ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும் – பிரேம்
பெண்ணியம், பெண் அடையாளம், பெண்மொழி, பெண்ணெழுத்து, பெண்ணரசியல், பெண்ணிலை அறிவு என்பவை பற்றிய நெடிய உரையாடல்களும் கோட்பாட்டு மோதல்களும் கருத்தியல் போராட்டங்களும் உலக அளவில் நிகழ்ந்து அடுத்த கட்ட நிலையை அடைந்துள்ளன. புதுப்பிக்கப்பட்ட அறிவுருவாக்கம், தத்துவம், பகுப்பாய்வு முறைகள், பொருளுரைப்பு முறைகள் அனைத்திலும் தற்போது பெண்ணிய மறுபார்வைகள் மறுக்க முடியாத பகுதிகளாக மாறியுள்ளன.
அரசியல், பொருளியல், சமூகவியல், உளவியல் என அனைத்து வகையான மனிதவியல் புலங்களும் தற்போது பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளை மறுத்தோ மறந்தோ இயங்குவதில்லை, இயங்க அனுமதிக்கப்படுவதில்லை. கலை-இலக்கிய கோட்பாட்டுத் துறைகளும்கூட பெண்ணிய-பெண்ணிலைக் கேள்விகளால் “சிதைவாக்கம்” செய்யப்பட்டு ஆண்மைய-ஆண்முதல்வாத கொடுங்கோன்மைக்கு எதிரான சொல்லாடல் செயல்பாடுகளாக மாற்றமடைந்துவிட்டன. தன்னைத்தானே மையப்படுத்திக் கொண்டு, தன்னால் உருவாக்கப்பட்ட “பொருள் சுமக்கும் உயிர்ப் பொருளாகவும்” தனது வரையறைக்கும் விளக்கத்திற்கும் உட்பட்ட தன்னிலை அற்ற புனைவு உடலாகவும் பெண்மை-பெண்ணிலை என்பதை வைத்திருந்த ஆணாதிக்க, ஆண்மைய அறிவுப் புலங்கள் அனைத்தும் தற்பொழுது தகர்க்கப்பட்டு விட்டன.
விடுதலைக் கருத்தியல்களின் ஆற்றல் மிக்க தொடக்கமாக அமைந்த மார்க்ஸியமும் அதன் விரிவாக அமைந்த பிற கருத்தமைவுச் செயல்திட்டங்களும் பெண்ணியக் கேள்விகள் மற்றும் “மறுப்பாய்வுகள்” வழியாக மறு உருவாக்கம் செய்யப்பட்ட பின்பே தற்காலத் தன்மை கொண்டதாக மாற முடிந்தது.
பாலினப் பார்வையும், பாலரசியல் நோக்கும் அற்ற பாலினச் சமத்துவத்தை ஏற்காத எந்த ஒரு கருத்தியல் – கோட்பாட்டு அணுகு முறையும், அறிவாய்வு முறையும் தற்காலத் தன்மை அற்ற பழமை வழிபாட்டு நோயாக மட்டுமே எஞ்சியிருக்கும். வர்க்க விடுதலை, இன விடுதலை, சாதி ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என அனைத்து வகையான விடுதலைக் கருத்தியலுக்குள்ளும் பெண்ணியத்தின் கோட்பாட்டு, பகுப்பாய்வு முறைகள் செறிவான வழிகாட்டு நெறிகளாக உள்வயப்படவில்லை யெனில் அவையும் ஆண் மேலாதிக்க பெருங்கதையாடல்களாவே இருக்கும் என்ற புரிதல் உருவாகி விட்டது. சூழலியல், அதிகார மையங்களின் தகர்ப்பு, அடையாள அரசியல், உடல் அரசியல் என்பவற்றில் பன்மைத் தன்மை கொண்ட பெண்ணிய இயங்கியலே முன்னகர்த்தும் சக்தியாக அமைந்துள்ளது.
பெண்கள் மீதான வன்முறைகள், பெண்மை மீதான கருத்தியல்-பண்பாட்டு அடக்கு முறைகள், பெண்மை பற்றிய பகுத்தறிவற்ற கீழிறக்கம் என்பவை இந்தப் பெருந்தகர்ப்பு பற்றியும், மறு கட்டமைப்பு பற்றியுமான அறிவின்மையால் தொடர்கிற அறிவுமறுப்புக் கொடுங்கோன்மைகளே தவிர வேறில்லை. இந்தக் கொடுங்கோன்மைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான நெடிய போராட்டத்தைக் கருத்தியல் தளத்திலும் சமூக-அரசியல் தளத்திலும் தொடர்ந்து முன்னெடுப்பதே பெண்ணியச் செயல்பாடுகளாகவும், பெண்ணிய இயக்கங்களாகவும் இருந்து வருகின்றன.
மொழிச் செயல்பாடுகளிலும், குறியீட்டுச் செயல்பாடுகளிலும் உள்ளீடான தலைகீழாக்கத்தையும், உடைப்பையும் உருவாக்குவது பெண்ணிய அரசியலின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. அதனைக் கலை, இலக்கிய, ஊடக மொழிகள் வழியாக நிகழ்த்த பெண்கள் தம் இருப்பை, தமக்கான இடப்பகிர்வை அவற்றில் பெற்றாக வேண்டும். ஆணாதிக்க மொழி, ஆண்மையக் குறியமைவு போல வரலாற்றால் உறுதி செய்யப்பட்ட வன்முறைகளை வழிமொழிந்து தமக்கான கருத்தியலைப் பெண்கள் உருவாக்கிக் கொள்ள முடியாது. ஒவ்வொன்றையும் எதிர்த்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் மறுபார்வைக்கு உள்ளாக்க வேண்டும், ஒவ்வொன்றையும் உடைத்து மறுகட்டமைப்பு செய்தாக வேண்டும், ஒவ்வொன்றையும் சிதைவாக்கம் செய்து புதிய பொருளுருவாக்கத்தை நிகழ்த்தவேண்டும், ஒவ்வொன்றின் மையத்தையும் பிளந்து புனைவுகளை வெளிக் கொணரவேண்டும், தம் மீது சுமத்தப்பட்ட வரையறைகளை உடைத்து நொறுக்கவேண்டும், தம் அனுமதியின்றி தம்முள் நிறைக்கப்பட்ட அடையாளங்களை வெளியேற்ற வேண்டும், இன்னும் பல தளங்களில் பெண்கள் தாம் இந்த உலகில் இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்துவதற்கே வன்மையான ஊடுறுவலைச் செய்தாக வேண்டும். ஒருவகையில் ஆண்வயமான மனிதக் கட்டமைப்புகள் அனைத்தையும் தலை கீழாக்கம் செய்யும் சிக்கலான, கடினமான போராட்ட வாழ்நிலை இது.
ஆண் நிலை அழிப்பும், ஆண்மையத் தகர்ப்பும் இந்தச் செயல்பாடுகளூடாக நிகழவே செய்யும். ஆண்மையம் அற்ற ஆணாதிக்கமற்ற ஆண் தன்னிலையைக் கட்டமைப்பதன் வழியாகவே ஆண் நிலை என்பது தன்னை அறிவு வழி அமைந்த சமூகத் தன்னிலையாக உருவாக்கிக் கொள்ள இயலும். இந்தக் கட்டுமானத் தலை கீழாக்கம் பற்றிய அறிவைப் பெறாதவர்கள் இன்றைக்கான நவீன அரசியல், மனித உரிமைச் செயல்பாடுகள், ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிப் பேசுவதற்குரிய தகுதியைப் பெறமுடியாது. நவீன தேசம், நவீன அரசு, நவீனப் பொருளியல், தொழில் நுட்பம், ஊடகப் பொறியியல் என்பவை உருவாக்கித் தந்த வசதிகளை, மனித உரிமைப் பாதுகாப்புகளைப் பெற்றுக் கொண்டு அவற்றின்வழி கிடைக்கும் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்த போதும் இவர்கள் மரபான அதிகாரக் கருத்தியல், சமத்துவம் மறுக்கும் மதஅதிகார உளவியல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
நவீன அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த எந்த ஒரு அரசியல் செயலும் பெண்ணிய உரிமைகளை மறுத்து இயங்க முடியாது என்பது உலகமயமான மனித உரிமை- குடியுரிமை அரசியலால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நெறிகள், குடிமைச் சட்டங்கள், பொருளாதார, சமூகத் திட்டமிடுதல்கள் என அனைத்தும் பெண்ணிய-பெண்ணிலை நிபந்தனைகளை நிறைவு செய்யாமல் இனிச் செயல்பட முடியாது. சட்டம், நீதி, அரசியல் மதிப்பீடுகள், வழிகாட்டு நெறிகள் அனைத்திலும் பெண்ணிய-பெண்ணிலைக் கருத்தியல், அறிதல் முறைகள் தமது நெடிய போராட்டங்களின் வழியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.
