தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம்

தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை

பிரேம்

இந்த நிலம் முழுக்க அப்போ காடாக இருந்தது
காடுங்களெல்லாம் எங்க வீடாக இருந்தது
இந்தக் கண்டம் முழுக்கக் கானகம் இருந்தது
கானகம் எங்கும் எங்கள் காலடித் தடங்கள்
இந்தப் பூமி முழுக்க வனமாக இருந்தது
வனங்களெல்லாம் அன்னை மடியாக இருந்தது
இந்த மண்டலம் முழுக்க வனாந்திரம் இருந்தது
வனாந்திரம் எங்கும் எமக்கு வாழ்க்கையிருந்தது
அத்தனைத் திக்கிலும் ஆரண்யம் இருந்தது
ஆரண்யம் அழிந்தபின் யார் எம்மைக் காப்பது.’
ஒரு ஆதிவாசிப்பாடல்

கிளைமுறை கிளத்து படலம்

பலமுறை இந்தப் பத்தியைப் படித்துவிட்டேன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கத் தொடங்கிவிட்டது போல ஒரு உணர்வு. தண்டியா வேறு ஒருத்தியாக மாறிக்கொண்டிருக்கிறாளா? இது இவளாகவே எழுதிய பாடலா, இல்லை நிஜமாகவே அவர்கள் பாடிக்கொண்டு சென்ற பாடலா? அன்று அவள் வந்தவுடன் அது பற்றித்தான் கேட்டேன்.

எந்த மொழியில் அவர்கள் பாடினார்கள் தண்டியா? ‘கோண்டி, முண்டாரி, சந்தாளி, ஹால்பி, தெலுங்கு.’ அத்தனை மொழியிலும் இதே பாடலைப் பாடினார்களா? ‘ஆமாம் இதே போன்ற பாடலைப் பாடினார்கள்.’ அத்தனை மொழியும் உனக்கு எப்படிப் புரிந்தது? ‘கொஞ்சம் புரிந்தது மற்றதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.’ ஒரு ஐநூறு பேர் இருப்பார்களா? காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்த தண்டியா வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். அதுவரை அப்படி ஒரு பார்வையை அவளிடம் கண்டதில்லை. நிதானித்துக் கொண்டவள் ‘ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்’ என்றாள் அழுத்தமாக.

என்னது! டெல்லியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆதிவாசிகளா, எப்படி? ஜந்தர் மந்தர் முழுக்க மக்கள் கூடினாலும் பத்தாயிரம் பேர்தான் இருக்க முடியும். ‘அவர்கள் அங்கு கூடவில்லை, ஊர்வலமாகச் சென்றார்கள், ராம் லீலா மைதானத்தில் கூடினார்கள், பிறகு கலைந்து சென்றார்கள்.’ மீடியாவில் ஒரு தகவலும் இல்லையே?

டெலிவிஷன்காரர்கள் வந்தார்கள், ஒருநாள் முழுக்க படம் பிடித்தார்கள். பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள் அவர்களும் படம் பிடித்தார்கள். ஆனால் செய்தி மட்டும் எதிலும் வரவில்லை, புரபசர் சாப்.’

சில செய்தித்தாள்களில் சிறிய புகைப்படம். ஆதிவாசிகள் நிலம் கேட்டு ஊர்வலம். காட்டுவாசிகளைப் பற்றி நாட்டில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது ஜனாப்?’

தண்டியாவிடம் இருந்து இந்தக் குரலை நான் இப்போதுதான் கேட்கிறேன். சொந்த ரத்தம் உள்ளே பொங்குகிறது போல. அவள் எதுவும் பேசாமல் லாப்டாபை என் பக்கம் திருப்பினாள். ஆய்வுத் திட்டத்தில் உதவியாளர் என்ற வகையில் அவளிடம் நான் தந்திருந்த கனமான ஒரு காட்ஜெட். திரையில் சனக்கூட்டம். ஈட்டி, அம்பு, வில், வாள், கூர் மூங்கில்கள், விதவிதமான தோற்கருவிகள், பல வண்ணங்களில் உடைகள், மணிகள், இறகுகள் கொண்ட தலைப்பாகைள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கைகளில் இந்தி எழுத்து கொண்ட அட்டைகளுடன் நடந்து கொண்டிருந்தார்கள். எங்கள் மண் எங்கள் உரிமை, மலைகளை உடைக்காதே மரங்களை அழிக்காதே, அணைகள் எங்கள் நிலங்களின் சமாதிகள், காடு போனால் வாழ்வு போகும், கனிமம் இல்லை அது கர்ப்பம், நிலம் வழங்கு நீர் தருவோம், வாழவிடு வளம் தருவோம் … சற்றே வால்யூமைக் கூட்ட டோல் முழக்கங்கள், பலவிதமான கோஷங்கள், கும்பலான ஆட்டங்கள். தலைநகரில் இத்தனைப் பெரிய கூட்டம், ஆனால் செய்திகள் இல்லை, அது பற்றிய பேச்சுகள் எதுவும் இல்லை. நான் அன்று ஊரில்தான் இருந்தேன், ஒரு தொலைக்காட்சியிலும் அதுபற்றி ஒரு பட்டிச்செய்திகூட இல்லை.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பிகார், தண்டேவாடா, வங்காளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள் என்று தண்டியாதான் சொன்னாள். ‘இந்திய ஆழ்மனமும் ராமாயணமும்’ என்ற எனது ஆய்வுக்கான தகவல்களை ஆதிவாசிகளிடம் இருந்து திரட்டும் உதவியாளர் என்ற வகையிலும் ‘இந்திய மொழிகளில் ராமாயணம்’ என்ற தலைப்பில் என் வழிகாட்டுதலில் ஆய்வு செய்கிற மாணவி என்ற வகையிலும் அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

பல்வேறு ஆதிவாசி மக்களை ஒரே இடத்தில் சந்தித்துவிடலாம். அடிப்படைத் தகவல்கள் கிடைத்துவிடும், ஒலிப்பதிவு செய்தால் ஏராளமான பதிவுகள் கைக்குள் வந்துவிடும். பிறகு ஒவ்வொரு பகுதியாகக் களப்பணிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். ‘நல்ல வாய்ப்பு பயன்படுத்திக்கொள்’ என்றேன். அதற்குப் பிறகு அவளைப் பல நாட்கள் காணவில்லை. தாமோதர் வந்து தகவல்கள் சொன்ன பிறகுதான் அவளுக்கு மெயில் அனுப்பினேன். இரண்டொரு நாட்களில் வந்து முழு ரிப்போர்ட் தருவதாக ஒரு வரி பதில் மட்டும்.

