பெண்ணிய வாசிப்பும் ஆண்வழிக் கதைகளும் – பிரேம்

பெண்ணிய வாசிப்பும் ஆண்வழிக் கதைகளும்
பிரேம்

பெண்ணியத்திற்குப் பின்னான ஆண் உளவியல்

பெண்ணியக் கோட்பாடுகளும் பெண்ணிய அரசியலும் உருவாகி, வடிவம் பெற்று உலக அரசியலில் தம் பங்கையும் அழுத்தத்தையும் செலுத்தத் தொடங்கிய பின்பு ஆண்மை, ஆண்நிலை, ஆண் அதிகாரம் என்பவற்றின் கோட்பாட்டு அடிப்படைகள் தகர்க்கப்பட்டன. இவ்வகை ஆண்வழிக் கோட்பாடுகள் உறுதி செய்யப்பட்ட உண்மைகள், தெய்வீகக் கட்டளைகள், இயற்கை விதிகள் என்பவற்றின் மீது கட்டப்பட்டதாக  நம்பப்பட்டன.  ஆனால் அவை ஆண்மையத் தன்மை கொண்ட அறிதல் முறைகளால் உருவாக்கப்பட்டவை என்பதை பெண்ணியம் தெளிவுபடுத்தியது. உலக வரலாற்றில் அதுவரை இருந்த அறிதல் முறைகள் அனைத்தும் இரு அடிப்படை எதிர்மைகள் மீது கட்டப்பட்டவை, அதில் பெண் புற எதிரிடையாக வைக்கப்பட்டு ஆண்நிலை தன்னை வரையறுத்துக் கொள்ளவும் தனது உளவியல் வடிவங்களை உருவாக்கிக் கொள்ளவும் பயன்படும் ஒப்பீட்டு நிலையாக இடப்படுத்தப்பட்டது என்பது விளக்கப்பட்டது.

அதாவது வேட்கை கொள்ளும் உரிமை ஆணுக்கும் விழையப்படும் பொருளாக இருக்க வேண்டிய நிலை பெண்ணுக்கும் என வரையறை செய்யப்பட்டிருந்தது. இதனை இன்னும் தெளிவாக வாழ்தல், வாழ்வைத் துய்த்தல் என்பவை ஆண்நிலைச் செயல் என்றால் வாழ்வதற்குப் பயன்படக்கூடிய, துய்த்தலுக்கு உரிய பொருளாக பெண்நிலை வைக்கப்பட்டிருந்தது.

பெண் வாழ்வைத் தரும் சக்தி, பெண் வாழ்வின் ஆதாரம் என்ற சொல்லாடலில் பெண் முதன்மை ஒப்புக்கொள்ளப்பட்டது போன்ற தோற்றம் இருந்தாலும் தன்னை மையமாக வைத்த ஆண்நிலை தன்னை வாழும் உயிராகவும் பெண்ணை வாழ்வு தரும் புறமாகவும் வரையறுத்துள்ளது தெரியவரும். அடிமைகள், கால்நடைகள், மனைவி என்ற மூன்று உடைமைகள் ஒரு ஆணுக்கு உரியவை என்று வரையறுத்த அரிஸ்டாடிலிய அரசியல் தொடங்கி ‘ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே மனிதன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே’ என்ற மரபான ஞானம் வழியாக,  ‘வீடுவரை மனைவி, வீதிவரை உறவு, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?’ என்ற நவீனக் கண்டுபிடிப்பு வரை பிறப்பு, இறப்பு, வாழ்வு அனைத்திலும் மையமாக வைக்கப்பட்டுள்ள ஆண் என்னும் வரலாற்றுக் கட்டமைப்பு பெண்ணியத்தின் அடிப்படையான கேள்விகளின் முன் சிதைந்து போனது.

