புனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள் -பிரேம்

புனிதர்களின் மொழியில் புதைந்து போன உண்மைகள்

(காந்தியத்திற்கு எதிரான காந்தி)

பிரேம்

காந்தியம் பற்றிய வாசிப்பில் மிகப்பெறும் தடையாகவும், பல அடிப்படை  முரண்களுக்குக் காரணமாகவும் இருப்பது காந்தியின் வாழ்வையும் காந்தியத்தையும் பிரிக்கமுடியாத, ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்ட நிகழ்வுகளாகப் பார்ப்பது. அதைவிடப் பெருந்தீமை விளைவித்தது காந்தியைப் புனிதர் என்றும் மகாத்மா என்றும் மகான் என்றும் கொண்டாடும் பக்திவயப் பார்வை. காந்தியின் பக்தர்களும், காந்தியின் புனித உருவைச் சுமந்து கொண்டிருக்கிறவர்களும் உண்மையில் காந்தியம் என்ற அரசு மறுப்பு கொண்ட, இயற்கை மையத் தன்மை கொண்ட, இணக்கங்களால் அமைந்த பன்முக வாழ்வியலுக்கும் அரசியலுக்கும் எதிரானவர்களாவே இருக்கிறார்கள்.

பசுமை அரசியல், சூழலியல் பெண்ணியம், உலகமயமாதலுக்கு எதிரான பின்காலனிய இயக்கங்கள் என இன்றுள்ள மாற்று அரசியலின் கொள்கைகளின் பண்புகளான வல்லாதிக்க எதிர்ப்பு, மூலதன மறுப்பு, அடித்தள மக்களுக்கான அரசியல் காந்தியத்திலும் உள்ளது. அவை முன் வைக்கும் மாற்று வாழ்வியலும், எதிர்ப்பு முறைகளும் காந்தியம் என்ற செயல்திட்டத்துடன் ஒத்துள்ளவை. 

காந்தியத்தை சுருக்கமாக “எளிமையின் இருத்தலியல், இணக்கமான உற்பத்தி உறவு, இயற்கை மைய அழகியல்” எனச் சொல்லலாம். ஆனால் காந்தியின் புனித உரு இதற்குள் முழுமையாக அடங்கிவிடுவதில்லை. அது பலவிதமான முரண்களையும், திட்டமிட்ட அமைதியையும் தனக்குள் கொண்டது.

காந்தி என்ற புனிதக் குறியீடும், காந்திய வாழ்வியலும் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டால் ஒழிய உண்மையான காந்தியச் செயல்பாடு சாத்தியமில்லை. புத்தன், யேசு, காந்தி என்ற ஒரு வாய்மொழி மரபு உருவானதற்கான காரணம் அவ்வளவு தெளிவானதில்லை. செயல்பாடு மறுத்த, அரசியல் அற்ற, தன்மையப் புனித மனநிலைக்கு நவீன வடிவம் தருவதற்கான ஒரு வழிமுறையாக காந்தி பற்றியச் சொல்லாடல் அமைந்துவிட்டது. அதன் குறியீடுகளாகச் சடங்குகளாக உள்ள காந்தி பஜனைகள், காந்தி பூஜைகள், கண்காட்சிகள், காந்தி அஞ்சலிகள் அனைத்தும் காந்தி என்ற புனித பிம்பத்தை மையமாகக் கொண்ட காட்சி உத்திகளாக மாறியுள்ளன.

