உரையாடல்: 4:1

கேள்வி:

நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு ஏதும் இல்லைதான். என்றாலும் தனிமனித சாத்தியப்பாடு என்பதைக் கணக்கில் கொண்டால் ஏதேனும் ஒன்றிரண்டு அறிவுத் துறைகளில்தானே ஆழமாகச் செல்லவும் இயங்கவும் முடியும்?

பதில்:

இந்த கருத்து நவீன அறிவுமரபின் அடிப்படையில் ஏற்கத் தக்க ஒன்றுதான். வேலைப் பிரிவினை பற்றிய அதே கருதுகோளை அறிவுத்துறையிலும் பொருத்திப் பார்க்கலாம். அனைவரும் அனைத்து வகை யான வேலைகளைச் செய்வதற்கும் தொழில் உத்திகளைக் கையாள்வதற்கும் திறன் பெற்றவர்கள்தான்.  ஆனால் தேவை கருதி நாம் ஏதாவது ஒரு  தொழில் பிரிவைக் கற்றுத் திறன் பெறுகிறோம், அதன் வழியாகச்  சமூகத்திற்கு நம் பங்களிப்பை வழங்கி நமக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இது அடிப்படையான உண்மை. இதனைக் கடந்து தொழில் பிரிவுகள் மாற்றமுடியாதவைகளாக,ஏற்றத்தாழ்வுள்ளதாக மாறுவதும், உடல் உழைப்பு, மூளை உழைப்பு, திறன் சார்ந்த உழைப்பு, திறன்சார உழைப்பு எனப் பகுக்கப்பட்டு அதிகார அமைப்புகளாக இறுக்கமடைவது வன்முறையானது. இந்த வன்முறையின் விரிவான வடிவங்களை அறிவுத்துறைகள்,  தொழில்நுட்பம், கலைத் துறைகளில்  நாம் காண்கிறோம்.

இதற்குக் காரணம் அறிவுப் பகிர்வில், பரவலில் உள்ள ஏற்றத்தாழ்வும் அதிகாரப் படிநிலைகளும். அறிவு ஒரு முதலீட்டு வைப்பாக, அதிகார உரிமையாக வைக்கப்படுவதால் நேரும் கெடுதி இது.  மருத்துவத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், இது இன்று தனித்த உயர் தொழில் நுட்பமாக உள்ளது. ஆனால் உணவு,  மருந்து, உடல் பேணுதல், நோய் அறிதல், நோய் தீர்த்தல் என்பவை சமூகப் பொது அறிவாக இருக்க வேண்டியவை, இருந்திருக்கின்றன. இன்று உணவு, வாழிடம், உடல் என அனைத்தும் உலகவயப்படுத்தப் பட்ட நிலையில் இனக்குழு, குடிமரபு மருத்துவம், நோய் தீர்வுகள் பயனற்றவையாக, பலன் தர இயலாதவைகளாக மாற்றப்பட்டுள்ளன. குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு என எதுவும் தற்பொழுது குடும்பம், குடிசார்ந்த வழக்கில் இல்லை.  குடிமரபுகளில், இனக்குழுக்களில் கூட மருத்துவம், மாந்திரிகம், சடங்கு என்பவை தனித்திறமைகளாக, மறைபொருள் உத்திகளாக  இருந்திருக்கின்றன. ஆனால் அவை அச்சமூகத்தின் குறியீட்டுப் பொது அறிவாகவும் இருந்தன. அது சமூகப்பொது நலனுக்கான ஒரு ஏற்பாடு. இந்த மறைபொருள் உத்தி பின்பு இறுக்கமடைந்து அரசு உரிமையாக மாறியதைச் சமூக வரலாறுகள் பதிவு செய்துள்ளன. வேட்டையும், போரும் வீரர் குழுக்களை உருவாக்கியதும், குழந்தை வளர்ப்பில் பெண் ஈடுபட குடியைக் காத்தலில்  ஆண் ஈடுபட்டதின் வழி ஆண்வழி அரசியல் உருவாக்கப்பட்டதும் விளக்கப்பட்ட உண்மைகள். கடவுளை அறிதல்கூட அனைவருக்கும் உரியதல்ல என்றன சில ஆன்மிக மரபுகள்,  ஆன்மாவை விளக்க மதங்களும் உடலை விளக்க அறிவியலும் என்ற பிரிவினை ஏற்ற மேற்கத்திய வெள்ளைமைய அறிவு உலகின் பிற அறிவுகள் அனைத்தையும் அறியாமை என்று விளக்கியது நவீனப் பின்புலத்தில்  நிகழ்ந்த வரலாற்று வன்முறை.

