விருப்பக் குறிகள்- பிரேம்

விருப்பக் குறிகள்

-பிரேம்

சமன்பாடு
ஃபிரான்ஸ் ஃபானோன் தனக்குள் புகுந்துள்ள அந்த  நோய் தனது உடலை  அழிக்கத்தொடங்கிவிட்டது என்பதைத் தெரிந்துகொண்ட போது ரெச்ட் ஆஃப் எர்த் நூலை எழுதத் தொடங்கிவிட்டார். முப்பத்தைந்து வயதான ஒருவர் இன்னும் சில மாதங்கள், சில நாட்கள்தான் உயிர் வாழமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளும் போது உருவாகும் மனநிலையுடன் தொடர்ந்த  எழுத்து.
மருத்துவம் படித்த ஃபானோன் நோயின் தன்மையை அறிந்திருந்தும் தனக்கான சிகிச்சையைத் தொடங்காமல் தனது இறுதி நூலை எழுதி முடித்து விட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காகச் சேர்ந்தபோது மருத்துவர்கள் சில மாதங்களுக்கு முன் சிகிச்சைத் தொடங்கியிருந்தால் இன்னும் சில ஆண்டுகளுக்கு மரணத்தை ஒத்திவைத்திருக்க முடியும் என்றனர். ஃபானோன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய அந்த நாட்களில்தான் இரவும் பகலுமாக அந்த நூலை எழுதிக்கொண்டிருந்தார்.
அடிமைச் சமூகங்களின் விடுதலை  வன்முறையின்றி அமைவதில்லை எனத் தொடங்கிய அந்த அறிக்கை, ஐரோப்பியத் தீமையிலிருந்து  கருப்பின மக்களையும் உலகின் மற்ற சமூகங்களையும் காப்பதற்கு மட்டுமல்ல ஐரோப்பிய மக்களையும் காக்க புதிய அரசியல், புதிய சிந்தனை, புதிய மனிதர்களை உருவாக்குவதற்கான செயல்திட்டம் அனைத்தையும் நாம் புதிதாகத் தொடங்க வேண்டும்  என்ற அழைப்புடன் முடிகிறது. வன்முறையில் தொடங்கி, புதிய மனித சமூகத்திற்கான அழைப்புடன் முடியும் ஒரு நெடும்பேச்சு அது.
“அடிமைப்பட்ட மண்ணின் மனிதர்கள்  உலகத்துடனும் வரலாற்றுடனும் கொண்டுள்ள உறவு வெறும் உணவால் அமைந்தது.  மதிப்பீடுகள், உலக வாழ்க்கை உருவாக்கம் என எதுவும் அற்ற வெறும் உயிர்வாழ்தல் மட்டும்தான் அங்கு உள்ளது. சாகமால் உயிரோடு இருத்தல்.” சாகாமல் இருத்தலின் கொடுமை, வெறும் உயிர் தரிப்பின் வன்முறை தன் மீது கவிழும் போது விடுதலைக்கான அசைவு எப்படியிருக்கும்.
சாவின் இழைகள் தன்மேல் படர்வதை, அது வலையாகப் படிவதை உணர்ந்த ஒருவர் தனது எழுத்திற்குள் தன்னை நிறைத்துவிட்டு மறையும் உத்தியை அந்த நூலில் காணலாம். உயிர்த்திருத்தலுக்கும் உயிரழித்தலுக்குமிடையிலான, உயிர்ப்புடன் இருத்தலுக்கும் உயிரியாக மட்டும் இருத்தலுக்கும் இடையிலான  ஓயாத இயங்கியலை விளக்கும் அந்த நூலின் மையம் வன்முறைதான். அடிமைப்படுத்தலின் வன்முறை, விடுதலைக்கான வன்முறை, ஓசையற்ற வன்முறை, ஓலமிடும் வன்முறை, நிறத்தின் வன்முறை, நிறமழிந்த வன்முறை, இருத்தலின் வன்முறை, இல்லாமல் போதலின் வன்முறை.”
வாழ்தலுக்கான தனது ஒவ்வொரு செயலும் வன்முறையாக, உயிர்த்திருத்தலுக்கான ஒவ்வொரு முயற்சியும் குற்றமாக விதிக்கப்பட்ட மனிதர்கள் என்ன செய்வார்கள்.
விடுதலைக்கான ஒவ்வொரு பேச்சும், நகர்வும் வன்முறை என்று அடையாளப்படுத்தப்பட்ட பின் வன்முறையற்ற இருப்பு என ஏதாவது உள்ளதா?
அடிமைப்பட்டவர்கள், துயரில் வாழ்பவர்கள், தன் மீதான குற்றங்களின் முன் தம்மை ஒப்புக்கொடுக்கிறார்கள்  வன்முறையை நிகழ்த்துவதில்லை, அதனை ஏற்கிறார்கள், அவர்கள் வன்முறையை வணங்குகிறார்கள். தம் மீதான வன்முறையின் முன் மண்டியிட்டுத் தொழுகிறார்கள்.
வன்முறையைத் தமது நீதியாக, பெருமிதமாகக் கொண்ட புனித வன்முறைகளின் கேளிக்கைகள் எந்தக் கட்டத்திலும் ஓய்வதில்லை. அவை இசையாக ஒலிக்கலாம், வெடிச் சத்தமாக அதிரலாம், நிசப்தமாகப் பரவலாம்.
வன்முறையின் கொண்டாட்டம் எத்தனை வடிவங்கள் கொண்டது, வன்முறைதான் மனிதர்களின் ஆகப்பெரும் திளைப்பு.  அதுதான்  போர்களை, பேரரசுகளை, பெரும் சாதனைகளை உருவாக்குகிறது.
“அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும்,   தனக்கு விதிக்கப்பட்ட இந்த ஒடுங்கிய உலகத்தையும் தன்மீது சுமத்தப்பட்ட தடைகளையும் எதிர்ப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை எனத் தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.” என்னும் ஃபிரான்ஸ் ஃபானோன் புதிதாகத் தொடங்க வேண்டும் எனச் சொல்வது வன்முறையற்ற வாழ்வையா, வன்முறையை நிகழ்த்துவதற்கான சம உரிமை கொண்ட வாழ்வையா, வன்முறைக்கு முன் அடிபணியாத வாழ்வையா?