காந்தி வாழ்ந்த காலத்திலும் அவருக்குப் பின்னும் அது போன்ற ஒரு புனித உரு இந்தியச் சமூகத்தில் பல குழுக்களுக்குத் தேவைப்பட்டது. தம் சாதி மேலாதிக்கம், சனாதனப் பற்று, இந்துப் புனிதவாதம், பிற்போக்கு மனித மதிப்பீடுகள் அனைத்தையும் காத்துக் கொண்டு நவீன, ஜனநாயக அரசியலிலும் மேலாதிக்கம் செலுத்த காந்தி பக்தி, காந்தி வடிவம் மிகவும் பயன்பட்டது. அவரைக் கொண்டாடியவர்களின் மனநிலையையும் நோக்கத்ததையும் காந்தி அறிந்திருந்தார், ஆனால் அவர்களைத் தன்னுடன் இருக்கவும் அனுமதித்தார். அவரைக் கொண்டாடிய பலரும் தமது முரண்களை  மறைத்தபடி புதிய அரசியல் உருவங்களாகவும், மக்கள் நேசர்களாகவும் தேற்றம்தர காந்தி பக்தியைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது அவருக்குத் தெரிந்திருந்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் தனது புனித உருவைப் பாதுகாத்து மக்களின் பெரும் தலைவராகவும் அன்றைய அரசிலின் மையமாகவும் தன்னைத் தொடர்ந்து வைத்துக் கொண்டார்.

மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு பற்றி காந்தி உருவாக்கியிருந்த மொழி இதற்குப் பெரும் உதாரணம். இஸ்லாமியச் சமூகத்தின் மீது அன்பும், இணக்கமும் கொண்டவர்களும், தீண்டாமையைக் கடைபிடிக்காதவர்களும்தான் தன்னுடன் இருக்க முடியும் என்று  ஒரு செய்தியை தன் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் பரப்பியிருந்தார். ஆனால் அவருடன் இருந்த இந்துத் தலைவர்கள் அனைவரும் இஸ்லாமிய வெறுப்பு அல்லது மறுப்பு கொண்டவர்கள். அவருடன் இருந்தவர்கள் தீண்டாமை, சாதியமைப்பு, பிராமண உயர்வு என்பவற்றை மாறாத தர்மமாக ஏற்று, நம்பி, வாழ்ந்தவர்கள். ஆனால் அவர்களைக் காந்தித் தன்னிடமிருந்து விலக்கியதும் இல்லை, அவர்களிடம் இருந்து தான் விலகியதும் இல்லை. தன் ஆசிரமத்தில் கூட தீண்டாமையை அதன் கொடிய நடப்பை நீக்க முடியாமல் அதற்கான முயற்சியைக் கைவிட்ட போதும் தானே தீண்டாமைக்குட்பட்ட அனைத்து மக்களுக்கும் தலைவர் என்றும் மீட்பர் என்றும் நம்பியவர்.

காந்தி தன்னைப் பற்றித் தானே உருவாக்கியளித்த புனித பிம்பத்தை மற்றவர்கள் நம்பவும் கொண்டாடவும் தொடங்கிய போது அதனை முழுமையாக நிறுவவும், உறுதி செய்யவும் வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். 1915-இல் மகாத்மா என்று அவரை ரவீந்திரநாத் தாகூர் பெருமைப்படுத்திய போதும் 1919-இல் வாழ்கநீ எம்மான் என்று சுப்பிரமணிய பாரதி துதித்த போதும் அவருடைய சாதனைகள் அல்லது பெருஞ்செயல்கள் என எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. காந்திய அரசியல், மற்ற நிர்மாணச் செயல்பாடுகள் எல்லாம் 1925-க்குப் பிறகுதான் தொடங்குகின்றன. 1915-வரை தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகவும், சமூக சேவகராகவும் இருந்து “கெய்ஸர் ஹிந்த்“ என்ற விருதினைத் தனது போர்க்காலச் சேவைக்காகப் பெற்றிருந்தார். 1915-இல் தான் அளித்த உறுதிமொழிப்படி பிரிடிஷ் படைக்கு ஆள் சேர்க்க 1919-இல் யாத்திரை மேற்கொண்டு அது தோல்வியடைந்ததால்  மனம் நொந்து அதனைக் கைவிட்டிருந்தார்.

பிரிடிஷ் படையில் சேரும்படி மக்களைக்     கேட்டுக்கொண்டு  துண்டுப் பிரசுரங்கள்       வெளியிட்ட போது அவர் வைத்த வாதம் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறானபல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே    ஆயுதப் பயிற்சி  இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே    மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். 
ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம்   கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது.  அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள்    வைத்துக்கொள்ளுவதற்கு இருக்கும் தடையும் ரத்தாகிவிடும்.” காந்தி பின்னாளில் அதிகம் வலியுறுத்திய அகிம்ஸை இதில் ஒரு துளியும் இல்லையென்பதை விளக்க வேண்டிய தேவை இல்லை.

