பிரம்ம வித்யா (அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன)


பிரம்ம வித்யா
(அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன)

பிரேம்

தத்துவங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் அரசியல் சார்ந்தது, அரசியல் பற்றிய பேச்சு அறங்களின் தேர்ந்தெடுப்பு சார்ந்தது. அறங்களைப் பற்றிய பேச்சு எப்போதும் சிக்கலானது. ஏனெனில் அது மீண்டும் தத்துவங்களையும் அரசியலையும் தனது துணையாகக் கொள்கிறது. இந்தச் சுழல்களுக்கு நடுவே நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம். இதில் எந்தத் திசையை நோக்கி நகர்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் வேறு வழியின்றி வரலாற்றில் வந்து சிக்கிக் கொள்கிறோம். விடுதலையடைகிறோமா என்ற கேள்விக்கு முழுமையான பதிலை நம்மால் தரமுடியாவிட்டாலும் வரலாற்றுடன் எப்போதும் நாம் வினை புரிந்து கொண்டே இருக்கிறோம்.

வரலாற்றிடம் நம்மை ஒப்படைத்து விடும் போது கேள்விகள் பொருளற்றுப் போகின்றன. நம்மிடம் இருப்பவை அனைத்தும் பதில்கள் மட்டுமே. முன்பே தயார் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பதில்கள். எப்போதும் நம்மைச் செயலை நோக்கித் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. இந்தச் செயல்படு தன்மை நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் ஒருவரைக் கொண்டு செலுத்தி விடுகிறது.

உண்மையில் இந்த இடம்தான், மேற்குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் தொடக்கம் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் செயல்படுதன்மை, செயல் என்பவை முற்றிலும் அனுமதிக்கப்பட்டவை அல்ல. செயல்கள் அனைத்தும் தணிக்கைக்கும், விதிகளுக்கும், சட்டங்களுக்கும், தண்டனை அல்லது நன்கொடைகளுக்கும் தீர்ப்புக்கும் உரியவை. அனுமதிக்கப்பட்ட செயல்கள் அனுமதிக்கப்படாத செயல்கள் ஏற்கப்படுபவை ஏற்கப்படாதவை என்ற எதிரிடைகளின் வலிமை இங்குதான் தெரிய வருகிறது.

எதை ஏற்பது எதை மறுப்பது என்ற கேள்வி எழுந்தவுடன் மீண்டும் நாம் தத்துவம், அரசியல், அறம், வரலாறு என்ற சொல்லாடல்களுக்குள் நம்மையறியாமல் உழலத் தொடங்கி விடுகிறோம். இந்த உழற்சியிலிருந்து தப்பியவர் யாரும் இல்லை என்று சொன்னால், வேறு சில எதிர்வினைகள் உருவாகும். அப்பாவித்தனம் அதீத ஒப்படைப்பு கூட்டு மனோநிலை என்பவற்றைச் சிலர் உதாரணமாகக் கூறி தத்துவ உழற்சியும் ஊசலாட்டமும் அற்ற நிலையை விளக்க முற்படலாம். ஆனால் இவை அனைத்திலும் தத்துவம், அரசியல், அறம், வரலாறு என்பவை திணிந்து நிரம்பி கெட்டிப்பட்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை.

 ஒரே தத்துவம், ஒரே அரசியல், ஒரே அறம், வரலாறு என ஏகத்துவத்தின் இறுகிய வடிவம் இவை. இவற்றில் கேள்விகள் இல்லாதது போலவும் முழுமையான பதில்கள் மட்டுமே இருப்பது போலவும் தோற்றம் கிடைக்கலாம். ஒவ்வொரு பதிலுக்குக் கீழே கொலை செய்யப்பட்ட, புதைக்கப்பட்ட, சிறையிடப்பட்ட, நசுக்கப்பட்ட, பல நூறு கேள்விகள் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை இன்று யாரும் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கலாம்.

ஆனால் இப்படி நம்புவது கூடப் பேராசையின் வடிவமே. ஏனெனில் பிரம்மனையும், பிரம்மத்தையும் அறிவதற்கு குறைந்தது ‘மூவாயிரம்‘ ஆண்டுகளைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் பூமி நம்முடையது. இப்படிச் சொன்னவுடன் இதுதான் இந்த பூமியின் வலிமையும் என்று கூற கிழக்கிலும், மேற்கிலுமாக எத்தனை குரல்கள் எழும் என்று தெரியாது.

வித்யா என்பது பிரம்மத்தையே தனது இறுதி இலக்காகக் கொள்கிறது, இதுவே வேதாந்தத்தின் முடிவு. வேதாந்தம் என்றவுடன் புல்லரித்துப் போகாத சிந்தனையாளர்கள் எத்தனை பேர், சில புத்திகெட்ட சட்டோபாத்யாயாக்களைத் தவிர? ஆனால் நம்முடைய நிலை அப்படியல்ல. நாம் குழப்பத்தில் இருக்கிறோம். ஏனெனில் தற்போது நாம் வேதாந்திகள் அல்ல. பல்வேறு குழப்பங்களால், அவித்யாக்களால், மாயைகளால் நிரம்பிக் கிடக்கிறோம்.

இந்தியா என்றவுடன் ஞானத்தின் பூமி என்றும் பெரும் தத்துவங்களின் பிறப்பிடம் என்றும் ‘உலகம்‘ ஒரு வழியாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதை அய்ரோப்பிய, ஆசிய சிந்தனையாளர்கள் முன்மொழிய இந்தியச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு அதை நிரூபிக்கவே தமது கல்வி, கேள்வி, ஆய்வு அனைத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக ஞானங்களிலெல்லாம் உயர்ந்தது இந்திய ஞானம் என்று கொண்டாடும் கல்வியாளர்கள் மேற்கிலும் கிழக்கிலும் ஏராளமானோர். விவேகானந்தரின் வாழ்க்கைப் பணியாக இருந்தது, இந்து மதமே உலகில் சிறந்த ஞானத்தின் இருப்பிடம் என்று நிரூபிப்பது. இந்து மதம் என்றால் என்ன, அது வேதாந்தமே என்பதை ‘அனைவரும்‘ ஒப்புக் கொண்டுள்ளனர், வேதாந்தமே இப்போது இந்துக்களின் சமயம் என்பார் விவேகானந்தர்.

