போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள் – பிரேம்

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது, எதிர்காலத்திலிருந்துதான் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த காலம் பற்றிய பொய்நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளாமல் எந்தச் சமூகப்புரட்சியும் தன்னளவில் உருவாகவே முடியாது. கடந்தகாலப் புரட்சிகள் முடிந்துபோன வரலாற்றை நினைவுபடுத்தி அதன்வழியாகத் தம்மை மகிழ்வூட்டிக் கொண்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால் கடந்து போனவற்றைக் கடந்த காலத்தைச் சேர்ந்தவர்களே புதைக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.”
 -கார்ல் மார்க்ஸ் (The Eighteenth Brumaire of Louis Bonaparte)

மக்கள் போராட்டங்கள், எதிர்ப்புகள், அரசியல் புரட்சிகள் என்பவை உலக வரலாற்றில் மிகமிகப் புதிய வடிவங்கள். இவை இதற்கு முன் இருந்த போர்மைய அரசியலுக்கு முற்றிலும் எதிரான கருத்துருவத்தை, கோட்பாடுகளைத் தம் அடிப்படையாகக் கொண்டவை. பலமுடையவர்கள், படை உடையவர்கள், அதிக அழிப்பாற்றலைக்  கொண்டவர்கள், அதிகக் கொடூரங்களை இழைக்கக்கூடியவர்களே வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியும்,  அவர்களே ஆட்சியை, அதிகாரத்தை, நிலங்களை, வளங்களைத் தமதாக்கிக் கொள்ள முடியும், மற்றவர்கள் அடங்கியும்  அடிமைப்பட்டும் பணிந்து ஒப்படைத்தும் வாழ்வதற்கே உரியவர்கள்  என்கிற புராதனப் போர் அதிகார அரசியலுக்கு மாறானது இந்த மக்கள்சார் அரசியல் போராட்டங்கள்.

மதங்கள், அரசுகள் என்ற மிகப் பழமையான அமைப்புகள்கூட மாற்ற முடியாதவை என்று சொல்லிக் கொண்ட தம் பழமையான  வரையறைகளைத் தளர்த்திக் கொண்டு, நியாயப் படுத்தப்பட்ட தம் கொடுங் கோன்மைகளைக்   குறைத்துக்     கொண்டு     சமத்துவம்,  சமூகநலம், மனிதநேயம்   என்ற முற்றிலும் புதிய நோக்கங்களை, கொள்கைகளைத் தாமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகச் சொல்லி இன்றுள்ள மக்கள் மையச் சொல்லாடலின் பகுதியாகத் தம்மை இணைத்துக் கொள்வதென்பது மக்கள் போராட்டங்கள் என்ற நவீனச் செயல்பாட்டின்  மூலம்  நிகழ்ந்த  வரலாற்று  மாற்றம்.

பின்நவீன நிலையின் தவிர்க்க முடியாத தன்மையாக இதனைக் கூறமுடியும் “கடந்த காலங்களின் அரசுகள், அமைப்புகள் போல வன்முறையை அடக்குமுறையை எந்தத் தயக்கமும் இன்றி நியாயப்படுத்தி இன்றைய அரசு-அதிகார அமைப்புகள் தம் அரசியல் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியாது. முதலீட்டு மேலாதிக்கம், ஏகாதிபத்தியம் என்பவைகூட தம்மளவில் மக்கள்நலம், முன்னேற்றம், நல்வாழ்வு, தேசக் கட்டமைப்பு, நல்லாட்சி, மனித உரிமைகள் என்பவற்றை உறுதிமொழிந்தே தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும்”. இந்த மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வுகளின் தொகுப்புதான் ‘மக்கள் போராட்டம்’ என்ற நவீன பொதுக் குறியமைவு. வரலாற்றில் இதற்கு முன்பும் மக்கள் படைகளாகத் திரண்டு போர்களில் ஈடுபட்டிருக்கிறார்கள், அப்பொழுது நிகழ்ந்த ‘மக்கள் போர்கள்’ பேரரசுகள், மதத் தலைமைகளிடம் தம் கோரிக்கைகளை முன்வைத்து அதில் உடன்பாடு உருவாகாத நிலையில் நிகழ்ந்த மோதல்களாக அமைந்தன. அப்போர்களும் மோதல்களும் உலகச் சமூக வரலாற்றில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இங்கிலாந்தில் போர்களுக்கு நடுவில் உருவாக்கப்பட்ட மாபெரும் உரிமை அறிக்கை (The Magna Carta, 1215) உலகை மறுபடியும் புதிதாகத் தொடங்கி  வைத்ததாகச் சொன்ன அமெரிக்கப் புரட்சி (1776) மக்கள் உரிமைகள்,  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றை அறிக்கையிட்டுச் சொன்ன பிரஞ்சுப் புரட்சி (1789) போன்றவை தம்மளவில் மிக அடிப்படையான கருத்தியல் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை  முன்வைத்த  சுதந்திரம், சமஉரிமை  என்பவற்றில் (All men are created equal) பெண்களும், பிற இனத்தவர்களும் இடம்பெறவில்லை என்றபோதும்  மனித உரிமைகள் என்ற ஒரு  கருத்துருவமும் சமத்துவம் என்ற கோட்பாடும் அரசியல் சொல்லாடலாக அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு – மக்கள் என்ற முரண் இருமைநிலை அறிமுகமான அந்த தளத்தில் போருக்கும் போராட்டத்திற்கும் இடையிலான கருத்தியல் வேறுபாடுகளும் தொடக்கம்  பெறுகின்றன. அடிமைமுறை நீக்கம், பெண்களுக்கான அரசியல் உரிமைகள், காலனிய நாடுகளின் தன்னாட்சி, முழுமையான முடியாட்சிமுறை நீக்கம் எனத் தொடர்ந்த ஒவ்வொரு மாற்றமும் மக்கள் போராட்டங்களின் வரலாற்று நீட்சியாக அமைகின்றன.

‘ஆற்றல், வலிமை, வன்மை கொண்டவர்கள் மட்டுமே வாழ்வதற்கான உரிமை உள்ளவர்கள். பலமற்றவர்கள், போர்வலிமை அற்றவர்கள், எளியவர்கள், வெறும் உடல்சார்-உழைப்புசார் மனிதர்கள் அடிமைப்பட்டு, சேவைசெய்து வாழ்வுரிமை அற்று நலிந்து மடிவதற்கு மட்டுமே விதிக்கப்பட்டவர்கள்’ என்ற தொன்மைக் கருத்தமைவுக்கு முற்றிலும்      எதிர்நிலையில் எளியவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்,  அடக்கு  முறைக்கும் ஒடுக்குதலுக்கும்  உள்ளானவர்கள், உழைப்புசார் மனிதர்கள் அனைவரும் மனித  உரிமைகளுடன், அரசியல் இருப்புரிமை கொண்டவர்களாக வாழ  முடியும் என்ற புதிய கருத்தமைவே நவீன போராட்ட அரசியலின்  அடிப்படைக் களம். முடியரசு (Crown) நீக்கப்பட்ட குடியரசு  (Authority of People) என்ற தளத்தில் மக்களும் மக்களுக்கான  அரசியலும் புதிய உலக ஒழுங்கின் பகுதிகளாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இப்புதிய உலக  ஒழுங்குவழியாகவே நாம் போர் அரசியலிலிருந்து விலகி கோட்பாட்டு அரசியல் நோக்கி நகரமுடிந்தது.

