ஒரு பிரதியியல் வாசிப்பு-பிரேம்

மாறுதல்களைக் கற்றறிதலும் கற்பித்தலும்  பண்படுத்தும் அரசியலின் ஒரு வகைமை
(குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிரதியியல் வாசிப்பு)
 

பிரேம்

இலக்கியங்களின் பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றாகக் கற்பித்தல் என்ற செயல்பாடு என்றும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான அறிவுருவாக்கத்திலும் அறிவுத்தேர்விலும் இலக்கியப் பிரதிகள் தெளிவான பங்கை அளிக்கின்றன. பல்வேறு அறிவுப் புலங்களுக்குள் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற பகுத்தறிவு சார்ந்த கேள்வியை இலக்கியங்கள் நுண்தளத்தில் ஆய்வு செய்கின்றன. அழகியல், அறிவு, அறம் என்ற மும்மை உறவமைப்பில் அழகியல் என்பதில் தொடங்கி அறிவு குறித்த கேள்விகளை எழுப்பி  அவற்றிற்கு விளக்கங்கள் அளித்து அறம் குறித்த தேர்வுகளை நோக்கி ஒரு காலத்தின் மொழிப்புலத்தை இலக்கியம் நகர்த்துகிறது.

கருத்துருவ, கோட்பாட்டுச் சொல்லாடல்களும் கதையாடல்களும் இதனை அறிவுத்தளத்தில் தொடங்கி அறம், அழகியல் எனத் தம்மை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கலை-இலக்கியம் என்ற புனைவு சார்ந்த எடுத்துரைப்புகள் (Fictional Narratives) இதனைப் பன்மைத்தன்மை உடைய வடிவத்தில் நிகழ்த்திக்காட்டுவதன் மூலம் ஒற்றைத் தன்மை அற்ற கலப்பான கேள்விகளையும் அக்கேள்விகளுக்கான பல்வேறு பதில்கள் குறித்த தேர்வுகளையும் ஒரே தளத்தில் நிரவிக் காட்டுவனவாக செயல்படுகின்றன. செவ்வியல்-காப்பிய மரபுகள் அழகியல் என்பதில் தொடங்கி வாழ்வு, சமயம், அரசியல் சார்ந்த அனைத்து நெறிகளையும் பற்றிய சொல்லாடல் தொகுதிகளாகத் தம்மை அமைத்துக் கொள்கின்றன.

வரிமொழி மரபுகள் மட்டுமின்றி வாய்மொழி மரபுகள் மற்றும் நிகழ்கலை மரபுகள் அனைத்தும் ஒருவகையில் அறிவைப் பரப்புவனவாகவும் வாழ்வு குறித்த அனைத்துக் கூறுகளையும் பதிவுசெய்து வைப்பனவாகவும் பரப்புவனவாகவும் விளக்குவனவாகவும் செயல்படுகின்றன. அதனால்தான் இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்றாகவும் அறிவுருவாக்க முறைகளில் ஒன்றாகவும் தன்னை எப்போதும் வைத்துக்கொள்ள முடிகிறது.

நவீன கதைகூறல் முறைகளில் ஒன்றான நாவல்-நவீனம் என்ற கதை வடிவமும் தற்காலம் சார்ந்த பன்மைக் கேள்விகள் மற்றும் பன்மை பதில்கள் சார்ந்த மொழிக்கட்டமைவாகச் செயல்படுகிறது. மக்கள்மையத் தன்மை கொண்ட அரசியல் உருவாக்கிய கதைக்கூறல் என்ற வகையில் நாவல் தனிமனிதர் மற்றும் கூட்டமைவு (தனிமனிதர்- சமூக அமைப்பு, Individual-Social Structure) என்ற இருமைகளுக்கிடையிலான இயைபுகள், இணக்க மின்மைகள், முரண்கள் மற்றும் மோதல்களைப் பேசுவனவாக, விளக்குவனவாக அமைவது தவிர்க்க முடியாத ஒன்று. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் நாவல் என்ற நவீன-நவீனத்துவ வடிவம் எப்போதுமே ஒரு முரண்பகுப்புச் செயல்பாடு (Critical and Analytical Function) கொண்டதாக முழுமையின்மைகளை எடுத்துரைப்பதாக  (Deliberation of Incompleteness) அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த முரண்பகுப்பு மற்றும் முழுமையின்மை சார்ந்த எடுத்துரைப்பு ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றான கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைவது உண்டு. நவீன உளஅமைப்பை, நவீன அரசியல்-சமூக நடத்தையில்புகளை இந்தியச் சமூகங்களிடையே படிவிப்பதும் பழக்குவதும் அதனை நிறுவுவதும் மெய்ப்பிப்பதும் மிக மிகக் கடினமானச் செயல்பாடு. தமது எழுத்துக்கள் வழியாகப் பல்வேறு வகைகளில் இச்செயல்பாட்டில் பங்கெடுத்துக் கொள்வதையே அறிவார்த்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் பலரும் தமது நவீன இலக்கியச் செயல்பாடாகக் கொண்டு இயங்கி வருகின்றனர்.

அவ்வகையில் சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் தன்னளவில் நவீன உளவியல்பு மற்றும் நவீன வாழ்வியல் குறித்த ஆய்வு நாவலாகவும் நவீனகால மாறுதல் நிலையின் சிக்கல்கள் குறித்த விளக்கமுறை நாவலாகவும் (Demonstrative Novel) அமைந்துள்ளது. நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவதை மட்டும் செய்யாமல் அவை குறித்த கேள்விகள், விளக்கங்கள் மற்றும் முன்-பின் சூழல்கள் ஆகியவற்றையும் தொகுத்துரைப்பதன் மூலம் இந்நாவல் ஒரு பொருளுரைப்பு நாவலாகவும் (Interpretative Novel) மற்றொரு தளத்தில் கருத்துகள் குறித்த நாவலாகவும் (Novel of Ideas) அமைந்திருக்கிறது.

இந்திய மரபுகளால் உருவாக்கப்பட்ட சமூக மனிதர்கள் தம்மை நவீன தனிமனிதர்களாகவும், பொதுஅறம் பேணும் சமூக மனிதர்களாகவும் மாற்றிக் கொள்வதில் உள்ள இடர்கள், போதாமைகள், சிக்கல்கள், உள்வய எதிர்ப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலை குடும்பம் என்பதை மையமாகக் கொண்டு தொடங்கி புதிய மதிப்பீடுகள், தலைகீழாக்கங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் பல்வேறு இந்திய நிறுவனங்களும் சமூகப் பண்பாட்டு துணை மற்றும் இணையமைப்புகள் எதிர்கொள்ளும் நிலைகள் பற்றியதாக விரித்துச் செல்கிறது இந்நாவல். இன்னொரு வகையில் இந்த நாவலை சாதியப் படிநிலை மற்றும் ஆண் மையத்தன்மை கொண்ட, உள் வன்முறைகள் நிறைந்த இந்தியச் சமூகஉளவியல் குறித்த கேள்விகளைக் கையாளும் ஒரு இனவரைவியல் நாவலாகவும் வாசிக்க இயலும். அதனைவிட இந்நாவல் தன் கட்டமைப்பின் மூலம் பிராமண சமூகத்தை நவீன-சனநாயகம் ஏற்கும் ஒரு மாறுதலுற்ற சமூகமாக, பன்மைகளின் இடத்தில் குடிமைப் பண்புடன் வாழ்வதற்கான உளவியல்பினைக் கற்ற சமூகமாக மாற்றுவாற்கான பயிற்சியினை அளிக்கும் நாவலாகத் தன்னை அமைத்துக் கொள்கிறது.

சுயவிமர்சனம் மற்றும் தன்மதிப்பீடு என்பதன் மூலம் மாறுதல்கால நவீனத்தன்மையை ஒரு சமூகத்திற்குக் கற்பிக்கும் நாவலாக இது இயங்குகிறது. இதற்கு ஏற்ற வகையில் பன்மொழி, பன்மையான பண்பாடு, பன்மையான மதப் பின்னணிகள், பலசாதி வாழ்வியல் என்பவை இதில் கதைப்புலங்களாக அமைக்கப்படுகின்றன.  அத்துடன் பிரிடிஷ் ஆட்சி- இந்திய நாடு – சிற்றரசுகள்  என்னும் மூன்றடுக்கு அரசாட்சி நிலைத் தன்மையும் இதன் காலப்பின்னணியான 1937-39 என்பதும் இந்திய வாழ்தலின் தனிமனித-அரசியல் சிக்கல்ளைப் பற்றிப் பேச மிக விரிவான தளத்தைத் தரக்கூடியது. முரண் மற்றும் இணைகளின் தவிர்க்க முடியாத கூட்டிணைவுகளின் தளத்தில் இந்நாவலை அமைப்பதன் மூலம் கதைசொல்லும் குரலுக்குப் பன்மையான பகுத்துரைக்கும் தன்மையை இந்நாவல் வழங்குகிறது. இந்த பகுத்துரைக்கும் உரிமை மற்றும் வாய்ப்பினை இந்நாவலின் கதைசொல்லி மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்வதன் வழியே இதனை ஒரு குடும்பக்கதை அல்லது  சிறுமிகள் மற்றும் சிறுவர்களைப்  பற்றிய கதை என்ற தளத்தில் இருந்து நவீன கோட்பாட்டுத் தேர்வுகள் குறித்த நாவலாக மாற்றியமைத்து விடுகிறார்.