உலகம், வரலாறு, சமூகம், நன்மை-தீமை அனைத்தும் ஆணை மையமாக வைத்து ஆணுக்குரியதாக கட்டமைக்கப்பட்டது, அதற்குள்ளே  பெண்ணுக்கு ‘இடம்’ அளிக்கப்பட்டது என்பதுடன் அதற்கு அப்பால் பெண்ணுக்கு இடமில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. பெண்மையின் உருவாக்கங்களான குடும்பம், குலம், வேளாண்மை போன்றவற்றின் அடிப்படைகளின் மீது கட்டப்பட்ட சமூக அமைப்புகள், பண்பாடுகள், இனவாழ்க்கை அனைத்தும் ஆண்மையத் தன்மை கொண்ட கருத்துருவங்களாலும் கோட்பாடுகளாலும் உருமாற்றம் பெற்றதன் வரலாற்றை, பெண்ணியம் மறுவிளக்கம் செய்தபோது ஆண்நிலை அறிவுருவாக்கத்தின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டன.

பெண்ணிய அரசியலால் மரபான ஆண்மையம் தகர்ந்த நிலையில் ஆண்நிலையை மறுஉறுதி செய்ய அல்லது ஆண் ஆதிக்கத்தை மற்றொரு வகையில் நிலைப்படுத்த  நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஆண்வயப்பட்ட அறிவால் ஆண்மொழிக் கூறுகளால் கட்டமைக்கப்பட்டன. இதன் விளைவாக இதுவரையிலான மரபுகள், புராதனப் புனைவுகள், தொன்மையான ஆண்மொழிக் கட்டமைப்புகளோடு மட்டுமின்றி நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களுடனும் தனது போராட்டத்தைத் தொடரவேண்டிய நிலை பெண்ணிய அரசியலுக்கு உருவானது. அதாவது பெண்வழி அறிவியலை தனித்து உருவாக்க வேண்டிய தேவை உருவானது.

பெண் நிலையின் தன்னடையாளத்தை மறுக்கும் ஆண்மைய வரையறைகளும் பொருளுரைப்புகளும் உருவாக்கி இருந்த கட்டமைப்பிற்குள் அடைப்பட்டுக் கிடந்த பெண் இருப்பு தனக்கான அறிவை, அறிதல் முறையை உருவாக்கிக் கொண்டபோது அதுவரை பொதுச் சமநிலை உடையதாக தோற்றமளித்து வந்த ஆண் அமைப்புகளின் வன்முறைகள் வெளிப்படையாக்கப்பட்டன. ஆண் அறிவு பெண்ணையும் உள்ளடக்கியது, ஆண் வரலாறு பெண்ணுக்குமானது, ஆண் உலகியலே பெண்ணுக்கும் உரியது என்பதில் உள்ள பொய்மை புலப்படுத்தப்பட்டது. பெண்அமைப்பு, ஆண்அமைப்பு இரண்டுக்கும் இடையிலான  இணைஇயைபு, எதிர்முரண் உறவுகளால் அமைவதுதான் சமூக நம்பிக்கைகள் இவற்றில் பெண்ணறிவை  உருவழித்தல் அல்லது செயலிழக்கச் செய்தல் என்பதன் வழியாக  ஆண்மைய ‘மெய்மைகள்’ அதிகாரநிலை பெறுகின்றன. அதனால் நடுநிலை கொண்ட, பொதுச்சமநிலை கொண்ட அறிவு, மெய்மை என எதுவும் இருக்கமுடியாது என்பதை நிறுவிக் காட்டியது பெண்ணிய அறிவு.

