காந்தி: துவக்கமுறு தோல்வியின் பாதை- ஜனகப்பிரியா

காந்தி: துவக்கமுறு தோல்வியின் பாதை

ஜனகப்பிரியா

பிரேமின்காந்தியைக் கடந்த காந்தியம் ஒரு பின்நவீனத்துவ வாசிப்புநூல் பற்றிய கருத்துரை

(காந்தியைக்  கடந்த  காந்தியம்  ஒரு  பின்நவீனத்துவ  வாசிப்பு    பற்றிய    நூலாய்வரங்கம் 7-12-2013 சனிக்கிழமை மதுரையில் நடந்தது. ஒருநாள் நிகழ்ச்சியாக அமைந்திருந்த இக்கருத்தரங்கை மாற்றுப்பண்பாட்டுச் சிந்தனைக் களம் ஏற்பாடு செய்திருந்த்து. நண்பர் பெரியசாமிராஜா நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புகளைச் செய்திருந்தார்.  அந்நிகழ்ச்சியல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

1.

        இருபதாம் நூற்றாண்டின் ஆதிக்கப்பரப்பிற்கும் நவீன அதிகார அடர்த்திக்குமான நிகழ் மோதல்கள் அழித்தொழிப்புகள் போன்றவையே பெயர் மாறும் அரசியலாக அரங்கேறின. சமூகத்தின் மிகக்குறுகிய பகுதியினருக்கு ஏற்றம்தரும் திட்டங்கள் போலிஸ், இராணுவம் எல்லோருக்குமானது என்ற பாவனையோடு கூடிய நீதியமைப்புகள் போன்றவற்றோடு ஜனநாயகம், சமத்துவம், விடுதலை போன்ற கருத்தியல்களும் வளர்கின்றன. நவீன மனிதச் சிந்தனை அமைப்பும் அறிவியல் தொழில்நுட்பப் பெருக்கமும் கொள்கிற உறவின் விளைவாக உற்பத்திக் கருவிகளை மேலும் தம்வயப்படுத்திக்கொள்கிற மூலதனத்திரட்சியும் மூளை மற்றும் உடல்சார்ந்த ஆற்றல்கள் தாமே முன்வந்து மூலதனம் வரைகிற சட்டகங்களிலுள்ள முன்நிபந்தனையற்றுத் தம்மைப் பொருத்திக்கொள்வதும் தொடர்கிற காலவெளிப்பரவல்.

        உற்பத்திப்பெருக்கத்தின் இணைவிளைவுகளான சந்தைப்படுத்துதலும் அதுசார்ந்த விளம்பர உத்திகளும் உருவாக்கிய நுகர்வுப்பண்பாட்டு வெளியை முற்றிலுமாகத் தம்வயப்படுத்துதலுக்கான முயற்சிகளில் உற்பத்தி ஆற்றல்களுக்கு ஏற்படும் இயலாமையினால் விளைகிற சோர்வினையும் மனஉளைச்சலையும் மார்க்ஸ் அந்நியமாதல் என்றழைத்தார். இந்த அந்நியத்தன்மையானது மனித விடுதலைக் கருத்தியலின் செயலாக்கத்திற்குத் தடையாகவும் சிலபோது உந்துவிசையாகவும் அமைகின்றது.

        மார்க்சிய கருத்தியலின் வெற்றிகளால் சிலநாடுகளிலமைந்த மாற்றமைப்புகளினுள் உருவான கோட்டுபாட்டு சிக்கல், கட்சி அமைப்புகளினுள் அதிகாரப்போட்டி, ஐயப்பாடுகள் குறைய இயலா உடமைஉணர்வுகள், அகவெளிப் பண்படாமை போன்ற காரணங்களால் சரிவுற்ற நிகழ்வுகள்  உறுதிப்படுத்துவது:      “வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது”  என்கிற மார்க்ஸின் வாசகம் இன்னும் அர்த்தச்செறிவுள்ளதே, ஆயினும் ஐரோப்பியச் சூழலில் தோன்றிச் சரிந்த வெற்றிகளின் நிழல்கூட அந்நிய சமூகவெளியில் படரவில்லை என்பது துயரமே.

        சூழல் உருவாக்கத்தில் அக, புறக் காரணிகளின் கூட்டுவினைபற்றிக் கோட்பாடாய் அறிந்தவற்றை நடைமுறைகளில் செயல்படுத்தும் கவனம் கொள்ளாமையினால் காந்தியச் சிந்தனைகள் பற்றிய புரிதலுக்கான அவசியம் உணரப்பட்டிருக்கவில்லை. ‘இந்திய விடுதலை’ என்பதை மிகையூட்டப்பட்ட புனைவாக அடுத்த தலைமுறைக்கு அடையாளப்படுத்தியதல் இடதுசாரிகளின் பங்களிப்பும் உண்டு. ‘இன்னொரு தளத்தில் காந்தியைத் திருவுருவாக்கி அவரது சமூக அரசியல் பொருளதார வாழ்நெறிகளைப் பக்திச் சொல்லாடலாக மாற்றியது பொதுவெளியில் நிகழ்ந்த இன்னொரு இழப்பு’  என்பார் பிரேம் .

