உரையாடல்: 3 அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்-பிரேம்

 

உரையாடல் : 3

அரசு-அடிமைகள் கட்டமைப்பும் அறிவு மறுக்கும் எழுத்துக்களும்

 

கேள்வி

ஒரு இலக்கியப் பிரதியின் வெகுமதியை, பெறுமதியை பரந்த இலக்கிய வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள், தங்கள் நுண்ணறிவுத் திறனால் மதிப்பிட இயலும் என நம்பப்பட்டும், அத்தகைய வாசிப்பனுபவம் உள்ளவர்கள் என அறியப்பட்டவர்கள், உண்மைத் தன்மை, வாசிப்பனுபவம், அகவெழுச்சி,  தரிசனம் போன்ற பூடகமான சொற்களைக் கொண்டு இலக்கியப் பிரதிகளின்  தரப்பட்டியல்களை உருவாக்கிக்  கொண்டு மிருந்த காலத்தில் மொழியியல், அமைப்பியல், தொன்மவியல் அடிப்படைகளில் கலை இலக்கியங்களை அணுகவும், இலக்கியப் பிரதிகளுக்குள் இயங்கும்,  மோதிக்கொள்ளும்  சமூகக் கருதுகோள்களைப்  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் ஆரம்பகட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால்  தற்போது இவற்றிற்கான தடயங்களே  தெரியாத வகையில்  மீண்டும் கலை இலக்கியங்களின்  மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதை எவ்வாறு  விளங்கிக்  கொள்வது?   இதைக் குறித்து உங்கள்  விளக்கம்  என்ன?

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

 

பதில்

பிரேம்

 சமூக வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது, தனிமனிதர்கள்  அரசியலால் உருவாக்கப்பட்டவர்கள், தனிமனிதர்களுள் அரசியல் ஊடுறுவியுள்ளது, இருமனிதர்களுக்கிடையில் நிகழும் ஊடாட்டம் மட்டுமல்ல தனி ஒரு மனிதருக்குள் நிகழும் உள்ளோட்டங்களும்கூட  அரசியல் தன்மைகொண்டது, அரசியலை நிகழ்த்துவது என்ற கருதுகோள்களை ஏற்றுக்கொண்ட தளத்தில்தான் இந்த கேள்விக்குப் பொருள் உள்ளது. அதற்குப் பிறகே நாம் இலக்கியத்தின் அரசியல், அரசியலை அடிப்படையாகக்  கொண்ட இலக்கியம், இலக்கியத்தின் அரசியல் வடிவம் என்பவை பற்றிப் பேச முடியும்.  இலக்கியத்தை வைத்து இந்தக் கருதுகோள்களை மறைத்து விட வேண்டும், இப்படிப் பட்ட புரிதல்களை இல்லாமலாக்கிவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்கும் பண்பாட்டு அரசு இயந்திரங்கள் (Cultural State Apparatus) இவ்வகைக் கேள்விகள் உருவாவதற்கான தளங்களையும் அழித்துவிடக் கூடியவை.  அரசியலை அறியவும், இயக்கவும் கட்டுப்படுத்தவும் சிலருக்கு மட்டும் உரிமை உண்டு, சிலர் அதனைச் செய்தால் போதும் மற்றவர்கள் அதற்குக்  கட்டுப்பட்டு அடிமைகளாக இருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாத விதியாகத் தொடர  வேண்டும் என்றால் அதற்கு ஒரு அமைப்பு செய்யவேண்டியது தனிமனிதர்களின் அரசியல் நீக்கம். தனிமனிதர்களை அரசியல் நீக்கம் செய்யப் பலவித உத்திகள்  உள்ளன. அந்த உத்திகள்- கருவிகள் மதம்-பக்தி, அழகியல், கலைச் செயல்பாடுகள், ஊடகங்கள், இலக்கியம் என்ற வடிவத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன. மார்க்சிய அணுமுறையின் மறுக்க முடியாத பகுதியிது.

