அச்சம் தவிர், ஆண்மை அழி -பிரேம்

உரையாடல்: 6    அச்சம் தவிர், ஆண்மை அழி

கேள்வி

[ராஜகாந்தன், அசோக்ராஜ், கருணாகரன்]

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சையில் உங்களது எதிர்வினையைப்  பன்மெய் இதழில் பதிவுசெய்துள்ள நிலையில், பெண்ணியம் தமிழில் செயல்பட்டு வரும் முறை மற்றும் உலகமய /தனியார் மயமாக்கலுக்குப் பின்னான கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணிய சிந்தனைப் போக்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து சற்று விவரியுங்கள்.

பதில்

பிரேம்

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் குறித்து தற்போது மட்டுமல்ல, அவ்வப்போது எழுவது சர்ச்சை இல்லை  அவமதிப்பு, இழித்துரைப்பு. மாற்று அரசியலில், அறம்சார் அரசியலில் அக்கறை கொண்டவர்கள் தமிழில் பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணெழுத்துகள் தனி அடையாளத்துடன் உருவாகி வளர்வதை வரவேற்று வளர்க்க முயற்சி செய்வார்கள். இலக்கியம், கோட்பாடு என்பதில் அக்கறையுள்ளவர்கள் பெண்ணியம், பெண்ணெழுத்து தமிழில் மிகத் தேவையானது என்பதைப் புரிந்து கொண்டு தம்வாசிப்பைத் தொடர்வார்கள். இவற்றில் எதுவும் இன்றி ஆண்திமிர், ஆண்மைய அதிகாரத்தைக் கலை-இலக்கியம் என்ற வெளிப்பூச்சுக்குள் மறைத்து  வைத்து விற்பனை செய்பவர்கள்தான் “இந்தப் பெண்கள் எழுத வந்து உலகமே கெட்டுப் போச்சு” என்று கூச்சல் எழுப்பிக் கொண்டுள்ளனர். இதற்கான பின்புலத்தை நான் பன்மெய் கட்டுரையில் (ஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்) விரிவாக விளக்கியிருக்கிறேன்.

பெண்ணியம் மாற்றுச் சிந்தனை மற்றும் விடுதலை அரசியலின் மிகமிக அடிப்படையான ஒரு பகுதி. மார்க்சியம், மனித உரிமை அரசியல், தலித் அரசியல், சமத்துவ அரசியல் அனைத்தும் பெண்ணியத்தின் அடிப்படைகளை  ஏற்றுத்தான் தம்மைச் செயல்பாடு கொண்ட விடுதலைக் கருத்தியல்களாகத் தகுதிப்படுத்திக் கொள்ளமுடியும். அதே சமயம் பெண்ணியம் தனித்து இயங்குகிற, தனித்துச் செல்கிற ஒரு சிந்தனை முறையோ, உளவியலமைப்போ இல்லை.  பெண்ணியலாளராக இருக்கும் ஒருவர்தான்  அனைத்து வகையான  மாற்று அரசியல், விடுதலைக் கருத்தியல்  தளத்திலும்  சரியான, மெய்யான புரிதலுடன் செயல்பட  முடியும்.

மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் தளங்கள் பெண்ணியத்திற்கு மறுப்பான தர்க்கத்தையும் பெண்ணிலையை இரண்டாம் நிலையில் வைக்கும் கருத்தாக்கத்தையும் கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்… பௌத்தம், காந்தியம் போன்ற மனிதநேயச் சிந்தனைகள் பெண்ணியத்தின் பல அடிப்படைக் கேள்விகளுக்கு மௌனம் காப்பதால்தான் தனித்தியங்கும் சக்தியற்ற  நல்லெண்ணக் கருத்துக்களாக மட்டும் மீந்து போயுள்ளன…இந்தியச் சமூகங்களில் சுதந்திர, பகுத்தறிவுச் சிந்தனைகளின் முன்நிபந்தனை ஒடுக்கப்பட்டோர் அரசியல், பெண்ணிய அரசியல் இரண்டையும் ஏற்பதுதான்.

