பழமை துதிக்கும் பாடல்களும் பாவலர் படுத்தும் பாடுகளும் -பிரேம்

பாட்டுப் புலவன் பாரதி  தானும் சிக்கித் தமிழர்களையும் சிக்க வைத்த  ஒரு இடம் உண்டு.

பாட்டுக்கு ஓர் புலவனா அல்லது பலரில் அவனும் ஒரு புலவனா? என்கிற குற்றாலச் சண்டையை அப்புறமாக வைத்துக்கொள்ளலாம்.

மகாகவி என்றும் தேசிய கவி என்றும் தெய்வக் கவிதை என்றும் ‘எந்நாளும்‌ அழியாத மாகவிதை’ என்றும் நவீன அழகியலுக்கோ, நவீன இலக்கிய நிகழ்நிலைக்கோ, நவீனத் தன்னிலை உருவாக்கத்திற்கோ  ஒவ்வாத உதவாத (இது பின்நவீன விளக்கம் அல்ல) அடையாளங்களைத் தமிழ்க் கவிகளும் (நெடிலும் அதற்குள் அடக்கம்) எழுத்துக் கலைஞர்களும் (எழுத்து   ஒரு கலை, அது ஒரு பயிற்சித் திறன்)  பாவித்திரிகிற, காவித்திரிகிற, அணிந்து உழல்கிற  ஒரு துயர் நிலையின் தொடக்கம் சுப்ரமணிய பாரதி எனச் சொன்னால்  போச்சுது போச்சுது பாரத நாடு!     போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்! “ என்று பொங்கி எழுந்து  “இது பொறுப்பதில்லை  தம்பி  எரிதழல் கொண்டுவா இவன் கையை எரித்திடுவோம்” என ஓங்காரமிடும்  கவிப்பித்தர்கள், காவியநாயகர்கள், மக்காகவிகள் சற்றே ஒதுங்கி நின்று கேட்டறிக!

உங்கள் உலகத்தரம் கொண்ட ஒப்பாரிகளையும், ஒப்பிலா லகரிகளையும் செவி செயல்படத் தொடங்கிய நாள் முதல் கேட்டும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் என் போன்றோர் துயர்நிலையை எண்ணத்தில் கொண்டு “”ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்”  என்று  பொறுமையுடன்  இதனைக் கேட்டருள்க.

புராதனத்தை புதுமைக்குள் புகுத்தியும் புராதனமே புதுமைதான் என்றும் புதுமைகளை உருவாக்கும்  பட்டறைக்குள் புகுந்து புதியன உருவாகாமல் பார்த்துக் கொண்ட சிலரில் பாரதி ஒருவர் என்பதைப் பற்றி காலவரிசைப் படுத்தப் பட்ட பாரதி படைப்புகள் பன்னிரு தொகுதிகளையும் பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பையும் படித்தும் குடித்தும்,   பலவாறானும் ஆய்தும், தோய்ந்தும் நான் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டு  “நல்லதோர் வீணை செய்தே” எனும் தன்மையத் தவிப்பு எங்கே கொண்டு செல்லும் எனக் கண்டறிந்து நானும் துயரே உற்றேன்.

 “தசையினைத் தீசுடினும்  சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்“ என்ற தெய்விக நிலையில் நான் சிக்கி இருந்த காலத்தில் உவப்பாக இருந்த பாரதியின் “நானும் ஒரு சித்தனே” என்ற நிலை நாள்பட நாள்பட ஒரு நோயென்று தெளிந்தேன். இதுவும் ஒரு பித்தமே என்று நுண்ணறிவால் கண்டு சொல்லும் பின்நவீனத் தெய்வீகர்களிடம் நான் கேட்பது, சுவைபுதிது நயம்புதிது’ வளம்புதிது சொற்புதிது  எனத் தேடி அலையும் போது பித்தமும் புதிதாக இருக்க வேண்டும் எனப்  புதிய பெயரில் புதிய உருவில் நானும் ஒரு பித்தனே என்று சொல்வதில் என்ன தவறு?

“புவியனைத்தும்‌ போற்றிடவான்‌ புகழ்படைத்துத்‌ தமிழ்மொழியைப்‌ புகழி லேற்றுங்‌ கவியரசர்‌ தமிழ்நாட்டுக்‌ கில்லையெனும் வசையென்னாற்‌ கழிந்த தன்றே?

எனத் தருக்கியும் முறுக்கியும் திரிந்த  பழம் பித்தம் கலைந்து”

பழங்கவியைப் புதியதென்று சொல்லிச் சொல்லி பலதொகுப்பை நிதம்  எழுதிக் குவிப்பதற்கு  பாழும்மனம் இடம்கொடுக்க மறுக்குதப்பா  பத்துவரி புதிதாகப் படைத்துவிட்டு

பக்கத்து ஊரிலுள்ள  கவிகள் தாமும் படைக்கின்ற  வரிபுதிதாய்க் கேட்டுக்கொண்டு பார் முழுதும் எழுதுகிற பலரில் ஒன்றாய்

பதம் பெற்று வாழ்வதற்கு அருள்வாய் நெஞ்சே!

-என்ற புதுப்பித்தம்  பிடிப்பதில் ஒரு குற்றம்தான் உண்டோ?

வசன கவிதை

“வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப் பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.” என்று பாரதி போல நம்பும் பாக்கியம் எனக்கில்லாத போது  நான் என்ன செய்வது?

வேதியர் தெய்வம், வேதமும் தெய்வம், பூமித் தெய்வம், புத்தி தெய்வம், ஞானம் தெய்வம், ஞானியர் தெய்வம்,  நாடும் தெய்வம், எழுத்து தெய்வம், எழுது கோல் தெய்வம், நானும் தெய்வம்… அப்பா சாமி இப்படியே போனால் நீயும் தெய்வம் என்று சொல்லி முடித்துவிடலாம் எனத் தோன்றும், ஆனால் முடியாது, ஏன்?  பிறகு வெள்ளைத் தாமரை பூவில் இருப்பவள் மட்டும் அல்ல வெள்ளைக் கார சீமாட்டியும் தெய்வம், வெள்ளைக்காரர் நாடும் தெய்வம், வெள்ளையர் ஆட்சியும் தெய்வம், வெள்ளையர் பாஷையும் தெய்வம் என அது நம்மை பாதாளத்தில் தள்ளிவிடுமே (பாரதி பாஷையில்) அதனால் தெய்வம் நீ என்றுணர்  அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு அறிவு தெய்வம், அழகு தெய்வம், அபினி தெய்வம், பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம், நாளும் தெய்வம், நானே தெய்வம் என ஒரு நோய்வலையில் ஆனந்தமாகச் சிக்கி “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா?” எனப்பாடித் திரியலாம் “பார்” போற்ற வாழலாம் என்ற பழப்பித்தத்தில் இருந்து நான் 2007 தப்பி புதிய ஒரு பித்தத் தடத்தில்  பயணிக்கப்  புறப்பட்டேன்,

பாரதியை மகாகவியென்றும் பாரதி பாடல்களை பால்வீதி மண்டலமென்றும் நம்பிய காலங்களில்

“ஒற்றைச் சொல்லில் ஒரு காவியம் அது

உனக்குத் தெரிந்த திருவாக்கியம்

என்னை அழைக்க நீ ஒலிக்கும் சொல்லில்

இருக்கிறது பெண்ணே புது பாவியம்”  

என சும்மா சுழற்றியடித்து சுகவனத்தில் திரிந்த நாட்களை நான் இழந்து விட்டேன்.

எவ்வளவு மகிழ்ச்சியான உலகம் அது! தேச பக்தி 20 சதம், தெய்வ பக்தி 20 சதம்,  ஆரிய தேசம்  20 சதம், அன்னைத் தமிழ் ஒரு 10 சதம், ஆதியில் இருந்த தேசம் 20 சதம்,  அன்னை மகாளி  10 சதம் என ஒரு வண்ணமயமான ஒரு கலவை அது.  ஹிந்து  தர்மத்தால் நிலை பெற்ற தேசம், ஆரிய ராணியின் அருள் பெற்ற தெய்வீகம், இருந்தாலும் சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சுவை புதிது… எல்லாம் புதிது என்ற கவித் திமிர்  கொண்ட  ஜீவனாய்  நவீன அரசியல் மண்டலத்தில் உலவவிட்டு சற்று இடைவெளிக்குப் பின்  தெய்வீக நிலம்,  தெய்வீகப் பாடல்,  தேசியத் தொன்மம், தெய்வமாக்கவிதை,  தெய்வீகராகம், திகட்டாத பாடல் எனத் தாந்திரிகமாக பின்நவீன  உருவெடுத்து  உய்கிற நிலை எனக்கு வாய்க்காமல் போனதே என்ற வருத்தத்தில் ஏதேதோ எழுதுகிற நிலை எனக்கு நேர்ந்தே விட்டதோ?

சரி அதனைப் பற்றி ஒரு ரொபர்தோ பொலன்யோ நாவலையோ சூலியோ கொர்த்தசார்  நாவலையோ பிறகு எழுதுகிறேன்.

அதற்கு முன் நான் பொதியாகச் சுமந்த அலைகிற குறிப்புகளில் இருந்து ஒரு சிறு பகுதி.

[முன் குறிப்பு : “தூய நன்மை, துல்லியமான உண்மை, மீளமுடியாத வன்முறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வைத்திருந்த  குறிப்புகளைத்  தற்செயலாகக் காண நேர்ந்தது. அதன் விளக்க முறை, புரிதல் முறை எனக்கு முக்கியமாகப் பட்டது. அதன் ஒரு பகுதி இது.]

ஃபாசிசம் இருபதாம் நூற்றாண்டின் கொடிய அரசியல் வடிவம். இதற்கு முன் இருந்த வன்கொடுமைகள் ஆதிக்க, அதிகார, அடக்கு முறைகளின் மேலிருந்து கீழான அழுத்தமாக அமைந்தவை. 

அவை நேரடி அரச, ஆயுதக் கொடுகோன்மை வடிவங்கள்.

ஃபாசிசம் கீழிருந்து மேல் என்னும் தர்க்கத்தில் இயங்குவது அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் நலனுக்காக என்ற விதிமுறை இதன் அடிப்படையாக அமைகிறது.

நாடு, சமூகம், தேசம், இனம், மதம் என ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் மக்களைத் திரட்டி அதன் முழு வலிமையையும் தலைமையின் கீழ், தலைமை என்ற அமைப்பின் கீழ் குவித்து விடுவது. அதற்குப் பின் அனைத்து வன்முறைகளும் கொடூரங்களும் அடக்குமுறைகளும் நியாயப்படுத்தப்படும்.

ஃபாசிசம் எதையும் உடன்பாட்டு முறையில் விளக்காமல் எதிரிடைகளால் விளக்கும் . எதிரிகள்தான் நமது வாழ்வை, பெருமையைக் குலைத்து வருகிறார்கள் , எதிரிகளை ஒழித்து இனிய வாழ்வை அடையலாம் என அது ஓயாமல் சொல்லும்.

கடந்த காலப் பெருமைகள் பற்றி ஒயாமல் பேசி அதனை இடைக்கால எதிர் சக்திகள் அழித்துவிட்டன, மீண்டும் நாம் எழ வேண்டும் என்று பழமைப் பக்தியில் உருகும். இந்தப் பக்தியின் உச்சத்தில் பெரும் தலைமை, தெய்வீக மீட்பர், மகாபுருஷர் என்ற உருவங்களைப் பொருத்திவைக்கும்.

உலகைத் தூய்மையாக்கி, துல்லியமான உண்மைகளை நிலை நிறுத்தி, அனைத்தையும் பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் தனக்கே உள்ளது என்று நிறுவி, அதற்குள் ஒவ்வொருவரையும் அடக்கி நீதான் இதன் மூலாதரம், அடிப்படை, மையம் என்ற கற்பித நிலையை உறுதியாக மனத்திற்குள் செலுத்திவிடும்.

இதற்குப் பிறகு மீளமுடியாத வன்முறையும், கேள்வி கேட்க முடியாத வன்கொடுமைகளும் பெரும் அழகியலாக மாறிவிடும். எல்லாம் உன் நன்மைக்கே (தனிமனித நிலையில்) எல்லாம் உங்களுக்காக (சமூக நிலையில்) எல்லாம் நமது தலைமுறைகளுக்காக (அமைப்பு இனம் என்ற நிலையில்) என்ற நித்திய நன்மை, நீடித்த இன்பம் பற்றிய பேச்சுகளின் ஊடாகத் தொடரும் வன்முறை இது.

ஆண்மைய- தந்தை மையச் சமூகத்தின் நுண் அலகும் இதில் உள்ளது. பேரன்பு பற்றிய அனைத்துச் சொல்லாடலுக்குள்ளும் உள்ள வன்முறை இது.

தியாகம், அர்ப்பணிப்பு, தன்னலமின்மை என்ற பெயர்களில் இந்த அடிமைநேய -வன்முறை உளவியல் உள்ளது. தாய்மை, தெய்வீகம், புனிதம், முழுமையான விடுதலை, முழுமையான புரட்சி என அனைத்துவகையான முற்று-முழுமைகளினூடாகவும் இந்த வன்முறை தன்மைச் செயல்படுத்தும், நியாயப்படுத்தும்.

தனிமனித உறவுகளில் இது வன்முறை நியதியாக, சிறுகச் சிறுக செயல்படும். ஆனால் அரசியல், சமூகம், தேசம் எனற அளவில் பெருங்கொடுமைகளைப் பெருமையுடன் செய்து முடிக்கும்.

இது உயிர் வாழும் போராட்டம் , இனநீட்சி என்ற இயற்கை விதியின் அடிப்படையில் இயங்கும் வன்முறையல்ல. பிறர் உயிர்வாழ்தல் தனக்குக் கெடுதல், தனது பூமிக்கு இழுக்கு. பிற உயிர்களின் இன்பம் தூய்மையற்ற இழிவு என்ற இயற்கை கடந்த எதிர்நிலை உளவியலின் விரிவு.

இந்தியச் சமூகத்தில் மனு-வழி அரசியலில் இதன் அலகுகளைப் பார்க்கலாம். இன்றுள்ள பாரதப் பெருந்தேசிய- மகாசாம்ராஜிய – இந்துராஷ்டிர கனவுகள் மக்களுக்காக எதையும் செய்யாது; ஆனால், அது தேசத்தின் மீது பக்தி கொண்ட, பேச்சு மறந்த அடிமைகளை புனித கூட்டமாக உருவகிக்கும்.

அறிவுக்கு எதிரானது ஃபாசிசம்- அதே சமயம் அதிக அறிவும் ஃபாசிசமாகும். அன்புக்கு எதிரானது ஃபாசிசம் -ஆனால் தன்னைத் தவிர யாருக்கும் அன்பு செய்யத் தெரியவில்லை என்று பேரன்பின் வடிவமாகத் தன்னைக் காட்டும். எளிமைக்கு எதிரானது ,பாசிசம் ஆனால் எளிய மக்களை, அவர்தம் எளிய கனவுகளைத் தனது ஆயுதமாக்கும்.

ஒரு சில வாக்கியங்களை நினைவு படுத்திக் கொண்டு ஃபாசிசம் பற்றிய பேச்சைப் பிறகு தொடரலாம்.

குருஜி கோல்வால்கர் சொல்கிறார்:

“நமது தேசம் பழம்பெருமை கொண்டது, நித்தியமானது நிலைத்தது அது மகாபுருஷர்களை ஈன்று அளித்திருக்கிறது, உலகின் சிகரமான தத்துவங்களை உருவாக்கித் தந்திருக்கிறது, தர்மமே உருவான சமூக அமைப்பை அது கொண்டிருந்து. அதன் சிறப்பை நாம் இன்றும் காணலாம், நம்மை ராமர், கிருஷ்ணர், சங்கராச்சாரியரின் வழிவந்தவர்கள் என்று சொல்லும் போது, இந்த மண்ணின் மைந்தர்கள் இந்த மகோன்னத பிதாக்களின் ரத்தத்தைத் தமக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் உலகின் ஞானங்கள் அனைத்தையும் அடைந்தவர்கள், செயலில் உன்னதங்களை நிகழ்த்தியவர்கள். இந்து சமூகத்தில் பிறந்து விட்டோம் என்ற ஒன்றே நமக்கு இந்த உன்னதப் பெருமையைத் தருகிறது.”

இதன் தொடர்ச்சியான தர்க்கம் என்ன? பார்க்கலாம்.

”இத்தனை வளம் கொண்ட நம் நாட்டை மிலேச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தாய் மண்ணைக் காக்க நாம் வலிமையுடன் வீரத்துடன் ஒன்று திரளவில்லை, அதன் காரணமாகத்தான் இன்றுள்ள துயரமான நிலையும் கொடிய வறுமையும், துன்பங்களும் நம்மைச் சூழ்ந்துள்ளன, நமது உன்னதங்களையெல்லாம் அந்தக் கொள்ளைக்காரர்கள் முன் இழந்து விட்டு நிற்கிறோம்.”

சற்று ஏமாந்தால் இவை அத்தனையும் வரலாற்று உண்மைகள் போல நமக்கும்கூடத் தோன்றக்கூடும். அதுதான் பாசிசத்தின் நுண்வலிமை!

பெயர் தெரியாத பாடல்

பெரும் கட்டமைப்புகள், பெரும் படைப்புகள், பெரும்பாடல்கள், பெருந்தொடர்கள்,  பெருங்கவிகள் , ஆகப்பெரும் எழுத்தாளர்கள், ஒப்புயர்வற்ற தலைவர், ஒற்றைத் தேசியம் என பாசிச அழகியல் பலவாறு  உருவெடுக்கும்.

சற்று ஏமாந்தால் உன்னத எழுத்து, உன்னத கலை எல்லாம் மனிதப் படைப்பின் சாதனைதானே எனத் தோன்றக் கூடும்.

சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயம் என்றால் இனனொரு சுவரை உருவாக்குவது போலத்தான் பெருமித எழுத்துகள்.  பாசிசம் மறுக்கும்அழகியல் என்ன செய்யும்?

