நுண்பாசிசம் பற்றிய ஒரு உரையாடல் – ஜமாலன்

மந்தைகளும் மேய்ப்பர்களும் – 

நுண்பாசிசம் பற்றிய ஒரு உரையாடல்

-ஜமாலன்

 

சமூகம் என்ற சொல்லின் பொருள் மக்கள் ஒரு அமைப்பாக இருத்தல் என்பதே.  இந்த அமைப்பாக மக்கள் தோன்றிய காலந்தொட்டு இருந்தார்களா? என்றால் அப்படி இருப்பதற்கான சாத்தியமில்லை என்பதே அறிவார்ந்ததான ஒரு அணுகுமுறையில் ஏற்கப்பட்ட ஒன்று. மனிதகுலத் தோற்றம் பற்றிய மதக் கதையாடல்கள்கூட, ஒரு மனித இணையின் (ஆதாம் ஏவால் என்பது செமட்டிக் மதம் கூறுவது என்றால், மனுக்கள்தான் முதலில் தோன்றியவர்கள் என்கிறது இந்திய வேதமதங்கள்) தோற்றம் என்பதில்தான் துவங்குகிறது.  இப்படி தனித்த உடல்கள் ஒரு கூட்டமைப்பாக மாறியதும், அப்படி ஒரு கூட்டமைப்பு உருவாக்கம் தேவைப்பட்டதும் ஏன்? என்பது முக்கியம். மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள் குறிப்பாக தேனிக்கள் ஒரு சமூகமாகவே வாழ்கின்றன. அவை தங்கள் இனம் வாழ்வதற்கான மிக நுட்பமான கூடுகளை அதில் தங்கள் இனத்தின் ராணித்தேனி உள்ளிட்ட தேனிக்களுக்கான அடுக்கமைவையும் உருவாக்கிக் கொண்டுள்ளன.  ஆக, ஒரு கூட்டமைப்பாக வாழ்தல் என்பது மனிதகுலம் மட்டுமே கண்டுகொண்ட ஒரு தொழில்நுட்பமல்ல. உயிர்வாழ்தலுக்காக ஒரு உயிரமைப்பு (மனிதன், தேனி போன்ற இன்னபிற) இயற்கையில் பெற்ற ஒரு வாழ்முறையே சமூக அமைப்பு என்பது.

சமூகம் என்ற சொல் உயிர்வாழ்தலுக்கான ஒரு தகவமைப்பு. சமூகவயமாதல் என்பது இந்த உயிர்வாழ் வேட்கையின் அடிப்படையில் உருவாகும் இணைவாக்கும் தொழில்நுட்பம். ஆக, சமூகம் என்ற அமைப்பின் உள்ளார்ந்திருப்பது உயிர்வாழ்தல் என்ற வேட்கையே. இந்த உயிர் வாழ்வதலுக்கான உரிமையை உத்தரவாதம் செய்யும் ஒரு அமைப்பே சமூகம். இந்த உத்திரவாதம் மறுக்கப்பட்டால் அது சமூகம் அல்ல.  அல்லது ஒரு சமூக அமைப்பு உயிர்வாழ்தலுக்கான அமைப்பு என்கிற நிலையிலிருந்து மாறுபட்டால் அந்த சமூகம் மரண வேட்கையை கொண்ட ஒரு சமூகமாறிவிடும்.

சமூகம் என்ற இந்த அமைப்பு மனிதகுலத்தின் பெருக்கமும் தேவைகளும் அதிகரிக்க, தனக்கான ஆளுகை தொழில்நுட்பத்தை கண்டறிவதும், அந்த ஆளுகை தொழில்நுட்பத்தில் பல அதிகார அமைப்புகள் உருவாகுவதும், அந்த அதிகார அமைப்புகளை ஏற்பதற்கான உயிர்களாக சமூகத்தின் தனித்த உயிர்கள் தங்களை தகவமைத்துக் கொள்வதும் என தனித்த உயிரின் உத்திரவாதத்திற்கான சமூகம், ஆளுகை தொழில் நுட்பத்தின் வழியாக அதிகாரத்தினை ஏற்கக்கூடிய சமூகமாக மாறுகிறது. இந்த சமூக அமைப்பாக்கத்திற்கான உயிர்வாழ்தலுக்கு பொருளுற்பத்தி நடவடிக்கை அடிப்படையாக இருப்பதால், உருவாகும் உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் அவற்றின் சமநிலையின்மை, வர்க்க உருவாக்கும் என்று மார்க்சியம் இதனை சமூகத்தின் கட்டமைப்பு விதிகளாக விளக்குகிறது.

பொருளியல் நலனுக்கான கலாச்சார-மனஅமைப்பு குறித்த ஆய்வில், ஆளுகை தொழில்நுட்பத்தை சமூகம் உருவாக்கிக் கொண்டதும், ஏற்றுக் கொண்டதற்குமான பிம்பம் ’மந்தை-மேய்ப்பன்’ பிம்பம் என்கிறார் பிரஞ்சு சிந்தனையாளரான மிஷல் பூஃக்கோ. இப்பிம்பம் பெரும்பாலான தீர்க்கதரிசிகளின் (மோசஸ், ஏசு, முகமது நபி மற்றும் ஸ்ரீகிருஷ்ணர்) பிம்பமாக மதங்களால் கட்டப்பட்டதே. இந்த பிம்பம் இன்றுவரையிலான ஒரு சமூக-அரசியல்-அதிகார அடிப்படையாக இருக்கிறது.  இந்த பிம்பத்தை உள்வயப்படுத்திக்கொண்ட சமூக-உடல்கள், தங்களை ஒரு மக்கள் கூட்டமாக மாற்றிக்கொண்டு சிந்திப்பதற்கான ஒன்றாக உருவாகுவதே பொதுபுத்தி என்பது. அல்லது பொதுபுத்தி வழியாக மக்கள் மந்தைகளாக அதாவது வெகுசனத் திரள்களாக மாற்றுவது என்கிற நிகழ்வுப் போக்கு நடைபெறுகிறது. அதனால்தான், எதிர்ப்பரசியல் என்பது எப்பொழுதும் பொதுபுத்திக்கு எதிரானதாகவே இருக்கிறது.

மேலும், மனிதர்களை மந்தைகளாக்குவதே அல்லது கூட்டமைப்பாக வெகுசனத் திரள்களாக அதாவது மக்களாக மாற்றுவதே உயிரரசியல் என்கிறார் பூஃக்கோ.  இந்த உயிரரசியல் அதிகாரத்தின் இறையாண்மைக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவிட்ட எல்லா உடல்களுக்குள்ளும் செயல்படும் ஒன்று.  அவ்வகையில் எல்லா உடல்களும் இறையாண்மை என்ற அமைப்பிற்குள் தனக்கான வெளியை உணர்ந்து செயல்படும் ஒன்றே ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்பதெல்லாம்.  அல்லது இறையாண்மை அனுமதித்த பரப்பில் தனக்கான கருத்தியல்களை கட்டமைப்பதும், சிதைப்பதும் விளையாடுவதுமான ஒரு ஆட்டமே அரசியலாக இருப்பது.

முதலாளியம் உருவாக்கிய சமூகத்தில், உலகம் என்பதும், மனிதன் என்பதும் ஒரு பொதுச் சொல்லாடலாகி, தேசியம், சர்வதேசியம் என்பதை உருவாக்கியுள்ளது.  தேசியம், சர்வதேசியம், உலகம், மனிதன் என்ற சொல்லாடலுக்குள் ஒவ்வொரு தனித்த தேசியங்களின் அடையாளங்கள் அடிப்படையிலான தேசிய சிந்தனைகளை உருவாக்கி, ஒர தேசியத்திற்குள் எல்லோரையும் ஒற்றை தேசியமாக சிந்திக்க, செயல்பட செய்வதே முதலாளிய அரசியல். இந்த தேசிய அரசியல் தனது வளர்ச்சிப்போக்கில் ஜனநாயகத்திலிருந்து ஒரு கட்டத்தில் பாசிசம் நோக்கி நகரக்கூடியது. அது பாசிசமாக மாற, ஜனநாயகத்திற்கான கருத்தியலை, அதற்கான அமைப்புகளை ஒற்றை தேசியப் பெருமிதம், வீழ்ச்சியிலிருந்து வளரச்சி, சுத்தமான அரசியல் போன்று கருத்தாக்கங்களின் வழியாக ஒன்றுபோல சிந்திப்பதற்கான பொதுபுத்தியை உருவாக்கும். இப்படி ஒன்றுபோல சிந்திப்பதில்தான் பாசிசம் தனக்கான ஆற்றலைப் பெரும்.