ஏன் இப்படிக் கூற வேண்டும் என்பது பழைய கேள்விதான். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், வைஷேசிகம், வைதீகம், சைவம், வைணவம் எனப் பலப்பல பிரிவுகளாகப் பிரிந்து போனதால் ‘இந்து மதம்‘ வலிமை இழந்தது, சீரழிந்து அடிமைப்பட்டுப் போனது. இவை அனைத்திற்கும் இடையிலான வேறுபாடுகளைக் களைந்து அதன் மூலம் வடிவத்தைக் கண்டறிந்து விட்டால் மாபெரும் ஞானமான ‘இந்து ஞானம்‘ முழுமையான வடிவில்  கையில் கிடைத்து விடும்.

பிறகு மிக மிகப் புராதனமானதும், மிக மிக ஆற்றல் வாய்ந்ததுமான ஒரு இந்திய சமய நிறுவனம் மறுஉயிர்ப்புப் பெற்றுவிடும். இந்தத் திட்டத்தை 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி எல்லா இந்து மதச் சீர்திருத்த சிந்தனைச் செம்மல்களும் செயல்படுத்தத் தொடங்கினர். வீரத் துறவியான மாபெரும் சிந்தனையாளர் விவேகானந்தரும் இதனையே தனது பேச்சிலும் மூச்சிலும் வெளிப்படுத்தி தனது முப்பத்தொன்பதாவது வயதில் மறைந்து போனார். இவர் மற்றவர் போலின்றி மேற்கின் வரலாறும் சிந்தனை மரபும் தெரிந்தவர்.

இவர் கூறுகிறார், மேற்கு வெளி நோக்கிய தேடுதலை உடையது, கிழக்கு  அதாவது ஆரியத் தத்துவம் உள்நோக்கிய தேடுதலையுடையது. மேற்கு திட்டமிடப்பட்ட செயல்களை உடையது. ஆரிய தர்மமோ உள் உலகின் மர்மங்களை ஆய்வது. இந்த இரண்டு ஞானங்களையும் மீட்டால் நாம் அடையப் போகும் வெற்றி அளவிற்கரியது.

இதற்கு அவர் வைக்கும் வாதங்கள் கவர்ச்சிகரமானவை. அது ஒரு புறம் இருக்கட்டும். இந்தியா வேதாந்த – இந்து ஞானத்தின் மூன்று அடிப்படை உண்மைகள் என்று அவர் கூறுவனவே இன்று முக்கியமானவை. இந்திய சமயப் பிரிவுகள் எதில் முரண்பட்டாலும் ஈஸ்வர, ஆத்மன், ஜகத் என்ற மூன்று அடிப்படைகளைத் தமது ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களே பிரிவுகளை உருவாக்கி விட்டன.

அந்தப் பிரிவுகளுக்குப் புராணங்களே அடிப்படையை உருவாக்கிவிட்டன. மீண்டும் நாம் நமது புராதன மூல முழுத் தத்துவத்தை அடைய வேண்டும், அறிய வேண்டும், மீட்டெடுக்க வேண்டும். அவர் கூறுவது ஒரு வகையில் உண்மையே. பிரஜாபதி, ஆத்மன், பிரபஞ்சம் என்ற கோட்பாடுகள்தான் இந்து சமயப் பிரிவுகள் அனைத்தையும் இணைப்பது. ஆனால் இன்று ‘உலகம்’ வியந்து பாராட்டும் இந்தியத் தத்துவக் கூறுகள் என்பவை இவைதானா என்பதுதான் நமது கேள்வி.

எல்லோரையும் வியக்க வைக்கக் கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புகள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்து விட்டன: வேதங்கள் என்ற அந்தத் தொகுதிகளே அதற்கு அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில் என்னதான் இருக்கிறது. இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து விட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம்தான். எல்லாவற்றுக்கும் இவற்றில் பதில் இருக்கிறது. நாமும் மிரண்டு போய் நிற்க வேண்டியதுதான்.

சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம், கீதையையும் ஒரு முறைக்கு நான்கு முறை படிப்போம்.

வேதங்கள் என்பவை என்ன? ஒரு இனக்குழுக் கூட்டம் தாம் வணங்கிய சிறு தெய்வங்களைப் புகழ்ந்து வேள்வி செய்து சோம பானம் கொடுத்து மகிழ்வித்து தனக்கானத் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்கினி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும், பலியும் தந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்கினி இந்திரன், வருணன் தொடங்கிய பல நூறு தேவர்களுக்கான புகழ் பாடல். யசூர் வேள்வி செய்வதற்கான, பலி தருதலுக்கான  விதி முறைகளின் தொகுப்பு. அதர்வம் மருந்து சிகிச்சை மந்திர தந்திரம், வசியம், வாலை என நடைமுறைத் தொழில்நுட்பங்களின் தொகுப்பு.

இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு. ஒரு வகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும், கிடைத்திருக்கும்.

ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிராக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு, மாபெரும் ஞானத்தின் களஞ்சியம், பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதைக் கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவிற்கு பேரின்பம் பெறலாம்.

அடுத்தது உபநிஷதங்களும் கீதையும்: இவற்றில் மிக மிக அழகான விவாதங்கள் உள்ளன. கவித்துவமான சூத்திரங்கள் உள்ளன. பலவிதக் கேள்விகள், மனம், உடல், உண்மை, தருமம், நான், நீ, அவன், அது என்பவை பற்றி சுற்றிச் சுழலும் சூறாவளிகள் கவர்ச்சிகரமானவை.

ஆனால் இவை அனைத்துமே பௌத்தத்திற்குப் பிறகானவை. அதாவது பௌத்தம் ஒரு தத்துவமாக, சமயமாக, நிறுவனமாக, விஞ்ஞானமாக, அழகியலாக, தர்க்கவியலாக, சில இடங்களில் அரசியலாக விரிவடைந்த பின் உருவானவை. ஒரு வகையில் இன்றுள்ள ‘இந்து மதம்‘ என்பதே பௌத்தத்தின் ‘எதிர் விளைவு‘ என்றுதான் கூற வேண்டும்.