நவீன அரசியலும் ஆண் நிலையின் குற்றவியலும்

பெண்ணிய அறிவுருவாக்கம் தனது முதல் தாக்குதலை நிறுவப்பட்ட மெய்மைகளைத் தகர்ப்பதிலிருந்து தொடங்கியபோது முழுமை பெற்ற ஆண், புனித உரிமை பெற்ற ஆண் என்னும் அடையாளம் சிதைந்து அறிவுக் குறைபாடு கொண்ட குற்றத்தன்மையுடைய நவீன ஆண்நிலை உருவானது.  அதாவது ஆணாக இருத்தலின் வன்முறை, ஆண்மையின் அறமற்ற மேலாதிக்கம் என்பவை இதுவரை மரபான அறிவால், விதிமுறைகளால் இயற்கையானவைகளாக, இறை அனுமதி பெற்றவைகளாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலை தகர்ந்து அவை குற்றங்கள் என்பதும் பொய்களின் மீது கட்டப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஆண் கொடுங்கோன்மை இதனை ஏற்பதில்லை, இந்நிலையில் அது  தனது அழித்தொழிப்பு வன்முறையை வெளிப்படையாக முன்வைத்து அச்சுறுத்துவதன் மூலம் தன் ஆண்நிலையை நிறுவ முயற்சி செய்கிறது. அறிவு, அறம் பற்றிய கேள்விகளை மறுத்து அடக்குமுறை, வன்கொடுமை வழியாகப் பெண்மையை பணிய வைக்க அது முனைகிறது.  ஆனால் மார்க்சிய-பெண்ணிய மாற்று  விடுதலைக் கருத்தியல்களால் மாற்றியமைக்கப்பட்ட  நவீன உலக அமைப்பு, நவீன அரசியல், நவீன தேசியம் என்ற வரலாற்று மறுகட்டமைப்புகள் இச்செயல்பாடுகளை குற்றமாக வரையறுத்து கட்டுப்படுத்த முயல்கின்றன. இந்த வரலாற்று அழுத்தமே இன்றுள்ள  மனித உரிமைகள், பொதுநீதி, சமத்துவம், வாழ்வுரிமை என்பவற்றைக் கோட்பாட்டு வகையிலும் கொள்கை வடிவிலும் அடிப்படை வழிகாட்டு நெறிகளாக நிறுவி உள்ளது.

இந்நிலையில் ஆண்மையக் கட்டமைப்பை தன் உளவியல்பில் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணும் நவீன அரசியல் மற்றும் தேசிய நெறிகளின் முன் குற்றவாளியாகவும், உளவியல் கொடுநோய் கொண்டவனாகவும் மாறுகிறான். ஆனால் அதனை மறைத்துக் கொண்டு நவீன அமைப்புகளின் தலைமைக்கான உரிமையைக் கோருபவனாகவும் தன்னை வடிவமைத்துக் கொள்கிறான். பொதுவெளிகளில் இயங்கும் பெண்கள்மீது இந்த உருமறைந்த ஆண் உளவியல் மிகுந்த வெறுப்பைக் கொண்டிருக்கும். அறிவு, அரசியல் சார்ந்த பெண் அடையாளத்தை இந்த ஆண்நிலை ஏற்பதில்லை. நவீன ஊடகங்கள் வழியாக ஆண் கற்பனைகள் திணிந்த பெண் அடையாளங்களை அழகியல், மென்னுணர்வு என்ற பெயர்களில் உருவாக்கித் தர அது தொடர்ந்து முயற்சி செய்கிறது. இந்த ஆண் புனைவு திணிக்கப்பட்ட பெண்ணிலை உருவாக்கம் வரலாற்றில் வெவ்வேறு வடிவங்களில் நடந்து வந்துள்ளது. இதனைப் பெண்மை, பெண்ணிலை முழுமையாக வெறுத்து விடுவதும் இல்லை, முழுமையாக ஏற்றுக் கொள்வதும் இல்லை. இந்த உள்முரண் ஆண் நிலைக்கு அச்சத்தையும், உளவியல் தடுமாற்றத்தையும் தொடர்ந்து உருவாக்குவது. நவீன ஆண்நிலை உளவியலில் இந்தச் சிதைவும், பிளவும் பல்வேறு வடிவில் ஆழப் படிந்துள்ளன. பெண் மீது மனைவி என்ற உரிமையுடன் கொடுவன்முறையைச் செலுத்தும் ஒரு ஆண் தன்னை அப்பெண் கொல்வதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் இறுக்கமான மௌனம் அல்லது எரிச்சலான முணகலுடன் வாழ்நாள் முழுக்க தனக்கு அருகில் இருந்து கொண்டிருப்பது குறித்த முரண்நிலையால் உருவாகும் உளவியல் சிக்கல் நவீன குடும்பம்சார் உளநோய்களில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. இதனைக் கையாள நுகர்பொருள், காட்சி ஊடகம் சார்ந்த உத்திகள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

நவீன இந்திய அரசியல் தீண்டாமையை தண்டனைக்குரிய குற்றம் என வரையறை செய்த பின் தீண்டாமையை மன அளவிலும் கருத்தளவிலும் நியாயப்படுத்தும் ஒருவர் குற்ற உளவியல் கொண்டவராக இருப்பது போல பெண் நிலைக்கான அரசியல் சமத்துவம், சமூக உரிமைகள், தன்னடையாள உரிமைகள் கோட்பாட்டு அளவில் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பில் அதனை மறுக்கும் யாரும் அரசியல் குற்றவாளியாக செயல்படுகிறார். மரபான இந்திய ஆண் மனம், இந்திய அடையாளம் என்பவை இதனால் நவீன அரசியலை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் உருவாகிறது.