சீனப் பெருஞ்சுவர் கலைத்து சிறுசிறு வீடுகள் கட்டும்

கோயில்கள் தோறும் குவிந்துள்ள தங்கத்தை குன்றிமணியாக்கி

குழந்தைகளுக்கு விளையாடத் தரும். (1)

நுண்மையின்  அழகை அறிந்தால் நுண்பாசிசங்களின் வடிவம் புலப்படும். அது மனதின் குரலாகவோ, மகாபாரதமாகவோ, மகான்களின் அருளாகவோ, மருத்துவ அறிவிப்பாகவோ இருக்கலாம்…

தெய்வம் நீ என்று உணர்வதையெல்லாம் விட்டு மனிதன் வெறும் மனிதன் என்று  மனதால் தெளிந்தால் “விட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்‌  சிட்டுக்‌ குருவியைப்‌ போல. ” மனமே எனச் சொல்லி  இப்போது உறங்கச் செல்கிறேன்.

(யாருக்குச் சொல்கிறாய் என்று  நண்பர்கள் கேட்கமாட்டார்கள், என்றாலும் புதியவர்களுக்கு புரியச் சொல்கிறேன் : எனக்குச் சொன்னேன்)

(1) மூலபாடம்: சீனப்பெருஞ்சவரை இடித்து பல சின்னஞ்சிறு குழந்தை வீடுகள் செய்வோம் கோயில் கருவறைகள் கொள்ளையடித்து குண்டுவிளையாட நற்கோலிகள் செய்வோம் (பாடினோர்: பெயர்க் கிடைத்திலது, பாடலும் 25 % கிடைத்துளது, 1981 )

இசைபட வாழ்தல்

உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை-பிரேம்

உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை

கேள்வி:

சுற்றுச்சூழல் சீர்கேடு அனைத்துப் பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியச் சூழலில் கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு முதன்மையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையிலும் உள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது குறித்து உங்கள் மாற்று அரசியல் பார்வை என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்:

பிரேம்

சுற்றுச்சூழல் அரசியலின் தளத்தில் இன்றைய அனைத்து மனிதத் துன்பியல்களையும் உள்ளூடி ஆய்வு செய்யலாம். ஏனெனில் மனிதமையத் தன்மையை மறுத்து உயிர் மண்டலம் அனைத்துக்குமான வாழ்வுரிமை பற்றிய புரிதல் கொண்ட கருத்தியல் இது. இயற்கையைப் பாதுகாத்து மனிதர்கள் நல்வாழ்வு பெறலாம் என்ற தன்னலம் சார்ந்த புரிதல், இயற்கையின் பகுதியாக இருந்து இயற்கையிடம் பெற்று வாழலாம் என்ற ஒப்படைப்பு,  உலக உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புவிமண்டலத்தில் பங்கு உண்டு  அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், அதன் சமநிலையைக் குலைக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை என்னும் அறம் சார்ந்த நிலைப்பாடு எனப் பலகட்டங்களாக சூழலரசியல் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றின் வழி நாம்  மாற்று வாழ்வியல் நோக்கிச் செல்ல இயலும்.

இந்தியா போன்ற நாடுகளில் சூழலரசியல், பசுமை அரசியல், புவிசார் அரசியல் என்ற தளத்தில் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்த முடியும். முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனமேலாதிக்க எதிர்ப்பு, அறிவதிகார மறுப்பு, பெண்ணியச் சமத்துவம், பெருந்தேசிய மறுப்பு, அடையாள அரசியல் எனப் பல அரசியல் உணர்வு நிலைகளுக்கு சூழலரசியல் களமாக அமையக்கூடியது.

நவீனத்துவம், பெருந்தொழில் ஆதிக்கம், உலகமய வல்லதிகாரம் என்ற பல தளங்களில் நாம் இயற்கையின் மீது போர் தொடுத்திருக்கிறோம். வளர்ச்சி, அறிவியல், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், முன்னேற்றம், இன்புறும் வாழ்வு என்ற பெயர்களில் உயிர் மண்டலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலைச் (Eco-terrorism) செய்து கொண்டிருக்கிறோம். சூழலரசியலை பெண்ணியம் மிகச்சரியாக விளக்குகிறது, எல்லையற்ற அதிகாரத்திற்கான முனைப்புதான் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் தொடக்கம். எளிய மனிதர்களுக்கும், எளிய உயிர்களுக்கும் வாழ இடமில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு, நாம் வேறு வகையான மாற்று  அரசியல் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

சூழலைப் பேணுதல், இயற்கையைக் காத்தல் என்னும் பார்வைகளும் கோட்பாடுகளும் அவை  சார்ந்த அரசியலும் மனித வரலாற்றில் முற்றிலும் புதிதானவை. இதற்கு முன் அப்படியொரு மாற்றுப் பார்வை இருக்க வாய்ப்போ தேவையோ இல்லை, ஏனெனில் இயற்கையின் மீது மனிதர் நிகழ்த்திய எந்த ஒரு இடையூறும் நீடித்த பெரும் விளைவுகளை உருவாக்க இயலாதவைகளாக இருந்தன. இயற்கைச் சூழல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அது இன்றுள்ள பேரழிவு நிலையை அடையவில்லை. இயற்கையின் பகுதியாக இருந்தபடி மனிதர்கள் தங்களுக்கானதைப் பெற்றுக் கொண்டதும் பெற முயற்சி செய்ததும் இன்றுள்ளது போன்ற கொடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. இருபதாம்  நூற்றாண்டின் இயந்திர மயமாக்கம், நகர் மயமாக்கம் என்ற புதிய உற்பத்தி-நுகர்வு முறைகளின் விளைவு மனிதர்கள் எண்ணிப்பார்க்க இயலாத நெடிய துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. நவீன அறிவியல் போர்த்தொழில் நுட்பங்களை  மையமாக வைத்துச் செயல்படுவது. உயர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் சிலரைத் தவிர மற்றவர்களின் வாழ்வுரிமையை அழிக்கக்கூடியது. இன்றைய உலக மயமான உற்பத்தி முறை மனித இனங்களின்  மண், நீர், காடு, காற்று அனைத்தின் மீதும் நிகழ்த்தப்படும் போராகவே உள்ளது, இது  இனப்படுகொலையின் இன்னொரு வடிவம்தான். இந்த உண்மை வெகுமக்கள் உணர்விலும் அறிவிலும் முழுமையாக பதிவாகாத நிலைதான் சூழலரசியலை விளிம்பு நிலை அரசியலாக வைத்துள்ளது. மற்ற அரசியல், சமூக நிகழ்வுகளைப் போல இன்றி புவிச்சூழல் மற்றும் இயற்கைச் சமநிலையில் நிகழும் கேடுகளில் பார்வையில் படக்கூடியவற்றைவிட  பார்வையில் படாதவை மிக மிக அதிகம். மக்களிடம் இருந்து மறைக்கப் பட்ட உண்மைகள்தான் தொழில்நுட்ப ஏகாதிபத்தியத்தின் முதல் கட்ட வலிமை. சூழலரசியல்   தற்போது இந்த மறைக்கப்ட்ட உண்மைகளை அனைவருக்கும் கொண்டு  செல்லும் நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திரிக்கப்பட்ட தகவல்கள், திட்ட மிட்டுப் பரப்பப்படும் பொய்கள், நுண் அளவில் தொடங்கி உலக அளவில் நிகழ்த்தப்படும் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முன் புலப்படுத்தி இனியான மக்கள் அறிவியலை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்க நமக்கு உள்ள ஒரே வழி சூழலரசியல் மட்டும்தான்.

மரத்தையும், நீர்நிலையையும், காட்டையும் கடலையும் தெய்வம் என வணங்கி, மண்ணையும் காற்றையும் தெய்வம் எனப் போற்றி வாழ்வதுதான்  தொல்சமயப் புனித உணர்வு என்றால் நான்  பகுத்தறிவை உதறி விட்டு பக்திப் பண் பாடித் திரியும் அடியவனாக மகிழ்வோடு வாழ்ந்து முடிப்பேன். ஆனால் அது அப்படி எளிதாக அடையக் கூடிய நிலையல்ல… அதுதான் இன்றைய மக்கள் அரசியலின் தொடக்கம்,  அதுதான் வாழ்வுரிமைப்  போராட்டம், அதுதான் இன்றைய அழகியல்.

உரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்

உரையாடல்:  5-4   மீந்து நிற்பவர்களின் அரசியல்

கேள்வி:

பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

 ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய,  சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு குழப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.

இந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான  கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல்,  தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா? இதை எப்படி பார்க்கிறீர்கள்?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

பெண்ணிய அரசியல்,  சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான  நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.

பாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும்,  அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா?  அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது? மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன? இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள்  ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.

உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார  சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை.  மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல்  கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய  நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான  தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது.  இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும்.  இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு.  புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம்  நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள்  அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி  நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது,  அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணுவ சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது.  1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும்   சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம்,  இன்புற்று வாழ்தல் என்பதற்கான   மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து  தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.

அதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம்,  பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.

இன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்)  கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள்,  பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது.  அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து  கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத்  தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியின்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும்? ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது.  அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான்  தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை.  இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில்  மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே  உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.

உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது  என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.

 இந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன.  உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது.  இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கடந்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.

தீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது? சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

சமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக்  கொள்ளவும் முடியாது.

[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள் என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]

உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்

உரையாடல் : 10  இந்துத்துவம்,  இந்து தேசியம் என்பவை  இந்துக்களுக்கும் எதிரானவை

கேள்வி:

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா? இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது  ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

பதில்:

பிரேம்

தேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனைவரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு,  பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன்  ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக்  கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ்  பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய  அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.

[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய  இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.

IMAGE-1

IMAGE-2

கண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]

எண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்ப்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி.  இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு,  கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை  மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.

இந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.

பகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.

மதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே  இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.

மையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று,  மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் அடைத்து வைத்துப் பாருங்கள்  இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.

இந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல்  தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும்  இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள்  நடக்கும்.

இதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும்  இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது.  பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்  தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.

பிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது,  உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது,  ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி  எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின்  ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள்.  இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.

இதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று  இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள  ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.

பெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.  இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன.  அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின்   இந்துத்துவ சார்பு நிலை  இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.

தமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.

பின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ  பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது? அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…

இது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.

மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.

பாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள்,  மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.

குருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம்பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”

இந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.

“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு  சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள்  நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர்.  டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.

சற்றே தெளிந்து அவரிடம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன்.  உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா?” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான்  ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ!’    “ஆமாம்  பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி!”

அதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.

உரையாடல் : 5-3 இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது-பிரேம்

உரையாடல் : 5-3  இப்படியொரு மார்க்சியம் இருக்க இயலாது

கேள்வி:

உலக முதலாளித்துவம் மற்றும் மாற்று அரசியல் குறித்து ஒரு அடிப்படையான கேள்வி. பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல், மூன்றாம் பாலினத்தவர்க்கான அரசியல் என்பதெல்லாம் மேல்தட்டு அறிவுஜீவிகள் உலகு தழுவிய முதலாளித்துவம் எனும் பேரரசியல் தளத்தை ஏற்று அதற்குள்ளாகவே மேற்கண்ட உரிமைசார் போராட்டங்களை நிகழ்த்தும் களனாக மாற்று அரசியல் களத்தை மாற்றும் முயற்சி எனவும், மேற்கண்ட மாற்று அரசியல் செயல்பாடுகளை அங்கீகரிக்கவும், அவற்றையும் தம் வர்த்தக, லாப, நோக்கில் கையாளவும் உலக முதலாளித்துவ சக்திகளே தயாராக உள்ளது எனவும், (அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமீபத்திய இந்திய வருகையின்போது மதச் சார்பின்மை மற்றும் பெண்களின் சமூகப் பங்களிப்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள், உலகை குப்பைக் காடாக மாற்றிய மேற்குநாடுகளே சூழலியல் குறித்து கவலை தெரிவிப்பது, அணுமின் நிலையங்கள் மரபார்ந்த மின் உற்பத்தி முறைகளை விட குறைவாகவே வெளியை மாசுபடுத்தும் என்ற பிரச்சாரம், மேற்குலக முதலாளித்துவ நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வழங்கப்படும் உரிமைகள், போன்றவற்றை நினைவில் கொள்ளலாம்) எனவே மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் தனியார் மயமாக்குதலையும், ஏகபோக பொருளாதாரக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட உலகு தழுவிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து மீண்டும் அரசுடைமையாக்கம் பொதுவுடைமையாக்கம் என மக்களின் போராட்ட உணர்வுகளை ஒரு முனைப்படுத்துவதும்தான் தீர்வு, எனவும் சில மேற்குலக மரபு மார்க்சியர்கள் கூறிவருகிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:

வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் தனியார் மயமாக்குதல் மட்டுமல்ல மனித மயமானதாக, மனித மையத்தன்மை உடையதாக மாற்றுவதும் வன்முறையே. இந்த வன்முறையை அரசியல் மற்றும் சமூகச் செயல்திட்ட அடிப்படையில் முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டால் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் எல்லாம் தானாக நிகழ்ந்துவிடும். உயிர் மண்டலம் பற்றிய மனித அணுகுமுறை தன்மையத் தன்மை கொண்டது. தாவரங்கள், விலங்குகள், காற்று, நீர், மண் அனைத்தும் தனக்கானவை அவற்றை உடைத்தும் சிதைத்தும் திரித்தும் தனக்கானதாக மாற்றிக்கொள்ளலாம் என்னும் சுரண்டல் உணர்வுதான் உடைமை மற்றும் ஆதிக்க நடத்தையியலின் அடிப்படை. இது விலங்குகளிடம் இயற்கையானதாக, சமநிலை கொண்டதாக அமைந்துள்ளது. மனிதர்களிடம் பெருக்கப்பட்டதாக, அளவுகடந்த செயல் தந்திரங்களைக் கொண்டதாக விரிவுபட்டுள்ளது. விலங்குகள் தம் உணவுக்காகக் குறிப்பிட்ட சில விலங்குகளைக் கொன்று உண்ணுகின்றன, தம் பசியாறிய பின் ஒய்வு கொள்கின்றன. கொல்லப்படும் நிலையில் உள்ள விலங்குகள் தம் உயிரைக் காக்க விழிப்புடன் இருப்பதுடன் ஓயாமல் தப்பி ஓடியபடியும் உள்ளன. ஒரே இரைக்காக இரண்டு இன விலங்குகள் மோதிக் கொள்கின்றன, ஒரு  இனத்திற்குள்ளான உணவுப் போராட்டமும் கூட மோதலாக, கொலையாக மாறுகின்றன. தாவரங்கள்கூட ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டும் ஒன்றை ஒன்று அடக்கியும் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. இந்த இரக்கமற்ற இயற்கைச் சுழலின் இன்னொரு பகுதியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் உதவியும் வாழும் உயிர்ச்சூழலும், இன வாழ்க்கை மற்றும் இணக்க வாழ்க்கை கொண்ட உயிர் மண்டலமும் இருக்கவே செய்கின்றது. மனிதர்களிடம் உள்ள சிக்கல் இந்தப் பண்புகள் அனைத்தும் கலந்து கிடப்பதுடன் இவற்றை விளக்குவதற்கான மொழியும் நம்மிடம் உள்ளது. விலங்குகள் உயிர்வாழவும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யும் வேட்டையாடுதல், மோதியழித்தல், பின்வாங்குதல், பதுங்குதல் போன்ற இயல்பான செயல்கள் மனிதர்களிடம் போர்த்திறனாகவும் போர்த்தொழில் உத்தி யாகவும் பெருக்கமடைந்துள்ளன. இந்த அளவுகடந்த பெருக்கத்தின் ஒரு பகுதிதான் நமக்குள் படிந்துள்ள தனியுடைமை, முதலாளித்துவம், ஆதிக்கம், அதிகாரம், அடக்கு முறை, இன ஒடுக்குதல், உலக மயமாக்கம், உரிமை மறுத்தல், உரிமைக்கான போராட்டம், அடிமைப்படுத்தல், விடுதலைக்காகப் போராடுதல் எல்லாம்.

முதலாளித்துவம் மற்றும் தனிவுடைமை சார்ந்த அரசியல் பொருளாதாரத்தின் உளவியல் அடிப்படைகளை உற்றுக் கவனிக்கும் போது ஒன்று நமக்குப் புரிய வரும். தன் தேவைகளுக்கு அதிகமாகச் சேமித்தல், மற்றவர்களுக்கு உரிய பங்கையும் தானே நுகர்தல், மற்றவர்களை விடத் தன் வாழ்வின்பங்களை பலமடங்கு பெருக்கிக்கொள்ளுதல் என்னும் சில நடத்தை முறைகள் முதல் பார்வையில் தெரியக் கூடியவை. ஆனால் இதன் கடுமையான மறுபகுதி மிகுந்த வன்முறை கொண்டது. தான் உண்ணுவதில் இன்பம் காணுதலைக் கடந்து மற்றவர்களை உண்ணவிடாமல் செய்தலில் பெரும் இன்பம் காணுதல், தான் நுகரக் கூடியவைகளை மற்றவர் நுகரவிடால் செய்து களிப்படைதல், தான் இன்பம் நுகர்வதை விட மற்றவர்கள் துன்புற்று வலியுடன் வாழ்வதில் இன்பம் பெறுதல், தான் சுதந்திரமாக இருத்தலை விடத் தனக்குச் சிலர் அடிமைகளாக இருந்து துயரடைவதில் பெருமை கொள்ளுதல் என்னும் சமூக உளவியலின் மீதுதான் அதிகாரம், ஆதிக்கம், மூலதன அரசியல், தனிவுடைமைச் சட்டவிதிகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்சியத்தை அதன் அறவியல் அடிப்படையில் புரிந்து கொண்டால் விடுதலை, சமத்துவம், சமநீதி என்பவை வெறும் அரசுடைமையாக்கம், பொதுவுடைமையாக்கம் என்பதில் தொடங்கு வதுமில்லை அதில் முடிவதும் இல்லை என்பது புரியவரும்.