எவரொருவர் மிகவும் நலிந்தவரோ அவருக்கு அதிக உரிமையை வழங்கி இருப்பைச் சமநிலைப்படுத்துவது என்னும் சமூகநீதி அரசியல் வரை இந்தக் கோட்பாட்டு அரசியல் விரிவடைந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய கட்டமைப்புடன் நகரங்கள், ஊர்கள் அமைக்கப்பட வேண்டும், மரண தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவு வரை இந்த மனித உரிமை அரசியலின் செயல்பாடு விரிவடைந்துள்ளது. அதாவது உயர் அறங்கள், மனித விழுமியங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கைசார் அரசியல் என்பதே இந்த மக்கள்மைய அமைப்பின் உள்ளடக்கம்.

மக்களை மையமாகக் கொண்ட அமைப்புகளும் அரசுகளும் மக்களுக்கு எதிராக, மக்களை ஒடுக்குவனவாக, வழிகாட்டு நெறிகளுக்கு மாறாகச் செயல்படும் பொழுது நிகழ்வனவே மக்கள் போராட்டங்கள், எதிர்ப்புகள், அரசியல் புரட்சிகள் என்பவை. இந்தத் தளத்தில் நாம் ஒரு முரண்பாட்டைச் சந்திக்கிறோம். பலமற்றவர்கள், எளியவர்கள் போரில் ஈடுபடவில்லை, போராட்டத்தில்தான் ஈடுபடுகிறார்கள். அதிகாரம், அரசு, ஆட்சி நிறுவனங்கள் என்பவையோ போர் இயந்திரக் கட்டமைப்புகளாகத் தம்மை வைத்துக் கொள்கின்றன. அறத்தை, கொள்கையை, நீதியைத் தம் செயல்முறையாக  வைத்துக்  கொண்டுள்ள ‘மக்கள் அரசுகள்’ அரசியல் என்பதைச் சொல்லாடலின் களமாக்கி உரையாடலின் வழியாக மக்களுக்கான நீதியை, உரிமைகளை வழங்குவதன் மூலம் தம்மை அறம்சார் அமைப்புகளாக நியாயப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அதிகார அமைப்புகள் அரசியலைச் சொல்லாடல் களமாக மட்டும் வைத்துக் கொள்வன  அல்ல, அவை போர்க்கள, கொலைக்கள, அழித்தொழிப்பு செயல்திட்டங்களையும் வைத்துள்ளன. இந்தப் புராதன அழித்தொழிப்பு அரசியலும் நவீன மக்கள் வாழ்வுரிமை அரசியலும் மோதும்போது சமநிலையற்ற போராக மாறிப் படுகொலைகளை உருவாக்குகின்றன. மக்கள் தொடர்ந்து அச்சுறுத்துதலுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது புராதனப் போர் அரசியலின் தொடர்ச்சியாக அமைகிறது. இங்கு மக்கள் போர்செய்யும் குழுவாக இல்லாமல் நீதி  கேட்கும் குழுவாக இருக்கிறார்கள், அதனால் போர்க்களக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  போர் என்பதற்கும் போராட்டம் என்பதற்கும் இடையில் சிக்கியுள்ள  இன்றைய அரசியலின் கடுமையான சிக்கல் இங்குதான் தொடங்குகிறது. நவீன விடுதலை அரசியலை அடிப்படையாக  வைத்து போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபடும் மக்கள் குழுக்களுக்கும் புராதன வன்கொடுமை அதிகாரத்தை இன்னும் தனது உள்ளீடாக வைத்திருக்கும் அரசு இயந்திரங்களுக்கும் இடையிலான சமநிலையற்ற மோதலில் நிகழும் கொடுமைகள் நம் காலத்திய துன்பியலாக மாறியுள்ளது.

ஒடுக்கப்பட்டவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்கள், ஈடுபட வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் பலமும், வலிமையும், அதிகாரமும் இல்லாததால்தான் ஒடுக்கப்பட்டவர்களாக, பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். பலமற்றவர்கள், இடமற்றவர்கள், அதிகாரமற்றவர்கள், அரசியல் தன்னுரிமையற்றவர்கள் எப்படிப் போர் இயந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்த முடியும். போராட்டங்கள் என்பவை போர் செய்யமுடியாதவர்களின் கூட்டுக் குரல் என்றால் போர்க்கள அதிகாரம்  கொண்ட ஆதிக்க அமைப்புகள் அதற்கு எந்த மதிப்பைத் தரக்கூடும்? வலியில் உள்ள மனிதர்களின் அழுகைதான் போராட்டங்கள் என்றால் ‘வலியுடைய மனிதர்கள் வாழ உரிமையற்றவர்கள்’ என்று சொல்லும் அதிகார அமைப்புகள் அவர்களுக்கு என்ன நியாயத்தை வழங்க முடியும்?  இந்த அரசியல் முரணின் கொடிய விளைவுகளுக்கு நடுவில்தான் நம் காலத்து மாறுதலுக்கான கோட்பாடுகளும் செயல்திட்டங்களும் தம்மை உருவாக்கிக் கொள்ளவும் உருமாற்றிக் கொள்ளவும் நேர்ந்துள்ளது.

மக்கள் அரசியல் நெறிகளை ஏற்ற அரசுகளும் அமைப்புகளும் தம் செயல்முறையில் தவறுகளை இழைக்கும்  போது  மக்கள் அவற்றைத் தடுக்கவும் மாற்றவும் நிகழ்த்தும் செயல்தான் போராட்டங்கள். அரசு, மக்கள் என்ற இரு அமைப்புகளும் ஒரே வகையான கொள்கைகளை, அறங்களை ஏற்றுக்  கொண்ட தளத்தில்தான் இந்தப் போராட்டங்கள் நிகழ்வது பொருளுடையதாக அமைகிறது.    வழிகாட்டு நெறிகளையும் கொள்கைகளையும் மாற்றியமைக்க நிகழும் சமூகச் செயல்பாடுகளும் அமைப்பின் அடிப்படைகளையே மாற்றியமைக்க நிகழும் புரட்சிகளும் போராட்டங்களிலிருந்து மாறுபட்ட   வலிமையான, அழுத்தம் நிறைந்த செயல் முறைகளைக் கொண்டவை. ஆனால் போர் என்பதில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாக்குதல், போர், கொள்ளை, படுகொலை, அழித்தொழிப்பு, நாடு கவர்தல், நிலங்களைத் தன்வயப்படுத்தல் என்பவை மனித சமூகங்களுக்கு மிகப்பழகிய வன்செயல்கள். இனக்குழுக்களாக, போர்ச் சமூகங்களாக, சமயப்படைகளாகத் திரண்டு இந்த வன்செயல்களை செய்வது என்பது புராதனச் சமூக வாழ்வின் ஏற்கப்பட்ட ஒரு பகுதி. அரசுகள், நாடுசார் படைகள் என்பவை இந்த வன்செயல்களை முறைப்படுத்தியும், அவற்றிற்கான   பயிற்சிகளை அளித்தும் தம்மை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் மக்களுக்கான அமைப்புகளாகத் தொடர்ந்து தம்மை நிலைப்படுத்திக் கொண்டும் வந்துள்ளன.   மக்கள்-அரசு என்ற எதிர்மைகள் வெளித்தெரியாத தோற்றச் சமநிலை உருவாகி அரசுகள் புனிதநிலை பெற்றிருக்கின்றன. மனிதர்களை வன்செயலுக்கும் படுகொலைகளுக்கும் மிக எளிதாகப் பயிற்சியளித்துவிட தொன்மையான போர் அரசியல் பழகியுள்ளது. தனிமனிதர்களின் வன்முறை மற்றும் வன்செயல்களிலிருந்து வேறுபட்டதான அமைப்பாக்கம் பெற்ற, வரலாற்று வடிவம் கொண்ட அமைப்பாக போர் அரசியல் அமைகிறது.

