாடே உலகிற்கு வழிகாட்டும் ஆன்மீகப் பண்பாடு என்பதன் உள்ளடங்கியுள்ள ஒடுக்குமுறை, வன்முறை, மனிதத் தன்மையற்ற செயல்பாடு, சுரண்டல் ஆகியவற்றிற்கு மாற்றான ஒரு பண்பாட்டை முன்வைப்பதே இந்நூலின் முக்கியத்துவம். இன்று பெருகி வரும் பாசிச இந்துத்துவ அரசு முன்வைக்கும் நாமனைவரும் இந்துக்கள் என்கிற வாதம் எத்தனைப்  பொய்யானது, அதன் உள்ளிருப்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சுரண்டல் என்பதை வெளிப்படுத்துகிறது  இந்நூல்.  இந்தியா என்பதை பார்ப்பனியா-பனியா-புதிய சத்திரியர்கள் தங்கள் உடல்களாக மாற்றிவிட்ட நிலையில் அதில் ஒடும் ரத்தம் தலித்-பகுஜன் என்கிற இந்திய பெரும்பாண்மைக்களுடையது என்பதை எளிமையான மொழியில் மிக ஆழமாக நமது மனதில் உறைக்கும்படி சொல்கிறது இந்நூல்.

இறுதியாக, ஆனியா லூம்பா இந்நூலை உலகப்புகழ்பெற்ற நூலான பிரான்ஸ் ஃபானானின்  ‘The Wretched of the Earth’ என்ற நூலுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.  பிரஞ்சு சிந்தனையாளரான உலகப் புகழ்பெற்ற இருத்தலியல் மார்க்சியரான ழான் பவுல் சார்த்தர் “ஒவ்வொரு ஐரோப்பியனும் வாசித்தவுடன் குற்ற உணர்வு கொள்ளச் செய்யும் நூல்” என்று ஃபானானின் நூலின் முன்னுரையில் எழுதிய வாசகமே நினைவிற்கு வருகிறது. ஒடுக்கப்பட்ட அல்ஜீரிய ஆப்பிரிக்க கருப்பின மக்களின் விடுதலைக் குரலை உலகறியச் செய்தது ஃபானானின் அந்நூல். அதேபோல் இந்நூலை வாசிக்கும் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் தலித்-பகுஜன் என்கிற உழைக்கும் மக்களை ஒடுக்கி கீழ்நிலையில், விளிம்பு நிலையில் வைத்திருக்கும் இந்தச் சுரண்டல் அமைப்புடன் நாமும் இணைந்துள்ளோம் என்ற குற்ற உணர்வு கொள்ள வேண்டும்.  இந்தச் சுரண்டல் அமைப்பைப் தூக்கி எறியும் அரசியலில் தாமும் இணைய வேண்டும்  என்கிற ஆக்க உணர்வைப் பெறவேண்டும்.

[விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆண்டு தோறும் வழங்கும் “அம்பேத்கர் சுடர்” விருது 2020 ஆம் ஆண்டுக்கு காஞ்சா ஐலய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.]

சொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்)

ஐந்தாம் தலைப்பு

கவிதை உருவாக்கத்தை மொழிகள் இழந்து சில நூறு ஆண்டுகள் கடந்து விட்டன.  ஆனால் இந்தச் சில நூறு ஆண்டுகளில்தான்  பேரளவிலான கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. பேரிறைமை அற்றுப் போன இடத்தில் பெரும் மனித உருவங்களை,பேருண்மைகளை நிரப்பிவிடலாம் என்ற மனிதர்களின் பேராசைதான் அதற்குக் காரணம். ஆனால் காப்பியங்கள், பெருங்காவியங்கள், தொன்மங்களின் முன் மனிதமையக் கவிதைகள் தூசாகிப் பறந்துவிடும் தன்மை கொண்டவை.  இறைமையிழந்த மொழிகள் மனிதரை மையமாக்கிய போது கவிதைகள் தம் பேரின்பத் திளைப்பையும் இழந்து போயின. இறைமை கொண்ட உலகில் துன்பியல் இல்லை, மனிதமைய உலகில் துன்பியல் தவிர ஏதுமில்லை.

பிறவாமை வேண்டும் பிறந்தாலும் ஒருநாளும் உன்னை மறவாமை வேண்டும் என்று புலம்பும் மனதின் இன்பக் களிப்பை எந்த நவீனக் கவிதையும் புரிந்து கொள்ள முடியாது. “அரிதரிது மானிடர் ஆதல் அரிது” “பெரிது பெரிது புவனம் பெரிது” என்பதில் உள்ள மானிடரும் புவனமும் இன்றைக்கு இல்வே இல்லை, அந்த புவனத்தில் வாய்க்கும் களிப்பும் முக்தியும் இன்றுள்ள மனித மனத்திற்கு இயலக்கூடியவையல்ல.  இவ்வகைக் களிப்பைக் காதல் என்ற புனைவெழுச்சியால் மாற்றீடு செய்து விடலாம் என நினைத்த நவீனக் கவிஞர்கள் “நின்னைச் சரணடைந்தேன்” என்றோ ”ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம், ஊனமறு நல்லழகே” என்றோ இறைமையை மனிதப்பெண் வடிவாக்க முயன்றனர். அதனை ஆண்மையத் தன்மை கொண்ட பெண்ணுருவாக மாற்றினர். பெண்மை என்பது இன்பம் அல்லது பேரன்பு என்ற ஆண் ஏக்க வடிவம் பெண்மைக்கும் பொருந்தாது கவிதைக்கும் பொருந்தாது என்பதை அறியாமல்.  பெண்ணுரு பேரின்பம், பெண்ணிறைமை, தாய்த்தெய்வ நிலை எல்லாம் இனப்பெருக்க அறிவியல் முன் அழிந்து போகும் என்பது ஆண் கவிஞர்களுக்கு அறிமுடியாமல் போனது, பெண் கவிஞர்களுக்குப் புரியமுடியாமல் நின்றது.  ஆண் கற்பித பெண்மைமையக் குரல் “இறைவன் மனிதனாகப் பிறக்க வேண்டும்” என ஒலிப்பது. “கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானே.” என்ற நவீன கால ஆண் துன்பியல் காளிதாசனையும் கம்பனையும் துணைக்கழைக்கும். ஆனால், காப்பியங்கள் என வரும் போது “இயேசு காவியம்” எழுதும். அதன்  நோக்கம் ஒன்றுதான் “இந்து மதம் அர்த்தமுள்ளது” என நிறுவிக்காட்டுவது. இதனை மீறும் நவீன கவிஞன் யாரும் தமிழில் இல்லை என்பதை பின்நவீன மொழிப்புலம் கொண்ட யாரும் ஒரு மணிநேரத்தில் புலப்பட விளக்கிவிட இயலும்.

இறைமையின் இடத்தில் நிலத்தையோ, தேசத்தையோ, மொழியையோ வைத்த கவிஞர்கள் மொழிவழியும் இசைவழியும் அழகை உருவாக்கிக் காட்ட இயலும்.

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.”  “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!”   பகுத்தறிவும் பக்தியும் இணையும் இடம் பாடலுடன் இணையும் இடம் அபாரம்தான், ஆனால் தொன்ம மனம் தொன்மச் சடங்கு தீராமல் தொடர்கிறதே என்ன செய்வது.

அதற்குப் பின் வந்த இன்றைய கவிதைகள்  “இல்லாமல் கரைந்து விட்ட” புனிதக் கவிதைகளைப் போன்மை செய்கின்றன அல்லது போலச் செய்கின்றன “கவிதை கடந்த” காலத்தில் இயங்கும் கவிதைகள், தெய்வங்கள் அற்றுப் போனதைக் கொண்டாடும் பக்திப் பாடல்கள் போல. கவிதைக்கு எதிர்நிலையில்  மனிதப்புலன்கள் இயங்கத் தொடங்கியபின் மனிதர்களும் அதன் மையத்திலிருந்து கரைந்தே போனார்கள் என்பதை மறைக்கும் கவிதைகள். அந்த மறைவுப்புலன் கொண்ட தமிழ்க்கவிதை குடும்பம், குலதெய்வம், குடிதெய்வம், சாதிமனம், பக்தி, சடங்கு என அனைத்தையும் காத்தபடி நவீன வடிவம் போன்ற ஒன்றைக் கொண்டது. பகுத்தறிவு பேசும் ஒருவரைத் தந்தை எனவும் பெரியார் எனவும் பெயரளித்துத்தான் அதனால் ஏற்க முடியும்.

இன்றும் கவிதை உண்டு என நம்பி  நவீனக் கவிகள்  இயங்குவது ஒரு முற்று முரண் உத்தி, தன்நினைவற்ற பாவனை. யாரும் கவிதை போல ஒன்றை மொழி  உருவில் உருவாக்குவதில் இன்பம் அடைய உரிமை உண்டு.  அதுதான் எதிர்க் கவிதையின் அடிப்படை.  பிரம்மம், இறை, தெய்வம், மனிதர் எல்லாம் புனைவு என்று அறிந்த பின்னும்  இறைவுருவங்களையும் தொன்ம ஓவியங்களையும் உருவாக்கும் கலையின் நோக்கம் களிப்பும், திளைப்பும். அது போலத் தன் மொழியில் திளைக்கிறது பின்நவீனக் கவிதை, தன்னழிவின் தொடர் அழகில் திளைக்கிறது  இன்றுள்ள கவிதை இயக்கம்.

தமிழ்க் கவிகள் பலரும் பல தெய்வப் பக்தர்கள், சாமியார் சமேதரர்கள், மகான்களின் மடத்தில் பாதம் கழுவிப் பணிசெய்யும் இளைய மடங்கள்,  தங்களையும் ஞானமும், தெய்வீகமும், சித்திகளும் கொண்டவர்களாக அறிவித்துக் கொள்பவர்கள், கிடாவெட்டிப் படையலிட்டு மார்க்வெஸ் விழா கொண்டாடுபவர்கள். ஆன்மிகமே அனைத்தும் எனக் குடிப்பொழுதுகளில் ஓயாமல் புலம்பித் திரிபவர்கள்.  இருந்தும் இருக்கிறது தமிழில் கவிதை.

இப்படியாகத்தானே தமிழக் கவிதை இருந்துகொண்டிருந்த காலத்தில்தான்  “பின்நவீனக் கவி நான்” என ஒரு பேச்சுக்குச் சொல்லிப் பார்த்தேன். அது ஒரு பெரிய கதை, 1985 இல் தொடங்கியது.  பின் நவீன நிலையில் கவிதை சாத்தியமா. பின்நவீன காப்பியம், பின்நவீன நெடுங்கவிதை என எல்லாம் எழுதிப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பிரேதா என்ற பெயரில் வெளியிட்டது கிரணம். கவிதையைப் படித்தவர்கள் படிக்காதவர்கள் என சிறுபத்திரிகைச் சந்திப்புகளில் அதையே பேசத்தொடங்கினர். பிரேதம், இருள், கொலை, தலைமறைவு, உருமாறுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல், பகலில் பெண் உடலாகவும், இரவில் ஆண் உடலாகவும் இருத்தல், முகங்களை ஒருவருக்கொருவர் பருவங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளுதல் என 1985 இல் அது அதிர்ச்சிப்புயலாய் அலைக்கழித்தது. மனநோய் பீடித்த ஒரு பையன்தான் இத்தனை வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என புரட்சிகர இலக்கியவாதிகளும் இதை எழுதுவது ஆணுரு கொண்ட ஒரு பெண் என்றும் பலவாறாகப் பேசிக்கொண்டனர். தருமு சிவராம் என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞர் பிர்மிள்/பிருமிள் என்பது போல இருந்த தன் பெயரை பிரேமிள் என மாற்றிக்கொண்டு நபும்சகன் ஒருவன் எழுதும் எதிர்க்கவிதைகளை படித்துவிட்டு என்னிடம் அது பற்றிக் கருத்துக் கேட்க உனக்கு என்ன துணிச்சல் என்று கிரணத்தை அதன் பதிப்பாளன் முகத்தில் வீசியடித்தாராம். பாவம் மக்கா, அப்பொழுது எனக்கு 22 வயது கவிதை எழுத தாளும் பேனாவும் பதுங்கி எழுத ஒரு இடமும் போதும் என்று நம்பியிருந்த எனக்கு ஆணுறுப்பு வலிதாகவும் பெரிதாகவும் இருந்தால்தான் கவிதையெழுத முடியும் அதுவும் சர்ரியலிசக் கவிதையெழுத முடியும் என்று புரியத் தொடங்கியது. உறுப்பே வேண்டாம் உருவமும் வேண்டாம் என எழுதிக் கொண்டே இருக்கிறேன் தினம் தினம் இன்று வரை.

தனிமனிதர், தனித்த மனித நிலை என எதுவும் சாத்தியமில்லை. ஒரு மனிதர், ஒற்றை அடையாளம், ஒற்றைப் பண்பு, ஒற்றைப் பால், ஒற்றை நடத்தை, ஒற்றை அழகியல், ஒற்றை நேசம் என்பதெல்லாம் வன்கொடுமை என அறிந்த பின் (இதனை அரசியல் சொல்லாக என் அன்புத் தோழர் தொல்.திருமாவளவன் மாற்றியமைத்ததை அவர் நூலில் காணலாம்) ஏட்டை எடுத்து எதை எழுதினாலும் அது தொன்மக் கவிதையுடனும் வன்முறை அழகியலுடனும் பித்த அரங்கியலுடனும் தொடர்புருவம் கொள்வதை யார்தான் தடுக்க முடியும். எனக்குள் இருக்கும் பிரேதாவை ஒரு பிரேம் கவனிக்கத்தான் முடியும் கட்டுப்படுத்த முடியாது. ஆத்மார்த்தி, அதீதன் என்ற என் எழுத்துருக்கள் பிரேம் கவிதைக்குள் வரும்போது நீதானே நாங்கள் என்கிறார்கள்.

எல்லோரும் மொழியைத் தாம் இயக்குவதாகவும் எடுத்தாள்வதாகவும் நினைத்தே கவிதை என ஒன்றை எழுதத் தொடங்குகிறார்கள், ஆனால் நடப்பதோ அதற்கு முற்றிலும் மாறானது. எனக்கு இரண்டு பெயர்கள் புஷ்பராஜ், பிரேமானந்தன், இரண்டு பெயரையும் பாதியாக்கி அழைப்பதுதான் பழக்கம். பிரேமா, புஷ்பா என அழைத்து கோபமூட்ட முயல்கிறவர்களிடமிருந்து காத்தவர் என் முதல் தோழி. அவர் சொன்னார் பெண்ணாக இருப்பது உனக்கு அவமானமா, பெருமை கொள், எழுது தினம். மொழி அழிக்க இருந்த எனது அடையாளத்தை மொழியால் மீட்டுத் தந்தார் அவர். அவர்தான் சொன்னார் ஒரு நாள் நான் நீயாவும் மறுநாள் நான் நீயாகவும் இருந்து எழுதிப்பார். எழுதிப்பார்த்தேன், இன்றும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

மனித வாழ்வும் மற்றுள்ள பொருள்களும் அர்த்தமோ நோக்கமோ புனிதமோ பொருள் தரும் எதுவுமோ அற்றது. அது  புனைவில் கூட அடங்காத வேறு ஏதோ ஒன்று, அது  பலவானது என ஓரளவு அறிந்த பின்நவீன மனமும் மொழியும் இன்றும் கவிதைகளை உருவாக்குவதற்கும் காரணம் உள்ளது. நிகழ்தல், நிகழ்வின் வழி நீளுதல். புனைவிலும் அடங்காத புவனம், கனவிலும் அறியாத காட்சிப் புயல்.

கவிதையின் மையம் அழிந்ததை அறிந்த புலனில் இருந்து கவிதை நிகழ்த்தப்படுகிறது. கவிதையின்மையின் இயல்பை  விளக்கும் மொழி வடிவம்தான் இன்றைய கவிதை,  அது  இயல்பிலேயே எதிர்க்கவிதை. யாப்பு, பாவினம், சந்தம், ஒலியழகு என எதனையும் அது பயன்படுத்தலாம், அல்லது எதுவும் இல்லாமல் புதிய சில கவிதை வடிவங்களை உருவாக்கலாம், அது இணைநிலைப் பிரதியாகவோ எதிர்நிலைப் பிரதியாகவோ மாறலாம்.

கவிதையும் மனிதரும் அற்றுப்போன ஒரு உலகில் கவிதை மற்றும் மனிதரின் இருப்பை, அதாவது இன்மைக்குள் அவை இருக்க முனைவதை  நிகழ்த்திக் காட்டுகிறது பின்நவீனக் கவிதை.  நிகழ்த்திக் காட்டுகிறது, ஆனால் நிகழ்வதில்லை என்பதுதான் இன்றைய கவிதையின் தொழில் முறை ரகசியம்.

நிகழ்தலின் இன்பம் அல்லது  ஏதும் நிகழமுடியா பெருந்துயரம் எனக் கவிதையில் உருவாகலாம். கவிதை தனது இன்மையையும் சாத்தியமின்மையையும் தானே தனது வடிவில் நிகழ்த்திக் காட்டும் மொழிவடிவம், இதுதான் இன்றைய கவிதை. கவிதை தன்னைத் தானே திறனுடன் நிகழ்த்திக் காட்டும், பல வடிவில் அது உருவம் காட்டும், எது உனது மெய் வடிவம் என்றால் திகைத்து நின்று உறையும் அல்லது கரையும்.

கவிதை இறந்து விட்டது, கடவுள் இல்லாமலானது,  மனிதர், மறைபொருள் என்பதெல்லாம் அழிந்து விட்டன  என்றெல்லாம் அறிவித்துவிட்டு அமைதியாக இருப்பதும் அழிவு.  இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது, எவ்வாறு அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிகழ்த்திக் காட்டும் போது கலையும் படைப்பும் உருவாகின்றன, தொன்மை கடந்த நிலையில் தம்மை உருவாக்கிக் கொள்கின்றன, தொன்மம் போலத் தோன்றவும் செய்கின்றன.  மாற்றங்களை அழித்து மனிதர்களின் மூளைகளை ஆயுதக் கிடங்காக்கிய  இன்றைய மானுட அரசியலுக்குள் உயிருடன் இருப்பதே பெரும் கலகம், தினம் சில கொலைகளைச் செய்யாமல் இருப்பதே பெரும் புரட்சி, மனித மாமிசம் புசிக்காமல் இருப்பதே பேரன்பு எனக் கேட்கும் குரலை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடிவதில்லை. இது இன்மையின் எழில் உருவாக்கம்,  பின்நவீனப் பெருந்திளைப்பு. சொல் அற சும்மா இரு என ஓயாமல் சொல்லிக் கொண்டோ பாடிக்கொண்டோ சில சமயம் சைகளால் நடித்துக் கொண்டோ இருப்பது.
ஆன்மீகம் என்ற கற்பிதம் பற்றியும்,  அன்பு என்கிற தன்னுருவாக்கக் கேளிக்கை பற்றியும் எழுதும்போது அதுவே ஆன்மீகம் போலவும் பேரன்பு போலவும் தோற்றம் தரும் அவ்வளவே. அதனை நம்பிக்கொண்டு நானும் மகான்தான் நானும் மகாகவிதான்  என்று சொல்லிக் கொண்டு அலைந்தால் அது தொன்மத் துன்பியலில் கொண்டு சேர்த்துவிடும். இந்தத் தற்புனித நிலையுடன் எனது  பெயரும் இணைந்திருந்த போது தாளமுடியாமல் தவித்தேன், தப்பித்து ஓடி ஒளிந்தேன், கவிதைகளைச் சில காலம் தவிர்த்தேன். அதன்  இடைக்கால (2007-2019) தொடர்வலி கடந்து இப்போதுதான் உயிர்த்திருக்கிறேன். சொல்லெரிந்த வனமாகக் கிடந்திருக்கிறேன் பல காலம், இப்போதுழுது சொல்பெருகும் வனத்திற்குள் நுழைந்திருக்கிறேன்.

உருவாக்கம் அழகு, உருவாக்கம் இன்பம், பின்நவீனக் கவிதை பொருளழிவின் திளைப்பு, தான் அற்ற நிலையறிதலின் பெருங்களிப்பு. அதனையே எனது கிரணம் கவிதைகளில் (1986-89) பிரேதா என்ற பெயருடன் நிகழ்த்திக் காட்டினேன். தொன்மக் கவிதையியல், தீமையின் அழகியல், பித்துநிலை பெருங்கொண்டாட்டம், பாலியலின் இருநிலைத் துன்பியல், தானழிதலின் மொழி நிகழ்வு என பலவற்றைக் கவிதைகள் வழி தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அதனால் எதையும் நான் பெறவும் இல்லை இழந்து போகவுமில்லை. எனக்கு மீந்ததெல்லாம் எனது கவிதைகள் மட்டுமே.

இவை எதிலும் நான் இருப்பதுமில்லை இல்லாமல் போவதுமில்லை. கிரணத்திற்குப் பிறகு வந்த தமிழக் கவிதையில் மட்டுமல்ல புனைவெழுத்து, புனையா எழுத்து அனைத்திலும் பிரேதா, அதீதன், ஆத்மார்த்தி, அரூப சைத்திரிகன், பிரேதன் என்ற பித்துருவங்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள் பிரேம்தான் இந்த உருவங்களில் அலைகிறான் என்பதே பலருக்குத் தெரியாது.  இந்த உருவங்களை அறியாமல், அவற்றின் வடிவமும் இயக்கமும் அறியாமல் அவற்றின் சாயல்களை மட்டும் தம் எழுத்தில் படியவிட்ட பலர் இரக்கத்திற்குரியவர்கள், அதன் பெருந்திளைப்பைத் துய்க்க இயலாமல் பெருஞ்சுமையைச் சுமந்து கிடக்கிறார்கள். பிரேதா என என்னை வாசித்தவர்கள் இரண்டு பிரிவாய்ப் பிரிந்தனர், பெருங்கவிதை அல்லது பெருந்தீமை என எதிரெதிர் நிலையில்தான் என்னை அடையாளம் கண்டனர்.

பிரேதா என்ற பெயரையும் அதீதன் என்ற பெயரையும் இன்றும் புதிதாகப் புரிந்து  வாசிக்கும் யாரும் காதலின் மிருகவடிம் கொள்கின்றனர். பிரேம் எழுத்தில் காதல் என்பது வேறு ஒன்றுமில்லை: தான் மற்றும் பிற பற்றிய கற்பிதம். உங்கள் இறப்பையும் அழிவையும் கண்ணீரையும் வலியையும் தம் மகிழ்வாக உணராத  மற்றொரு உடலுடனான இடைக்கால இணக்கம். அது மொழியாகத் திரியும் போது கவிதை நிகழும்.

மொழியின் சொல்லும், ஓசையும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் எந்த ஒரு உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியது, சொல் அதுவே பெரும் திளைப்பு, சொல்ல முடியாதவற்றிற்குள் பதுங்கும் பெருங்களிப்பு.

தன்னை அறிதல், அறிவித்தல் என்ற நவீன நம்பிக்கையும்  பிரம்மத்தை அறிதல் பிரம்மத்தை அறிவித்தல் என்கிற தொன்ம நம்பிக்கையும் ஒரு நூலிழையின் இருமுனைகள். தன்னழிவு அல்லது தானற்ற தன் நிகழ்வு இதனைச் செய்து பார்ப்பதுதான் கவிதை  என உணராமல் பின்நவீனக் கவிதையியல் வசப்படாது. தன்னழிவின் மொழி வடிவம், மொழியடையும் பிறவடிவம், தன்னைப் பலவாக்கும். தன்னை உறுதி செய்யும் முயற்சியெல்லாம் தன்னுறைவாகும். இந்தத் தன்னுறைவே எனது இடைக்காலத் துயரம். இடையில் நிகழ்ந்து முடிந்த எனது  துயரம் கடந்து, இடைக்கால இருள் வெளியில் இருந்து தப்பிப் பலவாய் மீந்துள்ள மொழிகொண்டு    மீண்டும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்லாமியக் குடியிருப்பு ஒன்றை நோக்கி தீப்பந்தங்களுடனும் கொடுவாளுடனும் ஓடிய கூட்டத்தில் பத்து வயதும் முடியாத இரண்டு மூன்று சிறுவர்களைப் பார்த்துப் பதுங்கித் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறேன் ஒரு முறை, இருந்தும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒர் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று ரிக்ஷாவில் செல்லும் பெண்களை எல்லாம் நிறுத்தி தொட்டுக் கொடுத்து போ, போ எனச் சிரிக்கும் பைக் இளைஞர்களைக் கண்டு பயந்து காவல் நிலையத்தில் போய் முறையிட்டேன், காவல் அதிகாரிகள் “அதெல்லாம் ஒன்னுமில்ல புரபொசர் சாப் ஹோலி மாதிரிதான் இதுவும் வருஷம் ஒரு தடவ இப்படித்தான் நடக்கும், பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க, தொடுவாங்க மத்தபடி ஒன்னும் செய்ய மாட்டாங்க, நீங்க பத்திரமா வீட்டுக்குப் போங்க” என்றார்கள். வெளியே நின்ற இரண்டு மூன்று இளைஞர்கள் “கியா அங்கிள்ஜீ இதர் ஆயியே” என மிரட்டிச் சிரித்தார்கள்.  நடுக்கத்துடன் சைக்கிளில் தப்பி வீடு வந்து சேர்ந்து உள்ளே பதுங்கினேன், அன்றிலிருந்து இன்னும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு பதினைந்து பக்கத்துக்கு கவிதைகள் அனுப்பி வைத்தேன் அதன் கவிதைப்பகுதியை பார்த்துக் கொள்ளும் ‘ஒருதொகுதிக் கவிஞர்’ மாதம் கழித்தும் அதனைப்படிக்கவில்லை என்று சொன்னாராம். எனக்கே இந்த நிலையென்றால் புதிதாய் எழுதும் கவிக்கு என்ன நடக்கும் நினைத்துப் பார்த்து உறக்கச் சிரித்தேன். இருந்தும் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்  தினம் ஒரு கவிதை. இவன்  வெறும் மொழிபெயர்ப்பாளன்தான் என்ற நகைப்பொலியையும் சிலரிடம் கேட்டிருக்கிறேன், இருந்தும் வாரம் ஒரு கதையை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன், முதல் தொகுதி வர உள்ளது.

