குற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம்

குற்ற உணர்வின் அரசியல் காந்தியுடையது
குற்றத்திற்கெதிரான அரசியல் அம்பேத்கருடையது
குற்றங்கள் எவையென அடையாளம் காட்டும் அரசியல் பெரியாருடையது

 

காந்தி-காந்தியம் பற்றிய உரையாடல்களும்  கருத்தாய்வுகளும் தெளிவான புள்ளியில் தொடங்கி மிகத்தெளிவான முடிவுகளுடன் இணக்கம் கொள்ளக்கூடியவை அல்ல. ‘காந்தி மதம்’ என ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் ‘காந்தி தேசம்’ என்று இந்தியாவின் பெயரை மாற்றவேண்டும் என்றும் 1948 காலகட்டத்தில் பெரியார் சொல்லும் அளவுக்கு காந்தி என்ற தெளிவற்ற குறியீடு விரிவடைந்து நின்றது.

மாற்றங்களை ஏற்காத சமூகம், மாற்றங்களைக் கண்டு அஞ்சும் மக்கள், மாற்றங்களே நிகழக்கூடாது என்று அழுத்திக்கொண்டிருக்கும் சாதி-வர்ண-நில உடைமைக் கொடுங்கோன்மை, சுதந்திரம் என்பதை பாவமெனக் கண்டு ஒருவருக்கொருவரைச் சிறைக்காவலாக இயங்கவைக்கும் இந்தியக் குடும்ப-குடிமரபுகள். இவற்றிற்கிடையில் மாற்றங்களை எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வி இந்தியப் புரட்சியாளர்கள் அனைவருக்குள்ளும் ஒரு கட்டத்தில் நெஞ்சில் வந்து அடைக்கக்கூடும்.

அப்படியான மூச்சடைப்பு நிலையில் மாற்றங்களைத் தொடங்கும் வழி பற்றி பெரியார் கூறுகிறார்:

“காந்தியாரின் கொள்கைகளை வைத்து ஒரு மதத்தைத் தோற்றுவிப்பதுதான் எப்படித் தவறாகும்? சத்தியமும் அஹிம்சையும்தானே அவருடைய முக்கிய தத்துவங்கள்? சத்தியமே கடவுள் என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம். தனியாக வஸ்துவாக ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லியிருக்கிறார். சத்தியம்தான் கடவுள் என்று அவர் கொண்டு நடந்திருக்கிறபடியால் மக்கள் சத்தியமே கடவுள் என்று நம்பிப் பயப்பட்டு நடந்தால் இன்றையக் கடவுள்களால் ஏற்படும் பயனைவிட எவ்வளவோ நலம் ஏற்படும். பிறகு மதத்தைப் பார்த்துக்கொள்ளலாம். அகிம்சையையும் அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதுமான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் சாதி வேறுபாடுகளும் மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா?

காந்தியாருக்குப் பாமர மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. அவர் பேரைச் சொல்லி இந்த மாறுபாடுகளைச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வது சுலபம்.” (விடுதலை 11-3-1948)

தன் 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, போராட்டம், கருத்தியல் செயல்பாடுகளுக்குப் பிறகு பெரியாருக்குள் எங்கிருந்து தொடங்குவது என்ற சோர்வு ஒரு செயல் முடக்கம் உருவாகிறது. இயங்கியல் அறிந்த அந்த மனம்தான் இப்படிக் கேட்கிறது, “அகிம்சையையும் அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதுமான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா?”