பிறரால், வெளியில் உள்ள ஒருவரால் தான் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம், தன்னைக் கொல்ல இருப்பவர்களை முதலில் கொன்று தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் இரண்டும் இணையாக அமைவதன் மூலம் போர் இயந்திரங்களாகத் தம்மையும் தம் அரசுகளையும் வைத்துக் கொள்ளும் தனிமனிதர்கள். பிறரைக் கொல்லும் உரிமையைத் தனக்கு வழங்கிய மக்களைக் கொல்லவும் அல்லது பாதுகாக்கவும் வலிமை கொண்ட அரசுகளின் முன் தம்மை ஒப்படைக்கும் சமூக மனிதர்கள், இவற்றிற்கிடையிலான ஒப்பந்தத்தில் ஒரு அழித்தொழிப்புச் சமூக உளவியல் உருவாகிறது. பிறர், வெளியில் உள்ளவர்கள், பகைவர் என்ற கருதுகோளை தனிமனிதர் என்ற நிலையில் இன்றி இனமாக, தேசிய-தேச அமைப்புகள் சார்ந்து, மொழி-மத அடையாளம் சார்ந்து, நில வரைபடம் சார்ந்து உருவாக்கித் தரும் நிலை வரலாற்று வடிவம் கொண்டதாகவும் அமைப்பாக்கத் தன்மை கொண்டதாகவும் அமைந்துள்ளது.

“ஏற்றத் தாழ்வுகளும் சுரண்டலும் இருந்தபோதும் ஒரு தேசம் என்பது ஒருங்கிணைந்த உடன்பிறந்த மனிதர்களின் சமூகமாகக் கற்பனை செய்யப்படுகிறது, இந்தக் கற்பனைக்காக பல லட்சம் மக்களைக் கொல்லவும் பல லட்சம்பேர் விரும்பித் தம் உயிரை விடவும் தயாராக உள்ளனர். கடந்த இரு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்த இந்த உயிரிழப்புகளுக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேசியத்தை உருவாக்கும் கலாச்சார அடிப்படையில் தொடங்குகிறது.” (பெனடிக்ட் ஆன்டர்சன், கற்பனைவழி உருவாக்கப்பட்ட சமூகங்கள், 1983)  என நவீன தேசியத்திற்காக  நடந்த படுகொலைகள், உயிரிழப்புகள் பற்றி பெனடிக்ட் ஆன்டர்சன் விளக்க முயற்சிக்கிறார். கொல்லுதல், உயிர் விடுதல் என்பவற்றை மையமாகக் கொண்ட அரசியல் புராதனப் போர் அரசியலின் தொடர்ச்சியாகவே இன்றும் இருந்து வருகிறது. இந்தத் தொல்சமூக உளவியலும்  நவீன  குடிமைச் சமூக மனிதர்கள் என்ற கருத்தாக்கமும் இணையும்போது வெகுசனத்  தன்மை கொண்ட  ஃபாசிசம் உருவாகிறது.

ஒரு அமைப்பிற்குள் உள்ள வர்க்க, இன, (சாதி), கருத்தியல் குழுக்களின் வேறுபாடுகள் மற்றும் முரண்களை போர்க் களன்களாகவும், நிறுவனங்களாகவும் செறிவுபடுத்தி உரையாடல் மறுத்த மோதல்கள் எந்தவொரு சூழலிலும் நிகழ வாய்ப்புள்ளது என்ற நிலையை உருவாக்கி வைத்துக் கொள்வது சமூகப் பாசிசத்தின் செயல்திட்டங்களில் ஒன்று. இந்த அச்சுறுத்தல் மீது கட்டப்பட்ட தொல்சமூக உளவியலின் சிக்கல்களை இன்றைய நவீன ஆதிக்க அமைப்புகளும் பெருந்தேசிய அரசுகளும் தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் வலிமைப்படுத்தி வைத்துக் கொள்வதன் மூலம் போர் இயந்திரங்களாகத் தம்மை பெருக்கிக் கொள்கின்றன. இதன் வழியாக அவை போராட்டங்களை அதாவது, அறம்-நீதி என்பதை முன்நிபந்தனையாகக் கொண்ட, மாற்றம், விடுதலை என்பதன் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மையப் போராட்டங்களை நசுக்கி, அழித்து மீந்து நிற்பவர்களிடம் அச்சுறுத்தல், சித்திரவதை  சார்ந்த  உளவியல் சிதைவுகளை உருவாக்குகின்றன.

இன்னொரு வகையில் குடிமைச் சமூக உளவியலில் எதிர்ப்பும் மறுப்பும் அற்ற அடிமைக் கருத்தியலை உருவாக்க இந்த அச்சுறுத்தும் அரசியல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிமைக்கருத்தியல் தனிமனித குற்றத்தன்மை மற்றும் தனிமனிதர்கள் மீதான வன்செயல் திளைப்பை உருவாக்கித் தரும் நோய்க்கூறாகப் பெருகக் கூடியது. அழித்தொழிப்பு மற்றும் வலியுருவாக்கத் தன்மை கொண்ட வெகுமக்கள் உளவியலாக இது மாறும்போது ஆண்மையத் தன்மை கொண்ட அரசியல்-சமூகச் செயல்பாடுகளின் வழியாகப் பல கொடிய வடிவங்களைப் பெறுகிறது. பெண் உடல்-மனம் மீதான பாலியல் வன்முறைகள் தொடங்கி அரசியல் பாதுகாப்பற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சித்திரவதைகள், வேறுநாட்டின் மக்களை அழித்தொழிக்கத் தன் நாட்டின் படைகளை பெருமையுடன் அனுப்புவதற்கான தேசப்பற்று சார்ந்த கொடூரங்கள் எனப் பலவடிவங்களில் இது பெருக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குழுக்களை மற்றொரு மக்கள் குழுவைக் கொண்டு தாக்குவதும், மக்கள் போராட்டங்களை ஒடுக்க ‘மக்கள்’ படைகளை உருவாக்குவதும் அரச பயங்கரவாதத்தின் செயல்திட்டமாக இருந்து வருகிறது. எளிய மக்கள் போராட்டங்களைக்கூட ஒடுக்கி, அவமதித்து அழித்தொழிப்பு நிலையை நோக்கித் தள்ளுவது கொடுங்கோன்மை அரசியலின் நவீன வடிவமாக இருந்து வருகிறது.

இந்த அழித்தொழிப்பு அரசியல் மற்றும் அச்சமூட்டும் சமூக உளவியலைத் தொடர்ந்து பெருக்கும்  தன்மை கொண்டதாக உலகமயமான ஏகாதிபத்திய போர் வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட இனங்கள், கொள்ளையிடப்படும் நிலங்கள் என்பவற்றைக் குறிவைத்து இந்த அழித்தொழிப்பு செய்து காட்டப்படுகிறது. மக்கள் போராட்டங்கள் நிகழ களம் அமைப்பதும், அவற்றைக் காட்சியரசியலாகச் சில காலம் வைத்துப் பின் ஒரு கட்டத்தில் அழித்தொழிப்பதும் உலகப் போர் அரசியலின் நிகழ்த்துதல்களாக மாறியுள்ளன. மக்கள் போராட்டங்கள் மாறுதலை நோக்கியதாக  உருவாகி ஒரு கட்டத்திற்குப் பிறகு போர் அரசியலின் வலைப்பின்னலில் சிக்கிச் சிதைந்து போகும் நிலை உருவாகிறது.

