மொழியா, நிலமா தமிழ் என்பது என்ன? –சேரலாதன்

 

(நண்பர் சேரலாதன் எழுதி மின்படியாக வாசிக்கக்கிடைத்த இந்தக் கட்டுரை எனக்குள் பல நினைவுகளை. கேள்விகளை, நெட்டுயிர்ப்புகளை உருவாக்கியது. இக்கட்டுரையை விரிவாக தரவுகளுடனும், ஆவணங்களுடனும் எழுதும்படிக் கேட்டிருக்கிறேன். விவாதத்திற்கு என இதனைக் குறிப்பிடமாட்டேன். விவாதித்து என்ன ஆகிவிடப்போகிறது? விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் என் கருத்து.)

தமிழ்நாடு . 60.  நவம்பர்.1. 

போராட்டங்கள், துரோகங்கள், தொடர்கதை?

 – சேரலாதன்.

இந்தியாவை ஆங்கிலேயர் அடிமைப் படுத்தினர் என உண்மைக்கு முரணான தகவலை வரலாறாகச் சொல்கிறோம். தேசம், தேசியம் என்பவை முதலாளித்துவத்தினுடைய தொடர்ச்சியாக ஐரோப்பாவில் உருவான நவீன சிந்தனையே ஆகும்.

அவ்வகையிலான எவ்வித அமைப்பும் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இங்கு இல்லை. ஆங்கிலக் காலனியாதிக்கம் தனது சந்தையினை ஒழுங்குபடுத்தும் பொருட்டு ஏற்படுத்திய அமைப்பே ‘காலனிய பிரிட்டிஷ் இந்தியா’.  அவர்கள் சந்தை மற்றும் அரசு நிர்வாக வடிவில், புவியியல் ரீதியாக உருவாக்கிய ‘இந்தியா’ என்னும் பொருளாதாரக் கட்டுமான அமைப்பிற்கு உதவும் பொருட்டு நம்மவர்கள் இந்தியத்தன்மை கொண்ட வரலாறு, சமூகவியல், பண்பாடு, மதம் போன்ற கருத்தியல் கட்டுமானங்களை உருவாக்கத் தொடங்கினர்.  இந்தப்  பணியில் சென்னை மாகாண பிராமணர்களின் பங்கு பிரதான மானதாகும். ஆரிய, பாரதக் கட்டமைப்புகளின் பின்/தொடர் விளைவாகத் திராவிடக் கருத்தியலும் உருவானது.

அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரா(தெலுங்கானா நீங்கலாக), கர்நாடகா, கேரளாவின் பெரும்பகுதிகளும் தமிழ்நிலமும் இருந்தன.  இந்திய,திராவிட அரசியல் வீச்சுடன் இருந்தபோது இவ்விரண்டிற்கும்  மாறாக, மொழிவழி மாநிலம் என்கிற புதிய கருத்தாக்கம் தோன்றலானது. ஒரிய, குஜராத்தி, தெலுங்கு மொழிகளை முன்வைத்து  மொழிவழி அதிகாரக் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சென்னை மாகாணத்தில் ஒருபக்கம் இந்திய காங்கிரசிலும் மறுபுறம் ஆந்திர, கேரள, கர்நாடக எனப் பிரதேச காங்கிரசுகளிலும் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் இயங்கியதைப் போலத் தமிழர்கள் தனித்து இயங்கவில்லை. அவ்வாறே, திராவிட அரசியலைத்  தமிழ்நிலத்தில் பேசிய அளவு தெலுங்குத்  தலைவர்கள் ஆந்திராவில் பேசவில்லை. டி.எம்.நாயரும் மலையாள தேசத்தில் பெரிய அளவில் எதுவும் செய்ததாகப் பதிவு இல்லை.

தெலுங்கர்களின்  தனி மாநிலக் கோரிக்கை யினை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு மரணம் அடைந்தார். சென்னை மவுண்ட் ரோடில் நடந்த அவரது இறுதி ஊர்வலம் பெரும் கலவரமாக வெடித்தது. அதன்பின் ஓராண்டில் ஆந்திரா உருவானது.

விசால ஆந்திரம், ஐக்கிய கேரளம், சம்யுக்த கன்னடம் என அவர்கள் விரும்பிய

வரையறைகளுக்கு உள்ளாகத்  தமிழர்கள் மிகப் பெரும்பான்மையான அளவில் வசித்த பகுதிகளும் அடக்கம். மேற்கண்ட செயல் பாடுகளை எவரும் மொழி அடிப்படை வாதம், மொழி வெறி, மொழிப் பாசிசம் என்றெல்லாம் இன்று தமிழர்களுக்கு எதிராக (மட்டும்) சொல்வதைப் போல் சொல்லவில்லை.