எப்போதோ இருந்த தீண்டாமையைச் சொல்லி தற்போது இடஒதுக்கீடு பெற்று ஏமாற்றுகின்றனர் தலித்துகள் என்று சொல்வதும் பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி ஊடகங்களின் கவனத்தைக் கவருகின்றனர் என்று சொல்வதும் ஒரே வகை பிற்போக்கு  மூளையமைப்பிலிருந்து உருவாகும்  இருவகை வாசகங்கள்.  தமிழின் இலக்கியப் பொதுப்புத்தி என்பது ஆண்திமிர், ஆண்மைய அறியாமை கொண்டதாகத்தான் இருக்கிறது  என்பது  ஒவ்வொரு நாளும்  நிரூபனமாகிக்கொண்டே  இருக்கிறது.

இதற்கு வேறுசில வடிவங்களும் உண்டு. “பெரியார் சொல்லாத எந்தப் பெண்ணியத்தை இந்தப் பெண்கள் சொல்கிறார்களாம்” என்றோ,  “ஜெயகாந்தன் எழுத்தில் இல்லாத பெண்ணியத்தையா இந்தப் பெண்கள் சொல்லிவிடப் போகிறார்கள்” என்றோ,  “உண்மையான பெண்ணியம் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்” என்றோ, “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள் பெண்விடுதலை அடங்கிவிடுகிறது  என்பதைத் தெரிந்து கொள்ளாத இயக்க மறுப்பியல்தான் இந்தப் பெண்ணியப் பேச்சுக்கள் எல்லாம்”  என்றோ இது பல குரல்களில் ஒலித்தாலும் இவை சொல்ல வருவது ஒன்றுதான்,  “பெண்ணியம் எனத் தனியாக ஏதும் இல்லை, பெண்மொழி, பெண்ணிலை அறிவு என்பதெல்லாம் பிரிவினைவாதம், பெண்ணெழுத்து என எதுவும் தனியாக இருக்க முடியாது.”

இதனை இப்படியே நீட்டிச் சென்றால் இறுதி முடிவுகள் இப்படியாக இருக்கும் “பெண் எனத் தனியாக எதுவும் இருக்க முடியாது. ஆணுக்குள் பெண் அடக்கம், ஆண் அமைப்பவை அனைத்தும் பெண்ணையும் உள்ளடக்கியது. பெண்ணைக் காப்பது ஆணின் கடமை,  ஆணிடம் தன்னை ஒப்படைத்து தனக்கான கடமையைச் செய்து வாழும் பெண்  பாதுகாப்பாக வாழ்வதுடன் எந்த துயரமும் இன்றி வாழலாம். தனக்கென தனி அடையாளம் பெறுவது இயற்கையிலேயே பெண்களுக்கு இயலாத ஒன்று. பெண்கள் தனி அடையாளம், சம உரிமை, சமத்துவம் என்று பேசுவதெல்லாம் மத ஒழுக்கம், குடும்பம், பண்பாடு என்ற அனைத்தையும் அழித்துவிடும். இந்தியச் சமூகம் எப்போதும் பெண்களுக்கு பெருமையளித்து வந்துள்ளது, பெண்ணைத் தெய்வமாக வழிபடும் நாடு நம்முடையது. பெண்கள் இன்று இழிந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் பெண்கள்தான். நம் மரபை விட்டு அவர்கள் வெளியேறும் போது பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிறது. வீடுதான் அவர்களின் இடம்.  அரசியல், சிந்தனைத்துறைகள்,  இலக்கியம் என்பவையெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய பகுதிகள்…”  இதில் ஏதாவதொரு வாக்கியத்தின் வழியாக நீங்கள் இன்றுள்ள ஆண்மைய அமைப்புகளின் மைய நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்துவிடலாம். முற்போக்கு-பிற்போக்கு, மதவாதம்-நவீன சிந்தனைகள், மனிதநேயம்-முதலாளித்துவம்,  அறிவியல்வாதம்- புராணிகவாதம், உழைப்பாளர்கள்- உயர்தொழில் நுட்பத்தினர்  இப்படிப் பல முரண்பட்ட போக்குகள் கொண்ட ஆண்கள் பெண்ணிய அரசியல், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய இயக்கங்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் போது மட்டும் ஆண்மைய-ஆணாதிக்க நிலைப்பாட்டினை எடுப்பதுடன் ஆண்நிலை பற்றிய கட்டுக்கதைகளை இயற்கையானதென நம்பவும் செய்கின்றனர். இந்த வகையான சமூக-வரலாற்றுச் சூழல் நிலவும் ஒரு சமூகத்தில்தான் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக் கப்பட்ட அடையாளத்துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது.