1919-இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழும் வரை பிரிடிஷ் அரசு பற்றிய அவருடைய நிலைப்பாடு முற்றிலும் வேறாக இருந்தது. இந்தியச் சமூகம் அமைப்பு பற்றியோ, அதன் அரசியல் பற்றியோ அவருக்கு அப்போது போதிய பரிச்சயமும், தெளிவும் இல்லை. தனது எதிர்காலத் திட்டம் பற்றியும் அவருக்குத் தெளிவான எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் பிறர் அளித்த மகாத்மா புனித உருவம் அவருக்குள் இறங்கியிருந்தது,  தன்னைப் பற்றிய தூய, புனித பிம்பத்தைத் தானே ஒரு கட்டத்தில் நம்பத் தொடங்யிருந்தார். அதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அது தனக்கு ஒரு பாரமாக உள்ளது என்றும் சொன்னாலும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அதனைச் சுற்றியே அமைந்திருந்தது, அதனை உறுதி செய்யும் முயற்சியாவே அவரது பேச்சுகளும், எழுத்துக்களும், பரிசோதனைகளும் அமைந்திருந்தன. 1923-இல் அவர் எழுதத் தொடங்கிய “தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்” 1925-இல் எழுதத் தொடங்கிய “எனது வாழ்க்கைக் கதை அல்லது சத்தியத்துடனான எனது பரிசோதனை” இரண்டுமே புனித, மகாத்மா அடையாளத்தை மக்களுக்கு முன் நிறுவவும் தனக்குத் தானே உறுதி செய்து கொள்ளவுமான மொழிச் செயல்பாடுகளாவே இருந்தன.

“ஒழுக்கம்தான்  எல்லாவற்றிற்கும்    அடிப்படை ,  சத்தியமே எல்லா ஒழுக்கத்திற்கும் சாரம் என்று நான் கொண்ட உறுதி ஒன்று மட்டும் எனக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டது.  சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று.   ஒவ்வொரு நாளும் அது என்னுள் பெருகி வளரத் தொடங்கியது. அதற்கு நான் கொண்ட பொருளும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வந்தது. அதேபோல நன்னெறியைப்  போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும்    உள்ளத்தையும் பற்றிக்கொண்டது. ‘தீமை செய்தோருக்கும் நன்மையேசெய் ’     என்ற அப்பாடலின் போதனை,  என் வாழ்க்கையில் வழிகாட்டும்   தருமமாயிற்று.  அதன் மீது எனக்குப் பெரும் பற்று உருவாகிவிட்டதால், அதன்வழியில் பல பரிசோதனைகளையும் செய்யத் தொடங்கினேன்.”   தனது பதினைந்து, பதினாறு வயதில் தனக்கு இருந்த மனநிலை பற்றி காந்திஜி இவ்வாறு விவரிக்கிறார். காந்தியின் மொழி இது, தான் பிறந்ததில் இருந்தே சத்தியம், அகிம்ஸை, தர்மம் பற்றிய தேடுதலிலேயே  இருந்து வந்ததான தோற்றத்தை உருவாக்கும் சத்திய சோதனை தற்புனித மனநிலையின் மிகப்பெரிய எடுத்துக் காட்டு.

அதே போன்றதுதான் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலும். “பண்டைக் காலங்களில் தென்னாப்பிரிக்காவில் வசித்த மக்கள் யார் என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஐரோப்பியர்கள் தென்னாப்பிரிக்காவில் குடியேறிபோது அவர்கள் நீக்ரோக்களைக் கண்டனர். அமெரிக்காவிலிருந்த சில அடிமைகள் அடிமைத் தனத்திலிருந்து தப்பி ஆப்பிரிக்காவில் வந்து குடியேறினர், அவர்களுடைய சந்ததியினரே நீக்ரோக்கள் என்றும் கருதப்படுகிறது.” என வெள்ளையின வரலாற்றுப் பார்வையில் ஆப்பிரிக்க மக்களை அறிமுகம் செய்வதில் தொடங்கி ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் மண்ணுரிமை பற்றியோ அவர்களின் அரசியல் பற்றியோ எதனையும் கூறாமல் சத்தியாகிரகத்தின் ஒளி சுடர்விட்டுப் பிரகாசிப்பதைச் சொல்லி முற்று பெறும்.

