ஐந்தாம் தலைப்பு
கவிதை உருவாக்கத்தை மொழிகள் இழந்து சில நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இந்தச் சில நூறு ஆண்டுகளில்தான் பேரளவிலான கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. பேரிறைமை அற்றுப் போன இடத்தில் பெரும் மனித உருவங்களை,பேருண்மைகளை நிரப்பிவிடலாம் என்ற மனிதர்களின் பேராசைதான் அதற்குக் காரணம். ஆனால் காப்பியங்கள், பெருங்காவியங்கள், தொன்மங்களின் முன் மனிதமையக் கவிதைகள் தூசாகிப் பறந்துவிடும் தன்மை கொண்டவை. இறைமையிழந்த மொழிகள் மனிதரை மையமாக்கிய போது கவிதைகள் தம் பேரின்பத் திளைப்பையும் இழந்து போயின. இறைமை கொண்ட உலகில் துன்பியல் இல்லை, மனிதமைய உலகில் துன்பியல் தவிர ஏதுமில்லை.
“பிறவாமை வேண்டும் பிறந்தாலும் ஒருநாளும் உன்னை மறவாமை வேண்டும்” என்று புலம்பும் மனதின் இன்பக் களிப்பை எந்த நவீனக் கவிதையும் புரிந்து கொள்ள முடியாது. “அரிதரிது மானிடர் ஆதல் அரிது” “பெரிது பெரிது புவனம் பெரிது” என்பதில் உள்ள மானிடரும் புவனமும் இன்றைக்கு இல்லவே இல்லை, அந்த புவனத்தில் வாய்க்கும் களிப்பும் முக்தியும் இன்றுள்ள மனித மனத்திற்கு இயலக்கூடியவையல்ல. இவ்வகைக் களிப்பைக் காதல் என்ற புனைவெழுச்சியால் மாற்றீடு செய்து விடலாம் என நினைத்த நவீனக் கவிஞர்கள் “நின்னைச் சரணடைந்தேன்” என்றோ ”ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதி முகம், ஊனமறு நல்லழகே” என்றோ இறைமையை மனிதப்பெண் வடிவாக்க முயன்றனர். அதனை ஆண்மையத் தன்மை கொண்ட பெண்ணுருவாக மாற்றினர். பெண்மை என்பது இன்பம் அல்லது பேரன்பு என்ற ஆண் ஏக்க வடிவம் பெண்மைக்கும் பொருந்தாது கவிதைக்கும் பொருந்தாது என்பதை அறியாமல். பெண்ணுரு பேரின்பம், பெண்ணிறைமை, தாய்த்தெய்வ நிலை எல்லாம் இனப்பெருக்க அறிவியல் முன் அழிந்து போகும் என்பது ஆண் கவிஞர்களுக்கு அறிமுடியாமல் போனது, பெண் கவிஞர்களுக்குப் புரியமுடியாமல் நின்றது. ஆண் கற்பித பெண்மைமையக் குரல் “இறைவன் மனிதனாகப் பிறக்க வேண்டும்” என ஒலிப்பது. “கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலரென்றானே கற்பனை செய்தானே.” என்ற நவீன கால ஆண் துன்பியல் காளிதாசனையும் கம்பனையும் துணைக்கழைக்கும். ஆனால், காப்பியங்கள் என வரும் போது “இயேசு காவியம்” எழுதும். அதன் நோக்கம் ஒன்றுதான் “இந்து மதம் அர்த்தமுள்ளது” என நிறுவிக்காட்டுவது. இதனை மீறும் நவீன கவிஞன் யாரும் தமிழில் இல்லை என்பதை பின்நவீன மொழிப்புலம் கொண்ட யாரும் ஒரு மணிநேரத்தில் புலப்பட விளக்கிவிட இயலும்.
இறைமையின் இடத்தில் நிலத்தையோ, தேசத்தையோ, மொழியையோ வைத்த கவிஞர்கள் மொழிவழியும் இசைவழியும் அழகை உருவாக்கிக் காட்ட இயலும்.
“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.” “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!” பகுத்தறிவும் பக்தியும் இணையும் இடம் பாடலுடன் இணையும் இடம் அபாரம்தான், ஆனால் தொன்ம மனம் தொன்மச் சடங்கு தீராமல் தொடர்கிறதே என்ன செய்வது.