மனித சமூக அமைப்பாக்கம் முதலில் தனிமனிதர்களிடம் உள்ள தற்காப்பு, தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் தன்மை (இவை விலங்குகளிடம் பிறந்தது முதல் இறப்பது வரை தொடரும் பண்பு) என்பனவற்றைக் குறைத்து  இன அடையாளத்தை உருவாக்கி இனம் சார்ந்த மனித நிலையை உருவாக்குகிறது. இந்த இனத் தன்மை தனிமனிதர்களுக்குச் சமூக அமைப்பு தரும் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள் சார்ந்த ஒப்பந்தம் மற்றும் மரபான உறுதி மொழிகளின் அடிப்படையில் அமைவது. இந்த இனத்தன்மைதான் விலங்குகளையும் மனிதர்களையும் வேறுபடுத்தும் அடிப்படைக் களம். மனிதர்கள் தம்மை இனத்திடம், சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள், மற்றொரு வகையில் அவற்றால்தான் தனிமனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாம் மனிதர்களின் அரசியல் நிலை என்கிறோம். இந்த இணைப்புதான் ஒவ்வொரு மனிதரும் தனக்கானதைச் சமூகத்திடம், அரசிடம், அமைப்பிடம் கேட்டுப் பெறும் உரிமையை வழங்குகிறது. அத்துடன் சமூகம் கட்டமைத்துள்ள விதிகளைப் பின்பற்றவும், சமூகத்திற்கான தன் பங்கை அளிக்கவும் கடமைப்பட்டவர்களாகத் தனிமனிதர்களை வைக்கிறது. விளக்க மிக எளிமையானது இந்தச் சூத்திரம்: உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையிலான சமநிலை மற்றும் புரிந்துணர்வுதான் அரசியல் பொருளாதாரம். இதனை முறைப்படுத்தும் துணை அமைப்புகள்தான் பண்பாடுகள், மதங்கள், அறிவமைப்புகள், நீதி நிறுவனங்கள், அழகியல் செயல்பாடுகள் என்பன. இவற்றில் நிகழும் மாற்றங்களும், சிதைவுகளும் சமூகம், தனி மனிதர்கள் என அனைத்தையும் பாதிக்கும். மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்பதுகூடத் தேவையில்லை, மக்களின் வாழ்வியல் உணர்வுகளை ஒருமுனைப்படுத்தினாலே வரலாற்றின் அத்தனைத் துயரங்களும் அநீதிகளும் நீக்கப்பட்டிருக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதான செயல்பாடு இல்லை.

இவ்வளவு எளிமையான செயல்திட்டம் கொண்டதாக இருந்திருந்தால் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய அமெரிக்க அரசு தன்னை உடைத்துக் கொண்டு சோவியத் அரசியலுக்கு மாறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது, அதிபர் ஜியோர்ஜ் புஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், கியூபாவுடன் இணைய  சில அமெரிக்க மாகாணங்களும், சுதந்திர சோஷலிசக் குடியரசாக இருக்கச் சில மாகாணங்களும் முடிவு செய்தன என்பது போன்ற வரலாற்றுக் குறிப்புகளைத்தான் நாம் இன்று படித்துக் கொண்டிருப்போம். ஆனால் நடப்பியல் அப்படியில்லை, இன்று மிக அடிப்படையான மனித உரிமைகளை நிலைநிறுத்தவும், மக்களாட்சி நெறிகளை பாதுகாக்கவுமே மிகப்பெரும் போராட்டங்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. பொதுவுடைமைச் சமூகம் வரும்வரை பெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவை பற்றிச் சிந்திப்பதோ பேசுவதோ முதலாளித்துத்தை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று ஒருவர் நம்புவார் எனில் அதன் பொருள் “அரசியல் பற்றிச் சிந்திப்பது, அரசியல் அடைவது, விடுதலை உளவியல் என்பவை இன்றும் இனியும் சாத்தியமில்லை அதனால் செயலற்றுக் கிடந்து செத்து மடியலாம்” என்பதுதான்.

இந்திய அரசியலில் தீண்டாமைக் கொடுமை, சாதி அடுக்குமுறை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை இடதுசாரி அரசியல் இப்படியான அறியாமையுடன் அணுகி ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து   அந்நியப்பட்டு நின்றது. சாதிச் சமத்துவம் அற்ற அரசியல் விடுதலை தனது மக்களை ஏமாற்றும் திட்டம் என்று உறுதியாகச் சொன்ன அம்பேத்கரை தேசியவாதிகள், தேசபக்தர்கள் என்ற பெயர்ச்சூட்டிக் கொண்ட ஒரு கூட்டம் ஏகாதிபத்திய கைக்கூலி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

இன்று வரலாறு நமக்குப் பலவற்றை ஈவு இரக்கமின்றிக் கற்றுத்தந்துள்ளது, விடுதலை அரசியல் ஒருமையான, ஒற்றை நெடுங்கோட்டுப் பயணமல்ல. தனிமனித உளவியல் தொடங்கி தனிநாடு கோரி போராடுவது வரை இன்று புதிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. மக்களின் போராட்ட உணர்வுகளை ஒருமுனைப்படுத்துவது என்றால் என்ன?  எதனை நோக்கி அந்தப் போராட்டம் அமையவேண்டும். மக்களின் போராட்டம் என்பது என்ன? ஏன் மக்கள் போராட வேண்டும்? மக்கள் எப்போதும் பொதுவுடைமை சமூகத்தை அமைக்கவும் உலக முதலாளித்துவத்தை அழிக்கவும்தான் போராடுவார்களா, அல்லது போராட வேண்டுமா? மக்கள் என்பது ஒற்றை அடையாளமா?

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தம் இனத்தாலும் நிறத்தாலும் அடிமைப்படுத்தல், ஒடுக்குதல், ஒதுக்குதல், இழிநிலைப்படுத்தல், உரிமை மறுத்தல் என்பவற்றால் துயருற்ற கருப்பின மக்கள் முதலில் அடிமை முறையிலிருந்து விடுபட்டு மனித நிலையுடன் வாழப் போராடினார்கள். பின்பு மனித மதிப்புடன் வாழப் போராடினார்கள், பிறகு மனித உரிமைகளுடன் வாழப் போராடினார்கள், அதற்கும் பிறகு சம உரிமைகள், சம அதிகாரம், சம பங்கு எனப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். இந்தப் போராட்டம் இன்று வரை சமூகம், பண்பாட்டுப் பொதுவெளி, அரசியல் தளங்களில் தொடர்ந்து கொண்டே  உள்ளது. அமெரிக்க குடிமைச் சட்டங்களும், உரிமைச் சட்டங்களும் மாற்றமைடைந்து கொண்டே உள்ளன. தனி உடைமையும் முதலாளித்துவமும் அழிந்து பொது உடைமைச் சமூகம் உருவாகும் வரை தனக்குப் பேருந்தில் உட்கார்ந்து செல்லும் உரிமையெல்லாம் தேவையில்லை என்று அமைதியாகச் செல்லாமல் 1955-இல் ரோசா பார்க் எதிர்த்து நின்றது மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியலா? 1959-இல் கியூபாவில் ஏற்பட்ட புரட்சிகர யுத்தம் தன் நாட்டில் கருப்பின மக்களின் வழியாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் உலக அரசியலில் தன்னை வல்லாதிக்க நாடாக மாற்ற உள்நாட்டில் கருப்பின மக்களின் ஒத்துழைப்பு வேண்டும், அவர்களின் வலிமை வேண்டும் என்பதைக் கணக்கிட்டுத்தான் அமெரிக்கா கருப்பின அரசியலின் கோரிக்கைகளை சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது என்பது மிக வெளிப்படையான உண்மை. இஸ்லாமிய தேசியம், மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், கருஞ்சிறுத்தைகள் இயக்கம் என எழுச்சி பெற்ற இன உரிமைப் போராட்ட உணர்வை அமெரிக்க வெள்ளை முதலாளித்துவம் தன் அரசியல் உத்தியாக மாற்றிக் கொண்ட போதும் அப்போராட்டங்கள் கருப்பின மக்களின் வாழுவுரிமைகளை மாற்றியமைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல் என்பவை முதலாளித்துவத்தை ஏற்ற மேல்தட்டு அறிவுஜீவிகளின் அரசியல் என்றால் மார்க்சிய, மாற்று அரசியலில் அவற்றிற்கு இடமில்லை என்று பொருளா?

மரபு மார்க்சியர்கள் அல்லது கட்சி மார்க்சியர்கள் அல்லது அலுவல் உரிமை பெற்ற மார்க்சியர்கள் என்ற பெயரில் யாரும் இன்று மார்க்சியத்திற்கு உரிமைகோர இயலாது. மார்க்சியம் என்பது மாற்றத்திற்கான அறிவுருவாக்கம், மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் அறிவாய்வு முறை, அதற்கெல்லாம் கடந்து விடுதலைக்கான அறம்.

பெண்ணியம், சூழலியல், அடையாள அரசியல், தன்னடையாளச் சுதந்திரங்கள் என்பனவற்றை மறுத்து விட்டு இன்றைய மார்க்சிய அரசியல் இருக்கவே இயலாது. இந்தியச் சமூகத்தில் அது இன்னும் விரிவாகத் தலித் அரசியல், பழங்குடி மக்கள் அரசியல், மொழி அரசியல் என்பவற்றையும் புரிந்து ஏற்ற அரசியலாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இல்லையென்று சொல்லும் ஒரு மார்க்சியக் கட்சி கொடிகாத்த குமரர்களைத்தான் உருவாக்க இயலும். அவர்களால் மக்களை காக்க முடியாது, மக்களும் அவர்களைக் காப்பது பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். இடதுசாரிகள் மாற்றங்களைப் புரிந்துகொள்ளத் தவறும் போது சிவப்பிந்திய இனத்தில் பிறந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒருவர் 2025-இல் இந்தியக் குடியரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவார் மதச்சார்பின்மை, பெண்களின் சமூகப் பங்களிப்பு, இன ஒற்றுமை இவற்றுடன் சுதந்திரம், சோஷலிசம், சமத்துவம் பற்றியும்கூட இந்தியர்களுக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்லுவார்.

உரையாடல் : 9 மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்-பிரேம்

உரையாடல் : 9  மறைக்க எதுவுமில்லை மக்கள் அரசியலில்

கேள்வி:

கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், போன்றவை ஊழல ரசியலதிகாரங்களின் பிடியில் சிக்கியுள்ளன. வளரிளம் தலைமுறையின் வாசிப்பு என்பதும் சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மாற்று அரசியல் சிந்தனைகள், சீரிய கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக எவற்றை அமைத்துக் கொள்வது? அவைகளும் இணையத்தின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் அவை தீவிரக் கண்காணிப்புக்குள்ளாவதை எவ்வாறு எதிர்கொள்வது?

[ராஜகாந்தன்,அசோக்ராஜ்,கருணாகரன்]

பதில்:
பிரேம்
கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் எப்போது மக்களுக்கானதாக மக்கள் கையில் இருந்திருக்கிறது? மக்கள் அரசியல் செய்வோர், மக்களுக்காகச் சிந்திப்போர் அதில் இடம் பிடித்து விடுதலை அறிவை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். மக்களுக்கான அதிகாரம், மக்கள் உரிமை என்பவை நவீனக்கல்வி, ஊடகம் இரண்டுக்கும் அடிப்படையானவை. அதனால் மாற்றத்திற்கான, மக்கள் அரசியலுக்கான கூறுகளை அவற்றில் இருந்து முழுமையாக யாரும் நீக்கிவிடவும் முடியாது.
இன்றுள்ள இந்தியத் தமிழக அரசியல் கட்டமைப்பும் அதிகார அமைப்புகளும் கலப்பான தன்மை கொண்டவை. மக்கள் அரசியல், மக்கள் ஆட்சி, மக்களுக்கான அதிகாரம், நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகச் செயல்பாடுகள், அனைவருக்குமான வாழ்வுரிமை என்பதான நவீன மதிப்பீடுகள்தான் நம் காலத்திய அரசு மற்றும் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படைகள். இந்தச் சமத்துவ மனித உரிமை அரசியலையும் நவீன அரசதிகாரத்தையும் முற்றிலும் வெறுக்கக்கூடிய, படிநிலை அடிமைமுறையை காக்க நினைக்கும் சக்திகளின், சமூகக் குழுக்களின் கையில்தான் இன்றுவரை இந்திய அரசியல் அதிகாரம் இருந்து வருகிறது. நீதி மன்றங்களில் சாதிவெறி கொண்டவர்களின் ஆதிக்கம் நிறையும்போது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. பெண்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்த போதும் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஆணாதிக்கத்தின் கருவிகளாக இருப்பதால் பெண்களின் மீதான வன்முறையும் அவமதிப்பும் அந்த இடங்களில்தான் அதிகம் நிகழ்கின்றன. சாதி மற்றும் தீண்டாமை உளவியல்தான் இந்தியக் குடிமைச் சமூக மதிப்பீடுகளை, பழகு முறைகளை இன்றுவரை செயல்பாடற்ற நிலையில் வைத்துள்ளன. அனைத்து மக்களும் பயன்பெறும் கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, பொதுப்பணிச் சேவைகள் போன்றவற்றைப் ‘பள்ளுபறை’ அனைத்துச் சாதிகளும் பயன்படுத்த முடியும் என்பதே பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி அவற்றைச் சீரழிப்பதை திட்டமிட்டுச் செய்ய வைக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நடந்து கொள்ளும்முறை, அவர்கள் பயன்படுத்தும் இழிமொழிகள் தன்மதிப்பு கொண்ட யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு இருப்பதை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நாம் காணலாம்.
நவீன அரசியல் உயர் மதிப்பீடுகளை செயல்பாடில்லாமல் ஆக்கவும், அவற்றை அழிக்கவும் பயன்படும் கருவிகளில் ஒன்றுதான்  ஊழல் என்ற சமூகக் குற்றம். மக்கள் ஆட்சிமுறையைப் பற்றி மக்களிடம் அச்சத்தையும், வெறுப்பையும் உருவாக்க ஊழல் செயல்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன.  மக்களின் வாழ்வாதாரத்தை, தேசியப் பொருளாதாரத்தைக் கொள்ளையிடுவது மட்டுமல்ல ஊழலின் கொடுங்கேடு. சுதந்திரம், சமத்துவம், சமநீதி என்பவற்றை அழிப்பது, இழிவு படுத்துவது மூலம் நம் சமூகத்தை ஊழல் செயல்பாடுகள் மிக ஆழமாகப் பாதிக்கின்றன. ஊழலரசியல் அதிகாரம் என்பது பல அடுக்குத் தீமைகள் கொண்டது. நவீன, பகுத்தறிவு மரபுகள்  மக்களிடம் உருவாகாமல் இருப்பதற்கு இந்தத் தீயசக்திகள் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன, ஆனால் ஊடகங்களை முழுமையாக அவற்றால் கட்டுப்படுத்திவிட முடியாது.
மாற்றம் பெற விரும்பும் ஒரு சமூகத்திற்கு அதற்கான அறிவை, அழகியலை, அடையாளத்தை உருவாக்க இயக்கங்கள் வேண்டும், அவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல பல்வேறு ஊடகங்கள் வேண்டும். இவற்றில் இணையமும் வலைதளங்களும் குறியீட்டு ஊடகங்கள் தானே தவிர முழுமையான மக்கள் ஊடகங்கள் அல்ல. மாற்று அரசியல் சிந்தனைகள், செறிவான கோட்பாட்டு விவாதங்கள், அறிவார்ந்த செயல்பாடுகளின் களங்களாக வாழ்வின் அனைத்து மொழிச் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தற்பொழுது தேவையானது.
பக்திப் பாடல்களை மட்டும் பாடித் தமிழ்க்கல்வி என்றாலே பக்திப் பாயசம்தான் என்று அறிவை அழித்த தமிழாசிரியர், திரைப்பாடல்களைச் சகிக்க முடியாத குரலில் கத்தி கிச்சுக்கிச்சுமூட்டி உணர்வைக் கெடுத்த தமிழாசிரியர், எந்த ஒரு பாடலையும் கதையையும் பெரியாரிய-மார்க்சியக் கருத்துக்களின் வழி விளக்கம் சொல்லி விரித்துரைத்த தமிழாசிரியர் என மூன்று வகையான ஆசிரியர்களிடம் நான் பாடம் கேட்டிருக்கிறேன்.
பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் இணைந்து படிக்கும் வகுப்பில் இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி அரட்டை அரங்கம் நடத்திக் களிக்கும் வக்கிர மனநோய் கொண்ட தமிழாசிரியர்களும், தம்மிடம் படிக்க வரும் மாணவர்களை இரண்டு ஆண்டுக்குள் அறிஞர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் உலக வரலாறு தொடங்கி ஊடக அறிவியல் வரை தமிழில் பேசி மாணவர்களிடம் கிறுக்கு வாத்தி எனப் பெயரெடுத்த தமிழாசிரியர்களும் ஒரே மேல்நிலைப் பள்ளியில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவை இப்படித்தான் பலபடித்தான வகைமாதிரிகளால் நிரம்பி உள்ளன.
வளரிளம் தலைமுறையின் வாசிப்பு சமூக வலைதளம், மற்றும் இணையத்தோடு முடிந்துவிடுவதாக நான் நினைக்கவில்லை. அவற்றில் தொடங்குகிறது என்றும், சில கட்டங்களில் அவற்றின் வழியாகவாவது படிக்கிறார்களே என்றும் ஆறுதல் அடைகிறேன். ஏனெனில் மாற்று அறிவு என்பது எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை.
நூல்கள் இன்று அதிக அளவில் உற்பத்தியாகின்றன, அதிக அளவில் விற்பனையாகின்றன, பலர் நூல்களை வாங்கி இல்லங்களை அலங்கரிக்கிறார்கள். பலருக்கு நூல்கள் அழகிய வண்ண அட்டைப் படத்துடன் வருவது பிடித்திருக்கிறது. மின்படியெடுத்து படிக்கும் பழக்கமும் அதிகமாகி உள்ளது. ஆனால் பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடும்போது 24 பேர்தான் பங்கேற்க வருகிறார்கள். அதில் 10 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட சமூகச் செயல்பாட்டாளர்கள்.  “இந்தியா வல்லரசு நாடாக வளர்வதை இந்தப் பழங்குடியினர் மண் காக்கும் போராட்டம் என்ற பெயரில் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டுள்ளனர், சுரங்கங்களைத் தோண்ட விடாமல் கலவரத்தில் ஈடுபட்டால் காவல்துறை சுடாமல் என்ன செய்யும்?” என்று சமூகவியல் அறிஞர்களாகிக் கேள்வி கேட்கும் இளைஞர்கள் இன்று அதிகம்.
“அணு உலை வேண்டாம் எனப் போராடும் மக்களை அடித்துக் கடலில் வீசாமல் வேடிக்கைப் பார்க்கிறது இந்த அரசு” என்று சொல்லும் தீவிரவாத தேசபக்த இளைஞர்கள் “அப்படிச் செய்ய முடியாது, அணுவுலை வேண்டாம் என்பவர்கள் அனைவரையும் ஒரு ரயில் அடைத்து பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் தள்ளிவிட வேண்டும், பவர் சப்ளை இல்லாம வாழ முடியாதுன்றது அப்பத்தான் அவங்களுக்குப் புரியும்” என்று சொல்லும் மிதவாத தேசபக்த இளைஞர்கள் என எல்லோரும் எதையாவது படிக்கவே செய்கிறார்கள், ஆனால் அவர்கள் அரசியல் தான் அச்சுறுத்துவதாக உள்ளது.
வீடு முழுக்க அரசியல் புத்தகங்கள், ஊர் ஊராகச் சென்று இளைஞர்களைப் போராடத் திரட்டும் அறைகூவல் பேச்சு, புரட்சியைத் தவிர வேறு எதைப் பேசினாலும் முகம் கடுக்கும் அரசியல் பற்று கொண்ட சில மூத்த தோழர்களின் பிள்ளைகள் அரசியல், சமூகம் என எதையும் தெரிந்து கொள்வதில் விணாகக் காலத்தைச் செலவிடாமல் முதல் மதிப்பெண் பெற்று போட்டித் தேர்வுகளில் சாதனை புரிந்து குறைந்தது மருத்துவத்துறை வல்லுனர்கள் என்ற நிலையையாவது அடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இவர்கள் தம் பிள்ளைகளிடம் மக்களுக்காக உயிரைக் கொடுங்கள் என்று சொல்லவில்லையென்றாலும் மக்களின் உயிரையெடுக்காமல் இருங்கள் என்றாவது அவர்களுக்குச் சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை…
நான் சொல்ல வருவது அரசியல் கல்வியானது தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம்  வருவதில்லை, அவற்றை மீறி உருவாகும் அரசியல் கல்வியை அவை தடுக்க முடிவதும் இல்லை… அரசியல் இயக்கம் போல அறிவுக்கான இயக்கங்கள் தேவை, அவை இணையம், சமூக வலைதளங்கள் வழியாக முன்பு இருந்ததைவிட அதிக ஆற்றலோடு நிகழமுடியும். மாற்று அரசியல் சிந்தனைகள், மாற்று அரசியல் செயல்பாடுகள் இன்று இணையம் வழிப் பெருகியிருப்பதைக் காணமுடிகிறது. அடக்குமுறையும் ஆதிக்கமும், முதலீட்டுக் கொடுங்கோன்மையும் அரச பயங்கரவாதமும் உயர் தொழில்நுட்ப உதவியுடன் உலகமயப்படும் என்றால் அதற்தெதிரான சிந்தனைகளும் செயல்பாடுகளும் உலகமயப்படுவதும் தவிர்க்க முடியாதது. அதற்கு ஒரு உதாரணம் தீண்டாமைக் குற்றங்கள், சாதி வன்முறைகள் நிகழும்போது முன்பு வெளித்தெரியவே பலமாதங்கள் ஆகும் அதற்குப்பிறகு அதற்கெதிரான குரல்கள், போராட்டங்கள் எழுவதற்குள் இன்னும் பல இடங்களில் வன்முறைகள் நடந்துவிடும். இன்று பதிவுகள் உடனடியாகச் சென்று சேர்கின்றன, எதிர்ப்புக் குரல்கள் எழுந்து கொடுமையின் கைகளைப் பின்னோக்கி இழுக்கின்றன. பசுமை அரசியல், பெண்ணிய அரசியல், அடையாள அரசியல், இனக்குடி அரசியல் இணையங்கள் வழியாக உலக மாற்றுச் சிந்தனையாளர்களை இணைத்துள்ளன. அறிவுக்கெதிரான, உழைப்பைக் கண்டு அஞ்சும் ஒரு கூட்டம் ஊடகத்தை, தொழில் நுட்பத்தைத் தமக்கெனப் பயன்படுத்த முடியும் என்றால் அறிவும் உழைப்பும் உள்ள மாற்றுச் சிந்தனையாளரகள், அரசியல் குழுக்கள் பயன்படுத்த முடியாதா என்ன!  எந்த அடிப்படை வசதியும் இல்லாத காலத்திலேயே “அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகளை (பம்பாய் மாகாணக் கணக்கு)  பறையர் பறையர் என்று தாழ்த்தி பதிகுலைத்த பரிதாபத்தை” அயோத்திதாசர் தம் மக்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பதையே தம் வாழ்வாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் என்றால் இன்று நமக்கு முதல் தேவை மாற்று அரசியலைத் தேர்ந்தெடுக்கும் நேர்மை.
இது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய மின் எண்ணியல் வலைப் பின்னல்கள் நம்மை அதற்குள் இழுப்பதற்குக் காரணமே அதற்கு வெளியே உலகம் என எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு வருக்குமான ஒரு உள் இருப்பதை அழிப்பதற்காகவும்தான். இதிலிருந்து வெளியே இருப்பதுதான் மாற்று அடையாளத்தைத் தகவமைப்பதற்கான எளிய வழி. வலைதளக் கண்காணிப்பு பற்றி நமக்குத் தெரிந்ததுதான். மின்னஞ்சலில் என் மகளுக்கு ஒரு நூலைப்பற்றி ஒரு முறை குறிப்பிட்டிருந்தேன், அதற்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு நான் இணையத்தைத் திறக்கும் போதெல்லாம் அந்த நூலுக்கான விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. அன்புள்ள பப்பி என மின்னஞ்சலின் முடிவில் குறிப்பிட்டிருந்தால் நாய்குட்டி பொம்மைகளின் விளம்பரங்கள் தனிக் கட்டத்தில் வந்து சிரிப்பு மூட்டுகின்றன. ஆனால் நாம் எந்த சதித் திட்டமும் தீட்டவில்லை. அதனால் கண்காணித்தாலும் காதைக் கடித்தாலும் அச்சப்பட  ஒன்றுமில்லை…
மக்கள்  அரசியல் மறைப்புகள் இன்றி ரகசியமின்றி இருக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் எனக்கு உண்டு. உறதியாகச் சொல்ல முடியவில்லை… ஆனால் நான் நம்புகிறேன். தகவல் தொடர்புகள், ஊடகங்கள், இயந்திரக் கட்டமைப்புகள் மறுத்து கைபற்றிப் பேசி, கூடி உரையாடி மக்கள் அரசியலை, மாற்று அரசியலைக் கட்ட வேண்டும். நிகழ்கலைகள், நெகிழ்வான கருத்தியல் கல்வி போன்றவைதான் மக்களுக்கானவை, மாற்றமுறும் அரசியலுக்கானது… மின்னணுவியலும் மிகையான தகவல் தொடர்பும் தற்காலிகமானவை, தம்மளவிலேயே பெருங்கட்டமைப்பு சார்ந்தவை, ராணுவத்தன்மை கொண்டவை,  ஒரு வகையில் மக்கள் அறிவை மறுப்பவை… இவை ஒரு இடைக்கால பதிலீடுகள் மட்டும்தான்…