எல்லைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக(நிலம்/மக்கள்) பிரிக்கப்பட்டன. ஆனால், அவை தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மட்டுமே இருந்தது வரலாறு.  இந்த நெருக்கடியால் அந்தப்பகுதிகளில் பூர்வ குடிகளாய் வாழ்ந்து வந்த மக்கள் திடீரென வாழ்வுரிமை இழத்தலை எதிர்நோக்கினர். அந்தத் தமிழர்களின் துயரமும் கதறலும் தமிழ்நிலத்தில் இந்திய (காமராசர்), திராவிட (பெரியார்) அரசியல் செய்த தலைவர்களைக் கொஞ்சமும் அசைக்கவில்லை.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு தமிழர் நிலமாய், தெற்கெல்லையாக விளங்கி வந்த குமரி மாவட்டத்தின் (அன்றைய தென் திருவிதாங்கூர்) மக்கள் தன்னெழுச்சியாகத் தாய்த்தமிழ்ப் பகுதியுடன் இணையப் பெரும் போராட்டங்களை முன்னெடுத்ததனர். சுதந்திர இந்தியக் குடியரசின் ஒரு புதிய மலையாள மொழிவழி மாநிலமாக உருவாகி இருந்த கேரளக் (பிரஜா சோசலிசக் கட்சியின் ஆட்சியினது) காவல்துறையின் துப்பாக்கிச் சூடுகளில் பனிரெண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கொடும் ஒடுக்குமுறைக்குத் தமிழர்கள் உள்ளாயினர். நேசமணி, பி.எஸ்.மணி, குஞ்சன், தாணுலிங்கம், சிதம்பரநாதன், அப்துல் ரசாக் போன்ற தலைவர்களின் போராட்டம் குமரியை மீட்டது. குமரிக்கு வெளியில் ம.பொ.சி யும் சி.பா.ஆதித்தனாரும் மட்டுமே ஆதரித்தனர். இருப்பினும் நெடுமங்காடு, செங்கோட்டை தாலுக்காக்களைப் பெற முடியாமலேயே போனது.

வடக்கெல்லையான வேங்கடம் என்னும்  திருப்பதி  மற்றும் சித்தூர் பகுதிகளை இழந்து திருத்தணிகையை மட்டும் தக்கவைக்க முடிந்தது. ம.பொ.சி., விநாயகம், செங்கல் வராயன், சரவனய்யா, என்.ஏ.ரஷீது ஆகியோரின் தொடர் முயற்சியால் அப் பகுதி  மக்களின் போராட்டமானது ஓரளவே வெற்றி பெற முடிந்தது.மேற்கில் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, பாலக்காடு பகுதிகள் மக்கள்தொகை விகிதத்திற்கு மாறாகக் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ம.பொ .சி., நேசமணி ஆகியோரின் போராட்டங்களும் பயன் அளிக்கவில்லை.

அவ்வாறே கோலார் தொடங்கி தமிழர் முழுதாகவும் பெரும்பான்மை ஆகவும் வாழ்ந்த பல பகுதிகளும்கூட கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டன. சென்னைக்கும் கடும் நெருக்கடி வந்தது. தெலுங்கர்களின்  விசால ஆந்திரம் என்பதில் மெட்ராஸும் உண்டு. ‘மதராஸ் மனதே’ என்ற கோஷத்துடன் முழு மூச்சாகச் செயல்பட்டனர். ம.பொ.சி யின் முழு முயற்சியும்  இராஜாஜி மற்றும்

காமராசரின் உறுதியும் (அதிசயமாக) சென்னையைத் தக்க வைத்தி்ட உதவின. அனைவருக்குமான (இந்திய, திராவிட) பொது அரசியலைத் தமிழர்கள் முன்னெடுத்த போதும் இறுதியில் தமிழராக மட்டும் தனித்து விடப்பட்டனர். மொழியே சமூகம் என்பதன் அடிப்படை இயங்கியல் கண்ணி என்பதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணர்ந்து, புரிந்து வைத்திருந்தபோதும் புதிய அரசியல் கருத்தியல்களான இந்திய, திராவிடச் சொல்லாடல்களை முழுமையாக நம்பினர். தங்களை ஒப்புக் கொடுக்கவும் செய்தனர்.