பத்தாண்டுகள் முன்புவரை ஒரு அலுவலகக் கட்டிட வரைபடத்தில் பெண்களுக்கான வேலையிடம், ஓய்விடம், சுகாதாரப் பகுதி என்பவை இடம் பெறுவதில்லை. தற்போது பெண்களுக்கான முறையான புழங்கும் வெளியில்லாமல் எந்தக் கட்டிட அமைப்பும் இருக்க முடியாது. அப்படி அமைந்தால் அது சட்ட விதிப்படி அனுமதி பெறத் தகுதியற்றது. உலகமயமாக்கலின் பின் உள்ள திட்டமிடல்களில் பெண்ணிலை இதுபோன்ற “பருண்மை இடங்களைப்” பெறுவதற்கே பெரும் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பொது வெளிகளில் கருப்பின மக்கள் தமக்கான இடத்தைப் பெற நிகழ்த்தியதை விடக் கடினமானதும், தமது சம வாழ்வுரிமைகளுக்காக இந்திய ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றும் நிகழ்த்தி வரும் போராட்டத்தை விடச் சிக்கலானதுமான போராட்டம் இது.
தற்போதுள்ள உலகமயமான நவீன தேசங்களின் அரசியலில் பெண்ணிய-பெண்ணிலைக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் பெண்ணிய அரசியலை நீக்கி வைத்து அவை இயங்கமுடியாத நிலையை பெண்ணியப் போராட்டங்களே உருவாக்கின.
மதங்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காற்று முறைகள், குடும்ப விதிமுறைகள் என்பவை இந்தச் சமஉரிமை அரசியல் நெறிகளை ஏற்க முடியாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றின் தொடர் வன்முறைகள் பெண்களை மேலும் மேலும் அடிமைப்படுத்த, அழுத்தி நசுக்க புதிய புதிய தந்திர வடிவங்களை எடுத்து வருகின்றன. பெண்ணிய-பெண்ணிலைக் கோட்பாடுகளும், சொல்லாடல் செயல்பாடுகளும், பெண்ணிய இயக்கங்களும் இவற்றைத் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதால் பெண்ணியம் என்ற அடையாளத்தையே முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற கொடுவெறியைப் பாலின அதிகார அமைப்புகள் தமக்குள் நிறைத்து வைத்துக்கொண்டுள்ளன.
ஆணாதிக்க உளவியல் கொண்ட தனிமனிதர்களும், ஆண்மையக் கருத்தியல் கொண்ட கலாச்சார, குடிமை மரபுகளும் நவீன அமைப்பின் உள்ளிருந்தபடி மிகுந்த வன்மம் கொண்டு பழிதீர்க்கும் செயல் திட்டங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. குடிமைச் சமூகத்தில், மரபுத் தளங்களில் ஆண்மைய- ஆணாதிக்க வன்கருத்துக்கள் தம் அதிகாரத்தைத் காப்பாற்றிக் கொள்ள அறிவு மறுப்பு உத்திகளைத் தொடர்ந்து கையாளுகின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், பொதுப் பேச்சுக்கள் என அனைத்திலும் இந்த ஆண்மைய அறிவு மறுப்பு தொடர்ந்து செயல் படுத்தப்படுகிறது. பக்தி, சமயம், சடங்குகள், புராதனப் புனிதவாதம் என்பவற்றை நுண்வடிவிலும், உருப் பெருகிய வடிவிலும் பரப்பியபடி பெண்ணிலை -பெண்ணுடல் மீதான தன் வன்கொடுமைகளை நிகழ்த்திவருகின்றன ஆணாதிக்க அமைப்புகள்.
தற்போது நிகழ்த்தப்படும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெண்ணுரிமைப் போராட்டத்திற்கு எதிரான, பெண்கள் பெறமுயலும் தன்னடையாளத்திற்கு எதிரான ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.
வீடுகள், வேலையிடங்கள், பொதுஇடங்கள், நிறுவனங்கள், மதவழிபாட்டுத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகத் தொழிற்கூடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்களின் உடல் மீதும் தன்மதிப்பு மீதுமான வன்கொடுமை எந்த நொடியிலும் நிகழலாம் என்ற நிலை பெண்களை அச்சுறுத்தியபடி உள்ளது. தீண்டாமைக்கு எதிரான எதிர்ப்பும் போராட்டமும் நிலைகொள்ளும் இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள், உடல் சிதைக்கும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கும் பிற பொதுவெளிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உடல், உளநிலை வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவகை ஆண் உளவியல்தான், அடங்க மறுக்கும், தன்னடையாளம் கோரும் பகுதியினர் மீது தாக்குதல் தொடுக்கும் வன்மம். மற்றொரு தளத்தில் உடல் மீதான வன்முறையைவிட உளவியல் வகையில், குறியீட்டு நிலையில், மொழி வடிவில், காட்சி பிம்ப வடிவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளின் அளவும், விகிதமும் மிக மிக அதிகமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகப் பெண்கள் தினத்தன்று பெருநகரங்களில் சில ஆண்கள் கூட்டம் பெண்களை வலிந்து தீண்டியும், உடலை அவமதித்தும், இழிவான சைகைகளைச் செய்தும் தம் வெறிச்செயலில் பெருமை கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. டெல்லியில் வேறு எந்த நாளைவிடவும் உலகப்பெண்கள் தினத்தன்று பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகள், குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகமாகப் பதிவாகிறது, பதிவாகாத குற்றங்கள், வன்கொடுமைகள் இதைவிட அதிகமாக இருக்கும். எண் பலகையில் வண்ணத்தைப் பூசி மறைத்த இருசக்கர வாகனங்களில் வந்து வன்முறையை நிகழ்த்திவிட்டு மறைந்த ஒரு கூட்டத்தை நான் நேரில் கண்டு செயலற்று நின்றிருக்கிறேன். மாணவிகள் பலர் பெண்கள் தினத்தன்று தம் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிச் சொல்லிக் குமுறியதைக் கேட்டிருக்கிறேன். பெண் விடுதலை, பாலினச் சமத்துவம் பற்றிய வெறுப்பு, வன்மம் இந்த இளைஞர்களை வெறிகொண்டவர்களாக மாற்றுகிறது. டெல்லியில் ஒரு மாணவி வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த துயர நிகழ்ச்சிக்குப் பின் நடந்த சில கண்டன ஊர்வலங்களிலேயே பெண்கள் மீதான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
பெண்கள் இனிப் பொது வெளியில் புழங்காமல் இருப்பதும், ஆண்களுக்கான இடங்களில் தட்டுப்படாமல் பதுங்கி வாழ்வதும்தான் தப்பிப்பதற்கான வழி என்ற மனநிலை உருவாக்கப்படுப்படுகிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பெண்கள் பாதுகாப்புச் சட்டம், திருத்தப்பட்ட பாலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற பெண்ணுரிமைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின் ஆண்களின் வன்மம் அதிகமாகியுள்ளது எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆணாதிக்க உளநோய் கொண்டவர்கள் பெண்கள் மீதான தம் வன்முறைகளையும், சித்திரவதை முறைகளையும் புதிய வடிவங்களில் நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர்.
