பொன்னியின் செல்வம்- பிரேம் (கதை)

பொன்னியின் செல்வம்

பிரேம்

முதல் பாகம்புது மின்னஞ்சல்
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி எம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு அன்பரை அழைக்கிறோம்.  விநாடிக்கு ஒரு ஆண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.
ஒரு நள்ளிரவில்  வந்த அந்த மின்னஞ்சல் செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது. காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில்? காலநதியில் கற்பனை ஓடத்தில் என்றிருந்தால் அச்சம் குறைந்திருக்கும்.  கைவிரல்கள் நடுங்க அனுப்பியவர் பெயர், மின்னஞ்சல் முகவரி, நாள், மணி எனச் சுட்டிவழித் தொட்டுப்பார்த்து பின்புலத் தகவல்களை அறிய முயற்சி செய்தேன். எதுவும் பிடிபடவில்லை. யாராக இருக்கும்? என் முகநூல்தான் என்னைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும்.
 இது ஒரு அச்சுறுத்தல்தான் என்று  மனம் சொன்னது.  பின்னோக்கிச் செல்லச் சொல்லும் எதுவும் எனக்கு அச்சுறுத்தல்தான். எழுதிக்கொண்டிருந்த பக்கங்கள் தடுமாறிவிட்டன. கணிணியை மூடிவிட கைவிரல் முயற்சி செய்த போது முகநூல் செய்தியறையில் ஒரு சில வரிகள். தப்பித்தோம் என நினைக்க வேண்டாம். கடந்த காலத்தின் கதைகள் காட்சிக்கு வந்துவிடும். சற்றே மனதைத் திடப்படுத்திக்கொண்டு நீங்கள் யார்? எனக் கேள்வியனுப்பினேன். ‘ஆடித்திருநாள்’ என்று பதில் வந்தது.
 ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ மறதியில் புதைந்த அந்தச் சொல் மணற்குழியில்  ஊறும் நீர் போலக் கசிந்து நினைவை நிறைத்தது. கலங்கிய நீரில் காலத்தின் அலைகள். வட்டங்கள் விரிந்து வாழ்வின் மங்கிப் போன சித்திரங்களை வரைந்து காட்டின. கடந்த காலத்தின் கதைகள் காட்சிக்கு வந்துவிடும்! அடடா சில நிமிடங்களிலேயே அது மெய்யாகிவிட்டதை எண்ணி மனம் துணுக்குற்றது. எழுதி எழுதித் தப்பிக்கும் ஒருவனுக்கு இப்படி ஒரு சோதனையா? நான் மறக்க நினைக்கும் அந்தக் கடந்தகாலம்,  நான் மறைக்க நினைக்கும் அந்த முடிந்த காலம் இப்படி ஒரு பெயர் தெரியாத அஞ்சல் வழியாகப் பெருக்கெடுத்து மூச்சுத் திணற வைக்கிறதே.
உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்? ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்பது புரிகிறது. நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? விரல்கள் தானாக வரிகளைச் செலுத்தின. என் விரல்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் என்னை இன்னும் அச்சுறுத்தியது. என் பெயர் இருக்கட்டும், பேரவையில் இருந்து தப்பிய இருவரில் ஒரு ஆள் உன்னைக் கண்டுபிடித்து விட்டோம், இன்னொரு ஆள் எங்கே? அதனை மட்டும் சொல்லிவிடு! தப்பித்த இருவரா, அது என்ன சிறையில் இருந்து தப்பியது போலச் சொல்கிறீர்கள், அதில் இன்னொரு ஆள் வேறு.  யார் அது?  அது சரி ஒன்றும் தெரியாதது போல நடிக்க வேண்டாம். ஒரு நாள் அவகாசம் தருகிறோம், தகவல் தரவில்லையென்றால் உங்கள் இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம் எல்லாம் நந்தினியின் குதிரை போலப் பார்வையில் இருந்து மறைந்துவிடும். செய்தியறை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம்! என்ன இது?  இது யார், ஆடிப்பெருக்கு அன்பர்களில் யாரோ ஒருவரா? அல்லது அந்தக் குழு முழுமையும் இன்னும் இருக்கிறதா? ஒரு சமயம் உண்மையாகவே அந்தக் குழு பெருகி எல்லா இடங்களிலும் மாற்று உருவில் பரவித்தான் வருகிறதா? மாகாளி பராசக்தி! மனதுள் ஒலித்த இந்தக் குரல் என்னை இன்னும் திடுக்கிட வைத்தது. நான் கொஞ்சமும் யோசிக்காத அந்தச் சொற்கள். இலக்கிய நடிப்பு, அரசியல் வேடம்! அந்தச் சொல் தன் வேலையைத் காட்டத் தொடங்கிவிட்டதா?
உலக இலக்கியம், கோட்பாடு, புதிய புனைவு என என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்துகிறீர்களே உங்கள் கதை எனக்குத் தெரியாதா? ஒரு நாள் இரவு இப்படி ஒரு உள்ளறைத் தகவல். அது என்ன கதை? நீங்கள் தொடக்க காலத்தில் என்ன எழுதிக்கொண்டிருந்தீர்கள்? எந்தத் தொடக்க காலத்தில், யாருடைய தொடக்க காலத்தில்? உங்கள் எழுத்து எப்படி தொடங்கியது? அதைக் கேட்கிறேன்! அதுவா சிலேட்டில் பல்பம் கொண்டு எழுதித்தான் தொடங்கியது.  என்ன விளையாட்டா? கிரணம் எழுத்து எனச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு முன்பு என்ன எழுதினீர்கள்? அதுவா பிரஞ்சு கவிதைகளையும் சர்ரியலிசக் கவிதைகளையும் மாதிரியாக வைத்து எழுதிய பாவனைக் கவிதைகள். அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு
 ‘இரவைப் பொடிசெய்து எரிபந்தம் கொளுத்து,
 இறக்கை  இழந்தாலும் இருவானம் உனக்கு!
சிறைக்குள் அடைத்தாலும் சிறுக்காது கிழக்கு!
கடலைக் கைகொண்டு இறைப்பார்பார்க்கு  உணர்த்து!’  இது போன்ற பாடல்கள். அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு
“இணைமலர் பாதம் இரங்கிட வேண்டும்
உனைச் சரண் புகுந்தேன் உயிர் தரவேண்டும்.”
என்பது போன்ற பக்தியும் காதலும் கலந்த பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தேன்.  அதற்கும் முன்பு? அதற்கும் முன்பு பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பிரித்துப் பூட்டி மாறுவேடக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.
“வண்ணங்களின் வானகமே
 வார்த்தைகளில் காவியமே
எண்ணங்களின் இளங்காற்றே
ஏழிசையின் புது ஊற்றே!”
இதுதான், இந்த இடம்தான். வசமாகச் சிக்கிக்கொண்டீர்கள். மாறுவேடக் கவிதைகள் எழுதிய நீங்கள் மாற்றுக் கலாச்சாரம் பற்றி இப்போது எழுதுவது எப்படி? அதுவா, அதற்கு முன்னே முத்தைத்தரு பத்தித் திருநகை பாடிக்கொண்டிருந்தேனே அதையும் சேர்த்துக்கொள்ளலாம். அதையும் சேர்த்துதான், சொல்கிறேன்,  நீங்கள் எழுத ஆரம்பித்த போது பிரஞ்சு கவிதை, பின்நவீனத்துவம் எதுவும் உங்களுக்குத் தெரியாது, பின்னால் பலருடைய தாக்கத்தில்தான் இப்படி எழுதிக்கொண்டிருக்கறீர்கள். பிறந்த போது எனக்குத் தமிழ்கூடத் தெரியாது, பேசவும் வராது, பின்னால்தான் கற்றுக்கொண்டேன். கற்றுக் கொள்வதுதான் எழுத்து, கருவில் வருவதல்ல. ஆனால் உங்கள் எழுத்தின் உண்மை முகம் வேறு. இருக்கலாம் உண்மையின் முகமே இல்லாமலும் இருக்கலாம்.  எல்லாவற்றையும் எழுதிப் பார்ப்பதுதான் எனது எழுத்து. இது வரை நீங்கள் எழுதியது பாவனைதான். பாவனைதான் எழுத்து, பாவனைதான் வாசிப்பு, பாவனைதான் பொருள்படுத்தல். வார்த்தைகளில் வைத்து மாயம் செய்கிறீர்கள். மாயங்களை வார்த்தைகளாகவும், வார்த்தைகளை மாயங்களாவும் மாற்றிப் பார்ப்பதுதான் எழுத்தின் விளையாட்டு. அப்படியென்றால் உங்களுக்கு எல்லாம் விளையாட்டுதான், இல்லையா? விளையாட்டுதான், ஆனால் மிக உண்மையான விளையாட்டு, உருவமுள்ள மாயம், தொட்டுப்பார்க்கத் தக்கப் பொய்.
அன்றைக்கு வந்து பொய்யைத் தொட்டுப்பார்த்துச்  சென்ற விரல்கள்தானா  இன்று வந்தது?  இல்லை, இது வேறு. ஒரு நாள் அவகாசம், உண்மையைச் சொல்ல வேண்டும். எந்த உண்மையைச் சொல்ல வேண்டும்?  சொல் சொல் சொல் உண்மை சொல், சொல்வதைச் சொல், சொன்னதைச் சொல், சொல்ல மறைப்பதைச் சொல்.
இரண்டாம் பாகம்: காலச் சுழல்
சுண்ணாம்பாற்றுக்கும்  உப்பனாற்றுக்கும்  இடைப்பட்ட நிலத்தில்  உள்ள அழகிய ஊர். புதுச்சேரி நகரத்தின் தென் பகுதியில் ஐந்து காத தூரத்தில் பாகூர் ஏரிக்கு வடபகுதியில் பத்து காத தூரத்தில் தென்னையின் தோட்டங்கள் நிறைந்து குளுமை தவழ இருந்தது அந்த ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அரியாங்குப்பம் என்று பெயர். கிழக்கில் வீராம்பட்டிணத்திலிருந்து ஒலிக்கும் அலைகடல் ஓசையும் மேற்கில் வில்லியனூர் குயில்மொழி நாயகித் திருக்கோயிலில் இருந்து ஒலிக்கும் மணியின் ஓசையையும் கேட்டு வளரும் பிள்ளைகளைக் கொண்டது அந்த ஊர். அந்த ஊரில்தான் அவன் பிறந்து வளர்ந்தான். மற்ற பிள்ளைகளைப் போல உடலில் உரமும், உள்ளத்தில் வேகமும் பெற்றில்லாத காரணத்தால் பெரியவர்கள் பக்கத்திலேயே வைத்துப் பாதுகாக்க வேண்டிய பரிதாப நிலையில் அவன் இருந்தான். கண்டார் இரக்கம் கொள்ளும் நெத்திலி மீன் உருவம், காணாத போது சேத்து வரால் போல வால்தனம் என்று அவன் வளர்ந்து வந்தான்.