இந்நாவலை வாசிப்பதற்கு முன்பிரதியாக ‘ஜே.ஜே: சிலகுறிப்புகள்’ நாவல் அமைகிறது என்பது எதேச்சையான உறவல்ல. கதைசொல்லியான பாலு மட்டுமின்றி அந்நாவலில் குறிப்பிடப்படும் எஸ்.ஆர்.எஸ், சம்பத், டாக்டர் கோவிந்த பிஷாரடி எனப் பல கதை உருவங்கள் இந்நாவலில்தான் விரிவாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஜே.ஜே: சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தது ‘1939ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாவது உலக மகாயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ’ என்று குறிப்பிட்டிருந்தேன்.  காலம் பற்றிய மயக்கம்!  இன்று அது இல்லை.” என இரண்டு கதைகளையும் சுந்தர ராமசாமி தன் முன்னுரை (அக்டோபர் 24,1998, நாகர்கோவில்) வழியே இணைத்து வைப்பதன் மூலம் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலும் கதைசொல்லுதலின் கதையாக (Metafiction) கதைசொல்லியின் கதையாக (Story of the Storyteller)  மாறுவதற்கான விளிம்பில் வைக்கப்படுகிறது. ஆனால் எழுத்துக்கலைஞர் (Writer), ஒரு குறிப்பிட்ட எழுத்தை உருவாக்குவர்  (Author),  கதைசொல்பவர் (Storyteller), கதைசொல்லும் நிலை (Narrator) என்னும் உறவமைப்புகளை வரிசையை மாற்றியதன் மூலம் இந்நாவல் தன்னை ஒரு விளக்கமுறை நாவலாக அமைத்துக்கொள்வதால் நடப்பியல் நாவல், எதார்த்தவியல் நாவல் (Realistic Novel)  என்பது பற்றிய தமிழின் இலக்கியக் கருத்தாக்கங்களின் பிழைபட்ட நிலைப்பாட்டை மாற்றி விளக்கி விடுகிறது.

முன்பொருமுறை அழகியநாயகி அம்மாள் எழுதிய ‘கவலை’ என்ற கதை, தங்கர்பச்சான் எழுதிய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்ற சாதிய வாழ்வு சாரந்த ‘எதார்த்தவியல்’ நாவல் பற்றிய பேச்சின்போது  ‘தமிழின் எதார்த்த வகை எழுத்துக்கள் என்பவை அனைத்தும் கவலைகளின் கதைகளே’ என இடைக்குறிப்பாக எழுதியிருந்தேன். அவற்றுடன் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலையும் கவலைகளின் கதையாகக் குறிப்பிட்டு ‘லட்சுமி, ஆனந்தம், வள்ளி என்ற மூன்று பெண்களின் மூலம் குடும்பம்,சாதி,கலாச்சாரம் என்பவற்றின் பலிகேட்பு பற்றிய கதையாடல் இரண்டாம் தள வாசிப்பாக இந்நாவலில் உள்ளது. பெண்மைக்கும் இந்திய சாதிய, வன்கொடுமைக் கலாச்சாரத்திற்குமான முரணுறவு நினைவு கொள்ளப்படாமல்  இந்நாவலின் வாசிப்பு முழுமையடையாது’ (கவலைகளின் கதை, பிரேம், 2000:167) எனவும் குறிப்பிட்டிருந்தேன்.  இந்நாவலின் கதைசொல்லும் குரல் தன் வாசிப்பையும் இந்தக் கதையூடாக வைத்துச் செல்வதன் மூலம் இதனை நடப்பியல் என்ற தளத்தில் இருந்து பொருளுரைக்கும் நாவலாக மாற்றி விடுகிறது.

‘எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா’ என்றான் பாலு. ‘என்ன குழப்பம்?’ ‘எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்தி சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணம்’ என்றான் பாலு.  சுகன்யா பாலுவை அணைத்துக்கொண்டாள். ‘இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை’ என்றாள் அவள். (ப.634)  என எது உண்மை எது பொய் என்பது பற்றிய கேள்வியை நினைவுபடுத்திச் செயல்படுவதால் இந்நாவலை ஒரு கல்விப்புல நாவலாக வாசிக்கலாம். ‘சமூகம் பெரிய பங்கை ஆற்ற முற்படும்போது அத்துடன் சேர்ந்து இரண்டு முன்னேற்றங்களும் ஜனங்கள் மத்தியில் உருவாக வேண்டும். ஒன்று ஜனநாயக உரிமைகள் வலுப்படுவது. மற்றொன்று  சமத்துவம் முக்கிய குறிக்கோள் ஆவது.’ (ப.561) என நவீன வாழ்வின் அடிப்படை அறத்தை நினைவூட்டுவதால் இதனை இலக்கியத்தின் அடிப்படையான செயலான  ‘நீதி உரைத்தலை’ச் செய்யும் ஒரு அறவியல் நாவலாகவும் வாசிக்கலாம். இது போன்ற வாசிப்புகள் பலவற்றிற்கு  இணக்கமாக கோட்பாட்டு அடிப்படையில் இந்நாவல் தன்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு இதன் உருவாக்க காலமான தொண்ணூறுகள் முதன்மையான காரணமாக அமைகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்தியம் மற்றும் பெண்ணியம் என்ற இரு கோட்பாட்டுத் தளங்கள் தமிழின் அடிப்படை இலக்கியச் சொல்லாடல்களை மாற்றியமைத்ததுடன் புனைவு மற்றம் நினைவு சார்ந்த இயக்கங்களையும் மாற்றியமைத்தன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலும் இந்த ‘மாறுதல்கால’ சொல்லாடலின் ஒரு பகுதியாகத் தன்னை அமைத்துக் கொள்வதன் மூலமும் பன்மொழி- பலபண்பாட்டு எடுத்துரைப்பின் வழியாகவும் பன்முக வாசிப்புக்கு உரியதாகத் தன்னை வைத்துக்கொள்கிறது.

இந்த வாசிப்பிற்கு முன்பிரதிகளாக ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ (பங்க்ளா), சிவராமகரந்தின் ‘மரளி மண்ணிகே’ (கன்னடா) சந்துமேனோனின் ‘இந்துலேகா’ (மலையாளம்) ஆகிய நாவல்களை நான் எடுத்துக்கொள்கிறேன். இதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை: இந்த மூன்று நாவல்களும் இந்தியச் சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆண்களால் எழுதப்பட்ட கதைகள்,  பெண்கள் தமக்கான இடத்தைப் பெறுவதற்கான நுண்ணிய போராட்டங்கள் பற்றியவை.

அத்துடன் குடும்பம், பண்பாடு, பெண்கள் நிலை பற்றிய நேரடிப் பேச்சுகளைக் கொண்டவை. தமிழில் இந்தச் சிக்கல்கள் பற்றியும் மாறுதல்களின் தேவை பற்றியும் எழுதப்பட்ட நாவல்கள் மிகுந்து காணப்பட்டாலும் அதற்கான கோட்பாட்டாக்கத்தை கதைக் கூற்றுக்குள் கொண்டுவந்து தன் அரசியல் இணைச்சொல்லாடலை ஒரு குடும்ப நாவலின் பகுதியாக வைத்துக்கொள்ளும் நாவல்கள் தமிழில் இல்லை. தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ சாதி, குடும்பம், பெண்ணிலை, குடிமரபு, மதங்களின் அறிவழிக்கும் கொடுங்கோன்மை என்பன பற்றித் தீவிர தகர்ப்புகளைக் கொண்ட நாவல். ஆனால் அவை இணைத்தள வாசிப்பின் உள்பகுதியில் வைக்கப்பட்டு விட்டதால் நாடகக் குறியீட்டுத் தன்மை அதிகம் கொண்டதாக அந்நாவல் இறுக்கம் பெறுகிறது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலோ சிக்கல்கள், ஒடுக்குமுறைகள், போதாமைகள் பற்றிய நிகழ்வுகளைச்  சித்திரிப்பது மட்டுமின்றி அவற்றைக் கோட்பாட்டாக்கம் செய்வதற்கான பேச்சையும் கொண்டிருக்கிறது.

‘முன்னெல்லாம் உங்களுக்கு சுகன்யாவை ரொம்பப் பிடிக்குமே அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘இப்பவும்தான். ஆனா அவ பேச்செல்லாம் இப்ப மாறிப்போச்சுடீ ஆனந்தம். உலகத்தைத் தூள்தூளாக்கிட்டுத்தான் ஒரு பக்கத்துல உட்காருவள் போலிருக்கே அவள்’ என்றால் லட்சுமி. (ப.489) மாறுதல் அடையும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெண்கள் பற்றிய பேச்சாக அமையும் இப்பகுதி சுகன்யா, வள்ளி, ரமணி, ஆனந்தம், லட்சுமி என்ற பெண்களை உள்ளடக்கியது. மாறுதல் குறித்து அச்சம் கொள்ளும் பெண்ணாக லட்சுமி,  மாறுதலை மென்மையாக உள்ளார்ந்து விரும்பும் பெண்ணாக ஆனந்தம். மாறுதலை, எதிர்ப்பைப் பரப்பும் பெண்ணாக சுகன்யா, மாறுதலுக்கு உள்ளாகும் பெண்ணாக வள்ளி, மாறுதலைக் கண்டு மயங்கி விடாத பெண்ணாக ரமணி விளக்கப்படுகின்றனர்.  இந்த உரையாடலின் பகுதிகள் மாறுதலுக்காக இந்தியப் பெண்கள் ஏங்கியிருப்பதையும் அதே சமயம் தயங்கி நிற்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றன.