வன்முறையின் சமன்பாட்டில் இரண்டு சாத்தியங்கள்தான் உள்ளன, வன்முறையை நிகழ்த்துவது அல்லது தான் செய்வது வன்முறையில்லையென நிறுவுவது.
இதற்கு மாறான, இந்தச் சமன்பாட்டை மறுத்த வாழ்தல் சாத்தியமில்லையா?
உண்டு வெறும் வாழ்தல், வெறும் உயிர்த்திருத்தல், அதுவே மீளக்கிடைக்காத இன்பம் என உணர்கிற மனம்.
உனக்குப் பயித்தியம்தான் போ, மீளக்கிடைக்காத இன்பத்தை எங்கு வைத்து வளர்ப்பதாம், அதனை உணர்வதற்கு எங்கு போய் கற்றுக் கொள்வதாம்?
நீ மட்டும் என்ன,  இரட்டைப் பயித்தியம்தான். உணர்வதற்கு எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமா என்ன. கற்றுக் கொண்டதையெல்லாம் மறக்க வேண்டும் அவ்வளவுதான்.
கற்றுக் கொண்டதையெல்லாம் மறப்பது, சரிதான் அதற்கு வாழாமலேயே இருந்துவிடலாம் தெரியுமா. ரொபர்தோ பொலான்யோ தனது கல்லீரல் பழுதுபட்டுவிட்டதை அறிந்துகொண்ட பின்புதான் ஐந்து பாகங்கள் கொண்ட தனது இறுதி நாவலை எழுதத் தொடங்கினார். எட்டு ஆண்டுகள் தனது மரணத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துடன் எழுதிக்கொண்டே இருந்தார்.  தனது சாவின் நாட்கள் எண்ணப்பட்ட அந்த ஆண்டுகளில்தான் உலகப் புகழ் பெற்ற அவரது நாவல்கள் அனைத்தும் வெளிவந்தன.  உயிர்வாழ வேண்டும் என நினைத்திருந்தால் புகைபிடிப்பது, மது அருந்துவது, கண்விழிப்பது எல்லாவற்றையும் விட்டிருக்க வேண்டும். ஆனால் எதையும் நிறுத்தவில்லை ஆயிரம், ஆயிரம் பக்கம் எனக் கணக்கு வைத்து தட்டிக்கொண்டே இருந்தார். இறப்பதற்கு முதல்நாள் கூட சில பக்கங்களை எழுதினார்,  அத்தனையும் கொலைகள், குற்றங்கள், கடத்தல் பற்றிய கதைகள்.
தன்னுடைய பிள்ளைகளுக்கு எதையும் சேர்த்து வைக்கவில்லை என்ற மன உறுத்தலில் ஐந்து பாகங்களை எழுதித் தன் சாவுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்று குறிப்பும் எழுதியிருந்தார். ஆனால் பிள்ளைகள் அவரது இறுதி ஆசையை நிறைவேற்றவில்லை, ஒரே பாகமாக அதனை வெளியிட்டுவிட்டார்கள்.
ஐம்பது வயசு சாகிற வயசில்லை, ஆனால் சாகத்தான் அவ்வளவையும் எழுதினார் என்று தோன்றுகிறது. கற்றுக் கொண்டதை மறந்துவிட வேண்டும் என்றால் ஃபானோனும், பொலான்யோவும் ஏனப்பா எழுதிச் சாகவேண்டும். எழுத்து சாவதற்கான துணிச்சலைத் தருகிறதா, அல்லது எழுதியபின் சாவு இல்லையெனும் மயக்கத்தைத் தருகிறதா?
நீ சாவை எதிர்கொள்ளும் ஆண்களைப் பற்றி பேசுகிறாய், பெண்களைப் பற்றிப் பேசு, அது வேறு மாதிரி இருக்கிறது, அவர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?
முப்பது வயதில் சில்வியா பிளாத்,  ஐம்பத்தொன்பதில் வயதில் வர்ஜினியா உல்ஃப், நாற்பத்து ஐந்து வயதில் அன்னி செக்ஸ்டன் ஏன் தம் சாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.  எழுத்து அவர்களைச் சாவை நோக்கித் தள்ளியதா, சாவதற்காகத்தான் அவர்கள் எழுதினார்களா.
காத்தி அக்கர் தன் சாவை ஒரு பரிசோதனை போல செய்து பார்த்தது ஏன், வரைந்து கொண்டிருந்த ஓவியத்தை முடிக்க முடியாமல் போன அம்ரிதா ஷெர்கிலின் சாவு தற்கொலைக்கும் கொலைக்கும் இடையில் சிக்கிய ஒரு நிகழ்வு.
நீ எழுத்தைப் பற்றிப் பேசுகிறாயா, வன்முறையைப் பற்றிப் பேசுகிறாயா,  சாவைப் பற்றிப் பேசுகிறாயா அல்லது சாவதற்கான வழிகளைப் பற்றிப் பேசுகிறாயா?
வாழ்வைப் பற்றிப் பேசுவதாக உனக்குத் தோன்றவில்லையா? உடலாக வாழ்வதிலிருந்து ஒளியாகவோ, ஒலியாகவோ மாறுவது பற்றிப் பேசுவதாக உனக்குத் தோன்றவில்லையா?
ஒளியாகவோ, ஒலியாகவோ, எழுத்தாகவோ மாறி உடலை விட்டுச் செல்வதா, அப்படியென்றால் எதையும் விட்டுச் செல்லாமல் மறைந்து போகும் பெண்களைப் பற்றி யார் பேசுவது?
எதுவாக மாறுவது எனத் தேடித் தேடியே மறைந்து போகும் பெண்களின் வாழ்விற்கு என்ன அர்த்தம். எதுவாகவும் இருக்க முடியாமல் கரைந்து போகும் பெண்களைப் பற்றி யார் பேசுவது.
நீ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பெண்களையும் பெண் போராளிகளையும் பற்றிப் பேசவேண்டும் என்கிறாயா?
