உரையாடல்: 5: 1 வைதிகம் அழிந்த இந்து மதம்? -பிரேம்

உரையாடல்: 5 – 1 வைதிகம் அழிந்த இந்து மதம்?

கேள்வி:

அரசுகளின் கருவிகளாக மாற்றப்பட்டிருந்த பவுத்த, சமண, கிறிஸ்தவ மதங்கள் மக்கள் அரசியல், மற்றும் மார்க்சீய சிந்தனைகளின் தாக்கம் பெற்று தற்போது மக்கள் சார்ந்த, மனித உரிமைகள் சார்ந்த,  அறம் சார்ந்த கருத்தியல்களாக, அமைப்புகளாக மறு விளக்கம் செய்து கொள்கின்றன என்கிறீர்கள். இந்து மதத்தில் மேற்கண்ட சிந்தனைகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாகக் கூறமுடியுமா? அல்லது அதன் சாதிக் கட்டுமானம் தகர்க்கப்படாதவரை அதனை மக்கள் நலன் சார்ந்ததாக மறு விளக்கத்திற்கு உட்படுத்த இயலாது எனச் சொல்லலாமா ?

பதில் :

பௌத்தம், சமணம், கிறித்தவம், இஸ்லாம் மதங்களுக்கிடையில் அடிப்படையான சில ஒற்றுமைகள் உள்ளன. இவை தொல்சமூக மதங்கள் போலக் காலப்படிவுகளாக, சமூகப் பழமை வழக்குகளாக மட்டும் அமையாமல்  புதிய கருத்தியல்கள், புதிய சமூகப் பார்வைகள் கொண்டு கட்டப்பட்டவை. இவற்றின் குருமார்கள், போதகர்கள் மக்களிடையே வாழ்ந்து அவர்களுக்கான புதிய கருத்துக்களை, புதிய நம்பிக்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

மக்கள் அதுவரை தாங்கள் கொண்டிருந்த சமய அமைப்பின்கீழ் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அறிந்தோ அல்லது அவற்றால் தமக்கு ஈடேற்றம் கிடைக்காது என்று தெளிந்தோ இந்தப் புதிய சமய நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். இவை ஒருவகையில் சமூக, அரசியல் போராட்டங்களாகவே அமைந்திருந்தன. கிறித்துவம், இஸ்லாம் இரண்டும் இன விடுதலை, இனக்குழு ஒன்றிணைப்பு என்னும் வரலாற்றுச் செயல் பாடுகளாகவே தொடக்கம் பெற்றன. யேசு கிறிஸ்துவின் உயிர்த்தியாகம், நபித் தோழர்களின் போராட்டத் தியாகங்கள் மக்களின் கூட்டு நினைவுகளாக, குறியீட்டுச் சடங்குகளாக அம்மதங்களில் படிந்துள்ளன. அதன் குருமார்கள் பின்பு தெய்வங்களாகவோ, தேவதூதர்களாகவோ, புனிதர்களாகவோ மாற்றப்படுவது மானுடவியல் அடிப்படையில் இயல்பான ஒரு நிகழ்வு.

மக்கள் பெருமளவில் ஏற்காமல் மதங்கள் பெரும் அமைப்புகளாக மாறுவதில்லை. இவற்றில் கிறித்துவமும் இஸ்லாத்தும் இறைநம்பிக்கை கொண்ட, இறையியல் விதிகள் கொண்ட மதங்கள், அதே சமயம் தெளிவான அரசியல், பொருளாதார, சமூக, சட்டவியல் கட்டமைப்புகளைக் கொண்டவை. இவற்றில் மக்களுக்கான, சமூக நலனுக்கான உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள் உள்ளன. இவற்றில் உள்ள அறம், ஒழுக்கம், இறையச்சம், சமூக நலம், நீதி பற்றிய கொள்கைகளும் விதிமுறைகளும் மீறப்படும் பொழுது மக்கள் அடக்குமுறைக்கும், ஏமாற்றுதலுக்கும், சுரண்டலுக்கும் உள்ளாவது வெளிப்படையாகத் தெரிய வரும். அப்போது மிக எளிமையான ஒரு கேள்வியின் மூலம் இவற்றை சமய அறவியலாளர்கள் எதிர்க்க இயலும். இதுதான் கிறித்துவின் அறமா ? இதுதான் தேவமைந்தன் நமக்கு அளித்த அன்பு நெறியா? இதுதான் இறைதூதர் சொன்ன அமல் சாலிஹா (நல்நெறியா) ?  இதுதான் இஸ்லாத்தின் நீதியா? என ஏதாவது ஒரு கேள்வியில் தொடங்கிச் சீர்திருத்தம், மறு சீரமைப்பு நோக்கி மக்கள் இயக்கமாக மாறு வதற்கான இடம் இந்த மதங்களுக்குள் உள்ளது. துன்புறும் மக்களுக்கு மீட்சி, எளியோருக்கான நல்வாழ்வு என்ற நீதி யுணர்வுகள் அம்மதங்களின் உள்ளடக்கத்தில் உள்ளவை. அதே சமயம் அரசுகள், அடக்கு முறையாளர்கள் மக்களின் இறை அச்சத்தை மட்டும் பயன்படுத்தித் தம் கொடுங் கோன்மைகளை, சுரண்டல்களை எளிதாக நிகழ்த்திக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டுவித நிகழ்வுகளும் வரலாற்றில் மாறி மாறிப் பதிவாகியுள்ளதை நாம் காண் கிறோம்.