குருஜி, தண்டேவாடா பகுதி ஸ்பெஷல் போலீஸ் போர்ஸ் காம்பில் மாவோயிஸ்டுகள் தாக்குதல், 20 பேர் படுகொலை, 140 பேருக்கு மேல் படுகாயம். எராபோர், காங்கலூர், பசகுடா எங்கும் தொடர்ந்து தாக்குதல். காட்டில் கொரில்லா யுத்தம், தலை நகரில் கோரிக்கை முழக்கம். தண்டகாரண்யத்தை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இந்தியா இனி ஒரு இஞ்ச்கூட முன்னேற முடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் நமக்குக் கொடுத்த கெடு முடிந்துவிடும்.’

செய்தியில் பார்த்தேன் தாமோதர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக மாநில முதலமைச்சர்கள் சொல்கிறார்கள். எத்தனை ஆண்டு கால யுத்தம் இது! இன்றா நேற்றா? மூவாயிரம் ஆண்டுகளாக நடக்கிறது. நாகரிகம் அடைந்த மக்களுக்கும் காட்டுவாசி சனங்களுக்கும் இடையிலான யுத்தம், ரகுவம்ச படைகளுக்கும் ராட்சச குலங்களுக்கும் இடையிலான யுத்தம், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தம், இதனைத் தேவாசுர யுத்தம் என்றுகூட குறிப்பிட்ட காலம் உண்டு.’

எல்லாமே உங்களுக்கு ராமாயணம்தானா டாக்டர் சாப்? எனது நண்பனுடைய பொறுப்பில் இருந்த போலீஸ் ஸ்டேஷனைத் தகர்த்து ஐந்து டெரரிஸ்டுகளை மீட்டிருக்கிறார்கள் நக்ஸல் தீவிரவாதிகள். அவன் ஒரு செயற்கைக் காலுடன் சல்வா ஜூடும் படைக்கு பயிற்சியாளனாக இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்று போனது. உங்களுக்கு இதெல்லாம் ராமாயணம், மகாபாரதம்தானா?’

தாமேதர் ஜீ! இந்திய வாழ்க்கை, அரசியல், சமூகம், மனம் எல்லாம் ராமாயணமகாபாரதத்தில் அடங்கிவிடக்கூடியவை. இவை ஒவ்வொருவருடைய மனதிலும் பதிவு செய்யப்பட்ட திரைக்கதை போல, ஒவ்வொருவரும் அதில் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கிறோம். இந்திய நாடு, பாரத தேசம் என ஒன்று இன்றும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ராமாயணமும் மகாபாரதமும்தான். நம் தேசம் கதையால் இணைக்கப்பட்டது, கதையின் வழியாக இயங்கிக்கொண்டிருப்பது. இந்தக் கதை எவருடைய உள்ளத்தில் படியவில்லையோ அவர்கள் தேசபக்தர்களாக இருப்பதில்லை, தேசச் சத்துருக்களாக மாறிவிடுகின்றனர். ராகவனின் ஜன்மபூமியை மீட்டெடுப்பது எதோ கோயில் மீட்பு என்று நினைத்துக் கொண்டீர்களா பிராமணோத்துமரே, அதுதான் நமது புராதன தேசம்.’ ‘அப்படியென்றால் தண்டேவாடாவில் நடக்கும் யுத்தம் ராம ராஜ்ஜியத்தில் அடங்காதவர்கள் நடத்தும் யுத்தமா?’

தண்டேவாடா என்பது தாண்டக வனம், அதுதான் தண்டகாரண்யம், அதற்கும் அப்பால் ராவணர்கள் பூமி. மூவுலகும் ஆண்ட தசரதச் சக்ரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்த பின்னும் தெற்கு தேசங்களும் மற்ற ஆதிவாசி மண்டலங்களும் அயோத்திக்கு அடங்கியதாக இல்லை, அதனையெல்லாம் தன் ராமராஜ்ஜியத்தின் பகுதியாக அடக்கவே ராம, லக்ஷ்மண யாத்திரை தொடங்கியது. அது முடிய பதினான்கு ஆண்டுகள் ஆனதில்லையா? பிறகுதானே மூவுலகும் ரகுவம்ச ராஜ்ஜியமானது.’

பரதகண்டம் முழுக்க ஒரு மண்டலமாக மாறியதுதானே ராமராஜ்ஜியம். பிறகு எப்படி அதற்குள் அடங்காத ஆதிவாசிகளும் அசுர குலங்களும். ராம பக்தியில் பிறப்பதுதான் ராஜவிசுவாசம் என்று நீங்கள்தானே எனக்கு விளக்கினீர்கள்.’

அதில்தான் ஏதோ சிக்கல், எங்கோ தவறு நடந்திருக்கிறது. ராமாயணத்திற்கு எதிர்க்கதை ஒன்று, ஏதோ ஒரு வடிவில் அது உலவிக்கொண்டிருக்கிறது. அதனைக் கண்டுபிடிப்பதற்குத்தான் எனது இத்தனை ஆராய்ச்சியும்.’ ‘ராமன் கதைக்கு மாறான ராவணன் கதை, அதைத்தானே சொல்கிறீர்கள்?’

ராமன்ராவணன் இரண்டு புராணிகமும் பிரம்மாவிஷ்ணுசிவா என்ற திரிமூர்த்தி ஐதீகத்தால் இணைந்துவிடும். இதற்குள் பரத கண்ட புராணிகம் ஒன்றாகக் கலந்துவிடும். தபஸ், யஞ்சம் என்ற வேத மரபுகளும் இக்கதைகளுக்குள் புகுந்துவிடும். ஆனால் இதற்குள் அடங்காத வேறு ஏதோ கதை இருப்பது போலத் தோன்றுகிறது. அதனைக் கண்டறிய வேண்டும் அல்லது அது பரவாமல் தடுக்கவேண்டும்.’ ‘முதல் வேலையை நீங்கள், நீங்கள் செய்யுங்கள், இரண்டாவது வேலையை நாங்கள் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.’ ‘எது என்று தெரிந்தால்தானே பரவாமல் தடுக்க முடியும்?’ ‘அது வரை காத்திருக்கிறோம்.’

