தலித் அரசியலும் உலகக் களமும்
பிரேம்
உலக அளவிலான விடுதலை இயக்கங்கள் அனைத்திற்கும் தற்போது பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பின்னடைவு மனித விடுதலை, மக்கள் அரசியல் இரண்டையும் மையமாகக் கொண்டு இயங்கும் மக்கள் சக்திகளுக்கு அச்சுறுத்தலை தரக்கூடியது.மனித வரலாற்றில் அதுவரை இல்லாத புதிய சமூக-அரசியல் அமைப்புகள் உருவான காலமான இருபதாம் நூற்றாண்டு பெரும் போர்களையும், இனப்படுகொலைகளையும், புரட்சிகளையும் கண்டுள்ளது. அதே சமயம் அது மனித சமூகத்திற்கு பெரும் கனவுகளையும் அளித்தது.
அந்தக் கனவு உலக அளவிலான ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கெல்லாம் விடுதலையைத் தரக்கூடிய, வாழ்வுரிமைகளை உறுதி செய்யக்கூடிய அரசியல் இயக்கங்களின் உந்து சக்தியாக அமைந்தது.
இனியான அரசியல் அனைத்தும் விடுதலைக்கான அரசியலே என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களுக்கான பெரும் மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முன்னெடுப்புகளும், மாற்றங்களுக்கான இயக்கங்களும் கடந்த 30 ஆண்டுகாலத்தில் உருக்குலைக்கப்பட்டு உலக வல்லாதிக்கமும், பன்னாட்டு முதலீட்டு அதிகாரமும் மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிகழ்வே மக்கள் அரசியலுக்கான, விடுதலை இயக்கங்களுக்கான பின்னடைவாகவும் தேக்கமாகவும்மாறியுள்ளது.
சமஉரிமை, சமநீதி என்பவற்றிற்கான கனவுடன் தொடங்கிய விடுதலைக் கருத்தியல்களும், அவற்றின் வழிகாட்டுதலில் நிகழ்த்தப்பட்ட விடுதலைப் போராட்டங்களும் இருபதாம் நூற்றாண்டில் பெரும் அமைப்பு மாற்றங்களை உருவாக்கித் தந்தன.
மார்க்சியம் உருவாக்கித் தந்த அரசியல் பொருளாதார அமைப்பின் சில வடிவங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வர்க்கப் போராட்டத்தின் அடுத்த கட்டமான சமூகவயப்பட்ட பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. இவை சோஷலிச அரசுகள் என்றும், சோஷலிச ஜனநாயகம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டன. சோவியத் ஒன்றியம் தன்னை சோஷலிஸ்ட் ரிபப்ளிக் என்றும், சீன அரசு தன்னை பீப்பிள்ஸ் ரிபப்ளிக் என்றும் அடையாளப்படுத்தின. கிழக்கு ஈரோப்பிய நாடுகள் பலவும் சோஷலிச அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டன. கியூபா தன்னை மக்கள் அரசு (ரிபப்ளிக்) என அறிவித்தது. சோவியத் புரட்சிக்குப் பின்னான உலக அரசியலில் சோஷலிசம், மற்றும் மக்கள் அரசு என்பவை புதிய வரலாற்றை புதிய சமூக அமைப்புகளை உருவாக்கித் தந்தன. சமத்துவமும், சமநீதியும் மனித மதிப்பீடுகளின் மையமாக மாறுவ துடன் ஒடுக்குமுறை, ஆதிக்கம், அடக்குமுறை, சுரண்டல், வன்முறை, ஒதுக்குதல்கள் அற்ற மனித சமூகத்தை உருவாக்குவதுதான் இந்தப் புதிய மக்கள் அரசியலின் இலக்கும், நோக்கமும். ஆனால் இந்த விடுதலை அரசியல் முழுமை அடையாததுடன் உலகமயமான முதலாளித்துவ வல்லாதிக்கத்தினால் இன்று ஒடுக்குதலுக்கும் உள்ளாகியிருப்பதற்கான காரணம் என்ன?