ஏன் மீந்த பெண்களைப் பற்றியும் பெண் போராளிகள் பற்றியும் பேசலாமே.
உனக்குக் கிடைத்த ஒளிப்படக் காட்சிகளில் அவர்களுக்கு நடந்தது பதிவாகவில்லையா?
இசைப்பிரியா பற்றிய காட்சிகளைப் பற்றி இங்கு பேசவேண்டாம்.
அவர்கள் சாவு உறுதி என்று தெரிந்துதான் ஆயுதம் எடுத்தார்கள்.
அது அப்படியின்றி எப்படி முடிந்திருக்கும்?
அது சாவின் சமன்பாடா? அல்லது வன்முறையின் சமன்பாடா?
அது போல எதுவும் நடக்கவில்லை என்றுதான் பலர் சொல்கிறார்கள்.
போராளிகள் போராளிகளையே கொன்றது பற்றித்தான் பேச வேண்டும் என்கிறார்கள் சிலர், போராளிகள்தான் இனப்படுகொலைக்கு காரணம் என்கிறார்கள் சிலர், போராட்டமே பயங்கரவாதம் அதுதான் எம் மக்களை அழித்தது என்கிறார்கள் சிலர்.
ஒரே இடத்தில் ஒரே ராணுவ நிபுணர்களால் பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர்கள் வெவ்வேறு இயக்கங்களுக்குப் பகிர்ந்து அனுப்பப்பட்ட காலம் ஒன்று இருந்ததாகச் சிலர் சொல்கிறார்கள்.
போராட்டம் எங்கு நடந்தாலும் இனி படுகொலையில்தான் முடியும் என்கிறார்கள் சிலர்.
போர்களைப் பற்றிப் பேசி நாம் வன்முறையின் சமன்பாட்டை மீறமுடியுமா?
நமது உரையாடல் போர்களைப் பற்றியது அல்ல. சமீபத்தில் நடந்த இரண்டு தற்கொலைகள் பற்றியது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் சாவை நேரடியாக வலைதளத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  தாங்கள் வாழவிரும்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். தங்களால் இனி வாழ முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்று சொல்லவில்லை.
ஃபிராண்டஸ் ஃபானோன், ரோபர்தோ பொலான்யோ என்ற இரண்டு பேரைப் பற்றியும் ஏன் நாம் பேசத்தொடங்கினோம் தெரியுமா, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
முரண்பாடு
வினோதினி அந்த உரையாடலைப் படத்துடன் இணைத்து எடிட் செய்து முடித்தபோது பின்னிரவு 3.30 மணியிருக்கலாம். பின்னணியில் அங்கங்கு ஒலிக்கும் அந்த உரையாடலுக்கும் அந்தக் குறும்படத்தின் காட்சிகளுக்கும் தொடர்பில்லை என்பது அவளுக்குத் தெரியும். அதுதான் அவள் விரும்பியது. அவள் செய்ய நினைத்தது  ஒன்றுதான் : அந்தக் குறும்படம் ஒவ்வொரு முறையும் வெவ்வெறு வடிவம் கொண்டதாக மாறவேண்டும். ஒவ்வொரு முறையும் தான் ஒளிப்பதிவு செய்துள்ள வேறு வேறு காட்சிகளை, வேறு வேறு நேர்காணல்களை அந்தப் படத்துடன் இணைத்துத் திரையிட வேண்டும். தனது படம் ஒரு முடிவு பெறாத படமாக, ஒவ்வொரு இடத்திலும் உருமாறும் படமாக அமைய வேண்டும்.  இதனை ஒரு சோதனை முயற்சி என்று எல்லோரும் சொல்லலாம், ஆனால் அவளைப் பொறுத்தவரை அதுதான் அதன் வடிவம். அதனை வேறு விதமாகச் செய்வதாக அவளுக்குத் திட்டமில்லை.
 
 
இடையீடு
1.
“பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதை மிகவும் விரும்புகிறார்கள். தங்கள் மீது வலிமையான ஆண்கள் செலுத்தும் வன்முறை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்மீது பாலியல் வன்முறை நடப்பதை விரும்பவே செய்கிறாள். பெண்கள் மீது வன்முறை என்று கூச்சல் போடும் கும்பல் பாலியல் பற்றி எதுவும் தெரியாதவர்கள். வலிமையும், ஆண்மையும் கொண்ட ஆண்கள் பெண்களைத் தம் விருப்பத்திற்கு ஆட்டி வைக்க முடியும். இயற்கையிலேயே பெண்கள் இன்பத்திற்காக எதையும் விட்டுத்தரும் குணம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் எத்தனைக் கொடுமையையும் பொறுத்துக்கொண்டு ஆண்களுக்கு பணிவிடை செய்கிறார்கள். என் அனுபவத்தில் இன்பத்திற்கு அடிமையாகாத பெண்களே கிடையாது, அப்படி மயங்காதவர்கள் பெண்களே கிடையாது.” என முகநூலில் எழுத்தாளர் இளநி வேதிகா சொன்ன கருத்து தமிழகத்தில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. அதற்கு ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள் பதிவாகியிருப்பது பற்றிக் கருத்து கேட்ட பத்திரிகையாளர்களிடம் “நான் கலகக்காரன் என்னைப் போலச் சிந்திப்பதற்கு உலகத்தில் நான்கு பேர்தான் இருக்கிறார்கள். இந்தியாவில் நான் ஒருவன் மட்டும்தான். என் கருத்தை ஏற்காதவர்கள் பெண்களே கிடையாது, என் கருத்தை எதிர்ப்பவர்கள் ஆண்களே கிடையாது”  என அதிரடி பதிலை அளித்திருக்கிறார்.
