வருத்தம்/வேதனை/வலி/அடக்குமுறை என்ற நிலைப்பட்டு, ஒரு மனிதனோ/குழுவோ தனது அடையாளத்தைக் கட்டமைக்கும்போது, அது தனது வருத்தம்/வேதனை/வலி/ அடக்குமுறைக்கான காரணங்களைப் ‘பிறர்’ மீது மட்டும் குவித்துத் தன்னை பலிகடாவாக மட்டுமே நோக்குகிறது. பலிகடாவாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும்போது தனக்குள் சுய விமர்சனம் செய்ய வேண்டியது ஏதும் இல்லை; தான் ஒடுக்கப்படுதலுக்கான முழுக் காரணமும் ‘பிறரிலேயே’ அடங்கியுள்ளதாகத் தன்னை அர்த்தப் படுத்திக் கொள்கிறது. எனவே ‘பிறர்’ மீதான விமர்சனப்பூர்வமான பார்வைமூலமாகவே தனது விடுதலை சாத்தியமாகும் என்ற நிலைப்பாட்டை அடைகிறது. மறுபுறம், இவ்வித விடுதலை வேட்கை கொண்ட ஒடுக்கப்பட்ட மனிதனும் குழுவும், தனது விடுதலையைப் ‘பிறர்’ சார்ந்தே வரையறை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் காலனிய இனவாதச் சூழலில், ‘பிறரைச்’ சார்ந்து கட்டமைக்கப்பட்ட விடுதலை வேட்கை, ‘பிறரைப்’ பின் தொடர்ந்து அவர்களின் ‘உயர்வான’ கூறுகளை உட்படுத்திக் கொள்வதன்மூலமே சாத்தியமாகும் என்ற ஒரு பிரக்ஞையையும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இது பெரும்பாலும் காலனியச் சூழலில், அது அளித்த அறிவை உட்கொண்டு வளர்ந்த – தன்னைத் தனது இனத்தோடும் பிறரோடும் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாத வகையில் அந்நியப்பட்டுப் போன – மத்திய தர வர்க்கத்தின் பிரச்சனை என்ற போதிலும், இதையே ஃபிரான்ட்ஸ் ஃபனான் தனது ஆய்வுக்கான துவக்கப் புள்ளியாகத் தனது கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற புத்தகத்தில் கொள்கிறார்.
கருப்புத் தோலும் வெள்ளை முகமுடிகளும் புத்தகத்தின் அடிப்படையான வாதம் இருவகைப் பட்டதாகக் உள்ளது. ஒன்று, காலனிய இனவாதத்தின் புனைவுகளைத் தன் உடம்பின் மீது தானே ஏற்றிக் கொள்ளும் வகையில் பேசா மௌனம் சாதித்து, அதன் கூறுகளைக் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ தன்னில் உள்ளாக்கிக் கொண்ட ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனும் மனுஷியும் குழுவும், தன்மீது கொள்ளும் சுயவிமர்சனத்தின் மூலம் தனது விடுதலையை திடப்படுத்துவது. இரண்டாவது, தன்மீது புனைவுக் கருத்தாக்கங்களை உருவாக்கிய பிறரின் மீது கொள்ளும் விமர்சனம் மூலம், ஒடுக்கப்படுதலுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்து அதன்மூலம் மனிதநேய மனிதச் சமூகத்தைக் கட்டமைக்க விளைவது. இந்த இரு வகை நிலைப்பாட்டில் அமைந்த விமர்சனப்பூர்வ அணுகுமுறையை, ஃபனான் தனது கல்விப்புலப் பின்னணியிலான உளவியலை அடிப்படையாகக் கொண்டு ஆய்கிறார். இந்த ஆய்வில் அவருக்கு மார்க்ஸும், ஹெகலும், சார்த்தரும், நீட்சேயும், எய்மே சீசர், செங்கோர் போன்ற கருப்பின படைப்பாளிகளும், பிற ஆய்வாளர்களும் உளவியலாளர்களும் துணை புரிகின்றனர்.
அந்நியமாதல் என்ற நிகழ்வு பல விதங்களில் விளக்கப்படுகிறது. ஃபனான் அந்நியமாதலை இருவேறு நிலைகளில் புரிந்து கொள்கிறார். ஒன்று, கருப்பினத் தொழிலாளியின் அந்நியமாதல்; இது சுரண்டல் அமைப்பின் மூலம் தன்னை உயர்வான நாகரீகத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்ட ஒரு இனம் மற்றொரு இனத்தை பலிகடாவாக ஆக்குவதால் நிகழ்வது. இந்த அந்நியமாதலை மீற ஒரே ஒரு வழிதான் உண்டு: அது போராட்டம் மூலமே சாத்தியமாகும். தனது வாழ்வை சுரண்டல், பசி, வறுமைக்கு எதிரான போராட்டமாகக் கொள்வதன் மூலமே இந்தவித அந்நியமாதலை எதிர்கொள்ள முடியும். இவர்களுக்கு கருப்பினப் பழமை குறித்த கண்டுபிடிப்பு முக்கியமானது அல்ல; அவர்கள் கருப்பர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்த உணர்வு அவர்களுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இரண்டாவது அறிவுப்பூர்வத் தன்மை கொண்ட அந்நியமாதல். “அறிவுப்பூர்வமான அந்நியமாதல் மத்திய தரச் சமூகத்தின் ஒரு படைப்பு. முன்குறித்த வடிவங்களில் தன்னை இறுக்கிக் கொண்டு, எல்லாவித பரிணாமங்கள், ஆதாயங்கள், முன்னேற்றம், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வெறுத்து ஒதுக்கிய ஒரு சமூகத்தையே நான் மத்திய தர சமூகம் என்கிறேன். வாழ்க்கையில் சுவையின்றி, கருத்துகளையும் மனிதர்களையும் சீரழிந்தவர்களாகக் கொண்டு, (தன்னைச் சுற்றிய) காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு வாழும் மூடிய சமூகத்தையே நான் மத்திய தரச் சமூகம் என்கிறேன். இந்த சாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மனிதனை ஒருவிதத்தில் புரட்சிகரமானவனாக நான் நினைக்கிறேன்.” இது வேறு யாருமல்ல நான்தான். இந்தவித சுயபுரிதலுடனேயே இந்த கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற நூல் ஃபனானால் எழுதப்பட்டது. இந்த அடிப்படையில், இந்த நூலை எழுதியதற்கான காரணங்களாக ஃபனான் தெரிவிக்கும் விஷயங்களை முதலில் காணலாம்.