அரசியல் விடுதலைக்குத் தொடக்கம் ஒவ்வொருவரும் அரசியலடைவது.  அரசியலடைவதைத் தடுத்து அரசு வயப்படுத்துவது என்ற செயல்பாடு ஒன்று உண்டு. அதன் வழியாக ஒரு அமைப்பு அரசியல்- எதிர்அரசியல் களங்களைக் கையாள முடியும். இதனை  உளவியல் அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பாகவே நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தன்னை அரசின் குறுகிய வடிவமாக- அதன் செயல்படும் கருவியாக வைத்துக் கொண்டு  மற்ற ஒவ்வொருவரையும் கண்காணிப்பது, ஒழுங்குபடுத்துவது, தீர்ப்பு வழங்குவது, தண்டிப்பது அதற்குத் தன் வலிமை போதாத போது குழுக்களாகச் சேர்ந்து தண்டிப்பது அதற்கும் மீறிய நிலையில் அரசின் பெருந்தண்டனைக் களத்திடம் அந்த மற்றவரைக் கொண்டு ஒப்படைப்பது என்ற வடிவத்தில்  தனி மனிதர்களின் அரசுவயப்படும் உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது இதனை அரசு-அடிமைகள் என்ற உளவியல் இணைப்பு என்று கூறலாம். பாலடையாள நுண் அரசியலில் இது மிகத் தெளிவாக வெளிப்படும், ஆண்மையத்தன்மையும் அரசு மையத்தன்மையும் ஒப்பமைப்புகளாக இயங்கும் தளம் இது.  அரசு- அரசின் உடல் என்னும் ஆண்வடிவக் கட்டமைப்பு போர் இயந்திரத்தின் வழியாக எங்கும் நிறைக்கப்படுகிறது. எங்கும் நிறைக்கப்பட்ட அரசு-அடிமைகள் உறவைப் புரிந்து கொள்வது அரசியலாக்கத்தின் தொடக்கம். “நான் அரசு அல்ல நான் நிகழ்த்துவது அரசியல்” என்ற அரசியலாக்கக் கருத்தமைப்பு அடுத்த கட்டத்தில் விடுதலை, அரசு நீக்கம், அரசுமைய நீக்கம்  என்பதை நோக்கிச் செலுத்தக்கூடியது.  இந்த அரசு மைய நீக்கம் மக்கள் ஆட்சி, ஜனநாயக அரசியல், மனித உரிமைகள், குடிமைச் சமூகம், சமத்துவம் என்பவற்றை நோக்கிச் செலுத்தக்கூடியது. அப்படியெனில்  ‘அரசு-அடிமைகள்’ கட்டமைப்பைத் தொடர அதிகார அமைப்பின் அனைத்து உத்திகளும் பயன்படுத்தப்படும், அரசியலாக்கத்திற்கு எதிரான கருத்தியல் தாக்குதல் அனைத்து தளங்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றில் ஒரு பகுதியான கலை இலக்கிய வடிவங்களை நீங்கள் குறிப்பிட்ட  மொழியியல், அமைப்பியல், தொன்மவியல்  அடிப்படைகளில் அணுகி, இலக்கியப்  பிரதிகளுக்குள்  இயங்கும், மோதிக் கொள்ளும்  சமூகக்  கருதுகோள்களை  பகுத்துணரவும், கருத்துருக்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதென்பது வாசிப்பை மட்டுமின்றி வாழ்வையும் அரசியல் மயப்படுத்தும் செயல்பாடு இல்லையா?

இதனை இல்லாமலாக்கக் கையாளப்படும் உத்திகளில் ஒன்றுதான் இலக்கிய வாசிப்பை “வெறும் கருத்துரைப்புகளாக” மாற்றுவது. இதற்கு அதிக வாசிப்போ, அறிவுத்துறை சார்ந்த பயிற்சியோ, கலை-இலக்கியம் பற்றிய ஆய்வுத் திறனோ தேவையில்லை. அந்த அந்த காலத்தின் பொதுப்புத்திவழி உருவான உணர்வுநிலைகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சில கூடுதலான உதாரணங்கள், சொல்லணிகள் வழி விளக்கும் திறன், பயிற்சி போதுமானது. பக்தி அனைவருக்கும் இருக்கும், ஆனால் தேவாரம், திருவாசகம் அல்லது நாலாயிரத்திவ்விய பிரபந்தம் கலந்து அதனைச் சொல்லக்கூடிய ஒருவர் அக்காலத்தின் அருள்நெறிச் செல்வர் என்ற இடத்தை அடைகிறார். அவர் மக்களின் முன் தெய்வத் திருவுருவாகத் தோன்றி பக்தி என்ற உணர்வை அக்காலத்திற்குரியதாக உறுதி செய்கிறார்.

நவீன இலக்கியக் களத்தில் இதற்கு சில சிக்கல்கள் முன்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சுப்  பொறியின் வழி அறிவுருவாக்கம் புதிய வடிவத்தை அடைந்தபோது இந்தச் சிக்கலை கையாள சில அறிவுசார் குழுக்கள் உருவாயின. வள்ளலார் நவீன தனிமனிதர்கள் கைக்கொள்ளத்தக்க வகையில் இறைமைக் கோட்பாட்டை உருமாற்ற முனைந்த போது புதிய வடிவிலான கோயில், வழிபாட்டு முறை, ஓளிச்சுடர் உருவம், ஜீவகாருண்யம் எனப்பல புத்துருவாக்கங்களைச் செய்கிறார். பத்திரிகையாளர் பாரதி பக்தியை, இறைமையைத் தேசியம், தேசபக்தி, பாரதமாதா என்ற வடிவில் காணவேண்டியிருந்தது.