பெண்களுக்கான கல்வியின் தேவை, பெண்கள் தம் தனிஅடையாளத்தைப் பெறுவதற்கான போராட்டம் என்பவை பற்றி இப்பகுதி பேசுகிறது. ‘வள்ளி மேக்கப்பை கவனிக்கிறேளா அக்கா?  ‘அவளைப் பாக்கிறத்த கண்ணை மூடிக்க முடியுமா.  இப்ப அதுக்கு மனசு முழுக்க சுகன்யாதான். அவ இன்னிக்கு செய்யறதை இது நாளைக்குக் காப்பியடிக்கும்’ என்றாள் லட்சுமி.  சுகன்யா வேறு ஒரு பண்பாட்டு-அறிவுப் பின்புலம் கொண்ட, மாற்றத்தை ஏற்று அதனை நடப்புக்குக் கொண்டுவரும் பெண். வள்ளி அதனை விரும்பி ஏற்கும் பெண். வள்ளியென்ற இந்தப் பாத்திரத்திற்கு நேரும் துயரமான ஒரு முடிவு இந்நாவலின் இரு துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாக மனதைத் துளைக்கக் கூடியது.  தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாமல் மீண்டும் தன்னடையாளமற்ற அடிமை நிலைக்கு இப்பாத்திரம் தள்ளப்படும்போது மாறுதல்களை விரும்பும் இந்தியப் பெண்களின் துயர முடிவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. ‘நீ அவக்கிட்ட பேசிப்பாரு தெரியும். ஆம்பிளைகளை உழவுல கெட்டி அடிக்கணுமாம்.  நாக்கூசாமச் சொல்றா’ என்றாள் லட்சுமி.  ‘கபடம் தெரியாம இருந்தா இந்தக் காலத்துல பொழைக்க முடியுமா அக்கா? வள்ளிக்கு உள்ளும் புறமும் ஒண்ணு உலகம் பூரா வெள்ளை’ என்றாள் ஆனந்தம். ‘அவளை ஓசைப்படாம தளியல்ல கொண்டுபோய் சேத்துரணம். அப்பா பாடு, அண்ணா பாடு. எனக்கெதுக்கு வேண்டாத தலைவலியெல்லாம்’ என்றாள் லட்சுமி. ‘அங்க போனா படிதாண்ட விடமாட்டாளே அக்கா. இங்கே பெண்களுக்குத் தனி காலேஜ் இருக்கே. அதுல சேத்துவிடுவோமே. டாக்டர் ஆனி ஜோசப் சர்க்கார் ஆஸ்பத்திரியில கொழலை மாட்டிண்டு நிக்கறத்தப் பாக்க ஆசையா இருக்கு அக்கா’ என்றாள் ஆனந்தம். அதெல்லாம் அவாளுக்கு சரி. நமக்கு ஒத்து வராது.’ என்றாள் லட்சுமி. ‘ஆண்கள் எந்தெந்தக் காரியங்களைச் செய்யறாளோ அத்தனைக் காரியங்களையும் பெண்களாலேயும் செய்ய முடியும்னு வள்ளி சொல்றா அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘பெண்கள் நாலு எழுத்துப் படிச்சு முன்னுக்கு வரணும் அக்கா’ என்றாள் ஆனந்தம்.  ‘வள்ளி ரொம்ப புத்திசாலி அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘அதோட நின்னா சரி. அதுக்குன்னு ஒரு முரட்டுத் தைரியம் இருக்கே. அத நினைச்சாத்தான் எனக்கு அடிவயத்தைக் கலக்கறது.’ என்றாள் லட்சுமி. ‘நீங்க கிழிக்கிற கோட்டைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா அவ. நான் கேரண்டி’ என்றாள் ஆனந்தம். ‘தாண்டி எடுத்து வைக்கமாட்டா. அந்தக் கோட்டையே அழிச்சிட்டு மடமடன்னு நடந்து போயிடுவள்’ என்றாள் லட்சுமி. ஆனந்தம் சிரித்தாள். ‘நீ சிரிச்சா, கூடக் கொஞ்சம் எனக்கு வயத்தைக் கலக்கும்’ என்றாள் லட்சுமி. (பக்.489,490)

இந்த வகையான பெண்நிலை பேச்சுக்கள் இந்நாவலை இணைநிலை கோட்பாட்டாக்கம் கொண்டதாக மாற்றிவிடுகிறது. நிகழ்வுகள், நடப்புகள் என்பவற்றோடு தன்னளவிலேயே விளக்கங்கள், கோட்பாட்டாக்கங்கள், பன்மையான நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்டிருப்பதன் மூலமே இந்நாவல் எனது பார்வையில் கற்றல் மற்றும் கற்பித்தல் வகை எழுத்தாக (Novel of Pedagogy) பொருள்படுகிறது. தமிழின் மேல்நிலைச் சாதிய உளவியல்புகளை (இதனைப் பிராமண-வெள்ளாள மையம் கொண்டது என அடையாளப்படுத்தலாம்) நிலைமறுத்து மாறுதல்களை ஏற்க வலியுறுத்தும் இலக்கியச் சொல்லாடல் என்ற வகையிலேயே குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் தன் நவீனத் தன்மையை உறுதி செய்கிறது.  தன் காலப்பின்னணியாக கடந்தகாலத்தைக் கொண்டிருப்பதால் இது  வரலாற்று ஆவணத்தன்மை (Archival Narrative) கொள்வதும், இதில் விவரிக்கப்படும் காலம், இடம், பொருள்கள் என்பவை இப்போது முற்றிலும் மாறிவிட்டதால் தன் தோற்ற அளவில் பழம்பொருள் சித்தரிப்புத்தன்மை (Portrayal of Antique marker) கொள்வதும் நாவலின் வாசிப்பைப் பன்முகக் குறியியல் தன்மை கொண்டதாக வைத்துக் கொள்கிறது. இவற்றின்  பின்னணியில்தான் நான் இந்நாவலின் வாசிப்பை விளக்க முனைகிறேன்.

இந்நாவலில் இடம்பெறும் இரு குடும்பங்களில் உள்ள நான்கு குழந்தைகள் குடும்ப உளவியல் அடிப்படையில் எதிர் இணைகளாக வைக்கப்படுவதன் மூலம் குழந்தைகள் சமூக மனிதர்களாக வளர்தலில் உள்ள சிக்கல்களும், சமூகவயப்பட்ட தனிமனிதர்களாக உருவாவதில் உள்ள இடையீடுகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எஸ்.ஆர்.சீனிவாசஅய்யர்-லட்சுமி தம்பதிகளின் குழந்தைகளான ரமணி மற்றும் பாலு இருவரும் வறுமை என்பதை அறியாத, தம் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெற்றோர்களை உடைய குழந்தைகள். இவர்களைக் கவனிக்கவும் பராமரிக்கவும் ஆனந்தம் மாமி, கௌரி என பாசமே உருவான இரு தன்னலம் கருதாத அப்பாவிப் பெண்கள். சாமு-சீதை தம்பதிகளின் குழந்தைகள் லச்சம் மற்றும் கோமு. வறுமையும் மனக்கசப்பும் கூடிய வீடு இவர்களுடையது. ஓயாத வெறுப்பும் பகையும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குடும்பம். லச்சம், கோமு இவர்களின் துயரம் நிறைந்த வாழ்வைப் பார்வையாளர்களாக இருந்து கவனிக்கும் பாலு, ரமணி இருவருக்கும் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் வயது இல்லை. எஸ்.ஆர்.எஸ் தன் சித்தப்பா மகன் என்ற அக்கறையுடன் சாமுவைத் தன் கடையில் வேலைக்கு வைத்து உதவிகள் செய்தாலும் குடும்பத்தின் பட்டினியைப் போக்க முடியாத நிலை. சாமுவின் குடிப்பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கிறது. சீதை தன்  வாழ்வின் அனைத்துத் துன்பங்களுக்கும் கணவன் சாமுவே காரணம் என்ற கருத்தைக் கொண்டவள். சாமுவோ தன் மனைவி குழந்தைகள் குறித்து எந்த பொறுப்போ அக்கறையோ அற்ற வெறும் கசப்புணர்வும் வெறுப்பும் மட்டுமே கொண்ட ஒரு ஆண்.