இந்து மதம் என்ற   மதத் தொகுதியின் வரலாறு இவற்றிலிருந்து வேறுபட்டது. வர்ணப் பிரிவுகள், ஆதிக்கப்படிநிலை கொண்ட சாதி அமைப்பு, தீண்டாமை என்னும் வன்கொடுமை, பெரும்பான்மை மரபுகளை இழிவுறுத்தும் பிராமண மேலாதிக்கம் என்பவை இதன் தீராத அநீதிகளாக இருந்து வருகின்றன.  மனித நேய மறுசீரமைப்புகளைத் தடுக்கும் அடிமை உளவியல் இதன் மிக் கடுமையான ஒரு பகுதி. இதற்கெதிரானவை பௌத்த-சமண மரபுகள், இவை முழுமையாக இந்தியச் சமூகங்களை மாற்றியமைக்கும் முன்பு திரிக்கபட்டன, அழிக்கப்பட்டன, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டன.

அண்ணல் அம்பேத்கர் மதங்களை மூன்று வகையாகப் பிரித்து விளக்குகிறார்: தொல்சமூக மதங்கள் (Primitive Religion) சட்டவிதிகளால் அமைந்த மதங்கள் (Religion of law) மெய்யியல் சார்ந்த மதங்கள் (Religion of Philosophy), இவற்றில் தொல்சமூக மதங்கள் வாழ்வியலுடன், இயற்கையுடன் நேரடி உறவுள்ளவை என்பதால் தொல்குடி மக்களுக்கு அது உகந்தது என்கிறார். மெய்யியல் அல்லது அறம் சார்ந்த மதங்கள் மக்கள் விடுதலைக்கானவை, நல் வாழ்வுக் கானவை, பௌத்தம் அவ் வகையில் அறம் சார்ந்த, பகுத்தறிவுக்கு உகந்த, விடுதலைக் கான நெறியாக உள்ளது என்பது அம்பேத்கரின் ஆய்வு முடிவு.

இந்து மதம் அல்லது வைதிகமையச் சமயம் சட்டங்களால் அமைந்த மதம்; பிரிவு படுத்தல், விலக்கி வைத்தல், அடிமைப் படுத்தல், ஒடுக்குதல் இவற்றையே தன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. வர்ணப் பகுப்பு, சாதிப்படிநிலை, தீண்டாமை இவைதான் அது கொண்டுள்ள சமூக விதி அதனால் “இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தால் நிரந்தரமான அடிமைகளாக உள்ளனர்” என்று இந்துச் சமூக உளவியலை  அண்ணல் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

சாதி ஒழிப்பு, இந்து மதத்தின் புதிர்கள், மதமாற்றம் எதற்காக? போன்ற நூல்களில் இந்து மதங்கள் பற்றிய தன் மதிப்பீடுகளை ஆய்வின் அடிப்படையில் அம்பேத்கர் மிகவிரிவாக, மிக வலிமையாக முன்வைத்திருக்கிறார். அம்பேத்கர் இந்து மதம் பற்றி வைத்த விமர்சனங்களுக்கு இன்றுவரை அறிவுப்பூர்வமான ஒரு பதில்கூட முன்வைக்கப்படவில்லை. அம்பேத்கர்  ‘இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’ என்று சொல்ல வந்த காந்தி நடப்பியல் அடிப்படையற்ற தன் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பையே இந்து மதம் பற்றிய தன் கருத்தாக முன்வைத்தார். “வர்ண விதிமுறை தீண்டாமையை ஆதரிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு கடவுள் அதிலும் சத்தியம்தான் கடவுள் என்று சொல்வதும், அஹிம்சையை மனித குடும்பத்தின் வாழ்க்கைச் சட்டமாக ஏற்றுக் கொள்வதும் தான் ஹிந்து மதத்தின் சாராம்சம்.”  என்றும் “ஒரு மதத்தை அதன் தீய உதாரணங்களை வைத்து மதிப்பிடக்கூடாது நல்ல உதாரணங்களைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும்” என்றும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து ஹிந்துமத ஆச்சாரியர்கள் மற்றும் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி அம்பேத்கரின் வாதத்திற்கு மேலும் சான்றுகளை உருவாக்கினார்.