ஒடுக்கும் சக்திகள் உலக அளவில் ஒன்று திரண்ட அளவிற்கு ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் ஒன்று திரளாததும் ஓரமைப்பாகாததும்தான் முதல் காரணம் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் நவீன அரசியலும், நவீன பொருளாதாரக் கட்டமைப்புகளும் வெள்ளையின மையமானதாக அமைந்து விட்டதுதான் தற்கால உலகமயமான சுரண்டலுக்கு மிகவலிமையான அடிப்படை. வெள்ளையினங்களின் மேலாதிக்கமும், கருப்பினங்களின் அடிமைப்படுதலும் புதிய ஒரு வடிவத்தில் பிணைக்கப்பட்டதன் வெளிப்பாடுதான் சோவியத் கலைந்து அமெரிக்க வல்லாதிக்கத்துடன் ஒத்திசைந்த நிகழ்வு.
ஐநூறு ஆண்டுகால காலனியச் சுரண்டலாலும் அடிமைமுறை உழைப்பினாலும் இயற்கைவளக் கொள்ளைகளாலும் தம்மைப் பெருக்கிக்கொண்ட வெள்ளையின நாடுகள் இன்று தமக்கிடையில் ஒரு தன்னிறைவை அடைந்து விட்டன. அந்தச் சமூகங்களுக்குள் உள்ள வர்க்க முரண் அல்லது வர்க்க வேறுபாடுகளை ஜனநாயக அரசுகள் தமது பரிமாற்ற பொருளாதாரம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங் களால் கையாள முடிகிறது. தற்போது ஆப்ரிக்க, ஆசிய, தென்னமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை எந்த கட்டுப்பாடும் இன்றிச் சுரண்டுவதன் மூலம் வெள்ளயின நாடுகளுக்கான பொருளாதார வளம் கிடைத்துவிடுகிறது. மத்திய கிழக்கு, அராபிய நாடுகளின் பெட்ரோலிய வளங்களை கொள்ளை யிடுவதன் வழியாக ஆற்றல் மூலகங்கள் கிடைத்து விடுகின்றன.புதிய காலனிய முறை என்று சொல்லப்படும் இந்த சுரண்டல் முறையினால் உலகின் கருப்பின, ஆசிய, பழுப்பின மக்கள் உயிர்ச்சத்து இழந்து தினம் மடிந்து வருகின்றனர். இதற்கெதிராக மக்கள் போராட்டங்கள் எழும் போது அவை அழித்தொழிக்கப்பட்டுகின்றன.
உலக அளவிலான மக்கள் இனங்கள் “உழைக்கும் மக்கள்” என்ற அடையாளத்தை இழந்து வெறும் மனிதக்கூட்டங்களாகவும்வெள்ளையின நாடுகளின் இன்பமான, வளமையான வாழ்க்கைக்கு தடையாக உள்ள மந்தைகளாகவும் மாற்ற்ப்பட்டுள்ளனர். இயந்திரங்கள், உயர் தொழில் நுட்பங்களின் உதவியால் உலக முதலாளிகள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.அதனால் மக்கள் சக்தி அவர்களுக்குத் தேவையில்லை.உலகம் முழுதும் உள்ள இயற்கை வளங்களை வளர்ந்த நாடுகள்- வெள்ளையின நாடுகள் கொள்ளையிட இந்த மக்கள் தடையாகவே உள்ளனர். அத்துடன் தேசங்கள், நாடுகள் என்ற வகையில் இவர்கள் வளங்களைப் பங்கிட்டுக் கொள்ளுவதால் பெருஞ்சுமையாகவும் மாறிவிடுகின்றனர். மக்கள் அற்ற நிலங்கள், மனிதர்கள் அற்ற பூமிகள், பங்கிட்டுக் கொள்ளப்படாத இயற்கை வளங்கள் இவைதான் இன்றைய வெள்ளை இனமையவாத உலக அரசியல்-பொருளாதாரத்தின் பெரு விருப்பம். இந்தப் பெருவிருப்பத்தை அந்த நாடுகளின் மக்கள் பொது உளவியல்பாகத் தமக்குள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெள்ளை மேலாதிக்க குணமும், பிற இனங்களின் மீதான வெறுப்பும் மற்ற