சிகிச்சைப் பலனளிக்காத  நிலையில் இன்னும் ஒரு ஆறுமாதம் மருந்து சாப்பிடுங்கள் மீண்டும் பார்க்கலாம் என்ற  மருத்துவர் விடைபெறும் போது எழுந்து கையைப் பற்றி “எழுதுங்க புரபொசர், மலையாளத்தில் எழுதினால் நானும் படிப்பேன்” என்றார். ஆறு ஆறு மாதங்களாகத் தொடர்ந்த அந்த சிகிச்சைகள் கடந்தும் இன்னும் உயிர் வாழ்வதுடன் ஏனோ தமிழிலேயே  எழுதிக்கொண்டிருக்கிறேன்.  இனி தொடரும் எனது எல்லை தாண்டும் இலக்கிய ஆக்கங்கள்.

அந்த வரிசையில் பிரேம் என்ற பெயர் பதிந்த என் முதல் தொகுப்பு இது. பிரேதாவாக இருந்து பிரேமாக மாறியவன் முழு உருமாற்றம் இது. அதனால் பிரேதாவின் பிரதிகளையும் கிரணம் (1985-90) கவிதைகளையும் பிரேமாக இருந்து வெளியிட வேண்டும், அது விரைவில் அச்சாகும்.

இத்தொகுதி ஐந்து தலைப்புகளைக் கொண்டது, நான்கு தலைப்புகள் மட்டும்தான் அட்டையில் உள்ளன. ஐந்தாவது தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் தப்பி மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது.  இறுதி வரைக்கும்  தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள், கண்டறிவீர்கள்.

பிரேம்

தில்லி பல்கலைக் கழகம்
15, தீம்பனி மாதம், 2019

 

புனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம்

புனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள்

(காந்தியத்திற்கு எதிரான காந்தி)

பிரேம்

காந்தியம் பற்றிய வாசிப்பில் மிகப்பெறும் தடையாகவும், பல அடிப்படை  முரண்களுக்குக் காரணமாகவும் இருப்பது காந்தியின் வாழ்வையும் காந்தியத்தையும் பிரிக்கமுடியாத, ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்ட நிகழ்வுகளாகப் பார்ப்பது. அதைவிடப் பெருந்தீமை விளைவித்தது காந்தியைப் புனிதர் என்றும் மகாத்மா என்றும் மகான் என்றும் கொண்டாடும் பக்திவயப் பார்வை. காந்தியின் பக்தர்களும், காந்தியின் புனித உருவைச் சுமந்து கொண்டிருக்கிறவர்களும் உண்மையில் காந்தியம் என்ற அரசு மறுப்பு கொண்ட, இயற்கை மையத் தன்மை கொண்ட, இணக்கங்களால் அமைந்த பன்முக வாழ்வியலுக்கும் அரசியலுக்கும் எதிரானவர்களாவே இருக்கிறார்கள்.

பசுமை அரசியல், சூழலியல் பெண்ணியம், உலகமயமாதலுக்கு எதிரான பின்காலனிய இயக்கங்கள் என இன்றுள்ள மாற்று அரசியலின் கொள்கைகளின் பண்புகளான வல்லாதிக்க எதிர்ப்பு, மூலதன மறுப்பு, அடித்தள மக்களுக்கான அரசியல் காந்தியத்திலும் உள்ளது. அவை முன் வைக்கும் மாற்று வாழ்வியலும், எதிர்ப்பு முறைகளும் காந்தியம் என்ற செயல்திட்டத்துடன் ஒத்துள்ளவை. 

காந்தியத்தை சுருக்கமாக “எளிமையின் இருத்தலியல், இணக்கமான உற்பத்தி உறவு, இயற்கை மைய அழகியல்” எனச் சொல்லலாம். ஆனால் காந்தியின் புனித உரு இதற்குள் முழுமையாக அடங்கிவிடுவதில்லை. அது பலவிதமான முரண்களையும், திட்டமிட்ட அமைதியையும் தனக்குள் கொண்டது.

காந்தி என்ற புனிதக் குறியீடும், காந்திய வாழ்வியலும் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டால் ஒழிய உண்மையான காந்தியச் செயல்பாடு சாத்தியமில்லை. புத்தன், யேசு, காந்தி என்ற ஒரு வாய்மொழி மரபு உருவானதற்கான காரணம் அவ்வளவு தெளிவானதில்லை. செயல்பாடு மறுத்த, அரசியல் அற்ற, தன்மையப் புனித மனநிலைக்கு நவீன வடிவம் தருவதற்கான ஒரு வழிமுறையாக காந்தி பற்றியச் சொல்லாடல் அமைந்துவிட்டது. அதன் குறியீடுகளாகச் சடங்குகளாக உள்ள காந்தி பஜனைகள், காந்தி பூஜைகள், கண்காட்சிகள், காந்தி அஞ்சலிகள் அனைத்தும் காந்தி என்ற புனித பிம்பத்தை மையமாகக் கொண்ட காட்சி உத்திகளாக மாறியுள்ளன.

காந்தி வாழ்ந்த காலத்திலும் அவருக்குப் பின்னும் அது போன்ற ஒரு புனித உரு இந்தியச் சமூகத்தில் பல குழுக்களுக்குத் தேவைப்பட்டது. தம் சாதி மேலாதிக்கம், சனாதனப் பற்று, இந்துப் புனிதவாதம், பிற்போக்கு மனித மதிப்பீடுகள் அனைத்தையும் காத்துக் கொண்டு நவீன, ஜனநாயக அரசியலிலும் மேலாதிக்கம் செலுத்த காந்தி பக்தி, காந்தி வடிவம் மிகவும் பயன்பட்டது. அவரைக் கொண்டாடியவர்களின் மனநிலையையும் நோக்கத்ததையும் காந்தி அறிந்திருந்தார், ஆனால் அவர்களைத் தன்னுடன் இருக்கவும் அனுமதித்தார். அவரைக் கொண்டாடிய பலரும் தமது முரண்களை  மறைத்தபடி புதிய அரசியல் உருவங்களாகவும், மக்கள் நேசர்களாகவும் தேற்றம்தர காந்தி பக்தியைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் தனது புனித உருவைப் பாதுகாத்து மக்களின் பெரும் தலைவராகவும் அன்றைய அரசிலின் மையமாகவும் தன்னைத் தொடர்ந்து வைத்துக் கொண்டார்.

மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு பற்றி காந்தி உருவாக்கியிருந்த மொழி இதற்குப் பெரும் உதாரணம். இஸ்லாமியச் சமூகத்தின் மீது அன்பும், இணக்கமும் கொண்டவர்களும், தீண்டாமையைக் கடைபிடிக்காதவர்களும்தான் தன்னுடன் இருக்க முடியும் என்று  ஒரு செய்தியை தன் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் பரப்பியிருந்தார். ஆனால் அவருடன் இருந்த இந்துத் தலைவர்கள் அனைவரும் இஸ்லாமிய வெறுப்பு அல்லது மறுப்பு கொண்டவர்கள். அவருடன் இருந்தவர்கள் தீண்டாமை, சாதியமைப்பு, பிராமண உயர்வு என்பவற்றை மாறாத தர்மமாக ஏற்று, நம்பி, வாழ்ந்தவர்கள். ஆனால் அவர்களைக் காந்தித் தன்னிடமிருந்து விலக்கியதும் இல்லை, அவர்களிடம் இருந்து தான் விலகியதும் இல்லை. தன் ஆசிரமத்தில் கூட தீண்டாமையை அதன் கொடிய நடப்பை நீக்க முடியாமல் அதற்கான முயற்சியைக் கைவிட்ட போதும் தானே தீண்டாமைக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் தலைவர் என்றும் மீட்பர் என்றும் நம்பியவர்.

காந்தி தன்னைப் பற்றித் தானே உருவாக்கியளித்த புனித பிம்பத்தை மற்றவர்கள் நம்பவும் கொண்டாடவும் தொடங்கிய போது அதனை முழுமையாக நிறுவவும், உறுதி செய்யவும் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். 1915-இல் மகாத்மா என்று அவரை ரவீந்திரநாத் தாகூர் பெருமைப்படுத்திய போதும் 1919-இல் வாழ்கநீ எம்மான் என்று சுப்பிரமணிய பாரதி துதித்த போதும் அவருடைய சாதனைகள் அல்லது பெருஞ்செயல்கள் என எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. காந்திய அரசியல், மற்ற நிர்மாணச் செயல்பாடுகள் எல்லாம் 1925-க்குப் பிறகுதான் தொடங்குகின்றன. 1915-வரை தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகவும், சமூக சேவகராகவும் இருந்து “கெய்ஸர் ஹிந்த்“ என்ற விருதினைத் தனது போர்க்காலச் சேவைக்காகப் பெற்றிருந்தார். 1915-இல் தான் அளித்த உறுதிமொழிப்படி பிரிடிஷ் படைக்கு ஆள் சேர்க்க 1919-இல் யாத்திரை மேற்கொண்டு அது தோல்வியடைந்ததால்  மனம் நொந்து அதனைக் கைவிட்டிருந்தார்.

பிரிடிஷ் படையில் சேரும்படி மக்களைக்     கேட்டுக்கொண்டு  துண்டுப் பிரசுரங்கள்       வெளியிட்ட போது அவர் வைத்த வாதம் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறானபல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே    ஆயுதப் பயிற்சி  இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே    மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். 
ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம்   கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது.  அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள்    வைத்துக்கொள்ளுவதற்கு இருக்கும் தடையும் ரத்தாகிவிடும்.” காந்தி பின்னாளில் அதிகம் வலியுறுத்திய அகிம்ஸை இதில் ஒரு துளியும் இல்லையென்பதை விளக்க வேண்டிய தேவை இல்லை.

1919-இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழும் வரை பிரிடிஷ் அரசு பற்றிய அவருடைய நிலைப்பாடு முற்றிலும் வேறாக இருந்தது. இந்தியச் சமூகம் அமைப்பு பற்றியோ, அதன் அரசியல் பற்றியோ அவருக்கு அப்போது போதிய பரிச்சயமும், தெளிவும் இல்லை. தனது எதிர்காலத் திட்டம் பற்றியும் அவருக்குத் தெளிவான எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் பிறர் அளித்த மகாத்மா புனித உருவம் அவருக்குள் இறங்கியிருந்தது,  தன்னைப் பற்றிய தூய, புனித பிம்பத்தைத் தானே ஒரு கட்டத்தில் நம்பத் தொடங்யிருந்தார். அதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அது தனக்கு ஒரு பாரமாக உள்ளது என்றும் சொன்னாலும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அதனைச் சுற்றியே அமைந்திருந்தது, அதனை உறுதி செய்யும் முயற்சியாவே அவரது பேச்சுகளும், எழுத்துக்களும், பரிசோதனைகளும் அமைந்திருந்தன. 1923-இல் அவர் எழுதத் தொடங்கிய “தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்” 1925-இல் எழுதத் தொடங்கிய “எனது வாழ்க்கைக் கதை அல்லது சத்தியத்துடனான எனது பரிசோதனை” இரண்டுமே புனித, மகாத்மா அடையாளத்தை மக்களுக்கு முன் நிறுவவும் தனக்குத் தானே உறுதி செய்து கொள்ளவுமான மொழிச் செயல்பாடுகளாவே இருந்தன.

“ஒழுக்கம்தான்  எல்லாவற்றிற்கும்    அடிப்படை ,  சத்தியமே எல்லா ஒழுக்கத்திற்கும் சாரம் என்று நான் கொண்ட உறுதி ஒன்று மட்டும் எனக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது.  சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று.   ஒவ்வொரு நாளும் அது என்னுள் பெருகி வளரத் தொடங்கியது. அதற்கு நான் கொண்ட பொருளும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வந்தது. அதேபோல நன்னெறியைப்  போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும்    உள்ளத்தையும் பற்றிக்கொண்டது. ‘தீமை செய்தோருக்கும் நன்மையேசெய் ’     என்ற அப்பாடலின் போதனை,  என் வாழ்க்கையில் வழிகாட்டும்   தருமமாயிற்று.  அதன் மீது எனக்குப் பெரும் பற்று உருவாகிவிட்டதால், அதன்வழியில் பல பரிசோதனைகளையும் செய்யத் தொடங்கினேன்.”   தனது பதினைந்து, பதினாறு வயதில் தனக்கு இருந்த மனநிலை பற்றி காந்திஜி இவ்வாறு விவரிக்கிறார். காந்தியின் மொழி இது, தான் பிறந்ததில் இருந்தே சத்தியம், அகிம்ஸை, தர்மம் பற்றிய தேடுதலிலேயே  இருந்து வந்ததான தோற்றத்தை உருவாக்கும் சத்திய சோதனை தற்புனித மனநிலையின் மிகப்பெரிய எடுத்துக் காட்டு.

அதே போன்றதுதான் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலும். “பண்டைக் காலங்களில் தென்னாப்பிரிக்காவில் வசித்த மக்கள் யார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஐரோப்பியர்கள் தென்னாப்பிரிக்காவில் குடியேறிபோது அவர்கள் நீக்ரோக்களைக் கண்டனர். அமெரிக்காவிலிருந்த சில அடிமைகள் அடிமைத் தனத்திலிருந்து தப்பி ஆப்பிரிக்காவில் வந்து குடியேறினர், அவர்களுடைய சந்ததியினரே நீக்ரோக்கள் என்றும் கருதப்படுகிறது.” என வெள்ளையின வரலாற்றுப் பார்வையில் ஆப்பிரிக்க மக்களை அறிமுகம் செய்வதில் தொடங்கி ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் மண்ணுரிமை பற்றியோ அவர்களின் அரசியல் பற்றியோ எதனையும் கூறாமல் சத்தியாகிரகத்தின் ஒளி சுடர்விட்டுப் பிரகாசிப்பதைச் சொல்லி முற்று பெறும்.

காந்தியின் தென்னாப்பிரிக்க கால வாழ்வு இந்திய மக்களின் உரிமைகளை பெறுதற்கான சட்ட நடவடிக்கைகளால் நிரம்பியது. அதற்கான உழைப்பு அதிகமானது என்றாலும் காந்திக்கு பெரும் வருமானத்தையும் அது தந்தது. காந்தியின் இந்து, சனாதன மனநிலைதான் இங்கு மிகவும் சிக்கலானது. இந்தியர்களை கறுப்பினத்தவர்கள் போல நடத்தக்கூடாது என்பதுதான் அவருடைய வாதம். கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களைச் சேர்க்கக்கூடாது, கறுப்பினத்தவர்கள் இந்தியக் காலனியில் கலக்கக்கூடாது. கறுப்பர்களுக்கு தனி ரயிலும், தனி இடமும் ஒதுக்கப்பட்டலாம் ஆனால் இந்தியர்களுக்கு  பிரிடிஷ் பிரஜைகளுக்கான சமஉரிமை அளிக்கப்படவேண்டும். இந்திய இனத்தவர்கள் நீக்ரோக்களைப் போன்றவர்கள் இல்லை. நாங்கள் புனிதமான சனாதன, சாஸ்திர மரபைக் கொண்ட தூய்மையான குணம் கொண்ட பிராமண தர்மத்தால் வழிநடத்தப்படும் இனத்தவர்கள், பிரிடிஷ் அரசின் விசுவாசமான ஊழியர்கள். காந்தியின் புரிதலும் மனநிலையும் அப்போது இதுதான். “இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் பாருங்கள் அவர்கள் கறுப்பர்களைப் போல நடத்தப்படுகிறார்கள்.” என்பதுதான் 1893-1915 வரை காந்தியின் முறையீடு. “டர்பனில் உள்ள சட்டம் இந்தியர்களை பதிவு செய்யச் சொல்கிறது. இந்தச் சட்டம் உழைக்காத, எந்தப்பயனும் இன்றி வாழ்கிற கறுப்பர்களுக்குத்தான் தேவை, இந்தியர்களுக்கு அல்ல. ஆனால் இந்தச் சட்டமோ இந்தியர்களை கறுப்பர்களுக்குச் சமமாக நடத்துகிறது.” என்பதுதான் காந்தியின் சமூக, அரசியல் புரிதல்.

கறுப்பர்கள் உழைக்காதவர்கள், ஆடுமாடுகளைத் திரட்டித் தமக்குப் பெண்டாட்டிகளை விலைக்கு வாங்கிக் கொண்டு, பிறகு வாழ்க்கை முழுக்க எந்த வேலையுமம் செய்யாமல் அம்மணமாகக் கழிக்கிறவர்கள். இந்தியர்கள் வைஷ்ணவ, சனாதன, வைதிக மரபின் சந்ததியினர் அத்துடன் பிரிடிஷ் அரசுக்காக உழைப்பவர்கள், அதனால் அரசியல் உரிமைக்கு உரியவர்கள். இந்த இன வெறுப்பு கொண்ட, ஏகாதிபத்திய மதிப்பீடு காந்தியத்தின் எந்தப் பிரிவிலும் அடங்கக்கூடியதில்லை. இனக்குழுக்களின் இயற்கையுடன் இயைந்த வாழ்வு, இனக்குழு மக்களின் தேவைக்கேற்ற உழைப்பு எனப் பல பகுதிகளைக் கொண்டது. அத்துடன் இது காந்தியின் உள் படிந்த நிறவெறியின் வெளிப்பாடு இது.

ஆனால் 1922-க்குப் பிறகு காந்தியின் பார்வை மாறுகிறது, ஆனால் இனத்தூய்மைவாதம் அவருக்குள் முழுமையாக மறைந்தா என்பதைத் தெளிவாகக் கூற முடியாது. 1923-இல் எழுதிய தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலில்  “கறுப்பின மக்களில் சூலுக்கள் மிக உயரமானவர்கள், மிகவும் அழகானவர்கள். ஆமாம் அழகானவர்கள்தான், வெள்ளை நிறமும் கூரிய நாசியும்தான் அழகு என நம்புவது மூடநம்பிக்கை.” என்பது  அவருக்குள் உருவாகிய புதிய பார்வை, அது தென்னாப்பிரிக்க காலத்தில் அவரிடம் இல்லை.

இதனை இங்கு கூறுவதற்குக் காரணம் மகாத்மா என்ற உணர்வுடன் தன்னடையாளத்துடன் அவர் 1922-க்குப் பிறகுதான் தனது புரிதல்களை மாற்றிக் கொள்ளத் தொடங்குகிறார். அவருக்குள் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த மாற்றங்கள் அறிவியல் அடிப்படையிலோ, சமூகப் புரிதல்கள் அடிப்படையிலோ நிகழவில்லை. இதய சுத்தி, உயிர்களிடம் அன்பு, சத்தியம், அகிம்ஸை, அந்தராத்மா, தெய்வத்தைக் காண்பது என்ற உருவகச் சொற்களால் நிகழ்ந்தது. அது அவரது தனிமனித மனமாற்றத்திற்கு உதவியது, ஆனால் அது ஒரு தேசத்தின் அரசியலாக முடியாது, அப்படி நிகழவும் இல்லை.

ஆன்மீகத்தையும் அரசியலையும் அவர் கலந்தது இரண்டிலுமே எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அத்துடன் தனது ஆத்ம சுத்தி பற்றி அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கை, பெருமிதம் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலில் பெருங்கேட்டை, மாபெறும் பின்னடைவைக் கொண்டு வந்தது.  அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாளில் உருவாக்க நினைத்த, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலுக்கு  அடிப்படையாக அமைய இருந்த தனித்தொகுதி, மற்றும் இரட்டை வாக்குரிமை என்ற “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ” சீர்திருத்தத்தை இந்து மதத்தைப் பாதுகாக்கும் தனது திட்டத்திற்காகப் படுகொலை செய்தார் காந்திஜி.

“தீண்டாமையை அடியோடு அழித்தால் மட்டுமே நாம் விடுதலை அடைய முடியும். இந்து மதம் அழியாமல் இருக்கத் தீண்டாமை நீக்கப்படவேண்டும். தீண்டாமை ஒழிப்பு இல்லாமல் சுயராஜ்யம் இல்லை. இந்து மதத்ததைச் சுத்திகரிக்கும் செயல்தான் தீண்டாமை ஒழிப்பு.” என 1915க்குப் பிறகு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த காந்தி தீண்டாமை ஒழிவதற்கு முதல் படியாக அமைய இருந்த அரசியல பிரதிநிதித்துவ உரிமையைத் தன் உண்ணாவிரதத்தின் மூலம் இல்லாமலாக்கியதை  அறிவின் அடிப்படையிலான காந்தியம் நிச்சயம் ஏற்காது.  அந்த வரலாற்றுக் கொடுமையை “காவியப் பெருமை கொண்ட பெரு நோன்பு“ (எபிக் ஃபாஸ்ட்) என்று கொண்டாடிய சனாதன சக்திகளின் நோக்கம் காந்தியை முன் வைத்து வர்ண சாதி அமைப்பைக் காப்பாற்றிக் கொள்வதுதான் என்பதை காந்தி அறியாமல் போன நிகழ்வுதான் காந்திக்கும் காந்தியத்திற்கும் இடையிலான முரண்களுக்கான பெரும் எடுத்துக் காட்டு.

“இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள. அவர் வாயைத் திறந்து பேசிவிட்டால் அதற்கு மறுபேச்சே இல்லை என்று நம்புகிறார்கள். ஒரு நாய்கூட குரைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். ஆனால்  புனிதச் சபையின் தலைவராகவே இருந்தாலும் அவர்முன் நேருக்கு நேர் நின்று விவாதிக்கவும், அவர் குற்றமிழைக்கும் போது  உறுதியாக எடுத்துச் சொல்லவும் துணிவுள்ள கலகக்காரர்களுக்கு இந்த உலகம் நன்றியுடன் இருக்கவேண்டும்.  ஒரு முற்போக்குச் சமூகம் அதன் கலக்காரர்களுக்கு தரவேண்டிய மரியாதையைத் தருகிறாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.” என அறிவித்து  பாபாசாகேப் அம்பேத்கர் காந்திக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் காந்தியத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியது. அதனை இன்று வரைகூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் காந்தி பக்தி இருந்து வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் 1927-இல் மகத் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய போது காந்தியின் ஆதரவு அதற்குக் கிடைக்கும் என்று நம்பினார். அதற்கான ஊர்வலத்தில் காந்தியின் படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு ஆதரவு தரவில்லை என்பதுடன் அரிஜனங்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபடக்கூடாது, தீண்டாமை சாதி இந்துக்களின் பாவம் அவர்கள்தான் அதனைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுக்கும் அரசியலுக்கும் பொருந்தாத அறிவிப்பைச் செய்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எப்பொழுதெல்லாம் போராட்டத்தில், ஒத்துழையாமையில் ஈடுபட்டாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்பது அவரது பழக்கமாக மாறியது. 1931-இல் அம்பேத்கர் காந்தியை முதல் முறை சந்திக்கச் சென்றபோது இரண்டு மணிநேரம் காக்கவைத்து வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்ததுடன் நான் சிறுவயதிலிருந்தே தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருகிறேன். உங்கள் வயதைவிட என் அரசியல் பணி அதிகம் என்று அவமதித்து அனுப்பினார். அம்பேத்கரை டிப்ரஸ்ட் கிளாஸ் பெடரேஷனுடைய பிரதிநிதி என்ற முறையில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அம்பேத்கரை ஒரு பிராமணர் என்று நினைத்திருந்ததாக மனதறிந்து பொய்யைச் சொன்னதுடன் ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் பிரதிநிதியென்றால் அழுக்கு உடையில், ஆங்கிலம் தெரியாத ஒருவர்தான் இருக்க முடியும் என்ற தனது பார்வையையும் வெளிப்படுத்தினார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் போது அம்பேத்கர் யார், அவருடைய அரசியல் என்ன என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து அவமதித்து தானே தீண்டாமைக்குட்பட்ட மக்களின் தலைவன் என நிறுவ முயற்சி செய்தார்.  1932-இல் பூனா ஒப்பந்தத்தின் வழியாக அம்பேத்கரின் பெரும் முயற்சியைத் தோற்கடித்து பாதி உரிமையைப் பெற வழி வகுத்தார். தனித்தொகுதி உருவானால் இந்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் படுகொலை செய்யவும், அழித்தொழிக்கவும் தொடங்கிவிடுவார்கள்  அதனைத் தடுக்கவே தான் உண்ணா நோன்பு இருந்து “கம்யூனல் அவார்ட்டை” இல்லாமலாக்க முயற்சிக்கிறேன் என்றும் அந்தக் கொடுமையைச் செய்யப்போகிறவர்கள் யார் என்பதையும் தனது நேர்ப்பேச்சில்  மகாதேவ் தேசாய், வல்லபபாய் பட்டேல் போன்றவர்களிடம் தெரிவித்த காந்தி பொதுவெளியில் தேசத்தின் முன் இந்துங்கள் தமது பாவத்தைக் கழுவிச் சுத்தம் செய்வார்கள், இனி இந்துக்களே தீண்டாமையை ஒழிப்பார்கள் அதற்கானதே தனது உண்ணாவிரதம் எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

தீண்டாமை தற்போது மறைந்து வருகிறது, விரைவில் தான் அதனை ஒழித்துவிடுவதாக சமூக அறிவும், வரலாற்று அறிவும் அற்ற அறிவிப்பைச் செய்து தனது புனித உருவத்தை அரசியலாக மாற்ற முயற்சித்தார். அவை அனைத்தும் எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்பதை 1940-க்குப் பிறகுதான் அவர் உணர முடிந்தது. அம்பேத்கரின் வழியாக அவர் அறிந்த உணர்ந்த அரசியல் உண்மையை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை நெறியை அவர் அதற்குப் பிறகு அறிவிக்க வாய்ப்பே இல்லாமல் போனது. அதுவரை வர்ண, சாதிப் பிரிவுகள் இந்தியச் சமூகத்தின் பாதுகாப்புக்கானது என்று சொல்லி வந்தவர் வர்ணம், சாதி அற்ற தீண்டாமை அற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று சில இடங்களில் சொல்லத் தொடங்கினார்.  ஆனால் அதற்குப் பிறகு காந்தியின் செய்தியை, பேச்சை, எழுத்தைக் கவனிக்கும் நிலையில் காங்கிரசும் இல்லை, இந்தியச் சமூகமும் இல்லை. தன் வாழ்வே பெரும் தோல்வில் முடிந்தது என்றும் தான் கொலை செய்யப்பட்டால் அதுவே தனக்கு விடுதலை என்றும் அறிவிக்க வேண்டிய நிலைதான் காந்திக்கு நேர்ந்தது.

