உரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்

உரையாடல் : 9  மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்

கேள்வி:

கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது? அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது?

[ராஜகாந்தன்,அசோக்ராஜ்,கருணாகரன்]

பதில்:
பிரேம்
கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது? மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.
இன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.
நவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான்  ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன.  மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள்  மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.
மாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற்கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.
பக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.
பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.
வளரிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.
நூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள்.  “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்?” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.
“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண்டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.
வீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…
நான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம்  வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செயல்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக மாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன!  எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு)  பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.
இது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிருந்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட  ஒன்றுமில்லை…
மக்கள்  அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை,  ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…