நவீன தொழில்நுட்பம், அறிவியல் கருவிகள், நுகர்பொருள், சந்தைப் பொருளாதாரம், உழைப்பு மறுக்கும் நவீனக் கல்வி என அனைத்தையும் பேராசையுடன் ஏற்றுக் கொள்ளும் ஆண்மைய இந்திய மனம் நவீன அரசியல், நவீன அறிதல்முறை, நவீன அறங்கள், நவீன உளவியல்பு என்பவற்றை கடுமையாக எதிர்க்கும்.

தீண்டாமை, பெண்ணடிமை நிலை என்ற இரண்டையும் ஏற்றுக் கொண்ட அமைப்பும் அரசும் இந்திய ஆண்மைய அரசியலின் பெருவிருப்பமாக உள்ளது.  பாட்டாளி மக்கள் கட்சி, சமாஜ்வாதி கட்சி, பாரதிய ஜனதா கட்சி எனப் பல பெயர்களைக் கொண்டிருந்தாலும் இந்தியப் புராதன ஆண் உளவியலின் செயல் களங்களாக இவை அமைந்துவிடுகின்றன. ஆண்மைய, அடிமைச் சமூக அமைப்பை உறுதிப்படுத்த இவை தொடர்ந்து முயன்றபடியே உள்ளன.

முற்போக்கு அரசியல், மார்க்சிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், புரட்சிகர அரசியல் என்ற தளங்களில் இந்த நிலை வேறுவகையான சிக்கலை அடைகிறது. பெண், பெண்மை பற்றிய இந்திய ஆண்மைய – ஆணாதிக்க உளவியலுக்கும் பால் சமநிலை, இருபால்நிலை ஏற்ற மாற்று அரசியல் உளவியலுக்கும் இடையில் நிகழும் போராட்டமாக அது மாறுகிறது. பெண்வழி அமைந்த மாற்று அரசியலை அது மறைக்கவும் மறுக்கவும் முயல்கிறது. போராட்டம், போர்முறை அரசியல் சொல்லாடல்கள் வழியாக இந்த அடிப்படை முரணை வலுவற்றதாகக் காட்ட அது முயல்கிறது. பெண்ணிய அரசியல் பற்றிய தன் இரட்டை நிலைப்பாட்டை எதிர்காலம் சார்ந்த சொல்லாடல் வழியாக மறைக்க முயல்கிறது.

இந்திய ஆண் உளவியலின் குற்றவியல் தன்மையும் பிளவுபட்ட நிலையும் இவ்வகைத் தளங்களில்தான் மையம் கொண்டுள்ளன. நவீன அமைப்பில் இருந்தபடி புராதன வன்முறையை நியாயப்படுத்துவதற்கான தொடர் போராட்டத்தால் அமைந்த உளவியல்பு, அல்லது நவீன பால் சமநிலையை ஏற்கப் பழகாத உளவியல்பு. பெண்ணிய அரசியலுக்குப் பின் உருவான அறிவுருவாக்க அமைப்புகளுக்கு எதிரான குற்ற அழுத்தமும் ஆண் மேலாதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதற்கு எதிரான வஞ்சமும் இதில் மையமாக அமைந்து விடுகின்றன. நவீன  இந்தியச்  சொல்லாடல்கள், கதையாடல்கள், காட்சிக் கதைகள் அனைத்திலும் இந்தச் சிதைவுற்ற, குற்ற அழுத்தம் கொண்ட ஆண் உளவியல் பெருகிக் கிடக்கிறது. இன்றைய குற்றம்சார் சமூக-தனிமனித ஆண் உளவியலின் பல்வேறு வடிவங்களாக இவை மறைந்தும் வெளிப்பட்டும் பெருகியபடி உள்ளன.