இந்தத் துணிச்சல் இல்லாமல்தான் தமிழ் இளைஞர்கள் தரம் கெட்டுப்போயிருக்கிறார்கள் என்று அவருடைய ரசிகர் மன்றத்தினர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்கள் பற்றி பெண்களுக்கே தெரியாது என்றும் பெண்ணியவாதிகள்தான் பெண்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்றும் இளநி வேதிகா எழுதிய கட்டுரையை எஸ்பானோலில் மொழிபெயர்த்து லத்தீன் அமெரிக்கா முழுதும் படித்துவருவதாகவும், அறிவற்ற தமிழர்கள்தான் அதைப் படிக்கும் தகுதியற்றவர்களாகிப் போனார்கள் என்றும் தமிழ் நாட்டில் வாழ்வதே தனக்கு அவமானம் என்றும் இளநி புலம்பியிருக்கும் வீடியோ ஒன்றும் தற்பொழுது வெளியாகியுள்ளது.
2.
பரமானந்த பத்ம விலாச பரஞ்சோதி சுபானந்தர் ஆகிய நான் இறைவனின் எல்லா அருளும் பெற்ற மனிதர்களிடம் பாஷாவினோதம் செய்யவே அவதரித்திருக்கிறேன். நான் மனுஷரைப் போன்ற தோற்றம் கொண்டவன், மனுஷ பாஷையில் பேசுகின்றவன், ஆனால் மனுஷர்களின் ஒருவன் இல்லை. உங்களோடு கலந்து உங்களைத் தெய்வீக மகாமண்டலத்திற்கு யாத்திரை கொண்டு செல்ல வந்த தெய்வீகன் நான். உங்களைப் போலவே மானிட உடம்பில் இருந்தாலும் தெய்வத்தின் அம்சமும் தெய்வமேயான சக்தியும் கொண்டவன் நான். பகுத்தறிவு பேசும் பன்னாடைகளை அழித்தொழித்து, கம்யுனிசம் பேசும் கழிசடைகளை சம்காரம் செய்து வேதாம்ருத வெற்றிச் சங்கை ஊதவந்திருக்கும் என்னை உலக அறிவெல்லாம் பெற்ற இளநி வேதிகா போன்ற எழுத்தாளர்களும் பாராட்டுகின்றனர். என் பாதாரவிந்தங்களில் வணங்கிச் செல்கின்றனர்.  இத்துணை எதற்கு அவருடைய தெய்வீகத் துணைவியார் அந்தரவானி அம்சமல்லிகா அவர்கள் என் மடியில் அமர்ந்து மனம் தெளிந்து சென்ற நிகழ்ச்சி ஒன்று போதும் என் தெய்வீக அனுக்கிரகத்தை உங்களுக்கு தெளிவாக உணர்த்திவிடும்.
 
3.
சத்சமாதி சபோதகுரு இத்சத்திய இச்சா யோகி ஈஷாக்கிரிய இன்பலோக இஷ்டாதி வந்தே குரு. இந்த உடம்பை என்னான்னு நெனைக்கிறீங்க, அது அதள பாதாளம், அந்தரத்தில் சத்தியம், சுதள சுபாங்கம், சுந்தர மகாத்மியம். கொள்கை, லட்சியம், சமத்துவம் அப்படின்னு சில அய்யோக்கியர்கள் பேசிக்கிறாங்க. அதெல்லாம் ஒன்னும் கெடியாது. நீங்க என்ன நெனிக்கிறீங்களோ அதுதான் ஈஷன். பதினைஞ்சாயிரம் வருஷம் முன்னாடி இருந்த ஒரு யோகிதான் ஈஷ்வரன் அவன் யார், நான்தான். அவனைச் சந்திச்சி சில சங்கதி பேசியிருக்கேன். எதைப்பத்தியும் கவலைப்படவேணாம், நானே யோகி, நானே குரு, நானே ஈஷ்வர். வாழ்க்கைன்னா என்னா? ஒன்னுமில்ல, ஆமாம் ஒன்னுமில்ல. ஒன்னு இருக்கிறதா நம்பித்தானே அது பின்னாலே ஓடிக்கிறோம். ஓடத்தேவையில்லை, ஓடத்தேவையில்லை, உங்களுக்கு சொல்லிக்கிறேன், ஓடவே தேவையில்லை. சும்மா இருங்க மாசம் ஒரு லட்சம் ஆஷிரமத்துக்குக் கொடுங்க. இந்த கம்யூனிசம், கன்றாவியெல்லாம் கண்ணுல கண்டா அடிச்சுத் தொறத்துங்க. மல்டிநேஷன்தான் மனுஷ தர்மம், கால் சென்டர்தான் கந்தர்வ மதுரம். எனிக்கு உலகத்துல இருக்கிற ஒன்பது மகா யோகிகளோட தொடர்பு இருக்கு அவங்கதான் இந்த உலகத்த நடத்திப் போகிற மகா புருஷர்கள். என்னோட பேசுங்க, உங்கள  நான் கொண்டு போய் இன்னொரு உலகத்துல சேக்கிறேன். குருநாத குருபாத குருவேத குருசோத குருத்தாத குருவினோத குருவிக்கிரம குரு பாதம் சரண். குருபாதம் என் பாதம் அதுவே சரண், என் பாதம் சரண். குரு மகாயோகி, குரு மகா தியாகி, குரு மகா போகி.
4.
எப்படி உங்களால் இப்படியெல்லாம் எழுது முடிகிறது இளநி வேதிகா அவர்களே? உலக இலக்கியத்தரத்தை உங்களால் எப்படி எட்ட முடிந்தது? உங்களைப்போல இந்தியாவிலேயே யாரும் இல்லையென்று பேசிக்கொள்கிறார்களே அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அதற்குக் காரணம் என் அசாத்திய ஆண்மைதான் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். போகர் சொன்ன ஒன்பது மூலிகைகளை முறையாக அறிந்த ஒரே ஆண்மகன் நான்தான். பதினைந்து வயதிலிருந்து அறுபது வயதுவரை அந்த மூலிகைகளைத் தேடித் தேடி மேய்ந்தவன் நான். உலகத்தின் போர்னோ நாயகர்கள் யாரும் என்னுடன் போட்டிக்கு நிற்கமுடியாது.  இயமாலயம், திபெத்தியம், ஆப்கானிஸ்தான், லாடாக் என அத்தனை பகுதியிலும் நான் பயணம் செய்திருக்கிறேன். போகர் சொன்ன கிழங்குகள், வேர்களை நான் மட்டும்தான் கண்டுபிடித்திருக்கிறேன். போகரும் கூட கண்டதில்லை. இதனைத் தமிழர்களுக்கு நானே சொல்வதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
உங்கள் எழுத்தைப் பற்றிக் கேட்டால் வேறு என்னவோ சொல்கிறீர்களே இளநி வேதிகா அவர்களே.
