உரையாடல்: 5- 2 அழிவைக் கொண்டாட எழுதலாம்-பிரேம்

உரையாடல்: 5- 2

அழிவைக் கொண்டாட எழுதலாம்

கேள்வி:

மாற்று அரசியல், மாற்றுச் சிந்தனை…அதுதான் இன்றைக்கான அழகியல்,  கவிதையியல் அவற்றைத் தொடர்ந்து பேணுவதும், புதுப்பிப்பதும், வளர்த் தெடுப்பதும்தான் மக்களுக்கான இலக்கிய வாதிகள் என்பவர்களின் பணி  என்கிறீர்கள். கலை இலக்கியங்களில் அரசியல் இருக்கலாம், ஆனால் அரசியல் செயல் திட்டங்களோடு அவற்றைப் புனைவது என்பது படைப்பாளிகளின் படைப்புத்திறனை (creativity),குறுக்குவதில் முடியுமல்லவா? மேலும் இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் எனப் பகுப்பது சரியா? மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதை காணமுடிகிறதே?

பதில்:

இந்தத் தளத்திலான விவாதம்  மாற்றுக் கலை-இலக்கியக் கோட்பாடு என்ற பெயரில் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒன்று.  படைப்பாளிகளின் படைப்புத் திறன் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கேள்வியை மேம்போக்காக அணுகும்போது நியாயமான அக்கறை போலத் தோற்றம் தரும். ஆனால் இதற்குள் வரலாற்றுத் திரிபும், அரசியல் செயல் திட்டமும் பொதிந்துள்ளன. கலை இலக்கிய ஆக்கங்கள் அனைத்துமே தனிமனிதர்களின் உற்பத்திபோலத் தோற்றம் தரும் கூட்டுப் படைப்புகள். தனிமனிதர்கள் கலைஞர்களாக உருவாதல் வரலாற்று முன்புலம், சமூக நிகழ்களம் சார்ந்த ஒரு நிகழ்வு. சமூகத்தின் அக்காலத் தேவை, ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள கலை வடிவங்கள் மற்றும் கலை சார்ந்த நுட்பங்கள் எனப் பலவிதமான கூறுகள் இணைந்து கலைச் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன.

நாடகம் என்ற ஒரு வடிவம் இல்லாமல் ஒரு நாடகக் காப்பியத்தையோ, திரைப்படம் என்ற வடிவம் இல்லாமல் ஒரு திரைக்கதையையோ படைப்பாற்றலை மட்டும் கொண்டு  ஒருவர் உருவாக்கிவிட முடியாது. இலக்கியத்தில் இது  மிகத்தெளிவான ஒரு நிகழ்வு. உலக இலக்கியம் என்பதோ, தேசிய இலக்கியம் என்பதோ உருவாகாத ஒரு நிலையில் இலக்கியங்கள் சமயம் சார்ந்தோ, அரச மண்டலம் சார்ந்தோதான் உருவாக முடியும். சமயம், மற்றும் அரசின் புனிதம் பற்றியும் அதற்கு மாறாக மக்கள் நடக்கும் பொழுது நிகழும் துன்பங்கள், தீமைகள் பற்றியும் தான் செவ்வியல் இலக்கியங்கள் பேசுகின்றன. இதிகாச, காப்பிய எழுத்துக்கள் எது தர்மம் எது அதர்மம் என்பதைப் பற்றியவைகளாக உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை பயன்களைச் சுற்றியே இந்திய இலக்கியங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இலக்கியச் சூத்திரம் மட்டுமில்லை மிக எளிமையான ஒரு அரசியல் சூத்திரமும்கூட. பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், இன்பம் சார்ந்த இலக்கியங்கள், போர்ப் பெருமை பேசும் இலக்கியங்கள் என ஒவ்வொரு வடிவமும் அவ்வக்கால அரசியலின் தெளிவான வெளிப்பாடுகள்தான். பௌத்தமும் சமணமும் போர், அடக்குமுறை, வெற்றிப் பெருமிதம், வன்கொடுமைகள் பற்றி சமூக உளவியலில் தடைகளை உருவாக்கிய பொழுது பேரரசுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது, சார்வாக, லோகாயத, ஆஜிவக மரபுகள் உருவாக்கிய பற்றற்ற தன்மை வணிகப் பெருக்கம், செல்வக் குவிப்பு, நகர சமூகத்தின் கேளிக்கைக்காக மக்களை அடிமைகளாக வைத்திருத்தல் போன்றவற்றுக்கு எதிராக அமைந்தது. இதற்கு மாறாக மகாபாரதம், ராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் போரின் தேவையை உணர்த்தவும் வீரமும் வெற்றியும் சத்திரிய-அரச தர்மம் என்று நிலைநிறுத்தவும், செல்வப் பெருக்கம், நகர வாழ்க்கை பற்றிய மதிப்பீகளை மிகைப்படுத்தவும் உருவாக்கப்பட்டன. காளிதாசன், கம்பன் போன்ற பாவலர்கள் மகாகவிகளாக போற்றப்படுவதற்கு அவர்கள் கால அரசியலுக்கும், சமய விதிகளுக்கும் இயைந்த, அவற்றை பெருமை செய்யும் படைப்புகளை அவர்கள் உருவாக்கியதுதான் காரணம். தொன்மையான சமூகங்களில் சமய நம்பிக்கை, அரசின் புனிதம் இரண்டையும் ஏற்காத ஒரு எழுத்து உருவாக இயலாது, அப்படி உருவாகும் பொழுது அது மாற்று சமயம், மாற்று அரசு பற்றியதாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்,அழிக்கப்படும், தடை செய்யப்படும். அப்படிப்பட்ட  எழுத்துக்களை சிறுகுழுக்கள் தமக்குள் பாதுகாத்து வேறு காலகட்டத்தில், வேறு சமூகத்தில் பரப்பும் முயற்சியை மேற்கொள்ளும். இந்தப் பின்னணியில் அரசியல் செயல் திட்டம், சமயப்பற்று, படைப்பாற்றல்  என்பவை ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத செயல்பாடுகள் என்பது புரிய வரும்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை.