இதே வகையான ஆண்நோய் வன்கொடுமைகள் கலை, இலக்கியம், அரசியல், சமூக இயக்கங்கள், அறிவுத் துறைகள் என்ற கருத்தியல் புலங்களில் செயல்படும் பெண்கள்மீது மதிப்பிடுதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆண்நோய் வன் கொடுமைகள் குறியீட்டுச் சடங்குகளாக, உளவியல் தாக்குதல்களாக, மொழி வன்முறைகளாக, ஒழுக்கவியல் அச்சுறுத்தல்களாக வெளிப்படுகின்றன. தாம் நிகழ்த்தும் வன்முறையை “அறச்சீற்றம்” என்று சொல்லும் அளவுக்கு ஆண்மைய உளநோயால் பீடிக்கப்பட்டவர்கள் தம்மைப் பண்பாட்டுக் காவலர்களாகவும், மரபின் போதகர்களாகவும் கற்பிதம் செய்து கொள்கின்றனர்.
மற்றொரு தளத்தில் அறிவுத்துறைகள், கோட்பாட்டு உரையாடல்கள், கருத்தியல் ஆய்வு முறைகள், கலை-இலக்கிய பகுப்பாய்வுகள் என்பவை தற்போது பெண்ணியத்தை, பெண்ணிலை அறிவுருவாக்கத்தை மறுத்து இயங்காத நிலை உருவாகி உள்ளது. இதுவரை தன்னை மையமாகவும் முதன்மையாகவும் வைத்து, தனக்குத்தானே அளித்துக் கொண்ட இறைமை நிலையில் திளைத்துக் கொண்டிருந்த ஆண்மைய அழகியல், ஆணாதிக்க கலை இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் இன்று நொறுக்கப்பட்டு விட்டன.
இன்று ஆண்மையச் சொல்லாடலோ, ஆணாதிக்க மொழிபோ தன்னை உறுதிப்படுத்தி, தன்னை நியாயப்படுத்திப் பேசவேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டு அறிவுப் போராட்டங்கள் பற்றிய அறியாமையில் அழுந்தியவைகளாக இருக்க வேண்டும். அல்லது, அந்த அறியாமையை வெட்கம் கெட்டுக் கொண்டாடிக் கொள்ளும் மனத்திரிபு கொண்டவைகளாக இருக்க வேண்டும். பேரிலக்கியங்கள், செவ்வியல் படைப்புகள், காலம் கடந்து நிற்கும் காவியங்கள் என்ற பொய்க் கதைகளை, ஆணாதிக்கக் கட்டுக் கதைகளை பெண்ணிய வாசிப்புகள் உடைத்து நொறுக்கி புதிய கதைக் கலைப்புகளை, மொழிச் செயல்பாடுகளை உருவாக்கியுள்ளன.
இதுவரை ஆண்மைய அறிவைக் கொண்டாடி மகிழ்ந்து, தன்னுறுதியில் திளைத்த கலை, இலக்கியம் சார்ந்த தனிமனிதர்கள் இந்த நிலைத்தகர்ப்பு விளைவுக்கு எதிராகத் தம்மை அணிதிரட்டிக் கொள்ள பெண்ணியத்தை எதிர்த்தல், பெண்ணிலைப் பார்வைகளை இழித்துரைத்தல், பெண்ணிலைக் கருத்தியல்களை திரித்துக் குழப்புதல் போன்ற செயல் உத்திகளைக் கையாள்வார்கள். இதற்கு அவர்கள் இலக்கியச் செம்மைவாதம், உயர் கலைத்தன்மை போன்ற காலம் கடந்த கருத்தாக்கங்களைத் துணையாகக் கொண்டு தம்மை அறிவுத்துறை சார்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். இவர்கள் பேசும் தத்துவம், அழகியல், பொதுஅறம், கலை-இலக்கியக் கோட்பாடுகள், ஒழுக்கவியல் அனைத்துக்குள்ளும் ஆண்மைய, அதிகாரப் புனிதவாத வன்முறை உறைந்து கிடக்கிறது.
தமிழில் இந்த அதிகாரப் புனிதவாதமும், மாறுதல் மறுக்கும் ஆண்மையவாதமும் பெருமைக்குரிய அடையாளங்களாக இருந்துவருகின்றன. இந்திய மொழிகள் பலவற்றின் கலை-இலக்கிய, அறிவியக்கப் புலங்களில் வெட்கப்படத் தக்கவையாக மாறிவிட்ட ஆண்மைய, ஆணாதிக்கப் பேச்சுக்கள் தமிழில் இலக்கியம், அழகியல், சமூக மதிப்பீடுகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற அடையாளம் கொண்ட பல ஆண்களால் பெருமையுடன் முன் வைக்கப்படுகின்றன. ஒழுக்கவியல், பண்பாட்டுப் புனிதம் என்ற பெயரில் ஆண்நோய் புலம்பல்களும் பெண்ணிலை மீது ஏவப்படும் மொழி வன்முறைகளும் தமிழில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றன. இந்த அறிவழிப்புத் தன்மை கொண்ட ஆண்மைய- ஆணாதிக்க கருத்தியல் செயல்களுக்கு எதிரான செயல்பாடுகள், சொல்லாடல்கள் தமிழில் விளிம்பு நிலையில்தான் உள்ளன.
பெண்ணாக இருந்து எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், எதைப் பேசவேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை வரையறை செய்து தருவதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாக நம்பும் ஆண்மையவாதக் கும்பல் கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், தமிழின் வரலாற்று நாயகர்கள் எனப் பெருங்கதையாடல் உருவங்களாகத் தம்மை நிறுவிக்கொண்டு செய்கிற வன்முறைகளை இலக்கிய தவம் என்று துதிபாடும் பெருங்கூட்டம் ஒன்று தமிழில் இருக்கிறது.
உண்மையான பெண்ணியம் என்றால் என்ன? எது சரியான பெண்ணியம்? பெண்ணியம் பீரிடாமல் எப்படி எழுதுவது? என்று பெண்ணியச் செயல் பாட்டாளர்களுக்கு ஞானோபதேசம் செய்து உய்விக்க இந்த ஆண்மையவாதக் கூட்டத்திலிருந்து குருமார்கள் தோன்றியபடி இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்திற்கும், பெண்ணிலைச் சொல்லாடல் செயல்பாடுகளுக்கும் எதிரான போராளிகளாக மாறித் தலைமையேற்றுச் செல்ல முன்வரும் போது, இந்த வீர மரபை தமிழின் ஒரு பெருங் கூட்டம் பெருமையுடன் திமிர் பொங்க முன்னெடுத்துச் செல்லக் காத்துக் கிடக்கிறது.
பெண்ணிலை மீதான பலவகையான வன்கொடுமைச் செயல்பாடுகளின் ஒரு குறியீட்டு வடிவமாக, ஒரு அடையாளத் தாக்குதலாக, மொழி வன்முறையாக அமைந்திருப்பதுதான் ஆண் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் எழுத்தாளர்கள் அல்லது பெண் கவிஞர்கள் பற்றித் தெரிவித்து, ஆய்வறிவோ அரசியல் புரிதலோ அற்ற ஆண்நோய்க் கும்பலின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள சில கருத்துக்கள்.
இவற்றைக் கருத்துக்கள் என்பதைவிட பெண்ணாக இருந்து, பெண்ணிலை அடையாளத்துடன் கலை-இலக்கியத் தளத்தில் செயல்பட்டு வரும் பெண்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள இழித்துரைக்கும் சைகைமொழி என்றுதான் கொள்ள வேண்டும்.