 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றின் முற்பகுதிவரை பெண்விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான உரிமைகள் என உலகப் பெண்ணிய அரசியலின் தாக்கங்கள் தமிழில் இருந்து வந்தன. தேசிய இயக்கம் பெண்களின் பங்கின்றி மேற்செல்ல முடியாது என்ற நிலையில் பெண்கள் தேசிய அரசியலில் உள்ளடக்கப்பட்டனர். பகுத்தறிவு இயக்கம் பெண்களுக்கான விடுதலையை முன்நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இந்திய மார்க்சிய அரசியல்  பெண்ணியத்தை மறுத்துச் சொல்லுவதற்கு கொள்கையடிப்படையில் எந்த உரிமையும் இல்லை.

இந்திய நவீனச் சிந்தனையாளர் பலரும் வேதகால நாகரிகம்,  பாரதத் தொன்மை, இந்தியப் பண்பாடு பற்றிய குழப்பமான பற்றுள்ளவர்கள்தான்.  ஆனால் பெண்ணிய-பெண்விடுதலை அரசியலின் கேள்விகள் அவர்களைப் பாதித்தன. பெண்ணியச் சிந்தனைகள் தொடக்க நிலையில் இருந்த போதே தமிழின் மகாகவியாகப் பின்னாளில் பெயரிடப்பட்ட சுப்பிரமணிய பாரதி போன்ற சிலரை அது பாதித்திருக்கிறது.   “ஞானவொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்; ஊனமறு  நல்லழகே!  ஊறுசுவையே! கண்ணம்மா!” என்றும் “வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு; போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!” என்றும் பாடிய பாரதிக்கு இருந்தது புனிதப் பெண்மை பற்றிய கருத்தாக்கம்தான் ஆனால் உலக அரசியலைக் கவனத்தில் கொண்ட ஒரு ஊடகவியலாளராக அவர் சொல்வது கவனத்திற்குரியது.

“சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

சில தினங்களின் முன்பு ஒரு கிராமாந்தரத்து ஸ்திரீ ‘மாதர் நிலை’ என்ற மகுடத்தின் கீழே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார்.அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீமான் காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண் மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனனமெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அது போல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல ‘சாத்திர’ வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண் மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை.

ஆனால் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்’ என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.”

பாடல்கள் பாடிய ஒரு பாவலன் என்ற நிலையில் இருந்து உலக அரசியல் மாற்றங்களை உணரும் அறிவுத்துறை நோக்கிய நகர்வு பாரதி கால நவீனத்துவத்தின் தொடக்கமாக அமைந்தது.

மிக மிக அவசரம் என்று பாரதி கூறி 100 ஆண்டுகளுக்குப் பிறகு, “நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக்கிடமானது. வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம்நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது – நாடு திருந்துவது.” என்ற பாரதிதாசன் பெண்ணியத்தின் முதல் கட்ட கோரிக்கைகள் அனைத்தையும் தன் மொழியில் தயக்கமின்றிக் கொண்டு வந்த பிறகு  “பெண்ணியம் மேலைநாட்டுப் பொருள் அதனைத் தமிழில் பேசுவோர் பண்பாட்டைக் கெடுப்பவர்கள். அவர்களைத் தாக்க வேண்டும்” என்று கூவித் திரிகின்றனர் சில  தமிழ்க் கவிஞர்களும் எழுத்தாளர்களும்.