உரையாடல்: 5- 2 அழிவைக் கொண்டாட எழுதலாம்-பிரேம்

உரையாடல்: 5- 2

அழிவைக் கொண்டாட எழுதலாம்

கேள்வி:

மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை…அதுதான் இன்றைக்கான அழகியல்,  கவிதையியல் அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த் தெடுப்பதும்தான் மக்களுக்கான இலக்கிய வாதிகள் என்பவர்களின் பணி  என்கிறீர்கள். கலை இலக்கியங்களில் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் செயல் திட்டங்களோடு அவற்றைப் புனைவது என்பது படைப்பாளிகளின் படைப்புத்திறனை (creativity),குறுக்குவதில் முடியுமல்லவா? மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா? மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதை காணமுடிகிறதே?

பதில்:

இந்தத் தளத்திலான விவாதம்  மாற்றுக் கலை-இலக்கியக் கோட்பாடு என்ற பெயரில் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்று.  படைப்பாளிகளின் படைப்புத் திறன் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கேள்வியை மேம்போக்காக அணுகும்போது நியாயமான அக்கறை போலத் தோற்றம் தரும். ஆனால் இதற்குள் வரலாற்றுத் திரிபும், அரசியல் செயல் திட்டமும் பொதிந்துள்ளன. கலை இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே தனிமனிதர்களின் உற்பத்திபோலத் தோற்றம் தரும் கூட்டுப் படைப்புகள். தனிமனிதர்கள் கலைஞர்களாக உருவாதல் வரலாற்று முன்புலம், சமூக நிகழ்களம் சார்ந்த ஒரு நிகழ்வு. சமூகத்தின் அக்காலத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள கலை வடிவங்கள் மற்றும் கலை சார்ந்த நுட்பங்கள் எனப் பலவிதமான கூறுகள் இணைந்து கலைச் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.

நாடகம் என்ற ஒரு வடிவம் இல்லாமல் ஒரு நாடகக் காப்பியத்தையோ, திரைப்படம் என்ற வடிவம் இல்லாமல் ஒரு திரைக்கதையையோ படைப்பாற்றலை மட்டும் கொண்டு  ஒருவர் உருவாக்கிவிட முடியாது. இலக்கியத்தில் இது  மிகத்தெளிவான ஒரு நிகழ்வு. உலக இலக்கியம் என்பதோ, தேசிய இலக்கியம் என்பதோ உருவாகாத ஒரு நிலையில் இலக்கியங்கள் சமயம் சார்ந்தோ, அரச மண்டலம் சார்ந்தோதான் உருவாக முடியும். சமயம், மற்றும் அரசின் புனிதம் பற்றியும் அதற்கு மாறாக மக்கள் நடக்கும் பொழுது நிகழும் துன்பங்கள், தீமைகள் பற்றியும் தான் செவ்வியல் இலக்கியங்கள் பேசுகின்றன. இதிகாச, காப்பிய எழுத்துக்கள் எது தர்மம் எது அதர்மம் என்பதைப் பற்றியவைகளாக உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயன்களைச் சுற்றியே இந்திய இலக்கியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இலக்கியச் சூத்திரம் மட்டுமில்லை மிக எளிமையான ஒரு அரசியல் சூத்திரமும்கூட. பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், இன்பம் சார்ந்த இலக்கியங்கள், போர்ப் பெருமை பேசும் இலக்கியங்கள் என ஒவ்வொரு வடிவமும் அவ்வக்கால அரசியலின் தெளிவான வெளிப்பாடுகள்தான். பௌத்தமும் சமணமும் போர், அடக்குமுறை, வெற்றிப் பெருமிதம், வன்கொடுமைகள் பற்றி சமூக உளவியலில் தடைகளை உருவாக்கிய பொழுது பேரரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது, சார்வாக, லோகாயத, ஆஜிவக மரபுகள் உருவாக்கிய பற்றற்ற தன்மை வணிகப் பெருக்கம், செல்வக் குவிப்பு, நகர சமூகத்தின் கேளிக்கைக்காக மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு எதிராக அமைந்தது. இதற்கு மாறாக மகாபாரதம், ராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் போரின் தேவையை உணர்த்தவும் வீரமும் வெற்றியும் சத்திரிய-அரச தர்மம் என்று நிலைநிறுத்தவும், செல்வப் பெருக்கம், நகர வாழ்க்கை பற்றிய மதிப்பீகளை மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டன. காளிதாசன், கம்பன் போன்ற பாவலர்கள் மகாகவிகளாக போற்றப்படுவதற்கு அவர்கள் கால அரசியலுக்கும், சமய விதிகளுக்கும் இயைந்த, அவற்றை பெருமை செய்யும் படைப்புகளை அவர்கள் உருவாக்கியதுதான் காரணம். தொன்மையான சமூகங்களில் சமய நம்பிக்கை, அரசின் புனிதம் இரண்டையும் ஏற்காத ஒரு எழுத்து உருவாக இயலாது, அப்படி உருவாகும் பொழுது அது மாற்று சமயம், மாற்று அரசு பற்றியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்,அழிக்கப்படும், தடை செய்யப்படும். அப்படிப்பட்ட  எழுத்துக்களை சிறுகுழுக்கள் தமக்குள் பாதுகாத்து வேறு காலகட்டத்தில், வேறு சமூகத்தில் பரப்பும் முயற்சியை மேற்கொள்ளும். இந்தப் பின்னணியில் அரசியல் செயல் திட்டம், சமயப்பற்று, படைப்பாற்றல்  என்பவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத செயல்பாடுகள் என்பது புரிய வரும்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை.

என்று ஒருவர் பாடும்பொழுது இறைநம்பிக்கை, சமயப்பற்று, அரசியல் திட்டம், பக்தி, படைபாற்றல், போர்க்குணம் அனைத்தும் கலந்த ஒரு சொல்லாடலாக வெளிப்படுகிறது. சைவத்தைக் காக்க சிவனடியார்கள் வைணவ அரசர்களை எதிர்த்து சிவபதம் சேர்ந்ததும், வைணவ நம்பிகள் சைவ அரசர்களின் அடக்குமுறையை எதிர்த்து வைகுண்டம் சேர்ந்ததும் அரசியல், சமயம், இறைநெறி அனைத்தும் கலந்த உளவியலின் வெளிப்பாடுகள். இவற்றைப் பதிவு செய்வனதான் இலக்கியங்கள், இதனை நுட்பமாகப் பதிவு செய்வதுதான் படைப்புத்திறன் என்று அறியப்பட்டது. கம்ப ராமாயணத்தை ஒரு வீரசைவரோ, திருவாசகத்தை ஒரு வீர வைணவரோ படைப்புத் திறன் கொண்ட பனுவல் என ஏற்க இயலாது. கிறித்துவம் பைபிள் தவிர அனைத்து நூல்களையும் சாத்தானியம் சார்ந்த சதித்திட்டங்கள் என்று அறிவித்திருந்த காலம் உண்டு. பிற சமய நூல்களை வாசிப்பது மட்டுமல்ல வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களாக கிறித்தவம்,இஸ்லாம் இரண்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்கள் இருந்தன.

இன்று நாம் அந்த வகையான சமய மைய, அரசுமைய நிலையிலிருந்து வெளியேறி இருக்கிறோம். இந்த வெளியேற்றமே, இந்த வகை புதிய இலக்கிய வடிவமே அரசியல் தேர்ந்தெடுப்ப்புதான். நாம் இன்று நவீன எழுத்து என அறியும் ஒரு செயல்பாடு பல உயிர்களைக் காவு வாங்கிய பின், பல இலக்கியவாதிகள், வாசகக் குழுக்களைப் பலிவாங்கிய பின் உருவாகி வந்த ஒன்று. இதன் உலகத் தன்மை, இதன் வரலாற்று வடிவம், இதனுடன் தொடர்புள்ள  படைப்பாற்றல், படைப்புரிமை, படைப்புத்திறன், படைப்புச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், எழுதுபவர் என்னும் தன்னடையாளம் அனைத்தும் மக்கள் அரசியலால் உருவாக்கப்பட்டவை, உறுதியளிக்கப்பட்டவை, பாதுகாக்கப்படுபவை. நாம் நவீன இலக்கியம், நவீன கலை என எதனை உருவாக்கினாலும் அதில் மக்கள் அரசியல், மனித உரிமை அரசியல், தனி மனித விழுமியம் என்பவை உள்ளடங்கி உள்ளன. சமயங்களோ, கொடுங்கோன்மை அரசுகளோ, புனித மரபுகளோ இந்த படைப்புரிமையை, படைப்பாற்றலை நவீன படைப்பாளிகளுக்கு வழங்கிவிடவில்லை. படைப்பாளிகள் மக்களை மறந்து விட்டு எழுதலாம், மக்களை மனதில் கொள்ளாமல் எழுதலாம், மக்களுக்கு எதிராகவும் மக்கள் வெறுப்பிலும்கூட எழுதலாம், ஆனால் அவர்கள் எழுத்து மக்கள் அரசியலின் உயிர்ச்சத்தில் உருவாவது. மக்கள் அரசியல் என்ற புதிய புலன்கள் கொண்டு அமைவது. மக்கள் அரசியல், மக்கள் தேசியம், மனித உளவியல் என்பவைதான் இந்த எழுத்துக்களின் களம், செயல்பாடு அனைத்தும். தமக்குப் பின்னால் மக்கள் சமூகமும், மக்கள் நீதியும், மக்கள் அரசியலும் உள்ளன என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு எழுத்துக் கலைஞரும் எதையாவது எழுதுகிறார்கள், அது சிறிய அளவிலோ, பரந்துபட்ட அளவிலோ இருக்கலாம் ஆனால் அங்கு மக்கள், மக்கள் அரசியல் என்ற கருதுகோள் மிக அடிப்படையாகச் செயல்படுகிறது.  மக்களை மறந்த, மக்கள் அரசியலை மறுத்த நவீன எழுத்து என்ற தொடரே கோட்பாட்டு, கட்டமைப்பு வகையில் ஒரு இல்பொருள் உருவகம்,  ‘மார்க்சிய முடியாட்சி’ என்பது போல ஒரு முரண் தொடர்.

அடுத்து இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் என்று பகுத்து அறிவது பற்றி. மக்கள் அரசியல், பன்மை அரசியல், பிரதிநிதித்துவ அரசு என்பதைக் கொண்ட நம் நாட்டில் மக்கள் என்ற அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதல்ல. சாதி, குலம், மொழி, இனம், வர்க்கம், கிராமம், நகரம், அதிகாரப் பகிர்வு, வாழ்வாதார பங்கீடு, பாலின உரிமைகள் என்ற வகையில் பலவகை வேறு பாடுகளை, அடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன மக்கள் குழுக்கள். அப்படியெனில் இதில் ஏதாவதொரு பகுதியைச் சார்ந்து, ஏதாவதொரு பகுதியின் பிரதிநிதியாக, ஏதாவதொரு பகுதியை நோக்கித்தான் எழுத்துக்கள் அமைய முடியும். அதன் கவிதையியல், அழகியல், இலக்கிய வடிவம், வகைமை, எடுத்துரைப்பு முறை என்பவை ஏதாவதொரு பண்பாட்டு, கருத்தியல் அடிப்படையில்தான் அமைய முடியும். இதில் நடுநிலை, பொதுத்தன்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கும் கவிதையியல் என்பதெல்லாம் நடப்பியல் சாத்தியமற்ற வெற்றுச் தொடர்கள்.  ‘இந்தியர்களாகி நாம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை வரியின் இந்தியர்கள் எங்கிருக்கிறார்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் தவிர. ஆனால் இதற்கு ஒரு கோட்பாட்டுப் பொருண்மை உள்ளது. அது போலத்தான் எழுதும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மக்கள் தொகுதியை கருத்தியல் பொருண்மையாகக் கொண்டுள்ளனர்.