இந்தப் பின்னணியில்தான் பின்நவீனத்துவம் அறிவுத்துறைகளில் உள்ள மேலாதிக்கம் பற்றித் தன் விளக்கத்தை அளித்தது.  அதிகாரம், ஆதிக்கம், வெளியேற்றம், விளிம்புநிலைப் படுத்தல், அடையாள அழிப்பு என்பவற்றில் உள்ள அறிவின் அரசியலை, கொடுங் கோன்மையை அது விளக்கியது.

இன்று நாம் செய்ய வேண்டியது: அறிவுத்துறைகளின் சிறப்புரிமைகளை, அறிவதிகார மையக்குவிப்பை கலைத்துவிட வேண்டும். இதன் வழியாகத்தான் அறிவுமுதலீட்டியத்தை நாம் எதிர்க்க முடியும். அறிவை மூலதன ஆற்றலாக மாற்றுவதற்கும், அறிவை விடுதலை அரசியல் செயல்பாடாக  மாற்றுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு அனைத்தையும் வெளிப்படையானதாக, விளக்கப்பட்டதாக மாற்றுவதில்தான் உள்ளது.  இன்று அதனைச் செய்ய  தனிமனித சாத்தியப்பாடுகள் பற்றி   நாம் கவலைப்படத் தேவையில்லை. எழுத்து,  சிந்தனை, அறிவுருவாக்கம், கலைத்தொழில் நுட்பம் எதுவும் தனி மனிதர்களின் உற்பத்தியல்ல. தனித்தன்மை, தனித்திறன், படைப்புணர்வு, தனிப்பெரும் அறிவு என்பவை பற்றிய கற்பனைகள் வழிபாட்டு மரபுகளுக்குத்தான் தேவையானவை.

இன்று எழுத்தை குழுவாக, பலர் இணைந்து  உரையாடித் தரவுகள் பெற்றுப் பகிர்ந்து உருவாக்க இயலும், உருவாக்க வேண்டும். ஒருவரே எழுதும் எழுத்தும்கூட பல்வேறு எழுத்துக்களின் கூட்டிணைப்புதானே தவிர தனித்தூய்மை கொண்ட உருவாக்கம் அல்ல. அணுசக்தி ஒரு அழிவு சக்தி என்பதைப் பற்றி ஒருவரோ இருவரோ மட்டும் தனியாக இன்று எழுதிவிட இயலுமா, அது உலகெங்கிலும் உள்ள மாற்று அறவியல் பார்வை கொண்டவர்களின் கூட்டு உருவாக்கம். திரைப்படங்கள், பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று மறுஉருவாக்கங்கள், அரசியல் பகுப்பாய்வுகள் என்பவை பற்றிக் குழுவாக இணைந்து உரையாடி, பகுத்து, தொகுத்து, சரிபார்த்து எழுதுவதற்கான பயிற்சியும் பொறுமையும் நமக்குத் தேவை. இதற்கும் கூடுதல் பயிற்சியும் பழக்கமும் தேவைப்படும், தனிமனித உளச்சிக்கல்கள் தோன்றி முரண்களை மோதல்களை கசப்புகளை உருவாக்கக்கூடும். நான் இதன் கசப்பான பக்கங்களை அறிந்தவன், பலருக்கு கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறேன், என்றாலும் இதுதான் வழி.  தனிமனிதர்கள் வருவார்கள் போவார்கள்,  ஆனால் அறிவு அனைவருக்குமானது, அறிவு அனைவராலும் உருவாக்கப்படுவது.

ஆழம், அடர்த்தி பற்றிய கருதுகோள்களை நாம் மறுத்துவிட வேண்டும். செம்மை, சிறப்பு, நுட்பம் என்பவை திறன் அடிப்படையில் தனிமனிதர்களை வெளியேற்றுவதற்கான தந்திர உத்திகள், எழுத்தில் இது இன்னும் கொடிய விளைவுகளை உருவாக்கும். ஒரு கதையெழுத்துக் கலைஞனாக இருந்தும் இதனைச் சொல்கிறேன், நான் ஒரு கதையை உங்களுக்குச் சொன்னால் எனக்கு நீங்கள் ஒரு கதையைப் பரிசாகத் தாருங்கள், அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. உங்களிடம் தற்பொழுது ஒரு கதை இல்லையென்றால் பரவாயில்லை, வேறு ஒருவரின் கதையை உங்கள் மொழியில் கூறுங்கள், தனிமனித சாத்தியப்பாடுகளை கடக்க இதுதான் வழி.