அந்த சமயத்தில்தான் அதுவரை ஊரில் நடக்காத உற்பாதங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கின. கட்டிய கொடிக்கயிறுகள் காயவைத்த துணிகளுடன் மண்ணில் புரண்டுகொண்டிருந்தன.  மாடுகளின் மடியில் பால் மிஞ்சாமல் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு கன்றுக்குட்டிகள் குடித்துத் தீர்த்தன.  சட்டியில் மூடிவைத்த பாதி மீன்கள் காணாமல் போய் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தன. பலபேர் வீட்டுத் தோட்டத்துப் பானைகளில் செருகி வைத்திருந்த துணிச் சுருணைகள் தானாகப் பிடிங்கிக்கொண்டு தண்ணீர் குழாய்  போல அழகாகப் பீச்சிக் கொண்டிருந்தன. இதையெல்லாம் செய்வது யார் எனத்தெரியாமல் ஊர் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்த போது மந்திர தந்திரம் பழகிய அவனுடைய தாத்தா அவனை இரண்டு வயதிலேயே பாலர் பள்ளியில் கொண்டு போய் அடைத்து விட்டார்.
 இன்னும் ஒரு வருஷம் கழிந்தால்தான் பாலர் பள்ளி என்று சொன்ன வாத்தியார் அம்மாவிடம் பூனை செய்யறது கொட்டம், அடிச்சா பாவம். ஊர் ஜனங்க ஒன்னுபோல இருக்காது அம்மா. கட்டி வச்சி காப்பாத்தனும் என்று தன் மனக்கிலேசத்தை கொட்டினார் தாத்தா. என்ன பேசுகிறார்கள் என்று புரியாதது போல ஏக்கமாக நிமிர்ந்துப் பார்த்த அவனை இரண்டு பேர் பிடித்துக்கொள்ள தாய்வழிப் பாட்டனார் வெளியே போய் விட்டார். துள்ளிய துள்ளலில் பாலர் பள்ளியே பதகளப்பட்டது. நாக்குப் பூச்சிமாதிரி இருந்துக்கிட்டு என்னா துள்ளு துள்ளுது? பொம்மைக் கூண்டிற்குள் அடைத்துப் போட்டு விளையாட்டுப் பொருள்களை உள்ளே நிரப்பினார்கள். அப்படித்தான் ஆரம்பித்தது, ஒரு அரசியல் சரித்திரம்.
பாட்டிகள் சொன்ன கதையை அப்படியே ஒப்பிப்பதைப் பார்த்த டீச்சர் அக்கா பாட்டுச் சொல்லிக் கொடுத்தார். வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள். வெள்ளைத்  தாமரை போல இருப்பாள் வீணை சொல்லும் ஒலியில் சிரிப்பாள். நல்லா கவனிடா, இதே போலச் சொல்லு. வெள்ளைத் தாமரை பூவை எடுத்தாள் வீணை செய்து ஒலியில் இழைத்தாள்.  வார்த்தைகள் மாறினாலும் வாக்குகள் தவறாமல் திருப்பிச் சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
எதை எழுதினாலும் அப்படியே பார்த்து எழுதியவனை கரும்பலை முன் தூக்கிப் பிடித்து எழுத வைத்தார். அச்சடித்த எதைக் கொடுத்தாலும் அப்படியே எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக் கொண்ட அவனை வைத்து வித்தை காட்டி விளையாடினார்கள் ஊரின் சான்றோர்கள். தினத்தந்தியும், திரைப் பாடல் புத்தகமும் திகட்டாத தெளிதமிழ் ஏடுகளாக விரிய, கண்டதைப் படித்துக் காட்டும் பண்டிதனான் அந்தப் பாலகன்.
காலத்தின் சுழல் கரைகளைக் கடந்து ஓடத்தொடங்கியது. யாரைத்தான் விட்டு வைத்தது ஆதி அந்தமற்ற அந்தக் காலத்தின் வெள்ளம். ஒரு ஆடிப் பெருக்கன்று மளிகைக் கடையில் பழைய காகிதக் கட்டுகளுக்கு இடையில் முன்னட்டை இல்லாத பின்பகுதி பாதிக்கு மேல் சிதைந்த ஏட்டுச் சுவடியொன்றைக் கண்டுபிடித்தான் எழுத்தறிந்த இளந்தமிழன். ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்ட அந்த ஏட்டினைச் சட்டைக்குள் மறைத்து எடுத்து தனியிடம் சென்றவன் அங்கிருந்து விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து பன்னெடும் ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் சென்று கரைந்தான்.
உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானவப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். கனவுகள் மறந்தன, காலம் மறைந்தது, காட்சிகள் மட்டும் கண்முன் விரிந்தன. எங்கெல்லாம் கொண்டு சென்றது அந்தச் சுவடி. அவன் யார்? வந்தியத்தேவனா, அருள்மொழியா, கரிகாலனா? இல்லை. வானதி, குந்தவை, நந்தினி, பூங்குழலி? சீச்சீ எல்லோரும் பெண்கள், பெரியவர்கள், ஆறடி உயரம், ஐம்பது கிலோ தங்கம்.
 வெட்கமும் வேதனையும் துரத்த. வார்த்தைகளின்  இருண்ட சுரங்கப் பாதையில்  காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான் அவன். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சம நிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான் சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே!
தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்ட இடத்தில் ஏடு முடிந்து போயிருந்தது. எங்கே போயின அடுத்த அத்தியாயங்கள்? நிலவறைக்குள் சிக்கிக்கொண்ட தன் வாழ்க்கையே அத்துடன் முடிந்து போனது போல உள்ளுக்குள் கிடந்து அழுது புலம்பினான். எங்கே கிடைக்கும் அந்த 42 ஆம் அத்தியாயம்? யாரிடம் இருக்கும்? எப்படி அதனைப் பெறுவது? பழைய பாரதக் கதை ஏடுபோல பெரிய புத்தகம், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை புத்தகத்தைவிட அழகான தாள் அழகான படங்கள். மனதை மயக்கும் மாய மனிதர்கள்.
பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். வலையை விரித்துக் கொண்டு சிலந்தி காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான்; அப்புறம் மீளுவதில்லை! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே வாரத்தில்  அனுபவித்தாகி விட்டது. ஆனால் இந்த புத்தக ஆசை? புதிதாகச் சேர்ந்து கொண்ட ஒரு சிலந்திவலையா? இதிலிருந்து வெளியே விழுந்தால்தான் உயிர் போய்விடுமா. அல்லது அந்த ஆசை வலைதான் தான் வாழும் இடமா? அல்லது தானே ஒரு சிலந்தியா? இந்த வலை முற்றுப் பெறாத வலை, அதன் மிச்சப்பகுதிகள் எங்கே?  தெய்வமே! ஊனும் உறக்கமும் அற்ற உள்ளத் தடுமாற்றம். மிச்ச வலையைத் தானே பின்னிப் பார்த்தால் என்ன?
ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்த்தான் சோழர்கள் வரலாற்றை எங்கு படிக்கலாம்? கதை என்று சொன்னால் காது பிய்ந்து போகுமே. ஆசிரியர்கள் ஆறாம் வகுப்பில் அதையெல்லாம் படிக்கலாம் என்றார்கள். மர்மம் அவிழவில்லை மனதும் தெளியவில்லை. ஒரு நாள் வகுப்பாசிரியர் வராததால்  புதிதாக ஒரு ஆசிரியை வகுப்பைப் பார்த்துக் கொள்ள வந்தார். மதாம் என்று அழைப்பதைவிட அக்கா என்று அழைக்கத் தகுந்த உருவம். கண்ணாடி அணிந்திருந்தாலும் கண்களை உற்றுப் பார்த்துப் பேசும் நிமிர்வு. குந்தவை போலவா, இல்லை நந்தினியா? இல்லை இல்லை தீய பெண்மணிகள்தான் நந்தினிகள், சதி செய்யக்கூடிவர்கள். இவர் யார்? எதிலும் அடங்கவில்லை? கைகட்டி வாயில் விரலை வை என்று சொல்லாமல் கேள்வி பதில் விளையாட்டு ஒன்றை நடத்தத் தொடங்கினார். கரும்பலகையில் பதில் சொல்பவர்கள் பெயர் ஒவ்வான்றாக. பதில் தெரிந்தால் கை உயர்த்தவேண்டும். வகுப்பில் மூன்று பேரைத்தவிர வேறு யாரும் கையுயர்த்தப் போவதில்லை. அவனும் மற்ற இருவரும் போட்டியில் சிக்கினர். கேள்விகள் மாறிமாறி வந்துகொண்டிருந்தது, அதிகக் கோடுகள் அவனுக்கு விழுந்துகொண்டிருந்தன.
இலங்கை இந்தியாவின் எந்தத் திசையில் அமைந்துள்ளது? காற்றில் பெருகிய ஓசை போல ஏதோ ஒன்று அவனைச் சூழ்ந்துகொள்ள  ‘உங்களில் இலங்கைக்குப் போக யார் யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?’ அவன் வாய் முணுமுணுத்தது. அக்கா குனிந்து ‘என்ன சொன்ன?’ என்றார். ஒன்றுமில்லை மதாம். இல்ல எதோ சொன்னியே திருப்பிச் சொல்லு. அவன் தலையைக் குனிந்து கொண்டு அமுத்தலாக இருக்க ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது? அக்கா அழுத்தமாகக் கேட்டார். அவனையும் மீறி வாக்கியங்கள் பெருகின. கோடிக்கரை வழியாகப் போகலாம், கடலைக் கடப்பதற்கு அது நல்ல வழி. ஆனால் இங்கிருந்து கோடிக்கரை வரையில் செல்வது கடினம் நெடுகிலும் பகைவர்கள்; ஆங்காங்கே ஒற்றர்கள். ஆகையால் சேதுவுக்குச் சென்று அங்கே கடலைத் தாண்டி மாதோட்டத்துக்கருகில் இறங்குவதுதான் நல்லது. இலங்கை போகிறவர்கள் சமயத்தில் படகு வலிக்கவும், கட்டுமரம் தள்ளவும், கடலில் நீந்தவும் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். இங்கே யாருக்கு நீந்தத் தெரியும்? அக்காவின் முகத்தில் அப்படியொரு ஆனந்தம், ‘எனக்குத் தெரியும், எனக்கும் தெரியும்’ என்ற குரல் அக்காவின் உதடுகளில் இருந்து எழுந்தது.