இந்த தளத்தில் வரலாற்றில் தேவைப்படுவதுதான் இடைநிலைச் சொல்லாடல், இந்த தளத்தில் பழமைகளுடன் உரையாடல் வைத்தபடி மாற்றங்களைச் சுட்டிக்காட்டும் அரசியல் பேச்சுதான் இணைப்புநிலைச் சொல்லாடல். காந்தியாரை புத்தருக்கு இயேசு முகம்மது என்ற பெரியார்களுக்கு இணையாக மாற்றி மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்று சொல்லும் அளவுக்கு இடைநிலைச் சொல்லாடல் பெரியாரை இழுத்துச் செல்கிறது. காந்தியை மாறுதலுற்றவராக மாற்றங்களுக்குத் தொடக்கமாக தான் காண்பதற்கான விளக்கமாக பெரியார் பயன்படுத்தும் வாக்கியம் “இந்துக்கள் யாவரும் குரான் படியுங்கள் என்றதிலிருந்தும் தானும் குரான் படித்துக்கொண்டு ராம்-ரஹீம் பஜனை செய்ததிலிருந்தும் மற்றவர்களையும் செய்யச் செய்ததிலிருந்தும் சாதிமத சம்பந்தமாக அவர் அடைந்த மாற்றத்திற்கு அளவு காட்ட வேண்டுமா என்று கேட்கிறேன்.” (குடியரசு 15-5-1948) காந்தி என்ற குறியீடு இந்தியச் சமூகம் என்ற ஒன்று உருவான காலகட்டமான (1915-1948) 33 ஆண்டு வரலாற்றுப் பகுதியை முடிந்த அளவு தன்னுள் இழுத்து உள்ளடக்கியதாக மாறியிருக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், பெரியார் போன்ற புரட்சியாளர்களும் புத்துருவாக்க கருத்தியலாளர்களும் காந்தி-காந்தியம் என்பதுடன் போராடி, உரையாடி, மறுத்து, கடந்து இயங்கவேண்டிய நிலை உருவானது.

இடைநிலை-இணைப்பு நிலைச் சொல்லாடல் என்பதால் அது பக்திக்குரியதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் இருக்கவேண்டிய தேவையில்லை.  அதே போல வெறும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் கோட்பாடுகள் கொண்டவர்களின் அறமாக இருக்க முடியாது. மாறுதல்களை நேசித்த, மக்களுக்காக வாழ்வதை அரசியலாகக் கொண்ட பெரியாருக்கு காந்தி ஒரு தொடக்கமாக இருக்கமுடியும் என்று தோன்றியது. ஆனால் காந்தியின் 30 ஆண்டுகால அரசியல் மாறுதல்களைக் கொண்டுவரவில்லை என்பதில் அவருக்கு ஐயம் இல்லை. இரண்டையும் அவருடைய கருத்தியல்-காலமுறை சட்டகத்திற்குள் காணலாம்:

1931 இல் பெரியாரின் அறிதல் முறை, ”எந்தக் காரணத்தை முன்னிட்டும் திரு.காந்தியிடம் நாம் சமதர்மத்தை எதிர்பார்க்கக் கருதினோமானால் நாம்தான் மூடர்களாய்த் தீருவோம். அதாவது ஆயுள் காலம் முடியும் வரை அவரிடம் சமதர்மத்தையோ ஒற்றுமையையோ காணமுடியாது. அவர் வடநாட்டுப் பணக்காரர்களையும் தென்னாட்டு பார்ப்பனர்களையும்தான் மனிதராய்க் கருதுகின்றார். அவர்களது சகவாசம்தான் அவருக்கு உண்டு, அவர்களது குறைகளைத்தான் உலகக் குறைகளாகக் கருதுகின்றார். ஆதலால் திரு. காந்தியவர்களின் திட்டமெல்லாம் அவ்விருவருடைய குறைகளைத் தீர்ப்பதற்காகத்தான் இருக்குமே ஒழிய, ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிகள்தாம் தெரியும். ஒன்று: இராட்டினம் சுற்றுவது, இரண்டாவது: தீண்டாமை பாராட்டுவது பாவம் என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட மில்லுக்காரனையும் பார்ப்பானையும் கண்ட மாத்திரத்தில் தத்துவார்த்தம் சொல்லவேண்டி வரும்.”(குடியரசு: 26-7-1931)