நாடுகளைக் கொள்ளையிடுவதையும், மற்ற இனங்களை அழிப்பதையும் நியாயப்படுத்தும் மன அமைப்பை அவர்களுக்குள் உருவாக்குகிறது. இந்த வெறுப்பும் குற்றவியல்பும் அவர்களின் தேசிய அடையாளமாகவும் மாறிவிடுகிறது. அவர்களின் அரசியல் பிற இனங்களை ஒதுக்கிய, பிற மண்ணின் மக்களைப் புறந்தள்ளிய அரசியலாக மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில்தான் இன்றைக்கான விடுதலை அரசியல் இனங்களின் அரசியலாக, மண்சார்ந்த மக்களின் அரசியலாக தமக்கெனத் தனி அடையாளத் தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் அது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலாக தலித் அரசியலாகத் தன்னை அமைத்துக் கொண்டுள்ளது. உலக முதலாளியமும், வல்லாதிக்கமும் இந்தியா வின் அடித்தள மக்கள் அரசியலை அழித்துவிட்டு சிறுபான்மை முதலாளிய அதிகாரத்தை நிறுவத் திட்டமிட்டதன் காரணமாக வளர்த் தெடுக்கப்பட்டதுதான் இந்துதேசியமும் மதவாத அரசியல் சக்திகளும்.
இவை இனவெறித் தன்மை கொண்டவை, மக்கள் வெறுப்பை நியாயப்படுத்துபவை, சமத்துவம் சமநீதி என்பவற்றை எதிர்ப்பவை.வெள்ளையின நிறவெறியும் இந்து சானாதன, ஆதிக்கசாதி உளவியலும் இணையும்தளம் இதுதான். இந்த மண், இந்த இயற்கை வளங்கள், மனித விழுமியங்கள் அனைவருக்கும் பொதுவானவை அல்ல, அதிகாரம் கொண்ட சிலருக்கே உரியவை.மற்றவர்கள் உழைத்தும் அடிமைப்பட்டும் மடிய வேண்டியவர்கள் என்ற அடிமைமுறை நீட்டிப்பு உளவியல்தான் இவற்றின் மையம்.வாழ்வுரிமையையும் சமத்துவத்தையும் மறுக்கும் வன்கொடுமை அரசியலுக்கு சாதி, வர்ண, சனாதன அமைப்பு முழுமையாக ஒத்துழைக்கிறது.
இது உலக மயமான இன்றைய சுரண்டலுக்கு ஒத்துழைத்து மண்ணின் மக்களைக் கொல்ல உதவுகிறது. உலக மயமான, சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, தனியார் மயமாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் மக்களுக்கு எதிரானவை மட்டுமல்ல, மக்கள் என்ற கருத்தியலுக்கும் அனைவருக்குமான வாழ்வுரிமை என்ற நெறிக்கும்கூட எதிரானவை.
1990-களில் நிலைபெற்று வளர்ந்த தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மக்கள் மறுப்பு, மக்கள் அழிப்புத் திட்டங்களுடன் இணைந்து வளர்ந்ததுதான் இன்றைய இந்துமைய-இந்துத்துவ அரசியல் அதிகாரம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே காலகட்டத்தில் புதிய எழுச்சி கொண்டு புதிய அடையாளத்துடன் உருவாகி வளர்ந்த தலித் அரசியலோ அதற்கு முற்றிலும் எதிராக அடித்தள மக்களுக்கான விடுதலை, அனைவருக்குமான சமத்துவம் என்பதை முன் வைத்ததுடன் வர்க்க அரசியல், இன அரசியல் என்பதுடன் சாதியையும் அரசியல் களத்தில் இணைத்தது. சாதி, இனம், வர்க்கம் என்ற மூன்று அரசியல் போராட்டக் களங்களும் இணையும் போது இன்றைக்கான விடுதலை அரசியலின் முழு பரப்பும் விளக்கம் பெறுகிறது. இந்தத் தளமே இந்திய விடுதலை அரசியலின் தொடக்கமாக அமைகிறது.
