இயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா

இயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா

தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்க வரலாற்றை வெளிப்படுத்தி விளக்குவதாக அமைகிறது இந்தக் கட்டுரைத் தொடர். பெண், ஆண் உடல்கள் தொடர்பான நாட்டுப்புற வழக்காறுகள் நிறையவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உடலின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலான உறுப்புகளைப்பற்றி பல்வேறு நம்பிக்கைகளும் அவை பற்றிய கதையாடல்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

உடலை மாதிரி வடிவமாகக் கொண்டு மொழி அமைப்பு (உயிர், மெய்), சமூக அமைப்பு (முகத்தில், மார்பில், தொடையில், கணுக்காலில், உள்ளங்காலில் பிறந்த மக்கள் பிரிவினர்), அரசியல் வகைப்பாடு (வலங்கை-இடங்கை, வலதுசாரி-இடதுசாரி) போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. ஓர் உடலுக்கும் இன்னொரு உடலுக்கும் இடையில் அதிகார உறவுகள் கட்டமைக்கப்பட்டு பெண், ஆண் உடல்கள் மேல்-கீழாக அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போன்று பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலில் ஏராளமான சிந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், சாங்கியம், தாந்திரிகம் போன்ற சிந்தனை வடிவங்களும் மருத்துவம் தொடர்பான அறிவாக்கமும் பெண், ஆண் உடல்களைப் பற்றிய புரிதலிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ஆதிமனிதர்களிலிருந்து இன்றைய சிந்தனையாளர்கள் வரை இயற்கையைப் பற்றிய புரிதலை பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அல்லது பெண்-ஆண் உடல்களைப் பற்றிய புரிதலை இயற்கையைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைக்கு எதிர்வான செயற்கையைப் புரிந்து கொள்வதற்கும் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலே பயன்பட்டிருக்கின்றன. (தொல்காப்பியம் பண்பாட்டைக் குறிப்பதற்குச் செயற்கை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது: ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல், செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’) இயற்கை-பண்பாடு, அகம்-புறம், நிலம்-திணை, காடு-நாடு, காதல்-வீரம் ஆகிய கருத்துருவ எதிh;வுகள் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலின் அடிப்படையிலேயே தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு என்ற அமைப்பும் (முடியாட்சி, மக்களாட்சி இரண்டும்) அதன் வரலாறும் பெண்மையை விளிம்புநிலைப்படுத்தி ஆண்மைப் பண்புகளை அடித்தளமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. குடும்பம், சாதி, கிளை (கூட்டம், வகையறா, கரை போன்றவையும்) சமயம், நாடு (கள்ளர் நாடு, நாட்டார் நாடு, கவுண்டர் நாடு, வேளாளர் நாடு போன்றவை) ஆகியவை ஆண்களின் அதிகார உடல்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்க்க முரண்பாடுகளும் போராட்டங்களும் ஆண் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் போராட்டங்களாகவுமே பார்க்கப்பட்டுள்ளன. சமூகம், பண்பாடு பற்றிய சிந்தனைகளும், ஆய்வுகளும் ஆணின் அனுபவம், உணர்வு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட புரிதலில் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக ஆறுமுக நாவலர், அயோத்திதாசர், சிங்காரவேலர், எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, மறைமலை அடிகள், ஈ.வெ.ரா.பெரியார், வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேயப் பாவாணர், மு.அருணாச்சலம், நா.வானமாமலை, கோ.கேசவன் ஆகியோருடைய ஆய்வுகள் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  இந்தக் காலகட்டத்துப் பெண் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படாமையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய திறனாய்வுகள் நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டுரைத் தொடரில் தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்கள் பற்றிய கருத்துருவாக்க வரலாற்றின் பின்புலத்தில் (நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து தொடங்கி) இவர்களுடைய ஆய்வுகளில் பெண்ணைப் பற்றியும், ஆணைப் பற்றியுமான புரிதல்கள் வெளிப்பட்டுள்ள முறை சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகின்றது. மக்கள், சமூகம், சமயம், தத்துவம், சமூக மாற்றம், வளர்ச்சி போன்ற பொதுவான சொற்களிலும் அவை தொடர்பான விளக்கங்களிலும் பெண், ஆண் பற்றிய மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் புரிதல்களும் கருத்துருவங்களும் பதிவாகியுள்ளதையும் வெளிப்படுவதையும் விளக்குவனவாக அமைகின்றன இக்கட்டுரைகள்.

– இ.முத்தையா