ஆராபிய இலக்கியத்தை அரபியல் படித்து இருந்தால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். என்னைப் போல ஒரு அறிஞனை எங்கே கண்டுபிடிக்க முடியும். தமிழில் யாருக்கு இந்தக் குறியமைப்பு உள்ளது என்று சொல்லுங்கள் பிறகு பேசலாம்.
தமிழ் இலக்கியத்தை உலகத் தரத்திற்கு நீங்கள் மட்டும்தான் கொண்டுசெல்வதாகச் சொல்கிறீர்கள் வேறு யாரும் அது போல எழுதவில்லையா?
என்ன எழுதிக் கிழிச்சாங்க. வெறும் குடும்பக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை, சாதிக்கதை. ஒரு கொண்டாட்டம் கிடையாது, கும்மாளம் கிடையாது. நான் எழுதுவதைப் படிங்க. காய் கறிகளை எத்தனை விதமா சமைக்கிறது, விஸ்கிய எத்தன விதமா குடிக்கிறது, துணிகளை எத்தனவிதமா மடிக்கிறதுன்னு ஆயிரம் பக்கத்துல இரண்டு நாவல் எழுதியிருக்கேன். என்னுடைய நாய்களைக் குளிப்பாட்டுவது பற்றியும் வாக்கிங் அழைத்துப் போவது பற்றியும் கவித்துவமும், காமமும் பொங்கும் காவியம் ஒன்றும் எழுதியிருக்கிறேன். என் பத்தினி இளம் வயதில் பட்ட துன்பங்களைக்கூட கொண்டாட்டமாக விவரிக்கும் எனது கலக எழுத்து உலக எழுத்தாளர்களையே கதிகலங்கவைத்திருக்கிறது. இவ்வளவு   ஏன், பல நடிகைகள் என் எழுத்தைப் படிக்காமல் தூங்கப் போவதே இல்லையென போனிலும், நேரில் வந்து சொல்லியிருக்கிறார்கள். எழுத்துன்னா இதுதான் எழுத்து. தமிழர்கள் இதைக் கொண்டாட வேண்டாமா? அரசு நிகழ்ச்சியாக,  கலாச்சார விழாவாகக் கொண்டாட வேண்டாமா. நித்தய சாயி நிர்மல மகா யோகி ஒரு முறை என்னுடன் அந்தர சம்பாஷணை செய்த போது என்ன சொன்னார் தெரியுமா?  நான் அடுத்த அவதாரத்தில் உனது வாசகியாகப் பிறப்பேன்.
5.
அற்புதம் மகா அற்புதம். அந்த ஆசிரமத்தில் தங்கயிருப்பதும் தவம் செய்வதும் மகா அற்புதம். ஒரு இண்டர்நேஷனல் புராஜக்டோடு அந்த குருவைச் சந்தித்துவிட்டால் நடக்காதது எதுவும் கிடையாது. மாபியா, அண்டர்வேல்ரட் எல்லாம் சும்மா. என்ன வேண்டும், எத்தனை நாட்களில் வேண்டும். என்ன ஒப்பந்தம், அவ்வளவுதான்.  ஆர்ம்ஸ் டீலிங்கா, டிரக் கன்ஸைன்மென்டா, இளம்பெண்கள் அசைன்மென்டா, எதுதான் நடக்காது. இந்திய அரசியலை இங்கிருந்து ஆட்டிப் படைத்துவிடலாம். யாரைத் தூக்கவேண்டும், யாரைத் தொலைக்க வேண்டும், யாரை மெகாஸ்டார் என்று கொண்டாட வேண்டும்? எதுவும் கஷ்டமில்லை. இந்திரலோகம் போன்ற ரெசாடில் தங்கிக்கொண்டு பாலயோகிகளின் பணிவிடைகளைப் பெற்றுக் கொண்டு வேலையை முடித்துக் கொண்டு வெற்றியோடு திரும்பலாம். மகாயோக, மந்திரானந்த மத்தவிலாச முக்தி மகாசன்னிதானம். இப்படியான சன்னிதான சம்போக சத்திரங்கள் பாரத பூமியில் பசுமையான இடங்களில் எல்லாம் பெருகிக்கிடந்தாலும் அதன் மகாகுருமார்கள் நான்கைந்து பேர்கள்தான் இருக்கிறார்கள்.  கஞ்சா புகை சாமிகள், அபினி அமுத சித்தர்கள், உடல் பிசைந்து உன்மத்தம் தரும் யோக சுத்தானந்த மடங்கள், பாலயோகி பணிவிடைகள் செய்யும் பஞ்சயோக மடங்கள், யோகினி சேவை செய்யும் உதயவனங்கள், தலைமறைவு வாழ்க்கை வாழும் தவச்சாலைகள் அனைத்தும் இன்று ஒரு வலைப்பின்னலுக்குள் வந்துவிட்டன. துணைக்கோள் சேவைகள் முதல் தனி விமானங்கள், ஆளற்ற தீவுகள் எனப் பன்னாட்டு பக்தி வேதாந்த பஜனைக் கூடங்கள். இங்கு கூடும் கூட்டத்தை வைத்து உலக அரசியலையே மாற்றிவிடலாம். சினிமா உலகம், கட்சி அணிகள், அதிகார அலுவலர்கள், பைனான்சியர்கள், பெருமுதலாளிகள் யாரையும் சந்திக்க இந்த சன்னிதானங்களே சிறந்த சந்தைகள். இந்திய ஞானம் உலகைத் தன் வசமாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
6.
