உரையாடல்:1:1

கேள்வி:

எழுத்தை, சிந்தனையை  வாழ்வியலாகக் கொண்ட மாற்று அரசியல் செயல்பாட்டாளன் என்பதுதான் எனது எளிய அடையாளம் என்று கூறியுள்ளதையொட்டி ஒரு கேள்வி. மாற்று அரசியல் என்பது அரசியல் இருந்து வரும் காலம் நெடுகிலும் இருந்து வரும் ஒன்றாகக் கருதுகிறீர்களா, அல்லது நம் காலத்தின் தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் எழுவதாக நினைக்கிறீர்களா?

பதில்:

அரசு, அரசு வடிவங்கள், அரசியல் என்ற தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும் எப்போதும் இருந்து வருபவர்கள் தனிமனிதர்கள். தனிமனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் இருந்துதான் அரசு உருவாகிறது என பிளாட்டோ தன் குடியரசில் விளக்குவது இன்றும் சமூக அறிவியலில் மறுக்க இயலாத சமன்பாடு. மனிதர்கள் அரசுகளை, ஆட்சிகளை, அரசர்களை, அரசியல் அமைப்புகளை மாற்றியமைப்பது மிகத்தொன்மையான ஒரு அரசியல் செயல்பாடுதான். ஆனால் தனிமனிதர்கள்-அரசு என்ற உறவமைப்பின் அடிப்படையையே மாற்றியமைத்த அரசியலைத்தான் நாம் நவீன அரசியல் என்கிறோம். நவீன அரசியலில் சுதந்திரம், சமத்துவம், சமநீதி, தன்ன டையாளம் என்பவை மிக அடிப்படையான கருதுகோள்கள்.  நவீன அரசியல் தனி  மனிதர்களை மையமாக வைத்துக் கட்டப்பட்டது, ஆனால் தனி மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட முடியாதது,  தனிமனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் அரசியலில் பங்கை அளித்து அவர்கள் ஒவ்வொருவரும் அரசியலை செயல்படுத்தும் உரிமையை அளிப்பது, தனிமனிதர்கள் யாருக்கும் அடிபணிய வேண்டிய தேவையை இல்லாமலாக்குவது, இது தனிமனிதர்களால் ஆளப்படும் அரசியல் அல்ல பொதுஅறங்களால் ஆளப்படுவது எனப் பலவாறாக விளக்கிச் செல்லமுடியும். ஆனால் இவையெல்லாம் இன்று கருத்தியல் சமன்பாடுகள் மட்டுமே. இந்தக் கருத்தியல் சமன்பாடுகளை நடப்பியலாக மாற்றுவதற்கான அரசியலையே நாம் இன்றைக்கான மாற்று அரசியல் என்கிறோம்.

அரசின் வடிவத்தை மாற்றுவது, அரசியலுக்கும் தனிமனிதர்களுக்கும் இடையில் உள்ள உறவை மாற்றுவது, அதிகாரக் கட்டமைப்பின் மையங்களை அவிழ்த்துப் பரவலாக்குவது  என்பவை மாற்று அரசியலின் தொடக்கமாக உள்ளது. மார்க்சியம் அடையாளப்படுத்திய அரசியல் பொருளாதார விடுதலை, அம்பேத்கர்  முன்வைத்த சமநீதி, சமஉரிமைகள் கொண்ட அறம்சார்ந்த அரசியல், பாலின ஒடுக்குதலை மறுக்கும் பெண்ணிய அரசியல், வேறுபடுதலுக்கான உரிமையை வலியுறுத்தும் அடையாள அரசியல், உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வாழ்வாதார உரிமையை வலியுறுத்தும் சூழலியல் அரசியல்  எனப் பல தளங்களைக் கொண்டதுதான் இன்றைக்கான மாற்று அரசியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் மனிதர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையின் அளவும் வடிவமும் மாறுபடுவது போல அதற்கெதிரான போராட்டங்களும் மாறுபடும். இன்றைய அரசியல், பொருளியல், அதிகார வன்முறைகளுக்கெதிரான மாற்றுகளை முன்வைப்பதுதான் இன்றைய மாற்று அரசியல். இன்றைய அடக்குமுறை அரசியல் பன்முனைப்பட்டதாக, பலவடிவம் கொண்டதாக இருப்பது போலவே இன்றைக்கான மாற்று அரசியலும் பலதளங்களைக் கொண்டதாக உள்ளது.

நம் காலத்தின் மாற்று அரசியல் காலம் சார்ந்தது மட்டுமல்ல, இடம் சார்ந்தும், களம் சார்ந்தும் பல வடிவங்களைப் பெறும். பொதுச்சாலைகளை தலித் மக்கள்  பயன்படுத்தத் தடையுள்ள ஊர்களில் அதற்கெதிரான போராட்டம்தான் முதல்கட்ட மாற்று அரசியலாக, விடுதலைக்கான அரசியல் செயல்பாடாக இருக்கும். ஊர்கள், சேரிகள் எனத் தனித்தனி வாழிடங்களையும் சேரிச் சுடுகாடு, ஊர்ச் சுடுகாடு எனத் தனித்தனி புதைகாடுகளையும் கொண்ட  ஒரு சமூகம்  பேசும் தமிழ் அரசியல் விடுதலைக்கானது அல்ல என்பதை விளக்கிக்கூற வேண்டியதும் மாற்று அரசியலின் பகுதிதான்.  தம் மண்ணை, ஆற்றை, குன்றுகளைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், குரல் கொடுப்பவர்களுக்கு துணையாக நின்று பேசுவதும்கூட மாற்று அரசியல்தான். உலக மயமான ஆதிக்கங்கள்,  பெருந்தேசிய அடக்குமுறைகள் தொடங்கி தனி மனிதர்களின் நடத்தைகளில் உள்ள மற்றவர் மீதான மனிதஉரிமை மீறல்கைள் வரை நம் காலத்திற்கான  அரசியல் விரிந்து கிடக்கிறது. இவை பற்றிய மாற்றுப் பார்வைகளை அறிவதும் அவற்றை பரவலாக்குவதும்  நம் காலத்திய மாற்று அரசியலின் தொடக்கம்.