உலக வரலாற்றில் மிக அபூர்வமான பதிவு இது. தனக்கென மொழி,  இலக்கணம், கலைகள், இலக்கியங்கள், சொந்த எழுத்து வடிவம், பண்பாடு, வரலாறு,  தொன்மம் என அனைத்தையும் கொண்டிருந்த போதும் தங்கள் அடையாளங்களை முதன்மைப்படுத்தாமல் திராவிடர்,  இந்தியர் என்னும் கூட்டு (பொது) அரசியல் அடையாளங்களை முன்னெடுத்தனர். தமிழ்ச்சமூகத்தின் இயல்பான  தொல் மரபே இதனைச் சாத்தியமாக்கியது.

ஆனால், மொழிவழியாக மற்றவர்கள் சுயநலமாய்ப்  பிரிந்த பின்பு வரலாற்றில் தமிழர்கள் வேறுவழியின்றி மொழிவழி அரசியலுக்குள் தள்ளப்பட்டனர். ஏனெனில், மூவாயிரமாண்டு எழுதப் பெற்ற வரலாறு நெடுகிலும் தமிழ்ஓர்மை ஆழமாக வேரோடி இருந்தபோதும்  தமிழர்கள் மொழி அடிப்படையிலான அரசியலை எதிர்வினையாக மட்டுமே செய்து வந்திருப்பதை அறியலாம்.

மீதமிருந்த பகுதியான, மிஞ்சியிருந்த சென்னை மாகாணத்தை இனியாவது  தமிழ்நாடு என்று அழைக்கலாம் என்கிற மக்களின் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. அன்றைய காலங்களில் ஆளுமை நிரம்பிய கட்சிகளான காங்கிரசும், திமுகவும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் புறக்கணிக்கவே செய்தன.

இத்தகைய  கள்ள மௌனங்களை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய சங்கரலிங்கனார் 27.07.1956 ல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை விருதுநகரில் ஆரம்பித்தார். விருதுநகரைச்  சேர்ந்த காமராசர் முதல்வராக இருந்தார். அவர், ஏற்கனவே  மேற்கெல்லை  மீட்புப் போரில்,  ‘(தேவி)குளமாவது (பீர்)மேடாவது.. எல்லாம் இந்தியாவிலதான இருக்கு’ என்றவர். (அவை தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டால் மட்டும் என்ன பாகிஸ்தானுக்கா போய்விடும்? என்று எவரும் கேட்கவில்லை போலும்.)

சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தின்போது கம்யூனிஸ்ட்கள் உடன் இருந்தனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அண்ணா, ம.பொ.சி.,  ஜீவா போன்ற தலைவர்கள் வேண்டினர். ஆட்சிப் பொறுப்பில் இருந்த காமராசரும் அதனை மட்டுமே செய்தார். இறுதியில் தனது கோரிக்கை நிறை வேறாத துயரிலேயே சங்கரலிங்கனார் 10.10.1956 அன்று77 வது நாளில் மரணம் அடைந்தார்.

பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணம் ஓராண்டில் ஆந்திராவைச் சாத்தியமாக்கியது. ஆனால், பாவம் சங்கரலிங்கனார். தமிழ்நாடு எனும் வெறும் பெயர்மாற்றமோ அவர் மறைந்து 12 ஆண்டுகள் கழிந்தபின்பே சாத்தியமானது. அதுவும் எப்படி? அது, அதுவரை நடந்ததை விட இன்னும் விசித்திரமானது.

சங்கரலிங்கனாரின் உயிர்க்கொடையானது தமிழ்நாடு எனும் பெயர் மாற்றக் கோரிக்கையை வலுவாக்கி, தவிர்க்க முடியாததாக்கி விட்டது. பல இயக்கங்கள் முன்னெடுத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்தைத்  தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் கோரிக்  கொணரப்பட்ட  தனி மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.  1962 சனவரியில் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானமும் தள்ளுபடியானது. அண்ணா முதல்வரான பின் 1968 ஜூலை 18 ல் சட்டமன்றம் மறுபடியும் தீர்மானம் நிறைவேற்றியது.  ஒருவழியாக……….23.11.1968ல் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது. அன்று முதல் இந்நிலம் சட்டப்படி தமிழ்நாடு எனப்படுகிறது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா எனப் புதிய மாநிலங்களை உருவாக்கி, அங்கீகரிக்க எடுத்துக் கொண்ட கால அளவுகளுக்கும் அனைவரும் அவரவர் விருப்பப்படி பிரித்தபின் மீந்துபோன பகுதியைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்திட மட்டும் எடுத்துக் கொண்ட கால அளவுக்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்தும் இந்திய, திராவிட அரசியலார் வேடிக்கை பார்ப்பதோடு சரி.

வரலாறு விசித்திரமானது. வலி நிரம்பியதும் கூட….