கதவைத் திற கனவு வரட்டும், சன்னலைத் திற சமுத்திரம் தெரியட்டும், திரையைவிலக்கு தெய்வம் தோன்றட்டும், வாசலைக் கூட்டு வானம் தெளியட்டும் என்ற வரிசையான நூல்களை எழுதிய இருவர் பற்றி தமிழ் வாசகர்களுக்குத் தெரியாதா என்ன. ஒருவர் இளநி வேதிகா என்ற உலக எழுத்தாளர், மற்றவர் பத்மவிலாச பரஞ்சோதி சுபானந்தர். சுபானந்தரே சுத்தஞானி என்று இரண்டு நூல்களை எழுதிய இளநிக்கும்,  இளநிக்கு தனி ஒரு குடில் தந்து தத்துவம் அருளிய பரஞ்சோதிக்கும்  இடையில் அப்படி என்ன பிரச்சினை? பரஞ்சோதியின் நூல்களை இளநியே எழுதியதாகவும், இளநிக்கு ஞானபாஷையை அருளியது சுபானந்தரே எனவும் இரண்டு கட்சியினரும் சண்டையிட்டுக் கொண்டாது  ஒரு புறம்.  யாருடைய குறி பெரியது, யார் சம்போகத்தில் மகானுபவர் என்ற போட்டிதான் அவர்களுக்குள் மோதலை உருவாக்கியது என்று பேசும் அல்ப மானுடப்பதர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனை இருவரும் செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தாலும் இன்று இருவரும் ஈடுபட்டிருப்பது ஆன்ம நிவேத அருளில் யார் அற்புதமானவர், யார் அல்பமானவர் என்ற போட்டிதான் என்று உணர்பவர்கள்தான் மகாயோக மத்தவிலாசர்கள். சுபானந்தர் தன் துணைவியாரைக் கடத்திச் சென்று விட்டதாக இளநி வேதிகா இந்திய உளவுப் படையினருக்கு ஒரு தகவல் அனுப்பியியதும்,  இந்திய உளவுத்துறை அதற்காக இரவு பகலாக வேலை செய்வதும் இளநி வேதிகா இளைஞர் படைக்கு ஒரு பெரும் வியப்பாவே இருந்து வருகிறது.
7.
என் சுவாமி, என் தெய்வநாயகா, இந்தப் பிறவியில் மட்டுமா இன்னும் உள்ள எண்பதாயிரம் பிறவியிலும் உங்கள் சம்போக சமேத சத்தியஜீவனாக இருக்கவே பிறந்தவள் என்னும் ஞானத்தை உங்களைக் கண்டவுடன் பெற்றேன். இளநி வேதிகா என்ற ஈனப்பிறவியை நான் மன்னிக்க ஒரே காரணம் அவன்தான் உங்கள் பாதாரவிந்தங்களை நான் தரிசிக்க அழைத்துவந்த தூதுவன். அன்றே அறிந்தேன் நான் உங்கள் ஆத்ம நாயகி. அந்த கொடியவன் இத்தனை நாட்களாய் என்னை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்திருந்தான். வாழ்விழந்து தனித்திருந்த என்னை வாழ வைக்க வந்த தெய்வம் நான்தான் என்றான். தன் முதல் மனைவி தன் சம்போக சாமர்த்தியம் தாக்குப்பிடிக்க முடியாமலும், தன் ஆண்மையின் அதிரடிகளைத் தாங்கமுடியாமலும் ஓடிப்போய் விட்டதாக என்னிடம் சொன்னபோது ஒன்றும் சொல்ல முடியாமல் அடிமையானேன். என்னைக் கடத்திச் செல்ல ஒரு கூட்டம் இருக்கிறது என்றும் அந்தக் கூட்டத்திடமிருந்து என்னைக் காப்பற்ற அவனால்தான் முடியும் என்றும் என்னைத் தினம் நம்பவைத்தான் சுவாமி. தன் சம்போக சக்திக்கு அடிமையான பெண்கள் கூட்டம் தன்னைத் தேடிவரும் போது நான் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்றான். ஆனால் வந்தவர்கள் எல்லாம் குடிகாரக் குள்ளர்கள்தான். அவர்கள் அவனை மகா யோகி என்றும் உலகமகா அறிவாளியென்றும் துதிபாடினார்கள். அவன் இன்டர்நெட்டில் தன் சம்போக சமாபந்தியைச் செய்து கொண்டே இருந்தான். தனக்கு உலக மகா போகிகளிடமும் உலகைக் கடந்த யோகிகளிடமும் சம்பாஷணை உண்டு என்று சொல்லிக்கொண்ட இந்த இளநி வேதிகா தமிழ் சினிமாவின் பாதாள அறைவரை தனக்கு தொடர்பு உண்டென்று சொல்லிக்கொண்ட போது புதிய குள்ளர்களும், புத்தி கெட்ட கூமுட்டைகளும் ஓயாமல் அவனை மொய்த்துக்கொண்டே இருந்தார்கள். என்னை அவன் ஒரு வெள்ளிச் சங்கிலியால் கட்டிப்போட்டு வைப்பான். எழுத்தாளன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பான்.  துருக்கிக்கு ஒரு வாரம், துர்க்மேனிஸ்தானுக்கு ஒரு வாரம் போய் வருவதாகச் சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவான். தான் ஒரு கொள்ளைக்காரனாக இருபது வருஷம் இருந்ததாக ஒரு நாள் சொல்வான். இன்னொரு நாள் தான் போகர் வம்ச சித்தர்களுடன் முப்பது ஆண்டுகள் யாத்திரை செய்ததாகச் சொல்வான். வாழ்நாள் முழுக்க தான் போதை மருந்து விற்ற கும்பலிடம் அகப்பட்டு மீண்டதாக காலையில் சொல்வான், மாலையில் தன் தங்கையை ரஷ்ய உளவுப்படை கடத்திச் சென்றதாகவும் அவளை மீட்க மெக்சிகோ அண்டர் கிரவுண்ட் கும்பலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டாகவும், அப்பொழுது சேகுவேரா என்ற ஒரு ஆளைச் சந்தித்ததாகவும் சொல்வான். அவன் என்னை பாதாள அறையில் கட்டி வைத்ததற்கு காரணம் அது போல யாரும் என்னைக் கடத்திச் சென்றுவிடக்கூடாது என்ற அக்கரைதான் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். உங்களை நான் சந்திப்பதற்கு நான் செய்த தவம் எப்படி பலித்தது என்று தெரியவில்லை சுவாமி. அவன் அடிக்கடி உங்கள் தபோவனத்தில் தங்கிவிடுவிட்டு வருவதைக் கண்டு நான்தான் கேட்டேன், உங்கள் மேனியில் ஒளிரும் ஜோதி எப்படி வந்தது என்று. அவன் புலகாங்கிதம் அடைந்து தன் சம்போக சதானந்த வீரியத்தை அறிந்த உங்களை என்னிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தான். அவன் என்னை நெருங்கி வந்தாலே சதானந்தம் சாந்த சொரூபம் என்று தியானத்தில் அமிழ்ந்துவிடும் எனது குண்டலினி அழிந்துவிட்டதாக அவன் கருதியிருந்தான் என நினைக்கிறேன். பாலயோகிகளும், பத்மவிலாச பவித்திர புருஷர்களும் நிறைந்த உங்கள் தபோவனத்தில் நான் காமசொரூபினியாக, கந்தர்வ மோகினியாக அவதாரம் கொண்டதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உங்களிடம் அடைக்கலமான என்னை உங்கள் ஆட்கள் கடத்திச் சென்றுவிட்டதாக உளவுத்துறை வரை சென்று புகார் அளித்தான் அந்த பாபி. இனியும் அவன் இருப்பிடம் சேர்ந்து வாழ நான் சம்மதியேன் சாமி. உங்கள் அடைக்கலம் நான். காக்க வேண்டும் காமம் கடந்த காதல்ஞான தேசிகாமணியே.