அடுத்த மூன்று மாதத்தில் அக்கா கொடுத்த அந்த ஏட்டின் ஐந்து பாகங்களையும் வாசித்து முடித்திருந்தான் அவன். அக்காவும் அவனும் நேரம் கிடைக்கும் பொதெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அத்தியாயங்களின் பெயர் சொல்லும் விளையாட்டு, யார் பேசியது இது என்ற விளையாட்டு. ஓயாத வார்த்தை விளையாட்டு. ஒரு ஆண்டு கழித்து ஆசிரியர் பயிற்சி முடிந்து அக்கா செல்ல வேண்டிய காலம் வந்த போது இருவருக்கும் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.  ‘உன்னிடமிருந்து தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறேன். உன் துயரம் நிறைந்த சிந்தனைகளில் நான் குறுக்கிட விரும்பவில்லை.’ அக்காதான் பேசினார். அவன் மெலிதாக முணுமுணுத்தான், ‘அக்கா நல்ல பணிகள் பல செய்ய வல்லவளாவாள்.  அவளை அறிந்த அனைவராலும் வந்தனை செய்வதற்கு உரியவளாக விளங்குவாள்.’ அக்கா கன்னத்தை வலிக்கும் வரை திருகினார்.
அக்கா வகுப்பில் பேசினார், ‘நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றறை ஆண்டு காலம் என்னிடம் தொடர்ந்து படித்து வந்ததபோது நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.’  அக்காவும் அவனும் வெளியே வந்த போது விழுந்து விழுந்து சிரித்தனர்.
பழைய புத்தகக் கட்டுகளுக்கிடையில் கிடைத்த பல புத்தகங்களை அவன் அக்காவுக்குக் கொடுத்திருந்தான், அவற்றைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னபோது அவன் பதறிப்போய் மறுத்துவிட்டான். தெரியாமல் தாத்தாவின் மளிகைக் கடையில் இருந்து எடுத்து வந்தது, திருப்பி வைக்க முடியாது. அப்படியா சரி இந்தப் புத்தகம் எல்லாம் என்னிடம் இருக்கட்டும். இது உனக்கு என புதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். என்னிடம் இரண்டு இருக்கிறது ஒன்று வைத்துக்கொள், நான் இன்னும் படிக்கவில்லை, படித்தாலும் பக்கம் நகரவில்லை. வெளிநாட்டுச் சூழல் வெளிநாட்டுப் பெயர்கள். இனிதான் படிக்க வேண்டும். நீயும் பிறகு படித்துப்பார். இப்போது புரியவில்லை என்றாலும் பிறகு புரியும்.
அழகான புத்தகம், அழகான எழுத்து. முதல் முதலாகப் புத்தம்புது கதைப்புத்தகம். புதிய பாடப் புத்தகங்களின் வாசனையில் மயங்கி அதன் மீதே முகம் வைத்துத் தூங்கிப் பழகியவனுக்கு அந்தப் புத்தகத்தின் வாசனை புதிதாக இருந்தது. சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது. சோவியத் நாடும் அதன் வாசமும் புதிதாக இருந்தது. அதற்குப் பிறகு அதே புத்தகம் பல முறைகள் பழைய புத்தகக் கட்டுகளில் கிடைத்திருந்தாலும் அந்தப் புத்தகம் போல வாசனை இல்லை. எழுத்துக்கு வாசனை உண்டு என்பதை அவன் கண்டுகொண்ட நாட்கள் அவை.
தமிழ்தான் என்றாலும் புரியாத வாக்கியங்கள். மெல்ல மெல்லத்தான் புரியத் தொடங்கியது, ‘புகையும் எண்ணை அழுக்கும் நிறைந்த காற்றில் தொழிலாளர் குடியிருப்புக்கு மேல் நாள் தோறும் அந்த ஆலைச்சங்கு அலறிக் கூச்சலிட்டது.’  ஊரின் வடக்குப் புறத்தே மூன்று கல் தூரத்தில் இருந்த முதல் ஆலை தொடங்கி மற்ற மூன்று ஆலைகளின் சங்கும் புதிதாகக் கூச்சலிட்டது. நீச்சல் தெரியாத அவனைக் காலச்சுழல் அப்படித்தான் இழுத்துச் சென்றது.
மூன்றாம் பாகம்: கிளை நூலகத்தில் ஒரு நிலவறை
அநேக நாட்கள் அப்படித்தான் கழிந்தன. கிளை நூலகத்திற்குள் சென்று பத்திரிகை மட்டும்தான் படிக்கலாம், ஆனால் உள்ளே சென்று புத்தகம் பார்க்க முடியாது. மெல்ல மெல்ல நூலக உதவியாளரிடம் சிநேகமாகி நூலகர் இல்லாத நேரங்களில் உள்ளே சென்று அலமாரியிலிருந்த புத்தகங்களைப் பார்க்கும் சந்தோஷமான நாட்கள் வாய்த்தன. ஒரு நாள் உதவியாளர், ஒரு நாள் நூலகர் என ஒப்பந்த அடிப்படையில் வெளியே சென்று விடுவார்கள் அதனால் ஒன்று விட்டு ஒருநாள் புத்தகங்களை உள்ளே இருந்தே படிக்கத்தொடங்கினேன். துடைப்பது சுத்தம் செய்வது பின்னால் இருந்த இடத்தில் வைத்துப் புத்தகங்களைப் பதிவேட்டில் எழுதுவது, டீ வாங்கிவருவது எனப் பல்வேறு பணிவிடைகள் செய்து ஒருவழியாக இருவருக்கும் செல்லப்பிள்ளையான பிறகு புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கும் அந்த நாள் வந்தது. வயதை மாற்றி எழுதி வாசகசாலை உறுப்பினர் ஆனேன். எனக்கென ஒரு பக்கம் பதிவேட்டில் முதன் முதலாக எழுதிவிட்டு எடுத்துச் சென்ற புத்தகம் சாமிநாத சர்மாவின் ‘கிரீஸ் வாழ்ந்த வரலாறு’.
எத்தனையோ புத்தகங்கள் பழைய புத்தகக் கட்டுகளில் இருந்து கிடைத்தபோதும் முன் அட்டை பின் அட்டையுடன் முழு புத்தகமாக ஒன்றை எடுத்துச் சென்று படித்த அந்த நாள் கிளர்ச்சியால் நிறைந்த  ஒரு சனிக்கிழமை. கோடை என்றாலும் எங்கள் ஊரின் தென்னைக் குளுமையில் அற்புதமான மணிநேரங்கள்.  வரலாறு என்பதால் எடுத்துச் சென்று வாசிக்கத்தொடங்கிய எனக்கு சற்று ஏமாற்றம்தான், ஆனால் சில பக்கங்கள் கடந்தபிறகு மனதைப் பற்றிக்கொண்டது. திங்கள் கிழமை விடுமுறை என்பதால் செவ்வாய்க் கிழமை இன்னொரு புத்தகம் எடுக்கச் சென்றேன். என்ன புரியலயா என்றார் லைப்ரேரியன் மிசே. படிச்சி முடிச்சிட்டேன் மிசே. படிச்சி முடிச்சிட்டியா, பக்கம் பக்கமா படிச்சயா வார்த்த வார்த்தயா படிச்சயா? பத்தி பத்தியா படிச்சேன். வினோதமாகப் பார்த்தவர் வாரம் ஒரு புத்தகம்தான் என்றார், என் முகம் வாடியது. சற்று நேரம் கழித்து வெளியே பத்திரிகை படித்துக்கொண்டிருந்த என்னை உள்ளே அழைத்து சரி சரி எடுத்துப்போ என்றார். துள்ளிக் கொண்டது மனம், துயரம் நீங்கித் தெளிந்தது உள்ளம். கடலைக் காட்டில் எலிக் கூட்டம்போல, கருவாட்டுக் கூடையைச் சுற்றி வரும் பூனை போல நூலகத்தின் அலமாரிகளைச் சுற்றி வரத்தொடங்கினேன். பள்ளிக்கூடத்தில் பாதிநேரம் பதுக்கி வைத்துப் படிப்பது பழக்கமாகிவிட்டது. முதல் மதிப்பெண் மாணவன் என்பதால் மாடு எங்க மேஞ்சா என்ன பால் கொடுக்க வீட்டுக்கு வந்தா சரி என உபாத்தியாயர்கள் உள்ளம் நினைத்தது.
காலம் மீண்டும் தன் சதிவேலையைத் தொடங்கிவிட்டது. ஒருநாள் புத்தம் புதிதாகப் புத்தகங்கள் பெட்டி பெட்டியாக வந்து சேர்ந்தன. நூலகம் இருந்த இடம் ஒரு பழைய கால வீடு, பின் பக்கம் பெரிய இடம் புத்தகங்களை அங்கு வைத்துதான் பிரிப்பதும் பதிவு செய்வதும். பெரிய வேலைதான், என் பங்கும் இருந்தது.  விடுமுறை நாட்களில் ஒவ்வொரு அட்டைப் பெட்டியாகப் பிரித்து பதிவேட்டில் எழுதும் வேலை. உண்மையில் அழகற்ற கையெழுத்து என்னுடையது, ஆனால் அழகான கையெழுத்து போல மாற்றி எழுதுவேன், அதனை வரைதல் என்றுதான் சொல்லவேண்டும். அன்று பிரித்த கட்டில் வந்து சேர்ந்தது ஆபத்து. ஐந்து பாகங்கள் கொண்ட அந்த அதிசய ஏடு. அதே கதைதான், ஆனால் புத்தகமாக. மூச்சுத் திணற அதனை தனியே எடுத்து வைத்தேன். உடனே ஒரு முறை படிக்கவேண்டும். ஐந்து பாகத்தையும் பக்கத்தில் வைத்தபடி. என்ன செய்வது? சதித்திட்டம் ஒன்றும் செல்லுபடியாகாது. ஒரு புத்தகம்தான் ஒரு தடவைக்கு.