ஃபனானின் எழுத்திற்கான அடிப்படை
எழுதுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுத்திய காரணங்களாகச் சில விஷயங்களை ஒவ்வொரு எழுத்தாளனும் தெரிவிப்பது உண்டு. தனது முன்னுரையில், கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற நூலை எழுதியதற்கான காரணங்களாக சில விஷயங்களை ஃபனான் தெரிவிக்கிறார். “மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும்… ஆனால் அப்போது இந்த உண்மைகள் எனக்குள் தீயாக இருந்தன. இப்போது என்னை எரித்து விடாமல் அவைகளை நான் சொல்ல முடியும்… அவைகள் தயாள மனபாவத்தை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.” என்ன உண்மைகள் அவை? ஒரு புதிய மனிதநேயத்தை நோக்கிய உண்மைகள்… இந்த உண்மைகளை அடைவதற்காக அவர் எழுப்பும் அடிப்படையான கேள்வி, “மனிதன் என்ன விரும்புகிறான்? கருப்பு மனிதன் என்ன விரும்புகிறான்?” ஆனால் கருப்பினத்தவன் மனிதனாக அங்கீகரிக்கப்படவே இல்லையே? இந்த எதிர்மறையான எதார்த்தத்தில் இருந்தே அவரது புரிதல் தொடங்குகிறது.
“அங்கே ஒரு உயிர்த் தன்மையற்ற பகுதி இருக்கிறது; ஓர் அசாதாரணமான மலட்டுத்தன்மை கொண்ட, வறண்ட பகுதி; ஒரு வெளிப்படையான தெளிவான பாதாளத் தன்மை; இங்கிருந்துதான் ஒரு திடமான மேலெழுதல் பிறக்க முடியும்.” எந்தப் பாதாளம்? “கருப்பு என்பதுவே கருப்பின மனிதன்” என்ற உயிர்த் தன்மையற்ற, பாதாளம். பீடிப்புக் கோளாறுகளின் தொடர்ச்சியின் பலனாக உருவான இந்தச் சாராம்சத்தில் வேர்கொண்ட அவன் அதிலிருந்து பிரித்தெடுக்கப் படவேண்டும். “நிறமுள்ள மனிதனை அவனில் இருந்து விடுவிக்க வேண்டும்”, இதுவே இந்த நூலில் ஃபனான் மேற்கொள்ளும் அடிப்படையான முயற்சி. இந்த முயற்சிக்காக, அவர் கொள்ளும் கருத்தியல் அடிப்படை, “கருப்பின மனிதனைப் புகழ்ந்து பேசும் ஒருவன், அவனை வெறுப்பவனைப் போல ஒரு நோயாளியே”. ஆக, கருப்பின மனிதனை அந்நியமற்றவனாக மாற்றும் முயற்சியில், அவர் வெள்ளயருக்கும் கருப்பினத்தவர்க்குமான இடைப்பட்ட பகுதியில் இருந்து பேசுகிறார். இரைந்து கத்தவில்லை; ஏனெனில், வெகுநாட்களுக்கு முன்னதாகவே இரைந்து கத்துதல் அவரது வாழ்வில் இருந்து அகன்று போய்விட்டது என்றும் கூறுகிறார்.
முந்தைய பத்தியில், ஃபனான் எழுப்பிய அடைப்படையான கேள்விகளைக் கொண்டு, அவர் எதிர்மறையான எதார்த்தத்தில் இருந்து தனது புரிதலைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டோம். அவர் குறிப்பிடும் இந்த எதிர்மறை எதார்த்தம் என்ன? “கருப்பின மனிதன் வெள்ளையனாக விரும்புகிறான். மனித நிலையை அடைய வெள்ளை மனிதன் (கருப்பினத்தவரை) அடிமையாக்குகிறான்”. இந்த இரட்டைச் சுயமோகத்தின் திசைகளையும், நோக்கங்களையும் அறிந்து, இந்த விடுபட முடியாத சுழற்சியை நீக்குவது இப்புத்தகத்தில் அவரது முயற்சியாக அமைகிறது.