இந்த இரு நிலைக்கும் புறம்பாக அயோத்திதாசர், பெரியார், பாரதிதாசன் என்ற சிந்தனையாளர்கள் புதிய மொழியமைப்பை, கதையாடல் முறையை உருவாக்கித் தரவேண்டியிருந்தது. சமய மறுப்பு, நவீனச் சிந்தனைகள், நவீன அரசியல்-சமூகம், சமத்துவம், பகுத்தறிவு என்பவை பற்றிப் பேசவும் விளக்கவும் முயன்ற நம் காலத்தின் சிந்தனையாளர்களுக்கு இதுவரை இருந்தவை அனைத்தையும் மறுக்கவும், புதியனவற்றை நிறுவவும் அதிகம் விளக்கம் தர வேண்டிய கடமை இருந்தது.  இவர்கள் உலக வரலாறு, அரசியல், சட்டம், நீதி,  அறிவியல் தொடங்கி உடன் கால வழக்காறுகள் வரை அனைத்தையும் துணையாகக் கொண்டு புராணங்களை, சாதி-சமயக் கட்டுக்கதைகளை, அடிமை உளவியலைக் கட்டமைக்கும் அனைத்து வகையான சொல்லாடல்களையும் மறுத்தும் எதிர்த்தும் பேச வேண்டியிருந்தது.  சாதி ஒழிப்பு, சமத்துவ சமூகம், சமநீதி, பெண்விடுதலை, இனம்-மொழி  அடையாளம், புதிய சமூக நிறுவனங்கள் என அனைத்தையும் உலகின் மாற்றுச் சிந்தனையாளர்கள் வழி அறிந்து தம் சமூகத்திற்குரியதாக மாற்ற முனைந்த இவர்கள் வெறும் கருத்துரைப்பாக  “நான் உணர்ந்த வகையில் இதனைச் சொல்கிறேன், என் கடன் சொல்லி விட்டுச் செல்வதே”  என இருந்து விடமுடியாது. இந்திய அளவில் அம்பேத்கர் இதே போன்ற பெரும் பாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். பழமையால் கட்டமைக்கப்பட்ட அறிவுதளங்களை உடைத்து நீக்கி புதியவற்றை அமைத்துத் தரும் பெரிய உழைப்பை அவர் மேற்கொண்டார். பெரும் தர்க்க அறிவும், வாசிப்பும் இன்றி வேதங்கள் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை அனைத்தையும் விமர்சிக்கும் பணியை ஒருவர் செய்யமுடியாது.

மேற்சொன்ன மாற்று அறிவுக்கு மறுப்பைச் சொல்ல வந்தவர்கள் கைக்கொண்ட முறை என்ன? வெறும் உள்ளொளி, தெய்வவாக்கு, மனதறியும் மனதின் மொழி என்ற சொல்லாடல்தானே. “இல்லையென்பாரின் மனதிலும் இருக்கும் ஈசனே, இல்லையென்ற சொல்லையும் இயக்கும் நேசனே”  என்று இமைகளை மூடிச் சொல்லிவிட்டால் போதும், “இல்லையென்று சொல்லிச் சொல்லியே உன் பெயரை இத்தனை முறை சொல்லச் செய்கிற எல்லையில் நாதனே என் போதனே புண்ணியா” என்று பாடிவிட்டால் பகுத்தறிவு மயக்கங்கள் பறந்தோடிப் போகும்.

தமிழ் நவீன இலக்கியத்தில் இப்படியொரு இலகுவான அறிவுமறுக்கும் அறிவு மரபு ஒன்று உருவானது. மார்க்சிய-பெரியாரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளை சிறு கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்வது, அல்லது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பது போல மனதின் உள் இடுக்குகள் பற்றிய ஆய்வைச் செய்து உலகுக்கு உரைப்பது என சில குழுக்கள் இயங்கி வந்தன. இடதுசாரி  சிந்தனைகளை ஒரு வரியில் மறுப்பது அல்லது அறைகுறை அ-மார்க்சிய கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடுவது, இதுவே போதுமானது, இவர்கள் மார்க்சியம் கடந்த அறிவுஜீவிகளாக மதிக்கப்படுவதற்கு. மார்க்சியம் பேசியவர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிராய்ட், யுங் பிறகு ஆல்பர் காம்யு என ஏதாவது பெயரைச் சொல்லித் தப்பிப்பது. இந்த எழுத்தில் இத்தனை சதவிகிதம் வாழ்க்கையிருக்கிறது, இதில் நம்பகத் தன்மையில்லை என்று ஒருவரி சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த ஒரு நாவலில் நம்பகத்தன்மை எப்படியெல்லாம் பொங்கிவழிகிறது என  ஒன்பது பக்கம் விளக்கம் தருவது… என நவீன இலக்கியத்தில் எத்தனையோ கருத்துரைப்பு உத்திகள் கையாளப்பட்டு வந்துள்ளன. நமது மார்க்சியத் தோழர்களுக்கு மனம், வலி, குழப்பம் என்று ஏதாவது ஒரு சொல் வந்துவிட்டாலே அது அமெரிக்கச் சதிகாரர்களின் அடுத்த கட்ட தாக்குதல் என்று தோன்றிவிடும். இடதுசாரிகளும் வெறும் கருத்துரைப்பு உத்திகளுடன் நிறுத்தாமல் மேற்கோள்கள், வரலாற்றுத் தரவுகளுடன் கூடுதலான கருத்துரைப்பு உத்தியைக் கையாள வேண்டிய அவலநிலைதான் இருந்தது. இதற்கு நடுவில் பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணிய  விளக்கமுறை, பகுப்புமுறை  உத்திகள் மேலைநாடுகளில் இருந்து கொண்டுவந்து தமிழில் வலிந்து புகுத்தப்பட்டன. இதனைச் சான்றோர்கள் சிலர் இப்படித்தான் சொன்னார்கள், சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அறிவு அல்லது தமிழ் அறிவு பொங்கி வழியும் இவர்களில் பலருக்கு “இந்தியா சேரி, ஊர் என  இரண்டாக இருக்கிறது” என்ற அம்பேத்கரின் கருத்தை மேற்கோள் காட்டினாலே அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியா என்பது 1950-க்கு பிறகு உருவான ஒரு நாடுதான் என்று அரசியல் சட்டப்படி சொன்னாலே அங்கம் எரிகிறது.

