உரையாடல் : 3: 2

கேள்வி:

அரசியல் நீக்க வாசிப்பு, அறிவு மறுக்கும் அழகியல், என்கிற அடிப்படைகளில் செயல்படுவோர்களால் தமிழ் அறிவுலகம் மேலாண்மை செய்யப்படும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் வைதீக-பிராமண மறுப்பு, விளிம்புநிலைக் கருத்தியல், தலித் அரசியல், பின் நவீனத்துவம், நுண் அரசியல், பாலரசியல், என்கிற மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்?  தமிழ்ச் சிந்தனை உலகில் இதற்கான மரபுதான் என்ன?

பதில்:

மாற்று அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்படுவோர்களாக யாரையெல்லாம் சொல்வீர்கள்… நிச்சயமாகச் சில பெயர்களைச் சொல்வதன் வழியாக இந்தக் கேள்வியை முற்றுபெறச் செய்யமாட்டேன். என் பெயரைக்கூட இதில் பொருத்திக் காட்ட மாட்டேன்.  மேலாண்மை செய்பவர்களின் அடையாளம்  தெளிவானது, ஒரு மையம் நோக்கியது. ஆனால் மாற்று அரசியல் அப்படியல்ல பன்முகப்பட்டது, பல போக்குகளை, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது. வைதீக மறுப்பு இன்றி சூழலியல் அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளாமல் தலித் அரசியலில் செயல்படுபவர்கள், பாலரசியலை மிகத்தவறாகப் புரிந்து கொண்டு தமிழ் அடையாள அரசியலில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள், செவ்வியல் மரபில் பற்று வைத்தபடி தமிழீழத் தனிநாடு உருவாக வேண்டும் என்ற கனவில் வாழ்பவர்கள், பெண்ணியத்தைப் புரிந்து கொண்டு உலகமயமாக்கத்தை ஆக்கபூர்வமானதாகக் காணும் சிந்தனையாளர்கள், தலித் அரசியலால் இந்திய மார்க்சிய அரசியல் சிதைக்கப்பட்டதாக நம்பும் இடதுசாரி சிந்தனையாளர்கள், விளிம்புநிலை அரசியலை ஏற்காத அம்பேத்கரியச் சிந்தனையாளர்கள், பெருந்தேசியத்தை முழுமையாக நம்பும் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள்  எனச் சிக்கலான விகுதிகளைக் கொண்டது இன்றைய மாற்று அரசியல் களம். இவற்றின் பன்முகத் தன்மையைப் புரிந்தேர்க்க வேண்டும் என்று நம்பும் எனக்குப் போர்வழி மாறுதல், ஆயுதமைய அரசியல் விடுதலையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை ஏற்க முடிவதில்லை, ஆனால் ஒரு மக்கள் திரள்,  ஒரு இனக்குழு அமைப்பு போரமைப்பாக மாறித் தம் விடுதலைக்காக  போராடும் என்றால் அதனை மறுப்பதற்கான மெய்காண் முறையும் என்னிடம் இல்லை. இது சற்றுச் சிக்கலான  நிலைதான், ஒன்றில் விரிவான புரிதலைக் கொண்டுள்ள எனக்கு மற்றொன்றில் தவறான அல்லது குழப்பமான புரிதல் இருப்பதை மறுக்க இயலாது. பௌத்த மெய்யியல்,  வள்ளலார், அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், காந்தி, பாலழிந்த அடையாளம், அரசற்ற அமைப்பாக்கம், புதுவகைப் புனைவெழுத்து பற்றியெல்லாம் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் ஒரேவகை ஈடுபாட்டுடன், மதிப்புடன் பேசுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவாகவே எனக்கு வாய்த்திருக்கிறது.  இந்த நிலையைத்தான் நான் பன்மை நவீனத்துவம் என்று அடையாளப்படுத்தி விளக்க முயற்சிக்கிறேன். இதனைத் தனி மனிதர்களின் பெயர்களுடன் அடையாளப்படுத்திக் காண்பதை விடச் செயல்பாடுகள், களம் சார்ந்த சொல்லாடல்கள் வழிதான் அடையாளம் காண வேண்டும். தமிழில் இவை அனைத்தும் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன என்பதை மட்டும்தான் நாம் இப்பொழுது குறித்துக் கொள்ள வேண்டும்.