 “மின்கம்ப முடுக்குகளில் பறவைக்கூடுகள் 
இடும் ஒவ்வொரு முட்டையும்
பறவையறியா புதிய நிறத்தில்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது தாய்ப்பறவை
பாலித்தீன் இழைகள் சிலிக்கான் துகள்கள்
ஒவ்வொரு முறையும்
பறக்கத் தொடங்கும் குஞ்சுகளின் முதல் பயணம்
பன்னாட்டு நிறுவனத்தின்
வானம் மறைக்கும் கண்ணாடிகளில்
மோதிச் சிதறுகிறது
சிதறிய தசைகளை உண்டு
அடுத்த அடைகாப்பிற்கென
உயிர் தரித்திருக்கிறது
தாய்பறவை.”

என்ற ஒரு கவிதையை எழுதி இதனை அனைத்து மக்களுக்குமானது என நான் எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் ஒரு வகையில் இதனைக் கவிதை என்றுதான் நான் எப்படிச் சொல்ல இயலும். ஆனால் இயற்கையரசியல் உணர்ந்த, சூழலரசியல் புலன் கொண்ட ஒருவரின் கண்களை இந்த வரிகள் ஈரமாக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

“காத்திருக்கிறேன் அலைபேசி அழைப்புக்காக

வந்து சேராத குறுஞ்செய்தியில்

சிக்கிக் கொண்டுள்ளது என்

தூக்குக் கயிறை அறுக்கும் கத்தி“

என்ற துணுக்கை எழுதிவிட்டு இந்த நூற்றாண்டின் காதலர்கள் அனைவருடைய வலியையும் தாங்கியுள்ளது இக்கவிதை எனத் தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு கவிஞர் சொல்வாரெனில் அதனை மறுக்க நமக்கு உரிமை இல்லைதான்.  ஆனால் குறைந்த பட்சம் தொலைபேசி இல்லாத ஊர்களில் உள்ள காதலர்களையாவது கொஞ்சம் விட்டுவிடுங்கள் என்று நாம் சொல்லக்கூடாதா என்ன.

நான் சொல்ல வருவது அதிக சிக்கலற்றது: எழுத்து ஒவ்வொன்றும் அரசியலுடையது. அது ஏதாவது ஒரு பிரிவு மக்கள் பற்றியது, மக்களின் வாழ்வு, கனவு, துயரம், களிப்பு பற்றியது. சிலர் ஒடுக்கப்பட்ட, துயறுரும் மக்களின் வாழ்வு, வரலாறு பற்றியோ, விடுதலை விரும்பும் மக்களின் மொழியிலோ எழுதுகிறார்கள். சிலர் யாரும் ஒடுக்கப்படவில்லை, இதுதான் நம் காலத்திய வாழ்வு, இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நிறுவ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதிப்பார்க்கலாம் என எழுதுகிறார்கள் அதனையும் சில மக்கள் தம் எழுத்தாக கொண்டாடிக் களிக்கிறார்கள். இவை அனைத்தும் பெரும் அரசியல் போராட்டத்தின், வாழ்வுரிமைப் போராட்டத்தின் நுண்மையும், பருண்மையுமான செயல்பாடுகள்தான். ஒடுக்குமுறை அரசியல், உலகமயமான சுரண்டல், பன்னாட்டு அதிகார மையங்கள், இயந்திர-தொழில் நுட்ப முதலீட்டியம் என்பவற்றின் வன்முறைகள் பற்றித் தெளிவான புள்ளி விவரங்களுடன் எழுதுவதுதான் மக்கள் அரசியல் என்று இல்லை. இன்றைய வாழ்க்கை, இன்றையக் கனவுகள், இன்றைய வலிகள், இன்றைய மனச்சிதைவுகள் பற்றி எழுதும் எல்லா எழுத்தும் அரசியல் எழுத்துக்கள்தான். எழுதுகிறவர்கள் அரசியலற்றவர்களாக இருக்கலாம், ஆனால் எழுத்துக்கள் அரசியலற்று இருப்பதில்லை. எழுதுகிறவர்கள் எழுத்தில் உள்ள அரசியலை எவ்வளவு முயற்சி செய்து அழித்து அழித்து எழுதினாலும் அழித்த தடங்களும் படிந்து, அழித்த வரிகளும் இணைந்து அவற்றை அதிக அரசியலுடையவையாக மாற்றும்.

மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதைக் காணமுடிவதாக நீங்கள் சொல்வது  இன்றைய இலக்கியத்தில் மட்டுமல்ல தொல்சமூக இலக்கியங்களில்கூட நிகழக்கூடியது, அது வாசிப்பின் வழி அமைவது. நவீன வாசிப்பில் அனைத்தையும் மக்கள் மையப் பார்வையில் அணுகும்போது மக்கள் அரசியலும், பிரச்சினைப் பாடுகளும் புலப்படும்.  இதனைத்தான் நாம் அரசியல் வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்கிறோம். மக்களை மறுத்தும் மக்களை இழிவுபடுத்தியும் மக்களுக்கு எதிராகவும் எழுதலாம்,  மக்களை அழிப்பது பற்றிய திட்டங்களைக்கூட எழுதலாம். ஆனால் மக்களைப் பற்றி,  ஏதாவதொரு மக்கள் குழுவின் பின்புலத்தில்தான் எழுத முடியும்.  யூத மக்களை அழிதொழிப்பது பற்றிய பெருமை பேசும் ஜெர்மனிய எழுத்துக்களில் இருந்துதான் இனப்படுகொலையின் மக்கள் உளவியலை நாம் புரிந்துகொள்கிறோம், பாலஸ்தினிய மக்கள் மீதான இஸ்ரேலிய வெறுப்பை அவர்களின் எழுத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறோம். அமெரிக்க கருப்பின மக்கள் பற்றிய வெள்ளையின எழுத்துக்கள், திரைப்படங்கள் வழியாக கருப்பின மக்களின் வரலாற்றுத் துயரை நாம் கண்டுணர இயலும். ஐரோப்பிய மத்திய கால ஓவியங்கள் கருப்பின அடிமைகள் பற்றி ஆவணங்களோ, பதிவுகளோ அல்ல ஆனால் ஒவ்வொரு ஓவியத்திலும் பின் விளிம்பில் துயருற்ற கருப்பின அடிமைகளின் நிழல்கள் படிந்துள்ளதை மறைத்துவிட முடியாது. உங்கள் கண்கள்தான் உங்களின் முதல் அரசியல் கருவி, காண்பதும், காண மறுப்பதும் உங்கள் அரசியலை, கருத்தியலைப் பொறுத்தது.

இன்னொரு தகவல்  ‘மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகள்’ என்பதுகூட தவறான ஒரு விளக்கம். மக்கள் பற்றிய மாறுபட்ட பார்வை கொண்ட பிரதிகள், மக்கள் அரசியல் பற்றிய மாற்றுக் கருத்துக் கொண்ட பிரதிகள், மக்களைவிட அதிகாரம், ஆதிக்கம் இவையே மேலானவை என்ற பார்வை கொண்ட பிரதிகள், தன்னுடைய மக்களைத் தவிர பிற மக்களின் மதிப்பினை ஏற்காத பிரதிகள் என்று அடையாளப் படுத்துவது இன்னும் விளக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களை மனதில், நினைவில் கொள்ளாத பிரதிகளின் தொகுப்பு  என்று அடையாளப்படுத்தலாம் தானே?

சாப்ளின், சே, பாப் மார்லே படங்கள் ஆடை வடிவமைப்பில் இடம் பெறுவது பற்றிய மாணவர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்கள். பாப் மார்லியின்  பெரிய படத்தை ஒரு அலங்கார உணவு விடுதியில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்று ஒரு  இளைஞர் கூட்டம்  சொன்னதாம்.  அவர்கள் சொன்ன காரணம்  “சாப்பிடும் இடத்தில்  இப்படியொரு படமா, அந்த முடியும் முகமும் குமட்டலை உருவாக்கும்.” அதில் உண்மை இருக்கலாம், அவர்களுக்கான உண்மை. அந்த இளைஞர்களைக் கூட்டமாகப் பார்த்தால் நமக்கு ஒரு வாந்திக்குவியலாகத் தோன்றலாம் இது நமக்கான உண்மை.

பாப் மார்லியைத் தன் அறை முழுதும் ஒட்டி வைத்திருக்கும் மேட்டுக்குடி இளையோர் பற்றியும் நமக்குத் தெரியும், இதுவும் கவனத்திற்குரியது. அந்த முகத்தின் பின் மறைந்துள்ள மக்களை மனதில் கொள்ளாமல் அதனை ஒரு ஓவியமாக மட்டும் காண இயலுமா, இயலக்கூடும். ஆனால் அந்த முகமும் அதன் பின்னுள்ள வரலாறும், அந்தச் சடைமுடியும், அந்தக் குரலும் அந்த மக்கள் பற்றித்தான் பேசுகிறது. இந்தியர்களை இழிவானவர்களாக விளக்க எழுதப்பட்ட காலனியகால இலக்கியங்கள், குறிப்புகள், ஆவணங்களில் இருந்துதான்  இந்திய வரலாற்றைத் தொகுத்தெழுதியிருக்கிறோம்.

உரையாடல்: 5: 1 வைதிகம் அழிந்த இந்து மதம்? -பிரேம்

உரையாடல்: 5 – 1 வைதிகம் அழிந்த இந்து மதம்?

கேள்வி:

அரசுகளின் கருவிகளாக மாற்றப்பட்டிருந்த பவுத்த, சமண, கிறிஸ்தவ மதங்கள் மக்கள் அரசியல், மற்றும் மார்க்சீய சிந்தனைகளின் தாக்கம் பெற்று தற்போது மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த,  அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறு விளக்கம் செய்து கொள்கின்றன என்கிறீர்கள். இந்து மதத்தில் மேற்கண்ட சிந்தனைகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாகக் கூறமுடியுமா? அல்லது அதன் சாதிக் கட்டுமானம் தகர்க்கப்படாதவரை அதனை மக்கள் நலன் சார்ந்ததாக மறு விளக்கத்திற்கு உட்படுத்த இயலாது எனச் சொல்லலாமா ?

பதில் :

பௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் மதங்களுக்கிடையில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளன. இவை தொல்சமூக மதங்கள் போலக் காலப்படிவுகளாக, சமூகப் பழமை வழக்குகளாக மட்டும் அமையாமல்  புதிய கருத்தியல்கள், புதிய சமூகப் பார்வைகள் கொண்டு கட்டப்பட்டவை. இவற்றின் குருமார்கள், போதகர்கள் மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கான புதிய கருத்துக்களை, புதிய நம்பிக்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

மக்கள் அதுவரை தாங்கள் கொண்டிருந்த சமய அமைப்பின்கீழ் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அறிந்தோ அல்லது அவற்றால் தமக்கு ஈடேற்றம் கிடைக்காது என்று தெளிந்தோ இந்தப் புதிய சமய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். இவை ஒருவகையில் சமூக, அரசியல் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. கிறித்துவம், இஸ்லாம் இரண்டும் இன விடுதலை, இனக்குழு ஒன்றிணைப்பு என்னும் வரலாற்றுச் செயல் பாடுகளாகவே தொடக்கம் பெற்றன. யேசு கிறிஸ்துவின் உயிர்த்தியாகம், நபித் தோழர்களின் போராட்டத் தியாகங்கள் மக்களின் கூட்டு நினைவுகளாக, குறியீட்டுச் சடங்குகளாக அம்மதங்களில் படிந்துள்ளன. அதன் குருமார்கள் பின்பு தெய்வங்களாகவோ, தேவதூதர்களாகவோ, புனிதர்களாகவோ மாற்றப்படுவது மானுடவியல் அடிப்படையில் இயல்பான ஒரு நிகழ்வு.

மக்கள் பெருமளவில் ஏற்காமல் மதங்கள் பெரும் அமைப்புகளாக மாறுவதில்லை. இவற்றில் கிறித்துவமும் இஸ்லாத்தும் இறைநம்பிக்கை கொண்ட, இறையியல் விதிகள் கொண்ட மதங்கள், அதே சமயம் தெளிவான அரசியல், பொருளாதார, சமூக, சட்டவியல் கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றில் மக்களுக்கான, சமூக நலனுக்கான உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள் உள்ளன. இவற்றில் உள்ள அறம், ஒழுக்கம், இறையச்சம், சமூக நலம், நீதி பற்றிய கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படும் பொழுது மக்கள் அடக்குமுறைக்கும், ஏமாற்றுதலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாவது வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மிக எளிமையான ஒரு கேள்வியின் மூலம் இவற்றை சமய அறவியலாளர்கள் எதிர்க்க இயலும். இதுதான் கிறித்துவின் அறமா ? இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா? இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) ?  இதுதான் இஸ்லாத்தின் நீதியா? என ஏதாவது ஒரு கேள்வியில் தொடங்கிச் சீர்திருத்தம், மறு சீரமைப்பு நோக்கி மக்கள் இயக்கமாக மாறு வதற்கான இடம் இந்த மதங்களுக்குள் உள்ளது. துன்புறும் மக்களுக்கு மீட்சி, எளியோருக்கான நல்வாழ்வு என்ற நீதி யுணர்வுகள் அம்மதங்களின் உள்ளடக்கத்தில் உள்ளவை. அதே சமயம் அரசுகள், அடக்கு முறையாளர்கள் மக்களின் இறை அச்சத்தை மட்டும் பயன்படுத்தித் தம் கொடுங் கோன்மைகளை, சுரண்டல்களை எளிதாக நிகழ்த்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டுவித நிகழ்வுகளும் வரலாற்றில் மாறி மாறிப் பதிவாகியுள்ளதை நாம் காண் கிறோம்.

இந்து மதம் என்ற   மதத் தொகுதியின் வரலாறு இவற்றிலிருந்து வேறுபட்டது. வர்ணப் பிரிவுகள், ஆதிக்கப்படிநிலை கொண்ட சாதி அமைப்பு, தீண்டாமை என்னும் வன்கொடுமை, பெரும்பான்மை மரபுகளை இழிவுறுத்தும் பிராமண மேலாதிக்கம் என்பவை இதன் தீராத அநீதிகளாக இருந்து வருகின்றன.  மனித நேய மறுசீரமைப்புகளைத் தடுக்கும் அடிமை உளவியல் இதன் மிக் கடுமையான ஒரு பகுதி. இதற்கெதிரானவை பௌத்த-சமண மரபுகள், இவை முழுமையாக இந்தியச் சமூகங்களை மாற்றியமைக்கும் முன்பு திரிக்கபட்டன, அழிக்கப்பட்டன, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டன.

அண்ணல் அம்பேத்கர் மதங்களை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்: தொல்சமூக மதங்கள் (Primitive Religion) சட்டவிதிகளால் அமைந்த மதங்கள் (Religion of law) மெய்யியல் சார்ந்த மதங்கள் (Religion of Philosophy), இவற்றில் தொல்சமூக மதங்கள் வாழ்வியலுடன், இயற்கையுடன் நேரடி உறவுள்ளவை என்பதால் தொல்குடி மக்களுக்கு அது உகந்தது என்கிறார். மெய்யியல் அல்லது அறம் சார்ந்த மதங்கள் மக்கள் விடுதலைக்கானவை, நல் வாழ்வுக் கானவை, பௌத்தம் அவ் வகையில் அறம் சார்ந்த, பகுத்தறிவுக்கு உகந்த, விடுதலைக் கான நெறியாக உள்ளது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.

இந்து மதம் அல்லது வைதிகமையச் சமயம் சட்டங்களால் அமைந்த மதம்; பிரிவு படுத்தல், விலக்கி வைத்தல், அடிமைப் படுத்தல், ஒடுக்குதல் இவற்றையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வர்ணப் பகுப்பு, சாதிப்படிநிலை, தீண்டாமை இவைதான் அது கொண்டுள்ள சமூக விதி அதனால் “இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தால் நிரந்தரமான அடிமைகளாக உள்ளனர்” என்று இந்துச் சமூக உளவியலை  அண்ணல் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

சாதி ஒழிப்பு, இந்து மதத்தின் புதிர்கள், மதமாற்றம் எதற்காக? போன்ற நூல்களில் இந்து மதங்கள் பற்றிய தன் மதிப்பீடுகளை ஆய்வின் அடிப்படையில் அம்பேத்கர் மிகவிரிவாக, மிக வலிமையாக முன்வைத்திருக்கிறார். அம்பேத்கர் இந்து மதம் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு இன்றுவரை அறிவுப்பூர்வமான ஒரு பதில்கூட முன்வைக்கப்படவில்லை. அம்பேத்கர்  ‘இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று சொல்ல வந்த காந்தி நடப்பியல் அடிப்படையற்ற தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பையே இந்து மதம் பற்றிய தன் கருத்தாக முன்வைத்தார். “வர்ண விதிமுறை தீண்டாமையை ஆதரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு கடவுள் அதிலும் சத்தியம்தான் கடவுள் என்று சொல்வதும், அஹிம்சையை மனித குடும்பத்தின் வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக் கொள்வதும் தான் ஹிந்து மதத்தின் சாராம்சம்.”  என்றும் “ஒரு மதத்தை அதன் தீய உதாரணங்களை வைத்து மதிப்பிடக்கூடாது நல்ல உதாரணங்களைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்” என்றும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஹிந்துமத ஆச்சாரியர்கள் மற்றும் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி அம்பேத்கரின் வாதத்திற்கு மேலும் சான்றுகளை உருவாக்கினார்.