        விடுதலை பெற்ற இந்தியா எத்தகைய சமூக அரசியல் பொருளியல் நெறிமுறைகளில் இயங்கவேண்டும் என்பதற்கான காந்தியின் விருப்பங்கள் அவரை மிகவும் மதித்தவர்கள் எனக் கருதப்பட்டவர்களால் எவ்வளவு கடுத்தமாக நிராகரிக்கப்பட்டன என்பதை ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்துள்ளனர். காந்தியைப் பழமைவாதி, நவீன உலகம் பற்றிய புரிதலற்றவர் என விமர்சித்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் வளர்ந்த இந்தியச் சமூகம் அமிழ்ந்துள்ள இழிவின் அடர்த்தி அறிவார்ந்த வெளியில் காந்தியைத் தேடத்தூண்டுகிறது.

        கடந்தகால ஆட்சிமுறைப் பிறழ்வுகளினால் வளர்ச்சி கண்டுள்ள எந்திரமயமான பெருந்தொழில்கள், அவற்றால் உருவான பெருநகர்ப்புறங்கள், பல ஆயிரம் மைல்கள் கடந்து செல்லும் போக்குவரத்து சாதனங்கள், மனித வாழ்விடங்களை அழிக்கும் ஏவுகணைகள், அணுகுண்டுகள், போர்விமானங்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், காடுகள் அழிப்பு, நதிகளைச் சீர்குலைத்தல், காற்றில் கடலில் நஞ்சு கலத்தல், பழங்குடியினரின் வாழ்விடங்களைச் சுரங்கங்களாக மாற்றுதல்,  மக்களை அகதிகளாக்குதல்,  எதிர்த்தவர்களை அழித்தொழித்தல், வேளாண்மையை உலக முதலாளிகளிடம் கையளித்தல், உருவும் பெயரும் மாற்றப்பட்ட நவீனக்கொள்ளை, விபச்சாரம் போன்றவற்றுக்கு அரச முத்திரையிட்டுப் பாதுகாத்தல் இவற்றினூடாக காந்தியின் நினைவிடங்களுக்கு வண்ணம் பூசுதல், மலர்வளையம் வைத்தல் போன்றவையும் தேசிய அலுவல் நடைமுறைகளாகத் தொடர்கின்றன.

        இந்தக் கவலை தரும் நிகழ் உண்மைகளினூடாக வளர்ந்துவரும் வாழ்வியல் அச்சுறுத்தலை இப்போது ஆளுகிறவர்களும் அதிகாரத்தைக் கையகப்படுத்த முயல்கிற வேறு குழுக்களும் மாற்றத்தை விழைகிற இடதுசாரிக்கட்சிகளும் மக்களின் உணர்தலுக்குள்ளாக்க முயலவில்லை என்ற அவதானிப்பால் இதுவரையிலான விடுதலைக் கருத்தியல்களை மீள் ஆய்வுக்குள்ளாக்கி சரியான மாற்றினை அறியும் வரலாற்றுத்தேவை உருவாகியுள்ளது.

               ‘காந்தி எனும் ஆளுமை நவீன தனிமனித நிலை சார்ந்தும் கூட்டுத் தன்னடையாளம் என விரிந்தும் கடந்த இரு நூற்றாண்டுகளில் எழுந்த மிகச்சிக்கலான கேள்விகளை அறியவும் அடையாளம் காணவும் விவரிக்கவும் களமளிக்கக்கூடியது’ இந்தக் களம்தான் இந்த நூலுக்கான மொழியமைப்பாக விரிகின்றது. இன்றைய வரலாற்றுச் சூழலில் தன்னுடைய, தான்வாழும் சமூகத்தினுடைய போதாமைகளையும் ஆற்றலின் எல்லைகளையும் விவரிக்க முனையும் நவீன அறிவையே தன்னுடைய விடுதலைக்கான அறத்திற்கு ஏற்ற உண்மையான அறிவுமுறை என அறியத் தொடங்கும்பொழுது, காந்தியமே தன் அருகாமைக்கு ஏற்ற துணை எனச் சிந்திக்க உதவுகிறது இந்த நூல்.

        ஏற்ற இறக்கங்களை இயல்பென ஏற்று இந்தியச் சமூகம் அதற்கேற்ற இயல்புணர்ச்சிகளையும் ஒத்திசைவுடன் பேணியதை உள்ளிருந்தெழும் இயல்முரண்களால் உருக்கொண்ட சில தனிமனித விலகல் உளவியலைச் சற்றே புனிதப்படுத்தியும் தனிமைப்படுத்தியும் வைத்திருக்கும் ஏற்பாடுகளுடன் சிலநூறு ஆண்டுகள் எதிர் அதிர்வுகள் ஏதுமின்றி இச்சமூகம் இயக்கம் கொண்டிருந்ததைப் பற்றிய பிரேமின் விவரிப்புகள் நிறைநதியின் நீரோட்டம் போன்ற அமைதி கொண்டவை. தன்னுடைய ‘தானை’ ஆளுகின்ற பண்பு காந்திக்கு ‘மதமரபு வழங்கிய கொடை என்கிற கடந்தகாலப் பொது மனஇயல்பிலிருந்து விலக்கி அது அவர் மேற்கொண்ட சோதனைகளின் வழியாகப் பெற்ற நிகர்பயன் என்கிற உண்மையை ‘நிகழ்த்து நிலை ஆன்மீகம்’ என்ற தொடரால் சுட்டி, ஆன்மீகம் என்பது வெறும் கருத்துநிலைப்படிவாக உலவுவதன்று, அது ஒரு செயல்முறை விளைவு என்ற புரிதலுக்கு உதவுகிறார் பிரேம்.