அதாவது, பாசிச அரசியல் மந்தைகளை யார் மேய்ப்பது என்கிற அதிகாரப் போட்டியினை ஒழித்து, மந்தைகளை தனது பட்டிகளில், கொட்டிலில் அடைக்கும் வரலாறாக இருப்பதால், இன்றைக்கான பொதுபுத்தி என்பது பாசிசத்தை ஏற்கும் மனநிலை மட்டுமல்ல, பாசிசத்திற்கான உயிரரசியல் கூறுகளைக் கொண்டதும்.  இந்த மந்தை மனநிலையில், தன்னை ஒரு வலுவான மேய்ப்பன் திறமையான மேய்ப்பன் என்ற தோற்றத்தை தருவதன் வழியாக மந்தைகளை கொட்டிலில் அடைப்பதற்கான அரசியலில் தனிமனித சூப்பர்-மனிதர்கள் உருவாகுவதும் அதன்பின் மக்கள் செல்வதும், அதற்கான நியாயங்களை பேசுவதுமே பாசிச அரசியில்.  இந்த அரசியலில் ஆய்வு என்ற பெயரில் நிகழ்வதும், உண்மையாக அதில் கட்டமைக்கப்படுவதம்கூட பாசிசத்திற்கான கருத்துருவாக்கமே.  பாசிசம் முதலில் உண்மையின் குரலாக, மக்களின் குரலாக வெளிப்படும், அதன்பின் மக்களை அடக்குவதில் மேய்ப்பனாக மகிழ்வைப்பெறும். மக்கள் தங்களை மந்தைகளாக்கி பெரும் பாதுகாப்பில் மகிழ்வார்கள். அந்த மகிழ்வு உயிர்த்தலுக்கான ஒன்றாக இல்லாமல் மரணத்தை சுவைப்பதற்கான மகிழ்வாக இருக்கும்.

இன்றைய உலகப் பொருளியல் அமைப்பில் மிகப்பெரும் சந்தையான இந்தியா பாசிசமாக மாற்றப்படுவதன் வழியாக, உலக முதலாளியம் தனக்கான மூலவள நெருக்கடிகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான அரசியலே தற்கால இந்திய அரசியலாக உள்ளது. இப்பாசிச அரசியல் உருவாக ஜனநாயக அரசியலில் செயல்படும் எல்லாவித அமைப்புகளையும், சிறுசிறு குரல்களையும் அழிப்பதறகான கருத்தியல் கண்டுபிடிக்கப்படும்.  எல்லாவித உரிமைகளையும், அமைப்புகளையும் அது அழிக்கும். அதற்கான நியதிவாதத்தை (legitimization) உருவாக்கும்.  இன்றைய இந்திய அரசியலில் உரிமைகள் மறுக்கப்படும் சில அமைப்புகளின் உருமாற்றத்தைப் புரிந்துகொள்ள முயல்வது இந்தியாவில் உருவாகிவரும் நுண்-பாசிசத்திற்கான மன அமைப்பை அறிய உதவும்.

  1. குடியாண்மை அமைப்பு

இந்திய அரசு அறிவித்த செல்லாக்காசுத் திட்டம் இந்திய மக்களின் தினவாழ்விற்கான பொருளாதாரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் மூலம், குடியாண்மை சமூகத்தின் வாழ்வுரிமைமைய மாற்றியமைத்தது. அவர்களை எண்மப்-பொருளியல் என்ற டிஜிட்டல்-பொருளாதாரத்திற்கு நிர்பந்தித்தது. இதை இந்திய வரலாற்றில் மிகப்பெரும் சீர்திருத்தமாக வர்ணித்தது. இச்சீர்திருத்தம் உருவாக்கிய மக்களின் அரசியல் மந்தை உணர்வு, இந்திய மக்களிடம் ஏற்படுத்திய நுண்-பாசிசத்தை வெளிப்படுத்துவதாக, அதை நியமவாதமாக்கி, மக்கள் ஏற்றக்கொண்ட ஒன்றாக ஆக்கியுள்ளது.

’சேடன்பிராட்’ (schadenfreude) என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் “மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிக் கொள்வது. இந்திய அரசின் செல்லாக்காசுத் திட்டம் பொதுமக்கள் அல்லது பொதுபுத்தியின் உணர்வினை ஓட்டரசியலாக கொள்முதல் செய்கிறது தனது பாசிச மனோவியல் உருவாக்கத்திற்காக. அந்த அரசியலை நாம் schadenfreude politics எனலாம். இது ஒரு மைக்ரோ பாசிசத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும் உணர்வு.  இந்திய குடிமக்களின் உடலுக்குள் இந்த உணர்வை முதலீடு செய்வதே அரசின் செல்லாக்காசுத் திட்டமும் அதன் தொடர் நடவடிக்கைளும். ஒவ்வாரு இந்தியக் குடிமகனையும் பாசிஸ்டாக மாற்றும் முயற்சி. வேற்றுமையில் ஒற்றுமைக்கு பதிலாக ஒற்றுமையில் வேற்றுமையை உருவாக்கும் முயற்சி.

அரசின் செல்லாக்காசுத் திட்டம் அதன்பின் தானே முன்வந்து கள்ளப்பணத்தை தந்து அபராதம் கட்டுதல், பிறகு வருமானவரிச் சட்டத்தில் மாற்றங்கள், தங்கநகைகள் பற்றிய வருமான வரிக் கொள்கைகளை வெளிப்படுத்தி ஒரு உரையாடலைக் கட்டமைத்தல். அப்புறம் வீடுகள் உச்சவரம்பு, சொத்துக்கள் பற்றிய மின்-புத்தக கணக்கெடுப்பு என வதந்திகளாகவும், நடைமுறைகளாகவும் ஒரு குழப்பத்தை உருவாக்கி தெளிவற்ற நிலையில் மக்கள் உள்மனதில் உணர்வுகள், சிந்தனைகள் என போராடி தாமே ஒரு முடிவிற்கு வந்து சரிதான் போலிருக்கிறது என்றும், தான்Xமற்றமை முரணில் தானை முன்வைத்து மற்றமை (அடுத்தவர்) அழிவதில் மகிழும் ஒரு மனநிலையை நுட்பமாக கட்டமைத்தது.