ஐந்து புத்தகத்தையும் அப்படியே  படிக்க வேண்டுமே!  வந்து சேர்ந்தார் வந்தியத்தேவர், அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர், பிரஞ்சுச் சம்பளம் பெறும் பெரிய மனிதர். என்ன மிசே இந்த தடவ நம்ம புத்தகம் வந்து சேர்ந்ததா? என்று கேட்டபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பொன்னியின் செல்வன் இல்லாமல் புத்தகசாலையா? சமீபத்துல பொன்னியின் செல்வன் படிச்சவங்க யாரு ரெஜிஸ்தெர பாத்துச் சொல்லுங்க மிசே. இந்த வருஷம் புத்தகம் ஒரு தடவகூட வெளிய போகல. பழைய புத்தகம் கிழிஞ்சி கந்தலானதால உள்ளே கட்டிப்போட்டாச்சு. யாராவது முழுசா படிச்சா உங்க கிட்ட சொல்லனும்ணு எனக்கு கட்டளையாச்சே மிசே.  சொல்லியிருக்க மாட்டேனா? அத்தனையும் கேட்டு அதிர்வடைந்த மனத்தில் குயுக்தி புகுந்தது. எதுவும் தெரியாதது போல உள்ளே சென்று லைப்ரரியனிடம் சொன்னேன். பொன்னியின் செல்வன் படிக்கனும் மிசெ.  இரண்டு பேரும் அர்த்தம் நிறைந்த புன்னகை புரிந்தனர். புதுசா வந்திருக்கு, பதிவு செஞ்சதும் எடுத்துப் போகலாம். இல்ல மிசே அஞ்சி புத்தகமும் அப்படியே படிச்சிட்டு அடுத்த வாரம் தந்திடரேன். மீசையைத் தடவியபடி பிரஞ்சுப் பெரியவர் ஒரு வாரத்தில அஞ்சு புத்தகமா பாக்கத்தான் முடியும் படிக்க முடியாது கம்ராத்.  நூலகர் சொன்னார் இது ஒரு புத்தகப்பேய் படிச்சிடும், படிச்சி முடிச்சிடும். அப்படியா? சரி பந்தயம் வச்சிக்கலாம், அஞ்சி புத்தகம் பதினைஞ்சி நாள். பிறகு பரிட்சை வைப்போம்.  கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னா அஞ்சி பாகம் புது புத்தகம் பரிசு. துள்ளிக் குதித்தது மனசு, தூண்டியில் சிக்கியது திமிங்கிலம். வசமாக மாட்டிக்கொண்டாய் வல்லவரையா! சோதனை எங்கே? இங்கதான்,  இது நம்ம வீடுதானே. பின் பக்கம் மூடியிருப்பது பெரிய இடம் பிப்லியெதெக் இருப்பது சின்ன இடம். பின் வாசல் வழியா உள்ள வந்தா மண்டபம் போல இருக்கும்.  நூலகத்தின் பின் பகுதி அடைந்தே கிடந்ததைப் பார்த்து ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்தது சரிதான். நிலவறை இல்லாத பழையகால பங்களாவா? சோதனை நடக்கும் இடம் அதுதானா? பின்பகுதி திறக்குமா? ஐந்து ஏடுகளும் எனக்கு பரிசாகக்கிடைக்குமா? கற்பனைக் குதிரை கடுகிப் பறந்துகொண்டிருந்தது. இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்துக்கு உள்ளேயிருந்து மங்கை ஒருத்தி வெளிவந்தாள். மேகங்களுக்குப் பின்னாலிருந்து மின்னல் தோன்றுவதுபோல அந்தப் பொன்வண்ணப் பூவை கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் திகழ்ந்தாள். கற்பனையில்லை நிஜம்தான். பப்பா என்ன இங்கேயே உட்கார்ந்துடிங்க? அவருடை மகள்தான். பத்திரிகை, செய்தித்தாள் பகுதியில் இருந்து உள்ளே வந்திருந்தாள், இல்லை வந்திருந்தார்,  இல்லை வந்து சேர்ந்திருந்திருந்தார் வனிதாமணி.  வானதி இங்கப்பார் ஒரு அதிசய பாலகன், பொன்னியின் செல்வன் சான் லீவ்ரயும் பத்துநாள்ள படிச்சிடுவன்னு சொல்லிக்கிட்டு நிக்கிறான். சோதனையை தொடங்கலாமா? பேரவையைக் கூட்டலாமா? அப்படியே ஆகட்டும் அப்பா! அதிசய மங்கை, இல்லை அதிசய அக்கா, இல்லை அதிசய வானதி , ஒன்றும் சொல்ல முடியாமல் உள்நாக்கில் அடைபட்டது பேச்சு.  ஐந்து புத்தகத்தையும் பதமாக எடுத்து வந்து வெளியே தந்தார்கள் அப்பாவும் மகளும். இன்றிலிருந்து பதினைந்தாம் நாள் பின் வழியாக மண்டபம் திறக்கும், சுவடியின் சோதனை தொடங்கும். தோல்வியடைந்தால் என்ன செய்வது? என்ன செய்வது! தினம் வந்து எனக்குப் பொன்னியின் செல்வன் கதை முழுதும் வாசித்துக் காட்டவேண்டும் ஒரு வருஷத்திற்கு! பப்பா சொல்ல, பாவை கலகலவென நகைத்தாள். காலாண்டு விடுமுறை பதினைந்து நாள், ஒரு முறையா இருமுறையா இது நாலாவது முறை. பந்தயத்தில் ஜெயிக்காமல் பதுங்குவானா இந்தப் பச்சைத்தமிழ் ஏந்தல்.
நான்காம் பாகம்: மகுடம் வழங்கும் மாந்தர்கள்
அப்படி ஒரு கூட்டம் அங்கு இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. திங்கள் கிழமை மாலை நேரம், நூலகம் முன் பக்கம் அடைந்து கிடக்க பின்பக்க வாசல் திறந்து இருந்தது.  ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ பதாகை பின்புறம் துலங்க வசந்த மண்டபம் போல இருந்தது இடம். ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர், அதுவரை 56 பேர். பப்பா மிசேதான் அமைப்பாளர், தலைவர் நிறுவனர் பெரிய பழுவேட்டரையர் வரவேண்டும் போல. அனைவரும் காத்திருந்தனர். அவரும் வந்து சேர்ந்தார் 57 பேர். அந்த ஆண்டின் முதல் கூட்டத்திற்கு 57 பேர், இரண்டாவது கூட்டத்திற்கு 53 பேர், மூன்றாவது கூட்டத்திற்கு 46 பேர், இப்படியாக ஆண்டின் இறுதிக் கூட்டத்திற்கு 91 பேர் கலந்து கொள்ள வேண்டுமாம்.
 நீண்ட இடைவெளி நிம்மதியில்லாத காலம், ஆட்சி மாற்றம் நிகழவேண்டிய தருணம் இது. இந்த நிமித்தத்தில் இப்படியொரு நல்நிகழ்ச்சி. இந்தப் பிள்ளைக்குச் சோதனை வைத்து வென்றாலும், தோற்றாலும் நமக்கு நல்ல சகுணமே, இந்தப் பிள்ளையை நம் பேரவையில் இணைத்துக் கொள்வதாய் ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். புதிதாக நம் பேரவையில் யாரும் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பொன்னியின் செல்வம் பெருக வேண்டும் புதிய அரசியல் தொடங்க வேண்டும். நிறுவனர் தலைவர் தான் கொண்டு வந்திருந்த பெட்டியில் இருந்து ஒரு புத்தகக்கட்டை எடுத்து மேசை மேல் வைத்தார். அது மஞ்சள் நிறமான பட்டுத்துணியால் பொதியப்பட்டிருந்தது. வானதி அக்கா கொண்டு வந்த வேறு புத்தகங்கள்தான் திறக்கப்பட்டன. நான் வைத்திருந்த நூலக பாகங்கள் என்னிடம் இருந்தன. கேள்விகள் தொடங்கின, வானதி அக்காதான் முதல் கேள்வி கேட்டார். இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள்? கண்ணை மூடி காட்சியை நிறுத்திப் பதில் சொல்லத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒரு கேள்வி, கேள்விகள் வாள் வீச்சுப் போல இருந்தாலும் பதில்களின் கேடயம் என்னைக் காத்தது. சில கேள்விகளுக்கு பக்கம் பார்த்து படித்தும் காட்டலாம் என்றார் கருத்த அவைத் தலைவர்.
அந்தப் பேரவையில் பல வானதிகள், பல குந்தவைகள், பல அருள்மொழிகள், சில வந்தியத்தேவன்,  இரண்டொரு ஆதித்தியன், சுந்தரன் சிலர், ஒரே ஒரு பூங்குழலி. சோதனையில் நான் வென்றேன். இரண்டு கேள்விகளுக்கு  மட்டும்தான் நான் பதில் சொல்ல முடியவில்லை. அது ஒரு பிரச்சினையும் இல்லை என்று தலைவர் சொல்லிவிட்டார். வந்தியத்தேவனின் முதல் காதலி யார்? வந்தியத்தேவன் உள்ளத்தை உண்மையாகக் கவர்ந்த வனிதாமணி யார்?