               நான் என் கண்முன் உள்ள எல்லாவற்றையும் எனதாகக் கொள்ளும் வேட்கையோடு வாழவேண்டுமா? இருத்தலின் பொருட்டான இன்றியமையாமைகளை மட்டும் பெற்று வாழ்வதில் நிறைவு கொள்கிறவனாக வாழவேண்டுமா? என்ற கேள்விகளை முன்வைத்து சிந்திக்க இந்நூல் உதவுகிறது. உலகளாவிய அடக்குதலும் ஆக்குதலுமான முரண்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதையும் பெருமூலதனத்திரட்சியுருக்கள் போர்த்தொழில் நுட்பத்தைத் தம்வயப்படுத்தி சந்தைப்படுத்துதலின் வழியாக நாடுகள் தமக்கான அசலான பாதுகாப்பு என்பதை ஆயுதங்களின் சேகரத்தில் உணர்கிற உலக உளவியலை வளர்த்துள்ள சூழலில் பதற்றங்கள் தணிந்த ஆசுவாசத்தை எதிர்நோக்கியுள்ள சமூகங்களுக்கு காந்தியம் நம்பிக்கையாக மாறமுடியம் என்பதை நூல் எளிமையாக விளக்குகின்றது.

        புரட்சிகளும் பெரும் சீர்த்திருத்தங்களும் தம் இருத்தலை ‘அரசவன்முறை’ என்பதன் நிழலிலேயே தொடர முயன்றன என்பதை வரலாறு காண வாய்த்திருக்கிறது. அரசு மக்களைத் தமதாகவும், மக்கள் அரசைத் தங்களுடையதாகவும், உணரமுடியாமற் செய்தது எது? என்ற கேள்வி காந்தியின் அகவெளியில் தொடர்ந்து எழுப்பப்பட்டதும், சமூகத்திற்காக உற்பத்தி செய்த மக்கள், தம் தேவைகளின் நியாயத்தைக்கூட உரக்கச் சொல்லமுடியாமற் போவது ஏன்? என்று அவர் சிந்தித்ததும், முன் அறியப்பட்ட கோட்பாடு எதனையும் சார்ந்ததன்று. மக்களின் மீதான உண்மையான அன்பும் எந்திரமயமான பெருவளர்ச்சி என்பது விளைவிக்கப் போகும் தீமைகளும்… உண்மையான “ஆட்சியறம்” என்பதை ஆளுகிறவர்கள் கண்டுணரவேண்டும் என்று விருப்பமாகத் தெளிந்தும், குழம்பியும், கண்டடைந்தும், தவறவிட்டும்… தொடர்ந்த காந்தியின் தேடுதல்தான் மாற்று விடுதலைக் கருத்தியலை அடையாளம் காண்பதற்கான வெளிச்சமாக எஞ்சியிருக்கிறது.

    காந்தி தான்கண்டறிந்த புதிய வாழ்வறத்தை நடைமுறைப்படுத்துதலில் உள்ள தடைகளை அவ்வப்போது கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அனுபவரீதியாக உணர்ந்து செயல்படுகிறார். தன்னுடைய முன்னகர்தலுக்கு உதவக்கூடியவையாக அவர் கருதிய நிலைகளை அடைவதற்கு புலனடக்கம், குறிப்பாக பாலுறவு தவிர்த்தல், அதற்கேற்ப உடலின் உறுப்புகளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஏற்புடைய உணவுப்பழக்கம், பிரார்த்தனை, கடினஉழைப்பு  எனப்பல உபாயங்களைத் தன்வயப்படுத்தவும், அவற்றின் பயன்களை வெளிப்படையாக பொதுவெளியில் வைத்து விளக்கவுமான பண்பட்ட மனவெளியை தன்னுருவாக்கமாகவும் கூட்டுத்தன்னுருவாக்கத்திற்கானதாகவும் மாற்றினார். சில சமயங்களில் சில தோல்விகளையும் கண்டடைந்தார். எல்லாவற்றிற்கும் மேலாகத் தம் வாழ்வைத் திறந்த புத்தகமாக மாற்றியிருந்தார். “பிரம்மச்சர்யம் எனக்கு எளிதே. என் மனைவி காம இச்சையைத் தூண்டுவதில்லை. எனக்கு மனஉறுதி இல்லாததுதான் அல்லது என் காமஇச்சைதான் இதற்குத் தடையாக இருந்தது. காமஇச்சைக்கு நான் அடிமையாக இருக்கும் வரையில் மனைவியிடம் நான் உண்மையான அன்போடு இருக்கிறேன் என்பதற்கு மதிப்பே இல்லை” (சத்திய சோதனை : 247)