இன்றைய ஆண் உளவியலின் அடிப்படையாக அமைந்துள்ள இரு கூறுகளை இவ்வாறு அடையாளம் காணமுடியும். ஒன்று: பெண்ணியம் மறுக்கும் ஆண்மைய குற்றயியல்பு. மற்றது: பெண்ணியக் கேள்விகள் முன் தன் வரலாற்று  மையம் அழிந்து சிதைவுற்றதால் வன்மம் கொண்ட ஆண் உளவியல்பு.

பெண்மையின் பலிச்சடங்கு

ஆண்மையத் தன்மை கொண்ட வரலாறுகளும் உலகியல் கோட்பாடுகளும் தம் அடிப்படையிலேயே பொய்மையை, வன்முறையைக் கொண்டவை என்பது விளக்கப்பட்டு விட்ட பின் ஆண்மையத் தன்மை கொண்ட அமைப்புகள், ஆணாதிக்க நிறுவனங்கள், ஆண்நிலை அரசியல், ஆண் உளவியல் அனைத்தும் பொது அறம் பற்றிப் பேசுவதற்கான அடிப்படை உரிமை அற்றவையாகி விடுகின்றன.  அதாவது இவை முன்வைக்கும் அறம், நீதி, நியாயம், ஒழுக்கம், அன்பு, மனித உறவுகள், அழகியல், கலை உணர்வு, ஆன்மிகம், காதல் என்பதான கருத்தமைவுகள் பொருளற்றவையாக, அடிமை உளவியல்பை நியாயப்படுத்துவதற்கான தந்திரச் சொல்லாடல்களாக மீந்து போகின்றன.

மனித மதிப்பீடுகளை பொருளுடையனவாக, செயல்பாடு கொண்டவையாக மாற்றுவதற்கான பெண்ணிய அரசியல் செயல்பாடு ஆண்மையத்தைத் தகர்க்கும் தொடர் போராட்டத்தினூடாக நிகழ்ந்து கொண்டிருப்பது. இன்றுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் உள்ள உறவுகள், முரண்கள், மோதல்கள், வன்முறைகள், ஒப்பந்தங்கள், இணக்கங்கள் அனைத்திலும் இந்தப் போராட்ட அரசியல் செயல்பட்டபடி உள்ளது. உலக அளவிலான இந்தப் பால்நிலை முரண்கள் தனிமனித நிலையைக் கடந்த வரலாற்று உருவகத் தன்மையையும், அரசியல் குறியீட்டுத் தன்மையையும் கொண்டவை.

திரைகளில் பெருகி திசையெங்கும் பரவும் ஆண்-பெண் உருவங்கள் தொடங்கி நவீன வாய்மொழி மரபு, இலக்கிய உருவாக்கங்கள் வரை பெண்ணியத்திற்கு முன் இருந்தது போன்ற ஆண்-பெண் உறவமைப்பை மறுஉறுதி செய்வதற்கு ஏற்ற நினைவிலி நிலையை உருவாக்கும் மொழிச் செயல்பாடுகளாக மாறுகின்றன. முரண்படும் பெண்ணைப் பலியிடல் என்ற புராதனச் சடங்கின் குறியீட்டுப் பெருக்கமாக நவீன ஊடக மொழிகளில் அதிகம் கையாளப்படும் ஆண்-பெண் உறவமைப்பு முறைகள் அமைந்துள்ளன.

பால்சார் உளவியல்பில் ஆணை எதிர்மையமாக வைத்துப் பெண்ணும், பெண்ணை எதிர்மையமாக வைத்து ஆணும் இயங்குவது மொழிப்புலன் இயல்பு. அதாவது இணையமைவுகள் வழி உருவாகும் வேறுபாட்டு அடையாளம். ஆண்மைய உளவியலின் வன்முறை இதனை வேறு வகையாகக் கையாள்கிறது. தானே தன் குறியமைப்பால் உருவாக்கும் பெண்ணைத் தனக்கு முன்னுருவமாக வைத்துத் தனக்கான எதிர்மையைக் கட்டமைப்பது. அதாவது ஆண் மொழியால், கற்பனையால் உருவாக்கப்பட்ட ஆண்வயப்பட்ட பெண்மை. இந்நிலையில் பெண் தன்னை அடையாளப்படுத்தும் முயற்சியில் இருவகைப் பொய்யுருவங்களை எதிர்கொள்ள நேர்கிறது.