பட்டுத் துணியில் பொதிந்த புத்தகம்தான் பரிசு என்று நினைத்த என் மனோராச்சியம் தூள்தூளானது. வேறு ஒரு கட்டு புத்தகத்தைப் பப்பா மிசே பரிசாகத் தந்தார். விருந்து தொடங்கியது. எல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது. ஒவ்வொருவராக வெளியேறிய பின் பப்பா மிசேவும் வானதி அக்காவும் பெரிய பழுவேட்டரையரும்தான் இருந்தனர். வெளியே நடந்து வந்தபோது வானதி அக்காவிடம் கேட்டேன் வந்தியத்தேவன் உள்ளத்தை உண்மையாகக் கவர்ந்த வனிதாமணி யார்? கரிகாலன் கொலை போல அதுவும் ஒரு மர்மம்தான் என்றார். அப்புறம் ஏன் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள்?  பெரியவனானால் உனக்கே புரியும். பப்பா மிசேவும் தலைவரும் என்னை அன்போடு அணைத்துக் கொண்டார்கள். நான் வாரம் ஒரு நாள் தலைவர் வீட்டுக்குச் சென்று பொன்னியின் செல்வன் வாசித்துக் காட்டவேண்டுமாம். அதற்கு ஊதியமும் உண்டு என்ற சொன்னபோது மனதில் ஒரு கலக்கம். அந்த தென்னைஞ்சோலை பங்களாவைப் பார்த்த போது கலக்கம் நீங்கி மயக்கம் வந்தது. அது ஒரு அதிசய உலகம். அங்குதான் எத்தனைச் சம்பவங்கள். எத்தனை ஆலோசனைக் கூட்டங்கள். ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்பதுதான் அவர்களின் உண்மையான அமைப்பு என்று பிறகு தெரிந்தது.
உலக வரலாற்றில் எத்தனையோ அதிசயங்கள், எத்தனையோ மர்மங்கள், அனைத்தையும் விளக்க யாரால் முடியும். ஆடித்திருநாள் அடியவர் பேரவையிலிருந்து அதன் அரசியல் கூட்டத்தில் உறுப்பினராக்கப்பட்டேன்.  அது ஒரு பெரிய வலைப்பின்னல்,  ஒருவரை மற்றவருக்குத் தெரியாது. ஆனால் தமிழகமெங்கும் அவர்கள் இருப்பதாகச் சொன்னார்கள், ஏன் உலகமெங்கும் பரவியிருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் மனது வைத்தால்தான் அரசியல் மாற்றமும் ஆட்சியில் மாற்றமும் வரும் என்றும் சொன்னார்கள். நம்பமுடியவில்லை அல்லவா? வாசகர்களாகிய உங்களைப் போலத்தான் நானும் நம்ப முடியாமல் திகைத்தேன். ஆனால் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே நடந்தது. கலைஞர் ஆட்சி நீங்கி புரட்சித் தலைவர் ஆட்சி வரும் அதற்குப் பிறகு அவர்தான் வாழ்நாள் மன்னாதி மன்னன் என்று சிலர் சொன்னது நடக்கும் என அப்போது யாராவது நம்பியிருக்க முடியுமா? நடந்ததே அத்தனையும் நடந்ததே!
ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதில் உள்ள மர்மம் இன்று வரை நீடிக்கிறது. ‘சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்’ என்ற ஒரு பாண்டிய மன்னனுக்கு விருதுப் பெயர் உள்ளது அதுவும் மர்மம்தான்.  அருள்மொழி வர்மன் உத்தம சோழனுக்கு மகுடத்தை அளித்துவிட்டு  ‘எது எப்படியானாலும் பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் நானும், என் நண்பரும் ஈழ நாட்டுக்குப் புறப்படுவது நிச்சயம். அங்கே எங்கள் காரியம் முடிந்ததும் கடல்களுக்கு அப்பாலுள்ள இன்னும் பல நாடுகளுக்கும் செல்ல உத்தேசித்திருக்கிறோம்.’ என்று சொல்லியதில் உள்ள செய்தியும் மர்மம்தான். ஆனால் இதெல்லாவற்றையும் விட ஒரு பெரிய மர்மம் யாரும் அறியாத காலகால ரகசியம் ஒன்று உள்ளது. கரிகாலன் கால் வழி ஒன்று புதுச்சேரி மண்ணில் இருந்து வருகிறது. காஞ்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் ஆதித்த கரிகாலர் ஒவ்வொரு முறையும் தங்கிச் செல்லும் வாகூர் ஏரிப்பகுதியில் இன்றும் உள்ளது பண்டசோழநல்லூர் என்னும் சிற்றூர். அது மற்றவர்களுக்குத்தான் பண்டசோழநல்லூர் உண்மையில் மாண்டசோழநல்லூர் என்பதே அதன் உத்தமப் பெயர். ஆதித்த கரிகாலன் அன்புக்கு அடிமையான ஒரு பெண் நல்லாள் வழி பிறந்த மகனும் அவன் வம்சமும்தான் மாண்ட சோழன் வம்சாவழி என்பது. உலகம் ஒப்பாத அந்த வம்சத்தின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலை நாட்ட ஒரு பெரும் தொண்டர் படை பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்தும் முடியாமல் போனது. ஆட்சியைக் கைப்பற்ற யார் முயன்றாலும் அவர்கள் கொலையுண்டு போவது என்ற சாபம் தொடர்ந்தது. காலத்தின் போக்கில் அந்தத் தொண்டர் படையும், சோழ வம்சமும் தம் திட்டத்தை மாற்றிக்கொண்டனர். அதாவது மாண்ட சோழன் மரபில் வந்த யாரும் இனி நேரடியாக ஆட்சி பீடம் ஏறக்கூடாது ஆனால் நாம் அடையாளம் காட்டும் ஒருவர்தான் ஆட்சியில் அமரவேண்டும். அவர்களே தமிழகத்தை ஆளவேண்டும். அதனை யாரும் தடுக்க முடியாது. அப்படித்தான் அவர்கள் திட்டமிட்டார்களாம்.
எனக்குத் தலைசுற்றத் தொடங்கியது. இதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள், இவர்கள் கண்டுபிடித்து உருவாக்கிய தலைவர்களா? மாகாளி பராசக்தி! என்ன ஒரு விபரீதம்! எப்படி இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பிப்பது. அதுவும் காலத்தின் ஓட்டத்தில் நடந்தது. அக்கா தந்த அந்த சோவியத் புத்தகம் புரியத்தொடங்கிய நாட்கள் அவை. அதனை பலமுறை படித்திருந்தேன். ஒருநாள் என் பையில் அதனைக் கண்ட பேரவையின் தொண்டர் ஒருவர், நிறுவனரிடம் சொல்லிவிட வசமாக மாட்டிக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை சோதனை வைத்தார்கள் பாதிக்கு மேல் பதில் சொல்லத் தெரியவில்லை.  ஒரு ஆண்டு அவகாசம் அளித்து மீண்டும் ஒரு ஆடிப்பெருக்கு அன்று பேரவை நடத்தும் சோதனையில் தேர்வடைந்து மீண்டும் செயல்வீரனாக வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார்கள். அளித்த உறுதி மொழி இது பற்றி யாரிடமும் நான் சொல்லக்கூடாது என்பதுதான்.
யாரும் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது தப்பித்து எங்கும் போய்விட முடியாது, எல்லா இடத்திலும் நாங்கள் இருப்போம். எந்தக் கட்சியிலும், எந்தக் கல்லூரியிலும், திரைப்படத்துறையில், பதிப்பகத்துறையில், ஊடகத்துறையில், மத்திய மாநில அலுவலகங்களில் நாங்கள் இருப்போம். நாங்கள் என்றால் நாங்களே அல்ல, அது அனைவருமாக உள்ள ஒரு மந்திர நிலை. அனைவருக்குள்ளும் கூடுபாய்ந்த அதிசய நிலை.
வானதி அக்கா திருமணம் ஆகி பிரான்சுக்குப் போன போது எப்படித் தப்பிக்கப்போகிறாய் என் இனிய நண்பனே என்றார். எப்படித் தப்பிப்பது? ஒரே வழிதான் உண்டு. ஓயாமல் படிப்பது, வேறு வேறு நூல்கள். அடுத்த ஆண்டு என்னைத் தேடிவந்த புதிய ஒரு பேரவை செயல்வீரர் நாளை ஆடிப்பெருக்கு சோதனைக்கு வரவேண்டும் என்று சொல்லிச் சென்றார். அந்த  ஆண்டும் சோதனையில் தோற்றேன். அடுத்த ஆண்டும், ஆனால் சோதனை தொடரும் மீண்டும் சேரும் வரை, சோதனை தொடரும்.
1982-இல் ஒருவழியாக ஆடிப்பெருக்கு அடியவர் கூட்டம் தன் செயல்திட்டத்தையும் அமைப்பு முறையையும் மாற்றியது என அறிவித்தார்கள்.  இனி யாரும் கூடுவதில்லை, புதிய சேர்க்கையோ விலகலோ இல்லை, ஆனால் ஒரு பணியைச் செய்யும்படி கட்டளை வந்தால், யார் வழியாக வந்தாலும் அதனை நிறைவேற்றிவிட வேண்டும். பிறகு தம்போக்கில் இருக்கலாம். இது எதைவிடவும் கொடுமை. யார் பேரவைச் செயல்வீரர்? யார் தூது சுமப்பவர்? யார் வெறும் தகவல் சொல்பவர்? எல்லாம் குழம்பிப்போக இன்று வரை தப்பித்தப்பி அலைந்து கொண்டிருக்கிறேன்.