        காந்தி எல்லாவற்றையும் பொதுவெளியின் தேவையை முன்வைத்தே சிந்திக்கிறவராக இருக்கிறார் என்பதை நூல் பலஇடங்களில் எடுத்துரைக்கிறது. தென்ஆப்பிக்காவில் அவர் இருந்த காலத்தில் போர்யுத்தம், ‘சூலு கலகம்’ போன்றவற்றில் அரசியல்ரீதியான நியாயங்கள் எவை என்பதை உணராவிட்டாலும் போர், கலகம் என்பன ஏற்படுத்திய அழிவுகளும் அப்பாவி மக்களின் உடல்களுக்கு நேர்ந்த கொடுமைகளும்  அவருடைய மனித தார்மீகத்தை விழித்தெழ வைத்தன. மருத்துவச் சேவைகளில் ஈடுபட அமைப்புகளை உருவாக்கினார். பொதுக்  கடமையாற்ற பாலுறவு ஒரு பெரும் தடையாக அவருக்குத் தோன்றியது. பொதுச்சேவைக்கு குந்தகம் நேராதிருக்க உடற்சேர்க்கை இன்பம் துறத்தலை செயலுத்திகளில் ஒன்றாக மாற்றுகின்றார். அவர் மேற்கொண்ட அந்த  நடைமுறைகளின்போது அவர் தம்முடைய முப்பது வயதைக் கடந்துகொண்டிருந்தார் என்பது குறிக்கத்தக்கது. கூட்டுவாழ்க்கை முறையாக தென்ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சாதி மனநிலை கடந்த இயக்கத்திற்காக டால்ஸ்டாய் பண்ணை, ஃபீனிக்ஸ் குடியிருப்பு போன்ற முயற்சிகள் பிற்காலத்தில் இந்தியாவில் மேற்கொண்ட அரசியல் பணிகளுக்கு அனுபவங்களாகின.

        ‘1906 இல் சூலு இன மக்கள் மீது பிரிட்டிஷ் படையினர் நிகழ்த்திய வன்முறையை உடனிருந்து பார்க்க நேர்ந்தபிறகு சத்தியாக்கிரகம் பிரம்மச்சர்யம் ஆகிய அடிப்படையான இரு செயல்முறைக் கோட்பாடுகளைக் கட்டியமைக்கிறார்’ (ப : 68). பலசமயங்களில் தன் அறியாமையும் போதாமைகளையும் வெளிப்படுத்தி அவற்றைக் கடந்து செல்லும் வழிகள் எதுவெனத் தனியாகவும் கூட்டாகவும் விவாதித்துள்ளதையும் காணலாம்.

        ‘நேட்டாலில் சூலு மக்கள் கலகம் செய்கிறார்கள் என்ற செய்தி செய்தித்தாள்களில் வந்தது. சூலு மக்கள்மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவர்கள் இந்தியர்களுக்கு எந்தத் தீமையும் செய்யவில்லை. அங்கு நடப்பது கலகம்தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுமைக்கும் நன்மை புரியவே அமைந்திருக்கிறது என்று அப்போது நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். உண்மையான எனது ‘அரசு பக்தி’ பேரரசுக்குக் கெடுதல் வரவேண்டும் என மனதால் நினைப்பதைக்கூட தடுத்தது’. ( ப:66 )

             பிரேமின் மொழியில், “இனியான வாழ்வுரிமை அரசியல்” என்பது இயற்கையை அதன் முழுமையுடன் வழிபட்டு தன்னைத் தகவமைத்துக் கொள்வதைப் பயில்வதாக அமைவது. இந்த வாழ்வுரிமை அரசியலின் தொடக்கத்தை காந்தி தனது விடுதலை அரசியலின் ஒருபகுதியாகவும் ஆன்மீக வாழ்முறையின் அடிப்படையாகவும் வைத்து விளக்கியபோது அது காலப்பொருத்தமற்ற அறநெறிச்சொல்லாடலாக பெருங்கட்டமைப்பு அரசியல் தளத்தில் புறக்கணிக்கப்பட்டது” என்று காந்தியத்தை காங்கிரஸ், பாரதீய ஜனதா இன்ன பிற உடமைப்பெருக்க அணுகுமுறை கொண்ட கட்சிகள் மட்டுமின்றி கம்யூனிஸ்ட்டு அமைப்புகளும் நிராகரிப்பது சுட்டப்படுகிறது.

        ஏன் இந்தப் புறக்கணிப்பு? காங்கிரஸில் முன்னிலை வகித்த தலைவர்களின் உளவியலை இருவகையாகப் பிரிக்கலாம்.     ஐரோப்பிய கல்விமுறையை (மெக்காலே பிரபு ஆசைப்பட்டபடி உடலால் இந்தியராகவும் மூளையால் ஆங்கிலேயராகவும் இயங்கக்கூடியது) அதன்வழி உருவான வாழ்க்கை மதிப்பீடுகளை ஏற்று அவற்றின் வடிகாலாக உருவான அரசியலை ஏற்றுக்கொண்டது. மற்றொன்று இந்திய பழம்புராண மரபுகளின் வழி உருவான பகுத்தறிவுக்கொவ்வாத மதிப்பீடுகளை உயர்த்திப்பிடிக்கிற சமூகப் பொருளியல் சார்ந்த நிகழ்காலச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இயலாத இந்துத்துவ அடிப்படைவாத உளவியல். முதல் வகையிலான உளவியல்கூறுகளடங்கிய ஆளுமைகளின் விருப்பமே நிகழ்காலத்திய அனைத்து விபரீதங்களுக்கும் காந்தியின் காலத்திலேயே காந்தியம் இந்திய ஆட்சி, அரசியல் வெளியில் நிராகரிக்கப்பட்டதற்கும் காரணமாகின்றது.