இந்த விடுபட முடியாத சுழற்சி நீக்கம் அல்லது கருப்பின மனிதனை அந்நியமற்றவனாக மாற்றும் முயற்சியில் சமூக மற்றும் பொருளாதார எதார்த்தங்கள் குறித்த புரிதல் அவசியமானவை. ஒரு கருப்பின மனிதருக்கு தாழ்வு மனோபாவம் இருக்குமானால், அது முதலாவது பொருளாதார ரீதியானது; இரண்டாவது, அந்த தாழ்வு மனப்பான்மையை உள்ளாக்கிக் கொள்ளுவது அல்லது அதனை தோல்மேல் பொதித்துக் கொள்வது சம்பந்தப் பட்டது. அது தனிமனிதப் பிரச்சனை அல்ல; சமூகம் உற்பத்தி செய்த பிரச்சனை. ஆக, இந்த இரு தளங்களிலும் ஒரு கருப்பின மனிதன் தன் போரை நடத்த வேண்டும். ஒன்றின் வெற்றி மற்றதை மாற்றும் என்ற பெருந்தவறு கூடாது என்கிறார். பொருளாதார ரீதியான வர்க்கம் என்ற பிரச்சனையும், சமூக ரீதியான அடையாளம் என்ற பிரச்சனையும் ஒரு விதத்தில் சார்புடையவை எனினும் தனித்துவமானவையும் கூட; அவற்றில் ஒன்றை நோக்கிய போராட்டம் மற்றதை சரிசெய்து விடாது; இருமுனைப் போராட்டமாகவே அமைய வேண்டும் என்பது ஃபனானின் நிலைப்பாடு. இந்த இருமுனைப் போராட்டத்தில், இரண்டாம் விஷயத்தை மட்டும் இந்த புத்தகத்தின் ஆய்வு எல்லையாகக் கொள்கிறார். அதாவது, அந்நியமாதலின் சமூக உளவியலை விவரிப்பதுவே இந்தப் புத்தகத்தின் ஆய்வுப் பொருளாகிறது. இந்த ஆய்வுப்பொருளுக்குள், சமூகநோயின் காரணிகளை கண்டறிவதும், அதற்கான முன்னெச்சரிக்கைகளும் உண்டு. அந்நியமாதலை ஆய்ந்து அறிவது என்பது அந்நியமாதல் நீக்கம் நோக்கியது. இந்த அந்நியமாதல் நீக்கம் என்பது, ஃபனானைப் பொறுத்த மட்டில் ஒடுக்கப்பட்ட சமூக மனிதனின் புரட்சிகரச் செயல்பாடுகளில் ஒன்று என்பதையும் நாம் மனதில் அழுத்தமாகக் கொள்ள வேண்டியது அவசியம்.
சரி, இந்த அந்நியமாதல் நீக்கம் பற்றிப் பேச வேண்டியதற்கான சமூகச் சூழல் என்ன, ஃபனானுக்கு இருந்த நெருக்கடி என்ன, என்பதையும் நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
ஃபிரான்ட்ஸ் ஃபனான் 20 ஜூலை,1925ல் மார்ட்டினிக் என்ற பிரெஞ்சுக் காலனியின் தலைநகரான ஃபோர்ட்-தெ-ஃபிரான்ஸில் பிறந்தவர். மார்ட்டினிக் தீவு கரீபியன் கடலில் அமைந்த மேற்கிந்தியத் தீவுக்கூட்டங்களில் ஒரு தீவு. கரீபியன் கடலில் அமைந்த தீவுகள் அனைத்தும் ஆண்டிலிஸ் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன. க்யூபா, ஜமைக்கா, ஹைதி, டொமொனிக் குடியரசுகள், ப்யூர்ட்டோ ரிகா ஆகிய தீவுகள் அடங்கிய பகுதி பெரிய ஆண்டிலிஸ் என்றும், வெனிசுலாவுக்குச் சற்று வடக்கே அமைந்த சிறிய தீவுகளான ஆன்டிகுவா, மார்ட்டினிக், பர்படாஸ் உள்ளிட்ட பகுதிகள் சிறிய ஆண்டிலிஸ் என்றும் அழைக்கப்பட்டன.
அவரது மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஃபிரெஞ்சுக் காலனியான ஆண்டிலிஸுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள். இங்கிருந்த கருப்பின மக்கள் காலனிய இனவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இவர்களின் சூழல் ஆப்பிரிக்கக் காலனிகளைவிடச் சற்று வேறுபட்டது. தேச விடுதலையை அதிகமாக விரும்பாத ஆனால் காலனியத்தை உட்செறித்து வளர முயன்ற ஒரு கருப்பின முதலாளியம் (குட்டி முதலாளியம்) ஒன்று ஏற்கனவே ஆண்டிலிஸில் உருவாகி இருந்தது. ஃபனானின் குடும்பம் இத்தகையது. ஃபனான் இளவயதில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். அப்போது இனவாதத்தை நேரில் உணர்ந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்பு அவர் மனநோயியல் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும்போது அதிகமான நோயாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறார். மனநோயியல் மருத்துவப் பட்டப் படிப்பினை நிறைவு செய்வதற்காக அவர் எழுதிய கருப்பர்களின் அந்நியமாதல் நீக்கம் குறித்த கட்டுரை என்ற முனைவர் பட்ட ஆய்வு நிராகரிக்கப்பட்டது. இந்த ஆய்வே பின்னாளில், அதாவது 1952-ல் கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியானது. இந்த ஆய்வில் காலனியத்துக்கு உட்பட்ட கருப்பின மக்களின் உளவியலையும், காலனியத்தை உட்புகுத்தும் வெள்ளையரின் உளவியலையும் ஆய்வுப்பொருளாகக் கொள்கிறார். இதில் இன்னும் குறிப்பிடும்படியான விஷயம் என்னவெனில், காலனியம் பேசிய புனைவான ‘உயர்வு/வளர்ச்சி’ என்னும் போதை/மோகத்துக்கு ஆட்பட்ட கருப்பின மக்கள், வெள்ளையினத்தை அண்ணாந்து பார்த்து அவர்களது மதிப்பீடுகளைத் தங்களின் தோல்மேல் பொதிக்க ஆசைப்பட்டனர்; அவற்றை உள்ளாக்கிக் கொண்டு தங்களின் கருப்பு உடம்பை வெளுத்து வெளிறச் செய்து வெள்ளையாக்க முயன்றனர். ஆனால் அப்படி வெள்ளையின மதிப்பீடுகளை தங்களின் உடம்பின் உள்ளாக்கிக் கொள்ள முயன்ற கருப்பின மனிதர்கள், தன் இனத்தோடும், வெள்ளையின மனிதர்களோடும் ஒட்டுறவு காணமுடியாமல் அந்நியமானவர்கள் ஆனார்கள். இதைச் சமூக உளவியல், உளவியல் பகுப்பாய்வு, தனிமனித உளவியல், இருத்தலியத் தத்துவம் ஆகியவற்றின் துணைகொண்டு நன்கு ஆய்ந்த ஃபனான் அதற்கான மாற்றாக அந்நியமாதல் நீக்கத்தின் அடிப்படையிலான ஒரு புது மனிதத்தைக் கட்டமைக்க விழைகிறார். இந்த முயற்சியே கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும் என்ற புத்தகத்தின் அடிநாதம்.