அதற்குப் பின் வந்த இன்றைய கவிதைகள் “இல்லாமல் கரைந்து விட்ட” புனிதக் கவிதைகளைப் போன்மை செய்கின்றன அல்லது போலச் செய்கின்றன “கவிதை கடந்த” காலத்தில் இயங்கும் கவிதைகள், தெய்வங்கள் அற்றுப் போனதைக் கொண்டாடும் பக்திப் பாடல்கள் போல. கவிதைக்கு எதிர்நிலையில் மனிதப்புலன்கள் இயங்கத் தொடங்கியபின் மனிதர்களும் அதன் மையத்திலிருந்து கரைந்தே போனார்கள் என்பதை மறைக்கும் கவிதைகள். அந்த மறைவுப்புலன் கொண்ட தமிழ்க்கவிதை குடும்பம், குலதெய்வம், குடிதெய்வம், சாதிமனம், பக்தி, சடங்கு என அனைத்தையும் காத்தபடி நவீன வடிவம் போன்ற ஒன்றைக் கொண்டது. பகுத்தறிவு பேசும் ஒருவரைத் தந்தை எனவும் பெரியார் எனவும் பெயரளித்துத்தான் அதனால் ஏற்க முடியும்.
இன்றும் கவிதை உண்டு என நம்பி நவீனக் கவிகள் இயங்குவது ஒரு முற்று முரண் உத்தி, தன்நினைவற்ற பாவனை. யாரும் கவிதை போல ஒன்றை மொழி உருவில் உருவாக்குவதில் இன்பம் அடைய உரிமை உண்டு. அதுதான் எதிர்க் கவிதையின் அடிப்படை. பிரம்மம், இறை, தெய்வம், மனிதர் எல்லாம் புனைவு என்று அறிந்த பின்னும் இறைவுருவங்களையும் தொன்ம ஓவியங்களையும் உருவாக்கும் கலையின் நோக்கம் களிப்பும், திளைப்பும். அது போலத் தன் மொழியில் திளைக்கிறது பின்நவீனக் கவிதை, தன்னழிவின் தொடர் அழகில் திளைக்கிறது இன்றுள்ள கவிதை இயக்கம்.
தமிழ்க் கவிகள் பலரும் பல தெய்வப் பக்தர்கள், சாமியார் சமேதரர்கள், மகான்களின் மடத்தில் பாதம் கழுவிப் பணிசெய்யும் இளைய மடங்கள், தங்களையும் ஞானமும், தெய்வீகமும், சித்திகளும் கொண்டவர்களாக அறிவித்துக் கொள்பவர்கள், கிடாவெட்டிப் படையலிட்டு மார்க்வெஸ் விழா கொண்டாடுபவர்கள். ஆன்மிகமே அனைத்தும் எனக் குடிப்பொழுதுகளில் ஓயாமல் புலம்பித் திரிபவர்கள். இருந்தும் இருக்கிறது தமிழில் கவிதை.
இப்படியாகத்தானே தமிழக் கவிதை இருந்துகொண்டிருந்த காலத்தில்தான் “பின்நவீனக் கவி நான்” என ஒரு பேச்சுக்குச் சொல்லிப் பார்த்தேன். அது ஒரு பெரிய கதை, 1985 இல் தொடங்கியது. பின் நவீன நிலையில் கவிதை சாத்தியமா. பின்நவீன காப்பியம், பின்நவீன நெடுங்கவிதை என எல்லாம் எழுதிப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பிரேதா என்ற பெயரில் வெளியிட்டது கிரணம். கவிதையைப் படித்தவர்கள் படிக்காதவர்கள் என சிறுபத்திரிகைச் சந்திப்புகளில் அதையே பேசத்தொடங்கினர். பிரேதம், இருள், கொலை, தலைமறைவு, உருமாறுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல், பகலில் பெண் உடலாகவும், இரவில் ஆண் உடலாகவும் இருத்தல், முகங்களை ஒருவருக்கொருவர் பருவங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளுதல் என 1985 இல் அது அதிர்ச்சிப்புயலாய் அலைக்கழித்தது. மனநோய் பீடித்த ஒரு பையன்தான் இத்தனை வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என