பௌத்த, சமண நெறிகளை விரும்பிய காந்தி அதனை இந்து தர்மம் என்று கூறியது,  வன்முறை, போர், வர்ண-சாதி இவற்றை வலியுறுத்தும் பகவத் கீதையைத் தனது ஆத்ம வழிகாட்டி என்றும் தர்மத்தின் தாய் என்றும் அறிவித்து எனப் பல முரண்களின் தொகுப்பாக இருந்தது காந்தியின் மொழி.  அறிவு மறுத்த ஆன்மீக மொழியால் தனது அறத்திற்கு எதிராக மாறியது ஒரு வரலாற்றுத் துயரம்தான்.  ஆனால் காந்தியம் இன்று அந்தப் புனித மொழியில் புதைந்து போன உண்மைகளை ஏற்றுத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். அப்போது அது உண்மையில் எளிய மக்களுக்கான இருத்தலியலை நோக்கிச் செல்ல முடியும். 

“நாட்டுக்காக வாழ்நாள் முழுக்கப் பணி செய்த சிறந்த மனிதர்கள் மீது நன்றியுடன் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நன்றியுணர்ச்சிக்கு எல்லை உண்டு.  .… ஒரு நாடு தன் சுதந்திரத்தை இழந்துபோகும் அளவுக்கு நன்றியுணர்ச்சியுடன் இருக்க முடியாது. மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்திய அரசியலில் பக்தியும், மாமனித  வழிபாடும்  வகிக்கும் பங்கு மிகஅதிகம்,  இந்த அளவுக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது. சமயத்தின் பக்தி ஆன்மாவைக் கரைசேர்க்கப் பயன்படலாம். ஆனால் அரசியலில் பக்தியும் மாமனித வழிபாடும்  சீரழிவுக்கு வழிவகுத்துச் சர்வாதிகாரத்தில் கொண்டு சேர்க்கும்.” என அண்ணல் அம்பேத்கர் அறிவித்தது சுதந்திரமான அரசுக்கு மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் அனைத்துச் சிந்தனைகளுக்கும் பொருந்தும். 
காந்தி பல முரண்களைக் கொண்டிருந்தாலும், காந்தியம் எளிய மக்களுக்கான இருத்தலியலாக மாறமுடியும் என்பதை மெய்யாக்கும் முயற்சியில் காந்தியம் ஈடுபடமுடியும், அம்பேத்கரியத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் பொழுது.

(விகடன் தடம், நவம்பர் 2018)

விருப்பக் குறிகள்- பிரேம்

விருப்பக் குறிகள்

-பிரேம்

சமன்பாடு
ஃபிரான்ஸ் ஃபானோன் தனக்குள் புகுந்துள்ள அந்த  நோய் தனது உடலை  அழிக்கத்தொடங்கிவிட்டது என்பதைத் தெரிந்துகொண்ட போது ரெச்ட் ஆஃப் எர்த் நூலை எழுதத் தொடங்கிவிட்டார். முப்பத்தைந்து வயதான ஒருவர் இன்னும் சில மாதங்கள், சில நாட்கள்தான் உயிர் வாழமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளும் போது உருவாகும் மனநிலையுடன் தொடர்ந்த  எழுத்து.
மருத்துவம் படித்த ஃபானோன் நோயின் தன்மையை அறிந்திருந்தும் தனக்கான சிகிச்சையைத் தொடங்காமல் தனது இறுதி நூலை எழுதி முடித்து விட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்ந்தபோது மருத்துவர்கள் சில மாதங்களுக்கு முன் சிகிச்சைத் தொடங்கியிருந்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு மரணத்தை ஒத்திவைத்திருக்க முடியும் என்றனர். ஃபானோன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய அந்த நாட்களில்தான் இரவும் பகலுமாக அந்த நூலை எழுதிக்கொண்டிருந்தார்.
அடிமைச் சமூகங்களின் விடுதலை  வன்முறையின்றி அமைவதில்லை எனத் தொடங்கிய அந்த அறிக்கை, ஐரோப்பியத் தீமையிலிருந்து  கருப்பின மக்களையும் உலகின் மற்ற சமூகங்களையும் காப்பதற்கு மட்டுமல்ல ஐரோப்பிய மக்களையும் காக்க புதிய அரசியல், புதிய சிந்தனை, புதிய மனிதர்களை உருவாக்குவதற்கான செயல்திட்டம் அனைத்தையும் நாம் புதிதாகத் தொடங்க வேண்டும்  என்ற அழைப்புடன் முடிகிறது. வன்முறையில் தொடங்கி, புதிய மனித சமூகத்திற்கான அழைப்புடன் முடியும் ஒரு நெடும்பேச்சு அது.
“அடிமைப்பட்ட மண்ணின் மனிதர்கள்  உலகத்துடனும் வரலாற்றுடனும் கொண்டுள்ள உறவு வெறும் உணவால் அமைந்தது.  மதிப்பீடுகள், உலக வாழ்க்கை உருவாக்கம் என எதுவும் அற்ற வெறும் உயிர்வாழ்தல் மட்டும்தான் அங்கு உள்ளது. சாகமால் உயிரோடு இருத்தல்.” சாகாமல் இருத்தலின் கொடுமை, வெறும் உயிர் தரிப்பின் வன்முறை தன் மீது கவிழும் போது விடுதலைக்கான அசைவு எப்படியிருக்கும்.
சாவின் இழைகள் தன்மேல் படர்வதை, அது வலையாகப் படிவதை உணர்ந்த ஒருவர் தனது எழுத்திற்குள் தன்னை நிறைத்துவிட்டு மறையும் உத்தியை அந்த நூலில் காணலாம். உயிர்த்திருத்தலுக்கும் உயிரழித்தலுக்குமிடையிலான, உயிர்ப்புடன் இருத்தலுக்கும் உயிரியாக மட்டும் இருத்தலுக்கும் இடையிலான  ஓயாத இயங்கியலை விளக்கும் அந்த நூலின் மையம் வன்முறைதான். அடிமைப்படுத்தலின் வன்முறை, விடுதலைக்கான வன்முறை, ஓசையற்ற வன்முறை, ஓலமிடும் வன்முறை, நிறத்தின் வன்முறை, நிறமழிந்த வன்முறை, இருத்தலின் வன்முறை, இல்லாமல் போதலின் வன்முறை.”
வாழ்தலுக்கான தனது ஒவ்வொரு செயலும் வன்முறையாக, உயிர்த்திருத்தலுக்கான ஒவ்வொரு முயற்சியும் குற்றமாக விதிக்கப்பட்ட மனிதர்கள் என்ன செய்வார்கள்.
விடுதலைக்கான ஒவ்வொரு பேச்சும், நகர்வும் வன்முறை என்று அடையாளப்படுத்தப்பட்ட பின் வன்முறையற்ற இருப்பு என ஏதாவது உள்ளதா?
அடிமைப்பட்டவர்கள், துயரில் வாழ்பவர்கள், தன் மீதான குற்றங்களின் முன் தம்மை ஒப்புக்கொடுக்கிறார்கள்  வன்முறையை நிகழ்த்துவதில்லை, அதனை ஏற்கிறார்கள், அவர்கள் வன்முறையை வணங்குகிறார்கள். தம் மீதான வன்முறையின் முன் மண்டியிட்டுத் தொழுகிறார்கள்.
வன்முறையைத் தமது நீதியாக, பெருமிதமாகக் கொண்ட புனித வன்முறைகளின் கேளிக்கைகள் எந்தக் கட்டத்திலும் ஓய்வதில்லை. அவை இசையாக ஒலிக்கலாம், வெடிச் சத்தமாக அதிரலாம், நிசப்தமாகப் பரவலாம்.
வன்முறையின் கொண்டாட்டம் எத்தனை வடிவங்கள் கொண்டது, வன்முறைதான் மனிதர்களின் ஆகப்பெரும் திளைப்பு.  அதுதான்  போர்களை, பேரரசுகளை, பெரும் சாதனைகளை உருவாக்குகிறது.
“அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும்,   தனக்கு விதிக்கப்பட்ட இந்த ஒடுங்கிய உலகத்தையும் தன்மீது சுமத்தப்பட்ட தடைகளையும் எதிர்ப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை எனத் தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.” என்னும் ஃபிரான்ஸ் ஃபானோன் புதிதாகத் தொடங்க வேண்டும் எனச் சொல்வது வன்முறையற்ற வாழ்வையா, வன்முறையை நிகழ்த்துவதற்கான சம உரிமை கொண்ட வாழ்வையா, வன்முறைக்கு முன் அடிபணியாத வாழ்வையா?
வன்முறையின் சமன்பாட்டில் இரண்டு சாத்தியங்கள்தான் உள்ளன, வன்முறையை நிகழ்த்துவது அல்லது தான் செய்வது வன்முறையில்லையென நிறுவுவது.
இதற்கு மாறான, இந்தச் சமன்பாட்டை மறுத்த வாழ்தல் சாத்தியமில்லையா?
உண்டு வெறும் வாழ்தல், வெறும் உயிர்த்திருத்தல், அதுவே மீளக்கிடைக்காத இன்பம் என உணர்கிற மனம்.
உனக்குப் பயித்தியம்தான் போ, மீளக்கிடைக்காத இன்பத்தை எங்கு வைத்து வளர்ப்பதாம், அதனை உணர்வதற்கு எங்கு போய் கற்றுக் கொள்வதாம்?
நீ மட்டும் என்ன,  இரட்டைப் பயித்தியம்தான். உணர்வதற்கு எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமா என்ன. கற்றுக் கொண்டதையெல்லாம் மறக்க வேண்டும் அவ்வளவுதான்.
கற்றுக் கொண்டதையெல்லாம் மறப்பது, சரிதான் அதற்கு வாழாமலேயே இருந்துவிடலாம் தெரியுமா. ரொபர்தோ பொலான்யோ தனது கல்லீரல் பழுதுபட்டுவிட்டதை அறிந்துகொண்ட பின்புதான் ஐந்து பாகங்கள் கொண்ட தனது இறுதி நாவலை எழுதத் தொடங்கினார். எட்டு ஆண்டுகள் தனது மரணத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துடன் எழுதிக்கொண்டே இருந்தார்.  தனது சாவின் நாட்கள் எண்ணப்பட்ட அந்த ஆண்டுகளில்தான் உலகப் புகழ் பெற்ற அவரது நாவல்கள் அனைத்தும் வெளிவந்தன.  உயிர்வாழ வேண்டும் என நினைத்திருந்தால் புகைபிடிப்பது, மது அருந்துவது, கண்விழிப்பது எல்லாவற்றையும் விட்டிருக்க வேண்டும். ஆனால் எதையும் நிறுத்தவில்லை ஆயிரம், ஆயிரம் பக்கம் எனக் கணக்கு வைத்து தட்டிக்கொண்டே இருந்தார். இறப்பதற்கு முதல்நாள் கூட சில பக்கங்களை எழுதினார்,  அத்தனையும் கொலைகள், குற்றங்கள், கடத்தல் பற்றிய கதைகள்.
தன்னுடைய பிள்ளைகளுக்கு எதையும் சேர்த்து வைக்கவில்லை என்ற மன உறுத்தலில் ஐந்து பாகங்களை எழுதித் தன் சாவுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று குறிப்பும் எழுதியிருந்தார். ஆனால் பிள்ளைகள் அவரது இறுதி ஆசையை நிறைவேற்றவில்லை, ஒரே பாகமாக அதனை வெளியிட்டுவிட்டார்கள்.
ஐம்பது வயசு சாகிற வயசில்லை, ஆனால் சாகத்தான் அவ்வளவையும் எழுதினார் என்று தோன்றுகிறது. கற்றுக் கொண்டதை மறந்துவிட வேண்டும் என்றால் ஃபானோனும், பொலான்யோவும் ஏனப்பா எழுதிச் சாகவேண்டும். எழுத்து சாவதற்கான துணிச்சலைத் தருகிறதா, அல்லது எழுதியபின் சாவு இல்லையெனும் மயக்கத்தைத் தருகிறதா?
நீ சாவை எதிர்கொள்ளும் ஆண்களைப் பற்றி பேசுகிறாய், பெண்களைப் பற்றிப் பேசு, அது வேறு மாதிரி இருக்கிறது, அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
முப்பது வயதில் சில்வியா பிளாத்,  ஐம்பத்தொன்பதில் வயதில் வர்ஜினியா உல்ஃப், நாற்பத்து ஐந்து வயதில் அன்னி செக்ஸ்டன் ஏன் தம் சாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.  எழுத்து அவர்களைச் சாவை நோக்கித் தள்ளியதா, சாவதற்காகத்தான் அவர்கள் எழுதினார்களா.
காத்தி அக்கர் தன் சாவை ஒரு பரிசோதனை போல செய்து பார்த்தது ஏன், வரைந்து கொண்டிருந்த ஓவியத்தை முடிக்க முடியாமல் போன அம்ரிதா ஷெர்கிலின் சாவு தற்கொலைக்கும் கொலைக்கும் இடையில் சிக்கிய ஒரு நிகழ்வு.
நீ எழுத்தைப் பற்றிப் பேசுகிறாயா, வன்முறையைப் பற்றிப் பேசுகிறாயா,  சாவைப் பற்றிப் பேசுகிறாயா அல்லது சாவதற்கான வழிகளைப் பற்றிப் பேசுகிறாயா?
வாழ்வைப் பற்றிப் பேசுவதாக உனக்குத் தோன்றவில்லையா? உடலாக வாழ்வதிலிருந்து ஒளியாகவோ, ஒலியாகவோ மாறுவது பற்றிப் பேசுவதாக உனக்குத் தோன்றவில்லையா?
ஒளியாகவோ, ஒலியாகவோ, எழுத்தாகவோ மாறி உடலை விட்டுச் செல்வதா, அப்படியென்றால் எதையும் விட்டுச் செல்லாமல் மறைந்து போகும் பெண்களைப் பற்றி யார் பேசுவது?
எதுவாக மாறுவது எனத் தேடித் தேடியே மறைந்து போகும் பெண்களின் வாழ்விற்கு என்ன அர்த்தம். எதுவாகவும் இருக்க முடியாமல் கரைந்து போகும் பெண்களைப் பற்றி யார் பேசுவது.
நீ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பெண்களையும் பெண் போராளிகளையும் பற்றிப் பேசவேண்டும் என்கிறாயா?
ஏன் மீந்த பெண்களைப் பற்றியும் பெண் போராளிகள் பற்றியும் பேசலாமே.
உனக்குக் கிடைத்த ஒளிப்படக் காட்சிகளில் அவர்களுக்கு நடந்தது பதிவாகவில்லையா?
இசைப்பிரியா பற்றிய காட்சிகளைப் பற்றி இங்கு பேசவேண்டாம்.
அவர்கள் சாவு உறுதி என்று தெரிந்துதான் ஆயுதம் எடுத்தார்கள்.
அது அப்படியின்றி எப்படி முடிந்திருக்கும்?
அது சாவின் சமன்பாடா? அல்லது வன்முறையின் சமன்பாடா?
அது போல எதுவும் நடக்கவில்லை என்றுதான் பலர் சொல்கிறார்கள்.
போராளிகள் போராளிகளையே கொன்றது பற்றித்தான் பேச வேண்டும் என்கிறார்கள் சிலர், போராளிகள்தான் இனப்படுகொலைக்கு காரணம் என்கிறார்கள் சிலர், போராட்டமே பயங்கரவாதம் அதுதான் எம் மக்களை அழித்தது என்கிறார்கள் சிலர்.
ஒரே இடத்தில் ஒரே ராணுவ நிபுணர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர்கள் வெவ்வேறு இயக்கங்களுக்குப் பகிர்ந்து அனுப்பப்பட்ட காலம் ஒன்று இருந்ததாகச் சிலர் சொல்கிறார்கள்.
போராட்டம் எங்கு நடந்தாலும் இனி படுகொலையில்தான் முடியும் என்கிறார்கள் சிலர்.
போர்களைப் பற்றிப் பேசி நாம் வன்முறையின் சமன்பாட்டை மீறமுடியுமா?
நமது உரையாடல் போர்களைப் பற்றியது அல்ல. சமீபத்தில் நடந்த இரண்டு தற்கொலைகள் பற்றியது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் சாவை நேரடியாக வலைதளத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  தாங்கள் வாழவிரும்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். தங்களால் இனி வாழ முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்று சொல்லவில்லை.
ஃபிராண்டஸ் ஃபானோன், ரோபர்தோ பொலான்யோ என்ற இரண்டு பேரைப் பற்றியும் ஏன் நாம் பேசத்தொடங்கினோம் தெரியுமா, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
முரண்பாடு
வினோதினி அந்த உரையாடலைப் படத்துடன் இணைத்து எடிட் செய்து முடித்தபோது பின்னிரவு 3.30 மணியிருக்கலாம். பின்னணியில் அங்கங்கு ஒலிக்கும் அந்த உரையாடலுக்கும் அந்தக் குறும்படத்தின் காட்சிகளுக்கும் தொடர்பில்லை என்பது அவளுக்குத் தெரியும். அதுதான் அவள் விரும்பியது. அவள் செய்ய நினைத்தது  ஒன்றுதான் : அந்தக் குறும்படம் ஒவ்வொரு முறையும் வெவ்வெறு வடிவம் கொண்டதாக மாறவேண்டும். ஒவ்வொரு முறையும் தான் ஒளிப்பதிவு செய்துள்ள வேறு வேறு காட்சிகளை, வேறு வேறு நேர்காணல்களை அந்தப் படத்துடன் இணைத்துத் திரையிட வேண்டும். தனது படம் ஒரு முடிவு பெறாத படமாக, ஒவ்வொரு இடத்திலும் உருமாறும் படமாக அமைய வேண்டும்.  இதனை ஒரு சோதனை முயற்சி என்று எல்லோரும் சொல்லலாம், ஆனால் அவளைப் பொறுத்தவரை அதுதான் அதன் வடிவம். அதனை வேறு விதமாகச் செய்வதாக அவளுக்குத் திட்டமில்லை.
 
 
இடையீடு
1.
“பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதை மிகவும் விரும்புகிறார்கள். தங்கள் மீது வலிமையான ஆண்கள் செலுத்தும் வன்முறை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்மீது பாலியல் வன்முறை நடப்பதை விரும்பவே செய்கிறாள். பெண்கள் மீது வன்முறை என்று கூச்சல் போடும் கும்பல் பாலியல் பற்றி எதுவும் தெரியாதவர்கள். வலிமையும், ஆண்மையும் கொண்ட ஆண்கள் பெண்களைத் தம் விருப்பத்திற்கு ஆட்டி வைக்க முடியும். இயற்கையிலேயே பெண்கள் இன்பத்திற்காக எதையும் விட்டுத்தரும் குணம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் எத்தனைக் கொடுமையையும் பொறுத்துக்கொண்டு ஆண்களுக்கு பணிவிடை செய்கிறார்கள். என் அனுபவத்தில் இன்பத்திற்கு அடிமையாகாத பெண்களே கிடையாது, அப்படி மயங்காதவர்கள் பெண்களே கிடையாது.” என முகநூலில் எழுத்தாளர் இளநி வேதிகா சொன்ன கருத்து தமிழகத்தில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அதற்கு ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள் பதிவாகியிருப்பது பற்றிக் கருத்து கேட்ட பத்திரிகையாளர்களிடம் “நான் கலகக்காரன் என்னைப் போலச் சிந்திப்பதற்கு உலகத்தில் நான்கு பேர்தான் இருக்கிறார்கள். இந்தியாவில் நான் ஒருவன் மட்டும்தான். என் கருத்தை ஏற்காதவர்கள் பெண்களே கிடையாது, என் கருத்தை எதிர்ப்பவர்கள் ஆண்களே கிடையாது”  என அதிரடி பதிலை அளித்திருக்கிறார்.
இந்தத் துணிச்சல் இல்லாமல்தான் தமிழ் இளைஞர்கள் தரம் கெட்டுப்போயிருக்கிறார்கள் என்று அவருடைய ரசிகர் மன்றத்தினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்கள் பற்றி பெண்களுக்கே தெரியாது என்றும் பெண்ணியவாதிகள்தான் பெண்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்றும் இளநி வேதிகா எழுதிய கட்டுரையை எஸ்பானோலில் மொழிபெயர்த்து லத்தீன் அமெரிக்கா முழுதும் படித்துவருவதாகவும், அறிவற்ற தமிழர்கள்தான் அதைப் படிக்கும் தகுதியற்றவர்களாகிப் போனார்கள் என்றும் தமிழ் நாட்டில் வாழ்வதே தனக்கு அவமானம் என்றும் இளநி புலம்பியிருக்கும் வீடியோ ஒன்றும் தற்பொழுது வெளியாகியுள்ளது.
2.
பரமானந்த பத்ம விலாச பரஞ்சோதி சுபானந்தர் ஆகிய நான் இறைவனின் எல்லா அருளும் பெற்ற மனிதர்களிடம் பாஷாவினோதம் செய்யவே அவதரித்திருக்கிறேன். நான் மனுஷரைப் போன்ற தோற்றம் கொண்டவன், மனுஷ பாஷையில் பேசுகின்றவன், ஆனால் மனுஷர்களின் ஒருவன் இல்லை. உங்களோடு கலந்து உங்களைத் தெய்வீக மகாமண்டலத்திற்கு யாத்திரை கொண்டு செல்ல வந்த தெய்வீகன் நான். உங்களைப் போலவே மானிட உடம்பில் இருந்தாலும் தெய்வத்தின் அம்சமும் தெய்வமேயான சக்தியும் கொண்டவன் நான். பகுத்தறிவு பேசும் பன்னாடைகளை அழித்தொழித்து, கம்யுனிசம் பேசும் கழிசடைகளை சம்காரம் செய்து வேதாம்ருத வெற்றிச் சங்கை ஊதவந்திருக்கும் என்னை உலக அறிவெல்லாம் பெற்ற இளநி வேதிகா போன்ற எழுத்தாளர்களும் பாராட்டுகின்றனர். என் பாதாரவிந்தங்களில் வணங்கிச் செல்கின்றனர்.  இத்துணை எதற்கு அவருடைய தெய்வீகத் துணைவியார் அந்தரவானி அம்சமல்லிகா அவர்கள் என் மடியில் அமர்ந்து மனம் தெளிந்து சென்ற நிகழ்ச்சி ஒன்று போதும் என் தெய்வீக அனுக்கிரகத்தை உங்களுக்கு தெளிவாக உணர்த்திவிடும்.
 