பௌத்தம் முன் வைத்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் முகமாகவே பிறகு உருவான அனைத்து சமய முறைகளும் தமது தர்க்கங்களைக் கட்டின. கீதை முழுக்க முழுக்க ‘சுயமின்மை’, ‘தானழிதல்‘ என்பவற்றை  எடுத்துக்கொண்டு ஒரு புதிய செயல்படு தன்மையை உருவாக்குகிறது.

மகாபாரதம், இராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் சிறு சிறு கதைகளில் இருந்தும் புராணங்களில் இருந்தும் பிறகே முறையாகத் தொகுத்து எடுக்கப்பட்டவை. சமஸ்கிருதத்திற்கு இலக்கணமே பௌத்தப் பள்ளியில் படித்த அறிஞர்களால்தான் எழுதப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சொல்வதற்கு என்ன காரணம் என்று தோன்றலாம். வேறொன்றுமில்லை, இந்திய ஞானம், இந்திய அறம், இந்தியத் தத்துவம் ஏதாகிலும் இருந்தால் அது பௌத்தத்தின் மாபெரும் கேள்விகளுக்குப் பிறகு எழுந்த விவாதங்களின் மூலமும் விசாரணைகளின் மூலமும் உருவானவையே என்று சொல்லிப் பார்க்கும் முயற்சிதான்.

இதில் ஆரிய,  திராவிடப் பிரிவுகள் எதுவும் இல்லை. வைதீக, வேதாந்த அடிப்படைகளை ஏற்ற திராவிட சமூகங்களும் லோகாயதத்தைக் கூறிய ஆரியக் குழுக்களும் இருந்திருக்கின்றன. இன்னொன்று மிகவும் முக்கியமானது: இன்றுள்ள இந்து வழிபாட்டு முறையில் உள்ள எந்தக் கடவுளும் வேதத்தில் இல்லை. சிவ, விஷ்ணு, சக்தி என்று எந்த உருவங்களும் வேத சமயத்தில் கிடையாது. ருத்ரன் இரண்டு இடங்களிலும், விஷ்ணு இரண்டு மூன்று இடங்களிலும் குறிப்பிடப்படும் புற தெய்வங்களே.

சிவமும் விஷ்ணுவும், பௌத்தரிடமும் சமணரிடமும் அன்பு, கருணை, சேவை, அடைக்கலம் என்பவற்றை கற்றுக் கொண்டு, மக்களைக் கவர்ந்த சிறு குழு மற்றும் நாட்டார் மரபுத் தெய்வங்களே. சக்தியோ இந்தியப் பூர்வகுடிகள் அனைவரிடமும் இருந்த ‘கொற்றவை‘ போன்ற தாய்த்தெய்வ மூலப் படிமம். இவர்களை எடுத்து வெளியே வைத்து விட்டால் இன்றுள்ள இந்துமதம் சோமபானத்தைக் குடித்துக் கிறங்கி, காளை மாமிசத்தை உண்டு தேரில் ஏறி, அசுரர்கள், தாசர்கள், தஸ்யுக்கள், ராக்ஷஸர்கள், பிசாசர்கள், மிலேச்சர்கள் எனப் பலவகைப்பட்ட வேள்வி அறியாத கடவுள் நம்பிக்கையற்ற பூர்வகுடி மக்கள் மீது அன்புமாரிப் பொழியும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட அக்னி, வருண, வாயு, மாருதத் தெய்வங்களின் பெரும் படையன்றி வேறு எதுவாக மிஞ்சும்.

இராமானுஜரும் சங்கரரும் வேதாந்தத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள். பிரம்மமே அனைத்திற்கும் மூலம், அதுவே ஒற்றை உண்மை. குறையற்ற, மகாகுணம் உடைய அனைத்திற்கும் அதிபதியான பிரம்மம். அதை அறிவதே மனித வித்தையின் நோக்கம். அதுவே மோட்சம், இதை அறிவிப்பதே வேதாந்தம். வேதாந்தம் பன்மையை மறுக்கிறது, பலவாகத் தோன்றுவதை மாயை என்கிறது.

அதைக் கடந்து ‘தான்’ மற்றும் பிரம்மம் என்பவற்றின் ஒருமைத்துவத்தை காட்டுவது என்றெல்லாம் அழகிய தர்க்க முறைகள், மறுப்புகள், நிரூபணங்கள். பிரம்மத்தை அறிய, வேதாந்தம் துணை செய்யும், வேதாந்தம் என்பது வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் என்ன, பிரம்மனை அறிதல் பெரும் ஞானம்தானே என்று சரணடைய நாம் தயாராகவும் செய்யலாம்.

சங்கரர் சொல்கிறார்: சூத்திரன் எவனொருவனும் பிரம்ம ஞானத்தையோ, பிரம்ம வித்தையையோ அடைய முடியாது. ஏனெனில் சூத்திரர்களுக்கு யக்ஞம் பற்றிய அறிவோ, வேதப் பயிற்சியோ உரியதல்ல. அவர்களுக்கு அது வழங்கப்படவும் கூடாது. ஞானத்திற்கும் அறிவிற்கும் சூத்திரர்கள் எந்தக் காலத்திலும் உரியவர்களாக, தகுதியானவர்களாக இருக்க முடியாது. பிரம்ம வித்யா சிலருக்கு மட்டுமே உதவியது.

சங்கரன் கூறும் இவற்றிற்கு வேதத்தில் முழு ஆதாரம் உள்ளதா என்றால் இல்லை, நான்கு வருணங்கள் பற்றிய குறிப்புதான் உள்ளது. இவர் சொல்வது மனுவை ஆதாரமாகக் கொண்டது. அப்படியெனில் அது வேதாந்தத்திற்கு புறம்பானது அல்லவா என்ற கேள்வி எழலாம். எழக் கூடாது, ஏனெனில் மனு பிரஜாபதியையும், பிரம்மத்தையும் ஏற்றுக் கொண்டவர். அத்வைத ஞானிக்கு சூத்திரர்களுக்கான ஆத்மனும், பிரம்மமும் எதுவாக இருக்கும் என்று தெரிந்திருக்கும். ஏனெனில் பௌத்த தர்க்கவியலையும், நிறுவன விதிகளையும் கற்றவர்தானே. ஆனால் சொல்லி வைக்க அவகாசம் இல்லை. இந்திய ஞானத்தின் இருப்பும் போக்கும் இப்படித்தான் இருக்கும்.