2.

        இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமானது அறிவியல் தொழில்நுட்பம் சமூகமாற்றம் போன்றவற்றால் புதியஉலகம் ஒன்றில் மனிதன் உந்தித் தள்ளப்பட்டான். அதுவரை எது அறிவு என்று கருதப்பட்டதோ அது அப்புதிய உலகில் அறிவல்ல என்றும், வெறும் பொதுப்புத்திதான் எனவும் கருதப்பட்டது. தொழில்நுட்பங்கள் மனிதனை ஒதுக்கிவிட்டு செயல்படுவதை மனிதன் அறிகிறான். இந்நிலை ஒரு பெரும் மனிதநஷ்டத்தை உருவாக்குவதால் இது ஒழுக்கவியல், கலாச்சாரவியல், உளவியல் சம்மந்தப்பட்ட நெருக்கடி என்று தெரிகிறது. மனிதனின் அழுகுரலோ பிரலாபங்களோ கேட்கப்படாத தூரத்தில் உலகம் இயங்க ஆரம்பித்துவிடுகிறது’. (தமிழவன்,அமைப்பிலும் அதன் பிறகும். பக்:7) அமைப்பியல்வாதம் மேற்கண்டவாறு கணிக்கிற சூழலில்தான் இநதியச் சூழலில் ஒருபுதிய வாழ்வறம் குறித்த சிந்தனை காந்திக்கு ஏற்படுகின்றது. அந்த ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடாக ‘இந்திய சுயராஜ்யம்’ என்ற நூல் (1909) வருகிறது.

   ஐரோப்பிய சிந்தனை மரபை உயர்த்திப்பிடிக்கிற போக்கு அறவியலின் தொடக்கப்புலமாகக் கிரேக்கத்தைக்காண விழைகின்றது. கிரேக்க அறவியலின் காலமாகக் கருதப்படுகிற காலத்திற்கு (கி.மு.500 – கி.பி.500) சற்றே முன்னும் பின்னுமாக இந்தியச்சூழலில் சார்வாகம், மீமாம்சம், வைசேஷிகம், பௌத்தம், சமணம் ஆகியவை விதைக்க முயன்ற அறவியல் சிந்தனைகள் முக்கியமானவை. பின்னர் வந்த அறஇலக்கியங்களின் (சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற) கருத்துப் புலப்படுத்துதல்களையும் சொல்லவேண்டும். இவற்றின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறவியல் சிந்தனையாகக் காந்தியின் இந்த (இந்தியசுயராஜ்யம்) நூலைக் கொள்ளலாம். தான் வாழும் காலத்திய தேசிய அரசுகளின் செயல்பாடுகளால் அன்பும் கருணையும் உலர்நத மனவெளிகளில் சகமனிதர்கள் அருகாமையில் அவற்றை உணரத்தக்க அமைதியை வளர்க்கும் காரணிகள் எவை என்பதைக் கண்டுணர்ந்து அதற்கான நடைமுறைகளைத் தம் வாழ்வின் வழியாக வெளிப்படுத்தினார். “இதற்காகப் பிறழ்வும், குற்றமும்,  போரும்,  அழிவுகளும் அற்ற சமூக வெளியை உருவாக்க உதவுகின்ற தன்னுருவாக்க, கூட்டுத்தன்னுருவாக்க முறையை ஆன்மீக அரசியலின் வழியே கண்டடைய முயன்றார்” என்று விளங்குவார் பிரேம்(பக்:32). மேலும் ‘இந்தத் தன்னுருவாக்க,  கூட்டுத்தன்னுருவாக்க அரசியலைப் புரிந்து கொள்வது நம் காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்முறைகளையும் கொடூரங்களையும் புரிந்து கொண்டு அவற்றுக்கான மாற்றுகளைப் புரிந்து கொள்வதுமாகும்’ என்றும் பிரேம் கருதுகிறார்.

        ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ என்கிற நிலவியல் வரைபடத்துள்ளமைந்த பிரேதசங்களிலும் காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பு மக்களின் சிலதேவைகளை ஆங்கிலேய நிர்வாகத்திடம் மனுச்செய்து பெறும் முயற்சிகளைதொடங்கியிருந்த காலத்தில் காந்தி தென்ஆப்பிரிக்காவிலிருந்து திரும்புகின்றார். உலகில் வேறெங்கும் ‘இல்லாச் சிறப்பாக’ மக்கள் ‘சாதி’ என்ற அடையாளத்தால் பிளவுபட்டு கீழ்,மேல் என்ற கற்பிதங்களினுள் அமிழ்ந்து சமூகக் கொடுமைகளுக்குள்ளாகியிருக்கின்ற நிகழ் உண்மையானது காந்தி வரும்வரை காங்கிரஸ் அமைப்பிற்குள் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

        ‘மனிதன் மரபொழுக்க நிலையைவிட்டு மனச்சான்றுக்கு முதன்மை இடம் தந்ததால்தான் அறவியல் சிந்தனைகள் தோன்றின’ என்ற சிந்தனைக்கேற்ப சாதி,  இனம்,  மதம்,  மொழி ஆகியவற்றால் வேறுபட்ட தனிமனிதர்களைக் கூட்டு வாழ்க்கைமுறை ஒன்றுக்குள் கொண்டுவரும் முயற்சியை ஒழுக்கவியல் போதனைகளால் மட்டும் சாத்தியப்படுத்திவிடமுடியாது அதற்கான ஒரு உளவியல் நடத்தையியல் கட்டமைப்பு தேவை. இதனை உருவாக்க காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் அவர் எதிர் கொண்ட சிக்கல்கள் பல, எடுத்துக்காட்டாக ஒன்று:

      “தீண்டாமைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தூதாபாய், அவரது மனைவி தநிபென், மகள் இலட்சுமி ஆகிய மூவரும் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்ததால், ஆசிரமம் நடத்தப் பணஉதவி செய்தவர்கள் உதவியை நிறுத்திக்கொண்டனர். தண்ணீர் எடுக்கவிடாமல் தடுக்கின்றனர்.” சமூகத்தடை ஏற்படும் நிலை உருவாகிறது. அப்படி ஏற்பட்டால், தீண்டாமைக்காட்பட்டோர் வசிக்கும் சேரிக்கே சென்று வசிக்கலாம் என்கிறார். கஸ்தூரிபாய் ‘தீண்டாமை’ என்பது இந்துமதம் அனுமதிக்கிற விதி என்று நம்புகிறார். அதனால், எதிர்ப்பு மனநிலையில் உள்ளார். காந்தி, “கஸ்தூரிபாய் விரும்பினால் தனிக்குடிசையில் வசிக்கலாம், இலட்சுமியின் குடும்பத்தை வெளியெற்ற முடியாது” என்கிறார். (பக். 86)

          காந்தி, மரபுகளை முற்றாக மறுப்பவரல்லர். முற்றாக ஏற்பவருமல்லர், புதிய மரபொன்றைத் தோற்றுவிக்க முயன்றவர். இந்த ஏற்பு – மறுப்பு – புத்துருவாக்கம் என்ற படிநிலை “முதலில் புறவிதிகளுக்கு வெளிப்படையாகக் கட்டுப்பட்டு நடப்பதால் வரும் நன்மையும் பின்னர் மனச்சான்று நிலைக்கு உள்ளூரப் பணிந்து நடப்பதால் ஏற்படும் நன்மையும் முறையே, கருத்தும் முரண்பட்ட கருத்துமாகத் தோன்றித் தம்முள் கலந்து தொகுப்பேற்பட்டு, புதிய சமுதாய அறவொழுக்கமாக உருவெடுக்கும்.” என்ற ஹெகலியச் சாய்வுள்ளதும் கூட.

        “பிரபுத்வ மதவியல் சார்ந்த கருத்துக்களிலிருந்து  மேலைத்தத்துவம் தன்னை விடுவித்துக்கொண்டு மேற்செல்ல வால்டேர், ரூஸோ, எர்டர்லெஸ்ஸிங், ஷில்லர், கதே போன்றவர்களின் அறிவொளிக்கால சிந்தனைகள் உதவின என்ற பார்வை ஒன்று உண்டு. ஆயினும், அவை தனிமனித சமூக ஆன்மீக நெருக்கடிகளுக்கும் மூலதனத்திரட்சியின் விளைவான பெருந்தீமைகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து எதிர்காலச் சமூகங்களை நல்வழிப்படுத்தும் ஆற்றல்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இன்று எழுந்துள்ள சிக்கல்களின் தீர்வுக்கான ஈர்ப்பு விசையாக மாறும் தகுதி காந்தியத்தில் உள்ளதா என வாசகரை நிதானம் கொள்ள வைக்கிறதாக நூல் தன் மொழியமைப்பால் நெருக்கம் கொள்கிறது. காந்தியத்தின் தன்மை ஒரு கவிதையாக நூலில்:

 ‘காந்தியத்திலும்

 எளிமை என்பதுதான் சிக்கலானது

கடினமானது

எளிமைகள் சிக்கலடைவதும்

இயல்புகள் அச்சமூட்டுவதும்

மனித அறிவுருவாக்கத்தின்

முரண்கள்’      (பக்: 133)

      காந்திக்கு உதவும் என நான் கருதுகிற வேதாகம வசனமான ‘வெளியிலிருந்து வருகின்ற எதுவும் மனிதனுள்ளே மாசுபடுத்துகிறதில்லை’ என்பது ‘துய்மைப்படுத்துகிறதுமில்லை’ என்கிற பின்னொட்டையும் உள்ளுறையாகக் கொண்டிருக்கிறது. அது ஒரு கருத்தியல் என்பது ஒருபுறமிருக்க, வரலாற்று நதியில் இன்றும் நீர்மேல் மிதவையாகத் தன் இருப்பை உணர்த்துகின்றது, காந்தியத்தின் வழியாகவும்.