என்று ஒருவர் பாடும்பொழுது இறைநம்பிக்கை, சமயப்பற்று, அரசியல் திட்டம், பக்தி, படைபாற்றல், போர்க்குணம் அனைத்தும் கலந்த ஒரு சொல்லாடலாக வெளிப்படுகிறது. சைவத்தைக் காக்க சிவனடியார்கள் வைணவ அரசர்களை எதிர்த்து சிவபதம் சேர்ந்ததும், வைணவ நம்பிகள் சைவ அரசர்களின் அடக்குமுறையை எதிர்த்து வைகுண்டம் சேர்ந்ததும் அரசியல், சமயம், இறைநெறி அனைத்தும் கலந்த உளவியலின் வெளிப்பாடுகள். இவற்றைப் பதிவு செய்வனதான் இலக்கியங்கள், இதனை நுட்பமாகப் பதிவு செய்வதுதான் படைப்புத்திறன் என்று அறியப்பட்டது. கம்ப ராமாயணத்தை ஒரு வீரசைவரோ, திருவாசகத்தை ஒரு வீர வைணவரோ படைப்புத் திறன் கொண்ட பனுவல் என ஏற்க இயலாது. கிறித்துவம் பைபிள் தவிர அனைத்து நூல்களையும் சாத்தானியம் சார்ந்த சதித்திட்டங்கள் என்று அறிவித்திருந்த காலம் உண்டு. பிற சமய நூல்களை வாசிப்பது மட்டுமல்ல வைத்திருப்பதும்கூட தண்டனைக்குரிய குற்றங்களாக கிறித்தவம்,இஸ்லாம் இரண்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்கள் இருந்தன.