இந்த நிலையில்தான், தற்பொழுது தமிழில் முன்பு போலவே வெறும் கருத்துரைப்பு உத்திகள் கையாளப்படுவதாக நீங்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறீர்கள்.  ஆனால்  இதனையே மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடும் குழுக்கள் அதிக வலிமையடைந்துள்ளன. எதற்கெடுத்தாலும் அரசியல், கருத்துருவாக்கம், பன்முக வாசிப்பு, பெண்ணியம், இனவரைவியல், விளிம்புநிலை  என்று சொல்லித்திரிந்த கூட்டம்  ஒரு வழியாக ஓய்ந்தது, நம்ம ஆட்சிதான் , ஜெயம் நமக்குத்தாங்… என்ற கொண்டாட்டக் கூச்சல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.  இது மீண்டும்  நிகழ்ந்ததாகவா நினைக்கிறீர்கள்  இதுதான் தொடர்ந்து  நடந்து வருகிறது. இதற்கு  மாற்றான கருத்தியல், கோட்பாட்டுப் போராட்டமும் இருந்து வந்தது.  இந்த மாற்றுக் கருத்தியல் போராட்டம் தற்போது அதிக விளிம்பு நிலை அடைந்துள்ளது.  பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சிறுமரபுக் கதையாடல்கள் என்றவுடன் தமிழில் மார்க்சியத் தளத்தில் இயங்கியவர்களும் முகம் சுருக்கிய நிலையில் மரபுக்காரர்களுக்கு, மௌனமொழி குழுக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் விளிம்பில் தள்ளிவிட இது நல்ல வாய்ப்பு.

இதைக் குறித்து எனது விளக்கத்தை இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன்…

கலை-இலக்கியம் என்பது இறைத்தன்மை, புனிதத் தன்மை கொண்டது அவற்றின் வழியே இறைவனை அடையலாம் என்ற புராணிகப் பார்வை, கலை-இலக்கியம் என்பதே இறைச்செயலும் இறைவனின் விளையாடலும் என்ற இறையின்பக்  கோட்பாட்டுப் பார்வை, கலை-இலக்கியம் என்பன இறையுணர்வுக்கு எதிரான ஒழுக்கக்கேடு என்ற சமயத்துறவுப் பார்வை எனப் பல பார்வைகள் பழைமையின் பகுதிகளாக இருந்து வந்தவை. இந்நிலையில் இலக்கியம், கலை, அழகியல் என்பன உலகத்தன்மை அல்லது தேசியத்தன்மை கொண்டவை என்ற நவீனப்பார்வை மேற்கு மையத்தன்மையுடன் நம்மை வந்தடைந்தது. இந்தப் பார்வை இறைநீக்கம் கொண்டதாகவும் மனிதமையத் தன்மை கொண்டதாகவும் தோற்றம் தந்தாலும் படைப்பு என்பதை ஒற்றைத்தன்மை உடையதாக விளக்கிப் படைப்பு மையத்தன்மை ஒன்றை உருவாக்கியிருந்தது, அதன் மூலம் பக்திசார்ந்த ஒரு அழுத்தம் இதற்குள் இன்றும் இருந்து வருகிறது.

படைப்பு-படைப்பாளி என்ற இணைப்பு உலகஒருமை, ஓருலகத் தன்மை கொண்டதாக விளக்கப்படும் பொழுதே சிறுமரபுகள்-குழுமரபுகள், இனமரபுகள், தாய்மண்மரபுகள், பெண்மொழி, கிளைமொழிக் கதையாடல்கள் மறுக்கப்பட்டவைகளாக, ஒதுக்கப் பட்டவைகளாக, மதிப்பற்றவைகளாக மாற்றப்பட்டு விடுகின்றன. இந்த ஒதுக்குதலுக்கு, அடையாள அழிப்புக்கு எதிரான போராட்டமே பன்மைக் கதையாடல், சிறுமரபு, விளிம்புநிலைக் கதையாடல்களுக்கான செயல்பாடுகள். தேசிய இலக்கியம், தேசியக் கவிஞர்கள், உலகமகா இலக்கியப் படைப்புகள், உலக இலக்கிய வரிசை என்ற கொடுவன்முறைகள் இலக்கியப் பார்வை என்ற பெயரில் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுவருகின்றன. இவை முதலீட்டிய, அரசியல் ஏகாதிபத்தியம்  போல பண்பாட்டியல் ஏகாதிபத்திய வன்முறை.

வெள்ளைமையவாதம், இனவெறி, ஆண்பாலினத் திமிர், ஒற்றை மனிதவாதம் போன்ற மனிதப்பன்மை மறுப்புத் திட்டங்கள் இவற்றின் உள்ளடக்கமாக இருக்கின்றன. இந்திய இலக்கியம் என்ற ஒன்று எப்படி வன்முறையான கட்டமைப்போ அப்படியே தமிழிலக்கியம், மலையாள இலக்கியம்  என்பது போன்ற ஒற்றை அடையாடளமும் வன்முறைக் கட்டமைப்புகளே.