இவற்றை மேம்போக்காகப் பார்த்தால் பெண்ணெழுத்தின் இலக்கியத்தன்மை பற்றி மதிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள ஒரு மாற்றுக் கருத்து போலத் தோற்றம் தரக்கூடும். பெண்கள் சிறப்பாக எழுதவேண்டும் என்றும், அதிகம் கற்று அறிவுத் தெளிவு பெற்று நீடூழி வாழ வேண்டும் என்றும் அக்கறை கொண்ட பெருமகனார் ஒருவரின் ஆதங்கம் போன்று தோன்றலாம். ஜெயமோகன் தன் வசையை-இழிவுறுத்தும் சைகையை நியாயப்படுத்த மேலும் மேலும் பயன்படுத்தும் மகா வாக்கியங்கள் அவரை பண்பாட்டு பிதாமகனாகப் போற்றவேண்டும் என்ற பெரும் மயக்கத்தைக்கூட தோற்றுவிக்கலாம். ஆனால் இதன் குறியியல், அரசியல் பொருளாக்கம் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது, தற்கால அறிவுப் புலத்திற்கு, நவீன அரசியல், பொதுக்கள நெறிகளுக்கு முற்றிலும் எதிரான தற்புனித வன்முறை நிறைந்தது.
இதனைப் பொதுக்களத்தில் பதிவு செய்து, ஆண்மைய, ஆண்நோய்க் கருத்தியலை மறுஉருவாக்கம் செய்ய ஜெயமோகனுக்கு “எழுதும் ஒருவர்” என்ற அடையாளம் பயன்பட்டிருக்கிறது. பல ஆயிரம் பக்கங்கள் எழுதி வாசகர்களுக்கு அளித்திருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிடும் ஒருவர் தன் எழுத்தைப் பெண் அரசியலுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் முறை நவீன-பின்நவீன அறிவுமுறைக்கு ஏற்றதா அல்லது பெண்ணியத்திற்குப் பிறகான நவீன இலக்கியப் புலத்திற்கு உகந்ததா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு முன் அது தற்கால குடிமை நெறிகள், அறிவுத்துறை மதிப்பீடுகளுக்கு ஏற்றதா? பெண்களுக்கு எதிரான பலவகையான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் நியதிகளுக்கு உட்பட்டதா? உடன் பணிபுரியும், உடன்வாழும், உடன் பயணம் செய்யும் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறை பற்றிய நடத்தை விதிகளையாவது ஜெயமோகன் மற்றும் அவரின் திருத்தொண்டர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை நீக்குப்போக்கு இன்றி பேசியாகவேண்டும்.
ஆனந்த விகடன் வார இதழில் (4-6-2014) கேள்வி பதில் பகுதியில் ஆண் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அளித்த “இளம் படைப்பாளிகள்” பட்டியலில் இருந்து தொடங்குகிறது இந்தப் பிரச்சினை. நாஞ்சில்நாடன் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள ஒரு ஆண் எழுத்தாளர் என்ற வகையில் அந்த ஊடகம் தனது பக்கங்களில் சிலவற்றை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறது. அவர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை மீறி அவருடைய நாவல் ஒன்று திரைப்படமாகக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியிருக்கிறார் எனச் சில கனரக ஊடகத் தகுதிகளும் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டே அவருக்கு அந்தப் பக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” என்ற எளிமையான கேள்விக்கு அவர் முன்பின் யோசித்து, பின்விளைவுகள் பற்றிய ஒரு தெளிவுடன் தன் தேர்வில் இருந்து ஒரு பெயர்ப் பட்டியலை அளிக்கிறார். “இளையவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்” என்ற நேர்மையான ஒரு குறிப்பையும் தந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்றால் என்ன பொருள்? யாருக்கு என்ன நம்பிக்கையைத் தர வேண்டும்? நம்பத்தகாத, நம்பிக்கை தராத எழுத்தாளர்கள் யார்? நாஞ்சில்நாடனுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களா அல்லது கேள்வி கேட்ட வாசகருக்கு (பெண் பெயரில் இக்கேள்வி அமைந்திருப்பதாக ஆவணம் சொல்கிறது) நம்பிக்கை தரக்கூடியவர்களா? எனப் பல “சட்டச் சிக்கல்கள்” இதில் இருந்தாலும் பதில் ஒன்றுதான், சில எழுத்தாளர்களின் பெயர்கள். அவர்கள் தமிழில் எழுதக்கூடியவர்களாக இருக்கவேண்டும், சில நூல்களை வெளியிட்டிருக்க வேண்டும்.
இது போன்ற பெயர்ப்பட்டியல்கள் சிறுபத்திரிகைகளில் அவ்வப்பொழுது வெளியாவது வழக்கமானதுதான். பங்காளிகள், தாய்மாமன்கள், மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் எனத் திருமண அழைப்பிதழ்களில் இடம்பெறுவது போன்று ஆசாபாசங்களுக்கும், சாதிசனம், பரம்பரை வழக்கம் எனச் சிலவகை விதிகளுக்கும் உட்பட்டதாக ஒரு பெயர்ப்பட்டியல் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. பெயர் விடுபட்டுப் போனவர்கள் உரிய சான்றுகளுடன் வந்து கடைசித் தேதிக்குள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதி சிறுபத்திரிகைகளில் சில சமயம் அளிக்கப்படும். அந்தப்பட்டியல்கள் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதில்லை. தமிழக அரசு உருவாக்கியுள்ள தன்னாட்சி மண்டலங்களான “தாஜ்மாக்” கடைகளின் உட்பகுதிகளில் ஆன்றோர் பெருமக்கள் கூடி அந்த தாவாக்களை தீர்த்துக் கொள்வது வழக்கம். சில அலைபேசி அழைப்புகளில் அதற்கான உச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படலாம். இதெல்லாம் சிறுபத்திரிகை ஆண்மரபு சார்ந்தவை.
ஆனால் ஆனந்த விகடன் பத்திரிகையில் அஞ்சல்தலை அளவிலான படத்துடன் பெயர் இடம் பெறுவது, நம்பிக்கை தரக்கூடிய எழுத்தாளர் என்ற அடைமொழியுடன் இடம் பெறுவது விளையாட்டான விஷயம் இல்லைதான். எழுதுபவர்களைவிட அவர்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். அதன் தொடர்ச்சியான ஒரு எளிய மகிழ்ச்சியைத்தான் பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளர்களும் அடைந்திருப்பார்கள். இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் நிச்சயம் தமது அடுத்த தொகுதியை வெளியிடும் போது நாஞ்சில் நாடனுக்கு அனுப்பி “அவர் நாண நன்நயம்” செய்துவிட சூளுரை செய்து கொண்டிருக்கக்கூடும். இதுவரை நடந்தவை பிள்ளை விளையாட்டுக்களாக இருக்கலாம். ஆனால் ஜெயமோகன் தன் ஆண்மரபு “ஆய்வின்” வழி நிகழ்த்திய பாலின வன்தாக்குதல் எழுதுபவர்களை வெட்கப்படுத்தி வேதனையுறவைத்துவிட்டது.
”இது ஒரு இலக்கியக் கருத்துரைப்புதானே, பாலின வன்தாக்குதலாக எப்படி இருக்கமுடியும்” என்ற கேள்வி ஒரு சிலருக்கு எழக்கூடும். “இலக்கியமே இல்லாத தமிழை உய்விக்க தன் வாழ்க்கையைத் தந்துவிட்டு “பல ஆயிரம் பக்கங்களை” அளித்துள்ள ஒரு எழுத்தாளர் இந்தப் “பெண்களை” அவமதித்தால் என்ன குடியா முழுகிப்போகும்? இதற்காக ஜெயமோகனைக் கண்டித்து “இந்தப் பெண்கள்” அறிக்கை வெளியிட்டால் அவரது அத்வைத மனம் புண்பட்டு அடுத்த நாவல் வெளிவருவது தடைபடாதா?” எனக் கதைபக்தி கொண்ட கடுந்தொண்டர்கள் தர்மாவேசம் கொள்ளக்கூடும். ஆனால் நவீன இலக்கியம் உணர்ந்த எவருக்கும் அவருடைய வாசகங்கள் எவ்வளவு வன்மம் நிறைந்தவை, எந்த அளவு பாலின ஒதுக்குதல் கொண்டவை என்பது புரியவரும்.