8.
இந்தியா ஞானிகளின் நாடு, நானும் ஒரு ஞானிதான். இதனை அறியாதவர்களுக்கிடையில்தான் நான் வாழ்கிறேன். குஜராத் மண்ணில் மதப் படுகொலை நடந்ததாக வதந்தியைப் பரப்பும் ஒரு கூட்டம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பொய்யைப் பரப்பும் ஒரு கூட்டம். இந்தக் கேவலங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. எனது எழுத்துகளைப் படிக்காத மடையர்கள் கூட்டம் இப்படியான பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறது. நான் தெய்வங்களை அறிந்தவன் சாயி, சோயி, மோயி என்னும் தெய்வீகச் சக்திகளுடன் தினம் பேசுகிறவன் நான். என் ஆன்ம நாயகியை, ஆசைக் காதலியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன். அவள் இன்றி நான் வாழ முடியாது. அவளைக் கடத்திச் சென்ற சாகச சன்னிதானத்தின் காமக்களியாட்டங்களை அம்பலப்படுத்துவேன். அது பற்றி ஆயிரம் பக்கத்தில் ஒரு நாவலும் எழுதுவேன். சகியே உனக்காகக் காத்திருக்கிறேன். வந்துவிடு, இல்லையெனில் வரவைப்பேன்.
9.
தன் ஆசை நாயகி தன்னுடன் இல்லையென்ற துயரத்தில் இரண்டு நாவல்களை எழுதிய இளநி வேதிகா தன் பிராணனை விட்டுவிடுவதாக தன் மனைவிக்கு ஒரு ஓலையையும் அனுப்பினார். தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் புலம்பிய புலம்பல் உலகத் தரம் கொண்ட தமிழர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. அத்துடன் ஒரு ஆயுதப்படை சன்னிதானத்தில் சென்று மிரட்டியும் வந்தது. சுபோதானந்த சுந்தரர் இனியும் இந்தத் தொல்லை வேண்டாம் என்று முடிவுக்கு வந்தார். உலகம் முழுதும் கிளைகள் திறக்கவேண்டிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. உலகப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளன் தன்னை இழந்து தவிப்பதை நினைத்து அம்சமல்லிகா அம்மையாரும் தன் மனதை மாற்றிக்கொண்டார். தானே இங்கு வந்தது பற்றியோ, தானே திரும்பிப் போவது பற்றியோ எதுவும் யாருடமும் பேசுவதில்லை என்ற சத்தியவாக்குடன் அவர் ஒரு நள்ளிரவில் வேன் ஒன்றில் ஏறி இல்லம் சேர்ந்தார்.
10.
தன் நாயகி சமேதராக நகரை ஒரு முறை வலம் வந்த இளநி வேதிகா. அன்று இரவு தன் புதிய பங்களாவின் ரகசிய அறையில் அம்சமல்லிகா அம்மையாரை அடைத்து வைத்து வெந்நீர் தண்டனை அளித்தார். உன்னை அப்படியே விட்டுவிட நான் என்ன ஒன்பதாம் ஆட்டக்காரனா?  உன்னை மறுபடியும் கொண்டுவரத்தான் அந்தக் காதல் கடிதம் எல்லாம். என் போகச் சித்து பற்றி என் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மயங்கிப்போய் கிடக்க நீ இன்னொருவன் அந்தப்புரத்திலா. தினம் இனி தண்டனைதான் என்று சொல்லி  தன் உலகக் காதலிகளின் படங்களை திரையில் ஓடவிட்டு அம்மையாரின் அழுகையைப் பலமடங்காக்கினார். மனிதப் பதர்களை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்த இளநி வேதிகா பங்களாவைச் சுற்றி நான்கு கண்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நான்கு வகை நாய்களைக் காவலுக்கு கட்டிவைத்தார் வைத்தார்.  அந்த நாய்களுக்கான  செலவை உலகம் முழுதும் உள்ள அவருடைய பக்தர்களே ஏற்றுக் கொண்டதாக ஒரு தகவல். உலக அளவில் இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாத ஒரு பெருமை இது எனவும், இதனை அறிந்துகொள்ளும் அறிவு தமிழர்களுக்கு இல்லை எனவும் அவ்வப்போது இளநி வேதிகா கூட்டங்களில் பேசி வருகிறார். தன் பிரிய பத்தினிக்கு நாய்கள் பிடிக்கும் என்றும் அந்த நாய்கள் தன்னிடம் ரகசிய பாஷையில் பேசுவது பற்றியும் அவ்வபோது எழுதியும் வருகிறார்.