1948-இல் பெரியாரின் உணர்வுநிலை: “சுதந்திரம் வந்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டு வெள்ளையனும் போய் விட்டதாகக் கூறப்பட்ட அந்தத் தருணத்திலிருந்து காந்தியாரின் எண்ணங்களில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டு வந்ததை நான் கண்டேன். காங்கிரஸ்காரர்கள் விரும்பியபடி சுயராஜ்யம் கிடைக்குமானால் நம் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் என்னென்ன கேடுகள் விளைக்கூடும என்று நான் இடைவிடாது கூறிவந்தேனோ அக்கேடுகள் விளைய நேரிட்டதை உணர்ந்து காந்தியார் அதை ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார். அக்கேடுகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார். அவசரப்பட்டு சுயராஜ்யம் கேட்டது எங்கு ஆபத்தாக முடியுமோ என்று கவலைகொள்ள ஆரம்பித்தார். தமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று தாம் தாம் கருதி வந்தவர்களில் பெரும்பாலோரைப் பற்றி நான் என்ன மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டிருந்தேனோ அதேபோல அவரும் அவர்களை பற்றி கொள்ள ஆரம்பித்தார். தாம் செய்த பல தவறுகளை உணர ஆரம்பித்தார். அத்தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆரம்பித்தார் என்று கூறலாம்.”

“அத்திருத்தங்களைச் செய்யப் புகுந்தருவாயில் தமது எண்ணங்களுக்கேற்பச் செயலாற்ற முற்பட்ட தறுவாயில் அவரது முற்போக்கு எண்ணங்களால் தமக்குக் கேடு சூழும் என்று அஞ்சிய சுயநல சோம்பேறிக் கூட்டத்தாரால் கொலை செய்யப்பட்டார்.”

“இங்கு திராவிடர் கழகம் வலுப்பெற்று வருவது கண்டு பொறாமை கொண்ட சில பார்ப்பனர்கள் காந்தியாரிடம் காவடி தூக்கிச் சென்றனர். தென்னாட்டில் திராவிடர் கழகம் என்றொரு கழகம் வளர்ந்து வருகிறதென்றும் அதைக் கண்டு காங்கிரஸ் மந்திரிகளே பயப்படுகிறார்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் தம் மக்களுக்குப் பள்ளிக்கூடங்களில் படிக்க இடம் கிடைப்பதுகூடக் கஷ்டமாக இருக்கிறதென்றும் கூறினார்கள். அதைக் கேட்ட காந்தியார் கூறிய பதிலில்தான் நான் கூறிய மனமாற்றம் இருக்கிறது. “கவனித்துப் பாருங்கள் என்னருமை பிராமணத் தோழர்களே! நீங்கள் கடவுளோடு நேரடித் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்களாயிற்றே. அதிலும் மகா புத்திசாலிகளாயிற்றே, அப்படியிருக்க உங்களுக்கு எதற்குப் படிப்பு வேண்டும்? கடவுளை நம்பி, சதா கடவுள் பணி செய்துகொண்டிருங்களேன் படியாத முட்டாள்களான அவர்களுக்குத் தானே படிப்பு அவசியம். அவர்கள் படிக்கட்டுமே, உங்கள் பிள்ளைகளுக்கு இடமில்லாமல் போனால் வருத்தப்படாதீர்கள், உங்கள் விகிதாச்சார இடங்களைக்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு விட்டுக் கொடுத்து உதவுங்கள்.” என்று அவர் கூறினார். இதைத்தானே நாமும் இன்றுவரை கூறிவந்தோம்.” (விடுதலை 3-10-1948)

1957-இல் மீண்டும் பெரியார் காந்தியின் கடந்தகால இடம் பற்றிக் குறிப்பிடுகிறார்: ”காந்திதான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்குக் காரணம். சாதி ஒழிப்புக்கு சாஸ்திரம் புராணம் ஒழிக்கப்பட வேண்டும், என்பது போல நாட்டுப் பிரிவினைக்குக் (தன்னுரிமை) காந்தி ஒழியவேண்டும்.”