அந்நியமாதல் நீக்கம்
ஃபனானைப் பற்றி எழுதிய ஆய்வாளர்கள் பலரும் அவர் கருப்பின மக்களின் அந்நியமாதலைப் பற்றிப் பேசியதாகவே எழுதுகின்றனர். இந்தக் குறைவுபடுத்தல் பெரும்பாலும் மார்க்சியக் கோட்பாடான அந்நியமாதலை அடிப்படையைக் கொண்டு ஃபனானது கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது நிகழுவதாகத் தோன்றுகிறது. காரணம், ஃபனான் அந்நியமாதலைப் பற்றி மட்டும் பேசவில்லை; அந்நியமாதல் நீக்கம் பற்றிப் பேசினார். இதில் மார்க்சிய இயங்கியல் அடிப்படையிலான அந்நியமாதல் குறித்த புரிந்துணர்வும், இருத்தலிய அடிப்படையிலான அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாடும் இணைகின்றன. கருப்பின மக்களுக்கு (வேண்டுமானால் கருப்பின நடுத்தர வர்க்கம் என்று மட்டும் கொள்ளுங்கள்) அந்நியமாதல் குறித்த அறிவு மட்டும் போதாது; அது குறித்த வாழ்வியல் அனுபவங்களின் அடைப்படையிலான புரிதலும், அதை நீக்குவதற்கான புரட்சிகரச் செயல்பாடும் அவசியமாகிறது. அந்நியமாதலை கல்விப்புல பின்னணியில் ஒரு நிகழ்வாக மட்டும் ஃபனான் விளக்கவில்லை; அந்நியமாதல் நீக்கம் என்னும் ஒரு லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த அந்நியமாதல் என்னும் நிகழ்வைப் படித்து அறிகிறார். அவர் அந்நியமாதல் என்னும் நிகழ்வைப் படித்து அறிதல் என்பது அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாட்டோடு தொடர்புடையது. இந்தவித தனிமனித மற்றும் சமூக உளவியல் சார்ந்த புரட்சிகரச் செயல்பாடு, அவர் கனவு கண்ட புதிய மனிதத்துடன் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஃபனானைப் பொறுத்தமட்டில், அந்நியமாதல் நீக்கம் என்பது சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றங்களின் ஊடாக நிகழும் உப/உடன் விளைவு மட்டும் அல்ல; அது இனவாதத்தை உடம்புக்குள்ளாக்கிக் கொண்ட தனிமனித, சமூக உளவியலுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் தனித்துவமான போராட்டம்.
அந்நியமாதல் நீக்கம் என்ற புரட்சிகரச் செயல்பாட்டின் அடிப்படையில் அந்நியமாதல் என்ற நிகழ்வைப் புரிந்துணரும் போது, அதை மொழி, பால், சார்புத்தன்மை, வாழ்வியல் அனுபவங்கள், மனநிலைத் திரிபு, அங்கீகாரம் என்ற பிரச்சனைப்பாடுகளின் வழியாக ஆராய்கிறார். இந்த பிரச்சனைகளின் வழியாக கருப்பின மக்களின் தனிமனித மற்றும் சமூக உளவியலை அவர் ஆராயும்போது, அவரது ஆய்வின் முடிவுகள் துணுக்குகளாகவும் சிதறல்களாகவுமே வெளிப்படுகின்றன. இவரது எடுத்துரைப்பு உளவியல் அடிப்படையில் அமைந்தாலும், இவரது ஆய்வு முடிவுகள் உளவியல் மருத்துவச் சோதனைமுறை அடிப்படையில் அமைந்தாலும், அதில் ஒரு முறையியல் இல்லை என்றும் அவரே கூறுகிறார்.