வாழ்வு என்பது எந்த நம்பிக்கையும் தராத தண்டனையாகவே சாமுவுக்குத் தோன்றுகிறது. சாமு ‘திருவனந்தபுரம் ஊட்டுப்புரையில் வளர்ந்த அலவலாதி.’ அந்த ‘புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் தரித்திரம்தான் தலையில எழுதிருக்கு. நிழலு மாதிரி தொரத்திகிட்டே இருக்கும்.’ அவர்களுக்கு ‘பாளம் பாளமா தங்கத்தைக் கொடுத்தாலும் மறுநா பாத்தா கரியாயிடும்.’ சாமுவுக்கும் அவர் மனைவிக்கும் இடையில் உள்ள உறவு வெறும் வன்மம் மட்டுமே கொண்ட ஒன்று. ‘அவள் பீறிட்டு அலறும்படி பின்னால் இருந்து அவளைத் தாக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுவது’ என்பது இயல்பான ஒன்று. பின்னால் இருந்து என்பதில் உள்ள பயம் கலந்த வன்முறை கசப்பு நிறைந்த மணஉறவுகளின் குறியீடு. ‘கொன்னுடுவேன்’ என்று கையை ஓங்கும் சாமுவிடம் சீதை சொல்லும் பதில் ‘இப்படி சொல்லிண்டே இருக்கேளே தவிர செஞ்சு காட்ட மாட்டேங்கிறேளே.’ அவர் தன்னைக் கொல்லாமல் இருப்பதற்கும் சீதை சொல்லும் காரணம் ‘துன்பம் தீர விடமாட்டார்’ என்பது. இந்தக் கசப்பும் வெறுப்பும் கொண்ட குடும்பப் பின்னணியில் வளரும் லச்சம், கோமு இரு குழந்தைகளின் இருள் நிறைந்த எதிர்காலம் வாசிப்பின் ஒவ்வொரு தளத்திலும் நம்மை வந்து தாக்குவாதாக உள்ளது. லச்சம் மிகுந்த புத்திசாலித்தனமும் பல திறமைகளும் கொண்ட, பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய மிகையான ஆற்றல் உடைய ஒரு வளர்பருவச் சிறுவன்.

ஆனால் அவனுடைய வாழ்வு பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டு துயரத்தில் முடிகிறது. இந்த முடிவு குழந்தைகளின் வாழ்வு குறித்த பல அடிப்படை கேள்விகளை எழுப்பக் கூடியதாக உள்ளது. அவன் மீது கவிழும் வன்முறை முதலில் குடும்பத்தில் தொடங்குவது. ஆனால் அதைவிட சமூகத்தின் வெளியிடங்கள் அவனை நசிவுக்கு உட்படுத்துகின்றன. பரமேஸ்வரன் வைத்தியர் அவனைத் தன் பாலியல் முறைகேட்டிற்கு பயன்படுத்திக்கொள்வது என்ற நிகழ்வு இந்தியச் சமூகங்களில் ஆண்-பெண் குழந்தைகளின் மீது மிகக் கமுக்கமாய் நடைபெற்று வரும் வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் குறித்த பதிவாக அமைகிறது. (‘அந்தப் படுபாவி வைத்தியன் கூடத்தான் சதா கிடப்பு. இந்த ஊர்ல அந்தப் பாவி கெடுக்காத பிள்ளை கிடையாது.’ -ப.553).

வெளித்தெரியாத கொடுவன்முறையின் மற்றொரு எதிர்த்தளமாக அமைவது பாலுவின் மனச் சிக்கல்கள். பாலு வெளியுலகம் மறுக்கப்பட்ட ஒரு சிறுவன் (நவீனமடைய முனையும் ஒரு தனிமனிதன் ஆனால் வைதீக சமூகத்தின் அடைபட்ட உறுப்பினன்). இவனுடைய ஒவ்வொரு நாளும் வெளியுலகம் குறித்த எதிர்பார்ப்பில் கழிகிறது. தான் லச்சம் அண்ணன் போலச் சுதந்திரமாக ஊர் சுற்றி பல சாகசங்களைச் செய்து வாழ வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால் தன் தந்தையின் கட்டுப்பாடுகள் அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அதே கட்டுப்பாடுகள் அவனது தமக்கை ரமணிக்கு பெரிய அளவில் துயரமாகத் தோன்றுவதில்லை. பாலு பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில்தான் தனிமை உணர்வு சார்ந்த பல உளச்சிக்கல்கள் உருவாகின்றன. பாலு, லச்சம் இருவருக்குமே மற்ற சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உள்ளது போன்ற இயற்கைச்சுழல் மற்றும் உழைப்பு சார்ந்த வாழ்விடம் இரண்டும் இல்லாத நிலை பல வாழ்வியல் குறைபாடுகளை, உளவியல் சிக்கல்களை உருவாக்குகின்றன.

பாலுவின் தந்தை எஸ்.ஆர்.எஸ் தன் மகன் மீது கொண்ட அதிக அக்கறை மற்றும் எதிர்பார்ப்பு என்பதன் வழியாக அவனுக்கு அந்நியமாக ஆகிவிடுவதுடன் அச்சமூட்டும் ஒரு மனிதராக உருவம் கொண்டுவிடுகிறார். லச்சத்தின் தந்தை சாமு அவன் மீது அக்கறையோ அன்போ அற்றவராக அவனைக் கொடிய சொற்களாலும் வசைகளாலும் கொடுமைக்குள்ளாக்குகிறார். இரு தந்தைகளுமே மகன்களுக்கு அந்நியமாகி நிற்கின்றனர். இந்தியத் தந்தைகள் என்கிற பாத்திரம் கட்டுப்பாடு, அடக்குமுறை என்பவற்றின் உருவங்களாகச் செயல்படும் மரபான வன்முறை பற்றிய பல கேள்விகளை இப்பாத்திரங்கள் வழியாக இந்நாவல் முன்வைக்கிறது (இந்தக் கொடுந்தந்தை என்ற எதிர்ப்பார்வை நவீன முரண்படுத்தல்களில் ஒன்று, தொன்மைத்தன்மையோ நீண்ட மரபோ அற்றது, இதனை விரிவாக வேறுதளத்தில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது). எஸ்.ஆர்.எஸ் கொடுந்தந்தை என்கிற நிலையில் தான் இருக்கக்கூடாது என்கிற தன்னினைவு கொண்டவர். ஆனால் ஒழுங்குபடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் என்பற்றின் மூலம் தன் குடும்பத்திற்குள் அச்சத்தை உருவாக்கும் ஒருவராகத் தோற்றம் தருகிறார் (இவர் தன் குடும்பத்தை நாகரிகப்படுத்தும் செயலை தன் வாழ்வின் முதல் கடமையாகக் கொண்டு செயல்படுபவர், பழமையின் ஒழுங்கற்ற தன்மைகொண்ட தன் மாமனாரின் ஒவ்வொரு செயலும் கூட இவருக்கு வெறுப்பையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது). தன் பெண் குழந்தையான ரமணி பற்றிய பெருமை உணர்வு அவருக்கு இருக்கிறது. அவளின் படிப்பறிவுகுறித்த பெருமையாக அது வெளிப்படுகிறது. எஸ்.ஆர்.எஸ்  வாழ்வில் ஏற்படும் மூன்று நிகழ்வுகள் அவரைத் தன் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நெருக்கமாக வெளிப்படுத்திக்கொள்ளும் முதல் வாய்ப்பினை வழங்குகின்றன.

முதலாவது நிகழ்வு அவருடைய வியாபாரத் தொழிலை விட முடிவுசெய்வது. இரண்டாவது லச்சத்தின் துயரமான மரணம். மூன்றாவது நிகழ்வு ஆனந்தம் வீட்டை விட்டுச் செல்வது. இந்த நிகழ்வுகளுக்குப்பிறகு கோட்டயம் விட்டு தளியல் என்ற ஊருக்கு குடிபெயர்வது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இந்தக் குடிபெயர்வுக்குப் பின் ‘தனிமைதான் பாலுவுக்குப் பெரிய பிரச்சினை என்று தோன்றுகிறது’ என்ற தெளிவும் ஒரு காரணமாக உள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கும் மனநிலை அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அடுக்களைக்குள் முதல் தடவையாக அவரைப் பார்ப்பது எல்லோருக்கும் வினோதமாக இருந்தது’ என்ற குறிப்பின் மூலம் வீடு என்ற சுவர்களால் ஆன விதிமுறைகளில் சிலவற்றை மாற்றிக்கொள்ள, இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள எஸ்.ஆர்.எஸ் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள முனைவது பதிவாகிறது. லச்சத்தின் மரணம் பாலுவிடம் மட்டுமின்றி ரமணி, லட்சுமி, எஸ்.ஆர்.எஸ் அனைவரிடமும் பலமாற்றங்களைக் கொண்டு வந்துவிடுகிறது. பாலுவைத் தனியே வெளியில் அனுப்ப முதல்முறையாக எஸ்.ஆர்.எஸ் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்.

ரமணி வளர்ந்த பெண்ணைப்போல சமையல் செய்யப் பழகிக்கொள்கிறாள். பாலு தன் தந்தையிடம் அச்சம் இன்றி பேசத் தொடங்கிவிடுகிறான். லச்சத்தின் தங்கை கோமு  வீட்டுவேலை செய்து தன் வாழ்க்கையை நடத்த பயிற்சியெடுத்துக் கொள்கிறாள். குழந்தைகள் பெண்களாகவும் ஆண்களாவும் மாறத் தொடங்கி விடுகிறார்கள்.

பாலுவுக்கு மனம் சார்ந்த சிக்கல் என்பதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் மனச்சிக்கலை ஏற்றி உருவாக்கிக் காட்டிய தோற்றப்பிழை என்பது மெல்லத் தெளிவாகத் தொடங்குகிறது. எல்லா குழந்தைகளுமே இப்படி மிகையாக இருப்பவர்கள்தான் என்ற உண்மை இந்நாவலின் போக்கில் தெளிவுபடுத்தப்படுவதை நாம் குறிப்பாக பதிவு செய்யவேண்டும். சமூக ஒழுங்கு, இயல்பு நிலைகள் என்பவை வளர்ந்தவர்களின் விதிகளால் ஒருவகையில் நகர-அரசு விதிகளின் அடிப்படையில் குழந்தைகள் பெண்கள் என்பவர்களின் இருப்பை, வேறுபடும் தன்மைகளை மறுத்தும் மறந்தும் உருவாக்கப்பட்டவை என்பது குறித்த பதிவை இந்நாவல் செய்திருக்கிறது.