இப்படியொரு ஏற்பாடு நடக்கக் காரணமான நிகழ்ச்சி என்ன? அது எனக்குத் தெரியாது. ஆனால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கவேண்டும் என்ற கனவு பன்னெடுங்காலமாக இருந்துவருவது யாவரும் அறிந்ததே. தம் வாழ்வின் பெரும் பயனே பொன்னியின் செல்வனைத் திரைக்காவியமாக்குது என்று கலைஞர்களும் அந்தக் காவியத்தை திரையில் கண்டுகளிப்பதுதான் தன் பிறவிப் பெரும்பயன் என்று ரசிகர்களும் ஏங்கிக் கிடந்த ஐதிகம் மறுக்க முடியாத உண்மையல்லவா. பேரவையின் ஒவ்வொரு கூட்டத்திலும் காவிமாக்கும் திட்டம் தீட்டப்படுவது நெடுநாள் வழக்கம். யார் அருள்மொழி வர்மன், யார் கரிகாலன், யார் வானதி, யார் குந்தவை எனத் தொடங்கும் விவாதம் நாள் கணக்கில் நீண்டு ஒவ்வொரு முறையும் முடிவற்ற மோதலில் முடிந்து போகும். அத்தனைப் பாத்திரங்களையும் ஏற்க நடிகர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் சிலர் கணக்குச் சொல்வார்கள். அதைவிட யாரை இயக்குநாராக ஆக்குவது, யார் வசனம் எழுதுவது? இப்படியாக அடிதடியில் முடிந்த கூட்டங்கள் அனேகம். இளைய உறுப்பினர்கள் இது பற்றி நேரம் போவது தெரியாமல் பேசிய காலங்கள் உண்டு. அதைவிட அதற்கான நிதி ஒன்றைத் திரட்ட தீர்மானம் நிறைவேற்றி பொக்கிஷம் ஒன்றும் உருவாகத்தொடங்கியதாம். தமிழகத்துக் கதாநாயகர்களிடம் ரகசியமாகச் சென்று பேச ஒரு குழுவும் அமைக்கபட்டதாம். கதாநாயகிகள் பலர் ஒப்புக்கொண்டாலும் காலமாற்றத்தில் அவர்கள் காணாமல் போனார்களாம். காதாநாயகர்கள் எத்தனைக் காலமானாலும் வந்தியத்தேவனாக நடிக்காமல் சாகமாட்டேன் என்ற உறுதியாக இருந்தார்களாம். ஒரே ஒரு நாயகி மட்டும் காவியப் பேரவையினரின் கருத்தில் மாறாமல் இருந்ததாகவும் பின்னால் அவரே கற்பனை செய்யாத உன்னத பாத்திரத்தை  பேரவையினர் வழங்க இருப்பதாகவும் கமுக்கமான பேச்சுகள் இருந்தன. அதைவிட தமிழ் நடிகர்கள் யாரும் இந்தக் காவியத்திற்கு பொருந்தமாட்டார்கள் என்று ஒரு கூட்டம் முழுக்க  முழுக்க வடநாட்டு நாயகர்கள் நாயகிகளை வைத்து  படத்தை எடுக்க இருந்ததாகவும் அதில் செந்தமிழ் பேச்சுக்கு மட்டும் டப்பிங் குரல் தரவேண்டும் என தமிழக நாயகர்கள் சிலரிடம் கேட்டதாகவும் வதந்தி பரவி ஆள் கடத்தல் வரை போய்விட்டதாக உள்வட்டாரப் பேச்சுக்களும் இருந்தன. எது எப்படியானாலும் பொற்குவியல், பொக்கிஷம் தொடர்பாகத்தான் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டு வெளியே சொல்லமுடியாத விபரீதங்கள் ஏற்பட்டதாம். ஆள் ஆளுக்கு நிதி திரட்டுவது, காவியப்படைப்பு பற்றி கலந்துரையாடல்  ஏற்பாடு செய்வதாக பொற்காசுகளை கையாடல் செய்வது என பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யா மார்கள் சிலர் அமைப்பை மாற்றத் திட்டமிட்டதாகவும் அரசல் புரசலாகப் பேச்சு இருந்தது.
சரித்திரத்தின் தீராத பக்கங்களில் தன் இறகால் விதி எழுதும் காவியத்தில் யார் யாராக மாறுவார்கள் என யாரால் சொல்ல முடியும். எவரின் நடமாடும் நிழல்கள் நாம் எனத்தெரியாமல் குழம்பும் மனம் படைத்த சிலரில் நானும் ஒருவனாகி மறைந்து திரிய வேண்டிய நிலைக்கு ஆட்பட்டேன். அதற்குப் பிறகு அது பழகிப்போனது. யாராவது ஒருவர் எதாவது ஒரு கூட்டத்தில் என்ன நண்பரே சென்ற முறை அளித்த கட்டளையை இன்னும்  நிறைவேற்றாமல் இருக்கிறீர்கள் என்று  சொல்லிவிட்டு மறைந்து போவார். எழுதத் தொடங்கிய பின் இது இன்னொரு வடிவில் தாக்கியது.
 ஒவ்வாரு எழுத்து வெளிவரும் போதும் நல்லதில்லை நண்பரே காலத்தின் கட்டளையை நிறைவேற்றுங்கள் வழிமாறிச் செல்வது நல்லதில்லை என்று அங்கே நிற்கும் ஒருவர் சொல்லச் சொன்னதாக யாராவது ஒருவர் சொல்லிவிட்டுக் கைகாட்டுவார் பார்க்கும் போது அங்கிருந்து ஒருவர் நழுவிச் செல்வார். பெயரை மாற்றி, உருவத்தை மாற்றி, எழுத்தின் வடிவத்தை ஓயாமல் மாற்றி இன்றுவரை தப்பித்தும் மறைந்தும் வாழ்ந்து வரும் எனக்கு பல மின்னஞ்சல்களில் கட்டளைகள் வரத்தொடங்கிய காலங்களும் உண்டு. ஆனால் இது போன்ற அச்சுறுத்தல், அவகாசம் எல்லாம் கொஞ்சம் கூடுதல் அல்லவா?  இன்னும் ஒருநாள் அவகாசம். யார்தான் அந்த இன்னொரு ஆள்? அவர் தப்பியதற்கு நான் என்ன செய்ய முடியும்? என் குரலைப் பின்தொடரும் இந்த நிழல்கள் யார்?
ஐந்தாம் பாகம்: மூல ஏடு
கண்ணுறக்கம் இன்றித் கலங்கிக் கிடந்த எனக்கு மறுநாள் காலை முகநூல் தகவலறையில் ஒரு செய்தி வந்திருந்தது. வணக்கம்! நான் பொன்னி,  பிரான்சில் இருக்கிறேன். என் தாத்தா உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறார். உங்கள் தொலைபேசி எண் தரமுடியுமா? உங்கள் எழுத்துகளை நான் படித்திருக்கிறேன். உங்கள் முகநூல் பக்கங்களையும் படித்துவருகிறேன். உங்களைத் தெரியும் என்று தாத்தா சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தாத்தா பேச விரும்புகிறார், எண் தருவீர்களா? பிரான்சில் இருந்து பொன்னி? எல்லா மர்மங்களுக்கும் ஒரு முடிவு உண்டுதானே. வந்தது வரட்டும் என எண்ணைப் பதிந்தேன். நண்பகலில் ஒரு வெளிநாட்டு அழைப்பு, உண்மைதான் அந்தச் செய்தி உண்மைதான்.
வணக்கம் என்றேன். வணக்கம் தம்பி! உங்கள எனக்குத் தெரியும், பேத்திதான் சொன்னா. நீங்க இப்ப ஒரு எழுத்தாளர்னு, என்ன நாபகம் இருக்கா? பெயர் சொல்லுங்க அய்யா நினைவுபடுத்திப் பாக்கிறேன்.  பெயர் சொன்னா தெரியாது நிறுவனர் தலைவர் அப்படின்னாதான் உங்களுக்குத் தெரியும். அய்யா நீங்களா? நலமா இருக்கிறீங்களா? எப்ப பிரான்சுக்குப் போனீங்க? புதுச்சேரிய விட்டு எங்கேயும் போகமாட்டேன்னு சொல்லுவீங்களே. நல்ல நாபக சக்தி தம்பி உங்களுக்கு. ஆமா அந்த வயசுலயே அத்தனைக் கேள்விகளுக்குப் பதில் சொன்னீங்களே. உங்க நாபக சக்திதான் எனக்கும் பப்பா மிசேவுக்கும் பிடிச்சது. ஞாபக சக்தி அதுதானே எல்லா துயரத்திற்கும் காரணம், மனதில் ஓடியது ஒருவரி. பப்பா மிசே எப்படி இருக்கிறார், அவரும் பிரான்சில்தானா அய்யா? அவன் எங்கள விட்டுப் போயி பத்துவருஷமாச்சி, நான் இங்க வந்து அஞ்சு மாசம்தான் ஆவுது. அதனாலதான் என்னைத் தேடராங்க. உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லிடனும். இன்னும் எத்தன காலம் இருப்பேன்னு தெரியாது. எல்லாத்தையும் சொல்லிடனும்.
நேற்று வந்த மிரட்டல் செய்தி, இன்று வந்து பேசும் இந்தப் பெரியவர். என்னத் தேடிக்கிட்டு இருக்கு ஒரு கூட்டம் அது உங்களயும் தேடிவரும். கவனமா இருக்கணும். நள்ளிரவில் வந்த செய்தியைச் சொன்னேன். அது தந்த ஒருநாள் அவகாசத்தையும் சொன்னேன். இப்போ நீங்க அதன் தலைவர் இல்லையா? தலைவர் நிறுவனர் எல்லாம் நான்தான் ஆனால் எல்லாம் வெறும் நாடகம். அவர்கள் என்னைத் தேடவில்லை மூல ஏட்டைத்தான் தேடுகின்றனர். அதன் வழியாக புது வம்சம் ஒன்றைக் கண்டுபிடித்து ஆட்சியில் அமர்த்தச் சிலர் திட்டமிடுகிறார்களாம். அப்படியென்றால் தப்பித்த இருவரில் நான் ஒருவன், மற்ற ஒருவர் நீங்களா? ஆமாம் தம்பி! என்ன இது மர்மமுடிச்சுகள் இறுகிக்கொண்டே செல்கிறது. தலைவரே தப்பிப்பது என்றால்?  நான் இதில் எங்கு வருகிறேன்? அவர் குரல் சீராக இல்லை, இணைப்பும் பலமுறை துண்டிக்கப்பட்டு மீண்டு வந்தது.  பேசி முடிந்த போது அவருக்கு நன்றி சொன்னேன். இன்று மீண்டும் வரும் அச்சுறுத்தலை கடந்துவிடலாம் என்று தெம்பும் மனதில் வந்தது.
அவர்தான் அந்த அமைப்பைத் தொடங்கியவர், 1956-இல் அந்தப் பேரவையைத் தொடங்கினார்.  ‘ஆடித்திருநாள் அடியவர் பேரவை’ என்று தொடங்கப்பட்ட அந்த அமைப்பு பின்னாளில் ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டம் என்ற மாற்றுப் பெயருடன் அரசியல் செயல்களில் ஈடுபட்டது. பொன்னியின் செல்வம் என்றும் அதை அவர் குறிப்பிடுவது வழக்கம். அந்த அமைப்பின் நோக்கம் கரிகாலன் வம்சத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது என்று காலப்போக்கில் முடிவுசெய்யப்பட்டது. அதற்கான சரித்திரச் சான்றுகளை அவர்தான் தன்னிடமிருந்த மூல ஏட்டிலிருந்து படித்து அவர்களுக்குச் சொன்னார். அந்த மூல ஏட்டை எல்லோரும் படிக்க முடியாது என்பதாலும், அதனை அப்படி எல்லோருக்கும் காட்டிவிடமுடியாது என்பதாலும் அதன் கதையை அப்படியே சொன்ன பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிதான் அவர்களின் வரலாற்று ஆவணமாக, வாழ்க்கைப் பத்திரமாகவும் பரவத் தொடங்கியது. அடியவர் பேரவை ஒரு மாறுவேடமாகவும் அரசியல் கூட்டமே முழுமையான செயல் வீரர் அமைப்பாகவும் மாறத்தொடங்கிபோது நிறுவனத் தலைவருக்கும் அதன் புரவலருக்கும் கூட அச்சம் தோன்றியது.