ஆனாலும் உலகம் வியக்கும் மாபெரும் தத்துவங்களும் அறங்களும் அழகியலும் இந்திய மண்ணில் தோன்றியே உள்ளன. பிரம்மம் எது? இந்த உலகத்தின் மூலம் எது? ஆத்மா என்பது எங்கிருந்து வந்தது? எங்கு போகிறது? என்று எந்தக் கேள்வியும் உன்னை உண்மையை நொக்கி செலுத்தாது. அவற்றை சற்று தள்ளிவை என்று சாந்தமாக உரைத்த பௌத்தமும், உன் சுடுமூச்சில் கூட சில செல் உயிர்கள் உயிரிழக்கக் கூடும் என்று கூறிய சமணமும், உண்பவை நாழி, உடுப்பவை இரண்டே என்று கூறிய தமிழின் நாடோடிக் கவி மரபும் இந்த மண்ணுக்குரியவை.

இவற்றில் எதைக் கொண்டு இந்திய ஞானங்களை அடையாளம் காண்பது? இவற்றில் எவற்றை இணைத்து இந்திய மனம், இந்திய மரபு, இந்தியத் தன்மை என்பவற்றை மீட்டெடுப்பது.

பின்குறிப்பு:

மேற்குலகத்தினர் இந்தியாவை மனித உரிமை மீறல்கள் நிறைந்த, பெண்களைக் கொலை செய்யக் கூடிய, தீண்டாமையைக் கடைபிடித்து, வன்முறை புரியக் கூடிய, ‘சமூக உணர்வு’ குறைந்த மக்கள் கூட்டம் நிறைந்த சமூகங்களின் கூட்டமைப்பு என்றும்கூட கூறுவதுண்டு.

இந்தியா ஒரு ஞான பூமியென்று கூறப்படுவதற்கும் இதற்கும் என்ன உறவு என்று அறிய வேண்டியது அவசியம். இந்த இரண்டு கருத்துமே மேற்கில் நிலவுகிறது என்றாலும், இந்தியாவைப் பற்றி இந்தியாவிற்குள் நிலவும் கருத்துக்கள் எத்தனை வகையானவை என்பதை அறிவது அவ்வளவு இலகுவான வேலையல்ல. பிரம்மனை அறிவதில் இது பெருஞ்சிக்கலானது.

விரிவடையும் வித்யா

(மேலும் விரிவாக விவாதிக்கப்படுவதற்கான தொடக்கம்)

எனது பிரம்ம வித்யா கடடுரையின் மீதான ‘எதிர்வினை‘ மேலும் சில கருத்துக்களை விளக்கக் கோருகிறது. எதிர்வினையாளர் தம்மை ‘மெத்தப் படித்த மேதாவி அல்ல, சிறிதே படித்தவன்‘ என்று கூறிக் கொண்டபின் சொன்னவற்றைத் தெரிந்து கொண்டு வேறு வேலைகளைப் பார்த்திருக்கலாம்தான். ஆனால் சிறிதே படித்தாலும் படித்தது வேதமல்லவா, எப்படி அதற்கெதிரான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டு வாளாவிருப்பது, நன்று எதிர்வினை.

கட்டுரையின் அடிப்படையை ஒருவாறு உய்த்துணர்ந்த நுண்ணறிவுதான் எதிர்வினையாளரை இப்படி எழுத வைத்திருக்கிறது. அவர் ஒரு ‘எட்டு கருத்துக்களைப்‘ பட்டியலிட்டு ‘இவை அனைத்தும் மகா வாக்கியங்கள், இவற்றிற்கு ஆதாரங்களோ மேற்கோள்களோ காட்டுவதற்கு அவசியம் இருக்கிறது என்று ஆசிரியர் நினைக்கவில்லை‘ என்று கூறுகிறார். சில ஆயிரம் நல்வாக்கியங்களை எழுதிவிட்ட எனக்கு சில மகா வாக்கியங்களை எழுதும் தகுதியும் உரிமையும் இருக்கிறது என்று நினைக்கக் காரணம் உண்டென்றாலும், இப்படி ஒரு சிறு கட்டுரையில் ஆதாரங்களையும் மேற்கோள்களையும் இணைத்து ஒரு நூல் அளவுக்கு எழுதிவிட முடியும் என்று நினைக்கவில்லை. நான் எழுதும் ஒவ்வொரு வாக்கியங்களுக்குப் பின்னும் பல நூறு ஆதார, மேற்கோள் வாக்கியங்கள் குறிப்புகளாக எஞ்சியுள்ளன. தேவைப்படும்போது அனைத்தையும் வெளியிடுவேன். தற்போது மிகச் சுருக்கமான சில விளக்கங்களை மட்டும், அதுவும் எனது எழுத்துக்களைத் தொடர்ந்து பழகி வரும் வாசகர்களுக்காக.

 ‘பிரம்ம வித்யாவில்‘ சொல்லியிருப்பது இந்து மையவாதத்திற்கு ஆதாரமாகவுள்ள வைதீக, பிராமண, சனாதன, வேதாந்த மரபு என்பது வெறும் போலித்தோற்றம். அதில் அற உள்ளீடோ, தத்துவ மெய்யியல் உள்ளீடோ இல்லை. இது இந்திய மரபுகளின் பல வடிவங்களில் ஒன்றே தவிர மேல் நின்று இயங்கும் உயர்தகுதி கொண்டதல்ல என்பதுதான்.

அது மட்டுமல்ல வைதீக, சனாதன, இந்து மரபு  மனிதப் பண்புக்கு கடும் கேட்டை விளைத்த  வன்முறை மரபும் கூட, இதனைப் பல கோணங்களில் இருந்து விளக்கலாம். ஆனாலும் வேதம் பற்றிய பலநூறு ‘ஓலங்கள்‘ எழுந்தபடியிருப்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற ஐயப்பாடு சிலருக்கு ஏற்படுவதுண்டு.