மற்றொரு புறம், ஃபனான் அந்நியமாதலை ஐரோப்பிய வெள்ளையினத்தின் ஒரு கூறாகவும் புரிந்து கொள்கிறார். வெள்ளையின உலகநோக்கே அந்நியமாதல் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பது அவரது வாதம். ஐரோப்பிய அறிவியல் அணுகுமுறை, வரலாற்றியல், வாழ்வியல் அணுகுமுறை அனைத்தும் கருப்பின வாழ்வியல் அணுகுமுறையில் இருந்து வேறுபடும் இடம் இது. ஒரு கருப்பினத்தவர்க்கு உடம்பும் மனமும் வேறுபட்டதல்ல; உலகமும் அவர்களும் வேறு அல்ல; உலகமும் கருப்பின மனிதர்களும் பதிலீடு செய்து கொள்ளப்பட முடியும்; இது கருப்பின மந்திரம்; இது கருப்பின ரகசியம்; இந்த ரகசியம் பிரிக்க முடியாத அனைத்தின் அடிநாதம்; இந்த ரகசியத்தையும், இந்த நாதஒலியையும் வெள்ளையினம் அறிந்து கொள்ள முடியாது. வெள்ளையின அறிவு, அல்லது அறிவொளிக்கால பகுத்தறிவு இந்த நாதம் அற்றது, பொருளையும் தன்னையும் அல்லது அகத்தையும் புறத்தையும் பிரித்து நோக்கி அறிவது என்ற புரிதலுக்கு வருகிறார். ஆக, அந்நியமாதல் என்ற நிகழ்வை ஐரோப்பிய அறிவு உற்பத்தியின் ஒரு முக்கியமான அடிப்படைக்கூறாகவும் அவர் விளக்குகிறார் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் சற்று விரிவாகக் கூறுவோமானால், ஐரோப்பிய அறிவொளிக்கால புரிந்துணர்வின் அடிப்படை அகம்/புறம் என்ற இருமை வழியாக நிகழ்வது; புறத்தை எந்தவிதமான அகவயப் புரிந்துணர்வின் தடயங்கள் இல்லாமல் விளக்க முயல்வது; அதுவே ‘நடுநிலையான’, அறிவியல்பூர்வமான அறிவு/உண்மை என்றும் மார்தட்டிக் கொள்ளும் இயல்புடையது. ஆனால் இவ்விதமான அறிவு சாத்தியமில்லை என்பதையும் உண்மையின் பன்முகத் தன்மையையும் நீட்சே தொடங்கி பல தத்துவவாதிகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும் நமக்கு உரக்க அறிவித்து விட்டதை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
வாழ்வியலும் அந்நியமாதல் நீக்கமும்
காலனியச் சூழலில் வெள்ளையின மனிதரைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு கருப்பின மனிதரும் கருப்பாக இருக்க வேண்டிய சூழல் நிர்ப்பந்தம் உண்டு. இன்னும் குறிப்பாக, ஒரு கருப்பின மனிதர் தனது வாழ்வியலைத் தனது சொந்த பண்பாடு சார்ந்து உணர முடிவதில்லை; ஏனெனில் காலனியத்துக்கு உட்படுத்தப்பட்ட மக்களின் சொந்தப் பண்பாடு, காலனிய நாகரிகத்துடன் முரண்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. காலனிய நாகரிகத்துக்கு உட்படுத்தப்பட்ட மக்களிடம் தங்களது வாழ்வியல் குறித்த ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்றப்படுகிறது. நிறமுள்ள மனிதர்கள் தங்களது உடல்ரீதியான முறைமைகளை வளர்த்தெடுப்பதற்கான சிக்கல்களை தொடர்ந்து சந்திக்கின்றனர். ஏனெனில் காலனிய நாகரீக உலகும், சொந்த மக்களின் உடம்பும் அதன் கூறுகளும் முரண்பட்டுக் கிடக்கின்றன. உடம்பு குறித்த பிரக்ஞை தங்களின் சொந்த உடலையே புறந்தள்ளும் வகையிலான ஒரு வெறுப்புச் செயல்பாடாகவே தொடர்கிறது. நிறமுள்ள மனிதர்களின் சொந்த உடம்புக்கும், காலனிய நாகரீக உலகுக்குமான இயங்கியல் ஓர் எதிர்மறை இயங்கியலாக உருவெடுக்கிறது; அதனால் உடம்பு குறித்த அசூயை/வெறுப்பு காலனிய மக்களிடம் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளையின நாகரீகத்தில் ஊறிப்போன ஒரு மனிதனுக்கு கருப்பு மனிதன் நாகரீகமற்றவனாக/ வெறுக்கப்படத் தக்கவனாக மாறிப்போய் விடுகிறான்; கருப்பு மனிதனின் உடம்பு ‘நாகரீக வெள்ளையின’ மனிதனை அச்சுறுத்துவதாக அமைகிறது.
இந்தவிதச் சூழலில், தன் சொந்த உடம்பு குறித்த அந்நியமாதலை நீக்கம் செய்வது எப்படி? தனது கருப்பு உடம்பை வெளுத்து வெளிறச்செய்து ‘வெண்மையாக்குவதன்’ மூலம் தனது அந்ந்¢யமாதலை நீக்க முடியுமா? இல்லை. ஃபனான் கூறுவது என்ன?
“எனது பிறப்போடு வந்த மனப்பாங்கிலிருந்து நான் வெளியேறுவது எனக்கு இயலாததால், என்னைக் கருப்பு மனிதன் என்று அழுத்தம் திருத்தமாக உறுதிப்படுத்த ஆரம்பித்தேன். பிறர் என்னை அங்கீகரிக்கத் தயங்குவதால் ஒரே ஒரு தீர்வு தான் உண்டு: அது என்னை அறியச் செய்வது”. அடிமைப்படுத்தப் பட்ட எனது மூதாதையருடன் என்னை அங்கீகரிப்பது; என்னை அடிமைகளின் பேரனாக ஒத்துக் கொள்வது… இவ்வாறு என்னை அறியச் செய்வது என்பது எனது தேர்வு அல்ல; எனது அடையாளம் வெளியில் இருந்து என்மேல் பொதிக்கப்படுகிறது. நான் வெளியில் இருந்து ஏற்கனவே அநாகரீகமானவனாக, முரட்டாட்டக்காரனாக, அறிவிலியாக வரையறுக்கப்பட்டு விட்டேன். ஒரு முழு இனமும் என்னை இவ்வாறு வரையறுத்ததில் நியாயமான காரணங்கள் ஏதும் இல்லை. மேற்கத்திய “நாகரீகமாக்கும் கானல் மனிதத்துக்கு” நான் அடிமையாக்கப் பட்டேன். இந்தவித “நாகரீகக் கானலில்” இருந்து வெளியேறினேன். இவ்வித “நாகரீகக் கானல் மனிதத்தில்” இருந்து வெளியேறியபோது, நான் மனிதத் தன்மை பெற்றேன்; ஒடுக்கப்பட்டவர்கள் அனைவருடனும் நான் சேர்ந்து விட்டேன்.