இந்து மதத்தை ஒற்றை அமைப்பாக அணுகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்தச் சிக்கல்கள்தான் மக்கள் நலம் சார்ந்ததாகச் அதனைச் சீரமைத்தல், சமூகப் பொதுமை கொண்டதாக அதனை மாற்றுருவாக்கம் செய்தல் என்பதையும் தடுக்கின்றன. தொல்சமூகக் கூறுகள், சட்டவிதிகள், மெய்யியல் சார்ந்த சொல்லாடல்கள், பண்பாட்டு, நிகழ்கலைக் கூறுகள், வலிமையான சடங்குகள் எனப் பல அடுக்குகளை இந்து மதம் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. அதன் மையமான பகுதியை அடையாளம் காட்டுவதிலும் சிக்கல் உண்டு. அது ஒரு மதத்திற்கான கட்டமைப்புகள் இல்லாததாகவும் உள்ளது, அதே சமயம் ஒரு போருக்காக மக்களைத் திரட்டக்கூடிய வலைப்பின்னலையும் கொண்டுள்ளது. அதனால் அதன் வன்முறை பரவலாகவும், பதுங்கியிருந்து தாக்கும் தன்மையுடனும் உள்ளது. பழங்குடி மக்கள், தீண்டாமையால் வெளியிருத்தப்பட்ட மக்கள்,வைதிகத்தினால் இழிவு சுமத்தப்பட்ட மக்கள் என வேறுபாட்ட சமூகங்களையும்  அவற்றின் வழிபாடுகள், இறைநம்பிக்கைகள், வழக்காறுகளையும் தன்னுடைய அரசியல் கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அடையாளம், உறவுமுறை, தொன்மக் கதைகள் என ஏதாவது ஒரு குறியீட்டு இணைப்பால் சிறுமரபுகளைத் தனது கட்டமைப்பிற்கு உட்படுத்திக் கொள்ளும் தகவமைப்பை இந்து மதம் பெற்றுள்ளது, அதே சமயம் அவற்றை இழிந்த, மாசு பட்ட மரபுகள் என்று அவமதிக்கும் உரிமையையும் எடுத்துக் கொள்கிறது.

இவை எப்படியிருந்த போதும் இன்றைய இந்து மதம் பௌத்தம், சமணம் என்ற முற்கால சீர்திருத்தங்களை அழித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஒரு மதம். அதே போல காலனிய அரசு, நவீன தேசியம் இரண்டிற்கும் எதிர் நிலையில் தன்மை மறுஉருவாக்கம் செய்து கொண்ட ஒரு மதம். இன்றைய இந்து மதம் எதிர்நவீன ஒன்றிணைப்புடன், மிகப்புதிதாக உருவாக்கிக் கொண்ட ஒற்றை அடையாளத் துடன் கட்டமைக்கபட்ட ஒன்று. 1950-க்குப் பின் உருவான புதிய ஒரு தேசிய அடையாளத்தை மிகப் புராதனமான ஒரு சொல்லாடலுடன் இணைத்து இந்து-இந்தியா என்பது போன்ற ஒரு புனைவை இதனால் கட்டமைக்க முடிகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் சைவ, வைணவ, சாக்தேய, குலதெய்வ முரண் மரபுகள் அமைதியான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பது இம்மதம் தன்னைப் புதிய அரசியலாக்கம் செய்துகொண்டதற்கான அடையாளம். சாதி, தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை பற்றி இந்த அரசியல்மதம் இருண்ட மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தின் உள்ளடங்கிய வன்முறையை மக்கள் அரசியலின்முன் புலப்படுத்தும் பொழுதுதான் இதற்குள் நிகழ் வேண்டிய மாற்றம் என்ன, தலைகீழாக்கங்கள் எவை என்பது பற்றிய உரையாடல் சாத்தியமாகும்.

மனித நேயம் கொண்ட சமய நெறிகள், வைதிகத்தை எதிர்த்த ஆன்மிக இயக்கங்கள், மக்கள் சார்புடைய கிளைச் சமயங்கள், அடக்கு முறைகளுக்கு எதிராக உருவான சில சமயக் குழுக்கள் இந்திய வரலாற்றில் புதியன அல்ல. சாதிப் பிரிவுகளையும் சடங்குக் கேடுகளையும் எதிர்த்த தமிழின் சித்தர் மரபுகள் நமக்குத் தெரியும். வள்ளலார் (சீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம்) நாராயணகுரு (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்) ஜோதிபா புலெ (சர்வஜன சத்திய தர்மம்) என இந்திய ஆன்மிக மரபை நவீன அறத்துடன் இணைத்த செயல்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைதிகத்தை மறுத்தவர்கள், பிராமணக் கருத்தியலை அடியோடு வெறுத்தவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்து சமயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய முதல் தீமை என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.

மதம், சமய வழக்காறு என்ற வகையில் இந்து மதங்கள் இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருப்பதை நாம் மறுக்கவோ, எதிர்க்கவோ இயலாது. ஆனால் அவை தம்மை மனிதநேயம் கொண்ட, மக்கள் உரிமையை மதிக்கும் மதங்களாக, ஒடுக்கப்பட்ட மக்களும் ஏற்கும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கான அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றி வளைக்காமல் அம்பேத்கர் வழியில் நேரடியாக முன் வைக்கலாம்: தீண்டாமை, சதுர் வர்ணம் இரண்டையும் கடைபிடிப்பது தெய்வத்திற்கு எதிரான பாவம் என்று அறிவிக்க வேண்டும், தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தின்  உறுப்பினர்களை இந்தியக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு அர்ச்சகர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும், சேரி-ஊர் என இரண்டு வாழிடங்கள், இரண்டுக்கும் தனித்தனி இடுகாடுகள் இருப்பதைச் சமய அடிப்படையில் குற்றம் என அறிவிக்க வேண்டும், இந்து சமய மடங்கள், நிறுவனங்களில் தீண்டாமைக்குட்ட ஒருவர், பிற்படுத்தப்பட்ட ஒருவர், மற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று ஆச்சாரியர்களை நியமிக்கும் மரபை உருவாக்க வேண்டும், பெண்களுக்கும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், சமய நூல்களை கற்க- கற்பிக்க அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

வைதிக இந்து மதத்தை நம்பும் ஒருவரிடம் இந்தக் கோரிக்கைகளைக் கூறினால் அவருடைய பதில் இப்படியான ஒரு எதிர்க் கேள்வியாகவே இருக்கும்.  “இந்து தர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதைத் தானே சுற்றி வளைத்து நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்?” அதற்கும் அப்பால் வைதிகம் மறுத்த இந்து சமயம் ஒன்று உருவாகும் என்றால் அதனை அழிக்க வேறு யாரைவிடவும்  பிராமண சமயமே முன்நின்று போராடும்.

தற்போதுள்ள இந்தச் சிக்கலான நிலையைக் குடிமைச் சமூக, நவீனக் கருத்தியல்கள் வழியாகவே கையாள இயலும். அதற்கான அடிப்படைதான் மதம் நீங்கிய நவீன அரசும், மக்கள் உரிமை அரசியலும். காந்தி, அம்பேத்கர் இருவரும் முற்றிலும் எதிர் எதிர் நிலையிலிருந்து இதனை அணுகியிருந்த போதும் மிக அடிப்படையான மாற்றம் பற்றியே இருவரும் சிந்தித்துள்ளனர். காந்தி ஒரு உணர்ச்சிகரமான தொடக்கம், அம்பேத்கர் அதன் நெடிய நீட்சி, உண்மையான விடுதலை நோக்கிய அறிவும் ஆன்மிகமும் இணைந்த தேடல்.

மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்-பிரேம்

உரையாடல்: 8 
 மறைவாகச் செய்யப்படவில்லை மக்கள் அழிப்புத் திட்டங்கள்
கேள்வி:
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தன்னிச்சையாக நடைபெறுவதாகத் தோன்றும் அரசியல் நிகழ்வுகள், தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள், ஊடகங்களில் முன்னிலைப் படுத்தப் படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்குப் பின்னிருக்கும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகள் ஆகியவற்றின் மறைமுகமான தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
பதில்:
பிரேம்
எல்லோரும் அமெரிக்கரே, பிணங்களைப் புசிக்கும் பேரரசுகள் போன்ற எனது கட்டுரைகளை நினைவு படுத்தியபடி இவை குறித்தான எனது கவனிப்புகளையும் குழப்பங்களையும் பதிவு செய்கிறேன்.
வளரும் நாடுகள், வளர்ந்துவிட்ட நாடுகள் என்ற தொடர்களைச் சற்றே விலக்கி வைத்துவிட்டு காலனியச் சுரண்டலால் தம்மை வளர்த்துக் கொண்ட நாடுகள், தம் வாழ்வாதாரங்களுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் இயற்கை, கனிம வளங்களைக் கொள்ளையிடும் நாடுகள், தம் நாட்டின் வளங்களை முறையாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியாமல் துயருறும் நாடுகள், உலக அரசியல் பொருளாதாரத்தைத் தம் சுரண்டலுக் கேற்ப திட்டமிட்டுக் கட்டுப்படுத்தும் அரசுகள், தம் நாட்டின் அரசியல்-பொருளாதாரத்தைத் தம் மக்களின் தேவைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள உரிமையற்ற நாடுகள் எனப் பல தளங்களில் இன்றைய உலக வல்லாதிக்க வலைப்பின்னல் அமைந்துள்ளது.
கடந்த ஐநூறு ஆண்டுகளில் மண்ணைக் கொள்ளையிடும் இந்த அரசியல், இனம், நிலம் என்ற பல தளங்களில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போர்களுக்கு முன் உலகம் முழுதும் தனித்தனியாக நடந்து வந்த போர்கள் வளங்களைக் கைப்பற்றுதல், நிலங்களை அடிமை கொள்ளுதல், அரசுகளை விரிவுபடுத்தல்  என்ற நோக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. காலனிகாலப் போர்கள் உலகின் நிலப்பரப்புகளை நிரந்தரமாகத் தன்வயப்படுத்தும் திட்டத்துடன் நிகழ்த்தப்பட்டன. இரண்டு உலகப்போர்கள் மொத்த உலகையும் யார் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற கொலைகார அரசியலின் விளைவுகளாக அமைந்தன. உலகப் போர்களுக்குப் பின் வல்லாதிக்க அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் போரின் தன்மையை மாற்றி யமைத்தன.  மண்ணின் மக்கள், இனக்குழுக்கள், தேசிய இனங்கள் என உலகின் மக்கள் தொகுதிகளின் மீதான உருமறைத்த, உள்பதுங்கிய போர்கள் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய கூட்டமைப்பின் உலகச் சுரண்டல் காலனிய காலத்தில்கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகுதிகளையும், நிலப்பகுதிகளையும் கொள்ளை யிட்டுள்ளன.  அந்த அந்த நாடுகளில் ஒப்பந்த அரசுகளை உருவாக்கித் தம் அதிகாரத்தை தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொள்வது இன்றைய உலக வல்லாதிக்க அமைப்பின் உத்தியாக உள்ளது. சுதந்திரப் போராட்டம், தேசிய இயக்கங்கள் என்ற வடிவத்தில் எதிர்க்க முடியாத அடக்குமுறை உத்திகள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல நாடுகளில் நடந்த ஜனநாயக மாற்றங்களைக் கூட சிவப்புப் பேராபத்து என்ற பெயரில் அமெரிக்க, ஐரோப்பியப் படைகள் அழித்தொழித்த வரலாறு நீண்ட துன்பியலாகப் படிந்துள்ளது. 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் அமெரிக்கச் சதித்திட்டம், ரஷ்யச் சதிதிட்டம், சீனாவின் சதித்திட்டம் என்றெல்லாம் மற்ற நாடுகளில் நிகழும் குழப்பங்கள், மோதல்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுவதும் அதற்கான சான்றுகளைப் பலகாலம் தேடி வெளிப்படுத்துவதும் ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று சதித்திட்டங்கள் என்பவை வளர்ச்சித் திட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் என்ற நற்பெயருடன் வெளிப் படையாக நிறை வேற்றப்படுகின்றன.
எதுவும் மறைக்கப்படுவதோ, மாறுவேடத்தில் வருவதோ இல்லை. 1990 களில்  தொடங்கிய பன்னாட்டு நிதியம் மற்றும் வணிக அமைப்புகளுடனான  இந்திய ஒப்பந்தங்களில் மறைவாகச் சொல்ல எதுவும் இல்லை.  கட்டுப்பாடற்ற சந்தை, உலகமயமாதல், தனியார் மயமாதல் என்ற சதித் திட்டம் வளர்ச்சித் திட்டம் என்ன பெயரில் முன் வைக்கப்பட்டது. இனி தேசிய மயமான தொழில்கள் தொடங்கப்படக்கூடாது என்பதுடன் தற்போதுள்ள பொதுத் துறைகளும்  பங்கு நிறுவனங்களாக மாற்றப் படவேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள்  பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிடப் படவேண்டும் என்பதானப் பெருங்கேடு கொண்ட கொள்கைத் திட்டங்கள் இந்திய மக்களின் கண் முன்னால்தான் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கான கல்வி,  மருத்துவ வசதி  என்பவை அரசின் கடமைகள் இல்லை என அறிவித்த பெரும் சதித்திட்டங்கள் ரகசியமாக நடக்கவில்லை, இவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய தேவை இன்றைய ஏகாதிபத்திய வலை யமைப்புக்கு இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நேரடி ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்க முனையும் மக்கள் இன்று தேசத்துரோக்க்  குற்றம் புரிந்தவர்களாக தண்டிக்கப்படுவார்கள்.
இராக் அழிப்பு, ஆப்கானிஸ்தான் தகர்ப்பு என எதுவும் சதித்திட்டமாக அடையாளம் காணப்படவில்லை, உலக அமைதிக்கான அரசியல் நடவடிக்கைகள் என்று தான் விளக்கப்பட்டன.  இன்றைய ஊடகங்கள், வலை தளங்கள் வழி அனைத்துச் சதித்திட்டங்களும் இன்றைய வானிலை போல உடனுக்குடன் வெளியாகிக் கொண்டுள்ளன. விக்கிலீக் குழு, ஜீலியன் ஆசாஞ்சே, எட்வர்ட் ஸ்னோடன் நிகழ்வுகள் கூட புதிதாக எதையும் கண்டு சொல்ல வில்லை, உலகக் கண் காணிப்பு, சதித் திட்ட வலைப் பின்னல்கள் என முன்பு சொல்லப் பட்டவைகளுக்குச் சான்றுகளை, அடிக் குறிப்புகளைத் தந்தன அவ்வளவே.
இந்திய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சில பெருநிறுவனங்களும், சில பன்னாட்டு குழுமங்களும் எழுதும் நாடகக் கதையை தேசிய மேடையில் நடத்திக் காட்டும் கலைக் குழுக்களாக உள்ளன என்பதை ஒரு கட்சி மற்ற கட்சிகள் பற்றித் தரும் புள்ளி விபரங்கள் வழி தொடர்ந்து தெளிவாகிக் கொண்டே இருக்கிறது. கர்நாடக மாநில அரசை உருவாக்கியது, பின்பு கலைத்தது எல்லாம் சுரங்க முதலாளிகள் குடும்பம் ஒன்று நடத்திய தேநீர் விருந்து என்பதை ஊடகங்கள் சொல்லிக்காட்டின. இப்பொழுது எதுவும் மறை முகமாக திட்டமிடப் படுவதோ, நிகழ்த்தப் படுவதோ இல்லை. ஆனால் உலக மக்கள், தேசமக்கள், மண்ணின் மக்கள், இயற்கைச் சமநிலை என எல்லாவற்றின் மீதும் கவிழந்துள்ள சதித்திட்டங்கள்  இவை. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உதவியுடன்தான் தமிழீழம் என்ற பேராபத்தை எங்களால் அழித்தொழிக்க முடிந்தது என்று சிங்கள அரசின் தலைவர் நன்றி தெரிவித்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்பட்டதில் இந்திய அரசின் சதி உள்ளதா எனத் துப்பறிய என்ன இருக்கிறது.
உண்மைகள், தகவல்கள், ஆதாரங்கள், ஆவணங்கள், ஊடகத் தொடர்புகள் எல்லாம் பொங்கிப் பெருகிக் கொண்டே இருக்கின்றன.  ஆனால் மக்கள் அரசியல்தான் செயலற்ற நிலையில் உள்ளது. இந்தத் தகவல் பெருவெள்ளம் ஒருவகையில் மக்கள் அரசியல் உளவியலைச் சிதைக்கக்கூடியது. பொது அச்ச உணர்வைத் திணிக்கக் கூடியது. முகமற்ற சதித்திட்டம் பற்றிய அச்சம் அரசியல் செயலின்மையை மக்களிடம் தேக்குகிறது. இந்தச் செயலின்மை மக்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையிலான வன்முறை யை, இரக்கமின்மையைப் பெருக்குகிறது.  இந்தியாவின் காவி அதிகாரம் இந்த அச்ச அரசியலின் தற்கால உதாரணம். இதற்கான தீர்வு ஒரு முனையில் தொடங்கி மறுமுனையில் முடிவதல்ல… மாற்றுச் சிந்தனைகள், மக்கள் அரசியல் சிக்கலான செயல் திட்டங்களைக் கொண்டவை.
இன்றைய கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், பண்பாட்டு அமைப்புகள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்திற்குள்ளும் உலகப் பொருளாதாரச் சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் கருத்தியல் மற்றும் கண்காணிப்பு இயந்திரங்களின் உதிரிப்பாகங்கள்தான் பொருத்தப் பட்டுள்ளன. உலக மயமாதலும், பன்னாட்டு முதலீடுகளும், உயிர்க்கொல்லி தொழிற்சாலைகளும், நகர்மயமாதலும்  இந்தியாவின் முன்னேற்றத்திற்கானவை என்றும் இதனை எதிர்க்கும் மக்கள் தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்றும் பெருஞ்சொல்லாடலை இவை உருவாக்கி, உறுதிப்படுத்தி, பரப்பும் பணியைச் செய்து வருகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் அரசியல் இவற்றைக் கடந்து தன்  எதிர்ப்புகளைச் செயல்படுத்தும் போது அதன் விளைவுகள் சற்றுக் கடுமையாகவே இருக்கும். அந்தக் கடுமையை ஆக்கப்பூர்வமாக மாற்றத் தற்பொழுது உள்ள அரசியல் இயக்கங்கள் ஆற்றலற்றவையாக, பயிற்சியற்றவையாக இருப்பது  நடப்பியல் உண்மை.
நாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் மாற்று அரசியல், மக்கள் உரிமைப் போராட்டங்கள், சூழலியல் அரசியல், பெண்ணிய, தலித் அரசியல், அடையாள அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் பன்னாட்டு அரசியல் சக்திகளின் சதி என உள்நாட்டு அதிகார-அரசு நிறுவனங்கள் சொல்லி வருவதையும் கேட்டு வருகிறோம். அதிகாரம் அடக்கு முறைகளுக்கு மட்டுமல்ல மக்கள் போராட்டங்களுக்கும், மாற்று அரசியலுக்கும்கூட பன்னாட்டு வலைப்பின்னல் உண்டு.  இதில் மறைக்க, மறுக்க ஒன்றும் இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு பிரிடிஷ் முடியரசைத் தம் நாட்டிலிருந்து தூக்கி எறிய பிரெஞ்சு அரசும், பிரெஞ்சு அறிவு ஜீவிகளும் ஆயுதம் வழங்கி ஆதரவு தந்தனர்.  பிரஞ்சு முடியரசை எரிக்க பிரிடிஷ் அரசு வெடிமருந்து வழங்கி ஆசிர்வதித்தது. உலக வரைபடத்தை இந்த இரண்டு அரசுகளும் வெட்டித் தமக்குள் பங்கிட்டுக்கொள்ள போரும் ஒப்பந்தமுமாக வரலாற்றை அலைக்கழித்துள்ளனர். ரஷ்யா அரசு தம் நாட்டில் பயன்படாத அணு உலைகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்ட இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்வது நல்லெண்ண ஒத்துழைப்பு, (இனி அமெரிக்க நிறுவனங்களும் தம் நாட்டில் பயன்படுத்த முடியாத அணுஉலை இயந்திரங்களை இந்தியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு பணத்தை வாரியெடுத்தச் செல்ல ஒப்பந்தம் உருவாகியுள்ளது.) ஆனால்  ரஷ்ய செர்னோபில்  பேரழிவால் (1986) பாதிக்கப்பட்ட மக்களில் சிலர்  இயக்கம் அமைத்து இந்தியாவின் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கங்களுக்கு சிறிய உதவிகளைச் செய்தால் அது சதித்திட்டம்… அப்படியெனில் பன்னாட்டு “மக்கள் சதித் திட்டங்கள்” தேவையான அளவுக்குப் பெருகவில்லை என்பதுதான் கவலைக்குரியது…

பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம் -பிரேம்

உரையாடல் : 7  பரந்து கெடுக இந்தப் படைப்பாளிகள் கூட்டம்
கேள்வி:
[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]
தலித்துக்கள் குறித்த பிரச்சினைகள், ஓட்டரசியல் தளத்திலும் வெகுஜன ஊடகங்களிலும் கவன ஈர்ப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சீரிய இலக்கியத்தளங்களிலும், அறிவார்ந்த தளங்களிலும், தமிழில் எவ்வித உரையாடலும் இல்லாமல் போய்விட்டது ஏன்,  இது பொதுச் சமூகப் பிரச்சினை என்பதிலிருந்து தலித்துக்களின் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது. இதன் பின்னணி குறித்து?
பதில்:
பிரேம்
தலித் அரசியலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களும் சிறுகச் சிறுக உருவாகி தனித்த அரசியல் அடையாளமாக, அரசியல் சக்தியாக மாறிய பின் பாராளுமன்ற ஜனநாயகமும், உலகமயமான ஊடகங்களும் அதனை வேறு வழியின்றி, நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக் கொண்டன. இந்த வகை ஏற்பு, கவனம் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக உள்ள ஒரு நாட்டில் போதுமானது என நினைக்கிறீர்களா? 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் 131 பேர் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எத்தனை பேரை தேசியத் தலைவர்களாக இந்தியச் சமூகம் தெரிந்து வைத்திருக்கிறது, ஏற்றுக் கொண்டுள்ளது? ஊடகங்களில் தலித் அரசியலுக்கென தினம் ஒருமணிநேரம் ஒதுக்கப்படுவதாக நாம் கணக்குக் காட்ட முடியுமா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல், பொருளாதாரம், சமூகப்பண்பாட்டுச் சிக்கல்கள், தலித் அரசியல் குரல்கள் எந்த அளவுக்கு ஊடக மதிப்பைப் பெற்றுள்ளன என்பதை பற்றிச் சிந்திக்கும் போது பெருங்கோபம்தான் வரும். தமிழகத்தில் தலைவர். தொல்.திருமாவளவன் வழியாக ஒரு கருத்தியல் பரவல் நடந்து கொண்டுள்ளது. ஆனால் தலித் அரசியலை ஏற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தவிர வேறு யாரும் அவரைத் தமிழினத் தலைமை என ஏற்பதில்லை. ஊடகங்களில் உள்ள பரந்த மனப்பான்மை கொண்ட நண்பர்கள் சிலர் சொல்வதுண்டு “சார் உங்க ஆளுபேச்சு ஒரு பத்தி அளவுக்கு சேர்த்தாச்சு, உங்க தலைவர் இதப்பத்தி சொன்ன கருத்த முழுசா சேக்க முடியல”.  இது போலத்தான் நிலை உள்ளது. 1993-97 காலகட்டத்தில் அம்பேத்கர் உருவப் படத்துடன் ஒரு சுவர் எழுத்து எழுதவும், சுவரொட்டி ஒட்டவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையுடன் செல்ல வேண்டியிருந்தது. அண்ணா என்று பாசமாக என்னை அழைக்கும் இரண்டு இளைஞர்கள் புதுவைப் பகுதியில் சுவர் எழுத்து எழுதும் போது நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது. இன்று சில சுவர்களும், சில ஊடகங்களும்  கைவசப்பட்டுள்ள நிலையில் தலித் அரசியலின் உருவமும் குரலும் மறைக்க முடியாத அளவுக்குத் தோற்றம் தருகின்றன. ஆனால் இலக்கியத் தளங்கள், அறிவார்ந்த தளங்கள் என அறிவித்துக் கொள்ளும் பகுதிகளில் தலித் அரசியல், தலித் கருத்தியல், அம்பேத்கர், அயோத்திதாசர் சிந்தனைகள் எந்த இடத்தைப் பெற்றுள்ளன? “அவங்க எல்லா எடத்துலயும், வந்துட்டாங்கையா” என்றும் “நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றாலே தலித்தியம், பெண்ணியம் மட்டும்தான் என்பது போல மாத்திட்டாங்கையா” என்றும் இலக்கியப் பேரறிஞர்கள், சிற்றறிஞர்கள் எல்லாம் நெஞ்சுநோகக் கூறித் துயர்ப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இடைநிலைச் சாதிகளின் அரசியல் தற்போது தீண்டாமை மீட்புப் போராட்டமாக மாறியுள்ளது.
தலித் அரசியல் பெரிய அளவில் உருவாகி இந்திய அரசியலைக் குழப்பி வருவதாகச் சில பேச்சுகளை நாம் கேட்க முடிகிறது. இத்தனைக்கும் அடையாளத்தை உருவாக்கும் அரசியலாக, குறியீட்டு அரசியலாகத்தான் தலித் அரசியல் தற்போதும் இருந்து வருகிறது. இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தலித் அரசியலுக்குக் கடுமையான சிக்கல் தொடக் கத்திலிருந்தே இருந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கருத்தியல் அடிப்படையில் ஒன்றிணையாமல் தம்மை ஒடுக்கும், ஒதுக்கும் சாதிகளின் தலைமையிலான கட்சிகளின் அச்சுறுத்துதலுக்குப் பயந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் ஆதிக்கச் சாதியத் தலைமைகளை தம் தலைமைகளாக ஏற்று அடிமை நிலையைத் தொடர்வதும் அம்பேத்கர் காலத்திலிருந்து இருந்து வரும் ஒரு அவலம். வாழ்வாதாரம் அற்ற கிராம தலித் மக்கள் நில உடைமையாளர்களின் கட்டளைகளை மீற முடியாத நிலையில் தம் துயரங்களை வெளியே சொல்லவும் முடியாமல் வாழும் நிலையும், நகரங்களில் வாழநேர்ந்த தலித் மக்கள் தம் அடையாளத்தைக் காட்டிக் கொண்டால் நேரும் அவமானங்களுக்குப் பயந்துப் பதுங்கி வாழும் அவலமும்,  பெரும் மக்கள் தொகை இருந்தும் வாழிட அமைப்பால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கை முறையும், இந்திய அளவில் ஒருங்கி ணைந்த ஒரு அரசியல் சக்தியாக, ஒரு கூட்டி ணைப்பை உருவாக்க இயலாத உதிரித் தன்மையும் தலித் அரசியலை விளிம்பு நிலை அரசியலாகவே வைத்தி ருக்கின்றன. இந்து மத அடையாளத்தை மறுக்க இயலாத தலித் அடையாளம் தலித் விடுதலை அரசியலை சக்தி அற்றதாக மாற்றி விடுகிறது. இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து கொள்ளத் தயங்காத தலித் தலைமைகள்  தலித் அரசியலின் மூளையை செயலிழக்கச் செய்கிறார்கள்.
பெருந்தேசிய சக்திகள், பன்னாட்டு முதலாளிகள், உலகச் சந்தைகள் தந்துள்ள  அதிகாரத்தின் துணையுடன் தீண்டா மையும், சாதி ஒதுக்குதலும் தற்போது இந்திய அளவில் மறுஉருவாக்கம் பெற்று வருகின்றன. இதற்குப்   பன்னாட்டு அரசியல் தொடங்கி உள்நாட்டு பொருளாதாரம் வரை பல காரணிகள் உள்ளன. தலித் அரசியல் ஒரு துணை அரசியலாக இருப்பது வரை அனுமதிக்கலாம் என்ற திட்டம் கொண்ட அரசியல் கட்சிகள்.  இவர்கள் எல்லாம் நம் முன் உட்கார்ந்து கூட்டணி பேசி நிற்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதே என உள்ளே கொந்தளித்து உதட்டில் முறுவளிக்கும்  தலைவர்கள். நம் வீட்டுப் பெண்களை மயக்கிக் கடத்திச் செல்ல அந்தப் பக்கத்தில் ஒரு இளைஞர் படையே உருவாகிக் கொண்டிருக்கிறது படையுடன் எழுவீர் பாட்டாளி வீரர்காள் என  அழைப்பு விடும் இனமானத் தலைவர்கள். “பிராமண சமூகம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைநீட்டி அடித்ததுண்டா, கழுத்தை அறுத்ததுண்டா, கலப்பு மணம் செய்து கலந்து வாழ்ந்த சமூகம்தானே. அந்த இடைநிலைச் சாதிகள்தானே தீண்டாமையை உருவாக்கி நம் இருவரையும் பிரித்தது. சாதித் தமிழர்களை மட்டும் நொருக்கிவிட்டால்  சங்கர மடத்திலும், ஜீயர் மடத்திலும்  நாம் சமபந்தி விருந்துண்டு சந்தோஷமா வாழலாம்” எனப் பன்னாட்டு பஜனை செய்யும் நூலோர்கள். ஈழத்தமிழர்கள் அழிந்தால்தான் இந்தியத் தலித்துகளுக்கு விடுதலை என்பதைச் சொல்லிப் புரியவைக்க தம் ஒவ்வொரு நாளையும் அர்ப்பணிக்கும் முற்போக்கு மேலோர்கள்.  இப்படித்தான் தமிழக அரசியல் உளவியல் பன்முனை போராட்டக் களமாக மாறியுள்ளது. இந்தச் சாதி உளவியலுடன்தான் எழுதுகிற பலரும் இயங்கிக் கொண்டுள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையில் இருநாள் கருத்தரங்கின் இடைவேளையின் போது அரசு பதிவு பெற்ற ஒரு தலித் எழுத்தாளரைப் பேசச் சொல்லி அனுப்பிவிட்டு “இலக்கியம் தன் கடமையைச் செய்யும்” என்று இருந்து விடுவதே அறிவுலகத்தினருக்கு பெரும்பாடாக உள்ள போது எங்கே தலித் இலக்கியம், கருத்தியல் பற்றிப் பேசுவது… அதற்குத்தான் தனியாக தலித் கலைவிழா இருக்கு, தலித் சிறப்பிதழ் இருக்கு, தனிக்குவளையில் அள்ளி தலித் கவிதை பருகித் தமிழ் வளர்க்க வேண்டியதுதான். சாதி அடிப்படையில் இலக்கியமா, இலக்கியத்தில் சாதிக்கு என்ன வேலை என்று புதிய சமூகவியலை தமிழருக்குப் புரியவைக்கும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டுள்ளன. தலித் இலக்கியம் தனி இலக்கியம் அது தலித்துகள் படித்து மண்ணாகப் போகட்டும்,  தமிழ் இலக்கியம் தனித்தன்மை கொண்ட இலக்கியம் அதுதான் பொது இலக்கியம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.  எழுத்துச் சந்தைக்கு இந்தக் பொது இலக்கிய வேடம் பொருத்தமானது. வெள்ளை யானைக்கு இணையாக ஒரு தலித் இலக்கியத்தை தலித்துகள் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவராவது  படைக்கவில்லையே என்ன காரணம்?  என்பது போன்ற ஒரு சிம்மக் குரலை நான் மதுரையில் கேட்டு நடுங்கி விட்டேன்… இந்த நடுக்கம் இன்னும் சிலகாலம் தொடரக்கூடும்…
தலித் அரசியல் இந்தியச் சமூக- பண்பாட்டு உளவியலின் அடிப்படைகளை மாற்றி யமைக்கும் அரசியல்,  மாறுவேடமணிந்த மனிதக் கொடுமைகளை சமயம், சாத்திரம் என்ற பெயரில் தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கும் இந்தியப் பொது நினைவை முற்றிலும் உருமாற்றம் செய்யக்கூடியது. இந்திய அறம், அழகியல், மனித நேயம் என்ற அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்குவது. இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்கப் பொதுச் சமூகம் என்ற சாதியச் சமூகம் இதுவரை தயாராக இல்லை. பொதுச் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்திஜீவிகளும்   தலித் அரசியல் தலித்துக்களின் பிரச்சினை, அது வன்கொடுமை தடுப்புச் சட்டம்,  23 சத இடஒதுக்கீடு என்பதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற அளவில்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவீனத்தையே நவீனத்தன்மை என்று கொண்டாடும் படைப்பாளிகள்  வடக்கையும் வதைக்கிறார்கள், தெற்கையும் தேய்க் கிறார்கள்.
தலித் அரசியல் இந்தியச் சமூகத்தின் அடிப்படை அரசியல் என்பதையோ, இந்தியாவின் நவீனத் தேசியத்தின் முதன்மைக் கருத்தியலாளர் அம்பேத்கர் என்பதையோ, தலித் விடுதலை இன்றி இந்தியச் சமூகம் தன்னை மனித அறம் கொண்ட சமூகமாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதையோ இலக்கியம் படைக்கும் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றால் பரந்து கெடுக இந்த படைப்பாளிகள் கூட்டம் என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.

உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்னடையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனிமனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள்  ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும்  அடிபணிய வேண்டிய தேவையை  இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.

உரையாடல்: 4:1

கேள்வி:

நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு ஏதும் இல்லைதான். என்றாலும் தனிமனித சாத்தியப்பாடு என்பதைக் கணக்கில் கொண்டால் ஏதேனும் ஒன்றிரண்டு அறிவுத் துறைகளில்தானே ஆழமாகச் செல்லவும் இயங்கவும் முடியும்?

பதில்:

இந்த கருத்து நவீன அறிவுமரபின் அடிப்படையில் ஏற்கத் தக்க ஒன்றுதான். வேலைப் பிரிவினை பற்றிய அதே கருதுகோளை அறிவுத்துறையிலும் பொருத்திப் பார்க்கலாம். அனைவரும் அனைத்து வகை யான வேலைகளைச் செய்வதற்கும் தொழில் உத்திகளைக் கையாள்வதற்கும் திறன் பெற்றவர்கள்தான்.  ஆனால் தேவை கருதி நாம் ஏதாவது ஒரு  தொழில் பிரிவைக் கற்றுத் திறன் பெறுகிறோம், அதன் வழியாகச்  சமூகத்திற்கு நம் பங்களிப்பை வழங்கி நமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது அடிப்படையான உண்மை. இதனைக் கடந்து தொழில் பிரிவுகள் மாற்றமுடியாதவைகளாக,ஏற்றத்தாழ்வுள்ளதாக மாறுவதும், உடல் உழைப்பு, மூளை உழைப்பு, திறன் சார்ந்த உழைப்பு, திறன்சார உழைப்பு எனப் பகுக்கப்பட்டு அதிகார அமைப்புகளாக இறுக்கமடைவது வன்முறையானது. இந்த வன்முறையின் விரிவான வடிவங்களை அறிவுத்துறைகள்,  தொழில்நுட்பம், கலைத் துறைகளில்  நாம் காண்கிறோம்.

இதற்குக் காரணம் அறிவுப் பகிர்வில், பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வும் அதிகாரப் படிநிலைகளும். அறிவு ஒரு முதலீட்டு வைப்பாக, அதிகார உரிமையாக வைக்கப்படுவதால் நேரும் கெடுதி இது.  மருத்துவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இது இன்று தனித்த உயர் தொழில் நுட்பமாக உள்ளது. ஆனால் உணவு,  மருந்து, உடல் பேணுதல், நோய் அறிதல், நோய் தீர்த்தல் என்பவை சமூகப் பொது அறிவாக இருக்க வேண்டியவை, இருந்திருக்கின்றன. இன்று உணவு, வாழிடம், உடல் என அனைத்தும் உலகவயப்படுத்தப் பட்ட நிலையில் இனக்குழு, குடிமரபு மருத்துவம், நோய் தீர்வுகள் பயனற்றவையாக, பலன் தர இயலாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு என எதுவும் தற்பொழுது குடும்பம், குடிசார்ந்த வழக்கில் இல்லை.  குடிமரபுகளில், இனக்குழுக்களில் கூட மருத்துவம், மாந்திரிகம், சடங்கு என்பவை தனித்திறமைகளாக, மறைபொருள் உத்திகளாக  இருந்திருக்கின்றன. ஆனால் அவை அச்சமூகத்தின் குறியீட்டுப் பொது அறிவாகவும் இருந்தன. அது சமூகப்பொது நலனுக்கான ஒரு ஏற்பாடு. இந்த மறைபொருள் உத்தி பின்பு இறுக்கமடைந்து அரசு உரிமையாக மாறியதைச் சமூக வரலாறுகள் பதிவு செய்துள்ளன. வேட்டையும், போரும் வீரர் குழுக்களை உருவாக்கியதும், குழந்தை வளர்ப்பில் பெண் ஈடுபட குடியைக் காத்தலில்  ஆண் ஈடுபட்டதின் வழி ஆண்வழி அரசியல் உருவாக்கப்பட்டதும் விளக்கப்பட்ட உண்மைகள். கடவுளை அறிதல்கூட அனைவருக்கும் உரியதல்ல என்றன சில ஆன்மிக மரபுகள்,  ஆன்மாவை விளக்க மதங்களும் உடலை விளக்க அறிவியலும் என்ற பிரிவினை ஏற்ற மேற்கத்திய வெள்ளைமைய அறிவு உலகின் பிற அறிவுகள் அனைத்தையும் அறியாமை என்று விளக்கியது நவீனப் பின்புலத்தில்  நிகழ்ந்த வரலாற்று வன்முறை.