அதனைக் கலைப்பதற்கே எனது கட்டுரை ஒரு முன்னுரையாக அமைந்தது. இக்கட்டுரை ‘எதிர்வினையாளர்‘ போன்றோருக்குக் கடும் சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகத் தெரிந்ததே. ஆனாலும் இன்றுள்ள நிலையில் இவர்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முன்புபோல அனைத்தையும் மறைத்து ‘அத்தியாத்ம வித்யானாம் வாத ப்ரவததா மஹம்‘ (வித்தைகளுக்குள் அத்தியாத்ம வித்தையும் வாதஞ் செய்பவரிடம் வாதமும் நானே) என்று முடித்துக் கொள்ள முடியாது அல்லவா. இனி  விளக்கங்கள்.

புல்லரித்துப் போதல் பற்றி:

வேதாந்தம் என்றவுடன் புல்லரித்துப் போகாக சிந்தனையாளர்கள் எத்தனை பேர், சில புத்திகெட்ட சட்டோபாத்யாயாக்களைத் தவிர? என்பது கேள்வி.

கேள்வி மட்டுமல்ல கேலி. இந்தக் கேள்விக்குப் பின் சிலர் வேதாந்தத்தை ஏற்காமல் இருக்கிறார்கள் என்ற கருத்தும் படிந்துள்ளது. இதுவன்றி இந்து மதத்திற்கு வேதாந்தமே அடிப்படை என்பது எவ்வாறு என்பதும், இந்து மதத்தைக் கண்டு புல்லரித்தல் என்பது எவ்வாறு என்பதும், இந்து மதத்தைக் கண்டு ‘புல்லரித்தல்‘ என்பது ‘தனிமனிதனைச்‘ சார்ந்தது அல்ல என்பதும் தான் நாம் விவாதிக்க வேண்டியவை.

வேதத்தையும், வேதாந்தத்தையும் கண்டு நெக்குருக இந்திய வரலாறும், இந்தியச் சமூக நிலையும் தெரியாத ஒருவரால்தான் முடியும். தேவாலயத்தையும் வினய பீடகத்தையும் கண்டு புல்லரித்தல் போன்றதல்ல இது. உலகில் தம் வர்ணத்தையும் ஜாதி தர்மத்தையும் தவிர உச்சநிலையும் உயர் தகுதியும் பெற முழு உரிமையும் கொண்ட வேறு யாரும் இல்லை என்று நிறுவ ஒரு பிரிவினர் செய்த வன்முறையின் அடையாளங்கள் இவை. இவற்றைக் கண்டு புல்லரித்தலுக்கு ஒரு விஷேச ஃபாசிச மனோநிலை தேவைப்படுகிறது. இது பற்றியதுதான் பிரம்ம வித்யா கட்டுரை.

உலகில் எல்லா இனக்குழுக்கள், குடிமரபுகள் போன்றவற்றின் சிந்தனைத் தொகுதிகளைப் போன்றவைதாம் வேதங்கள் என்று சொல்லி விட்ட பிறகு விவாதிக்க என்ன இருக்கிறது. எல்லா மதங்களின் பூர்வ நூல்களும் அப்படியே. இவை மானுடவியல் ஆய்வுகள் தொன்ம ஆய்வுகள் போன்றவற்றிற்கு மிக நல்ல ஆதாரங்கள். மிக ஆர்வமூட்டும் உருவக, குறியீட்டுப் பதிவுகள்.

ஆனால் வேதங்களை அப்படிச் சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. ஏனெனில் அது குறையற்றத, மாறாதது. எல்லா வேத நூல்களும் தம்மை இப்படியே கூறிக் கொள்கின்றன. என்றாலும் எமக்கு அவை நூல்களே, வெறும் நூல்களே.

‘வேதங்கள்  மனித குலத்தின் அதிசயங்களில் ஒன்று‘ என்று கூற எதுவுமில்லை. மனிதர்கள் படைத்த அனைத்தும் அதிசயங்களே என்கிற வகையில், ஒரு கற்கருவி போன்றே வேதங்களும் மனித குல அதிசயங்களில் ஒன்று என்று வேண்டுமானால் கூறலாம்.

வேதங்கள் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன என்பதாலேயே உயர்ந்தவையோ உன்னதமானவையோ ஆகிவிட முடியாது. அவற்றின் அறம், மனிதநேயம் போன்றவையும் இந்தியச் சமூகங்களுக்கு அவை ஆற்றிய நன்மைகளுமே அவற்றை மதிப்பிட அளவுகோள்கள். இந்தியச் சமூகத்தில் பல நூறு நூல்கள் வாசிக்கப்படக் கூடாதவை என்றும் பாதுகாக்கப்படக் கூடாதவை என்றும் அழிக்கப்பட்டுள்ளன. இவை போல் அன்றி, பாதுகாக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக மனித குல அதிசயம் என்று வேதத்தைக் கூற வேதத்தாலும் வேத மரபுகளாலும் மறுக்கப்பட்ட நமக்கு என்ன காரணம் இருக்கிறது.

வேதங்கள் பற்றிக் கூறும் போது ‘எல்லோரையும் வியக்க வைக்கக் கூடியதும் மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புகள்‘ என்று நான் குறித்திருக்கிறேன்.  அவற்றின்  உருவகம், கவித்துவம் குறித்தே இவற்றை நான் கூறியிருக்கிறேன். வெறும் இலக்கியத் தொகுதியாக இவை இருந்திருந்தால் இவற்றை நாம் அணுகும் முறைவேறு. இவை சனாதன வன்முறையின் அடிப்படையான அதிகாரப் பனுவல்.  இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறை மரபு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டிருந்தது. இந்திய மண்ணின் மக்களை இழித்தும், ஒடுக்கியும் வைக்க இவை மூல ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.  

வேதங்களை மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று இவர்கள் கூறி ஏற்க வைக்கப் பல காரணங்கள் உள்ளன. அப்படியெனில் தமிழின் முதல் சங்கம் 9600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் திருமூலன் 3000 ஆண்டு வாழ்ந்து எழுதினான் என்பது மட்டும் புனைவாக தொன்மமாக இருக்க வேண்டிய தேவையென்ன?