மனிதமாக்குவதாகக் கூறிக்கொண்ட மேற்கத்திய அறிவொளிக்கால அறிவுக்கு மாற்றாக, செங்கோரை அடியொற்றி கருப்பின நாதம் என்ற ‘பகுத்தறிவற்ற’ கருப்பினப் பண்பாட்டை மீட்டெடுக்க ஃபனான் முனைகிறார். அதில் தனது இருப்பை உறுதிப்படுத்த முயலுகிறார். தனது ஆதிமூலத்தை அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார். கருப்பினப் பண்பாட்டின் நுண்ணிய வளங்களையும், நுண் உணர்வுகளையும் வெள்ளையின நாகரீகம் கண்டுகொள்வதில்லை என்றும் அறிவிக்கிறார். இந்தப் புதிய கருப்பின ரகசியத்தைக் கண்டுபிடித்ததால், இந்த எதிர்வினையால் வெள்ளை மனிதன் உலுக்கப்படுவான்; தனது உலகம் உறுதிப்படும் என்றும் நம்புகிறார். தனது கருப்பினப் பண்பாடு நாகரீக வளர்ச்சிப் படிநிலையில் மிகப் பழமையானதோ அல்லது முதிர்ச்சி அற்றதோ அல்ல; தங்கத்தையும் வெள்ளியையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கையாண்ட இனம் என்ற ஒரு மீள் கண்டுபிடிப்பையும் நிகழ்த்துகிறார். “நான் வெள்ளை மனிதனை அவனது இடத்தில் மீண்டும் அமர்த்தி விட்டேன்… நான் வென்று விட்டேன். நான் கொண்டாட்ட மன நிலைக்கு உள்ளானேன்” என்றும் அறிவிக்கிறார்.
இந்தக் கொண்டாட்டம் எங்களுக்கு விடுதலையைத் தருமா என்ற கேள்வியை எழுப்பும் ஃபனான், முடிவில் “முழுக் கருப்பின மனிதனாக நான் ஆக விரும்பினேன், அது எப்போதும் இயலவில்லை. வெள்ளை மனிதனாகவும் ஆக விரும்பினேன், அது ஒரு கேலிக்கூத்து. கருத்துகளின் தளத்திலும் அறிவுப்பூர்வச் செயல்பாட்டாலும் எனது கருப்புத்தன்மையை மீட்க முயற்சிக்கும்போது, அது என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது. எனது முயற்சி இயங்கியலின் ஒரு பகுதியே என்பதற்கான ஆதாரம் எனக்கு அளிக்கப்பட்டது” என சார்த்தரை மேற்கோள் காட்டிக் கூறுகிறார். அதாவது, மனிதநேயச் சமூக அமைப்பைக் கட்டமைப்பதில், ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டு வடிவங்களை மீட்டெடுப்பதும், அதனை அறுதிப்படுத்துவதும் வரலாற்று இயங்கியலில் ஒரு பகுதியே; ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையில் பண்பாட்டு மீட்டுருவாக்கமும், மீட்கப்பட்ட பண்பாட்டு வடிவங்களின் கொண்டாட்டமும், அந்த விடுதலை இயக்கத்தின் இயங்கியலில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையே; அவை விடுதலையைப் பெற்றுத் தரப் போவதில்லை, விடுதலைப் போராட்ட இயங்கியலின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தன்னையும், தன் இனத்தையும் புரட்சிகரமான அந்நியமாதல் நீக்கம் செய்து, விடுதலைக்கான வேரூன்றலில்/அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் தன் இனத்தையும் திடப்படுத்துவதற்காகப் பயன்படும் ஓர் ஆயுதமே அது என்பது ஃபனானின் புரிதல்.
அங்கீகாரமும் அந்நியமாதல் நீக்கமும்
ஆண்டிலிஸின் சொந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஆண்டிலியன் பிறரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆசை கொண்டவன்; அவனது வாழ்வியல் ஒருங்கமைவு பிறன் வழியாகத் தான் நிகழுகிறது… பிறர் கண்களில் என் புகழைக் காண விரும்புகிறேன்; துரதிர்ஷ்டவசமாக, அந்தக் கண்கள் நான் விரும்பாத பிரதிபலிப்பை எனக்குக் காட்டும்போது, அந்தக் கண்ணாடியே குறைபாடு உடையது எனக் காண்கிறேன்… புறப்பொருளுக்கு முன்னதாக நான் நிர்வாணமாக முயற்சிக்கவில்லை. தனிமனிதத்துவம், சுதந்திரம் என்ற போர்வையில் அந்த புறப்பொருள் மறுக்கப்படுகிறது. அந்தப் புறப்பொருள் ஒரு கருவி… இதை வழங்குவதற்காகவே ‘பிறன்’ வாழ்க்கை மேடைக்கு வருகிறான். நான்தான் கதாநாயகன்… நான்தான் கவனக்குவியலின் மையம். தனது மதிப்புக்கான (புனைவுக்கான) விருப்பத்தின் மூலம் பிறர் என்னை சஞ்சலப்படுத்த முயலுவார்களானால், அவனை விசாரிக்காமல் எளிதாகத் தள்ளிவிடுகிறேன்… புறப்பொருளின் தாக்கத்தை நான் அனுபவிக்க விரும்பவில்லை… நான் நார்சிஸ்ஸஸ்; பிறருடைய கண்களில் நான் காணவிரும்புவது என்னவெனில் என்னைக் குஷிபடுத்தும் பிரதிபலிப்பு… ஆண்டிலியன் செய்வது ஒவ்வொன்றும் ‘பிறருக்காகவே’ செய்யப் படுகின்றன. மக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் ‘பிறர்’ என்பவரே ஒருவனின் செயல்பாட்டின் முடிவான இலக்கு என்பதால் அல்ல… இன்னும் அடிப்படையில், ஒருவனது சுய மதிப்பீட்டுக்கான தேடலில் ‘பிறரே’ அவரை மதிப்பிடுபவர் என்பதால்.”