இன்று நாம் அந்த வகையான சமய மைய, அரசுமைய நிலையிலிருந்து வெளியேறி இருக்கிறோம். இந்த வெளியேற்றமே, இந்த வகை புதிய இலக்கிய வடிவமே அரசியல் தேர்ந்தெடுப்ப்புதான். நாம் இன்று நவீன எழுத்து என அறியும் ஒரு செயல்பாடு பல உயிர்களைக் காவு வாங்கிய பின், பல இலக்கியவாதிகள், வாசகக் குழுக்களைப் பலிவாங்கிய பின் உருவாகி வந்த ஒன்று. இதன் உலகத் தன்மை, இதன் வரலாற்று வடிவம், இதனுடன் தொடர்புள்ள  படைப்பாற்றல், படைப்புரிமை, படைப்புத்திறன், படைப்புச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், எழுதுபவர் என்னும் தன்னடையாளம் அனைத்தும் மக்கள் அரசியலால் உருவாக்கப்பட்டவை, உறுதியளிக்கப்பட்டவை, பாதுகாக்கப்படுபவை. நாம் நவீன இலக்கியம், நவீன கலை என எதனை உருவாக்கினாலும் அதில் மக்கள் அரசியல், மனித உரிமை அரசியல், தனி மனித விழுமியம் என்பவை உள்ளடங்கி உள்ளன. சமயங்களோ, கொடுங்கோன்மை அரசுகளோ, புனித மரபுகளோ இந்த படைப்புரிமையை, படைப்பாற்றலை நவீன படைப்பாளிகளுக்கு வழங்கிவிடவில்லை. படைப்பாளிகள் மக்களை மறந்து விட்டு எழுதலாம், மக்களை மனதில் கொள்ளாமல் எழுதலாம், மக்களுக்கு எதிராகவும் மக்கள் வெறுப்பிலும்கூட எழுதலாம், ஆனால் அவர்கள் எழுத்து மக்கள் அரசியலின் உயிர்ச்சத்தில் உருவாவது. மக்கள் அரசியல் என்ற புதிய புலன்கள் கொண்டு அமைவது. மக்கள் அரசியல், மக்கள் தேசியம், மனித உளவியல் என்பவைதான் இந்த எழுத்துக்களின் களம், செயல்பாடு அனைத்தும். தமக்குப் பின்னால் மக்கள் சமூகமும், மக்கள் நீதியும், மக்கள் அரசியலும் உள்ளன என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு எழுத்துக் கலைஞரும் எதையாவது எழுதுகிறார்கள், அது சிறிய அளவிலோ, பரந்துபட்ட அளவிலோ இருக்கலாம் ஆனால் அங்கு மக்கள், மக்கள் அரசியல் என்ற கருதுகோள் மிக அடிப்படையாகச் செயல்படுகிறது.  மக்களை மறந்த, மக்கள் அரசியலை மறுத்த நவீன எழுத்து என்ற தொடரே கோட்பாட்டு, கட்டமைப்பு வகையில் ஒரு இல்பொருள் உருவகம்,  ‘மார்க்சிய முடியாட்சி’ என்பது போல ஒரு முரண் தொடர்.

அடுத்து இலக்கியவாதிகளை மக்களுக்கானவர்கள், அல்லாதவர்கள் என்று பகுத்து அறிவது பற்றி. மக்கள் அரசியல், பன்மை அரசியல், பிரதிநிதித்துவ அரசு என்பதைக் கொண்ட நம் நாட்டில் மக்கள் என்ற அடையாளம் ஒற்றைத் தன்மை உடையதல்ல. சாதி, குலம், மொழி, இனம், வர்க்கம், கிராமம், நகரம், அதிகாரப் பகிர்வு, வாழ்வாதார பங்கீடு, பாலின உரிமைகள் என்ற வகையில் பலவகை வேறு பாடுகளை, அடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன மக்கள் குழுக்கள். அப்படியெனில் இதில் ஏதாவதொரு பகுதியைச் சார்ந்து, ஏதாவதொரு பகுதியின் பிரதிநிதியாக, ஏதாவதொரு பகுதியை நோக்கித்தான் எழுத்துக்கள் அமைய முடியும். அதன் கவிதையியல், அழகியல், இலக்கிய வடிவம், வகைமை, எடுத்துரைப்பு முறை என்பவை ஏதாவதொரு பண்பாட்டு, கருத்தியல் அடிப்படையில்தான் அமைய முடியும். இதில் நடுநிலை, பொதுத்தன்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கும் கவிதையியல் என்பதெல்லாம் நடப்பியல் சாத்தியமற்ற வெற்றுச் தொடர்கள்.  ‘இந்தியர்களாகி நாம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை வரியின் இந்தியர்கள் எங்கிருக்கிறார்கள், அரசியலமைப்புத் திட்டத்தில் தவிர. ஆனால் இதற்கு ஒரு கோட்பாட்டுப் பொருண்மை உள்ளது. அது போலத்தான் எழுதும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மக்கள் தொகுதியை கருத்தியல் பொருண்மையாகக் கொண்டுள்ளனர்.

 “மின்கம்ப முடுக்குகளில் பறவைக்கூடுகள் 
இடும் ஒவ்வொரு முட்டையும்
பறவையறியா புதிய நிறத்தில்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது தாய்ப்பறவை
பாலித்தீன் இழைகள் சிலிக்கான் துகள்கள்
ஒவ்வொரு முறையும்
பறக்கத் தொடங்கும் குஞ்சுகளின் முதல் பயணம்
பன்னாட்டு நிறுவனத்தின்
வானம் மறைக்கும் கண்ணாடிகளில்
மோதிச் சிதறுகிறது
சிதறிய தசைகளை உண்டு
அடுத்த அடைகாப்பிற்கென
உயிர் தரித்திருக்கிறது
தாய்பறவை.”