3.
சத்சமாதி சபோதகுரு இத்சத்திய இச்சா யோகி ஈஷாக்கிரிய இன்பலோக இஷ்டாதி வந்தே குரு. இந்த உடம்பை என்னான்னு நெனைக்கிறீங்க, அது அதள பாதாளம், அந்தரத்தில் சத்தியம், சுதள சுபாங்கம், சுந்தர மகாத்மியம். கொள்கை, லட்சியம், சமத்துவம் அப்படின்னு சில அய்யோக்கியர்கள் பேசிக்கிறாங்க. அதெல்லாம் ஒன்னும் கெடியாது. நீங்க என்ன நெனிக்கிறீங்களோ அதுதான் ஈஷன். பதினைஞ்சாயிரம் வருஷம் முன்னாடி இருந்த ஒரு யோகிதான் ஈஷ்வரன் அவன் யார், நான்தான். அவனைச் சந்திச்சி சில சங்கதி பேசியிருக்கேன். எதைப்பத்தியும் கவலைப்படவேணாம், நானே யோகி, நானே குரு, நானே ஈஷ்வர். வாழ்க்கைன்னா என்னா? ஒன்னுமில்ல, ஆமாம் ஒன்னுமில்ல. ஒன்னு இருக்கிறதா நம்பித்தானே அது பின்னாலே ஓடிக்கிறோம். ஓடத்தேவையில்லை, ஓடத்தேவையில்லை, உங்களுக்கு சொல்லிக்கிறேன், ஓடவே தேவையில்லை. சும்மா இருங்க மாசம் ஒரு லட்சம் ஆஷிரமத்துக்குக் கொடுங்க. இந்த கம்யூனிசம், கன்றாவியெல்லாம் கண்ணுல கண்டா அடிச்சுத் தொறத்துங்க. மல்டிநேஷன்தான் மனுஷ தர்மம், கால் சென்டர்தான் கந்தர்வ மதுரம். எனிக்கு உலகத்துல இருக்கிற ஒன்பது மகா யோகிகளோட தொடர்பு இருக்கு அவங்கதான் இந்த உலகத்த நடத்திப் போகிற மகா புருஷர்கள். என்னோட பேசுங்க, உங்கள  நான் கொண்டு போய் இன்னொரு உலகத்துல சேக்கிறேன். குருநாத குருபாத குருவேத குருசோத குருத்தாத குருவினோத குருவிக்கிரம குரு பாதம் சரண். குருபாதம் என் பாதம் அதுவே சரண், என் பாதம் சரண். குரு மகாயோகி, குரு மகா தியாகி, குரு மகா போகி.
4.
எப்படி உங்களால் இப்படியெல்லாம் எழுது முடிகிறது இளநி வேதிகா அவர்களே? உலக இலக்கியத்தரத்தை உங்களால் எப்படி எட்ட முடிந்தது? உங்களைப்போல இந்தியாவிலேயே யாரும் இல்லையென்று பேசிக்கொள்கிறார்களே அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அதற்குக் காரணம் என் அசாத்திய ஆண்மைதான் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். போகர் சொன்ன ஒன்பது மூலிகைகளை முறையாக அறிந்த ஒரே ஆண்மகன் நான்தான். பதினைந்து வயதிலிருந்து அறுபது வயதுவரை அந்த மூலிகைகளைத் தேடித் தேடி மேய்ந்தவன் நான். உலகத்தின் போர்னோ நாயகர்கள் யாரும் என்னுடன் போட்டிக்கு நிற்கமுடியாது.  இயமாலயம், திபெத்தியம், ஆப்கானிஸ்தான், லாடாக் என அத்தனை பகுதியிலும் நான் பயணம் செய்திருக்கிறேன். போகர் சொன்ன கிழங்குகள், வேர்களை நான் மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறேன். போகரும் கூட கண்டதில்லை. இதனைத் தமிழர்களுக்கு நானே சொல்வதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
உங்கள் எழுத்தைப் பற்றிக் கேட்டால் வேறு என்னவோ சொல்கிறீர்களே இளநி வேதிகா அவர்களே.
ஆராபிய இலக்கியத்தை அரபியல் படித்து இருந்தால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். என்னைப் போல ஒரு அறிஞனை எங்கே கண்டுபிடிக்க முடியும். தமிழில் யாருக்கு இந்தக் குறியமைப்பு உள்ளது என்று சொல்லுங்கள் பிறகு பேசலாம்.
தமிழ் இலக்கியத்தை உலகத் தரத்திற்கு நீங்கள் மட்டும்தான் கொண்டுசெல்வதாகச் சொல்கிறீர்கள் வேறு யாரும் அது போல எழுதவில்லையா?
என்ன எழுதிக் கிழிச்சாங்க. வெறும் குடும்பக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை, சாதிக்கதை. ஒரு கொண்டாட்டம் கிடையாது, கும்மாளம் கிடையாது. நான் எழுதுவதைப் படிங்க. காய் கறிகளை எத்தனை விதமா சமைக்கிறது, விஸ்கிய எத்தன விதமா குடிக்கிறது, துணிகளை எத்தனவிதமா மடிக்கிறதுன்னு ஆயிரம் பக்கத்துல இரண்டு நாவல் எழுதியிருக்கேன். என்னுடைய நாய்களைக் குளிப்பாட்டுவது பற்றியும் வாக்கிங் அழைத்துப் போவது பற்றியும் கவித்துவமும், காமமும் பொங்கும் காவியம் ஒன்றும் எழுதியிருக்கிறேன். என் பத்தினி இளம் வயதில் பட்ட துன்பங்களைக்கூட கொண்டாட்டமாக விவரிக்கும் எனது கலக எழுத்து உலக எழுத்தாளர்களையே கதிகலங்கவைத்திருக்கிறது. இவ்வளவு   ஏன், பல நடிகைகள் என் எழுத்தைப் படிக்காமல் தூங்கப் போவதே இல்லையென போனிலும், நேரில் வந்து சொல்லியிருக்கிறார்கள். எழுத்துன்னா இதுதான் எழுத்து. தமிழர்கள் இதைக் கொண்டாட வேண்டாமா? அரசு நிகழ்ச்சியாக,  கலாச்சார விழாவாகக் கொண்டாட வேண்டாமா. நித்தய சாயி நிர்மல மகா யோகி ஒரு முறை என்னுடன் அந்தர சம்பாஷணை செய்த போது என்ன சொன்னார் தெரியுமா?  நான் அடுத்த அவதாரத்தில் உனது வாசகியாகப் பிறப்பேன்.
5.
அற்புதம் மகா அற்புதம். அந்த ஆசிரமத்தில் தங்கயிருப்பதும் தவம் செய்வதும் மகா அற்புதம். ஒரு இண்டர்நேஷனல் புராஜக்டோடு அந்த குருவைச் சந்தித்துவிட்டால் நடக்காதது எதுவும் கிடையாது. மாபியா, அண்டர்வேல்ரட் எல்லாம் சும்மா. என்ன வேண்டும், எத்தனை நாட்களில் வேண்டும். என்ன ஒப்பந்தம், அவ்வளவுதான்.  ஆர்ம்ஸ் டீலிங்கா, டிரக் கன்ஸைன்மென்டா, இளம்பெண்கள் அசைன்மென்டா, எதுதான் நடக்காது. இந்திய அரசியலை இங்கிருந்து ஆட்டிப் படைத்துவிடலாம். யாரைத் தூக்கவேண்டும், யாரைத் தொலைக்க வேண்டும், யாரை மெகாஸ்டார் என்று கொண்டாட வேண்டும்? எதுவும் கஷ்டமில்லை. இந்திரலோகம் போன்ற ரெசாடில் தங்கிக்கொண்டு பாலயோகிகளின் பணிவிடைகளைப் பெற்றுக் கொண்டு வேலையை முடித்துக் கொண்டு வெற்றியோடு திரும்பலாம். மகாயோக, மந்திரானந்த மத்தவிலாச முக்தி மகாசன்னிதானம். இப்படியான சன்னிதான சம்போக சத்திரங்கள் பாரத பூமியில் பசுமையான இடங்களில் எல்லாம் பெருகிக்கிடந்தாலும் அதன் மகாகுருமார்கள் நான்கைந்து பேர்கள்தான் இருக்கிறார்கள்.  கஞ்சா புகை சாமிகள், அபினி அமுத சித்தர்கள், உடல் பிசைந்து உன்மத்தம் தரும் யோக சுத்தானந்த மடங்கள், பாலயோகி பணிவிடைகள் செய்யும் பஞ்சயோக மடங்கள், யோகினி சேவை செய்யும் உதயவனங்கள், தலைமறைவு வாழ்க்கை வாழும் தவச்சாலைகள் அனைத்தும் இன்று ஒரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டன. துணைக்கோள் சேவைகள் முதல் தனி விமானங்கள், ஆளற்ற தீவுகள் எனப் பன்னாட்டு பக்தி வேதாந்த பஜனைக் கூடங்கள். இங்கு கூடும் கூட்டத்தை வைத்து உலக அரசியலையே மாற்றிவிடலாம். சினிமா உலகம், கட்சி அணிகள், அதிகார அலுவலர்கள், பைனான்சியர்கள், பெருமுதலாளிகள் யாரையும் சந்திக்க இந்த சன்னிதானங்களே சிறந்த சந்தைகள். இந்திய ஞானம் உலகைத் தன் வசமாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
6.
கதவைத் திற கனவு வரட்டும், சன்னலைத் திற சமுத்திரம் தெரியட்டும், திரையைவிலக்கு தெய்வம் தோன்றட்டும், வாசலைக் கூட்டு வானம் தெளியட்டும் என்ற வரிசையான நூல்களை எழுதிய இருவர் பற்றி தமிழ் வாசகர்களுக்குத் தெரியாதா என்ன. ஒருவர் இளநி வேதிகா என்ற உலக எழுத்தாளர், மற்றவர் பத்மவிலாச பரஞ்சோதி சுபானந்தர். சுபானந்தரே சுத்தஞானி என்று இரண்டு நூல்களை எழுதிய இளநிக்கும்,  இளநிக்கு தனி ஒரு குடில் தந்து தத்துவம் அருளிய பரஞ்சோதிக்கும்  இடையில் அப்படி என்ன பிரச்சினை? பரஞ்சோதியின் நூல்களை இளநியே எழுதியதாகவும், இளநிக்கு ஞானபாஷையை அருளியது சுபானந்தரே எனவும் இரண்டு கட்சியினரும் சண்டையிட்டுக் கொண்டாது  ஒரு புறம்.  யாருடைய குறி பெரியது, யார் சம்போகத்தில் மகானுபவர் என்ற போட்டிதான் அவர்களுக்குள் மோதலை உருவாக்கியது என்று பேசும் அல்ப மானுடப்பதர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனை இருவரும் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தாலும் இன்று இருவரும் ஈடுபட்டிருப்பது ஆன்ம நிவேத அருளில் யார் அற்புதமானவர், யார் அல்பமானவர் என்ற போட்டிதான் என்று உணர்பவர்கள்தான் மகாயோக மத்தவிலாசர்கள். சுபானந்தர் தன் துணைவியாரைக் கடத்திச் சென்று விட்டதாக இளநி வேதிகா இந்திய உளவுப் படையினருக்கு ஒரு தகவல் அனுப்பியியதும்,  இந்திய உளவுத்துறை அதற்காக இரவு பகலாக வேலை செய்வதும் இளநி வேதிகா இளைஞர் படைக்கு ஒரு பெரும் வியப்பாவே இருந்து வருகிறது.
7.
என் சுவாமி, என் தெய்வநாயகா, இந்தப் பிறவியில் மட்டுமா இன்னும் உள்ள எண்பதாயிரம் பிறவியிலும் உங்கள் சம்போக சமேத சத்தியஜீவனாக இருக்கவே பிறந்தவள் என்னும் ஞானத்தை உங்களைக் கண்டவுடன் பெற்றேன். இளநி வேதிகா என்ற ஈனப்பிறவியை நான் மன்னிக்க ஒரே காரணம் அவன்தான் உங்கள் பாதாரவிந்தங்களை நான் தரிசிக்க அழைத்துவந்த தூதுவன். அன்றே அறிந்தேன் நான் உங்கள் ஆத்ம நாயகி. அந்த கொடியவன் இத்தனை நாட்களாய் என்னை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருந்தான். வாழ்விழந்து தனித்திருந்த என்னை வாழ வைக்க வந்த தெய்வம் நான்தான் என்றான். தன் முதல் மனைவி தன் சம்போக சாமர்த்தியம் தாக்குப்பிடிக்க முடியாமலும், தன் ஆண்மையின் அதிரடிகளைத் தாங்கமுடியாமலும் ஓடிப்போய் விட்டதாக என்னிடம் சொன்னபோது ஒன்றும் சொல்ல முடியாமல் அடிமையானேன். என்னைக் கடத்திச் செல்ல ஒரு கூட்டம் இருக்கிறது என்றும் அந்தக் கூட்டத்திடமிருந்து என்னைக் காப்பற்ற அவனால்தான் முடியும் என்றும் என்னைத் தினம் நம்பவைத்தான் சுவாமி. தன் சம்போக சக்திக்கு அடிமையான பெண்கள் கூட்டம் தன்னைத் தேடிவரும் போது நான் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்றான். ஆனால் வந்தவர்கள் எல்லாம் குடிகாரக் குள்ளர்கள்தான். அவர்கள் அவனை மகா யோகி என்றும் உலகமகா அறிவாளியென்றும் துதிபாடினார்கள். அவன் இன்டர்நெட்டில் தன் சம்போக சமாபந்தியைச் செய்து கொண்டே இருந்தான். தனக்கு உலக மகா போகிகளிடமும் உலகைக் கடந்த யோகிகளிடமும் சம்பாஷணை உண்டு என்று சொல்லிக்கொண்ட இந்த இளநி வேதிகா தமிழ் சினிமாவின் பாதாள அறைவரை தனக்கு தொடர்பு உண்டென்று சொல்லிக்கொண்ட போது புதிய குள்ளர்களும், புத்தி கெட்ட கூமுட்டைகளும் ஓயாமல் அவனை மொய்த்துக்கொண்டே இருந்தார்கள். என்னை அவன் ஒரு வெள்ளிச் சங்கிலியால் கட்டிப்போட்டு வைப்பான். எழுத்தாளன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பான்.  துருக்கிக்கு ஒரு வாரம், துர்க்மேனிஸ்தானுக்கு ஒரு வாரம் போய் வருவதாகச் சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவான். தான் ஒரு கொள்ளைக்காரனாக இருபது வருஷம் இருந்ததாக ஒரு நாள் சொல்வான். இன்னொரு நாள் தான் போகர் வம்ச சித்தர்களுடன் முப்பது ஆண்டுகள் யாத்திரை செய்ததாகச் சொல்வான். வாழ்நாள் முழுக்க தான் போதை மருந்து விற்ற கும்பலிடம் அகப்பட்டு மீண்டதாக காலையில் சொல்வான், மாலையில் தன் தங்கையை ரஷ்ய உளவுப்படை கடத்திச் சென்றதாகவும் அவளை மீட்க மெக்சிகோ அண்டர் கிரவுண்ட் கும்பலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டாகவும், அப்பொழுது சேகுவேரா என்ற ஒரு ஆளைச் சந்தித்ததாகவும் சொல்வான். அவன் என்னை பாதாள அறையில் கட்டி வைத்ததற்கு காரணம் அது போல யாரும் என்னைக் கடத்திச் சென்றுவிடக்கூடாது என்ற அக்கரைதான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். உங்களை நான் சந்திப்பதற்கு நான் செய்த தவம் எப்படி பலித்தது என்று தெரியவில்லை சுவாமி. அவன் அடிக்கடி உங்கள் தபோவனத்தில் தங்கிவிடுவிட்டு வருவதைக் கண்டு நான்தான் கேட்டேன், உங்கள் மேனியில் ஒளிரும் ஜோதி எப்படி வந்தது என்று. அவன் புலகாங்கிதம் அடைந்து தன் சம்போக சதானந்த வீரியத்தை அறிந்த உங்களை என்னிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான். அவன் என்னை நெருங்கி வந்தாலே சதானந்தம் சாந்த சொரூபம் என்று தியானத்தில் அமிழ்ந்துவிடும் எனது குண்டலினி அழிந்துவிட்டதாக அவன் கருதியிருந்தான் என நினைக்கிறேன். பாலயோகிகளும், பத்மவிலாச பவித்திர புருஷர்களும் நிறைந்த உங்கள் தபோவனத்தில் நான் காமசொரூபினியாக, கந்தர்வ மோகினியாக அவதாரம் கொண்டதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உங்களிடம் அடைக்கலமான என்னை உங்கள் ஆட்கள் கடத்திச் சென்றுவிட்டதாக உளவுத்துறை வரை சென்று புகார் அளித்தான் அந்த பாபி. இனியும் அவன் இருப்பிடம் சேர்ந்து வாழ நான் சம்மதியேன் சாமி. உங்கள் அடைக்கலம் நான். காக்க வேண்டும் காமம் கடந்த காதல்ஞான தேசிகாமணியே.
8.
இந்தியா ஞானிகளின் நாடு, நானும் ஒரு ஞானிதான். இதனை அறியாதவர்களுக்கிடையில்தான் நான் வாழ்கிறேன். குஜராத் மண்ணில் மதப் படுகொலை நடந்ததாக வதந்தியைப் பரப்பும் ஒரு கூட்டம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பொய்யைப் பரப்பும் ஒரு கூட்டம். இந்தக் கேவலங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. எனது எழுத்துகளைப் படிக்காத மடையர்கள் கூட்டம் இப்படியான பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறது. நான் தெய்வங்களை அறிந்தவன் சாயி, சோயி, மோயி என்னும் தெய்வீகச் சக்திகளுடன் தினம் பேசுகிறவன் நான். என் ஆன்ம நாயகியை, ஆசைக் காதலியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன். அவள் இன்றி நான் வாழ முடியாது. அவளைக் கடத்திச் சென்ற சாகச சன்னிதானத்தின் காமக்களியாட்டங்களை அம்பலப்படுத்துவேன். அது பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவலும் எழுதுவேன். சகியே உனக்காகக் காத்திருக்கிறேன். வந்துவிடு, இல்லையெனில் வரவைப்பேன்.
9.
தன் ஆசை நாயகி தன்னுடன் இல்லையென்ற துயரத்தில் இரண்டு நாவல்களை எழுதிய இளநி வேதிகா தன் பிராணனை விட்டுவிடுவதாக தன் மனைவிக்கு ஒரு ஓலையையும் அனுப்பினார். தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் புலம்பிய புலம்பல் உலகத் தரம் கொண்ட தமிழர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. அத்துடன் ஒரு ஆயுதப்படை சன்னிதானத்தில் சென்று மிரட்டியும் வந்தது. சுபோதானந்த சுந்தரர் இனியும் இந்தத் தொல்லை வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார். உலகம் முழுதும் கிளைகள் திறக்கவேண்டிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. உலகப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளன் தன்னை இழந்து தவிப்பதை நினைத்து அம்சமல்லிகா அம்மையாரும் தன் மனதை மாற்றிக்கொண்டார். தானே இங்கு வந்தது பற்றியோ, தானே திரும்பிப் போவது பற்றியோ எதுவும் யாருடமும் பேசுவதில்லை என்ற சத்தியவாக்குடன் அவர் ஒரு நள்ளிரவில் வேன் ஒன்றில் ஏறி இல்லம் சேர்ந்தார்.
10.
தன் நாயகி சமேதராக நகரை ஒரு முறை வலம் வந்த இளநி வேதிகா. அன்று இரவு தன் புதிய பங்களாவின் ரகசிய அறையில் அம்சமல்லிகா அம்மையாரை அடைத்து வைத்து வெந்நீர் தண்டனை அளித்தார். உன்னை அப்படியே விட்டுவிட நான் என்ன ஒன்பதாம் ஆட்டக்காரனா?  உன்னை மறுபடியும் கொண்டுவரத்தான் அந்தக் காதல் கடிதம் எல்லாம். என் போகச் சித்து பற்றி என் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மயங்கிப்போய் கிடக்க நீ இன்னொருவன் அந்தப்புரத்திலா. தினம் இனி தண்டனைதான் என்று சொல்லி  தன் உலகக் காதலிகளின் படங்களை திரையில் ஓடவிட்டு அம்மையாரின் அழுகையைப் பலமடங்காக்கினார். மனிதப் பதர்களை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்த இளநி வேதிகா பங்களாவைச் சுற்றி நான்கு கண்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு வகை நாய்களைக் காவலுக்கு கட்டிவைத்தார் வைத்தார்.  அந்த நாய்களுக்கான  செலவை உலகம் முழுதும் உள்ள அவருடைய பக்தர்களே ஏற்றுக் கொண்டதாக ஒரு தகவல். உலக அளவில் இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாத ஒரு பெருமை இது எனவும், இதனை அறிந்துகொள்ளும் அறிவு தமிழர்களுக்கு இல்லை எனவும் அவ்வப்போது இளநி வேதிகா கூட்டங்களில் பேசி வருகிறார். தன் பிரிய பத்தினிக்கு நாய்கள் பிடிக்கும் என்றும் அந்த நாய்கள் தன்னிடம் ரகசிய பாஷையில் பேசுவது பற்றியும் அவ்வபோது எழுதியும் வருகிறார்.
ஆவணங்களில் மறைந்த மர்மம்
சமீபத்தில் நடந்த இரண்டு தற்கொலைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.
 அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் சாவை நேரடியாக வலைதளத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  தாங்கள் வாழவிரும்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.  தங்களால் இனி வாழ முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்று அந்த வீடியோவில் சொல்லவில்லை.
இந்தப் பெண்கள் இளநி வேதிகாவின் ஒரு கதையைப் படித்துவிட்டு இப்படியொரு ஆளா என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். சினிமா நடிகைகளுடன் தனக்குள்ள உறவைப் பற்றி அவர் எழுதியிருந்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரை ஒரு கூட்டத்தில் சந்தித்த பின் ஆன்மிக, மான்மிக தியானங்கள் பற்றியும் அவரது சதானந்த சம்போக பராக்கிரமங்கள் பற்றியும் மின்னஞ்சல் வழி தொடர்ந்து அறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வழியாகத்தான் சுபானந்த சுத்த சம்போக தியானம் பற்றியும் அறிந்திருக்கிறார்கள். சுதானந்த வனத்தில் சேர்ந்துவிடும் ஆசையை அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவரும் தன்னோடு வந்து சிலநாட்கள் வனத்தில் தங்கும் படி சொல்லியிருக்கிறார். அவர்கள் தம் வீட்டிற்குத் தெரியாமல் அங்கே சென்று தங்கியிருந்தபோது  யாரோ சிலர் எதையோ வீடியோ எடுத்திருக்கிறார்கள். பிறகு வனத்தில் இருப்பதும், இளநியுடன் பழகுவதும் அவர்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி வந்த பின் இளநி வேதிகா அவர்களைத் தங்கள் காதலிகள் என அவர்களே அறிவிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் தன்னிடம் உள்ள வீடியோவை வெளியிடுவேன் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த நெருக்கடியான நிலையில் அவர்கள் மீண்டும் வனத்தில் அடைக்கலம் தேடிச் சென்றிருக்கிறார்கள்.  அவர்களை வெளிநாட்டு ஆசிரமம் ஒன்றிற்கு அனுப்புவதற்கு சதானந்த வனம் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.  ஒரு புறம் இளநி வேதிகாவின் இம்சை, மறுபுறம் மகா சதானந்தரின் மர்மச் சிரிப்பு இரண்டுக்கும் நடுவில் அவர்கள் எடுத்த முடிவுதான் தற்கொலை. அவர்கள் வலைதளங்ளில் அனுப்பிய அந்தக் காட்சிகள்  பொய்யானவை என்றும் அப்படி இருவர் இல்லவே இல்லையெனவும் பிறகு காவல்துறை சொல்லியது.
ஆணின்பம் கிடைக்காத பெண்கள்தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும் இது போன்ற சாவுகள் நடக்காமல் தடுக்க  தன்னைப் போன்ற போகநாயகர்களின் காதலே சிறந்த மருந்து என்றும் இளநி வேதிகா இங்கிலீஷ் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கிறார்.  தான் இளம் வயதில் காமத்தொழில் செய்யும் ஆணழகனாக சில ஆண்டுகள் இருந்ததாகவும் அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது. இதெல்லாம் உடாண்ஸ் அந்த சக்தி தனக்கு மட்டுமே உள்ளது என்றும் உலகம் முழுக்க உள்ள தனது  வனங்கள் இதுபோன்று பெண்களை சாவிலிருந்து காத்து சுபோதானந்த சுவனத்தில் சேர்க்கவே இயங்கிவருவதாக அம்ச நந்தரும்  அவ்வப்போது தன் அருளுரைகளில் குறிப்பிடுகிறார்.
முரண்பாடும் முடிவும்
இதன் மூலம் எதற்கும் முடிவு வந்துவிடப்போவதில்லையென என வினோதினிக்குத் தெரியும். இந்தத் தகவல்களையெல்லாம் தன் குறும்படத்தில் கொண்டுவந்து எதுவும் ஆகப் போவதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆயுத பேரங்கள் செய்யும் சாமியார்கள், போதை மருந்து வலைப்பின்னலை இயக்கும் மகான்கள், பெண்களைக் கடத்தும் யோகமண்டல உபாசகர்கள் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன?  இதன் மூலம் யாருக்கும் தண்டனை பெற்றுத் தரமுடியாது என்பதும் அவளுக்குத் தெரியும்.
 அவளுடைய திட்டங்கள் இரண்டுதான். முதலாவது பெண்கள் இரண்டுபேர் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடியும் எனப் பார்வையாளர்களிடம் சொல்லி விடுவது. இரண்டாவது அவ்வப்போது பாதிக்கப்படும் பெண்கள் தனக்கு அனுப்பும் ஆடியோக்களை குரல் மாற்றத்துடன் தன் படத்தில் இணைத்துப் புதிய காட்சி ஒன்றை இணைந்து விடுவது.
அந்தக் குறும்படத்தின் இறுதியில் பெண்கள் இருவரும் கேமராவைப் பார்த்தபடி கண்களை மூடும் அந்தக் காட்சியுடன் “ஃபிராண்டஸ் ஃபானோன், ரோபர்தோ பொலான்யோ  இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.” என்ற குரல் ஒவ்வொரு முறையும் மாறாமல் வருகிறது. மற்ற காட்சிகள் ஒவ்வொரு முறையும் மாறவே செய்கின்றன.
அடைபட்ட வீடுகளின் உள்ளிருந்து அலறும் பெண்களின் குரல்கள் சில இடங்களில் ஒலிப்பதாக பெண் பார்வையாளர்கள் மட்டும் சொல்கிறார்கள்.
(ஆவணங்களில் உள்ள பத்திகள் முகநூல் பக்கங்களில் இருந்தும், சில  வலைதளங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை.)