இதன் இன்னொரு பகுதியாக மக்கள் மண்டலங்களைத் தொடர் அச்சுறுத்துதலில் வைத்து அவர்களைப் போராட்டச் சமூகம் என்ற நிலையில் இருந்து போர் நிகழ்த்தும் சமூகமாக இருக்க வைப்பதன் மூலம் பல தேசிய அரசுகள் தமது போர்மைய அதிகாரத்தை தொடர்ந்து காட்சிக்குரியதாக வைத்துக் கொள்கின்றன. இந்த வன்கொடுமை அதிகாரம் வெளிநாட்டுப் போர்கள், உள்நாட்டுப்  போர்கள் என்ற இரண்டு வகை  திட்டமிடுதல்களால் பெருக்கப்படுகிறது. போர் மையப் பொருளாதாரமும் வளங்களைக் கொள்ளையிடுவதற்கான போர்களும் உள்ளீடாக ஒன்றுடன் ஒன்று இணைந்து, உரையாடலை மறுத்த போர்க்கள அரசியலின் வழியாக மக்கள் மைய அரசியலை செயலற்றதாக வைத்துக் கொள்கின்றன.

இந்த வகையான அடக்குமுறைகளுக்கும் அழித்தொழிப்புகளுக்கும் இடையில்தான் மக்கள்மைய விடுதலைக் கருத்தியல்கள் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளவும், தம் போராட்ட வழிமுறைகளை வடிவமைத்துக் கொள்ளவும் தேவை உருவாகிறது. ஏனெனில்  இன்றுள்ள மக்கள்மைய அமைப்புகள் போர்களால் அல்ல போராட்டங்களால் உருவாக்கப்பட்டவை,  “போராட்டங்கள் என்பவை இதற்கு முன் இருந்த போர்மைய  அரசியலுக்கு முற்றிலும் எதிரான கருத்துருவத்தை, கோட்பாடுகளைத் தம் அடிப்படையாகக் கொண்டவை.” மக்களின்  போராட்டம் என்பது கருத்துருவ, கோட்பாட்டு இணக்கங்கள் மற்றும் முரண்களின் காட்சிவடிவம். அத்துடன்  அது மக்களை நீதி தவறும் அரசுகளிடம் இருந்தும், அடக்குமுறை இயந்திரங்களிடம் இருந்தும் தனிமைப்படுத்தியும் வேறுபடுத்தியும் காட்டுகிறது. அவர்களை அது  நியாயம், நீதி, அறம் என்ற வழிகாட்டு நெறிகளின் மொழியால் பேசவைக்கிறது. அதன்வழியாக ‘மக்களாகிய  நாம்’ முதலில் அடக்குமுறைக் கருத்தியல்களில் இருந்தும்,  தன்மையச் சிதைவுகளில் இருந்தும், கற்பிதமான தனியடையாள நோயிலிருந்தும் விடுதலை அடைகிறோம்.

அரசியல் சொல்லாடல் என்பது இந்தத் தளத்தில்தான் ஒவ்வொரு சமூகத்திற்குமான அடிப்படையான அறிவுருவாக்க, அடையாள உருவாக்கச் செயல்பாடாக மாறுகிறது. மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் என்பவைதாம் கடந்த காலம் மீண்டும் முழுமையாகத் திரும்பிவிடாமல் எதிர்காலம் என்னும் அழுத்தத்தை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பவை.

இந்த எதிர் காலம் பற்றிய அழுத்தங்கள்  இல்லாமல் எந்த ஒரு அரசியல், சமூக அமைப்பும் நவீனத் தன்மையைத் தொடரமுடியாது. மக்கள் போராட்டங்களின் இந்த அரசியல் தன்மையை அழிக்கவும் கடந்த காலத்தின் வன் கொடுமைகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்க்கவும் இனவெறி, பேரினத்திமிர், மதவெறி போன்றவற்றை போர் அரசியல்  நிறுவனங்கள் அவ்வப்போது மேலெழ வைத்து அழிவுகளை, படுகொலைகளை  நிகழ்த்திப்  பார்க்கின்றன. இந்த அழிவுகள், வன்கொடுமைகள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான மதிப்பீடு சார்ந்த போராட்டங்களின் விளைவுகள்.

மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகப் புரட்சிகள் பற்றிக் கூறியிருப்பது அதற்குப்பின்னான மக்கள் போராட்டங்கள் அனைத்தின் அடிப்படையையும் விளக்கக்கூடியதாக மட்டுமின்றி நவீன மனித உளவியலின் சிக்கல்களையும் அடையாளம் காட்டுவதாக உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மக்கள் என்ற அடையாளமே போராட்டங்களால் உருவாக்கப்பட்டதுதான் என்னும்போது தொல்சமூக உளவிலும் தனிமனித உளவியலும் சந்திக்கும் புள்ளிகள் சிக்கலானதாக மாறுகின்றன.

போராட்டம் அற்ற மக்கள் குழுக்கள் போர் அரசியலின் அடிமைகள் என்ற அடையாளத்தை மட்டுமே பெற முடிகிறது. போராட்ட உரிமை கொண்ட மக்கள் போராட்டங்களின் வழியே வழிநடத்தப்படும் அரசியல் இரண்டிற்கும்  இடையிலான உரையாடலும் உருவாக்கமும் இணைந்ததே நவீன அரசியல். இருபத்தோராம் நூற்றாண்டின் மனிதர்கள் போராட்டங்களின் வழியாகத் தம்மை விடுவித்துக் கொள்வது என்பதற்குமுன் போராட்டங்கள்  வழியாகவே தம்மை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நிலையில் நவீன உளவியலின் அடிப்படைச் சிக்கலும் தொடங்குகிறது. தனிமனித அறத்திற்கும் சமூக அறத்திற்கும் இடையிலான,  இருத்தலுக்கும் சிந்தனைக்கும் இடையிலான முரண் மற்றும் இணக்கம் பற்றிய சிக்கல் அது. “சிந்தனையும் உயிர்வாழ்தலும்  வெவ்வேறானவை என்பது உண்மைதான், அதே  சமயம் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பவை.” என மார்க்ஸ் தன் பொருளாதாரம் மற்றும் தத்துவம் பற்றிய கையெழுத்துப்படிகளில் குறித்திருப்பது   பின்நவீனச் சூழலில் மீண்டும்  நினைவு கொள்ளத்  தக்கது. போராட்டம் என்பது சிந்தனை மற்றும் இருத்தல் என்பதை இணைக்கும் வரலாற்றுத் தளம்   மட்டும் அல்ல,  மனிதராக இருப்பதற்கும் மனிதராகச் சிந்திப்பதற்கும் அதுவே தளம் அமைத்துத் தருகிறது. அந்தத் தளம்   இல்லாதபோது மனிதர்கள் போர் செய்யும் இயந்திரங்களாகவும், போரால் அடிமைப்பட்ட உடல்களாகவும் மட்டுமே இருக்கமுடியும்.

அடிமைப்படுத்தல் – அடிமைப்படுதல் இரண்டின் இணக்கத்தில் மனிதர்கள் முழுமையடைந்தவர்களாகத் தோற்றம் கொள்வது நிகழ முடியும், இந்த இணக்கம் இறைமை மைய, அரசு மையத்  தன்மை கொண்ட தொல்மன அமைப்பின் தொடர்ச்சியால் அமையும் ஒரு நிலை.

“ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமையை முழுமையாக நிறைவேற்றி வாழ்வதன் மூலம் அவர் சுவர்க்கம் நோக்கிச் செல்லமுடியும், முடிவற்ற பேரானந்த நிலையை அவர் அடைய முடியும். இந்தக் கடமைகள் மீறப்படும்போது சாதி, வர்ண கட்டுப்பாடுகள் குழப்பமடைந்து உலகம் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.” (கௌடில்ய அர்த்த சாஸ்திரம்)

“எவன் சாஸ்திர விதியை விட்டு ஆசைவாய்ப்பட்டுத் தொழில் புரிகிறானோ அவன் சித்தியை அடைவதில்லை, இன்பத்தை அடைவதில்லை, உயர்ந்த கதியை அடைவதில்லை. ஆகையால் எது செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் உனக்கு சாஸ்திரமே பிரமாணமாகும். சாஸ்திரத்தில் கூறிய நெறியை உணர்ந்து தொழில் புரிவதற்கு நீ உரியவனாகிறாய்.”(பகவத் கீதை).

தனிமனித உளவியல், தொன்ம உளவியல், சமூக உளவியல், மனித நடத்தையியல் என்பவற்றிற்கு உருவம் தருவதும் அரசியல் என்ற களத்தை உருவாக்கித் தருவதுமான சில கூறுகளை மேற்குறித்த புராதன வாக்குகள் அடையாளம் காட்டுகின்றன. அவை சுவர்க்கம், பேரானந்தநிலை, கட்டுப்பாடுகள், கடமைகள், சித்தி, உயர்ந்த கதி, இன்பம், இவற்றை அடைவதற்கான நெறி, அதனை வரையறுக்கும் சாஸ்திரம் என்ற கருத்தமைவுகளாக உள்ளன. சிந்தனையும், உயிர்வாழ்தலும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை என்றால், இவற்றை இணைப்பதற்கான உத்திகளாக இதுவரை இருந்து வந்தவை எவை என்பது விளக்கமுறும் தளம் இது. இவை அனைத்தும் அரசியல் அடிப்படையில் மறுவிளக்கம் பெற்று நவீன மனிதநிலை மற்றும் மக்கள் என்ற நிலையைப் உருவாக்குகின்றன.

நவீன மக்கள் போராட்டம் என்ற கருத்தியல் செயல்பாடு இதுவரையில் இருந்த மனிதநிலை, அரசு, சமூகம், வாழ்வியல், சுதந்திரம், வாழ்வுரிமைகள் என்ற தளங்களைச் சிதைவாக்கம் செய்கின்றது,  மறுஉருவாக்கம் செய்கின்றது, பின் மறுவிளக்கத்திற்கு  உள்ளாக்குகின்றது. ஒவ்வொரு சமூகத்தின் வரலாறும் வாழ்வும் அது முன்னெடுக்கும் போராட்டங்களின் வழியாகவே அடையாளம் பெறுகிறது. ஒரு சமூகம் எவற்றிற்காகப் போராடுகிறது, எவற்றிற்கான போராட்டங்களைத் தவிர்க்கிறது, எப்பொழுதெல்லாம் போராடமறுக்கிறது, எந்த வகையாகப் போராட்டங்களைத் திட்டமிடுகிறது என்பவற்றை வைத்து அச்சமூகத்தின் அறஉணர்வு, அறிவமைப்பு, சமூக உளவியல் ஆகியவற்றை மதிப்பிட முடிவதுடன் அதன் வாழ்வியல் மதிப்பீடுகளையும் அழகியல் உளக்கூறுகளையும் அடையாளம் காணவும் முடியும்.

மக்கள் போராட்டங்கள் என்பவை அனைத்தும் ஒரே தளத்தில் ஒரே கருத்தியல் சார்ந்து அமைய வாய்ப்பில்லை என்பதால் போராட்ட உளவியல்  என்பது வேறுபாடுகளையும் பன்மைகளையும் புறவயப்படுத்தும் செயலாகவும் அரசியல் உரையாடல் களமாகவும் அமைகிறது. போராட்ட வழிமுறைகள், போராட்டப் பண்பாடு, போராட்டங்களுக்கான  அறிவுக்களம் என்பவற்றை உருவாக்கிக் கொள்ளும் நெடிய வரலாற்றுச் செயலில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு சமூகம் உயிர்த்தன்மை கொண்டதாக, வாழ்விருப்புடையதாக, படைப்பாற்றல் மிக்கதாகத் தன்னை தகுதிப்படுத்திக் கொள்கிறது. அத்தகுதியின்  அடிப்படையில் வளர்ச்சியையும் விடுதலையையும் நோக்கித் தனது வரலாற்றை நகர்த்திச் செல்கிறது. அதனால்தான் போராட்டங்களைக் கண்டு ஆதிக்க, அதிகார, அடக்குமுறை நிறுவனங்கள் வெறுப்பும் அச்சமும் கொள்கின்றன. உண்மையான அறிவுருவாக்கம் நிகழ்வதற்கு போராட்ட அரசியல் அடிப்படையாக உள்ளது என்பதால் போர் வலைப்பின்னலில் அவற்றைச் சிக்கவைத்து அழிவையும் அச்சத்தையும் தொடர்வதற்கான  சதிச் செயல்களில் ஆதிக்க அமைப்புகள் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு கால கட்டத்திற்குமான    தனிமனித அடையாளம், தன்னிலை உருவாக்கம், மனிதஉறவுகளின் தன்மைகள், பாலியல் உளவியல்புகள், விழைவு  சார்ந்த நடத்தை இயல்புகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் அவற்றிற்கு வடிவம் தருவதிலும் போராட்ட அரசியலறிவும், போர்ச்சதி அரசியலின் இடையீடுகளும் மிக உள்ளீடான பங்கு வகிக்கின்றன. போராட்ட-அரசியல் பற்றிய அச்சமும் அது குறித்த வெறுப்பும்  எதிர்நிலை உளவியல் சக்திகளாகப் பயன்படுத்தப்படுவதுடன் அடிமை உளவியலுக்கு அடிப்படையாக அமைகின்றன. இப்போராட்டம் சார் உளவியலை வெவ்வேறு வகைகளில் கையாள்வதன் வழியாக மாறுதலுக்கான இயக்கங்களும் விடுதலைக் கருத்தியல்களும் மட்டுமின்றி   அரசியல் கட்சிகளும், அதிகார அமைப்புகளும், கொடுங்கோன்மை அரசதிகாரங்களும், உலகமயமான பயங்கரவாத அமைப்புகளும், காட்சி-திரை  ஊடகங்களும், நுகர்வுச்சந்தை வலைப் பின்னல்களும் கூட தமக்கான செயல்பாட்டு வெளிகளை அமைத்துக் கொள்கின்றன, பரவலாக்கிக் கொள்கின்றன. இந்தப் பின்னணியில் தமிழ்ச் சமூகத்தின் இக்கால அரசியல்-சமூகத் தளத்தில் நிகழும் சில போராட்டங்கள் பற்றியும் அவை குறித்தச் சொல்லாடல்கள் பற்றியுமான உரையாடலாக இதனை அமைத்துக் கொள்கிறேன்.

