உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை-பிரேம்

உரையாடல் : 11 சூழலியல் அரசியல் அனைத்திற்கும் அடிப்படை

கேள்வி:

சுற்றுச்சூழல் சீர்கேடு அனைத்துப் பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியச் சூழலில் கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு முதன்மையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையிலும் உள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது குறித்து உங்கள் மாற்று அரசியல் பார்வை என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்:

பிரேம்

சுற்றுச்சூழல் அரசியலின் தளத்தில் இன்றைய அனைத்து மனிதத் துன்பியல்களையும் உள்ளூடி ஆய்வு செய்யலாம். ஏனெனில் மனிதமையத் தன்மையை மறுத்து உயிர் மண்டலம் அனைத்துக்குமான வாழ்வுரிமை பற்றிய புரிதல் கொண்ட கருத்தியல் இது. இயற்கையைப் பாதுகாத்து மனிதர்கள் நல்வாழ்வு பெறலாம் என்ற தன்னலம் சார்ந்த புரிதல், இயற்கையின் பகுதியாக இருந்து இயற்கையிடம் பெற்று வாழலாம் என்ற ஒப்படைப்பு,  உலக உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புவிமண்டலத்தில் பங்கு உண்டு  அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், அதன் சமநிலையைக் குலைக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை என்னும் அறம் சார்ந்த நிலைப்பாடு எனப் பலகட்டங்களாக சூழலரசியல் உள்ளது. இவற்றில் ஏதாவதொன்றின் வழி நாம்  மாற்று வாழ்வியல் நோக்கிச் செல்ல இயலும்.

இந்தியா போன்ற நாடுகளில் சூழலரசியல், பசுமை அரசியல், புவிசார் அரசியல் என்ற தளத்தில் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்த முடியும். முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இனமேலாதிக்க எதிர்ப்பு, அறிவதிகார மறுப்பு, பெண்ணியச் சமத்துவம், பெருந்தேசிய மறுப்பு, அடையாள அரசியல் எனப் பல அரசியல் உணர்வு நிலைகளுக்கு சூழலரசியல் களமாக அமையக்கூடியது.

நவீனத்துவம், பெருந்தொழில் ஆதிக்கம், உலகமய வல்லதிகாரம் என்ற பல தளங்களில் நாம் இயற்கையின் மீது போர் தொடுத்திருக்கிறோம். வளர்ச்சி, அறிவியல், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், முன்னேற்றம், இன்புறும் வாழ்வு என்ற பெயர்களில் உயிர் மண்டலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலைச் (Eco-terrorism) செய்து கொண்டிருக்கிறோம். சூழலரசியலை பெண்ணியம் மிகச்சரியாக விளக்குகிறது, எல்லையற்ற அதிகாரத்திற்கான முனைப்புதான் வளர்ச்சிப் பொருளாதாரத்தின் தொடக்கம். எளிய மனிதர்களுக்கும், எளிய உயிர்களுக்கும் வாழ இடமில்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு, நாம் வேறு வகையான மாற்று  அரசியல் பற்றிப் பேசுவதில் பயனில்லை.

சூழலைப் பேணுதல், இயற்கையைக் காத்தல் என்னும் பார்வைகளும் கோட்பாடுகளும் அவை  சார்ந்த அரசியலும் மனித வரலாற்றில் முற்றிலும் புதிதானவை. இதற்கு முன் அப்படியொரு மாற்றுப் பார்வை இருக்க வாய்ப்போ தேவையோ இல்லை, ஏனெனில் இயற்கையின் மீது மனிதர் நிகழ்த்திய எந்த ஒரு இடையூறும் நீடித்த பெரும் விளைவுகளை உருவாக்க இயலாதவைகளாக இருந்தன. இயற்கைச் சூழல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அது இன்றுள்ள பேரழிவு நிலையை அடையவில்லை. இயற்கையின் பகுதியாக இருந்தபடி மனிதர்கள் தங்களுக்கானதைப் பெற்றுக் கொண்டதும் பெற முயற்சி செய்ததும் இன்றுள்ளது போன்ற கொடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை அல்ல. இருபதாம்  நூற்றாண்டின் இயந்திர மயமாக்கம், நகர் மயமாக்கம் என்ற புதிய உற்பத்தி-நுகர்வு முறைகளின் விளைவு மனிதர்கள் எண்ணிப்பார்க்க இயலாத நெடிய துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. நவீன அறிவியல் போர்த்தொழில் நுட்பங்களை  மையமாக வைத்துச் செயல்படுவது. உயர் தொழில் நுட்பங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் சிலரைத் தவிர மற்றவர்களின் வாழ்வுரிமையை அழிக்கக்கூடியது. இன்றைய உலக மயமான உற்பத்தி முறை மனித இனங்களின்  மண், நீர், காடு, காற்று அனைத்தின் மீதும் நிகழ்த்தப்படும் போராகவே உள்ளது, இது  இனப்படுகொலையின் இன்னொரு வடிவம்தான். இந்த உண்மை வெகுமக்கள் உணர்விலும் அறிவிலும் முழுமையாக பதிவாகாத நிலைதான் சூழலரசியலை விளிம்பு நிலை அரசியலாக வைத்துள்ளது. மற்ற அரசியல், சமூக நிகழ்வுகளைப் போல இன்றி புவிச்சூழல் மற்றும் இயற்கைச் சமநிலையில் நிகழும் கேடுகளில் பார்வையில் படக்கூடியவற்றைவிட  பார்வையில் படாதவை மிக மிக அதிகம். மக்களிடம் இருந்து மறைக்கப் பட்ட உண்மைகள்தான் தொழில்நுட்ப ஏகாதிபத்தியத்தின் முதல் கட்ட வலிமை. சூழலரசியல்   தற்போது இந்த மறைக்கப்ட்ட உண்மைகளை அனைவருக்கும் கொண்டு  செல்லும் நிலையில்தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திரிக்கப்பட்ட தகவல்கள், திட்ட மிட்டுப் பரப்பப்படும் பொய்கள், நுண் அளவில் தொடங்கி உலக அளவில் நிகழ்த்தப்படும் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முன் புலப்படுத்தி இனியான மக்கள் அறிவியலை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்க நமக்கு உள்ள ஒரே வழி சூழலரசியல் மட்டும்தான்.

மரத்தையும், நீர்நிலையையும், காட்டையும் கடலையும் தெய்வம் என வணங்கி, மண்ணையும் காற்றையும் தெய்வம் எனப் போற்றி வாழ்வதுதான்  தொல்சமயப் புனித உணர்வு என்றால் நான்  பகுத்தறிவை உதறி விட்டு பக்திப் பண் பாடித் திரியும் அடியவனாக மகிழ்வோடு வாழ்ந்து முடிப்பேன். ஆனால் அது அப்படி எளிதாக அடையக் கூடிய நிலையல்ல… அதுதான் இன்றைய மக்கள் அரசியலின் தொடக்கம்,  அதுதான் வாழ்வுரிமைப்  போராட்டம், அதுதான் இன்றைய அழகியல்.