நாஞ்சில்நாடன் அளித்த இளம் படைப்பாளிகள் பட்டியலைப் பற்றிக் குறிப்பிடும் ஜெயமோகன் “அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள்” நடப்பதாக தகவல் தருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் பதிவு செய்துள்ள கருத்துக்கள் சில:
“தமிழில் எழுத வந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது”. “அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய” முடியும். “சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே.” “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன் தன் ரசனையின் அல்லது ஆய்வின் அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு. அதற்கான காரணங்களை அவன் சொல்லலாம். சொல்லாமலும் விடலாம்”… “இப்பட்டியல் முக்கியமானதாக ஆவது நாஞ்சில்நாடன் என்ற ஆளுமையால் தான்.”… “நாஞ்சில் நாடனின் இப்பட்டியலில் எல்லா வகை படைப்பாளிகளும் இடம் பெற்றுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோக்கு மேலோங்கிவிடக் கூடாது என அவர் கவனம் எடுத்திருப்பது தெரிகிறது. ஆனால் எனக்கு இலக்கியத்தில் பந்திப்பாய் விரிப்பதில் நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையில் தரமான படைப்பாளிகளை அவமதிப்பது என நினைக்கிறேன். நான் மிகச் சிறிய பட்டியலையே எப்போதும் போடுவேன்”…. என்றெல்லாம் சொல்லிச் செல்லும் அவர் தான் எதனைச் சொல்ல அந்தப் பத்தியை எழுதினாரோ அந்தப் பகுதிக்கு வருகிறார்:
“பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக் கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ”
“ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.”
“இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகா வாங்கிவிடுவார்கள்.”
நாஞ்சில்நாடன் அளித்த பட்டியலில் 28 பெயர்கள் உள்ளன, 27 பெயர்கள் படத்துடன் உள்ளன. அதில் 17 ஆண் படைப்பாளர்கள், 11 பெண் படைப்பாளர்கள். (சுகிர்தராணி, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி, தமிழ்நதி, ச.விசயலட்சுமி, மீனா, அ.வெண்ணிலா, சந்திரா, தி.பரமேசுவரி, சக்திஜோதி) “ஆண்படைப்பாளிகள் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்” எனத் தெளிவாக, உறுதியாகக் கூறும் ஜெயமோகன் “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.” என அடிப்படை இல்லாத தகவலுடன் அவமதிப்புத் தாக்குதல் தொடுக்கிறார். இப்படி ஒரு தாக்குதலை இலக்கிய ஆய்வு, அல்லது ரசனை என்று எந்த குருமரபு இவருக்குச் சொல்லித்தந்தது.
ஜெயமோகன் தனது தாக்குதலை பொத்தம் பொதுவாக பெண் படைப்பாளிகள் மீது தொடுக்கவில்லை என்று காட்ட “பெண்களில் உமா மகேஸ்வரி என் நோக்கில் முதன்மையான படைப்பாளி. அதன்பின் சந்திரா. விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்ல முடியும். ஆழியாள், பகீமா ஜகான், அனார் போல.” என்று மேலும் ஒரு பட்டியலை முன் வைக்கிறார். “பட்டியல் என்பது ஒரு ரசிகன் அல்லது திறனாய்வாளன் தன் ரசனையின் அல்லது ஆய்வின் அடிப்படையில் முன் வைக்கும் ஒரு தேர்வு.” என்று சொல்லிவிட்டு “பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.” என்று பெரும் “தத்துவக்” கேள்வியைக் கேட்கிறார்.
பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள் என்ற ஆண் திமிர் கொண்ட அடைமொழிக்கு தமிழ்-இந்தியப் பின்புலத்தில் என்னவெல்லாம் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் என வலியுறுத்தும் இந்தச் சைகைமொழி மிக இழிவான ஒரு தாக்குதல்.
இந்தப்பட்டியலில் இருப்பவர்கள் மீது பெயர் குறிப்பிட்டு செய்யப்படும் வக்கிரமான ஏச்சு. எழுதும் பெண்கள் எழுத்தைத் தவிர பல வகை உத்திகளைச் செய்துதான் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற இழிவான பொய் பெண் படைப்பாளர்களின் குடும்பங்கள், பணியிடங்களில் என்ன வகை செய்தியைக் கொண்டு சேர்க்கும் என்பதும், அது பெண் படைப்பாளர்களின் எழுத்துக்கான வெளியை எவ்வாறெல்லாம் பாதிக்கும் என்பதும் தெரியாத அறிவீனம் எப்படி இலக்கியம் பற்றிய கருத்துரை வழங்கும் உரிமையை எடுத்துக் கொள்ளமுடியும்.
இந்தப் பட்டியலில் உள்ள பெண்-ஆண் படைப்பாளர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை, தொகுதிகளை அளித்தவர்கள்தான், தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருப்பவர்கள். “தான் சொல்லும்படி” எழுதவில்லை என்பதால் எழுத்து சாராத பலவகை “உத்திகளைக்” கையாண்டுதான் பெண் படைப்பாளர்கள் ஊடகங்களில் இடம் பிடித்திருக்க முடியும் என்று சொல்வதும், அதனைத் தன் வாசகர்களுக்கு ஒரு வக்கிர வதந்தியாகக் கொண்டு செல்வதும் ஊடகங்களால் உருப்பெருக்கப்பட்டு ஊடகங்களின் ஒப்பந்தக்காரராகச் செயல்பட்டு வரும் ஜெயமோகனுக்கு இலக்கியத் தவமாக எப்படித் தோன்றுகிறது.
இந்தப் பெண் படைப்பாளர்கள் உண்மையான “ஊடகப் பிம்பங்களாக” உருவாகி இருந்தால் அவர்களைப் “பெயர் சொல்லி” அவமதிக்க, ஆபாசச் சைகை செய்ய இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இவரே சொல்கிறார் “நாஞ்சில்நாடன் அவரது பட்டியலில் அதிகமாக அறியப்படாதவர்கள் என்ற விதியையும் அளவு கோலாகக் கொண்டாரோ என்றும் படுகிறது”. அதிகம் அறியப்படாதவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், எழுதும் பெண்கள் என்ற கீழ்நிலை நோக்குதான் இவர்களைப் பெயர் சொல்லி அவமதிக்கும் அளவுக்கு ஜெயமோகனுக்கு தவவலிமையைத் தந்திருக்கிறது.
இந்தக் கொடுமைக்கிடையில் “விடுபட்ட பெண்படைப்பாளிகள் என்றால் நான் ஏழெட்டு பேரைச் சொல்லமுடியும்.” என்ற இலக்கிய நேர்மை செறிந்த அறிவிப்பு வேறு. இதன் மூலம் விடுபட்டவர்கள் உண்மையான உயர்ந்த பெண் படைப்பாளிகள் அவர்கள்தான் “சொல்லும்படி” எழுதக்கூடியவர்கள் என்ற குறிப்பைத் தருகிறார் ஜெயமோகன். அப்படியென்றால் “தமிழில் கிருத்திகாவுக்குப்பின் பெண்கள் எழுதிய எந்த இலக்கியப் படைப்பில் அவர்கள் முக்கியமான வாசக அனுபவத்தை அடைந்தனர் என்று எண்ணிப் பார்க்கட்டும். பெண்கள் எழுதிய எந்தப் படைப்பு சென்ற முப்பதாண்டு காலத்தில் தமிழில் பேசப்பட்டது என்பதை கணக்கிடட்டும்.” என்று முப்பதாண்டுகளாக எழுதப்பட்ட பெண்ணெழுத்துக்களை இவரால் மறுத்தொதுக்க முடிகிறது. இனவரைவியல், சிறுமரபு எழுத்துக்களைத் தந்துள்ள பாமா, சிவகாமி, சு.தமிழ்ச்செல்வி என்ற படைப்பாளர்கள் கடந்த இருபதாண்டு கால அளவில் தமிழில் குறிப்பிடத் தகுந்த பங்காற்றியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாக பாமா, சிவகாமி, சல்மா ஆகியோரின் நாவல்கள் இந்திய இலக்கிய மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. “பெண்களை எழுத வேண்டாமென்று சொல்லவில்லை. நேர்மாறாக ‘எழுதுங்கள், தயவுசெய்து எழுதுங்கள்!’ என்றுதான் சொல்கிறேன். ‘மகத்தான ஆக்கங்களுடன் எழுந்து வாருங்கள்!’ என்கிறேன்.” என்று வெற்று அறிக்கை வெளியிடும் முன் இவர்களுடைய எழுத்துக்களைப் படித்துவிட்டு பேசியிருக்க வேண்டும். சு.தமிழ்ச்செல்வி எழுதிய இனவரைவியல் கதைகளான மாணிக்கம் (2002), அளம் (2002), கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006) போன்ற நாவல்கள் தற்கால இலக்கிய மாணவர்களுக்கு ஜெயமோகன் எழுத்துக்களை விட மதிப்பு மிக்கவையாக இருக்க முடியும். ஜெயமோகன் ஒருவகைக் கதையைச் சொல்கிறார் சு.தமிழ்ச்செல்வி வேறுவகைக் கதையைச் சொல்கிறார். இலக்கியம் வகைமைகளைக் கொண்டது, அனைத்து வகையான வெளிப்பாடுகளுக்கும் களம் அமைப்பது. “மகத்தான ஆக்கங்கள்” என்ற மதிப்பீடுகள் கருத்தியல் வன்முறைகள். அனைவருக்கும் பொதுவான இலக்கியம் என்பதெல்லாம் ஏமாற்றுக் கூச்சல்கள், அவரவர் தேர்ந்து கொண்ட அரசியல் கருத்தமைவே அழகியலுக்கும், இலக்கிய அமைப்பு முறைக்கும் அலகுகளாக அமைகின்றன. வாசிப்பும், எழுத்தும் அரசியல் தன்னுருவாக்கத்தின் உத்திகள். தமிழ் போன்ற ஒரு பல்குடிச் சமூகத்தில் எழுத்தின் வகைமைக்கு சாத்தியங்கள் அதிகம்.
“ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக(த்) தங்களை முன் வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.” பெண்களாகத் தங்களை முன் வைப்பது என்பதற்கு “இந்திய தரிசன” மரபில் என்ன அர்த்தம்? ஆண்மையம் உடைத்த பெண்ணாக, தன்னுரிமை கொண்ட பெண்ணாக ஒருவர் தன்னை முன் வைப்பது என்பதே படைப்பூக்கம் கொண்ட ஒரு செயல்தான். பெண்ணாக இருந்து பேசுதல் என்பதே ஆண் மேலாதிக்க அமைப்பில் ஒரு கலகம்தான். அது அன்றி பெண்ணாகத் தங்களை முன் வைப்பதால் எங்கு இடம் கிடைக்கிறது? என்ன இடம் கிடைக்கிறது? எழுதினால் எழுதுபவர் என்ற பெயரைத் தவிர வேறு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஆண்கள் எழுதியும் பெண்கள் எழுதாமலும் என்ன இடத்தைப் பெறுகிறார்கள்? அதிகாரம் கொண்ட ஒரு ஆணாக இருந்து எழுதுதல் வரலாற்றுக் கடமையாகவும், தன்னுரிமை கொண்ட ஒரு பெண்ணாக இருந்து எழுதுதல் அந்த வரலாற்றை உடைப்பதாகவும் பொருள்படும் ஒரு சமூகத்தில் பெண்ணெழுத்தின் இடம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய புரிதலின்றித் தன் வன்மத்தை மட்டுமே வெளிப்படுத்தி யிருக்கிறார் ஜெயமோகன்.
இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளிகளைப் பெண் படைப்பாளிகளுடன் எதிர் முரண்படுத்தி, விலக்கி அடையாளப்படுத்தி பெருமை செய்வதாக நினைத்து அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜெயமோகன். பெண் படைப்பாளர்களை இழிவுபடுத்தி, வதந்திகளால் அவமானப்படுத்தி தங்களை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளர்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு ஆண் திமிரும், ஆண்மையவாத அறிவீனமும் கொண்டவர்களாக அவர்களும் இருப்பார்களேயானால் “பரந்தும் கெடட்டும் இந்தத் தமிழ் படைபாளர்கள்” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஜெயமோகன் தொடுத்த அவமதிப்புத் தாக்குதலை எதிர்த்துப் பெண் படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் குரல் கொடுக்கத் தொடங்கிய பின் ஜெயமோகனிடம் இருந்து வெளிப்பட்ட வாசகங்கள், வாக்கியங்கள் அவருடைய ஆண்மையவாத, ஆண் முதன்மைவாத அறியாமையை மேலும் மேலும் புலப்படுத்துவதாகவும், தன் வாசகர்களைத் திட்டமிட்டுக் குழப்புவதாகவுமே உள்ளன.
“ஒருவர் தான் கொண்டிருக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். அவ்வடிப்படையிலேயே என் இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வருகிறேன்.” என்று தன் வாசகர்களுக்குச் சொல்லும் ஜெயமோகன் பெண்ணிய-பெண்ணிலை எழுத்தை எழுதும் பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இலக்கிய மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக இருக்க முடியும் என்பதையும் அது முற்றிலும் வேறுபட்ட கூறுகளால் அமைத்திருக்க முடியும் என்பதையும் முழுமையாக மறைத்து விடுகிறார். “இலக்கியம் என்னும் அமைப்பு மீதான பெரும் ஈடுபாடு, அர்ப்பணம்… நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்… அதை(க்) காலம் மதிப்பிடட்டும்…” என்றெல்லாம் மறைமொழிச் சொல்லாடலை முன்வைத்து தன் வாசகர்களிடம் தற்காலம் பற்றிய நினைவழிப்பை உருவாக்குகிறார். காலத்தின் மதிப்பீட்டுக்குத் தன்னை ஒப்படைக்கும் ஜெயமோகன் பெண் படைப்பாளர்களையும் காலத்தின் மதிப்பீட்டுக்கு விட்டு விட்டு ஜனநாயகப் பண்பாடு அறிந்த ஒருவராகத் தன்னை வைத்துக் கொண்டிருக்கலாம்தானே?
தான் முன்பு வைத்த அதே வசையையும் அவமதிப்பின் வன்முறையையும் மீண்டும் அழுத்தமாக முன்வைக்கும் ஜெயமோகனின் குரல் இது “பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் கருத்தும் இத்தகையதே. அது புதியதும் அல்ல. அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச் செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை(க்) காண விழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.” (இதனை வாசிக்கும் தொடக்க கட்ட இலக்கிய, பண்பாட்டியல் மாணவர் ஒருவருக்குக்கூட எத்தனை அபத்தமான, அடிப்படையற்ற கருத்து இது என்பது புரிந்துவிடும்.)
பெண் எழுத்தாளர்கள் என்று ஆரம்பித்து இந்த ஆண் எழுத்தாளர் தொலைக்காட்சித் திரை நோக்கி தன் வாக்கியத்தை இழுத்துச் செல்வதை கவனிக்க வேண்டும். ஊடகங்களால் உருவாகி ஊடகங்களால் தன்னை உருப்பெருக்கிக் கொண்ட ஒரு ஆண் எழுத்தாளர் அதில் இயற்கையான முறை, செயற்கையான முறை ஏதோ உள்ளதாக ஒரு கண்டுபிடிப்பை முன் வைக்கிறார்.