வேதங்கள் என்பவை ஒரே காலகட்டத்தில் எழுதி ஒரே காலக்கட்டத்தில் தொகுக்கப்பட்டவை அல்ல. அவற்றில் பல காலங்களைச் சேர்ந்த பாடல்கள் உள்ளன. முதல் கட்டமாக திரி வேதங்களும் பிறகே சதுர்வேதங்களும் ஏற்கப்பட்டன. அதர்வண வேதம் இந்தியச் சிறுமரபுச் சடங்குகளின் போலி வடிவங்கள், சில மாற்று வடிவங்கள், அத்துடன் இவை தொகுக்கப்பட்டது. ‘பௌத்த காலத்திற்குப் பிறகு‘ (புத்தர் காலம் இல்லை நான் சொல்வது). அதே போல உபநிஷதங்கள் பௌத்த மரபுக்கு முன்பு என்றாலும் வேத ‘வேதாந்த‘ வேள்வி மரபுகளுக்கு மாற்றான எதிர் மரபுகளின் தாக்கம் உடையவை.

ரிக்வேதம் சூதாட்டத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுவது ‘இடைக்கால நகர்புற’ சமூகத்தின் சித்தரிப்பு. அதே போல் காதா உபநிஷத் “அறிவின் ஐம்புலன்களும் ஒன்றாகி மனதுடன் ஒத்து ஒடுங்கி நிற்கும் போது, புத்தி நடக்கமின்றி நிலைக்கும் போது உருவாகும் நிலையே அதிஉச்ச மனிதநிலை” (When the five instruments of knowledge stand still together with the mind, and when intellect does not move, that is called the highest state) என்று குறிப்பிடுவது பௌத்த மரபுக்குப் பின்னானது.

கட்டுரையில் கூறியுள்ள பௌத்தத் தாக்கம், பௌத்தப் பள்ளி என்பது நேரடித் தாக்கமோ, நேரடிப் பயிற்சியோ அல்ல, பௌத்த சிந்தனை மற்றும் தர்க்க முறையின் மூலம் தாக்கம் பெற்ற பிற சமய மரபுகள் பற்றியவை. சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் எழுதிய யாஸ்கர் வேதத்திற்கு அர்த்தம் இல்லை என்பவர்களுக்குப் பதில் கூறும் முகமாகவே தனது நிகண்டினை எழுதினார். வேதத்தை முறையாக வாசிக்க வழி செய்யும்  பொருட்டே பாணிணி தனது அஷ்டத்தியாயினை எழுதினார். இவர் காலத்தை கி.மு. 700 என்று கூறுபவர்கள் உண்டு. இவர் பௌத்தத்திற்குப் பிறகானவர் என்பதற்குப் பல ஆதாரங்கள் அஷ்டத்தியாயியில் உள்ளன. பௌத்த குரு மகா புத்தர் காலத்திய ‘மக்காலி கோசலா‘ பற்றிய குறிப்பு பாணினியில் உள்ளது. அவர் குறிப்பிடும் 233 அறிஞர்களும் நாஸ்திகர்கள். அத்துடன் திருமணம் புரியா பெண் சிரமணர்களைப் பற்றிய குறிப்பு பாணினியிடம் காணப்படுகிறது. இவர்கள் பௌத்த மரபு சார்ந்தவர்கள். பாணினி இந்திய அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். மொழியியலில் தொல்காப்பியருக்கு நிகரானவர் என்றாலும் கி.மு.4-க்குப் பிறகு அல்லது கி.மு.4-இல் இருந்தவர். அவரது அரசு பற்றிய சித்தரிப்புகள் இதற்குக் கூடுதல் ஆதாரங்கள். ஒரு சிந்தனை மரபு தோன்றி வளர்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் அதன் தாக்கம் இல்லாமல் யார் இருக்க முடியும்? இருபதாம் நூற்றாண்டின் எல்லா சிந்தனைகளுக்குள்ளும் மார்க்ஸிய நேர் மற்றும் முரண் தாக்கம் இருப்பது போல.

எதிர்வினையாளருக்கு ‘புத்தர் மூலமே இல்லாமல் முளைத்தெழுந்த முதல் கிழங்கு’ அல்ல என்று கூறித் தனது வேதாந்த வித்யா பலத்தைக் காட்டிக் கொள்ளும் பதைபதைப்பு அதிகம் உள்ளது என்பது தெரிகிறது.

இதற்கு அவர் அதிகம் கடினப்பட வேண்டாம். பௌத்தத்தின் ஒரு பிரிவான நம்பிக்கையிலேயே 80,000 போதிசத்துவர்கள், பலப்பல ஆதி புத்தர்கள் இடம்பெறுகிறார்கள். தகாதகர் ஒரு சமூகத்தின் பெருங்கனவு. மனித அறமும் பேரன்பும் கூடி மனிதக் கூட்டுக் கனவாய் உருப்பெற்ற தோற்றமே தகாதகர். அவருக்குக் காலம் கிடையாது. கௌதம புத்தர் என்பது ஒரு புள்ளியே. ஒரு நிமித்தமே (இறந்தகாலத் தெண்ணில் புத்தர்களும் சிறந்தருள் கூர்ந்து, திருவாய் மொழிந்தது- மணிமேகலை).

‘புத்த மதத்தைப் பற்றி மாயைகள் பல நிலவி வருகின்றன’ என்று மாயை விளக்கம் தரும் எதிர்வினையாளருக்குச் சிலவற்றைக் கூறி விட வேண்டும். பௌத்தம் என்பது இக்காலம் வரை கிளைத்தும், பிரிந்தும், முரண்பட்டும் பரவி வரும் 240க்கும் மேற்பட்ட பிரிவுகளை உடையது. இப்பிரிவுகள் தமது காலம், இடம், அரசியலுக்கேற்ப பலவித வடிவங்களை எடுத்துள்ளன. ஆனால் சில பிரிவுகள் மட்டுமே ஒடுக்கப்பட்ட துயரப்பட்ட மக்களுக்கான  புதிய வாழ்வைத் தமது இலக்காகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு சமூகங்களில் பரவியிருந்துள்ளன. தமிழகத்தில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்றும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்‘ என்றும் கூறிய ஒரு மரபுக்கு பௌத்தம் அடிப்படையாகவும் சமணம் வழிகாட்டியாவும் இருந்துள்ளது.