மாண்ட சோழன் வம்சத்தின் ஆட்சி நடக்க உண்மை மனிதர்களை விட கற்பனைப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவது என்றும் தமக்கு வேண்டியதை தவறாமல் சாதித்துக்கொள்வது என்றும் ஒரு திட்டத்தை முன் வைத்தனர் தனவந்தர்களான சில செயல் வீரர்கள். அந்தப் பாத்திரங்கள் மக்களுக்குப் பிடித்த, அதிகம் பழகிய கதை மாந்தர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவராக ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் நாம் பண்டைய சோழ ஆட்சியை மீண்டும் நடத்தலாம் என்றும் சிலர் கூறினர். இதெல்லாம் நடக்குமா என்று நிறுவனர் கேட்டபோது,  ஆட்சியில் இருப்பது யாராக இருந்தாலும் ஆளப்போவது சோழரும், பாண்டியரும்தான் இதில் நாம் சோழ வம்சத்தை உள் நுழைக்கவேண்டும் என்று சொன்னதுடன் செயலிலும் இறங்கினர். அவர்கள் கண்டெடுத்தவர்கள் அனைவரும் நாடகம், திரைப்படம் இரண்டிலிருந்தும் மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். நிறுவனரால் நம்பவே முடியவில்லை, 1967-இல் நாடக ஆசிரியர், நடிப்பிலும் பேச்சிலும் வல்லவர் அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சரானார். நிறுவனரும், மற்ற ரகசிய உறுப்பினர்களும் ஆச்சரியமடைந்த இன்னொரு நிகழ்ச்சி 1969-இல் நடந்தது. பேரவையில் ஒரு ஆண்டுக்கு முன்பே சொல்லி வைத்தது போல, யாரும் எதிர்பாராத வகையில் முத்தமிழ் வித்தகர், திரைக்கதைச் செம்மல், நாற்றமிழறிஞர், கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சரானார். அப்போதுதான் பேரவையில் ஒரு புதுச் சூதாட்டம் தொடங்கியது. அடுத்து யார் முதலமைச்சர், எந்த ஆண்டு  அவர் ஆட்சிக்கு வருவார் என்பதைப் பற்றி ஆலோசனை நடப்பதுடன் பெரும் தனவந்தர்கள் பலகோடி ரூபாய் பந்தயம் கட்டுவதும் நடக்கத்தொடங்கியது. அது நிறுவனருக்கும் புரவலர்கள் சிலருக்கும் பிறகுதான் தெரியவந்தது. ரகசியப் பேச்சில் புரட்சி நடிகரை புரட்சித்தலைவர் ஆக்கியது நாங்கள்தான் எனச் சில பேரவை செயல்வீரர்கள் சொன்னார்களாம். 1977-இல் அவர் ஆட்சியில் அமர்ந்தார், பத்து ஆண்டுகள் பார் போற்றும் ஆட்சியைப் அவர் புரிந்தாரே அதற்கும் நாங்கள்தான் காரணம் என்றனர் பேரவைக் கூட்டத்தின் சில பெரிய தலைகள். அவர்களில் சிலர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சில ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த ஆசைப்பட்டார்களாம். ஆனால் 1973-இல் ராஜராஜ சோழன் என்ற படத்தில் நடித்து நிஜத்துடன் தன் கற்பனை உருவத்தைக் குழப்பிவிட்டதால் ஆட்சியில் மட்டுமல்ல சட்டசபையில்கூட அவருக்கு இடமளிக்கக்கூடாது என்று சில உள்வட்டத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்களாம். 1989-இல் மீண்டும் ஒரு அதிர்ச்சியளிக்கும் ஆச்சரியத்தைப் புரிந்தார்களாம் பேரவைச் செயல் வீரர்கள். மீண்டும் கலைஞரின் ஆட்சி, ஆனால் சொன்னதுபோல இரண்டு ஆண்டுகள் மட்டும். 1991-இல்  புரட்சித் தலைவி அம்மா அவர்களை திரைநாயகி அல்ல திரிலோக ராஜமாதாவாக மாற்றிக் காட்டுவோம் என்று பேசியதுடன் செய்தும் காட்டினார்களாம். மீண்டும் 1996-இல் ஒரு மாற்றம், 2001இல் மீண்டும் தென்னகக் கலைத்தாய், 2006-இல் கலைஞர்,  2011-இல் காலத்தை வென்ற கலைத்தாய்,  2016-இல் எல்லாம் வல்ல அம்மா.  இனி மேல்தான் கவனமாக இருக்கவேண்டும் அதற்குத் தொடர்ந்து என்ன செய்யலாம் என்று சில புதிய புரவலர்கள் திட்டமிட்டதை ரகசியமாக ஒட்டுக் கேட்ட சில நாட்களில் அவர் பிரான்சுக்குப் போய்விட்டார்.
என்ன இதெல்லாம் பேரவையின் ரகசிய திட்டமா? அப்படித்தான் சொல்கிறார்கள் அவர்கள். அவர்கள் சொன்னதெல்லாம் அப்படியே  நடந்திருக்கிறது என்பதால் என்னாலும் எதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.
87 வயசில் நிம்மதியா வாழ வரல, சாகத்தான் பிரான்சுக்கு வந்து பேத்திவீட்டில் தங்கிவிட்டேன். சாவதற்கு முன் உலகம் முழுக்க மனிதர்கள் தங்கள் கைகளால் உருவாக்கிய ஏரிகளையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று முடிவோடு வந்திருக்கிறேன். நதி நீர்ப் பங்கீட்டில் ஏற்பட்ட போர்களைப் பற்றி ஆய்வு செய்கிற என் பேத்திதான் அதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கு. உங்களிடம்தான் சொல்ல வேண்டும்.  அம்மா எனக்கு வைத்த பெயர் ஏரிவீரன்.  அப்போது அப்பா பாகூர் ஏரியில் வாய்க்கால்  காவல் பார்த்து வந்தார். சேரியில் கடைசி வீடு எங்கள் வீடு.  ஒரு கோடை காலத்தில் தண்ணீர் கேட்டு வந்த பிரஞ்சுக்காரர் ஒருவர் என்னிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டார். புரியாமல் அம்மாவைப் பார்த்த என்னை அவர்தான் பிறகு படிக்க வைத்தார். அந்தப் பகுதியில் எங்கள் கொம்யூனித்தேவிலிருந்து பிரஞ்சு படித்து பெரிய வேலைக்குப் போனவன் நான்தான்.  பிறகு  பிரஞ்சு குடும்பத்தில் சம்பந்தம், தோப்பு துரவு என வசதியும் வந்தது. அப்படி வந்ததுதான் அந்த தென்னந்தோப்பு பங்களாவும், உசுட்டேரி நிலமும்.
அது என்ன மூலஏடு? எப்படி அது உங்கள் கையில் வந்தது? அது ஒரு பெரிய கதை , அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது. என் மனைவி வாரப் பத்திரிகை ஒன்றுவிடாமல் படிப்பார். கல்கி என்ற பத்திரிகையில் வந்த ஒரு தொடர்கதையை எனக்குப் படித்துக் காட்டினாள். முதல் அத்தியாமே என் மனதைக் கவர்ந்து விட்டது. அதற்குப் பிறகு அது மூணு நாலு வருஷம் வந்தது. ஒவ்வொரு வாரமும் அந்தப் பக்கத்தைத் தனியே பிரித்து வைத்து கடைசியாக அழகான பிரஞ்சு பைண்டிங் செய்து வைத்துக் கொண்டாள். அவளிடம் அந்த முதல் அத்தியாத்தை மட்டும் அடிக்கடி படிக்கச் சொல்வேன். ஏன் நீங்களே படிக்கக்கூடாதா? எனக்குத் தமிழ் படிக்கத்தெரியாது, பிரஞ்சு மட்டும்தான்.  அதுவும் அப்படியா? சரி மேலே சொல்லுங்கள்.
நம் தமிழ் நாட்டில் ஏரிகள்தான் எல்லாம், ஏரிகள் மட்டும் நிரம்பியிருந்தால் எல்லா துயரமும் நீங்கிவிடும் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில்தான் அந்த கதையும் வெளிவந்தது.  ஊர் தோறும் ஏரி ஏரியில்லா ஊரில் ஊருணி, கோயில்  என்பதே குளத்திற்காகத்தானே. ஆறுகள் இல்லாமல் நம் மண் என்ன ஆவது. தண்ணீர் இல்லாத தமிழ்நாடு என்ன ஆகும்? 1955- இல் முதல் முறையாக தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தேன்.  திருத்தணி பக்கம் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டபோது அறை கிண்ணம் தண்ணீர் கொடுத்த ஒரு வயதான அம்மா மீண்டும் நீட்டியபோது, உள்ளே இருந்த குடத்தை எடுத்து வந்து காட்டி இருக்கிறது இதுதான் ஒரு வாரம் வச்சிக்கணும் வேணுமின்னா குடிங்க என்றார். வடக்கு முழுக்க காய்ந்த ஊர்கள், தெற்கில் அதைவிட வெடித்த நிலங்கள்.
திரும்பி ஊர்வந்த பின் அது தோன்றியது. 1956-இல் கரிகாலன் என்ற பெயரைக் காரணம் வைத்துத் தமிழ்நாட்டின் பழைய கதையைச் சிலரிடம் சொல்லத் தொடங்கினேன். கரிகாலன் என்றால் யானைப்படை கொண்டவன் என்றுதான் அர்த்தமாம். யானையை ஊர்தியாகக்கொண்டவன் என்றால் வளம் அதிமாக இருக்க வேண்டும் என என் மனைவி ஒரு புத்தகத்தைப் படித்துச் சொன்னாள். அந்தப் பெயர்கொண்ட மன்னன்தான் முதன் முதலாக இலங்கையில் இருந்து சித்தாட்களைக் கொண்டு வந்து கல்லணை கட்டி பொன்னியின் நீரை வயல்களில் செலுத்தி செல்வமாய் மாற்றினான். பொன்னியின் செல்வம் என்பது உழவர்கள் கொடுத்த விளைச்சல். அதனை மீட்கத்தான் பொன்னியின் செல்வம் என்ற சிறு அமைப்பை முதலில் தொடங்கினேன். கல்லணையில் தொடங்கி கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்வரை ஆறும் நீருமாய் இருந்த அரசகுல வரலாற்றை முன் வைத்து சில கதைகளைக் கட்டி என் மனைவியிடம் இருந்த புத்தகத்தை மூல ஏடாக மாற்றினேன்.
