ஊழல் உலைகளும் ஒடுக்க முடியாத போராட்டமும் – மாலதி மைத்ரி

இடிந்தகரை இந்தியாவிற்குச் சொல்லும் செய்தி

MALATHI MAITHRI ARTICLE IMAGE-2இடிந்தகரைக்கு வந்து செல்லும் பேருந்துகள் அரசால் நிறுத்தப்பட்டு இந்த மார்ச்சுடன் ஒருவருடமாகிவிட்டது. இடிந்தகரையிலிருந்து மருத்துவச் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, தொழில் தொடர்பான வேலைகளுக்காக, பிற அவசரத் தேவைகளுக்காக வேன் பிடித்து வெளியிடங்களுக்குச் செல்பவர்களைத் தமிழக அரசு கைதுசெய்து மிரட்டுவதால் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே சென்று வருவதை முற்றாக நிறுத்திவிட்டனர். பிரசவத்துக்காகக்கூட பெண்களை நகர மருத்துவமனைக்கு அழைத்துப் போக முடியவில்லை. வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் கடத்தப்படலாம், பொய் வழக்கில் கைது செய்யப்படலாம், அரசியல் கட்சிக்களின் கைக்கூலிகளால் தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடைப் பட்டியலைப் பார்த்து உணவுப் பொருட்களை முறையாக வழங்கி மக்களுக்குச் சோறுபோடவேண்டிய திருநெல்வேலி ஆட்சியாளர் ஒரு குடும்பத்துக்கு பத்து வீதம் பொய் வழக்குகளைப் போட்டு வைத்துள்ளார். முன்னணிப் போராட்டக்காரர்கள் மீது 150 வழக்குகளுக்கு மேல் இருக்கிறது. ‘தேசத்துரோக வழக்கு’, ‘தேசத்தின் மீது போர்த்தொடுத்தல்’, ‘ஆட்சியாளரைக் கடத்த முயற்சி’, ‘அதிகாரிகளைத் தாக்குதல்’, ‘பணி செய்யவிடாமல் தடுத்தல்’, ‘பொதுச்சொத்தைச் சேதப்படுத்தல்’, ‘கொலை முயற்சி’ ‘குண்டர் தடைச்சட்டம்’, இப்படியாக இந்தியச் சட்ட புத்தகத்தில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் இந்த மக்கள் மீது போட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் கல்லறையில் புதைக்கபட்டவர்கள் மீதுகூட வழக்குகள் போடப்பட்டுள்ளன. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக்குவதுடன் இறந்தவர்களையும் உயி்ர்ப்பிக்கும் வேலையையும் காவல்துறையினர் செய்கின்றனர். இப்பகுதி மக்கள் கூடங்குளம் அணுவுலைகளை எதிர்ப்பதைக் காரணம்காட்டி பல்முனைக் கண்காணிப்பு வளையத்தையும் அதிதீவிரப் பாதுகாப்பு வளையத்தையும் அணுவுலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உருவாக்கி மத்திய, மாநில அரசுகள் கிராமங்களைச் சிறைப் பிடித்து வைத்துள்ளன. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கால காட்டாட்சி இச்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து கொண்டுள்ளது.