இந்தப் பின்னணியில்தான் பின்நவீனத்துவம் அறிவுத்துறைகளில் உள்ள மேலாதிக்கம் பற்றித் தன் விளக்கத்தை அளித்தது.  அதிகாரம், ஆதிக்கம், வெளியேற்றம், விளிம்புநிலைப் படுத்தல், அடையாள அழிப்பு என்பவற்றில் உள்ள அறிவின் அரசியலை, கொடுங் கோன்மையை அது விளக்கியது.

இன்று நாம் செய்ய வேண்டியது: அறிவுத்துறைகளின் சிறப்புரிமைகளை, அறிவதிகார மையக்குவிப்பை கலைத்துவிட வேண்டும். இதன் வழியாகத்தான் அறிவுமுதலீட்டியத்தை நாம் எதிர்க்க முடியும். அறிவை மூலதன ஆற்றலாக மாற்றுவதற்கும், அறிவை விடுதலை அரசியல் செயல்பாடாக  மாற்றுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அனைத்தையும் வெளிப்படையானதாக, விளக்கப்பட்டதாக மாற்றுவதில்தான் உள்ளது.  இன்று அதனைச் செய்ய  தனிமனித சாத்தியப்பாடுகள் பற்றி   நாம் கவலைப்படத் தேவையில்லை. எழுத்து,  சிந்தனை, அறிவுருவாக்கம், கலைத்தொழில் நுட்பம் எதுவும் தனி மனிதர்களின் உற்பத்தியல்ல. தனித்தன்மை, தனித்திறன், படைப்புணர்வு, தனிப்பெரும் அறிவு என்பவை பற்றிய கற்பனைகள் வழிபாட்டு மரபுகளுக்குத்தான் தேவையானவை.

இன்று எழுத்தை குழுவாக, பலர் இணைந்து  உரையாடித் தரவுகள் பெற்றுப் பகிர்ந்து உருவாக்க இயலும், உருவாக்க வேண்டும். ஒருவரே எழுதும் எழுத்தும்கூட பல்வேறு எழுத்துக்களின் கூட்டிணைப்புதானே தவிர தனித்தூய்மை கொண்ட உருவாக்கம் அல்ல. அணுசக்தி ஒரு அழிவு சக்தி என்பதைப் பற்றி ஒருவரோ இருவரோ மட்டும் தனியாக இன்று எழுதிவிட இயலுமா, அது உலகெங்கிலும் உள்ள மாற்று அறவியல் பார்வை கொண்டவர்களின் கூட்டு உருவாக்கம். திரைப்படங்கள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று மறுஉருவாக்கங்கள், அரசியல் பகுப்பாய்வுகள் என்பவை பற்றிக் குழுவாக இணைந்து உரையாடி, பகுத்து, தொகுத்து, சரிபார்த்து எழுதுவதற்கான பயிற்சியும் பொறுமையும் நமக்குத் தேவை. இதற்கும் கூடுதல் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படும், தனிமனித உளச்சிக்கல்கள் தோன்றி முரண்களை மோதல்களை கசப்புகளை உருவாக்கக்கூடும். நான் இதன் கசப்பான பக்கங்களை அறிந்தவன், பலருக்கு கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றாலும் இதுதான் வழி.  தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள்,  ஆனால் அறிவு அனைவருக்குமானது, அறிவு அனைவராலும் உருவாக்கப்படுவது.

ஆழம், அடர்த்தி பற்றிய கருதுகோள்களை நாம் மறுத்துவிட வேண்டும். செம்மை, சிறப்பு, நுட்பம் என்பவை திறன் அடிப்படையில் தனிமனிதர்களை வெளியேற்றுவதற்கான தந்திர உத்திகள், எழுத்தில் இது இன்னும் கொடிய விளைவுகளை உருவாக்கும். ஒரு கதையெழுத்துக் கலைஞனாக இருந்தும் இதனைச் சொல்கிறேன், நான் ஒரு கதையை உங்களுக்குச் சொன்னால் எனக்கு நீங்கள் ஒரு கதையைப் பரிசாகத் தாருங்கள், அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. உங்களிடம் தற்பொழுது ஒரு கதை இல்லையென்றால் பரவாயில்லை, வேறு ஒருவரின் கதையை உங்கள் மொழியில் கூறுங்கள், தனிமனித சாத்தியப்பாடுகளை கடக்க இதுதான் வழி.

உரையாடல் : 3: 2

கேள்வி:

அரசியல் நீக்க வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், என்கிற அடிப்படைகளில் செயல்படுவோர்களால் தமிழ் அறிவுலகம் மேலாண்மை செய்யப்படும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் வைதீக-பிராமண மறுப்பு, விளிம்புநிலைக் கருத்தியல், தலித் அரசியல், பின் நவீனத்துவம், நுண் அரசியல், பாலரசியல், என்கிற மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்?  தமிழ்ச் சிந்தனை உலகில் இதற்கான மரபுதான் என்ன?

பதில்:

மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்… நிச்சயமாகச் சில பெயர்களைச் சொல்வதன் வழியாக இந்தக் கேள்வியை முற்றுபெறச் செய்யமாட்டேன். என் பெயரைக்கூட இதில் பொருத்திக் காட்ட மாட்டேன்.  மேலாண்மை செய்பவர்களின் அடையாளம்  தெளிவானது, ஒரு மையம் நோக்கியது. ஆனால் மாற்று அரசியல் அப்படியல்ல பன்முகப்பட்டது, பல போக்குகளை, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது. வைதீக மறுப்பு இன்றி சூழலியல் அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளாமல் தலித் அரசியலில் செயல்படுபவர்கள், பாலரசியலை மிகத்தவறாகப் புரிந்து கொண்டு தமிழ் அடையாள அரசியலில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், செவ்வியல் மரபில் பற்று வைத்தபடி தமிழீழத் தனிநாடு உருவாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொண்டு உலகமயமாக்கத்தை ஆக்கபூர்வமானதாகக் காணும் சிந்தனையாளர்கள், தலித் அரசியலால் இந்திய மார்க்சிய அரசியல் சிதைக்கப்பட்டதாக நம்பும் இடதுசாரி சிந்தனையாளர்கள், விளிம்புநிலை அரசியலை ஏற்காத அம்பேத்கரியச் சிந்தனையாளர்கள், பெருந்தேசியத்தை முழுமையாக நம்பும் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள்  எனச் சிக்கலான விகுதிகளைக் கொண்டது இன்றைய மாற்று அரசியல் களம். இவற்றின் பன்முகத் தன்மையைப் புரிந்தேர்க்க வேண்டும் என்று நம்பும் எனக்குப் போர்வழி மாறுதல், ஆயுதமைய அரசியல் விடுதலையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை ஏற்க முடிவதில்லை, ஆனால் ஒரு மக்கள் திரள்,  ஒரு இனக்குழு அமைப்பு போரமைப்பாக மாறித் தம் விடுதலைக்காக  போராடும் என்றால் அதனை மறுப்பதற்கான மெய்காண் முறையும் என்னிடம் இல்லை. இது சற்றுச் சிக்கலான  நிலைதான், ஒன்றில் விரிவான புரிதலைக் கொண்டுள்ள எனக்கு மற்றொன்றில் தவறான அல்லது குழப்பமான புரிதல் இருப்பதை மறுக்க இயலாது. பௌத்த மெய்யியல்,  வள்ளலார், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், காந்தி, பாலழிந்த அடையாளம், அரசற்ற அமைப்பாக்கம், புதுவகைப் புனைவெழுத்து பற்றியெல்லாம் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் ஒரேவகை ஈடுபாட்டுடன், மதிப்புடன் பேசுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே எனக்கு வாய்த்திருக்கிறது.  இந்த நிலையைத்தான் நான் பன்மை நவீனத்துவம் என்று அடையாளப்படுத்தி விளக்க முயற்சிக்கிறேன். இதனைத் தனி மனிதர்களின் பெயர்களுடன் அடையாளப்படுத்திக் காண்பதை விடச் செயல்பாடுகள், களம் சார்ந்த சொல்லாடல்கள் வழிதான் அடையாளம் காண வேண்டும். தமிழில் இவை அனைத்தும் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன என்பதை மட்டும்தான் நாம் இப்பொழுது குறித்துக் கொள்ள வேண்டும்.

உரையாடல் : 3: 1

கேள்வி:

ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தக் கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் என்கிறீர்கள். கலை இலக்கியங்கள் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பு ஏதும் செய்வதில்லையா? இலக்கியங்களை வாசிப்பதும் அவைகளின் வாயிலாக ஒரு சமூகத்தின் உளவியல்புகளை அறிந்து கொள்வதும் அவற்றின் உள்ளார்ந்த அரசியலைப் புரிந்து வெளிப்படுத்துவதும், அறிவுருவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானே?

 

பதில்:

கலை-இலக்கிய வடிவங்கள், செயல்பாடுகள் என்பவை அறிவுருவாக்கத்தின் ஒரு பகுதிதான், அவையே அறிவாகவும் செயல்படக்கூடியவை. அறிவு-அதிகார உறவில் இந்நிலை இருவகையான விளைவுகளை உருவாக்க இயலும், விடுதலைக்கான அறிவு, அடக்குதலுக்கான அறிவு. ஒருவரின் அறிவு மற்றவர் மீதான அடக்கு முறையாக அமைய இயலும். கலை-இலக்கியச் செயல்பாடுகள் அறிவை மட்டுமல்ல உளவியல்பை, நடத்தையியல்பை வடிவமைக்கவும், உருமாற்றவும் கூடியவை. அதனால் அவை வலிமையான அரசியல் கருவிகளாகவும் செயல்படுகின்றன. அறிவை உருவாக்க கலை-இலக்கியங்களைப் பயன்படுத்த முடியும் என்பதின் மற்றொரு வடிவம்தான் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அறிவு பெறும் உரிமையை மறுக்கவும்  இவை பயன்படுத்தப்படுகின்றன என்பது. அறிவு என்ற செயல்பாடு சமநிலையும், பொது அறமும் கொண்டதாக இருப்பதில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் கலை-இலக்கியங்களும் பொது அறம், சமநிலை கொண்டதாக இயங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள இயலும். அதிகாரக் கட்டமைப்புகளை, அடக்குமுறை நிறுவனங்களை, அழகியல் வன்முறைகளை விளக்கிக் காட்ட, அவற்றின் உள்நோக்கங்களை வெளிப்படுத்த கலை-இலக்கியம் பயன்படும் என்பது நமக்குத் தெரியும். கலை-இலக்கியச் செயல்பாடுகள், அவை பற்றிய வாசிப்புக் கோட்பாடுகள் ஆற்றல் வாய்ந்த போராட்ட வடிவங்கள், சமநிலை குலைக்கும் இடையீடுகளின் வழி இவை புதிய மொழிக் களங்களை கண்டறிந்து தருகின்றன. இந்த வகை அறிவுருவாக்க, அடையாள உருவாக்க இலக்கியங்களில் இருந்து, வாசிப்புகளில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியவையாக உள்ளவை  சமநிலை கொண்ட, பேருண்மை பேசும், பொது அழகியல் பேசும் கலை-இலக்கியங்கள். அதனால் இக்கேள்வியில் உள்ள கலை-இலக்கியம்  என்ற தொடரில் உள்ள முரண் இணைவை  உடைத்து, பொது அடையாளத்தை நீக்கிப் புரிந்து கொள்ள வேண்டும்.  அறிவுருவாக்க, அரசியல்  உருவாக்க கலை-இலக்கியங்கள், அவற்றிற்கு எதிரான பேருண்மையின் வன்முறையைச் செயல்படுத்தும்  கலை-இலக்கியங்கள்.  உருவாக்கித்தரப்பட்ட அறிவின், அரசியலின் வன்முறைகளைப் புலப்படுத்தும் கலை-இலக்கியங்கள் அவற்றைக் கொண்டாடிப் புளகிக்கும்  கலை-இலக்கியங்கள்.

உரையாடல்:2:1

கேள்வி:

ஆரம்ப   காலத்தில் உங்களோடு சேர்ந்து செயற்பட்டவர்கள் உங்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டவர்கள், பிற்காலத்தில் உங்கள் பெயர் மறைப் பிலும் உருத்திரிப்பிலும் ஈடு பட்டதாகச் சொல்கிறீர்கள். அவர்கள் நேர்மை யின்றி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்புணர்வினால் இதனைக் குறிப்பிடு கிறீர்களா? அல்லது உங்கள் தீவிர அரசியல் சிந்தனைகளிலிருந்து விலகிச் சமரசங்களுடன் கூடிய அரசியல் போக்குகளில் அவர்கள் ஈடுபடுவதை விமர்சிக்கிறீர்களா?

பதில்:

எனது எழுத்து மற்றும் கருத்தியல் செயல்பாடுகளை  நம் காலத்திய தமிழ் அறிவுருவாக்கக் களத்தின் சிக்கல்கள், கோட்பாட்டு  உருவாக்கக் கேள்விகளின் ஒரு விளிம்புநிலை அடையாளமாக வைத்து விளக்கும்பொழுது நான் குறிப்பிடநேர்ந்த நிகழ்வுதான்  எனது பெயர் மறைப்பும் உருத்திரிப்பும். இதனைத் தனி மனிதனாகவோ, வெறும் கதைசொல்லியாகவோ இருந்து நான் சொல்ல முயற்சிக்கும் பொழுது பொருளற்ற, தொடர்பற்ற தன்னிரக்க வாசகமாகத்தான் இருக்கும். இன்னொரு வகையில் நான் பெயர் மறைப்பு, உருத்திரிபுகளுக்கு  பலியாகித் தொலைந்து போனவனும் இல்லை. தொடர்ந்து எழுதியும் பேசியும் அழுத்தமான பதிவுகளை, தாக்கங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறேன், புதிய வடிவங்களில் புதிய களங்களில் எனது புனைவுகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறேன்.

அதனைவிட முக்கியமானது, நான் பழகிப் பின் விலகிவந்த பழைய நண்பர்கள் இன்று நேர்மையற்றவர்களாக, கருத்தியல் திரிப்பில் ஈடுபடுபவர்களாக மாறிவிட்டதாக நான் கூறவரவில்லை, அவர்கள் அப்படி ஆகவும் இல்லை.  நான் பலவாறாக மாறியும் திரிந்தும், கடின வாசிப்பின் வழி உருவாகி வந்தது போல அவர்களும் அவர்கள் வகையில் மாறியும் தெளிந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உள்ள அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உரிமை எனக்கு இல்லை. என் வகையில் அவர்கள் நேர்மையின்றி நடந்து கொண்டார்கள் என்பதை நான் பதிவு செய்வதற்கான உரிமையும் எனக்கு இல்லாமலில்லை.

நான் தெளிவாக இருப்பதாகவோ, தீவிர அரசியல் இதுதான் என்று அறிந்து கொண்டதாகவோ நம்பவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்பவர்களின் நரம்பியல் சிக்கல் எனக்குத் தெரியும் என்பதுதான் தற்போதுள்ள சிக்கல்.  நான் குறிப்பிட விரும்புவது: நான் முன்வைத்த கேள்விகள், விரிவான இடையீடுகள் உருவாக்கிய களங்களில் செயல்பட்ட போதும் சிலர் எனது பங்களிப்பைத் திட்டமிட்டு மறைத்தது பற்றிய அரசியல், எனது கருத்தியல் சமன்பாடுகளைத் திரித்து விளக்கியது பற்றிய முறையீடு.

மீண்டும் நான் நிகழ்வுகளின் வழிதான்  இதனை விளக்க முடியும் நிறப்பிரிகை இதழுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்று அதில் பெயர் பதிவு செய்திருந்த இருவர் மாறி மாறி எழுதியும் பேசியும் வந்த பொழுது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நிறப்பிரிகை தன்னுடைய கண்டுபிடிப்புதான் என மோதிக் கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. நிறப்பிரிகை பற்றிய முதல் திட்டமிடல் கூட்டத்திலிருந்து கடைசி கலந்துரையாடல் வரை அனைத்தையும் உடனிருந்து பார்த்து ரசிப்பது தோழர். பொதிய வெற்பனுக்கு வாடிக்கையாக இருந்தது.  இவை வேடிக்கையாக இருக்கலாம்,  ஆனால்  புதுவைப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேரக் கல்விப்பணிக்கு நான் முயற்சித்த போது தொடர்ந்து அதற்கு இடைஞ்சல் செய்ததும், அதனையும் மீறி நான் அங்கு சில ஆண்டுகள் கற்பித்தபின்  அங்கிருந்து என்னை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து 2002-இல் அதில் வெற்றி பெற்றதும் அவை நடந்த காலத்தில் நிச்சயம் வேடிக்கையானது இல்லை. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்கள் என்னை எழுதவும் பேசவும் இயலாத நிலைக்குத் தள்ள முயற்சித்தார்கள் என்பதைதான். இன்று அவர்கள் என்னவாக இருந்தாலும் சரி நான் அதனைப் பற்றி கவலைப்படவில்லை, எனக்கு அவர்கள் தொடர்ந்து செய்த இடையூறு  மாற்றுச் சிந்தனைகளை அழிப்பதற்கான அறமற்ற, அநீதியான வன்முறை. மாற்று அரசியல், எதிர்க்கலாச்சாரம், கலகச் செயல்பாடுகள் என்று பேசித் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர்கள் அவற்றை வாழ்வின் பகுதியாக ஏற்ற என்னைத் தனிமைப் படுத்தவும் தண்டனைக் குள்ளாக்கவும் அச்சுறுத்தவும் அந்த அடையாளங் களையே கருவியாக்கியதுதான் இங்கு கவனத்திற்குரியாகிறது.   இன்று   இரண்டு முன்று  நாவல்களுக்கான நிகழ்வுகளாகப்  பதிந்து கிடக்கின்றன அக்கால நாடகங்கள்.  எழுத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு எழுத்தால்தான் பதில் சொல்ல வேண்டும். இனி கசப்புணர்வு என்ன வேண்டியிருக்கிறது, எழுத்துக் கலைஞனுக்கு எல்லாமே கதைதான்… வெறுப்பைச் சுமந்து கொண்டு நாம் விடுதலையைப் பேச முடியாது, விடுதலையை நேசிப்பவர்களை வெறுப்பால் அழித்து விடவும் முடியாது.