சில நாட்களுக்கு முன் நடந்த கட்டுவாசிகள் பேரணியில் சிலபேர் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு தண்டகாரண்யம் எமது என்று கூவிக்கொண்டு போனதைப் பார்த்தேன், அவர்கள் யாருடைய வம்சத்தில் வந்தவர்கள், அவர்கள் ஏந்தியிருப்பது யாருடைய வில்?’ ‘தண்டகாரண்யத்திலிருந்து வில்லும் அம்பும்! ஆமாம் நீங்கள் அங்கே போயிருந்தீர்களா?’

மூன்றுநாள் அந்தப் பக்கம்தான் மீடியாவில் வராமல் பார்த்துக்கொள்வதுதான் எங்கள் டீம் வேலை.’ ‘தண்டியாவிடம் டாக்குமெண்டேஷன் செய்யச் சொல்லியிருந்தேன், மறந்தே போனது, அவளும் வந்து எதுவும் சொல்லவில்லை.’

யார், அந்த எஸ்டி ஸ்டூடண்டா? என்ன ஆராச்சியோ என்ன டாக்குமெண்டேஷனோ, ரிசர்வேஷன்தான் இந்தியாவின் ஊழல்களுக்குக் காரணம், ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் உள்ள மிலிடன்ஸிதான் இந்திய அமைதிக்குப் பெரும் கேடு என்றெல்லாம் சொல்லி வந்த காங்கிரிட் இண்டலக்சுவல் நீங்கள். இப்போ உங்களிடமே ஒரு எஸ்டி ரிசர்ச் ஸ்காலர், என்னதான் நடக்கிறது குருஜி?’

நாம் நினைத்ததையெல்லாம் செய்ய காலம் இன்னும் வரவில்லை. 2004இல் கையில் இருந்ததை நழுவவிட்டீர்கள், இப்போது நம் நிலைமை என்ன? முழு அதிகாரமும் நம் கைக்கு வந்தால் சட்டங்களை மாற்றலாம், இப்போது பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு கண்காணிக்கப்படுகிறது. அத்தோடு தண்டியா போன்ற ஆதிவாசி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் என் ஆராய்ச்சிக்கு மிகவும் தேவை, காலம் வரும்போது சொல்கிறேன்.’

தாமோதர் போன்ற நண்பர்கள் இல்லையென்றால் எனது நிலை என்னவாகியிருக்கும். இந்தியிலிருந்து தமிழுக்குச் சில நூல்களை மொழிபெயர்த்து விட்டு பெயர் தெரியாத ஆளாக உலவிக்கொண்டிருப்பேன். இன்று உள்ளது போலக் காவிய அறிஞராக, இந்திய ஞானமரபு பற்றிய நூல்கள் எழுதிப் பாராட்டுகள் பெறுகிறவனாக மாறியிருக்கமாட்டேன். எதையெழுதினாலும் அச்சில்தர பத்திரிகைகள், கல்வியாளர்நூலாசிரியர் என்ற பெயருடன் தொலைக்காட்சிகள் என் கருத்தை அப்படியே ஒளிபரப்புகின்றன.

1999-இல் கார்கில் யுத்த தியாகிகளுக்கான கவிசம்மேளனத்தில் சந்தித்த தாமோதர் பாண்டே என்னை அப்படித் தழுவிக்கொண்டான், முன்னால் மாணவன், ஆனால் இன்று பெரிய மனிதன்.

உறக்கம் மறந்த கண்கள்தானே எமக்குக்
கனவை அனுப்பி வைக்கிறது,
உயிரைத் துறப்போம் என்பதறிந்தும் எம்
உடலைக் காக்க வைப்பதெது?
பனியில் உறைந்த உடலின் மீது
கனப்பாய் எனது சொல் படியும்
நெருப்பாய் நீங்கள் சீறும்போதும் அதன்
நிறத்தை மட்டும் என் கைதழுவும்.’

நிறத்தை மட்டும் என் கை தழுவும், நிறத்தை மட்டும், என்ன நிறம் குருஜி? என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவன்தான் அதன் முடிச்சை அவிழ்த்தான். அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டு விடவே இல்லை. என்னை அதற்குப் பிறகு வாரம் ஒருமுறையாவது சந்திக்காமல் இருக்கமாட்டான்.

பல்கலைக் கழகங்கள்தான் தேசவிரோத சக்திகளின் நாற்றங்கால் என்பதை எனக்குத் தெளிவாக உணர்த்தியவன் அவன்தான். நச்சு விதைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைக் கற்பித்தவனும் அவன்தான். வெறும் பேச்சுகள் எவை, அச்சுறுத்தும் சக்திகளாக மாறுபவை எவை என அடையாளம் காண்பதில் அவன் ஒரு மேதை. பேரணிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் அனைத்திலும் அவன் தென்படுவான். அவன் உயரமும் மிடுக்கும் யாரையும் நமஸ்தே சொல்லவைக்கும்.

வகை வகையான உடைகளில் கருத்தரங்குகள், கூட்டங்களில் அவன் உட்கார்ந்திருப்பான். அவனிடம் கேட்டிருக்கிறேன், அப்படி என்ன விரோதிகளைக் கண்டுபிடிக்கிறாய்? குருஜி, இது பகைவர்களைக் கண்டுபிடிக்கும் வேட்டையல்ல, நண்பர்களைக் கண்டுபிடிக்க விரிக்கப்படும் கண்ணி. கவி சம்மேளனத்திற்கு நான் வரவில்லையென்றால் உங்களை நான் எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? அவன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதும் அவன் சொல்பவற்றைக் கேள்வியின்றி கேட்டுக்கொள்வதும்தான் எங்களுக்கிடையிலான ஒப்பந்தம்.

நகர்நீங்கு படலம்

தண்டியா கொண்டு வந்த குறிப்புகளில் ராமாயணம் பற்றிய ஒரு தகவலும் இல்லை. ஒலிப்பதிவில் அவள் கேள்விகள் எதுவும் ராமாயணம் பற்றிதாகவும் இல்லை. தண்டியா என்ன இது, ‘இந்தியாவின் ஆதிவாசிகள் போராட்டம்’ பற்றிய ஆவணப்படமா செய்கிறாய்? ஒரு கேள்விகூட ராமாயணம் பற்றியோ ராமன் வழிபாடு பற்றியோ இல்லையே. ‘ராமாயணம் அப்படி என்ன இந்தியச் சமூகங்கள் அனைத்திலும் பரவியிருப்பதா ஜனாப்?’