புரட்சிகர இலக்கியவாதிகளும் இதை எழுதுவது ஆணுரு கொண்ட ஒரு பெண் என்றும் பலவாறாகப் பேசிக்கொண்டனர். தருமு சிவராம் என்ற பெயரில் அறியப்பட்ட கவிஞர் பிர்மிள்/பிருமிள் என்பது போல இருந்த தன் பெயரை பிரேமிள் என மாற்றிக்கொண்டு நபும்சகன் ஒருவன் எழுதும் எதிர்க்கவிதைகளை படித்துவிட்டு என்னிடம் அது பற்றிக் கருத்துக் கேட்க உனக்கு என்ன துணிச்சல் என்று கிரணத்தை அதன் பதிப்பாளன் முகத்தில் வீசியடித்தாராம். பாவம் மக்கா, அப்பொழுது எனக்கு 22 வயது கவிதை எழுத தாளும் பேனாவும் பதுங்கி எழுத ஒரு இடமும் போதும் என்று நம்பியிருந்த எனக்கு ஆணுறுப்பு வலிதாகவும் பெரிதாகவும் இருந்தால்தான் கவிதையெழுத முடியும் அதுவும் சர்ரியலிசக் கவிதையெழுத முடியும் என்று புரியத் தொடங்கியது. உறுப்பே வேண்டாம் உருவமும் வேண்டாம் என எழுதிக் கொண்டே இருக்கிறேன் தினம் தினம் இன்று வரை.
தனிமனிதர், தனித்த மனித நிலை என எதுவும் சாத்தியமில்லை. ஒரு மனிதர், ஒற்றை அடையாளம், ஒற்றைப் பண்பு, ஒற்றைப் பால், ஒற்றை நடத்தை, ஒற்றை அழகியல், ஒற்றை நேசம் என்பதெல்லாம் வன்கொடுமை என அறிந்த பின் (இதனை அரசியல் சொல்லாக என் அன்புத் தோழர் தொல்.திருமாவளவன் மாற்றியமைத்ததை அவர் நூலில் காணலாம்) ஏட்டை எடுத்து எதை எழுதினாலும் அது தொன்மக் கவிதையுடனும் வன்முறை அழகியலுடனும் பித்த அரங்கியலுடனும் தொடர்புருவம் கொள்வதை யார்தான் தடுக்க முடியும். எனக்குள் இருக்கும் பிரேதாவை ஒரு பிரேம் கவனிக்கத்தான் முடியும் கட்டுப்படுத்த முடியாது. ஆத்மார்த்தி, அதீதன் என்ற என் எழுத்துருக்கள் பிரேம் கவிதைக்குள் வரும்போது நீதானே நாங்கள் என்கிறார்கள்.
எல்லோரும் மொழியைத் தாம் இயக்குவதாகவும் எடுத்தாள்வதாகவும் நினைத்தே கவிதை என ஒன்றை எழுதத் தொடங்குகிறார்கள், ஆனால் நடப்பதோ அதற்கு முற்றிலும் மாறானது. எனக்கு இரண்டு பெயர்கள் புஷ்பராஜ், பிரேமானந்தன், இரண்டு பெயரையும் பாதியாக்கி அழைப்பதுதான் பழக்கம். பிரேமா, புஷ்பா என அழைத்து கோபமூட்ட முயல்கிறவர்களிடமிருந்து காத்தவர் என் முதல் தோழி. அவர் சொன்னார் பெண்ணாக இருப்பது உனக்கு அவமானமா, பெருமை கொள், எழுது தினம். மொழி அழிக்க இருந்த எனது அடையாளத்தை மொழியால் மீட்டுத் தந்தார் அவர். அவர்தான் சொன்னார் ஒரு நாள் நான் நீயாவும் மறுநாள் நான் நீயாகவும் இருந்து எழுதிப்பார். எழுதிப்பார்த்தேன், இன்றும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
மனித வாழ்வும் மற்றுள்ள பொருள்களும் அர்த்தமோ நோக்கமோ புனிதமோ பொருள் தரும் எதுவுமோ அற்றது. அது புனைவில் கூட அடங்காத வேறு ஏதோ ஒன்று, அது பலவானது என ஓரளவு அறிந்த பின்நவீன மனமும் மொழியும் இன்றும் கவிதைகளை உருவாக்குவதற்கும் காரணம் உள்ளது. நிகழ்தல், நிகழ்வின் வழி நீளுதல். புனைவிலும் அடங்காத புவனம், கனவிலும் அறியாத காட்சிப் புயல்.