பெண் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள்,களச்செயலாளர்கள், சிந்தனா வாதிகள், சமூகத்தலைவர்கள் எனப் பெண்கள் தம் வரலாற்றுப் பங்கை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய போதே தமிழில் எதிர்ப்பு, வெறுப்பு, தாக்குதல்  என்பவை இருந்தன. சிந்திக்கக் கூடிய, தனித்த அடையாளம் கொண்ட, பொது வெளியில் தலைமையேற்க முன் வரும்,  சமூக வெளியில் இயங்க முனையும் பெண்களின் வாழ்க்கைக் கதைகள் வலிகள், ஒதுக்குதல்கள், தனித்த அவலங்கள் கொண்டதாகவே இருந்தது.

இந்தக் காலகட்டத்திலும், இந்திய அரசியல் தொடங்கிய பிறகும் எழுதிய, செயல்பட்ட பெண்கள் பலர் பெண்மை பற்றிய பழங்கருத்தியல்களை, உருவகங்களை உடைக்கவும் புதிய அடையாளத்தை உருவாக்கவும் தம் பங்கை அளித்துள்ளனர். ஆனால் இவையெல்லாம் பெண்ணியத்திற்கான தொடக்கங்களே தவிர பெண்ணியத்தின் தேவைகளை நிறைவேற்றியவை அல்ல.

இதற்கு அடுத்த கட்டமாக  நிகழ்ந்த அடிப்படை மாற்றத் தைத்தான் “தொண்ணூறுகளில் தமிழில் புதுப்பிக்கப்பட்ட அடையாளத் துடன் பெண்ணியத்திற்கான களம் அமைக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறேன். இந்தக் காலகட்டம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள், பெண் உளவியல் என்பது மொழியால், பண்பாட்டு வரலாற்றுக் கதையாடல்களால் கட்டப்படுகிறது, ஆண்  தன்மை என்பது பெண்ணிலைக்கு மறுதலையான எதிர்நிலைக் கட்டமைப்பு என்பது போன்ற பெண்ணியப் புரிதல்கள் தொடங்கி அறிவியல், வரலாறு, மனிதநிலை என்பவை உலகப் பொதுத்தன்மையோ ஒற்றையமைப்போ கொண்ட புனித மெய்மைகள் அல்ல அனைத்தும்  கால-இடத்தன்மை கொண்ட கதையாடல் செயல்பாடுகளே என்ற பின்நவீனத்துவப் புரிதல்கள் வரை தற்போது அறிவமைப்புகளில் பல தலைகீழாக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த தளத்தில் தமிழில் பெண்ணிய உரையாடல் பல புதிய தன்மைகளைக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்குத் தனித்தனியான சில பெண்ணியச் சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தம் வாழ்க்கையை அளித்துச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் யார் யார் என்பதை கடந்த இருபது ஆண்டுகளில் பண்பாட்டு உளவுப்படையினரின், கலை-இலக்கிய பாதுகாப்புப்படையினரின்  தாக்குதலுக்கு அதிகம் உள்ளான பெண்ணிய, பெண்மொழி செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய கணக்கெடுப்பின் வழி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்று பெண்கள்  சிறப்பிதழ்களில் இவர்களின் பெயர்கள் இடம் பெறுவதும், பெண்கள் தாக்கப்படும் பொழுது ஊடகங்கள் இவர்களில் சிலரிடம் கருத்து கேட்பதும் இவர்கள் பெண்கள் என்பதால் அல்ல செயல்பாட்டாளர்கள், கருத்தியல் போராளிகள் என்பதால்தான். இதனையே பெண்கள் ஊடகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்கின்றனர் இந்திய ஞானமரபினர். தமிழின் ஊடக, கருத்தியல் பரப்பில் இவர்களின் இடம் மிகமிகக் குறைவு. தொடர்கதைகள் எழுதி தமிழின் கதைப்பரப்பை பல மடங்கு பெருக்கிய-பெருக்கிவரும் பெண் எழுத்தாளர்களும், தொடர்களில் அழுது தமிழ்ப் பெண்களின் கண்ணீரைப் பெருக்கிவரும் பெண்கலைஞர்களும் பெற்றுள்ள பண்பாட்டு இடத்துடன் ஒப்பிடும் பொழுது பெண்ணிய, பெண்ணரசியல், பெண்ணெழுத்து வழி செயல்பட்டு வருபவர்களின்  இடங்கள் மிகச்சிறிய புள்ளிகளாகவே உள்ளன.