அன்று தமிழ்நிலத்தின் எல்லைகளில் நடைபெற்ற தமிழர்களது  மண்ணுரிமைப் போராட்டங்களின் போது  பாராமுகமாகத் துரோகம் இழைத்தவை ஆளும் கட்சியான காங்கிரசும் முக்கியமான எதிர்க்கட்சியாய் உருவாகி இருந்த  திமுகவும் ஆகும்.   அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு  ஈழத்தில் நடந்து வந்த தன்னுரிமைப் போராட்டங்கள்  பல நாடுகளின் துணையுடன் ஒடுக்கப்பட்டு ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோதோ அதே காங்கிரசும் திமுகவும் ஒன்றாய்க் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தன.       தமிழ்நாடு எனப் பெயர் மாறிய பிறகும் கூட,  பிற மாநிலங்களில் எல்லாம்

மாறியது போல இங்கு எதுவும் மாறவில்லை. இன்று வரை.

சில உதாரணங்கள் மட்டும்…..தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பகத்தார் சங்கம்

எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வாறே தமிழ்நாடு என்ற பெயர் தவிர்க்கப்படும் வகையில் தமிழகம், தமிழ் மாநிலம், தமிழ்ப் பி்ரதேசம் போன்ற சொற்களும் புழக்கத்தில் உள்ளன.

இதன் உச்சமாகப் பிற மாநிலங்களில் நடந்த வண்ணம் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று மாறி இருக்க வேண்டிய இந்த மாநில உயர்நீதிமன்றமோ இன்னமும்  ‘மெட்ராஸ் ஹைகோர்ட் ‘ ஆக மட்டுமே உள்ளது. அரை நூற்றண்டுக்குப் பிறகு மெட்ராஸ் சென்னை ஆனதும் அன்றைய முதல்வரால்  மெட்ராஸ் ஹை கோர்ட் என்பதை ‘சென்னை உயர்நீதி மன்றமாக மாற்ற தீர்மானம் கொணரப்பட்டது. அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மிக சமீபத்தில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் முன்மொழிதலின்படி தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்திடக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்திய, திராவிட அரசியலால் தமிழ்நாடு அன்று  எல்லைகளில்  இழந்த நிலங்களில்தான் முல்லைப்பெரியாறு, பாலாறு, காவேரி என இன்றும் தொடரும் துயரங்கள் நீள்கின்றன. காலனிய விடுதலை அரசியலில் ‘இந்தியமும்’ ஒற்றைமய  பேரலைச் சூழலின்  காரணமான சமூக விடுதலை/பண்பாட்டு அரசியலில், ‘திராவிட சிந்தனையின்’ பாத்திரமும் காத்திரமானவை. தமிழ்ச் சமூகம் தங்களின் பிரதிநிதிகளாக, தலைமையாக   இந்திய, திராவிட அரசியலாரை  அங்கீகரித்திருந்தனர். ஆனால் , அவர்களோ  உண்மையினை உரைத்தல் என்பது தமிழ் நிலம், தமிழ்நாடு சார்ந்து பேசுதலாகும் என்றும் அது  இந்திய, திராவிட சிந்தனைக்கு எதிரானது  என்பதாகவும் (தவறாக) எண்ணியதால் தமிழர் எல்லையில் சந்தித்தவை துரோகமே. அவ்வாறு எண்ணுகிற பிழையான போக்கின் தொடர்ச்சியை காவேரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற நெருக்கடிகளில் இன்றும் காண முடிகிறது.  உண்மையில் பார்த்தால் தமிழ்நாட்டை உள்ளடக்கியதுதானே திராவிடமும்  இந்திய ஒன்றியமும். வேறு வேறு அல்லவே. அவ்வகையில்  தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பவர்கள் ஒருபோதும் திராவிடத்திற்கோ, இந்தியத்திற்கோ  நேர்மையானவர்களாக  இருக்க முடியாது. அவற்றிற்கும் இரண்டகம் செய்பவர்களாகவே  வரலாறு பதிவு செய்யும்.

வழக்கமாக, நவம்பர்.1 பெரிய அளவில் கவனத்தில் வராது.  தமிழ் தேசிய அமைப்புகள் மட்டும் பேசி வந்த இந்த நாள்  முதல் முறையாகக் கவனப்படுத்தப்பட்டுள்ளது. அதிசயமாய் தலையங்கங்கள், கட்டுரைகள் என தமிழ்நாடு. 60 மெல்லப் பேச்சாகி உள்ளது.  இந்த நல்ல தொடக்கமானது தமிழ்ச்சமூகத்தின் வாழ்வரசியல் தொடர்புடைய போராட்டங்களிலும் தொடரட்டும். மாற வேண்டியவை மாறட்டும். மாறாதவற்றை மாற்ற முயல்வோம்.  மாற்றம் வரும்.