காந்தியின் தென்னாப்பிரிக்க கால வாழ்வு இந்திய மக்களின் உரிமைகளை பெறுதற்கான சட்ட நடவடிக்கைகளால் நிரம்பியது. அதற்கான உழைப்பு அதிகமானது என்றாலும் காந்திக்கு பெரும் வருமானத்தையும் அது தந்தது. காந்தியின் இந்து, சனாதன மனநிலைதான் இங்கு மிகவும் சிக்கலானது. இந்தியர்களை கறுப்பினத்தவர்கள் போல நடத்தக்கூடாது என்பதுதான் அவருடைய வாதம். கறுப்பினத்தவர்களுடன் இந்தியர்களைச் சேர்க்கக்கூடாது, கறுப்பினத்தவர்கள் இந்தியக் காலனியில் கலக்கக்கூடாது. கறுப்பர்களுக்கு தனி ரயிலும், தனி இடமும் ஒதுக்கப்பட்டலாம் ஆனால் இந்தியர்களுக்கு  பிரிடிஷ் பிரஜைகளுக்கான சமஉரிமை அளிக்கப்படவேண்டும். இந்திய இனத்தவர்கள் நீக்ரோக்களைப் போன்றவர்கள் இல்லை. நாங்கள் புனிதமான சனாதன, சாஸ்திர மரபைக் கொண்ட தூய்மையான குணம் கொண்ட பிராமண தர்மத்தால் வழிநடத்தப்படும் இனத்தவர்கள், பிரிடிஷ் அரசின் விசுவாசமான ஊழியர்கள். காந்தியின் புரிதலும் மனநிலையும் அப்போது இதுதான். “இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைப் பாருங்கள் அவர்கள் கறுப்பர்களைப் போல நடத்தப்படுகிறார்கள்.” என்பதுதான் 1893-1915 வரை காந்தியின் முறையீடு. “டர்பனில் உள்ள சட்டம் இந்தியர்களை பதிவு செய்யச் சொல்கிறது. இந்தச் சட்டம் உழைக்காத, எந்தப்பயனும் இன்றி வாழ்கிற கறுப்பர்களுக்குத்தான் தேவை, இந்தியர்களுக்கு அல்ல. ஆனால் இந்தச் சட்டமோ இந்தியர்களை கறுப்பர்களுக்குச் சமமாக நடத்துகிறது.” என்பதுதான் காந்தியின் சமூக, அரசியல் புரிதல்.

கறுப்பர்கள் உழைக்காதவர்கள், ஆடுமாடுகளைத் திரட்டித் தமக்குப் பெண்டாட்டிகளை விலைக்கு வாங்கிக் கொண்டு, பிறகு வாழ்க்கை முழுக்க எந்த வேலையுமம் செய்யாமல் அம்மணமாகக் கழிக்கிறவர்கள். இந்தியர்கள் வைஷ்ணவ, சனாதன, வைதிக மரபின் சந்ததியினர் அத்துடன் பிரிடிஷ் அரசுக்காக உழைப்பவர்கள், அதனால் அரசியல் உரிமைக்கு உரியவர்கள். இந்த இன வெறுப்பு கொண்ட, ஏகாதிபத்திய மதிப்பீடு காந்தியத்தின் எந்தப் பிரிவிலும் அடங்கக்கூடியதில்லை. இனக்குழுக்களின் இயற்கையுடன் இயைந்த வாழ்வு, இனக்குழு மக்களின் தேவைக்கேற்ற உழைப்பு எனப் பல பகுதிகளைக் கொண்டது. அத்துடன் இது காந்தியின் உள் படிந்த நிறவெறியின் வெளிப்பாடு இது.