 

உயிர் எழுத்து, ஜனவரி 2018.

பொன்னியின் செல்வம்- பிரேம் (கதை)

பொன்னியின் செல்வம்

பிரேம்

முதல் பாகம்புது மின்னஞ்சல்
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி எம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு அன்பரை அழைக்கிறோம்.  விநாடிக்கு ஒரு ஆண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.
ஒரு நள்ளிரவில்  வந்த அந்த மின்னஞ்சல் செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில்? காலநதியில் கற்பனை ஓடத்தில் என்றிருந்தால் அச்சம் குறைந்திருக்கும்.  கைவிரல்கள் நடுங்க அனுப்பியவர் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாள், மணி எனச் சுட்டிவழித் தொட்டுப்பார்த்து பின்புலத் தகவல்களை அறிய முயற்சி செய்தேன். எதுவும் பிடிபடவில்லை. யாராக இருக்கும்? என் முகநூல்தான் என்னைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும்.
 இது ஒரு அச்சுறுத்தல்தான் என்று  மனம் சொன்னது.  பின்னோக்கிச் செல்லச் சொல்லும் எதுவும் எனக்கு அச்சுறுத்தல்தான். எழுதிக்கொண்டிருந்த பக்கங்கள் தடுமாறிவிட்டன. கணிணியை மூடிவிட கைவிரல் முயற்சி செய்த போது முகநூல் செய்தியறையில் ஒரு சில வரிகள். தப்பித்தோம் என நினைக்க வேண்டாம். கடந்த காலத்தின் கதைகள் காட்சிக்கு வந்துவிடும். சற்றே மனதைத் திடப்படுத்திக்கொண்டு நீங்கள் யார்? எனக் கேள்வியனுப்பினேன். ‘ஆடித்திருநாள்’ என்று பதில் வந்தது.
 ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ மறதியில் புதைந்த அந்தச் சொல் மணற்குழியில்  ஊறும் நீர் போலக் கசிந்து நினைவை நிறைத்தது. கலங்கிய நீரில் காலத்தின் அலைகள். வட்டங்கள் விரிந்து வாழ்வின் மங்கிப் போன சித்திரங்களை வரைந்து காட்டின. கடந்த காலத்தின் கதைகள் காட்சிக்கு வந்துவிடும்! அடடா சில நிமிடங்களிலேயே அது மெய்யாகிவிட்டதை எண்ணி மனம் துணுக்குற்றது. எழுதி எழுதித் தப்பிக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு சோதனையா? நான் மறக்க நினைக்கும் அந்தக் கடந்தகாலம்,  நான் மறைக்க நினைக்கும் அந்த முடிந்த காலம் இப்படி ஒரு பெயர் தெரியாத அஞ்சல் வழியாகப் பெருக்கெடுத்து மூச்சுத் திணற வைக்கிறதே.
உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்? ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்பது புரிகிறது. நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? விரல்கள் தானாக வரிகளைச் செலுத்தின. என் விரல்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் என்னை இன்னும் அச்சுறுத்தியது. என் பெயர் இருக்கட்டும், பேரவையில் இருந்து தப்பிய இருவரில் ஒரு ஆள் உன்னைக் கண்டுபிடித்து விட்டோம், இன்னொரு ஆள் எங்கே? அதனை மட்டும் சொல்லிவிடு! தப்பித்த இருவரா, அது என்ன சிறையில் இருந்து தப்பியது போலச் சொல்கிறீர்கள், அதில் இன்னொரு ஆள் வேறு.  யார் அது?  அது சரி ஒன்றும் தெரியாதது போல நடிக்க வேண்டாம். ஒரு நாள் அவகாசம் தருகிறோம், தகவல் தரவில்லையென்றால் உங்கள் இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம் எல்லாம் நந்தினியின் குதிரை போலப் பார்வையில் இருந்து மறைந்துவிடும். செய்தியறை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம்! என்ன இது?  இது யார், ஆடிப்பெருக்கு அன்பர்களில் யாரோ ஒருவரா? அல்லது அந்தக் குழு முழுமையும் இன்னும் இருக்கிறதா? ஒரு சமயம் உண்மையாகவே அந்தக் குழு பெருகி எல்லா இடங்களிலும் மாற்று உருவில் பரவித்தான் வருகிறதா? மாகாளி பராசக்தி! மனதுள் ஒலித்த இந்தக் குரல் என்னை இன்னும் திடுக்கிட வைத்தது. நான் கொஞ்சமும் யோசிக்காத அந்தச் சொற்கள். இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம்! அந்தச் சொல் தன் வேலையைத் காட்டத் தொடங்கிவிட்டதா?
உலக இலக்கியம், கோட்பாடு, புதிய புனைவு என என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்துகிறீர்களே உங்கள் கதை எனக்குத் தெரியாதா? ஒரு நாள் இரவு இப்படி ஒரு உள்ளறைத் தகவல். அது என்ன கதை? நீங்கள் தொடக்க காலத்தில் என்ன எழுதிக்கொண்டிருந்தீர்கள்? எந்தத் தொடக்க காலத்தில், யாருடைய தொடக்க காலத்தில்? உங்கள் எழுத்து எப்படி தொடங்கியது? அதைக் கேட்கிறேன்! அதுவா சிலேட்டில் பல்பம் கொண்டு எழுதித்தான் தொடங்கியது.  என்ன விளையாட்டா? கிரணம் எழுத்து எனச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு முன்பு என்ன எழுதினீர்கள்? அதுவா பிரஞ்சு கவிதைகளையும் சர்ரியலிசக் கவிதைகளையும் மாதிரியாக வைத்து எழுதிய பாவனைக் கவிதைகள். அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு
 ‘இரவைப் பொடிசெய்து எரிபந்தம் கொளுத்து,
 இறக்கை  இழந்தாலும் இருவானம் உனக்கு!
சிறைக்குள் அடைத்தாலும் சிறுக்காது கிழக்கு!
கடலைக் கைகொண்டு இறைப்பார்பார்க்கு  உணர்த்து!’  இது போன்ற பாடல்கள். அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு
“இணைமலர் பாதம் இரங்கிட வேண்டும்
உனைச் சரண் புகுந்தேன் உயிர் தரவேண்டும்.”
என்பது போன்ற பக்தியும் காதலும் கலந்த பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.  அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பிரித்துப் பூட்டி மாறுவேடக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.
“வண்ணங்களின் வானகமே
 வார்த்தைகளில் காவியமே
எண்ணங்களின் இளங்காற்றே
ஏழிசையின் புது ஊற்றே!”
இதுதான், இந்த இடம்தான். வசமாகச் சிக்கிக்கொண்டீர்கள். மாறுவேடக் கவிதைகள் எழுதிய நீங்கள் மாற்றுக் கலாச்சாரம் பற்றி இப்போது எழுதுவது எப்படி? அதுவா, அதற்கு முன்னே முத்தைத்தரு பத்தித் திருநகை பாடிக்கொண்டிருந்தேனே அதையும் சேர்த்துக்கொள்ளலாம். அதையும் சேர்த்துதான், சொல்கிறேன்,  நீங்கள் எழுத ஆரம்பித்த போது பிரஞ்சு கவிதை, பின்நவீனத்துவம் எதுவும் உங்களுக்குத் தெரியாது, பின்னால் பலருடைய தாக்கத்தில்தான் இப்படி எழுதிக்கொண்டிருக்கறீர்கள். பிறந்த போது எனக்குத் தமிழ்கூடத் தெரியாது, பேசவும் வராது, பின்னால்தான் கற்றுக்கொண்டேன். கற்றுக் கொள்வதுதான் எழுத்து, கருவில் வருவதல்ல. ஆனால் உங்கள் எழுத்தின் உண்மை முகம் வேறு. இருக்கலாம் உண்மையின் முகமே இல்லாமலும் இருக்கலாம்.  எல்லாவற்றையும் எழுதிப் பார்ப்பதுதான் எனது எழுத்து. இது வரை நீங்கள் எழுதியது பாவனைதான். பாவனைதான் எழுத்து, பாவனைதான் வாசிப்பு, பாவனைதான் பொருள்படுத்தல். வார்த்தைகளில் வைத்து மாயம் செய்கிறீர்கள். மாயங்களை வார்த்தைகளாகவும், வார்த்தைகளை மாயங்களாவும் மாற்றிப் பார்ப்பதுதான் எழுத்தின் விளையாட்டு. அப்படியென்றால் உங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான், இல்லையா? விளையாட்டுதான், ஆனால் மிக உண்மையான விளையாட்டு, உருவமுள்ள மாயம், தொட்டுப்பார்க்கத் தக்கப் பொய்.
அன்றைக்கு வந்து பொய்யைத் தொட்டுப்பார்த்துச்  சென்ற விரல்கள்தானா  இன்று வந்தது?  இல்லை, இது வேறு. ஒரு நாள் அவகாசம், உண்மையைச் சொல்ல வேண்டும். எந்த உண்மையைச் சொல்ல வேண்டும்?  சொல் சொல் சொல் உண்மை சொல், சொல்வதைச் சொல், சொன்னதைச் சொல், சொல்ல மறைப்பதைச் சொல்.
இரண்டாம் பாகம்: காலச் சுழல்
சுண்ணாம்பாற்றுக்கும்  உப்பனாற்றுக்கும்  இடைப்பட்ட நிலத்தில்  உள்ள அழகிய ஊர். புதுச்சேரி நகரத்தின் தென் பகுதியில் ஐந்து காத தூரத்தில் பாகூர் ஏரிக்கு வடபகுதியில் பத்து காத தூரத்தில் தென்னையின் தோட்டங்கள் நிறைந்து குளுமை தவழ இருந்தது அந்த ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அரியாங்குப்பம் என்று பெயர். கிழக்கில் வீராம்பட்டிணத்திலிருந்து ஒலிக்கும் அலைகடல் ஓசையும் மேற்கில் வில்லியனூர் குயில்மொழி நாயகித் திருக்கோயிலில் இருந்து ஒலிக்கும் மணியின் ஓசையையும் கேட்டு வளரும் பிள்ளைகளைக் கொண்டது அந்த ஊர். அந்த ஊரில்தான் அவன் பிறந்து வளர்ந்தான். மற்ற பிள்ளைகளைப் போல உடலில் உரமும், உள்ளத்தில் வேகமும் பெற்றில்லாத காரணத்தால் பெரியவர்கள் பக்கத்திலேயே வைத்துப் பாதுகாக்க வேண்டிய பரிதாப நிலையில் அவன் இருந்தான். கண்டார் இரக்கம் கொள்ளும் நெத்திலி மீன் உருவம், காணாத போது சேத்து வரால் போல வால்தனம் என்று அவன் வளர்ந்து வந்தான்.
அந்த சமயத்தில்தான் அதுவரை ஊரில் நடக்காத உற்பாதங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கின. கட்டிய கொடிக்கயிறுகள் காயவைத்த துணிகளுடன் மண்ணில் புரண்டுகொண்டிருந்தன.  மாடுகளின் மடியில் பால் மிஞ்சாமல் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு கன்றுக்குட்டிகள் குடித்துத் தீர்த்தன.  சட்டியில் மூடிவைத்த பாதி மீன்கள் காணாமல் போய் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தன. பலபேர் வீட்டுத் தோட்டத்துப் பானைகளில் செருகி வைத்திருந்த துணிச் சுருணைகள் தானாகப் பிடிங்கிக்கொண்டு தண்ணீர் குழாய்  போல அழகாகப் பீச்சிக் கொண்டிருந்தன. இதையெல்லாம் செய்வது யார் எனத்தெரியாமல் ஊர் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்த போது மந்திர தந்திரம் பழகிய அவனுடைய தாத்தா அவனை இரண்டு வயதிலேயே பாலர் பள்ளியில் கொண்டு போய் அடைத்து விட்டார்.
 இன்னும் ஒரு வருஷம் கழிந்தால்தான் பாலர் பள்ளி என்று சொன்ன வாத்தியார் அம்மாவிடம் பூனை செய்யறது கொட்டம், அடிச்சா பாவம். ஊர் ஜனங்க ஒன்னுபோல இருக்காது அம்மா. கட்டி வச்சி காப்பாத்தனும் என்று தன் மனக்கிலேசத்தை கொட்டினார் தாத்தா. என்ன பேசுகிறார்கள் என்று புரியாதது போல ஏக்கமாக நிமிர்ந்துப் பார்த்த அவனை இரண்டு பேர் பிடித்துக்கொள்ள தாய்வழிப் பாட்டனார் வெளியே போய் விட்டார். துள்ளிய துள்ளலில் பாலர் பள்ளியே பதகளப்பட்டது. நாக்குப் பூச்சிமாதிரி இருந்துக்கிட்டு என்னா துள்ளு துள்ளுது? பொம்மைக் கூண்டிற்குள் அடைத்துப் போட்டு விளையாட்டுப் பொருள்களை உள்ளே நிரப்பினார்கள். அப்படித்தான் ஆரம்பித்தது, ஒரு அரசியல் சரித்திரம்.
பாட்டிகள் சொன்ன கதையை அப்படியே ஒப்பிப்பதைப் பார்த்த டீச்சர் அக்கா பாட்டுச் சொல்லிக் கொடுத்தார். வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள். வெள்ளைத்  தாமரை போல இருப்பாள் வீணை சொல்லும் ஒலியில் சிரிப்பாள். நல்லா கவனிடா, இதே போலச் சொல்லு. வெள்ளைத் தாமரை பூவை எடுத்தாள் வீணை செய்து ஒலியில் இழைத்தாள்.  வார்த்தைகள் மாறினாலும் வாக்குகள் தவறாமல் திருப்பிச் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
எதை எழுதினாலும் அப்படியே பார்த்து எழுதியவனை கரும்பலை முன் தூக்கிப் பிடித்து எழுத வைத்தார். அச்சடித்த எதைக் கொடுத்தாலும் அப்படியே எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்ட அவனை வைத்து வித்தை காட்டி விளையாடினார்கள் ஊரின் சான்றோர்கள். தினத்தந்தியும், திரைப் பாடல் புத்தகமும் திகட்டாத தெளிதமிழ் ஏடுகளாக விரிய, கண்டதைப் படித்துக் காட்டும் பண்டிதனான் அந்தப் பாலகன்.
காலத்தின் சுழல் கரைகளைக் கடந்து ஓடத்தொடங்கியது. யாரைத்தான் விட்டு வைத்தது ஆதி அந்தமற்ற அந்தக் காலத்தின் வெள்ளம். ஒரு ஆடிப் பெருக்கன்று மளிகைக் கடையில் பழைய காகிதக் கட்டுகளுக்கு இடையில் முன்னட்டை இல்லாத பின்பகுதி பாதிக்கு மேல் சிதைந்த ஏட்டுச் சுவடியொன்றைக் கண்டுபிடித்தான் எழுத்தறிந்த இளந்தமிழன். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்ட அந்த ஏட்டினைச் சட்டைக்குள் மறைத்து எடுத்து தனியிடம் சென்றவன் அங்கிருந்து விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து பன்னெடும் ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் சென்று கரைந்தான்.
உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானவப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். கனவுகள் மறந்தன, காலம் மறைந்தது, காட்சிகள் மட்டும் கண்முன் விரிந்தன. எங்கெல்லாம் கொண்டு சென்றது அந்தச் சுவடி. அவன் யார்? வந்தியத்தேவனா, அருள்மொழியா, கரிகாலனா? இல்லை. வானதி, குந்தவை, நந்தினி, பூங்குழலி? சீச்சீ எல்லோரும் பெண்கள், பெரியவர்கள், ஆறடி உயரம், ஐம்பது கிலோ தங்கம்.
 வெட்கமும் வேதனையும் துரத்த. வார்த்தைகளின்  இருண்ட சுரங்கப் பாதையில்  காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான் அவன். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சம நிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான் சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே!
தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்ட இடத்தில் ஏடு முடிந்து போயிருந்தது. எங்கே போயின அடுத்த அத்தியாயங்கள்? நிலவறைக்குள் சிக்கிக்கொண்ட தன் வாழ்க்கையே அத்துடன் முடிந்து போனது போல உள்ளுக்குள் கிடந்து அழுது புலம்பினான். எங்கே கிடைக்கும் அந்த 42 ஆம் அத்தியாயம்? யாரிடம் இருக்கும்? எப்படி அதனைப் பெறுவது? பழைய பாரதக் கதை ஏடுபோல பெரிய புத்தகம், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை புத்தகத்தைவிட அழகான தாள் அழகான படங்கள். மனதை மயக்கும் மாய மனிதர்கள்.
பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். வலையை விரித்துக் கொண்டு சிலந்தி காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான்; அப்புறம் மீளுவதில்லை! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே வாரத்தில்  அனுபவித்தாகி விட்டது. ஆனால் இந்த புத்தக ஆசை? புதிதாகச் சேர்ந்து கொண்ட ஒரு சிலந்திவலையா? இதிலிருந்து வெளியே விழுந்தால்தான் உயிர் போய்விடுமா. அல்லது அந்த ஆசை வலைதான் தான் வாழும் இடமா? அல்லது தானே ஒரு சிலந்தியா? இந்த வலை முற்றுப் பெறாத வலை, அதன் மிச்சப்பகுதிகள் எங்கே?  தெய்வமே! ஊனும் உறக்கமும் அற்ற உள்ளத் தடுமாற்றம். மிச்ச வலையைத் தானே பின்னிப் பார்த்தால் என்ன?
ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்த்தான் சோழர்கள் வரலாற்றை எங்கு படிக்கலாம்? கதை என்று சொன்னால் காது பிய்ந்து போகுமே. ஆசிரியர்கள் ஆறாம் வகுப்பில் அதையெல்லாம் படிக்கலாம் என்றார்கள். மர்மம் அவிழவில்லை மனதும் தெளியவில்லை. ஒரு நாள் வகுப்பாசிரியர் வராததால்  புதிதாக ஒரு ஆசிரியை வகுப்பைப் பார்த்துக் கொள்ள வந்தார். மதாம் என்று அழைப்பதைவிட அக்கா என்று அழைக்கத் தகுந்த உருவம். கண்ணாடி அணிந்திருந்தாலும் கண்களை உற்றுப் பார்த்துப் பேசும் நிமிர்வு. குந்தவை போலவா, இல்லை நந்தினியா? இல்லை இல்லை தீய பெண்மணிகள்தான் நந்தினிகள், சதி செய்யக்கூடிவர்கள். இவர் யார்? எதிலும் அடங்கவில்லை? கைகட்டி வாயில் விரலை வை என்று சொல்லாமல் கேள்வி பதில் விளையாட்டு ஒன்றை நடத்தத் தொடங்கினார். கரும்பலகையில் பதில் சொல்பவர்கள் பெயர் ஒவ்வான்றாக. பதில் தெரிந்தால் கை உயர்த்தவேண்டும். வகுப்பில் மூன்று பேரைத்தவிர வேறு யாரும் கையுயர்த்தப் போவதில்லை. அவனும் மற்ற இருவரும் போட்டியில் சிக்கினர். கேள்விகள் மாறிமாறி வந்துகொண்டிருந்தது, அதிகக் கோடுகள் அவனுக்கு விழுந்துகொண்டிருந்தன.
இலங்கை இந்தியாவின் எந்தத் திசையில் அமைந்துள்ளது? காற்றில் பெருகிய ஓசை போல ஏதோ ஒன்று அவனைச் சூழ்ந்துகொள்ள  ‘உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?’ அவன் வாய் முணுமுணுத்தது. அக்கா குனிந்து ‘என்ன சொன்ன?’ என்றார். ஒன்றுமில்லை மதாம். இல்ல எதோ சொன்னியே திருப்பிச் சொல்லு. அவன் தலையைக் குனிந்து கொண்டு அமுத்தலாக இருக்க ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது? அக்கா அழுத்தமாகக் கேட்டார். அவனையும் மீறி வாக்கியங்கள் பெருகின. கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம் நெடுகிலும் பகைவர்கள்; ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால் சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்? அக்காவின் முகத்தில் அப்படியொரு ஆனந்தம், ‘எனக்குத் தெரியும், எனக்கும் தெரியும்’ என்ற குரல் அக்காவின் உதடுகளில் இருந்து எழுந்தது.
அடுத்த மூன்று மாதத்தில் அக்கா கொடுத்த அந்த ஏட்டின் ஐந்து பாகங்களையும் வாசித்து முடித்திருந்தான் அவன். அக்காவும் அவனும் நேரம் கிடைக்கும் பொதெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அத்தியாயங்களின் பெயர் சொல்லும் விளையாட்டு, யார் பேசியது இது என்ற விளையாட்டு. ஓயாத வார்த்தை விளையாட்டு. ஒரு ஆண்டு கழித்து ஆசிரியர் பயிற்சி முடிந்து அக்கா செல்ல வேண்டிய காலம் வந்த போது இருவருக்கும் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.  ‘உன்னிடமிருந்து தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறேன். உன் துயரம் நிறைந்த சிந்தனைகளில் நான் குறுக்கிட விரும்பவில்லை.’ அக்காதான் பேசினார். அவன் மெலிதாக முணுமுணுத்தான், ‘அக்கா நல்ல பணிகள் பல செய்ய வல்லவளாவாள்.  அவளை அறிந்த அனைவராலும் வந்தனை செய்வதற்கு உரியவளாக விளங்குவாள்.’ அக்கா கன்னத்தை வலிக்கும் வரை திருகினார்.
அக்கா வகுப்பில் பேசினார், ‘நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றறை ஆண்டு காலம் என்னிடம் தொடர்ந்து படித்து வந்ததபோது நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.’  அக்காவும் அவனும் வெளியே வந்த போது விழுந்து விழுந்து சிரித்தனர்.
பழைய புத்தகக் கட்டுகளுக்கிடையில் கிடைத்த பல புத்தகங்களை அவன் அக்காவுக்குக் கொடுத்திருந்தான், அவற்றைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னபோது அவன் பதறிப்போய் மறுத்துவிட்டான். தெரியாமல் தாத்தாவின் மளிகைக் கடையில் இருந்து எடுத்து வந்தது, திருப்பி வைக்க முடியாது. அப்படியா சரி இந்தப் புத்தகம் எல்லாம் என்னிடம் இருக்கட்டும். இது உனக்கு என புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். என்னிடம் இரண்டு இருக்கிறது ஒன்று வைத்துக்கொள், நான் இன்னும் படிக்கவில்லை, படித்தாலும் பக்கம் நகரவில்லை. வெளிநாட்டுச் சூழல் வெளிநாட்டுப் பெயர்கள். இனிதான் படிக்க வேண்டும். நீயும் பிறகு படித்துப்பார். இப்போது புரியவில்லை என்றாலும் பிறகு புரியும்.
அழகான புத்தகம், அழகான எழுத்து. முதல் முதலாகப் புத்தம்புது கதைப்புத்தகம். புதிய பாடப் புத்தகங்களின் வாசனையில் மயங்கி அதன் மீதே முகம் வைத்துத் தூங்கிப் பழகியவனுக்கு அந்தப் புத்தகத்தின் வாசனை புதிதாக இருந்தது. சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது. சோவியத் நாடும் அதன் வாசமும் புதிதாக இருந்தது. அதற்குப் பிறகு அதே புத்தகம் பல முறைகள் பழைய புத்தகக் கட்டுகளில் கிடைத்திருந்தாலும் அந்தப் புத்தகம் போல வாசனை இல்லை. எழுத்துக்கு வாசனை உண்டு என்பதை அவன் கண்டுகொண்ட நாட்கள் அவை.
தமிழ்தான் என்றாலும் புரியாத வாக்கியங்கள். மெல்ல மெல்லத்தான் புரியத் தொடங்கியது, ‘புகையும் எண்ணை அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல் நாள் தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிட்டது.’  ஊரின் வடக்குப் புறத்தே மூன்று கல் தூரத்தில் இருந்த முதல் ஆலை தொடங்கி மற்ற மூன்று ஆலைகளின் சங்கும் புதிதாகக் கூச்சலிட்டது. நீச்சல் தெரியாத அவனைக் காலச்சுழல் அப்படித்தான் இழுத்துச் சென்றது.
மூன்றாம் பாகம்: கிளை நூலகத்தில் ஒரு நிலவறை
அநேக நாட்கள் அப்படித்தான் கழிந்தன. கிளை நூலகத்திற்குள் சென்று பத்திரிகை மட்டும்தான் படிக்கலாம், ஆனால் உள்ளே சென்று புத்தகம் பார்க்க முடியாது. மெல்ல மெல்ல நூலக உதவியாளரிடம் சிநேகமாகி நூலகர் இல்லாத நேரங்களில் உள்ளே சென்று அலமாரியிலிருந்த புத்தகங்களைப் பார்க்கும் சந்தோஷமான நாட்கள் வாய்த்தன. ஒரு நாள் உதவியாளர், ஒரு நாள் நூலகர் என ஒப்பந்த அடிப்படையில் வெளியே சென்று விடுவார்கள் அதனால் ஒன்று விட்டு ஒருநாள் புத்தகங்களை உள்ளே இருந்தே படிக்கத்தொடங்கினேன். துடைப்பது சுத்தம் செய்வது பின்னால் இருந்த இடத்தில் வைத்துப் புத்தகங்களைப் பதிவேட்டில் எழுதுவது, டீ வாங்கிவருவது எனப் பல்வேறு பணிவிடைகள் செய்து ஒருவழியாக இருவருக்கும் செல்லப்பிள்ளையான பிறகு புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கும் அந்த நாள் வந்தது. வயதை மாற்றி எழுதி வாசகசாலை உறுப்பினர் ஆனேன். எனக்கென ஒரு பக்கம் பதிவேட்டில் முதன் முதலாக எழுதிவிட்டு எடுத்துச் சென்ற புத்தகம் சாமிநாத சர்மாவின் ‘கிரீஸ் வாழ்ந்த வரலாறு’.