தமிழில் இந்த வன்முறைக் கட்டமைப்பைத் தகர்க்க முயற்சி நடந்து அதற்கான கருத்தியல் தளமும் விளக்கப்பட்டுள்ளது. இதன் பன்மை அரசியல், மாற்று அரசியலின் ஆற்றல் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஊடகப் பண்பாட்டு பெருநிறுவனங்கள் இதற்கெதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

பேரிலக்கியம், செவ்வியல் படைப்புகள், இலக்கிய ஞானிகள், (இசைஞானிபோல) இலக்கிய ஆளுமைகள் என்பதான மக்கள் மறுப்புக் கதையாடலை மீண்டும் பெரும் முதலீட்டுடன் மறுஉருப்பெருக்கம் செய்யத் தொடங்கின.  ஊடகப் பெருக்கமும், கணினி அச்சுத் தொழில் நுட்பமும் அதற்குத் துணையாக இருந்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மூவர் முதலிகள் மரபைத் தொடர்ந்தனர். ஒருவர் ஒரு ஆண்டில் வெளியேற்றும் ஒன்பது நூல்களை ஒரே மேடையில் ஒன்பது பேரை வைத்து பிரதிஷ்டை செய்வது பெருமையாகப் பேசப்படுகிறது.  இலக்கிய கும்பாபிஷேக, குடமுழுக்கு விழாக்களை நடத்திப் புண்ணியம் தேடும் இலக்கிய அறங்காவலர்கள் இப்படித்தான் உருவாகி வந்தனர். நகைக்கடை, துணிக் கடை, வைரநகை விற்பனையாளர்கள் சிலர் மேடையில் தோன்றி “எனக்குத் தெரிந்து இப்படி ஒரு நூலை இதுவரை யாரும் எழுதியதில்லை” என்றோ, இது ஒரு  தமிழ்  சாதனை, தமிழில் என்ன இந்திய அளவில், ஏன் உலக அளவில் இது ஒரு சாதனை” என்றுகூறி திரைப்படத் தொழில் செய்யும் ஒருவரின் கையில் புத்தகத்தை ஒப்படைத்து உலக்கை நாயகர்களை உருவாக்கும் தொடர் முயற்சிகள் நடக்கத்தொடங்கின.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்  என்றோ கல்கி, கண்ணதாசன், பாலகுமாரன், என்றோ எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா என்றோ முப்பெரும்தேவர், மூவேந்தர், மூவர் முதலிகள், மரபுகளை நவீன- பின்நவீனத் தளத்தில் பெருக்கத் தொடங்கினர் பண்பாட்டுச் சந்தை முகவர்கள்.  இது பக்தி மரபின் இன்றைய வடிவம், மூவர் முதலிகளை உருவாக்கி விட்டால் அவர்களுக்கான பக்தர் குழாம் வழி அறிவுக்கேடான கருத்தியல்களை உருவாக்குவது எளிது. ஒரு காலத்தின் அறிவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்த கலை-இலக்கிய வடிவங்கள் மிகச்சிறந்த கருவிகள் இல்லையா?

ஒரு தனிமனிதரை எழுத்தாளராக உருவாக்க வேண்டும், பிறகு அவரைத் தனிப்பெரும் எழுத்தாளர் என நிருவிக்காட்ட வேண்டும், அவரே நம்காலத்தின் நாயகன், அவருடைய மேதைமை தன்னிகரில்லாதது என மேடைகளில் முழங்க வேண்டும், இவரது எழுத்துக்கள் மட்டுமே நம் காலத்தின் சாதனை எனக் கூச்சலைப் பெருக்க வேண்டும்,  இந்த நூற்றாண்டின் 10 நூல்களின் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை செதுக்கியெடுத்து அதில் தமக்குத் தேவைப்பட்ட ஒருவரின்  5 நூல்களை ஆணியடித்துப் பொருத்திவிட வேண்டும். இப்பொழுது இவரே நம் காலத்தின், நம் சமூகத்தின் அனைத்து இன்ப, துன்பங்களையும் வரையறுக்கும் வல்லமை கொண்டவர். இனி அனைத்தைப் பற்றியும் இவர்களிடம் கருத்துக்கேட்டு பதிவுசெய்து தமிழ்ச்சமூகத்தின் தலைவிதியை, வரலாற்றைத் தொகுக்க வேண்டியதுதான். தமிழ் வழிக்கல்வி தொடங்கி தமிழினப் படுகொலைவரை, பெண்ணெழுத்து எப்படியிருக்க வேண்டும் என்பது முதல் சமண முனிவர்கள் பக்தி அரசியல்போரின் போது கழுவேற்றப்பட்டார்களா இல்லை அவர்களே கழுவில் ஏறி தம்மை மாய்த்துக் கொண்டார்களா என்பது வரை இவர்களின் கருத்துக்களே வரலாறாக அமையும்.