தமிழில் பெண்ணியம்  இன்றும் விளிம்புநிலையில் உள்ள  சிந்தனைப் போக்குதான்.  எல்லா கருத்தியல்களைப் போலவே பெண்ணியத்திலும் வேறுபடும் சிந்தனைப் பள்ளிகள், இயக்கப் போக்குகள் இருப்பது இயல்பானது. சாதி, இன, மொழி அடையாளங்கள் வழி இயங்கும் அரசியல் பரப்பில் பெண்ணியம் தன்னை வேறுபாடுகளுடன் மோதும் பன்மைநிலை அரசியலாக வைத்துக் கொள்ளுவது தவிர்க்க இயலாதது. பெண் எழுத்துக்கள் எல்லாம் பெண்ணிய எழுத்துக்களாக இருப்பதில்லை. ஆனால் பெண்ணியலாளர் ஒருவர் எழுதுவதும் பேசுவதும் அனைத்துப் பெண்களுக்குமானதாக இருக்கிறது, இது தற்காலத் தேவை.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உட்செரித்த பெண்ணியச் சிந்தனைப் போக்குகள்  இன்று எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விட கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை விளக்க முயலும் சிந்தனைப் போக்குகள் பெண்ணியத்தை எந்த அளவுக்குப் புரிந்து தம்மை அதற்கேற்ப உருமாற்றிக் கொண்டுள்ளன என்று நாம் பார்க்க வேண்டும்.  அத்துடன் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை நாம் பெண்ணிய நோக்கில் மறுஆய்வு செய்ய வேண்டும்.

தலித் அரசியல், தமிழ் அடையாளம், மொழித் தேசியம் பற்றிய திட்டமிடல்கள் மற்றும் கருத்தாக்க முறைகளின் அடிப்படைகளில் இருந்தே பெண்ணிய கருத்தியல்கள், கேள்விகள் மையஇடத்தில் வைக்கப்பட வேண்டும். இந்துத்துவ அரசியல் முன்வைக்கும் புனிதப்பழமை, புராதன மீட்பு, பண்பாட்டுத் தூய்மைவாதம் என்பவற்றை மொழிவழி முன்வைக்கும் அரசியலாகத் தமிழ் அரசியல் மாறாமல் இருக்க பெண்ணியத்தின் வரலாறு பற்றிய பார்வைகள்தான் வழி காட்டியாக இருக்க முடியும். உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல் பற்றிக் கருப்பினப் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் கொண்டுள்ள புரிதல்கள் தமிழில் அதிகம் விவாதிக்கப்பட வேண்டும்.  சமநீதி கொண்ட குடிமைச் சமூகத்திற்கான உளவியல், நடத்தையியல் கட்டமைப்புகள் பெண்ணிய அறிவின்வழி மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பொது வெளியில் அதற்கெல்லாம் நேரம்-இடம் வாய்ப்பதில்லை.  “பெண்ணியம் என்றால் மது குடிப்பதும், புகை பிடிப்பதும், மணவிலக்கு பெறுவதும்தான் எனச் சில நாசகார சக்திகள் தமிழ், இந்தியக் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டுள்ளன. இவர்களை வெளியே நடமாடவிடக் கூடாது” என்று வெறிபிடித்து உறுமுகிறவர்கள் நம் பண்பாட்டுக் காவலர்கள். இவர்களுடன் அறிவுப்பூர்வமாகவோ, அறம் சார்ந்தோ பேசிப் பயனில்லை. இவர்கள் தம்முடைய கடவுளர்கள் தொடங்கி கவியரசர்கள் வரை ஒன்றுக்கு மேல் மனைவியர்கள் ஒன்பதுக்கு மேல் காதலிகள் கொண்டு வாழ்ந்ததாகக் கதைசொல்லிக் கொண்டாடிக் கொண்டே  “பெண்மொழி இன்னா ஒடம்பு,  உறுப்புன்னு பேசறதுதானா,  அப்ப நாங்களும் கெட்டவார்த்தயில பேசுவோம்ல” என்று தமிழ்-பாரதப் பண்பாட்டைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் கவிஞரின் கவிதைத் தொகுதியின்  தலைப்பை அவர் பெயரின் பின் இணைத்து எழுதி எழுதித் தம் வன்கொடுமைப் புத்தியை உலகம் முழுக்க பரப்பிக் கொண்ட வலைதள வாசகர்களையும், ஒரு பெண்கவிஞரின் பெயரைத் தம் பன்மொழி ஞானத்தால் மொழிவிளக்கம் கூறி கலகக் காளைகளிடம் கைதட்டல் பெற்றுக் கொள்ளும் ஒலகத்தரம் கொண்ட எழுத்தாளர்களையும் கொண்டதுதான் தமிழின் அ-றி-வு-ல-க-ம்.