3.

      ‘ஒரு முழுமையின் உள்ளுறுப்புகள் பல தளங்களில் தம்முன் உறவுகொண்டிருக்கும் பல்வேறு உறுப்புகளின் தொடர்புகளை அறிதலில்தான் அமைப்புபற்றிய அறிவு அடங்குகிறது’. -லூயி அல்தூஸர். (தமிழவனின் அமைப்பியலும் அதன்பிறகும்,பக்:10)

            “விடுதலை பெற்ற பாதை’ என்ற கற்பிதத்தோடு தீமைகளின் பாதையில் வெகுதுரம் வந்துவிட்ட பிறகு உண்மை என்கிற வெளிச்சத்தைச் சந்திக்க சற்றே பின்னோக்கிச் செல்ல நேர்ந்தால் தவறில்லை” என்ற புரிதலொன்று உண்டு. ‘வரலாற்றறைப் பின்னுக்கு நகர்த்துதல் இயலாது என்ற சொல்லாடலின் இணைவிளைவாக முன்னேற்றம், பின்னடைவு ஆகிய சொற்களின் உண்மைப்பொருளை வரையறுக்க இயலாது நிற்கிறது நிகழ்காலம்.

        நிகழ்கால மதீப்பீடுகளால் சிதைந்துகொண்டிருக்கிற வாழ்க்கையைப் போலவே மதீப்பீடுகளின் அழுத்தமிகையினால் மொழியும் தன்உள்ளார்ந்த பொருள் பிறழ்வுறுத்தலைச் சகித்துக்கொண்டு பயன்பாட்டுக்கானதாகச் சுருங்கிக்கொள்கிறது. மொழி அதிகாரத்திற்கான ஆற்றலுமாகும் என்பதைப் புரிந்து கொள்வதில் சூழலில் நேர்ந்த பிழையையும் முக்கியப்படுத்திக்கொள்ளவேண்டும். இப்பிறழ்வுறுதலால் நேர்ந்தவை மிகுதி.

கவனிக்க ஒன்றிரண்டு:

‘இந்திய வனங்களில்தான் இந்தியாவின் ஆன்மா உறைந்துள்ளது’  என்ற சூழலியல் சார்ந்த வாசகம். ‘நவீனத்தொழில் வளர்ச்சிக்கான சுரங்கத்திட்டப்பணிகளில் தக்கஇடங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடிப் பயன்பாட்டுக்கு மாற்றுவதும் தாமதமின்றி நடைபெறவேண்டும்’ என்ற திட்டக் கமிஷன் அறிக்கை வாசகத்தோடு எத்தகைய இசைவை அல்லது முரணைக் கொண்டுள்ளது?

‘இதுவரையிலான பன்னிரெண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் பொதுச்சுகாதாரம், மருத்துவம், மனிதவள ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது’ என்ற ஜனாதிபதியின் உரையில் கேட்கப்பட்டதும்.

“புற்றுநோயாளிகளின் விகிதம் அதிகரித்து வருவது கவலை தரத்தக்க விஷயம். இரத்தப் புற்றுநோய் கண்ட ஒருவர் தனக்குத் தேவைப்படும் மருந்திற்கான விலையாக மாதம் ஒன்றுக்கு 2500 டாலர் செலவு செய்யவேண்டும் என்கிறது நோவார்ட்ஸ் என்கிற ஸ்விட்ச்சர்லாந்து நிறுவனம்” போன்ற செய்திகள் வாசிக்கப்படுவதும்.

‘நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் மார்பகப் புற்றுநோய் உள்ளதா எனச் சோதனை செய்து கொள்ளவேண்டும்’ என்ற மத்திய அரசின் விளம்பரத்தைக் காண நேர்வதும்.

      இதற்குப்பிறகு தேசியம், சுதந்திரம், மக்கள் நலன், வளர்ச்சி, சோஷலிசம், சமத்துவம் போன்ற சொற்களின் நிகழ் பொருட்பெறுமதிகளை எண்ணிப்பார்க்க ‘காந்தியம், பழமை, நவீனமறுப்பு’ போன்ற சொல்லாடல்கள் தெளிவுபெறும்.

        தன் மக்களின் மீதான கொடுமைகள் பொருளாதரச் சுரண்டலோடு தனிமைப்படுத்துதல், ஒதுக்கிவைத்தல், இழிவுபடுத்துதல் போன்ற அம்சங்களை உட்கூறாகக்கொண்ட சாதியச் சமூகத்தின் 24 கோடி இந்துக்களுக்கு 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏவலர்களாக ஆக்கப்பட்டிருப்பதை மாற்றி அவர்களுக்கு முழுவிடுதலை பெற்றுத்தருவதற்கு அம்பேத்கருக்கு காந்தி என்ற அரசியல் குறியீடு தடையாக இருக்கிறது. அம்பேத்கரைப் பொறுத்தவரை காந்தி எப்பொழுதும் ஒரு வரலாற்றுத் தீமையாகவே தோற்றம் தந்தார்.