முதலில் தெளிவற்ற குழப்பமான வாழ்நிலையில் உள்ள மக்களை தெளிவான வகுப்புகளாக (மக்கள்திரளாக வர்க்கமாக) மாற்றுதல். அடித்தட்டு மக்கள், நடுத்தரவர்க்கம், பணக்காரர்கள் (தேசிய முதலாளிகள்), கார்பரேட்டுகள். இந்த வர்க்கங்களிடையே உள்ள பொருளியல் முரணை உணர்ச்சி முரண்களாக மாற்றுதல். அதாவது அடுத்தவர்க்கம் நம்மைவிட செழிப்பாக உள்ளது அது வீழட்டும் என்கிற உணர்வாக மாற்றுதல். அந்த வீழ்ச்சியை மகிழ்ச்சியாக உணரவைத்தல். ஒரு தட்டு அடுத்த தட்டை தனது எதிரியாக பாவித்தல். ஒருவகையில் அம்பேத்கர் சொன்ன படிநிலை சமத்துவமின்மை என்கிற வருண-சாதிய சமத்துவமின்மைப்போல இந்த மக்கள்திரள் சமத்துவமின்மையை உருவாக்குதல். அதில் ஒவ்வொரு தனிஉடலையும் அடையாளம் கணச் செய்தல். நான் ஏழை என்னிடம் உள்ள பணம் குறைவுதான், நடுத்தரவர்க்கம் நிறைய வைத்துள்ளனர் அவர்கள் சாகட்டும். நான் நடுத்தர வர்க்கம் என்னிடம் உள்ளது குறைவுதான், பணக்கார வர்க்கம் சாகட்டும் என்பதுபோன்ற உணர்வுகளை கட்டமைத்தல் அல்லது அதை ஆழ்தளத்திலிருந்து வெளிப்பரப்பிற்கு கொண்டுவந்து அமைப்பாக்குதல். இது ஒருவகை அரசியல் திரளுதலால் (political assemblage) வரும் உணர்வும் அடையளாளமும் ஆகும்.  இத்திட்டம் இந்தவகையாக மக்களை ஒரு மந்தைத்திரளாக திரட்டியுள்ளது.

குறிப்பாக இத்திட்டம் பெரும்பாண்மையான அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் உணர்வுகளின் மீது உருவாக்கப்பட்ட தாக்குதலே. அந்த உணர்வை மறுகட்டமைப்பு செய்து, அவர்களது மனதில் நுண்பாசிசக் கூறுகளை உருவாக்குவதே இத்திட்டம்.  இது தெருமுனைப்பேச்சு துவங்கி வங்கியில்கூடும் மக்களின் அறிவுரைகள், ஆறுதல்கள் வழியாக பரவி தொலைக்காட்சி தொடர் விவாதங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டு பல பொருளாதார புள்ளிவிபரங்கள் முகநூல் கருத்துருவாக்கங்கள் வழியாக உண்மைபோல நம்ப வைக்கப்பட்டு பொது புத்தியில் ஒரு தன்னுணர்வாக அழிவுணர்வை உருவாக்கியுள்ளது.

அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்தல் உணர்வை இத்திட்டத்தின் ஆதரிப்பவர்களின் குரலாக பெருக்கி ஊடகங்களால் வெகுமக்கள் மனநிலையாக கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனையும் தேசபக்தி என்கிற கருத்தியலால் நுண்பாசிசவாதிகளாக (micro fascist) மாற்ற முயல்கிறது. வரலாற்றுப் பாசிசம் மக்களிடம் அதிகாரத்தால் மேலிருந்து கட்டப்படும் ஒன்று.  அதை மக்கள் உளவியலில் ஏற்கும்படி செய்வது.  ஒரு ஹிட்லர் பின் மக்கள் திரள்வது. அல்லது ஒரு தலைவனை தனது விடிவௌ்ளியாக ஒரு குறிப்பிட்ட இன, மதவாதிகள் கருதுவது.

மைக்ரோ பாசிசமோ ஒவ்வொரு தனிமனித உடலையும் பாசிசமாக கட்டுவது. உதாரணமாக தீண்டாமை என்ற உணர்வை உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் தங்களது ஆழ்மனதில் ஒவ்வாமையாக, அசுத்தமாக, ஒதுக்கப்பட வேண்டியதாக உணர்வது ஒருவகை மைக்ரோ பாசிசமே. இந்தியா போன்ற புண்ணிய பாரத பூமிகளில் வரலாற்று பாசிசம் இந்த மைக்ரோ பாசிசம் வழியாகவே சாத்தியம் என்பதே இன்றை பொதுபுத்திமனநிலை வழியாக உணரமுடிகிறது. இது ஒரு பேரழிவிற்கான முன்தயாரிப்பு. இத்திட்டம் உலக முதலாண்மை (கார்பரேட்) அமைப்புகளின் நலன் கருதி வணிகப் பொருளாதாரத்தை உருவாக்க அவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமே. ஆனால், மேற்சொன்ன படிநிலை சமத்துவமின்மை என்ற அடுத்தவர் துன்பம் நமக்கு இன்பமே என்கிற மனநிலையாக வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய இந்திய அரசு இவ்வாறாக தேசபக்தி என்ற பெரால் புண்ணியபாரத புத்திரர்கள் என்ற பிம்பமாக்கல் வழியாக ஒவ்வொரு இந்திய குடிமகனையும் மைக்ரோ பாசிசவாதிகளாக கட்டமைக்கிறது. அதன் குரலே தங்க நகை கட்டுப்பாடு, ரியல் எஸ்டேட் விலை குறைந்துவிட்டது, ஒவ்வொருவருக்கும் வீடு என்ற கனவு, பிளாஸ்டிக் மணி எனப்படும் கடன் அட்டைகள் பரவலாக்கம், ரொக்கமற்ற பரவர்த்தனையாக வங்கிகள் POS machines, ஸ்விப்பிங் கார்ட் பயன்பாடு என்ற நவநவநவ நாகரீகத்திட்டங்கள். இந்திய பொருளாதாரத்தையே ஸ்வீப் செய்வதால்தான் இத்திட்டம் ஸ்வீப் கார்டை முதன்மைப்படுத்துகிறது. அடிப்படை கட்டுமானங்கள் பற்றிய எந்த அக்கறையுமற்ற இவர்கள் கூவுவதும் அதிகாரத்தின் குரலாக மாறியிருப்பதும் இந்த மைக்ரோ பாசிச உணர்வால்தான். இந்த உணர்விற்கான அடிப்படையை தருவது schadenfreude என்ற உணர்வே. இது பொதுதளத்தில் ஒரு சுயகூச்சமற்ற வளர்ச்சிக்கான நல்வாழ்விற்கான உணர்வாக மாற்றப்படுகிறது. உலக முதலாண்மை நிறுவனங்கள் (கார்பரேட்டுகள்) மற்றும் முதலாளியத்தின், தாராளவாத முதலாளியத்தினால் உருவாக்கப்படும் ஒரு யதார்த்தமே இந்த வளர்ச்சி என்பது பற்றிய கருத்தாக்கமும், கண்ணோட்டமும்.

இத் திட்டம் கிராமங்களை நவீனப்படுத்தும். அனைவரும் எண்மயப் பொருளாதாரத்தை அடைந்து ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு வருவார்கள். இது சாதியை ஒழித்துவிடும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கிராமங்களை நவீனப்படுத்தினால் சாதி ஒழிந்துவிடும் என்றால் அதற்கு கிராமப் பொருளதாரத்தை மாற்ற அடிக்கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். கிராமிய சுயசார்பு பொருளாதாரத்தை முறைப்படுத்த வேண்டும். கிராமங்களில் சாலைவசதி துவங்கி அதை நகரத்துடன் நவீனத்துடன் இணைக்க வேண்டும். உணவு விநியோகம் துவங்கி அனைத்தும் கிராமங்களில் எளிமையாக பெறும்படி செய்ய வேண்டும். கிராம கூட்டுறவுத்துறையை வளர்க்க வேண்டும். இத்திட்டம் முதலில் கைவைத்தது கிராம கூட்டுறவு வங்கிகளைத்தான்.

குறிப்பாக அம்பேத்கர் சொன்ன தேசிய முதலாளித்துவத்தை வளர்க்கனும். தேசிய முதலாளிகளே கிராமங்களை நவீனப்படுத்த முடியும். பொருளாதாரத்தை மையத்தில் குவிக்கும் பெருமுதலாளியத்தை ஒழிக்கனும். பன்னாட்டு முதலாளிகள், தரகு கும்பல்களை ஒழிக்கனும். இத்திட்டமே பன்னாட்டு மூலதனத்தில் இந்திய கிராமங்களை இணைக்க முயல்கிறது. இது சாதியை ஒழிக்காது. சாவுகளைதான் அதிகப்படுத்தும். இது சுயசார்பு பொருளாதாரமாக எஞ்சியுள்ள சிறுதொழில்களை கிராமமக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிடும்.