ஆண் உருவாக்கி பெண்ணுக்கு அளித்த தன்னிலை, ஆண் தனக்கு உருவாக்கிக் கொண்ட தன்னிலை இரண்டுமே ஆண் புனைவின், கற்பனையின் கட்டமைப்பு. இந்தத் தன்உருவமற்ற நிலையின் அறிதலுக்குப் பின் பெண்நிலையால் உருவாக்கப்படும் முரண் அடையாளமே பெண் அடையாளமாக அமைகிறது. நவீன பெண்ணிய அடையாளத்தில் பிரக்ஞை பூர்வமாக நிகழும் இச்செயல்பாடு வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் உளவியல்பின் உள்ளீடாக இருந்து வந்துள்ளது. முரண்படும் பெண்ணைப் பலியிடும் ஆண் வழிச் சடங்கிற்கு எதிர்நிலையில் ஆணால் உருவாக்கித் தரப்பட்ட பெண்மையை பெண் தன் தளத்தில் பலியிடும் குறியியல் சடங்கு பல்வேறு கட்டங்களில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.

பெண்நிலை என்பது தன்னைப் பொருள் நிலையில் இருந்து விடுவித்து உயிர் உள்ள, தன்னடையாளம் பெற்ற, வேட்கை கொள்ளும் உரிமைகொண்ட வாழ்வியக்க நிலையாக வைத்துக் கொள்வதற்கான தொடர் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் இந்தப் பலியிடல் சடங்கு நிகழ்ந்தபடி உள்ளது.

மரபால் உருவாக்கப்பட்டதும் மொழியால் கட்டமைக்கப்பட்டதுமான தனது தன்னிலையை முன்னிறுத்திச் சிந்திக்கும் பெண்ணுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சோதனை வைக்கப்படுகிறது. தன்மேல் சுமத்தப்பட்ட இப் பெண்ணடையாளத்தை ஏற்றுக் கொள்வது அல்லது பலியிடுவது, தான் உருவாக்க நினைக்கும் தன்னடையாளத்தை உறுதிப்படுத்துவது அல்லது பலியிடுவது என இருமுனைப்பட்ட போராட்டமாக அது அமைகிறது.

வரலாறு நெடுகப் பெண்மை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறியீட்டுப் பலியை நிகழ்த்தும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டுப் பலியைச் சில சூழல்களில்  ஒத்திப்போடுவதன் வழியாகவும் சில சூழல்களில் ஒரு நாடக நிகழ்வாக மாற்றுவதன் வழியாகவும் தன் போராட்டக் களத்தை விரிவுபடுத்திக்கொள்கிறது. பெண்மை இவ்வகையான நாடக உருவாக மாறுவதன் வழியாக உடல் அழிவின் செயல்பாட்டை உருமாற்றங்கள், உருமறைப்புகள், உருத்திரிபுகள் என்ற வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முயல்கிறது. இந்த உருமாற்ற உத்திகள் வழியாகத் தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பித்துக் கொள்ளும் பெண்மைக்கு இதுவே உடலையும், உயிர்ப்பையும் புதிதாக்கிக் கொள்ளும் சடங்கின் பகுதியாகவும் மாறிவிடுகிறது.

பெண்மையின் இந்நாடகச் சடங்குவெளியில் ஒரு கட்டம் வரை பங்குகொள்ளும் ஆண்மை அது பெருகும் போது அச்சமடைந்து பெண் உடலை உண்மையான பலியிடலை நோக்கி நகர்த்த முயற்சிக்கிறது. பெண்மை இந்த முற்றுபெற்ற நிலையை ஒத்திப் போட விரும்புகிறது. ஏனென்றால் பெண்மை தன்னை அழித்துக் கொள்ளுதல் மனித இனம் மற்றும் உயிர் வாழ்தலின் களங்கள் அனைத்தையும் அழிப்பதாக அமையும். இதன் இருமைநிலை பெண்மையின் உளவியலில் தண்டனையாக படிந்து விடக்கூடியது.