ஜெயகாந்தன் இதற்குத் திடமான ஒரு உதாரணம். இவர் தமிழின் பல கதைசொல்லிகளில் ஒருவர். நவீன சமூகத்தில் மரபான மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல், உளவியல், உறவுசார் சிக்கல்களைக் கண்டும் கேட்டும் புனைவு வடிவில் தந்திருப்பவர்தான், சரி. இவரின் புனைவுகள் சமூக நிகழ்வியலின் ஒரு கட்டப் பதிவு என்பதை இலக்கிய அறிவியல் வகையில் ஏற்க வேண்டும். ஆனால் வரலாறு, தமிழ்ச்சமூகம், தமிழ் அடையாளம், மையத்தேசியம் என்பவைபற்றி இவர் அளித்துள்ள கருத்தமைவுகள் சங்கரமட நவீனத்துவம் மட்டுமே.  இவர் கட்டிய பல கருத்துருவ மாதிரிகள் அறியாமையை அடிப்படையாகக் கொண்டவை,  நவீன உளவியலுக்கு எதிரானவை. உண்மையான இடதுசாரிச் சிந்தனைகள் தமிழிலக்கிய-பண்பாட்டுப் பரப்பில் வலிமையாகப் படிந்துவிடக்கூடாது என்பதற்காக அன்றைய அச்சு ஊடகங்களால் திட்டமிட்டப் பெருக்கப்பட்ட பிம்பமாக மாறிய அவர் அவர்களுக்கான சேவையை அளவுக்கதிமாகவே செய்திருக்கிறார். குருபீடம், ஞானபீடம் என்ற உருவாக்கங்கள் அறிவு இயக்கத்தில் அழிவு சக்திகளாவே செயல்படும் என்பதற்கு இந்த ஜெயஜெய சங்கர. ஹரஹர சங்கர புரட்சிக் கனலே தெளிவான எடுத்துக்காட்டு.  ஒரு இலக்கிய மாணவனாக நான் ஜெயகாந்தனின் ஒவ்வொரு எழுத்தையும் எழுத்தெண்ணிப் படித்தவன். ஒரு பத்து ஆண்டுகள் அவர் புதுவையில் எந்த மேடையில் பேசினாலும் உடல் நலமில்லாத நிலையில்கூட ஓடிச்சென்று ஒரு மூலையில் இருந்து கேட்டு வளர்ந்தவன்.  “சில நேரங்களில் சில மனிதர்கள்” படித்து  ‘ஆங்கிலம்’ கற்ற பலரில் நானும் ஒருவன். இன்றுகூட அவருடைய குறுநாவல்களைப் படித்தபின் நவீன இலக்கியம் பற்றிப் பேசுங்கள் என இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லுவேன்.  ஆனால் … தன் புனைவுகளில் சில மனித வகைமைகளை மதித்துப் புரிந்து கொள்வதற்கான குரலைப் பதிவு செய்துள்ள ஜெயகாந்தன் போன்ற ஒருவர் தன் கருத்தியல் கதையாடல்களில் அதிகாரமையத்தன்மை கொண்ட, புனிதப்பழமையின் தூதுவராகச் செயல்படுவதன் எந்திரவியலைப் புரிந்து கொண்டால் இலக்கிய பக்தி, அறிவுலக அடைக்கல வாதம் என்பவற்றில் இருந்து நாம் விடுபட்டு விடுவோம்.