27 வயதான ஃபனான், சுயஅடையாளக் கட்டமைப்பைக் குடைந்து அந்நியமாதல் நீக்கம் என்ற பரந்த சனநாயக அமைப்பை நோக்கி விரியும் இடம் இது. ஒப்பீட்டு அடிப்படையிலான சுயஅடையாளக் கட்டமைப்பு பிறர் மீதான அதிகாரக் கட்டமைப்பை நோக்கியது எனத் துணிந்து சொல்லும் இடம் இது. சுயம் தன்னை சலனத் தன்மை கொண்டதாக உணராமல், தன்னை இறுக்கிக் கொண்டு, அந்த இறுக்கத்தை பிறர் மீது திணிக்க முயலும் நுண்ணதிகாரத்தை/ஆதிக்க மனோபாவத்தை அவர் எடுத்துரைக்கும் இடம் இது. கருப்பின நடுத்தர வர்க்கத்தின், இயங்கியல் சலனத் தன்மையற்ற அடையாளக் கட்டமைப்பில் தானே அந்நியப்பட்டுப் போவதை விவரிக்கும் இடம் இது. இந்தவித அந்நியமாதலுக்கு சமூகக் கட்டமைப்பே, அதாவது காலனிய இனவாதப் புனைவுகளே, காரணம் என்றும் ஃபனான் குறிப்பிடுவார். வரலாற்று ரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மைக்கு எதிராக எதிர்வினையாற்றும் ஒரு கருப்பின மனிதன், வெள்ளையின மதிப்பீடுகளை உடம்புக்குள் உள்ளாக்கிக் கொண்ட ஓர் அடிமை மனோபாவத்தினன் வெள்ளையின மனிதனின் அற மதிப்பீடுகளை உள்ளாக்கிக் கொண்டு, தன்னைப் ‘பனியிலும் வெண்மையானவனாக’ (மொழியின் குறியீட்டு ரீதியாக) உருவகித்துக் கொண்டவன் தன் சமூகக் கட்டமைப்பை, இனவாதப் புனைவுகளை கட்டுடைக்காமல் உள்வாங்கிக் கொண்டு, அதே சமூகக் கட்டமைப்பு வழங்கிய அற மதிப்பீடுகளால், அந்த இனவாதப் புனைவுகளுக்கு எதிராக ‘உயர்வு மனப்பான்மையுடன்’ எதிர்வினை ஆற்றுபவன் ஆகிறான். தன்னை வெள்ளையனாக வெளுத்து வெளிறச் செய்து, தனது ‘கருப்பைச்’ சலவை செய்வதன் மூலமே தன்னை பிறருக்கு நிரூபிக்க நினைக்கிறான். இந்தவிதமான இருத்தலிய ஆதங்கம், ஐரோப்பியக் காலனிய இனவாதம் (சாதீயமும்) கருப்பின உடம்பு மீது ஏற்றிய மதிப்பீடுகளின் விளைவால் உருவான அந்நியமாதலின் விளைவு. இந்த விளைவுக்கு எதிரான எதிர்வினையைப் பெரும்பாலும் ஆண்டிலியன் தனது சொந்த மக்களிடம்/தனக்குக் கீழான கருப்பர்களிடம் மட்டுமே நிகழ்த்துகிறான்; வெள்ளையின மனிதனோடு இந்த ஒப்பீட்டு ரீதியான எதிர்வினையைப் புரிவதில்லை என்கிறார். அங்கீகாரத்தை எதிர்நோக்கிய ஓர் ஆண்டிலியன் தனது சுய அங்கீகாரத்தை வெள்ளையின மதிப்பீடுகளின் வழியாகத் தனது சொந்த மக்களிடம்/பிறரிடம் நிறுவ முயல்கிறான். தன் மீது பொதிக்கப்பட்ட வெள்ளையின மதிப்பீடுகளில் இருந்து வெளிக்கிளம்பும் முயற்சியில்/ஆதங்கத்தில், தனது சொந்த மக்களையும்/தனக்குக் கீழாகப் பாவித்துக் கொண்ட கருப்பின மக்களையும், தன்னை நிரூபிப்பதற்கான மனிதத் தன்மையற்ற கருவியாக மாற்றிக் கொள்கிறான்.
இந்தியச் சூழலில் இந்தச் செயல்பாட்டை ஐரோப்பியர், பிராமணர்,பிராமணரல்லாத சாதி இந்துக்கள், தலித்துகள் என்ற வரிசையில் புரிந்து கொள்ள முடியும். பிராமணரின் நவீனகால அடையாளக் கட்டமைப்பு, அவர்கள் முன்குறித்த ஐரோப்பிய மதிப்பீடுகளை உட்கொண்டு, அந்த மதிப்பீடுகளுக்கு எதிரான எதிர்வினையாக அவர்களுக்குக் கீழாக வரலாற்று ரீதியாகப் புனையப்பட்ட சாதிகளின்மீது தங்களின் ஆதிக்கத்தை நிறுவ முயன்றதும், அந்தவித அந்நியப்படுத்தப் பட்டமைக்கு எதிர்வினையாக பிராமணரல்லாத சாதி இந்துக்களின் அடையாளக் கட்டமைப்பு அவர்களுக்கு முந்திய இரு வகையினரின் மதிப்பீடுகளை உட்கொண்டு, தனக்குக் கீழாகப் பாவித்துக் கொண்ட தலித்துகளிடம் தங்களின் ஆதிக்க அங்கீகாரத்தை நிறுவ முயன்றதையும் நாம் அவதானிக்க முடியும்.