பெண் எழுத்தாளர்களை ஊடகத்தை அதிகம் பார்க்கும் பெண்கள் காண விழைகிறார்களாம். ஊடகங்கள் பெண்களை அதிகமாக முன்னிறுத்த விழைகிறார்களாம். பெண்களை ஊடகங்கள் முன்னிறுத்தும் முறைக்கெதிரான பெண்ணியப் போராட்டம் இந்திய அளவில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. பெண்களைக் காட்சிப் பொருளாக, நுகர்வுப் பண்டமாக, மூளைச் செயல்பாடற்ற இயந்திரங்களாக, ஆண்விதிகளை பேராசையுடன் பின்பற்றும் அடிமைகளாக காட்சிப்படுத்துவதற்கு எதிரான பெண்ணியக் குரல்கள் எழுத்தாகிக் கொண்டுள்ளன. ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் பெண் எழுத்தாளர்களைக் காண விழைகிறார்களா? என்ன உளறல் இது! பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்களா? விளம்பரப் பொருள்களாக விளம்பர இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்களா? என்ன சொல்கிறோம் என்பது தெரியாமல் எதையெதையோ எழுதிவிட்டு “நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள்…” என்ற ஆன்மிக அடக்கம் காட்டுகிறார் ஜெயமோகன். அவருடைய செய்கைக்கு அவரிடம் இருந்தே ஒரு வாசகத்தை அடையாளமாகக் காட்டலாம் “வழக்கம்போல. எந்த ஒருவிஷயத்திலும் ‘ஈடுபாடு, அர்ப்பணம், அந்தரங்கம் என்ற நிலைபாட்டை எடுத்துவிட்டு அதீத எம்பிக்குதித்தல்களை நிகழ்த்துவதுதான் நம்முடைய மரபாக மாறிவிட்டிருக்கிறது. புரிந்துகொள்ளும் முயற்சியோ அதற்கான கூரோ (கூறோ) பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை.”
“பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை(ப்) பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை.” என்று சொல்லும் ஜெயமோகன் எங்கிருந்து இந்தத் தகவலை, தரவைப் பெற்றார் என்பதை அவரது வாசகர்களுக்குச் சொல்லியாக வேண்டும். பெண்களாகத் தங்களை முன் வைப்பதும், கூச்சல்களால், அரசியல் கோஷங்களால் கவனத்தைப் பெறுவதும் பெண்ணியப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதற்கு தயங்க வேண்டிய தேவை பெண்ணியலாளர்களுக்கு இல்லை. இவர்களைத் தமிழில் யார் புகழ்கிறார்கள்? பெண்ணியலாளர்களை அச்சுறுத்துவது, மிரட்டல் விடுவது, தனிப்பட்ட வாழ்க்கையில் குற்றமுனைப்புடன் ஊடுறுவி வலிகளை ஏற்படுத்துவது எனப் பெண்ணியத் தன்னிலை கொண்டவர்கள் மேலான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன.
தமிழில் பெண்ணிய, பெண்ணரசியல் தளத்தில் செயல்படும் பெண்கள் மிகக்குறைவு என்பதை நாம் அறிவோம். இதனை மீறிச் செயல்படும் பெண்களைப் பற்றித்தான் ஜெயமோகன் இந்த அறிவார்த்த அடிப்படையற்ற வசையை வைக்கிறார் “அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் எனப் புகழப்படுகிறார்கள், அனைத்து வகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள்.” உண்மையில் பெண்ணெழுத்தும் பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்ச் சமூகத்தில் பெற வேண்டிய விகிதத்தில் கவனத்தைப் பெறுவது இல்லை. திரைத்துறையினர், ஊடக பூதங்கள் தவிர இங்குப் பொது நினைவில் யாரும் இருப்பதில்லை என்பதை திரைப்படப்புகழ் ஜெயமோகன் அறிய வேண்டும். “ஆனால் எதுவுமே எழுதுவதில்லை” எனப் பெண் படைப்பாளிகளைப் பற்றி இவர் குறிப்பிடுவது வலிந்து புகுத்தப்படும் பொய்யல்லவா? கதைகள், கட்டுரைகள், கவிதைகள், தொகுதிகள் எனத் தொடர்ந்து பெண் படைப்பாளிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
“இவர்கள் எழுத வந்தபோது ‘எழுதட்டும் பார்ப்போம்’ என்ற எண்ணம் இருந்தது சூழலில். நானும் அதைத்தான் சொன்னேன். இன்று இவர்களெல்லாம் சமூக ஆளுமைகளாக ஆகி சிம்மாசனங்களை அடைந்துவிட்டார்கள்.”
எழுதட்டும் பார்ப்போம் என்று விட்டார்களாம் இவர்கள். யார் இவர்கள்? இருந்து பார்த்து தீர்ப்புச் சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? சமூக ஆளுமைகளாகப் பெண்கள் மாறினால் மதிப்பளித்து இடம் கொடுங்கள். உங்களுக்கு மட்டுமே சிம்மாசனம் என்று எந்த வரலாறும் எழுதப்படவில்லை. “பொதுவாக எழுதச் சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை. இந்தப் பெண்கள் கவிதை என்றபேரில் பத்துப்பதினைந்து வரிகளை மேலோட்டமாக எழுதி மடித்து மடித்து பிரசுரிக்கிறார்கள். அவை வெறும் சக்கையாக உள்ளன. வெற்றுப்புலம்பல்கள், அதிர்ச்சி மதிப்புக்கான தடாலடி வரிகள், சில்லறைப் பெண்ணிய கோஷங்கள்.” என்று கூறும் ஜெயமோகன் கவனிக்க வேண்டும்.
பக்திப் பாடல்கள் தொடங்கி பாரதியின் “நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ” வரை புலம்பல்கள்தான், “கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் காதலித்து வேதனையில வாடவேண்டும்” என்ற ஆண்தமிழ் அழுகைகள் பண்பாட்டுத் தொன்மங்களாகி உள்ள ஒரு சமூகத்தில் பெண்கள் புலம்பினால் “வெற்றுப் புலம்பல்” ஆண்கள் புலம்பினால் காவியத்துயரம்.
அதிர்ச்சி மதிப்பு, தடாலடி வரிகள் இவையெல்லாம் ஆண்களின் எழுத்துக்களில் அதிகம் உள்ளவைதான். அது என்ன சில்லரை பெண்ணிய கோஷங்கள்? பெண்ணியம் என்றாலே சில்லரைத் தனம் என்று சொல்லும் ஒரு கூட்டத்தின் சில்லரைத் தனமான மதிப்பீடு இது. அறிவின்மையைக் கொண்டாடி, சாமியார்களை, ஆசிரம அதிபர்களைத் தொழுதுகொண்டு கிடக்கும் ஒரு சமூகத்திற்கு பெண்ணிய கோஷங்கள், தலித்திய கோஷங்கள், சமத்துவ அரசியலுக்கான கோஷங்கள் இன்னும் அதிகம் தேவையானவையே. அவை உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால் எங்களுக்கானவை இல்லை என ஒதுங்கிப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். “சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை” என்பதை ஜெயமோகன் கொண்டாடும் எல்லா ஆண் கவிஞர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம்.
“இத்தனை பெண்கள் எழுதுகிறீர்களே தமிழில் உங்களால் ஏன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியவில்லை என்ற வினாவை ஓரு விமர்சகனாக நான் எழுப்புகிறேன்.” ஜெயமோகன் நவீன பொருளில் விமர்சகர் அல்லர். அவர் கருத்துக்கூறுபவர், காலத்தின் பின்தங்கிப்போன தன் நம்பிக்கைகளின் அடிப்படையில் கருத்துக் கூறிக் கொண்டிருப்பவர். அவருடைய வாசகர்களின் அறியாமை, தேடுதலின்மை போன்றவையே அவரது முதலீடு. அதிக பக்கங்களில் தான் சொல்ல நினைப்பவைகளை திரும்பத் திரும்ப அவர் சொல்லும் போது அறிவியக்கங்கள் பற்றிய அக்கரையற்ற சிலர் வியந்து விதிர் விதித்து தண்டனிட்டு நீங்கள் ஒரு சிந்தனையாளர், விமர்சகர் என்கிறார்கள். அவரும் அதனை நம்பி அண்டசராசரங்களை அளவிட்டு விடை சொல்லுகிறார். நல்ல படைப்பு என்பது என்ன? அனைவருக்குமான பொதுவான படைப்பு என ஏதும் உள்ளதா என்பதைப் பற்றியெல்லாம் தமிழில் நிறைய பேசப்பட்டுள்ளது. இனியும் பேசலாம். அதற்கு முன் ஜெயமோகன் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான், அவர் சொல்பவை அவருடைய கருத்து மட்டுமே.