“காந்திக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தவன் வடநாட்டான். மனிதனுக்கு மேற்பட்ட தெய்வீக சக்தியுடையவர் என்று விளம்பரம் செய்தவன் பார்ப்பான். ஆகவே அவர்கள் இருவருக்கும் எது சரியோ அந்தப்படி நடக்க காந்தி ஒப்புக்கொண்டுவிட்டார்.” (விடுதலை 22-8-1957)

இவை முரண்பாடுகள் என்பதை யாரும் ஆய்வு செய்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அடிப்படையில் இவற்றில் அரசியல் இணக்கம் உள்ளது. அதுதான் பெரியார் கண்ட மாறுதலறம், பெரியார் முன்வைத்த தன்னுரிமை கொண்ட கூட்டுத் தேசியம் என்ற கருத்து, சாதிய-வர்க்க அடிப்படைகள் தகர்ந்த சமதர்ம அமைப்புக்கான நம்பிக்கை. இவை காலம்சார் அரசியலின் தளத்தில் பலவகையான கதையாடல்களாக வெளிப்படும். ஆனால் தனது மாறுதலறத்தின் இயக்கமுறையிலிருந்து விலகாமலேயே இருக்கும்.

பெரியாருக்கு காந்தியை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம் என்று தோன்றுவதற்குக் காரணமாக இருந்த செயலற்ற திகைப்பையும் அரசியல் மூச்சடைப்பையும் அதனினும் பலமடங்கு அதிகமாக உணர்ந்த மாபெரும் மனம் அண்ணல் அம்பேத்கருடையது. ஆனால் அவர் தன் மக்களுக்காகக் கண்ட கனவைத் தகர்த்து அவர் உருவாக்க முனைந்த விடுதலை அரசியலின் அடிப்படைகளை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு நூற்றாண்டு அரசியல் போராட்டத்தைப் பிராமணிய பெருந்தேசிய அரசியலில் கரைத்த வரலாற்றுச் சதிதான் அவருக்கான திகைப்பை, மூச்சடைப்பை உருவாக்கியது. அந்த அரசியல் சதிக்கு மகாத்மா என்ற தன் பெயரையும் எளியோரில் ஒருவர் என அடையாளம் கொண்ட தன் உடலையும் அளித்து பெரும் தவறிழைத்த காந்திதான் அம்பேத்கரின் வாழ்வின் பெரும் துன்பிலுக்குக் காரணமாக அமைந்துவிட்டவர்.

1930-32 காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அமைய இருந்த தனித் தன்னுரிமை கொண்ட அரசியல் பங்கீட்டைத் (தனித் தொகுதிகள் என்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனிப்பிரதிநிதித்துவம்) தடுத்து நிறுத்திய பூனா ஒப்பந்தம் அமையக் காரணமாக அமைந்த காந்தியைப் பற்றிய தன் மதிப்பீட்டைப் பெரியார் போல மாற்றவோ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவோ அம்பேத்கர் நினைக்கவில்லை.1930-இல் சலிப்பாகத் தொடங்கி 31-இல் கசப்பாக மாறி 1932-செப்டம்பரில் தீராத வலியாக மாறியது அம்பேத்கரின் மனதிலான காந்தி பற்றிய மதிப்பீடு. 1945-இல் ‘காங்கிரஸும் காந்தியும் தீண்டாமைக்குட்ட மக்களுக்கு இழைத்ததென்ன’என்ற மறுக்கமுடியாத வரலாற்று ஆவணமாக மாறியது அந்த நினைவு, 1948-இல் அறிவின் தடுமாற்றம் இன்றி காந்தியின் கொலைக்கு இரங்கிய மனம் அதன் வரலாற்றுப் பக்கத்தையும் தெளிவாகப் பதிவு செய்தது, ‘மாமனிதர்கள் தேசத்திற்கு சில நன்மைகளைக் கொண்டுவருகிறார்கள் ஒரு கட்டத்தில் அவர்களே அதன் வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவும் மாறிவிடுகிறார்கள். காந்தி நம் நாட்டின் நல்லெண்ணக் கெடுதியாக மாறிவிட்டார். தன் காலத்தின் சுதந்திரச் சிந்தனைகள் அனைத்தின் குரல்வளையையும் அவர் நெரித்துவிட்டார்.” இதனைத்தான் பெரியார் “காந்திக்குச் செலவுக்குப் பணம் கொடுத்தவன் வடநாட்டான். மனிதனுக்கு மேற்பட்ட தெய்வீக சக்தியுடையவர் என்று விளம்பரம் செய்தவன் பார்ப்பான். ஆகவே அவர்கள் இருவருக்கும் எது சரியோ அந்தப்படி நடக்க காந்தி ஒப்புக்கொண்டுவிட்டார்.” என்று குறிப்பிடுகிறார்.