1. நிலமும் வாழ்வும்:  எதிர்காலத்திற்கான ஒரு போராட்டம்

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் (அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்) போராட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் மிகுந்த முக்கியத்துவம் உடையது. தமிழகத்தில் சூழலரசியல் தனக்குரிய இடத்தை இதுவரை பெற்றதில்லை. சூழலரசியல் என்பதும் வாழ்வாதாரக் காப்புப் போராட்டம் என்பதும் விளிம்புநிலை அரசியலாகவும், ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் உலக அளவில் இருந்துவருகிறது. தமிழகத்திலோ இதற்கான இடம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளதுடன் முற்போக்கு அரசியல், திராவிட அரசியல், இந்துத்துவ அரசியல் என்ற அனைத்துத் தளங்களிலும் எதிர்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. வெகுமக்கள், பொதுக்கருத்து என்ற தளத்தில் சூழலரசியல் பற்றிய மிகத்தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதுடன், அறிவுக்குப் புறம்பான பல செய்திகள் பொதுஅறிவு என்ற வடிவத்தில் பதியவைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானம், அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்பப் பெருக்கம், பெருந்தொழில் திட்டங்கள், உலகமயமாதலின் நன்மைகள், சந்தைப் பொருளாதாரத்தின் பெருமைகள், தகவல் தொழில்நுட்பத்தின் அதிசயசக்தி எனப் பல கட்டுக்கதைகள் உறுதியாக நம்பப்படும் ஒரு சமூகச்சூழலைக் கொண்டுள்ளது தமிழகம். சிறு இயக்கங்களும் மாற்றுச் சிந்தனை கொண்ட சில அரசியல் தலைவர்களும் முன்னெடுக்கும் ஒன்றாக உள்ளது சூழலரசியல்.

கல்பாக்கம் அணு உலையின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முயன்ற இயக்கங்கள் உரிய கவனத்தையும் மக்கள் ஆதரவையும் பெறமுடியாமல் தேங்கியிருந்த நிலையில் அதனைவிடப் பெரிய ஆபத்தைக் கொண்டுவரக்கூடிய கூடங்குளம் அணு உலைத்திட்டம் 1988-இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ‘நீரைக் காப்போம் உயிரைக்காப்போம்’ என்ற முழக்கத்துடன் அணுவுலைக்கெதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கப் போராட்டம் 2011-ஆம் ஆண்டு ஜப்பான் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட புக்குஷிமா அணுவுலைப் பேரழிவினைச் சாட்சியாக வைத்து கூடங்குளம் அணுவுலையில் நிகழ்த்தப்பட்ட அச்சமூட்டும் சோதனை ஓட்டத்திற்குப் பின் உருவான உளவியல் தாக்குதலுடன் முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய ஆற்றலுடன் மேலெழுந்து வந்தது.

பெண்களின் தலைமையில் குழந்தைகள் முதியோர் என அனைவரும் பங்கேற்கும் இந்தப் போராட்டம் தினவாழ்வின் ஒரு பகுதியாகவும் வாழ்வுடன் இணைந்த ஒரு போராட்ட வடிவமாகவும் உறுதிப்பட்டுள்ளது. குடும்பத்திற்கொருவர் பங்கேற்பது, தம் உழைப்பின் வழி கிடைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை போராட்டத்திற்கென அளிப்பது, தொடர் போராட்டங்களைத் திட்டமிட்டு அமைதியான, சட்டத்திற்குற்பட்ட முறைகளில் நிகழ்த்துவது என இப்போராட்டம் ஒரு குடிமரபுத் தன்மையுடன் நிகழ்ந்து வருகிறது. இந்தப் போராட்டத்தை புரிந்து கொள்ள மறுப்பதிலும் இதனை எதிர்ப்பதிலும் கண்டுகொள்ளாமல் இருப்பதிலும் சாதிவழி தமிழ் பொதுஉளவியல் கொண்டுள்ள நிலைப்பாடு உலகமயமான ஆதிக்கக் கருத்தியலுக்கு துணைபோவதாக உள்ளது. இதனை மீனவச் சமூகத்தின் போராட்டம் என ஊடகங்கள் சொல்லி வருகின்றன. தமிழகப் பொதுக்கள அரசியல் இந்தப் போராட்டத்தை விளிம்புநிலை மக்களின் போராட்டம் என்று அடையாளப்படுத்தி மறந்துவிட முயற்சித்தபடியுள்ளது. ஆனால் ஒரு வரலாற்று அச்சுறுத்தலுக்கு எதிராக நடக்கும் இந்தப் போராட்டம் தமிழகத்தின் மொத்த நிலத்தையும் மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து அணுவுலைகளையும் மூடுவதற்கான அழுத்தத்தை உருவாக்கக் கூடிய போராட்டம். அத்துடன் உலக அமைதியை அச்சுறுத்தும் அமெரிக்க-ரஷ்ய ஏகாதிபத்திய பெருங்கேடுகளுக்கு எதிராக மக்கள் விடுக்கும் எச்சரிக்கையாகவும் இப்போராட்டம் அமைகிறது.

தமிழர் அரசியல், தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் உணர்வு என்ற பொதுக்கதையாடல்களால் புரிந்துகொள்ளப்படாத அணுசக்திக்கெதிரான மக்கள் போராட்டம் தமிழ்நிலத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்வியை மையமாகக் கொண்டுள்ளது. அணுசக்தி என்பது மற்ற அறிவியல் உயர் தொழில்நுட்பங்களைப்போல் இன்றி மனித முயற்சியால் சீர்செய்ய முடியாத நோய்களை உருவாக்கக்கூடியதாகவும் மனித ஆற்றலால் கையாளவும் கட்டுப்படுத்தவும் முடியாத பேரழிவுகளை விளைவிக்கக்கூடியதாகவும் உள்ளது. அணுமின் உற்பத்தி என்ற பொய்யான பெயர்பலகையுடன் அணுஆயுத உற்பத்தித் திட்டமாக அணுவுலைகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு அணுவுலையும் அணுஆயுதக் கிடங்காகவும் பேரழிவைத் தேக்கிவைத்துள்ள சாவுக்களஞ்சியமாகவும் உள்ளது. இதனை ஆக்கச் சக்தியெனச் சொல்லும் எந்த ஒரு விஞ்ஞானியும் ஒரு பக்க மூளையை இழந்த சதிகார  அறிவியலின் அடிமையாகவே செயல்படுகிறான். அணுவுலை ஒப்பந்தங்கள் அனைத்துமே போர்த்தொழில் சதித் திட்டங்கள், முதலீட்டுக் கொள்ளைகள், அரசியல் ஊழல்கள் என்பவற்றின் திரண்ட வடிவங்கள். உலக அளவிளான அழிவுத் திட்டங்களின் அழுத்தமும் பெருமுதலீட்டு திட்டமிடலும் அணுவுலைகளின் உள்ளும் வெளியமாக நிரம்பியுள்ளன.

கூடங்குளம் அணுவுலைத் திட்டம் ரஷ்யா போர் வல்லாண்மை நாடாகவும் அமெரிக்காவின் எதிர்இணை அழிவுசக்தியாகவும் நிலைப்பட்டிருந்த காலகட்டத்தில் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட கூட்டுச் சதித்திட்டம். இப்போது அதே திட்டத்தில் அமெரிக்க ஒற்றை ஏகாதிபத்தியம் தனக்கான கூடுதல் பங்கைப் பெற்றுக் கொண்டு மக்கள் மீதான நுண்போர் முறையை விரிவாக்கி உள்ளது. இந்திய அரசு இந்த இடத்தில் தனக்கான கொள்கை எதுவுமின்றி வெறும்  போர்த்தரகு பங்கு நிறுவனமாக மட்டும் செயல்பட்டு வருகிறது. மக்கள் என்னவும் ஆகட்டும், மண்ணும் நீரும் கடலும் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற கொடுமதி கொண்ட அரசியல் அறிவிலிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

மக்கள் உரிமை, அரசியல்சட்ட நெறிமுறைகள், நீதித்துறை ஒழுங்குமுறை என எதையும் மதிக்காமல் திமிரும், தீமையின் வன்கொடுமையும் கொண்டு இந்திய அரசும்-தமிழக அரசும் செயல்பட்டுக் கொண்டுள்ளன. பலஆயிரம் கோடி முதலீடு, தமிழகத்தின் மின் பற்றாக்குறை எனப் பொய்யான காரணங்களைக் கூறி இந்த அழிவுத்திட்டத்தை நியாயப்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இத்தனை ஆயிரம் கோடி முதலீடு செய்து ஆயுதங்களைச் செய்து விட்டோம் அதனால் ஆண்டுக்கு ஒரு முறை எங்காவது போர் செய்தே ஆகவேண்டும் என்பதான ராணுவ வல்லுநர்களின் வாதம் இது. ஹிரோஷிமா-நாகசாகி அணு ஆயுதத் தக்குதலை அதுவரை நடத்தப்பட்ட அணுஆயுதத் தொழில் நுட்பத்திற்கான  சோதனை ஒட்டம் என்று சொன்ன சதிகார விஞ்ஞானிகளின்  வாதம் இது.