ஆவணங்களில் மறைந்த மர்மம்
சமீபத்தில் நடந்த இரண்டு தற்கொலைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.
 அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் சாவை நேரடியாக வலைதளத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  தாங்கள் வாழவிரும்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.  தங்களால் இனி வாழ முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்று அந்த வீடியோவில் சொல்லவில்லை.
இந்தப் பெண்கள் இளநி வேதிகாவின் ஒரு கதையைப் படித்துவிட்டு இப்படியொரு ஆளா என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். சினிமா நடிகைகளுடன் தனக்குள்ள உறவைப் பற்றி அவர் எழுதியிருந்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரை ஒரு கூட்டத்தில் சந்தித்த பின் ஆன்மிக, மான்மிக தியானங்கள் பற்றியும் அவரது சதானந்த சம்போக பராக்கிரமங்கள் பற்றியும் மின்னஞ்சல் வழி தொடர்ந்து அறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வழியாகத்தான் சுபானந்த சுத்த சம்போக தியானம் பற்றியும் அறிந்திருக்கிறார்கள். சுதானந்த வனத்தில் சேர்ந்துவிடும் ஆசையை அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். அவரும் தன்னோடு வந்து சிலநாட்கள் வனத்தில் தங்கும் படி சொல்லியிருக்கிறார். அவர்கள் தம் வீட்டிற்குத் தெரியாமல் அங்கே சென்று தங்கியிருந்தபோது  யாரோ சிலர் எதையோ வீடியோ எடுத்திருக்கிறார்கள். பிறகு வனத்தில் இருப்பதும், இளநியுடன் பழகுவதும் அவர்களுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி வந்த பின் இளநி வேதிகா அவர்களைத் தங்கள் காதலிகள் என அவர்களே அறிவிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் தன்னிடம் உள்ள வீடியோவை வெளியிடுவேன் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்த நெருக்கடியான நிலையில் அவர்கள் மீண்டும் வனத்தில் அடைக்கலம் தேடிச் சென்றிருக்கிறார்கள்.  அவர்களை வெளிநாட்டு ஆசிரமம் ஒன்றிற்கு அனுப்புவதற்கு சதானந்த வனம் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.  ஒரு புறம் இளநி வேதிகாவின் இம்சை, மறுபுறம் மகா சதானந்தரின் மர்மச் சிரிப்பு இரண்டுக்கும் நடுவில் அவர்கள் எடுத்த முடிவுதான் தற்கொலை. அவர்கள் வலைதளங்ளில் அனுப்பிய அந்தக் காட்சிகள்  பொய்யானவை என்றும் அப்படி இருவர் இல்லவே இல்லையெனவும் பிறகு காவல்துறை சொல்லியது.
ஆணின்பம் கிடைக்காத பெண்கள்தான் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வார்கள் என்றும் இது போன்ற சாவுகள் நடக்காமல் தடுக்க  தன்னைப் போன்ற போகநாயகர்களின் காதலே சிறந்த மருந்து என்றும் இளநி வேதிகா இங்கிலீஷ் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கிறார்.  தான் இளம் வயதில் காமத்தொழில் செய்யும் ஆணழகனாக சில ஆண்டுகள் இருந்ததாகவும் அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவாக இருந்ததாகவும் அவர் சொல்லியிருப்பதும் கவனத்திற்குரியது. இதெல்லாம் உடாண்ஸ் அந்த சக்தி தனக்கு மட்டுமே உள்ளது என்றும் உலகம் முழுக்க உள்ள தனது  வனங்கள் இதுபோன்று பெண்களை சாவிலிருந்து காத்து சுபோதானந்த சுவனத்தில் சேர்க்கவே இயங்கிவருவதாக அம்ச நந்தரும்  அவ்வப்போது தன் அருளுரைகளில் குறிப்பிடுகிறார்.
முரண்பாடும் முடிவும்
இதன் மூலம் எதற்கும் முடிவு வந்துவிடப்போவதில்லையென என வினோதினிக்குத் தெரியும். இந்தத் தகவல்களையெல்லாம் தன் குறும்படத்தில் கொண்டுவந்து எதுவும் ஆகப் போவதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆயுத பேரங்கள் செய்யும் சாமியார்கள், போதை மருந்து வலைப்பின்னலை இயக்கும் மகான்கள், பெண்களைக் கடத்தும் யோகமண்டல உபாசகர்கள் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன?  இதன் மூலம் யாருக்கும் தண்டனை பெற்றுத் தரமுடியாது என்பதும் அவளுக்குத் தெரியும்.
 அவளுடைய திட்டங்கள் இரண்டுதான். முதலாவது பெண்கள் இரண்டுபேர் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடியும் எனப் பார்வையாளர்களிடம் சொல்லி விடுவது. இரண்டாவது அவ்வப்போது பாதிக்கப்படும் பெண்கள் தனக்கு அனுப்பும் ஆடியோக்களை குரல் மாற்றத்துடன் தன் படத்தில் இணைத்துப் புதிய காட்சி ஒன்றை இணைந்து விடுவது.
அந்தக் குறும்படத்தின் இறுதியில் பெண்கள் இருவரும் கேமராவைப் பார்த்தபடி கண்களை மூடும் அந்தக் காட்சியுடன் “ஃபிராண்டஸ் ஃபானோன், ரோபர்தோ பொலான்யோ  இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.” என்ற குரல் ஒவ்வொரு முறையும் மாறாமல் வருகிறது. மற்ற காட்சிகள் ஒவ்வொரு முறையும் மாறவே செய்கின்றன.
அடைபட்ட வீடுகளின் உள்ளிருந்து அலறும் பெண்களின் குரல்கள் சில இடங்களில் ஒலிப்பதாக பெண் பார்வையாளர்கள் மட்டும் சொல்கிறார்கள்.
(ஆவணங்களில் உள்ள பத்திகள் முகநூல் பக்கங்களில் இருந்தும், சில  வலைதளங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை.)

 

உயிர் எழுத்து, ஜனவரி 2018.