1930 முதல் 1956 வரை அம்பேத்கர் கொண்டிருந்த மாறாத கருத்து இது: “காந்தியின் வாதம் முழுக்க (ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்த தொகுதி கொண்ட தேர்தல் முறையை மறுத்து காந்தி முன் வைத்த வாதங்கள்) கற்பனையின் அடிப்படையில் அமைந்தது. ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கிப் பழிவாங்கத் தொடங்குவார்கள் என்பது உண்மையானால் ஒடுக்கப்பட்ட மக்கள் தனித்த அரசியல் உரிமைகளைப் பெற்று ஆதிக்கச் சாதிகளின் கொடுமைகளை அவர்கள் தாங்களாகவே எதிர்க்க வேண்டும் என்பதற்கான நியாயம் அதிகமாகவே உள்ளது. தன்னுடைய வாதம் எந்த அளவுக்கு கொடிய விளைவுகளை உருவாக்கும் என்பதைக் கூட அறியமுடியாத அளவுக்கு காந்தி நிலைகுலைந்து தன் அறிவின் சமநிலையை இழந்து போயிருக்கிறார். இப்படியான வாதம் தீண்டாமைக்குட்பட்ட மக்களை இந்துக்கள் நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைப்பதை நியாயப்படுத்துகிறது என்பதைக்கூட அவர் மறந்துவிட்டார். சுருக்கமாகச் சொல்வதென்றால் காந்தியின் வாதம் இதுதான், “விடுதலை வேண்டும் என்று கேட்காதீர்கள் அது உங்கள் ஆண்டைகளைக் கோபப்படுத்தி உங்களை அவர்கள் கொடுமைக்குள்ளாக்கவேண்டிய நிலையை உருவாகும்.” இப்படியான ஒரு வாதத்தை வைக்கும் ஒருவரை அறிவு முதிர்ச்சியும் பொறுப்பும் அற்றவர் என்றுதான் சொல்ல வேண்டும்.”

தன் மக்களையும் விடுதலையையும் நேசிக்கும் அறிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள். பெரியார் காந்தியைத் தொடக்கமாக வைத்து செய்ய நினைத்ததும் அம்பேத்கர் காந்தியை நீக்கிவிட்டு உருவாக்க நினைத்ததும் ஒன்றுதான்: தன் மக்களுக்கான விடுதலை மானம் உள்ள வாழ்வு.

தன் காலத்தின் சுதந்திரச்சிந்தனைகள் அனைத்தின் குரல்வளையையும் அவர் நெரித்துவிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட காந்தி தன் சுதந்திரமான சிந்தனையை அப்போதுதான் முன்வைக்கத் தொடங்கியிருந்தார். அதற்குள் அவரது குரல் காற்றில் கரைக்கப்பட்டது, அவரது நெஞ்சைத் துளைத்த உலோகம் காந்தியை இறந்த காலமாக மாற்றியது.

அம்பேத்கர் அதுவரை இருந்த காந்தியை மதிப்பிட்டார், பெரியார் அதற்குப் பிறகு இருந்திருக்கவேண்டிய காந்தியைப் பற்றி மதிப்பிட்டார். அவர்கள் இருவருடனும் முரண்பட்டும் விலகியும் இருந்த காந்தியும் சொன்னார் ‘என் 30 ஆண்டுகால அரசியலில் எதையும் மாற்றவில்லை, வெளியேதான் இனிமேலான எனக்கான பணிகள் உள்ளன.’ மக்களை நேசிப்பவர்கள் காலம் கடந்தாலும் உண்மையை உணர்வார்கள். அவர்களை நேசிப்பவர்கள் அவர்களுடைய கடந்த காலத்தை பூசிப்பவர்களா அல்லது அவர்கள் உருவாக்க நினைத்த எதிர்காலத்திற்காக வாழ்பவர்களா என்பதைக் கொண்டுதான் அவர்களின் அரசியல் மதிப்பிடப்படுகிறது.