அதற்கு ஏற்ப ஊர் முழுக்க பொன்னியின் செல்வன் வாசக அன்பர்கள் பெருகிக் கொண்டிருந்தனர். அதற்குள்ளாவே வாழ்ந்த பல குடும்பங்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய அன்பர்கள். அதை வாசித்தவர்கள் வேறு எதையும் படிக்க விரும்புது இல்லையாம்.  உங்களைப் போலச் சிலர் தவிர. எனக்கும் பப்பா மிசேவுக்கும் அது வசதியாகப் போனது. பேரவை உருவாகி வளர்ந்த வரை என் மனைவி அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாள். ஆனால் அரசியல் கூட்டமாக மாறியபோது தன் புத்தகத்தை இனி கூட்டங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றாள். அதில் ஏற்பட்ட மனஸ்தாபம், 1968-இல் புத்தகத்தை விட்டுவிட்டு என் மகளையும் மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரான்சுக்கு வந்துவிட்டாள்.
மூல ஏடு இருக்கிறது என்று சொன்னதை இனி நான் மாற்ற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பேரவையும் அரசியல் கூட்டத்தினரும் தம் போக்கில் பெருகி விட்டனர். தம்பி நீங்கள் வந்த போது நானும், பப்பா மிசேவும் வெறும் பார்வையாளர்கள்தான். எப்படியானாலும் ஏரிகளும் குளங்களும் மீள வேண்டும், ஊரில் கிணறுகளில் ஊற்று பெருக வேண்டும். ஆட்சிக்கு வருபவர்களைக் கொண்டு எதாவது செய்யலாம் என்றுதான் நாங்கள் சிலபேர் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது நிலமை என்ன தம்பி. பப்பா மிசே தெரியுமில்ல. என் தங்கை வீட்டுக்காரர். என்னச் சாதியச் சொல்லி திட்டின ஒருவன கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தவர்.  அவர் அம்மா வச்ச பேரு கிணத்தடியான். அவர் கடைசி காலத்தில சொல்லிச் சொல்லி அழுதாரு, 86 ஏரி, ஏராளமான குளம், புதுச்சேரியில பத்தடியில தேனூத்து, எல்லாம் போச்சி. மீண்டும் கொண்டுவர என்ன செய்ய முடியும்? நானும் அவரும் என்ன சாதின்னு பேரவையில எங்களத் தவிர யாருக்கும் தெரியாது. பிரஞ்சும், பணமும் தந்த சுதந்திரம், ஆனா இப்போ என்ன ஆச்சு? சோழ வம்சம், பாண்டிய வம்சம்னு எதைச் சொல்லறாங்க? வம்ச வரலாறுதான் எல்லா இடத்திலயும். திரையில் படிந்த நிலம்னு உங்க புத்தகம் ஒன்ன படிச்ச என் பேத்திதான் சொல்லுச்சி சாதி பத்தி, மண்ண பத்தி, வறண்டு போன தமிழகம் பத்தியெல்லாம் எழுதியிருக்கீங்கன்னு! உங்க படத்தகூட காட்டிச்சி ஒரு புத்தக வெளியீட்டில நீங்க பேசியத படமா காட்டிச்சி. எனக்கு கொஞ்சமா ஞாபகம் வந்தது. பொந்திச்சேரிதான்னு  சொன்னதால எனக்கும் அது தோணிச்சி.
எழுதுங்க தம்பி, அது பத்தியே பேசுங்க, புதுசா வர்ற  பிள்ளைங்ககிட்ட சொல்லுங்க!சரிங்க அய்யா, முடிஞ்ச வரைக்கும் செய்யிறேன். இணைப்பு துண்டிக்கப்படாமல் இரண்டு மூன்று நிமிடம் இருந்தது, என்ன பேசுவது. மறுபடி பேசலாம் அய்யா என்றேன். இரண்டு நிமிஷம், அந்த ஒரு பத்திய ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு முறை சொல்லிக் காட்டுறேன் சரியா இருக்கான்னு பாருங்க. அவருடைய கருத்த நெடிய உருவம், பெரிய மீசை, பிரஞ்சு மோதில் அமைந்த பேண்டும் சட்டையும், 1979-இல் கடைசியாகப் பார்த்தது,  எல்லாம் ஞாபகம் வந்தது, ஆனால் அந்தப் பத்தி என் நினைவில் இல்லை. அந்தக் குரல் இதையா அப்போதெல்லம் சொன்னது?
கதைக்கு வெளியே
ஒருநாள் அவகாசம் முடிந்து போனது. மீண்டும் தகவல்அறையில் வரிகள் வந்தன? தப்பிச் சென்ற அந்த இன்னொரு ஆள் எங்கே? அதுவா, தெரியும் ஆனால் சொல்ல முடியாது? விளைவுகள் பயங்கரமாக இருக்கும்? என்ன விளைவு, என்ன செய்வீர்கள்? உங்கள் கடந்த காலத்தை அம்பலமாக்குவோம், ஆடித்திருநாள் அடியவர்தான் நீங்கள் என்பதைப் பத்திரிகைகளில் பலரை வைத்து எழுத வைப்போம், உங்கள் பழைய கவிதைகளை இணையத்தளங்களில் உங்கள் படத்துடன் வெளியிடுவோம். அத்துடன் நீங்கள் பையில் கொஞ்ச காலம் வைத்துக் கொண்டு திரிந்த சோவியத் நாட்டில் அச்சிட்ட புத்தகங்களை தந்தவர்கள் யாரென்றும் ஊரெங்கும் சொல்லுவோம். அப்படியா சொல்லுங்கள், நானே அதையெல்லாம் சொல்லத்தானே வேண்டும். நீங்களும் சொன்னால் சான்றுகளுடன் அமைந்துவிடும். அப்புறம் இன்னொன்று ஆடித்திருநாள் அடியவர் பேரவையும், ஆடிப்பெருக்கு அரசியல் கூட்டமும் ஒரு மூல ஏட்டை வைத்துத்தானே இயங்கிக்கொண்டு வந்தீர்கள், அது இப்போது உங்கள் யாரிடமும் இல்லை?  அது எப்படி உனக்குத் தெரியும்? அந்த ஏடு இல்லாமல் நீங்கள் மீண்டும் இணையவே முடியாது, அடுத்த மந்திராலோசனை மர்மக் கூட்டமும் நடத்த முடியாது. அதற்காகத்தான் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.  இனி உங்களுக்குள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாது!  மூல ஏடு உள்ள இடம் எனக்குத் தெரியும்,  அது தொலைந்து போனது என்று நான் சமூக ஊடகத்தில் தகவல் பரப்பினால் உங்கள் பேரவையும், கூட்டமும் வெளியே தெரியாமல் உள் மோதலில் கரைந்து காணாமல் போய்விடும். சற்று இடைவெளிக்குப் பிறகு, அந்த மூலஏடு பற்றி உள் அமைப்பில் இருப்பவர்கள் தவிர வேறு யார் சொன்னாலும் நம்பக்கூடாது என்பது அமைப்பின் மாறாத கட்டளை. அதுதான் நீங்களே அறிவிக்கப்போகிறீர்களே, ஆடித்திருநாள் அடியவர் பேரவையின் உள்வட்ட ஆள் நான் என்று! தகவல் அறையில் தடுமாற்றம். அறிவிக்கவில்லையென்றால்? நன்றி, அதைச் சொல்லித்தானே நேற்றிலிருந்து மிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?  உங்களுக்கு மூல ஏடு உள்ள துணிப் பொதிதான் தெரியும்,  எனக்கு மூல ஏடும் தெரியும் அதன் ஒவ்வொரு பக்கமும் தெரியும்.  மறு முனையில் எழுத்து ஏதோ ஆட்டம் காட்டியது, ஆனால் சற்று நேரத்தில் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. இனிப் பொய்ப் பெயர்களில் புதிய புதிய அச்சுறுத்தல்கள், வதந்திகள், வசைகள் வரத்தான்  செய்யும் என்ன செய்வது.  ஏரிகள் அழிந்த மண்ணில், ஆறுகள் மறைந்த நிலத்தில், இரவு முழுக்க குடங்களை வைத்துக் கொண்டு ஊர் முழுக்க காத்திருக்கும் ஒரு நாட்டில்  வாழ நேர்ந்ததை விட இவையெல்லாம் என்ன பெருந்துயரம்.
   (முற்றும்)
 ஒலி இணைப்பு
ஏரிவீரன் அய்யா தன் நினைவில் இருந்து தொலைபேசியில் சொன்ன பகுதிதான் இது. இதனை அறியாதவர் யாரும் இருக்க முடியாது என்றாலும் அவர் குரலில் அது முற்றிலும் வேறு அர்த்தத்துடன் ஒலித்தது.  கூட்டங்களின் போது இந்த ஒரு பகுதியை மட்டும்தான்  அவர் மனப்பாடமாகச் சொல்லுவார் என்பது நினைவில் உள்ளது. வீராணம் ஏரி,  வீர நாராயண ஏரி என  புத்தகத்தில் எழுதிவைக்கப்பட்டாலும் அதன் பழைய பெயர் வீரண்ணன் ஏரி, அதுதான் மக்கள் வழக்கில் இருந்ததாம். சாதி வழக்குகள் கூடியபோது அதன் பெயரும் மாறியது.  ஏரி அமைத்தவர்கள் யார், ஏரிகாத்த மக்கள் யார் என்பதை மற்றவர்கள் மறந்தாலும் நாம் மறந்துவிட முடியாது என்று ஒரு குறிப்பும் சொல்வார்.
“தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்காலச் சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தெளியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள்.”
 (உயிர் எழுத்து: ஜூன், 2017)