தமிழகத்தின் பல பகுதிகள் குடிக்கத் தண்ணீர் விவசாயம் இன்றி கடந்த 60 ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன. அதற்கான நிரந்தர மாற்றுத்திட்டங்களை உருவாக்க அறிவும்- ஊக்கமும் அற்ற அரசியல்வாதிகள் மின் தேவை பற்றிப் பேசுவதற்கு பெருங்கொள்ளையும் பங்கு ஊழல் திட்டமும் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. மின் உற்பத்திக்கான மாற்றுத் திட்டங்களை மக்களுக்கான அறிவியலாளர்கள் உருவாக்கித்தர காத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் மிகச்சரியாகவும், தெளிவாகவும் உணர்ந்த மக்கள் அணுவுலைக்கெதிராகத் தம் வாழ்வைப் பணயம் வைத்து இடிந்தகரையில் பெரும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது வெறும் போராட்டம் மட்டுமல்ல இந்திய ஜனநாயக அரசியலமைப்புக்கு மக்கள் வைத்துள்ள சோதனை. இது கடல் வாழ்வாதாரம் காக்கப்  போராடும் தொல்குடி மக்களின் அணிவகுப்பு மட்டுமல்ல உலகப் போர்மைய அரசுகள், மக்கள் அழிப்புச் சதி நிறுவனங்கள் அனைத்திற்கும் எதிரான உடல்மைய-வாழ்வுரிமை அரசியலின் உருவகம். இதனை அறியவும் அணுகவும் இதில் தம்மை இணைத்துக் கொள்ளவும் மொத்த தமிழ்ச் சமூகமும் முனையவில்லையென்பது நிலம்சார் அரசியலை நம் சமூகம் இழந்துபோயுள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது. சிங்கள அரசின்  ராணுவம் கடல்மேல் செல்லும் தமிழக மீனவர்களைத் தினம் தாக்குவதும் கொல்வதும் விளிம்புநிலைப் பட்ட ஒரு தமிழ் இனக்குழுவின் இழப்பாக மட்டும் கணக்கிடப்படுவதும், அணுவுலை – அணுசக்திக்கெதிரான மக்களின் போராட்டம் மீனவக் குடிகள் தம் கிராமங்களைக் காப்பதற்காக நடத்தும் ஒரு போராட்டமாக மட்டும் சித்தரிக்கப்படுவதும் தமிழ்-தமிழர்-தமிழ்நிலம் என்ற அடையாளங்கள் பற்றிய அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழர் பண்பாடு, இயற்கையுடன் இணைந்த தமிழர் வாழ்வு என்ற சொல்லாடல்கள் அரசியல் வயப்படாத, போராட்ட மறுப்பு மயக்கங்களுக்கான திட்டமிடல்களாக மட்டுமே மீந்து நிற்கின்றன. ஆனால் இடிந்தகரையில் நிலைகொண்டுள்ள பசுமை காக்கும் தாய்வழி அரசியல் போராட்டம் உலகை மீட்கும் பெரும் போராட்டங்களின் பகுதியாக நீண்டு செல்கிறது.

இடிந்தகரை என்ற அறியப்படாத ஒரு கிராமத்தில் மையம் கொண்டு நிகழ்ந்து வரும் அணுசக்திக்கெதிரான இந்தப் போராட்டத்தின் வழியாக தற்கால அரசியலின் பல சிக்கல்கள் வெளித்தெரிய வந்துள்ளன. அறிவுக்கும் ஆதிக்க-அதிகார அரசியலுக்கும் உள்ள உறவு இதில் முதலிடம் பெறுகிறது. அணுசக்தி பற்றிய முழுமையான அறிவியல் தகவல்களையும் விளக்கங்களையும் மக்களிடம் இருந்து மறைத்து அதன் ஒரு பகுதி உண்மையை மட்டும் சொல்வதன் மூலம் அரசு தன்னை   ஒரு சதிகார நிறுவனமாக வைத்துக் கொள்கிறது. தன்னிடம் மட்டுமே சோதனைக்கான கருவிகளும் உபகரணங்களும்   உள்ளன என்பதைக் காரணம் காட்டி மக்கள் சொல்வது நிரூபிக்கப்படாத வதந்தி என்று அறிவிக்கிறது அரசு. அணுசக்தி தொழில்நுட்பம் என்பது மிகச்சிக்கலான இயந்திரவியல் அடிப்படையில் செயல்படும் ஒன்று என்பதைக் காரணம் காட்டி மக்களின் அறிவுக்கு எட்டாத ஒரு துறையாக இதனைச் சித்தரித்து அதிகாரப்பூர்வமான வல்லுநர்கள் சொல்வது மறுக்கமுடியாத உண்மை என்ற போலியான ஒரு தர்க்த்தைக் கட்டுகிறது அரசு இயந்திரம். வெளித்தெரியாத பல மர்மங்களையும் மக்களுக்கு அறிவிக்கப்படாத உண்மைகளையும் தன் கொடிய பலமாகக் கொண்டு ராணுவ போர்த் தொழில் மைய அறிவையே முழுமையான அறிவியல் என்கிறது அதிகார மையங்கள். மக்களுக்கான அறிவியல், மனிதமைய தொழில் நுட்பம் என்பவற்றை நிரூபிக்கப்படாத நம்பிக்கைகள் என்று சொல்வதன் வழியாக மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையற்ற பேராதிக்க அமைப்பாக அரசு செயல்படுகிறது. இங்கு பெருமுதலீட்டு அமைப்பின் கட்டளையை செயல்படுத்தும் கூலிப்படைகளாக மாறியுள்ளன அரசியல் கட்சிகளும், அறிவியல் நிறுவனங்களும். அரசு என்ற அமைப்பை இந்த கொடிய சக்திகள் தம் கைக்கருவியாக பயன்படுத்தி முன்னேற்றம், தேச வளம், மக்களுக்கான வாழ்க்கை வசதிகள் என்ற மயக்கமூட்டும் வாசகங்களை மக்கள் கருத்தியலாக மாற்ற முயற்சிக்கின்றன. உலகப் பெருமுதலீட்டு வன்முறையும் மறைபொருள் அறிவியலும் இணையும் பொழுது மக்களுக்கான உண்மைகள் அழிக்கப்படுகின்றன என்பது அணுவுலை அரசியலின் வழி நிரூபிக்கபட்டுள்ளது. மக்களுக்கான அறிவியலும் மக்கள் வழி அறிவியலும் இணையும் பொழுது அழிவுக்கான அறிவியல் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை அணுசக்திக்கெதிரரான மக்கள் போராட்டம் புலப்படுத்தியுள்ளது. மரபான அறிவு என்பது மட்டும் இந்தப் போராட்டத்திற்குப் பயன்படவில்லை, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அணுப்பிளவு, அணுக்கதிர் வீச்சு, சீசியம், பயன்முடிந்த எரிபொருளின் பேராபத்து, கடல்நீரில் கதிர் வீச்சு கலப்பதால் கடல் உயிர்கள் அழிவது, வெப்பநிலை மாற்றம் என அனைத்து தகவல்களும் தெளிவாகத் தெரிந்துள்ளது. அத்துடன் ரஷ்ய ஒப்பந்தத்தின் சதித்திட்டம், அணுவுலைவழி நடக்கும் ஊழல்கள், அரசியல் வாதிகளுக்கும் உலக முதலாளிகளுக்கும் இடையில் உள்ள சதிகார ஒப்பந்தங்கள் என்பவை பற்றியும் இவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். மரபும் மாற்று அறிவும் இணைந்து உருவாக்கும் மக்கள் அரசியலின் வடிவமாக இந்தப் போராட்டம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.