என்ற ஒரு கவிதையை எழுதி இதனை அனைத்து மக்களுக்குமானது என நான் எப்படிச் சொல்ல முடியும்?  இன்னும் ஒரு வகையில் இதனைக் கவிதை என்றுதான் நான் எப்படிச் சொல்ல இயலும். ஆனால் இயற்கையரசியல் உணர்ந்த, சூழலரசியல் புலன் கொண்ட ஒருவரின் கண்களை இந்த வரிகள் ஈரமாக்கும் என்பதையும் மறுக்க இயலாது.

“காத்திருக்கிறேன் அலைபேசி அழைப்புக்காக

வந்து சேராத குறுஞ்செய்தியில்

சிக்கிக் கொண்டுள்ளது என்

தூக்குக் கயிறை அறுக்கும் கத்தி“

என்ற துணுக்கை எழுதிவிட்டு இந்த நூற்றாண்டின் காதலர்கள் அனைவருடைய வலியையும் தாங்கியுள்ளது இக்கவிதை எனத் தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு கவிஞர் சொல்வாரெனில் அதனை மறுக்க நமக்கு உரிமை இல்லைதான்.  ஆனால் குறைந்த பட்சம் தொலைபேசி இல்லாத ஊர்களில் உள்ள காதலர்களையாவது கொஞ்சம் விட்டுவிடுங்கள் என்று நாம் சொல்லக்கூடாதா என்ன.

நான் சொல்ல வருவது அதிக சிக்கலற்றது: எழுத்து ஒவ்வொன்றும் அரசியலுடையது. அது ஏதாவது ஒரு பிரிவு மக்கள் பற்றியது, மக்களின் வாழ்வு, கனவு, துயரம், களிப்பு பற்றியது. சிலர் ஒடுக்கப்பட்ட, துயறுரும் மக்களின் வாழ்வு, வரலாறு பற்றியோ, விடுதலை விரும்பும் மக்களின் மொழியிலோ எழுதுகிறார்கள். சிலர் யாரும் ஒடுக்கப்படவில்லை, இதுதான் நம் காலத்திய வாழ்வு, இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று நிறுவ எழுதுகிறார்கள். இன்னும் சிலர் எழுதிப்பார்க்கலாம் என எழுதுகிறார்கள் அதனையும் சில மக்கள் தம் எழுத்தாக கொண்டாடிக் களிக்கிறார்கள். இவை அனைத்தும் பெரும் அரசியல் போராட்டத்தின், வாழ்வுரிமைப் போராட்டத்தின் நுண்மையும், பருண்மையுமான செயல்பாடுகள்தான். ஒடுக்குமுறை அரசியல், உலகமயமான சுரண்டல், பன்னாட்டு அதிகார மையங்கள், இயந்திர-தொழில் நுட்ப முதலீட்டியம் என்பவற்றின் வன்முறைகள் பற்றித் தெளிவான புள்ளி விவரங்களுடன் எழுதுவதுதான் மக்கள் அரசியல் என்று இல்லை. இன்றைய வாழ்க்கை, இன்றையக் கனவுகள், இன்றைய வலிகள், இன்றைய மனச்சிதைவுகள் பற்றி எழுதும் எல்லா எழுத்தும் அரசியல் எழுத்துக்கள்தான். எழுதுகிறவர்கள் அரசியலற்றவர்களாக இருக்கலாம், ஆனால் எழுத்துக்கள் அரசியலற்று இருப்பதில்லை. எழுதுகிறவர்கள் எழுத்தில் உள்ள அரசியலை எவ்வளவு முயற்சி செய்து அழித்து அழித்து எழுதினாலும் அழித்த தடங்களும் படிந்து, அழித்த வரிகளும் இணைந்து அவற்றை அதிக அரசியலுடையவையாக மாற்றும்.

மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகளில், மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பற்றி செறிவும் ஆழமும் மிகுந்திருப்பதைக் காணமுடிவதாக நீங்கள் சொல்வது  இன்றைய இலக்கியத்தில் மட்டுமல்ல தொல்சமூக இலக்கியங்களில்கூட நிகழக்கூடியது, அது வாசிப்பின் வழி அமைவது. நவீன வாசிப்பில் அனைத்தையும் மக்கள் மையப் பார்வையில் அணுகும்போது மக்கள் அரசியலும், பிரச்சினைப் பாடுகளும் புலப்படும்.  இதனைத்தான் நாம் அரசியல் வாசிப்பு, வாசிப்பின் அரசியல் என்கிறோம். மக்களை மறுத்தும் மக்களை இழிவுபடுத்தியும் மக்களுக்கு எதிராகவும் எழுதலாம்,  மக்களை அழிப்பது பற்றிய திட்டங்களைக்கூட எழுதலாம். ஆனால் மக்களைப் பற்றி,  ஏதாவதொரு மக்கள் குழுவின் பின்புலத்தில்தான் எழுத முடியும்.  யூத மக்களை அழிதொழிப்பது பற்றிய பெருமை பேசும் ஜெர்மனிய எழுத்துக்களில் இருந்துதான் இனப்படுகொலையின் மக்கள் உளவியலை நாம் புரிந்துகொள்கிறோம், பாலஸ்தினிய மக்கள் மீதான இஸ்ரேலிய வெறுப்பை அவர்களின் எழுத்திலிருந்துதான் புரிந்து கொள்கிறோம். அமெரிக்க கருப்பின மக்கள் பற்றிய வெள்ளையின எழுத்துக்கள், திரைப்படங்கள் வழியாக கருப்பின மக்களின் வரலாற்றுத் துயரை நாம் கண்டுணர இயலும். ஐரோப்பிய மத்திய கால ஓவியங்கள் கருப்பின அடிமைகள் பற்றி ஆவணங்களோ, பதிவுகளோ அல்ல ஆனால் ஒவ்வொரு ஓவியத்திலும் பின் விளிம்பில் துயருற்ற கருப்பின அடிமைகளின் நிழல்கள் படிந்துள்ளதை மறைத்துவிட முடியாது. உங்கள் கண்கள்தான் உங்களின் முதல் அரசியல் கருவி, காண்பதும், காண மறுப்பதும் உங்கள் அரசியலை, கருத்தியலைப் பொறுத்தது.

இன்னொரு தகவல்  ‘மக்களை மனதில் கொள்ளாமல் படைக்கப்பட்ட பிரதிகள்’ என்பதுகூட தவறான ஒரு விளக்கம். மக்கள் பற்றிய மாறுபட்ட பார்வை கொண்ட பிரதிகள், மக்கள் அரசியல் பற்றிய மாற்றுக் கருத்துக் கொண்ட பிரதிகள், மக்களைவிட அதிகாரம், ஆதிக்கம் இவையே மேலானவை என்ற பார்வை கொண்ட பிரதிகள், தன்னுடைய மக்களைத் தவிர பிற மக்களின் மதிப்பினை ஏற்காத பிரதிகள் என்று அடையாளப் படுத்துவது இன்னும் விளக்கமாக இருக்கும். தமிழ் இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களை மனதில், நினைவில் கொள்ளாத பிரதிகளின் தொகுப்பு  என்று அடையாளப்படுத்தலாம் தானே?

சாப்ளின், சே, பாப் மார்லே படங்கள் ஆடை வடிவமைப்பில் இடம் பெறுவது பற்றிய மாணவர் களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார்கள். பாப் மார்லியின்  பெரிய படத்தை ஒரு அலங்கார உணவு விடுதியில் இருந்து எடுத்துவிட வேண்டும் என்று ஒரு  இளைஞர் கூட்டம்  சொன்னதாம்.  அவர்கள் சொன்ன காரணம்  “சாப்பிடும் இடத்தில்  இப்படியொரு படமா, அந்த முடியும் முகமும் குமட்டலை உருவாக்கும்.” அதில் உண்மை இருக்கலாம், அவர்களுக்கான உண்மை. அந்த இளைஞர்களைக் கூட்டமாகப் பார்த்தால் நமக்கு ஒரு வாந்திக்குவியலாகத் தோன்றலாம் இது நமக்கான உண்மை.

பாப் மார்லியைத் தன் அறை முழுதும் ஒட்டி வைத்திருக்கும் மேட்டுக்குடி இளையோர் பற்றியும் நமக்குத் தெரியும், இதுவும் கவனத்திற்குரியது. அந்த முகத்தின் பின் மறைந்துள்ள மக்களை மனதில் கொள்ளாமல் அதனை ஒரு ஓவியமாக மட்டும் காண இயலுமா, இயலக்கூடும். ஆனால் அந்த முகமும் அதன் பின்னுள்ள வரலாறும், அந்தச் சடைமுடியும், அந்தக் குரலும் அந்த மக்கள் பற்றித்தான் பேசுகிறது. இந்தியர்களை இழிவானவர்களாக விளக்க எழுதப்பட்ட காலனியகால இலக்கியங்கள், குறிப்புகள், ஆவணங்களில் இருந்துதான்  இந்திய வரலாற்றைத் தொகுத்தெழுதியிருக்கிறோம்.