உலக அளவில் தேசிய மூலதனம் என்ற ஒன்றை முற்றாக அழித்துவிட்டு பன்னாட்டு மூலதனத்தை உலகளாவியதாக மாற்றும் ஒரு சர்வதேச திட்டத்தின் நடவடிக்கையே இந்திய அரசின் செல்லாக்காசுத் திட்டம்.  இது இந்தியாவின் வளர்ச்சிக்கானது.  இந்திய மக்களின் வளர்ச்சிக்கானது என்கிறார்கள். வளர்ச்சி என்ற சொல்லாடலினுள் மனித வீழ்ச்சியிருப்பதை இத்திட்டம் மறைக்கிறது. மக்களிடம் நுண் அளவிலான பாசிச உணர்வை வளர்த்துள்ளது. ஒருவகையில் வர்க்க உணர்வை குரோத உணர்வாக மாற்றியுள்ளது.

இந்த மைக்ரோ பாசிசத்தை புரிந்துகொள்ள முடியாமல் போனால் நாம் பேரழிவை சந்திக்க வேண்டி வரலாம். வளர்ச்சி என்பது அழிவின் மேல் உருவாக்கப்படுவதே.  அடிப்படை தேவைகளை உருவாக்கிக் கொள்வது வளர்ச்சி அல்ல அது தேவைகள். நுகர்விற்கான தேவைகளை உருவாக்கி அதை நிரப்ப உருவானதே வளர்ச்சி. அடிப்படை தேவைகள் முழுமையடைந்த சமூகமே வளர்ச்சிபற்றி சிந்திக்க வேண்டும். நாம் சிந்திக்க வேண்டியது மரணத்தை நோக்கி விரைவாக பயணிக்கும் வளர்ச்சியா? வாழ்தலை நோக்கி மெதுவாக நகரும் அடிப்படை வசதிகளா? எது தேவை? என்பதையே.

  1. அரசியல் அமைப்பு

ஜனநாயக அரசியல் அமைப்பில் அரசியல் கட்சிகளே மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவை.  அதனால்தான் வர்க்கமாக உள்ள சமூக அமைப்பில், கட்சி என்பது வர்க்க உணர்வுபெற்ற முன்னணிப்படை என்றார் லெனின். வர்க்கம் குழம்பி திரள்களாகிவிட்ட உணர்வு உயிர் முதலீடாகிவிட்ட, பண்ட மதிப்பு குறியில் மதிப்பாகிவிட்ட, பயன் என்பது நுகர்வாக மாறிவிட்ட, ஆடம்பரப்பொருள்கள் அவசியமாகிவிட்ட பின்-நவீன அரசியலில் கட்சிகள் என்பது ஒரு வியபார நிறுவனம் அதாவது கார்பரேட் கம்பெனிகளாக மாறிவிட்டது. மக்களின் துயர் தீர்க்கும் அமைப்புகள் என்பதெல்லாம் பெருங்கதையாடல்கள் அதனால் இதில் கட்சி மக்கள் நலன் அரசியல் போன்ற சீரிய அம்சங்களை எல்லாம் தேடக்கூடாது. முதலண்மைக் கம்பெனிகளுக்கும் இந்த கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு அதில் பணம் மூலதனம் என்றால் இதில் அடிமட்ட தொண்டன்களின் உணர்ச்சியே மூலதனம். அதாவது விசுவாசத் தொண்டனின் மனசாட்சி.

செவ்வியல் காலத்தில் அரசியல் நிறுவனங்கள் மதங்கள் என்று அழைக்கப்பட்டது. அதன் நிரந்தர இலட்சியத் தலைவராக கடவுள், இறைவன் என்பவரும் பிரதிநிதிகளாக மதத்தலைவர்களும் கிழைக்கழகங்களாக உள்ளுர் வழிபாட்டுத் தலங்களும் இருந்தன. நவீனத்துவ முதலாளிய காலங்களில் அரசியல் நிறுவனங்கள் தேசிய கட்சிகளாக, அரசியல் இயக்கங்களாக மாறின. மந்தை என்று குறிப்பிட்ட வெகுமக்கள் உருவாக்கம் நிகழ்ந்தது. அப்பொழுது உருவான வெகுமக்கள் என்கிற அமைப்பில் இலட்சியத் தலைவர்கள் கடவுள்களாக மாறினார்கள். அவர்கள் பின்னால் திரண்டது வெகுமக்கள்.  கிளைக்கழகங்களாக கட்சிக்கிளைகளும் நிறுவன அமைப்புகளும் உருவாயின. கடவுளின் சிலையை அரசியல் தலைவர்களின் சிலைகள் மாற்றீடு செய்தன.

உலகமுதலாளியம் உருவாகிவிட்ட இக்காலத்தில் அரசியல் நிறுவனங்கள் முதலாண்மை (கார்பரேட்) கம்பெனிகளாக ஆகிவிட்டன. வெகுமக்கள் கும்பல்களாக மாற்றப்பட்டுவிட்ட இச்சமூகத்தில் தலைவர் நிறுவன மேலாளராக இருக்கிறார். இலட்சியத் தலைவர் கனவு பிம்பமாக, தனது வேட்கைகள் (அபிலாஷைகள் திணிக்கப்பட்ட) திணிக்கபட்ட ஒரு மிதக்கும் குறிப்பானாக உள்ளார். இந்நிறுவனங்களில் தலைவர் (அதாவது கட்சியின் மானேஜர் மேலாளர்) அதன் கார்பரேட் பாடிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது அதில் முதலீடு செய்த பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சிகள் கிழைக்கழகங்கள் அதில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் உணர்ச்சி மூலதனமாக கூலியற்ற தொழிலாளிகளாக சேவை செய்வார்கள். இது ஒரு புதிய கார்பரேட் பாடி. அதனால் கூலியற்ற தொழிலாளிகளான தொண்டர்கள் தங்கள் உணர்ச்சிகளை தங்கள் மானேஜரின் கனவுகளாக மாற்றி, தங்கள் கம்பெனி அதிகாரம் பெற உழைத்துக் கொண்டிருக்க  வேண்டியதுதான்.

இதில் அடிமட்ட தொண்டன் என்கிற கூலியற்ற உழைப்பாளிக்குத் தேவையான சமூக அந்தஸ்தை, தேவைகளை அவனது கிளை அமைப்பும், அக்கிளை அமைப்பை நகர அமைப்பும். அந்நகர அமைப்பை, மாவட்ட அமைப்பும், மாவட்ட அமைப்பை மாவட்ட மந்திரியும், எம்எல்ஏ, எம்பி-களும், இவர்களை மாநிலத் தலைமையும் கவனித்துக் கொள்ளும். இது ஒரு வலைபின்னல் அமைப்பு அல்லது வணிகநிறுவனங்கள் போன்ற ஒரு சங்கிலி. அந்த வலைப்பின்னலில் சிக்கியவர்கள் தங்களுக்குள் ஊட்டப்படும் செய்தியை கடத்திவிட வேண்டியதுதான். இதில் பொதுக்கருத்து, தனிக்கருத்து தொண்டனின் கருத்து என்ற எதுவும் சாத்தியமில்லை. பிடிக்காத தொண்டன் அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்ட காசற்ற தொழிலாளி மாற்று நிருவனத்திற்கு சென்றுவிடலாம். அவன் தேர்ந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் (எம்எல்ஏ, எம்பிகள்) மாற முடியாதபடி கட்சித்தாவல் தடைசட்டம் பார்த்துக் கொள்ளும்.