“அவர்கள் தமக்குள் உள்ள குறுகிய வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒரு மெய்யான நிலைமையின் அடிப்படையில் ஒன்றுபட்டு நின்றார்கள். கென்யாவில் இருக்கும் ஆப்ரிக்கர்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத் தப்பட்டிருந்தார்கள், காங்கோவின் ஆப்ரிக்கர்கள் பெல்ஜியத்தால் அடிமைப் பட்டிருந்தார்கள், கையானாவின் ஆப்ரிக்கர்கள் பிரான்ஸால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள், அங்கோலாவின் ஆப்ரிக்கர்கள் போர்ச்சுகீஸால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெள்ளை நிறமும் நீலநிறக்கண்களும் கொண்ட அய்ரோப்பியர்களால்தான் அடிமைப் படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தங்கள் பகைவர்கள் யார் என்பது தெரியவந்தது.கென்யாவில் நம்மை அடிமைப்படுத்தியிருந்தவர்கள்தான் காங்கோவை அடிமைப்படுத்தியிருந்தனர், காங்கோவை அடிமைப்படுத்தியிருந்தவர்கள்தான் தென்னாப்பிரிக்காவில் நம் மக்களை அடிமைப் படுத்தியிருந்தார்கள். அவர்கள்தான் தென் ரொடீஷியாவின் மக்களை, பர்மாவின் மக்களை, இந்தியாவின் மக்களை, ஆப்கானிஸ்தானின் மக்களை, பாகிஸ்தானின் மக்களை அடிமைப்படுத்தியவர்கள். கருப்பினம் எங்கெல்லாம் அடிமைப்பட்டிருந்ததோ அங்கெல்லாம் அவர்களை அடிமைப் படுத்தியிருந்தவர்கள் வெள்ளையினத்தவர்கள், கருப்பினம் எங்கெல்லாம் சுரண்டப்பட்டதோ அவர்களைச் சுரண்டியவர்கள் வெள்ளை யினத்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் பகைவர் ஒருவர்தான் என்பது தெரியவந்தது.” (மால்கம் எக்ஸ்)
அமெரிக்க கருப்பின விடுதலைத் தலைவர் மால்கம் எக்ஸ் 1963 ஆம் ஆண்டு கருப்பின மக்கள் விடுதலை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்சியில் ஈடுபடவேண்டும் என்பதை விளக்கப் பயன்படுத்திய வரிகள் இவை. அவர் தன் பேச்சில் சமரசமற்ற ஒரு புரட்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். நீக்ரோ புரட்சி (நீக்ரோ ரெவல்யூஷன்) நமக்குத் தேவையில்லை. அது அமெரிக்காவில் உள்ள அடிமை மனம் கொண்ட மக்கள் சொல்லும் புரட்சி. நமக்கு வேண்டியது கருப்பின மக்களின் புரட்சி (ப்ளாக் ரெவல்யூஷன்) என்று உரத்த குரலில் அறிவித்தார். எங்களுக்கு உணவுவிடுதிகளிலும், திரையரங்குகளிலும், பூங்காக்களிலும் பொதுக்கழிப்பறைகளிலும் இடம் வேண்டும் என்று கேட்பதா புரட்சி, அது இல்லை.“புரட்சியின் அடிப்படை நிலம்தான், நிலம்தான் அனைத்து விடுதலைக்கும் அடிப்படை. சுதந்திரம், நீதி, சமத்துவம் அனைத்திற்கும் நிலமே அடிப்படை.” என அறிவித்ததுடன் அதனை அடைவதற்காக உயிரையும் தரத் தன் மக்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். “கருப்பின மக்களின் புரட்சி உலகம் தழுவியது, அது உலக அளவில் நடக்க வேண்டியது.” என்பது அவரது அரசியல் முழக்கம்.
மால்கம் எக்ஸ் முன்வைத்த புரட்சிகர விடுதலைப் போராட்ட முறையை ஏற்றுக்கொள்ளாமல் கருப்பின மக்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதற்கான வேறுவழியிலான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய மார்டின் லூதர் கிங் கருப்பின மக்களுக்கான அதிகாரம் (ப்ளாக் பவர்) என்ற கொள்கை முழக்கத்தை முன் வைத்தார்.