இப்படிப்பட்ட சமூக நெறியாக இருந்த பௌத்தத்திற்குள் ‘பிராமணர்கள்’ நுழைந்து வருணம், ஜாதி என்ற கட்டுக்கதைகளை மெல்லப் புகுத்தி உள்ளிருந்து அதனை அழித்துள்ளனர். நாகார்ச்சுனர் தொடங்கி திக்ஞாகர் வரை பௌத்தத்தை உள்ளிருந்து திசைத்திருப்பிய ‘திருக்கூட்டம்’ அதிகம். சங்கர, இராமானுஜ அறிவும் கூட பௌத்த சமண தர்க்கங்களைக் கற்று அவற்றை அழிக்க வழிவகுத்தவையே.

பௌத்தத்தால் சனாதன, வைதீக ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட இடற்பாட்டை, உள்ளிருந்து அழித்த பிராமண உத்தி பற்றி தனியே ஒரு நூல் எழுதலாம். இவற்றின் விரிவுதான் லலித விஸ்தாரம், சதர்ம புண்டரிகம் போன்றவை, இவை பற்றி வேறிடத்தில் விரிவாகப் பேச வேண்டும்.

பௌத்தம் ‘அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ என வரையறை செய்தது.   பௌத்தம் கூறும் பிராமணர் (அந்தணர்) யார்,

“I do not call one a Brahman

For being born of a mother (by birth)

Or sprung from a womb (of Brahman)

He’s called a ‘bho-sayer’

If he has anything at all

But someone with nothing, who clings

To nothing: he’s what I call a brahman’ (Dhammapada)

“ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால் அன்று, தன் கோத்திரத்தால் அன்று, பிறப்பினாலும் அன்று. எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான், அவனே பிராமணன்.

“தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால் அவன் அகங்காரி என்று அழைக்கப்படுவான், ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும் இல்லாதவனாயிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.”

(தம்மபதம், பிராம்மண வக்கம்: 11, 14)

இதுதான் இந்திய வரலாற்றைத் திருப்பிப்போட்டது, தலைகீழாக்கியது. இதனால்தான் இந்திய மண்ணில் பௌத்தம் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு மரபுதான் மக்கள் நேசித்த பௌத்தம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான பௌத்தம்.

பிறகு சிவ, விஷ்ணு தெய்வங்கள் பற்றி: இவர்கள் இருவரும் மிகப் பழமையான தேவர்களாகவே இருக்கட்டும். கட்டுரை கூறியது: ‘சிவமும் விஷ்ணுவும் பௌத்தரிடமும் சமணரிடமும் அன்பு, கருணை, சேவை, அடைக்கலம் என்பவற்றைக் கற்றுக்கொண்டு மக்கஎளைக் கவர்ந்த சிறு குழு மற்றும் நாட்டார் மரபுத் தெய்வங்களே‘. இதற்கு ‘எதிர்வினையாளர்’ மிகப் புத்திசாலித்தனமான கேள்வியால் நம்மைத் திணற வைத்திருக்கிறார். ‘தெய்வங்களே இல்லை என்பவரிடமிருந்து தெய்வங்களுக்குக் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது?’ சிவனும் விஷ்ணவும் ததாகரையும் மகாவீர தீர்த்தங்கரையும் கண்டு வணங்கி எங்களுக்குப் பாடம் நடத்துங்கள் என்று கேட்டுக் கற்றுக்கொண்டது போன்ற ஏ.பி.நாகராஜன் படக்காட்சி ஒன்று ‘எதிர்வினையாளர்’ மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. இது இப்படியிருக்க சிவன், திருமால் என்ற இருவரும் ஆரிய, பிராமண மரபுக்கு எதிரானவர்கள். இவர்கள் தமிழில் சேயோன், மாயோன் எனப் பன்னெடுங்காலமாக வணங்கப்பட்டவர்கள். சிவம் ‘அன்பின்‘ வடிவமாகவும் ‘திருமால்‘ காதலின் வடிவமாகவும் மாறி மக்களுக்கு நெருக்கமாக மாறிய வரலாற்றைத் தனியே எழுத வேண்டும்.

அழகியல், இச்சை போன்றவற்றை வேறு வகையாகக் கையாண்டு வளர்ந்தவையே இடைக்கால சைவ, வைணவ மரபுகள். சிவனை எதிர்த்து சிறுமைப்படுத்திய தக்ஷனும், கிருஷ்ணனுக்கு எதிராக எழுந்து பின் அடங்கிய இந்திரனும் ஆரிய மரபில் இவர்கள் பெற்றிருந்த இடத்திற்குச் சிறு தடயச் சான்றுகள்.

“அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி

என்போல் மணியினை எய்தவொண்ணாதே

ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை

ஈரம் உடயவர் காண்பார் இணையடி’

என்றெல்லாம் சிவத்தை அன்பு மயமாக்கி அன்பை சிவமாக்கிய திருமூலன்தான் இவ்வாறும் கூறுகிறான்.

‘பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே

சீர்கொண்ட நந்தி நெரிந்துரைத்தானே’

ஆரிய பிராமண, சனாதன, மரபை பக்தி மரபுக்கு வெளியே நிறுத்த மக்களின் கூட்டு உணர்வு ஒன்று செயல்பட்டதற்கு இது தடயம். திருக்களிற்றுப் படியார் இப்படிச் சொல்கிறது.

அன்பே யென் னென்பேயேன் றன்பாலகழுதரற்றி

அன்பேயன்பாக அறிவழியும் – அன்பன்றித்

தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை

சாற்றும் பழமன்றே காண்.

இதற்குள் உள்ளதுதான் பௌத்த சமண தாக்கம் என்பது.