வாரிசு அரசியல் என்ற சொல் குடியாச்சி அதாவது மக்கள் ஆட்சி இந்தியாவில் நடப்பதான தோற்றத்தை அல்லது நியாயப்படுத்தலை செய்யும் ஒன்று. அரசு மக்களுக்கானது, சாமனியனுக்கானது, மக்களிடம் அதிகாரம் உள்ளது என்ற தோற்றத்தை மறு-உருவாக்கம் செய்வதன்மூலம், உள்ளார்ந்த அளவில் இந்த அரசையும், அதிகார அமைப்பையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே. எந்த வாரிசும் இல்லாத அரசியல் தலைவர்கள் முதலமைச்சராதல், பிரதமராதல் என்பது மக்களிடம் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குவதன் வழியாக, தானை இடமாற்றம் செய்வதும், அர்களிடம் தன்னை அடையாளம் காண்பதுமான செயல்பாடே. வாரிசை நியமிப்பது சொத்துதானே தவிர இரத்தம் அல்ல.  தனிச்சொத்துதான் குடும்பத்தை உருவாக்கியது.  வாரிசுக்கான அடிப்படையை உருவாக்கியது. அரசு தோற்றத்திற்கான காரணமாகியது.  அதனால் சொத்தில்லாமல் அரசோ அதிகாரமோ இல்லை. (மேலதிகமாக இதை வாசிக்க குடும்பம், தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற ஏங்கல்ஸ் நூலை வாசிக்கலாம்.)

அம்பானி அதானி கார்பரேட் குழுமங்கள்கூட குடும்ப ஆதிக்கத்தில்தான் தனது தலைமை அமைப்பை வைத்துள்ளன. அவர்களது உச்ச பச்ச அதிகாரக் குழுவை அதில் குறைவான பங்குதாரர்கூட தீர்மானிக்க முடியாது. அடிமட்ட தொண்டன் கையில் வைத்திருக்கும் உறுப்பினர் அட்டை என்பது கட்சிமுதலீட்டில் ஒரு பங்கு அவ்வளவே. அதற்கு தரப்படுவது மதிப்பு என்கிற கலாச்சார நாணயமே. அதை வைத்து தனது சொந்த விருப்பு வெறுப்பை தீர்த்துக் கொள்ளலாம். தொண்டனாதல் என்பது சொந்த சூழலில் அவனாக தனது சுயநலத்தில் திரட்டிக் கொள்ளும் அடையாளமே. ஆகையினால் நிறுவனத்தில் எந்தவித பங்கும் உரிமையும் அற்ற அதற்கு வெளியே உள்ளவர்களாகிய வெகுமக்கள் குரல்கள் கட்சிகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

மாமேதை அம்பேத்கர் சொன்னார் இந்திய ஜனநாயகம் என்பது படிமுறை சமத்துவத்தைக் கொண்டது என்று.  கட்சி என்கிற கார்பரேட் நிறுவனங்களின் ஜனநாயகம் படிமுறை மட்டுமல்ல படிக்கட்டு ஜனநாயகம்.  வாசலில் படிகட்டில்தான் தீர்மானம் எல்லாம்.

உலக அளவில் குடியாச்சி என்கிற மக்கள் ஆட்சி தத்துவமும், அதன் அடிப்படை தர்க்கமான ஜனநாயக அரசியலும் அரசாட்சிக்கான அடிப்படையாக முதலாளியம் உருவாக்கி பெருக்கியுள்ள ஒன்றே. மக்கள் ஆட்சி அரசியலில் உள்ளிருத்தப்பட்டிருப்பதும் ஒரு மன்னனின் உடல்தான் என்கிறார் மிஷல் பூஃக்கோ.  ஏதோ ஒருவகையில் ஆட்சியாளர் குடும்பத்துடன் தொடர்பற்றவர்கள் ஆளமுடியாது. மற்ற முதலாளிய நாடுகளில் கட்சியின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. இந்தியாவில் எந்த ஒரு மேற்கத்திய சிந்தனையும் இங்கு இயங்கும் மனுவாத-தர்மா கோட்பாடால் உள்வாங்கப்பட்டு இந்தியமயமாக்கப்படும்போது அது இப்படியான பாரம்பரியம், குடும்பம் உள்ளிட்ட உணர்வுச் சுற்றுவட்டத்துக்குள்தான் மாற்றப்படும்.  திரும்ப திரும்ப பாரம்பரியம், திறமை, தகுதி என்று பேசப்படுவதும் அதை கேள்வியே கேட்காத சிந்தனையாகவுமே வெளிப்படும். குறைந்தபட்சம் மன்னராட்சியில் வாரிசு இல்லாவிட்டால் பட்டத்து யானை கையில் மாலையை கொடுத்து அனுப்புவார்கள். அப்படி எல்லாம் செய்ய குடியாச்சி அனுமதிப்பதில்லை.

  1. அறிவுபெறும் உரிமை

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமும், இந்தியாவின் சமூக அறிவுருவாக்க அறிவுசீவிகளை உருவாக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகமும் ஆன டெல்லி ஜவகர்லால் நெரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தின் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  பல கடும் எதிர்ப்புகளுக்கும், நெருக்கடிகளுக்கும் இடையில், பெரும் அறிவுருவாக்க கனவுகளுடன் ஆய்வுமாணவராக பல்கலையில் தனது படிப்பதை் துவங்கியவர்.  அவது முகநூல் பதிவுகளில் எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுகிறதோ அங்கு எல்லாமே மறுக்கப்படுகிறது (When Equality is denied everything is denied.) என்று தனது பதிவு ஒன்றில் விவரிக்கிறார்.  சேலத்தில் அவர் மாட்டுக்கறி வாங்கிச் சென்ற அனுபவத்தை பொதுத் தளத்தில் அது ஏற்படுத்திய முகச்சுழிப்பை விவரிக்கும் அவரது மாநா-5 என்று பதிவின் இறுதியில் பல்கலைக்கழகம் எப்படி ஆய்வு மற்றும் முனைவர் படிப்பில் சமத்துவமின்மையை நடைமுறையாகக் கொண்டிருப்பதை விவரிக்கிறார்.

முத்துக்கிருஷ்ணனை தலைவா என்று அழைக்கும் அவரது நண்பரான ஜிதேந்திர சுனா என்பவர் ஜே.என்.யு.வில் நடந்த சாதிய வன்மங்களை தலித்துகள்மீதான புறக்கணிப்பை விவரிக்கிறார் தனது கட்டுரை ஒன்றில். தலித் ஆய்வுமாணவர்கள்மீது பிராமண-ஆசிரியர்கள் மற்றும் சக பிராமண உயர்சாதி மாணவர்கள் செலுத்தும் கலாச்சார வன்முறையை அதில் விரிவாக தந்துள்ளார்.

ஜே.என்.யு. போன்ற உயர் கல்விக்கூடங்கள் இந்திய சமூகத்தின் வரலாறு, சமூக உருவாக்க காரணிகளில் முக்கியமானவை. ஒரு சமூகத்தின் அறிவு உற்பத்தியின் மூலங்களாக இருப்பது பல்கலைக் கழகங்களே. இந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த நாளந்தா பல்கலைக் கழகம் அன்றைக்கான வரலாற்றுக் காரணியாக இருந்தது. நாளந்தாவில் படிக்க என உலகின் பல்வேறு மாணவர்கள் வந்ததே புத்தமதம் மற்றும் இந்திய தத்துவ பரவலாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. பல்கலைக்கழகம் ஒரு அறிவார்ந்த சமூக உருவாக்கத்திற்கான அடிப்படையாக இருக்கிறது. அத்தகைய பல்கலைக் கழகங்களே சாதிய-மனுவாத-பிராமணப் பண்பாட்டில், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தலித், பழுங்குடி இனமக்களை சாதிவேறுபாட்டைக் காட்டி ஒதுக்கி தற்கொலைக்கு தள்ளுவது என்பது இன்றைய சமூகத்தின் நினவிலியில் மனுவாத-பிராமண-தர்மா எந்த அளவிற்கு ஊடுரூவியுள்ள நோய் என்பதைக் காட்டும் அறிகுறியே.