இந்து மதத்தை ஒற்றை அமைப்பாக அணுகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அந்தச் சிக்கல்கள்தான் மக்கள் நலம் சார்ந்ததாகச் அதனைச் சீரமைத்தல், சமூகப் பொதுமை கொண்டதாக அதனை மாற்றுருவாக்கம் செய்தல் என்பதையும் தடுக்கின்றன. தொல்சமூகக் கூறுகள், சட்டவிதிகள், மெய்யியல் சார்ந்த சொல்லாடல்கள், பண்பாட்டு, நிகழ்கலைக் கூறுகள், வலிமையான சடங்குகள் எனப் பல அடுக்குகளை இந்து மதம் தனக்குள் பொதிந்து வைத்துள்ளது. அதன் மையமான பகுதியை அடையாளம் காட்டுவதிலும் சிக்கல் உண்டு. அது ஒரு மதத்திற்கான கட்டமைப்புகள் இல்லாததாகவும் உள்ளது, அதே சமயம் ஒரு போருக்காக மக்களைத் திரட்டக்கூடிய வலைப்பின்னலையும் கொண்டுள்ளது. அதனால் அதன் வன்முறை பரவலாகவும், பதுங்கியிருந்து தாக்கும் தன்மையுடனும் உள்ளது. பழங்குடி மக்கள், தீண்டாமையால் வெளியிருத்தப்பட்ட மக்கள்,வைதிகத்தினால் இழிவு சுமத்தப்பட்ட மக்கள் என வேறுபாட்ட சமூகங்களையும்  அவற்றின் வழிபாடுகள், இறைநம்பிக்கைகள், வழக்காறுகளையும் தன்னுடைய அரசியல் கட்டப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதே சமயம் அவற்றைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அடையாளம், உறவுமுறை, தொன்மக் கதைகள் என ஏதாவது ஒரு குறியீட்டு இணைப்பால் சிறுமரபுகளைத் தனது கட்டமைப்பிற்கு உட்படுத்திக் கொள்ளும் தகவமைப்பை இந்து மதம் பெற்றுள்ளது, அதே சமயம் அவற்றை இழிந்த, மாசு பட்ட மரபுகள் என்று அவமதிக்கும் உரிமையையும் எடுத்துக் கொள்கிறது.

இவை எப்படியிருந்த போதும் இன்றைய இந்து மதம் பௌத்தம், சமணம் என்ற முற்கால சீர்திருத்தங்களை அழித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட ஒரு மதம். அதே போல காலனிய அரசு, நவீன தேசியம் இரண்டிற்கும் எதிர் நிலையில் தன்மை மறுஉருவாக்கம் செய்து கொண்ட ஒரு மதம். இன்றைய இந்து மதம் எதிர்நவீன ஒன்றிணைப்புடன், மிகப்புதிதாக உருவாக்கிக் கொண்ட ஒற்றை அடையாளத் துடன் கட்டமைக்கபட்ட ஒன்று. 1950-க்குப் பின் உருவான புதிய ஒரு தேசிய அடையாளத்தை மிகப் புராதனமான ஒரு சொல்லாடலுடன் இணைத்து இந்து-இந்தியா என்பது போன்ற ஒரு புனைவை இதனால் கட்டமைக்க முடிகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் சைவ, வைணவ, சாக்தேய, குலதெய்வ முரண் மரபுகள் அமைதியான ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டிருப்பது இம்மதம் தன்னைப் புதிய அரசியலாக்கம் செய்துகொண்டதற்கான அடையாளம். சாதி, தீண்டாமை, சமூக ஒடுக்குமுறை பற்றி இந்த அரசியல்மதம் இருண்ட மௌனம் சாதிக்கிறது. இந்த மௌனத்தின் உள்ளடங்கிய வன்முறையை மக்கள் அரசியலின்முன் புலப்படுத்தும் பொழுதுதான் இதற்குள் நிகழ் வேண்டிய மாற்றம் என்ன, தலைகீழாக்கங்கள் எவை என்பது பற்றிய உரையாடல் சாத்தியமாகும்.