    தலித்மக்கள் சிறுபான்மையோருக்கான சட்டப்பாதுகாப்பைப் பெறுவதை தனித்தொகுதிகள் பெற்று தம் நலனை மேம்படுத்திக்கொள்வதைத் தடுக்கும் முறையில் காந்தி எரவாடா சிறையில் மேற்கொண்ட உண்ணாவிரதம் காந்தியின் பொதுநலம் சார்ந்த அரசியலில் ஒரு வரலாற்றைப்பிழை. ஆனாலும் தலித் அரசியலை நவீன இந்திய அரசியலில் மிக அடிப்படையான பகுதியாக ஒரு அரசியல் கருவியாக நிலைப்படுத்துவதில் காந்தி, காந்தியம் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியிருக்கிறது. இந்த வகையான உரையாடலில் காந்தியை அம்பேத்கர் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்லாமல் அம்பேத்கரை காந்தி புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்வதுதான் காந்தியம். ஏனெனில்  காந்தியம் புரிதலை விரிவாக்குவதன் மூலம் மாற்றங்களுக்குக் களம் அமைக்கும் ஒரு உளவியல் அமைப்பு.” என்ற பிரேமின் எடுத்துரைப்பில் வரலாற்றுப் பொறுப்புணர்ச்சியும் இரு விடுதலைக் கருத்தியல்களைச் சமன் செய்யும் நேர்த்தியும் வெளிப்படுகின்றது.

        மூலதனப் பெருந்திரட்சியின் பெருந்தொழில் மற்றும் போர்த்தொழில் முன்னெடுப்புகள் அம்பேத்கரின் அவதானிப்பிற்குள் வந்திருந்தனவா? நகர்ப்புறங்களை நோக்கி தலித் மக்கள் இடம்பெயர்வதில் அவர் கொண்டிருந்த விருப்பம் சுரண்டல் சாதியக்கொடுமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளோடு தொடர்புள்ளதா?

  ‘உலகமயமாக்கல்’ என்ற விஷவிருட்சத்தின் நிழலில் வளர்ந்து இந்திய பெருவுடமையாளர்க்கும் ஆளுவோர்க்கும் பலன்தரும் பன்முக உற்பத்திக்கான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஆற்றல்கள் ஆகியவற்றில் காந்தியத்தின் செயலூக்கத்தினால் நிகழவிருக்கும் தலைகீழ் மாற்றங்களை நிலைப்படுத்தும் வலிமை உருவாக்கத்தை இங்குள்ள சட்டங்களும் நீதியமைப்புகளும் அனுமதிக்குமா?

   காந்தியம் வரைகிற உற்பத்திமுறைகள் அதாவது எந்திரங்கள் விலக்கிய கைத்தொழில்கள், பாரம்பரிய (முற்றிலும் இரசாயனம் தவிர்த்த) வேளாண்மைக்குப் பின்புலமாக அமையும் பாரம்பரிய விதைகள் மீட்பு, கால்நடைகள் பெருக்கம், காடுகளை வளர்த்தல், நீராதாரங்கள் பராமரிப்பில் மக்கள் பங்கெடுப்பு, உணவுமுறைகளில் மாற்றம், தாய்மொழிக்கல்வி போன்றவற்றின் மீட்டுருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் நிலை போன்றவையும் நிராகரிக்கவியலாக் காரணிகளாக அமைந்துள்ளன. மேலும் மக்களின் மனவெளியில் தங்கியுள்ள உயர்கல்வி, நவீனத்தொழில்நுட்பப் பயிற்சியின் வழி மிகுபொருளீட்டல், புதிய வாழ்க்கை முறை பற்றிய மயக்கங்களும் கற்பிதங்களும் கூடுதல் சிக்கல்கள்.

        அம்பேத்கரின் சமூகவிடுதலைக் கருத்தியலை ஏற்றுச் செயல்படும் இயக்கங்கள் காந்தியம் குறித்து உருவாக்கியுள்ள புரிதல்கள் எத்தகையவை?

        நவீன  அறிவியல் தொழில்நுட்பம் பெருந்தொழில் வளர்ச்சி ஆகியவை குறித்த இடதுசாரி அமைப்புகளின் புரிதல்கள் போன்ற கேள்விகள் நூலின் வரையறை கடந்தவையாக இருப்பினும் தவிர்க்க இயலவில்லை.

ஒர் இனிய கனவைக் குறித்த என் விடிகாலை உணர்வாக இதனை நான் உங்களோடும் நூலாசிரியரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1.         காந்தியின் சத்திய சோதனை
2.         அமைப்பியலும் அதன்பிறகும் – தமிழவன்
3.         இந்திய தத்துவம் ஒர்அறிமுகம் – தேவிபிரசாத் சட்டோபாத்யாய
4.         அறவியல் ஒர் அறிமுகம் – வில்லியம்லில்லி – தமிழாக்கம் கோ.மோ.காந்தி
5.         மார்க்ஸ் – அம்பேத்கர் – புதிய பரப்புகளுக்கான தேடுகை- பேரா.ந.முத்துமோகன்