சென்ற ஆண்டு ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமோலா என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.  ரோஹித் வெமுலா முன்பு கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். அங்கு நிலவிய சாதிய மனநிலையினால் அதிலிருந்து வெளியேறி அம்பேத்கர் வட்டத்தை துவக்கியுள்ளார். அவர் கம்யுனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறக் காரணமாக இருந்த சாதிய மனநிலை என்பதை ஏதோ ஒரு இயல்பு நாளடைவில் தானாக மாறிவிடும் என்பதாக கடந்துவிடமுடியாது.

சாதி பிறப்போ, இயல்போ, தலைவிதியோ, கர்மப்பலனோ, கௌரவமோ அல்ல. அது ஒரு உடலரசியல்நிலை. உடலே சாதியாக, மதமாக, இனமாக கட்டப்பட்டுவிட்ட நிலை. அது உடலின் இயல்பு அல்ல. இயல்பாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்று. இயல்பு என்ற ஒன்று இயக்கநிலையில் உள்ள உடலில் சாத்தியமில்லை. அது சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சாராம்சவாதம் பாசிச வேர்களைக் கொண்டது. அடையாளத்தில் தேங்கி அழுகிய உடலில் மட்டுமே சாத்தியமானது. சாதிபார்க்கும் உடல், மதம் பார்க்கும் உடல், இனம் பார்க்கும் உடல், நிறம் பார்க்கும் உடல், பாலினம் பார்க்கும் உடல் எல்லாம் அடையாளத்தில் தேங்கிய அழுகிய உடல்களே. இந்த அழுகிய உடல்களிலிருந்து தப்பி பிழைக்க இவர்கள் கண்ட மார்க்கமே தற்கொலை. உடலை இல்லாதொழிப்பது.  இது ஒரு உடல்ரீதியான கலகம், போராட்டம். தனது மரணத்தை தானே தீர்மாணித்துக் கொள்வதற்கான உரிமையை நிலைநாட்டி அதிகாரத்தை கவிழ்த்துக் காட்டும் செயல். அது ஏற்படுத்தும் அலை எல்லோர் சிந்தனையிலும் பரவி உணர்தலாக மாற்ற எண்ணும் அரசியலியக்க நடவடிக்கை.

உடலின் உருவாகியுள்ள சாதிய அழுகல் தன்மையை, இயல்பு என்று தேங்கிவிட்ட இவை மீண்டும் மீண்டும் அழுகி சமூக முடைநாற்றும் வீசும் நிலைக்கு சென்றிருப்பதே தற்போதைய இந்துத்துவ பாசிசமயமாதலின் வெளிப்பாடு. இந்த அழுகலை ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு செயலிலும் உணர்ந்து வெளியேற வேண்டும் என்றால் நமக்குள் செறிக்கப்பட்டுள்ள மொழி துவங்கி, செயல்கள் வரை அனைத்தும் நுண்ணுணர்வு கொண்டதாக ஓர்மையுடன், தன்னறிவுடன் செயல்படக்கூடிய ஒரு இயக்கமிக்கதான உடலைப் பெற வேண்டும்.  உடல் என்பது மாறிக்கொண்டே இருப்பதான ஒரு மூலக்கூற்றியல் நிலை தேவை. அதற்கு நமது உடலிற்குள்ளான நிலைத்து அழுகும் மோலார் அடையாளங்களை விட்டு வெளியேறி மூலக்கூறுநிலையான இயக்கமிக்க உடலைப் பெற வேண்டும். அதற்கான எச்சரிக்கையே இவர்களது மரணம். அழுகிப்போன நமது உடலை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்வி. இன்னும் இந்த அழுகலை சகித்து வாழத்தான் போகிறீர்களா? வெட்கமில்லையா? என்ற ஏளனத்தை அழுகிய நம் உடல்மீது வீசிய மரணங்கள் அது.

சமத்துவ சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிஸ்ட் அமைப்புகளே சாதியத்தைக் கொண்டு இயங்குகிறது என்றால் அங்கு மார்க்சிய சித்தாந்தம் என்னவாக உள்வாங்கப்பட்டு உள்ளது என்கிற கேள்வி உள்ளது. இந்திய கம்யனிஸ்ட் கட்சிகள் .இளைஞர்களுக்கு மார்க்சியத்தை பாடத்திட்டமாக போதிப்பதில் எந்த பயனும் இல்லை. இயங்கியல் பொருள்முதலாவாதம், வரலாற்றுப் பொருள்முதலவாதம் மற்றும் அரசியல் பொருளாதராம் என்ற பாடத்திட்டத்தின் அடிப்படையில் போதிப்பது. பின் ராகுல சாங்கிருத்யாயன் வால்கா முதல் கங்கை வரை மற்றும் கார்க்கியின் தாய் நாவலை படிக்கச் சொல்வது என்ற அடிப்படையில் இந்திய-மார்க்சிய-நர்சரிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை 60 ஆண்டுகால வரலாறு தெளிவாக காட்டியுள்ளது. இந்தியாவில் காங்கிரஸா? கம்யுனிஸ்டுகளா? என்று இருந்த நிலை மாறி இன்று கம்யுனிஸ்டு கட்சிகள் மூன்றாவது, நான்காவது அணி என ஓரந்தள்ளப்பட்டுள்ள நிலைக்கு என்ன காரணம் என்பதை மறுபரிசீலனை செய்யக் கோறுகிறார்கள் இந்த தற்கொலைமூலம்.

தீண்டாமை என்பது உடலின் தூய்மைபற்றிய அதீத பெருமிதம் மற்றும் உள்ளணர்வில் கட்டப்பட்டுள்ளது. அது ஒரு சமூக ஒடுக்குமுறையோ சுரண்டலோ மட்டுமல்ல, உடலின் புனிதம் பேணும் உடலின் இயல்பு என்ற உடலின் மாறாத ஒரு உணர்வுநிலை பற்றிய கற்பிதம். இதை கற்பிதமாக உணராமல் இயல்பாக ஏற்பது பற்றிய ஒரு உணர்வமிக்க கடிதமே வெமூலாவின் இறுதிக்கடிதம்.  மனித சாரம் என்று ஒன்று உண்டு என்பதும் மனிதநேயவாதம் என்ற ஒன்று இருப்பதான பாவனைகளும் தீண்டாமையை ஒழிக்காது. மனிதன் தன்னை தனிச்சிறப்பாக கருதாத, மனிதனாதல் என்பது மிருகமாதல் போன்று மற்றொரு ஆதல் நிலைதான் என்ற அரசியல் உணர்தல் தேவை.

சாதியை ஒழிக்க ஒழிக்கப்பட வேண்டியது உயர்ந்தவன் என்பதை ரத்தமாக மாற்றிக்கொண்டுவிட்ட; தீண்டாமை என்பதை தனது உடலுறுப்பாக மாற்றிக் கொண்டு அதை சமூகத்தின் பல அடுக்குகளிலும் பரப்பி வெறுப்பு அரசியலை உருவாக்கி பாதுகாத்துக் கொண்டுள்ள உயர்சாதி குறிப்பாக பார்ப்பன/பிராமண கருத்தியலை. அதை லட்சிய உடலாக பரப்பி மற்ற சாமான்ய உடல்களையும் பார்ப்பனிய உடலாக உயர்வு-தாழ்வு என தீண்டாமை பாராட்டும் உடல்களாக உடல்-முதலீடு (bio-capital) செய்துள்ள கலாச்சார பொருளாதாரத்தை அடித்து நொறுக்காமல் சாதியத்தை ஒன்றும் செய்யமுடியாது. இந்த கலாச்சாரப் பொருளதாரத்தின் மிகப்பெரிய முதலீட்டாளர்களாக மாற்றப்பட்டுள்ள சாதி இந்துக்களிடம் ஒழிந்துள்ள பார்ப்பனியமயமாதல் என்ற உயர்மனப்பான்மை வேட்கையை சிதைக்க வேண்டும்.