எத்தனையோ புத்தகங்கள் பழைய புத்தகக் கட்டுகளில் இருந்து கிடைத்தபோதும் முன் அட்டை பின் அட்டையுடன் முழு புத்தகமாக ஒன்றை எடுத்துச் சென்று படித்த அந்த நாள் கிளர்ச்சியால் நிறைந்த  ஒரு சனிக்கிழமை. கோடை என்றாலும் எங்கள் ஊரின் தென்னைக் குளுமையில் அற்புதமான மணிநேரங்கள்.  வரலாறு என்பதால் எடுத்துச் சென்று வாசிக்கத்தொடங்கிய எனக்கு சற்று ஏமாற்றம்தான், ஆனால் சில பக்கங்கள் கடந்தபிறகு மனதைப் பற்றிக்கொண்டது. திங்கள் கிழமை விடுமுறை என்பதால் செவ்வாய்க் கிழமை இன்னொரு புத்தகம் எடுக்கச் சென்றேன். என்ன புரியலயா என்றார் லைப்ரேரியன் மிசே. படிச்சி முடிச்சிட்டேன் மிசே. படிச்சி முடிச்சிட்டியா, பக்கம் பக்கமா படிச்சயா வார்த்த வார்த்தயா படிச்சயா? பத்தி பத்தியா படிச்சேன். வினோதமாகப் பார்த்தவர் வாரம் ஒரு புத்தகம்தான் என்றார், என் முகம் வாடியது. சற்று நேரம் கழித்து வெளியே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த என்னை உள்ளே அழைத்து சரி சரி எடுத்துப்போ என்றார். துள்ளிக் கொண்டது மனம், துயரம் நீங்கித் தெளிந்தது உள்ளம். கடலைக் காட்டில் எலிக் கூட்டம்போல, கருவாட்டுக் கூடையைச் சுற்றி வரும் பூனை போல நூலகத்தின் அலமாரிகளைச் சுற்றி வரத்தொடங்கினேன். பள்ளிக்கூடத்தில் பாதிநேரம் பதுக்கி வைத்துப் படிப்பது பழக்கமாகிவிட்டது. முதல் மதிப்பெண் மாணவன் என்பதால் மாடு எங்க மேஞ்சா என்ன பால் கொடுக்க வீட்டுக்கு வந்தா சரி என உபாத்தியாயர்கள் உள்ளம் நினைத்தது.
காலம் மீண்டும் தன் சதிவேலையைத் தொடங்கிவிட்டது. ஒருநாள் புத்தம் புதிதாகப் புத்தகங்கள் பெட்டி பெட்டியாக வந்து சேர்ந்தன. நூலகம் இருந்த இடம் ஒரு பழைய கால வீடு, பின் பக்கம் பெரிய இடம் புத்தகங்களை அங்கு வைத்துதான் பிரிப்பதும் பதிவு செய்வதும். பெரிய வேலைதான், என் பங்கும் இருந்தது.  விடுமுறை நாட்களில் ஒவ்வொரு அட்டைப் பெட்டியாகப் பிரித்து பதிவேட்டில் எழுதும் வேலை. உண்மையில் அழகற்ற கையெழுத்து என்னுடையது, ஆனால் அழகான கையெழுத்து போல மாற்றி எழுதுவேன், அதனை வரைதல் என்றுதான் சொல்லவேண்டும். அன்று பிரித்த கட்டில் வந்து சேர்ந்தது ஆபத்து. ஐந்து பாகங்கள் கொண்ட அந்த அதிசய ஏடு. அதே கதைதான், ஆனால் புத்தகமாக. மூச்சுத் திணற அதனை தனியே எடுத்து வைத்தேன். உடனே ஒரு முறை படிக்கவேண்டும். ஐந்து பாகத்தையும் பக்கத்தில் வைத்தபடி. என்ன செய்வது? சதித்திட்டம் ஒன்றும் செல்லுபடியாகாது. ஒரு புத்தகம்தான் ஒரு தடவைக்கு.
ஐந்து புத்தகத்தையும் அப்படியே  படிக்க வேண்டுமே!  வந்து சேர்ந்தார் வந்தியத்தேவர், அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர், பிரஞ்சுச் சம்பளம் பெறும் பெரிய மனிதர். என்ன மிசே இந்த தடவ நம்ம புத்தகம் வந்து சேர்ந்ததா? என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பொன்னியின் செல்வன் இல்லாமல் புத்தகசாலையா? சமீபத்துல பொன்னியின் செல்வன் படிச்சவங்க யாரு ரெஜிஸ்தெர பாத்துச் சொல்லுங்க மிசே. இந்த வருஷம் புத்தகம் ஒரு தடவகூட வெளிய போகல. பழைய புத்தகம் கிழிஞ்சி கந்தலானதால உள்ளே கட்டிப்போட்டாச்சு. யாராவது முழுசா படிச்சா உங்க கிட்ட சொல்லனும்ணு எனக்கு கட்டளையாச்சே மிசே.  சொல்லியிருக்க மாட்டேனா? அத்தனையும் கேட்டு அதிர்வடைந்த மனத்தில் குயுக்தி புகுந்தது. எதுவும் தெரியாதது போல உள்ளே சென்று லைப்ரரியனிடம் சொன்னேன். பொன்னியின் செல்வன் படிக்கனும் மிசெ.  இரண்டு பேரும் அர்த்தம் நிறைந்த புன்னகை புரிந்தனர். புதுசா வந்திருக்கு, பதிவு செஞ்சதும் எடுத்துப் போகலாம். இல்ல மிசே அஞ்சி புத்தகமும் அப்படியே படிச்சிட்டு அடுத்த வாரம் தந்திடரேன். மீசையைத் தடவியபடி பிரஞ்சுப் பெரியவர் ஒரு வாரத்தில அஞ்சு புத்தகமா பாக்கத்தான் முடியும் படிக்க முடியாது கம்ராத்.  நூலகர் சொன்னார் இது ஒரு புத்தகப்பேய் படிச்சிடும், படிச்சி முடிச்சிடும். அப்படியா? சரி பந்தயம் வச்சிக்கலாம், அஞ்சி புத்தகம் பதினைஞ்சி நாள். பிறகு பரிட்சை வைப்போம்.  கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னா அஞ்சி பாகம் புது புத்தகம் பரிசு. துள்ளிக் குதித்தது மனசு, தூண்டியில் சிக்கியது திமிங்கிலம். வசமாக மாட்டிக்கொண்டாய் வல்லவரையா! சோதனை எங்கே? இங்கதான்,  இது நம்ம வீடுதானே. பின் பக்கம் மூடியிருப்பது பெரிய இடம் பிப்லியெதெக் இருப்பது சின்ன இடம். பின் வாசல் வழியா உள்ள வந்தா மண்டபம் போல இருக்கும்.  நூலகத்தின் பின் பகுதி அடைந்தே கிடந்ததைப் பார்த்து ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்தது சரிதான். நிலவறை இல்லாத பழையகால பங்களாவா? சோதனை நடக்கும் இடம் அதுதானா? பின்பகுதி திறக்குமா? ஐந்து ஏடுகளும் எனக்கு பரிசாகக்கிடைக்குமா? கற்பனைக் குதிரை கடுகிப் பறந்துகொண்டிருந்தது. இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து மங்கை ஒருத்தி வெளிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல அந்தப் பொன்வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். கற்பனையில்லை நிஜம்தான். பப்பா என்ன இங்கேயே உட்கார்ந்துடிங்க? அவருடை மகள்தான். பத்திரிகை, செய்தித்தாள் பகுதியில் இருந்து உள்ளே வந்திருந்தாள், இல்லை வந்திருந்தார்,  இல்லை வந்து சேர்ந்திருந்திருந்தார் வனிதாமணி.  வானதி இங்கப்பார் ஒரு அதிசய பாலகன், பொன்னியின் செல்வன் சான் லீவ்ரயும் பத்துநாள்ள படிச்சிடுவன்னு சொல்லிக்கிட்டு நிக்கிறான். சோதனையை தொடங்கலாமா? பேரவையைக் கூட்டலாமா? அப்படியே ஆகட்டும் அப்பா! அதிசய மங்கை, இல்லை அதிசய அக்கா, இல்லை அதிசய வானதி , ஒன்றும் சொல்ல முடியாமல் உள்நாக்கில் அடைபட்டது பேச்சு.  ஐந்து புத்தகத்தையும் பதமாக எடுத்து வந்து வெளியே தந்தார்கள் அப்பாவும் மகளும். இன்றிலிருந்து பதினைந்தாம் நாள் பின் வழியாக மண்டபம் திறக்கும், சுவடியின் சோதனை தொடங்கும். தோல்வியடைந்தால் என்ன செய்வது? என்ன செய்வது! தினம் வந்து எனக்குப் பொன்னியின் செல்வன் கதை முழுதும் வாசித்துக் காட்டவேண்டும் ஒரு வருஷத்திற்கு! பப்பா சொல்ல, பாவை கலகலவென நகைத்தாள். காலாண்டு விடுமுறை பதினைந்து நாள், ஒரு முறையா இருமுறையா இது நாலாவது முறை. பந்தயத்தில் ஜெயிக்காமல் பதுங்குவானா இந்தப் பச்சைத்தமிழ் ஏந்தல்.
நான்காம் பாகம்: மகுடம் வழங்கும் மாந்தர்கள்
அப்படி ஒரு கூட்டம் அங்கு இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. திங்கள் கிழமை மாலை நேரம், நூலகம் முன் பக்கம் அடைந்து கிடக்க பின்பக்க வாசல் திறந்து இருந்தது.  ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ பதாகை பின்புறம் துலங்க வசந்த மண்டபம் போல இருந்தது இடம். ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர், அதுவரை 56 பேர். பப்பா மிசேதான் அமைப்பாளர், தலைவர் நிறுவனர் பெரிய பழுவேட்டரையர் வரவேண்டும் போல. அனைவரும் காத்திருந்தனர். அவரும் வந்து சேர்ந்தார் 57 பேர். அந்த ஆண்டின் முதல் கூட்டத்திற்கு 57 பேர், இரண்டாவது கூட்டத்திற்கு 53 பேர், மூன்றாவது கூட்டத்திற்கு 46 பேர், இப்படியாக ஆண்டின் இறுதிக் கூட்டத்திற்கு 91 பேர் கலந்து கொள்ள வேண்டுமாம்.
 நீண்ட இடைவெளி நிம்மதியில்லாத காலம், ஆட்சி மாற்றம் நிகழவேண்டிய தருணம் இது. இந்த நிமித்தத்தில் இப்படியொரு நல்நிகழ்ச்சி. இந்தப் பிள்ளைக்குச் சோதனை வைத்து வென்றாலும், தோற்றாலும் நமக்கு நல்ல சகுணமே, இந்தப் பிள்ளையை நம் பேரவையில் இணைத்துக் கொள்வதாய் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். புதிதாக நம் பேரவையில் யாரும் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பொன்னியின் செல்வம் பெருக வேண்டும் புதிய அரசியல் தொடங்க வேண்டும். நிறுவனர் தலைவர் தான் கொண்டு வந்திருந்த பெட்டியில் இருந்து ஒரு புத்தகக்கட்டை எடுத்து மேசை மேல் வைத்தார். அது மஞ்சள் நிறமான பட்டுத்துணியால் பொதியப்பட்டிருந்தது. வானதி அக்கா கொண்டு வந்த வேறு புத்தகங்கள்தான் திறக்கப்பட்டன. நான் வைத்திருந்த நூலக பாகங்கள் என்னிடம் இருந்தன. கேள்விகள் தொடங்கின, வானதி அக்காதான் முதல் கேள்வி கேட்டார். இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள்? கண்ணை மூடி காட்சியை நிறுத்திப் பதில் சொல்லத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒரு கேள்வி, கேள்விகள் வாள் வீச்சுப் போல இருந்தாலும் பதில்களின் கேடயம் என்னைக் காத்தது. சில கேள்விகளுக்கு பக்கம் பார்த்து படித்தும் காட்டலாம் என்றார் கருத்த அவைத் தலைவர்.
அந்தப் பேரவையில் பல வானதிகள், பல குந்தவைகள், பல அருள்மொழிகள், சில வந்தியத்தேவன்,  இரண்டொரு ஆதித்தியன், சுந்தரன் சிலர், ஒரே ஒரு பூங்குழலி. சோதனையில் நான் வென்றேன். இரண்டு கேள்விகளுக்கு  மட்டும்தான் நான் பதில் சொல்ல முடியவில்லை. அது ஒரு பிரச்சினையும் இல்லை என்று தலைவர் சொல்லிவிட்டார். வந்தியத்தேவனின் முதல் காதலி யார்? வந்தியத்தேவன் உள்ளத்தை உண்மையாகக் கவர்ந்த வனிதாமணி யார்?
பட்டுத் துணியில் பொதிந்த புத்தகம்தான் பரிசு என்று நினைத்த என் மனோராச்சியம் தூள்தூளானது. வேறு ஒரு கட்டு புத்தகத்தைப் பப்பா மிசே பரிசாகத் தந்தார். விருந்து தொடங்கியது. எல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது. ஒவ்வொருவராக வெளியேறிய பின் பப்பா மிசேவும் வானதி அக்காவும் பெரிய பழுவேட்டரையரும்தான் இருந்தனர். வெளியே நடந்து வந்தபோது வானதி அக்காவிடம் கேட்டேன் வந்தியத்தேவன் உள்ளத்தை உண்மையாகக் கவர்ந்த வனிதாமணி யார்? கரிகாலன் கொலை போல அதுவும் ஒரு மர்மம்தான் என்றார். அப்புறம் ஏன் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள்?  பெரியவனானால் உனக்கே புரியும். பப்பா மிசேவும் தலைவரும் என்னை அன்போடு அணைத்துக் கொண்டார்கள். நான் வாரம் ஒரு நாள் தலைவர் வீட்டுக்குச் சென்று பொன்னியின் செல்வன் வாசித்துக் காட்டவேண்டுமாம். அதற்கு ஊதியமும் உண்டு என்ற சொன்னபோது மனதில் ஒரு கலக்கம். அந்த தென்னைஞ்சோலை பங்களாவைப் பார்த்த போது கலக்கம் நீங்கி மயக்கம் வந்தது. அது ஒரு அதிசய உலகம். அங்குதான் எத்தனைச் சம்பவங்கள். எத்தனை ஆலோசனைக் கூட்டங்கள். ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்பதுதான் அவர்களின் உண்மையான அமைப்பு என்று பிறகு தெரிந்தது.
உலக வரலாற்றில் எத்தனையோ அதிசயங்கள், எத்தனையோ மர்மங்கள், அனைத்தையும் விளக்க யாரால் முடியும். ஆடித்திருநாள் அடியவர் பேரவையிலிருந்து அதன் அரசியல் கூட்டத்தில் உறுப்பினராக்கப்பட்டேன்.  அது ஒரு பெரிய வலைப்பின்னல்,  ஒருவரை மற்றவருக்குத் தெரியாது. ஆனால் தமிழகமெங்கும் அவர்கள் இருப்பதாகச் சொன்னார்கள், ஏன் உலகமெங்கும் பரவியிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் மனது வைத்தால்தான் அரசியல் மாற்றமும் ஆட்சியில் மாற்றமும் வரும் என்றும் சொன்னார்கள். நம்பமுடியவில்லை அல்லவா? வாசகர்களாகிய உங்களைப் போலத்தான் நானும் நம்ப முடியாமல் திகைத்தேன். ஆனால் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே நடந்தது. கலைஞர் ஆட்சி நீங்கி புரட்சித் தலைவர் ஆட்சி வரும் அதற்குப் பிறகு அவர்தான் வாழ்நாள் மன்னாதி மன்னன் என்று சிலர் சொன்னது நடக்கும் என அப்போது யாராவது நம்பியிருக்க முடியுமா? நடந்ததே அத்தனையும் நடந்ததே!
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதில் உள்ள மர்மம் இன்று வரை நீடிக்கிறது. ‘சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்’ என்ற ஒரு பாண்டிய மன்னனுக்கு விருதுப் பெயர் உள்ளது அதுவும் மர்மம்தான்.  அருள்மொழி வர்மன் உத்தம சோழனுக்கு மகுடத்தை அளித்துவிட்டு  ‘எது எப்படியானாலும் பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் நானும், என் நண்பரும் ஈழ நாட்டுக்குப் புறப்படுவது நிச்சயம். அங்கே எங்கள் காரியம் முடிந்ததும் கடல்களுக்கு அப்பாலுள்ள இன்னும் பல நாடுகளுக்கும் செல்ல உத்தேசித்திருக்கிறோம்.’ என்று சொல்லியதில் உள்ள செய்தியும் மர்மம்தான். ஆனால் இதெல்லாவற்றையும் விட ஒரு பெரிய மர்மம் யாரும் அறியாத காலகால ரகசியம் ஒன்று உள்ளது. கரிகாலன் கால் வழி ஒன்று புதுச்சேரி மண்ணில் இருந்து வருகிறது. காஞ்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் ஆதித்த கரிகாலர் ஒவ்வொரு முறையும் தங்கிச் செல்லும் வாகூர் ஏரிப்பகுதியில் இன்றும் உள்ளது பண்டசோழநல்லூர் என்னும் சிற்றூர். அது மற்றவர்களுக்குத்தான் பண்டசோழநல்லூர் உண்மையில் மாண்டசோழநல்லூர் என்பதே அதன் உத்தமப் பெயர். ஆதித்த கரிகாலன் அன்புக்கு அடிமையான ஒரு பெண் நல்லாள் வழி பிறந்த மகனும் அவன் வம்சமும்தான் மாண்ட சோழன் வம்சாவழி என்பது. உலகம் ஒப்பாத அந்த வம்சத்தின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலை நாட்ட ஒரு பெரும் தொண்டர் படை பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்தும் முடியாமல் போனது. ஆட்சியைக் கைப்பற்ற யார் முயன்றாலும் அவர்கள் கொலையுண்டு போவது என்ற சாபம் தொடர்ந்தது. காலத்தின் போக்கில் அந்தத் தொண்டர் படையும், சோழ வம்சமும் தம் திட்டத்தை மாற்றிக்கொண்டனர். அதாவது மாண்ட சோழன் மரபில் வந்த யாரும் இனி நேரடியாக ஆட்சி பீடம் ஏறக்கூடாது ஆனால் நாம் அடையாளம் காட்டும் ஒருவர்தான் ஆட்சியில் அமரவேண்டும். அவர்களே தமிழகத்தை ஆளவேண்டும். அதனை யாரும் தடுக்க முடியாது. அப்படித்தான் அவர்கள் திட்டமிட்டார்களாம்.
எனக்குத் தலைசுற்றத் தொடங்கியது. இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள், இவர்கள் கண்டுபிடித்து உருவாக்கிய தலைவர்களா? மாகாளி பராசக்தி! என்ன ஒரு விபரீதம்! எப்படி இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பிப்பது. அதுவும் காலத்தின் ஓட்டத்தில் நடந்தது. அக்கா தந்த அந்த சோவியத் புத்தகம் புரியத்தொடங்கிய நாட்கள் அவை. அதனை பலமுறை படித்திருந்தேன். ஒருநாள் என் பையில் அதனைக் கண்ட பேரவையின் தொண்டர் ஒருவர், நிறுவனரிடம் சொல்லிவிட வசமாக மாட்டிக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை சோதனை வைத்தார்கள் பாதிக்கு மேல் பதில் சொல்லத் தெரியவில்லை.  ஒரு ஆண்டு அவகாசம் அளித்து மீண்டும் ஒரு ஆடிப்பெருக்கு அன்று பேரவை நடத்தும் சோதனையில் தேர்வடைந்து மீண்டும் செயல்வீரனாக வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார்கள். அளித்த உறுதி மொழி இது பற்றி யாரிடமும் நான் சொல்லக்கூடாது என்பதுதான்.
யாரும் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது தப்பித்து எங்கும் போய்விட முடியாது, எல்லா இடத்திலும் நாங்கள் இருப்போம். எந்தக் கட்சியிலும், எந்தக் கல்லூரியிலும், திரைப்படத்துறையில், பதிப்பகத்துறையில், ஊடகத்துறையில், மத்திய மாநில அலுவலகங்களில் நாங்கள் இருப்போம். நாங்கள் என்றால் நாங்களே அல்ல, அது அனைவருமாக உள்ள ஒரு மந்திர நிலை. அனைவருக்குள்ளும் கூடுபாய்ந்த அதிசய நிலை.
வானதி அக்கா திருமணம் ஆகி பிரான்சுக்குப் போன போது எப்படித் தப்பிக்கப்போகிறாய் என் இனிய நண்பனே என்றார். எப்படித் தப்பிப்பது? ஒரே வழிதான் உண்டு. ஓயாமல் படிப்பது, வேறு வேறு நூல்கள். அடுத்த ஆண்டு என்னைத் தேடிவந்த புதிய ஒரு பேரவை செயல்வீரர் நாளை ஆடிப்பெருக்கு சோதனைக்கு வரவேண்டும் என்று சொல்லிச் சென்றார். அந்த  ஆண்டும் சோதனையில் தோற்றேன். அடுத்த ஆண்டும், ஆனால் சோதனை தொடரும் மீண்டும் சேரும் வரை, சோதனை தொடரும்.
1982-இல் ஒருவழியாக ஆடிப்பெருக்கு அடியவர் கூட்டம் தன் செயல்திட்டத்தையும் அமைப்பு முறையையும் மாற்றியது என அறிவித்தார்கள்.  இனி யாரும் கூடுவதில்லை, புதிய சேர்க்கையோ விலகலோ இல்லை, ஆனால் ஒரு பணியைச் செய்யும்படி கட்டளை வந்தால், யார் வழியாக வந்தாலும் அதனை நிறைவேற்றிவிட வேண்டும். பிறகு தம்போக்கில் இருக்கலாம். இது எதைவிடவும் கொடுமை. யார் பேரவைச் செயல்வீரர்? யார் தூது சுமப்பவர்? யார் வெறும் தகவல் சொல்பவர்? எல்லாம் குழம்பிப்போக இன்று வரை தப்பித்தப்பி அலைந்து கொண்டிருக்கிறேன்.
இப்படியொரு ஏற்பாடு நடக்கக் காரணமான நிகழ்ச்சி என்ன? அது எனக்குத் தெரியாது. ஆனால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவேண்டும் என்ற கனவு பன்னெடுங்காலமாக இருந்துவருவது யாவரும் அறிந்ததே. தம் வாழ்வின் பெரும் பயனே பொன்னியின் செல்வனைத் திரைக்காவியமாக்குது என்று கலைஞர்களும் அந்தக் காவியத்தை திரையில் கண்டுகளிப்பதுதான் தன் பிறவிப் பெரும்பயன் என்று ரசிகர்களும் ஏங்கிக் கிடந்த ஐதிகம் மறுக்க முடியாத உண்மையல்லவா. பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் காவிமாக்கும் திட்டம் தீட்டப்படுவது நெடுநாள் வழக்கம். யார் அருள்மொழி வர்மன், யார் கரிகாலன், யார் வானதி, யார் குந்தவை எனத் தொடங்கும் விவாதம் நாள் கணக்கில் நீண்டு ஒவ்வொரு முறையும் முடிவற்ற மோதலில் முடிந்து போகும். அத்தனைப் பாத்திரங்களையும் ஏற்க நடிகர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் சிலர் கணக்குச் சொல்வார்கள். அதைவிட யாரை இயக்குநாராக ஆக்குவது, யார் வசனம் எழுதுவது? இப்படியாக அடிதடியில் முடிந்த கூட்டங்கள் அனேகம். இளைய உறுப்பினர்கள் இது பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிய காலங்கள் உண்டு. அதைவிட அதற்கான நிதி ஒன்றைத் திரட்ட தீர்மானம் நிறைவேற்றி பொக்கிஷம் ஒன்றும் உருவாகத்தொடங்கியதாம். தமிழகத்துக் கதாநாயகர்களிடம் ரகசியமாகச் சென்று பேச ஒரு குழுவும் அமைக்கபட்டதாம். கதாநாயகிகள் பலர் ஒப்புக்கொண்டாலும் காலமாற்றத்தில் அவர்கள் காணாமல் போனார்களாம். காதாநாயகர்கள் எத்தனைக் காலமானாலும் வந்தியத்தேவனாக நடிக்காமல் சாகமாட்டேன் என்ற உறுதியாக இருந்தார்களாம். ஒரே ஒரு நாயகி மட்டும் காவியப் பேரவையினரின் கருத்தில் மாறாமல் இருந்ததாகவும் பின்னால் அவரே கற்பனை செய்யாத உன்னத பாத்திரத்தை  பேரவையினர் வழங்க இருப்பதாகவும் கமுக்கமான பேச்சுகள் இருந்தன. அதைவிட தமிழ் நடிகர்கள் யாரும் இந்தக் காவியத்திற்கு பொருந்தமாட்டார்கள் என்று ஒரு கூட்டம் முழுக்க  முழுக்க வடநாட்டு நாயகர்கள் நாயகிகளை வைத்து  படத்தை எடுக்க இருந்ததாகவும் அதில் செந்தமிழ் பேச்சுக்கு மட்டும் டப்பிங் குரல் தரவேண்டும் என தமிழக நாயகர்கள் சிலரிடம் கேட்டதாகவும் வதந்தி பரவி ஆள் கடத்தல் வரை போய்விட்டதாக உள்வட்டாரப் பேச்சுக்களும் இருந்தன. எது எப்படியானாலும் பொற்குவியல், பொக்கிஷம் தொடர்பாகத்தான் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டு வெளியே சொல்லமுடியாத விபரீதங்கள் ஏற்பட்டதாம். ஆள் ஆளுக்கு நிதி திரட்டுவது, காவியப்படைப்பு பற்றி கலந்துரையாடல்  ஏற்பாடு செய்வதாக பொற்காசுகளை கையாடல் செய்வது என பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யா மார்கள் சிலர் அமைப்பை மாற்றத் திட்டமிட்டதாகவும் அரசல் புரசலாகப் பேச்சு இருந்தது.
சரித்திரத்தின் தீராத பக்கங்களில் தன் இறகால் விதி எழுதும் காவியத்தில் யார் யாராக மாறுவார்கள் என யாரால் சொல்ல முடியும். எவரின் நடமாடும் நிழல்கள் நாம் எனத்தெரியாமல் குழம்பும் மனம் படைத்த சிலரில் நானும் ஒருவனாகி மறைந்து திரிய வேண்டிய நிலைக்கு ஆட்பட்டேன். அதற்குப் பிறகு அது பழகிப்போனது. யாராவது ஒருவர் எதாவது ஒரு கூட்டத்தில் என்ன நண்பரே சென்ற முறை அளித்த கட்டளையை இன்னும்  நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள் என்று  சொல்லிவிட்டு மறைந்து போவார். எழுதத் தொடங்கிய பின் இது இன்னொரு வடிவில் தாக்கியது.