கவிதையின் மையம் அழிந்ததை அறிந்த புலனில் இருந்து கவிதை நிகழ்த்தப்படுகிறது. கவிதையின்மையின் இயல்பை விளக்கும் மொழி வடிவம்தான் இன்றைய கவிதை, அது இயல்பிலேயே எதிர்க்கவிதை. யாப்பு, பாவினம், சந்தம், ஒலியழகு என எதனையும் அது பயன்படுத்தலாம், அல்லது எதுவும் இல்லாமல் புதிய சில கவிதை வடிவங்களை உருவாக்கலாம், அது இணைநிலைப் பிரதியாகவோ எதிர்நிலைப் பிரதியாகவோ மாறலாம்.
கவிதையும் மனிதரும் அற்றுப்போன ஒரு உலகில் கவிதை மற்றும் மனிதரின் இருப்பை, அதாவது இன்மைக்குள் அவை இருக்க முனைவதை நிகழ்த்திக் காட்டுகிறது பின்நவீனக் கவிதை. நிகழ்த்திக் காட்டுகிறது, ஆனால் நிகழ்வதில்லை என்பதுதான் இன்றைய கவிதையின் தொழில் முறை ரகசியம்.
நிகழ்தலின் இன்பம் அல்லது ஏதும் நிகழமுடியா பெருந்துயரம் எனக் கவிதையில் உருவாகலாம். கவிதை தனது இன்மையையும் சாத்தியமின்மையையும் தானே தனது வடிவில் நிகழ்த்திக் காட்டும் மொழிவடிவம், இதுதான் இன்றைய கவிதை. கவிதை தன்னைத் தானே திறனுடன் நிகழ்த்திக் காட்டும், பல வடிவில் அது உருவம் காட்டும், எது உனது மெய் வடிவம் என்றால் திகைத்து நின்று உறையும் அல்லது கரையும்.
கவிதை இறந்து விட்டது, கடவுள் இல்லாமலானது, மனிதர், மறைபொருள் என்பதெல்லாம் அழிந்து விட்டன என்றெல்லாம் அறிவித்துவிட்டு அமைதியாக இருப்பதும் அழிவு. இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது, எவ்வாறு அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நிகழ்த்திக் காட்டும் போது கலையும் படைப்பும் உருவாகின்றன, தொன்மை கடந்த நிலையில் தம்மை உருவாக்கிக் கொள்கின்றன, தொன்மம் போலத் தோன்றவும் செய்கின்றன. மாற்றங்களை அழித்து மனிதர்களின் மூளைகளை ஆயுதக் கிடங்காக்கிய இன்றைய மானுட அரசியலுக்குள் உயிருடன் இருப்பதே பெரும் கலகம், தினம் சில கொலைகளைச் செய்யாமல் இருப்பதே பெரும் புரட்சி, மனித மாமிசம் புசிக்காமல் இருப்பதே பேரன்பு எனக் கேட்கும் குரலை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடிவதில்லை. இது இன்மையின் எழில் உருவாக்கம், பின்நவீனப் பெருந்திளைப்பு. சொல் அற சும்மா இரு என ஓயாமல் சொல்லிக் கொண்டோ பாடிக்கொண்டோ சில சமயம் சைகளால் நடித்துக் கொண்டோ இருப்பது.
ஆன்மீகம் என்ற கற்பிதம் பற்றியும், அன்பு என்கிற தன்னுருவாக்கக் கேளிக்கை பற்றியும் எழுதும்போது அதுவே ஆன்மீகம் போலவும் பேரன்பு போலவும் தோற்றம் தரும் அவ்வளவே. அதனை நம்பிக்கொண்டு நானும் மகான்தான் நானும் மகாகவிதான் என்று சொல்லிக் கொண்டு அலைந்தால் அது தொன்மத் துன்பியலில் கொண்டு சேர்த்துவிடும். இந்தத் தற்புனித நிலையுடன் எனது பெயரும் இணைந்திருந்த போது தாளமுடியாமல் தவித்தேன், தப்பித்து ஓடி ஒளிந்தேன், கவிதைகளைச் சில காலம் தவிர்த்தேன். அதன் இடைக்கால (2007-2019) தொடர்வலி கடந்து இப்போதுதான் உயிர்த்திருக்கிறேன். சொல்லெரிந்த வனமாகக் கிடந்திருக்கிறேன் பல காலம், இப்போதுழுது சொல்பெருகும் வனத்திற்குள் நுழைந்திருக்கிறேன்.