ஆனால் இந்த விடுதலைப் பார்வை ஊடக-பண்பாட்டு அரசியல் நிறுவனங்களுக்கு அச்சமூட்டக் கூடியதாக இருக்கும். அதனால் ஒரு ஜெயகாந்தன் சோர்ந்து    போய் செயல்பட முடியாத நிலையில் இன்னொரு ஜெயமோகன் உருவாக்கப்படுவார். இவர் ஜெயகாந்தனைவிடப் பலமடங்கு மேதைமை கொண்டவர் என்றும் பார் போற்றும் படிப்பாளர் என்றும் திக்குகள் எட்டும் சிதற ஜெயபேரிகை கொட்டிவிட்டால் கருத்துருவாக்க வேலை மிக எளிதாகிவிடும். இன்று இந்த விஷயத்தில் பேசிக்கொண்டிருக்கும் எவரின் குரலுடனும் சேர்ந்தது அல்ல என் குரல். இது இந்தக் காலகட்டத்தின் முதன்மை படைப்பிலக்கியவாதியின் குரல். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் காலத்தில் மறைந்தபின்னும் எஞ்சும் குரல் இது. என் ஆசான் ஜெயகாந்தன் இதைவிட வெறுப்பு அனலடித்த காலகட்டத்தில் சிங்கம் போல மேடையேறி நின்று முழங்கிய கருத்துக்கள்தான் இவை.”  இந்த தனிப்பெரும் குரல் உருவாக்கம் மாற்றம் மறுக்கும் அரசியல் இயந்திரங்களுக்கு மிகத்தேவையான ஒன்று. கண்ணதாசன் இதைவிட தனிப்பெருங்குரலில் இந்து மதத்திற்கு அர்த்தம் கண்டு கூறியது நமக்குத் தெரியும்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை, நடக்கவேயில்லை என்பதை சுப்பிரமணிய சுவாமி சொன்னால் நம்பத் தயங்குபவர்கள்கூட ஜெ.மோ தனிப்பெரும் குரலில் ஞானச் செருக்குடன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும். பெயர் சொல்ல விரும்பாத தன் நண்பர் ஒருவருடன் நேரில் சென்று பார்த்து, இந்திய ஞானமரபின் அனைத்து மகான்களையும் அணுகி ஐயம்தீர்த்து இவர் சொல்லும்போது தமிழ்ப் பெண்கள் தான் சிங்கள ராணுவத்தினரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர் என்ற உலகுக்குத் தெரியாத உண்மையையை யாரால் மறுக்க முடியும்  பெண்ணெழுத்தை, பெண்ணியத்தை தன் சுட்டுவிரலால்  தூக்கியெறிய  இவர் இருக்கும்வரை பெண்ணியச் சதித்திட்டங்களைப் பற்றி தமிழின் அறிவுலகம் கவலைப்படத் தேவையில்லைதானே? அருந்ததி ராய் போன்ற “அமெரிக்க கைக்கூலிகள்” இந்தியத் தாயின் புனிதத்தைத் குலைக்கவும் எல்லைப்பகுதியில் வன்முறைகளைத் தூண்டவும் செய்யும் தொடர் முயற்சிகளை இவரைத் தவிர வேறு யார் இவ்வளவு சான்றுகளுடன் அம்பலப்படுத்த முடியும்?  இந்தியாவில் வெறுப்பு அரசியலையே தொழிலாகக்கொண்டவர்கள் இந்து மகாசபையினரோ, ராஷ்டிரிய சுயம்சேவை வீரர்களோ, பாரதிய ஜனதா கட்சி-பஜ்ரங்க தளச் செயல் மறவர்களோ இல்லை பெரியார், அம்பேத்கர் போன்ற ஆயுதம் ஏந்திய ஆன்மிகமற்றத் தலைவர்கள்தான் என்பதை இது போன்ற வரலாற்று ஞானத்துடன் வேறு யார் தமிழ் இளைஞர்களுக்குச் சொல்லித்தர முடியும்? தமிழ்ப் பிராமண அன்பர்கள் தீண்டாமைக்கு உட்பட்டுத் திக்குத் தெரியாமல் தவித்து வரும் பெருங்கொடுமையை இவ்வளவு அறச்சீற்றத்துடன் வெறுப்பு அரசியலின் விஷம் துளிகூட இல்லாமல் உலகுக்கு வேறு யாரால் அறிவிக்க முடியும்…

இப்படித்தான் தொடர்கிறது இந்த இலக்கிய மேதைகள், உலகத்தர எழுத்தாளர்கள் என்ற ஊடக உருவாக்கத்தின் அரசியல்… இதற்கு ஒருவர் மட்டும் போதாது இன்னும் இருவர் அவசியம். அந்தந்த இடத்திற்கேற்ப மூவர், ஐவர் என வரிசைகள் மாறலாம், ஆனால் இந்த ஆளுமை பெருக்கக் கதையாடல் வன்முறையின் வரலாற்றுத் தடம் இதுதான்.

பெருந்தலைவர்கள், வரலாற்று நாயகர், மகாத்மாக்கள் உருவாக்கப்படுவது அரசியல் வன்முறைகளை, வரலாற்று சதிகளை மறைக்க, திரிபுக் கருத்துகளை நியாயப்படுத்தப் பயன்படுவது போல கலை-இலக்கியத்தில் பேரிலக்கிய ஆளுமை பற்றிய கதையாடல் பழமைகளை மீளுருவாக்கம் செய்ய, அரசு-அடிமைகள் உளவியல் கட்டமைப்பைத் தொடரப் பயன்படுவது. தெய்வத்தின் குரலும்   சிங்கத்தின் குரலும் இணைந்து முழங்கும் இவர்கள் மீது வெறுப்பு அனலடிக்கிறதாம், எது இந்த அனல்? அந்த அந்த காலத்தின் அறிவரசியல் மாற்றுக் குரல்களைத்தான் இவர்கள் வெறுப்பு அனல் என்கிறார்கள். இந்த அனல் முறையாகத் தேவையான அளவுக்கு அடிக்காததால்தான் பிற்போக்கு பிணாத்தல்கள் தமிழின் அடையாளமாக மாற்றப்படுகின்றன.

ஆளுமை மையவாதம் அறிவுருவாக்கத்திற்கு, அரசியல் தன்னுருவாக்கத்திற்கு எதிரான அழிவுத்திட்டம்.  இலக்கியம்,  திரைப்படம், ஊடகக்கதையாடல்கள் என அறிவழிப்பு அதிகார மையங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது தொடுத்துள்ள அழகியல்-உளவியல் போர் இது. இந்தப் போர் உயிரியல் ஆயுதங்கள் வழி நடத்தப்படும் உருமறைந்த தாக்குதலாக தொடர்ந்து நிகழ்கிறது… தமிழில் இதனை எதிர்த்து கருத்தியல், அறிவுக்களங்களில் பெரும்போராட்டம் நடக்க வேண்டும். வாசிப்பின் அரசியல், வாசிப்பின் அறிவியல் வழிவாக விரிவடைய வேண்டும்.