இதை விடுத்து புத்த மத நூற்களின்படி புத்தருக்கு முந்திய போதி சத்துவ நிலையை அடைவதற்கே ஒரு பிராமணராகவோ, ஷத்திரியராகவோ பிறந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் இங்கு நினைவு கூற வேண்டும் என்றும், ‘பிராமணர்களுக்கும் புத்த பிக்குகளுக்கும் உள்ள உறவு புத்தர் காலத்திலும் அசோகர் காலத்திலும் சுமூகமாக இருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. புத்தர் தன்னுடைய சங்கத்தில் எல்லோருக்கும் இடமளித்தார். ஆனால் அவரது சீடர்களில் அநேகமாக எல்லோரும் உயர் வருணங்களைச் சேர்ந்தவர்கள்தான். சங்கத்திலும் பிராமண வருணத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய இருந்தார்கள் என்று கூறுவது எதை நிறுவுவதற்காக. இந்தப் பிராமண பிக்குகள்தான் பிறகு ஒரு பிரிவு பௌத்தத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியதுடன், ததாகதரை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக மாற்றித் மக்கள் மயமான பௌத்தத்தை அழிக்கவும் செய்தார்கள். சங்கத்தில் சேர்ந்து சங்கத்தை அழித்தவர்கள்தான் சங்க ஹரர்கள் (சங்கரர்கள் எனப் பின்னாளில் மாறினர்).

பௌத்தத்தின் பெயரால் ஒருவர் செய்யும் அநீதியை பௌத்தத்திற்குள் இருந்தும் பௌத்த அற தர்க்க முறைக்குள் இருந்தும் எதிர்க்க முடியும். ஆனால் வைதீக, வேதாந்த பிராமண விதிகளின் பெயரால் செய்யப்படும் மனித அநீதிகளுக்கு அதற்குள்ளிருந்து அறங்களைக் காண முடியுமா என்பதே நமக்கு முன்புள்ள முதன்மையான கேள்வி. ஒருவர் பௌத்தராகவோ சமணராகவோ மாற முடியும். பிராமணன் பௌத்தனாக மாறலாம், ஆனால் ஒரு பௌத்தன் பிராமணனாக மாற முடியுமா? தன்னை வைதீகராக பிராமணராக அறிவிக்க முடியுமா? இதற்கான வழிமுறை, விதிமுறை உள்ளதா?

 இவற்றையெல்லாம் விவாதித்த பிறகே ‘புத்த மதத்தைப் பற்றிய மாயைகள்‘ பற்றி விரிவாக நாம் விவாதிக்க முடியும். இவற்றை விவாதிப்பதற்கு முன் எதிர்வினையாளர் ‘புத்தரின் கொள்கைகளில் முக்கியமானவைகள் மூன்று லட்சணங்கள்‘ என்றெல்லாம் பாடம் நடத்தத் தேவையில்லை. அவற்றை பௌத்தத்தின் மீதும், மனித சமத்துவம், மனித உரிமைகள் போன்றவை மீதும் பற்றுடையவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இறுதியாகச் சில.

பௌத்தமும் இந்து மதமும் ஒன்றை ஒன்று எதிர்த்தும் சார்ந்திருந்தும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்கிறார் எதிர்வினையாளர்.

பௌத்தத்தை எதிர்த்தும், அதன் ஆக்கப்பூர்வமான சிலவற்றைச் சார்ந்தும் இந்து மதம்(?) தற்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது கண்கூடு. இந்தியாவில் பௌத்தம் எங்கேயய்யா வளர்ச்சி அடைந்திருக்கிறது. அது இந்து மதத்தால் அழிக்கப்பட்டது, சில இடங்களில் திரிக்கப்பட்டது.

இந்து மதம் என்பதும் வைதீக, வேதாந்த மரபும் ஒன்றா என்பதுதான் ‘பிரம்ம வித்யா‘ கட்டுரையின் மிக முக்கியமான இழை. இதை முழுக்க மறுத்துவிட்டு ‘இந்து‘ மதத்தில் தூக்கி வெளியே எறியப்பட வேண்டிய குப்பைகள் பல இருக்கின்றன என்கிறார் எதிர்வினையாளர். சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரவம் இவற்றில் இந்து மதம் எது? வேதத்தையும், ஸ்மிருதிகளையும், வர்ணாசிரம, பிராமண விதிகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒரு ‘ஆதித்தமிழரை‘ ஜகத் குருவாகக் கொண்டு ஒரு இந்து மதம் உருவாகும் சாத்தியம் உள்ளதா? (உண்மையாகவே இதற்கு விளக்கம் தர விரும்புபவர்கள் எழுதவும்)

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என சமஸ்கிருதத்தில் உள்ள நூல்கள் ‘பிரதிகள்’ என்ற அளவில் மீண்டும் மீண்டும் வாசிக்கவும், ஆய்வு செய்யவும் உகந்தவை. அவை போதையும் லயிப்பும் கொண்ட மொழிபுகள், இதில் கருத்து வேறுபாடு இல்லை. இவை தத்துவ, அற, உண்மை சார் கேள்விகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், இவை ஒரு சமூகத்தின் ‘அதிகார முற்றொருமை’ யின் அடையாளமாக, மாறா உண்மைகளின் தொகுதிகளாக மாறும் என்றால் அவை வெறும் பிரதிகள் மட்டுமல்ல, அரசியல் சதிகள்.

(“பிரம்ம வித்யா” கட்டுரை உயிர்மை இதழில் 2004-2005 நான் எழுதி வந்த தொடரில் வெளிவந்தது,  அதற்கு பி.ஏ.கிருஷ்ணன் என்பவர் எழுதியிருந்த எதிர்வினைக்கு மறுப்பு அல்லது விளக்கம் “விரிவடையும் வித்யா” என்ற தலைப்பில் வெளிவந்தது. ஆனால் இதனைத் தொடர ஆசிரியர் மறுத்து விட்டதால் எழுதப்பட்ட குறிப்புகள் விரிவாக்கப்படாமல் நின்றுவிட்டன. தற்போது நான் எழுதி வரும் “பூர்வ பௌத்தரும் புரட்சி பௌத்தரும்” என்ற அயோத்திதாசர் பற்றிய  நூலில் இவை இடம்பெற உள்ளன.)