தண்டியாவின் கேள்வி புதிதாக இருந்தது. ராமாயணம் நாட்டுப்புறக் கதைகள் முதல் ஆதிவாசிக் கதைகள் வரை உள்நிறைந்து இருப்பது. வாய்மொழி மரபிலும், நாடக மரபிலும், இசை, கீர்த்தனை மரபிலும் அது படிந்து போயிருக்கிறது. அது ஆசியா முழுக்க பரவியிருப்பது. ஆண்மையின் தொல் படிமம் ரகுராமன், புருஷோத்தமன் என்றால் மனிதர்களில் ஆகச்சிறந்தவன் என்று அர்த்தம்.

சீதை பற்றிய கதைகள்தான் அதிகம் என்று எனக்குத் தோன்றுகிறது, ஜனாப். ஆந்திரத்தின் கதைப்பாடல்களில் இருப்பது சீத்தம்மா, அதாவது குளுமையானவள் என்று அர்த்தம். உழுத மண்ணில் இருந்து பிறந்தவள் என்ற அர்த்தத்திலும் சீதை வழிபாடு அதிகம். பெருந்தெய்வ வழிபாட்டில் ராமனும் சிறுதெய்வகிராம வழிபாட்டில் சீதையும் அதிகம் இருப்பதாக எனக்குத் தெரிகிறது.’

எப்படியென்றாலும் இரண்டும் ராமாயண மரபுதான், அதுதான் நமக்கு முக்கியம். இந்து மரபின் பெரும் கிளைகள் யாராலும் அளவிட முடியாதது.’ ‘ராமாயண மரபு என்றால் ராமன் போரில் வென்று ராஜ்ஜியம் ஆள்வதா? அல்லது ராஜ்ஜியம் துறந்து சீதை காட்டில் வாழ்ந்து, கடைசிவரை ராமனுடன் இணையாமல் மறைந்து போவதா? இரண்டும் ஒன்று என்று சொல்வதில் எதோ குழுப்பம் இருக்கிறது.’ ‘இது யூகங்களின் அடிப்படையில் செய்யப்படும் விதண்டாவாதம். எதற்கும் டெக்ஸ்டில் இருந்து சான்று காட்ட வேண்டும். ராமனுக்கும் சீதைக்கும் கருத்தில், மதிப்பீட்டில் வேறுபாடு, முரண் இருந்ததாக எந்த ராமாயணமும் குறிப்பிடவில்லை.’

சாரி புரபசர், வால்மிகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் சீதை சொல்கிறாள், ‘ராமா நாம் இப்போது துறவு பூண்டு சன்யாச வாழ்க்கை வாழ வந்திருக்கிறோம், அதுதான் உங்கள் தந்தை, தாய் இட்ட கட்டளை. பதினான்கு ஆண்டுகள் நீ சத்திரியன் இல்லை, சக்ரவர்த்தி இல்லை. ஆனால் நீயோ துறவற ஆடையும், சடாமுடியும் தரித்துக் கொண்டு கையில் வில்லும் அம்புமாய் எதிரே வரும் அனைவரையும் கொல்கிறாய். உன்னிடம் அடிபணிந்து அடைக்கலம் புகும் சிலரைத் தவிர அனைவரையும் சம்காரம் செய்கிறாய். உத்தமனே உன்னிடம் தெண்டனிட்டுக் கேட்டுக்கொள்கிறேன், தவ வாழ்க்கை வாழும் இந்தக் காலத்தில் உன் கையில் ஆயுதம் இருப்பது தர்மம் அல்ல, அதனால் உன்னை கொல்வதற்கு வராத யாரையும் கொல்லாதே! துறவு பூண்ட இந்தக் காலத்தில் தவம் மட்டும் செய், அயோத்யாவுக்குத் திரும்பிய பின் மீண்டும் நீ ஆயுதம் ஏந்திய ஷத்திரியனாகலாம்.’

அதற்கு ராமன் சொல்கிறான், ‘நான் இங்கு வந்ததே போர் செய்யத்தான், தாண்டக வனத்தில் உள்ள பிராமணர்களைக் காத்து ராட்சசர்களைக் கொள்வது எனது கடமை. உன் உயிரைவிட, லக்ஷ்மணன் உயிரைவிட, என் உயிரைவிட எனக்குப் போரே முக்கியம்.’

இது டெக்சுவல் ரீடிங்தான். இரண்டும் வேறு வேறு மதிப்பீடுகள், கானக சீதைக்கும் சாம்ராஜ்ஜிய ராமனுக்கும் உள்ள முரண் வாய்மொழி மரபுகளில் வேறு அர்த்தம் பெறுகிறது.’ ‘தண்டியா, இது ஃபெமினிஸ்டுகள் பேசுவது, எப்போது நீ ஃபெமினிஸ்டாக மாறினாய்?’

இண்டர்வியூவின் பொழுது கேட்ட கேள்விகளுக்கு ஒரு வரி பதில் சொல்லிவிட்டு பயந்து உட்கார்ந்திருந்த பெண்ணா இவள், அந்த பயம்தான் இவளுக்கு பி.ஹெச்டியில் இடம் வாங்கித்தந்தது, புராஜெக்ட் உதவித்தொகையும் வாங்கித் தந்தது. இந்த எஸ்சிஎஸ்டிகளுக்குத்தான் எத்தனைச் சலுகைகள், எத்தனை உதவித்தொகைகள்! எனது அமைதியை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் நல்லதல்ல.

சரி, தண்டியா வால்மிகி ராமாயணத்தை இங்கிலிஷில் படிப்பதால் வரும் குளறுபடிகளில் ஒன்றுதான் நீ சொல்வது. நான் உன்னை அனுப்பி வைத்தது ஆதிவாசிகளின் பேச்சில், பாட்டில், கதைகளில் ராமாயணம் பற்றிய குறிப்புகள், தகவல்கள் உள்ளனவா என்று பதிவு செய்து வரத்தான், அது பற்றி ஒரு வரிகூட இல்லையே!’