பெண்ணியமும் பெண்ணிலைச் சிந்தனை முறையும் தமிழில், இந்தியச் சூழலில் போர்த்தன்மை கொண்டதாக மாறவேண்டிய காலம் இது. பெண்ணிய-விளிம்புநிலைச் சிந்தனையாளர், செயல்பாட்டாளர், கவிஞர் எனப் பல தளங்களில் இயங்கி வரும்  மாலதி மைத்ரி-யின் வாழ்வுடன் பங்கு கொண்டவனாக  அவரால் காப்பாற்றி வளர்க்கப்பட்டவனாக கடந்த இருபத்தாறு ஆண்டுகளில் நான் கற்று வருவது இதுதான். ஒவ்வொரு அறிவுத்துறையிலும், சிந்தனை செயல்பாட்டுத் தளத்திலும் பெண்ணியக் கேள்விகள் வலிவுடன் முன் வைக்கப்பட்டு அனைத்துத் தளங்களும் சீராக்கம் செய்யப்பட வேண்டும். பெண்ணிய விடுதலை பொதுவுடைமைச் சமூகத்தில் நிகழவேண்டிய ஏதோ ஒரு புரட்சிகர மாற்றம் இல்லை, ஜனநாயகம், மக்கள் ஆட்சி, குடிமைச் சமூகம், குடும்பம், தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், உரையாடல்கள் என அனைத்திற்குள்ளும் நிகழ வேண்டிய அடிப்படை மாறுதல்…

நான் சில இடங்களில் முன்பே குறிப்பிட்டதை இங்கு மீண்டும் ஒரு முறை குறிப்பிட விரும்புகிறேன், “பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதை நான் ஏற்கவில்லை, ஆமாம் அவர்கள் ஆண்களைவிட உயிரியல், உளவியல் வகையில் உயர்ந்தவர்கள். இன்றுள்ள மனித சமூகம் ஆண்களின் படைப்பல்ல பெண்மை மற்றும் தாய்மையின் படைப்பு, ஆண் உளவியல் பெண்ணாற்றல் மீதான அச்ச வுணர்வின் வழி நிகழும் எதிர்நிலை உருவாக்கம்.  ஆண்கள் தம் அச்சத்தின் அடிமைகள் அதனால், அச்சம் தவிர், ஆண்மை அழி, இணங்கி இரு, ஈடேற முயற்சி செய்… இது பெண்ணியம் இல்லை, என்றாலும் சொல்லுகிறேன். நான் ஒரு நவீன சிந்தனையுள்ள மனித உயிரி என்றால் பெண்ணியம் எனது இரண்டு நுரையீரல்களில் ஒன்றாக இருந்தே ஆகவேண்டும், என் மூளையின்  இடது பகுதியாக அமைந்தே ஆகவேண்டும்…