உருவாக்கம் அழகு, உருவாக்கம் இன்பம், பின்நவீனக் கவிதை பொருளழிவின் திளைப்பு, தான் அற்ற நிலையறிதலின் பெருங்களிப்பு. அதனையே எனது கிரணம் கவிதைகளில் (1986-89) பிரேதா என்ற பெயருடன் நிகழ்த்திக் காட்டினேன். தொன்மக் கவிதையியல், தீமையின் அழகியல், பித்துநிலை பெருங்கொண்டாட்டம், பாலியலின் இருநிலைத் துன்பியல், தானழிதலின் மொழி நிகழ்வு என பலவற்றைக் கவிதைகள் வழி தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அதனால் எதையும் நான் பெறவும் இல்லை இழந்து போகவுமில்லை. எனக்கு மீந்ததெல்லாம் எனது கவிதைகள் மட்டுமே.
இவை எதிலும் நான் இருப்பதுமில்லை இல்லாமல் போவதுமில்லை. கிரணத்திற்குப் பிறகு வந்த தமிழக் கவிதையில் மட்டுமல்ல புனைவெழுத்து, புனையா எழுத்து அனைத்திலும் பிரேதா, அதீதன், ஆத்மார்த்தி, அரூப சைத்திரிகன், பிரேதன் என்ற பித்துருவங்கள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள் பிரேம்தான் இந்த உருவங்களில் அலைகிறான் என்பதே பலருக்குத் தெரியாது. இந்த உருவங்களை அறியாமல், அவற்றின் வடிவமும் இயக்கமும் அறியாமல் அவற்றின் சாயல்களை மட்டும் தம் எழுத்தில் படியவிட்ட பலர் இரக்கத்திற்குரியவர்கள், அதன் பெருந்திளைப்பைத் துய்க்க இயலாமல் பெருஞ்சுமையைச் சுமந்து கிடக்கிறார்கள். பிரேதா என என்னை வாசித்தவர்கள் இரண்டு பிரிவாய்ப் பிரிந்தனர், பெருங்கவிதை அல்லது பெருந்தீமை என எதிரெதிர் நிலையில்தான் என்னை அடையாளம் கண்டனர்.
பிரேதா என்ற பெயரையும் அதீதன் என்ற பெயரையும் இன்றும் புதிதாகப் புரிந்து வாசிக்கும் யாரும் காதலின் மிருகவடிம் கொள்கின்றனர். பிரேம் எழுத்தில் காதல் என்பது வேறு ஒன்றுமில்லை: தான் மற்றும் பிற பற்றிய கற்பிதம். உங்கள் இறப்பையும் அழிவையும் கண்ணீரையும் வலியையும் தம் மகிழ்வாக உணராத மற்றொரு உடலுடனான இடைக்கால இணக்கம். அது மொழியாகத் திரியும் போது கவிதை நிகழும்.
மொழியின் சொல்லும், ஓசையும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் எந்த ஒரு உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர அதற்கு வேறு எதுவும் தெரியது, சொல் அதுவே பெரும் திளைப்பு, சொல்ல முடியாதவற்றிற்குள் பதுங்கும் பெருங்களிப்பு.