 ஒவ்வாரு எழுத்து வெளிவரும் போதும் நல்லதில்லை நண்பரே காலத்தின் கட்டளையை நிறைவேற்றுங்கள் வழிமாறிச் செல்வது நல்லதில்லை என்று அங்கே நிற்கும் ஒருவர் சொல்லச் சொன்னதாக யாராவது ஒருவர் சொல்லிவிட்டுக் கைகாட்டுவார் பார்க்கும் போது அங்கிருந்து ஒருவர் நழுவிச் செல்வார். பெயரை மாற்றி, உருவத்தை மாற்றி, எழுத்தின் வடிவத்தை ஓயாமல் மாற்றி இன்றுவரை தப்பித்தும் மறைந்தும் வாழ்ந்து வரும் எனக்கு பல மின்னஞ்சல்களில் கட்டளைகள் வரத்தொடங்கிய காலங்களும் உண்டு. ஆனால் இது போன்ற அச்சுறுத்தல், அவகாசம் எல்லாம் கொஞ்சம் கூடுதல் அல்லவா?  இன்னும் ஒருநாள் அவகாசம். யார்தான் அந்த இன்னொரு ஆள்? அவர் தப்பியதற்கு நான் என்ன செய்ய முடியும்? என் குரலைப் பின்தொடரும் இந்த நிழல்கள் யார்?
ஐந்தாம் பாகம்: மூல ஏடு
கண்ணுறக்கம் இன்றித் கலங்கிக் கிடந்த எனக்கு மறுநாள் காலை முகநூல் தகவலறையில் ஒரு செய்தி வந்திருந்தது. வணக்கம்! நான் பொன்னி,  பிரான்சில் இருக்கிறேன். என் தாத்தா உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார். உங்கள் தொலைபேசி எண் தரமுடியுமா? உங்கள் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். உங்கள் முகநூல் பக்கங்களையும் படித்துவருகிறேன். உங்களைத் தெரியும் என்று தாத்தா சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தாத்தா பேச விரும்புகிறார், எண் தருவீர்களா? பிரான்சில் இருந்து பொன்னி? எல்லா மர்மங்களுக்கும் ஒரு முடிவு உண்டுதானே. வந்தது வரட்டும் என எண்ணைப் பதிந்தேன். நண்பகலில் ஒரு வெளிநாட்டு அழைப்பு, உண்மைதான் அந்தச் செய்தி உண்மைதான்.
வணக்கம் என்றேன். வணக்கம் தம்பி! உங்கள எனக்குத் தெரியும், பேத்திதான் சொன்னா. நீங்க இப்ப ஒரு எழுத்தாளர்னு, என்ன நாபகம் இருக்கா? பெயர் சொல்லுங்க அய்யா நினைவுபடுத்திப் பாக்கிறேன்.  பெயர் சொன்னா தெரியாது நிறுவனர் தலைவர் அப்படின்னாதான் உங்களுக்குத் தெரியும். அய்யா நீங்களா? நலமா இருக்கிறீங்களா? எப்ப பிரான்சுக்குப் போனீங்க? புதுச்சேரிய விட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சொல்லுவீங்களே. நல்ல நாபக சக்தி தம்பி உங்களுக்கு. ஆமா அந்த வயசுலயே அத்தனைக் கேள்விகளுக்குப் பதில் சொன்னீங்களே. உங்க நாபக சக்திதான் எனக்கும் பப்பா மிசேவுக்கும் பிடிச்சது. ஞாபக சக்தி அதுதானே எல்லா துயரத்திற்கும் காரணம், மனதில் ஓடியது ஒருவரி. பப்பா மிசே எப்படி இருக்கிறார், அவரும் பிரான்சில்தானா அய்யா? அவன் எங்கள விட்டுப் போயி பத்துவருஷமாச்சி, நான் இங்க வந்து அஞ்சு மாசம்தான் ஆவுது. அதனாலதான் என்னைத் தேடராங்க. உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிடனும். இன்னும் எத்தன காலம் இருப்பேன்னு தெரியாது. எல்லாத்தையும் சொல்லிடனும்.
நேற்று வந்த மிரட்டல் செய்தி, இன்று வந்து பேசும் இந்தப் பெரியவர். என்னத் தேடிக்கிட்டு இருக்கு ஒரு கூட்டம் அது உங்களயும் தேடிவரும். கவனமா இருக்கணும். நள்ளிரவில் வந்த செய்தியைச் சொன்னேன். அது தந்த ஒருநாள் அவகாசத்தையும் சொன்னேன். இப்போ நீங்க அதன் தலைவர் இல்லையா? தலைவர் நிறுவனர் எல்லாம் நான்தான் ஆனால் எல்லாம் வெறும் நாடகம். அவர்கள் என்னைத் தேடவில்லை மூல ஏட்டைத்தான் தேடுகின்றனர். அதன் வழியாக புது வம்சம் ஒன்றைக் கண்டுபிடித்து ஆட்சியில் அமர்த்தச் சிலர் திட்டமிடுகிறார்களாம். அப்படியென்றால் தப்பித்த இருவரில் நான் ஒருவன், மற்ற ஒருவர் நீங்களா? ஆமாம் தம்பி! என்ன இது மர்மமுடிச்சுகள் இறுகிக்கொண்டே செல்கிறது. தலைவரே தப்பிப்பது என்றால்?  நான் இதில் எங்கு வருகிறேன்? அவர் குரல் சீராக இல்லை, இணைப்பும் பலமுறை துண்டிக்கப்பட்டு மீண்டு வந்தது.  பேசி முடிந்த போது அவருக்கு நன்றி சொன்னேன். இன்று மீண்டும் வரும் அச்சுறுத்தலை கடந்துவிடலாம் என்று தெம்பும் மனதில் வந்தது.
அவர்தான் அந்த அமைப்பைத் தொடங்கியவர், 1956-இல் அந்தப் பேரவையைத் தொடங்கினார்.  ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ என்று தொடங்கப்பட்ட அந்த அமைப்பு பின்னாளில் ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்ற மாற்றுப் பெயருடன் அரசியல் செயல்களில் ஈடுபட்டது. பொன்னியின் செல்வம் என்றும் அதை அவர் குறிப்பிடுவது வழக்கம். அந்த அமைப்பின் நோக்கம் கரிகாலன் வம்சத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது என்று காலப்போக்கில் முடிவுசெய்யப்பட்டது. அதற்கான சரித்திரச் சான்றுகளை அவர்தான் தன்னிடமிருந்த மூல ஏட்டிலிருந்து படித்து அவர்களுக்குச் சொன்னார். அந்த மூல ஏட்டை எல்லோரும் படிக்க முடியாது என்பதாலும், அதனை அப்படி எல்லோருக்கும் காட்டிவிடமுடியாது என்பதாலும் அதன் கதையை அப்படியே சொன்ன பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிதான் அவர்களின் வரலாற்று ஆவணமாக, வாழ்க்கைப் பத்திரமாகவும் பரவத் தொடங்கியது. அடியவர் பேரவை ஒரு மாறுவேடமாகவும் அரசியல் கூட்டமே முழுமையான செயல் வீரர் அமைப்பாகவும் மாறத்தொடங்கிபோது நிறுவனத் தலைவருக்கும் அதன் புரவலருக்கும் கூட அச்சம் தோன்றியது.
மாண்ட சோழன் வம்சத்தின் ஆட்சி நடக்க உண்மை மனிதர்களை விட கற்பனைப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவது என்றும் தமக்கு வேண்டியதை தவறாமல் சாதித்துக்கொள்வது என்றும் ஒரு திட்டத்தை முன் வைத்தனர் தனவந்தர்களான சில செயல் வீரர்கள். அந்தப் பாத்திரங்கள் மக்களுக்குப் பிடித்த, அதிகம் பழகிய கதை மாந்தர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவராக ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் நாம் பண்டைய சோழ ஆட்சியை மீண்டும் நடத்தலாம் என்றும் சிலர் கூறினர். இதெல்லாம் நடக்குமா என்று நிறுவனர் கேட்டபோது,  ஆட்சியில் இருப்பது யாராக இருந்தாலும் ஆளப்போவது சோழரும், பாண்டியரும்தான் இதில் நாம் சோழ வம்சத்தை உள் நுழைக்கவேண்டும் என்று சொன்னதுடன் செயலிலும் இறங்கினர். அவர்கள் கண்டெடுத்தவர்கள் அனைவரும் நாடகம், திரைப்படம் இரண்டிலிருந்தும் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். நிறுவனரால் நம்பவே முடியவில்லை, 1967-இல் நாடக ஆசிரியர், நடிப்பிலும் பேச்சிலும் வல்லவர் அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சரானார். நிறுவனரும், மற்ற ரகசிய உறுப்பினர்களும் ஆச்சரியமடைந்த இன்னொரு நிகழ்ச்சி 1969-இல் நடந்தது. பேரவையில் ஒரு ஆண்டுக்கு முன்பே சொல்லி வைத்தது போல, யாரும் எதிர்பாராத வகையில் முத்தமிழ் வித்தகர், திரைக்கதைச் செம்மல், நாற்றமிழறிஞர், கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சரானார். அப்போதுதான் பேரவையில் ஒரு புதுச் சூதாட்டம் தொடங்கியது. அடுத்து யார் முதலமைச்சர், எந்த ஆண்டு  அவர் ஆட்சிக்கு வருவார் என்பதைப் பற்றி ஆலோசனை நடப்பதுடன் பெரும் தனவந்தர்கள் பலகோடி ரூபாய் பந்தயம் கட்டுவதும் நடக்கத்தொடங்கியது. அது நிறுவனருக்கும் புரவலர்கள் சிலருக்கும் பிறகுதான் தெரியவந்தது. ரகசியப் பேச்சில் புரட்சி நடிகரை புரட்சித்தலைவர் ஆக்கியது நாங்கள்தான் எனச் சில பேரவை செயல்வீரர்கள் சொன்னார்களாம். 1977-இல் அவர் ஆட்சியில் அமர்ந்தார், பத்து ஆண்டுகள் பார் போற்றும் ஆட்சியைப் அவர் புரிந்தாரே அதற்கும் நாங்கள்தான் காரணம் என்றனர் பேரவைக் கூட்டத்தின் சில பெரிய தலைகள். அவர்களில் சிலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சில ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த ஆசைப்பட்டார்களாம். ஆனால் 1973-இல் ராஜராஜ சோழன் என்ற படத்தில் நடித்து நிஜத்துடன் தன் கற்பனை உருவத்தைக் குழப்பிவிட்டதால் ஆட்சியில் மட்டுமல்ல சட்டசபையில்கூட அவருக்கு இடமளிக்கக்கூடாது என்று சில உள்வட்டத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்களாம். 1989-இல் மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் ஆச்சரியத்தைப் புரிந்தார்களாம் பேரவைச் செயல் வீரர்கள். மீண்டும் கலைஞரின் ஆட்சி, ஆனால் சொன்னதுபோல இரண்டு ஆண்டுகள் மட்டும். 1991-இல்  புரட்சித் தலைவி அம்மா அவர்களை திரைநாயகி அல்ல திரிலோக ராஜமாதாவாக மாற்றிக் காட்டுவோம் என்று பேசியதுடன் செய்தும் காட்டினார்களாம். மீண்டும் 1996-இல் ஒரு மாற்றம், 2001இல் மீண்டும் தென்னகக் கலைத்தாய், 2006-இல் கலைஞர்,  2011-இல் காலத்தை வென்ற கலைத்தாய்,  2016-இல் எல்லாம் வல்ல அம்மா.  இனி மேல்தான் கவனமாக இருக்கவேண்டும் அதற்குத் தொடர்ந்து என்ன செய்யலாம் என்று சில புதிய புரவலர்கள் திட்டமிட்டதை ரகசியமாக ஒட்டுக் கேட்ட சில நாட்களில் அவர் பிரான்சுக்குப் போய்விட்டார்.
என்ன இதெல்லாம் பேரவையின் ரகசிய திட்டமா? அப்படித்தான் சொல்கிறார்கள் அவர்கள். அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே  நடந்திருக்கிறது என்பதால் என்னாலும் எதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.
87 வயசில் நிம்மதியா வாழ வரல, சாகத்தான் பிரான்சுக்கு வந்து பேத்திவீட்டில் தங்கிவிட்டேன். சாவதற்கு முன் உலகம் முழுக்க மனிதர்கள் தங்கள் கைகளால் உருவாக்கிய ஏரிகளையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று முடிவோடு வந்திருக்கிறேன். நதி நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்ட போர்களைப் பற்றி ஆய்வு செய்கிற என் பேத்திதான் அதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கு. உங்களிடம்தான் சொல்ல வேண்டும்.  அம்மா எனக்கு வைத்த பெயர் ஏரிவீரன்.  அப்போது அப்பா பாகூர் ஏரியில் வாய்க்கால்  காவல் பார்த்து வந்தார். சேரியில் கடைசி வீடு எங்கள் வீடு.  ஒரு கோடை காலத்தில் தண்ணீர் கேட்டு வந்த பிரஞ்சுக்காரர் ஒருவர் என்னிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டார். புரியாமல் அம்மாவைப் பார்த்த என்னை அவர்தான் பிறகு படிக்க வைத்தார். அந்தப் பகுதியில் எங்கள் கொம்யூனித்தேவிலிருந்து பிரஞ்சு படித்து பெரிய வேலைக்குப் போனவன் நான்தான்.  பிறகு  பிரஞ்சு குடும்பத்தில் சம்பந்தம், தோப்பு துரவு என வசதியும் வந்தது. அப்படி வந்ததுதான் அந்த தென்னந்தோப்பு பங்களாவும், உசுட்டேரி நிலமும்.
அது என்ன மூலஏடு? எப்படி அது உங்கள் கையில் வந்தது? அது ஒரு பெரிய கதை , அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது. என் மனைவி வாரப் பத்திரிகை ஒன்றுவிடாமல் படிப்பார். கல்கி என்ற பத்திரிகையில் வந்த ஒரு தொடர்கதையை எனக்குப் படித்துக் காட்டினாள். முதல் அத்தியாமே என் மனதைக் கவர்ந்து விட்டது. அதற்குப் பிறகு அது மூணு நாலு வருஷம் வந்தது. ஒவ்வொரு வாரமும் அந்தப் பக்கத்தைத் தனியே பிரித்து வைத்து கடைசியாக அழகான பிரஞ்சு பைண்டிங் செய்து வைத்துக் கொண்டாள். அவளிடம் அந்த முதல் அத்தியாத்தை மட்டும் அடிக்கடி படிக்கச் சொல்வேன். ஏன் நீங்களே படிக்கக்கூடாதா? எனக்குத் தமிழ் படிக்கத்தெரியாது, பிரஞ்சு மட்டும்தான்.  அதுவும் அப்படியா? சரி மேலே சொல்லுங்கள்.
நம் தமிழ் நாட்டில் ஏரிகள்தான் எல்லாம், ஏரிகள் மட்டும் நிரம்பியிருந்தால் எல்லா துயரமும் நீங்கிவிடும் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில்தான் அந்த கதையும் வெளிவந்தது.  ஊர் தோறும் ஏரி ஏரியில்லா ஊரில் ஊருணி, கோயில்  என்பதே குளத்திற்காகத்தானே. ஆறுகள் இல்லாமல் நம் மண் என்ன ஆவது. தண்ணீர் இல்லாத தமிழ்நாடு என்ன ஆகும்? 1955- இல் முதல் முறையாக தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தேன்.  திருத்தணி பக்கம் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டபோது அறை கிண்ணம் தண்ணீர் கொடுத்த ஒரு வயதான அம்மா மீண்டும் நீட்டியபோது, உள்ளே இருந்த குடத்தை எடுத்து வந்து காட்டி இருக்கிறது இதுதான் ஒரு வாரம் வச்சிக்கணும் வேணுமின்னா குடிங்க என்றார். வடக்கு முழுக்க காய்ந்த ஊர்கள், தெற்கில் அதைவிட வெடித்த நிலங்கள்.
திரும்பி ஊர்வந்த பின் அது தோன்றியது. 1956-இல் கரிகாலன் என்ற பெயரைக் காரணம் வைத்துத் தமிழ்நாட்டின் பழைய கதையைச் சிலரிடம் சொல்லத் தொடங்கினேன். கரிகாலன் என்றால் யானைப்படை கொண்டவன் என்றுதான் அர்த்தமாம். யானையை ஊர்தியாகக்கொண்டவன் என்றால் வளம் அதிமாக இருக்க வேண்டும் என என் மனைவி ஒரு புத்தகத்தைப் படித்துச் சொன்னாள். அந்தப் பெயர்கொண்ட மன்னன்தான் முதன் முதலாக இலங்கையில் இருந்து சித்தாட்களைக் கொண்டு வந்து கல்லணை கட்டி பொன்னியின் நீரை வயல்களில் செலுத்தி செல்வமாய் மாற்றினான். பொன்னியின் செல்வம் என்பது உழவர்கள் கொடுத்த விளைச்சல். அதனை மீட்கத்தான் பொன்னியின் செல்வம் என்ற சிறு அமைப்பை முதலில் தொடங்கினேன். கல்லணையில் தொடங்கி கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்வரை ஆறும் நீருமாய் இருந்த அரசகுல வரலாற்றை முன் வைத்து சில கதைகளைக் கட்டி என் மனைவியிடம் இருந்த புத்தகத்தை மூல ஏடாக மாற்றினேன்.
அதற்கு ஏற்ப ஊர் முழுக்க பொன்னியின் செல்வன் வாசக அன்பர்கள் பெருகிக் கொண்டிருந்தனர். அதற்குள்ளாவே வாழ்ந்த பல குடும்பங்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய அன்பர்கள். அதை வாசித்தவர்கள் வேறு எதையும் படிக்க விரும்புது இல்லையாம்.  உங்களைப் போலச் சிலர் தவிர. எனக்கும் பப்பா மிசேவுக்கும் அது வசதியாகப் போனது. பேரவை உருவாகி வளர்ந்த வரை என் மனைவி அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாள். ஆனால் அரசியல் கூட்டமாக மாறியபோது தன் புத்தகத்தை இனி கூட்டங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றாள். அதில் ஏற்பட்ட மனஸ்தாபம், 1968-இல் புத்தகத்தை விட்டுவிட்டு என் மகளையும் மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரான்சுக்கு வந்துவிட்டாள்.
மூல ஏடு இருக்கிறது என்று சொன்னதை இனி நான் மாற்ற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பேரவையும் அரசியல் கூட்டத்தினரும் தம் போக்கில் பெருகி விட்டனர். தம்பி நீங்கள் வந்த போது நானும், பப்பா மிசேவும் வெறும் பார்வையாளர்கள்தான். எப்படியானாலும் ஏரிகளும் குளங்களும் மீள வேண்டும், ஊரில் கிணறுகளில் ஊற்று பெருக வேண்டும். ஆட்சிக்கு வருபவர்களைக் கொண்டு எதாவது செய்யலாம் என்றுதான் நாங்கள் சிலபேர் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது நிலமை என்ன தம்பி. பப்பா மிசே தெரியுமில்ல. என் தங்கை வீட்டுக்காரர். என்னச் சாதியச் சொல்லி திட்டின ஒருவன கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தவர்.  அவர் அம்மா வச்ச பேரு கிணத்தடியான். அவர் கடைசி காலத்தில சொல்லிச் சொல்லி அழுதாரு, 86 ஏரி, ஏராளமான குளம், புதுச்சேரியில பத்தடியில தேனூத்து, எல்லாம் போச்சி. மீண்டும் கொண்டுவர என்ன செய்ய முடியும்? நானும் அவரும் என்ன சாதின்னு பேரவையில எங்களத் தவிர யாருக்கும் தெரியாது. பிரஞ்சும், பணமும் தந்த சுதந்திரம், ஆனா இப்போ என்ன ஆச்சு? சோழ வம்சம், பாண்டிய வம்சம்னு எதைச் சொல்லறாங்க? வம்ச வரலாறுதான் எல்லா இடத்திலயும். திரையில் படிந்த நிலம்னு உங்க புத்தகம் ஒன்ன படிச்ச என் பேத்திதான் சொல்லுச்சி சாதி பத்தி, மண்ண பத்தி, வறண்டு போன தமிழகம் பத்தியெல்லாம் எழுதியிருக்கீங்கன்னு! உங்க படத்தகூட காட்டிச்சி ஒரு புத்தக வெளியீட்டில நீங்க பேசியத படமா காட்டிச்சி. எனக்கு கொஞ்சமா ஞாபகம் வந்தது. பொந்திச்சேரிதான்னு  சொன்னதால எனக்கும் அது தோணிச்சி.
எழுதுங்க தம்பி, அது பத்தியே பேசுங்க, புதுசா வர்ற  பிள்ளைங்ககிட்ட சொல்லுங்க!சரிங்க அய்யா, முடிஞ்ச வரைக்கும் செய்யிறேன். இணைப்பு துண்டிக்கப்படாமல் இரண்டு மூன்று நிமிடம் இருந்தது, என்ன பேசுவது. மறுபடி பேசலாம் அய்யா என்றேன். இரண்டு நிமிஷம், அந்த ஒரு பத்திய ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு முறை சொல்லிக் காட்டுறேன் சரியா இருக்கான்னு பாருங்க. அவருடைய கருத்த நெடிய உருவம், பெரிய மீசை, பிரஞ்சு மோதில் அமைந்த பேண்டும் சட்டையும், 1979-இல் கடைசியாகப் பார்த்தது,  எல்லாம் ஞாபகம் வந்தது, ஆனால் அந்தப் பத்தி என் நினைவில் இல்லை. அந்தக் குரல் இதையா அப்போதெல்லம் சொன்னது?
கதைக்கு வெளியே
ஒருநாள் அவகாசம் முடிந்து போனது. மீண்டும் தகவல்அறையில் வரிகள் வந்தன? தப்பிச் சென்ற அந்த இன்னொரு ஆள் எங்கே? அதுவா, தெரியும் ஆனால் சொல்ல முடியாது? விளைவுகள் பயங்கரமாக இருக்கும்? என்ன விளைவு, என்ன செய்வீர்கள்? உங்கள் கடந்த காலத்தை அம்பலமாக்குவோம், ஆடித்திருநாள் அடியவர்தான் நீங்கள் என்பதைப் பத்திரிகைகளில் பலரை வைத்து எழுத வைப்போம், உங்கள் பழைய கவிதைகளை இணையத்தளங்களில் உங்கள் படத்துடன் வெளியிடுவோம். அத்துடன் நீங்கள் பையில் கொஞ்ச காலம் வைத்துக் கொண்டு திரிந்த சோவியத் நாட்டில் அச்சிட்ட புத்தகங்களை தந்தவர்கள் யாரென்றும் ஊரெங்கும் சொல்லுவோம். அப்படியா சொல்லுங்கள், நானே அதையெல்லாம் சொல்லத்தானே வேண்டும். நீங்களும் சொன்னால் சான்றுகளுடன் அமைந்துவிடும். அப்புறம் இன்னொன்று ஆடித்திருநாள் அடியவர் பேரவையும், ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டமும் ஒரு மூல ஏட்டை வைத்துத்தானே இயங்கிக்கொண்டு வந்தீர்கள், அது இப்போது உங்கள் யாரிடமும் இல்லை?  அது எப்படி உனக்குத் தெரியும்? அந்த ஏடு இல்லாமல் நீங்கள் மீண்டும் இணையவே முடியாது, அடுத்த மந்திராலோசனை மர்மக் கூட்டமும் நடத்த முடியாது. அதற்காகத்தான் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.  இனி உங்களுக்குள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாது!  மூல ஏடு உள்ள இடம் எனக்குத் தெரியும்,  அது தொலைந்து போனது என்று நான் சமூக ஊடகத்தில் தகவல் பரப்பினால் உங்கள் பேரவையும், கூட்டமும் வெளியே தெரியாமல் உள் மோதலில் கரைந்து காணாமல் போய்விடும். சற்று இடைவெளிக்குப் பிறகு, அந்த மூலஏடு பற்றி உள் அமைப்பில் இருப்பவர்கள் தவிர வேறு யார் சொன்னாலும் நம்பக்கூடாது என்பது அமைப்பின் மாறாத கட்டளை. அதுதான் நீங்களே அறிவிக்கப்போகிறீர்களே, ஆடித்திருநாள் அடியவர் பேரவையின் உள்வட்ட ஆள் நான் என்று! தகவல் அறையில் தடுமாற்றம். அறிவிக்கவில்லையென்றால்? நன்றி, அதைச் சொல்லித்தானே நேற்றிலிருந்து மிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?  உங்களுக்கு மூல ஏடு உள்ள துணிப் பொதிதான் தெரியும்,  எனக்கு மூல ஏடும் தெரியும் அதன் ஒவ்வொரு பக்கமும் தெரியும்.  மறு முனையில் எழுத்து ஏதோ ஆட்டம் காட்டியது, ஆனால் சற்று நேரத்தில் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இனிப் பொய்ப் பெயர்களில் புதிய புதிய அச்சுறுத்தல்கள், வதந்திகள், வசைகள் வரத்தான்  செய்யும் என்ன செய்வது.  ஏரிகள் அழிந்த மண்ணில், ஆறுகள் மறைந்த நிலத்தில், இரவு முழுக்க குடங்களை வைத்துக் கொண்டு ஊர் முழுக்க காத்திருக்கும் ஒரு நாட்டில்  வாழ நேர்ந்ததை விட இவையெல்லாம் என்ன பெருந்துயரம்.
   (முற்றும்)
 ஒலி இணைப்பு
ஏரிவீரன் அய்யா தன் நினைவில் இருந்து தொலைபேசியில் சொன்ன பகுதிதான் இது. இதனை அறியாதவர் யாரும் இருக்க முடியாது என்றாலும் அவர் குரலில் அது முற்றிலும் வேறு அர்த்தத்துடன் ஒலித்தது.  கூட்டங்களின் போது இந்த ஒரு பகுதியை மட்டும்தான்  அவர் மனப்பாடமாகச் சொல்லுவார் என்பது நினைவில் உள்ளது. வீராணம் ஏரி,  வீர நாராயண ஏரி என  புத்தகத்தில் எழுதிவைக்கப்பட்டாலும் அதன் பழைய பெயர் வீரண்ணன் ஏரி, அதுதான் மக்கள் வழக்கில் இருந்ததாம். சாதி வழக்குகள் கூடியபோது அதன் பெயரும் மாறியது.  ஏரி அமைத்தவர்கள் யார், ஏரிகாத்த மக்கள் யார் என்பதை மற்றவர்கள் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது என்று ஒரு குறிப்பும் சொல்வார்.
“தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்காலச் சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்.”
 (உயிர் எழுத்து: ஜூன், 2017)