தடையற்றப் போக்குவரத்தை முடக்கி, சாலைகளில் பல சோதனைச்சாவடிகளை நிறுவி ஆயுதம்தாங்கிய காவல்படைகளை அரசு குவித்து வைத்துள்ளது. இச்சோதனைச் சாவடிகளைகளைத் தாண்டி வியாபாரிகள் உணவுப்பொருட்களை லாரிகளில் கிராமத்திற்கு எடுத்துவர அஞ்சுகின்றனர். உணவுப்பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் போன்ற தினசரித் தேவைக்கான பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு. குடிநீர் உட்பட எல்லா அடிப்படைத் தேவைக்கான பொருட்களுக்கும் அதிக விலை கொடுக்கவேண்டிய நிர்பந்தம். குழந்தைகள் அதிகக் கட்டணம் கொடுத்து வேன்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். நோயுற்றக் குழந்தைகளும் முதியவர்களும் கர்ப்பிணிகளும்கூட மருத்துவச் பரிசோதனைக்கோ சிகிச்சைப்பெறவோ இடிந்தகரையை விட்டு வெளியேச் செல்வதில்லை. உற்றார் உறவுகள், நண்பர்கள் வீட்டு இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கும்கூட யாரும் போகமுடியாத நிலை. போராட்டம் தொடங்கியதிலிருந்து பள்ளிக்குழந்தைகள் பக்கத்துக் கிராமங்களில் உள்ள தங்கள் தாத்தாப்பாட்டி வீடுகளுக்குக்கூட விடுமுறை, பண்டிகை நாட்கள் எனப் போகமுடியாத சூழல்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இடிந்தகரை போராட்டக் களத்திற்கு வந்ததிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க முடியவில்லை. பல்வேறு பொய் வழக்குகளைச் சுமந்திருக்கும் இவர்கள் மீது வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறவர்கள், அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று பல்வேறு நிரூபிக்க முடியாத அவதூறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. உதயக்குமாரும் அவரது துணைவியார் மீராவும் நடத்தும் பள்ளி அடையாளம் தெரியாத கூலிப்படையால் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தொடர்ந்து அச்சுறுத்தலும் வந்தபடியுள்ளது. அத்துடன் அவர்கள் குடும்பத்தினர் கொலை மிரட்டலுக்கும் தொடர்ந்து உள்ளாகிவருகின்றனர். நோயுற்ற தன் தந்தையை அருகில் இருந்து கவனிக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் உதயக்குமார். புஷ்பராயன் நடத்தி வந்த கிராமப்புறக் கல்வி வளர்ச்சிக்கான தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இவரது குடும்பம் தற்போது எந்தவித வருவாயும் அற்ற நிலையில் உள்ளது. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியாத அவல நிலையைச் சந்தித்தார் புஷ்பராயன். தன் குடும்பத்தைப் பார்க்க ஈரோடு சென்ற முகிலன் நக்ஸலைட்டென்ற குற்றச் சாட்டின்கீழ் கடலூர் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கூடங்குளத்தைச் சோ்ந்த ராஜலிங்கம் மற்றும் தேங்காய் வியாபாரி கணேசன் இருவரையும் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கி மிரட்டியதால் ஆறுமாதமாக இடிந்தகரையிலேயே தங்கிப் போராட்டத்தை தொடர்கின்றனர். கூடங்குளத்தைச்சோ்ந்த மனநிலை பிறழ்ந்த ஜோசப் என்கிற திருமேனியைக் கைதுசெய்து சிறையில் அடைத்து துன்புறுத்திய கொடுமையும் நிகழ்ந்துள்ளது. விடுதலையான பின் கூடங்குளத்திற்குப் போக அஞ்சி இடிந்தக்கரையிலேயே அடைக்கலமாகிவிட்டான் ஜோசப்.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-5கடந்த இரண்டு வருடமாக இப்பகுதிக் குழந்தைகளின் கல்வி முற்றிலும் சீர்குலைந்து போய்விட்டது. பொதுத்தோ்வு எழுத வேண்டிய அப்பகுதி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத்தோ்வு எழுதவும் அதற்காக தனிப்பயிற்சி பெறவும் போகமுடியாத துயரத்தில் உள்ளனர். இம்மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவானதால் அரசு இடங்களைப் பெற முடியாமல் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டியிருக்கிறது. இதனால் இம்மாணவர்களின் பெற்றோர் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி கடனாளியாக்கப்பட்டுள்ளனர். பணம் கட்டி படிக்க முடியாத பல மாணவா்கள் மேற்படிப்பைத் தொடர முடியாத அவலமும் நடக்கிறது. வயது வந்த தங்கள் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் நடத்திவைக்க முடியாத சூழலால் பல குடும்பத்தினர் மன உளச்சலுக்கு உள்ளாகிவருகின்றனர்.

கிராமத்தில் நிலவும் அசாதாரண பதற்றத்தாலும் ஊர் மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலாலும் மெல்கிரெடின் மகன் பனிரென்டாம் வகுப்புத் தேர்வுக்குச் சரியாகப் படிக்க முடியாமல் 900 சொச்ச மதிப்பெண்களே எடுக்க முடிந்தது. சிறந்த மாணவனான அவனுக்கு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, தனியார் கல்லூரியில்தான் சேர முடிந்தது. லட்சக் கணக்கில் பணம்கட்ட முடியாமல் இன்று தவித்துக்கொண்டிருக்கிறார் மெல்கிரெட். நீரழிவு நோயாளியான அவரின் பார்வை பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார். அதற்காக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூட நகரத்துக்கு அவர் போக முடியவில்லை. இவர் மீதும் பல பொய்வழக்குகள் உள்ளன.