ஆனால் 1922-க்குப் பிறகு காந்தியின் பார்வை மாறுகிறது, ஆனால் இனத்தூய்மைவாதம் அவருக்குள் முழுமையாக மறைந்தா என்பதைத் தெளிவாகக் கூற முடியாது. 1923-இல் எழுதிய தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம் நூலில்  “கறுப்பின மக்களில் சூலுக்கள் மிக உயரமானவர்கள், மிகவும் அழகானவர்கள். ஆமாம் அழகானவர்கள்தான், வெள்ளை நிறமும் கூரிய நாசியும்தான் அழகு என நம்புவது மூடநம்பிக்கை.” என்பது  அவருக்குள் உருவாகிய புதிய பார்வை, அது தென்னாப்பிரிக்க காலத்தில் அவரிடம் இல்லை.

இதனை இங்கு கூறுவதற்குக் காரணம் மகாத்மா என்ற உணர்வுடன் தன்னடையாளத்துடன் அவர் 1922-க்குப் பிறகுதான் தனது புரிதல்களை மாற்றிக் கொள்ளத் தொடங்குகிறார். அவருக்குள் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த மாற்றங்கள் அறிவியல் அடிப்படையிலோ, சமூகப் புரிதல்கள் அடிப்படையிலோ நிகழவில்லை. இதய சுத்தி, உயிர்களிடம் அன்பு, சத்தியம், அகிம்ஸை, அந்தராத்மா, தெய்வத்தைக் காண்பது என்ற உருவகச் சொற்களால் நிகழ்ந்தது. அது அவரது தனிமனித மனமாற்றத்திற்கு உதவியது, ஆனால் அது ஒரு தேசத்தின் அரசியலாக முடியாது, அப்படி நிகழவும் இல்லை.

ஆன்மீகத்தையும் அரசியலையும் அவர் கலந்தது இரண்டிலுமே எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அத்துடன் தனது ஆத்ம சுத்தி பற்றி அவர் கொண்டிருந்த அதீத நம்பிக்கை, பெருமிதம் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலில் பெருங்கேட்டை, மாபெறும் பின்னடைவைக் கொண்டு வந்தது.  அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாளில் உருவாக்க நினைத்த, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலுக்கு  அடிப்படையாக அமைய இருந்த தனித்தொகுதி, மற்றும் இரட்டை வாக்குரிமை என்ற “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவ” சீர்திருத்தத்தை இந்து மதத்தைப் பாதுகாக்கும் தனது திட்டத்திற்காகப் படுகொலை செய்தார் காந்திஜி.

“தீண்டாமையை அடியோடு அழித்தால் மட்டுமே நாம் விடுதலை அடைய முடியும். இந்து மதம் அழியாமல் இருக்கத் தீண்டாமை நீக்கப்படவேண்டும். தீண்டாமை ஒழிப்பு இல்லாமல் சுயராஜ்யம் இல்லை. இந்து மதத்ததைச் சுத்திகரிக்கும் செயல்தான் தீண்டாமை ஒழிப்பு.” என 1915க்குப் பிறகு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த காந்தி தீண்டாமை ஒழிவதற்கு முதல் படியாக அமைய இருந்த அரசியல பிரதிநிதித்துவ உரிமையைத் தன் உண்ணாவிரதத்தின் மூலம் இல்லாமலாக்கியதை  அறிவின் அடிப்படையிலான காந்தியம் நிச்சயம் ஏற்காது.  அந்த வரலாற்றுக் கொடுமையை “காவியப் பெருமை கொண்ட பெரு நோன்பு“ (எபிக் ஃபாஸ்ட்) என்று கொண்டாடிய சனாதன சக்திகளின் நோக்கம் காந்தியை முன் வைத்து வர்ண சாதி அமைப்பைக் காப்பாற்றிக் கொள்வதுதான் என்பதை காந்தி அறியாமல் போன நிகழ்வுதான் காந்திக்கும் காந்தியத்திற்கும் இடையிலான முரண்களுக்கான பெரும் எடுத்துக் காட்டு.

“இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள. அவர் வாயைத் திறந்து பேசிவிட்டால் அதற்கு மறுபேச்சே இல்லை என்று நம்புகிறார்கள். ஒரு நாய்கூட குரைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். ஆனால்  புனிதச் சபையின் தலைவராகவே இருந்தாலும் அவர்முன் நேருக்கு நேர் நின்று விவாதிக்கவும், அவர் குற்றமிழைக்கும் போது  உறுதியாக எடுத்துச் சொல்லவும் துணிவுள்ள கலகக்காரர்களுக்கு இந்த உலகம் நன்றியுடன் இருக்கவேண்டும்.  ஒரு முற்போக்குச் சமூகம் அதன் கலக்காரர்களுக்கு தரவேண்டிய மரியாதையைத் தருகிறாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.” என அறிவித்து  பாபாசாகேப் அம்பேத்கர் காந்திக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் காந்தியத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியது. அதனை இன்று வரைகூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் காந்தி பக்தி இருந்து வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் 1927-இல் மகத் சத்தியாகிரகத்தைத் தொடங்கிய போது காந்தியின் ஆதரவு அதற்குக் கிடைக்கும் என்று நம்பினார். அதற்கான ஊர்வலத்தில் காந்தியின் படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு ஆதரவு தரவில்லை என்பதுடன் அரிஜனங்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபடக்கூடாது, தீண்டாமை சாதி இந்துக்களின் பாவம் அவர்கள்தான் அதனைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுக்கும் அரசியலுக்கும் பொருந்தாத அறிவிப்பைச் செய்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எப்பொழுதெல்லாம் போராட்டத்தில், ஒத்துழையாமையில் ஈடுபட்டாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்பது அவரது பழக்கமாக மாறியது. 1931-இல் அம்பேத்கர் காந்தியை முதல் முறை சந்திக்கச் சென்றபோது இரண்டு மணிநேரம் காக்கவைத்து வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்ததுடன் நான் சிறுவயதிலிருந்தே தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருகிறேன். உங்கள் வயதைவிட என் அரசியல் பணி அதிகம் என்று அவமதித்து அனுப்பினார். அம்பேத்கரை டிப்ரஸ்ட் கிளாஸ் பெடரேஷனுடைய பிரதிநிதி என்ற முறையில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அம்பேத்கரை ஒரு பிராமணர் என்று நினைத்திருந்ததாக மனதறிந்து பொய்யைச் சொன்னதுடன் ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் பிரதிநிதியென்றால் அழுக்கு உடையில், ஆங்கிலம் தெரியாத ஒருவர்தான் இருக்க முடியும் என்ற தனது பார்வையையும் வெளிப்படுத்தினார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் போது அம்பேத்கர் யார், அவருடைய அரசியல் என்ன என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து அவமதித்து தானே தீண்டாமைக்குட்பட்ட மக்களின் தலைவன் என நிறுவ முயற்சி செய்தார்.  1932-இல் பூனா ஒப்பந்தத்தின் வழியாக அம்பேத்கரின் பெரும் முயற்சியைத் தோற்கடித்து பாதி உரிமையைப் பெற வழி வகுத்தார். தனித்தொகுதி உருவானால் இந்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் படுகொலை செய்யவும், அழித்தொழிக்கவும் தொடங்கிவிடுவார்கள்  அதனைத் தடுக்கவே தான் உண்ணா நோன்பு இருந்து “கம்யூனல் அவார்ட்டை” இல்லாமலாக்க முயற்சிக்கிறேன் என்றும் அந்தக் கொடுமையைச் செய்யப்போகிறவர்கள் யார் என்பதையும் தனது நேர்ப்பேச்சில்  மகாதேவ் தேசாய், வல்லபபாய் பட்டேல் போன்றவர்களிடம் தெரிவித்த காந்தி பொதுவெளியில் தேசத்தின் முன் இந்துங்கள் தமது பாவத்தைக் கழுவிச் சுத்தம் செய்வார்கள், இனி இந்துக்களே தீண்டாமையை ஒழிப்பார்கள் அதற்கானதே தனது உண்ணாவிரதம் எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