இந்த விதத்தில் மார்ட்டினிக்கின் கருப்பின மனிதன் ஒரு சிலுவையில் அறையப்பட்ட மனிதன். “அவனை உருவாக்கிய அந்தச் சூழல் (அவனால் உருவாக்கப் பட்டதல்ல) அவனைத் தீவிரமாக உட்கொண்டு சிதைத்து விட்டது; அவன் தனது ரத்தத்தாலும், தனது சாரத்தாலும் அந்தப் பண்பாட்டுச் சூழலை ஊட்டி வளர்க்கிறான்… நான் அவனிடம் சொல்லுவேன், “இந்தச் சூழல், இந்தச் சமூகம் உனது மாயைக்குக் காரணம் என்று.” இதைச் சொல்லி முடித்தபின், மற்ற (செயல்பாடுகள்) தானாகவே பின்தொடரும்; அது என்னவென்று நமக்குத் தெரியும். உலகத்தின் முடிவு” என்ற விடுதலை குறித்த கனவுலக நம்பிக்கையைத் தெரிவிப்பதாக ஃபனானின் இந்தக் கூற்றுகள் அமைகின்றன. எந்தவிதமான செயல்பாடுகள் பின்தொடரும் அல்லது பின்தொடர வேண்டும் என்று ஃபனான் எதிர்பார்த்தார்? அங்கீகாரத்தை எதிர்நோக்கிய ஆண்டிலிய கருப்பின மனிதர்களின் ஆதங்கமான அந்நியமாதல் நீக்கம், இந்தவிதமான புரிந்துணர்வுக்குப் பின் எவ்விதத்தில் சாத்தியமாகும்? உலகத்தின் முடிவு என்னும் கனவுதேசம் எப்படி சாத்தியமாகும்?
இதற்கு ஃபனான் ஹெகலியத் தத்துவத்தை எடுத்துக் கொள்கிறார். பிற மனிதரின் அங்கீகாரத்திற்காக, தனது இருத்தலைப் பிற மனிதனின் மீது செலுத்தும் அளவுக்குத்தான் ஒரு மனிதன் மனிதனாகிறான். அவன் பிறரால் சரியாக அங்கீகரிக்கப்படும் வரை, அவனது செயல்பாடுகள் அந்தக் குறிப்பிட்ட பிறரை நோக்கியதாகவே அமையும். அந்தப் பிறரிலேயே அவனது வாழ்வின் மொத்த அர்த்தமும் சுருக்கப் பட்டிருக்கிறது. அதாவது, அங்கீகாரம் என்பது ஓர் இயங்கியல் ரீதியான உறவின் அடிப்படையில் அமைவது. இந்த இயங்கியல் உறவை நான் மூடும்போது, அல்லது இந்த இருதிசை இயக்கத்தை நடைபெறவிடாமல் தடுக்கும்போது, நான் பிறனை அவனுக்குள் அடைத்து விடுகிறேன். அவனது ‘தனக்கான-உயிர்மையை’ நான் இழக்கச் செய்கிறேன். இந்தத் தொடர் சுழற்சியில் இருந்து மீள்தல் என்பது என்னை பிறரிடம் உரையாடச் செய்வதன் மூலமே சாத்தியப்படும். அதேபோல பிறரும் இதேவிதமான உரையாடலுக்கான திறப்பை நிகழ்த்த வேண்டும்.
இந்த உரையாடல் தடுக்கப்படும்போது, அங்கீகாரத்தை எதிர்நோக்கிய சுய பிரக்ஞை ஆசையாக மாறிவிடுகிறது. இந்தவித ஆசை வந்ததும் நான் என்னைக் கருத்தில் கொள்ளும்படியாகக் கேட்கிறேன். இந்த ஆசையே ஒடுக்கப்பட்ட மக்களின் சுய மதிப்பை நோக்கிய பயணத்துக்கான முதல்படி. இதன்முலம் சுய பிரக்ஞை தனது வாழ்வின் ஆபத்தை அங்கீகரிக்கிறது. “வாழ்க்கையைப் பணயம் வைத்தே விடுதலை அடையப் படுகிறது… வாழ்க்கையைப் பணயம் வைக்காத ஒரு தனிமனிதனும் மனிதனாக அங்கீகரிக்கப் படுகிறான் ஆனால் அவன் சுதந்திரமான சுயபிரக்ஞையாக இந்த அங்கீகாரத்தின் உண்மையை அடையவில்லை” என்ற ஹெகலியப் புரிதலை இங்கு ஃபனான் முன்வைக்கிறார். இந்தவித இடர்ப்பாடு/ வாழ்க்கைப் பணயம் வழியாகவே அகவய உறுதிப்பாடு, புறவய எதார்த்தம் ஆகிறது. அதாவது, அங்கீகாரம் என்பது மோதல்கள், போராட்டங்களை உள்ளடக்கியது என்பதாகிறது. என்னை அங்கீகரிக்கத் தயங்குபவன் என்னை எதிர்க்கிறான். ஒரு மூர்க்கத்தனமான போராட்டத்தில் நான் சாவின் வலிப்புகளையும், கண்ணுக்குத் தெரியாத கலைதல்களோடு சாத்தியமாகாதவற்றின் சாத்தியப்பாட்டையும் ஒத்துக் கொள்கிறேன். ஆக வாழ்க்கையைப் பணயம் வைத்த அங்கீகாரத்திற்கான போராட்டம் என்பது அந்நியமாதல் நீக்கத்தை நோக்கிய புரட்சிகரச் செயல்பாடு ஆகிறது. இந்தப் புரட்சிகர செயல்பாட்டின் மூலம் வாழ்விற்கும், அன்பிற்கும், பெருந்தன்மைக்கும் ‘ஆம்’ சொல்லுகின்ற மனிதர்களையும், சக மனிதனை வெறுத்தொதுக்கி ஏளனம் செய்தல், தரம் தாழ்த்துதல், சுரண்டுதல், விடுதலையைப் படுகொலை செய்தல் போன்றவற்றிற்கு ‘இல்லை’ என்று சொல்லுகின்ற மனிதர்களையும் உருவாக்க விழைகிறார் ஃபனான்.
– மு.பு.டெரன்ஸ் சாமுவேல்