இனவாழ்வைத் தொடங்கிவைத்த பெண்மை தனது தாய்மை என்ற உயிரியல் உருமாற்றத்தின் வழி வாழ்வை அளிப்பதற்கும் வாழ்வை அழிப்பதற்கும் உரிமை உடையதாக உள்ளது. ஆண்களால், ஆண் தலைமையால் கையாள முடியாத, கட்டுப்படுத்த முடியாத இந்தப் உயிரளித்தல் – உயிர் நீக்கல் உரிமை (பால் மற்றும் நஞ்சு என்னும் எதிர்மை)  பெண்மை-தாய்மை என்ற நிலைக்கு மட்டும் உரியது. பெண்மை இந்த இடத்தில் அறியப்படாத அச்சமூட்டும் வடிவத்தைப் பெறுகிறது. பெண்மை மீதான இந்த அச்சம் ஆண்மையக் கண்காணிப்பு கருவிகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. அதாவது அச்சமுற்ற ஆண்நிலையின் நோய்க்கூறாக ஆணாதிக்க உளவியல் அமைகிறது. பெண்மையை அடிமைப்படுத்த முடியாத களமான தாய்மையை ‘தனக்கான தாய்மையாக’ தெய்வநிலை கொண்ட தாய்மையாக கட்டமைத்துக் கொள்வது ஆணுக்கு உயிர்வாழும் உத்திகளில் ஒன்றாக மற்றுமின்றி பலவித வாழ்வியல் இன்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உத்தியாகவும் அமைந்துவிடுகிறது.

தாய்மை, பாசம், காதல், தியாகம், தெய்வீகம் போன்ற பல உருவக நிலைகளில் ஆண்மையத் தன்மையின் இருமைநிலை (அச்சம்-ஆதிக்கம்) செயல்பட்டபடி உள்ளது, பெண்மை தன் பாத்திரமேற்பை,  தன் நாடகச் சடங்குநிலையை எப்பொழுதெல்லாம் கைவிட்டு தன் உடல்-உயிர்வாழ்வு என்ற வடிவத்தைப் பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்மையின் செயல்தன்மையற்ற வன்முறை மேலெழுந்து வரும்.

ஆண் ஒழுங்கு, ஆண் வரலாறு, ஆண்மையக் கட்டமைப்புகள் இந்த வெறும் பெண்மை நிலையை ஏற்பது இல்லை, அல்லது ஏற்பதற்கான அறிவு அதற்கு இல்லை. தனித்த  பெண்மை நிலை என்பது மட்டுமல்ல தனித்த ஆண்மை நிலை  என்பதும் கூட பண்பாடு-வரலாறு- இனத்  தளங்களில் சாத்தியமில்லை என்ற போதும் பெண்மை தன்னை ஆண்மொழி கடந்த உருவக நிலைகளுக்கு நகர்த்திக் கொள்வது சாத்தியமான ஒன்று. இந்த ஆண்மொழி கடந்த பெண்மையின் உருவக நிலைகளை உளப்பிறழ்வாக, பேய்த்தன்மையாக, கொடுந்தாய்மை நிலையாக, தீராவேட்கை கொண்ட துர் தேவதை உருவங்களாக, அதாவது குறியீட்டுநிலை கடந்த குறியமைவுகளாக விளக்க முயல்வது ஆண்மொழியின் செயல்பாடுகளில் ஒன்று. இந்தக் குறியமைவு முரண்பாடுகளும் பல சமயங்களில் பலியிடல்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

இந்தத் தொன்மையான பலிச்சடங்கிற்கும் பெண்மையின் நாடக வெளிக்கும் இடையில் நிகழும் ஓயாத போராட்டத்தை உலகின் அத்தனைக் கதைகளும் பதிவு செய்தபடி உள்ளன. கதைமொழி, தொன்மமொழி, புனைவுமொழி, நிகழ்வுமொழி, திரைமொழி, நாடகமொழி அனைத்திற்குள்ளும் இந்தப் போராட்டத்தின், முரணின் பதிவுகள் பெருகிக் கிடக்கின்றன.