குழந்தைகளின் தனிப்பட்ட கற்பனை உலகம், அவர்களின் பாவனைகளால் நிகழ்த்தப்படும் மெய்யெனத் தோன்றும் நாடகங்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் உள்ளாகக் குழந்தைகளுக்கென தேங்கியிருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் குறித்த சில நுட்பமான பதிவுகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. பாலு, ரமணி, லச்சம் இவர்கள் கட்டும் வீடு, அவர்கள் ஈடுபடும் நாடகத்தன்மை கொண்ட விளையாட்டு, ரமணியிடம் லச்சம் காட்டும் உறவுமுறை கடந்த மன நெருக்கம், (ரமணியும் வந்திருந்தால் எவ்வளவோ குதூகலமாக இருந்திருக்கும். இனி அவளைத் தன்னிடம் அதிகம் நெருங்க விடமாட்டார்கள். இன்று அவள் தன் கையைத் தொட்டதே பெரியம்மாவுக்கு எவ்வளவு உறுத்தலாக இருந்தது.) பாலுவுக்கு லச்சம் சொல்லும் மிகையான சாகசக் கதைகள், தன் சாதனைகள் பற்றிய கற்பனை கலந்த விவரிப்புகள், (இந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாத விஷயம் இல்லை. உலகத்தின் சகல ரகசியமும் இருளும் நிறைந்த குகைகளில் கண்களை மூடியபடி துழாவாமல் போகிறவன் அவன்.) லச்சம் தன் வயதுக்கு மீறி அறிந்து கொள்ளும் பெரியவர்களின் உலகம்  எனப் பல அடுக்குகளில் குழந்தைகள் என்ற சிக்கலான மனநிலை விளக்கப்படுகிறது. லச்சம் இறந்த பிறகு அவன் வீடு முழுக்க மறைவாகச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் பற்றி விவரிப்பு உள்மன அடுக்குகள் குறித்த குறியீடுகளாக விளக்கம் பெறக்கூடியது.

குழந்தைகள் என்ற நிலை ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய ஒரு ‘நெகிழ்வு கொண்ட குறியீட்டுநிலை’ என்பதை நாம் நினைவு கொண்டால் குழந்தைமைநிலை குறித்த புனைவுகள் என்பது ஒரு சமூகம் தன்னைப் பற்றித் தானே உருவாக்கிக்கொள்வது என்பது புரியவரும். சமூகத்திற்குள் இருக்கும் அத்தனை நன்மை தீமைகளும் இணக்கங்களும் வன்முறைகளும் குழந்தைகளிடம் குறியீட்டு நிலையில் படிந்தும் வெளிப்பட்டும் இயங்குவதை பெரும்பாலான இலக்கிய, ஊடகச் சொல்லாடல்கள் ஏற்பது இல்லை என்பதுடன் அவற்றை மறைக்கவும் செய்கின்றன.

சாதி, வர்க்கம், இனம், பால்நிலை ஆதிக்கம் என்பவற்றின் செயல்பாடுகளை, அவற்றின் வன்முறைகளை நுண் அளவிலும் குறியீட்டு வடிவிலும் தொடர்ந்து தேக்கி வைப்பதும் நிகழ்த்திக் காட்டுவதும் குழந்கைள் உலகமே. இதிலிருந்து விலகிச் செயல்படும் குழந்தைகள் மனத்திரிபு கொண்டவர்களாகவும் ஒவ்வாமைக்கு உட்பட்டவர் களாகவுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். இவர்களில் சிலரே கலகம் செய்கிறவர்களாக, மாற்றுக் கருத்தியல் கொண்டவார்களாக மாறக்கூடியவர்கள். பெரியவர்கள் என்ற நம் கற்பனையும் கூட பல நேரங்களில் நம்மிலிருந்து விலகி நின்று நம்மை அச்சுருத்தும் நிலையை அடையும். புராதனப் பொதுவுடைமை பற்றிய நவீன கனவுக்கும் குழந்தைமை நிலைக்கும் உள்ள உறவை இன்னும் விரிவாக நாம் விளங்கிக்கொள்ள கலகம் செய்யம் குழந்தைகளின் கதைகள் நமக்கு உதவக்கூடும்.

டாக்டர் கோவிந்த பிஷாரடியின் பிள்ளைகளான சுகன்யா, ஸ்ரீதரன் இருவரும் இப்படிப்பட்ட குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள் என்கிற குறிப்புடன் பாலு பற்றிய நிகழ்வுகள் தொடர்ந்து அடுக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீதரன் லண்டனுக்குச் சென்ற பின் அடையும் மாற்றங்களும் சுகன்யா வீட்டில் இருந்தபடியே அடையும் மாற்றங்களும் அடிப்படையான இந்திய மரபுகளுக்கு மாற்றானவை. “ஒரு தடிமன் புத்தகத்தின் மேலட்டையை சுகன்யாவிடம் காட்டி, ‘இது யாருடைய படம் என்பது தெரிகிறதா?’ என்று கேட்டார். ‘கார்ல் மார்க்ஸ்’ என்றாள். ‘இவன் ஒரு நாஸ்திகன். இவன் புத்தகம் நம் வீட்டிற்குள் வரலாமா?’ என்று கேட்டார்” அவர்களுடைய தந்தை, இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வு. இந்த அதிர்ச்சிதான் நவீன இந்தியக் குடும்பங்களுக்கான முதல் அதிர்ச்சி.

மரபான தந்தைகளுக்குத் தம் நவீன கால பிள்ளைகள் பற்றிய அச்சம் இந்தத் திருகலில்தான் தொடங்குகிறது. இந்த மாற்றம் பற்றிய அச்சம் நிறைந்த இந்திய உளவியலின் பல்வேறு வடிவ மாறுபாடுகள்தான் ஒழுக்கம், நீதி, தனிமனித மேன்மைகள் பற்றிய சொல்லாடல்களாக வெளிப்படு கின்றவை. மோதல்களுக்கும் முரண்பாடுகளுக்குமான அடிப்படைக் காரணங்கள் இந்த தளத்தில்தான் படிந்துள்ளன. “இவன் யூதன். நல்ல கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவன். தாயும் தகப்பனும் பக்திமான்கள். இவனும் நல்ல புத்திசாலி. நன்றாகப் படித்தான். ஆனால் அவனுடைய அப்பா செய்த பாவம். சிறு வயதிலேயே கெட்டுப்போய்விட்டான். மதம் கிடையாது. தெய்வம் கிடையாது. வசதியாக இருப்பவனெல்லாம் அயோக்கியன். தரித்திரம் பிடித்தவனெல்லாம் யோக்கியன் என்று பேச ஆரம்பித்துவிட்டான்.” என்று விளக்கம் அளிக்கும் பிஷாரடி தன் மகன் ஏற்றுக்கொண்ட கருத்தியல் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் இப்படியாக வெளியிடுகிறார். ‘பகுத்தறிவாளர் மன்றத்தில் உறுப்பினராகிறேன்’ என்று குறிப்பிட்ட தன் மகனைப்பற்றி ஒரு மரபான தந்தையாக அவர் சொல்வது ‘எப்போது ஈஸ்வரன் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டதோ அதன்பின் பாவம், புண்ணியம் ஒன்றும் கிடையாது.’ இந்த ஸ்ரீதரன் இப்போது ‘பழைய வாழ்க்கை முறையிலிருந்து எடுத்துக்கொள்ள ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு’ வந்திருப்பவன். அவனுக்கு இப்போது ‘மனதின் ஆரோக்கியமே அதன் சராசரித் தன்மையில்தான் இருக்கிறது.’ என்ற தெளிவும் வந்திருக்கிறது. ‘நம்ம மண்ணுலே ஒருத்தனுக்குக் கோபம் இல்லைன்னா அவன் மனுஷனே இல்லை.’ ‘உண்மையில் நியாயம் தர்மம் எல்லாம் ஆபத்தானதுதான்’ என புதிய மாற்றங்களுக்கான நியாயத்தைப் பேசும் செல்லப்பா மாற்றங்களின் மற்றொரு வடிவம்.

இந்த மாறுதல்களுக்கான உடைப்புகளின் பின்னணியில் பாலுவைப் பற்றிய அவன் தந்தையின் பயம் வேறு ஒரு தளத்தை அடைவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்.ஆர்.எஸ் மாற்றங்களை விரும்பக்கூடியவர்தான், ஆனால் அந்த மாற்றங்கள் தன் மேற்பார்வையில் நேர்க்கோட்டில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர். “அவனுடைய ஒரு சில விஷயங்கள் அவர்மனதில் அதீத முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அவனைப் பற்றிய அவர் எதிர்பார்ப்பு, குழந்தைகளில் பரிபூர்ண குழந்தையாக அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை, சதா அவனைக் கண்காணிக்கும்படி அவரை ஆக்கிவிட்டது. பாலுமீது அவர் குறை கண்டு கோபப்பட்டபோது மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்ன சொன்னார்கள்? சிறு குழந்தைதானே அவன் என்பதுதான் அது. அவன் சிறுகுழந்தை என்பது அவருக்குத் தெரியாதா? குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் என்றுதான் அவர் புரிந்து கொண்டிருந்தாரா? அவனை உருவாக்கப் பிரயோகித்து வந்த மேற்பார்வைகள் எல்லாமே அவனை உருக்குலைக்கத்தான் பயன்பட்டதா என்ற கேள்வி அவரை அரித்துக்கொண்டிருந்தது.” இந்தக் கேள்விக்குப் பின்  ‘மேற்பார்வை இல்லாத வெறும் பார்வை அது’ என அவர் நடத்தையில், பார்வையில் அடைந்த மாற்றமும் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது (ப.505).  இந்த மேற்பார்வை மற்றும் மேற்பார்வையற்ற தன்மை குறித்த தொடர் நிகழ்வுகள்,  இவற்றால் குழந்தைகள் மற்றும் பெண்களின் இருப்பிலும் இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்புகள், உருமாற்றங்கள் குறித்து இந்நாவல் அடுக்கடுக்காக விவரித்துச் செல்கிறது.