“கருப்பின அதிகாரம் விரிவான ஆக்கபூர்வமான அர்த்தம் கொண்டது, கருப்பின மக்கள் அரசியல், பொருளாதார வலிமை பெற்று தங்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான அதிகாரம் அது. இந்த நியாயமான அதிகாரம் இன்று இல்லை.தெற்கு அமெரிக்க தோட்டங்களில் இருந்த காலம் முதல் இன்று சேரிகளில் வாழும் காலம் வரை குரலற்ற, அதிகாரம் அற்ற வாழ்க்கையில்தான் அவர்கள் அடைப்பட்டுள்ளார்கள். தம் வாழ்க்கையைப் பற்றி முடிவுசெய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை, வெள்ளை ஆதிக்கத்தின் அடிமையாக அவர்கள் நசுங்கிக் கொண்டுள்ளனர். அடிமைத் தோட்டங்களையும், சேரிகளையும் உருவாக்கியவர்கள் அதிகாரம் பெற்ற வெள்ளை யினத்தவர்கள். சேரிகளை மாற்றியமைக்கும் கருப்பின அதிகாரத்திற்கான போராட்டம் மாற்றத்தை விரும்பாத அடிமைத் தனத்தை நீடிக்க விரும்பும் சக்திகளுடனான போராட்டம்தான்.” என்ற மார்டின் அந்த மாற்றம் வன்முறையின் வழியில் உருவாக முடியாது என்று நம்பினார். வன்முறையான போரும் போராட்டமும் மிகப்பழமையானவை, அவை ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்காது என்ற கருத்து கொண்ட அவர் தன் மக்களுக்கு “வன்முறையற்ற புதிய போராட்டம்” என்ற பாதையை உருவாக்கித் தர முயன்றார். “கருப்பின மக்களின் அதிகாரம் அன்பும், சமநீதியும் கொண்டதாக, நேற்றைய இருளை நீக்கி, எதிர்காலத்தின் ஒளியைக் கொண்டுவருவதாக இருக்க வேண்டும்.” என்று இறுதிவரை சொல்லி வந்தார்.
இதற்குச் சற்று முன்பாக பிரான்ட்ஸ் ஃபானன் “அய்ரோப்பியர்கள் உருவாக்கிய புதிய அரசியல் முறைகள், சமூக நிறுவனங்கள், சமூக அமைப்பு முறைகளை விட்டு நாம் முற்றிலும் புதிய அமைப்பை உருவாக்க வேண்டும். ஆப்ரிக்க நாடுகளையும் தென்அமெரிக்க நாடுகளையும் மற்றும் ஒரு அய்ரோப்பிய அமைப்பாக மாற்றுவது நம் வேலையல்ல. நாம் புதிதான அமைப்பைக் கண்டறியவேண்டும். மனித குலம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் நாம் புதிதான அமைப்பைக் கண்டறியவேண்டும்.” என கருப்பின மக்களின் விடுதலையை மையமாகக் கொண்ட ஒரு புதிய உலக அரசியலை முன்வைத்தார்.
இவர்களுக்குமுன்பாக அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்குட்பட்ட மக்களையும் அடிமைச் சமூகத்தையும் ஆய்ந்து ஒப்பிட்டு “அடிமைகளைவிட தீண்டாமைக்குட்பட்ட மக்கள் மிகக்கொடுமையான நிலையில் இருந்துவருகின்றனர். மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு அடிமைத்தனத்தை விட தீண்டாமை அதிகக் கேடுவிளைவிப்பது.
தீண்டாமை அடிமைமுறையைவிடக் கொடியது ஏனெனில் அடிமையாக உள்ள ஒருவருக்கும் சமூக அடையாளம்- தனிமனித அடையாளம் உள்ளது. ஆனால், தீண்டாமைக்குட்ட ஒருவருக்கு மனித அடையாளம் மறுக்கப்படுகிறது.