அவர்கள் பல மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி நடந்தே வந்தார்கள், வரும் வழியெங்கும் பாட்டும் கோரிக்கைக் குரல்களும். பத்துபேர், இருபது பேர் என்று புறப்பட்டவர்கள் வழிநெடுக நூறு, ஆயிரம் எனத்திரண்டு டெல்லியில் கூடியபோது லட்சத்திற்கு மேல் இருந்தார்கள். அவர்களுடன் நான் மூன்று நாள் இருந்தேன். அவர்கள் ஒயாமல் பாடிய பாட்டில்தான் ராமாயணம் இருக்கிறது. படித்துப்பாருங்கள் ஜனாப்.’

எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன், கவனமாக இருக்கவேண்டும். எஸ்டி மாணவி, பெண் சொல்லவே வேண்டாம். அன்டச்சபிலிட்டி, அட்ராசிட்டி, ஹராஸ்மெண்ட், விசாரணைக் கமிட்டி, இந்தக் கொடுமையெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம், ஆத்திரம் வந்தாலும் அடக்கிக்கொள்ளத்தான் வேண்டும். ‘எந்தப் பாட்டில் ராமாயணம் பற்றிய குறிப்பு உள்ளது?’

இந்த நிலம் முழுக்க அப்போ காடாக இருந்தது, அந்தக் காடுங்களெல்லாம் எங்க வீடாக இருந்தது.’ அவள் அதைப் படிக்கிறாளா? இல்லை அவளே அதைச் சொல்கிறாளா? என் மனைவியும் பிள்ளைகளும் என்னிடம் பேசும்போது முணகலாகத்தான் இருக்கும். என் கார் உள்ளே நுழையும் போது உள்ளிருந்து கேட்கும் பாட்டு சிரிப்பு எல்லாம் பவர்கட் ஆனது போல பட்டென்று நிற்கும். என் பாட்டியும், அம்மாவும் இப்படியொரு அழுத்தமான குரலில் பேசி நான் கேட்டதில்லை. ‘தண்டியா உனக்கு என்ன ஆனது? இதில் ராமன், சீதை, ராமாயணம் என்னதான் உள்ளது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்.’

காடு, வீடு, கானகம், ஆரண்யம் எல்லாமே ராமாயணம் பற்றித்தான் சொல்கின்றன. ராமன் சேனைகளின் படையெடுப்பபைச் சொல்கின்றன, பூமி பிளந்து விழுங்கிய சீதை பற்றிச் சொல்கின்றன. சுரங்கங்கள் தோண்டும் இயந்திரங்களைப் பற்றி, பாளம் பாளமாய் பிளந்து கிடக்கும் பூமி பற்றி. பதுங்கிய சீதையைக் கவர்ந்து செல்ல மண்ணைப் பிளக்கும் ராமர்கள் பற்றி…’

தண்டியாவின் கண்களில் ஒரு வஞ்சம் இருப்பது தெரிந்தது, அவள் முகத்தின் நெளிவுகள், சுருக்கங்கள். என்ன ஆனது, ஏதோ சரியில்லை. ‘தண்டியா டிரக்ஸ் எதுவும் எடுத்தியா?’ அவள் நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘இனிமேதான் எடுக்கணும்’ என்றாள். நான் அந்த டிரக்ஸ்ச கேட்கல. ‘அதற்கு எனக்கு நேரமில்லை புரபசர்.’ சம்திங் ராங்… புத்திக் குழப்பம், மனத்தடுமாற்றம்… எதுவானாலும் இப்போது போய் தொலையட்டும்.

வி கேன் ஹேவ் அவர் டிஸ்கஷன் ஆஃப்டர்வேர்ட்ஸ். லெட் மி கண்டினியு மை அசைன்மண்ட்.’ நான் எழுந்துகொண்டேன். அவள் லேப்டாப்பை மடக்கியபோது ‘இருக்கட்டும் தண்டியா. புராஜக்ட் வெரிபிகேஷன் இருக்கு, முடிஞ்ச பிறகு எடுத்துக்கலாம்.’ அவள் தயங்கி நின்றதைக் கவனித்தேன். ‘ஷல் ஐ காப்பி சம் ஃபைல்ஸ் ஆன் மை பென்டிரைவ்.’ ‘நாட் நௌ, இட் ல்பி சேஃப், அண்ட் ஃபர்தர் இட் இஸ் மை புராஜெக்கட், நா?’

அவள் சிஸ்டத்தை தொடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எடுத்துத் திறந்தபோது பாஸ்வேர்ட் கேட்டது. கடுங்கோபத்தில் பாஸ்வேர்ட் வைக்க இது என்ன உன் அப்பன் வீட்டுக் கம்ப்யூட்டரா? சொல்லு, என்ன? தயங்கியவள் ‘எம்எஎஎஸ்ஈ’ என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள். மாசே? என்ன அது? சற்று நேரம் தேடியபின் அது கோண்டி மொழியில் கறுப்பாயி அல்லது கறுப்பழகி என்று பொருள் காட்டியது. நான் தாமோதர் எண்ணை அழுத்தினேன். ‘உடனே வரணும் பாண்டே ஜீ!’

மந்திரம் உரைத்த படலம்

காட்டில்தானே நாங்கள் பிறந்தோம், காட்டில்தானே நாங்கள் வளர்ந்தோம், காட்டில்தானே நாங்கள் வாழ முடியும். காடு எங்களின் வீடு, உங்கள் நாடுதான் எங்களுக்குச் சுடுகாடு. எங்க வீட்ட நாங்க அழிக்கிறதா சொல்லி அதற்குக் காவல் போட்டீங்க. எங்க பிள்ளைகளை நாங்க கொல்லறதா சொல்லி அவங்கள சிறையில வச்சீங்க. எங்க மண்ண நாங்க நசுக்கிறதா சொல்லி அதை வெளிநாட்டுக்காரங்களுக்கு வித்தீங்க. எங்க நதிய நாங்க தடுக்கிறதா சொல்லி அத அணையில அடைச்சீங்க, நாங்க இருந்தா எல்லாம் தொலைஞ்சிடுமின்னு எங்கள ஊர்விட்டு விரட்டினீங்க, நாங்க வாழ்ந்தா இதையெல்லாம் உலகத்துக்குச் சொல்லுவோம்ணு எங்கள நெருப்பில சுட்டீங்க.