கதைசொல்லியின் கோட்பாட்டுப் பிரக்ஞை கொண்ட கதைமொழியின் காரணமாக ஒவ்வொரு பாத்திரமும் சிந்திப்பது பேசுவது அனைத்தும் விளக்கம் நிறைந்த வாக்குகளாக அமைகின்றன. குழந்தைகள் குறித்தான விளக்கங்களில் இந்த வாக்குகள் அதிகம் படிந்துள்ளன. “அவனைத் துன்புறுத்திக் கொண்டிருப்பது பயம். கற்பனையால் போஷிக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்த பயம். அவனுடைய மனிதர்கள் சாரந்த பயத்தின் மையத்தில் நீங்கள் இருக்கிறீரகள். உண்மையில் அவனுடைய பயமே நீங்கள்தான். நீங்கள் வேறு, பயம் வேறு என்று அவனுக்கு இல்லை. ஒன்றின் மறுபெயராக மற்றொன்று இருக்கிறது.”என்பன போன்று நீண்டு செல்லும் வாக்கியங்கள் ஒரு வகையில் நவீன சமூக-குடும்ப வெளியில் குழந்தைகள் குறித்த பொருட்படுத்தப்படாத தன்மைக்கும் உருவழித்த தன்மைக்கும் மாற்றான பேச்சுகளாக அமைகின்றவை. இது நவீன தனிமனித அடையாளங்களை ஒவ்வொரு தனி இருப்புக்கும் வழங்கும் மனிதஉரிமை சார்ந்த புரிதல்களால் இலக்கியத்திலும் பின் சமூகத்தளத்திலும் ஏற்பட்ட மாற்றத்தின் பதிவு.

குழந்தைகளும் கோட்பாட்டுத்தேர்வு உடையவர்கள் என்பதை “உன் இஷ்டப்படி நீ இரு என்று அப்பா என்னிடம் சொன்னால் சம்பத் மாமா மாதிரி ஜோரா இருப்பேன்.’ அவனைப் பொறுத்த வரையில் சம்பத் மாமா என்பது மிகச் சரியாகக் காரியங்கள் செய்யும் குணத்தின் குறியீடு.” (ப.448) என்ற வாக்கியங்கள் விளக்குகின்றன. அதே சமயம் குழந்தைகள் பற்றிய புரிதலில்தான் பெரியவர்கள் பற்றிய புரிதலும் தொடங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும்  இப்பகுதியை நினைவில் கொள்ள வேண்டும், “மனம் விட்டு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியும் என்று தயவு செய்து கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பாலு போல் நானும் ஒரு குழந்தை. ஒரு குழந்தையாகப் பாவித்து என்னிடம் சொல்லுங்கள்.” (ப.454) இந்த வகை சுட்டிக் காட்டுதலை தன் எடுத்துரைப்பின் உத்தியாக வெளிப் படையாக முன்வைக்கும் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் இதே வகையாகப் பெண்களைப் பற்றியும் பேசுகிறது, பெண்ணியத்தின் வரலாற்றுக் கேள்விகளை பண்பாட்டுத் தளத்தில் பொருத்தி பெண்களின் இருப்பு குறித்து பெண்களைக் கொண்டு பெண்வாக்குகளாகப் பேச வைக்கிறது.

இந்தியப் பெண்களின் இருப்பும் அடையாளமும் குடும்பம் சார்ந்தே அமைய வேண்டியவை, அவர்களுக்கென்று தனித்த கனவுகளும் நினைவுகளும் இருப்பதற்கான தேவை இல்லை என்ற பொதுநம்பிக்கையை நவீன இலக்கியச் சொல்லாடல்களும் ஒரு வகையில் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம். குடும்பம், சாதி, சமயமரபுகள் என்பவற்றிற்குள் பெண்களின் நிலை பற்றிய கொடிய உண்மைகளைச் சொல்லும் ‘சாய்வு நாற்காலி’ போன்ற நாவல்கள் வரலாற்றில் இந்தியப் பெண்களின் இடம் பற்றியும் அவர்களின் மீதான நுண்மையும் பருண்மையுமான வன்முறைகளை பேசுவதற்கான மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் பதிவுகள் பெண்ணிய வாசிப்பிற்கான தளங்களைக் கொண்ட பெண்கள் பற்றிய பண்பாட்டுப் பகுப்புகளைக் கொண்டவை. பெண்களைப் பற்றிய பொதுவான மௌனங்களும் இருள்படுத்தல்களும் நீக்கப்பட்ட சொல்லாடலின் மூலம் இந்நாவல் பெண்களின் கருத்தியல் இடையீடுகளையும் அவர்களின் கனவுகள் மற்றும் தகர்வுகளையும் பதிவுசெய்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கான வரைபடமாக அமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளன.

லட்சுமி என்ற பாத்திரம் இந்நாவலில் கூடுதலான பக்கங்களில், அதிக விவரிப்புகளை எடுத்துக்கொண்ட ஒன்று. பாலு என்ற சிறுவனையும் அவனுடைய குடும்பத்தையும் மையப்படுத்தி இந்நாவல் திட்டமிடப்பட்டிருப்பதால் அவனுடைய தாய் என்ற வகையில் லட்சுமி பற்றி அதிகம் பேசப்படுவது இயல்பான ஒன்று. இந்த பாத்திரத்தை முன்வைத்து பெண்கள் சார்ந்த சில உளவியல் சிதைவுகளும் நசிவுகளும் சொல்லப்படுவது அதிக கவனத்திற்கு உரியது. லட்சுமியின் நினைவோட்டங்களாகக் கதைசொல்லப்படுவதன் மூலம் கதையின் கோணம் பெண்வயப் பார்வையில் அமைவதற்கான தளத்தை பல இடங்கள் அடைகின்றன (தாகூரின் காரே பைரே நாவலில் பிமலாவின் தன் பேச்சாக அமையும் பகுதிகள்  நினைவுக்கு வரும்). லட்சுமி ஒரு மனைவி என்ற வகையில் தன் ஆழ்மனக் காதல், ஏக்கங்கள், ஆசைகள் என்பவற்றை மெய்ப்பட வாழுவதற்கான நிலையில் இல்லை. இந்தியக் குடும்ப உறவில் காதல் மற்றும் சம நிலையிலான உணர்வு சார்ந்த பிணைப்புகள் என்பது இல்லாததும் தேவைப்படாததும் ஆகும்.

பல சமயங்களில் இவை தடைசெய்யப்பட்டதும் ஆக உள்ளது. லட்சுமி தன் கணவன் எஸ்.ஆர்.எஸ் மீது கொண்டிருப்பது ஒரு வித அச்சம். எந்த நேரத்தில் என்ன கடுமையான சொல் வருமோ என்ற அச்சம். ஒப்பீட்டு அளவில் தன் கணவன் பிற ஆண்கள் அளவுக்கு வன்முறை மற்றும் கொடுமையைச் செய்வதில்லை என்ற ஒரு ஆறுதல் மட்டும் லட்சுமிக்கு தன் கணவன் மீது ஒரு மரியாதையை உருவாக்கித் தருகிறது. மற்றபடி தன் கணவனிடம் இருந்து நெருக்கமோ காதலோ அவளுக்குக் கிடைப்பதும் இல்லை, அவள் தருவதும் இல்லை. லட்சுமியின் நீடித்த நோய் அவளை உடல் அளவிலும் மன அளவிலும் ஒதுங்கி இருக்க வைக்கிறது. அவளுடைய தொடர்நோய் திருமணம் நடந்து முதல் உறவுக்கும் முன் தொடங்கி வாழ்க்கை முழுதும் அவளைத் தொடர்ந்து வருகிறது. டாக்டர் பிஷாரடி அவளுடைய நிரந்தர மருத்துவராக இருக்கிறார் (வெளியிலிருந்து ஒரு ஆணின் வருகை வெரும் உடல் நோய்க்கான சிகிச்சை மட்டும் அல்ல). அதன் மூலம் அவளுக்கு வெளி உலகுடன் ஒரு தொடர்பு கிடைக்கிறது.

