பன்மெய்களும் பன்மைகளும் பேசப்பட
பன்மெய் ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்டு அறியும் படிநிலை அமைப்பைக் காப்பதற்கான பத்திரிகை அல்ல. பல்வேறு போக்குகளும் நோக்குகளும் பாய்ந்தும் வெட்டியும் செல்லும் பன்முகப்பட்ட குரல்களின் உரையாடல் வெளி.
உண்மைகள் பலவாக உள்ளன என்பதைச் சொல்வது மட்டுமல்ல, உண்மைக்கு உள்ள பன்முகத்தன்மையையும் உண்மைகள் உருவாக்கப்படுவதன் பன்மையான வழிமுறைகளையும் உரையாடலுக்கு உட்படுத்துவது இதன் நோக்கம்.
அறிவின் பல்வேறு சாத்தியங்களை முடக்கி தனக்கானதாகக் கையகப்படுத்திக் கொண்டுள்ள ஆதிக்கத் தன்மை கொண்ட பால், நிறம், இனம், வர்க்கம், தேசியம், சர்வதேசியம், பிராந்தியம், சாதி, மதம் என்பனவற்றிலிருந்து அறிவையும் சிந்தனையையும் விடுவிப்பதற்கான பன்முகப்பட்ட உரையாடல்களை உருவாக்குவதற்கான மற்றொரு தளமே பன்மெய்.
தனது அறிவை மட்டும் மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் மற்றவற்றின் மீது வன்முறையை செலுத்துவதன் வரலாற்றை நினைவு கொண்டபடி ஒவ்வொரு அறிவும் தன்னை விளக்குவதற்கான தேவையை அடையாளம் காண இந்த மொழிவெளியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விடுதலை நோக்கிய முனைப்பும் விடுதலைக் கான மொழியும் சாத்தியப்படும் தளம்தான் மாற்று அறிவு என ஏற்றுக் கொண்டவர்களுக்கிடையிலான உரையாடலாகவே இவை அமையும் என்பதை நாம் மறைக்கத் தேவையில்லை. முரண்களுக்கு இடையில் உள்ள போராட்டத்தை ஏற்றுக்கொள்வதுடன் வேறுபாடுகளுக்கு இடையில் உரையாடல்களும், இணக்கமும், இணையான பரிமாற்றமும் அமையும் என்பது பன்மை நவீனத்துவத்தின் பொதுப்புரிதலாக அமைவதால் மாறுபட்ட கேள்விகளுடன் நம் காலத்திற்கான அரசியலை அணுக நாம் தயங்கத் தேவையில்லை.
தலித் அரசியல், பெண்ணிய அரசியல், சிறுபான்மை அரசியல், பன்மை அடையாள அரசியல், சூழலியல் அரசியல் என்பவற்றை ஏற்ற விடுதலைக் கருத்தியலின் தேவையைத் தொடர்ந்து நாம் பேச இருக்கிறோம்.
அடக்குமுறைக்கு எத்தனை வடிவங்கள் உள்ளனவோ அதைப்போல விடுதலைக்கும் பல்வேறு வடிவங்கள் உள்ளன, விடுதலைக்கான அறிவும் மொழியும் வேறுபட்ட வடிவங்களை, இயக்க முறைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்கும் போது ‘பன்மெய்’ அரசியலின் தளங்கள் விரிவடைகின்றன.
உலக முதலாளியம், போர்வெறி அறிவியல், புவிச்சூழல் அழிக்கும் நுகர்வுப் பொருளாதாரம், இன, மொழி, மத தன்னாட்சி உரிமைகளை மறுக்கும் உலக வல்லாண்மை, அச்சுறுத்தும் ஆயதமைய அரசியல் என நம் காலத்தின் பெருங்கேடுகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி அவற்றை எதிர்த்து உயிர்வாழ்ச் சூழலுக்கான அரசியல் சொல்லாடல்களை, செயல்பாடுகளை உருவாக்க வேண்டியது விடுதலைக்கான அறிவுசார் செயல் பாட்டின் தேவையாக உள்ளது.
அத் தேவையை ஏற்ற விடுதலைக் கருத்தியல்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட பார்வைகளை, விளக்க முறைகளை, தீர்வுகளைக் கொண்டிருந்தாலும் தமக்குள் உரையாடலை, ஒப்பீட்டு அறிதலை அனுமதித்து வளர்த்துக் கொள்வதன் வழியாகவே இனி தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். இவை நீண்ட காலத் திட்டங்களையும் நீடித்த அரசியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியது என்பதை ஏற்றுக் கொள்வதன் வழியாகப் பன்மெய் தனது எளிய பக்கங்களை அதற்கு வழங்க இருக்கிறது.
விடுதலைக் கருத்தியல்களை ஏற்கும் அனைவரும் உரையாடலைத் தொடங்கவும், தொடரவும், இடையீடு செய்யவும், சரி பார்க்கவும், திருத்தங்கள் வழங்கவும் என இதன் பக்கங்கள் திறக்கப்படு கின்றன. பன்மெய் சொல்லாடல்கள், செயல்பாடுகள் மற்றும் மாற்று அறிவுருவாக்கங் களுக்கானது நமது தளம். மாறுபடுதலுக்கான உரிமையை தொடர்ந்து வலியுறுத்தும் மற்றொரு களம்.