படபடவென்று பேசிய அந்த மூத்த முண்டாவை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். இது வரைக்கும் அவருடைய குடிசையை ஆறுமுறை எரித்திருக்கிறார்கள். அவருடைய பெண் பிள்ளைகள் இரண்டு பேர், ஆண்பிள்ளைகள் மூன்று பேர் சிறப்புக் காவல் படையால் சுடப்பட்டிருக்கிறார்கள். ஒரே ஒரு மகள் மட்டும் இப்போது காடு காக்கும் படையில் சேர்ந்திருக்கிறாள். காம்பில் இருந்த வீரர்கள் முதல் முறை அவளைத் துக்கிச் சென்றபோது அவளுக்கு வயது பதினொன்றுதானாம். அவள் வீட்டைவிட்டு போனபோது பதினாலு வயதுதானாம். காட்டில் நடந்த மண்டல் விழாவின் போது முண்டா ஒரே ஒரு முறை அவளைப் பார்த்திருக்கிறார். துப்பாக்கியுடன் வந்து கையைப் பிடித்துக்கொண்டவள் ‘இப்போ யாரும் என் கிட்ட நெருங்கவும் முடியாது.’ என்று சொல்லி சிரித்திருக்கிறாள். இதைச் சொன்னது இன்னொரு பெண்.

நான் கேட்டேன், காடு அரசுக்குத்தான் சொந்தம், அவங்க சொல்லும்போது அதவிட்டு வந்துட வேண்டியதுதானே. ‘அரசாங்கம், சாம்ராஜ்ஜியம் எல்லாம் வரும் போகும், காடு எப்பவும் இருக்கும். எத்தனை தேவ கணங்கள் வந்து அழிக்க நினைத்த காடு, அது என்ன அழிஞ்சா போயிடுச்சி! எத்தனை ராம சேனைகள் வந்து அடக்க நினைச்ச வனாந்திரம், அது என்ன மறைஞ்சா போச்சி! எல்லாம் மறைஞ்சி போகும், காடு மட்டும் மிச்சம் இருக்கும். மூத்த முண்டாதான் மீண்டும் பேசினார். ராம சேனைகள், தேவ கணங்கள், யார் அவர்கள்? அவர்கள்தான் இந்தக் காடுகளை அழித்தவர்கள், மலைகளை உடைத்தவர்கள், இந்த மக்களைக் கொன்று குவித்தவர்கள். நானும் அவர்களுடன் நடந்தேன், எட்டு நாட்கள் அவர்களுடன் நடந்தேன். மிச்சமிருக்கும் காட்டைப் பார்க்க வேண்டும், அதில் எஞ்சியிருக்கும் கதையைக் கேட்க வேண்டும்.

பித்தர்கள் உரைத்த படலம்

அந்த நகரத்திலிருந்துதான் அது தொடங்கும் என எப்படியோ அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிரவி நதியின் பக்கம் இருந்த மக்களையெல்லாம் விரட்டிவிட்டு கட்டிய கோட்டையும் அரண்மனையும் கொத்தளங்களும் அவர்கள் இடமானது. முன்பு இந்திரன் நகரத்திலிருந்து வந்த சேனைகள் அழித்த காடுகளில் இருந்து தப்பியவர்கள் தெற்கிலும் மேற்கிலும் பதுங்கி வாழ்ந்தனர்.

பிராமணர்கள், ரிஷிகள், முனிகள் என்ற பெயர் கொண்ட சனக்கூட்டம் காடுகளில் வந்து நெருப்பை மூட்டினர். மண்ணை உருக்கி உலோகங்களாக்கி நகரங்களுக்குக் கொண்டு சென்றனர். காடுகளின் மிருகங்களை ஓயாமல் வேட்டையாடுவதும் வேள்வியில் பொசுக்குவதும் அவர்களுக்கு விளையாட்டு. வேள்விகளில் கரியும் காட்டைக் காக்க தாடகை முதலான தாய்களின் படைகள் அவ்வப்பொழுது தாக்குதல் நடத்தும். தாருகா, தரகா இவர்கள் எல்லாம் தரையைக் காப்பவர்கள் கண்டவர்கள் புலன் மயங்கும் பெரெழில் கொண்டவர்கள். நீரியா, சீத்தியா, சீத்தள்ளா இவர்கள் நீர்வழிக் காப்பவர்கள் இசையும், நடனமும் இவர்களின் வம்ச வித்தை. வனங்களைக் காப்பது இவர்களின் வம்சம்தான்.

நகரத்திற்குள் அடங்கியிருப்பதும் அவ்வப்போது வந்து கொள்ளையிடுவதும் நகர கணங்களின் வழக்கமானது. நதிக்கரை நகரின் சக்ரவர்த்திக்கு அடங்காத ஆசை, இந்திரன் நகரத்தைப் போல அத்தனை திசைகளின் வனங்களையும் தனதாக்க வேண்டும், தென்திசை மண்ணுக்குள் உள்ள லோகங்களையும் மணிகளையும் தன் நகர் சேர்க்க வேண்டும். அதற்கென அவன் தவம் செய்து பெற்ற பிள்ளைகள் நால்வர்.

மூத்தவன் தொடங்கி அனைவருக்கும் ஆயுதப்பயிற்சியும் அனைத்துவகை தந்திரங்களில் பயிற்சியும் அளித்தவர்கள் இந்திர நகரத்து ஆச்சாரியர்கள். இளையவர் இருவர் நகரைப் பார்த்துக் கொள்ள, மூத்தவர் இருவரும் முனிவர் படையுடன் புறப்பட்டனர். பதினைந்து வயதில் பதுங்கித் தாக்கும் படையினராக தாடகைத் தாயின் வனதேசம் அடைந்தனர்.

அந்தணர்கள் அழிவும் ரிஷிகளின் கொடுமையும் குறைந்த காலம் அது. பயம் தெளிந்த மக்கள் ஆட்டம் பாட்டம் எனக் களித்திருந்த காலம் அது. ராஜமுனியின் ரகசியத் திட்டம். இளையவர் இருவர் யாசகம் கேட்டுவந்ததாக தாடகையின்முன் சொல்லி நின்றனர் வனசேவகர்கள். தேனும், புல் விழுதும் கலந்து களித்திருந்த காவல் தலைவி இளையோர்தானே என எதிர் நின்று கேட்டாள், என்ன வேண்டும் பிள்ளைகளே? முனிவனின் சங்கொலி முழங்க, மறைத்து வைத்திருந்த ஆயுதம் கொண்டு பிளந்தனர் நெஞ்சை. அங்கங்கள் ஒவ்வொன்றாய் அறுத்து வீச அலறிக் கலைந்தனர் மக்கள்.