ஆனந்தம் லட்சுமியைக் கவனித்துக் கொள்கிற ஒரு பெண், ஆனந்தத்தின் இளமையும் அவளுடைய ஆதரவற்ற நிலையும் லட்சுமியின் குடும்பத்திற்கு உழைப்பு என்ற வகையில் பயன்படும் அதேசமயம் ஒரு இருண்மையான பாலியல் படிமமாகவும் குறியீட்டுக் கருவியாகவும் பயன்படுகிறது. இதனை லட்சுமி மறைவாக அனுமதிக்கவும் செய்கிறாள். நேரடியான உடல் சார்ந்த பரிமாற்றங்கள் நிகழப்போவதில்லை என்னும் உறுதிப்பாடு இருப்பதால் தன் கண்காணிப்புக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய கணவனின் மனக்கிளர்ச்சியின் மறைவான தளத்தில் ஆனந்தத்தின் இருப்பை லட்சுமி அனுமதிக்கிறாள்.

லட்சுமியின் நோய், அவளுடைய தொடர்ச்சியான அந்நியப்பட்டநிலை இந்தியக் குடும்ப உறவுகள் மற்றும் ஆண்மையக் குடும்ப அமைப்பின் கொடுமையை விளக்குவதற்கான உருவகமாக தொடர்ந்து செயல்படுகிறது. ‘கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மனதை சதா அரித்துக்கொண்டிருக்கும்’ கேள்வி இது.  இதுதான் இந்தியப் பெண்கள் அனைவரையும்போல லட்சுமிக்கும்.  ‘ஒரு மனித ஜீவனுடன் கூடிவாழ்ந்ததால் மனம் தொகுத்து வைத்திருக்கும் ஊமைக்காயங்கள். வார்த்தைகள் மூலம் அந்தக் காயத்தை உணர வைக்க முடியுமா?’ இந்தியப் பெண்களின் கூடிவாழும் மரபான ஆச்சாரம் நிரம்பிய குடும்ப வாழ்க்கை பயமும் உடல் மற்றும் மனம் சார்ந்த ஊமைக் காயங்கள் மட்டுமே கொண்டது என்பது பற்றியும் அந்தக் கொடும்நிலை வார்த்தைகளில் வசப்படக் கூடியதில்லை என்பதையும் லட்சுமியின் மன ஓட்டங்கள் பூடகமாகப் பதிவு செய்து கொண்டே உள்ளன. ஆனால் அந்த அமைப்புக்கு வெளியே செல்வது குறித்த அச்சமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தமும், வள்ளியும் தமக்கான மனம் விரும்பும், சமமான ஆண்உறவுகளைத் தேர்ந்தெடுக்க முயலும்போது லட்சமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது உள்ளார்ந்த அச்சத்தால் நிகழ்கிற வெறுப்பு. லட்சுமி அச்சம் என்பதை தன் உள்ளார்ந்த அடையாளமாகக் கொண்ட பெண்மையின் குறியீடு. அவளுக்குத் தன் பிறந்த வீட்டை நினைத்தால் வருத்தமும் துயரமும் ஏற்படுகிறது. தன் புகுந்த வீட்டை நினைத்தால் பயமும் படபடப்பும் ஏற்படுகிறது. “கிரகப்பிரவேசம் முடிந்ததும் பர்ணசாலையிலிருந்து இராவணன் கோட்டைக்குப் போன மாதிரி இருந்தது. எல்லாம் சட்டம், திட்டம், யோசனை, ஒழுங்கு, குத்தல், குதர்க்கம் என்றிருக்கும். வீடு பின் கட்டு முன் கட்டு என்று இரண்டாகப் பிரிந்து கிடந்தது. இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத காட்டாறு ஓடுவதுபோல் இருக்கும். முன் கட்டுக்குப் பெண்வாடையே ஆகாது.” ஆண்களைப் பற்றிய பயம், ஆண்களின் சட்டமும் கொடும் நியதிகளும் உருவாக்கிப் பரப்பும் கண்காணிப்பும் தண்டனையும் தொடர் வன்முறைகளும் அமைதியாக நியாயப்படுத்தப்பட்ட ஒரு உலகம்.

இந்த ஆண்கள் “பகவான் மாதிரி. எல்லா இடத்திலும் இருப்பார்கள். எந்த இடத்திலும் இருக்கவும் மாட்டார்கள்” (ப.339). ஆண்கள் என்பவர்கள் கணவன், தந்தை, மகன், உடன் பிறந்தவர்கள் எப்படியிருந்தாலும் “அவர்களுடைய நினைப்புக்கும் தன் நினைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது சில நாட்களிலேயே தெரிந்து விட்டது” லட்சுமிக்கு. அதனால் “எதைச் செய்தாலும் அது சரியாக இருக்குமா என்று சந்தேகம் வந்தவண்ணம் இருக்கும்” ஒருத்தியாக லட்சுமி மாறிவிடுகிறாள். ஒரு தாயும்கூட தன் மகனிடம் பயம் கொண்ட உறவையே பேண வேண்டும் என்றால் இந்திய மரபில் அன்பின் இடம் எது என்ற கேள்வி தொடர்ச்சியாக இந்நாவலில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.

இதன் அடுத்த நகர்வுதான் சுகன்யா, வள்ளி போன்ற பெண்களின்  உருவாக்கம். “ஆண்கள் சார்ந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று ஒருநாள் சுகன்யா சொன்னாள். சுகன்யா இதைச் சொன்னதும் வள்ளியின் மனம் அதிர்ந்தது.” வள்ளிக்கு “அந்த மன உலகத்திற்கான ஏக்கம் தன்னிடம் இருப்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது?” என்பது குறித்து வியப்பு ஏற்படுகிறது. இந்த ஏக்கம் பற்றிய கதையாக இந்த நாவலில் இடம் பெறும் பல பெண்களின் கதை அமைந்துள்ளது. ஆண்களைப் பற்றிய மரபான ஏற்புகள் உடைபட்ட  அவர்களின் “மனசு வகைப்படுத்தி வச்சிருக்கு இந்த ஆம்பிளைகளை. ஆண்கள் முரடர்கள், சாதுவான முரடர்கள், தந்திரமான முரடர்கள், சுயநலம் கொண்ட முரடர்கள், முரடர்களான முரடர்கள், சிரித்துக்கொண்டே இருக்கும் முரடர்கள்” (466). இந்த அறிவுத்தெளிவு அவர்களுக்குள் நிம்மதியின்மையை அமைதியின்மையை உருவாக்குகிறது. “பிறருடைய எண்ணங்கள்தான் என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. என் உடல், மனம், உணர்ச்சி, உயிர் எதுவுமே என்னிடம் இல்லை. எதுவும் எனக்குச் சொந்தமும் இல்லை. எனக்குச் சொந்தமில்லாமல் பிறருக்குச் சொந்தமாக மட்டும்தான் நான் இருக்கிறேன்” (542) என்ற தன்னுணர்வு புதிய பெண் அடையாள உளவியலை உருவாக்க அடிப்படையாக அமைகிறது. இந்தப் பெண்அடையாளம் குறித்த சில வகைமைகளை நாம் இந்த நாவலிலிருந்து அடையாளம் காண முடிகிறது.

கோமதி லட்சுமியின் மூத்த தங்கை, ஒவ்வொரு நாளும் தேதியிட்டு அரைப்பக்கம் ஒரு பக்கம் என்று அன்று முடிகிற அளவுக்கு எழுதி பத்துப்பதினைந்து பக்கங்கள் சேரந்ததும் தன் அக்காவுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் மறுநாளே எழுதத் தொடங்கி விடும் ஒரு பெண். எழுத்து அவளுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு கருவி. “எனக்குத் தெரியாததெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்மென்று ரொம்ப ஆசை” என்னும் அவளுடைய விருப்பம் குடும்பத்தின் சுவர்களுக்குள் நசுங்கி விடுகிறது. கல்வியும் அறிவும் அவளுடைய விடுதலையின் தொடக்கமாக இருந்தும் அவை அவளுக்குத் தடைசெய்யப்படுகின்றன. சேவை செய்வதன் மூலம் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்ற அவளுடைய மனத்தேர்வும் நடைமுறைப்படுத்த முடியாததாக இருக்கிறது. அவளுடைய மாறுதலுற்ற மனம், நடைமுறைகள் ‘கிறித்தவ மதத்தில் மாறிவிடுவாளோ என்ற’ சந்தேகத்தை அவளுடைய குடும்பத்தினருக்கு உருவாக்குகிறது.

அவர்களுடைய குடும்பத்தினரோ அவளுடைய சினேகிதிகளை சாதியையும் மதத்தையும் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பவர்கள். அதே சமயம் நோய் என்றால் அவர்களிடம் ‘ஓடி ஓடிப்போய் இலவச வைத்தியம் பெற்றுக்கொள்ள எந்த கூச்சமும் படாதவர்கள்.’ தன்னை மாறுதல் கொண்ட ஒரு வாழ்வின் பாத்திரமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியிலும் ஏக்கத்திலும் இருப்பவள் கோமதி, ஆனால் திருமணம் என்பதைத் தவிர அவளுக்கு விதிக்கப்பட்டது வேறு எதுவும் இல்லை. கல்யாணமே வேண்டாம் என்று அவள் சொல்லும்போது அவளுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்வதாகச் சொல்லும் அவளுடைய அக்கா லட்சுமிக்கும் கூட கோபம்தான் உண்டாகிறது. இத்தனைக்கும் மணவாழ்வு என்பதே ஒரு நோயாக மாறி அவளை வாட்டிக்கொண்டிருக்கிறது, இருந்தும் மரபை உடைத்துச் செல்வதை நினைக்கும் பொழுதே பயமும் கோபமும்தான் அவளைப் போன்றவர்களுக்கு உருவாகிறது.