தேசம், தேசபக்தி, தேசியப் பெருவளர்ச்சி என்ற கருத்துருவங்களை அரசு இயந்திரம் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவது இந்தப் போராட்டத்தின் வழி மக்களுக்குத் தெரியவந்துள்ளது. தன் மக்களுக்காக பேச வேண்டிய, தன் மக்களைக் காக்க வேண்டிய ஒரு தேசிய அரசு உலக முதலீட்டு நிறுவனங்கள், வல்லாதிக்க நாட்டு சதித் திட்டங்கள் என்பவற்றை புனித சக்திகளாக ஏற்றுக் கொண்டு மக்களின் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு தயங்கவில்லை. அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் உலக சதித்திட்டங்களுக்கு எதிரான, உலக வல்லாதிக்கத்திற்கெதிரான போராட்ட சக்தியாக உள்ள நிலையில் இந்திய அரசு மக்களை ஒடுக்கி உலகமயமான அழிவுத்திட்டத்தைக் காப்பாற்றும் அழிவு சக்தியாக செயல்படுகிறது. இந்தத் தளத்தில் மக்கள் இந்தியக் குடிமை அரசியலின் இறையாண்மையைக் காப்பவர்களாகவும், இந்திய நிலங்களைக் காப்பவர்களாவும் முன்னிற்கும்போது அரசியல் குழுமம், அரசு செயலியந்திரம், அரசியல் அதிகாரம் பெற்ற குழுக்கள் அரசியல் நெறியை அழிக்கும், நவீன அரசியல் அறங்களை நசுக்கும் சக்திகளாக தம்மை வைத்துக் கொள்கின்றனர். மக்கள் நலத்திட்டங்கள் மக்களுடன் உரையாட மறுக்கும் திட்டங்களாக இருக்கமுடியாது, மக்களிடம் தன் அனைத்து உண்மைகளையும் சொல்ல அவை தயங்காது. தேசியப் பெருவளர்ச்சி என்ற பொய்யை மக்கள் தம் மண் மற்றும் நீரைக் காக்கும் போராட்டத்தின் வழி உடைத்துள்ளனர். அரசு, அரசியல் என்பவற்றின் மையம் மக்களா, இல்லை ஆதிக்க-முதலீட்டு சக்திகளா என்ற கேள்வியைச் சட்டம், நீதி, ஜனநாயக அரசியல் என்பவற்றின் முன் வைத்துள்ளனர். காவல்துறை, ஆயுதக்காவல்படை, நீதித்துறை, நிர்வாகத் துறைகள், ஊடக பரப்புரை நிறுவனங்கள், மைய-மாநில அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் எனப் பெரும் அணிவகுப்பு மக்கள் போராட்டத்திற்கும் மக்களின் உயிர்காக்கும் கோரிக்கைக்கும் எதிராகத் திரண்டுள்ளது. தற்போது இந்த மக்கள் தம் போராட்டத்தின் வழியாகத் தனித்த ஒரு சக்தியாக எதிர்காலத்திற்கான மாற்றுச் செய்தியைச் சொல்லும் ஆற்றலாகத் தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர்.

இதில் உள்ள பின்நவீன அரசியல் கவனத்திற்குரியது: உலகமயமான பெருந்தொழில் திட்டமோ, மாபெரும் வளர்ச்சித் திட்டமோ எதுவாக இருந்தாலும் இடம்சார்ந்து, நிலம் சார்ந்து, மண்ணின் மக்கள் சார்ந்து அமையவில்லையெனில் அது மக்கள் மீதான வன்முறையாக உள்ளது. அணைகள், தொழிற்சாலைகள், கனிம வளங்கள், வனவளம், தோட்டத் தொழில் எனப் பலவற்றிற்காக மக்கள் தம் மண்ணைவிட்டு வரலாறு நெடுக விரட்டப்பட்டுள்ளனர். காலனியத்தின் தொடக்கமும் நவீனத் தொழில்துறைகளின் தொடக்கமும் மக்கள் வாழ்வாதாரத்தை அழித்தே அமைந்தவை. அப்போதும் அவற்றின் அழிவுக்கெதிராக மக்கள் தம் போராட்டங்களை நடத்தியுள்ளனர், அவற்றில் பல போர்களின் வழியாக ஒடுக்கப்பட்டன. தற்போதும் காட்டை, நிலத்தை, நீரை, தம் கடற்புரங்களை, விளைநிலங்களைக் காக்க மக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். அவற்றின் வெற்றியும் தோல்வியும் பொருட்டல்ல நண்பர்களே, அவை மக்கள் என்ற கருத்தியலை மீண்டும் மீண்டும் சோதித்து உலகுக்கு அறிவிக்கும் பெரும் வரலாற்றுச் செயல்பாடுகள்.

அவ்வகையில் கூடங்குளம் அணுவுலைக்கெதிரான போராட்டம் தற்கால அரசியலில் மட்டுமின்றி எதிர்கால மக்கள் அரசியலுக்கும் பல தெளிவுகளை அளிக்க உள்ளது. அரசியல் சட்டம், குடிமைச் சமூகம், மக்களுக்கான அரசு என்பவற்றின் உண்மையான இடத்தையும் அவற்றிற்கான அறம்சார் நியாயங்களையும் பரிசோதித்து அறிவிக்கப்போகிற களமாக உள்ளது இடிந்தகரையில் அமைக்கப்பட்டுள்ள அந்த போராட்டப் பந்தல். இங்கிருந்து ஒலிக்கும் மக்களின் குரல்வழியே “போருக்கும் அழிவுக்கும்’ எதிராகப் போராட்டங்களை முன்வைக்கும் ‘பலமற்ற’ மக்களின் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள உலக அரசியல் காத்துக்கொண்டிருக்கிறது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ள அந்த கடற்கரை கிராமங்களின் ஒவ்வொரு தாயும் காத்திருப்பது போல இடிந்தகரை தேவாலயத்திற்குள் சிலுவை சுமப்பதும் கூட ஒரு போராட்டமே என்பதை உலகுக்கு உணர்த்திய மகனைத் தன் கையில் ஏந்தியபடி அன்னை மரியாளும் அச்சத்துடன் காத்திருக்கிறாள்.

(தமிழீழ   விடுதலையை  முன்வைத்து  நிகழும் மாணவர் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள், தீண்டாமைக்கெதிரான தமிழக அரசியல் போராட்டக்களம், மாவோயிச-மார்க்சிய-லெனினிய போராட்டங்கள் என அறியப்படும் மண்ணின் மக்கள் போராட்டங்கள் குறித்து அமையவுள்ளன இனி வரும் கட்டுரைகள்)

– பிரேம்