இந்தியாவில் பெருளாதாரத்தை ஏழை பணக்கார வர்க்கத்தை ஏற்றத்தாழ்வை பாதுகாத்துக் கொண்டிருப்பது இந்த கலாச்சார முதலீடே. அதனால்தான் பெரியாரும் அம்பேத்கரும் இந்த பார்ப்பனிய கலாச்சாரத்திற்கு எதிரான போராளியாக இருந்தார்கள். கம்யுனிஸ்டுகளாக உருவான இடதுசாரிகளும் இந்த கலாச்சார முதலீடு செய்யப்பட்ட உடல்களாக மாறியதே இடதுசாரிவாதத்தின் தோல்வி.

அம்பத்கர் முன்வைக்கும் மிக முக்கியமான இந்திய சமூக பகுப்பாய்வு மார்க்சிய வர்க்க பகுப்பாய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஐரோப்பிய சமூகங்களின் சமத்துவமின்மை என்பது ஏற்றத்தாழ்வான பொருளியல் நிலையே. ஆனால் இந்தியாவில் சமத்துவமின்மை என்து படிநிலை சமத்துவமின்மையைக் கொண்டிருந்தது என்கிறார். அதாவது வர்ணப்படிநிலை அமைப்பிற்குள் ஏற்றத்தாழ்வு உண்டு என்றாலும் வர்ண அமைப்பைமீறி இணையமுடியாத ஏற்றத்தாழ்வு அது. அதாவது உயர்சாதியை சேர்ந்த ஏழை எந்த நிலையிலும் தன்னைவிட தாழ்ந்த சாதி ஏழையுடன் ஒருங்கிணைவதில்லை. வர்க்க அமைப்பை மேல்நிர்ணயம் செய்வதாக சாதிய அமைப்பு உள்ளது. அல்லது வர்க்கத்திரட்சிக்கு தடையாக சாதிய அமைப்பு உள்ளது.

  1. கருத்துருவாக்க அமைப்புகள்

ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பு ஊடகங்கள். பாசிச அரசியல் ஊடகங்களை முற்றிலும் தனது கருத்துருவாக்க அமைப்பாக மாற்றி, தனக்கான கருத்தியலை பரப்பி, மக்களிடம் எந்த மாற்றுக் கருத்தம் செல்லாமல் செய்துவிடும்.  பாசிச மன அமைப்பை கட்டமைக்க ஊடகங்கள் உருவாக்கும் உண்மைகள் என்கிற புனைவுகள் முக்கியமானவை. ஊடகங்கள் உண்மைகளை மறைப்பதில்லை. உண்மை மீதான கருத்துருவாக்கத்தை நுட்பமாக பாசிசத்திற்கான கருத்தாக மாற்றிவிடுவதில்தான் அதன் பிரச்சார முக்கியத்துவம் உள்ளது. மாற்றுக் கருத்திற்கான வெளியை முற்றிலும் மறுத்து, அடைத்து பாசிசக் கருத்தியலுக்கான வெளியை உருவாக்குவதே ஊடகங்களின் முக்கிய அரசியல் நடவடிக்கை.

வங்கியில் 9000 கோடி கடன் வைத்துவிட்டு கிங் பிஷர் நிறுவனர் விஜய மல்லைய்யா வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டார். அவர் எப்படி தப்பினார் என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும் அவர் வெளியிடும் செய்திதான் முக்கியமானது. என்னிடம் பல பரிசுகளை அன்பளிப்புகளை பெற்றவரகள் என்று எனக்கு எதிராக திரும்புவதா? எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்று ஊடகங்களை மிரட்டுகிறார். இத்தனை கோடிகள் கடன் வாங்கிய ஒருவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதும், வேறொரு நாட்டில் அடைக்கலம் புகுவதும் அங்கிருந்துகொண்டு ஊடகங்களை மிரட்டுவதும் என்பது ஊடகங்களின் தற்போதைய நிலையையும் அரசு இத்தகைய கொள்ளையர்களுக்கு சாதகமாக நிற்பதையும் வெளிப்படுத்துகிறது. ஊடக அறம் என்ற ஒன்று உள்ளதா? அல்லது எல்லாமே “வாய்ப்புள்ளது பிழைக்கும்” என்ற டார்வீனியத் தத்துவத்தை வாழ்க்கைத் தத்துவமாக ஏற்றுக் கொண்டுவிட்டு செயற்கையாக தகுதிகளை உருவாக்கி வாழ விழைகிறார்களா? வாய்ப்பு என்பது என்ன? தகுதி என்பது என்ன? தகுதிக்கும் வாய்ப்பிற்கும் உள்ள உறவு என்ன?

ஊடகங்களில் கருத்துருவாக்கத்தில் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த இந்த ஆய்வு முக்கியமானது.  கடந்த 25 ஆண்டுகளாக நியு-யார்க்-டைம்ஸ் என்கிற அமேரிக்க நாளிதழின் செய்திகளை ஆராய்ந்த டொரண்டோவைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் இஸ்லாம் பற்றிய செய்திகள் ஆல்கஹால், புற்றுநோய் மற்றும் கொக்கைன் போன்றவற்றைவிட எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கையின் நிலை என்றால் மற்ற பத்திரிக்கைகள் நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இஸ்லாம் மேற்கால் மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் என்று கவரிங் இஸ்லாம் என்ற நூலை எழுதினார் எட்வர்ட் சைத். என்றாலும்,கடந்த 25 ஆண்டுகளில் இஸ்லாமோபோபியா என்பது எப்படி ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுவருகிறது என்பதை இது விளக்கிவிடும்.

57 சதவீதம் தலையங்கம் இஸ்லாமை எதிர்மறையாகவே சித்திரித்துள்ளதாம்.

இஸ்லாம்/முஸ்லிம் என்ற சொல் கலகக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள்  என்ற எதிரமறைப் பொருளில் விவரிக்கப்பட்டுள்ளதாம் கடந்த 25 ஆண்டுகளில்.

இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை வளர்ப்பதின்மூலம் நிறைய லாபம் பார்த்துள்ளன பல பத்திரிக்கைகள் என்றும் சொல்கிறது அவ்வாய்வு.

சராசரி வாசகர்கள்கூட இஸ்லாம்/முஸ்லிம் பற்றிய எதிர்மறை எண்ணத்தை பெறும்படியே இது அமைந்துள்ளது என்கிறது அவ்வாய்வு

இந்நிலை மௌனமான முறையில் ஜிகாதிகள எதிர்மறையாக தூண்டக்கூடியதாக அமைந்ததை சுட்டுகிறார் ஒரு ஆய்வாளர்.

இறுதியாக ஆய்வாளர்கள் முஸ்லிம்/இஸ்லாமியர்களை கூடமானவரை துல்லியமாகச் சித்தரிக்க முனையுங்கள் என்று ஆலோசன சொல்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவுகளிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. பத்திரிக்கைகள் அல்லது ஊடகங்கள் சித்தரிக்கும் உலகம் என்பது இயல்உலகை தங்களது எடுத்துரைப்பிற்கு தக ஒரு மீ-மெய்யுலகாக மாற்றுகின்றன என்பதுதான். உண்மைகள் என்று ஒன்றில்லை. உண்மைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட உண்மைகள் சூழலை உற்பத்தி செய்கின்றன. சூழலுக்குள் சிக்கிய மனித உடல் இந்த கட்ட மைக்கப்பட்ட உண்மைகளோடு தன்னை இணைத்துக்கொள்வதன் வழியாக ஒரு மீ-மெய்-உலகில் வாழத் தலைப்படுகிறது.