ஓரு தொண்டு நிறுவனத்தில் சமூகப்பணியாளராகப் பணியாற்றிய இனிதா, இடிந்தகரை கிராமத்துக்கான பஞ்சாய்த்து கவுன்சிலரும் ஆவார். ஊரைவிட்டு வேலைக்குப் போகமுடியாததால் வேலை பறிபோய்விட்டது. ஊனமுற்ற கணவரையும் படிக்கும் இரு மகள்களையும் வைத்துக்கொண்டு திண்டாடுகிறார். கல்லூரியில் படிக்கும் மூத்த மகளுக்கு பணம் கட்ட முடியவில்லை. போராட்டப்பந்தலில் அமர்ந்தபடி பீடி சுருட்டும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகிறார். இவாின் கணவருக்கு நெஞ்சுக்குள் வளர்ந்து வரும் தசைக்கட்டி என்ன வகையானது என்று பாிசோதித்துக் கொள்ளக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. இவர் மீதும் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-12012, செப்டம்பர் 10-ஆந்தேதி கூடங்குளம் அணுவுலை முற்றுகைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் சேவியரம்மா, சுந்தரி, செல்வி ஆகியோர் முன்னணி பெண் போராளிகள். இவர்கள் தண்டிக்கப்படும் முறையைப் பார்த்து இனி பெண்கள் உரிமைகளுக்காகப் போராட வீதிக்கு வரக்கூடாது என்ற திட்டத்துடன் காவல்துறையும் நீதித்துறையும் ஆட்சியாளர்களும் பல கொடுமைகளைச் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களுக்கு காவல்துறையினரும் சிறைத்துறையினரும் அளிக்கும் தண்டனைகளையும் அவமானத்தையும் கொடுமைகளையும் பார்த்து இனி பெண்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும், அதிகார வர்க்கம் எண்ணுகிறது. கைது செய்து நீதிபதிமுன் ஆஜர்படுத்தாமல் தனி வீட்டில் அடைத்து வைத்து காவல்துறை இவர்களை அச்சுறுத்தியது. இவர்கள் எங்கு கொண்டுசெல்லப்படனர் என்பதே யாருக்கும் ஒன்றரைநாள் வரை  தெரியவில்லை. கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் அவசர அவரசமாக தலைக்கு ஆயிரம் பொய் வழக்குகள் புனையப்பட்டது, பின் பிணைக் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. சுந்தரியின் மீது ‘ஆட்சியாளரைக் கடத்தல் முயற்சி’ என்ற வழக்கும் சுமத்தப்பட்டது. காவல்நிலையத்தில், சிறைச்சாலையில் ஆடைகள் களையப்பட்டு சோதனை என்ற பெயரில் இவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை மிக ஆபாசமாகத் திட்டி கேவலப்படுத்தியுள்ளனர். உயிரோடு ஊர் திரும்ப முடியாதென்று கொடூரமான மிரட்டலும் இவர்களுக்குத் தரப்படுள்ளது. திருநெல்வேலி மாவட்டச் சிறைச்சாலையிலிருந்து திருச்சி சிறைச்சாலைக்கு மாற்றி உறவினரும் நண்பர்களும் இவர்களைச் சந்திக்கமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்குக் கோர்ட்டுக்கு வரும்போது சுற்றி வளைத்து வந்த ஆயுதம் தாங்கிய காவல்படை இவர்களின் குடும்பத்தினரும் குழந்தைகளும்கூட அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை. வெறும் கரங்களை உயர்த்தி கோஷமிட்டு அறவழியில் போராடிய இவர்களைச் சர்வதேசப் பயங்கரவாதிகளைப்போல அரசு துப்பாக்கி முனையில் பெரும் பாதுகாப்பு படையுடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தது. இப்படி மூன்று மாதங்களுக்கு மேலாக இவர்களைக் கொடுமைப்படுத்திய பின் அரசு பிணை வழங்கியது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாத்திமா பாபு ஒருங்கிணைப்பில் நடக்கும் போராட்டம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் போராட்டம் அனைத்திலும் பெண்கள் அதிகமாக மிரட்டப்படுகின்றனர். காவல்துறையினரும் அதிகாரிகளும் தரக்குறைவான இழிவான முறையில் நடந்து பெண்களை அச்சுறுத்த முயல்கிறார்கள். போராட்டக்காரர்கள் மூன்று பேரை அரசு இதுவரை கொன்றிருக்கிறது. சர்வாதிகார அரசும் போலீசும் எப்படிப்பட்ட அடக்குமுறைகளை ஏவினாலும் எமது பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பின்வாங்கப் போவதில்லை.

கூடங்குளம் அணுவுலைகளை மூடக்கோரி அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்பும் துன்பமும் இருந்தாலும் இந்தியச் சரித்திரத்தில் மக்கள் உரிமைப் போராட்டத்திற்குப் புதிய பாதையை அமைத்துத்தந்த இவர்களின் தியாகமும் வீரமும் மனிதவுரிமைவாதிகளாலும் ஜனநாயகத் தன்மைகொண்ட பொதுமக்களாலும் போற்றப்படுகிறது.