குற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம்

குற்ற உணர்வின் அரசியல் காந்தியுடையது
குற்றத்திற்கெதிரான அரசியல் அம்பேத்கருடையது
குற்றங்கள் எவையென அடையாளம் காட்டும் அரசியல் பெரியாருடையது

 

காந்தி-காந்தியம் பற்றிய உரையாடல்களும்  கருத்தாய்வுகளும் தெளிவான புள்ளியில் தொடங்கி மிகத்தெளிவான முடிவுகளுடன் இணக்கம் கொள்ளக்கூடியவை அல்ல. ‘காந்தி மதம்’ என ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் ‘காந்தி தேசம்’ என்று இந்தியாவின் பெயரை மாற்றவேண்டும் என்றும் 1948 காலகட்டத்தில் பெரியார் சொல்லும் அளவுக்கு காந்தி என்ற தெளிவற்ற குறியீடு விரிவடைந்து நின்றது.

மாற்றங்களை ஏற்காத சமூகம், மாற்றங்களைக் கண்டு அஞ்சும் மக்கள், மாற்றங்களே நிகழக்கூடாது என்று அழுத்திக்கொண்டிருக்கும் சாதி-வர்ண-நில உடைமைக் கொடுங்கோன்மை, சுதந்திரம் என்பதை பாவமெனக் கண்டு ஒருவருக்கொருவரைச் சிறைக்காவலாக இயங்கவைக்கும் இந்தியக் குடும்ப-குடிமரபுகள். இவற்றிற்கிடையில் மாற்றங்களை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி இந்தியப் புரட்சியாளர்கள் அனைவருக்குள்ளும் ஒரு கட்டத்தில் நெஞ்சில் வந்து அடைக்கக்கூடும்.

அப்படியான மூச்சடைப்பு நிலையில் மாற்றங்களைத் தொடங்கும் வழி பற்றி பெரியார் கூறுகிறார்:

“காந்தியாரின் கொள்கைகளை வைத்து ஒரு மதத்தைத் தோற்றுவிப்பதுதான் எப்படித் தவறாகும்? சத்தியமும் அஹிம்சையும்தானே அவருடைய முக்கிய தத்துவங்கள்? சத்தியமே கடவுள் என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம். தனியாக வஸ்துவாக ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லியிருக்கிறார். சத்தியம்தான் கடவுள் என்று அவர் கொண்டு நடந்திருக்கிறபடியால் மக்கள் சத்தியமே கடவுள் என்று நம்பிப் பயப்பட்டு நடந்தால் இன்றையக் கடவுள்களால் ஏற்படும் பயனைவிட எவ்வளவோ நலம் ஏற்படும். பிறகு மதத்தைப் பார்த்துக்கொள்ளலாம். அகிம்சையையும் அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதுமான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் சாதி வேறுபாடுகளும் மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா?

காந்தியாருக்குப் பாமர மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. அவர் பேரைச் சொல்லி இந்த மாறுபாடுகளைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வது சுலபம்.” (விடுதலை 11-3-1948)

தன் 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, போராட்டம், கருத்தியல் செயல்பாடுகளுக்குப் பிறகு பெரியாருக்குள் எங்கிருந்து தொடங்குவது என்ற சோர்வு ஒரு செயல் முடக்கம் உருவாகிறது. இயங்கியல் அறிந்த அந்த மனம்தான் இப்படிக் கேட்கிறது, “அகிம்சையையும் அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதுமான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா?”

இந்த தளத்தில் வரலாற்றில் தேவைப்படுவதுதான் இடைநிலைச் சொல்லாடல், இந்த தளத்தில் பழமைகளுடன் உரையாடல் வைத்தபடி மாற்றங்களைச் சுட்டிக்காட்டும் அரசியல் பேச்சுதான் இணைப்புநிலைச் சொல்லாடல். காந்தியாரை புத்தருக்கு இயேசு முகம்மது என்ற பெரியார்களுக்கு இணையாக மாற்றி மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்று சொல்லும் அளவுக்கு இடைநிலைச் சொல்லாடல் பெரியாரை இழுத்துச் செல்கிறது. காந்தியை மாறுதலுற்றவராக மாற்றங்களுக்குத் தொடக்கமாக தான் காண்பதற்கான விளக்கமாக பெரியார் பயன்படுத்தும் வாக்கியம் “இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள் என்றதிலிருந்தும் தானும் குரான் படித்துக்கொண்டு ராம்-ரஹீம் பஜனை செய்ததிலிருந்தும் மற்றவர்களையும் செய்யச் செய்ததிலிருந்தும் சாதிமத சம்பந்தமாக அவர் அடைந்த மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன்.” (குடியரசு 15-5-1948) காந்தி என்ற குறியீடு இந்தியச் சமூகம் என்ற ஒன்று உருவான காலகட்டமான (1915-1948) 33 ஆண்டு வரலாற்றுப் பகுதியை முடிந்த அளவு தன்னுள் இழுத்து உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், பெரியார் போன்ற புரட்சியாளர்களும் புத்துருவாக்க கருத்தியலாளர்களும் காந்தி-காந்தியம் என்பதுடன் போராடி, உரையாடி, மறுத்து, கடந்து இயங்கவேண்டிய நிலை உருவானது.

இடைநிலை-இணைப்பு நிலைச் சொல்லாடல் என்பதால் அது பக்திக்குரியதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் இருக்கவேண்டிய தேவையில்லை.  அதே போல வெறும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் கோட்பாடுகள் கொண்டவர்களின் அறமாக இருக்க முடியாது. மாறுதல்களை நேசித்த, மக்களுக்காக வாழ்வதை அரசியலாகக் கொண்ட பெரியாருக்கு காந்தி ஒரு தொடக்கமாக இருக்கமுடியும் என்று தோன்றியது. ஆனால் காந்தியின் 30 ஆண்டுகால அரசியல் மாறுதல்களைக் கொண்டுவரவில்லை என்பதில் அவருக்கு ஐயம் இல்லை. இரண்டையும் அவருடைய கருத்தியல்-காலமுறை சட்டகத்திற்குள் காணலாம்:

1931 இல் பெரியாரின் அறிதல் முறை, ”எந்தக் காரணத்தை முன்னிட்டும் திரு.காந்தியிடம் நாம் சமதர்மத்தை எதிர்பார்க்கக் கருதினோமானால் நாம்தான் மூடர்களாய்த் தீருவோம். அதாவது ஆயுள் காலம் முடியும் வரை அவரிடம் சமதர்மத்தையோ ஒற்றுமையையோ காணமுடியாது. அவர் வடநாட்டுப் பணக்காரர்களையும் தென்னாட்டு பார்ப்பனர்களையும்தான் மனிதராய்க் கருதுகின்றார். அவர்களது சகவாசம்தான் அவருக்கு உண்டு, அவர்களது குறைகளைத்தான் உலகக் குறைகளாகக் கருதுகின்றார். ஆதலால் திரு. காந்தியவர்களின் திட்டமெல்லாம் அவ்விருவருடைய குறைகளைத் தீர்ப்பதற்காகத்தான் இருக்குமே ஒழிய, ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிகள்தாம் தெரியும். ஒன்று: இராட்டினம் சுற்றுவது, இரண்டாவது: தீண்டாமை பாராட்டுவது பாவம் என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக்காரனையும் பார்ப்பானையும் கண்ட மாத்திரத்தில் தத்துவார்த்தம் சொல்லவேண்டி வரும்.”(குடியரசு: 26-7-1931)

1948-இல் பெரியாரின் உணர்வுநிலை: “சுதந்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தருணத்திலிருந்து காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால் நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளைக்கூடும என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ அக்கேடுகள் விளைய நேரிட்டதை உணர்ந்து காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார். அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார். அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார். தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தாம் தாம் கருதி வந்தவர்களில் பெரும்பாலோரைப் பற்றி நான் என்ன மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தேனோ அதேபோல அவரும் அவர்களை பற்றி கொள்ள ஆரம்பித்தார். தாம் செய்த பல தவறுகளை உணர ஆரம்பித்தார். அத்தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆரம்பித்தார் என்று கூறலாம்.”

“அத்திருத்தங்களைச் செய்யப் புகுந்தருவாயில் தமது எண்ணங்களுக்கேற்பச் செயலாற்ற முற்பட்ட தறுவாயில் அவரது முற்போக்கு எண்ணங்களால் தமக்குக் கேடு சூழும் என்று அஞ்சிய சுயநல சோம்பேறிக் கூட்டத்தாரால் கொலை செய்யப்பட்டார்.”

“இங்கு திராவிடர் கழகம் வலுப்பெற்று வருவது கண்டு பொறாமை கொண்ட சில பார்ப்பனர்கள் காந்தியாரிடம் காவடி தூக்கிச் சென்றனர். தென்னாட்டில் திராவிடர் கழகம் என்றொரு கழகம் வளர்ந்து வருகிறதென்றும் அதைக் கண்டு காங்கிரஸ் மந்திரிகளே பயப்படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் தம் மக்களுக்குப் பள்ளிக்கூடங்களில் படிக்க இடம் கிடைப்பதுகூடக் கஷ்டமாக இருக்கிறதென்றும் கூறினார்கள். அதைக் கேட்ட காந்தியார் கூறிய பதிலில்தான் நான் கூறிய மனமாற்றம் இருக்கிறது. “கவனித்துப் பாருங்கள் என்னருமை பிராமணத் தோழர்களே! நீங்கள் கடவுளோடு நேரடித் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்களாயிற்றே. அதிலும் மகா புத்திசாலிகளாயிற்றே, அப்படியிருக்க உங்களுக்கு எதற்குப் படிப்பு வேண்டும்? கடவுளை நம்பி, சதா கடவுள் பணி செய்துகொண்டிருங்களேன் படியாத முட்டாள்களான அவர்களுக்குத் தானே படிப்பு அவசியம். அவர்கள் படிக்கட்டுமே, உங்கள் பிள்ளைகளுக்கு இடமில்லாமல் போனால் வருத்தப்படாதீர்கள், உங்கள் விகிதாச்சார இடங்களைக்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு விட்டுக் கொடுத்து உதவுங்கள்.” என்று அவர் கூறினார். இதைத்தானே நாமும் இன்றுவரை கூறிவந்தோம்.” (விடுதலை 3-10-1948)

1957-இல் மீண்டும் பெரியார் காந்தியின் கடந்தகால இடம் பற்றிக் குறிப்பிடுகிறார்: ”காந்திதான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்கு சாஸ்திரம் புராணம் ஒழிக்கப்பட வேண்டும், என்பது போல நாட்டுப் பிரிவினைக்குக் (தன்னுரிமை) காந்தி ஒழியவேண்டும்.”

“காந்திக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தவன் வடநாட்டான். மனிதனுக்கு மேற்பட்ட தெய்வீக சக்தியுடையவர் என்று விளம்பரம் செய்தவன் பார்ப்பான். ஆகவே அவர்கள் இருவருக்கும் எது சரியோ அந்தப்படி நடக்க காந்தி ஒப்புக்கொண்டுவிட்டார்.” (விடுதலை 22-8-1957)

இவை முரண்பாடுகள் என்பதை யாரும் ஆய்வு செய்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அடிப்படையில் இவற்றில் அரசியல் இணக்கம் உள்ளது. அதுதான் பெரியார் கண்ட மாறுதலறம், பெரியார் முன்வைத்த தன்னுரிமை கொண்ட கூட்டுத் தேசியம் என்ற கருத்து, சாதிய-வர்க்க அடிப்படைகள் தகர்ந்த சமதர்ம அமைப்புக்கான நம்பிக்கை. இவை காலம்சார் அரசியலின் தளத்தில் பலவகையான கதையாடல்களாக வெளிப்படும். ஆனால் தனது மாறுதலறத்தின் இயக்கமுறையிலிருந்து விலகாமலேயே இருக்கும்.

பெரியாருக்கு காந்தியை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம் என்று தோன்றுவதற்குக் காரணமாக இருந்த செயலற்ற திகைப்பையும் அரசியல் மூச்சடைப்பையும் அதனினும் பலமடங்கு அதிகமாக உணர்ந்த மாபெரும் மனம் அண்ணல் அம்பேத்கருடையது. ஆனால் அவர் தன் மக்களுக்காகக் கண்ட கனவைத் தகர்த்து அவர் உருவாக்க முனைந்த விடுதலை அரசியலின் அடிப்படைகளை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு நூற்றாண்டு அரசியல் போராட்டத்தைப் பிராமணிய பெருந்தேசிய அரசியலில் கரைத்த வரலாற்றுச் சதிதான் அவருக்கான திகைப்பை, மூச்சடைப்பை உருவாக்கியது. அந்த அரசியல் சதிக்கு மகாத்மா என்ற தன் பெயரையும் எளியோரில் ஒருவர் என அடையாளம் கொண்ட தன் உடலையும் அளித்து பெரும் தவறிழைத்த காந்திதான் அம்பேத்கரின் வாழ்வின் பெரும் துன்பிலுக்குக் காரணமாக அமைந்துவிட்டவர்.

1930-32 காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அமைய இருந்த தனித் தன்னுரிமை கொண்ட அரசியல் பங்கீட்டைத் (தனித் தொகுதிகள் என்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனிப்பிரதிநிதித்துவம்) தடுத்து நிறுத்திய பூனா ஒப்பந்தம் அமையக் காரணமாக அமைந்த காந்தியைப் பற்றிய தன் மதிப்பீட்டைப் பெரியார் போல மாற்றவோ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவோ அம்பேத்கர் நினைக்கவில்லை.1930-இல் சலிப்பாகத் தொடங்கி 31-இல் கசப்பாக மாறி 1932-செப்டம்பரில் தீராத வலியாக மாறியது அம்பேத்கரின் மனதிலான காந்தி பற்றிய மதிப்பீடு. 1945-இல் ‘காங்கிரஸும் காந்தியும் தீண்டாமைக்குட்ட மக்களுக்கு இழைத்ததென்ன’என்ற மறுக்கமுடியாத வரலாற்று ஆவணமாக மாறியது அந்த நினைவு, 1948-இல் அறிவின் தடுமாற்றம் இன்றி காந்தியின் கொலைக்கு இரங்கிய மனம் அதன் வரலாற்றுப் பக்கத்தையும் தெளிவாகப் பதிவு செய்தது, ‘மாமனிதர்கள் தேசத்திற்கு சில நன்மைகளைக் கொண்டுவருகிறார்கள் ஒரு கட்டத்தில் அவர்களே அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவும் மாறிவிடுகிறார்கள். காந்தி நம் நாட்டின் நல்லெண்ணக் கெடுதியாக மாறிவிட்டார். தன் காலத்தின் சுதந்திரச் சிந்தனைகள் அனைத்தின் குரல்வளையையும் அவர் நெரித்துவிட்டார்.” இதனைத்தான் பெரியார் “காந்திக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தவன் வடநாட்டான். மனிதனுக்கு மேற்பட்ட தெய்வீக சக்தியுடையவர் என்று விளம்பரம் செய்தவன் பார்ப்பான். ஆகவே அவர்கள் இருவருக்கும் எது சரியோ அந்தப்படி நடக்க காந்தி ஒப்புக்கொண்டுவிட்டார்.” என்று குறிப்பிடுகிறார்.

1930 முதல் 1956 வரை அம்பேத்கர் கொண்டிருந்த மாறாத கருத்து இது: “காந்தியின் வாதம் முழுக்க (ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்த தொகுதி கொண்ட தேர்தல் முறையை மறுத்து காந்தி முன் வைத்த வாதங்கள்) கற்பனையின் அடிப்படையில் அமைந்தது. ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கிப் பழிவாங்கத் தொடங்குவார்கள் என்பது உண்மையானால் ஒடுக்கப்பட்ட மக்கள் தனித்த அரசியல் உரிமைகளைப் பெற்று ஆதிக்கச் சாதிகளின் கொடுமைகளை அவர்கள் தாங்களாகவே எதிர்க்க வேண்டும் என்பதற்கான நியாயம் அதிகமாகவே உள்ளது. தன்னுடைய வாதம் எந்த அளவுக்கு கொடிய விளைவுகளை உருவாக்கும் என்பதைக் கூட அறியமுடியாத அளவுக்கு காந்தி நிலைகுலைந்து தன் அறிவின் சமநிலையை இழந்து போயிருக்கிறார். இப்படியான வாதம் தீண்டாமைக்குட்பட்ட மக்களை இந்துக்கள் நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைப்பதை நியாயப்படுத்துகிறது என்பதைக்கூட அவர் மறந்துவிட்டார். சுருக்கமாகச் சொல்வதென்றால் காந்தியின் வாதம் இதுதான், “விடுதலை வேண்டும் என்று கேட்காதீர்கள் அது உங்கள் ஆண்டைகளைக் கோபப்படுத்தி உங்களை அவர்கள் கொடுமைக்குள்ளாக்கவேண்டிய நிலையை உருவாகும்.” இப்படியான ஒரு வாதத்தை வைக்கும் ஒருவரை அறிவு முதிர்ச்சியும் பொறுப்பும் அற்றவர் என்றுதான் சொல்ல வேண்டும்.”

தன் மக்களையும் விடுதலையையும் நேசிக்கும் அறிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். பெரியார் காந்தியைத் தொடக்கமாக வைத்து செய்ய நினைத்ததும் அம்பேத்கர் காந்தியை நீக்கிவிட்டு உருவாக்க நினைத்ததும் ஒன்றுதான்: தன் மக்களுக்கான விடுதலை மானம் உள்ள வாழ்வு.

தன் காலத்தின் சுதந்திரச்சிந்தனைகள் அனைத்தின் குரல்வளையையும் அவர் நெரித்துவிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட காந்தி தன் சுதந்திரமான சிந்தனையை அப்போதுதான் முன்வைக்கத் தொடங்கியிருந்தார். அதற்குள் அவரது குரல் காற்றில் கரைக்கப்பட்டது, அவரது நெஞ்சைத் துளைத்த உலோகம் காந்தியை இறந்த காலமாக மாற்றியது.

அம்பேத்கர் அதுவரை இருந்த காந்தியை மதிப்பிட்டார், பெரியார் அதற்குப் பிறகு இருந்திருக்கவேண்டிய காந்தியைப் பற்றி மதிப்பிட்டார். அவர்கள் இருவருடனும் முரண்பட்டும் விலகியும் இருந்த காந்தியும் சொன்னார் ‘என் 30 ஆண்டுகால அரசியலில் எதையும் மாற்றவில்லை, வெளியேதான் இனிமேலான எனக்கான பணிகள் உள்ளன.’ மக்களை நேசிப்பவர்கள் காலம் கடந்தாலும் உண்மையை உணர்வார்கள். அவர்களை நேசிப்பவர்கள் அவர்களுடைய கடந்த காலத்தை பூசிப்பவர்களா அல்லது அவர்கள் உருவாக்க நினைத்த எதிர்காலத்திற்காக வாழ்பவர்களா என்பதைக் கொண்டுதான் அவர்களின் அரசியல் மதிப்பிடப்படுகிறது.