முனிகளின் படையும், அந்தணர் சேனையும் வனத்தின் மக்களை நெருப்பில் பொசுக்கினர். வடதிசைக் கானகம் தம் வசமானதென பெருங்கொண்டாட்டம். புதிதாகப் படைகள், பயந்து பதுங்கிய சேனைகள் மீண்டும் பயிற்சி பெற்று திரண்டு பரவின, வழியெல்லாம் பலிகள்.

சீதள மாதா வம்சத்தில் வந்தவள், கானகங்களின் நீர் வழி கண்டவள், பூமிக்குள் புதைந்த பொன்னும் மணியும் தன் காலடித் தடத்தால் தடம் காட்டக் கற்றவள், அவள்தான் முனிபடைகளின் இலக்கு. மைதல பாஷை பேசும் மக்கள் அவளை வணங்கி தாயாக ஏற்றுத் தம் நகரில் காத்தனர்.

நூறு வண்டிகளில் மாறுவேடத்தில் சென்ற முனி படை அந்தச் சிறு நகரில் நுழைந்தது. வில்லும் அம்பும் வாங்க வந்ததாகச் சொல்லிப் படைக்கொட்டில் அடைந்த இளையவன் வெளிக்காவல் இருக்க, மூத்தவன் உள்ளிருந்த படைக்கலம் எல்லாம் எரித்து முடித்தான். முனிகள் படை வெளிக்கிளம்பி சீதள மாதாவை சிறைப்பிடித்தது. மூத்தவன் அவளைத் தம் தாரமாக்கி சிரவி நதிக்கரை நகருக்குக் கொண்டு போனான்.

செல்வங்கள் எல்லாம் இனித் தம் நகருக்குச் சொந்தம் என்று மன்னனும் மக்களும் பெருங்கொண்டாட்டம். சீதள நங்கை பேச்சை மறந்தாள், தன் வனக்கோட்டம் இருக்கும் திசை பார்த்து ஏங்கியிருந்தாள். தென்திசையெங்கும் தன் வசம் கொள்ளும் காலம் வந்தது என்று மூத்தோனும் இளையோனும் சேனையுடன் புறப்பட்டுவிட்டனர்.

பின்னிளைவர்கள் நகரைக் காக்க, முன்னிருவர் காடுகள் கொள்ளப் புறப்பட்டுவிட்டனர். சீதள நங்கைக்கு நதிகளின் வழி தெரியும், தென்திசை கானகங்கள் இருக்கும் இடம் தெரியும். அதைவிட அவள்தான் மூத்தோன் படைக்கு முன்னே நடப்பவள். மறைந்திருந்து கனையெரியும் கானகத்துப் படைகளின் கைகளுக்குப் பூட்டு அவள்.

இளையோனுக்கும் மூத்தோனுக்கும் கேடயமாய் அவள் நடந்தாள். கங்கை தொடங்கி நர்மதையும் கோதாவரியும் என ஆறுகள் அணைந்த ஊர்களில் எல்லாம் அந்தணர், முனிவோர் ஆட்சியை நிலைப்படுத்தி கானக சனங்களின் தலைமைகள் அழித்தனர். தென்திசையில் மீந்திருக்கும் வனங்களையும் கனிமக் குவைகளையும் தம் நகர்வசமாக்க நாள் பார்த்திருந்தனர்.

சூரப்பெண்ணகையின் வனமண்டலத்தின் ஓர் பகுதியில் தண்டம் இறக்கித் தங்கியிருந்தனர். சூரப்பெண்ணகை அந்த வழிவந்த ஒருநாள் சீதள நங்கையின் காலடித் தடங்களைக் கண்டு குடில் வரை வந்துவிட்டாள். இருவரும் ஒரு நொடி எதிர் எதிர் கண்டனர். தங்கை போன்றவள், தம் தாயும் போன்றவள். மங்கையை இழந்த மக்களின் பெருந்துயரை கண்ணின் நீர்த்துளியால் காட்டி நின்றனள். அச்சம் அறியாத பெண்ணகை அவளை மீட்டுச் செல்வதாய் சொல்லிச் சென்றனள்.

சூரப்பெண்ணகையின் சூட்சும மொழியை அறிந்து கொண்ட இளையவன் பின்தொடர்ந்து சென்று அவள் அங்கங்கள் அறுத்தான். தப்பிய பெண்ணகை தன் தமையனிடம் சென்று சீதள மங்கையின் இருப்பிடம் சொன்னாள். இருவரின் காவலில் அவள் இருப்பதைச் சொன்னாள்.

கானக மக்களின் கண்ணீர் அறிந்தவன், வனக்குடிகளின் வாழ்வைக் காப்பவன், தன் நகரைக் கூட அடவியாய் வைத்தவன், இரவானான் என்னும் பெயரைக் கொண்டவன். பத்துத் திக்கிலும் படைகளை நிறுத்தி கானுயிர் அனைத்தையும் காவல் காப்பவன், தந்தையைப் போலத் தன்னை மீட்க வருவான் எனச் சீதள மங்கையிடம் கிளிகள் வந்து சேதிகள் சொல்லின.

பொன் குவியல் இருக்கும் இடம் தன் நினைவில் வருகிறதென வடக்குப் பக்கமாய் கையைக் காட்டிய அன்று இளையோனும் மூத்தோனும் எழுந்து ஓடினர். மான்கள் பூட்டிய வண்டியில் வந்த இரவானான் வருக மகளே என்றான். நகரத்து அணிகளும், நகைகளும் நீக்கி எறிந்தவள் மான் ரதம் ஏறி மறுநகர் ஏகினாள். இருவரும் வந்து இழந்ததைக் கண்டனர், முனிவரின் படையுடன் சீதள நங்கையைத் தேடியலைந்தனர்.

கானகத்தின் குடிகள் சீதள நங்கையை இனி யாரும் கவர்ந்து செல்ல முடியாது எனக் கனவில் மகிழ்ந்தனர். இரவானான் பெருங்காடு யாரும் நுழைய முடியாத பெரும்பரப்பு, என்றாலும் சீதள நங்கைக்குக் காவலாய்ப் பெண் படைகள்.