மனித நேயம் கொண்ட சமய நெறிகள், வைதிகத்தை எதிர்த்த ஆன்மிக இயக்கங்கள், மக்கள் சார்புடைய கிளைச் சமயங்கள், அடக்கு முறைகளுக்கு எதிராக உருவான சில சமயக் குழுக்கள் இந்திய வரலாற்றில் புதியன அல்ல. சாதிப் பிரிவுகளையும் சடங்குக் கேடுகளையும் எதிர்த்த தமிழின் சித்தர் மரபுகள் நமக்குத் தெரியும். வள்ளலார் (சீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம்) நாராயணகுரு (ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்) ஜோதிபா புலெ (சர்வஜன சத்திய தர்மம்) என இந்திய ஆன்மிக மரபை நவீன அறத்துடன் இணைத்த செயல்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைதிகத்தை மறுத்தவர்கள், பிராமணக் கருத்தியலை அடியோடு வெறுத்தவர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் இந்து சமயத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய முதல் தீமை என்ன என்பது தெளிவாகத் தெரிய வரும்.

மதம், சமய வழக்காறு என்ற வகையில் இந்து மதங்கள் இந்திய மக்களிடம் புழக்கத்தில் இருப்பதை நாம் மறுக்கவோ, எதிர்க்கவோ இயலாது. ஆனால் அவை தம்மை மனிதநேயம் கொண்ட, மக்கள் உரிமையை மதிக்கும் மதங்களாக, ஒடுக்கப்பட்ட மக்களும் ஏற்கும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்கான அடிப்படை கோரிக்கைகளைச் சுற்றி வளைக்காமல் அம்பேத்கர் வழியில் நேரடியாக முன் வைக்கலாம்: தீண்டாமை, சதுர் வர்ணம் இரண்டையும் கடைபிடிப்பது தெய்வத்திற்கு எதிரான பாவம் என்று அறிவிக்க வேண்டும், தீண்டாமைக்குட்பட்ட சமூகத்தின்  உறுப்பினர்களை இந்தியக் கோயில்கள் அனைத்திலும் இரண்டு அர்ச்சகர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும், சேரி-ஊர் என இரண்டு வாழிடங்கள், இரண்டுக்கும் தனித்தனி இடுகாடுகள் இருப்பதைச் சமய அடிப்படையில் குற்றம் என அறிவிக்க வேண்டும், இந்து சமய மடங்கள், நிறுவனங்களில் தீண்டாமைக்குட்ட ஒருவர், பிற்படுத்தப்பட்ட ஒருவர், மற்ற பிரிவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று ஆச்சாரியர்களை நியமிக்கும் மரபை உருவாக்க வேண்டும், பெண்களுக்கும் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டும், சமய நூல்களை கற்க- கற்பிக்க அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

வைதிக இந்து மதத்தை நம்பும் ஒருவரிடம் இந்தக் கோரிக்கைகளைக் கூறினால் அவருடைய பதில் இப்படியான ஒரு எதிர்க் கேள்வியாகவே இருக்கும்.  “இந்து தர்மத்தை அடியோடு குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பதைத் தானே சுற்றி வளைத்து நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்?” அதற்கும் அப்பால் வைதிகம் மறுத்த இந்து சமயம் ஒன்று உருவாகும் என்றால் அதனை அழிக்க வேறு யாரைவிடவும்  பிராமண சமயமே முன்நின்று போராடும்.

தற்போதுள்ள இந்தச் சிக்கலான நிலையைக் குடிமைச் சமூக, நவீனக் கருத்தியல்கள் வழியாகவே கையாள இயலும். அதற்கான அடிப்படைதான் மதம் நீங்கிய நவீன அரசும், மக்கள் உரிமை அரசியலும். காந்தி, அம்பேத்கர் இருவரும் முற்றிலும் எதிர் எதிர் நிலையிலிருந்து இதனை அணுகியிருந்த போதும் மிக அடிப்படையான மாற்றம் பற்றியே இருவரும் சிந்தித்துள்ளனர். காந்தி ஒரு உணர்ச்சிகரமான தொடக்கம், அம்பேத்கர் அதன் நெடிய நீட்சி, உண்மையான விடுதலை நோக்கிய அறிவும் ஆன்மிகமும் இணைந்த தேடல்.