மீமெய்யுலகில் வாழும் உடல்கள் ஊடகங்கள் உருவாக்கிய மனசாட்சிகளைக் கொண்டதாக கட்டமைக்கப்படுகின்றன. ஊடகங்கள் தாண்டிய உண்மைகள் இல்லை என்று நம்புகின்றன. ஊடகங்களை விமர்சனரீதியாக அணுகம் திறனை இழக்கின்றன. ஊடகங்கள் சொல்லும் உ்ணமைகளை நம்பி வாழத் தலைப்படுகின்றன.  இந்திய அரசியலில் ஊடகங்கள் பாசிசமயாகிவிருவதால், பாசிசத்திற்கான மனத்தயாரிப்புகளைச் செய்கின்றன. மக்களை பாசிசத்திற்கான நுண்-திரளுதலுக்கு (micro-assemblage) உட்படுத்தி ஒவ்வொரு தனித்த உடலையும் ஒரு நுண்-பாசிச உடலாக கட்டமைக்கின்றன. இவற்றின் ஒருங்குதிரளுதலில் உருவாகப்போவதே இந்திய பாசிசமாக இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

இந்திய ஜனநாயக அரசியிலின் கடைசிக் கட்டத்தில் நின்றுகொண்டு, உருவாகிவரும் பாசிச அரசியலை எதிர்கொள்வது எப்படி? என்ற கேள்வி முக்கியமானது.

  1. அம்பேத்கரியத்தையும், மார்க்ஸியத்தையும், பெரியாரியத்தையும் இணைக்கும் ஒரு பாசிச எதிர்ப்பரசியல் பரந்த தளத்திலான உரையாடலுடன் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இனறைக்கான இடதுசாரிவாதம் என்பது இம்மூன்று சிந்தனைமுறைகளையும் இணைத்து உருவாக்கப்பட வேண்டும். மார்க்ஸ் பேசியது பொருளாதாரத்தின் அரசியலை.  அம்பேத்கர், பெரியார் பேசியது கலாச்சாரத்தின் அரசியலை.  லியோதார்த்த மார்க்சின் அரசியல் பொருளாதாரத்துடன் பிராய்டின் பாலுந்தப் பொருளியலை (லிபிடனல் எக்கானமி) இணைத்து மேற்கிற்கான ஒரு பின் நவீன அரசியலை உருவாக்கியதைப்போல, மார்க்சிய அரசியல் பொருளாதாரம், அம்பேத்கரிய, பெரியாரிய கலாச்சாரப் பொருளாதாரம் அல்லது கலாச்சார முதலீடுகளை இணைப்பதன் வழியாகவே இந்திய சமூகத்திற்கான ஒரு புரட்சிகர அரசியலைப் பெறமுடியும். இந்தியா போன்ற பின்காலனிய சமூகநிலையில் இந்த இணைவுகள் முக்கியமானவை.
  1. பிராமணியத்தை அதன் சாதிய சனாதனப் பார்வையை தர்மக் கோட்பாட்டை ஒழிப்பதன்வழியாக மட்டுமே இந்துத்துவத்தை ஒழிக்க முடியும். இந்துத்துவம் என்பது இந்து அடிப்படைவாதம் மட்டும் அல்ல. இந்து மதத்தை பயன்படுத்தி பிராமண சனாதன மதத்தை மீளாக்கம் செய்யும் ஒரு பழமைவாதம். பின்நவீனம் சொல்லும் ”பெஸ்டிச்” போல பழமைவாத அரசியல் நவீன சமூகத்தில் ஒட்டப்பட்டிருப்பதே. உலகமுதலாளியமும், இந்திய முதலாளியமும் இணைந்து மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஒரு கருத்தியலே இந்துத்துவம் என்பது.
  1. இந்து என்ற உணர்வழுத்தத்தை மெய்நிகர் பிம்பமாக (virtual reality) கட்டமைப்பதன் வழியாக உருவாக்கப்படும் ஒரு பாசிச உடலரசியல் நிலை. இந்த உடலரசியலை புரிய அம்பேத்கரியம் மட்டுமே ஒரு கருவியாக அமைய முடியும்.  அதன்பின் உள்ள பொருளியல் அதிகாரத்தை புரிய மார்க்சியம் மட்டுமே ஒரு கருவியாக அமைய முடியும். தலித்திய அம்பெத்கரிய சிந்தனையை இந்துத்துவம் கையி லெடுப்பதன்வழியாக தலித்திய சக்திகளை இந்துத்துவமயமாக்கும் முயற்சியை முற்போக்கு அரசியல் சக்திகள் முறியடிக்க வேண்டும். அதற்கு மார்க்சியர்கள் அம்பெத்கரியத்துடன் ஒரு உரையாடலை துவக்குவது அவசியானது.
  1. இந்தியாவில் நிகழ்வது ஜனநாயக அரசியல் அல்ல. வேதச்சமூகங்களிலிருந்து அதிகாரமாக இயங்கும் உயிர்-ஆற்றலைக் கொண்ட உடலரசியல்தான். ஒரு உடல் தன்னை மதமாக, சாதியாக, இனமாக, தேசியமாக, ஆணாக இப்படி உணர்வதும், அந்த உணர்வைக் கொண்டு சிந்திப்பதும், செயல்படுவதுமே உடலரசியல்.  இந்திய உடல்கள் மனுவாத-தர்மா உடல்கள். அவர்கள் இப்படித்தான் நல்லெண்ண அரசியல் பேசுவார்கள், ஊழலற்ற அரசியல் என்பார்கள், தூய்மைவாதிகள் என்பார்கள், வளர்ச்சிக்கானவர்கள் என்பார்கள், வல்லரசு ஆக்கவதாக சொல்வார்கள், தேசபக்தர்கள் என்பார்கள்.  அரசுகட்டில் தூய்மையானது என்றும் அதில் சாத்திர சாதி தவிர்த்த மற்ற சூத்திர-சாதி எப்படி உட்காருவது என்றும் கேட்பார்கள்.

”தத்துவம் மக்களைச் சென்றடைந்தால் பௌதீக சக்தியாக உருவெடுக்கிறது” என்றார் மார்க்ஸ். கம்யுனிஸ்ட் என்பது ஒரு அடையாளச் செயல்பாடு அல்ல. அது ஒரு ஆதல் (becoming) ஆக மாறும்போது மட்டுமே இனக்குரோதம் சாதியம் போன்றவை வெளியேறும். வெறும் அறிவார்ந்த வாசிப்பால் அது சாத்தியமில்லை. கம்யுனிஸ்டுகள் முதலில் மார்க்சியத்தை வாசிப்பதுவோடு நில்லாமல் அதை உணரவேண்டும். உணர்தல் என்பது உடல்நிலையாக மாறும் ஒன்று. அப்படி ஒரு மாற்றம் உடலில் நிகழாதவரை கம்யுனிஸ்டுகள் ஒரு சராசரி முதலாளியம் உருவாக்கிய அரசியல் விளையாட்டின் ஒருபுறத்தில் நின்று விளையாடும் கட்சிகளாக மட்டுமே இருப்பார்கள். அடையாள அரசியலே நுண்பாசிசம் உருவாக்கத்திற்கான ஆரம்பப்புள்ளி. அதை நமக்குள் கண்டுணர்ந்து கலைப்பது அவசியம். மற்றமையாதல் (becoming other), சிறுவாரியாதல் (becoming minor) என்பதாக ஆதலாக, உணர்தலாக, உடலாக மாறாத கம்யுனிஸம் துவங்கி எந்த ஒரு முற்போக்கு இடது அரசியலும் வெறுமனே ஒரு அடையாள அரசியல் கட்சியாகவே எஞ்சும். இன்னும் எண்ணற்ற ரோஹித் வெமுலாக்கள் அக்கட்சிகளைவிட்டு வெளியேறவேச் செய்வார்கள். போராட மார்க்கமற்று, ஆதரவற்று, தனிமைப்பட்டு, அந்நியமாகி சுயவதையாக தற்கொலை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாததாக மாறும்.

 

(இடைவெளி , ஜூலை  2017)