அடிமைகளை வைத்துக்கொள்வது ஒருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது, ஆனால் தீண்டாமை அப்படியல்ல, இந்துவாக உள்ள ஒவ்வொருவனும் தீண்டாமையை செயல்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறான். அதனால் தீண்டாமை அடிமை முறையைவிடக் கொடுமையானது.” என்று அறிவிக்கிறார்.
அடிமை நிலை, இன ஒதுக்குதல், தீண்டாமை என்ற மூன்று வன்கொடுமைகளின் வலியிலிருந்து உருவான இந்தக் கருத்தியல்களுக்கு இடையில் உள்ள பொதுத்தன்மை ஒன்றுதான்: ஒடுக்குதல் மற்றும் ஒதுக்குதலுக்கு எதிரான போராட்டத்தை வடிவமைத்தல், அனைத்து விதமான ஒடுக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் எதிரான அரசியலைக் கட்டியெழுப்புதல். இந்திய அளவில் தலித் அரசியலும், உலக அளவில் கருப்பின அரசியலும் இணையும் இந்த களம்தான் உலக அளவிலான அனைத்துவகை விடுதலை அரசியலுக்கும் அடிப்படை என்பதை நாம் இன்னொரு முறை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வகை விடுதலைக்கான அரசியலில் மிக அடிப்படையானது கருத்தியல்களின் உருவாக்கமும் அதன் பரவுதலும். அடிமைப்பட்டுள்ள சமூகத்தின் பொதுநினைவில் விடுதலைக்கருத்தியலை பதிவித்தலும், அடங்கமறுக்கும் சமூக உளவியலை உருவாக்குதலும் போராட்டத்தின் பொருண்மையான ஒரு பகுதியே. ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னடையாளத்தை மாற்றியமைக்கும் சொல்லாடலும், கருத்தியல்களுமேஇந்தியச் சமூகத்தின் முதல்கட்ட விடுதலைச் செயல்பாடாக அமைகிறது. இவ்வாறு உருவாகும் கருத்தியல் இந்திய அரசியலில் தொடங்கி உலக அரசியலுடன் இணைவதாக இருக்கும் என்பதை நமது அரசியல் தலைமை தற்போது அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் கொண்டது.
தமிழக அரசியலில் சாதி மேலாதிக்கவாதமும், மொழித்தூய்மை, இனத்தூய்மை, பண்பாட்டுத் தூய்மைவாதங்களும் பல்வேறு வடிவங்களில் பெருகி, பரவியுள்ளதை பாசிசத்தன்மை கொண்டது என்று அறிவிப்பதன் மூலம் தலித் அரசியல்உலகஅளவிலான ஒடுக்கப்பட்ட, அடிமைப்பட்ட, விளிம்புநிலைகுட்பட்ட மக்களின் அரசியலோடு தன்னை இணைத்துக் கொள்கிறது. அத்துடன் ஒடுக்குகிற சக்திகள் தமக்குள் இணையும் போது, தமக்குள் கலக்கும் போது விடுதலைச் சக்திகள், மக்கள் சமூகங்கள் தமக்குள் இணைவதும் கலப்பதும்தான் இனிவரும் காலத்திற்கான விடுதலைச் செயல்பாடு என்பதையும் சொல்லித்தருகிறது.
ஆதிக்கமும் அடக்குமுறையும் உலகமயமாகியுள்ள இன்றைய நிலையில் விடுதலை அரசியலும், மக்கள் இயக்கங்களும் உலகமயமாவதற்கான தேவையை உணர்த்துகிறது “அனைத்தும் கலக்க வேண்டும், கலப்பதுதான் வளர்ச்சி” என்ற கருத்தியல்.
“இனத்தூய்மைவாதம் மிக ஆபத்தானது. இனத்தூய்மை சரியென்றால் சாதித்தூய்மையும் சரியென்றாகிவிடும். உலகின் இயற்கையே கலப்புதான். இனப்பெருக்கத்திற்கும் கூட அடிப்படை கலப்புதானே. கலப்புதான் எல்லாவிதமான முற்போக்குக்கும் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது. இனம் கலக்கவேண்டும், மொழி கலக்கவேண்டும், சாதி கலக்க வேண்டும், பண்பாடு கலக்க வேண்டும். எல்லாம் கலந்துதான் புதிய புதிய உற்பத்திகள் உருவாகின்றன, அதுதான் மேம்பாடு. உலகில் எந்த இனமும் தூய்மையாக இருப்பது கிடையாது, இருக்கவும் முடியாது. அது இயங்கியலுக்கு எதிரானது.