ஏன் ஒரு நல்ல படைப்பை அவரால் வாசிக்க முடியவில்லை என்று கேட்டால் அவருக்கு கோபம் வரலாம். மராத்தியில் எழுதப்படும் ஒடுக்கப்பட்டோர் கதையும், ஆப்பிரிக்க மொழிகளில் எழுதப்படும் பெண்வழிக் கதைகளும் தற்போது உலக இலக்கியங்கள். அதே தளத்தில்தான் அராபிய ஆண்வழிக் கதைகளும் வாசிக்கப்படுகின்றன. மகாஸ்வேதா தேவியின் மக்கள் போராட்டம் பற்றிய கதைகள் பின்காலனிய, அடித்தள மக்கள் வரலாற்று வாசிப்பில் மதிப்பு பெறுகின்றன. இதில் நல்ல படைப்பு, குள்ள படைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் அரசியல்தான் உங்கள் அழகியல், அதிலிருந்து உருவாவது உங்கள் அறம். அர்ப்பணம், அந்தரங்கம், தவம் என்ற பூச்சாண்டிகளுக்குப் பயந்து எழுத்தைக் கைவிடும் அளவுக்கோ ஊடகங்களை உதறிவிடும் அளவுக்கோ இன்றைய பெண்ணியம் அறிந்த பெண்கள் இல்லை என்பதுதான் ஜெயமோகன் மற்றும் அவரது பக்தர் குழாமுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்மையவாதக் கூட்டத்திற்குப் பெண்ணாக இருந்து எழுதுபவர்கள், செயல்பாட்டாளர்கள், மாற்றுச் சிந்தனையாளர்கள் எவராக இருந்தாலும் “இந்தப் பெண்கள்தான்”. ஆண்களின் கூட்டுப் புனைவால் உருவாக்கப்பட்ட ஆணாக இருத்தலின் மூலம் மட்டுமே வரலாறு, மரபு, வழக்காறு என்ற அடையாளங்களுடன் அதிகாரத்தை, அடக்குதலுக்கான உரிமையை, மேலாதிக்கத் தன்னடையாளத்தைப் பெற்றுக் கொண்ட இவர்களுக்கு மொழி, இலக்கியம், பண்பாடு, ஊடகம் அனைத்தும் ஆண்களின் களம். அதில் பெண்கள் ஒரு சிறு அளவில் இடம்பெற வேண்டுமானாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், சோதனைகளைத் தாங்கி மேலெழ வேண்டும், இலக்கியத்தை ஒரு தவமாக மேற்கொள்ள வேண்டும், பிறகு இவர்களின் ஆசியையும் அனுமதியையும் பெற்று இலக்கிய முக்தியடைய வேண்டும்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் என்ற குழுவினர் இணைந்து வெளியிட்ட “ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக் கூட்டறிக்கை” ஒன்று பெண்ணியம் இணையத்தளத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிக்கைக்கு பதில் அளிப்பதாக மீண்டும் ஜெயமோகன் செய்திருந்த பதிவின் தலைப்பு “பெண்களின் அறிக்கை”. மீண்டும் ஜெயமோகன் வசையையே தொடர்கிறார் “பெண்களின் எழுத்து பற்றிய என்னுடைய விரிவான கருத்துக்களுக்கு(ப்) பதிலாக(ப்) பெண் எழுத்தாளர்கள் என(ச்) சிலர் எழுதிய கூட்டறிக்கை ஒன்றை வாசித்தேன். அவர்களில் நாலைந்து பேரை மட்டுமே நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர்கள் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்பது என் எண்ணம்.” இந்த வாசகம் முழுமையான வன்முறைத் தாக்குதல், இலக்கிய நடத்தை விதிகளுக்கு மாறான வக்கிரம் என்பது கூடப் புரியாத நிலையில் ஜெயமோகன் இருப்பதை நினைத்து வருத்தப்படுவதா, இல்லை இவர்கள்தான் தமிழின் இலக்கிய ஆளுமைகள் என்றால் நாசமாய் போகட்டும் தமிழும் இலக்கியமும் என்று ஆத்திரப்படுவதா என்று புரியவில்லை. ஏனெனில் ஜெயமோகன் “இலக்கியம் என்பது இத்தகைய நாலாந்தர அரசியல் வசை நடவடிக்கை மூலம்” நிகழ்வதில்லை என்று சொல்லிவிட்டு அதனையே மிகக்காத்திரமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இலக்கியம் “அர்ப்பணிப்பின், தவத்தின் விளைவாக நிகழ்வது” என அபத்த நாடக வசனம் எழுதிவிட்டு அவர் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவரது இணையப் பக்கங்களில் வெளிவந்த பல வாசகங்களைக் குறிப்பிட்டே அந்த அறிக்கை கண்டித்திருக்கிறது. ஆனால் ஜெயமோகன் “சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப் பற்றி ஓர் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல் சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.” அந்த அறிக்கையில் உள்ள அபத்தமான அக்கப்போர்கள் எல்லாம் அவருடைய பக்கங்களில் இருந்து திரட்டப்பட்டவைகள் தான். சமகால இலக்கியம் சார்ந்த அரசியல் பற்றிய ஓர் அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் இவர் செய்துள்ள வசைக்கு எதிர்வினை இப்படித்தான் இருக்க முடியும்.
“எழுத்தாளர் என்பவர் எந்த ஒரு எதிர்வினையையும் அறிவுத்தளத்தில்தான் நிகழ்த்த வேண்டும்.” என்று கூறும் ஜெயமோகன் அறிவுப்பூர்வமாக அருளியிருக்கும் வாக்கு இது “இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப் படைப்பைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிக மரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன்.” எவ்வளவு பெரிய பொய் இது. பட்டியலில் உள்ள பெண் படைப்பாளிகள் பெயரைக் குறிப்பிட்டு வசையும் வன்முறையும் தொடுத்த இவர் மிக மரியாதையான சொற்களில் தன் கருத்தை முன்வைக்கிறாராம் “பட்டியலில் உள்ள ……. பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனவர்கள்.” பெயர் குறிப்பிடாமல் அதோ அவர்கள் எனக் கைகாட்டிச் சொல்லிவிட்டதால் இவர் எழுதுவது தவத்தின் பயனாக மாறிவிடுகிறது.
இதற்கு நடுவில் அவருடைய வாசகர் திருக்கூட்டம் பெண் படைப்பாளர்கள், பெண்ணியலாளர்கள் பற்றிய அழுகிய, ஆபாச வாக்கியங்களை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை அவர் கொண்டாட்டத்துடன் கண்டு களித்துக்கொண்டிருக்கிறார். தன் வாசகர்களின் வெறிநோய்க்கு இவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜெயமோகன் இலக்கிய மதிப்பீடு என்ற பெயரில் அரசியல் சார்ந்த, இடதுசாரி எழுத்துக்கள் மீது வைக்கும் கருத்துக்கள் பல்கிப் பெருகியுள்ள தற்கால இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய அறியாமையின் வெளிப்பாடுகள். தமிழின் பெண் படைப்பாளிகள் மீது வைக்கும் வசைகளும் வன்முறை சைகைகளும் தற்காலப் பெண்ணிய அரசியலுக்குப் பின் நேர்ந்த ஆண்வெறி நோயின் வெளிப்பாடுகள்.
தற்பொழுது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கருத்தியல் சார்ந்து, அரசியல் சார்ந்து இயங்குவதற்கான பொறுப்பினை ஏற்று இதுபோன்ற அடிப்படை தகர்ந்த இலக்கிய, கோட்பாட்டு புலம்பல் குழுக்களின் தர்க்கமின்மையை, அறியாமையை, அறிவுத் திரிபை ஒவ்வொரு கட்டத்திலும் புலப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். தன்னுரிமை கொண்ட பெண்ணாக இருத்தலையே போராட்டமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு சமூகத்தில் ஆணாக இருத்தலின் நெடிய வரலாற்று வன்முறையை அறிக்கையிட்டாக வேண்டும். ஆணழிந்த களத்தின் இலக்கியத்தை, அரசியலை, அழகியலைக் கொண்டாடப் பயிலவேண்டும்.