அவற்றை இன்றைய பெண்ணிய, பாலரசியல் கோட்பாடுகளின் தளத்தில் வைத்து வாசிப்பதன் ஊடாக இருபால் நிலைகொண்ட கதைமொழியின் சாத்தியங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆண்மையின் அச்சமும் கொடுங்கோன்மையும் கரைவதும் பெருகுவதும் பெண்மையின் நாடகத்தில் அது ஏற்கும் பாத்திரத்தைப் பொறுத்தே அமைகிறது என்பதும் பெண்ணிய அரசியல் ஆண்மைய அமைப்புகளை தகர்ப்பதன் வழியாக எந்தவித மாற்றுகளை உருவாக்க முயல்கிறது என்பதும் இந்த வாசிப்பினூடாகப் புரிய வரும். ஆண்மை-ஆண்நிலை-ஆண்மையம்- ஆண்தன்மை என்பவற்றின் இடம் அழிந்த, இருபால்நிலை மற்றும் பரிமாற்றப் பால்நிலை கொண்ட அமைப்பு குறித்து பெண்ணியம் முன்வைக்கும் கருத்துக்களின் தேவை பற்றிய உரையாடலாகவும் இந்த வாசிப்பு அமையவுள்ளது.

பெண்மை பற்றிய ஆண்வழிக் கதைகளில் படிந்துள்ள இருண்மைகள், இருமைகளில்  இருந்து இந்த வாசிப்பைத் தொடங்கலாம். பிராய்டிய உளவியல் பகுப்புமுறை பெண்களுக்கான உளவியல் நோய் மற்றும் உளவியல் சிக்கல் பற்றிய ‘ஆண்குறி நீக்க அச்சம் மற்றும் ஆண்குறி பொறாமை’ (Castration Complex and Penis Envy)  என்ற ஒரு கருத்தமைவை முன் வைத்துள்ளது (Three Essays on The Theory of Sexuality,1905).   நவீன உளப்பகுப்பாய்வில்  கையாளப்படும் இக் கருதுகோள் பொதுவான மருத்துவ அறிவியல் அடிப்படை கொண்டது போன்ற தோற்றம் தரலாம். ஆனால் இதன் ஆண்மையத் தன்மையும் ஆண்வழி பொருள்படுத்தலும் பெண்ணிய வாசிப்பில் மிக எளிதாக புரிய வரும். ஆண்குறி என்பது மையமானது, குறிநீக்கம் வழி உருவாவது பெண் உடல், அதனால் பெண் உடலானது குறைபாடு கொண்ட ஆண் உடல் (ஊனமுற்ற ஆண் உடல்) என்ற புனைவை இது முன் வைக்கிறது. ஆண்மை இழப்புதான் பெண்நிலை என்ற பொய்யை அடிப்படையாகக் கொண்டது இக்கருதுகோள். குறைபாடு கொண்ட நிலை எனப் பெண்நிலையை வரையறை செய்து விட்டபின் ஆண் மேலாதிக்கமும், பெண் அடிமைநிலையும் இயற்கையான, உயிரியல் அடிப்படை கொண்ட மெய்மைகளாக மாறிவிடுகின்றன. நவீன கருதுகோள் என்ற தோற்றத்தில் ஒரு புராதனப் புனைவு மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. இது ஆண்வழிக் கதைகளால் அமைந்த பெண்மை பற்றிய  உருவகம்.  பெண்மையை தன் பார்வையில் விளக்கி வரையறுக்க முனையும் ஆண்வழிச் சொல்லாடலின் பல்வேறு உத்திகளில் ஒன்று என பெண்ணியம் இதனை அடையாளம் காட்டுகிறது.

தொன்மங்கள், காவியங்கள், செவ்வியல் கதைகள், இலக்கியப் புனைவுகள், நாடகங்கள்  எனப் பலவகைக் கதையாடல்களில் இடம் பெற்றுள்ள பெண்மை பற்றிய ஆண்வழிக் கதையாடல்களை இவ்வகை பெண்ணியத் தளத்தில் வாசிப்பதன் ஊடாகப் பாலரசியல், பால்நிலை உளவியல் சார்ந்த புதிய புரிதல்களை நாம் பெறமுடியும். இத்தொடரில் இனி வர இருக்கும் கட்டுரைகள் அவ்வகை வாசிப்புகளைக் கொண்டவை.

(குறிப்பு: இ.முத்தையா தமிழ்ச் சிந்தனை மரபில் பெண்மை-ஆண்மை பற்றிய கருத்தாக்கங்கள் குறித்து எழுதும் கட்டுரைகளும், இத்தொடரில் நான் எழுதி வருபவையும் இணையான உரையாடல்களாக அமைய உள்ளன.)