கார்ல் மார்க்ஸ் என்ன இனம், என்ன மொழி, என்ன நாடு என்பது முக்கியமில்லை, அவர் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக சிந்தித்திருக்கிறார், அதற்கான கோட்பாட்டை கொடுத்திருக்கிறார். எனவே அவர் நமக்கு வழிகாட்டியாகவும் தலைவருமாக இருக்கிறார்.
ஒடுக்குமுறைக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக, ஆதிக்கத்திற்கு எதிராக போராடவேண்டும் என்பதுதான் நமக்கு அடிப்படை. ஜனநாயகம், முற்போக்கு, வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக்கொண்ட கொள்கை எதுவாக இருந்தாலும், மனித நேயத்தை அடிப்படையாக் கொண்ட கொள்கை எதுவாக இருந்தாலும் அதுதான் நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும், அதைச் சொல்லுகிறவர்கள்தான் நமக்குத் தலைவர்கள். உலகம்தான் நமக்குக் களம்.” என்பது நமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கருத்தியல் வாசகம்.
இதற்கு முன்பு அந்நியமாதலும் அய்க்கியமாதலும் கட்டுரையில் “ஒட்டுமொத்த மானுடமும் ஒரே குலம்; ஒட்டு மொத்த நாடுகளும் ஒரே நாடு; ஒட்டுமொத்த மொழிகளும் ஒரே மொழி என உலகில் ‘யாவும் ஒன்றே’ என்னும் ஒற்றை அலகை உருவாக்கிட இயலாது. அது இயங்கியலுக்கு முரணானது. அவ்வாறு நிகழவே நிகழாது. பல்வேறு அளவுகள், பல்வேறு வடிவங்கள், பல்வேறு ஆற்றல்கள், பல்வேறு நோக்கங்கள் என மானுடம் மற்றும் பிரபஞ்சம் பன்முகக் கூறுகளைக் கொண்டிருப்பதால் பல்வேறு அமைப்புகள் உருவாவதும் இயங்கியல் போக்கேயாகும்.” (அந்நியமாதலும் அய்க்கியமாதலும் கட்டுரையில் தொல். திருமாவளவன்) எனப் பல்வேறு அமைப்புகள் இருப்பதற்கான நியதியை விளக்கியிருக்கிறார். அது அனைத்து அமைப்புகளும் தம் வேறுபட்ட அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் உரிமையைச் சுட்டுவது. ஒற்றை அடையாளத்திற்குள், ஒற்றைத்தன்மை கொண்ட ஆதிக்க அமைப்புக்குள் அடங்கிவிடாத பன்முக வாழ்க்கை முறைகளுக்கான நியாயம் பற்றியது. ஆனால் அந்த வேறுபாடுகள் தமக்குள்ளான சமத்துவமான நிலையை அங்கீகரித்து உறவு கொள்ளும்போது நிகழும் கலப்பு புதிய அடையாளமாக, விரிவான ஒரு விடுதலைப் பண்பாடாக மாற முடியும் என்பதைச் சொல்வதுதான் “அனைத்தும் கலக்க வேண்டும், கலப்பதுதான் வளர்ச்சி” என்ற கருத்தியல். இதனைச் சொல்வதற்கான அத்தனை பின்புலமும் கொண்டதாக உள்ளது தற்போதைய நமது தலித் அரசியல்.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற முழக்கம் தற்போது “இனம் கலக்கவேண்டும், மொழி கலக்கவேண்டும், சாதி கலக்க வேண்டும், பண்பாடு கலக்க வேண்டும்.” என்ற தெளிவான செயல் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கால அரசியல் பல்வேறு வகையாக விரிவுபடுத்தும், விளக்கமும் அளிக்கும்.
(நமது தமிழ்மண், ஏப்ரல் 2016)