உரையாடல்: 1:2

கேள்வி:

சாதி, குடும்பம், மரபு என்பவற்றின் வன்முறைகளை, கட்சி அரசியலின் வன்மங்களை நினைவு தெரிந்த நாளிலிருந்து அச்சத்துடன் கவனித்து வந்த எனக்கு  மாற்று அரசியல் மிக இயல்பாகப் பொருந்தியது என்கிறீர்கள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் உள்ளாகும் ஒடுக்குதல் மற்றும் அடையும் வலிகளின் காரணமாக அவர் மாற்று அரசியலின்பால் ஈர்க்கப்படுகிறாரா? அல்லது நீதியின்பால் அக்கரையுள்ள எவரொருவரும், விருப்பு வெறுப்பின்றி, அறிவார்ந்த சிந்தனையில் ஈடுபடும்போது அவர் வந்து சேரும் இடமாக மாற்று அரசியல் களம் இருக்குமா?

பதில்:

ஒடுக்குதல், அடக்குமுறை, அடிமைத்தனம், ஒதுக்குதல், வாழ்வுரிமைகள் மறுக்கப்படுதல், வன்முறைகளுக்குள்ளாதல் எனப் பல வகையான வலிகளைத் தனிமனிதர்களாக, குழுக்களாக, இனங்களாக  மனிதர்கள் அடைகிறார்கள். அதே போல மற்றவர்களுக்கு உருவாக்கவும் செய்கிறார்கள். இவற்றைத் தம் உடலிலும் மனதிலும் அடைபவர்கள் விடுதலைக்கான ஏக்கம் கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் விடுதலைக்கான வழியை, விடுதலைக்கான அறிவைத் தனியாக யாரும் உருவாக்கிக் கொள்ள இயலாது. இது அரசியல், அறம் சார்ந்த தன்னிலை உருவாக்கத்துடன் தொடர்புடையது. நீதியின்பால் அக்கறை கொள்வதும் அவ்வாறான ஒரு தன்னிலை உருவாக்கம்தான். பாதிக்கப்படுகிற ஒருவர் போராட, கலகம் செய்யத் தன் கருத்தியல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதே தொடக்கமாக அமைகிறது. அந்தப் போராட்டம், எதிர்ப்பு மனம், மொழி, மெய் என அனைத்து வழிகளிலும் வெளிப்படுகிறது. இதே போராட்டத்தைத் தன் அறிவு, அற உணர்வு, நீதியுணர்வு வழியாகவும் ஒருவர் தன்வயப்படுத்த முடியும், முதலில் அதற்குத் தேவைப்படுவது  அடையாள நீக்கம், தன்னிலையின் உடைப்பு. இவ்வகையில் அவருக்கு இருவகை முயற்சிகள், பயிற்சிகள் தேவை.

மாற்று அரசியல் களம்  பாதிக்கப்பட்டவர்கள், பிறரின் பாதிப்புகளை உணர்ந்தவர்கள் இருவரின் பங்களிப்புடனும் இயங்கக்கூடியது. ஏனெனில் உலக சமூகங்களில் எத்தனையோ வகையான துயரங்கள், எத்தனையோ வகையான வன்முறைகள், ஒடுக்குதல்கள் நிகழ்ந்தபடியுள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் அனுபவித்தும் வாழ்ந்தும்தான் புரிந்து கொள்ள, உணர்ந்துகொள்ள முடியும் என்றால் விடுதலைக் கருத்தியல்களும், மாற்று அரசியலும் செயல்படவே இயலாத நிலைதான் உருவாகும். இனவெறி ஒடுக்குதலை அனுபவித்த ஒருவருக்குத் தீண்டாமை பற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க இயலாது, ஆனால் தீண்டாமை ஒழிப்பு அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். பெண்ணியத்தை ஒரு ஆணாக இருந்து புரிந்தேற்கத் தேவையானது நேர்மையான  அறிவும், அறவுணர்வும்.

சாதி, குடும்பம், மரபு என்பவற்றிற்குள் இயங்கும்  வன்முறைகளைப் புரிந்து கொண்டதும் தனிமனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வன்முறைகளின் அடர்த்தியைப் புரிந்து கொண்டதும் கவிதை , இலக்கியம் சார்ந்த தேடுதல் வழி நிகழ்ந்தவை. சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், பெண்ணியம் போன்றவை இதனைச் சற்றே விரிவாக விளக்கிய போது அதிர்ச்சியும் அவநம்பிக்கையும் என்னைத் தாக்கியுள்ளன. இந்த அதிர்ச்சி ஒருவரை அதிகார வன்மம் கொண்டவராக மாற்றவும்கூடும். இந்த வன்மத்திலிருந்து விடுபடுவதைத்தான் அடையாள அழிப்பின் அரசியல் என்றும் மாற்று உளவியல் என்றும் நாம் தற்பொழுது கூறிவருகிறோம். அதிகாரம், அடக்குமுறை என்ற உளவியல் அமைப்பு மனிதர்களுக்குள் எவ்வளவு இயல்பாக நுழைய முடிகிறதோ, அதே அளவுக்கு விடுதலை, தன்னுரிமை உணர்வுகளும் பதிய முடியும். தான் மற்றும் பிறர் பற்றிய கருத்தியலில் உருவாக வேண்டிய அடிப்படை மாற்றம்தான் இதன் முன் தேவை.

 மாற்று அரசியல் களம் என்பது நமக்கு முன்னே உள்ள பல  தேர்வுகளில் ஒன்று. நான் இதனை அதிக அலைச்சல் இன்றி, முழு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதைத்தான் மிக இயல்பாகப் பொருந்தியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கான செயல்முறை என்ன என்பது பற்றிப் பல குழப்பங்கள், சிக்கல்கள் நேர்ந்திருந்தாலும், அவ்வப்பொழுது செயலின்மை என்னை அழுத்திய பொழுதும் மாற்று அரசியலின் தேவையை மறுப்பதற்கான நிலை உருவானதில்லை. எனது குழப்பங்கள் செயலின்மைகள் நான் நம்பும் அரசியலின் தேவையை குறைத்துவிட முடியாது.  இந்த வகை நிலைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் வந்து சேர இயலும்.  இந்த நிலைப்பாட்டை நான் அடைந்தேன் என்பதை விட இதுதான்  எனக்கான அடையாளத்தை வழங்குகிறது.  இந்த உளவியல் உருவாக்கம்  நேர்க்கோட்டுத் தன்மையில் நேரக்கூடியதல்ல. வறுமையின் அழுத்தம், ஒடுக்குதலின் வலி ஒவ்வொருவரையும் வறுமைக்கெதிரான, ஒடுக்குதலுக்கெதிரான போராட்ட அரசியலுக்குத்தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் போராட்ட அரசியலில் இருக்கும் யாருக்கும் வறுமையின் வலியும் ஒடுக்குதலின் அவமானங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நாம் உறுதியாகச் சொல்ல முடியும். இது வாழ்வின் வழியோ, வாசிப்பின் வழியோ, நேசிப்பின் வழியோ, உற்றறிதலின் வழியோ நேரலாம், ஆனால் நேர்ந்தாக வேண்டும்.