கண்ணில் கண்ட குடிகளையெல்லாம் அடிமைப்படையாக்கி இருவர் சேனை கடலாய்த்திரண்டது. மறைந்திருந்து தாக்கும் மாயப்படை உத்தி மீண்டும் அரங்கேற பெருங்காட்டுப் படையுடன் இரவானான் உயிர் மாய்ந்தான். சீதள நங்கையின் கால்பட்ட இடமெல்லாம் தன் நாடு ஆனதை அறிந்த மூத்தவன் அவள் கைப்பற்றி சிரவி நதிக் கரைவந்தான். கானகமெல்லாம் தன் வசம் ஆனதின் பெருவிழா அறிவித்தான்.

சீதள நங்கையின் மனதுக்குள் இருந்த துயர்க் கதையறியாதான். விழா வரும் நாளுக்கு ஒரு மண்டலம் முன்னிருந்து தான் தனித்த தவம் காக்க இருப்பதாய் அறிவித்த சீதள நங்கை மண்டபம் ஒன்றின் நடுவில் அமர்ந்திட்டாள். தானே தவம் கலைந்து வரும்வரை யாரும் உள்நுழையக்கூடாது என்று சொல் உறுதி அளித்து தனிமைச் சிறையானாள். மண்டபத்தின் பளிங்குப் படலங்கள் வழியே தினம் வந்து பார்த்த இளையோனும் மூத்தோனும் சீதள நங்கையின் பொன்னொளி மட்டும் கண்டு திரும்பினர்.

காலம் சென்றது, கானகத்தின் மக்கள் தம் சீதளத் தாயை மீண்டும் கண்டனர். கானகத்தில் மானுடர் காலடித்தடங்கள் படாத ஒரு இடத்தில் அவள் தன் குடிலை அமைத்தாள். சிரவி நதிக் கரை மண்டபத்தில் தான் வனைந்த பொன்வடிவை இருத்திவிட்டு வந்தவள் யாரும் அறியாத பசுமைக்குள் பதுங்கிவிட்டாள்.

மூத்தோனும் இளையோனும் நெடுகாலம் காத்திருந்து மண்டபத்தின் கதையை அறிந்தனர். சீதள மங்கையைத் தேடிவர திசையெல்லாம் அசுவப்படைகளை அனுப்பி வைத்தனர். யார் தேடி என்ன பயன்!

பச்சைக்குள் மறைந்தாளா? பாறைக்குள் மறைந்தாளா? மண்ணுக்குள் பதுங்கி மழை நீரில் இழைந்தாளா? கானகத்தின் பெருங்கதையை கண்டுரைக்க ஏற்றவர் யார்? கண்டவர்கள் உரைத்தாலும் கற்றறியத் தக்கவர் யார்? கற்றறிந்து சொன்னாலும் கருத்தறிய தக்கவர் யார்?

பிறவி அழித்த படலம்

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. காடுகளுக்கு வெளியே வேறு யாரும் இதுவரை அறியாத இந்தக் கதையை அறிந்து வைத்திருந்த வம்சத்தில் இன்று மீந்திருப்பது அந்த ஒரு குடி மட்டும்தான். அந்தக் கதையை கேட்டாலும் புரிந்து கொள்ள பித்தநாடி வேண்டும், அதனைப் புரிந்துகொண்டாலும் நம்ப ஒரு மனப்பிரமை வேண்டும், நம்பினாலும் பிறருக்குச் சொல்ல இரட்டை ஆவி கொண்ட உடல் வேண்டும். இது எல்லாம் எப்படி தண்டியாவுக்கு முடிந்தது?

தாமோதரிடம் இவை எதையும் சொல்லவில்லை. அந்த ஊரில் இருந்த முண்டாவின் படத்தை மட்டும் அவனிடம் தந்தேன். ‘என் முதல் வேலை முடிந்துவிட்டது, இரண்டாவது வேலை உங்களுடையது.’ சில நாட்கள் கழித்துச் செய்தி வந்தது. அந்தக் கிராமத்தில் நடந்த என்கௌண்டரில் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த மாணவியும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆதிவாசியும் கொல்லப்பட்டனர். சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 10 பேர் காயம்.

தாமோதர் என்னைச் சந்தித்த அன்று எனக்கு இரண்டு செய்திகளைச் சொன்னான். ராமன், சீதை, லக்ஷ்மணன் நடந்து சென்ற கங்கை, கோதாவரி, பஞ்சவடி, சித்ரகூடம், தண்டகாரண்யம் பாதைகளை ஆய்வு செய்து நான் தயாரித்த ஆவணப்படத்திற்கு விருதும் நிதியும் கிடைக்க உள்ளது. ‘எல்லாம் உன்னால்தான் தாமோதர்’ என்றேன்.

தன் கையில் இருந்த சில படங்களைக் காட்டி இதில் உள்ள இளைஞர்களை ஒவ்வொருவராகக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டியுள்ளது, இதுதான் இந்த ஆண்டுக்கான எனது அசைன்மண்ட். எங்கு கிடைத்த படங்கள்? தண்டியாவின் பையில் இருந்தன. பார்க்கலாமா? கத்தையாகக் கொடுத்தான். ஒவ்வொன்றாகப் பார்த்தேன்.

தண்டியாவுடன் நிற்கும் சிலருடைய படங்கள், ஒருவர், இருவர், மூவர் என. ஒரு கட்டத்திற்குப் பிறகு என் கை நடுங்கத்தொடங்கியது. ஒரு படத்தில் தண்டியாவை என் மகனும் மகளும் இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு விரல் மடக்கி முட்டி உயர்த்திக் காட்டுகின்றனர். இன்னொரு படத்தில் என் மகளை தண்டியா கன்னத்தில் முத்தமிடுகிறாள். மற்றொரு படத்தில் தண்டியா, என் மகள், மகன் மூவரும் தலையில் துணிகட்டி வட்டமேளத்தை அடித்தபடி நிற்கின்றனர்.

தாமோதருக்கு என் குடும்பம் தெரியாது, அவன் குடும்பம் எனக்குத் தெரியாது. தண்டியா என் மகனும் மகளும் ஒரே சமயத்தில் டெங்கு காய்ச்சலில் படுத்தபோது இருபது நாட்கள் கூடவே இருந்தவள், அவளுடைய நண்பர்கள்தான் மாறி மாறி ரத்தம் கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட நட்பா, உறவா, பழக்கமா? தெய்வமே! தெய்வமே!

(இடைவெளி: இதழ் 2, ஜூலை 2017)