மக்கள் அரசியலை மறுக்கும் ஒரு குழுவினரால் உருவாக்கப்படும் உத்திதான் ஒரே மேடையில் ஒரு நூறு நூல்களின் விழா என்ற கேளிக்கைக் கொண்டாட்டம். இந்தப் பெருங்கட்டமைப்புத் தந்திரத்தின் முகவர்களாக  இயங்கும் பல பதிப்பகங்கள்… எல்லா பத்திரிகை நிறுவனங்களும் ஒரு இலக்கிய இதழை, இணைப்பைத் தொடங்கியுள்ளன… இந்து தமிழில் வந்துவிட்டால் இரண்டாவது கருத்து இருக்கமுடியுமா என்ன? இப்படித்தான் நீள்கிறது அரசியல் நீக்கச் சொல்லாடல்.   இன்றைய இளைஞர்களின் அறியாமையின் மீது கட்டப்பட்டுள்ளது ஊடகங்கள் கொண்டாடும் இலக்கிய மகான்களின் குருபீடம்…

சில இளைய வாசகர்கள், சில ஆய்வு மாணவர்கள் ஒரு கலந்துரையாடலின் பொழுது   என்னிடம் கேட்டனர், கலக இலக்கியம், பாலரசியல் பற்றியெல்லாம் நீங்கள் தான் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள், ஆனால் அந்த “ஒரு எழுத்தாளரின்” கலக எழுதுக்களை நீங்கள் படிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறீர்கள் என்ன காரணம்? நான் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சுவாமி நித்தியானந்தரின் கலக அரசிலை கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை இதற்கு எங்கு நேரம் கிடைக்கப்போகிறது என்று சொன்னேன். எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியன்களும் நாவலை நீங்கள்தான் கலகத்தை முன்வைக்கும் பிரதி என்று முன்னுரை எழுதினீர்கள் அதை இப்போது மறுக்கிறீர்களா? நீங்கள் கலகம் என்று சொல்லும் போது ஏற்பதும், இல்லை என்றால் அதை மறுப்பதும்தான்  வாசகர்களான எங்கள் வேலையா? அவர்கள் கேள்வியில் நியாயம் உண்டு, படித்த பிள்ளைகள் இல்லையா. கலகத்தை முன்வைக்கும் போது முன்வைப்பதாகவும் அதனைப் பின்வைக்கும் போது பின்வைப்பதாகவும் சொல்லத்தான் வேண்டும். அவர் பின்வைத்த கலகம் தினமல… மன்னிக்க தினமலர் பத்திரிகையின் வழி உருவாக்கப்பட்டது. அதனை இப்போது நான் முன்வைக்க வேண்டிய தேவை இல்லைதானே?” என்று சற்றே எரிச்சலுடன் பதில் சொன்னேன். அவர்களிடம் என் முன்னுரையின் கடைசி வாக்கியத்தைப் படியுங்கள் “இந்தப் பிரதியில் கலகம் எந்த அளவுக்குச் சாத்தியப்பட்டுள்ளது என்பது வாசிப்பின் வழி தெரியவரும்” என்பது போல ஒன்றைச் சொல்லியிருப்பேன் என்றும் நினைவு படுத்தினேன்.

ஆனால் அவர்களுக்கு விளக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு. பாலரசியலை எழுதுவது என்றால் பாலியல் குற்றங்களை விதந்தோதுவதும், பெண்ணிலையின் மீதான கருத்தியல் வன் கொடுமையை  கவிதையியல் எனக் கொண்டாடுவதும் இல்லை. மேல்நிலைப்படுத்தப்பட்டதை கீழறக்கம் செய்வது கலகம், அடக்கப்பட்டவர்களை அவமதித்து எழுதுவது வன்முறை. பாலியலின் சிக்கல்களை, அதன் அரசியலை கதைப்படுத்துவது என்றால் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமையை அழகியல் என்று நிறுவும் ஒரு எழுத்து  மனித உரிமைக் கெதிரான குற்றம் என்று  உங்களுக்குத் தோன்றவில்லையா?

அப்படியென்றால் அரசியல் பற்றி மட்டும்தான் எழுதவேண்டுமா?  என்ற அவர்கள் கேள்விக்கு நான் சொன்ன பதில் இதுதான். அரசியல் மட்டுமே அனைத்துமாக இருக்கும் ஒரு சமூகத்தில் அரசியல் மறுத்து எழுதுங்கள்… அரசியல் அற்ற ஒரு சமூகத்தில் அரசியல் பற்றியே எழுதுங்கள்.  உங்கள் அரசியல்தான் உங்களுக்கான அழகியல், உங்கள் அழகியல்தான் உங்கள் அறம்… உங்கள் அறம்தான் நீங்களும் உங்கள் சமூகமும்…

கலை இலக்கியங்களின் மீதான விமர்சனம் என்பது முன்பு போலவே வெறும் கருத்துரைப்புகளாக மாறியுள்ளதற்கு அல்லது தொடர்வதற்குக் காரணம் தற்போது விளங்கும்தானே. அரசியல் நீக்க  வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், இவைதான் தற்கால அடையாளம் அற்ற சமூகத்தை உருவாக்க  அடிப்படைத் தேவைகள். செவ்வியல் பெருமை பேசியோ, புராதனப் புகழ் பேசியோ நிகழ்த்திக்காட்ட முடியாத அறிவு, அடையாள அழிப்பை அரசியல் நீக்க வாசிப்புகள் வழி நிகழ்த்த முடியும்.

உரையாடல்: 3: 1

உரையாடல்: 3 : 2