தீண்டாமை தற்போது மறைந்து வருகிறது, விரைவில் தான் அதனை ஒழித்துவிடுவதாக சமூக அறிவும், வரலாற்று அறிவும் அற்ற அறிவிப்பைச் செய்து தனது புனித உருவத்தை அரசியலாக மாற்ற முயற்சித்தார். அவை அனைத்தும் எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்பதை 1940-க்குப் பிறகுதான் அவர் உணர முடிந்தது. அம்பேத்கரின் வழியாக அவர் அறிந்த உணர்ந்த அரசியல் உண்மையை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை நெறியை அவர் அதற்குப் பிறகு அறிவிக்க வாய்ப்பே இல்லாமல் போனது. அதுவரை வர்ண, சாதிப் பிரிவுகள் இந்தியச் சமூகத்தின் பாதுகாப்புக்கானது என்று சொல்லி வந்தவர் வர்ணம், சாதி அற்ற தீண்டாமை அற்ற இந்தியா உருவாக வேண்டும் என்று சில இடங்களில் சொல்லத் தொடங்கினார்.  ஆனால் அதற்குப் பிறகு காந்தியின் செய்தியை, பேச்சை, எழுத்தைக் கவனிக்கும் நிலையில் காங்கிரசும் இல்லை, இந்தியச் சமூகமும் இல்லை. தன் வாழ்வே பெரும் தோல்வில் முடிந்தது என்றும் தான் கொலை செய்யப்பட்டால் அதுவே தனக்கு விடுதலை என்றும் அறிவிக்க வேண்டிய நிலைதான் காந்திக்கு நேர்ந்தது.

பௌத்த, சமண நெறிகளை விரும்பிய காந்தி அதனை இந்து தர்மம் என்று கூறியது,  வன்முறை, போர், வர்ண-சாதி இவற்றை வலியுறுத்தும் பகவத் கீதையைத் தனது ஆத்ம வழிகாட்டி என்றும் தர்மத்தின் தாய் என்றும் அறிவித்து எனப் பல முரண்களின் தொகுப்பாக இருந்தது காந்தியின் மொழி.  அறிவு மறுத்த ஆன்மீக மொழியால் தனது அறத்திற்கு எதிராக மாறியது ஒரு வரலாற்றுத் துயரம்தான்.  ஆனால் காந்தியம் இன்று அந்தப் புனித மொழியில் புதைந்து போன உண்மைகளை ஏற்றுத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். அப்போது அது உண்மையில் எளிய மக்களுக்கான இருத்தலியலை நோக்கிச் செல்ல முடியும். 

“நாட்டுக்காக வாழ்நாள் முழுக்கப் பணி செய்த சிறந்த மனிதர்கள் மீது நன்றியுடன் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நன்றியுணர்ச்சிக்கு எல்லை உண்டு.  .… ஒரு நாடு தன் சுதந்திரத்தை இழந்துபோகும் அளவுக்கு நன்றியுணர்ச்சியுடன் இருக்க முடியாது. மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்திய அரசியலில் பக்தியும், மாமனித  வழிபாடும்  வகிக்கும் பங்கு மிகஅதிகம்,  இந்த அளவுக்கு உலகில் வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது. சமயத்தின் பக்தி ஆன்மாவைக் கரைசேர்க்கப் பயன்படலாம். ஆனால் அரசியலில் பக்தியும் மாமனித வழிபாடும்  சீரழிவுக்கு வழிவகுத்துச் சர்வாதிகாரத்தில் கொண்டு சேர்க்கும்.” என அண்ணல் அம்பேத்கர் அறிவித்தது சுதந்திரமான அரசுக்கு மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் அனைத்துச் சிந்தனைகளுக்கும் பொருந்தும். 
காந்தி பல முரண்களைக் கொண்டிருந்தாலும், காந்தியம் எளிய மக்களுக்கான இருத்தலியலாக மாறமுடியும் என்பதை மெய்யாக்கும் முயற்சியில் காந்தியம் ஈடுபடமுடியும், அம்பேத்கரியத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் பொழுது.

(விகடன் தடம், நவம்பர் 2018)