கோமதி போன்றவர்களுக்கு விடுதலைக்கான ஆசை வாழ்வில் நீடித்த தண்டனையாக மாறிவிடும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. “என் கழுத்தில் தாலி கட்டுகிறவன் முட்டாளாகவோ முரடனாகவோ இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்பது அவளுடைய தீர்மானங்களில் ஒன்று, இந்த வகையான தேர்வுகளில் அவளுடைய போராட்டத்தின் தொடக்கம் படிந்திருக்கிறது, அது ஒரு நீடித்த போராட்டம், கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் பெண்களின் உயிரைப் பணயமாகக் கேட்கும் போராட்டம்.

வள்ளி, லட்சுமின் இரண்டாவது தங்கை இவளுடைய நடத்தைகள் மனவோட்டங்கள் அனைத்துமே அவளது சாதி மற்றும் குடும்பத்தின் மரபுக்கும் சட்டவிதிகளுக்கும் முரணாக அமைந்திருக்கின்றன. ஆனால் குடும்பம் மற்றம் சாதியின் கண்காணிப்புக்கும் தண்டனைக்கும் வெளியே சென்றுவிடும் ஆற்றலோ வலிமையோ அற்ற முதல்தலைமுறை பெண் அவள். ஸ்ரீதரனைத் தன் கருத்தியல் சார்ந்த தோழனாக, சமஉரிமையுடன் கூடிய வாழ்க்கைத் துணைவனாக தேர்ந்தெடுத்துக்கொண்ட போதும் சாதி என்பது அவளுடைய வாழ்க்கைத் தேர்வை உடைத்து, மூடுண்ட குடும்பம் என்ற ஒடுக்குதல் அமைப்புக்குள் அவளை முடக்கிப் போடுகிறது. பாசம் என்பதன் பெயரால் அவளுடைய தமக்கை லட்சுமி இந்த ஒடுக்குதலின் முதல் பொறுப்பாளியாக மாறிவிடுகிறாள்.

ஆனந்தம் ‘விதவை’ என்ற அடையாளத்துடன் பிறருக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் பெண். இவள் செல்லப்பாவை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து, அவனுடைய அரசியல் செயல்பாட்டுக்காக அவனை நேசித்து அவனுடன் சேர்ந்து வாழவும் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறாள். இந்த சுதந்திரத்தை அவள் செயல்படுத்த முடிவதற்கு தோதாக அமைவது அவளுக்கு என்று குடும்பமோ உறவுகளோ இல்லாமல் இருப்பதுதான். அவளை மிகவும் நேசிப்பதாகச் சொல்லும் லட்சுமிக்கோ ஆனந்தத்தை ஆசிர்வதிக்க மனம் இல்லை. எஸ்.ஆர்.எஸ்  வள்ளி, ஆனந்தம் இருவருடைய சுதந்திரமான தேர்வுகளையும் மனதால் ஏற்றுக் கொள்கிற மாறுதலை மதிக்கும் அறிவு கொண்ட ஒரு ஆண். ஆனால் அதற்காக செயலில் எதையும் வெளிப்படுத்தும் ஆற்றலோ துணிவோ அற்ற முடங்கிப்போன ஒரு ஆண். அதற்கு மேல் போவதற்கான தயாரிப்பை அவருடைய கருத்தியல் தேர்வு அவருக்கு வழங்கவில்லை.

இந்தியப் பெண்களின் அடைபட்ட உளவியல் குறித்த மிக முக்கியமான ஒரு பதிவை சாவித்திரி என்ற பாத்திரத்தின் மூலம் இந்த நாவல் கையாளுகிறது. ‘டாக்டர் பிஷாரடியின் மனைவி சாவித்திரி நீண்ட காலமாக மன நோயாளியாக இருந்தாள்’ என்று தொடங்கும் விவரிப்பு ‘அவள் விரும்பினாலும் அவளால் பேச முடியாத’ நிலையைச் சொல்லித் தொடர்கிறது. நான்காவது தடவை கர்ப்பம் தரித்திருந்த காலத்தில் அவள் சொல்கிறாள் “குழந்தை இறந்து பிறக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இல்லையென்றால் நான் அதைக் கொல்ல வேண்டியிருக்கும்.” அதேபோல் சாவித்திரிக்கு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்தும் போயிற்று. பிஷாரடிக்கு அப்போது ஏற்பட்ட நிம்மதியைக் கூச்சத்துடன் பிறருக்குத் தெரியாமல் அவர் மறைத்துக் கொள்கிறார். சாவித்திரியின் கையில் குழந்தை பட்டபாட்டை நினைத்தாலே அவருக்கு வயிற்றைக் கலக்குகிறது. அசோகமித்திரனின் மானசரோவர் கதையில் வரும் மனச்சிதைவுகொண்ட மனைவி தன் கணவன் மீது கொண்ட வெறுப்பினால் தன் நோய்ப்பட்ட மகனைக் கொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்வது கூடுதலாகச் சில அர்த்தங்களைத் தரும்.

ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் என்ற மூன்று பிள்ளைகளும் மூன்றுவித மனிதர்களாக வளர்வதில் சாவித்திரியின் மனச்சிதைவுற்ற நிலையும் ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு தாயாகத் தன் பணிகளைச் செய்ய மறுக்கும் அதே சாவித்திரிதான் தன் வளர்ந்த மகன் ஸ்ரீதரன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்கிறபோது அதனை மகிழ்ச்சியுடன் ஊக்குவிக்கிறாள். குடும்பம், ஆண் பெண் உறவுகள் பற்றிய கடுமையான இந்தியச் சிக்கல்கள் பற்றிப் பேச இந்நாவலின் பெண்பாத்திரங்கள் திட்டமிடப்பட்ட, மாதிரி வடிவங்களாக அமைக்கப்பட்டிருப்பதற்கும் இந்நாவல் ஒரு கோட்பாட்டு விளக்கக் கதையாடலாக இருப்பதற்கும் உறவு உள்ளது. இதனை வாசிக்க கோட்பாடு சார்ந்த வாசிப்பு  தேவையாகிறது.

மாறுதல்கால நவீனநிலை பற்றிய கதைசொல்லலாக இந்நாவல் அமைந்திருக்கிறது என்பதைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலின் ஆண் பாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் சொல்லாடல்களை நாம் வாசிக்கும்போது இவை கருத்தியல் மற்றும் கோட்பாட்டு மோதல்கள், முரண்கள், இசைவுகள் மற்றும் இணக்கங்கள் பற்றியவை என்பது புரியவரும். இந்திய சமய மரபு, தேசிய அரசியல், காந்திய நம்பிக்கைகள், (செல்லப்பா), பகுத்தறிவு மரபு, நவீனத்துவ மதிப்பீடுகள்(ஸ்ரீதரன்), மார்க்சியக் கோட்பாடு (கருநாகப்பள்ளி ஜோசப்), ஜனநாயக நம்பிக்கைகள் (எஸ்.ஆர்.எஸ், சம்பத்) எனப் பல கருத்துக்களின் உரையாடலை கலப்பதன் மூலம் இந்நாவல் மாறுதல்காலச் சொல்லாடலுக்கான தளத்தினை அமைக்கிறது. அதே சமயம் நுண் அரசியல், பருண்மை அரசியல் இரண்டுக்கும் இடையிலான நேர் முரண் உறவை செயல்பாடு என்பதற்கு முனையாத பாத்திரங்களின் வழியாகக் காட்சிப் படுத்துகிறது. ஆண் என்னும் அடையாள வன்முறையை மறுத்து மாறுதல் அடையத் தயங்கும் இந்திய நவீன ஆண்நிலை பற்றிய கேள்விகளையும் இந்நாவல் தடம் காட்டிச் செல்கிறது. இந்நாவலின் குழந்தைகள் நாளை என்னவாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவாகாத புதிருடன் இந்நாவல் முடிவதன் மூலம் எதிர்கால அரசியல் பற்றிய முடிச்சுகளாக இந்நாலின் வாக்கியங்கள் இறுக்கமடைந்து நிற்கின்றன. தீண்டாமை என்ற மிக அடிப்படையான இந்தியச் சமூகஅரசியலின் இடம்பற்றிய இந்நாவலின் அமைதி தமிழ் கதைகளின் வாசிப்புகள் அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நிற்கிறது.

இந்நாவலை நவீன மாறுதல்கள் குறித்த கல்விப்புல கதையெனச் சொல்வதற்கான மேலும் ஒரு சான்றுடன் இக்கட்டுரையை முடிக்கலாம். “எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்தத் திறனும் இல்லை. என்னைப் பொம்மையாக வைத்து எல்லாரும் விளையாடுகிறார்கள் என்றாள் வள்ளி. தன் முகத்தை ஸ்ரீதரன் நேராகப் பார்க்க முடியாதபடி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.

நீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை. வானத்தைத் தொடும் ஜூவாலையை உன் மனதிற்குள்ளிருந்து எழுப்ப முடியும். கனலைக் கரியாக்கும் சிறையிலிருந்து வெளியே வா. நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும். பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம், அவமானம். அதைவிட மரணம் எவ்வளவோ மேல்’ என்றான் ஸ்ரீதரன்.” (ப.581)

குறிப்பு நூல்கள்:
சுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள். நாகர்கோயில்: காலச்சுவடு,1998.
சிதைவுகளின் ஒழுங்கைமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள். பெங்களூர்:காவ்யா,2000.