தன்னை அறிதல், அறிவித்தல் என்ற நவீன நம்பிக்கையும் பிரம்மத்தை அறிதல் பிரம்மத்தை அறிவித்தல் என்கிற தொன்ம நம்பிக்கையும் ஒரு நூலிழையின் இருமுனைகள். தன்னழிவு அல்லது தானற்ற தன் நிகழ்வு இதனைச் செய்து பார்ப்பதுதான் கவிதை என உணராமல் பின்நவீனக் கவிதையியல் வசப்படாது. தன்னழிவின் மொழி வடிவம், மொழியடையும் பிறவடிவம், தன்னைப் பலவாக்கும். தன்னை உறுதி செய்யும் முயற்சியெல்லாம் தன்னுறைவாகும். இந்தத் தன்னுறைவே எனது இடைக்காலத் துயரம். இடையில் நிகழ்ந்து முடிந்த எனது துயரம் கடந்து, இடைக்கால இருள் வெளியில் இருந்து தப்பிப் பலவாய் மீந்துள்ள மொழிகொண்டு மீண்டும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இஸ்லாமியக் குடியிருப்பு ஒன்றை நோக்கி தீப்பந்தங்களுடனும் கொடுவாளுடனும் ஓடிய கூட்டத்தில் பத்து வயதும் முடியாத இரண்டு மூன்று சிறுவர்களைப் பார்த்துப் பதுங்கித் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறேன் ஒரு முறை, இருந்தும் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஒர் ஆண்டு உலகப் பெண்கள் தினத்தன்று ரிக்ஷாவில் செல்லும் பெண்களை எல்லாம் நிறுத்தி தொட்டுக் கொடுத்து போ, போ எனச் சிரிக்கும் பைக் இளைஞர்களைக் கண்டு பயந்து காவல் நிலையத்தில் போய் முறையிட்டேன், காவல் அதிகாரிகள் “அதெல்லாம் ஒன்னுமில்ல புரபொசர் சாப் ஹோலி மாதிரிதான் இதுவும் வருஷம் ஒரு தடவ இப்படித்தான் நடக்கும், பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க, தொடுவாங்க மத்தபடி ஒன்னும் செய்ய மாட்டாங்க, நீங்க பத்திரமா வீட்டுக்குப் போங்க” என்றார்கள். வெளியே நின்ற இரண்டு மூன்று இளைஞர்கள் “கியா அங்கிள்ஜீ இதர் ஆயியே” என மிரட்டிச் சிரித்தார்கள். நடுக்கத்துடன் சைக்கிளில் தப்பி வீடு வந்து சேர்ந்து உள்ளே பதுங்கினேன், அன்றிலிருந்து இன்னும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு பதினைந்து பக்கத்துக்கு கவிதைகள் அனுப்பி வைத்தேன் அதன் கவிதைப்பகுதியை பார்த்துக் கொள்ளும் ‘ஒருதொகுதிக் கவிஞர்’ மாதம் கழித்தும் அதனைப்படிக்கவில்லை என்று சொன்னாராம். எனக்கே இந்த நிலையென்றால் புதிதாய் எழுதும் கவிக்கு என்ன நடக்கும் நினைத்துப் பார்த்து உறக்கச் சிரித்தேன். இருந்தும் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் தினம் ஒரு கவிதை. இவன் வெறும் மொழிபெயர்ப்பாளன்தான் என்ற நகைப்பொலியையும் சிலரிடம் கேட்டிருக்கிறேன், இருந்தும் வாரம் ஒரு கதையை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன், முதல் தொகுதி வர உள்ளது.
சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இன்னும் ஒரு ஆறுமாதம் மருந்து சாப்பிடுங்கள் மீண்டும் பார்க்கலாம் என்ற மருத்துவர் விடைபெறும் போது எழுந்து கையைப் பற்றி “எழுதுங்க புரபொசர், மலையாளத்தில் எழுதினால் நானும் படிப்பேன்” என்றார். ஆறு ஆறு மாதங்களாகத் தொடர்ந்த அந்த சிகிச்சைகள் கடந்தும் இன்னும் உயிர் வாழ்வதுடன் ஏனோ தமிழிலேயே எழுதிக்கொண்டிருக்கிறேன். இனி தொடரும் எனது எல்லை தாண்டும் இலக்கிய ஆக்கங்கள்.
அந்த வரிசையில் பிரேம் என்ற பெயர் பதிந்த என் முதல் தொகுப்பு இது. பிரேதாவாக இருந்து பிரேமாக மாறியவன் முழு உருமாற்றம் இது. அதனால் பிரேதாவின் பிரதிகளையும் கிரணம் (1985-90) கவிதைகளையும் பிரேமாக இருந்து வெளியிட வேண்டும், அது விரைவில் அச்சாகும்.
இத்தொகுதி ஐந்து தலைப்புகளைக் கொண்டது, நான்கு தலைப்புகள் மட்டும்தான் அட்டையில் உள்ளன. ஐந்தாவது தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் தப்பி மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதி வரைக்கும் தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள், கண்டறிவீர்கள்.
பிரேம்
தில்லி பல்கலைக் கழகம்
15, தீம்பனி மாதம், 2019