MALATHI MAITHRI ARTICLE IMAGE-4மனிதகுலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தான அணுவுலைகள் வேண்டாமென்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து 25 ஆண்டுகளாகப் போராடி வந்திருக்கின்றனர். அணுசக்தித்துறையை இதுவரை யாரும் கேள்வி கேட்கமுடியாது, அதன் நிர்வாகத்தின் முறைகேடுகளைப்பற்றியும் அணுவுலைகளின் செயல்பாட்டைப்பற்றியும் வெளிப்படையாக பேசமுடியாது என்ற இரும்புச்சுவரை இப்போராட்டம் தகர்த்தெரிந்துள்ளது. அணுசக்திக் கொள்கை பற்றியும் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் இந்தியாவிற்கும் உலகிற்கும் புலப்படுத்தியது இம்மக்களின் அளப்பரிய சாதனை. பொது மக்கள் மத்தியில் அணுக் கதீர்வீச்சின் ஆபத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கியது இப்போராட்டத்தின் மாபெரும் வெற்றி.

தைவான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் நிறுவப்படும் அணுவுலைகளுக்கு கருவிகளையும் உதிரிப்பாகங்களையும் வழங்கிய ‘ஜியோ போல்ட்ஸ்க்’ நிறுவனம் தரமற்ற பொருட்களை வாங்கித் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் பேரிலும் அதில் நடைப்பெற்ற ஊழல் குற்றசாட்டின் கீழும் அதன் நிர்வாகி ‘சொ்கை ஷுடொவ்’ ரஷ்ய அரசால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜியோ போல்ட்ஸ்க் நிறுவனத்திடமிருந்துதான் கூடங்குளம் அணுவுலைக்குக் கருவிகளும், உபகரணங்களும், உதிரிப்பாகங்களும் வாங்கப்பட்டுள்ளன. இதனால் கூடங்குளம் அணுவுலையின் பாதுகாப்பு 100 சதவீதம் கேள்விக்குறியாகியுள்ளது. கூடங்குளம் அணுவுலைகளில் கடந்த செப்டம்பரில் யுரோனியம் நிரப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அணுவுலைகளில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களின்போது 2 வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டு விட்டன என்றும் ஜனவரி 1-ஆம் தேதி மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். பிப்ரவரி மாதத்தில் கூடங்குளம் அணுவுலை இயக்குனர் சுந்தர் ரஷ்யாவிலிருந்து சில மாற்று உபகரணங்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு பழுதுப்பட்ட உபகரணங்கள் மாற்றபட்டன என்றார். ஏப்ரல் மத்தியில் அணுசக்தி ஓழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மேலும் 4 வால்வுகள் பழுதாகியுள்ளன என்கிறார். 2013 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து அணுவுலைப் பணியாளர்களுக்கு நேர்ந்த விபத்துகள் பற்றியும் மரணங்கள் பற்றியும் கூடங்குளம் அணுவுலையில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற கருவிகளைப் பற்றியும் பல செய்திகளை அணுசக்தித் துறையைச் சார்ந்தவர்களே வெளியிடத் தொடங்கியுள்ளனர். (வெளிமாநில அணுவுலைப் பணியாளர்கள் 5 போ் மூன்று மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்). மேலும் முன்னாள் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய அணுசத்தித் துறையில் நடைபெற்ற ஊழலைகள் பற்றியும் கூடங்குளம் அணுவுலைக்கு வாங்கப்பட்ட தரங்குறைந்த பொருட்கள் குறித்தும் விசாரணைசெய்து வௌ்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்றும் அதுவரை அணுவுலையின் செயல்பாடுகளை முடக்கிவைக்கவேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். மக்களின் உயிர்வாழ்க்கை மீது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விளையாட வேண்டாமென்றும் அவர் எச்சரிக்கிறார். ஊழல் நோய் புரையோடிப்போன இந்தியாவின் ஆளும் அதிகார வர்க்கம் அடக்குமுறையை ஏவியும் பொய்த்தகவல்களை அளித்தும் அணுவுலைகளை இயக்கிவிடலாமெனச் சதி செய்கிறது. சர்வாதிகாரிகளின் வெற்றி காலம்முழுவதும் நிலைப்பதில்லை, மக்களின் நீதி வெல்லும் என்பதை இடிந்தகரை போராட்டம் நிரூபிக்கும்.

– மாலதி மைத்ரி